அத்தியாயம் – 26
மன்னர் புரஞ்ஜனன் காட்டிற்கு
வேட்டையாடச் செல்லுதல்
பதங்கள் 4.26.1 – 4.26.3
நாரத: உவாச
ஸ ஏகதா மஹேஷ்வாஸோ ரதம் பஞ்சாஸ்வம் ஆஸீ-கம்
த்வீஷம் த்வி-சக்ரம் ஏகாக்ஷம் த்ரி-வேணும் பஞ்ச-பந்துரம்

ஏக-ரஸ்மி ஏக-தமனம் ஏக-நீடம் த்வி-கூபரம்
பஞ்ச-ப்ரஹரணம் ஸப்த-வரூதம் பஞ்ச விக்ரமம்

ஹைமோபஸகரம் ஆருஹ்ய ஸ்வர்ண-வர்மாக்ஷயே ஷுதி:
ஏகாதஸ-சமூ-நாத: பஞ்ச-ப்ரஸ்தம் அகாத்வனம்

நாரத: உவாச—நாரதர் கூறினார்; ஸ:—மன்னர் புரஞ்சனன்; ஏகதா—முன்னொரு காலத்தில்; மஹா-இஷ்வாஸ:—தனது உறுதிமிக்க வில்லையும் அம்புகளையும் ஏந்திக்கொண்டு; ரதம்—இரதம்; பஞ்ச-அஸ்வம்—ஐந்து குதிரைகள்; ஆஸுகம்—விரைந்து சென்றார்; த்வி-ஈஷம்—இரண்டு அம்புகள்; த்வி-சக்ரம்—இரண்டு சக்கரங்கள்; ஏக—ஒன்று; அக்ஷம்—அச்சு; த்ரி—மூன்று; வேணும்—கொடிகள்; பஞ்ச—ஐந்து; பந்துரம்—தடைகள்; ஏக—ஒன்று; ரஸ்மி—கயிறு சேணம்; ஏக—ஒன்று; தமனம்—இரதசாரதி; நீடம்—அமர்கின்ற இடம்; த்வி—இரண்டு; கூபரம்—குதிரைகளின் கடிவாளக் கயிறுகளை இணைத்துக் கட்டும் இரு கம்பங்கள்; பஞ்ச—ஐந்து; ப்ரஹரணம்—ஆயுதங்கள்; ஸப்த—ஏழு; வரூதம்—மறைப்புகள் அல்லது உடலின் கலவைக் கூறுகள்; பஞ்ச—ஐந்து; விக்ரமம்—முறைகள்; ஹைம—பொன்னாலான; உபஸ்கரம்—ஆபரணங்கள்; ஆருஹ்ய—மேல் ஏறி; ஸ்வர்ண—தங்கம்; வர்மா—கவசம்; அக்ஷய—குறையாத; இஷூ-தி:—அம்பறாத் தூணி; ஏகாதஸ—பதினோரு; சமூநாத:—காவலர்கள்; பஞ்ச—ஐந்து; ப்ரஸ்தம்—இலக்குகள், குறிக்கோள்; அகாத்—சென்றார்; வனம்—வனத்திற்கு

நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே, முன்னொரு காலத்தில் மன்னர் புரஞ்ஜனன் தமது சிறந்த வில்லை எடுத்துக்கொண்டு, பொன்னாலான கவச உடையணிந்து, அம்பறாத் தூணியில் ஏராளமான அம்புகளையும் எடுத்துக் கொண்டு பதினோரு காவலர்கள் துணைவர, ஐந்து குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி மிகவும் வேகமாகப் பஞ்ச பிரஸ்தம் என்று காட்டுக்குச் சென்றார். அவர் அத்தேரில் வெடிக்கக்கூடிய இரண்டு அம்புகளையும் எடுத்துச்சென்றார். அந்தத் தேர் சுழலும் ஓர் இருசுடன் கூடிய இரு சக்கரங்களின் மேல் பொருத்தப்பட்டிருந்தது. அந்தத்தேரின் மீது மூன்று கொடிகள், குதிரையின் கடிவாளக்கயிறுகள், தேரோட்டிக்குரிய இடம் ஒன்று, கடிவாளக் கயிறுகளை இணைத்துக்கட்டும் இரு கம்பங்கள்; ஐந்து ஆயுதங்கள் மற்றும் ஏழு மறைப்புக்கள் இருந்தன. அத்தேர் ஐந்து வெவ்வேறு விதமான பாணிகளில் சென்றது. அதன்முன்பு ஐந்து தடைகள் இருந்தன. அத்தேரின் அனைத்துப் பகுதிகளும் பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பதம் 4.26.4
சசார ம்ருகயாம் தத்ர த்ருப்த ஆத்தேஷு-கார்முக:
விஹாய ஜாயாம் அதத்-அர்ஹாம் ம்ருக-வ்யஸன-லாலஸ:

சசார—நிறைவேற்றுதல்; ம்ருகயாம்—வேட்டைக்கு; தத்ர—அங்கே; த்ருப்த—பெருமையுடன்; ஆத்த—எடுத்துக்கொண்டு; இஷு—அம்புகள்; கார்முக—வில்; விஹாய—விட்டுவிட்டு; ஜாயாம்—அவரது மனைவியை; அ-தத்-அர்ஹம்—கடினமாக இருந்தபோதிலும்; ம்ருக—வேட்டைக்கு; வ்யஸன—தீச்செயல்கள்; லாலஸ—நாட்டத்தினால்.

தன் மனைவியான அரசியை விட்டு ஒரு க்ஷணம் கூடப்பிரிந்திருப்பது என்பது மன்னர் புரஞ்ஜனருக்கு இயலாத ஒன்றாகும். இருந்த போதிலும் அன்றைய தினம் வேட்டையாட வேண்டும் என்னும் ஆவலினால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் அவர் தன் மனைவியைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது மிக்க கர்வத்துடன் தனது வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார்.

பதம் 4.26.5
ஆஸூரீம் வ்ருத்திம் ஆஸ்ரித்ய கோராத்மா நிரனுக்ரஹ:
ந்யஹனன் நிஸிதைர் பாணைர் வனேஷூ வன-கோசரான்

ஆஸூரீம்—அசுரத்தன்மை; வ்ருத்திம்—செயல்; ஆஸ்ரித்ய—குடிபுகுந்ததினால்; கோர—பயங்கர; ஆத்மா—உணர்வுடன்; நிரனுக்ரஹ:—கருணையின்றி; ந்யஹனத்—கொன்றார்; நிஸிதை:—கூர்மையாக; பாணை:—அம்புகளினால்; வனேஷூ—வனத்தில்; வன-கோசரான்—வனவிலங்குகள்.

அச்சமயம் மன்னர் புரஞ்ஜனன் பயங்கரமான அசுர மனப்பான்மை உடையவராக விளங்கினார். இதனால் அவர் மனம் கல்லாக மாறியதோடு கருணையற்றவராகவும் ஆனார். அதனால் அவர் கூர்மையான அம்புகளினால் மனம் போன போக்கில் காட்டிலுள்ள வாயில்லா விலங்குகளைக் கொன்று குவித்தார்.

பதம் 4.26.6
தீர்தேஷூ ப்ரதித்ருஷ்டேஷூ ராஜா மேத்யான் பஸூன் வனே
யாவத்-அர்தம் அலம் லுப்தோ ஹன்யாத் இதி நியம்யதே

தீர்தேஷூ—புனிதமான இடங்களில்; ப்ரதித்ருஷ்டேஷூ—வேதங்களின் வழிகாட்டுதலின்படி; ராஜா—மன்னர்; மேத்யான்—வேள்விக்கு உகந்த; பஸூன்—விலங்குகள்; வனே—வனத்தில்; யாவத்—தேவைப்படும் அளவு; அர்தம்—தேவைப்படுகின்ற; அலம்—அதற்கு மேல் கூடாது; லுப்த—பேராசை கொண்டு; ஹன்யத்—ஒருவர் கொல்லலாம்; இதி—இவ்வாறு; நியம்யதே—இது ஒழுங்கு படுத்தப்படுகிறது.

இறைச்சி உண்ணவேண்டுமென்று ஓர் அரசன் மிகுந்த ஆவல் கொண்டானென்றால், வேள்விகளைச் செய்வதற்கு வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் நெறிமுறைகளுக்கேற்ப அவன் காட்டிற்குச் சென்று கொல்வதற்குரிய விலங்குகளை மட்டுமே கொல்லலாம். வரைமுறையின்றியும் தேவையின்றியும் விலங்குகளைக் கொல்ல ஒருவனுக்கு அனுமதி இல்லை. வேதங்கள், தமோகுணத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மூடர்கள் அநாவசியமாக மிருகங்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே, விலங்குகளைக் கொல்வதை முறைப்படுத்தியிருக்கின்றன.

பதம் 4.26.7
ய ஏவம் கர்ம நியதம் வித்வான் குர்வீத மானவ:
கர்மணா தேன ராஜேந்த்ர ஜ்ஞானேன ந ஸ லிப்யதே

ய:—எவன் ஒருவன்; ஏவம்—இவ்வாறு; கர்ம—செயல்கள்; நியதம்—ஒழுங்குபடுத்தப்பட்ட; வித்வான்—கற்றறிந்தவர்; குர்வீத—செய்தல் வேண்டும்; மானவ:—ஒரு மனிதன்; கர்மணா—அச்செயல்களினால்; தேன—இதன் மூலம்; ராஜ-இந்த்ர—ஓ மன்னனே; ஜ்ஞானேன—ஞானத்தின் வளர்ச்சியினால்; ந—இல்லை; ஸ:—அவர்; லிப்யதே—ஈடுபடுதல்.

மன்னர் பிராசீன பர்ஹிஷத்திடம் நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்; அன்பார்ந்த மன்னனே, வேத சாத்திரங்களின் நெறி முறைகளுக்கேற்பச் செயல்படும் ஒருவன் பயனை எதிர்பார்த்து நற்செயல்களில் ஒருக்காலும் ஈடுபடுவதில்லை.

பதம் 4.26.8
அன்யதா கர்ம குர்வாணோ மானாரூடோ நிபத்யதே
குண-ப்ரவாஹ-பதிதோ நஷ்ட-ப்ரஜ்நோ வ்ரஜதி அத:

அன்யதா—இல்லையேல்; கர்ம—பலன்தரும் செயல்கள்; குர்வாண—செயல்படும் பொழுது; மான-ஆரூட—தவறான ஆணவத்தினால் பாதிக்கப்பட்டு; நிபத்யதே—ஒருவன் சிக்கிக் கொள்கிறான்; குண-ப்ரவாஹ—பௌதீகக் குணங்களின் பாதிப்பினால்; பதித:—வீழ்ந்து; நஷ்ட-ப்ரஜ்ஞா:—அனைத்து ஞானங்களையும் இழந்து; வ்ரஜதி—இவ்வாறு அவன் செய்கிறான்; அத:—கீழே.

இதற்குமாறாக வீண் ஆணவத்தின் காரணமாக மனம்போன போக்கில் செயல்படுபவன் கீழே விழுந்து விடுகிறான். இதனால் அவன் முக்குணங்களுடைய (சத்துவம், ரஜோ, தமோ) ஜட இயற்கையின் விதிமுறைகளில் ஈடுபாடுடையவனாகிறான். இவ்வழியில் ஓர் உயிர் தனது உண்மையான ஞானத்தை இழப்பதோடு பிறப்பு, இறப்பு சுழற்சியில் நித்தியமாகச் சிக்கிக் கொள்கிறான். இவ்வாறு அவன் மலத்திலுள்ள புழுவாதல் மற்றும் பிரம்ம லோகத்தில் உயர்நிலை பெறுதல் என்று மேலும், கீழும் போய் வந்து கொண்டிருக்கிறான்.

பதம் 4.26.9
தத்ர நிர்பின்ன-காத்ராணாம் சித்ர-வாஜை: ஸிலீமுகை:
விப்லவோ ‘பூத் து:கிதானாம் து: ஸஹ: கருணாத்மனாம்

தத்ர—அங்கே; நிர்பின்ன—துளைக்கப்பட்டு; கர்த்ராணாம்—அவர்களது உடல்கள்; சித்ர-வாஜை:—பல்வேறு வகையான தூவிகளுடன்; ஸிலீமுகை:—அம்புகளினால்; விப்லவ—அழித்தல்; அபூத்—செய்யப்பட்டது; து: கிதானாம்:—மிகுந்த துக்கத்திற்காளானவர்கள்; து:ஸஹ:— தாங்கவொண்ணாத; கருண-ஆத்மனாம்—மிகுந்த கருணையுடைய மனிதர்களின்.

மன்னர் புரஞ்ஜனன் இவ்வாறு வேட்டையாடிய பொழுது அவரது கூர்மையான அம்புகளினால் துளைக்கப்பட்டு அக்காட்டிலுள்ள விலங்குகள் மாண்டன. மன்னர் தம் மனம்போன போக்கில் விலங்குகளை கொன்று குவிப்பதைக் கண்ட கருணையுடைய பலர் துக்கத்தில் ஆழ்ந்தனர். இதுபோன்ற அன்புடையோர் விலங்குகள் கொல்லப்படுவதைத் தாங்கிக் கொள்ளமாட்டார்கள்.

பதம் 4.26.10
ஸஸான் வராஹான் மஹிஷான் கவயான் ருரு-ஸல்யகான்
மேத்யான் அன்யாம்ஸ் ச விவிதான் வினிக்நன் ஸ்ரமம் அத்யகாத்

ஸஸான்—முயல்கள்; வராஹான்—காட்டுப்பன்றிகள்; மஹிஷான்—காட்டெருமைகள்; கவயான்—காட்டெருதுகள்; ருரு—கருநிற மான்கள்; ஸல்யகான்—முள்ளம் பன்றிகள்; மேத்யான்—வேட்டைக்கான விலங்குகள்; அன்யான்—மற்றவைகள்; ச—மேலும்; விவிதான்—பல்வேறு; வினிக்நன்—கொல்வதினால்; அத்யகாத்—மிகுந்த சோர்வுற்றார்.

இவ்வாறு மன்னர் புரஞ்ஜனன், முயல்கள், காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள், காட்டெருதுகள், கருநிறமான்கள், முள்ளம் பன்றிகள், மற்றும் பிற வேட்டை மிருகங்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகளைக் கொன்று குவித்தனர். மேலும் மேலும் இவற்றைக் கொன்று கொண்டேவந்ததினால், மிகுந்த களைப்புற்றார்.

பதம் 4.26.11
தத: க்ஷுத்-த்ருட்-பரிஸ்ராந்தோ நிவ்ருத்தோ க்ருஹமேயிவான்
க்ருத-ஸ்நானோசிதாஹார: ஸம்விவேஸ கத-க்லம:

தத—அதன்பிறகு; க்ஷுத்—பசியினால்; த்ருட்—தாகம்; பரிஸ்ராந்த:—மிக்க களைப்புற்று; நிவ்ருத்த:—நீக்கிக்கொள்ள; க்ருஹம் ஏயிவான்—தனது அரண்மனை திரும்பினார்; க்ருத—எடுத்துக் கொண்டார்; உசித-ஆஹார—வேண்டிய மட்டும் உண்டார்; ஸம்விவேஸ—ஓய்வெடுத்தார்; கத-க்லம்:—களைப்பு நீங்கப் பெற்றார்.

இதன் பின்னர் பசியினாலும், தாகத்தினாலும் மிகுந்த களைப்புற்ற மன்னர் தமது அரண்மனைக்கு திரும்பினார். அங்கு நீராடி சிறந்த உணவு வகைகளை உண்டார். பின்னர் அவர் ஓய்வெடுத்துக் கொண்டு சோர்வு நீங்கப் பெற்றவரானார்.

பதம் 4.26.12
ஆத்மானம் அர்ஹயாம் சக்ரேதூபாலேப-ஸ்ரக்-ஆதிபி:
ஸாத்வ-அலங்க்ருத ஸர்வாங்கோ மஹிஷ்யாம் ஆததே மன:

ஆத்மானம்—அவரது; அர்ஹயாம்—செய்யக்கூடிய ஒன்று போல்; சக்ரே—செய்தார்; தூப—நறுமணம்; ஆலேப—சந்தனக் கலவையை உடலெங்கும் பூசிக்கொண்டு; ஸ்ரக்—மலர் மாலைகள்; ஆதிபி—உடன் தொடங்குதல்; ஸாது—தெய்வீக, அழகிய; அலங்க்ருத—அலங்கரித்துக் கொண்டு; ஸர்வ-அங்க:—உடலெங்கும்; மஹிஷ்யாம்—அரசிக்கு; ஆததே—அவர் அளித்தார்; மன—மனதினை.

இதன்பிறகு மன்னர் புரஞ்ஜனன் பொருத்தமான ஆபரணங்களினால் தமது உடலை அலங்கரித்துக் கொண்டார். நறுமண சந்தனத்தைத் தம் உடல் முழுதும் பூசிக்கொண்டு, சுகந்தமலர் மாலைகளைத் தம் மார்பில் அணிந்து கொண்டார். இவ்வாறு அவர் முற்றிலும் புத்துணர்ச்சியுடையவராக மாறினார். பின்னர் தமது அரசியைத் தேடத் தொடங்கினார்.

பதம் 4.26.13
த்ருப்தோ ஹ்ருஷ்ட: ஸுத்ருப்தஸ்ச கந்தர்பாக்ருஷ்ட-மானஸ:
ந வ்ய சஷ்ட வராரோஹாம் க்ருஹிணீம் க்ருஹ-மேதினீம்

த்ருப்த—திருப்தியுற்று; ஹ்ருஷ்ட:—மகிழ்ச்சியுடன்; ஸு-த்ருப்த:—மிகுந்த பெருமை கொண்டு; ச—மேலும்; கந்தர்ப—மன்மதனால்; ஆக்ருஷ்ட—கவரப்பட்டு; மானஸ:—அவரது மனம்; ந—இல்லை; வ்யசஷ்ட—முயலுதல்; வர-ஆரோஹாம்—உயர்ந்த உணர்ச்சி; க்ருஹிணீம்—மனைவி; க்ருஹ-மேதினீம்—பௌதீக வாழ்வில் தன் கணவனை வைத்திருப்பவள்.

உணவு உண்டு தனது தாகம் தணிந்த பின் மன்னர் புரஞ்சனன் தம் மனமெங்கும் மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்தார். உயர் உணர்விற்கு உயர்த்தப்படுவதற்குப் பதிலாக அவர் மன்மதனால் கவரப்பட்டார். தன்னை இல்லற வாழ்வில் மிகவும் திருப்தியுடன் வைத்திருக்கும் தன் மனைவியைத் தேடும் ஆசையினால் அவர் உந்தப்பட்டார்.

பதம் 4.26.14
அந்த புர-ஸ்திரியோ ‘ப்ருச்சத் விமனா இவ வேதிஷத்
அபி வ: குஸலம் ராமா: ஸேஸ்வரீணாம் யதா புரா

அந்த:புர—அந்தப்புரம்; ஸ்த்ரிய:—பெண்கள்; அப்ருச்சத்—அவர் கேட்டார்; விமனா:—மிகுந்த உணர்ச்சியுடையவராக; இவ—போன்று; வேதிஷத்—ஓ மன்னர் பிராசீன பர்ஹியே; அபி—இருந்தாலும்; வ—உங்களுடைய; குஸலம்—நல்லதிர்ஷ்டம்; ராமா:—ஒ, அழிகிற்சிறந்த பெண்களே; ஸ-ஈஸ்வரீணாம்—உங்கள் தலைவியுடன்; யதா:—போன்று; புரா—முன்பு.

அச்சமயம் மன்னர் புரஞ்சனன் சிறிது உணர்ச்சிவயப்பட்டவராகக் காணப்பட்டார். அவர் அந்தப்புரத்திலுள்ள பெண்களிடம் கேட்டார்: அன்பிற்குரிய அழகிய பெண்களே, நீங்களும், உங்கள் தலைவியும் முன்பு போல் மிக்க மகிழ்ச்சியுடனிருக்கின்றீர்களா அல்லது இல்லையா?

பதம் 4.26.15
ந ததைதர்ஹி ரோசந்தே க்ருஹேஷூ க்ருஹ-ஸம்பத:
யதி ந ஸ்யாத் க்ருஹே மாதா பத்னீ வா பதி-தேவதா
வ்யங்கே ரத இவ ப்ராஜ்ஞ: கோ நாமாஸீத தீனவத்

ந—இல்லை; ததா—முன்புபோல்; ஏதர்ஹி—இந்த நேரத்தில்; ரோசந்தே—இன்புறுதல்; க்ருஹேஷூ—இல்லத்தில்; க்ருஹ-ஸம்பத—இல்லத்திற்குரியப் பொருட்கள் அனைத்தும்; யதி—இருந்தும்; மாதா—அன்னை; பத்னீ—மனைவி; வா—அல்லது; பதி-தேவதா—கணவனிடம் பக்தி செலுத்துதல்; வ்யங்கே—சக்கரமின்றி; ரதே—இரதத்தில்; இவ—போன்று; ப்ராஜ்ஞ—கற்றறிந்த மனிதன்; க:—யார் அந்த; நாம—உண்மையில்; ஆஸீதா—இருப்பான்; தீன-வத்—துன்பத்திற்காளான உயிரினம் போல்.

மன்னர் புரஞ்ஜனன் கூறினார்: என் அரண்மனையில் உள்ள பொருட்கள் முன்புபோல் என்னைக் கவரவில்லையே, இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அன்பான அன்னையும், அரவணைக்கும் மனைவியும் இல்லாத வீடு சக்கரங்கள் இல்லாத இரதத்திற்குச் சமமாகும். ஓடாத இரதத்தின் மேல் எந்த மூடன் அமர்ந்திருப்பான்?

பதம் 4.26.16
க்வ வர்ததே ஸா லலனா மஜ்ஜந்தம் வ்யஸனார்ணவே
யா மாம் உத்தரதே ப்ரஜ்ஞாம் தீபயந்தி பதே பதே

க்வ—எங்கே; வர்ததே—இப்போது இருக்கின்றான்; ஸா—அவன்; லலனா—பெண்; மஜ்ஜந்தம்—மூழ்கும் போது; வ்யஸன-அர்ணவே—அபாயகரமான கடலினுள்; யா—யார்; மாம்—என்னை; உத்தரதே—காப்பாற்றுவார்; ப்ரஜ்ஞாம்—நல்ல புத்தி; தீபயந்தி—ஒளியேற்றுதல்; பதே பதே—ஒவ்வொரு அடியிலும்.

நான் அபாயக் கடலினுள் மூழ்கும் போதெல்லாம் என்னைக் காக்கின்ற அந்த எழில் மங்கையின் இருப்பிடம் எதுவென்று எனக்கு அருள்கூர்ந்து உரைப்பீராக. எனது ஒவ்வொரு அடியிலும் எனக்கு நற்புத்தியை அளித்து அவள் எப்போதும் என்னைக் காப்பவள் ஆவாள்.

பதம் 4.26.17
ராமா ஊசு:
நர நாத ந ஜானீமஸ் த்வத்-ப்ரியா யத் வ்யவஸ்யதி
பூதலே நிரவஸ்தாரே ஸயானாம் பஸ்ய ஸத்ரு-ஹன்

ராமா: ஊசு:—பெண்கள் இவ்வாறு கூறினர்; நர-நாத—ஓ, மன்னரே; ந ஜானீம:—எங்களுக்குத் தெரியவில்லை; த்வத்-ப்ரியா—உமது அன்பிற்குரிய; யத் வ்யவஸ்யதி—இதுபோன்ற வாழ்க்கையினை அவள் ஏன் மேற்கொண்டாள் என்று; பூ-தலே—நிலத்தின் மேல்; நிரவஸ்தாரே—படுக்கை ஏதுமின்றி; ஸயானாம்—படுத்திருக்கிறாள்; பஸ்ய—பார்ப்பீர்; ஸத்ரு-ஹன்—ஓ, பகைவரைக் கொல்வோயே,

பெண்கள் அனைவரும் மன்னரிடம் கூறினர்: ஓ, மக்களின் தலைவரே, உமது அன்பு மனைவி இப்படிப்பட்ட ஓர் வாழ்க்கையினை ஏன் மேற்கொண்டாள் என்று நாங்கள் அறியோம். ஓ, பகைவரைக் கொல்வோயே, அருள்கூர்ந்து பாருங்கள், அவள் பஞ்சனையை மறந்து வெறுந்தரையின் மீது படுத்திருக்கின்றாள். அவள் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறாள் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பதம் 4.26.18
நாரத உவாச
புரஞ்ஜன: ஸ்வ-மஹிஷீம் நிரீக்ஷ்யாவதுதாம்புவி
தத் ஸங்கோன்மதித-ஜஞானோ வைக்லவ்யம் பரமம் யயௌ

நாரத: உவாச—மாமுனிவர் நாரதர் கூறினார்; புரஞ்சன:—மன்னர் புரஞ்சனன்; ஸ்வ-மஹிஷீம்—அவரது அரசி; நிரீக்ஷ்ய—கண்டபிறகு; அவதுதாம்—ஒரு பிச்சைக்காரியைப் போல்; புவி—தரையின் மேல்; தத்—அவள்; ஸங்க—தொடர்பினால்; உன்மதித—ஊக்கமளிக்கப்பட்டு; ஜ்ஞான:—அவரது ஞானம்; வைக்லவ்யம்——குழம்பியது; பரமம்—உயர்ந்த; யயௌ—அடைதல்.

மாமுனிவர் நாரதர் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னர் பிராசீனபர்ஹியே, ஒரு பிச்சைக்காரியைப்போல் தன் மனைவி நிலத்தின் மீது படுத்திருப்பதைக் கண்ட மன்னர் புரஞ்ஜனன் மிகுந்த குழப்பத்திற்காளானார்.

பதம் 4.26.19
ஸாந்த்வயன் ஸ்லக்ஷ்ணயா வாசா ஹ்ருதயேன விதூயதா
ப்ரேயஸ்யா: ஸ்நேஹ-ஸம்ரம்ப லிங்கம் ஆத்மனி நாப்யகாத்

ஸாந்த்வயன்—சாந்தப்படுத்துதல்; ஸ்லக்ஷ்ணயா— இனிமையான; வாசா—வார்த்தைகள்; ஹ்ருதயேன—ஓர் இதயத்துடன்; விதூயதா—மிகவும் மனம் வருந்தி; ப்ரேயஸ்யா:—தனது அன்பிற்குரிய; ஸ்நேஹ—பாசத்திலிருந்து; ஸம்ரம்ப—சினத்தின்; லிங்கம்—அடையாளம்; ஆத்மனி—அவள் இதயத்தில்; ந—இல்லை; அப்யகாத்—எழுதுவது.

வருந்திய மனதுடன் மன்னர் மிகவும் இனிமையான வார்த்தைகளினால் தம் மனைவியிடம் உரையாடத் தொடங்கினார். அவர் வருத்தத்தினால் நிரப்பப்பட்டுத் தம் மனைவியை அமைதிப்படுத்த முயன்ற போதிலும், அன்பு மனைவியின் இதயத்தில் காதலினால் எழுந்த சினத்திற்கான அடையாளம் எதனையும் அவரால் அவளிடம் காண முடியவில்லை.

பதம் 4.26.20
அநுநின்யே ‘த ஸனகைர் வீரோ ‘நுநய-கோவித:
பஸ்பர்ஸ பாத-யுகலம் ஆஹ சோத்ஸங்க-லாலிதாம்

அநுநின்யே—புகழத் தொடங்குதல்; அத—இவ்வாறு; ஸனகை—பொதுவாக; வீர—வீரர்; அநுநய-கோவித:—புகழ்ந்து பேசுவதில் மிகவும் தேர்ந்தவர்; பஸ்பர்ஸ—தொட்டார்; பாத-யுகலம்—இரு பாதங்களையும்; ஆஹ—அவர் கூறினார்; ச—மேலும்; உத்ஸங்க—அவர் மடியின் மீது; வாலிதாம்—இவ்வாறு அணைத்துக்கொண்டு

புகழ்ந்து பேசுவதில் மன்னர் மிகவும் தேர்ச்சி பெற்றவர் ஆதலினால் அவர் தம் அரசியைச் சமதானப்படுத்துவதற்காக மிகவும் அமைதியாகப் பேசத் தொடங்கினார். முதலில் அவர் அவளது இரு பாதங்களையும் தொட்டார். பிறகு மெதுவாக அவளை அணைத்து எடுத்து தன் மடியின் மீது வைத்துக் கொண்டு பின் வருவனவற்றைக் கூறத் தொடங்கினார்.

பதம் 4.26.21
புரஞ்ஜன உவாச
நூனம் த்வ க்ருத-புண்யாஸ்தே ப்ருத்யா ஷே’வ ஈஸ்வரா: ஸுபே
க்ருதாக: ஸ்வ ஆத்மஸாத் க்ருத்வா ளிக்ஷா-தண்டம்ந யுஞ்ஜதே

புரஞ்ஜன:-உவாச—புரஞ்ஜனன் கூறினார்; நூனம்—நிச்சயமாக; து—பிறகு; அக்ருத-புண்யா:—புண்ணியமற்றவர்கள்; தே—அந்த; ப்ருத்யா:—வேலைக்காரர்கள்; யேஷு—எவர்களுக்கு; ஈஸ்வரா:— எஜமானர்கள்; ஸுபே:—ஓ, மங்கலகரமானவளே; க்ருத-ஆக: ஸு—ஒரு தவறு செய்தால்; ஆத்மாஸத்—தங்களுக்குரியதாக ஏற்றுக் கொண்டு; க்ருத்வா—செய்கின்ற; ஸிக்ஷா—உபதேசம்; தண்டம்—தண்டனை; ந யுஞ்ஜதே—அளிப்பதில்லை.

மன்னர் புரஞ்ஜனன் கூறினார்: எனதன்பிற்குரிய எழில் மனைவியே, ஒரு முதலாளி ஒரு வேலைக்காரனைத் தன்னுடைய ஆளாக ஏற்றுக் கொள்ளும் பொழுது, அவனது குற்றங்களுக்காக அவனைத் தண்டிக்கவில்லையென்றால் அவ்வேலைக்காரன் தீவினை செய்தோனாகவே கருதப்படுதல் வேண்டும்.

பதம் 4.26.22
பரமோ ‘நுக்ரஹோ தண்டோ ப்ருத்யேஷு ப்ரபுணார்பித:
பாலோ ந வேத தத் தன்வி பந்து-க்ருத்யம் அமர்ஷண:

பரம:—உயர்ந்த; அநுக்ரஹ:—கருணை; தண்ட—தண்டனை; ப்ருத்யேஷு—வேலைக்காரர்களின் மீது; ப்ரபுணா—எஜமானனால்; அர்பித:—அளிக்கப்படும்; பால:—முட்டாள்தனமானது; ந—இல்லை; வேத—அறிதல்; தத்—அந்த; தன்வி—ஓ, மெல்லிய தேகத்தையுடையவளே; பந்து-க்ருத்யம்—ஒரு நண்பனின் கடமை; அமர்ஷண—சினம்.

எனது அன்பிற்குரிய மென்மையானவளே, ஒரு முதலாளி தன் வேலைக்காரனைத் தண்டிக்கும் பொழுது அவ்வேலைக்காரன் அதனைச் சிறந்த கருணை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக ஆத்திரங்கொள்வோன் ஒரு மூடனாகவே இருத்தல் வேண்டும். அத்தண்டனை தனது நண்பனின் கடமையென்று அவன் அறிவதில்லை.

பதம் 4.26.23
ஸா த்வம் முகம் ஸுததி ஸுப்ர்வ் அநுராக-பார
வ்ரீடா-விலம்ப-விலஸத்-தஸிதாவலோகம்
நீலாலகாலிபிர் உபஸ்க்ருதம் உன்னஸம் ந:
ஸ்வானாம் ப்ரதர்ஸய மனஸ்விநி வல்கு வாக்யம்.

ஸா—அந்த (நீ, எனது மனைவி); த்வம்—நீ; முகம்—முகம்; ஸ-ததி—அழகிய பற்கள்; ஸு-ப்ரு—அழகிய புருவங்கள்; அநுராக—பற்று; பார—பாரம்; வ்ரீடா—பெண்மைக்குரிய நாணத்தினால்; விலம்ப—கீழே தொங்கும்; விலஸத்—ஒளிர்கின்ற; ஹஸித—புன்னகை; அவலோகம்—பார்வையுடன்; நீல—நீலநிற; அலக—கூந்தல்; அனிபி—வண்டுகள் போன்ற; உபஸ்க்ருதம்—இவ்வாறு எழில்மிக்க; உன்னஸம்—சீரானநாசி; ந—எனக்கு; ஸ்வானாம்—உனக்குரியவனாக இருக்கும்; ப்ரதர்ஸய—அருள்கூர்ந்து காட்டு; மனஸ்விநி—ஓ சிந்தைகவர்ந்த பெண்ணே; வல்கு-வாக்யம்—இனிமையான வார்த்தைகளுடன்.

அன்பு மனையாளே, உனது பற்கள் வரிசையாக அழகுற அமைந்து, உனது கவர்ச்சிமிகு கோலங்கள், உன்னை மதிநலம் வாய்ந்த பெண்ணாத் தோன்றச் செய்கின்றன. அருள்கூர்ந்து உனது ஆத்திரத்தினைத் தவிர்த்து என்மீது கருணை காட்டுவாயாக. உனது புன்னகை பூத்த அழகிய முகத்தினைக் காணும் பொழுதும், கருநீல நிறக் கூந்தலையும், எடுப்பான நாசியினையும் நான் காணும் பொழுதும், உனது இனிய வார்த்தைகளைக் கேட்கும் பொழுதும் நீ மிகுந்த அழகுடையவளாக எனக்குத் தோற்றமளிக்கிறாய். எனக்கு உதவி செய்து என்னை மயக்கவும் செய்வாயாக, நீயே எனது மிகுந்த மரியாதைக்குரிய தலைவியாவாய்.

பதம் 4.26.24
தஸ்மின் ததே தமம் அஹம் தவ வீர-பத்னி
யோ ‘ன்யத்ர பூஸூர-குலாத் க்ருத கில்பிஷஸ்தம்
பஸ்யே ந வீத-பயம் உன்முதிதம் த்ரி லோக்யாம்
அன்யத்ர வை முர-ரிபோர் இதரத்ர தாஸாத்

தஸ்மின்—அவருக்கு; தத—அளிக்கப்படும்; தமம்—தண்டனை; அஹம்—நான்; தவ—உனக்கு; வீர-பத்னி:—ஓ, வீர பத்தினியே; ய:—எவர் ஒருவர்; அன்யத்ர—தவிர; பூ-ஸூர-குலாத்—தேவர்களின் வரிசையில் பூமியில் இருப்போர் (அந்தணர்கள்); க்ருத—செய்தல்; கில்பிஷ:—குற்றம்; தம்—அவனை; பஸ்யே—நான் கண்டால்; ந—இல்லை; வீத—இன்றி; பயம்—அச்சம், உன்முதிதம்—கவலையின்றி; த்ரி-லோக்யாம்—இம்மூன்று லோகங்களிலும்; அன்யத்ர—எங்கும்; வை—உறுதியாக; முர—ரிபோ:—முரனின் பகைவரின் (கிருஷ்ணர்); இதரத்ர—இதற்குமாறாக; தாஸாத்—பணியாளைக் காட்டிலும்;

ஒ, வீர பத்தினியே, உன்னிடம் யாரேனும் தவறிழைத்தனர் என்றால் அதை அன்புடன் கூறுவாயாக. அவன் அந்தண குலத்தைச் சேராதவனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு நான் தகுந்த தண்டனை அளிப்பேன். முரரிபு (கிருஷ்ணர்) வின் தொண்டனைத் தவிர, நான் மூன்று லோகங்களுக்கும் உள்ளும் புறமும் ஒருவரையும் மன்னிக்கமாட்டேன். நான் தண்டிப்பதற்குத் தயாராக இருப்பதினால், உன்னிடம் தவறிழைத்த பிறகு சுதந்திரமாக நடமாட அவனால் முடியாது.

பதம் 4.26.25
வக்த்ரம் ந தே விதிலகம் மலினம் விஹர்ஷம்
ஸம்ரம்ப-பீமம் அவிம்ருஷ்டம் அபேத-ராகம்
பஸ்யே ஸ்தனாவ் அபிஸுசோபஹதௌ ஸுஜாதௌ
பிம்பாதரம் விகத-குங்கும-பங்க-ராகம்

வக்த்ரம்—முகம்; ந—இல்லை; தே—உனது; விதிலகம்—அலங்காரம் ஏதுமின்றி; மலினம்—தூய்மையற்று; விஹர்ஷம்—வாட்டமுற்று; ஸம்ரம்ப—சினத்துடன்; பீமம்—அபாயம்; அவிம்ருஷ்டம்—ஒளியிழந்து; அபேத-ராகம்—பாசமின்றி; பஸ்யே—நான் பார்க்கிறேன்; ஸ்தனௌ—மார்பகங்கள்; அபி—கூட; ஸுசா-உபஹதௌ—கண்ணீரினால் நனைந்திருக்கின்றன; ஸூ–ஜாதௌ—மிகவும் அருமையான; பிம்ப-அதரம்—சிவந்த அதரங்கள்; விகத—இன்றி; குங்கும-பங்க—குங்குமம்; ராகம்—நிறம்.

அன்பு மனைவியே, இன்றுவரை சிந்தூர திலகம் அலங்கரிக்காத உனது எழில் முகத்தை நான் கண்டதில்லை, அதுபோல் இன்று வரை நீ ஒளியிழந்தும், பாசமின்றியும் வாட்டமுற்றும் இருப்பதை நான் கண்டதில்லை. உனது மார்பகங்கள் இரண்டும் உனது கண்ணீரினால் நனைந்திருப்பதையும் இன்றுவரை நான் கண்டதில்லை. கோவை பழத்தைப் போல சிவந்து இருக்கும் உனது அழகிய உதடுகள், தம் சிவந்த நிறத்தை இழந்து இன்றிருப்பது போல் நான் இதற்கு முன்பு என்றும் கண்டதில்லை.

பதம் 4.26.26
தன் மே ப்ரஸீத ஸுஹ்ருத: க்ருத-கில்பிஷஸ்ய
ஸ்வைரம் கதஸ்ய ம்ருகயாம் வ்யஸநாதுரஸ்ய
கா தேவரம் வஸ-கதம் குஸுமாஸ்த்ர-வேக
விஸ்ரஸ்த- பெளம்ஸ்னம் உஸதீ ந பஜேத க்ருத்யே

தத்—ஆகையினால்; மே—எனக்கு; ப்ரஸீத—அன்புடன் இருப்பாயாக; ஸு-ஹ்ருத:—நெருங்கிய நண்பன்; க்ருத-கில்பிஷஸ்ய—பாவச் செயல்களைச் செய்திருக்கிறேன்; ஸ்வைரம்—சுதந்திரமாக; கதஸ்ய—அவர் சென்று; ம்ருகயாம்—வேட்டையாடுதல்; வ்யஸன-ஆதுரஸ்ய—பாவ ஆசையினால் பாதிக்கப்பட்டு; கா:—எந்தப்பெண்; தேவரம்—கணவனை; வஸ-கதம்:—அவள் கட்டுப்பாட்டின்கீழ்; குஸும-அஸ்த்ர-வேக—மன்மதன் கணையினால் துளைக்கப்பட்டு, விஸ்ரஸ்த—சிதறுதல்; பௌம்ஸ்னம்—அவரது பொறுமை; உஸதீ—மிக்க அழகுடைய; ந—இல்லை; பஜேத—அணைக்க; க்ருத்யே:—முறையான கடமையில்.

அன்பான அரசியே, எனது பாவம் நிறைந்த ஆசைகளினால் உன்னிடம் கேட்காமல் நான் காட்டிற்கு வேட்டையாடச் சென்று விட்டேன். ஆகையினால் உனக்குக் குற்றமிழைத்து விட்டேன் என்றே கூறலாம். ஆயினும் உனது மிகவும் நெருங்கிய துணைவனாக என்னைக் கருதினாயென்றால் இன்னும் மிகுந்த இனிமையுடன் என்னைக் கருதவேண்டும் நான் அதிகமான இழப்புக்கு ஆளாகியிருக்கிறேன். நான் காம இச்சையுடையவனாக இருக்கிறேன். மேலும் தனது ஆசைக் கணவனுடன் இணைய மறுத்து அவனை நீங்கிவிடும் அழகிய மங்கை எங்கே இருக்கிறாள்?


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “மன்னர் புரஞ்ஜனன் காட்டிற்கு வேட்டையாடச் செல்லுதலும் அரசியின் சினமும்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தாறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare