அத்தியாயம் – 29
நாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்
பதம் 4.29.1 : மன்னர் பிராசீனபர்ஹி பதில் கூறினார்: போற்றுதலுக்குாிய மகானே, மன்னர் புரஞ்ஜனனின் கதை என்று நீர் உருவகமாகக் கூறிய கதையின் உட்பொருளை எங்களால் முழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆன்மீக ஞானமுடையவர்களினால் அதனை அறிந்து கொள்ள முடியும் ஆனால் எங்களைப்போன்ற காரியவாதிகளுக்கு உமது கதையின் நோக்கத்தைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாகும்.

பதம் 4.29.2 : மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: புரஞ்ஜனன் எனும் உயிர்ப்பொருள் அவனும் விளைகளுக்கேற்ப ஒரு கால் உடையன; இருகால்கள் உடையன; மூன்று கால்கள் உடையன; நான்கு கால்கள் உடையன; பல கால்கள் உடையன அல்லது கால்களை இல்லாதன போன்ற பல்வேறு உடல்களில் இடம்பெயர்ந்து குடியேறுகிறான். பல்வேறு உடல்களில் குடியேறி இன்பம் அனுபவிப்பவன் என்றழைக்கப்படும் உயிர்ப்பொருளே புரஞ்சனன் ஆவான்.

பதம் 4.29.3 : என்னால் விளக்கப்பட்டவர் அறிவதற்கரியவரும், உயிர்களின் தலைவரும், நித்திய நண்பருமான முழுமுதற் கடவுளேயாவார். மேலும் உயிர்கள் முழுமுதற் கடவுள் உலகத்து நாமங்களினாலும், செயல்களினாலும், குணங்களினாலும் அறிய முடியாது. அவர் கட்டுண்ட ஆத்மாக்களுக்கு எப்போதும் அறிவதற்கரியவராகவே இருக்கின்றார்.

பதம் 4.29.4 : ஜட இயற்கையின் குணங்களை மொத்தமாக அனுபவித்து மகிழவேண்டும் என்று உயிர்ப்பொருள் விரும்பும்பொழுது பல்வேறு உடல்களில், ஒன்பது வாயில்கள், இருகரங்கள், இருகால்கள் உடைய உடலையே ஏற்றுக் கொள்ள விழைகிறான். அதாவது அவன் மனிதன் அல்லது தேவன் ஆக விரும்புகிறான்.

பதம் 4.29.5 : மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: இது தொடர்பாக பயன்படுத்தப்பட்டிருக்கும் “ப்ரமதா” என்னும் சொல் புத்தி அல்லது அறியாமையைக் குறிக்கின்றது, அது இவ்வாறே புரிந்து கொள்ளப்படுகிறது. இதுபோன்ற புத்தியைச் சரண் புகுபவன் தன்னை பௌதீக உடல் என்றே அடையாளம் காண்கிறான். “நான்” “எனது” என்னும் உணர்வின் பாதிப்பால் அவன் தன் புலன்களின் மூலம் இன்பமோ, துன்பமோ அடைகிறான். இவ்வாறு உயிர் சிறைப்படுகிறது.

பதம் 4.29.6 : செயற்புலன்கள் ஐந்தும், அறிபுலன்கள் ஐந்தும் புரஞ்சனீயின் ஆண் நண்பர்களாவர். புலன்களினால் ஒருவன் ஞானத்தைப் பெற்று செயலில் ஈடுபடுகின்றான். புலன்களின் செயல்பாடுகள் பெண் நண்பர்களாவர். ஐந்து தலைகளுடன் இருந்த பாம்பு என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஐந்து சுழல் முறைகளில் செயல்படும் உயிர்மூச்சாகும்.

பதம் 4.29.7 : மற்றவர்களுக்குத் தளபதியாக இருக்கும் பதினோராவது பணியாள் “மனம்” ஆகும். அவனே செயற் புலன்கள், மற்றும் அறிபுலன்கள் என்ற அனைத்துப் புலன்களுக்கும் தலைவன் ஆவான். பஞ்சால இராஜ்ஜியம் என்பது ஐம்புலன்களின் நுகர்ச்சிப் பொருட்கள் தாம் அனுபவித்து மகிழப்படும் சூழலாகும். பஞ்சால இராஜ்ஜியத்தினுள் இருப்பது உடல் என்றும் நகரமாகும். அதற்கு ஒன்பது வாயில்கள் இருக்கின்றன.

பதம் 4.29.8 : இருவிழிகள், இரு நாசித்துவாரங்கள் மற்றும் இரு செவிகள் போன்றவை ஒரே இடத்தில் இருக்கும் வாயில்களாகும். வாய், கருவாய், எருவாய் போன்றவை வேறு சிலவாயில்களாகும். இவ்வாறு ஒன்பது வாயில்களையுடைய உடலில் இடப்பட்டிருப்பதினால் உயிர் பருஉலகில் வெளிப்புறமாகச் செயல்படுவதோடு, உருவம், சுவை போன்ற புலனுகர்ச்சிப் பொருட்களையும் அனுபவித்து மகிழ்கிறான்.

பதம் 4.29.9 : இருவிழிகள், இரு நாசிகள், ஒருவாய் இவை ஐந்தும் சேர்ந்து முன்பகுதியில் இருக்கின்றன. வலது காது தெற்கு வாயிலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இடது காது வடக்கு வாயிலாக இருக்கிறது. மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு துவாரங்கள் அல்லது வாயில்கள் எருவாய் அல்லது கருவாய் எனப்படுகின்றன.

பதம் 4.29.10 : கத்யோதா மற்றும் ஆவிர்முகீ என்ற பெயரில் அழைக்கப்படும் இருவிழிகளும் ஒரே இடத்தில் அருகருகே இருக்கின்றன. விப்ராஜிதம் என்றழைக்கப்படும் நகரத்தினை வடிவம் என்று புரிந்து கொள்ளப்படுதல் வேண்டும். இவ்வழியில் அந்த இரு விழிகளும் பல்வேறு வகையான வடிவங்களைப் பார்ப்பதில் எப்போதும் ஈடுபட்டிருக்கின்றன.

பதம் 4.29.11 : நளினீ, நாளினீ என்றழைக்கப்படும் இருவாயில்கள் நாசித்துவாரங்கள் ஆகும். ஸௌரப என்னும் நகரம் நறுமணம் ஆகும். “அவதூத” என்று பேசப்படுவது நாற்றத்திற்கானப் புலனாகும். முக்யத என்றழைக்கப்படுவது வாய் ஆகும். விபண எனப்படுவது பேச்சுப்புலனாகும் ரஸஜ்ஞ என்பது சுவைப்புலன் ஆகும்.

பதம் 4.29.12 : ஆபண என்ற பெயரில் அழைக்கப்படும் நகரம் பேச்சில் ஈடுபடும் நாக்கின் செயலைக்குறிப்பிடுகிறது. பஹுதன என்பது பல்வகை உணவுகளாகும். வலதுகாது பித்ரூ என்னும் வாயிலாகும். இடதுகாது தேவஹு என்னும் வாயிலாகும்.

பதம் 4.29.13 : நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார் தக்ஷிண பஞ்சாலம் என்னும் நகரம், பிரவ்ருத்தியை வழிநடத்தும் சாத்திரங்களைக் குறிப்பிடுகின்றது. பிரவ்ருத்தி என்பது பலன்தரும் செயல்களுக்கானப் புலனின்ப முறைகளாகும். மற்றொரு நகரமான உத்தர பஞ்சாலம் என்பது பலன் தரும் செயல்களில் பற்றறுத்து ஞானத்தை அதிகரிப்பதற்கான சாத்திரங்களைக் குறிப்பிடுகின்றது. உயிர் இருசெவிகளின் வழியே பல்வேறு வகையான அறிவினைப் பெறுகின்றது. சில உயிர்கள் பித்ரு லோகத்திற்கு உயர்த்தப்படுகின்றனர், சிலர் தேவலோகத்திற்கு உயர்த்தப்படுகின்றனர். இவையனைத்தும் இருசெவிகளினாலேயே சாத்தியமாகின்றன.

பதம் 4.29.14 : கிராகம் என்றழைக்கப்படும் நகரம் ஆஸீரீ (பிறப்புறுப்பு) என்னும் கீழ்ப்புற வாயிலின் மூலம் அணுகப்படுகிறது. இது பாலுறவிற்கானது. இது மூடர்கள் தீயோர்கள் என்னும் சாதாரண மனிதர்களுக்கு மிகவும் இன்பம் அளிப்பதாக இருக்கின்றது. இனப்பெருக்கத்திற்கானப் புலன் துர்மதம் எனப்படும். எருவாய் எனப்படும் குதம் நிர்ருதி என்றழைக்கப்படுகிறது.

பதம் 4.29.15 : புரஞ்சனன் வைஸஸம் என்னும் இடத்திற்குச் செல்கிறார் எனும் போது அவர் நரகத்திற்குப் போகிறார் என்று பொருள். அவர் ஒப்தகன் அதாவது எருவாயில் செயல்படும் புலனோடு செல்கிறார். நான் முன்பே இரண்டு குருட்டுத்துணைவர்களைப் பற்றிக் கூறியிருக்கிறேன். இத்துணைவர்கள் கைகள் மற்றும் கால்கள் ஆகும். கைகள் மற்றும் கால்களின் உதவியினால் உயிர் எல்லாவிதமன வேலைகளையும் செய்கிறான். அத்தோடு இங்குமங்கும் உலவவும் செய்கிறான்.

பதம் 4.29.16 : “அந்த புரம்” என்னும் வார்த்தை இதயத்தைக் குறிக்கிறது. விஸீசினன் என்னும் பெயர் “எல்லா இடங்களுக்கும் செல்கிறது” என்னும் பொருளில் மனதைக் குறிப்பிடுகிறது. மனிதனுள் உயிர் ஜட இயற்கைக் குணங்களின் விளைவுகளை அனுபவித்து மகிழ்கிறது. இவ்விளைவுகள் சிலநேரம் மோகத்திற்கும், சிலநேரம், திருப்திக்கும், சிலநேரம் மகிழ்ச்சிக்கும் காரணமாகின்றன.

பதம் 4.29.17 : முன்பே ஒருவனுடைய புத்தி என்பது அரசி என்று கூறப்பட்டுள்ளது. ஒருவன் விழித்திருக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் புத்தி பல்வேறு சூழ்நிலைகளை உண்டாக்குகிறது. மாசடைந்த புத்தியினால் பாதிக்கப்படும் பொழுது உயிர் சில காட்சிகளைக் காண்கிறது. மேலும் அவன் புத்தியின் செயல்கள் மற்றும் எதிர்செயல்களைப் பாவனை செய்கிறான்.

பதங்கள் 4.29.18 – 4.29.20 : நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: ரதம் என்று நான் குறிப்பிட்டது உண்மையில் உடலேயாகும். ரதத்தை இழுக்கும் குதிரைகளே புலன்களாகும். ஒவ்வொரு வருடமாக ஓடுவதுபோல், குதிரைகளும் எந்தவிதத் தடங்கலுமின்றி ஓடுகின்றன ஆயினும் அவை எந்தவிதமான முன்னேற்றமும் இன்றி ஆரம்ப இடத்திலேயே நிற்கின்றன. பாவம் மற்றும் புண்ணிய செயல்கள் ரதத்தின் இரண்டு சக்கரங்களாகும். இயற்கையின் முக்குணங்கள் ரதத்தின் மீது பறக்கும் கொடிகள் ஆகும். ஐந்து வகையான உயிர்க்காற்றுக்கள் உயிர்வாழியின் கட்டுக்களாகும், மனமே கயிறாகக் கருதப்படுகிறது. புத்தியே ரத சாரதி ஆகும். இதயமே ரதத்தில் உட்காரும் பலகையாகும். வாழ்க்கையின் இருமைகளான இன்பம், துன்பம் என்பவையே கட்டுமிடங்களாகும். ஏழு தாதுப் பொருட்கள் ரதத்தின் மேலே போர்த்தப்பட்டிருப்பவையாகும். செயற்புலன்கள் ஐந்தும் புறச்செயல் முறைகளாகும். பதினோரு புலன்களும் வீரர்களாவர். புலனின்பத்தில் தன் கவனம் முழுவதும் இருப்பதினால் உயிர் ரதத்தில் ஏறி அமர்ந்து கொண்டு தனது தவறான ஆசைகளை நிறைவேற்றுவதற்காக அவற்றின்பின் அலைவதோடு புலனின்பத்திற்காக பிறவிகள் தோறும் ஓடிக் கொண்டேயிருக்கிறான்.

பதம் 4.29.21 : முன்னரே குறிப்பிட்டுள்ளபடி சண்டலோகம் என்பது சக்திமிக்க காலமாகும். மேலும் அது கந்தர்வர்கள் என்றும் கந்தர்வீக்கள் என்றும் அழைக்கப்படும் பகற்பொழுதுகள் மற்றும் இரவுப்பொழுதுகளினால் மூடப்பட்டிருக்கின்றது. உடலின் ஆயுட்காலம் என்பது 360 பகல் மற்றும் இரவுகளையுடைய பாதையினால் படிப்படியாகக் குறைக்கப்படுகிறது.

பதம் 4.29.22 : காலகன்யா என்று குறிப்பிடப்பட்டிருப்பவர் முதுமை (வயோதிகம்) என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரும் முதிர்ச்சியினை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை ஆனால் மரணதேவனான யவனேஷ்வரன் (யவன ராஜா) ஜராவினை (முதுமையினை) தன் சகோதரியாக ஏற்றுக் கொண்டான்.

பதங்கள் 4.29.23 – 4.29.25 : யவனேஷ்வரனின் (யமராஜனின்) தொண்டர்கள் மரணவீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உடல் மற்றும் மனதிற்குரிய பல்வேறு வகையான இடையூறுகள் என்று அறியப்படுகின்றனர். ப்ரஜ்வாரம் என்பது இருவகை காய்ச்சல் ஆகும். அவை கடுமையான உஷ்ணம் மற்றும் கடுமையான குளிர் போன்ற டைஃபாயிடு மற்றும் நிமோனியாவாகும். உடலினுள் இருக்கும் உயிர் தெய்வச்செயல், பிறஉயிர், அவனது உடல் மற்றும் மனம் போன்றவற்றினால் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறது. இத்துன்பங்களைத் தவிர, புத்தி, மனம், உடல் போன்றவற்றின் தேவைகளுக்கு ஆட்பட்டும், பல்வேறு வகையான நோய்களினால் பாதிக்கப்பட்டும் கூட உலகினை அனுபவித்து மகிழ வேண்டும் என்னும் பேராசையின் நிமித்தம் அந்த உயிரைப் பெற்றுள்ளவன் பல்வேறு திட்டங்களினால் இழுத்துச் செல்லப்படுகிறான். இப்பௌதீகத் தோற்றத்தினைக் கடந்தவனாக இருந்தபோதிலும் உயிருள்ள ஒருவன் அறியாமையின் காரணமாகத் தவறான ஆணவத்தின்கீழ் (“நான்” “எனது” என்பது) உலகத் துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறான். இவ்வாறு அவன் உடலினுள் நூறு வருடங்கள் வாழ்கிறான்.

பதங்கள் 4.29.26 – 4.29.27 : உயிரோடிருப்பவன் தனது நல்லதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டத்தினைத் தேர்வு செய்வதற்கு இயற்கையினால் ஒரு துளியளவு சுதந்திரமே அளிக்கப்படுகிறது. ஆனால் அவன் தன்னுடைய பரம நாயகனான முழுமுதற் கடவுளை மறந்துவிட்ட காரணத்தினால் தன்னை இயற்கையின் குணங்களிலும் ஒப்படைத்துக் கொள்கிறான். இயற்கைக் குணங்களின் பாதிப்பினால் அவன் தன்னை உடல் என்று அடையாளம் காண்கிறான் அதோடு உடலின் நன்மைக்காக அவன் பல்வேறு செயல்களில் பற்றுடையவனாகிறான். அவன் சிலநேரம் தமோகுணத்தின் பாதிப்பின் கீழும், சிலநேரம் ரஜோ குணத்தின் பாதிப்பின்கீழும், சிலநேரம் சத்துவ குணத்தின் பாதிப்பின்கீழும் இருக்கிறான். உயிரோடிருப்பவன் இங்ஙனம் இயற்கைக் குணங்களின் கீழ் பல்வேறு வகையான உடல்களை அடைகிறான்.

பதம் 4.29.28 : சத்துவ குணம் நிரம்பப் பெற்றவர்கள் வேதநெறிகளுக்கேற்ப புண்ணியச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் அவர்கள் தேவர்கள் வாழும் தேவலோகத்தை அடைகின்றனர். இரஜோகுணத்தினால் பாதிக்கப்பட்டவரகள் மனிதர்கள் வாழும் உலகங்களில் பல்வேறு வகையான பலன்தரும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுபோல் தமோ குணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பலவகையான துன்பத்திற்காளாகி விலங்குகளோடு ஒத்து வாழ்கின்றனர்.

பதம் 4.29.29 : இயற்கையின் தமோ குணத்தினால் மூடப்பட்டிருப்பதினால் உயிர்ப் பொருள் சிலநேரங்களில் ஆணாகவும், சில நேரங்களில் பெண்ணாகவும், சில நேரங்களில் இரண்டுமில்லாத அலியாகவும், சில நேரங்களில் மனிதானாகவும், சில நேரங்களில் தேவனாகவும், சில நேரங்களில் பறவைகளாகவும், மிருகமாகவும் இருக்கிறான். இந்நிலையில் அவன் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். இயற்கைக் குணங்களின் பாதிப்பின் கீழுள்ள செயல்களினாலேயே பல்வேறு வகையான உடல்களை அவன் ஏற்பதும் நடைபெறுகிறது.

பதங்கள் 4.29.30 – 4.29.31 : உயிர்ப்பொருள் உண்மையில் பசியினால் வருந்தும் ஓர் நாயைப் போன்றவன். அந்நாய் உணவிற்காக ஒவ்வொரு வீடாகச் சென்று கொண்டிருக்கிறது. அது சில நேரங்களில் தண்டிக்கப்படுவதும், சில நேரங்களில் துரத்தப்படுவதும் உண்டு; சிலநேரங்களில் சிறிதளவு உணவும் பெறுவதுண்டு. அதுபோல் பல்வேறு ஆசைகளினால் பாதிக்கப்பட்ட ஓர் உயிர்ப்பொருளானவன் அவன் விதிக்கேற்ப பல்வேறு வகை உயிரினங்களில் அலைந்து கொண்டிருக்கிறான். சில நேரங்களில் அவன் உயர்ந்தும் சிலநேரங்களில் தாழ்ந்தும் இருக்கிறான். சிலநேரங்களில் அவன் தேவலோகத்திற்கும், சிலநேரங்களில் நரகத்திற்கும் சில நேரங்களில் நடு உலகங்களுக்கும் செல்கிறான்.

பதம் 4.29.32 : உயிர்கள், தெய்வச் செயலினாலும், பிறஉயிர்வாழிகளினாலும் அல்லது உடல் மற்றும் மனதினாலும் வரும் துன்ப நிலைகளை எதிர்த்துப் போராடவே முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இயற்கை விதிகளுக்கு எதிராக அவன் என்னதான் முயற்சி செய்தபோதிலும் அவன் அவற்றிற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டியதிருக்கிறது.

பதம் 4.29.33 : ஒரு மனிதனின் தலைச்சுமைப்பாரம் தாங்க முடியவில்லையென்றால் சுமையினைத் தோளுக்கு மாற்றிக் கொள்கிறான். இவ்வாறு சுமையின் துன்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயல்கிறான். சுமைக்கு எதிராக அவன் எம்முறையினைக் கையாண்ட போதிலும், தலையிலுள்ள சுமையினைத் தோளுக்கு இடம்மாற்றிக் கொள்ளலாமே ஒழிய வேறொன்றும் நடக்கப் போவதில்லை.

பதம் 4.29.34 : நாரதர் தொடர்ந்து கூறினார்: ஓ, அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுதலை பெற்றவனே! கிருஷ்ண உணர்வில்லாத எந்தவொரு செயலாலும் உலகியல் செயல்களை எதிர்த்து ஒருவனால் பரிகாரம் காணமுடியாது. கிருஷ்ண உணர்வற்ற செயல்கள் அனைத்தும் நமது அறியாமையின் விளைவுகளாகும். கனவில் காணும் துன்பத்தினைக் கனவின் மூலமே நீக்கிவிடமுடியாது. அதனை நீக்க வேண்டுமென்றால், நாம் நித்திரையிலிருந்து விழித்தெழுதல் வேண்டும். இதுபோல் நமது இம்மைத்தோற்றத்திற்கு நமது அறியாமையும் மயக்கமும் காரணமாகும். நாம் கிருஷ்ண உணர்வுநிலைக்கு விழித்தெழவில்லையென்றால் இக்கனவுகளிலிருந்து நம்மால் மீள முடியாது. கிருஷ்ண உணர்வே நமது துன்பங்கள் அனைத்திற்கும் இறுதித்தீர்வாக இருப்பதாகும்.

பதம் 4.29.35 : சில நேரங்களில் கனவில் நாம் புலியையோ அல்லது பாம்பையோ பார்க்கும் பொழுது மிகவும் துன்பமடைகிறோம். ஆனால் உண்மையில் அங்கு புலியும் இல்லை பாம்பும் இல்லை. இவ்வாறு நாம் நுண்ணிய வடிவத்தில் சில காட்சிகளைக் கற்பனை செய்கிறோம் அதனைத் தொடர்ந்து துன்பமடைகிறோம். இத்துன்பங்கள் நாம் கனவிலிருந்து விழித்தெழாத வரை நம்மைவிட்டு நீங்காது.

பதங்கள் 4.29.36 – 4.29.37 : மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பில் கிடந்து உழலச் செய்யும் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் என்பதே ஓர் உயிர்ப் பொருளின் உண்மையான விருப்பமாக இருக்கிறது. இதற்கு ஒரே வழி முழுமுதற் கடவுளை அவரது அடியவரின் மூலம் சரணடைவதேயாகும். முழுமுதற் கடவுளாகிய வாசுதேவருக்குப் பக்தித் தொண்டு செய்யாமல் ஒருவனால் உலகிலிருந்து முற்றிலும் விடுதலை பெறவும் முடியாது அவனால் உண்மை ஞானத்தை வெளிப்படுத்தவும் முடியாது.

பதம் 4.29.38 : அரசர்களிற்சிறந்த ராஜரிஷியே, நம்பிக்கை, முழுமுதற் கடவுளின் பெருமைகளை எப்போதும் கேட்டல், கிருஷ்ண உணர்வில் எப்போதும் ஈடுபடல், பகவானின் செயல்களைக் கேட்டல் போன்ற தன்மைகளையுடையவன் முழுமுதற் கடவுளை நேருக்கு நேர் காணும் தகுதியினை மிகவிரைவில் பெறுகிறான்.

பதங்கள் 4.29.39 – 4.29.40 : அன்பார்ந்த மன்னனே, எந்த இடத்தில், தூய பக்தர்கள் ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடித்தும், தூய உணர்வு பெற்றும் முழுமுதற் கடவுளின் பெருமைகளைக் கேட்டல் மற்றும் ஓதுதல் என்பவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டும் வாழ்கின்றனரோ அந்த இடத்தில் ஆற்றின் அலைகளைப் போல் தொடர்ந்து பெருகிவிடும் அவர்களின் இனிய மொழிகளைக் கேட்கும் வாய்ப்பு ஒருவனுக்குக் கிடைத்ததென்றால் அவன் பசி, தாகம் என்னும் வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகளை மறந்து விடுவதோடு அனைத்து வகையான அச்சம், சோகம், மோகம் போன்றவற்றினால் பாதிக்கப்படாதவனாகவும் ஆகிறான்.

பதம் 4.29.41 : பசி தாகம் என்னும் உடல் தேவைகளினால் எப்போதும் துன்பத்திற்காளாகின்ற காரணத்தினால் ஓர்கட்டுண்ட ஆத்மாவிற்கு முழுமுதற் கடவுளைப் பற்றிய அமிர்த மொழிகளைக் கேட்பதில் பற்றற்றவனாக இருக்கிறான்.

பதங்கள் 4.29.42 – 4.29.44 : பிரஜாபதிகள் அனைவரின் தந்தையான ஆற்றல்மிக்க பிரம்மதேவன்; சிவபெருமான், மனு, தக்ஷன், மற்றும் மனிதகுலத்தினை ஆளும்பிறர்; சனகர்; சநாதனர் உள்ளிட்ட நான்கு பிரம்மச்சாரி முனிவர்கள்; மாமுனிவர்களான மரீசி, அத்திரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, பிருது மற்றும் வசிஷ்டர்; நாரதர் உள்ளிட்ட இவர்கள் அனைவரும் உயர்ந்த அந்தணர்கள் என்பதோடு, நாங்கள் அனைவரும் வேத இலக்கியங்களை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைக்கும் வல்லமை பெற்றவர்களும் ஆவோம். நாங்கள் ஆற்றல்மிக்கவர்களாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் எங்களது தவமும், தியானமும், கல்வியுமே ஆகும். நாங்கள் அடிக்கடி காணும் முழுமுதற் கடவுளைப் பற்றி பல வழிகளில் வினவி அறிந்தும் கூட அவரைப் பற்றி மிகச் சரியாக எங்களால் இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை.

பதம் 4.29.45 : அளவற்ற வேத அறிவில் வளர்ச்சிபெற்று வேதமந்திரங்களினால் பல்வேறு தேவர்களை வழிபட்ட போதிலும், தேவவழிபாடு ஆற்றல் மிக்க முழுமுதற் கடவுளை அறிவதற்கு எந்தவித உதவியும் செய்யாது.

பதம் 4.29.46 : ஒரு மனிதன் முழுமூச்சுடன் பக்தித் தொண்டு செய்வானாகில் தனது அளவற்றக் கருணையினால் பகவான் அவனுக்கு அருள் பாவிக்கின்றார். அந்த நேரம் உணர்வு பெற்ற அப்பக்தன் எல்லா உலகச் செயல்களையும் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேதச் சடங்குகள் அனைத்தையும் விட்டுவிடுகின்றான்.

பதம் 4.29.47 : ஆகையினால், அன்பிற்குரிய மன்னன் பர்ஹிஷ்மானே, அஞ்ஞானத்தினால், கேட்பதற்கு இனிமையாகவும், நன்மையளிக்கும் இலட்சியமாகவும் காட்சியளிக்கும் வேதச்சடங்குகள் அல்லது பலன் தரும் செயல்களில் ஒருநாளும் ஈடுபடாதே. இவற்றை வாழ்வின் இறுதி இலட்சியமாக ஒரு நாளும் ஏற்றுக் கொள்ளாதே.

பதம் 4.29.48 : மதிகுறைவுடையோர், வேதங்களில் உள்ள சமயச் சடங்குகளே எல்லாம் என்று ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள், வேதங்களின் முக்கியமான குறிக்கோள், முழுமுதற் கடவுள் உறைகின்ற இடமே தமது உண்மையான இருப்பிடம் என்பதை அறிந்து கொள்ளுதலேயாகும் என்பதை அறியாதிருக்கின்றனர். தங்களது உண்மையான வீட்டின் மீது பற்றில்லாது மாயையினால் அவர்கள் அடுத்த வீடுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

பதம் 4.29.49 : அன்பிற்குரிய அரசனே, இவ்வுலகம் முழுவதும் கூர்மையான நுனிகளையுடைய தர்ப்பைப் புற்களினால் மூடப்பட்டிருக்கின்றது. இதன் வலிமையினால் நீ மிகவும் பெருமையுடையவனாக இருக்கின்றாய்! ஏனெனில் நீ பல்வேறுவகையான விலங்குகளை வேள்விகளில் பலியிட்டிருக்கின்றாய். உன்னுடைய மூடத்தனத்தினால் முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்குரிய ஒரே வழி பக்தித் தொண்டேயாகும் என்பதனை நீ அறியவில்லை. இவ்வுண்மையினை உன்னால் புரிந்து கொள்ளவும் முடியாது. உனது செயல்கள் அனைத்தும் முழுமுதற் கடவுளை மகிழ்ச்சிப்படுத்துவதற்குரியதாக மட்டுமே இருத்தல் வேண்டும். நமது கல்விமுறைகூட நாம் கிருஷ்ண உணர்வினைப் பெறுவதற்குரியதாகவே இருத்தல் வேண்டும்.

பதம் 4.29.50 : இவ்வுலகில் பருஉடல்களையுடைய அனைத்து உயிர்களுக்கும் பரமாத்மாவாகவும், வழிகாட்டியாகவும் விளங்குபவர் முழுமுதற் கடவுளான ஸ்ரீ ஹரியே ஆவார். அவரே ஜடஇயற்கையின் அனைத்துச் செயல்களுக்கும் பரம நெறியாளராக விளங்குகின்றார். அவரே நம் சிறந்த நண்பர். ஆகையினால் நாம் அனைவரும் அவரது திருவடித் தாமரைகளைச் சரணடைய வேண்டும். இதைச் செய்வதின் மூலம் ஒருவரது வாழ்க்கை மங்கலகரமாக விளங்கும்.

பதம் 4.29.51 : பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவனுக்கு உலக வாழ்வில் அச்சம் அணுவளவும் இருப்பதில்லை. ஏனெனில் முழுமுதற் கடவுளே பரமாத்மாவாகவும் அனைவரின் நண்பனாகவும் விளங்குகிறார். இந்த ரகசியத்தினை அறிந்து கொண்டவனே உண்மையில் கல்விமான் ஆவான். இவ்வழியே கல்விகற்றவன் உலகிற்கே ஆன்மீக குருவாகத் திகழ்வான். உண்மையில் தேர்ந்த ஆன்மீக குருவாகவும் கிருஷ்ணரின் பிரதிநிதியாகவும் விளங்கினான் என்றால் அவன் கிருஷ்ணரிலிருந்து வேறானவன் அல்லன்.

பதம் 4.29.52 : மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: ஓ, மனிதரில் சிறந்தோனே, நீ கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் மிகச் சரியாக பதிலை நான் கூறிவிட்டேன். இப்போது தெய்வீக முனிவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிகவும் ரகசியமான மற்றொரு சரிதத்தினைக் கேட்பாயாக.

பதம் 4.29.53 : அன்பிற்குரிய மன்னனே, ஒரு பூங்காவனத்தில் ஓர் ஆண்மான் தன் இணையானப் பெண்மானுடன் புல்லை மேய்ந்து கொண்டிருக்கின்றது அதனை அருள் கூர்ந்து தேடிக் காண்பாயாக அம்மான் புல்லைத்தின்று கொண்டும், தும்பிகள் கூட்டங் கூட்டமாக ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த இனிய இசையைக் கேட்டுத் தன்னை மறந்த மகிழ்ச்சியில் இருக்கின்றது. அதன் நிலைமையினை ஒரு கணம் எண்ணிப்பார். பிற உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தைத் தின்றுவாழும் புலி ஒன்று அதன் எதிரில் நிற்பதை அந்த மான் கவனிக்கவில்லை. கூர்மையான அம்புகளினால் குத்திக் கொல்வதற்கு ஒரு வேடன் பின்னால் நின்று கொண்டிருக்கின்றான் இவ்வாறு அம்மானின் மரணம் இரு புறத்திலும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

பதம் 4.29.54 : அன்பார்ந்த மன்னனே, ஒரு பூ மலர்ந்தபின் அணியப்பட்டு வாடியபிறகு ஒதுக்கப்படுவது போல் பெண்ணும் முதலில் கவர்ச்சிக்குரியவளாகவும் இறுதியில் துன்பத்திற்குரியவளாகவும் இருக்கிறாள். மலரின் நறுமணத்தினை ஒருவன் மகிழ்ந்து அனுபவிப்பது போல், பெண்களுடன் கூடி உயிர் காம இச்சைகளில் சிக்கி, பாலுறவினை அனுபவித்து மகிழ்கிறான். அவன் இவ்வாறு புலனுகர்ச்சி வாழ்வினை நாவிலிருந்து பிறப்புறுப்புவரை அனுபவித்து மகிழ்கிறான். இவ்வழியே உயிர்தான் இல்லற வாழ்வில் மகிழ்ந்திருப்பதாகத் தனக்குத்தானே கருதிக் கொள்கிறான். மனைவியோடு இணைந்து அவன் எப்போதும் இதுபோன்ற நினைவுகளிலேயே ஆழ்ந்திருக்கின்றான். மலரிலுள்ள தேனை எடுக்கும் பொழுது தும்பிகள் ரீங்கரிப்பதைப் போன்ற மிகுந்த மகிழ்ச்சியடைகிறான். அவன் தன் முன்னே இரவு, பகலாக தன் ஆயுட்காலத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும் காலம் என்பதை மறந்துவிடுகிறான். வாழ்நாள் படிப்படியாகக் குறைந்து கொண்டிருப்பதைப் பற்றியும் அறிவதில்லை. அதுபோல் தன் பின்னாலிருந்து தன்னைக் கொல்ல வருகின்ற மரண தேவனைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. இதனை முதலில் புரிந்து கொள்வாயாக! நீ இவ்வாறு நிலையில்லாமலும், அனைத்துப் பக்கங்களில் இருந்து அச்சுறுத்தப்பட்டும் நீ வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்.

பதம் 4.29.55 : அன்பார்ந்த மன்னனே, மானின் உருவக நிலையினைச் சற்றுப் புரிந்து கொள்ள முயல்வாயாக உன்னைப் பற்றிய முழு உணர்வுடையவனாகி, பலன் தரும் செயலினால் தேவலோகத்திற்கு உயர்வு பெறலாம் என்பது பற்றிக் கேட்பதினால் உண்டாகும் மகிழ்ச்சியினைத் துறந்துவிடுவாயாக. முற்றிலும் பாலுறவு நிறைந்ததும், அது தொடர்புடைய கதைகள் நிறைந்ததுமான இல்லறவாழ்வினைத் துறந்துவிடுவாயாக. விடுதலை பெற்ற ஆத்மாக்களின் கருணையின் மூலம் முழுமுதற் கடவுளைச் சரணடைவாயாக. இவ்வழியே அருள்கூர்ந்து உலக வாழ்வில் உனக்கிருக்கும் கவர்ச்சியினை விட்டுவிடுவாயாக.

பதம் 4.29.56 : மன்னர் பதில் கூறினார்: போற்றுதலுக்குரிய அந்தணரே, நீர் கூறிய அனைத்தையும் நான் கவனமுடன் கேட்டு ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்ததில், என்னைப் பலன்தரும் செயலில் ஈடுபடுத்திய ஆச்சாரியர்கள் அனைவரும் இந்த ரகசிய ஞானத்தினைப் பற்றி ஏதும் அறியாதவர்கள் என்று கருதுகிறேன். அன்றி அறிந்தவர்களாயின், ஏன் அவர்கள் எனக்கு அதனை விளக்கவில்லை?

பதம் 4.29.57 : போற்றுதலுக்குரிய அந்தணரே, உமது உபதேசங்களுக்கும் என்னை உலகச் செயல்களில் ஈடுபடச் செய்த ஆன்மீக குருக்களின் உபதேசங்களுக்கும் இடையே பல முரண்பாடுகள் இருக்கின்றன. பக்தித் தொண்டு, ஞானம், துறவு போன்றவற்றிற்கிடையேயுள்ள வேற்றுமைகள் என்னவென்று இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இவற்றைப் பற்றிய சில சந்தேகங்கள் எனக்கிருந்தன. ஆனால் அவற்றை இப்போது நீர் மிகுந்த கருணையுடன் தெளிவாக்கி வீட்டீர். மேலும் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் என்னவென்பது பற்றி மாமுனிவர்கள் கூடக்குழப்பமடைகின்றனர் என்பதையும் என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையில் புலனுகர்ச்சி என்ற கேள்விக்கே இப்போது இடமில்லை.

பதம் 4.29.58 : இப்பிறவியில் ஓர் உயிர் செய்யும் செயல்களின் பலாபலன்களை அவனது அடுத்தப்பிறவியில் அனுபவிக்கிறான்.

பதம் 4.29.59 : ஒருவன் அவனது கடந்த காலச் செயல்களுக்கேற்ப இன்பமோ துன்பமோ அனுபவிக்கிறான் என்று வேத பண்டிதர் கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் சென்ற பிறவியில் செயல்களைச் செய்த உடல் சென்ற பிறவியிலேயே மறைந்துவிட்டது. ஆயினும், அச்செயல்களின் இன்ப துன்பப் பலன்களை மற்றொரு உடல் அனுபவிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?

பதம் 4.29.60 : மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: உயிர் ஒரு பூதவுடலில் இப்பிறவியில் செயல்படுகிறது. இப்பூதவுடல் மனம், புத்தி, ஆணவம் என்பவற்றலான நுண்ணுடலினால் பலவந்தமாச் செயல்பட வைக்கப்படுகிறது. பூதவுடல் மறைந்த பிறகு செயல்பட வைக்கப்படுகிறது. பூதவுடல் மறைந்த பிறகு இன்ப, துன்பத்தினை அனுபவிப்பதற்கு நுண்ணுடல் அங்கே இருக்கிறது. அதனால் இதில் மாற்றமென்று எதுவுமில்லை.

பதம் 4.29.61 : கரை காணும் பொழுது உயிர்ப்பாருளானவன் உண்மையான உடலைத் துறந்துவிடுகின்றான். அவனது மனம் மற்றும் புத்தியினால் அவன் மற்றொரு உடலில், ஒரு தேவனாக அல்லது நாயாகவோ செயல்படுகிறான். இப்பூதவுடலை நீங்கிய பின்னர் உயிர்வாழி ஒரு விலங்கின் உடலிலோ, அல்லது வேறொரு உலகிலோ வாழ்கிறான். இவ்வாறு அவன் தனது முற்பிறவியின் வினைப்பயன்களைத் தொடர்ந்து அனுபவிக்கின்றான்.

பதம் 4.29.62 : உயிர், நான் இது, நான் அது, எனது கடமை இது, ஆகையினால் இதனை நான் செய்வேன் என்னும் உடற்கருத்தின்கீழ் செயல்படுகிறான். இவையனைத்தும் மனத்தில் அழுத்தமாகப் பதிந்திருப்பவையாகும். மேலும் இச்செயல்கள் அனைத்தும் தற்காலிகமானவையேயாகும்; இருந்தும் முழுமுதற் கடவுளின் கருணையினால் உயிர் அவனது மனயூகங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பினைப் பெறுகிறான். இவ்வாறு அவன் மற்றொரு உடலைப் பெறுகிறான்.

பதம் 4.29.63 : ஒருவன் உயிரின் மனநிலை அல்லது உணர்வு நிலையினை அறிபுலன், செயற்புலன் எனும் இருவகைப் புலன்களினால் அறிந்து கொள்ளலாம். அதுபோல் ஒரு மனிதனின் மனநிலை அல்லது அவனது உணர்வு நிலையினால் அவன் தனது முற்பிறவி நிலையினை அறிந்து கொள்ளலாம்.

பதம் 4.29.64 : சில நேரங்களில் நாம் திடீரென்று இப்போதிருக்கும் நமது உடலினால் உணரப்படாத, கேட்கப்படாத, பார்க்கப்படாத ஏதோ ஒன்றினை அனுபவிக்கிறோம். சில நேரங்களில் அவற்றை நமது கனவுகளில் காண்கிறோம்.

பதம் 4.29.65 : ஆகையினால் அன்பு மன்னனே, நுண்மன மூடப்பட்டிருக்கும் உயிர் பல்வேறு வகையான சிந்தனைகளையும் நிழல் ஆடையினால் உருவங்களையும் வளர்க்கிறது என்றால் அதற்கு அவனது முந்தைய உடலே காரணமாகும். எனது இந்த வார்த்தைகள் சத்தியம் என்று ஏற்றுக் கொள்வாயாக. முந்தைய உடல் அனுபவித்தறியாத ஒன்றினை இப்போது நம் மனம் கற்பனைகளாகக் காண்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.

பதம் 4.29.66 : ஓ, மன்னனே, உனக்கு அனைத்து மங்கலங்களும் உண்டாவதாக! இயற்கையுடன் ஒரு உயிர்ப்பொருள் கொள்ளும் தொடர்பினால் உருவாகின்ற உடலுக்கு மனமே காரணமாகும். ஒருவனது மன இயல்பினைப் பொருத்து ஓர் உயிர் சென்ற பிறவியில் என்னவாக இருந்தான்? அடுத்த பிறவியில் எந்தவகையான உடலைப் பெறுவான் என்று ஒருவனால் புரிந்து கொள்ள முடியும். எனவே ஒருவனது மனமே அவனது கடந்தகால மற்றும் எதிர்கால உடல்கள் எத்தகையன என்று குறிப்பிடுகின்றது.

பதம் 4.29.67 : சிலநேரங்களில் நாம் இப்பிறவியில் அனுபவித்தறியாத, கேட்டறியாதவற்றையெல்லாம் கனவினில் காண்கிறோம். ஆயினும் இவை அனைத்தும் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் அனுபவிக்கப்பட்டவையாகும்.

பதம் 4.29.68 : உயிரின் மனது பல்வேறு பூதவுடல்களில் தொடர்ந்து இருக்கிறது, மேலும் புலனுகர்ச்சிக்கான ஒருவனது ஆசைகளுக்கேற்ப மனம் பல்வேறு நினைவுகளைப் பதிந்து கொள்கிறது. மனதில் இவை பல்வேறு கலவைகளில் இணைந்து தோன்றுகின்றன; ஆகையினாலேயே இதற்கு முன்பு நாம் கேட்டறியாத, பார்த்தறியாத நிழல் உருவங்கள் சில நேரங்களில் தோன்றுகின்றன.

பதம் 4.29.69 : கிருஷ்ண உணர்வு என்பதற்கு இப்பிரபஞ்சத்தை முழுமுதற் கடவுளாகப் பார்க்க கூடிய மனநிலையில் முழுமுதற் கடவுளுடன் இணையான தொடர்பு கொண்டிருத்தல் என்று பொருளாகும். இதுபோன்ற பார்வை எப்போதும் சாத்தியமாகக் கூடியதல்ல ஆயினும் பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் கறுப்புக் கோளமான ராகு கிரஹம் புலனாவது போல் இக்கவனிப்பும் வெளிப்படுகிறது.

பதம் 4.29.70 : புத்தி, மனம், புலன்கள், புலனுகர்ச்சிப் பொருட்களினால் ஆன நுண்ணுடலும், உலகியல் குணங்களின் பலன்களும் இருக்கும் வரையில் பொய்ம்மை உணர்வும் அதற்குத் தொடர்புடைய பொருளாகிய பருஉடலும் இருக்கும்.

பதம் 4.29.71 : உயிர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுதோ, மூர்ச்சையடையும் பொழுதோ, பெரிய நஷ்டத்தினால் அதிர்ச்சிக்கு ஆளாகும் பொழுதோ, மரண வேளையிலோ, கடுமையான காய்ச்சல் இருக்கும் பொழுதோ, உயிர்க்காற்றின் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. அச்சமயம் உயிர் உடலோடு சேர்த்துத் தன்னை அடையாளம் காணும் ஞானத்தினை இழக்கிறான்.

பதம் 4.29.72 : ஒருவன் இளைஞனாக இருக்கும்பொழுது அவனது பத்துப் புலன்களும் மனமும் முழுதுமாக இயங்குகின்றன. ஆயினும் தாயின் கருப்பையில் இருக்கும் பொழுதோ அல்லது குழந்தையாக இருக்கும் பொழுதோ அமாவாசை இருளினால் முழுநிலவு மறைக்கப்பட்டிருப்பது போல் உணர்வுப் புலன்களும், மனமும் மூடப்பட்டிருக்கின்றன.

பதம் 4.29.73 : உயிர்ப்பொருள் கனவு காணும் பொழுது புலனுணுரும் பொருட்கள் உண்மையில் அங்கே இருப்பதில்லை. ஆயினும் ஒருவனுக்குப் புலனுணர்வுப் பொருட்களோடு தொடர்பிருக்கின்ற காரணத்தினால் அவை வெளிப்படையாகத் தோன்றுகின்றன. அதுபோல் வளர்ச்சியடையாத புலன்களையுடைய உயிர்பொருள் புலனுணர்வுப் பொருட்களுடன் சரியாகத் தொடர்பு கொள்ளாமல் இருந்தபோதிலும் வெளிப்பாட்டினை அவன் நிறுத்துவதில்லை.

பதம் 4.29.74 : ஐந்து புலனுகர்ச்சிப் பொருட்கள், ஐந்து புலனுணர்வு உறுப்புக்கள், ஐந்து அறிவுப்புலன்கள் மற்றும் மனம் ஒன்று என்று உடற்கூற்றின் விரிவுகள் பதினாறாகும். இவை உயிருடன் இணைந்து இயற்கையின் முக்குணங்களினால் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு கட்டுண்ட ஆத்மாவின் தோற்றம் புரிந்து கொள்ளப்படுகிறது.

பதம் 4.29.75 : நுண்ணுடலின் சிறப்பான செயல்முறையினால் உயிர் பருவுடல்களைப் பெறுகிறான் மீண்டும் துறக்கிறான். இதனையே ஆத்மா ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம் மாறுகிறது என்கிறோம். இவ்வாறு ஆத்மா பல்வேறு வகையான இன்பம், சோகம், பயம், சுகம், துக்கம் போன்றவற்றிற்கு ஆளாகிறான்.

பதங்கள் 4.29.76 – 4.29.77 : கம்பளிப்பூச்சி ஓர் இலையிலிருந்து மற்றோர் இலைக்கு ஊர்ந்து செல்லும் பொழுது, ஓர் இலையைப் பற்றிக் கொண்டபிறகே மற்றோர் இலையினை விட்டுவிடும். அதுபோல் அவனது முந்தைய கர்ம வினைக்கேற்ப உயிர் தானிருக்கும் உடலைத் துறப்பதற்கு முன் மற்றோர் உடலை பற்றிக் கொள்ள வேண்டியவனாகிறான். மனமே அனைத்து ஆசைகளின் உறைவிடமாகத் திகழ்கிறது என்பதுவே இதற்குரிய காரணமாகும்.

பதம் 4.29.78 : புலனுகர்ச்சி இன்பத்தினை அனுபவிக்கும் ஆசை நம்மிடம் இருக்கும்வரை நாம் உலகியற் செயல்களை உருவாக்குகிறோம். உயிர் மண்ணுலகில் செயல்படும் பொழுது அவன் புலன்களை அனுபவிக்கிறான். இப்படி அனுபவிக்கும் பொழுது அவன் தொடர்ந்து உலகியற் செயல்களை உருவாக்குகிறான். இவ்வாறு உயிர் ஒரு கட்டுண்ட ஆத்மாவாக கூண்டில் அடைபடுகிறது.

பதம் 4.29.79 : இப்பிரபஞ்சத் தோற்றமானது முழுமுதற் கடவுளின் விருப்பத்தின் பேரில் படைக்கவும், காக்கவும் அழிக்கவும்படுகிறது என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து இந்த உலகிலுள்ள அனைத்தும் பகவானின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றன. இவ்வுயர்ந்த ஞானத்தினால் மெய்யறிவு பெறுவதற்கு ஒருவன் தன்னை எப்போதும் பகவானின் வழிபாட்டுத்தொண்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பதம் 4.29.80 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: முழுமுதற் கடவுள் மற்றும் உயிர்களின் உண்மை நிலையினை பரம பக்தரும் மாமுனிவருமான நாரதர் மன்னர் பிராசீனபர்ஹிக்கு இவ்வாறு விளக்கியருளினார். பின்னர் அவர் மன்னராக சித்தலோகத்திற்கு வருமாறு அழைத்துவிட்டு அங்கு புறப்பட்டுச் சென்றார்.

பதம் 4.29.81 : அமைச்சர்களிடம் ராஜரிஷி பிராசீனபர்ஹி, குடிமக்களைப் பாதுகாக்கும்படி தன் மைந்தர்களுக்குத் தான் கட்டளையிட்டதாக அவர்களிடம் கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் தமது அரண்மனையைத் துறந்து தவம் செய்வதற்காக கபிலாஸ்ரமம் என்னும் புனித இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

பதம் 4.29.82 : மன்னர் பிராசீனபர்ஹி கவிலாஸ்ரமத்தில் துறவுகளும், தவங்களும் மேற்கொண்டதினால் உலோகாயதப்பணிகள் அனைத்திலுமிருந்து முழு விடுதலையடைந்தார். அவர் பகவானின் உன்னத அன்புத் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டு முழுமுதற் கடவுளின் நிலைக்கு இணையான ஆன்மீக நிலையினை எய்தினார்.

பதம் 4.29.83 : அன்பார்ந்த விதுரனே, உயிர்ப்பொருளின் ஆன்மீகத் தோற்றத்தினைப் பற்றி மாமுனிவர் நாரதர் விளக்கியருளியுள்ள இச்சரிதத்தினை ஒருவர் கேட்டாலும், அவ்வாறு கேட்டதைப் பிறர்க்கு எடுத்துரைத்தாலும் அவர் உடற்கருத்துடைய வாழ்க்கையிலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவார்.

பதம் 4.29.84 : சிறந்த மாமுனிவர் நாரதரால் முழுமுதற் கடவுளின் உன்னதப்புகழ் நிறைந்த இச்சரிதம் எடுத்துரைக்கப்பட்டதாகும். இதனைத் தொடர்ந்து இச்சரிதம் உரைக்கப்படும்பொழுது அது நிச்சயம் இந்த உலகினைத் தூய்மை செய்கிறது. இது ஒருவனது இதயத்தைத் தூய்மை செய்து அவன் தனது ஆன்மீக அடையாளத்தினைப் பெறுவதற்கு உதவுகிறது. இவ்வுன்னதச் சரிதத்தினை உரைக்கும் ஒருவன் அனைத்துப் பௌதீகக் கட்டுக்களிலிருந்தும் விடுதலை பெறுவதோடு இந்த உலகில் நீண்ட காலம் அலைய வேண்டிய அவசியமில்லாதவனும் ஆகிறான்.

பதம் 4.29.85 : அதிகாரப்பூர்வமாக இங்கே மன்னர் புரஞ்சனனைப் பற்றி விளக்கப்பட்டிருக்கும் உருவகக் கதையானது என்னால் எனது ஆன்மீகக்குருவிடமிருந்து கேட்கப்பட்டது. இது முற்றிலும் ஆன்மீக ஞானம் நிறைந்ததாகும். இவ்வுருவகக் கதையின் நோக்கத்தினை ஒருவன் அறிந்துகொண்டானென்றால் அவன் நிச்சயமாக உடற்கருத்துடைய வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதோடு மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வான். ஆத்மா கூடுவிட்டுக் கூடு பாய்வதை உண்மையில் ஒருவன் அறியவில்லையென்ற போதிலும் அவன் இச்சரிதத்தினைப் படிப்பதின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

முக்கியக் குறிப்பு:

மத்வாச்சாரிய சம்பிரதாயத்தைச் சேர்ந்த விஜயத்வஜ தீர்த்தர் அவர்களின் கருத்தின்படி பின்வரும் முதலிரண்டு சுலோகங்கள் இந்த அத்தியாத்தில் 45வது சுலோகத்திற்குப் பிறகு இருப்பதாகவும், மீதியுள்ள இரண்டு சுலோகங்கள் 79வது சுலோகத்திற்குப் பிறகு இருப்பதாகவும் தெரிகிறது.

பதம் 4.29.1அ – 4.29.2அ : தன்னுடைய உடல், மனைவி, மக்கள், முதலியவற்றைப் பாதுகாக்கும் ஆசை விலங்குகளிடம் கூட இருக்கிறது. இவற்றை முறையாகக் கவனிப்பதில் விலங்குகள் அறிவோடு செயல்படுகின்றன. மனிதனும் இதில் மட்டும் முன்னேறினான் என்றால் பிறகு அவனுக்கும், விலங்கிற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது? இம்மானிட வாழ்க்கை பரிணாம வளர்ச்சியின்படி ஏராளமான பிறப்புக்களுக்குப் பிறகு கிடைத்த ஒன்று என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். கற்றறிந்த ஒருவன் ஆன்மீக ஞானத்தினால் உடல் சார்ந்த வாழ்க்கையினைத் துறந்துவிடுகிறான் என்றால் பரமபுருஷ பகவானைப் போன்று அவனும் மிக முக்கியமான தனிப்பட்ட ஜீவாத்மாவாகிறான்.

பதம் 4.29.1ஆ : ஓர் உயிர் கிருஷ்ண உணர்வில் வளர்ச்சி பெற்றவனாகவும், பிற உயிர்களிடத்துக் கருணையுடையவனாகவும், தன்னுணர்வு பெறுவதற்கான அவனது ஆன்மீக ஞானம் நிறைவுடையதாகவும் இருந்ததென்றால் அவன் உடனடியாக உலக வாழ்வின் கட்டிலிருந்து விடுதலை பெறுகிறான்.

பதம் 4.29.2ஆ : கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று பிரிவுகளையுடைய காலத்தினுள் நடக்கும் அனைத்தும் கனவேயாகும். இதுவே வேத இலக்கியங்கள் அனைத்திலும் அடித்தளமாக இருக்கும் மறை பொருளாகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare