அத்தியாயம் – 30
பிரசேதார்களின் செயல்கள்
பதம் 4.30.1 : மைத்ரேயரிடம் விதுரர் வினவினார்: ஓ, அந்தணரே நீர் முன்பு பிராசீனபர்ஹியான் புதல்வர்களைப் பற்றியும் அவர்கள் சிவபெருமானால் இயற்றப்பட்ட பக்தித் பாடலைப் பாடியதின் மூலம் முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்தினார்கள் என்றும் கூறினீர். இதன் மூலம் அவர்கள் பெற்றது யாது ?

பதம் 4.30.2 : போற்றுதற்குரிய பார்ஹஸ்பத்யரே, பிரதேசர்கள் எனப்படும் மன்னர் பர்ஹிஷத்தின் புதல்வர்கள் விடுதலை அளிக்கும் முழுமுதற் கடவுளுக்கு மிகவும் இனியவரான சிவபெருமானை சந்தித்தபின் என்ன செய்தனர்? நிச்சயம் அவர்கள் ஆன்மீக உலகத்திற்கு மாற்றல் பெற்றிருப்பர் ஆயினும் அவர்கள் இந்த உலகில் இப்பிறவியிலோ அல்லது பல பிறவிகளிலோ என்ன பெற்றனர்?

பதம் 4.30.3 : மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: பிரசேதார்கள் எனப்படும் மன்னர் பிராசீனபர்ஹியின் புதல்வர்கள் தங்கள் தந்தையின் கட்டளையின்படி கடல்நீரினுள் தவம் செய்வதற்காகச் சென்றனர். சிவபெருமானால் அருளப்பட்ட மந்திரங்களைத் திரும்பத் திரும்ப உச்சரித்ததனால் அவர்கள் முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவைத் திருப்திப்படுத்தக் கூடிய திறன் பெற்றோராயினர்.

பதம் 4.30.4 : பத்தாயிரம் வருடங்கள் பிரசேதார்கள் கடுமையான தவம் செய்த பின்னர், அவர்கள் தவத்தில் மகிழ்ந்த முழுமுதற் கடவுள் மிகவும் இனிமையான வடிவத்துடன் அவர்கள் முன் தோன்றினார். அவரின் தோற்றம் அவர்களைப் பெரிதும் கவர்ந்தது. தாங்கள் செய்த தவத்தின் பயன் இதுவே என்று மகிழ்ந்தனர்.

பதம் 4.30.5 : கருடனின் தோள்களின் மீது அமர்ந்திருந்த முழுமுதற் கடவுளின் தோற்றம் ஒரு கார்மேகம் மேரு மலையின் உச்சியில் அமர்ந்தது போன்றிருந்தது. பகவானின் உன்னதஉடல் மஞ்சள் வண்ணப்பட்டுப் பீதாம்பரத்தினால் அழகு செய்யப்பட்டிருந்தது. அவரது கழுத்தினைக் கௌத்துபமணிமாலை அலங்கரித்திருந்தது. பகவானின் உடலிலிருந்து தோன்றிய ஒளி இப்பிரபஞ்சத்தின் இருளினை அகற்றியது.

பதம் 4.30.6 : பகவானின் திருமுகம் எழில்மிக்கதாயிருந்தது. அவரது தலையினை கண்னைப் பறிக்கும் கிரீடமும், பொன்னாபரணங்களும் அணி செய்தன. பளபளக்கும் கிரீடம் ரம்யமாக அவரது தலையில் சூடப்பட்டிருந்தது. பகவானது எட்டுக் கரங்களும் ஆயுதங்களை ஏந்தியிருந்தன. பகவான் தேவர்களாலும், மாமுனிவர்களாலும், பிற அடியவர்களாலும் சூழப்பட்டிருந்தார். இவர்கள் அனைவரும் இறைபணியில் ஈடுபட்டிருந்தனர். பகவானின் வாகனமாகக் கருடன் தனது இறக்கைகளை அசைத்தபடி வேதமந்திரங்களினால் பகவானின் புகழைப் பாடிக்கொண்டிருந்தது. கருடன் கின்னரலோக வாசியாக இருப்பார் என்று தெரிகிறது.

பதம் 4.30.7 : முழுமுதற் கடவுளின் கழுத்தைச் சுற்றிக் கிடந்த நீண்ட மலர் மாலை அவரது முழங்கால்களைத் தொட்டது. அந்த மாலையினால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது உறுதிமிக்க, நீண்ட, எட்டுக் கரங்களும் லட்சுமி தேவியின் எழிலோடு போட்டியிட்டன. தன்னுடைய கருணைமிக்க பார்வையினாலும் இடியோசை போன்ற குரலினாலும் பகவான் தன்னைச் சரணடைந்த மன்னர் பிராசீனபர்ஹியின் புதல்வர்களுக்கு உரைக்கலுற்றார்.

பதம் 4.30.8 : முழுமுதற் கடவுள் கூறினார்: எனது அன்பிற்குரிய அரச குமாரர்களே, உங்களிடையே காணப்படும் நட்புறவு கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அனைவரும் பக்தித் தொண்டு என்னும் ஒரே தர்மத்தில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். உங்களுக்கிடையே இருக்கும் நட்பினைக் கண்டு நான் மகிழ்ச்சியடைவதோடு உங்கள் அனைவருக்கும் மங்கலம் உண்டாகுக என்றும் வாழ்த்துகின்றேன். இப்போது நீங்கள் வேண்டும் வரத்தினை என்னிடம் கேட்கலாம்.

பதம் 4.30.9 : பகவான் தொடர்ந்து கூறினார்: ஒவ்வொரு நாள் மாலையிலும் காலையிலும் உங்களை நினைவு கூர்வோர் அவர்கள் சகோதரர்களுடனும் பிற உயிர்களுடனும் மிகுந்த நட்புடன் விளங்குவர்.

பதம் 4.30.10 : சிவபெருமானால் இயற்றப்பட்டப் பிரார்த்தனைகளின் மூலம் காலையிலும் மாலையிலும் என்னைத் தொழுபவர்களுக்கு நான் அனைத்து வரங்களும் அளிக்கின்றேன். இதனால் அவர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதோடு சிறந்த ஞானமும் பெறுகின்றனர்.

பதம் 4.30.11 : உங்கள் தந்தையின் கட்டளையினை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று அதனை நிறைவேற்றியும் இருக்கின்ற காரணத்தினால் உங்களது விரும்பத்தகும் இந்நற்குணங்கள் இப்பிரபஞ்சம் முழுவதும் போற்றப்படும்.

பதம் 4.30.12 : உங்களுக்கு ஓர் அரிய செல்வன் பிறப்பான். அவன் பிரம்ம தேவனுக்கு எவ்விதத்திலும் குறைந்தவனாக இருக்கமாட்டான். அவனை உலகம் புகழும். அவனுடைய புதல்வர்களும், பேரப்பிள்ளைகளும் மூன்று உலகங்களிலும் நிறைந்து காணப்படுவர்.

பதம் 4.30.13 : ஓ, மன்னன் பிராசீன பர்ஹியின் மைந்தர்களே, சொர்க்க லோகத்தைச் சேர்ந்த பிரம்லோசா என்னும் பெண், முனிவர் கண்டுவிற்குப் பிறந்த செந்தாமரை விழிகளையுடையத் தன் புதல்வியை வனத்திலுள்ள மரங்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டு சொர்க்க லோகத்திற்குத் திரும்பிச் சென்றாள். இக்குழந்தை பேரழழு மங்கையான பிரம்லோசாவிற்கும், முனிவர் கண்டுவிற்கும் பிறந்ததாகும்.

பதம் 4.30.14 : மரங்களின் பாதுகாப்பில் விடப்பட்ட அக்குழந்தை பசியினால் கதறியழுதது. அக்காட்டின், மன்னனும், சந்திர மண்டலத்து மன்னனுமான சந்திரன், தனது சுட்டு விரலினால் மிகுந்த கருணையுடன் அக்குழந்தையின் வாயில் அமிர்தத்தை ஊட்டினான். இவ்வாறு அக்குழந்தை சந்திரன் கருணையினால் வளர்க்கப்பட்டது.

பதம் 4.30.15 : நீங்கள் அனைவரும் எனது கட்டளைக்கு மிகவும் கீழ்ப்படிபவர்கள் ஆதலினால் நற்குணங்களும், அழகும் வாய்ந்த அந்தப் பெண்ணை மணந்து கொள்ள வேண்டுமென்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தந்தையின் கட்டளைக்கேற்ப அவள் மூலம் நீங்கள் மக்கள் தொகையினைப் பெருக்குவீராக.

பதம் 4.30.16 : நீங்கள் சகோதரர்கள் அனைவரும் ஒரே இயற்கையுடையவர்கள் காரணம் நீங்கள், பக்தர்கள் என்பதோடு உங்கள் தந்தை சொற்படி நடக்கும் மைந்தர்களும் ஆவீர். அதுபோல் அப்பெண்ணும் அதே தன்மை உடையவள் என்பதோடு உங்கள் அனைவருக்கும் தன்னையே அர்ப்பணிப்பவளுமாவாள். ஆகையினால் பிராசீனஸ்ரீபர்ஹியின் புதல்வர்களான நீங்களும் அப்பெண்ணும் ஒரே கொள்கை உடையவர்களாதலின், சமநிலையில் இருக்கிறீர்கள்.

பதம் 4.30.17 : பிரசேதார்கள் அனைவரையும் ஆசிர்வதித்துப் பகவான் கூறுகிறார்: அன்பார்ந்த இளவரசர்களே, எனது கருணையினால் நீங்கள் இவ்வுலகில் மட்டுமல்லாது சொர்க்க லோகத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் அனுபவித்து மகிழ்வீராக. உண்மையில் இவ்வின்பங்கள் அனைத்தையும் நீங்கள் எந்தவிதத் தடையுமின்றி பத்து லட்சம் தேவ வருடங்கள் வரை அனுபவிப்பீராக.

பதம் 4.30.18 : அதன்பிறகு நீங்கள் எனது பக்தித் தொண்டில் எந்தவித மாறுபாடுமின்றி வளர்ச்சி பெற்று பௌதீக மாசுக்கள் அனைத்திலுமிருந்து விடுதலை பெறுவீர். அப்போது நீங்கள் சொர்க்க லோகம் என்றும் நரக லோகம் என்றும் சொல்லப்படுபவற்றிலுள்ள அனைத்து இன்பங்களின் மீதும் முற்றிலும் பற்றறுத்து வீடுபேறு பெற்று, முழுமுதற் கடவுளாகிய என்னை அடைவீராக.

பதம் 4.30.19 : பக்தித் தொண்டினையும் புண்ணியச் செயல்களையும் உறுதியுடன் செய்வோர் அவற்றின் பலன்களையும் இறுதியில் அடைவர். முழுமுதற்கடவுள் ஒருவரே என்பதை இவர்கள் நன்கறிந்து கொள்கின்றனர். ஒரு செயலை ஒருவன் செய்யும்பொழுது அதன் பலன்களை முழுமுதற் கடவுளுக்கு அளித்து விட்டு, இறை பணியில் ஈடுபடுவதின் மூலம் தன் வாழ்க்கையைக் கழிக்கிறான். அம்மனிதன் இல்லற வாழ்க்கையில் இருந்தபோதிலும் கர்ம விளைகளால் ஒருநாளும் பாதிக்கப்படுவதில்லை.

பதம் 4.30.20 : பக்தித் தொண்டுகளில் எப்போதும் ஈடுபட்டிருப்பதினால், பக்தர்கள் அனைத்துச் செயல்களிலும் புதுமையும், புத்துணர்ச்சியும் பெறுகின்றனர். பக்தனின் இதயத்திலுள்ள எல்லாம் அறிந்த பரமாத்மா எல்லாவற்றிலும் புத்துணர்ச்சியினை அதிகரிக்கச் செய்கிறார். இதுவே முழுமெய்ப் பொருளின் பரிவினால் ஆன பிரம்ம நிலை என்றறியப்படுகிறது. இப்படிப்பட்ட விடுதலை நிலையில் (ப்ரஹ்ம பூத), ஒருவன் குழப்பமடைவதில்லை. அத்தோடு ஒருவன் அனாவசியமான துக்கமோ அல்லது மகிழ்ச்சியோ அடைவதும் இல்லை. இது பிரம்ம பூத நிலையினால் ஏற்படுவதாகும்.

பதம் 4.30.21 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: முழுமுதற் கடவுள் இவ்வாறு உரையாற்றிய பின்னர், பிரசேதார்கள் அவரை வழிபடத் தொடங்கினர். பகவானே வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் அருள்பவராகவும் பரம நலன் அளிப்பவராகவும் விளங்குகின்றார். அவரே பக்தனால் அனுபவிக்கப்படும் அனைத்துத் துன்பங்களையும் நீக்கும் பரம நண்பராகவும் திகழ்கிறார். மெய்மறந்த நிலையில், கம்மிய குரலில் பிரசேதார்கள் தங்கள் வழிபாடுகளைத் தொடங்கினர். பகவானை நேருக்கு நேர் தரிசித்த காரணத்தினால் அவர்கள் அனைவரும் தூய்மையடைந்தனர்.

பதம் 4.30.22 : பிரசேதார்கள் பின்வருமாறு கூறினர்: போற்றுதற்குரிய பகவானே, அனைத்து துன்பங்களையும் நீரே நீக்குகின்றீர். உமது பெருந்தன்மைமிக்க உன்னதக் குணங்களும் புனித நாமமும் எல்லா மங்கலங்களும் உடையனவாகும். இந்த முடிவு ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மனம் வாக்குகளுக்கு எட்டாத வேகத்தில் உம்மால் செல்ல முடியும். ஐம்புலன்களினால் நீர் உணர முடியாதவர் ஆவீர். ஆகையினால் நாங்கள் எங்கள் மரியாதைக்குரிய வந்தனங்களை மீண்டும் மீண்டும் செலுத்துகின்றோம்.

பதம் 4.30.23 : அன்பின் வடிவமான பகவானே, எங்கள் வந்தனங்களை உமக்குத் தாழ்மையுடன் செலுத்துகிறோம். மனம் உன்மீது நிலை நிற்கும் பொழுது இருமை நிறைந்த இவ்வுலகம் உலகியல் இன்பங்களுக்குரிய இடமாக இருந்த போதிலும் அது பொருளற்தாகவே தோன்றுகின்றது. உமது உன்னத வடிவம் முழுவதும் முற்றிலும் பரமானந்தம் நிறைந்ததாகும். ஆகையினால் நாங்கள் எங்கள் மரியாதைகளை உமக்கு அர்ப்பணிக்கின்றோம். பிரம்ம தேவன், பகவான் விஷ்ணு, சிவபெருமான் என்ற உமது வடிவங்கள் இப்பேருலகைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும் எடுக்கப்பட்ட அவதாரங்களாகும்.

பதம் 4.30.24 : போற்றுதற்குரிய பகவானே எங்கள் மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு நாங்கள் தெரிவிக்கின்றோம். ஏனெனில் உமது தோற்றமானது உலகத்தின் பாதிப்புக்கள் ஏதுமற்ற சுதந்திரத் தன்மையுடையதாகும். மேலாண்மைமிக்க நீர் எப்போதும் பக்தர்களின் துயரங்களைத் துடைப்பவராகவே இருக்கின்றீர். உமது சிந்தனையெல்லாம் அதனை எப்படிச் செய்வது என்பது பற்றியே இருக்கும். நீர் எங்கும் இருக்கும் பரமாத்மா ஆவீர்; வசுதேவரை உமது தந்தையாக ஏற்றுக் கொண்டவர்; கிருஷ்ணர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறவர். நீர் மிகுந்த அன்புடையவர் ஆதலினால் அனைத்து வகையான பக்தர்களின் செல்வாக்கினையும் அதிகரிக்கச் செய்கின்றீர்.

பதம் 4.30.25 : போற்றுதற்குரியப் பகவானே, உமக்கு எமது மரியாதைக்குரிய வந்தனங்களைச் செலுத்துகின்றோம். ஏனெனில் உயிர்களுக்கு ஆதாரமான ஆதி தாமரை உமது உந்திச் சுழியிலிருந்தே தோன்றியது. நீர் எப்போதும் தாமரை மலர் மாலையினைச் சூடியிருக்கின்றீர். மேலும் உமது திருவடிகள் நறுமணம் உடைய தாமரை மலரை ஒத்திருக்கின்றன. உமது விழிகள் செந்தாமரை மலரின் சிவந்த இதழ்களைப் போன்றிருக்கின்றன. ஆகையினால் நாங்கள் எங்களது மரியாதைக்குரிய வந்தனங்களை எப்போதும் உமக்கு அர்ப்பணிக்கின்றோம்.

பதம் 4.30.26 : போற்றுதற்குரிய பகவானே, நீர் அணிந்திருக்கும் பட்டுப் பீதாம்பரத்தின் மஞ்சள் வண்ணம் தாமரை மலரிலுள்ள மகரந்தத்தூள் போன்று இருக்கின்றது. அந்த ஆடை மண்ணுலகப் பொருள்களினால் செய்யப்பட்டதன்று. அனைவரின் இதயங்களிலும் நீர் அமர்ந்திருப்பதினால், நீரே உயிர்கள் அனைவரின் அனைத்துச் செயல்களுக்கும் கண்கண்ட இறைவனாக விளங்குகின்றீர். நாங்கள் எங்களது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு மீண்டும் மீண்டும் செலுத்திக் கொள்கிறோம்.

பதம் 4.30.27 : போற்றுதற்குரிய பகவானே, உடற்கருத்துடைய வாழ்வில் கட்டுண்ட ஆத்மாக்களான நாங்கள் எப்போதும் அறியாமையினால் மூடப்பட்டிருக்கிறோம். எனவே நாங்கள் எப்போதும் உலக வாழ்க்கையின் துன்ப நிலைகளையே பெறுகின்றோம். இத்துன்ப நிலைகளிலிருந்து எங்களை மீட்பதற்கு நீர் உமது உன்னத வடிவத்தில் தோன்றியிருக்கின்றீர். எம் போன்றோர் மீது நீர் காட்டும் அளவற்ற கருணைக்கு இதுவே சிறந்த சான்றாகும். பிறகு நீர் எப்போதும் சாதகமாக நடந்து கொள்ளும் உமது பக்தர்களைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது?

பதம் 4.30.28 : போற்றுதற்குரிய பகவானே, அனைத்துப் பாவங்களையும் நீக்குபவராக நீரே விளங்குகின்றீர். உமது “அர்சா விக்ரஹ” விரிவின் மூலம் நீர் உமது தீன பக்தர்களின் மீது கருணை காட்டுகின்றீர். எம்மை உமது நிரந்தரத் தொண்டர்களாகவே நீர் நிச்சயம் கருதுதல் வேண்டும்.

பதம் 4.30.29 : அவரது இயற்கையான கருணையினால் பகவான் தமது பக்தனைப் பற்றி நினைக்கும் பொழுது ஒரு புதிய பக்தனின் அனைத்து ஆசைகளும் நிறைவேற்றப்படுகின்றன. உயிர்ப்பொருள் முக்கியத்துவமற்றவனாக இருந்தபோதிலும் கூட பகவான் அனைவரின் உள்ளங்களிலும் வீற்றிருக்கின்றார். பகவான் ஓர் உயிரைப்பற்றி அவனது ஆசைகள் உள்ளிட்ட அனைத்தையும் அறிவார். நாம் சாமானியர்கள் என்ற போதிலும் பகவான் ஏன் நமது ஆசைகளை அறிந்து கொள்ளவில்லை?

பதம் 4.30.30 : ஓ, பிரபஞ்சத்தின் நாயகரே, நீரே பக்தித் தொண்டின் நெறிமுறைகளுக்கு உண்மையான தலைவர் ஆவீர். உமது மேலாண்மையே எமது வாழ்வின் இறுதி லட்சியமாக இருப்பது கண்டு நாங்கள் மகிழ்கிறோம். மேலும் எங்கள் மீது திருப்தியடையுமாறு உம்மை நாங்கள் வேண்டுகிறோம். இதுவே எமது வரமாகும். உமது திருப்தியினைத் தவிர வேறெதுவும் நாங்கள் வேண்டுவதில்லை.

பதம் 4.30.31 : வணக்கத்திற்குரிய பகவானே, உமது வரத்திற்காக நாங்கள் உம்மை வணங்குகிறோம். ஏனெனில் நீரே பரம்பொருளாகவும், அனைத்து உன்னதங்களுக்கும் அப்பாற்பட்டவராகவும் இருப்பதோடு, முடிவில்லாத வளங்களையுடையவராகவும் இருக்கின்றீர். இதனைத் தொடர்ந்து நீர் அனந்தன் என்னும் பெயரில் எல்லோராலும் கொண்டாடப்படுகின்றீர்.

பதம் 4.30.32 : போற்றுதற்குரிய பகவானே பாரிஜதாம் என்றழைக்கப்படும் தேவலோகத்திலுள்ள மரத்தை அடைந்த தும்பி நிச்சயம் அம்மரத்தினை விட்டு அகலாது. ஏனென்றால் அதன்பிறகு அது வெளியே சென்று பெறப்போவது எதுவுமில்லை. அது போல் நாங்கள் உம்மை அடைந்து உமது தாமரைத் திருவடிகளில் சரணடைந்த பின்னர் வேறு என்ன சிறந்த வரத்தினை நாங்கள் உம்மிடம் கேட்கக் கூடும்?

பதம் 4.30.33 : போற்றுவதற்கும் வணக்கத்திற்கும் உரிய பகவானே, எத்தனை காலங்களுக்கு நாங்கள் எங்களது மாசுகளினால் உலகத்தில் இருக்க வேண்டியதாக இருந்தாலும் ஒரு உடலிலிருந்து மற்றோர் உடலுக்கும், ஓர் உலகிலிருந்தும் மற்றோர் உலகிற்கும் அலைந்து கொண்டிருந்தாலும், உமது லீலைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் உமது பக்தர்கள் கூட்டத்தில் நாங்கள் இருத்தற்குரிய வரத்தினை வேண்டுகிறோம். இவ்வரத்தினையே ஜென்மாஜென்மத்திற்கு எந்த உடலில் இருந்தாலும், எந்த உலகில் இருந்தாலும் நாங்கள் வேண்டுவோம்.

பதம் 4.30.34 : ஒரு தூய பக்தனுடன் ஒரு கணமே உறவு கொண்ட போதிலும் அது சொர்க்க லோகத்தை அடைதல் அல்லது முழுவிடுதலையில் பிரம்மஜோதியில் கலத்தல் போன்றவற்றோடெல்லாம் ஒப்பிடுவதற்கு அரியதாகும். உடலைத் துறந்து இறுதியில் இறப்பதற்கே விதிக்கப்பட்டிருக்கும் ஓர் உயிருக்குத் தூய பக்தர்களுடன் கொள்ளும் உறவே மிகவுயர்ந்த வரமாகும்.

பதம் 4.30.35 : உன்னத உலகின் தூய கருத்துக்கள் எப்போதெல்லாம் பேசப்படுகின்றதோ அப்போது அங்கே குழுமியுள்ள கூட்டத்தினர் அவர்களது அனைத்து வகையான உலகியல் நாட்டங்களையும் சிறிது நேரமாவது மறக்கின்றனர். அதுமட்டுமல்லாது ஒருவர் மீது மற்றொருவர் காழ்ப்புணர்ச்சியோ கவலையோ அல்லது அச்சமோ கூடக் கொள்வதில்லை.

பதம் 4.30.36 : பகவான் நாராயணன் முழுமுதற் கடவுளின் புனித நாமத்தினை ஓதுவதிலும் கேட்பதிலும் ஈடுபட்டிருக்கும் பக்தர்களின் மத்தியில் எப்போதும் இருக்கின்றார். நாராயணனே துறவிகளின் இறுதிக் குறிக்கோளாக இருக்கின்றார். மேலும் அவர் பௌதீக மாசுகளில் இருந்து விடுதலை பெற்றவர்களினால் இசை இயக்கத்தின் மூலம் வழிபடப்படுகின்றார். உண்மையில் அவர்கள் இப்புனித நாமத்தினை மேலும் மேலும் பண்ணாகப் பாடுகின்றனர்.

பதம் 4.30.37 : போற்றுதற்குரிய பகவானே! உமது தூயபக்தர்களும், துணைவர்களும் புனிதமான ஊர்களை கூடத் தூய்மை செய்வதற்காக இவ்வுலக முழுவதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையாகவே உலக வாழ்வினைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு இச்செயல் மகிழ்ச்சியளிக்காதா என்ன?

பதம் 4.30.38 : உமக்கு மிகவும் பிரியமானவரும், உமது நெருங்கிய நண்பராகவும் இருக்கும் சிவபெருமானுடன் ஒரு கணநேரம் தொடர்பு கொண்டதால் உம்மைக்காணும் பேறு பெற்றோம். வாழ்க்கையென்னும் தீராத நோயைக் கூடத் தீர்க்கும் தேர்ந்த மருத்துவர் நீர். எங்களது நல்வினைப்பயனால் உமது திருவடித்தாமரைகளைச் சரண்புக எங்களால் முடிந்தது.

பதங்கள் 4.30.39 – 4.30.40 : போற்றுதற்குரிய பகவானே, நாங்கள் வேதங்களைக் கற்றிருப்பதோடு, ஆன்மீக குருவினை ஏற்று அந்தணர்களுக்கும், பக்தர்களுக்கும், ஆன்மீகத்தில் வளர்ச்சியடைந்துள்ள சிறந்த மகான்களுக்கும் எங்கள் மரியாதைகளைச் செலுத்தியிருக்கின்றோம். எங்கள் மரியாதைகளை அவர்களுக்கு அளித்திருக்கிறோம் என்பதல்லாது எங்கள் சகோதரர்களிடத்தும், நண்பர்களிடத்தும், பிறரிடத்தும் ஒருபோதும் நாங்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டதில்லை. நாங்கள் நீரில் மூழ்கி, உணவே உண்ணாது நீண்ட நெடுங்காலம் கடுமையான தவம் செய்துள்ளோம். எங்களது இவ்வான்மீகச் செல்வங்கள் அனைத்தும் உமது திருப்திக்காக அளிக்கப்படுகின்றன. இவ்வரம் ஒன்றினைத் தவிர வேறெவ்வரமும் நாங்கள் வேண்டோம்.

பதம் 4.30.41 : தூய வாழ்க்கையில் தம்மை நிலை நிறுத்திக் கொண்டு, தவம் மற்றும் ஞானத்தின் வலிமையினால் முன்னேறியுள்ள யோகிகள், சித்தர்கள் போன்றோர்க்கும், மனு, பிரம்மதேவன், சிவபெருமான் போன்ற மகான்களுக்கும் கூட உமது சக்திகளும், பெருமைகளும் என்னவென்று தெரியாது. இருந்தும் அவர்கள் தங்கள் சக்திக்கேற்ப உம்மை வழிபடுகின்றனர். அதுபோல் இச்சான்றோர்களைவிட மிகமிக இழிந்தவர்களான நாங்களும் எங்கள் சக்திக்கேற்ப எமது வழிபாடுகளை உமக்கு அர்ப்பணிக்கின்றோம்.

பதம் 4.30.42 : போற்றுதற்குரிய பகவானே உமக்கு நண்பர்களுமில்லை, பகைவர்களுமில்லை. ஆகையினால் நீர் அனைவர்க்கும் சமமானவராக இருக்கின்றீர். பாவச் செயல்களினால் ஒருபோதும் நீர் கறைபடிவதில்லை. மேலும் உமது உன்னத வடிவம் எப்போதும் உலகப் படைப்பிற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. நீரே முழுமுதற் கடவுள் ஆவீர் ஏனெனில் நீர் அனைத்துத் தோற்றங்களினுள்ளும் பரந்துபட்டவராக இருக்கின்றீர். அதனால் நீர் வாசுதேவர் என்றறியப்படுகின்றீர். உமக்கு எமது மரியாதையுடன் கூடிய வந்தனங்களைச் சமர்ப்பிக்கின்றோம்.

பதம் 4.30.43 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார். அன்பார்ந்த விதுரனே, இவ்வாறு பிரசேதார்களினால் பேசப்பட்டு, வழிபடப்பட்டவரும் சரணடைந்த ஆத்மாக்களைப் பாதுகாப்பவருமான முழுமுதற் கடவுள், “நீங்கள் வழிபட்டபின் கேட்ட அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று பதில் கூறினார். பின்னர் எந்நாளும் தோல்வியறியாத வீரமுடைய முழுமுதற் கடவுள் தமது இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றார். பிரசேதார்களினால் அவர் பிரிந்து செல்வதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பகவானைத் தங்களுக்கு முழுத்திருப்தி ஏற்படும்வரை அவர்கள் இன்னும் பார்த்து முடிக்கவில்லை.

பதம் 4.30.44 : இதன்பிறகு பிரசேதார்கள் அனைவரும் கடலிலிருந்து வெளியே வந்தனர். அங்கு நின்ற அனைத்து மரங்களும் மிகவும் உயரமாக வளர்ந்து சொர்க்கலோகத்திற்குச் செல்லும் பாதையினை மறைப்பது போல் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். இம்மரங்கள் பூமியின் நிலப்பகுதி முழுவதையும் மறைத்திருந்தன. அதனால் பிரசேதார்கள் மிகுந்த சினம் கொண்டனர்.

பதம் 4.30.45 : அன்பார்ந்த மன்னனே, ஊழிக்காலத்தில் (யுக அழிவுக் காலத்தில்) சிவபெருமான் மிகுந்த சினம் கொண்டு தனது வாயிலிருந்து நெருப்பையும், புயக்காற்றையும் வெளிப்படச்செய்வார். உலக முழுதும் மரங்கள் இல்லாமல் செய்வதற்காக பிரசேதார்களும் தங்கள் வாய்களிலிருந்து நெருப்பினையும், புயக்காற்றினையும் வெளிப்படுத்தினர்.

பதம் 4.30.46 : பூமியில் உள்ள அனைத்து மரங்களும் எரிந்து சாம்பலாகியது கண்டு பிரம்ம தேவன் அங்கு விரைந்து வந்து மன்னர் பர்ஹிஷ்மானின் புதல்வர்களை நயவுரைகளினால் சமாதானப்படுத்தினார்.

பதம் 4.30.47 : மீதமிருந்த மரங்கள் பிரசேதார்களிடம் மிகுந்த அச்சங்கொண்டு பிரம்ம தேவனின் அறிவுரையின்படி அவைகளின் புதல்வியை அளித்தன.

பதம் 4.30.48 : பிரம்ம தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பிரசேதார்கள் அனைவரும் அப்பெண்ணைத் தங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டனர். இப்பெண்ணின் வயிற்றிலிருந்து பிரம்ம தேவனின் புதல்வரான தக்கன் பிறந்தார். மகாதேவரான சிவபெருமானின் கட்டளைக்குக் கீழ்ப்படியாததினால் மாரிஷாவிற்குக் குழந்தையாக தக்கன் பிறக்க நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து அவர் இரண்டு முறை தன்னுடைய உடலைத் துறக்க வேண்டியதாயிற்று.

பதம் 4.30.49 : தக்கனது முந்தைய உடல் அழிக்கப்பட்டது ஆயினும் அதே தக்கன் பரம் விருப்பத்தினால் தூண்டப்பட்டு சாக்ஷுஷ மன்வந்தரத்தில் வேண்டிய அனைத்து உயிர்களையும் படைத்தார்.

பதங்கள் 4.30.50 – 4.30.51 : தக்கன் பிறந்த பின்னர் அவரே உடலின் ஒளியினால் மற்ற அனைவரின் உடலையும் ஒளியிழக்கச் செய்தார். பலன் தரும் செயல்களைச் செய்வதில் மிக்கத் தேர்ச்சியுடையவராதலினால், “மிகவும் தேர்ந்தவர்” என்று பொருள் தரும் தக்கன் என்னும் பெயரினால் அவர் அழைக்கப்பட்டார். இதனால் பிரம்ம தேவன் உயிர்களைப் படைக்கவும், அவர்களைக் காக்கவும் தன்னை ஈடுபடுத்தினார். உரிய காலத்தில் தக்கன் இப்படைத்தல் மற்றும் காத்தல் தொழிலில் மேலும் பல பிரஜாபதிகளை ஈடுபடுத்தினார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare