அத்தியாயம் – 31
பிரசேதார்களுக்கு நாரதர் உபதேசித்தல் 
பதம் 4.31.1
மைத்ரேய உவாச
தத உத்பன்ன-விஜ்ஞானா ஆஷ்வ அதோக்ஷஜ பாஷிதம்
ஸ்மரந்த ஆத்மஜே பார்யாம் விஸ்ருஜ்ய ப்ராவ்ரஜன் க்ருஹாத்

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; தத:—அதன்பின்னர்; உத்பன்ன—வளர்ச்சியடைதல்; விஜ்ஞானா:—நிறைந்த ஞானம் எய்தி; ஆஷு—மிக விரைவில்; அதோக்ஷஜ—முழுமுதற் கடவுளினால்; பாஷிதம்—கூறப்பட்டதை; ஸ்மரந்த:—நினைவு கூர்ந்து; ஆத்மஜே—அவர்கள் புதல்வனுக்கு; பார்யாம்—தங்கள் மனைவி; விஸ்ருஜ்ய—அளித்து விட்டு; ப்ராவ்ரஜன்—சென்றனர்; க்ருஹத்—இல்லம் துறந்து.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார். இதன் பிறகு பிரசேதார்க்கு ஆயிரம் வருடங்கள் இல்லற வாழ்க்கை வாழ்ந்து, ஆன்மீக உணர்வில் நிறைவான ஞானம் எய்தப்பெற்றனர். இறுதியில் அவர்கள் முழுமுதற் கடவுள் தங்களுக்கு அளித்த அருளுரையினை நினைவு கூர்ந்து தங்கள் மனைவியைக் காக்கும் பொறுப்பினைத் தங்கள் குற்றமற்ற மைந்தனிடம் ஒப்படைத்து விட்டு இல்லம் துறந்து சென்றனர்.

பதம் 4.31.2
தீக்ஷிதா ப்ரஹ்ம-ஸத்ரேண ஸர்வ-பூதாத்ம-மேதஸா
ப்ரதீச்யாம் திஸி வேலாயாம் ஹீத்தோ ‘பூத் யத்ர ஜாஜலி:

தீக்ஷிதா:—நிறைவு பெற்று; ப்ரஹ்ம-ஸத்ரேண—பரமாத்மாவை அறிந்து கொள்வதில்லை; ஸர்வ—அனைத்தும்; பூதா—உயிர்கள்; ஆத்ம-மேதஸா—தன்னைப் போல் கருதி; ப்ரதீச்யாம்—மேற்கு; திஸி—திசையில்; வேலாயாம்—கடற்கரையில்; ஸித்த:—நிறைவு; அபூத்—பெற்றனர்; யத்ர—எங்கே; ஜாஜலி:—மாமுனிவர் ஜாஜலி.

பிரசேதார்கள், ஜாஜலி முனிவர் வாழ்ந்து கொண்டிருந்த மேற்குக் கடற்கரைக்குச் சென்றனர். அனைத்து உயிர்களுக்கு சமமானவனாகச் செய்யும் ஆன்மீக ஞானத்தில் நிறைவு பெற்றுப் பின்னர் பிரசேதார்கள் கிருஷ்ண உணர்வில் நிறைவுடையோராயினர்.

பதம் 4.31.3
தான் நிர்ஜித-ப்ராண-மனோ-வசோ-த்ருஸோ
ஜிதாஸனான் ஸாந்த-ஸமான-விக்ரஹான்
பரே ‘மலே ப்ரஹ்மணி யோஜிதாத்மன:
ஸுராஸுரேத்யோ தத்ருஸே ஸ்ம நாரத:

தான்—அவர்கள் அனைவரும்; நிர்ஜித—முற்றிலும் கட்டுப்படுத்தி; ப்ராண—உயிர்க்காற்று (பிராணாயாம முறையினால்); மன:—மனம்; வச:—வார்த்தைகள்; த்ருஸ:—பார்வை; ஜித-ஆஸனான்—யோகாசன முறை அல்லது அமர்ந்த நிலையில்; ஸாந்த—அமைதியுடன்; ஸமான—நேராக; விக்ரஹான்—அவர்களது உடல்கள்; பரே—உன்னதமான; அமலே—அனைத்து மாசுக்களிலிருந்தும் விடுதலை பெற்று; ப்ரஹ்மணி—பரம்பொருளில்; யோஜித—ஈடுபட்டனர்; ஆத்மன:—அவர்களது மனம்; ஸுராஸுரேத்யோ—தேவர் அசுரர் இருசாராகும்; தத்ருஸே—காண்பதற்கு; ஸ்ம—முன்னர்; நாரத:—மாமுனிவர் நாரதர்.

யோக சித்திக்கான யோகாசனப் பயிற்சியினால் பிரசேதார்கள் தங்களது உயிர்க்காற்று, மனம், வாக்கு, புறப்பார்வை போன்றவற்றைக் கட்டுப்படுத்தினர். இதன் வழி அவர்கள் உலகப் பற்றிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றனர். நேராக உடலை வைத்திருந்ததின் மூலம் அவர்களால் தங்கள் மனதினை மிகவுயர்ந்த பிரம்மத்தின் மீது ஒருமுகப்படுத்த முடிந்தது. இவ்வாறு அவர்கள் பிராணாயாம பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது தேவர்கள் மற்றும் அசுரர்கள் என்று இருசாராராலும் வணங்கப்படும் நாரத முனிவர் அங்கே வந்தார்.

பதம் 4.31.4
தம் ஆகதம் த உத்தாய ப்ரணிபத்யாபினந்த்ய ச
பூஜயித்வா யதாதேஸம் ஸுகாஸீனம் அதாப்ருவன்

தம்—அவருக்கு; ஆகதம்—தோன்றியவுடன்; தே—பிரசேதார்கள் அனைவரும்; உத்தாய—எழுந்து; ப்ரணிபத்ய—வந்தனங்களைச் செலுத்தினர்; அபினந்த்ய—வரவேற்று; ச—மேலும்; பூஜயித்வா—வழிபட்டு; யதா-ஆதேஷம்—ஒழுங்குமுறைவிதிகளுக்கேற்ப; ஸுக-ஆஸீனம்—வசதியாக அமரச் செய்து; அத—இவ்வாறு; அப்ருவன்—அவர்கள் கூறினர்.

நாரத முனிவர் அங்கே வருவதைக் கண்ட பிரசேதார்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்தனர். அவருக்குரிய வந்தனங்களை அர்ப்பணித்து, அவரை அனைவரும் வழிபட்டனர். நாரத முனிவர் அமர்ந்த பிறகு அவரிடம் அவர்கள் உரையாடத் தொடங்கினர்.

பதம் 4.31.5
ப்ரசேதஸ ஊசு
ஸ்வாகதம் தே ஸுரர்ஷே ‘த்ய திஷ்ட்யா நோ தர்ஸனம் கத:
தவ சங்க்ரமமணம் ப்ரஹ்மன்ன அபயாய யதா ரவே:

ப்ரசேதஸ: ஊசு:—பிரசேதார்கள் கூறினர்; ஸு-ஆகதம்—நல்வரவு; தே—உமக்கு; ஸுர-ருஷே—ஓ, தேவரிஷியே; அத்ய—இன்று; திஷ்ட்யா—நல்யோகத்தினால்; ந:—நாங்கள்; தர்ஸனம்—தரிசிப்பதற்கு; கத:—நீர் வந்திருக்கின்றீர்; தவ—உமது; சங்க்ரமணம்—அசைவுகள்; ப்ரஹ்மன்—ஓ, சிறந்த அந்தணரே; அபயாய—அச்சமில்லாதிருக்க; யதா—போன்று; ரவே—சூரியனின்.

பிரசேதார்கள் அனைவரும் நாரதரிடம் உரையாடலைத் தொடங்கினர்: ஒ, மாமுனிவரே, ஓ அந்தணரே, நீர் இங்கு வரும்பொழுது உமக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டிருக்காது என்று நாங்கள் நம்புகிறோம் உம்மை நாங்கள் தரிசித்தது எமது பெரும்பேறாகும். சூரியன் உலா வருவதினால் திருடர்கள் மற்றும் தீயோரினால் ஏற்படும் இரவின் பயத்திலிருந்து மக்கள் விடுதலை பெறுகின்றனர். அதுபோல் நீரும் சூரியனைப் போல் வலம் வந்து அனைத்து வகையான அச்சங்களையும் விரட்டியடிக்கின்றீர்.

பதம் 4.31.6
யத் ஆகிஷ்டம் பகவதா ஸிவேனாதோக்ஷஜேன ச
தத் க்ருஹேஷு ப்ரஸக்தானாம் ப்ராயஸ: க்ஷபிதம் ப்ரபோ

யத்—என்ன; ஆதிஷ்டம்—உபதேசிக்கப்பட்ட; பகவதா—மேன்மை மிக்கவர்களினால்; ஸிவேன—சிவபெருமான்; அதோக்ஷருஜன—டபசுவான் விஷ்ணுவினால்; ச—மேலும்; தத்—அந்த; க்ருஹேஷு—இல்லற வாழ்வில்; ப்ரஸக்தானாம்—அதிகப்பற்று வைத்திருந்த எங்களால்; ப்ரயாஸ—பெரும்பாலும்; க்ஷபிதம்—மறந்து; ப்ரபோ—ஒ, பிரபுவே.

ஓ, பிரபுவே, இல்லற வாழ்வில் நாங்கள் மிகவும் பற்று வைத்திருந்த காரணத்தினால் சிவபெருமானும், பகவான் விஷ்ணுவும் எங்களுக்கு அருளிய உபதேசங்களை நாங்கள் பெரும்பாலும் மறந்துவிட்டோம் என்பதை உமக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பதம் 4.31.7
தன் ந: ப்ரத்யோதயாத்யாத்ம ஜ்ஞானம் தத்த்வார்த-தர்ஸனம்
யேனாஞ்ஜஸா தரிஷ்யாமோ துஸ்தரம் பவ-ஸாகரம்

தத்—ஆகையினால்; ந:—எங்களுக்கு; ப்ரத்யோதய—அன்புடன் எழுப்புவீராக; அத்யாத்ம—உன்னதமான; ஜ்ஞானம்—ஞானம்; தத்-த்வ—முழுமெய்ப் பொருள்; அர்த—நோக்கத்திற்காக; தர்ஸனம்—தத்துவம்; யேன—எதன்மூலம்; அஞ்ஜஸா—எளிதாக; தரிஷ்யாம:—நாங்கள் கடக்கக் கூடும்; துஸ்தரம்—தடை செய்யும்; பவ-ஸாகரம்—அறியாமைக் கடல்;

போற்றுதற்குரிய குருவே, எங்களது உன்னத ஞானத்தில் ஒளி பெறச் செய்வீராக, அது ஒரு கைவிளக்கினைப் போல், உலக வாழ்க்கையென்னும் அறியாமை இருட்கடலைக் கடப்பதற்கு எங்களுக்குப் பயன்படும்.

பதம் 4.31.8
மைத்ரேய உவாச
இதி ப்ரசேதஸாம் ப்ருஷ்டோ பகவான் நாரதோ முனி:
பகவதி உத்தம-ஸ்லோக ஆவிஷ்டாத்மாப்ரவீன் ந்ருபான்

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; இதி—இவ்வாறு; ப்ரசேதஸாம்—பிரசேதார்களினால்; ப்ருஷ்ட:—கேட்கப்பட்ட; பகவான்—முழு முதற் கடவுளின் சிறந்த பக்தரான; நாரத:—நாரதர்; முனி:—ஆழ்ந்த சிந்தனையில்; பகவதி—முழுமுதற் கடவுளின்: உத்தம-ஸ்லோகே—மேன்மைமிக்கப் புகழினை உடைய; ஆவிஷ்ட—அமிழ்ந்து; ஆத்மா—அவரது மனம்; அப்ரவீத்—பதிலிறுத்தார்; ந்ருபான்—அரசர்களுக்கு.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே; பிரசேதார்கள் இவ்வாறு விண்ணப்பித்துக் கொண்டவுடன் முழுமுதற் கடவுளின் சிந்தனையிலேயே எப்போதும் ஆழ்ந்திருக்கும் பரமபக்தரான நாரதர் பதில் கூறத் தொடங்கினார்.

பதம் 4.31.9
நாரத உவாச
தஜ்ஜன்ம தானி கர்மாணி தத் ஆயுஸ் தன் மனோ வச:
ந்ருணாம் யேன ஹி விஸ்வாத்மா ஸேவ்யதே ஹரிர் ஈஸ்வர:

நாரத: உவாச—நாரதர் கூறினார்; தத்-ஜன்ம—அப்பிறப்பு; தானி—அவை; கர்மாணி—பலன்தரும் செயல்கள்; தத்—அந்த; ஆயு:—ஆயுள்; தத்—அந்த; மன:—மனம்; வச:—வார்த்தைகள்; ந்ருணாம்—மனிதர்களின்; யேன—எதன்மூலம்; ஹி—உறுதியாக; விஸ்வ-ஆத்மா—பரமாத்மா; ஸேவ்யதே—தொண்டு செய்யப்படுதல்; ஹரி:—முழுமுதற் கடவுள்; ஈஸ்வர:—பரம நெறியாளர்.

மாமுனிவர் நாரதர் கூறினார்: பரம நெறியாளரான முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்காக ஓர் உயிர் பிறக்கும் பொழுது, அவனது பிறப்பு, அவனது அனைத்துப் பலன் தரும் செயல்கள், அவனுடைய ஆயுட்காலம், அவனது மனம், அவனுடைய வார்த்தைகள் போன்றவையெல்லாம் உண்மையில் நிறைவடைகின்றன.

பதம் 4.31.10
கிம் ஜன்மபிஸ் த்ரிபிர் வேஹ ஸௌக்ர-ஸாவித்ர-யாஜ்ஞிகை:
கர்மபிர் வா த்ரயீ-ப்ரோக்தை பும்ஸோ ‘பி விபுதாயுஷா

கிம்—என்ன பயன் இருக்கிறது; ஜன்மபி:—பிறப்புகளினால்; த்ரிபி:—மூன்று; வா—அல்லது; இஹ—இவ்வுலகில்; ஸௌக்ர—சுக்கிலத்தினால், ஸாவித்ர—தீட்சையினால்; யாஜ்ஞிகை—நிறைவுடைய அந்தணனாகும் பொழுது; கர்மபி—செயல்களினால்; வா—அல்லது; த்ரயீ—வேதங்களின்; ப்ரோக்தை—உபதேசிக்கப்பட்ட; பும்ஸ—மனிதனின்; அபி—கூட; விபுத—தேவர்களின்; ஆயுஷா—ஆயுட்காலம்.

நாகரீக மனிதன் மூன்று வகையான பிறப்புக்களை எடுக்கிறான். தாய் தந்தையின் வழி வருகின்ற முதல் பிறப்பு சுக்கிலத்தினால் உண்டானது. இரண்டாவது பிறப்பு ஆன்மீக குருவினால் தீட்சையளிக்கப்படும் பொழுது வருகின்ற இரண்டாம் பிறப்பு “ஸாவித்ர எனப்படும். “யாஜ்ஞிசு” எனப்படும் மூன்றாம் பிறப்பு பகவான் விஷ்ணுவை வழிபடுவதற்கு ஒருவனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் பொழுது வருவதாகும். இப்பிறப்புக்களை அடைந்தாலும், தேவர்களின் ஆயுட்காலத்தைப் பெற்றாலும் பகவானின் தொண்டில் உண்மையில் ஒருவன் ஈடுபடாதபொழுது இவையனைத்தும் பயனற்றவையே ஆகும். அதுபோல் ஒருவனது செயல்கள் லோகாயதமாயினும் அல்லது ஆன்மீகமாயினும் பகவானைத் திருப்திப்படுத்துவதற்குரியவையாக இல்லையென்றால் அவையும் பயனற்றவையே ஆகும்.

பதம் 4.31.11
ஸ்ருதேன தபஸா வா கிம் வசோபிஸ் சித்த-வ்ருத்திபி:
புத்த்யா வா கிம் நிபுணயா பலேனேந்த்ரிய-ராதஸா

ஸ்ருதேன—வேதக் கல்வியினால்; தபஸா—தவங்களினால்; வா—அல்லது; கிம்—என்ன பொருள்; வசோபி:—வார்த்தைகளினால்; சித்த—உணர்வின்; வ்ருத்திபி:—தொழில்களினால்; புத்தயா—புத்தியினால்; வா—அல்லது; கிம்—என்ன பயன்; நிபுணயா—நிபுணனாக; பலேன—உடல் வலிமையினால்; இந்த்ரிய-ராதஸா—புலன்களின் சக்தியினால்.

பக்தித் தொண்டின்றி, கடுமையானத் தவங்கள், கேட்டல், பேசும் சக்தி, மனயூகச் சக்தி, உயர்ந்த புத்தி மேன்மை, வலிமை மற்றும் புலன்களின் சக்தி போன்றவற்றினால் பயன் என்ன?

பதம் 4.31.12
கிம் வா யோகேன ஸாங்க்யேன நியாஸ-ஸ்வாத்யாயயோர் அபி
கிம் வா ஸ்ரேயோபிர் அன்யைஸ் ச ந யத்ராத்ம-ப்ரதோ ஹரி:

கிம்—என்ன பயன்; வா—அல்லது; யோகேன—யோக ஸித்தியினால்; ஸாங்க்யேன—சாங்கியக் கொள்கையைக் கற்பதினால்; ந்யாஸ—துறவு மேற்கொள்வதினால்; ஸ்வாத்யாயயோ:—வேதங்களைக் கற்பதினால்; அபி—கூட; கிம்—என்ன பயன்; வா—அல்லது; ஸ்ரேயோபி:—மங்கலச் செயல்களினால்; அன்யை:—பிற; ச—மேலும்; ந—இல்லை; யத்ர—எங்கே; ஆத்ம-ப்ரத:—தனது முழுத் திருப்தி; ஹரி:—முழுமுதற் கடவுள்;

முழுமுதற் கடவுளை உணர்வதற்கு இறுதியில் உதவாத மெய்யுணர்வுப் பயிற்சிகள் எதுவாயினும் அது யோக ஹித்தியாயினும், விஷயத்தைப் பற்றிய ஆராய்ச்சியாயினும், கடுத்தவமாயினும், துறவினை மேற்கொள்வதாயினும், வேதங்களைக் கற்பதாயினும் இவையனைத்தும் பயனற்றவையே ஆகும். இவையனைத்தும் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை என்ற போதிலும் முழுமுதற் கடவுளான ஹரியினை ஒருவன் உணர்ந்து கொள்ளாத வரையில் இவையனைத்தும் பயனற்றவையே ஆகும்.

பதம் 4.31.13
ஸ்ரேயஸாம் அபி ஸர்வேஷாம் ஆத்மா ஹி அவதிர் அர்தத:
ஸர்வேஷாம் அபி பூதானாம் ஹரிர் ஆத்மாத் மத: ப்ரிய:

ஸ்ரேயஸாம்—புண்ணியச் செயல்களின்; அபி—உறுதியாக; ஸர்வேஷாம்—அனைத்தும்; ஆத்மா—சுயம்; ஹி—உறுதியாக; அவதிர்:—இலக்கு; அர்தத:—உண்மையில்; ஸர்வேஷாம்—அனைத்தும்; அபி—உறுதியாக; பூதானாம்—உயிர்கள்; ஹரி:—முழுமுதற் கடவுள்; ஆத்மா—பரமாத்மா; ஆத்ம-த:—நமது உண்மை அடையாளத்தினை நமக்கு அளிக்கக் கூடியவர்; ப்ரிய:—பிரியமானவர்.

தன்னுணர்வு பெறுவதற்கு உண்மையான ஆதாரமாகத் திகழ்பவர் முழுமுதற் கடவுளேயாவார். இதனைத் தொடர்ந்து கர்மம், ஞானம், யோகம், பக்தி என்னும் அனைத்துப் புண்ணியச் செயல்களுக்கும் முழுமுதற் கடவுளே குறிக்கோளாக விளங்குகின்றார்.

பதம் 4.31.14
யதா தரோர் மூல-நிஷேசனேன
த்ருப்யந்தி தத்-ஸ்கந்த-புஜோபஸாகா:
ப்ராணோபஹாராச் ச யதேந்த்ரியாணாம்
ததைவ ஸர்வார்ஹணம் அச்யுதேஜ்யா

யதா—போன்று; தரோ:—மரத்தின்; மூல—வேர்; நிஷேசனேன—நீர் வார்ப்பதினால்; த்ருப்யந்தி—திருப்தியடைதல்; தத்—இதன்; ஸ்கந்த—அடிமரம்; புஜ—கிளைகள்; உபஸாகா:—மிலாறுகள்; ப்ராண—உயிர்க்காற்று; உபஹாராத்—ஊட்டுவதினால்; ச—மேலும்; யதா—போன்ற; இந்த்ரியாணாம்—புலன்களின்; ததா-ஏவ—அதுபோல்; ஸர்வ—எல்லாத் தேவர்களின்; அர்ஹணம்—வழிபடுதல்; அச்யுத—முழுமுதற் கடவுளின்; இஜ்யா—வழிபடுதல்.

மரத்தின் வேரில் நீர் வார்க்கும்பொழுது அது அடிமரம், கிளைகள், மிலாறுகள் போன்றவற்றிற்கு சக்தியளிக்கின்றது. அதுபோல் வயிற்றுக்கு இடப்படும் உணவு புலன்களுக்கும் உடலில் பிற பாகங்களுக்கும் புத்துணர்ச்சியளிக்கிறது. இதுபோன்றே பக்தித் தொண்டின் மூலம் முழுமுதற் கடவுளை வணங்குவது அவரின் பாகங்களாக விளங்கும் தேவர்களைத் திருப்திப்படுத்துகிறது.

பதம் 4.31.15
யதைவ ஸூர்யாத் ப்ரபவந்தி வார:
புனஸ் ச தஸ்மின் ப்ரவிஸந்தி காலே
பூதானி பூமௌ ஸ்திர-ஜங்கமானி
ததா ஹராவ் ஏவ குண-ப்ரவாஹ:

யதா—போன்று; ஏவ—உறுதியாக; ஸூர்யாத்—சூரியனிலிருந்து; ப்ரபவந்தி—உண்டாகிறது; வார:—தண்ணீர்; புன:—மீண்டும்; ச—மேலும்; தஸ்மின்—அதற்கு; ப்ரவிஸந்தி—புகுதல்; காலே—உரிய காலத்தில்; பூதானி—எல்லா உயிர்களும்; பூமௌ—பூமிக்கு; ஸ்திர—அசையாத; ஜங்கமானி—அசைகின்ற; ததா—அதுபோல்; ஹரௌ—முழுமுதற் கடவுளுக்கு; ஏவ—உறுதியாக; குண-ப்ரவாஹ:—ஜட இயற்கையின் வெளிப்பாடு.

மழைக் காலத்தில் நீர் சூரியனிலிருந்தே உண்டாகிறது. உரிய காலத்தில், கோடைக் காலத்தின் போது அதே நீர் சூரியனால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதுபோல் அசைகின்ற அசையாத உயிர்கள் அனைத்தும் உண்டாகின்றன. மீண்டும் சில காலத்திற்குப் பிறகு இவையனைத்தும் பூமியிலேயே மக்கி மடிகின்றன. அதுபோல் அனைத்தும் முழுமுதற் கடவுளிடமிருந்தே தோன்றி குறிப்பிட்ட காலத்தில் அவரிடமே திரும்பிச் செல்கின்றன.

பதம் 4.31.16
ஏதத் பதம் தஜ் ஜகத்-ஆத்மன: பதம்
ஸக்ருத் விபாதம் ஸவிதுர் யதா ப்ரபா
யதாஸவோ ஜாக்ரதி ஸுப்த-ஸுக்தயோ
த்ரவ்ய-க்ரியா-ஜ்ஞான-பிதா-ப்ரமாத்-யய:

ஏதத்—இப்பிரபஞ்சத் தோற்றம்; பதம்—உறைவிடம்; தத்—அந்த; ஜகத்-ஆத்மன:—முழுமுதற் கடவுளின்முன்; பரம்—உன்னதம்; ஸக்ருத்—சில நேரங்களில்; விபாதம்—வெளிப்படுதல்; ஸவிது—சூரியனின்; யதா—போன்று; ப்ரபா—சூரிய ஒளி; யதா—போன்று; அவை:—புலன்கள்; ஜாக்ரதி—வெளிப்படுகின்றன; ஸுப்த—செயலற்ற; ஸக்தய:—சக்திகள்; த்ரவ்ய—உடற்பொருள்கள்; க்ரியா—செயல்கள்; ஜ்ஞான—ஞானம்; பிதா-ப்ரம—புரிந்து கொள்ளாததினால் தோன்றும் வேறுபாடுகள்; அத்யய:—கடந்து செல்லுதல்.

சூரிய ஒளியிலிருந்து சூரியக் கதிர்கள் வேறுபடாதிருப்பது போல் இப்பிரபஞ்சத் தோற்றமும் முழுமுதற் கடவுளிடமிருந்து வேறுபடாதிருக்கின்றது. ஆகையினால் முழுமுதற் கடவுள் உலகப் படைப்பில் எங்கும் வியாபித்திருக்கின்றார். புலன்கள் செயல்படும் பொழுது அவை உடலின் பாகங்களாகத் தோன்றுகின்றன. ஆனால் உடல் நித்திரையில் இருக்கும்பொழுது அவற்றின் செயல்கள் வெளிப்படுவதில்லை. இதுபோல் பரமபுருஷரிடமிருந்து இப்பிரபஞ்சப் படைப்பு முழுதும் ஒன்றாகவும் வேறாகவும் தோன்றுகின்றது.

பதம் 4.31.17
யதா நபஸி அப்ர-தம:-ப்ரகாஸா
பவந்தி பூபா ந பவந்தி அனுக்ரமாத்
ஏவம் பரே ப்ரஹ்மணி ஸக்தயஸ்த்வமூ
ரஜஸ் தம: ஸத்தவம் இதி ப்ரவாஹ:

யதா—போன்று; நபஸி—வானத்தில்; அப்ர—மேகங்கள்; தம:—இருள்; ப்ரகாஸா—ஒளி; பவந்தி—வெளிப்படுதல்; பூ-பா:—ஓ, அரசர்களே; ந பவந்தி—தோன்றுவதில்லை; அனுக்ரமாத்—இடைவிடாது; ஏவம்—இவ்வாறு; பரே—பரமம்; ப்ரஹ்மணி—மெய்ப்பொருளில்; ஸக்த்ய:—சக்திகள்; து—பிறகு; அமூ:—அவை; ரஜ:—ரஜோகுணம்; தம:—தமோகுணம்; ஸத்த்வம்—சத்துவகுணம்; இதி—இவ்வாறு; ப்ரவாஹ:—வெளிப்படுகிறது.

அன்பிற்குரிய அரசர்களே, சில நேரம் வானில் மேகங்கள் காணப்படுகின்றன. சில நேரம் இருளும், சில நேரம் ஒளியும் காணப்படுகின்றது. இவையனைத்தின் தோற்றங்களும் இடைவிடாது அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதுபோல் பரம மெய்ப்பொருளில் தமோகுணம், ரஜோகுணம், சத்துவகுணம் போன்றவை அடுத்தடுத்து தொடர் சக்திகளாகத் தோன்றுகின்றன. சில நேரங்களில் அவை தோன்றுகின்றன. அதுபோல் சில நேரங்களில் அவை மறைகின்றன.

பதம் 4.31.18
தேனைகம் ஆத்மானம் அஸேஷ-தேஹினாம்
காலம் ப்ரதானம் புருஷம் பரேஸம்
ஸ்வ-தேஜஸா த்வஸ்த-குண-ப்ரவாஹம்
ஆத்மைக-பாவேன பஜத்வம் அத்தா

தேன—ஆகையினால்; ஏகம்—ஒருவர்; ஆத்மானம்—பரமாத்மாவிற்கு; அஸேஷ—அளவற்ற; தேஹினாம்—தனிப்பட்ட ஆத்மாக்களின்; காலம்—காலம்; ப்ரதானம்—பௌதீகக் காரணம்; புருஷம்—பரமபுருஷர்; பர-ஈஸம்—உன்னத நெறியாளர்; ஸ்வ-தேஜஸா—அவரது ஆன்மீகச் சக்தியினால்; த்வஸ்த—தனித்து; குண-ப்ரவாஹம்—உலகியல் வெளிப்பாடுகளில் இருந்து; ஆத்ம—தனது; ஏக-பாவேன—தன்மையினால் ஒன்று என ஏற்றுக் கொண்டு; பஜத்வம்—பக்தித் தொண்டில் ஈடுபடு; அத்தா—நேரடியாக.

பரமபுருஷ பகவானே அனைத்துக் காரணங்களுக்கும் மூல காரணராக இருக்கின்றனர். ஆதலினால் அவரே அனைத்துத் தனிப்பட்ட உயிர்களிடத்தும் பரமாத்மாவாக இருக்கின்றார். மேலும் அவரே ஆதி காரணராகவும் நிமித்த காரணராகவும் விளங்குகின்றார். பெளதீக படைப்புகளிலிருந்து அவர் தனித்தே இருக்கின்ற காரணத்தினால் அவர் அவற்றின் தொடர்புகளில் இருந்து விடுதலை பெற்றவராகவும், பரு இயற்கையின் தலைவராகவும் இருக்கின்றார். ஆகையினால் தன்மையினால் உங்களை அவரோடு ஒன்று எனக் கருதி அவரது பக்தித் தொண்டில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

பதம் 4.31.19
தயயா ஸர்வ-பூதேஷு ஸந்துஷ்ட்யா யேன கேன வா
ஸர்வேந்த்ரியோ பஸாந்த்யா ச துஷ்யதி ஆஸு ஜனார்தன:

தயயா— கருணை காட்டுவதினால்; ஸர்வ-பூதேஷு—எல்லா உயிர்களுக்கும்; ஸந்துஷ்ட்யா—திருப்தியடைவதினால்; யேன-கேன-வா—ஏதோ ஒரு வழியில்; ஸர்வ-இந்த்ரிய—அனைத்துப் புலன்களும்; உபஸநாந்த்யா—கட்டுப்படுத்துவதினால்; ச—மேலும்; துஷ்யதி—திருப்தியடைகிறார்; ஆஸு—மிக விரைவில்; ஜனார்தன:—அனைத்து உயிர்களின் தலைவர்.

ஏதோ ஒரு வழியில் திருப்தியடைந்து எல்லா உயிர்களுக்கும் கருணை காட்டுவதினாலும் புலனின்பத்திலிருந்து புலன்களைக் கட்டுப்படுத்துவதினாலும் ஒருவன் முழுமுதற் கடவுளான ஜனார்தனனை மிக விரைவில் திருப்திப்படுத்த முடியும்.

பதம் 4.31.20
அபஹத-ஸகலைஷணா மலாத்மனி
அவிரதாம் ஏதித-பாவனோபஹூத:
நிஜ-ஜன-வஸ-கத்வம் ஆத்மனோ ‘யன்
ந ஸரதி சித்ரவத் அக்ஷர: ஸதாம் ஹி

அபஹத—வெல்லுதல்; ஸகல—எல்லாவற்றையும்; ஏஷண—ஆசைகள்; அமல—குற்றமற்ற; ஆத்மனி—மனதிற்கு; அவிரதாம்—தொடர்ந்து; ஏதித—அதிகரித்தல்; பாவனா—உணர்வுடன்; உபஹூத:—வருதல்; நிஜ-ஜன—அவரது பக்தர்களின்; வஸ—வசத்தில்; கத்வம்—செல்லுதல்; ஆத்மன:—அவருடைய; அயன்—அறிந்து கொண்டு; ந—இல்லை; ஸரதி—செல்லுதல்; சித்ர-வத்—வானத்தைப் போல்; அக்ஷர—முழுமுதற் கடவுள்; ஸதாம்—பக்தர்களின்; ஹி—உறுதியாக.

உலக ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் துடைத்தப் பிறகு பக்தர்கள் அனைத்து மன அழுக்குகளிலிருந்தும் விடுதலை பெறுகின்றனர். இவ்வாறு அவர்கள் பகவானை எப்போதும் தொடர்ந்து நினைந்து அவருடன் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாடுகின்றனர். தனது பக்தர்களின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும் முழுமுதற் கடவுள், நமது தலைக்கு மேல் உள்ள வானம் எவ்வாறு மறைந்து சுடுவதில்லையோ அதுபோல் அவர்களை விட்டு அவர் ஒரு கணம் கூடப் பிரிவது இல்லை.

பதம் 4.31.21
ந பஜதி குமனீஷிணாம் ஸ இஜ்யாம்
ஹரிர் அதனாத்ம தன ப்ரியோ ரஸ ஜ்ஞ:
ஸ்ருத தன குல கர்மணாம் மதைர் யே
விதததி பாபம் அகிஞ்சனேஷு ஸத்ஸு

ந—இல்லை; பஜதி—ஏற்றுக் கொள்வது; கு-மனீஷிணாம்—அழுக்கு மனம் படைத்தவர்கள்; ஸ:—அவர்; இஜ்யாம்—அர்ப்பணித்தல்; ஹரி:—பரமபுருஷ பகவான்; அதன—பௌதீக உடைமைகள் இல்லாதவர்கள்; ஆத்ம-தன—பகவானை மட்டுமே நம்பி இருத்தல்; ப்ரிய:—பிரியமானவர்கள்; ரஸ-ஜ்ஞ—வாழ்வின் சாரத்தினை ஏற்றுக் கொள்வோன்; ஸ்ருத—கல்வி; தன—தனம்; குல—குலம்; கர்மணாம்—பலன் தரும் செயல்களின்; மதை:—பெருமையினால்; யே—எவர்கள் எல்லாரும்; விதததி—செய்யும்; பாபம்—பாவம்; அகிஞ்சனேஷு—பௌதீக உடைமைகளின்றி; ஸத்ஸு—பக்தர்களுக்கு

உலக உடைமைகள் ஏதுமின்றி பகவானின் பக்தித் தொண்டில் முழு மகிழ்ச்சியடையும் பக்தர்கள் மீது முழுமுதற் கடவுள் மிகுந்த பிரியமுடையவராகிறார். உண்மையில் இப்பக்தர்களின் பக்திச் செயல்களைப் பகவான் விரும்பிச் சுவைக்கிறார். கல்வி, செல்வம், குலப்பெருமை, பலன் தரும் செயல் போன்றவற்றினால் ஆணவமுற்றோர் உலகியற் பொருட்களை அடைந்திருப்பதினால் தற்பெருமை கொள்கின்றனர். அதனால் அவர்கள் பக்தர்களை அடிக்கடி இழிவு செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் பகவானை வழிப்பட்டால் கூடப் பகவான் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை.

பதம் 4.31.22
ஸ்ரீயம் அனுசரதீம் தத்-அர்தினஸ் ச
த்விபத-பதீன் விபுதாம்ஸ்ச யத்-ஸ்வ பூர்ண:
ந பஜதி நிஜ-ப்ருத்ய-வர்க-தந்த்ர:
கதம்அமும் உத் விஸ்ருஜேத் புமான் க்ருத-ஜ்ஞ:

ஸ்ரீயம்—அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமி தேவி; அனுசரதீம்—அவரைப் பின் தொடர்ந்து; தத்—அவளது; அர்தின—கருணையினை அடைய விரும்புவோர்; ச—மேலும்; த்விபர-பதீன்—மனித இனத்தை ஆள்வோர்கள்; விபுதான்—தேவர்கள்; ச—மேலும்; யத்—ஏனென்றால்; ஸ்வ-பூர்ண—சுய பூர்த்தியடைதல்; ந—இல்லை; பஜதி—கவனிப்பது; நிஜ—சொந்தம்; ப்ருத்ய-வர்க—அவர் பக்தர்களின் மேல்; தந்த்ர:—சார்ந்திருத்தல்; கதம்—எவ்வாறு; அமும்—அவரை; உத்விஸ்ருஜேத்—துறத்தல் கூடும்; புமான்—ஒருவன்; க்ருத-ஜ்ஞ:—நன்றியுடைய.

முழுமுதற் கடவுள் சுய நிறைவுடையவராக விளங்கிய போதிலும் அவர் தமது பக்தர்களைச் சார்ந்தவராகவே இருக்கின்றார். அவர் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமிதேவியைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அதுபோல் இலட்சுமிதேவியின் கருணைக்காக அலையும் மன்னர்கள் மற்றும் தேவர்களைப் பற்றியும் அவர் கவலைப்படுவது இல்லை. உண்மையில், முழுமுதற் கடவுளை வழிபடாத நன்றிமிக்க மனிதன் எங்கே இருக்கிறான்?

பதம் 4.31.23
மைத்ரேயஉவாச
இதி ப்ரசேதஸோ ராஜன்ன அன்பஸ் ச பகவத்-கதா:
ஸ்ராவயித்வா ப்ரஹ்ம-லோகம் யயௌ ஸ்வாயம்புவோ முனி:

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; இதி—இவ்வாறு; ப்ரசேதஸ:—பிரசேதார்கள்; ராஜன்—ஓ, அரசனே; அன்யா:—மற்றவர்கள்; ச—மேலும்; பகவத்-கதா:—முழுமுதற் கடவுளோடு தொடர்புடைய சரிதங்கள்; ஸ்ராவயித்வா—உபதேசித்த பின்; ப்ரஹ்ம-லோகம்—பிரம்மலோகத்திற்கு; யயௌ—திரும்பிச் சென்றார்; ஸ்வாயம்புவ:—பிரம்மதேவனின் புதல்வர்; முனி:—மாமுனிவர்.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பு மன்னன் விதுரனே, பிரம்ம தேவனின் புதல்வரான ஸ்ரீநாரத முனிவர், இவ்வாறு முழுமுதற் கடவுளின் அனைத்து உறவுகளைப் பற்றியும் பிரசேதார்களுக்கு விளக்கிக் கூறினார். அதன் பின்னர் அவர் பிரம்ம லோகத்திற்குத் திரும்பிச் சென்றார்.

பதம் 4.31.24
தே ‘பி தன்-முக-நிர்யாதம் யஸோ லோக-மலாபஹம்
ஹரேர் நிஸம்ய தத்-பாதம் த்யாயந்தஸ் தத்-கதிம் யயு:

தே—பிரசேதார்கள்; அபி—மேலும்; தத்—நாரதாின்; முக—வாயிலிருந்து; நிர்யாதம்—அறிந்து கொண்டு; யஸ—புகழினை; லோக—உலகத்தின்; பல—பாவங்கள்; அபஹம்—அழிக்கின்ற; ஹரே—பகவான் ஹரியின்; நிஸம்ய—கேட்கப்பெற்று; தத்—பகவானின்; பாதம்—பாதங்கள்; த்யாயன்-த:—தியானித்து; தத்-கதிம்—அவரது இருப்பிடத்திற்கு; யயு:—சென்றனர்.

உலகின் துரதிர்ஷ்டங்கள் அனைத்தையும் சொல்லும் பகவானின் பெருமைகளை நாரத முனிவரின் வாயினின்று கேட்டறிந்த பிரசேதார்கள் முழுமுதற் கடவுள் மீது மிகுந்த பற்றுடையோராகினர். அவரது தாமரைத் திருவடிகளைத் தியானித்து அவர்கள் பரகதிக்கு முன்னேறினர்.

பதம் 4.31.25
ஏதத் தே ‘பிஹிதம் க்ஷத்தர் யன் மாம் த்வம் பரிப்ருஷ்வான்
ப்ரசேதஸாம் நாரதஸ்ய ஸம்வாதம் ஹரி-கீர்தனம்

ஏதத்—இந்த; தே—உனக்கு; அபிஹிதம்—உபதேசித்தது; க்ஷத்த:—ஓ, விதுரனே; யத்—எதுவாயினும்; மாம்—எனக்கு; த்வம்—நீங்கள்; பரிப்ருஷ்டவான்—வினவியது; ப்ரசேதஸாம்—பிரசேதார்களின்; நாரதஸ்ய—நாரதரின்; ஸம்வாதம்—உரையாடல்; ஹரி-கீர்தனம்—பகவானின் பெருமைகளைப் பற்றிய விளக்கம்.

அன்பார்ந்த விதுரனே, நீ அறிய விரும்பிய, நாரதருக்கும் பிரசேதார்களுக்கும் இடையே நடைபெற்ற பகவானின் பெருமைகள் பற்றிய உரையாடல்கள் அனைத்தையும் உனக்கு நான் கூறிவிட்டேன். அவற்றைப் பற்றி என்னால் முடிந்த அளவிற்கு நான் விளக்கியிருக்கிறேன்.

பதம் 4.31.26
ஸ்ரீ-ஸுக உவாச
ய ஏஷ உத்தானபதோ மானவஸ்யானுவர்ணித:
வம்ஸ: ப்ரியவ்ரதஸ்யாபி நிபோத ந்ருப-ஸத்தம

ஸ்ரீ ஸுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்சுவாமி கூறினார்; ய—எது; ஏஷ:—இந்த அரசகுலம்; உத்தானபத:—மன்னர் உத்தானபாதனின்; மானவஸ்ய—சுவாயம்புவ மனுவின்; அனுவர்ணித:—விளக்கினேன்; முந்தைய ஆச்சாரியர்களின், காலடிகளைப் பின்பற்றி; வம்ஸ:—வம்சம்; ப்ரியவ்ரதஸ்ய—மன்னர் பிரியவிரதன்; அபி—மேலும்; நிபோத—புரிந்து கொள்ள முயல்வார்கள்; ந்ருப-ஸத்தம—ஒ, அரசர்களிற் சிறந்தோனே.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ஒ, அரசர்களிற் சிறந்தோனே (பரீக்ஷித்து மன்னன்). நான் இப்போது சுயாம்புவ மனுவின் முதல் மைந்தனான உத்தான பாதனின் வம்சத்தைப் பற்றிக் கூறி முடித்திருக்கிறேன். அடுத்து சுவாயம்புவ மனுவின் இரண்டாவது மைந்தனான பிரியவிரதனின் வம்சத்தைப் பற்றிக் கூறப் போகிறேன். இவற்றை நீ மிகவும் கவனமுடன் கேட்பாயாக.

பதம் 4.31.27
யோ நாரதாத் ஆத்ம வித்யாம் அதிகம்ய புனர் மஹீம்
புக்த்வா விபஜ்ய புத்ரேப்ய ஐஸ்வரம் ஸமகாத் பதம்

ய:—எவர்; நாரதாத்—நாரத மாமுனிவரிடமிருந்து; ஆத்ம-வித்யாம்—ஆன்மீக அறிவு; அதிகம்ய—கற்ற பிறகு; புன:—மீண்டும்; மஹீம்—பூமி; புக்த்வா—அனுபவித்து மகிழ்ந்த பின்னர்; விபஜ்ய—பிரித்த பிறகு; புத்ரேப்ய:—அவர் புத்திரர்களுக்கு; ஐஸ்வரம்—உன்னதமான; ஸமகாத்—எய்தினார்; பதம்—நிலை.

மகாராஜா பிரியவிரதன் மாமுனிவர் நாரதரிடமிருந்து உபதேசங்கள் பெற்றிருந்த போதிலும் அவர் இப்பூமியில் ஆள்வதிலேயே ஈடுபட்டிருந்தார். உலகச் செல்வங்கள் அனைத்தையும் அவர் முற்றிலும் அனுபவித்து மகிழ்ந்த பின்னர் அவர் தனது ஆஸ்திகளைத் தனது மைந்தர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். பின்னர் அவர் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைவதற்கான நிலை எய்தப் பெற்றார்.

பதம் 4.31.28
இமாம் து கௌஷார விணோபவர்ணிதாம்
க்ஷத்தா நிஸம்யாஜித-வாத-ஸத்-கதாம்
ப்ரவ்ருத்த-பாவோ ‘ஸ்ரு-கவாகுலோ முனேர்
ததார மூர்த்னா சரணம் ஹ்ருதா ஹரே:

இமாம்—இவையனைத்தும்; து—பின்னர்; கௌஷாரவிணா—மைத்ரேயரால்; உபவர்ணிதாம்—விளக்கப்பட்டு; க்ஷத்தா—விதுரர்; நிஸம்ய—கேட்ட பிறகு; அஜித-வாத—பரமபுருஷ பகவானின் பெருமைக்குரிய; ஸத்-கதாம்—உன்னதச் செய்தியினை; ப்ரவ்ருத்த—அதிகரித்து; பாவ:—மெய்மறந்த நிலை; அஸ்ரு—கண்ணீர்; கலா—துளிகளினால்; ஆகுல:—உணர்ச்சிவயப்பட்டு; முனே:—மாமுனிவரின்; ததார—பற்றினார்; மூர்த்னா—தலையினால்; சரணம்—தாமரைத் திருவடிகள்; ஹ்ருதா—இதயத்தினால்; ஹரே—முழுமுதற் கடவுள்.

இவ்வாறு முழுமுதற் கடவுள் மற்றும் அவர் பக்தர்களின் உன்னதச் செய்திகளை மாமுனிவர் மைத்ரேயரிடமிருந்து கேட்ட விதுரர் தன்னை இழந்த மெய்மறந்த நிலைமைக்கு ஆளானார். கண்களில் கண்ணீர் பெருகிவர அவர் உடனே தன் ஆன்மீக குருவின் தாமரைத்திருவடிகளில் வீழ்ந்தார். பின்னர் தனது இதயத்தின் நடுவே முழுமுதற் கடவுளை நிலை நிறுத்தினார்.

பதம் 4.31.29
விதுர உவாச
ஸோ ‘யம் அத்ய மஹா-யோகின் பவதா கருணாத்மனா
தர்ஸிதஸ் தமஸ: பாரோ யத்ராகிஞ்சன-கோ ஹரி:

விதுர: உவாச—விதுரர் கூறினார்; ஸ:—அந்த; அயம்—இது; அத்ய—இன்று; மஹா-யோகின்—ஓ, மகா யோகியே; பவதா—உம்மால்; கருண-ஆத்மனா—மிகுந்த கருணையுடைய; தர்ஸித:—எனக்கு காட்டப்பட்டது; தமஸ:—இருளின்; பார:—மறுபக்கம்; யத்ர—எங்கு; அகிஞ்சன-க:—பௌதீக விடுதலையினால் அணுகப்படுவது; ஹரி:—முழுமுதற் கடவுள்.

ஸ்ரீவிதுரர் கூறினார்: ஒ, மகா யோகியே ஓ, பக்தர்கள் அனைவரிலும் சிறந்தவரே, உமது அளவற்றக் கருணையினாலேயே இவ்விருண்ட உலகத்திலிருந்து விடுதலைக்கானப் பாதையை அறிந்தோர் இதில் பயணம் செய்தால், உலகிலிருந்து ஒருவன் விடுதலை பெறுவதோடு வீடுபேறும் பெற்று முழுமுதற் கடவுளையும் அவன் அடையக்கூடும்.

பதம் 4.31.30
ஸ்ரீ-ஸுக உவாச
இதி ஆநம்ய தம் ஆமந்த்ரிய விதுரோ கஜஸாஹ்வயம்
ஸ்வானாம் தித்ருக்ஷு: ப்ரயயௌ ஜ்ஞாதீனாம் நிர்வ்ருதாஸய:

ஸ்ரீ ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ஆநம்ய—வந்தனங்களைச் செலுத்தி; தம்—மைத்ரேயருக்கு; ஆமந்த்ரிய—அனுமதி பெற்று; விதுர:—விதுரர்; கஜ-ஸாஹ்வயம்—ஹஸ்தினாபுரத்திற்கு; ஸ்வானாம்—சொந்த; தித்ருக்ஷு:—காணவிரும்பி; ப்ரயயௌ—அந்த இடத்தை விட்டு நீங்கினார்; ஜ்ஞாதீனாம்—அவருடைய உறவினர்களின்; நிர்வ்ருத-ஆஷய:—உலக ஆசைகளில் இருந்து விடுதலை பெற்று.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: விதுரர் இவ்வாறு மாமுனிவர் மைத்ரேயருக்குத் தனது வந்தனங்களைச் செலுத்தி அவரின் அனுமதி பெற்று உலக ஆசைகள் அற்றவராக இருந்த போதிலும் தன்னுடைய உறவினர்களைக் காண ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

பதம் 4.31.31
ஏதத் ய: ஸ்ருணுயாத் ராஜன் ராஜ்ஞாம் ஹரி-அர்பிதாத்மனாம்
ஆயுர் தனம் யஸ: ஸ்வஸ்தி கதிம் ஐஸ்வர்யம் ஆப்னுயாத்

ஏதத்—இந்த; ய:—யார் ஒருவன்; ஸ்ருணுயாத்—கேட்டால்; ராஜன்—ஓ, பரீக்ஷித்து மன்னனே; ராஜ்ஞாம்—மன்னர்களின்; ஹரி—முழுமுதற் கடவுள்; அர்பித-ஆத்மனாம்—தங்கள் உயிரையும், ஆத்மாவையும் அளித்திருக்கின்றவர்கள்; ஆயு:—ஆயுள்; தனம்—தனம்; யஸ:—புகழ்; ஸ்வஸ்தி—நல்ல யோகம்; கதிம்—வாழ்க்கையின் இறுதி லட்சியம்; ஐஸ்வர்யம்—பொருள் வளம்; ஆப்னுயாத்—எய்துகிறான்.

ஒ, மன்னனே, முழுமுதற் கடவுளை முற்றிலும் சரணடைந்த அரசர்களின் இச்சரிதங்களைக் கேட்பவர்கள் எந்தவித இடையூறுமின்றி நீண்ட ஆயுள், செல்வம், நற்புகழ், நல்யோகம் மற்றும் இறுதியில் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைவதற்கான வாய்ப்பு போன்றவற்றை எய்துவர்.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “பிரசேதார்களுக்கு நாரதர் உபதேசித்தல்” எனும் தலைப்பை கொண்ட முப்பத்தொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare