அத்தியாயம் – 30
பிரசேதார்களின் செயல்கள்
பதம் 4.30.1
விதுர உவாச
யே த்வயாபிஹிதா ப்ரஹ்மன் ஸுதா: ப்ராசீனபர்ஹிஷ
தே ருத்ர-கீதேன ஹரிம் ஸித்திம் ஆபு ப்ரதோஷ்ய காம்

விதுர: உவாச—விதுரர் கூறினார்; யே—எவர்கள்; த்வயா—உம்மால்; அபிஹிதா—சொல்லப்பட்ட; ப்ரஹ்மன்—ஓ, அந்தணரே; ஸுதா:—புதல்வர்கள்; ப்ரானபர்ஹி:—மன்னர் பிராசீனபர்ஹியின்; தே—அவர்கள் அனைவரும்; ருத்ர-கீதேன—சிவபெருமானால் இயற்றப்பட்ட பாடல்; ஹரிம்—பகவான்; ஸித்திம்—வெற்றி; ஆபு—அடைதல்; ப்ரதோஷ்ய—திருப்தியன்று; காம்—என்ன.

மைத்ரேயரிடம் விதுரர் வினவினார்: ஓ, அந்தணரே நீர் முன்பு பிராசீனபர்ஹியான் புதல்வர்களைப் பற்றியும் அவர்கள் சிவபெருமானால் இயற்றப்பட்ட பக்தித் பாடலைப் பாடியதின் மூலம் முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்தினார்கள் என்றும் கூறினீர். இதன் மூலம் அவர்கள் பெற்றது யாது ?

பதம் 4.30.2
கிம் பார்ஹஸ்பத்யேஹ பரத்ர வாத
கைவல்ய-நாத-ப்ரிய-பார்ஸ்வ வர்தின:
ஆஸாத்ய தேவம் கிரிஸம் யத்ருச்சயா
ப்ராபு: பரம் நூனம் அத ப்ரசேதஸ:

கிம்—என்ன; பார்ஹஸ்பத்ய—ஓ பிரகஸ்பதியின் சீடரே; இஹ—இங்கே; பரத்ர—பல்வேறு உலகங்களில்; வா—அல்லது; அத—அதுபோன்ற; கைவல்ய-நாத—விடுதலையினை அருள்பவர்; ப்ரிய—பிரியமான; பார்ஸ்வ-வர்தின—நிலை தொடர்புகொண்டு; ஆஸாத்ய—சந்தித்த பிறகு; தேவம்—சிறந்ததேவர்; கிரிஸம்—கயிலை மலையின் தலைவர்; யத்ருச்சயா—தெய்வ அருளினால்; ப்ராபு—எய்துதல்; பரம்—பரம்; நூனம்—உறுதியாக; அத:—அதனால்; ப்ரசேதஸ:—பர்ஹிஷத்தின் புதல்வர்கள்.

போற்றுதற்குரிய பார்ஹஸ்பத்யரே, பிரதேசர்கள் எனப்படும் மன்னர் பர்ஹிஷத்தின் புதல்வர்கள் விடுதலை அளிக்கும் முழுமுதற் கடவுளுக்கு மிகவும் இனியவரான சிவபெருமானை சந்தித்தபின் என்ன செய்தனர்? நிச்சயம் அவர்கள் ஆன்மீக உலகத்திற்கு மாற்றல் பெற்றிருப்பர் ஆயினும் அவர்கள் இந்த உலகில் இப்பிறவியிலோ அல்லது பல பிறவிகளிலோ என்ன பெற்றனர்?

பதம் 4.30.3
மைத்ரேய உவாச
ப்ரசேதஸோ ‘ந்தர் உததௌ பிதுர் ஆதேஸ-காரிண:
ஜய-யஜ்ஞேன தபஸா புரஞ்ஜனம் அதோஷயன்

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; ப்ரசேதஸ:—பிரசேதார்கள்; அந்த:—உள்ளே; உததெள—கடல்; பிது:—அவர்கள் தந்தையின்; ஆதேஸ-காரிண—கட்டளையினைச் சுமந்து கொண்டு; ஜப-யஜ்ஞேன—மந்திரங்களை ஜெபித்ததினால்; தபஸா—கடுந்தவத்தினால்; புரம்-ஜனம்—முழுமுதற் கடவுள்; அதோஷயன்—திருப்தியடைதல்.

மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: பிரசேதார்கள் எனப்படும் மன்னர் பிராசீனபர்ஹியின் புதல்வர்கள் தங்கள் தந்தையின் கட்டளையின்படி கடல்நீரினுள் தவம் செய்வதற்காகச் சென்றனர். சிவபெருமானால் அருளப்பட்ட மந்திரங்களைத் திரும்பத் திரும்ப உச்சரித்ததனால் அவர்கள் முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவைத் திருப்திப்படுத்தக் கூடிய திறன் பெற்றோராயினர்.

பதம் 4.30.4
தஸ-வர்ஷ-ஸஹஸ்ராந்தே புருஷஸ் து ஸநாதன:
தேஷாம் ஆவிரபூத் க்ருச்ச்ரம் ஸாந்தேன ஸமயன் ருசா

தஸ-வர்ஷ—பத்து வருடங்கள்; ஸஹஸ்ர-அந்தே—ஆயிரத்தின் இறுதியில்; புருஷ:—பரமபுருஷர்; து—பின்னர்; ஸநாதன:—நித்திய; தேஷாம்—பிரதேசங்களின்; ஆவிரபூத்—தோன்றினார்; க்ருச்ச்ரம்—கடுமையான தவம்; ஸாந்தேன—திருப்தியுற்று; ஸமயன்—தணித்தார்; ருசா—அவரது எழிலினால்.

பத்தாயிரம் வருடங்கள் பிரசேதார்கள் கடுமையான தவம் செய்த பின்னர், அவர்கள் தவத்தில் மகிழ்ந்த முழுமுதற் கடவுள் மிகவும் இனிமையான வடிவத்துடன் அவர்கள் முன் தோன்றினார். அவரின் தோற்றம் அவர்களைப் பெரிதும் கவர்ந்தது. தாங்கள் செய்த தவத்தின் பயன் இதுவே என்று மகிழ்ந்தனர்.

பதம் 4.30.5
ஸுபர்ண-ஸ்கந்தம் ஆரூடோ மேரு-ஸ்ருங்கம் இவாம்புத:
பீத-வாஸா மணி-க்ரீவ: குர்வன் விதிமிரா திஸ:

ஸுபர்ண—பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடன்; ஸ்கந்தம்—தோள்களில்; ஆரூட—அமர்ந்து கொண்டு; மேரு—மேரு மலை; ஸ்ருங்கம்—உச்சியின் மேல்; இவ—போன்று; அம்புத:—ஒரு மேகம்; பீத-வாஸா—மஞ்சள் வண்ண ஆடை அணிந்து; மணி-க்ரீவ:—அவரது கழுத்தில் கௌத்துவ மணிமாலை அலங்கரித்திருந்தது; குர்வன்—செய்தது; விதிமிரா:—இருளிலிருந்து விடுதலை; திஸ:—எல்லாத் திசைகளும்.

கருடனின் தோள்களின் மீது அமர்ந்திருந்த முழுமுதற் கடவுளின் தோற்றம் ஒரு கார்மேகம் மேரு மலையின் உச்சியில் அமர்ந்தது போன்றிருந்தது. பகவானின் உன்னதஉடல் மஞ்சள் வண்ணப்பட்டுப் பீதாம்பரத்தினால் அழகு செய்யப்பட்டிருந்தது. அவரது கழுத்தினைக் கௌத்துபமணிமாலை அலங்கரித்திருந்தது. பகவானின் உடலிலிருந்து தோன்றிய ஒளி இப்பிரபஞ்சத்தின் இருளினை அகற்றியது.

பதம் 4.30.6
காஸிஷ்ணுனா கனக வர்ண விபூஷணேன
ப்ராஜத்-கபோல-வதனோ விலஸத்-கிரீட:
அஷ்டாயுதைர் அனுசரைர் முனிபி: ஸுரேந்த்ரைர்
ஆஸேவிதோ கருட-கின்னா-கீத-கீர்தி:

காஸிஷ்ணுனா—ஒளிர்கின்ற; கனை—பொன்; வர்ண—வண்ணம்; விபூஷணேன—அணியணிகளுடன்; ப்ராஜத்—ஒளிர்கின்ற; கபோல—நெற்றி; வதன:—முகம்; விலஸத்—பளபளக்கும்; கிரீட:—கிரீடம்; அஷ்ட—எட்டு; ஆயுதை:—ஆயுதங்களுடன்; அனுசரை:—அடியவர்களினால்; முனிபி:—மாமுனிவர்களினால்; ஸுர-இந்த்ரை:—தேவர்களினால்; ஆஸேவித—பணி செய்யப்பட்டு; கருட—கருடனால்; கின்னர—கின்னர லோகத்தைச் சேர்ந்தவர்; கீத:—பாடி; கீர்தி:—கீர்த்திகளை.

பகவானின் திருமுகம் எழில்மிக்கதாயிருந்தது. அவரது தலையினை கண்னைப் பறிக்கும் கிரீடமும், பொன்னாபரணங்களும் அணி செய்தன. பளபளக்கும் கிரீடம் ரம்யமாக அவரது தலையில் சூடப்பட்டிருந்தது. பகவானது எட்டுக் கரங்களும் ஆயுதங்களை ஏந்தியிருந்தன. பகவான் தேவர்களாலும், மாமுனிவர்களாலும், பிற அடியவர்களாலும் சூழப்பட்டிருந்தார். இவர்கள் அனைவரும் இறைபணியில் ஈடுபட்டிருந்தனர். பகவானின் வாகனமாகக் கருடன் தனது இறக்கைகளை அசைத்தபடி வேதமந்திரங்களினால் பகவானின் புகழைப் பாடிக்கொண்டிருந்தது. கருடன் கின்னரலோக வாசியாக இருப்பார் என்று தெரிகிறது.

பதம் 4.30.7
பீனாயதாஷ்ட-புஜ-மண்டல-மத்ய-லக்ஷ்ம்யா
ஸ்பர்தச் ச்ரியா பரிவ்ருதோ வன-மாலயாத்ய:
பர்ஹிஸ்மத: புருஷ ஆஹ ஸுதான் ப்ரபன்னான்
பர்ஜன்ய-நாத-ருதயா ஸக்ருணாவலோக:

பீன—தடித்த; ஆயுத—நீண்ட; அஷ்ட—எட்டு; புஜ—கரங்கள்; மண்டல—சுற்றி; மத்ய—நடுவில்; லக்ஷ்ம்ய—லட்சுமி தேவியுடன்; ஸ்பர்தத்—போட்டியிடுகின்ற; ஸ்ரீயா—அவர் எழில்; பரிவ்ருத:—சுற்றப்பட்டு; வன-மாலயா—மலர் மாலையினால்; ஆத்ய:—ஆதி முழுமுதற் கடவுள்; பர்ஹிஸ்மத:—மன்னன் பிராசீனபர்ஹி; புருஷ—பரமபுருஷ பகவான்; ஆஹ—கூறினார்; ஸுதான்—புதல்வர்கள் ப்ரபன்னான்—சரணடைதல்; பர்ஜன்ய—ஒரு மேகத்தைப் போன்று; நாத—அவரது வாய் மொழி; ருதயா—குரலினால்; ஸ-க்ருண—கருணையுடன்; அவலோக:—அவரது குளிர்ந்த பார்வை.

முழுமுதற் கடவுளின் கழுத்தைச் சுற்றிக் கிடந்த நீண்ட மலர் மாலை அவரது முழங்கால்களைத் தொட்டது. அந்த மாலையினால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது உறுதிமிக்க, நீண்ட, எட்டுக் கரங்களும் லட்சுமி தேவியின் எழிலோடு போட்டியிட்டன. தன்னுடைய கருணைமிக்க பார்வையினாலும் இடியோசை போன்ற குரலினாலும் பகவான் தன்னைச் சரணடைந்த மன்னர் பிராசீனபர்ஹியின் புதல்வர்களுக்கு உரைக்கலுற்றார்.

பதம் 4.30.8
ஸ்ரீ-பகவான் உவாச
வரம் வ்ருணீத்வம் பத்ரம்
வோ யூயம் மே ந்ருப-நந்தனா:
ஸௌஹார்தேனாப்ருதக்-தர்மாஸ்
துஷ்டோ ‘ஹம் ஸெயஹ்ருதேனவ:

ஸ்ரீ-பகவான் உவாச—முழுமுதற் கடவுள் கூறினார்; வரம்—வரம்; வ்ருணீத்வம்—கேட்பீராக; பத்ரம்—நன்மங்கலம்; வ:—உங்களுக்காக; யூயம்—நீவீர்; மே—என்னிடமிருந்து; ந்ருப-நந்தனா:—ஓ, அரச புத்திரர்களே; ஸௌஹார்தேன—நட்பினால்; அப்ருதக்—வேறுபாடின்றி; தர்மா:—தர்மம்; துஷ்ட:—மகிழ்ந்தேன்; அஹம்—நான்; ஸௌஹ்ருதேன—நட்பினால்; வ:—உமது.

முழுமுதற் கடவுள் கூறினார்: எனது அன்பிற்குரிய அரச குமாரர்களே, உங்களிடையே காணப்படும் நட்புறவு கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அனைவரும் பக்தித் தொண்டு என்னும் ஒரே தர்மத்தில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். உங்களுக்கிடையே இருக்கும் நட்பினைக் கண்டு நான் மகிழ்ச்சியடைவதோடு உங்கள் அனைவருக்கும் மங்கலம் உண்டாகுக என்றும் வாழ்த்துகின்றேன். இப்போது நீங்கள் வேண்டும் வரத்தினை என்னிடம் கேட்கலாம்.

பதம் 4.30.9
யோ ‘னுஸ்மரதி ஸந்த்யாயாம் யுஷ்மான் அனுதினம் நர:
தஸ்ய ப்ராத்ருஷ்வ ஆத்ம-ஸாம்யம் ததா பூதேஷு ஸௌஹ்ருதம்

ய:—எவர் ஒருவர்; அனுஸ்மரதி—எப்போதும் நினைத்தல்; ஸந்த்யாயாம்—மாலை வேளையில்; யுஷ்மான்—உங்களை; அனுதினம்—ஒவ்வொரு காலையிலும்; நர:—மனிதர்கள்; தஸ்ய-ப்ராத்-ருஷு—தங்கள் சகோதரர்களுடன்; ஆத்ம-ஸாம்யம்—தனித் தன்மை; ததா—மேலும்; பூதேஷு—எல்லா உயிர் வாழிகளுடனும்; ஸௌஹ்ருதம்—நட்பு.

பகவான் தொடர்ந்து கூறினார்: ஒவ்வொரு நாள் மாலையிலும் காலையிலும் உங்களை நினைவு கூர்வோர் அவர்கள் சகோதரர்களுடனும் பிற உயிர்களுடனும் மிகுந்த நட்புடன் விளங்குவர்.

பதம் 4.30.10
யே து மாம் ருத்ர-கீதேன ஸாயம் ப்ராத: ஸமாஹிதா:
ஸ்துவந்தி அஹம் காம-வரான் தாஸ்யே ப்ரஜ்ஞாம் ச ஸோபனாம்

யே—அம்மனிதர்கள்; து—ஆனால்; மாம்—எனக்கு; ருத்ர-கீதேன—சிவபெருமான் பாடிய பாடல்; ஸாயம்—மாலையில்; ப்ராத:—காலையில்; ஸமாஹிதா:—கவனமுடன்; ஸ்துவந்தி—பிரார்த்தித்தால்; அஹம்—நான்; காம-வரான்—அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றும் அனைத்து வரங்களையும்; தாஸ்யே—அருள்வேன்; ப்ரஜ்ஞாம்—புத்தி; ச—மேலும்; ஸோபனாம்—உன்னதம்.

சிவபெருமானால் இயற்றப்பட்டப் பிரார்த்தனைகளின் மூலம் காலையிலும் மாலையிலும் என்னைத் தொழுபவர்களுக்கு நான் அனைத்து வரங்களும் அளிக்கின்றேன். இதனால் அவர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதோடு சிறந்த ஞானமும் பெறுகின்றனர்.

பதம் 4.30.11
யயூயம் பிதுர் ஆதேஸம் அக்ரஹீஷ்ட முதான் விதா:
அதோ வ உஸதீ கீர்திர் லோகான் அனு பவிஷ்யதி

யத்—ஏனெனில்; யூயம்—நீவீர்; பிது:—உங்கள் தந்தையின்; ஆதேஸம்—கட்டளையினை; அக்ரஹீஷ்ட—ஏற்றுக் கொண்டு; முதா-அன்விதா:—சிறந்த மகிழ்ச்சியில்; அதோ—ஆகையினால்; வ:—உமது; உஸதீ—விரும்பத்தக்க; கீர்தி:—பெருமைகள் அல்லது புகழ்; லோகான் அனு—பிரபஞ்சம் முழுவதும்; பவிஷ்யதி—சாத்தியமாகும்.

உங்கள் தந்தையின் கட்டளையினை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று அதனை நிறைவேற்றியும் இருக்கின்ற காரணத்தினால் உங்களது விரும்பத்தகும் இந்நற்குணங்கள் இப்பிரபஞ்சம் முழுவதும் போற்றப்படும்.

பதம் 4.30.12
பவிதா விஸ்ருத: புத்ரோ ‘நவமோ ப்ரஹ்மணோ குணை:
ய ஏதாம் ஆத்ம-வீர்யேண த்ரி-லோகீம் பூரயிஷ்யதி

பவிதா—அங்கே இருப்பான்; விஸ்ருத:—புகழ் வாய்ந்த; புத்ர:—புத்திரன்; அநவம:—குறைந்தவனில்லை; ப்ரஹ்மண:—பிரம்ம தேவனுக்கு; குணை:—குணங்களினால்; ய:—யார்; ஏதாம்—இவையனைத்தும்; ஆத்ம-வீர்யேண—அவனது சந்ததியினரால்; த்ரி-லோகீம்—மூன்று உலகங்களும்; பூரயிஷ்யதி—நிரப்புவர்.

உங்களுக்கு ஓர் அரிய செல்வன் பிறப்பான். அவன் பிரம்ம தேவனுக்கு எவ்விதத்திலும் குறைந்தவனாக இருக்கமாட்டான். அவனை உலகம் புகழும். அவனுடைய புதல்வர்களும், பேரப்பிள்ளைகளும் மூன்று உலகங்களிலும் நிறைந்து காணப்படுவர்.

பதம் 4.30.13
கண்டோ: ப்ரம்லோசயா லப்தா கன்யா கமல-லோசனா
தாம் சாபவித்தாம் ஜக்ருஹுர் பூருஹா ந்ருப-நந்தனா:

கண்டோ:—கண்டு முனிவரின்; ப்ரம்லோசயா—சொர்க்க லோகத்தைச் சேர்ந்த பிரம்லோசா என்னும் பெயருடைய பெண்; லப்தா—அடைந்தாள்; கன்யா—புதல்வி; கமல-லோசனா—செந்தாமரை விழியாள்; தாம்—அவளது; ச—மேலும்; அபலித்தம்—விட்டுவிட்டு; ஜகருஹு:—ஏற்றுக் கொண்டு; பூருஹா:—மரங்கள்; ந்ருப-நந்தனா:—ஓ, மன்னன் பிராசீனபர்ஹியின் மைந்தர்களே.

ஓ, மன்னன் பிராசீன பர்ஹியின் மைந்தர்களே, சொர்க்க லோகத்தைச் சேர்ந்த பிரம்லோசா என்னும் பெண், முனிவர் கண்டுவிற்குப் பிறந்த செந்தாமரை விழிகளையுடையத் தன் புதல்வியை வனத்திலுள்ள மரங்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டு சொர்க்க லோகத்திற்குத் திரும்பிச் சென்றாள். இக்குழந்தை பேரழழு மங்கையான பிரம்லோசாவிற்கும், முனிவர் கண்டுவிற்கும் பிறந்ததாகும்.

பதம் 4.30.14
க்ஷுத்-க்ஷாமாயா முகே ராஜா ஸோம: பீயூஷ-வர்ஷிணீம்
தேஷிணீம் ரோதமானாயா நிததே ஸ தயான்வித:

க்ஷுத்—பசியினால்; க்ஷாமாயா:—அக்குழந்தை வருந்திய பொழுது; முகே—வாயினுள்; ராஜா—மன்னர்; ஸோம:—நிலவு; பீயூஷ—அமிர்தம்; வர்ஷிணீம்—பெய்து; தேஷிணீம்—சுட்டு விரலினால்; ரோதமானாயா:—அது அழுதபோது; நிததே—இட்டார்; ஸ—அவர்; தயா-அன்வித:—மிக்க கருணையுடன்.

மரங்களின் பாதுகாப்பில் விடப்பட்ட அக்குழந்தை பசியினால் கதறியழுதது. அக்காட்டின், மன்னனும், சந்திர மண்டலத்து மன்னனுமான சந்திரன், தனது சுட்டு விரலினால் மிகுந்த கருணையுடன் அக்குழந்தையின் வாயில் அமிர்தத்தை ஊட்டினான். இவ்வாறு அக்குழந்தை சந்திரன் கருணையினால் வளர்க்கப்பட்டது.

பதம் 4.30.15
ப்ரஜா-விஸர்க ஆதிஷ்டா: பித்ரா மாம் அனுவர்ததா
தத்ர கன்யாம் வராரோஹாம் தாம் உத்வஹத மாசிரம்

ப்ரஜா-விஸர்கே—சந்ததியினரைப் பெருக்குவதற்காக; ஆதிஷ்டா:—கட்டளையிடப்பட்டு; பித்ரா—உங்கள் தந்தையினால்; மாம்—எனது கட்டளை; அனுவர்ததா—பின்பற்றி; தத்ர—அங்கே; கன்யாம்—கன்னியை; வர-ஆரோ-ஹாம்—நற்குணமும் நிறைந்த அழகும் உடைய; தாம்—அவளை; உத்வஹத—மணமுடிப்பீராக; மா—இன்றி; சிரம்—காலத்தை வீணாக்காமல்.

நீங்கள் அனைவரும் எனது கட்டளைக்கு மிகவும் கீழ்ப்படிபவர்கள் ஆதலினால் நற்குணங்களும், அழகும் வாய்ந்த அந்தப் பெண்ணை மணந்து கொள்ள வேண்டுமென்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தந்தையின் கட்டளைக்கேற்ப அவள் மூலம் நீங்கள் மக்கள் தொகையினைப் பெருக்குவீராக.

பதம் 4.30.16
அப்ருதக்-தர்ம-ஸீலானாம் ஸர்வேஷாம் வ: ஸுமத்யமா
அப்ருதக்-தர்ம-ஸீலேயம் பூயாத் பத்னி அர்பிதாஸயா

அப்ருதக்—வேறுபாடுகள் ஏதுமின்றி; தர்ம—தர்மம்; ஸீலானாம்—அவர்கள் நடத்தை; ஸர்வேஷாம்—எல்லோரும்; வ:—உங்களின்; ஸு-மத்யமா—மெல்லிடை கொண்ட பெண்; அப்ருதக்—வேறுபாடுகளின்றி; தர்ம—தர்மம்; ஸீல—நன்கு பழகும்; இயம்—இந்த; பூயாத்—அவள் ஆனாள்; பத்னி—மனைவி; அர்பித-ஆஸயா—முற்றிலும் சரணடைதல்.

நீங்கள் சகோதரர்கள் அனைவரும் ஒரே இயற்கையுடையவர்கள் காரணம் நீங்கள், பக்தர்கள் என்பதோடு உங்கள் தந்தை சொற்படி நடக்கும் மைந்தர்களும் ஆவீர். அதுபோல் அப்பெண்ணும் அதே தன்மை உடையவள் என்பதோடு உங்கள் அனைவருக்கும் தன்னையே அர்ப்பணிப்பவளுமாவாள். ஆகையினால் பிராசீனஸ்ரீபர்ஹியின் புதல்வர்களான நீங்களும் அப்பெண்ணும் ஒரே கொள்கை உடையவர்களாதலின், சமநிலையில் இருக்கிறீர்கள்.

பதம் 4.30.17
திவ்ய-வர்ஷு-ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ரம் அஹதௌஜஸ:
பௌமான் போக்ஷ்யத: போகான் வை திவ்யாம்ஸ் சானுக்ரஹான் மம

திவ்ய—சொர்க்க லோகங்களின்; வர்ஷ—வருடங்கள்; ஸஹஸ்ராணாம்—ஆயிரக்கணக்கில்; ஸஹஸ்ரம்—ஓராயிரம்; அஹத—தோல்வியின்றி; ஒஜஸ:—உங்கள் அதிகாரம்; பௌமான்—இவ்வுலகில்; போக்ஷ்யதே—நீங்கள் அனுபவிப்பீர்; போகான்—இன்பங்கள்; வை—உறுதியாக; திவ்யான்—சொர்க்க லோகத்தின்; ச—மேலும்; அனுக்ரஹாத்—கருணையினால்; மம—எனது.

பிரசேதார்கள் அனைவரையும் ஆசிர்வதித்துப் பகவான் கூறுகிறார்: அன்பார்ந்த இளவரசர்களே, எனது கருணையினால் நீங்கள் இவ்வுலகில் மட்டுமல்லாது சொர்க்க லோகத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் அனுபவித்து மகிழ்வீராக. உண்மையில் இவ்வின்பங்கள் அனைத்தையும் நீங்கள் எந்தவிதத் தடையுமின்றி பத்து லட்சம் தேவ வருடங்கள் வரை அனுபவிப்பீராக.

பதம் 4.30.18
அத மய்ய அநபாயின்யா பக்த்ய பக்வ-குணாஸயா:
உபயாஸ்யத மத்தாம நிர்வித்ய நிரயாத் அத:

அத—அதனால்; மயி—எனக்கு; அநபாயின்யா—எந்தவித மாற்றமுமின்றி; பக்த்யா—பக்தித் தொண்டினால்; பக்வ-குண—உலகமாசிலிருந்து விடுதலை பெற்று; ஆஸயா:—உங்கள் மனதினை; உபயாஸ்யத—நீங்கள் அடைவீர்; மத்-தாம—எனது இருப்பிடத்தை; நிர்வித்ய—முற்றிலும் பற்றறுத்து; நிரயாத்—உலக வாழ்க்கையிலிருந்து; அத:—இவ்வாறு.

அதன்பிறகு நீங்கள் எனது பக்தித் தொண்டில் எந்தவித மாறுபாடுமின்றி வளர்ச்சி பெற்று பௌதீக மாசுக்கள் அனைத்திலுமிருந்து விடுதலை பெறுவீர். அப்போது நீங்கள் சொர்க்க லோகம் என்றும் நரக லோகம் என்றும் சொல்லப்படுபவற்றிலுள்ள அனைத்து இன்பங்களின் மீதும் முற்றிலும் பற்றறுத்து வீடுபேறு பெற்று, முழுமுதற் கடவுளாகிய என்னை அடைவீராக.

பதம் 4.30.19
க்ருஹேஷ்வ ஆவிஸதாம் சாபி பும்ஸாம் குஸல-கர்மணாம்
மத் வார்தா-யாத-யாமானாம் ந பந்தாய க்ருஹா மதா:

க்ருஹேஷு—இல்லறத்தில்; ஆவிஸதாம்—இருப்பவர்; ச—மேலும்; அபி—கூட; பும்ஸாம்—மனிதர்களின்; குஸல-கர்மணாம்—புண்ணியச் செயல்களில் ஈடுபடுதல்; மத்-வார்தா—என்னைப் பற்றிய விஷயங்களில்; யாத—செலவிடுதல்; யாமானாம்—அவனது ஒவ்வொரு கணமும்; ந—இல்லை; பந்தாய—பிணிக்கப்படுதல்; க்ருஹ:—இல்லற வாழ்க்கை; மதா:—கருதப்படுதல்.

பக்தித் தொண்டினையும் புண்ணியச் செயல்களையும் உறுதியுடன் செய்வோர் அவற்றின் பலன்களையும் இறுதியில் அடைவர். முழுமுதற்கடவுள் ஒருவரே என்பதை இவர்கள் நன்கறிந்து கொள்கின்றனர். ஒரு செயலை ஒருவன் செய்யும்பொழுது அதன் பலன்களை முழுமுதற் கடவுளுக்கு அளித்து விட்டு, இறை பணியில் ஈடுபடுவதின் மூலம் தன் வாழ்க்கையைக் கழிக்கிறான். அம்மனிதன் இல்லற வாழ்க்கையில் இருந்தபோதிலும் கர்ம விளைகளால் ஒருநாளும் பாதிக்கப்படுவதில்லை.

பதம் 4.30.20
நவ்யவத் த்ருதயே யஜ் ஜ்ஞோ ப்ரஹ்மைதத் ப்ரஹ்ம-வாதிபி:
ந முஹ்யந்தி ந ஸோசந்தி ந ஹ்ருஷ்யந்தி யதோ கதா:

நவ்ய-வத்—எப்போதும் புத்துணர்ச்சி வளரப் பெறுதல்; ஹ்ருதயே—இதயத்தில்; யத்—போன்ற; ஜ்ஞ—பரமஅறிவர், பரமாத்மா; ப்ரஹ்ம—பிரம்மம்; ஏதத்—இந்த; ப்ரஹ்ம-வாதிபி—முழு மெய்ப்பொருளின் பரிவினால்; ந—இல்லை; முஹ்யந்தி—குழப்பமடைதல்; ந—இல்லை; ஸோசந்தி—சோகம்; ந—இல்லை; ஹ்ருஷ்யந்தி—சந்தோஷம்; யத:—அப்பொழுது; கதா:—அடையப் பெற்றது.

பக்தித் தொண்டுகளில் எப்போதும் ஈடுபட்டிருப்பதினால், பக்தர்கள் அனைத்துச் செயல்களிலும் புதுமையும், புத்துணர்ச்சியும் பெறுகின்றனர். பக்தனின் இதயத்திலுள்ள எல்லாம் அறிந்த பரமாத்மா எல்லாவற்றிலும் புத்துணர்ச்சியினை அதிகரிக்கச் செய்கிறார். இதுவே முழுமெய்ப் பொருளின் பரிவினால் ஆன பிரம்ம நிலை என்றறியப்படுகிறது. இப்படிப்பட்ட விடுதலை நிலையில் (ப்ரஹ்ம பூத), ஒருவன் குழப்பமடைவதில்லை. அத்தோடு ஒருவன் அனாவசியமான துக்கமோ அல்லது மகிழ்ச்சியோ அடைவதும் இல்லை. இது பிரம்ம பூத நிலையினால் ஏற்படுவதாகும்.

பதம் 4.30.21
மைத்ரேய உவாச
ஏவம் ப்ருவாணம் புருஷார்த பாஜனம்
ஜனார்தனம் ப்ராஞ்ஜலய: ப்ரசேதஸ:
தத்-தர்ஸன-த்வஸ்த-தமோ-ரஜோ-மலா
கிராக்ருணன் கத்கதயா ஸுஹ்ருத்தமம்

மைத்ரேய உவாச—மைத்ரேயர் கூறினார்; ஏவம்—இவ்வாறு; ப்ருவாணம்—கூறிக் கொண்டு; புருஷ-அர்த—வாழ்க்கையின் இறுதி லட்சியம்; பாஜனம்—அருள்பவர்; ஜன-அர்தனம்—பக்தர்களின் பாவங்கள் அனைத்தையும் நீக்குபவர்; ப்ராஞ்ஜலய:—கூப்பிய கரங்களுடன்; ப்ரசேதஸ—பிரசேதார் சகோதரர்கள்; தத்—அவரை; தர்ஸன—தரிசித்ததினால்; த்வஸ்த—நீக்கப் பெற்று; தம:—இருளின்; ரஜ:—இரஜோ குணம்; மலா:—அவற்றின் மாசு; கிரா—குரலுடன்; அக்ருணன்—பிரார்த்தித்தனர்; கத்கதயா—கம்மிய; ஸுஹ்ருத்-தமம்—அனைவரின் நண்பருக்கு;

மைத்ரேய மாமுனிவர் கூறினார்: முழுமுதற் கடவுள் இவ்வாறு உரையாற்றிய பின்னர், பிரசேதார்கள் அவரை வழிபடத் தொடங்கினர். பகவானே வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் அருள்பவராகவும் பரம நலன் அளிப்பவராகவும் விளங்குகின்றார். அவரே பக்தனால் அனுபவிக்கப்படும் அனைத்துத் துன்பங்களையும் நீக்கும் பரம நண்பராகவும் திகழ்கிறார். மெய்மறந்த நிலையில், கம்மிய குரலில் பிரசேதார்கள் தங்கள் வழிபாடுகளைத் தொடங்கினர். பகவானை நேருக்கு நேர் தரிசித்த காரணத்தினால் அவர்கள் அனைவரும் தூய்மையடைந்தனர்.

பதம் 4.30.22
ப்ரசேதஸ ஊசு:
நமோ நம: க்லேஸ-விநாஸனாய
நிரூபிதோதார-குணா ஹ்வயாய
மனோ-வசோ-வேச புரோ ஜவாய
ஸர்வாக்ஷ-மார்கைர் அகதாத்வனே நம:

ப்ரசேதஸ: ஊசு:—பிரசேதார்கள் கூறினர்; நம:—வந்தனங்கள்; நம:—வந்தனங்கள்; க்லேஸ—உலகத் துன்பங்கள்; விநாஸனாய—அழிப்பவருக்கு; நிரூபித—உறுதி செய்யப்பட்டது; உதார—பெருந்தன்மை; குண—குணங்கள்; ஆஹ்வயாய—அவரது நாமம்; மன:—மனதின்; வச:—பேச்சின்; வேக—வேகம்; புர:—முன்பு; ஜவாய—அவர் வேகம்; ஸர்வ-அக்ஷ—அனைத்துப் புலன்களின்; மார்கை:—மார்க்கங்களினால்; அதக—உணரக்கூடியதன்று; அத்வனே—அவரது பயணம்; நம:—எங்கள் மரியாதைகளைச் செலுத்துகிறோம்.

பிரசேதார்கள் பின்வருமாறு கூறினர்: போற்றுதற்குரிய பகவானே, அனைத்து துன்பங்களையும் நீரே நீக்குகின்றீர். உமது பெருந்தன்மைமிக்க உன்னதக் குணங்களும் புனித நாமமும் எல்லா மங்கலங்களும் உடையனவாகும். இந்த முடிவு ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மனம் வாக்குகளுக்கு எட்டாத வேகத்தில் உம்மால் செல்ல முடியும். ஐம்புலன்களினால் நீர் உணர முடியாதவர் ஆவீர். ஆகையினால் நாங்கள் எங்கள் மரியாதைக்குரிய வந்தனங்களை மீண்டும் மீண்டும் செலுத்துகின்றோம்.

பதம் 4.30.23
ஸுத்தாய ஸாந்தாய நம: ஸ்வ-நிஷ்டாய
மனஸி அபார்தம் விலஸத்-த்வயாய
நமோ ஜகத்-ஸ்தான-லயோதயேஷு
க்ருஹீத-மாயா-குண-விக்ரஹாய

ஸுத்தாய–குற்றமற்றவருக்கு; ஸாந்தாய—மிக்க அமைதியுடையவருக்கு; நம:—நாங்கள் எங்கள் வந்தனங்களைச் சமர்ப்பிக்கின்றோம்; ஸ்வ-நிஷ்டாய—ஒருவனது நிலையில் வீற்றிருப்பதினால்; மனஸி—மனதினில்; அபார்தம்—எந்தவித அர்த்தமுமின்றி; விலஸத்—தோன்றுகின்ற; த்வயாய—அவரிடத்தில் இந்த இருமை உலகம்; நம:—வந்தனம்; ஜகத்—பிரபஞ்சத் தோற்றத்தின்; ஸ்தான—காத்தல்; லய—அழித்தல்; உதயேஷூ—படைத்தலுக்காக; க்ருஹீத—ஏற்றுக் கொள்ளுதல்; மாயா—ஜடம்; குண—இயற்கைக் குணங்களின்; விக்ரஹாய—வடிவங்கள்.

அன்பின் வடிவமான பகவானே, எங்கள் வந்தனங்களை உமக்குத் தாழ்மையுடன் செலுத்துகிறோம். மனம் உன்மீது நிலை நிற்கும் பொழுது இருமை நிறைந்த இவ்வுலகம் உலகியல் இன்பங்களுக்குரிய இடமாக இருந்த போதிலும் அது பொருளற்தாகவே தோன்றுகின்றது. உமது உன்னத வடிவம் முழுவதும் முற்றிலும் பரமானந்தம் நிறைந்ததாகும். ஆகையினால் நாங்கள் எங்கள் மரியாதைகளை உமக்கு அர்ப்பணிக்கின்றோம். பிரம்ம தேவன், பகவான் விஷ்ணு, சிவபெருமான் என்ற உமது வடிவங்கள் இப்பேருலகைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும் எடுக்கப்பட்ட அவதாரங்களாகும்.

பதம் 4.30.24
நமோ விஸுத்த-ஸத்த்வாய ஹரயே ஹரி-மேதஸே
வாஸுதேவாய க்ருஷ்’ணாய ப்ரபவே ஸர்வ-ஸாத்வதாம்

நம:—வந்தனங்கள்; விஸுத்த-ஸத்த்வாய—அனைத்துப் பௌதீக மாசுகளின் பாதிப்பிலிருந்தும் விடுதலை பெற்ற வடிவினையுடைய உமக்கு; ஹரயே—பக்தர்களின் துன்பங்கள் அனைத்தையும் நீக்குபவர்; ஹரி-மேதஸே—அவரது சிந்தனை எப்போதும் பந்தப்பட்ட ஆத்மாவை மீட்பது பற்றியே இருக்கும்; வாஸுதேவாய க்ருஷ்ணாய—கிருஷ்ணருக்கு; ப்ரபவே—செல்வாக்கினை அதிகரிப்பவர்; ஸர்வ-ஸாத்வதாம்—எல்லாவிதமான பக்தர்களின்.

போற்றுதற்குரிய பகவானே எங்கள் மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு நாங்கள் தெரிவிக்கின்றோம். ஏனெனில் உமது தோற்றமானது உலகத்தின் பாதிப்புக்கள் ஏதுமற்ற சுதந்திரத் தன்மையுடையதாகும். மேலாண்மைமிக்க நீர் எப்போதும் பக்தர்களின் துயரங்களைத் துடைப்பவராகவே இருக்கின்றீர். உமது சிந்தனையெல்லாம் அதனை எப்படிச் செய்வது என்பது பற்றியே இருக்கும். நீர் எங்கும் இருக்கும் பரமாத்மா ஆவீர்; வசுதேவரை உமது தந்தையாக ஏற்றுக் கொண்டவர்; கிருஷ்ணர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறவர். நீர் மிகுந்த அன்புடையவர் ஆதலினால் அனைத்து வகையான பக்தர்களின் செல்வாக்கினையும் அதிகரிக்கச் செய்கின்றீர்.

பதம் 4.30.25
நம: கமல-நாபாய நம: கமல-மாலினே
நம: கமல- பாதாய நமஸ் தே கமலேக்ஷண

நம:—எமது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்குச் சமர்ப்பிக்கின்றோம்; கமல-நாபாய—முழுமுதற் கடவுளுக்கு, அவரது உந்திச் சுழியிலிருந்தே ஆதி தாமரை மலர் தோன்றியது; நம:—வந்தனங்கள்; கமல-மாலினே—தாமரை மலர் மாலைகளால் எப்போதும் அலங்கரிக்கப்பட்டிருப்பவர்; நம:—வந்தனங்கள்; கமல-பாதாய—தாமரை மலர்போல் எழிலும்; நறுமணமும் வாய்ந்த திருவடிகள் அவருடையது; நம: தே—உமக்கு வந்தனங்கள்; கமல-ஈக்ஷண—அவரது கண்கள் செந்தாமரை மலரின் இதழ்களைப் போன்றது.

போற்றுதற்குரியப் பகவானே, உமக்கு எமது மரியாதைக்குரிய வந்தனங்களைச் செலுத்துகின்றோம். ஏனெனில் உயிர்களுக்கு ஆதாரமான ஆதி தாமரை உமது உந்திச் சுழியிலிருந்தே தோன்றியது. நீர் எப்போதும் தாமரை மலர் மாலையினைச் சூடியிருக்கின்றீர். மேலும் உமது திருவடிகள் நறுமணம் உடைய தாமரை மலரை ஒத்திருக்கின்றன. உமது விழிகள் செந்தாமரை மலரின் சிவந்த இதழ்களைப் போன்றிருக்கின்றன. ஆகையினால் நாங்கள் எங்களது மரியாதைக்குரிய வந்தனங்களை எப்போதும் உமக்கு அர்ப்பணிக்கின்றோம்.

பதம் 4.30.26
நம: கமல கிஞ்ஜல்க பிஷங்காமல வாஸஸே
ஸர்வ-பூத-நிவாஸாய நமோ ‘யுங்க்ஷ்மஹி ஸாக்ஷிணே

நம:—வந்தனங்கள்; கமல-கிஞ்ஜல்க—தாமரைமலரிலுள்ள மகரந்தத்தூள்; பிஷங்க—மஞ்சள் வண்ண; அமல—குற்றமற்ற; வாஸஸே—ஆடையுடைய அவருக்கு; ஸர்வ-பூத—அனைத்து உயிர்களின்; நிவாஸாய—அடைக்கலம்; நம:—வந்தனம்; ஆயுங்க்ஷ்மஹி—நாங்கள் சமர்ப்பிக்கிறோம்; ஸாஹிணே—பரம சாட்சியாக விளங்குபவருக்கு.

போற்றுதற்குரிய பகவானே, நீர் அணிந்திருக்கும் பட்டுப் பீதாம்பரத்தின் மஞ்சள் வண்ணம் தாமரை மலரிலுள்ள மகரந்தத்தூள் போன்று இருக்கின்றது. அந்த ஆடை மண்ணுலகப் பொருள்களினால் செய்யப்பட்டதன்று. அனைவரின் இதயங்களிலும் நீர் அமர்ந்திருப்பதினால், நீரே உயிர்கள் அனைவரின் அனைத்துச் செயல்களுக்கும் கண்கண்ட இறைவனாக விளங்குகின்றீர். நாங்கள் எங்களது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு மீண்டும் மீண்டும் செலுத்திக் கொள்கிறோம்.

பதம் 4.30.27
ரூபம் பகவதா த்வ ஏதத் அஸேஷ-க்லேஸ-ஸங்க்ஷயம்
ஆவிஷ்க்ருதம் ந: க்லிஷ்டானாம் கிம் அன்யத் அனுகம்பிதம்

ரூபம்—வடிவம்; பகவதா—உமது மேலாண்மையினால்; து—ஆனால்; ஏதத்—இந்த; அஸேஷ—அளவற்ற; க்லேஸ—துன்பங்கள்; ஸங்க்ஷயம்—அது தணிக்கிறது; ஆவிஷ்க்ருதம்—வெளிப்படுதல்; ந:—எமக்கு; க்லிஷ்டானாம்—பௌதீக நிலைகளில் துன்புறுவோர்; கிம்-அன்யத்—என்ன செல்வது; அனுகம்பிதம்—அவர்களிடம் நீர் கருணையுடன் நடந்து கொள்கின்றீர்.

போற்றுதற்குரிய பகவானே, உடற்கருத்துடைய வாழ்வில் கட்டுண்ட ஆத்மாக்களான நாங்கள் எப்போதும் அறியாமையினால் மூடப்பட்டிருக்கிறோம். எனவே நாங்கள் எப்போதும் உலக வாழ்க்கையின் துன்ப நிலைகளையே பெறுகின்றோம். இத்துன்ப நிலைகளிலிருந்து எங்களை மீட்பதற்கு நீர் உமது உன்னத வடிவத்தில் தோன்றியிருக்கின்றீர். எம் போன்றோர் மீது நீர் காட்டும் அளவற்ற கருணைக்கு இதுவே சிறந்த சான்றாகும். பிறகு நீர் எப்போதும் சாதகமாக நடந்து கொள்ளும் உமது பக்தர்களைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது?

பதம் 4.30.28
ஏதாவத் த்வம் ஹி விபுபிர் பாவ்யம் தீனேஷு வத்ஸலை:
யத் அனுஸ்மர்யதே காலே ஸ்வ-புத்த்யா பத்ர ரந்தன

ஏதாவத்—இவ்வாறு; த்வம்—உமது மேலாண்மை; ஹி—உறுதியாக; விதுபி:—விரிவினால்; பாவ்யம்—உணர்வதற்கு; தீனேஷு—பணிவான பக்தர்களுக்கு; வத்ஸலை:—கருணை; யத்—எது; அனுஸ்மர்யதே—எப்போதும் நினைவு கூறப்படுகிறது; காலே—உரிய காலத்தில்; ஸ்வ-புத்த்யா—ஒருவனது பக்தித் தொண்டினால்; அபத்ர-ரந்தன—ஓ, பாவங்கள் அனைத்தையும் நீக்குபவரே.

போற்றுதற்குரிய பகவானே, அனைத்துப் பாவங்களையும் நீக்குபவராக நீரே விளங்குகின்றீர். உமது “அர்சா விக்ரஹ” விரிவின் மூலம் நீர் உமது தீன பக்தர்களின் மீது கருணை காட்டுகின்றீர். எம்மை உமது நிரந்தரத் தொண்டர்களாகவே நீர் நிச்சயம் கருதுதல் வேண்டும்.

பதம் 4.30.29
யேனோபஸாந்திர் பூதானாம் க்ஷுல்லகானாம் அபீஹதாம்
அந்தர்ஹிதோ ‘ந்தர்-ஹ்ருதயே கஸ்மான் நோ வேத நாஸிஷ:

யேன—எம்முறையினால்; உபஸாந்தி:—அனைத்து ஆசைகளின் திருப்தி; பூதானாம்—உயிர்களின்; க்ஷுல்லகானாம்—மிகவும் இழிந்த; அபி—இருந்தாலும்; தாம்—பலவற்றை விரும்புதல்; அந்தர்ஹித்:—மறைந்திருக்கும்; அந்தம:-ஹ்ருதயே—இதயத்தின் மையத்தில்; கஸ்மாத்—ஏன்; ந:—நமது; வேத—அவர் அறிவது; ந—இல்லை; ஆஸிஷ:—ஆசைகள்.

அவரது இயற்கையான கருணையினால் பகவான் தமது பக்தனைப் பற்றி நினைக்கும் பொழுது ஒரு புதிய பக்தனின் அனைத்து ஆசைகளும் நிறைவேற்றப்படுகின்றன. உயிர்ப்பொருள் முக்கியத்துவமற்றவனாக இருந்தபோதிலும் கூட பகவான் அனைவரின் உள்ளங்களிலும் வீற்றிருக்கின்றார். பகவான் ஓர் உயிரைப்பற்றி அவனது ஆசைகள் உள்ளிட்ட அனைத்தையும் அறிவார். நாம் சாமானியர்கள் என்ற போதிலும் பகவான் ஏன் நமது ஆசைகளை அறிந்து கொள்ளவில்லை?

பதம் 4.30.30
அஸாவ் ஏவவரோ ‘ஸ்மாகம் ஈப்ஸிதோ ஜகத: பதே
ப்ரஸன்னோ பகவான் யேஷாம் அபவர்ககுருர்கதி:

அஸௌ—அந்த; ஏவது—நிச்சயமாக; வர—வரம்; அஸ்மாகம்—நாங்கள்; ஈப்ஸித—விரும்பியது; ஜகத:—பிரபஞ்சத்தின்; பதே—ஓ, பகவானே; ப்ரஸன்ன—திருப்தியடைதல்; பகவான்—முழுமுதற் கடவுள்; யேஷாம்—எவருடன்; அபவர்க—உன்னத அன்புத் தொண்டின்; குரு—குரு; கதி—வாழ்க்கையின் இறுதி லட்சியம்.

ஓ, பிரபஞ்சத்தின் நாயகரே, நீரே பக்தித் தொண்டின் நெறிமுறைகளுக்கு உண்மையான தலைவர் ஆவீர். உமது மேலாண்மையே எமது வாழ்வின் இறுதி லட்சியமாக இருப்பது கண்டு நாங்கள் மகிழ்கிறோம். மேலும் எங்கள் மீது திருப்தியடையுமாறு உம்மை நாங்கள் வேண்டுகிறோம். இதுவே எமது வரமாகும். உமது திருப்தியினைத் தவிர வேறெதுவும் நாங்கள் வேண்டுவதில்லை.

பதம் 4.30.31
வரம் வ்ருணீமஹே ‘தாபி நாத த்வத் பரத: பராத்
ந ஹி அந்தஸ் த்வத்-விபூதீனாம் ஸோ ‘னந்த இதி கீயஸே

வரம்—வரம்; வ்ருணீமஹே—நாங்கள் வேண்டுவது; அத-அபி—ஆகையினால்; நாத—ஓ, பகவானே; த்வத்—உம்மிடமிருந்து; பரத:-பராத்—உன்னதத்தினைக் கடந்த நிலை; ந—இல்லை; ஹி—உறுதியாக; அந்த:—முடிவு; த்வத்—உமது; விபூதீனாம்—வளங்களின்; ஸ:—நீர்; அனந்த:—எண்ணற்ற; இதி—இவ்வாறு; கீயஸே—கொண்டாடப்படுகிறீர்.

வணக்கத்திற்குரிய பகவானே, உமது வரத்திற்காக நாங்கள் உம்மை வணங்குகிறோம். ஏனெனில் நீரே பரம்பொருளாகவும், அனைத்து உன்னதங்களுக்கும் அப்பாற்பட்டவராகவும் இருப்பதோடு, முடிவில்லாத வளங்களையுடையவராகவும் இருக்கின்றீர். இதனைத் தொடர்ந்து நீர் அனந்தன் என்னும் பெயரில் எல்லோராலும் கொண்டாடப்படுகின்றீர்.

பதம் 4.30.32
பாரிஜாதே ‘ஞ்ஜஸா லப்தே ஸாரங்கோ ‘ன்யன் நஸேவதே
த்வத்-அங்க்ரி-மூலம் ஆஸாத்ய ஸாக்ஷாத் கிம் கிம் வ்ருணீமாஹி

பாரிஜாதே—பாரிஜாதம் என்றழைக்கப்படும் தேவலோகத்திலுள்ள மரம்; அஞ்ஜஸா—முற்றிலும்; லப்தே—எய்திய பிறகு; ஸாரங்க—ஒரு தும்பி; அன்யத்—அடுத்த; நஸேவதே—வேறிடம் செல்வதில்லை; த்வத்-அங்க்ரிய—உமது தாமரைத் திருவடிகள்; மூலம்—எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கின்றன; ஆஸாத்ய—எய்திய பின்னர்; ஸாக்ஷாத்—நேரடியாக; கிம்—என்ன; கிம்—என்ன; வ்ருண்மாஹி—நாங்கள் கேட்பது.

போற்றுதற்குரிய பகவானே பாரிஜதாம் என்றழைக்கப்படும் தேவலோகத்திலுள்ள மரத்தை அடைந்த தும்பி நிச்சயம் அம்மரத்தினை விட்டு அகலாது. ஏனென்றால் அதன்பிறகு அது வெளியே சென்று பெறப்போவது எதுவுமில்லை. அது போல் நாங்கள் உம்மை அடைந்து உமது தாமரைத் திருவடிகளில் சரணடைந்த பின்னர் வேறு என்ன சிறந்த வரத்தினை நாங்கள் உம்மிடம் கேட்கக் கூடும்?

பதம் 4.30.33
யாவத் தே மாயயா ஸ்ப்ருஷ்டா ப்ரமாம இஹ கர்மபி:
தாவத் பவத்-ப்ரஸங்கானாம் ஸங்க: ஸ்யான் நோ பவே பவே

யாவத்—எதுவரை; தே—உமது; மாயயா—மாயையினால்; ஸ்ப்ருஷ்ட—மாசுற்று; ப்ரமாம்:—நாங்கள் அலைந்தாலும்; இஹ—இப்பௌதீக உலகத்தில்; கர்மபி:—பலன்தரும் செயலின் எதிர்விளைவுகளினால்; தாவத்—அதுவரை; பவத்-ப்ரஸங்கானாம்—உமது அன்புடைய பக்தர்களின்; ஸங்க—கூட்டத்தில்; ஸ்யாத்—இருத்தல் வேண்டும்; ந:—நாங்கள்; பவே-பவே—ஒவ்வொரு உயிரினத்தில் பிறந்தாலும்.

போற்றுவதற்கும் வணக்கத்திற்கும் உரிய பகவானே, எத்தனை காலங்களுக்கு நாங்கள் எங்களது மாசுகளினால் உலகத்தில் இருக்க வேண்டியதாக இருந்தாலும் ஒரு உடலிலிருந்து மற்றோர் உடலுக்கும், ஓர் உலகிலிருந்தும் மற்றோர் உலகிற்கும் அலைந்து கொண்டிருந்தாலும், உமது லீலைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் உமது பக்தர்கள் கூட்டத்தில் நாங்கள் இருத்தற்குரிய வரத்தினை வேண்டுகிறோம். இவ்வரத்தினையே ஜென்மாஜென்மத்திற்கு எந்த உடலில் இருந்தாலும், எந்த உலகில் இருந்தாலும் நாங்கள் வேண்டுவோம்.

பதம் 4.30.34
துலயாம லவேனாபி ந ஸ்வர்கம் நாபுனர் பவம்
பகவத் ஸங்கி-ஸங்கஸ்ய மர்த்யானாம் கிம் உதாஸிஷ:

துலயாம—நாங்கள் ஒப்பிடுகிறோம்; லவேன—ஒரு கணத்துடன்; அபி—கூட; ந—இல்லை; ஸ்வர்கம்—சொர்க்கலோகத்தினை அடைவது; ந—இல்லை; அபுன:-பவம்—பிரம்மஜோதியில் கலத்தல்; பகவத்—முழுமுதற் கடவுளின்; ஸங்கி—துணைவர்களுடன்; ஸங்கஸ்ய—கூட்டத்தில்; மர்த்யானாம்—இறப்பதற்கே பிறந்தவர்கள்; கிம் உத—எத்தனைச் சிறிய; ஆஸிஷ:—வரங்கள்.

ஒரு தூய பக்தனுடன் ஒரு கணமே உறவு கொண்ட போதிலும் அது சொர்க்க லோகத்தை அடைதல் அல்லது முழுவிடுதலையில் பிரம்மஜோதியில் கலத்தல் போன்றவற்றோடெல்லாம் ஒப்பிடுவதற்கு அரியதாகும். உடலைத் துறந்து இறுதியில் இறப்பதற்கே விதிக்கப்பட்டிருக்கும் ஓர் உயிருக்குத் தூய பக்தர்களுடன் கொள்ளும் உறவே மிகவுயர்ந்த வரமாகும்.

பதம் 4.30.35

யத்ரேத்யந்தே கதா ம்ருஷ்டாஸ் த்ருஷ்ணாயா: ப்ரஸமோ யத:
நிர்வைரம் யத்ர பூதேஷு நோத்வேகோ யத்ர கஸ்சன

யத்ர—எங்கே; ஈத்யந்தே—வழிபட அல்லது விவாதிக்கப்படுகிறதோ; கதா—வார்த்தைகள்; ம்ருஷ்டர்—தூய; த்ருஷ்ணாயா:—பௌதீக நாட்டங்கள்; ப்ரஸம்—திருப்தி; யத:—எதன்மூலம்; நிர்வைரம்—காழ்ப்புணர்ச்சியின்றி; யத்ர—எங்கே; பூதேஷு—உயிர்களுக்கிடையில்; ந—இல்லை; உத்வேக:—அச்சம்; யத்ர—எங்கே; கஸ்சன—எதுவும்.

உன்னத உலகின் தூய கருத்துக்கள் எப்போதெல்லாம் பேசப்படுகின்றதோ அப்போது அங்கே குழுமியுள்ள கூட்டத்தினர் அவர்களது அனைத்து வகையான உலகியல் நாட்டங்களையும் சிறிது நேரமாவது மறக்கின்றனர். அதுமட்டுமல்லாது ஒருவர் மீது மற்றொருவர் காழ்ப்புணர்ச்சியோ கவலையோ அல்லது அச்சமோ கூடக் கொள்வதில்லை.

பதம் 4.30.36
யத்ர நாராயண: ஸாக்ஷாத் பகவான் ந்யாஸினாம் கதி:
ஸம்ஸ்தூயதே ஸத்-கதாஸூ முக்த-ஸங்கை: புன: புன:

யத்ர—எங்கே; நாராயண—பகவான் நாராயணன்; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவான்—முழுமுதற் கடவுள்; ந்யாஸினாம்—துறவற வாழ்க்கை வாழ்வோர்; கதி—இறுதி லட்சியம்; ஸம்ஸ்தூயதே:—வழிபடப்படுகிறார்; ஸத்-கதாஸூ—உன்னத ஒளியதிர்வினைப் பற்றி விவாதிப்பதினால்; முக்த-ஸங்கை:—உலகத்தின் மாசுகளில் இருந்து விடுதலை பெற்றவர்களினால்; புன: புன:—மீண்டும் மீண்டும்.

பகவான் நாராயணன் முழுமுதற் கடவுளின் புனித நாமத்தினை ஓதுவதிலும் கேட்பதிலும் ஈடுபட்டிருக்கும் பக்தர்களின் மத்தியில் எப்போதும் இருக்கின்றார். நாராயணனே துறவிகளின் இறுதிக் குறிக்கோளாக இருக்கின்றார். மேலும் அவர் பௌதீக மாசுகளில் இருந்து விடுதலை பெற்றவர்களினால் இசை இயக்கத்தின் மூலம் வழிபடப்படுகின்றார். உண்மையில் அவர்கள் இப்புனித நாமத்தினை மேலும் மேலும் பண்ணாகப் பாடுகின்றனர்.

பதம் 4.30.37
தேஷாம் விசரதாம் பத்ப்யாம் தீர்தானாம் பாவனேச்சயா
பீதஸ்ய கிம் ந ரோசேத தாவகானாம் ஸமாகமம்:

தேஷாம்—அவர்களின்; விசரதாம்—பயணம் செய்து; பத்ப்யாம்—காலங்களினால்; தீர்தானாம்—புண்ணிய ஸ்தலங்கள்; பாவன-இச்சயா—தூய்மை செய்வதற்குரிய விருப்பத்துடன்; பீதஸ்ய—எப்போதும் அச்சமுடைய; லோகாயத மனிதன்; கிம்—ஏன்; ந—இல்லை; ரோசேத—மகிழ்ச்சியடைகிறான்; தாவகானாம்—உமது பக்தர்களின்; ஸமாகம்—சந்திப்பினால்.

போற்றுதற்குரிய பகவானே! உமது தூயபக்தர்களும், துணைவர்களும் புனிதமான ஊர்களை கூடத் தூய்மை செய்வதற்காக இவ்வுலக முழுவதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையாகவே உலக வாழ்வினைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு இச்செயல் மகிழ்ச்சியளிக்காதா என்ன?

பதம் 4.30.38
வயம்து ஸாக்ஷாத் பகவன் பவஸ்ய
ப்ரியஸ்ய ஸக்யு: க்ஷண-ஸங்கமேன
ஸூதுஸ் சிகித்ஸ்யஸ்ய பவஸ்ய ம்ருத்யோர்
பிஷக்தமமம் த்வாத்ய கதிம் கதா: ஸ்ம

வயம்—நாங்கள்; து—பிறகு; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவன்—ஓ, பகவானே; பவஸ்ய—சிவபெருமானின்; ப்ரியஸ்ய—மிகவும் பிரியமான; ஸக்யு:—உமது நண்பர்; க்ஷண—கண நேரம்; ஸங்கமேன—தொடர்பினால்; ஸூது-ஸ்சிகித்ஸ்யஸ்ய—குணப்படுத்துவதற்கு கடினமான; பவஸ்ய—பௌதீக வாழ்வின்; ம்ருத்யோ:—மரணத்தின்; பிஷக்-தமம்—மிகத்தேர்ந்த மருத்துவர்; த்வா—நீர்; அத்ய—இன்று; கதிம்—புகழிடம்; கதா:—எய்தப்பெறுதல்; ஸ்ம—உறுதியாக.

உமக்கு மிகவும் பிரியமானவரும், உமது நெருங்கிய நண்பராகவும் இருக்கும் சிவபெருமானுடன் ஒரு கணநேரம் தொடர்பு கொண்டதால் உம்மைக்காணும் பேறு பெற்றோம். வாழ்க்கையென்னும் தீராத நோயைக் கூடத் தீர்க்கும் தேர்ந்த மருத்துவர் நீர். எங்களது நல்வினைப்பயனால் உமது திருவடித்தாமரைகளைச் சரண்புக எங்களால் முடிந்தது.

பதங்கள் 4.30.39 – 4.30.40
யன் ந: ஸ்வதீதம் குரவ: ப்ரஸாதிதா
விப்ராஸ் ச வ்ருத்தாஸ் ச ஸத்-ஆனுவ்ருத்த்யா
ஆர்யா நதா: ஸுஹ்ருதோ ப்ராதரஸ்ச
ஸர்வாணி பூதானி அனஸுயயைவ

யன் ந: ஸுதப்தம் தப ஏதத் ஈஸ
நிரந்தஸாம் காலம் அதப்ரம் அப்ஸு
ஸர்வம் தத் ஏதத் புருஷஸ்ய பூம்னோ
வ்ருணீமஹே தே பரிதோஷணாய

யத்—என்ன; ந:—எம்மால்; ஸ்வகீதம்—கற்கப்பட்ட; குரவ—உயர்ந்தவர்கள்; ஆன்மீக குருக்கள்; ப்ரஸாதிதா:—திருப்தியடைதல்; லிப்ரா:—அந்தணர்கள்; ச—மேலும்; வ்ருத்தா:—மூத்தோர்கள்; ச—மேலும்; ஸத்-அனுவ்ருத்யா—எமது சீரிய நடத்தையினால்; ஆர்யா:—ஆன்மீக ஞானத்தில் முன்னேறியவர்கள்; நதா:—வந்தனங்கள் அளிக்கப்பட்டு; ஸு-ஹ்ருத:—நண்பர்கள்; ப்ராதர:—சகோதரர்கள்; ச—மேலும்; ஸர்வாணி—எல்லோரும்; பூதானி—உயிர்கள்; அனஸுயயா—காழ்ப்புணர்ச்சி இன்றி; ஏவ—உறுதியாக; யத்—என்ன; ந:—எங்களின்; ஸு-தப்-தம்—கடுமையான; தப:—தவம்; ஏதத்—இந்த; ஈஸ—ஓ, பகவானே; நிரந்தஸாம்—உணவு உட்கொள்ளாமல்; காலம்—காலம்; அதப்ரம்—நீண்ட நெடுங்காலமாக; அப்ஸு—தண்ணீரினுள்; ஸர்வம்—எல்லாம்; தத்—அந்த; ஏதத்—இந்த; புருஷஸ்ய—முழுமுதற் கடவுளின்; பூம்ன—மிகவுயர்ந்த; வ்ருணீமஹே—நாங்கள் இவ்வரத்தினை வேண்டுகின்றோம்; தே—உமது; பரிதோஷணாய—திருப்திக்காக.

போற்றுதற்குரிய பகவானே, நாங்கள் வேதங்களைக் கற்றிருப்பதோடு, ஆன்மீக குருவினை ஏற்று அந்தணர்களுக்கும், பக்தர்களுக்கும், ஆன்மீகத்தில் வளர்ச்சியடைந்துள்ள சிறந்த மகான்களுக்கும் எங்கள் மரியாதைகளைச் செலுத்தியிருக்கின்றோம். எங்கள் மரியாதைகளை அவர்களுக்கு அளித்திருக்கிறோம் என்பதல்லாது எங்கள் சகோதரர்களிடத்தும், நண்பர்களிடத்தும், பிறரிடத்தும் ஒருபோதும் நாங்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டதில்லை. நாங்கள் நீரில் மூழ்கி, உணவே உண்ணாது நீண்ட நெடுங்காலம் கடுமையான தவம் செய்துள்ளோம். எங்களது இவ்வான்மீகச் செல்வங்கள் அனைத்தும் உமது திருப்திக்காக அளிக்கப்படுகின்றன. இவ்வரம் ஒன்றினைத் தவிர வேறெவ்வரமும் நாங்கள் வேண்டோம்.

பதம் 4.30.41
மனு: ஸ்வயம்பூர் பகவான் பவஸ் ச
யே ‘ன்யே தபோ-ஜ்ஞான-விஸுத்த-ஸத்த்வா:
அத்ருஷ்ட-பார அபி னன்-மஹிம்ன:
ஸ்துவந்தி அதோ த்வாத்ம-ஸமம் க்ருணீம:

மனு:—ஸ்வாயம்புவ மனு; ஸ்வயம்பூ:—பிரம்மதேவன்; பகவான்—மிகவும் சக்தியுடைய; பவ:—சிவபெருமான்; ச—மேலும்; யே—யார்; அன்யே—அடுத்தவர்கள்; தப—தவத்தினால்; ஜ்ஞான—ஞானத்தினால்; விஸு—தூய; ஸத்த்வா—அவரது தோற்றம்; அத்ருஷ்ட-பாரா:—இறுதியினைக் காணமுடியாதவர்; அபி—இருந்தபோதிலும்; யத்—உமது; மஹிம்ன:—பெருமைகளை; ஸ்துவந்தி—அவர்கள் பிரார்த்திக்கின்றனர்; அதோ—ஆகையினால்; த்வா—உமக்கு; ஆத்ம-ஸமம்—சக்தியினைப் பொறுத்து; க்ருணீம—நாங்கள் வழிபாடுகளைச் செய்கிறோம்.

தூய வாழ்க்கையில் தம்மை நிலை நிறுத்திக் கொண்டு, தவம் மற்றும் ஞானத்தின் வலிமையினால் முன்னேறியுள்ள யோகிகள், சித்தர்கள் போன்றோர்க்கும், மனு, பிரம்மதேவன், சிவபெருமான் போன்ற மகான்களுக்கும் கூட உமது சக்திகளும், பெருமைகளும் என்னவென்று தெரியாது. இருந்தும் அவர்கள் தங்கள் சக்திக்கேற்ப உம்மை வழிபடுகின்றனர். அதுபோல் இச்சான்றோர்களைவிட மிகமிக இழிந்தவர்களான நாங்களும் எங்கள் சக்திக்கேற்ப எமது வழிபாடுகளை உமக்கு அர்ப்பணிக்கின்றோம்.

பதம் 4.30.42
நம: ஸமாய ஸுத்தாய புருஷாய பராய ச
வாஸுதேவாய ஸத்த்வாய துப்யம் பகவதே நம:

நம:—எங்களது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம்; ஸமாய—அனைவர்க்கும் சமமானவர்; ஸுத்தாய—பாவச்செயல்களினால் ஒருபோதும் கறைபடியாதவர்; புருஷாய—பரமபுருஷருக்கு; பராய—உன்னதமான; ச—மேலும்; வாஸுதேவாய—எங்கும் வாழ்பவர்; ஸத்த்வாய—உன்னதநிலையில் இருப்பவர்; துப்யம்—உமக்கு; பகவதே—முழுமுதற் கடவுள்; நம—வந்தனங்கள்.

போற்றுதற்குரிய பகவானே உமக்கு நண்பர்களுமில்லை, பகைவர்களுமில்லை. ஆகையினால் நீர் அனைவர்க்கும் சமமானவராக இருக்கின்றீர். பாவச் செயல்களினால் ஒருபோதும் நீர் கறைபடிவதில்லை. மேலும் உமது உன்னத வடிவம் எப்போதும் உலகப் படைப்பிற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. நீரே முழுமுதற் கடவுள் ஆவீர் ஏனெனில் நீர் அனைத்துத் தோற்றங்களினுள்ளும் பரந்துபட்டவராக இருக்கின்றீர். அதனால் நீர் வாசுதேவர் என்றறியப்படுகின்றீர். உமக்கு எமது மரியாதையுடன் கூடிய வந்தனங்களைச் சமர்ப்பிக்கின்றோம்.

பதம் 4.30.43
மைத்ரேய உவாச
இதி ப்ரசேதோபிர் அபிஷ்டுதோ ஹரி:
ப்ரீதஸ் ததேதி ஆஹ ஸரண்ய-வத்ஸல:
அநிச்சதாம் யானம் அத்ருப்த-சக்ஷுஷாம்
யயௌ ஸ்வ தாமானபவர்க வீர்ய:

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; இதி—இவ்வாறு; ப்ரசேதோபி:—பிரதேசங்களினால்; அபிஷ்டுத:—புகழப்பட்டு; ஹரி:—முழுமுதற் கடவுள்; ப்ரீத:—மகிழ்ச்சியுற்று; ததா—ஆகையினால்; இதி—இவ்வாறு; ஆஹ—கூறினார்; ஸரண்ய—சரணடைந்த ஆத்மாக்களுக்கு; வத்ஸல—பிரியமானவர்; அநிச்சதாம்—விரும்பாத; யானம்—அவர் புறப்படுதல்; அத்ருப்த—திருப்தியடையாது; சக்ஷுஷாம்—அவர்களின் விழிகள்; யயௌ—அவர் சென்றார்; ஸ்வ-தாம—அவரது இருப்பிடத்திற்கு; அனபவர்க-வீர்ய:—என்றும் தோல்வியடையாத வீரமுடையவர்.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார். அன்பார்ந்த விதுரனே, இவ்வாறு பிரசேதார்களினால் பேசப்பட்டு, வழிபடப்பட்டவரும் சரணடைந்த ஆத்மாக்களைப் பாதுகாப்பவருமான முழுமுதற் கடவுள், “நீங்கள் வழிபட்டபின் கேட்ட அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று பதில் கூறினார். பின்னர் எந்நாளும் தோல்வியறியாத வீரமுடைய முழுமுதற் கடவுள் தமது இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றார். பிரசேதார்களினால் அவர் பிரிந்து செல்வதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பகவானைத் தங்களுக்கு முழுத்திருப்தி ஏற்படும்வரை அவர்கள் இன்னும் பார்த்து முடிக்கவில்லை.

பதம் 4.30.44
அத நிர்யாய ஸிலிலாத்
ப்ரசேதஸ உதன்வத:
வீக்ஷ்யாகுப்யன் த்ருமைஸ் சன்னாம்
காம் காம் ரோத்தும் இவோச்ச்ரிதை:

அத—அதன்பிறகு; நிர்யாய—வெளியே வந்து; ஸலிலாத்—தண்ணீரிலிருந்து; ப்ரசேதஸ:—பிரசேதார்கள் அனைவரும்; உதன்வத:—கடலின்; வீக்ஷ்ய—கண்டு; அருப்யன்—மிகுந்த சினம் கொண்டனர்; த்ருமை:—மரங்களினால்; சன்னம்—மறைக்கப்பட்டு; காம்—உலகம்; காம்—சொர்க்கலோகம்; ரோத்தும்—தடையாக; இவ—போன்று; உச்ரிதை:—மிக உயரமாக.

இதன்பிறகு பிரசேதார்கள் அனைவரும் கடலிலிருந்து வெளியே வந்தனர். அங்கு நின்ற அனைத்து மரங்களும் மிகவும் உயரமாக வளர்ந்து சொர்க்கலோகத்திற்குச் செல்லும் பாதையினை மறைப்பது போல் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். இம்மரங்கள் பூமியின் நிலப்பகுதி முழுவதையும் மறைத்திருந்தன. அதனால் பிரசேதார்கள் மிகுந்த சினம் கொண்டனர்.

பதம் 4.30.45
ததோ ‘க்னி-மாருதெள ராஜன்ன் அமுஞ்சன் முகதோ ருஷா
மஹீம் நிர்வீருதம் கர்தும் ஸம்வர்தக இவாத்யயே

தத:—அதன்பிறகு; அக்னி—அக்னி; மாருதௌ—புயல்; ராஜன்—ஓ, மன்னனே; அமுஞ்சன்—அவர்கள் பொழிந்தனர்; முக்த:—தங்கள் வாய்களிலிருந்து; ருஷா—ஆத்திரங்கொண்டு; மஹீம்—பூமி; நீர்வீருதம்—மரங்களின்றி; கர்தும்—செய்வதற்கு; ஸம்வர்தக:—ஊழிக்கால நெருப்பு; இவா—போன்று; அத்யயே—அழிவுக் காலத்தில்.

அன்பார்ந்த மன்னனே, ஊழிக்காலத்தில் (யுக அழிவுக் காலத்தில்) சிவபெருமான் மிகுந்த சினம் கொண்டு தனது வாயிலிருந்து நெருப்பையும், புயக்காற்றையும் வெளிப்படச்செய்வார். உலக முழுதும் மரங்கள் இல்லாமல் செய்வதற்காக பிரசேதார்களும் தங்கள் வாய்களிலிருந்து நெருப்பினையும், புயக்காற்றினையும் வெளிப்படுத்தினர்.

பதம் 4.30.46
பஸ்மஸாத் க்ரியமாணாம்ஸ் தான் த்ருமான் வீக்ஷ்ய பிதாமஹ:
ஆகத: ஸமயாம் ஆஸ புத்ரான் பர்ஹிஷ்மதோ நயை:

பஸ்மஸாத்—சாம்பலாக; க்ரியமாணம்—செய்யப்பட்டன; தான்—அவையனைத்தும்; த்ருமான்—மரங்கள்; வீக்ஷ்ய—கண்டு; பிதாமஹ—பிரம்ம தேவன்; ஆகத:—அங்கு வந்தார்; ஸமயாம் ஆஸ—சமாதானப்படுத்தினார்; புத்ரான்—புதல்வர்கள்; பர்ஹிஷ்மத:—மன்னர் பர்ஹிஷ்மானின்; நயை:—நயவுரைகளினால்.

பூமியில் உள்ள அனைத்து மரங்களும் எரிந்து சாம்பலாகியது கண்டு பிரம்ம தேவன் அங்கு விரைந்து வந்து மன்னர் பர்ஹிஷ்மானின் புதல்வர்களை நயவுரைகளினால் சமாதானப்படுத்தினார்.

பதம் 4.30.47

தத்ராவஸிஷ்டா யே வ்ருக்ஷா பீதா துஹிதரம் ததா
உஜ்ஜஹ்ருஸ் தே ப்ரசேதோப்ய உபதிஷ்டா: ஸ்வயம்புவா

தத்ர—அங்கு; அவஸிஷ்டா:—மீதமிருந்த; யே—எவை; வ்ருக்ஷா:—மரங்கள்; பீதா:—அச்சங்கொண்டு; துஹிதரம்—அவர்கள் புதல்வியை; ததா—அந்த நேரம்; உஜ்ஜஹ்ரு:—விடுவித்தது; தே—அவைகள்; ப்ரசேதோப்ய:—பிரசேதார்களுக்கு; உபதிஷ்டா:—அறிவுரை வழங்கப்பட்டு; ஸ்வயம்புவா—பிரம்ம தேவனால்.

மீதமிருந்த மரங்கள் பிரசேதார்களிடம் மிகுந்த அச்சங்கொண்டு பிரம்ம தேவனின் அறிவுரையின்படி அவைகளின் புதல்வியை அளித்தன.

பதம் 4.30.48
தே ச ப்ரஹ்மண ஆதேஸான் மாரிஷாம் உபயேமிரே
யஸ்யாம் மஹத்-அவஜ்ஞானாத் அஜனி அஜன-யோனிஜ:

தே—பிரசேதார்கள் அனைவரும்; ச—மேலும்; ப்ரஹ்மண:—பிரம்ம தேவனின்; ஆதேஸாத்—கட்டளையினால்; மாரிஷாம்—மாரிஷா; உபயேமிரே—மணந்தனர்; யஸ்யாம்—யாரிடத்தில்; மஹத்—மிகச்சிறந்தவரான; அவஜ்ஞானாத்—அவமரியாதை காரணமாக; அஜனி—பிறந்தார்; அஜன-யோனி-ஜ:—பிரம்ம தேவனின் மைந்தனான தக்கன்.

பிரம்ம தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பிரசேதார்கள் அனைவரும் அப்பெண்ணைத் தங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டனர். இப்பெண்ணின் வயிற்றிலிருந்து பிரம்ம தேவனின் புதல்வரான தக்கன் பிறந்தார். மகாதேவரான சிவபெருமானின் கட்டளைக்குக் கீழ்ப்படியாததினால் மாரிஷாவிற்குக் குழந்தையாக தக்கன் பிறக்க நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து அவர் இரண்டு முறை தன்னுடைய உடலைத் துறக்க வேண்டியதாயிற்று.

பதம் 4.30.49
சக்ஷுஷே த்வ அந்தரே ப்ராப்தே ப்ராக்-ஸர்கே கால-வித்ருதே
ய: ஸஸர்ஜ ப்ரஜா இஷ்டா: ஸ தகே’ஷா தைவ-சோதித:

சக்ஷுஷே—சக்ஷுஷ என்னும் பெயரில்; து—ஆனால்; அந்தரே—மன்வந்தரம்; ப்ராப்தே—இது நேர்ந்தபொழுது; ப்ராக்—முன்பு; ஸர்கே—படைத்தல்; கால-வித்ருதே—உரிய காலத்தில் அழிக்கப்பட்டது; ய:—யார் ஒருவர்; ஸஸர்ஜ—படைத்தல்; ப்ரஜா:—உயிர்கள்; இஷ்டா:—விருப்பத்திற்கேற்ப; ஸ:—அவர்; தக்ஷ—தக்ஷன்; தைவ—முழுமுதற் கடவுளினால்; சோதித:—தூண்டப்பட்டு.

தக்கனது முந்தைய உடல் அழிக்கப்பட்டது ஆயினும் அதே தக்கன் பரம் விருப்பத்தினால் தூண்டப்பட்டு சாக்ஷுஷ மன்வந்தரத்தில் வேண்டிய அனைத்து உயிர்களையும் படைத்தார்.

பதங்கள் 4.30.50 – 4.30.51
யோ ஜாயமான: ஸர்வேஷாம் தேஜஸ் தேஜஸ்விநாம் ருசா
ஸ்வயோபாதத்த தாக்ஷ்யாச் ச கர்மணாம் தக்ஷம் அப்ருவன்

தம் ப்ரஜா-ஸர்க-ரக்ஷாயாம் அநாதிர் அபிஷிச்ய ச
யுயோஜ யுயுஜே ‘ன்யாம்ஸ் ச ஸ வை ஸர்வ-ப்ரஜாபதீன்

ய:—யார்; ஜாயமான:—பிறந்த பின்னர்; ஸர்வேஷாம்—அனைத்து; தேஜ:—ஒளி; தேஜஸ்விநாம்—ஒளி; ருசா—சோதியினால்; ஸ்வயா—அவருடைய; உபாதத்த—மூடப்பட்டு; தாக்ஷ்யாத்—தேர்ந்தவராகி; ச—மேலும்; கர்மணாம்—பலன் தரும் செயல்களில்; தக்ஷம்—தக்ஷன்; அப்ருவன்—அழைக்கப்பட்டார்; தம்—அவருடைய; ப்ரஜா—உயிரினங்கள்; ஸர்க—உண்டாக்கப்பட்டு; ரக்ஷாயம்—காப்பதற்காக; அநாதி:—முதலில் பிறந்த, பிரம்ம தேவன்; அபிஷிச்ய—நியமிக்கப்பட்டு; ச—மேலும்; யுயோஜ—ஈடுபட; யுயுஜே—ஈடுபடுத்தினார்; அன்யான்—மற்றவர்களையும்; ச—மேலும்; ஸ:—அவர்; வை—உறுதியாக; ஸர்வ—எலலா; ப்ரஜா-பதீன்—உயிர்வாழிகளின் மூதாதையர்கள்.

தக்கன் பிறந்த பின்னர் அவரே உடலின் ஒளியினால் மற்ற அனைவரின் உடலையும் ஒளியிழக்கச் செய்தார். பலன் தரும் செயல்களைச் செய்வதில் மிக்கத் தேர்ச்சியுடையவராதலினால், “மிகவும் தேர்ந்தவர்” என்று பொருள் தரும் தக்கன் என்னும் பெயரினால் அவர் அழைக்கப்பட்டார். இதனால் பிரம்ம தேவன் உயிர்களைப் படைக்கவும், அவர்களைக் காக்கவும் தன்னை ஈடுபடுத்தினார். உரிய காலத்தில் தக்கன் இப்படைத்தல் மற்றும் காத்தல் தொழிலில் மேலும் பல பிரஜாபதிகளை ஈடுபடுத்தினார்.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “பிரசேதார்களின் செயல்கள்” எனும் தலைப்பை கொண்ட முப்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare