அத்தியாயம் – 24
சிவபெருமான் பாடிய துதிப்பாடல்
பதம் 4.24.1
மைத்ரேய உவாச
விஜிதாஸ்வோ ‘திராஜாஸீத் ப்ருது-புத்ர: ப்ருது-ஸ்ரவா:
யாவீயோப்யோ ‘ததாத் காஷ்டா ப்ராத்ருப்யோ ப்ராத்ரு-வத்ஸல:

மைத்ரேய உவாச—மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; விஜிதாஸ்வ:—விஜிதாஸ்வன் என்ற பெயரில்; அதிராஜா—பேரரசர்; ஆஸீத்—ஆனால்; ப்ருத-புத்ர:—மகாராஜா பிருதுவின் மைந்தன்; ப்ருது-ஸ்ரவா:—உயர்ந்த செயல்களின்; யவீயோ-ப்ய:—தன் இளைய சகோதரர்களுக்கு; அததாத்—அளித்தார்; காஷ்டா:—பல்வேறு திசைகள்; ப்ராத்ருப்ய:—தன் சகோதரர்களுக்கு; ப்ராத்ரு-வத்ஸல:—சகோதரர்களிடம் பாசம் மிகுந்தவர்.

மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்தார்: பிருது மகாராஜாவின் புத்திரரான விஜிதாஸ்வன் என்பவர் தன் தந்தையைப்போலவே புகழ் பெற்றவர், அவர் தன் தந்தைக்குப் பின் பேரரசாகி தான் அளவு கடந்து நேசிக்கும் தன் இளைய சகோதரர்களிடம் இப்பூமியின் பல்வேறு பகுதிகளைக் கவனிக்கும் பொறுப்பினை ஒப்படைத்தார்.

பதம் 4.24.2
ஹர்யக்ஷாயாதிஸத் ப்ராசீம் தூம்ரகேஸாய தக்ஷிணாம்
ப்ராதீசீம் வ்ருக-ஸம்ஜ்ஞாய துர்யாம் த்ரவிணஸே விபு:

ஹர்யக்ஷாய—ஹர்யக்ஷனுக்கு; அறிஸத்—கொடுத்தார்; ப்ராசீம்—கிழக்குக்கு; தூம்ரகேஸாய—தூம்ரகேஸனுக்கு; தக்ஷிணாம்—தெற்குப் பகுதியினை; ப்ரதீசீம்—மேற்ப்பகுதி; வ்ருக-ஸம்ஜ்ஞாய—விருகன் என்னும் தம்பிக்கு; துர்யாம்—வடக்குப்பகுதி; த்ரவிணஸே—மற்றொரு இளவலான திரவணன் என்பவருக்கு; விபு:—தலைவர்.

மகாராஜா விஜிதாஸ்வன் ஹர்யக்ஷன் என்னும் சகோதரருக்கு கிழக்குப் பகுதியினையும், தூம்ரகேஸ் என்னும் சகோதரருக்குத் தெற்குப் பகுதியினையும், விருகன் என்னும் சகோதரருக்கு மேற்குப் பகுதியினையும், திரவிணன் என்னும் சகோதரருக்கு வடக்குப் பகுதியினையும் அளித்தார்.

பதம் 4.24.3
அந்தர்தான-கதிம் ஸக்ராவ் லப்த்வாந்தர்தான-ஸம்ஜ்ஞீத:
அபத்ய-த்ரயம் ஆதத்த ஸிகண்டின்யாம் ஸீஸம்மதம்

அந்தர்தான—மறைகின்ற தன்மை; கதிம்—உய்தினான்; ஸக்ராத்—தேவேந்திரனிடமிருந்து; லப்த்வா—பெற்றான்; அந்தர்தான—அந்தர்தானன் என்னும் பெயரை; ஸம்ஜ்ஞீத:—பெயரினைப் பெற்றார்; அபத்ய—குழந்தைகள்; த்ரயம்—மூன்று; ஆதத்த—பெற்றெடுத்தல்; ஸிகண்டின்யாம்—அவர் மனைவி ஸிகண்டினீ; ஸீ-ஸம்மதம்—எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

முன்னர் மகாராஜா விஜிதாஸ்வன் தேவலோக அதிபதியான தேவேந்திரனை மகிழ்வித்து அந்தர்தானன் என்னும் சிறப்புப் பெயரினை அவரிடமிருந்து பெற்றார். விஜிதாஸ்வனின் மனைவியின் பெயர் ஸிகண்டினீ என்பது. இவர்கள் இருவருக்கும் மூன்று தன்மைந்தர்கள் பிறந்தனர்.

பதம் 4.24.4
பாலக: பவமானஸ் ச ஸீசிர் இதி அக்னய: புரா
வஸிஷ்ட-ஸாபாத் உத்பன்னா: புனர் யோக-கதிர் கதா:

பாவக:—பாவகன் என்ற பெயரில்; பவமான:—பவமானன் என்ற பெயரில்; ச—மேலும்; ஸீசி:—ஸீசி என்ற பெயரில்; இதி—இவ்வாறு; அக்னய:—அக்கினி தேவர்கள்; புரா—முன்னர்; வஸிஷ்ட—வசிஷ்ட முனிவர்; ஸாபாத்—சாபத்தினால்; உத்பன்னா:—இப்பிறவிபெற்று உள்ளனர்; புன:—மீண்டும்; யோக-கதிம்—உன்னதமானயோகப் பயிற்சியின் எல்லை; கதா:—அடைந்தனர்.

மகாராஜா அந்தர்தானனுக்கு பாவகன், பவமானன் மற்றும் ஸீசி என்று மூன்று மைந்தர்கள். இதற்கு முன்னர் இம்மூவரும் அக்கினி தேவர்களாக விளங்கியவர்கள். மகாமுனிவர் வசிஷ்டரின் சாபத்தினால் இப்பிறவியில் மகாராஜா அந்தர்தானனுக்கு மகன்களாகப் பிறந்துள்ளனர். ஆகையினால் அவர்கள் அக்கினி தேவர்களுக்குரிய அனைத்துச் சக்திகளையும் பெற்றிருந்தனர். அவர்கள் மீண்டும் தேவர்கள் நிலையினை அடைவதற்குரிய உன்னத யோகசக்தியில் எல்லையில்லாத தேர்ச்சிபெற்று விளங்கினார்கள்.

பதம் 4.24.5
அந்தர்தானோ நபஸ்வத்யாம் ஹவிர்தானம் அவிந்தத
ய இந்த்ரம் அஸ்வ-ஹர்தாரம் வித்வான் அபி ந ஜக்நிவான்

அந்தர்தான:—அந்தர்தானன் என்னும் பெயருடைய மன்னர்; நபஸ்வத்யாம்—நபஸ்வதீ என்னும் மனைவிக்கு; ஹவிர்தானம்—ஹவிர்தானன் என்ற பெயரில்; அவிந்தத—அடைந்தார்; ய:—யார்; இந்த்ரம்—தேவேந்திரன்; அஸ்வ-ஹர்தாரம்—தன் தந்தையின் குதிரையைத் திருடியவர்; வித்வான்-அபி—கொல்லவில்லை.

மகாராஜா அந்தர்தானனுக்கு நபஸ்வதீ என்று மற்றொரு மனைவி இருந்தார், அவள் மூலம் ஹவிர்தானன் என்றொரு மகன் பிறந்தான். மகாராஜா அந்தர்தானன் மிகவும் பெருந்தன்மைமிக்கவர். ஆகையினால் தான் அவர் இந்திரன் தன் தந்தையின் வேள்வியில் குதிரையைத் திருடியபொழுதும் அவர் இந்திரனைக் கொல்லவில்லை.

பதம் 4.24.6
ராஜ்ஞாம் வ்ருத்திம் கராதான தண்ட-ஸீல்காதி-தாருணாம்
மன்யமணோ தீர்க-ஸத்த்ர வ்யாஜேன விஸஸர்ஜ ஹ

ராஜ்ஞாம்—அரசர்களின்; வ்ருத்திம்—வாழ்க்கை ஆதாரம்; கர—வரிகள்; ஆதான—வசூலித்துப் பெறுதல்; தண்ட—தண்டனை; ஸீல்க—அபராதம்; ஆதி—போன்றவை; தாருணாம்—மிகவும் கடுமையானவை; மன்யமான:—அதுபோல் நினைத்து; தீர்க—நீண்ட; ஸத்த்ர—வேள்வி; வ்யாஜேன—முறையீட்டினால்; விஸஸர்ஜ—விடுதல்; ஹ—கடந்த காலத்தில்.

சிறந்த ஆற்றல்மிக்க அந்தர்தானன் தன் குடிமக்கள் மீது வரிகள் விதிப்பது அல்லது அவர்கள் குற்றங்களுக்கான அபராதம் விதிப்பது போன்றவற்றை மனமுவந்து செய்யமாட்டார். இதுபோன்ற நிர்வாக நடைமுறைகளிலிருந்து அவர் விலகி பல்வேறு விதமான வேள்விகள் செய்வதில் ஈடுபட்டார்.

பதம் 4.24.7
தத்ராபி ஹம்ஸம் புருஷம் பரமாத்மானம் ஆதிம-த்ருக்
யஜம்ஸ் தல்-லோகதாம் ஆப குஸலேன ஸமாதினா

தத்ரஅபி—அவர் ஈடுபாட்டினையும் பொருட்படுத்தாது; ஹம்ஸம்—தனது உறவினர்களின் துன்பங்களைக் கொல்பவன்; புருஷம்—பரமபுருஷருக்கு; பரமாத்மானம்—மிகவுயர்ந்த பரமாத்மா; ஆத்ம-த்ருக்—ஆத்ம உணர்வினைத் தெரிந்தவன் அல்லது பெற்றவன்; யஜன்—வணங்குவதினால்; தத்-லோகதாம்—அதே உலகை அடைகிறான்; ஆப—எய்துகிறான்; குஸவேன—மிகஎளிதாக; ஸமாதினா—எப்போதும் தன்னை இழந்த நிலையில் வைத்துக்கொண்டு.

மகாராஜா அந்தர்தானன் வேள்வியைச் செய்வதில் ஈடுபட்டிருந்த போதிலும் ஆத்ம உணர்வு பெற்றவர் ஆதலினால் அவர் மிகவும் புத்திசாலித்தனமாக, தனது பக்தர்களின் பயத்தைப் போக்கும் பகவானுக்குப் பக்தித் தொண்டு செய்து வந்தார். இவ்வாறு பரமபுருஷ பகவானைப் பணிந்து வந்த அந்தர்தான மகாராஜா தன்னை மறந்த மகிழ்ச்சி நிலையில் பகவானது உலகத்தை மிகவும் எளிதாக அடைந்தார்.

பதம் 4.24.8
ஹவிர்தானாத் தவிர்தானீ விதுராஸீத ஷட் ஸீதான்
பர்ஹிஷதம் கயம் ஸீக்லம் க்ருஷ்ணம் ஸத்யம் ஜிதவ்ரதம்

ஹவிர்தானாத்—ஹவிர்தானனிடமிருந்து; ஹவிர்தானீ—ஹவிர்தானனின் மனைவி பெயர் ஹவிர்தானியாகும்; விதுர—ஓ விதுரனே; அஸீத—பெற்றெடுத்தாள்; ஷட்—ஆறு; ஸீதான்—மைந்தர்கள்; பர்ஹிஷதம்—பர்ஹிஷதன் என்ற பெயரில்; கயம்—கயன் என்ற பெயரில்; ஸீக்லம்—ஸீக்லன் என்ற பெயரில்; க்ருஷ்ணம்—கிருஷ்ணன் என்ற பெயரில்; ஸத்யம்—சத்யன் என்ற பெயரில்; ஜிதவ்ரதம்—ஜிதவ்ரதன் என்ற பெயரில்.

மகாராஜா அந்தர்தானின் மைந்தன் ஹவிர்தானன் என்பவன். அவனுக்கு ஹவிர்தானீ என்றொரு மனைவியுண்டு. அவள் பர்ஹிஸதன், கயன், ஸீக்லன், கிருஷ்ணன், சத்யன் மற்றும் ஜிதவிரதன் என்ற ஆறு மைந்தர்களை ஈன்றெடுத்தாள்.

பதம் 4.24.9
பர்ஹிஸத் ஸீமஹா-பாகோ ஹாவிர்தானி: ப்ரஜாபதி:
க்ரியா-காண்டேஷீ நிஷ்ணாதோ யோகேஷீ ச குரூத்வஹ

பர்ஹிஸத்—பர்ஹிஸதன் என்ற பெயரினன்; ஸீ-மஹா-பாக:—மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த; ஹாவிர்தானி:—ஹாவிர்தானி என்ற பெயரில்; ப்ரஜா-பதி:—பிரஜாபதி என்னும் பதவி; க்ரியா—காண்டேஷீ—பலன்தரும் செயல் விஷயங்களில்; நிஷ்ணாத:—இணைந்து; யோகேஷீ—யோகப்பயிற்சியில்; ச—மேலும்; குரு-உத்வ:—குருகுலத்தில் சிறந்தவனே.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: எனது அன்பான விதுரனே, ஹவிர்தானனின் ஆற்றல் மிக்க மைந்தனான பர்ஹிஷதன் என்பான் பலன்தரும் வேள்விகள் செய்வதில் நிபுணன் ஆவான். மேலும் அவன் உன்னதமான யோகப்பயிற்சியிலும் தேர்ந்தவன். இவ்வுயர்ந்த தகுதியினால் பிரஜாபதி என்றழைக்கப்பட்டான்.

பதம் 4.24.10
யஸ்யேதம் தேவ-யஜனம் அனுயஜ்ஞம் விதன்வத:
ப்ராசீனாக்ரை: குனஸர் ஆஸீத் ஆஸ்த்ருதம் வஸீதா-தவம்

யஸ்ய—எவருடைய; இதம்—இந்த; தேவ-யஜனம்—வேள்விகளின் மூலம் தேவர்களைத் திருப்திப்படுத்துதல்; அனுயஜ்ஞம்—தொடர்ந்து வேள்வி செய்தல்; விதன்வத:—செயல்படுத்துகின்ற; ப்ராசீன-அக்ரை:—குஸப்புற்களை கிழக்குமுகமாகப் பார்க்கும்படி வைத்தல்; குஸை:—குஸப்புற்கள்; ஆஸீத்—எப்பொழுதும்; ஆஸ்த்ருதம்—பரவலாக; வஸீத-தவம்—பூமியின் மேல்தளம் எங்கணும்.

மகாராஜா பர்ஹிஷதன் இவ்வுலகமெங்கும் அனேக வேள்விகளைச் செய்தார். அவர் குஸப்புற்களை எங்கும் பரப்பி அவற்றின் மேல்பகுதியின் நுனியினைக் கிழக்கு முகமாகப் பார்க்கும்படி வைத்தார்.

பதம் 4.24.11
ஸாமுத்ரீம் தேவதேவோக்தாம் உபயேமே ஸதத்ருதிம்
யாம் வீஷ்ய சாரு-ஸர்வாங்கீம் கிஸோரீம் ஸீஷ்ட்வ-அலங்க்ருதாம்
பரிக்ரமந்தீம் உத்வாஹே சகமே ‘க்னி: ஸீகீம் இவ

ஸாமுத்ரீம்—சமுத்திர ராஜனின் மகன்; தேவ-தேவ-யுக்தாம்—பிரம்ம தேவனால் அறிவுரை வழங்கப்பட்டு; உபயேமே—மண முடித்தான்; ஸதக்ருதிம்—ஸதத்ருதி என்ற பெயரினன்; யாம்—யாரை; வீஷ்ய—பார்வைக்கு; சாரு—மிகவும் கவர்ச்சியானவர்; ஸர்வ-அங்கீம்—உடலின் அங்கங்கள் எல்லாம்; கிஸோரீம்—இளமை மிக்கது; ஸீஷ்டு—போதுமானது; அவங்க்ருதாம்—அணிமணிகளால் அலங்கரிக்கப்பட்டு; பரிக்ரமந்தீம்—சுற்றிவருதல்; உத்வாஹே—சுயம்வர விழாவில்; சகமே—கவர்ந்து; அக்னி:—அக்கினி தேவன்; ஸீகீம்—ஸீகீ என்பவளுக்கு; இவ—போல.

இனிமேல் பிராவீனபர்ஹி என்று அழைக்கப்படும் மகாராஜா பர்ஹிஷதன், ஸதத்ருதி என்னும், சமுத்திரராஜனின் மகளை மணந்து கொள்ளுமாறு பிரம்மதேவனால் ஆணையிடப்பட்டார். அவர் மிகுந்த அழகும் இளமையும் வாய்ந்தவனாக இருந்தார். அவள் கண்ணைக் கவரும் ஆடை அணிகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டு சுயம்வர மண்டபத்தினைச் சுற்றிவந்தாள்; அப்படி வரும் பொழுது அவள் அக்னி தேவனை அதிகமாகக் கவர்ந்தாள், முன்பு ஸீகீ என்பவனை அடைய எத்தனை மோகங் கொண்டாளோ அதே போல் ஸதத்ருதியின் மீதும் இப்போது மோகம் கொண்டவள் ஆனாள்.

பதம் 4.24.12
விபுதாஸீர கந்தர்வ முனி ஸித்த நரோரக:
விஜிதா: ஸீர்யயா திக்ஷ க்வணயந்த்யைவ நூபுரை:

விபுத—கற்ற; அஸீர—அசுரர்கள்; கந்தர்—கந்தர்வலோகத்தைச் சேர்ந்தவர்கள்; முனி—முனிவர்கள்; ஸித்த—ஸித்த லோகத்தைச் சேர்ந்தவர்கள்; நர—பூலோகத்தைச் சேர்ந்த மனிதர்கள்; உரகா:—நாக லோகத்தைச் சேர்ந்தவர்கள்; விஜிதா:—கவரப்பட்டனர்; ஸீர்யயா—புது மணமகளினால்; திக்ஷீ—எல்லாப் பக்கங்களிலும்; க்வண யந்த்யா—ஓசை; ஏவ—மட்டும்; நூபுரை:—கால்சிலம்புகளினால்.

ஸதத்ருதியின் திருமணம் இவ்வாறு நடைபெறும் வேளையில், அசுரர்கள், கந்தர்வலோகத்தைச் சேர்ந்தவர்கள், மகாமுனிவர்கள், ஸீத்த லோகத்தைச் சேர்ந்தவர்கள், பூலோகத்தைச் சேர்ந்தவர்கள், மற்றும் நாகலோகத்தைச் சேர்ந்தவர்கள் போன்ற உயர்ந்தவர்கள் எல்லாம் அவள் கால் சிலம்பின் ஒசையினால் கவரப்பட்டனர்.

பதம் 4.24.13
ப்ராசீனபர்ஹிஷ: புத்ரா: ஸதத்ருத்யாம் தஸாபவன்
துல்ய-நாம-வ்ரதா: ஸர்வே தர்ம-ஸ்நாதா: ப்ரசேதஸ:

ப்ராசீனபர்ஹிஷ:—மன்னர் பிராசீனபர்ஹி; புத்ரா—புத்திரர்கள்; ஸதத்ருத்யம்—ஸதத்ருத்தியின் கருப்பையிலிருந்து; தஸ-பத்து:-அபவன்—வெளிப்பட்டனர்; துல்ய—சமமாக; நாம்—பெயர்; வ்ரதா:—விரதம்; ஸர்வே—எல்லாம்; தர்ம—சமயநிலை; ஸ்நாதா:—முற்றிலும் இணைந்ததில்; ப்ரசேதஸ்ய:—பிரசேதர்கள் என்று அனைவரும் அழைக்கப்பட்டனர்.

ஸதத்ருத்தியின் வயிற்றிலிருந்து மன்னர் பிராசீனபர்ஹிப் பத்துப் புத்திரர்களை ஈன்றெடுத்தார். அவர்கள் அனைவரும் தர்மவான்களாக விளங்கினர். அவர்கள் அனைவரும் பிரசேதர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பதம் 4.24.14
பித்ராதிஷ்டா: ப்ரஜா-ஸர்கே தபஸே ‘ர்ணவம் ஆலிஸன்
தஸ-வர்ஷ-ஸஹஸ்ராணி தபஸார்சம்ஸ் தபஸ்-பதிம்

பித்ரா—தந்தையினால்; ஆதிஷ்டா:—கட்டளையிடப்பட்டு; ப்ரஜா-ஸர்கே—குழந்தைகளைப் பெறும் விஷயத்தில்; தபஸே—தவம் மேற்கொள்ளுதல்; அர்ணவம்—சமுத்திரத்தில்; ஆலிஸன்—நுழைந்தனர்; தஸ-வர்ஷ—பத்து வருடங்கள்; ஸஹஸ்ராணி—அந்த ஆயிரங்கள்; தபஸா—தங்கள் தவத்தினால்; ஆர்சன்—பிரார்த்தித்தனர்; தப:—தவத்தின்; பதிம் நாயகன்.

இப்பத்துப் பிரசேதர்களும் மணமுடித்துப் பிள்ளைகளைப் பெற அவர்கள் தந்தையினால் கட்டளையிடப்பட்ட பொழுது அவர்கள் அனைவரும் கடலினுள் புகுந்து பத்தாயிரம் ஆண்டுகள் துறவறங்களையும் தவங்களையும் மேற்கொண்டனர். இவ்வாறு அவர்கள் எல்லாத் தவங்களின் நாயகனான முழுமுதற் கடவுளைப் பிரார்த்தித்தனர்.

பதம் 4.24.15
யத் உக்தம் பதி த்ருஷ்டேன கிரிஸேன ப்ரஸீததா
தத் த்யாயந்தோ ஜபந்தஸ்ச பூஜயந்தஸ் ச ஸம்யதா:

யத்—அந்த; உக்தம்—சொன்ன; பதி—வழியில்; த்ருஷ்டேன—சந்திக்கும் பொழுது; கிரிஸேன—சிவபெருமான்; ப்ரஸீதா—மிகவும் திருப்தியுற்று; தத்—அந்த; த்யாயந்த:—தியானம்; ஜபந்த: ச—ஜெபம்; பூஜயந்-த: ச—பிரார்த்தனையும்; ஸம்யத:—முழுக்கட்டுப்பாட்டுடன்

பிராசீனபர்ஹியின் புதல்வர்கள் அனைவரும் தவம் செய்வதற்காக வீட்டைவிட்டுப் போகும் பொழுது சிவபெருமானைச் சந்தித்தார்கள், அவர் அவர்களின் மீது கொண்ட கருணையினால் அவர்களுக்கு முழுமெய்ப்பொருளைப் பற்றி அறிவுரைகளின்படியே அவற்றை முழு ஈடுபாட்டுடன் ஓதவும் பிரார்த்திக்கவும் செய்தனர்.

பதம் 4.24.16
விதுர உவாச
ப்ரசேதஸாம் கிரித்ரேண யதாஸீத் பதி ஸங்கம:
யத் உதாஹ ஹர: ப்ரீதஸ் தன்னோ ப்ரஹ்மன் வதார்தவத்

விதுர: உவாச—விதுரர் கேட்டார்; ப்ரசேதஸாம்—பிரசேதர்கள் அனைவரும்; கிரித்ரேன—சிவபெருமானால்; யதா—போன்று; ஆஸீத்—அது; பதி—வழியில்; ஸங்கம:—சந்தித்து; யத்—எது; உதஆஹ—சொல்லப்பட்டது; ஹர:—அரனாகிய சிவபெருமான்; ப்ரீத:—மகிழ்வடைந்து; தத்—அந்த; ந:—நமக்கு; ப்ரஹ்மன்—அந்தணரில் சிறந்தோரே; வத—சொல்வீராக; அர்த-வத்—தெளிவான விளக்கத்துடன்.

விதுரர் மைத்ரேயரிடம் எனது அன்பிற்குரிய அந்தணரே பிரசேதர்கள் வழியில் சிவபெருமானை ஏன் சந்தித்தனர்? இது எவ்வாறு நேர்ந்தது என்றும், சிவபெருமான் அவர்களிடம் ஏன் மனம் மகிழ்வுற்றார் என்றும், அவர்களுக்கு எவ்வாறு அறிவுரைகள் வழங்கினார் என்றும் கருணை கொண்டு எனக்கு விளக்குவீராக. நிச்சயமாக அவர் உரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கும் ஆதலினால் அவற்றை விளக்கி அருள்வீராக.

பதம் 4.24.17
ஸங்கம: கலு விப்ரருஷே ஸிவேனேஹ ஸரீரிணாம்
துர்லபோ முனயோ தத்யுர் அஸங்காத் யம் அபீப்ஸிதம்

ஸங்கம:—சங்கமம்; கலு—நிச்சயம்; விப்ர-ருஷே—அந்தணரில் சிறந்தோரே; ஸிவேன—சிவபெருமானுடன்; இஹ—இவ்வுலகில்; ஸரீரிணாம்—ஜட உடல்களைப் பெற்றவர்கள்; துர்லப:—மிக அரிது; முனய:—மகாமுனிவர்கள்; தத்யு:—தியானத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டோர்; அஸங்காத்—எவற்றின் மீதும் உள்ள பற்றுக்களை அறுப்போர்; யம்—எவருக்கு; அபீப்ஸிதம்—ஆசை கொண்டு.

மகான் விதுரர் தொடர்ந்து கூறினார்: ஓ, அந்தணரில் சிறந்தவரே, ஜட உடல் பெற்று இவ்வுலகில் வாழும் உயிர்கள் சிவபெருமானோடு தொடர்பு கொள்வது என்பது இயலாத ஒன்று. பௌதீகப் பற்றுக்கள் அனைத்தையும் விட்டு எப்போதும் அவரோடு தொடர்பு கொள்வதற்கு தியானங்களில் ஈடுபட்டிருக்கும் மகாமுனிவர்களுக்குக் கூட அவர் தொடர்பு இயலாததாயிற்றே.

பதம் 4.24.18
ஆத்மாராமோ ‘பி யஸ்த்வ அஸ்ய லோக-கல்பஸ்ய ராதஸே
ஸக்த்யா யுக்தோ விசரதி கோரயா பகவான் பவ

ஆத்ம-ஆராம:—சுயதிருப்தியுடைவராக; அபி—அவர் இருந்தாலும்; ய:—யார்; து—ஆனால்; அஸ்ய—இந்த; லோக—பௌதீக உலகில்; கர்பஸ்ய—வெளிப்படும் பொழுது; ராதஸே—அதன் தோற்றத்திற்கு உதவும் விஷயத்தில்: ஸக்த்யா—சக்திகள்; யுக்த:—ஈடுபடுகின்ற; விசரதி—அவர் செயல்படுகிறார்; கோரயா—மிகவும் பயங்கரமான; பகவான்—கடவுள்; பவ:—சிவபெருமான்.

பகவான் விஷ்ணுவிற்கு அடுத்த நிலையில் சுயதிருப்தியுடைய மிகவும் சக்திவாய்ந்த தேவர் சிவபெருமான் ஆவார். இப்பௌதீக உலகில் அவர் வேண்டுவது எதுவும் இல்லை. அப்படியிருந்தும் இப்பௌதீக உலகில் இருப்பவர்களுக்காக அவர் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் சலியாது தன்னை தொழிற்படுத்திக் கொண்டேயிருப்பார். அவரோடு எப்பொழுதும் இருபெரும் பயங்கர சக்திகளான காளி தேவியும் துர்காதேவியும் உடன் இருப்பார்கள்.

பதம் 4.24.19
மைத்ரேய உவாச
ப்ரசேதஸ: பிதுர் வாக்யம் ஸிரஸாதாய ஸாதவ:
திஸம் ப்ரதீசீம் ப்ரயயுஸ் தபஸி ஆத்ருத-சேதஸ:

மைத்ரேய: உவாச—மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து பேசலானார்; ப்ரசேதஸ:—மன்னர் பிராசீனபர்ஹியின் எல்லாப் புத்திரர்களும்; பிது:—தந்தையின்; வாக்யம்—வார்த்தைகள்; ஸிரஸா—சிரமேற்கொண்டு; ஆதாய—சம்மதித்து; ஸாதவ:—எல்லாப் புனிதங்களும்; திஸம்—திசை; ப்ரதீசம்—மேற்க; ப்ரயயு:—சென்றனர்; தபஸி—தவத்தில்; ஆத்ருத—ஆழ்ந்த கவனத்துடன் ஒத்துக்கொண்டு; சேதஸ:—இதயத்தில்.

மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்தார்: எனது அன்பான விதுரனே, தங்களது புனிதமான தன்மையினால் பிராசீனபர்ஹியின் எல்லாப் புதல்வர்களும் தம் தந்தையின் வார்த்தைகளை உளப்பூர்வமாக ஒத்துக் கொண்டனர். இவ்வார்த்தைகளைத் தம் சிரங்களில் மேல் தாங்கித் தங்கள் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக மேற்குத்திசையினை நோக்கிப் பயணப்பட்டனர்.

பதம் 4.24.20
ஸ ஸமுத்ரம் உபவிஸ்தீர்ணம் அபஸ்யன் ஸீமஹத் ஸர:
மஹன்-மன இவ ஸ்வச்சம் ப்ரஸன்ன-ஸலிலாஸயம்

ஸ-ஸமுத்ரம்—கடலிற்கு வெகு அருகில்; உப—சற்றேறத்தாழ; விஸ்தீர்ணம்—மிகுந்த நீளமும் அகலமும் உடைய; அபஸ்யன்—அவர்கள் பார்த்தனர்; ஸீ-மஹத்—மிகவுயர்ந்த; ஸர:—நீர்த்தேக்கம்; மஹத்—உயர்ந்த ஆத்மா; மன:—மனம்; இவ—போல; ஸீ-அச்சம்—தெளிவு; ப்ரஸன்ன—ஆனந்தம்; ஸலில—தண்ணீர்; ஆஸயம்—சரண்புகுதல்.

இவ்வாறு பயணம் செய்யும்பொழுது பிரசேதர்கள் கடலைப் போல் பெரிதான ஓர் நீர்த் தேக்கத்தினைக் கண்டார்கள். ஓர் உயர்ந்த ஆத்மாவின் மனதினைப்போல் அது அமைதியும் அடக்கமும் மிக்கதாக இருந்தது. மேலும் அதில் வாழ்கின்ற, நீர்வாழ் உயிர்கள், அந்நீர்த்தேக்கத்தின் பாதுகாவலின் கீழ் மிகவும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வது போல் தோன்றின.

பதம் 4.24.21
நீல-ரக்தோத்பலாம் போஜ கஹ்லாரேந்தீவராகரம்
ஹம்ஸ-ஸாரஸ-சக்ராஹ்வ காரண்டவ—நிகூஜிதம்

நீல—நீலம்; ரக்த—சிகப்பு; உத்ப—தாமரை; அம்ப: ஜ—நீரில் பிறந்தவை; கஹ்லார—தாமரையில் மற்றோர் வகை; இந்தீவர—இதுவும் தாமரையில் பிறிதோர் வகை; ஆகரம்—சுரங்கம்; ஹம்ஸ—அன்னங்களும்; ஸாரஸ—நாரைகளும்; சக்ரவாஹ—சக்கரவாகப் பறவைகளும்; காரண்டவ—பெயருடையப் பறவைகள்; நிகூஜிதம்—அவற்றின் ஒலியினால் அதிர்ந்தது.

அந்த ஏரியில் பல்வேறு விதமான தாமரைப் பூக்கள் இருந்தன. சில பூக்கள் நீலமாகவும் சில பூக்கள் சிகப்பாகவும் இருந்தன. சில பூக்கள் இரவிலும் சில பூக்கள் காலையிலும் இந்தீவிரத் தாமரைகள் மாலையிலும் மலர்ந்தன. இவைகள் எல்லாம் சேர்ந்து அந்த ஏரியில் உள்ள தண்ணீரை மறைந்து அந்த ஏரியே இதுபோன்ற பூக்களின் சுரங்கம் போல் தோன்றச் செய்தது. இதற்கும் மேலாக அதன் கரையில் அன்னம், நாரை, சக்கரவாகம், காரண்டவம் மற்றும் பல எழில்மிக்க நீர்ப்பறவைகள் எல்லாம் திரிந்து கொண்டிருந்தன.

பதம் 4.24.22
மத்த -ப்ரமர -ஸெனஸ்வர்ய ஹ்ருஷ்ட-ரோம-லதாங்க்ரிபம்
பத்ம-கோஸ-ரஜோ திக்ஷ விக்ஷிபத்-பவனோத்ஸவம்

மத்த—பித்துப்பிடித்த; ப்ரமர—தும்பிகள்; ஸென-ஸ்வர்ய—மிகுந்த ரீங்காரத்துடன்; ஹ்ருஷ்ட—மகிழ்ச்சியுடன்; ரோம—உடலில் உள்ள ரோமங்கள்; லதா—கொடிகள்; அகங்க்ரியம்—மரங்கள்; பத்ம—தாமரைமலர்கள்; கோஸ—மலரின் இதழ் அடுக்கு; ரஜ:—மகரந்தத்துகள்; திக்ஷீ—எல்லாத் திசைகளிலும்; விக்ஷிபத்—பரவியதால்; பவன—காற்று; உத்ஸவம்—விழா.

அந்த ஏரியின் கரையில் ஏராளமான மரங்களும், கொடிகளும் இருந்தன. மதுவுண்டு மயங்கிய தும்பிஇன வண்டுகள் ரீங்காரமிட்டும் பறந்து கொண்டிருந்தன. இவ்வண்டுகளின் ஒலியினால் மரங்கள் எல்லாம் மகிழ்ச்சியுற்றன போல் காட்சியளித்தன. தாமரை மலர்களிலுள்ள மகரந்தத்துகள் காற்றிலே கலந்து எங்கும் பரவின. இந்த எழில் கோலங்கள் எல்லாம் இணைந்து ஒரு விழாக்காலச் சூழ்நிலையைத் தோற்றுவித்தன.

பதம் 4.24.23
தத்ர காந்தர்வம் ஆகர்ண்ய திவ்ய-மார்க-அனோஹரம்
விஸிஸ்ம்யூ ராஜ-புத்ராஸ்தே ம்ருதங்க-பனவாதி அனு

தத்ர—அங்கு; காந்தர்வம்—இன்னிசை ஒலி; ஆகர்ண்ய—கேட்டது; திவ்ய—திவ்வியமான; மார்க—செவ்வொழுங்காக; மன:-ஹரம்—அழகிய; விஸிஸ்மயு:—அவர்கள் ஆச்சர்யமுற்றனர்; ராஜ-புத்ரா:—மன்னர் பர்ஹிஷதனின் புதல்வர்கள்; தே—எல்லோரும்; ம்ருதங்க—மிருதங்கம்; பணவ—முழவு; ஆறி—எல்லாம் சேர்ந்து; அனு—எப்பொழுதும்.

அரசனின் மைந்தர்கள் மத்தள ஓசை முழவோசை மற்றும் ஒழுங்கான இனிய சங்கீத ஒலி இவையெல்லாம் கேட்டு மிகவும் வியப்படைந்தனர்.

பதங்கள் 4.24.24 – 4.24.25
தர்ஹி ஏவ ஸரஸஸ் தஸ்மான் நிஷ்க்ராமந்தம் ஸஹானுகம்
உபகீயமானம் அமர ப்ரவரம் விபுதானுகை:

தப்த—ஹேம நிகாயாபம் ஸிதி-கண்டம் த்ரிலோசனம்
ப்ரஸாத-ஸீமுகம் வீக்ஷ்ய ப்ரணேமுர் ஜாத கௌதுகை:

தர்ஹி—அதேசமயத்தில்; ஏவ—நிச்சயம்; ஸரஸ:—நீரிலிருந்து; தஸ்மாத்—அதிலிருந்து; நிஸ்க்ராமந்தம்—வெளியே வரும்; ஸஹ-அனுகம்—உயர்ந்த ஆத்மாக்கள் உடன் வர; உபகீயமானம்—அடியார்களினால் புகழப்பட்டு; அமர-ப்ரவரம்—அமரர்களின் நாயகர்; விபுத-அனுகை:—தனது துணைவர்கள் தொடர்ந்து வர; தப்த-ஹேம—உருக்கிவார்க்கப்பட்டத் தங்கம்; நிகாய-ஆபம்—உடல் அமைப்புக்கள்; ஸிதி-கண்டம்—நீலகண்டம்; த்ரி—லோசனம்—மூன்று விழிகளுடன்; ப்ரஸாத—கருணைநிறைந்த; ஸீ-முகம்—அழகியமுகம்; ஸீக்ஷ்ய—பார்வை; ப்ரணேமு:—அஞ்சலி செய்யப்பட்டு; ஜாத—உணர்ச்சிவயமாகி; கௌதுகா:—சூழ்நிலையில் வியப்புற்று.

தேவர்களின் தலைவரான சிவபெருமான் தன் துணைவர்கள் சூழ தண்ணீரினின்று எழுந்து வருவரைக் காணும் நல்லதிர்ஷ்டத்தினைப் பிரசேதர்கள் பெற்றனர். அவர் உடல் வண்ணம் உருக்கிவார்த்த பொன்னின் நிறமாகவும், கண்டம் நீல நிறமாகவும் இருக்க, அவர் மூன்று விழிகளைக் கொண்டவராக இருந்தார், அவை மூன்றும் தன் பக்தர்களைக் கருணையுடன் நோக்கின. பல்வேறு இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகளை மீட்டி அவர் புகழைப்பாடிக் கொண்டு உடன் வந்தனர். சிவபெருமானைக் கண்டவுடன் பிரசேதர்கள் மிகவும் வியப்பெய்தி அவரது தாமரைத் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி தங்கள் மரியாதையினைத் தெரிவித்தனர்.

பதம் 4.24.26
ஸ தான் ப்ரபன்னார்தி-ஹரோ பகவான் தர்ம-வத்ஸல:
தர்ம-ஜ்ஞான் ஸீல-ஸம்பன்னான் ப்ரீத: ப்ரீதான் உவாச ஹ

ஸ:—சிவபெருமான்; தான்—அவர்கள்; ப்ரபன்ன-ஆர்தி-ஹர:—எல்லா ஆபத்துக்களையும் நீக்குபவர்; பகவான்—பகவான்; தர்ம-வத்ஸவ:—சமய அறநெறிகளின் மீது இரக்கம் உடையவர்; ப்ரீத:—மிக்க மகிழ்வுற்று; ப்ரீதான்—உயர்ந்த தன்மை கொண்டவர்; உவாச—அவர்களிடம் கூறினார்; ஹ—இறந்தகாலம்.

சிவபெருமான் பொதுவாகப் புனிதர்களையும், உயர் தன்மை கொண்டோர்களையும் காப்பவர் ஆதலினால் பிரசேதர்களின் மீது அவர் மிகவும் மகிழ்ச்சி கொண்டார். இளவரசர்களின் மீது கொண்ட மகிழ்ச்சியில் அவர் பின்வருமாறு பேசலானார்.

பதம் 4.24.27
ஸ்ரீ-ருத்ர உவாச
யூயம் வேதிஷத: புத்ரா விதிதம் வஸ் சிகீர்ஷிதம்
அனுக்ரஹாய பத்ரம் வ ஏவம் மே தர்ஸனம் க்ருதம்

ஸ்ரீ—ருத்ர; உவாச—சிவபெருமான் கூறத் தொடங்கினார்; யூயம்—நீங்கள் எல்லோரும்; வேதிஷத:—மன்னர் பிராசீனபர்ஹியின்; புத்ரா:—மைந்தர்கள்; விதிதம்—அறிந்து கொள்ள; வ:—உங்கள்; சிகீர்ஷிதம்—ஆசைகள்; அனுக்ரஹாய—உங்களுக்கு அருள்புரிய வேண்டி; பத்ரம்—உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்; வ:—நீங்கள் எல்லோரும்; ஏவம்—இவ்வாறு; மே—எனது; தர்ஸனம்—தரிசனம்; க்ருதம்—நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள்.

சிவபெருமான் கூறினார்: நீங்கள் எல்லோரும் மன்னர் பிராசீனபர்ஹியின் மைந்தர்கள், உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். நீங்கள் எல்லோரும் எதற்காகப் போய்க் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நானும் அறிவேன், உங்கள் மீது கொண்ட கருணையினால் உங்கள் கண்களுக்கு நான் காட்சியளிக்கின்றேன்.

பதம் 4.24.28
ய: பரம் ரம்ஹஸ: ஸாக்ஷாத் த்ரி-குணாஜ் ஜீவ-ஸம்ஜ்ஞீதாத்
பகவந்தம் வாஸீதேவம் ப்ரபன்ன: ஸ ப்ரியோ ஹிமே

ய:—யாரேனும் ஒருவன்; பரம்—உன்னதமான; ரம்ஹஸ:—கட்டுப்படுத்துபவரின்; ஸாக்ஷாத்—நேரடியாக; த்ரி-குணாத்—ஜட இயற்கையின் முக்குணங்களில் இருந்து; ஜீவ-ஸம்ஜ்ஞீ-தாத்—உயிர்வாழிகள் ஜீவர்கள் என்று அழைக்கப்படுகின்றன. பகவந்தம்—முழுமுதற் கடவுளுக்கு; வாஸீதேவம்—கிருஷ்ணருக்கு; ப்ரபன்ன:—சரண் புகுந்தால்; ஸ:—அவன்; ப்ரிய:—மிகவும் அன்பான; ஹி—சந்தேகமின்றி; மே—எனக்கு.

சிவபெருமான் தொடர்ந்து கூறினார்: ஜட இயற்கை மற்றும் உயிர்வாழிகள் அனைத்தையும் ஆட்டுவிக்கும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரைச் சரண்புகும் ஒருவன் எனது அன்பிற்கும் உண்மையில் பாத்திரமானவனாகின்றான்.

பதம் 4.24.29
ஸ்வ-தர்-நிஷ்ட: தை ஜன்மபி: புமான்
விரிஞ்சதாம் ஏதி தத: பரம் ஹி மாம்
அவ்யாக்ருதம் பாகவதோ ‘த வைஷ்ணவம்
பதம் யதாஹம் விபுதா: கலாத்யயே.

ஸ்வ-தர்ம-நிஷ்ட:—தனது அதர்மம் அல்லது தொழிலில் இருக்கும் ஒருவன்; ஸத-ஜன்மபி:—நூறு பிறவிகள்; புமான்—உயிர்; விரிஞ்சதாம்—பிரம்ம தேவனின் பதவியை; ஏதி—அடைகிறான்; தத:—அதன்பிறகு; பரம்—மேலாக; ஹி—உறுதியாக; மாம்—என்னை அடைகிறான்; அவ்யாக்ருதம்—எவ்வித மாற்றமுமின்றி; பாகவத:—முழுமுதற் கடவுளுக்கு; அத—அதனால்; வைஷ்ணவம்—பகவானின் தூய பக்தன்; பதம்—பதவி; யத—போன்று; அஹம்—நான்; விபுதா:—தேவர்கள்; கலாத்யயே—பௌதீக உலகம் அழிந்தபிறகு.

நூறு பிறவிகளில் தன்னுடைய சுதர்மத்தை எவன் ஒழுங்காக நிறைவேற்றுகின்றானோ அவன் பிரம்மதேவனின் பதவியை அடைகிறான். அதனிலும் தகுதிமிக்குடையவனாக மாறும் பொழுது அவன் சிவபெருமானை அடைகிறான். பகவான் கிருஷ்ணன் அல்லது விஷ்ணுவை மாசில்லாதப் பக்தித் தொண்டின் மூலம் சரண்புகுவோன் உடனடியாக தெய்வீக உலகை அடைகிறான். சிவபெருமானும் பிற தேவர்களும் இப்பௌதீக உலக அழிவிற்குப் பின்னரே இதுபோன்ற தெய்வீக உலகை அடைவர்.

பதம் 4.24.30
அத பாகவத யூயம் ப்ரியா: ஸ்த பகவான் யதா
ந மத் பாகவதானாம் ச ப்ரேயான் அன்யோ ‘ஸ்தி கர்ஹிசித்

அத—அதனால்; பாகவதா:—பக்தர்கள்; யூயம்—நீங்கள் எல்லோரும்; ப்ரியா:—எனக்கு அன்பானவர்கள்; ஸ்த—நீங்கள்; பகவான்—முழுமுதற் கடவுளின்; யதா—போன்று; ந—இல்லை; மத்—என்னைவிட; பாகவதானாம்—பக்தர்களின்; ச—மேலும்; ப்ரேயான்—மிக அன்புடைய; அன்ய:—மற்றவர்; அஸ்தி—இருக்கிறது; கர்ஹிசித்—எந்நேரத்திலும்.

நீங்கள் எல்லோரும் பகவானின் பக்தர்கள். ஆதலினால் முழுமுதற் கடவுளைப் போன்று நீங்களும் மதிக்கத்தக்கவர்களே என்று நான் பாராட்டுகின்றேன். இவ்வாறுதான் பக்தர்களும் எனக்கு மரியாதை செய்கின்றனர், நானும் அவர்களிடம் அன்பு பூண்டிருக்கிறேன். இவ்வாறு என்னைப் போல் பக்தர்கள் மீது அன்புகொண்டவர் வேறு எவரும் இருக்க முடியாது.

பதம் 4.24.31
இதம் விவிக்தம் ஜபதவ்யம் பவித்ரம் மங்கலம் பரம்
நி: ஸ்ரேயஸ்ய-கரம்சாபி ஸ்ரூயதாம் தத் வதாமி வ:

இதம்—இந்த; விவிக்தம்—மிகுந்த, குறிப்பாக; ஜபதவ்யம்—எப்போதும் ஒதப்படுவது; பவித்ரம்—மிகுந்த தூய்மையானது; மங்கலம்—மங்கலமானது; பரம்—உன்னதமானது; நி: ஸ்ரேயஸ்ய-கரம்—மிகுந்த நன்மையுடையது; ச—மேலும்; அபி—உறுதியாக; ஸ்ரூயதாம்—தயைகூர்ந்து கேட்பீர்; தத்—அந்த; வதாமி—நான் கூறுவதை; வ:—உங்களுக்கு.

நான் இப்பொழுது ஒதப்போகும் மந்திரம் உன்னதமானது, தூயது மற்றும் மங்கலமானது என்பது மட்டுமல்ல, தனது வாழ்க்கையின் இறுதி லட்சியத்தினை அடைய வேண்டும், என்று விரும்புபவனுக்குரிய உயர்ந்த பிரார்த்தனையுமாகும். நான் இதனை ஓதும்பொழுது, அருள்கூர்ந்து நீங்கள் எல்லோரும் கவனத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் கேட்பீராக!

பதம் 4.24.32
மைத்ரேய உவாச
இதி அனுக்ரோஸ-ஹ்ருதயோ பகவான் ஆஹ தான் சிவ:
பத்தாஞ்ஜவீன் ராஜ-புத்ரான் நாராயண-பரோ வச:

மைத்ரேய: உவாச—மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; இதி—இவ்வாறு; அனுக்ரேஸ-ஹ்ருதய:—மிகுந்த அன்பு மனத்துடன்; பகவான்—பகவான்; ஆஹ—கூறினார்; தான்—பிரசேதார்களுக்கு; ஸிவ:—சிவபெருமான்; பத்த-அஞ்-ஜவீன்—கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்தனர்; ராஜ-புத்ரான்—அரசனின் மைந்தர்கள்; நாராயண-பர:—நாராயணரின் சிறந்த பக்தரான சிவபெருமான்; வச:—வார்த்தைகள்.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: மன்னரின் மைந்தர்கள் தன் முன்னே கூப்பிய கரங்களுடன் நிற்க, அவர்களிடம், பகவான் நாராயணரின் சிறந்த பக்தரும், அளவற்ற கருணையும், தன்னிகரற்றவருமான சிவபெருமான் தொடர்ந்து கூறினார்.

பதம் 4.24.33
ஸ்ரீ ருத்ர-உவாச
ஜிதம் த ஆத்ம-வித்-வர்ய ஸ்வஸ்தயே ஸ்வஸ்திர் அஸ்துமே
பவதாராதஸா ராத்தம் ஸர்வஸ்மா ஆத்மனே நம:

ஸ்ரீ-ருத்ர:உவாச—சிவபெருமான் பேசத் தொடங்கினார்; ஜிதம்—எல்லாப் புகழும்; தே—உமக்கே; ஆத்ம-வித்—ஆத்ம உணர்வு; வர்ய—மிகவுயர்ந்த; ஸ்வஸ்தயே—மங்கலமானவற்றிற்கு; ஸவஸ்தி:—மங்கலமானது; அஸ்து—அவ்வாறே ஆகுக; மே—எனது; பவதா—உம்மால்; ஆராதஸா—நிறைவானவற்றுள் எல்லாம்; ஆத்மனே—பரமாத்மாவிற்கு; நம:—வந்தனங்கள்.

சிவபெருமான், முழுமுதற் கடவுளுக்கு, கீழ்வரும் பிரார்த்தனையினைச் சமர்ப்பித்தார் ஓ, முழுமுதற் கடவுளே எல்லாப் புகழும் உமக்கே ஆகுக. தன்னுணர்வு பெற்ற எல்லோருக்கும் நீர் மங்கலமானவராக விளங்குவது போல் எனக்கும் விளங்குவீராக. நீர் அருளிய அறிவுரைகளின் தன்மையினாலேயே நீர் வணங்கப்படக்கூடியவர். நீரே பரமாத்மா ஆதலினால் எனது வந்தனங்களை பரமாத்மாவாக விளங்கும் உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 4.24.34
நம: பங்கஜ-நாபாய பூத-ஸீக்ஷ்மேந்திரியாத்மனே
வாஸீதேவாய ஸாந்தாய கூட-ஸ்தாய ஸ்வ-ரோசிஷே

நம—வந்தனம் உமக்கு; பங்கஜ-நாபாய—முழுமுதற் கடவுளுக்கு, அவரது நாபியிலிருந்தே தாமரைமலர் பிறந்தது; பூத-ஸீக்ஷ்ம—புலனுணர்வுகள்; இந்த்ரிய—புலன்கள்; ஆத்மனே—மூலம்; வாஸீதேவாய—பகவான் வாசுதேவருக்கு; ஸாந்தாய—எப்போதும் அமைதியில்; கூடஸ்தாய—மாற்றமுமின்றி; ஸ்வ-ரோசிஷே—உயர்ந்த ஒளியாக விளங்குபவருக்கு.

என் பகவானே, நீரே உமது நாபியிலிருந்து வந்த தாமரை மலரின் வன்மையினால் படைப்பிற்கே மூலாதாரமாக விளங்குகின்றீர், நீரே புலன்களையும், புலனுகர்ச்சிப் பொருட்களையும் கட்டுப்படுத்தும் உயர்ந்தவர் ஆவீர், நீரே எங்கும் எதிலும் வியாபித்திருக்கும் வாசுதேவர் ஆவீர், நீர் மிக்க அமைதியுடையவர். நீர் சுயமாகப் பிரகாசிக்கும் ஜோதி உடையவர்! ஆதலினால் நீர் ஆறுவகையான மாற்றங்களுக்கு ஆளாவதில்லை.

பதம் 4.24.35
ஸங்கர்ஷணாய ஸீக்ஷ்மாய துரந்தாயாந்தகாய ச
நமோ விஸ்வ ப்ரபோதாய ப்ரத்யும்னாயாந்தர்-ஆத்மனே

ஸங்கர்ஷணாய—ஒருமுகப்படுத்துகின்ற நாயகனுக்கு; ஸீக் ஷ்மாய—உருவெளிப்படாத சூட்சுமப் பொருளுக்கு; ஆரந்தாய—விஞ்சமுடியாதவருக்கு; அந்தகாய—கூறுப்படுகின்ற நாயகருக்கு; ச—மேலும்; நம:—வந்தனங்கள்; விஸ்வ-ப்ரபோதாய—பிரபஞ்ச வளர்ச்சியின் நாயகருக்கு; ப்ரத்யும்னாய—பகவான் பிரத்யும்நருக்கு; அந்த:-ஆத்மனே—எல்லோர் இதயங்களிலும் வீற்றிருக்கும் பரமாத்மாவுக்கு.

எனது அன்பான பகவானே, நீரே சூட்சுமப் பொருட்களுக்கு மூலகாரணமாக விளங்குபவர், எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்தவும், பிரிக்கவும் செய்கின்ற நாயகரும் நிரே, தன்னிகரற்ற மூர்த்தியான சங்கர்ஷ்ணராகவும், ஞானங்களுக்கெல்லாம் நாயக மூர்த்தியாகவும் விளங்கும் பிரத்யும்னரும் நீரே. ஆதலினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு உரித்தாக்குகின்றேன்.

பதம் 4.24.36
நமோ நமோ ‘நிருத்தாய ஹ்ருஷீகேஸேந்த்ரியாத்மனே
நம: பரமஹம்ஸாய பூர்ணாய நிப்ருதாத்மனே

நம:—எனது எல்லா வந்தனங்களும் உமக்கே ஆகுக; நம:—மீண்டும் வந்தனங்கள்; அநிருத்தாய—பகவான் அநிருத்தருக்கு; ஹ்ருஷீகேஸ—புலனேந்திரியங்களின் நாயகருக்கு; இந்த்ரிய-ஆத்மனே—புலன்களை இயக்குபவர்; நம:—எல்லா வந்தனங்களும் உமக்கே; பரம-ஹம்ஸாய—உயர்ஸித்தி உடையவருக்கு; பூர்ணாய—பரிபூரணருக்கு; நிப்ருத-ஆத்மனே—பௌதீகப் படைப்புக்களுக்கெல்லாம் மேலாக இருப்பவருக்கு.

எனது அன்பிற்குரிய பகவானே, எல்லாவற்றையும் இயக்கும் பரமமூர்த்தியாக விளங்கும் அநிருத்தரே, நீரே மனம் மற்றும் புலன்களின் நாயகராக இருக்கின்றீர்! ஆகையினால் எனது வணக்கங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்கின்றேன். நீரே உமது வாயிலிருந்து வரும் செந்தழலின் மூலம் இவ்வுலகை அழிக்கின்ற சக்திமிக்கவராக இருப்பதினால் அனந்தராகவும், சங்கர்ஷணராகவும் அறியப்படுகின்றீர்.

பதம் 4.24.37
ஸ்வர்காபவல்க-த்வாராய நித்யம் ஸீசி-ஷதே நம:
நமோ ஹிரண்ய-வீர்யாய சாதுர்-ஹோத்ராய தந்தவே

ஸ்வர்க—சொர்க்கம்; அபவர்க—விடுதலைக்குரிய பாதை; த்வாராய—கதவுகளுக்கு; நித்யம்—நித்தியம்; ஸீசி-ஸதே—மிகவுயர்ந்த தூய்மையானவர்க்கு; நம:—உமக்கு எனது வணக்கங்கள்; நமோ:—எனது வந்தனங்கள்; ஹிரண்ய—தங்கம்; வீர்யாய—வீர்யம்; சாது:-ஹோத்ராய—வேத வேள்விகளின் பெயர்; தந்தவே—அம்சமாக விரிந்தவருக்கு.

எனது பகவானே, ஓ, அநிருத்தரே, சொர்க்கத்தின் கதவுகளும் விடுதலையின் கதவுகளும் திறப்பதற்கு நீரே அதிகாரியாக இருக்கின்றீர். நீரே உயிரின் தூய இருதயத்தில் எப்போதும் வீற்றிருக்கின்றீர். ஆதலினால் எனது வணக்கங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன். நீரே பொன்னைப் போன்ற வீர்யத்தை (சுக்கிலம்) உடையவராக விளங்குகின்றீர்; சாதுர் ஹோத்ரம் எனத் தொடங்கும் வேத வேள்விகளுக்கு நீரே நெருப்பு வடிவில் உதவுகின்றீர். ஆகையினால் உமக்கு எனது வந்தனங்களைத் தெரிவிக்கின்றேன்.

பதம் 4.24.38
நம ஊர்க இஷே திரய்யா: பதயே யஜ்ஞா-ரேதஸே
த்ருப்தி-தாய ச ஜீவானாம் நம: ஸர்வ-ரஸாத்மனே

நம:—எனது எல்லா வந்தனங்களையும் உமக்கே உரித்தாக்குகிறேன்; ஊர்ஜே—பித்ரு லோகத்தைப் படைத்தவருக்கு; இஷே—தேவர்களைப் படைத்தவர்; த்ரய்யா:—மூன்று வேதங்களின்; பதயே—தலைவருக்கு; யஜ்ஞா—வேள்விகள்; ரேதஸே—சந்திர கிரஹத்தின் விஞ்சமுடியாத தெய்வத்திற்கு; த்ருப்தி-தாய—யார் எல்லோருக்கும் நிறைவு அளிக்கின்றாரோ அவருக்கு; ச—மேலும்; ஜீவானாம்—உயிர்களின்; நம:—எனது வந்தனங்கள்; ஸர்வ-ரஸ-ஆத்மனே—எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் பரமாத்மாவுக்கு.

எனது பகவானே, நீரே பித்ருலோகத்தையும் படைத்தீர் எல்லாத் தேவர்களையும் படைத்தீர். நீரே சந்திரனின் தன்னேரில்லாத் தெய்வமாகவும், மூன்று வேதங்களின் தலைவராகவும் விளங்குகின்றீர். நீரே உயிர்வாழிகள் அனைத்தின் திருப்திக்கும் மூல ஆதாரமாக விளங்குகின்றபடியால் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை உமக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

பதம் 4.24.39
ஸர்வ ஸத்த்வாத்ம-தேஹாய விஸேஷாய ஸ்தாவீர்யஸே
நமஸ் த்ரைலோக்ய-பாலாய ஸஹ ஒஜோ-பலாய ச

ஸர்வ—எல்லாம்; ஸத்த்வ—தோற்றமும்; ஆத்ம—ஆத்மா; தேஹாய—உடலிற்கு; விஸேஷாய—வேற்றுமை; ஸ்தவீயஸே—பௌதீக உலகிற்கு; நம:—வந்தனங்கள் உரித்ததாகுக; த்ரை-லோக்ய—மூன்று லோகங்களும்; பாலாய—காப்பவர்; ஸஹ—அதனோடு; ஒஜ:—ஆற்றல்; பலாய—வலிமைக்கு; ச—மேலும்.

எனது அன்பிற்கினிய பகவானே, நீரே எல்லா உயிர்களையும் தம்முள் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் விஸ்வரூப வடிவமாக விளங்குகின்றீர். நீரே மூன்று லோகங்களையும் காத்து அவற்றிலுள்ள உயிர்களின் மனம், காயம், புலன்கள் மற்றும் உயிர்க்காற்று போன்றவற்றையும் காக்கின்றீர். ஆகையினால் உமக்கு எனது மரியாதையுடன் கூடிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 4.24.40
அர்த விங்காய நபஸே நமோ ‘ந்தர்-பஹிர்-ஆத்மனே
நம: புண்யாய லோகாய அமுஷ்மை பூரி-வர்சஸே

அர்த—அர்த்தம்; விங்காய—உணர்த்துதல்; நபஸே—வானத்திற்கு; நம:—வந்தனங்களை அர்ப்பணித்தல்; அந்த:—அதனுள்; பஹி:—இல்லாமலும்; ஆத்மனே—ஆத்மாவிற்கு; நம:—வந்தனங்கள்; புண்யாய—புண்ணியச் செயல்கள்; லோகாய—படைப்பிற்கு; அமுஷ்மை—மரணம் கடந்த; பூரி-வர்சஸோ—உயர்ந்த ஜோதி.

எனது அன்பிற்குரிய இறைவனே, உமது உன்னதமான ஒலி அதிர்வுகளின் விரிவின் மூலம் எல்லாவற்றிலும் இருக்கும் உண்மையாகப் பொருள் என்னவென்று விளக்குகின்றீர், நீரே உள்ளும் புறமும் வியாபித்திருக்கும் வானமாக விளங்குகின்றீர், பௌதீக உலகினுள்ளும் அதற்கு மேலும் செய்யப்படும் புண்ணியச் செயல்களின் இறுதி இலட்சியமாக நீரே இருக்கின்றீர். ஆகையினால் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை உமக்கு நான் சமர்ப்பிக்கின்றேன்.

பதம் 4.24.41
ப்ரவிருத்தாய நிவ்ருத்தாய பித்ரு-தேவாய கர்மணே
நமோ ‘தர்ம-விபாகாய ம்ருதவே து: க-தாயச

ப்ரவிருத்தாய—நாட்டம்; நிவ்ருத்தாய—நாட்டமின்மை; பித்ரு தேவாய—பித்ருலோகத்தின் நாயகன்; கர்மணே—பலன் தரும் செயல்களின் பயன்களுக்கு; நம:—வந்தனங்கள்; அதர்ம— அதர்மம்; விபாகாய—விளைவிற்கு; ம்ருத்யவே—மரணத்திற்கு; து:க-தாய—எல்லாத் துன்பத்திற்கும் காரணம்; ச—மேலும்.

எனதன்பான இறைவனே நீரே புண்ணியச் செயல்களின் பலனைக் காண்பவரக இருக்கின்றீர். நாட்டமும் நீரே நாடாமையும் நீரே. அவர்கள் செய்யும் வினையின் பலனும் நீரே. அதர்மத்தின் காரணமாக உண்டாகும் துன்ப வாழ்விற்கும் நீரே காரணமாவீர். அதனால்தான் நீர் மரண தேவனாகவும் விளங்குகின்றீர் உமக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களைச் சமர்ப்பிக்கின்றேன்.

பதம் 4.24.42
நமஸ் த ஆஸிஷாம் ஈஸ மனவே காரணாத்மனே
நமோ தர்மாய ப்ருஹதே க்ருஷ்ணாயகுண்ட-மேதஸே
புருஷாய புராணாய ஸாங்கக்ய-யோகேஸ்வராய ச

நம:—வந்தனம்; தே—உமக்கு; ஆஸிஷாம் ஈஸ—வரம் அருள்வதில் மிக உயர்ந்தவர்; மனவே—உயர்ந்த மனதிற்கு அல்லது உயர்ந்த மனுவிற்கு; காரண-ஆத்மனே—எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணம்; நம:—வந்தனங்களை உரித்தாக்குகிறேன்; தர்மாய—சமய அறநெறிகள் அனைத்தையும் அறிந்த ஒருவருக்கு; ப்ரஹதே—மிகச் சிறந்த; க்ருஷ்ணாய—கிருஷ்ணருக்கு; அகுண்ட—பரமபுருஷர்; புராணாய—பழமையிலும் பழையவர்; ஸாங்க்யயோக-ஈஸ்வ-ராய—ஸாங்க்ய யோக கொள்கைகளின் தலைவர்; ச—மேலும்.

எனது அன்பான இறைவனே, வரங்கள் எல்லாம் அருள்பவர்களின் நீர் ஒருவரே மிகவுயர்ந்தவர்; ஆனந்திப்பவர் எல்லோரினும் நீரே மிகச்சிறந்த பரமானந்தரும் பழமையானவரும் ஆவீர். அறிவு, மனம், உண்மை போன்ற உலகிலுள்ள எல்லா சூச்சுமப் பொருள்களின் நாயகராக நீரே விளங்குகின்றீர், பகவான் கிருஷ்ணரே நீரே காரணங்கள் எல்லாவற்றிற்கும் மூல காரணம். நீரே சமய அறநெறிகள் அனைத்திலும் மிகச்சிறந்தவர், மிகவுயர்ந்த மனம் உடையவர். உமது ஞானம் எந்நிலையிலும் ஒருபோதும் தடுத்து நிறுத்தப்படாதது ஆகும். ஆகையினால் நான் மீண்டும் மீண்டும் எனது வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 4.24.43
ஸக்தி-த்ரய-ஸமேதாய மீடுஷே ‘ஹங்க்ருதாத்மனே
சேத-ஆக்ஷதி-ரூபாய நமோ வாசோ விபூதயே

ஸக்தி-த்ரய—மூன்று வகையான சக்திகள்; ஸமேதாய—உறைவிடமானவருக்கு; மீதுஷே—ருத்திரருக்கு; அஹங்கிருத-ஆத்மனே—அகங்காரத்தின் மூலமான; சேத:—அறிவு; ஆக்ஷதி—உழைக்கின்ற ஆர்வம்; ரூபாய—வடிவத்திற்கு; நம:—வந்தனம்; வாச:—ஒலிக்கு; விபூதயே—பல்வேறு வகையான செல்வங்கள்.

எம்பெருமானே, கர்மீ, கர்மவினை, கர்மவினையின் பயன் இவற்றின் பரம ஆளுநர் நீரே ஆவீர். ஆகையினால் நீரே மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றையும் கட்டுப்படுத்துபவர் ஆவீர். ருத்திரரான நீரே ஆணவத்தை அடக்கும் உயர்ந்தவராக விளங்குகின்றீர். அறிவின் ஆதாரமாகவும் வேதக்கட்டளைகளின் செயல்களாகவும் நீரே இருக்கின்றீர்.

பதம் 4.24.44
தர்ஸனம் நோ தித்ருக்ஷ ணாம் தேஹி பகவதார்சிதம்
ரூபம் ப்ரியதமம் ஸ்வானாம் ஸர்வேந்த்ரிய-குணாஞ்ஜனம்

தர்ஸனம்—தரிசனம்; ந:—எமக்கு; தித்ருக்ஷீணாம்—காண விரும்புகிறேன்; தேஹி—அன்புடன் தோன்றுவீராக; பாகவத—பக்தர்களின்; அர்கிதம்—அவர்களால் வணங்கப்பட்டது; ரூபம்—வடிவம்; ப்ரிய-தமம்—அன்பிற்சிறந்த; ஸ்வானம்—உமது பக்தர்கள்; ஸர்வ-இந்த்ரிய—எல்லாப் புலனேந்திரியங்களும்; குண—தன்மைகள்; அஞ்ஜனம்—மிகுந்த மகிழ்ச்சியுடன்.

எனது அன்பான இறைவனே, உமது அன்பிற் சிறந்த பக்தர்கள் உம்மை எந்த வடிவில் வணங்குகின்றனரோ அவ்வடிவத்தினையே காண நானும் விழைகிறேன். உமக்குப் பல ரூபங்கள் உண்டு. இருந்தாலும் உமது பக்தர்கள் விரும்பும் சிறப்பான வடிவினையேக் காண நானும் விரும்புகிறேன். என் மீது கருணை கொண்டு அவ்வடிவினைக் காட்டி அருள் செய்வீராக, ஏனென்றால் பக்தர்கள் வணங்கும் அவ்வடிவமே புலன்களின் தேவைகளை நிறைவாகத் திருப்தி செய்யக்கூடியது.

பதங்கள் 4.24.45 -4.24.46
ஸ்னிக்த ப்ராவ்ருட்-கன-ஸ்யாமம் ஸர்வ ஸௌந்தர்ய-ஸங்க்ரஹம்
சார்வ-ஆயத-சதுர்-பாஹீ ஸீஜாத-ருசிரானனம்

பத்ம-கோஸ-பலாஸாக்ஷம் ஸீந்தர-ப்ரு ஸீனாஸிகம்
ஸீத்விஜம் ஸீகபோலாஸ்யம் ஸம-கர்ண-விபூஷணம்

ஸ்னிக்த—பளபளப்பு; ப்ராவ்ருட்—மழைக்காலம்; கன-ஸ்யாமம்—கார்மேகம்; ஸர்வ—எல்லாம்; ஸௌந்தர்ய—அழகு; ஸங்க்ரஹம்—கூட்டு; சாரு—அழகு; ஆயுத—உடல்வண்ணம்; சது:-பாஹீ—நான்கு கரங்களுக்கு; ஸீஜாத—பேரழகு; ருசிர—மிகுந்த இன்பம்; ஆனனம்—முகம்; பத்ம-கோஸ—தாமரை மலர் இதழ் அடுக்கு; பலாஸ—இதழ்கள்; அக்ஷம்—விழிகள்; ஸீந்தர—அழகு; ப்ரு—புருவம்; ஸீ-நாஸிகம்—கூரியநாசி; ஸீ-த்விஜம்—அழகிய பற்கள்; ஸீ-கபோல—எழில் வாய்ந்த நெற்றி; ஆஸ்யம்—வதனம்; ஸம-கர்ண—சம எழில் வாய்ந்த செவிகள்; விபூஷணம்—முற்றிலும் அலங்கரிக்கப்பட்ட.

பகவானின் எழில் தோற்றம் கார்மேக வண்ணம் போன்றது. மழைச் சரங்களின் மினுமினுப்பை அவர் உடல் அழகினும் காணலாம். உண்மையில் அவர் அழகுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்த பேரழகு உடையவர். பகவான், நான்கு கரத்துடனும், கற்பனையிலும் காணவொண்ணா முக எழிலும், தாமரை விழிகளும், கூரிய நாசியும், மனதினை மயங்கச் செய்யும் புன்னகையும், எழில் நுதலும், சமமாக அணி செய்யப்பட்ட இருசெவிகளும் உடையவராக விளங்குகின்றார்.

பதங்கள் 4.24.47 – 4.24.48
ப்ரீதி-ப்ராஹஸிதாபாங்கம் அலனக ரூப-ஸேர்பிதம்
லஸத்-பங்கஜ-கிஞ்ஜல்க து கூலம் ம்ருஷ்ட-குண்டலம்

ஸ்புரத்-க்ரீட-வலய ஹார-நூபுர-மேகலம்
ஸங்க்க-சக்ர-கதா பத்ம மாலா-மணி-உத்தமர்திமத்

ப்ரிதி—கருணைமயம்; ப்ரஹஸித—புன்னகை; அபாங்கம்—ஓரப்பார்வை; அலகை:—சுருள் முடியுடன்; ரூப—எழில்; ஸோபிதம்—அதிகரித்தல்; லஸத்—பளபளக்கும்; பங்கஜ—தாமரையின்; கிஞ்ஜல்க—மகரந்தம்; துகூலம்—ஆடைகள்; ம்ருஷ்ட—மினுமினுக்கும்; குண்டலம்—குண்டலம்; ஸ்புரத்—ஒளிரும்; கிரீட—கிரீடம்; வலய—கைவளைகள்; ஹார—கழுத்தணி; நூபுர—சலங்கை; மேகலம்—மேகலை; ஸங்க—சங்கு; சக்ர—சக்கரம்; கதா—கதாயுதம்; பத்ம—தாமரை; மாலா—மாலை; மணி—முத்துக்கள்; உத்தம—முதல் தரம்; ருத்தி-மத்—இவையெல்லாம் நேர்ந்து மிகுந்த அழகுடையது.

பகவான் தனது இதழ்விரிந்த கருணைமிகு புன்னகையினாலும், பக்தர்களைப் பார்க்கும் ஓரவிழிப் பார்வையினாலும் உயர் நேர்த்தியான அழகுடையவராகத் திகழ்கின்றார். அவரது கார்குழல் சுருள் சுருளாகவும், காற்றில் மிதக்கும் அவரது ஆடைகள் தாமரை மலரில் இருந்து பறக்கும் மகரந்த தூளைப் போன்றும் காட்சியளிக்கும். அவரது ஒளிரும் குண்டலங்கள், தகத்தகாயக் கிரீடம், வளையல்கள், மாலை, சலங்கை, ஒட்டியாணம் (மேகலை) முதலியவற்றுடன் பல்வேறு அணிகளும் அவற்றோடு, சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலர் எல்லாம் சேர்ந்து அவர் மார்பில் தவழும் கௌத்துப மாலையின் இயற்கை அழகினை மேலும் அதிகரிக்கும்.

பதம் 4.24.49
ஸிம்ஹ-ஸ்கந்த-த்விஷோ பிப்ரத் ஸௌபக-க்ரீவ-கௌஸ்துபம்
ஸ்ரியானபாயின்யா க்ஷிப்த நிகஷாஸ்மோரஸோவ்லஸத்

ஸிம்ஹ—சிங்கம்; ஸ்கந்த—தோள்; த்விஷ:—சுருட்டை முடி; பிப்ரத்—தாங்கியவர்; ஸௌபக—அதிர்ஷ்டமான; க்ரீவ—கழுத்து; கௌஸ்துபம்—மணியின் பெயர்; ஸ்ரியா—அழகு; அநபாயின்யா—குறைவதேயில்லை; க்ஷிபித—தோற்கும்; நிகஷ—உரைதல்; அஸ்ம—கல்; உரஸா—மார்புடன்; உல்லஸத்—பளபளக்கும்.

பகவானின் தடந்தோள்கள் சிங்கத்தினுடையவை போன்றிருக்கும். இத்தோள்களின் மீது எப்போதும் மின்னும் மாலைகள், கழுத்தணிகள் மற்றும் வீரர்கள் அணியும் சின்னங்கள் இருக்கும். இவற்றைத் தவிர கௌத்துப மணிமாலையின் எழிலும் உண்டு, அவரது மேக வண்ண மார்பில் ஸ்ரீவத்ஸ என்னும் கோடுகள் உண்டு, அவை அதிர்ஷ்ட தேவதையின் சின்னங்களாகும். இக்கோடுகளின் பளபளப்பு தங்கத்தைச் சோதிக்க உரைகல்லில் தேய்க்கவரும் பொற்கோடுகளைத் தோற்கடிக்கும். உண்மையில் அக்கோடுகள் உரைகல்லில் உள்ள பொற்கோடுகளை நிச்சயம் தோற்கடிக்கும்.

பதம் 4.24.50
பூர-ரேசக-ஸம்விக்ன வலி-வல்கு-தலோதரம்
ப்ரதிஸங்க்ராமயத் விஸ்வம் நாப்யாவர்த-கபீரயா

பூர—உள்மூச்சு; ரேசக—வெளிமூச்சு; ஸம்விக்ன—கொந்தளித்த; வலி—வயிற்றின் மீதுள்ள வரிகள்; தவ—ஆலிலை; உதரம்—வயிறு; ப்ரதிஸங்க்ராமயத்—கீழ்ப்புறம் சுழித்து; விஸ்வம்—உலகம்; நாப்யா—நாபிச் சுழி; ஆவர்த—சுழற்சி; கபீரயா—ஆழத்தினால்.

பகவானின் வயிறு மூன்று அலையலையான வரிகளுடன் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். அவரது அடிவயிறு ஆலிலை போன்றிருக்கும். அவர் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும்பொழுது ஏற்படும் அசைவினால் அவர் வயிற்றின் மீதுள்ள வரி அலைகள் பார்ப்பதற்கு மிக மிக அழகானதாக இருக்கும். பகவானின் ஆழமான உந்திச்சுழியின் தோற்றம் இப்பிரபஞ்சம் முழுதுமே அதனின்று வெளியே வந்து மீண்டும் அதனுள்ளேயே செல்ல விரும்புவது போல் தோன்றும்.

பதம் 4.24.51
ஸ்யாம-ஸ்ரோணி-அதி-ரோசிஷ்ணு துகூல-ஸ்வர்ண-மேகலம்
ஸம-சார்வ-அங்க்ரி-ஜங்கோரு நிம்ன-ஜானு-சுதர்ஸனம்

ஸ்யாம—கருமை; ஸ்ரோணி—இடுப்பின் கீழ்ப்பகுதி; அதி—மிகைப்படியான; ரோசிஷ்ணு—மகிழ்ச்சியூட்டும்; துக்ஷல—ஆடைகள்; ஸ்வர்ண—தங்கம்; மேகலம்—மேகலை, ஒட்டியாணம்; ஸம—சமச்சீரான; சாரு—அழகான; அங்க்ரி—திருவடித் தாமரை; ஜங்க—பின்காலின் சதைப்பகுதி; ஊரு—தொடைகள்; நிம்ன—கீழ்; ஜானு—முழங்கால் மூட்டு; ஸீ-தர்ஸனம்—மிக அழகியது.

பகவானின் இடுப்பின் கீழ்ப்பகுதி கருமையானதாகவும் மஞ்சள் நிற ஆடையினால் மறைக்கப்பட்டும் இருக்கும். அதிலுள்ள இடுப்புவாரில் தங்கப் பூவேலைகள் செய்யப்பட்டிருக்கும். அவரது சமச்சீரான தாமரைத் திருவடிகள், பின்காலின் சதைப்பகுதி, தொடைகள் மற்றும் கால்களிலுள்ள மூட்டுக்கள் எல்லாம் விசேஷ அழகுடையனவாகும். அவரது முழு உடலும் கட்டழகு மிக்கதாகத் தோன்றும்.

பதம் 4.24.52
பதா ஸரத்-பத்ம-பலாஸ-ரோசிஷா
நக-த்யுபிர் நோ ‘ந்தர்-அகம் விதுன்வதா
ப்ரதர்ஸய ஸ்வீயம் அபாஸ்த-ஸரத்வஸம்
பதம் குரோமார்க-குருஸ் தமோ-ஜீஷாம்

பதா—தாமரைத் திருவடிகளினால்; ஸரத்—கூதிர்காலம்; பத்ம—தாமரைமலர்; பலாஸ—இதழ்கள்; ரோசிஷா—மிகவும் மகிழ்வூட்டும்; நக—நகம்; த்யுபி:—ஜோதியினால்; ந:—எங்கள்; அந்த:-அகம்—அழுக்குகள்; விதுன்வதா—அது தூய்மை செய்யக்கூடியது; ப்ரதர்ஸய—சிறிது காண்பிக்கவும்; ஸ்வீயம்—உமக்குரிய; அபாஸ்த—குறைகின்ற; ஸாத்வஸம்—பௌதீக உலகின் துன்பம்; பதம்—தாமரை திருவடி; குரோ—ஓ, உயர்ந்த ஆன்மீக குருவே; மார்க—பாதை; குரு:—ஆன்மீக குரு; தம:-ஜீஷாம்—அறியாமையில் வருந்துபவர்கள்.

எனது அன்பிற்குரிய இறைவனே! கூதிர்காலத்தில் விரிந்து மலரும் செந்தாமரை மலர்களைப் போன்று உமது இரு திருவடிகளும் காட்சியளிக்கின்றன. உமது திருவடித் தாமரையின் விரல்களிலுள்ள நகங்கள் உயர்ந்த ஜோதிகளைப்போல் ஒளிர்வனவாகும். அவ்வொளி பந்தப்பட்ட ஆத்மாக்களின் மனதிலுள்ள இருட்டை விரட்டியடிக்கும் தன்மை கொண்டதாகும். எனது அன்பான இறைவனே! ஒரு பக்தனின் மனதிலுள்ள எல்லாவிதமான இருளையும் எப்போதும் விரட்டும் உமது வடிவினை அருள்கூர்ந்து எனக்குக் காட்டுவீராக. அனைவரின் உயர்ந்த ஆன்மீகக் குருவாக விளங்குபவர் நீரே; ஆகையினால் அறியாமை இருளினால் மூடப்பட்டிருக்கும் அனைத்துப் பத்தப்பட்ட ஆத்மாக்களுக்கும் ஆன்மீக குருவாக விளங்கும் நீரே ஞான ஒளியேற்றுவீராக.

பதம் 4.24.53
ஏதத் ரூபம் அனுத்யேயம் ஆத்ம-ஸீத்திம் அபீப்ஸதாம்
யத்-பக்தி-யோகோ ‘பயத: ஸ்வ-தர்மம் அனுதிஷ்டதாம்

ஏதத்—இந்த; ரூபம்—வடிவம்; அனுத்யேயம்—தியானிக்கப்படல் வேண்டும்; ஆத்ம—தனது; ஸீத்திம்—தூய்மை; அபீப்ஸதாம்—அவ்வாறு விரும்புவோர்; யத்—எது; பக்தியோக:—பக்தித் தொண்டு; அபய-த:—உண்மையான பயமின்றி; ஸ்வ-தர்மம்—சுதர்மம்; அனுதிஷ்டதாம்—செயற்படுத்துதல்.

போற்றுதற்குரிய இறைவனே, தனது வாழ்வினைத் தூய்மை செய்ய விரும்புவோர் மேலே கூறியுள்ளவாறு உமது திருவடித் தாமரைகளின் தியானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்க வேண்டும். தனது சுதர்மத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று ஆழ்ந்த விருப்பமுடையோரும், அச்சத்தினின்று விடுதலை பெற விரும்புவோரும் பக்தியோகத்தினைப் பின்பற்ற வேண்டும்.

பதம் 4.24.54
பவான் பக்திமதா லப்யோ துர்லப: ஸர்வ-தேஹினாம்
ஸ்வாராஜ்யாபி அபிமத ஏகாந்தேனாத்ம-வித் கதி:

பவான்—உமது கருணையில்; பக்தி-மதா—பக்தனால்; லப்ய:—பெறக்கூடியது; துர்லப:—கிடைப்பதற்கரியது; ஸர்வ-தேஹினாம்—பிற எல்லா உயிர்களும்; ஸ்வராஜ்யஸ்ய—சொர்க்கத்தின் அரசன்; அபி—கூட; அபிமத:—இறுதி லட்சியம்; ஏகாந்ததேன—ஒன்றாதலினால்; ஆத்ம-வித்—ஆத்மாவை உணர்ந்தவர்களின்; கதி:—மிகவுயர்ந்த அடையுமிடம்.

எனது அன்பான இறைவனே, சொர்க்கத்தினை ஆளும் மன்னனும் தனது வாழ்வின் இறுது லட்சியமான பக்தித் தொண்டினையே அடைய விரும்புகிறான். உம்மோடு ஒன்றாய் இணைந்திருப்போர்க்கு (அஹம் ப்ரஹ்மாஸ்மி) உயர்ந்த அடையும் இடமாகவும் நீரே இருக்கின்றீர். இருந்தாலும் அவர்கள் உம்மை அடைவது அத்துணை எளிதன்று. ஆனாலும் ஒரு பக்தன் உம்மை மிக எளிதாக அடைந்து விடுகிறான்.

பதம் 4.24.55
தம் துராராத்யம் ஆராத்ய ஸதாம் அபி துராபயா
ஏகாந்த-பக்த்யா கோ வாஞ்சேத் பாத மூலப் விநா பஹி:

தம்—உமக்கு; துராராத்யம்—வழிபடுவதற்குக் கடினமானது; ஆராத்ய—வழிபடுகின்றது; ஸதாம்-அபி—மிக மேலானவர்களுக்குக்கூட; துராபயா—அடைவது கடினமானது; ஏகாந்த—தூய்மை; பக்த்யா—பக்தித் தொண்டினால்; க:—யார் அந்த மனிதர்; வாஞ்சேத்—விரும்ப வேண்டும்; பாத-மூலம்—தாமரைத் திருவடி; விநா—இன்றி; பஹி:—வெளியில் உள்ளவர்கள்.

எனது அன்பிற்குரிய இறைவனே, தூய பக்தித் தொண்டானது விடுதலை பெற்றோர்கள் கூட செய்வதற்கு அரிதானது, ஆனாலும் பக்தித் தொண்டு ஒன்றே உம்மைத் திருப்திப்படுத்துகிறது. வாழ்க்கையில் முழுநிறைவு பெறவேண்டும் என்று உண்மையில் நினைப்பவர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு வேறு எந்த வழியை நாடமுடியும்?

பதம் 4.24.56
யத்ர நிர்விஷ்டம் அரணம் க்ருதாந்தோ நாபிமன்யதே
விஸ்வம் வித்வம்ஸயன் வீர்ய ஸெளர்ய-விஸ்பூர்ஜித ப்ருவா

யத்ர—எங்கு; நிர்விஷ்டம் அரணம்—முற்றும் சரண்புகுந்த ஆத்மா; க்ருத-அந்த:—கண்ணுக்குப் புலனாகாத காலம்; ந அபி மன்யதே—தாக்குவதற்குப் போவதில்லை; விஸ்வம்—இப்பிரபஞ்சம் முழுதும்; வித்வம்ஸயன்—வெல்வதினால்; வீர்ய—வீரம்; ஸௌர்ய—செல்வாக்கு; விஸ்பூர்ஜித—சிறிது விரிவதினால்; ப்ருவா—புருவங்கள்.

அவரது புருவங்களின் சிறு அசைவிலேயே கண்ணுக்குப் புலனாகாத கால தேவன் இப்பிரபஞ்சம் முழுவதையும் வென்றழிப்பான். அவ்வெல்வதற்கரியக் கால தேவனும் உமது திருவடித் தாமரைகளைச் சரண் புகுந்த பக்தர்களை அணுகுவதற்கும் அஞ்சுவான்.

பதம் 4.24.57
க்ஷணார்தேனாபி துலயே ந ஸ்வர்கம் நாபுனர்-பவம்
-ஸங்கி-ஸங்கஸ்ய மர்த்யானம் கிம் உதாஸிஷ:

க்ஷண-அர்தேன—அரைநொடிக்குள்; அபி—கூட; துலயே—ஒப்பிடு; ந—இல்லை; ஸ்வர்கம்—சொர்க்கம்; ந—இல்லை; அபுன:-பவம்—பரமபுருஷருடன் இணைவது; பகவத்—முழுமுதற் கடவுள்; ஸங்கி—தொடர்பு; ஸங்கஸ்ய—தொடர்பு கொள்வதினால் வரும் பயனைப் பெறுபவர்; மர்த்யானாம்—பந்தப்பட்ட ஆத்மாவின்; கிம் உத—என்ன இருக்கிறது; ஆஸிஷ:—வாழ்த்து.

ஒரு நொடியில் துளியளவு நேரம் ஒரு பக்தனுடன் ஒருவன் தொடர்பு கொண்டால், கர்மம் மற்றும் ஞானத்தின் கவர்ச்சிக்கு அவன் ஆளாவதில்லை. இவ்வாறிருக்க, ஜனனமரண துன்பத்திற்கு ஆளாகும் தேவர்களின் வரங்களை அவன் ஏன் நாடப் போகிறான்?

பதம் 4.24.58
அதாநகங்க்ரேஸ் தவ கீர்தி-தீர்தயோர்
அந்தர்-பஹி:-ஸ்நான-விதூத-பாப்மனாம்
பூதேஷ்வ அனுக்ரோஸ-ஸீஸத்த்வ-ஸீலினாம்
ஸ்யாத்ஸங்கமோ ‘நுக்ரஹ ஏஷநஸ்தவ

அத—ஆகையினால்; அநக-அங்ரே:—அமங்கலமானவற்றை அழிக்கும் திருவடித் தாமரைகளைக் கொண்ட எனது பகவானே; தவ—உமது; கீர்தி—புகழ்; தீர்தயோ:—புனிதமான கங்கைநீர்; அந்த:—உள்ளே; பஹி:—வெளியே; ஸ்நான—நீராடுதல்; விதூத—கழுவுதல்; பாப்மனாம்—மனதின் அழுக்கு நிறைந்த நிலை; பூதேஷீ—சாமான்ய உயிர்வாழிகளுக்கு; அநுக்ரோடி—வரம் அல்லது கருணை; ஸீ-ஸத்த்வ—முற்றிலும் நன்மையில்; ஷீலினாம்—இக்குணங்களை உடையவரிடம்; ஸ்யாத்—விட்டுவிடுதல்; ஸங்கம:—தொடர்பு; அநுக்ர:—கருணை; ஏஷ:—இந்த; ந:—நமக்கு; தவ—உமது.

எனது அன்பிற்குரிய இறைவனே! உமது திருவடித் தாமரைகளே எல்லா மங்கலப் பொருட்களுக்கும் மூலாதாரமாக விளங்குகின்றன. அவைகளே பாவத்தின் அழுக்குகளை அழிக்கவும் செய்கின்றன. ஆகையினால் பகவானே, உமது திருவடித் தாமரைகளைத் தொழுது முற்றிலும் தூய்மையடைந்தவர்களும், பந்தப்பட்ட ஆத்மாக்களின் மீது கருணையுடையவர்களுமான உமது பக்தர்களின் தொடர்பு எனக்குக் கிடைக்குமாறு அருள்புரிதல் வேண்டும். இதுபோன்ற பக்தர்களுடன் தொடர்புகொள்வதற்கு என்னை அனுமதிப்பதே எனக்கு நீர் அருளும் சிறந்த வரமாகக் கருதுகிறேன்.

பதம் 4.24.59
ந யஸ்ய சித்தம் பஹிர்-அர்த-விப்ரமம்
தமோ-குஹாயாம் ச விஸீத்தம் ஆவிஸத்
யத்-பக்தி-யோகாநுக்ருஹீதம் அஞ்ஜஸா
முனிர் விசஷ்டே நனு தத்ர தே கதிம்

ந—இல்லை; யஸ்ய—அவரது; சித்தம்—இதயம்; பஹி:—வெளியானது; அர்த—விருப்பம்; விப்ரமம்—குழப்பம்; தம:—இருள்; குஹாயம்—ஓட்டையினுள்; ச—மேலும்; விஸீத்தம்—தூய்மை; ஆவிஸத்—நுழைதல்; யத்—அந்த; பக்தி-யோக—பக்தித்தொண்டு; அநுக்கிருஹிதாம்—ஆசி அருளப்பட்டு; அஞ்ஜஸா—மகிழ்வுடன்; முனி—நினைவில்; விஷ்டே—காண்பது; நனு—எவ்வாறேனும்; தத்ர—அங்கே; தே—உமது; கதிம்—செயல்கள்.

பக்திதேவியின் அருளாலும், பக்தித்தொண்டினாலும், இதயத்தை முற்றிலும் தூய்மை செய்து கொண்ட பக்தன், இருட் கிணறு தனது போன்றிருக்கும் புறச்சக்தியினால் குழப்பமடைவதில்லை. இவ்வாறு ஜட அழுக்குகள் முழுவதையும் நீங்கித் தூய்மையடைந்த பக்தன் உமது நாமம், வடிவம், புகழ், செயல்கள் போன்றவற்றை மிக மகிழ்ச்சியுடன் அறிந்து கொள்ளும் திறன் பெறுகிறான்.

பதம் 4.24.60
யத்ரேதம் வ்யஜ்யதே விஸ்வம் விஸ்வஸ்மின்ன அவபாதியத்
தத் த்வம் ப்ரஹ்ம பரம் ஜ்யோதிர் ஆகாஸம் இவ விஸ்த்ருதம்

யத்ர—எங்கு; இதம்—இந்த; வ்யஜ்யதே—வெளிப்படல்; விஷ்வம்—உலகம்; விஸ்வஸ்மின்—இயலுலகத் தோற்றம்; அவபாதி—வெளிப்பட்டது; யத்—அது; தத்—அது; த்வம்—நீர்; ப்ரஹ்ம—அருவமான பிரம்மம்; பரம்—உன்னதமான; ஜ்யோதி:—ஜோதி; ஆகாஸம்—வானம்; இவ—போல; விஸ்த்ருதம்—விரிகிறது.

எனது அன்பிற்குரிய பகவானே, வானத்தைப் போன்றும், சூரிய ஒளியைப் போன்றும் அருவமான பிரம்மம் எங்கும் பரவி இருக்கிறது. எங்கும் வியாபித்திருப்பதும் தன்னுள் இப்பிரபஞ்சத்தைக் கொண்டிருப்பதுமான அந்த அருவப் பிரம்மம் நீரே ஆவீர்.

பதம் 4.24.61
யோ மாயயேதம் புரு ரூபயாஸ்ருஜத்
பிபர்தி பூய: க்ஷபயதி அவிக்ரிய:
யத்-பேத-புத்தி: ஸத் இவாத்ம-து: ஸ்தயா
த்வம் ஆத்ம-தந்த்ரம் பகவான் ப்ரகீமஹி

ய:—யார்; மாயா—அவரது சக்தியினால்; இதம்—இந்த; புரு—பல்வகை; ரூபயா—தோற்றம்; அஸ்ருஜத—படைத்தல்; பிபர்தி—காத்தல்; பூய:—மீண்டும்; க்ஷபய—அழித்தல்; அவிக்ரிய:—எந்தவித மாற்றமுமின்றி; யத்—அந்த; பேத-புத்தி:—புத்திவேறுபாடு; ஸத்—நித்தியமான; இவ—போல; ஆத்ம-து: ஸ்தயா—ஒருவருக்குத் துன்பமிழைத்தல்; த்வம்—உமக்கு; ஆத்ம-தந்த்ரம்—முற்றிலும் ஆத்ம விடுதலையில்; பகவான்—ஓ, பகவானே, முழுமுதற் கடவுள்; ப்ரதீமஹி—நான் அறியக்கூடும்.

எனது அன்பிற்குரிய இறைவனே, உம்மிடம் பல்வகை ஆற்றல்கள் இருக்கின்றன; இவ்வாற்றல்களை நீர் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி இருக்கிறீர். இதுபோன்ற ஆற்றல்களினால் ‘இவ்வுலகைப் படைத்தீர். இது நிரந்தரமானது போன்று காத்தும் இறுதியில் அழிக்கவும் செய்கிறீர். இதுபோன்ற மாற்றங்களினாலும் மாறுபாடுகளினாலும் நீர் பாதிப்படைவதில்லை. ஆனால் உயிர்கள் பாதிப்படைகின்றன. ஆகையினால் அவை இவ்வியல் உலகத்தோற்றத்தினை உம்மிடமிருந்து வேறாகவும், பிரித்தும் காண்கின்றன. என் இறைவனே, நீர் எப்போதும் சுதந்திரமானவர். இவ்வுண்மையினை நான் நன்கு அறிவேன்.

பதம் 4.24.62
க்ரியா-கலாபைர் இதம் ஏகூ யோகின:
ஸ்ரத்தான்விதா: ஸாது யஜந்தி ஸித்தயே
பூதேந்த்ரியாந்த: கரணோபலக்ஷிதம்
வேதே ச தந்த்ரே ச தஏவ கோவிதா:

க்ரியா—செயல்கள்; கலானப:—செயல்முறையினால்; இதம்—இந்த; ஏவ—உறுதியாக; யோகின:—உன்னதமானவர்கள்; ஸ்ரத்தா-அன்விதா:—நம்பிக்கையுடனும் பற்றுறுதியுடனும்; ஸாது—கரியாக; யஜந்தி—பிரார்த்தனை; ஸித்தயே—நிறைவிற்காக; பூத—பௌதீகச்சக்தி; இந்த்ரிய—புலன்கள்; அந்த:-கரணதந்த்ரே—வேதங்களின் முடிவுகள்; ச—மேலும்; தே—மேலாண்மைக்குரியவரே; ஏவ—உறுதியாக; கோவிதா:—தேர்ச்சிபெற்றவர்கள்.

எனது அன்பிற்குரிய இறைவனே, உமது உலகளாவியத் தோற்றமானது புலன்; மனம், புத்தி, ஆணவம் (இது பௌதீகமானது) மற்றும் உமது பகுதி விரிவான பரமாத்மா, எல்லாவற்றையும் இயக்குபவர் என்ற ஐந்து மூலப் பொருள்களினால் ஆனது. பக்தரல்லாத யோகிகள் கர்ம யோகி மற்றும் ஞான யோகி போன்றோர் தத்தமக்குரிய இடத்திற்கேற்ற செயல்களினால் உம்மை வணங்குகின்றனர். வேதங்கள் மற்றும் அவற்றின் துணைமுடிவுகளான சாத்திரங்கள் போன்றவை நீரே வணங்கத்தக்கவர் என்று கூறுகின்றன. இதுவே எல்லா வேதங்களின் முடிவானக் கூற்றாகும்.

பதம் 4.24.63
த்வம் ஏக ஆத்ய: புருஷ: ஸீப்த-ஸக்திஸ்
தயா ரஜ: ஸத்த்வ-தமோ விபித்யதே
மஹான் அஹம் கம் மருத் அக்னி-வார்-தரா:
ஸீரர்ஷயோ பூத-கணா இதம் யத:

த்வம்—மேலாண்மை மிக்கவரே; ஏக:—ஒருவர்; ஆத்ய:—மூலம்; புருஷ:—புருஷர்; ஸீப்த—துயில்நிலையில்; ஸக்தி:—சக்தி; தயா—அதனால்; ரஜ:—ரஜோகுணம்; ஸத்த்வ—சத்துவகுணம்; தம:—தமோகுணம்; விபித்யதே—மாற்றமடைதல்; மஹான்—மொத்த ஜடசக்தி; அஹம்—ஆணவம்; கம்—வானம்; மருத்—காற்று; அக்னி—தீ; வா:—நீர்; தரா:—நிலம்; ஸீர-ருஷய:—தேவர்களும், மகா முனிவர்களும்; பூத-கணா:—உயிர்கள்; இதம்—இவையெல்லாம்; யத:—எவரிடமிருந்து.

அன்பிற்குரிய பகவானே, நீரே பரமபுருஷர், காரணங்கள் எல்லாவற்றிற்கும் மூல காரணர். பௌதீக உலகைப் படைப்பதற்கு முன்னால் உமது பௌதீகச் சக்தியானது துயில் கொண்டிருந்தது. உமது பௌதீகச் சக்தியானது கிளர்ச்சியுற்றப் பொழுது மூன்று குணங்களான சத்துவ, ரஜோ, தமோ குணங்கள் செயல்படத் தொடங்கின; அதன் விளைவாக ஆணவம், வான், காற்று, தீ, நீர், நிலம் மற்றும் பல்வேறு தேவர்களும், மகாமுனிவர்களும் தோன்றலாயினர். இவ்வாறு பௌதீக உலகம் படைக்கப்பட்டது.

பதம் 4.24.64
ஸ்ருஷ்டம் ஸ்வ-ஸக்த்யேதம் அனுப்ரவிஷ்டஸ்
சதுர்-விதம் புரம் ஆத்மாம்ஸகேன
அதோ விதுஸ் தம் புருஷம் ஸந்தம் அந்தர்
புங்க்தே ஹ்ருஷீனகர் மது ஸார-கம் ய:

ஸ்ருஷ்டம்—படைப்பில்; ஸ்வ-ஸக்த்யா—உமது சுய சக்தியால்; இதம்—இந்தப் பிரபஞ்சத்தில்; அனுய்ரவிஷ்ட:—அதன்பின் நுழைதல்; சது:-விதம்—நான்கு வகையான; புரம்—உடல்கள்; ஆத்ம-அம்ஸகேன—உமது முக்கியமான பாகம்; அதோ—ஆகையால்; விது:—அறிதல்; தம்—அவர்; புருஷம்—புருஷர்; ஸந்தம்—வாழ்கின்ற; அந்த:—அதனுள்; புங்க்தே—அனுபவித்தல்; ஹ்ருஷீகை:—புலன்களினால்; மது—தித்திப்பு; ஸார-கம்—தேன்; ய:—யார்.

உமது சுய ஆற்றலினால் படைப்பு நிகழ்ந்த பின், நீர் அப்படைப்பிற்குள்ளேயே நான்கு வகை வடிவங்களில் நுழைந்தீர். உயிர்களின் உள்ளங்களில் அமர்ந்து கொண்டு, நீர் அவர்களை அறிந்து கொண்டதோடு அவர்கள் தம் புலன்களினால் எவ்வாறு மகிழ்கின்றனர் என்பதையும் அறிகின்றீர். பௌதீகப் படைப்பின் மகிழ்ச்சி எனப்படுவது தேனடைக்குள் தேனைச் சேமித்து அத்தேனைத் தேனீக்கள் அனுபவித்து மகிழ்வதைப் போன்றதாகும்.

பதம் 4.24.65
ஸ ஏஷ லோகான் அதிசண்ட-வேகோ
விகர்ஷஸி த்வம் கலு கால-யான:
பூதானி பூனதர் அனுமேய-தத்த்வோ
கனாவலீர் வாயுர் இவாவிஷஹ்ய:

ஸ:—அது; ஏஷ:—இந்த; லோகான்—எல்லா உலகங்களும்; அதி—மிகவும்; சண்ட-வேக—அதிவேகத் தாக்குதலினால்; விகர்ஷஸி—அழிகிறது; த்வம்—தாங்கள்; கலு—இது எவ்வாறு; கால-யான:—உரிய காலத்தில்; பூதானி—உயிர்கள்; பூதை:—பிற உயிர்களினால்; அனுமேய்தத்த்வ:—முழுமெய்யானது உணரப்படும்; கன-ஆவலீ:—மேகங்கள்; வாயு:—காற்று; இவ—போல; அவிஷஹ்ய:—தாங்கவொண்ணாதது.

எனது அன்பிற்கினியவரே, உமது முழு அதிகாரமும் நேரடியாக உணர்ந்து கொள்ளக் கூடியதல்ல, ஆனால் யுக இறுதியில் இவ்வுலகம் அழிபடுகின்ற பொழுது அதன் செயல்களில் இருந்து ஒருவரால் யூகித்துக் கொள்ள முடியும். காலத்தின் வேகம் மிகவும் வலிமையுடையது. எவ்வாறு ஒரு விலங்கு மற்றொரு விலங்கினைக் கொன்று தின்கிறதோ அதுபோல் இவ்வுலகில் உள்ள அனைத்தும் சிலவற்றால் அழிக்கப்படும். காற்று எவ்வாறு மேகங்களைச் சிதறடிக்கிறதோ அதுபோல் காலம் எல்லாவற்றையும் சிதறடிக்கும்.

பதம் 4.24.66
ப்ரமத்தம் உச்சைர் இதி க்ருத்ய-சிந்தயா
ப்ரவ்ருத்த லோபம் விஷயேஷீ லாலஸம்
த்வம் அப்ரமத்த: ஸஹஸாபிபத்யஸே
க்ஷுல்-லேவிஹனோ ‘ஹிர் இவாகும் அந்தக:

ப்ரமத்தம்—புத்தி சுவாதீனமற்றோர்; உச்சை:—தீவிரமாக; இதி—இவ்வாறு; க்ருத்ய—செய்யப்படுவதற்கு; சிந்தயா—அவ்வாசையினால்; ப்ரவ்ருத்த—மிகவும் முன்னேறி; லோபம்—பேராசை; விஷயேஷீ—பௌதீக இன்பத்தில்; லாலஸம்—பேரவாகொண்டு; த்வம்—தாங்கள்; அப்ரமத்த:—எல்லாங்கடந்த உன்னத நிலையில்; ஸஹஸா—கண் இமைக்கும் நேரத்தில்; அபிபத்யஸே—பறித்துக்கொள்ளுதல்; க்ஷுத்—பசி; லேவிஹன:—பேராசை கொண்ட நாவினால்; அஹி:—பாம்பு; இவ—போல; ஆகும்—எலி; அந்தக:—அழிப்பவர்.

எனது அன்பிற்குரிய இறைவனே, பௌதீக உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தமது இச்சைகளை நிறைவேற்ற இதைச் செய்யலாமா அல்லது அதைச் செய்யலாமா என்று திட்டமிடுவதிலேயே எப்போதும் காலத்தைக் கழிக்கின்றன. இது அடங்கா ஆசையினாலேயே விளைகிறது. பௌதீக இன்பங்கள் மீதுள்ள பேரவா உயிர்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் பகவானே! நீர் எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்து எவ்வாறு பாம்பு எலியினை கண்மூடிக் கண்திறப்பதற்குள், பிடித்து விழுங்கி விடுகிறதோ அதுபோல் உரிய காலத்தில் பேரவா கொண்ட உயிர்களை எடுத்துக் கொள்கிறீர்.

பதம் 4.24.67
கஸ் த்வத்-பதாப்ஜம் விஜஹாதி பண்டிதோ
யஸ் தே ‘வமான-வ்யமான-கேதன:
விஸங்கயாஸ்மத்-குருர் அர்சதி ஸ்மயத்
விநோபபத்திம் மனவஷ் சதுர்தஸ

க:—யார்; த்வத்—உமது; பத-அப்ஜம்—பத்மபாதம்; விஜஹாதி—தவிர்த்தல்; பண்டித:—கற்றோர்; ய:—யார்; தே—உமக்கு; அவதான—ஏளனம்; வ்யமான—குறைதல்; கேதன:—இந்த உடல்; விஷயங்கயா—சந்தேகம் எதுவும் இன்றி; அஸ்மத்—எங்கள்; குரு:—ஆன்மீக குரு, தந்தை; அர்சதி—வணங்குகிறார்; ஸ்ம—கடந்தகாலத்தில்; யத்—அந்த; விநா—இன்றி; உபபத்திம்—போராடும்; மனவ:—மனுக்கள்; சது:-தஸ—பதினான்கு.

எனது அன்பான இறைவனே, கற்றவனாயிருந்தாலும் உம்மை வணங்காதவன் வாழ்க்கைப் பாழாகிறது. இதை அறிந்தால் அவன் ஏன் உமது திருவடித் தாமரைகளை வணங்காதிருக்கப் போகிறான்? எமது தந்தையும் ஆன்மீக குருவுமான பிரம்மதேவனே உம்மை எந்தவிதத் தயக்கமுமின்றி வழிபட்டவர் ஆவார். அவரையே பதினான்கு மனுக்களும் பின்பற்றினர்.

பதம் 4.24.68
அதோ த்வம் அஸிநோ ப்ரஹ்மன் பரமாத்மன் விபஸ்சிதாம்
விஸ்வம் ருத்ர-பய-த்வஸ்தம் அகுதஸ்சித்-பயா கதி:

அத—ஆகையினால்; த்வம்—நீர், எனது பகவானே; அஸி—இருக்கின்றீர்; ந:—எங்கள்; ப்ரஹ்மன்—ஓ, பரம்பிரம்மனே; பரம-ஆத்மன்—ஓ, பரமாத்மாவே; விபஸ்சிதாம்—கற்றறிந்த அறிஞர்கட்கு; விஸ்வம்—முழுப்பிரபஞ்சமும்; ருத்ர-பய—ருத்திர பயத்தினால்; த்வஸ்தம்—அழிக்கப்பட்டது; அகுதஷ்சித்-பயா—சந்தேகத்திற்கிடமின்றி பயந்ததில்லை; கதி:—அடையும் இடம்.

எனது அன்பிற்குரிய பகவானே, கற்றறிந்த அறிஞர்கள் நீரே பரப்பிரம்மம் என்றும் பரமாத்மா என்றும் நன்கறிவர். இறுதியில் எல்லாவற்றையும் அழிப்பவராக ருத்திரர் விளங்குவதால் அவரைக்கண்டு இவ்வுலகம் முழுதுமே அஞ்சினாலும், கல்வியில் சிறந்தவர்கள் அஞ்சாது அடையும் இடமாக நீரே விளங்குகின்றீர்!

பதம் 4.24.69
இதம் ஜபத பத்ரம் வோ விஸீத்தா ந்ருப-நந்தனா:
ஸ்வ-தர்மம் அநுதிஷ்டந்தோ பகவதி அர்பிதாஸயா:

இதம்—இந்த; ஜபத—ஜபிக்கும்பொழுது; பத்ரம்—எல்லா மங்கலங்களும்; வ:—எல்லோரும்; விஸீத்தா:—தூய்மையடைதல்; ந்ரூப-நந்தனா:—அரச புத்திரர்களே; ஸ்வதர்மம்—சுதர்மம்; அநுதிஷ்டந்த:—செய்யும் பொழுது; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; அர்பித—அர்ப்பணித்து; ஆஸயா:—எல்லாவித நம்பிக்கைகளும் கொண்டு.

எனது அன்பிற்குரிய அரச புத்திரர்களே, நீங்கள் தூய்மையான உள்ளத்துடன் அரசனுக்குரிய காரியங்களை ஆற்றுவீராக! பகவானின் திருவடித்தாமரைகளின் மீது மனதை வைத்து இம்மந்திரத்தினை ஜெபிப்பீராக. பகவான் மகிழ்ந்தார் என்றால் மங்கலங்களும் உண்டாகும்.

பதம் 4.24.70
தம் ஏவாத்மானம் ஆத்ம-ஸ்தம் ஸர்வ-பூதேஷு அவஸ்திதம்
பூஜயத்வம் க்ருணந்தஸ் ச த்யாயந்தஷ் சாஸக்ருத் தரிம்

தம்—அவருக்கு; ஏவ—உறுதியாக; ஆத்மானம்—பரம ஆத்மா; ஸ்தம்—உங்கள் உள்ளங்களில்; ஸர்வ—எல்லாம்; பூதேஷு—எல்லா உயிர்களிலும்; அவஸ்திதம்——இருக்கிறார்; பூஜயத்வம்—அவரைப் பிரார்த்திப்பதின் மூலம்; க்ருனந்த:-ச—எப்போதும் ஜெபித்து; த்யா-யந்த:—எப்போதும் தியானித்து; அஸக்ருத்—தொடர்ந்து; ஹரிம்—முழுமுதற் கடவுள்.

ஆகையினால் மன்னன் மைந்தர்களே, முழுமுதற் கடவுளை ஹரி என்பவர் எல்லோர் உள்ளங்களிலும் வீற்றிருக்கின்றார். அவர் உங்கள் உள்ளங்களிலும் எப்போதும் இருக்கிறார். ஆகையினால் பகவானின் புகழினை ஜெபித்து எப்போதும் அவரைத் தியானிப்பீர்களாக.

பதம் 4.24.71
யோகாதேஸம் உபாஸாத்ய தாரயந்தோ முனி-வ்ரதா:
ஸமாஹித-திய: ஸர்வ ஏதத் அப்யஸதாத்ருதா:

கோய-ஆதேஸம்—பக்தியோகத்தின் இக்கருத்துகள்; உபாஸாத்ய—தொடர்ந்து கற்பதினால்; தாரயந்த:—மனதிற்கொள்வதினாலும்; முனி-வ்ரதா:—மாமுனிவர்களைப் போல் சபதமேற்கொண்டு, மவுனவிரதம்; ஸமாஹித—எப்போதும்; மனதை நிலைபெறச் செய்தல்; திய:—புத்தியுடன்; ஸர்வே—நீங்கள் எல்லாம்; ஏதத்—இந்த; அப்யஸத—பயிற்சி; ஆத்தோ:—பயபக்தியுடன்.

அன்பான இளவரசர்களே! பிரார்த்தனையின் மூலம் பகவானின் புனித நாமத்தைச் ஜெபிக்கும் யோகமுறையினை உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். நீங்கள் எல்லோரும் இம்முக்கியமான ஸ்தோத்திரத்தினை உங்கள் மனதிற் கொண்டு மாபெரும் முனிவர்களாக வருவதற்கு சபதம் மேற்கொள்வீராக. மகாமுனிவர்களைப் போல் மௌனத்தில் ஆழ்ந்து பயபக்தியுடன் முழுக்கவனம் கொடுத்து இம்முறையினை பயிற்சி செய்வீராக.

பதம் 4.24.72
இதம் ஆஹ புராஸ்மாகம் பகவான் விஸ்வஸ்ருக்-பதி:
ப்ருக்வ-ஆதீனாம் ஆத்மஜானாம் ஸிஸ்ருக்ஷீ: ஸம்ஸிஸ்ருக்ஷதாம்

இதம்—இவ்வாறு; ஆஹ—சொன்னார்; பிரா—முன்னர்; அஸ்மாகம்—நமக்கு; பகவான்—பகவான்; விஸ்வாஷ்ருக்—உலகத்தைப் படைத்தவர்கள்; பதி:—நாயகர்; ப்ருகு-ஆதினாம்—பிருகு முனிவரின் தலைமையின் கீழ் உள்ள மகாமுனிவர்கள்; ஆத்மஜானாம்—அவரது மைந்தர்களின்; ஸிஸ்ருக்ஷீ:—படைப்பின் மீதுள்ள ஆர்வம்; ஸம்ஸிஸ்ருக்ஷதாம்—படைத்தலுக்குப் பொறுப்பானவர்கள்.

எல்லாவற்றையும் படைத்தவரான நான்முகப் பிரம்மனாலே இப்பிரார்த்தனை முதலில் நமக்கு அருளப்பட்டது. பிருகுவின் தலைமையின் கீழுள்ள படைப்பாளர்கள் படைக்க வேண்டும் என்று விரும்பியதினால் அவர்களுக்கும் இது அறிவுறுத்தப்பட்டது.

பதம் 4.24.73
தே வயம் நோதிதா: ஸர்வே ப்ரஜா-ஸர்கே ப்ரஜேஸ்வரா:
அநேன த்வஸ்ட தமஸ: ஸிஸ்ருக்ஷ மோ விவிதா: ப்ரஜா:

தே—அவரால்; வயம்—நாம் எல்லோரும்; நோதித:—கட்டளையிடப்பட்டு; ஸர்வே—எல்லாம்; ப்ரஜா-ஸர்கே—எல்லா உயிர்களையும் ஒழுங்குப்படுத்துபவர்களாக; அநேன—இதனால்; த்வஸ்த-தமஸ:—எல்லா அறியாமைகளில் இருந்தும் விடுதலை பெற்று; ஸிஸ்கே’ஷீம:—நாம் படைத்தோம்; விவிதா:—பல்வேறு விதமான; ப்ரஜா:—உயிர்வாழிகள்.

இவ்வாறு அனைத்துப் பிரஜாபதிகளும் பிரம்மதேவனால் படைப்பதற்குக் கட்டளையிடப்பட்ட பொழுது, நாங்கள் பகவானைப் புகழ்ந்து பாடியதனால் எல்லா அறியாமைகளில் இருந்தும் முற்றிலும் விடுதலை பெற்றோம். இவ்வாறு பல்வேறு உயிர்களைப் படைப்பதற்குரிய திறமையை நாங்கள் பெற்றோம்.

பதம் 4.24.74
அதேதம் நித்யதா யுக்தோ ஜபன்ன அவஹித: புமான்
அசிராச் ச்ரேய ஆப்னோதி வாஸீதேவ-பராயண:

அத—இவ்வாறு; இதம்—இந்த; நித்யதா—தொடர்ந்து; யுக்த:—முழு ஈடுபாட்டுடன்; ஜபன்—முணுமுணுப்பினால்; அவஹித:—முழு ஈடுபாடு; புமான்—ஒருவன்; அசிராத்—தாமதமின்றி; ஸ்ரேய:—மங்கலம்; ஆப்னோதி—அடைகிறான்; வாஸீதேவ-பராயண:—பகவான் கிருஷ்ணரின் பக்தன்.

பகவான் கிருஷ்ணரிடம் எப்போதும் தன் மனதை வைத்து முழு ஈடுபாட்டுடனும் பயபக்தியுடனும் இந்த ஸ்தோத்திரத்தினை (பிரார்த்தனை) ஜெபிப்பவன் எந்தவித தாமதமுமின்றி வாழ்வில் மிக உயர்ந்த நிறைவைப் பெறுகிறான்.

பதம் 4.24.75
ஸ்ரேயஸாம் கிஹ ஸர்வேஷாம் ஜ்ஞானம் நி: ஸ்ரேயஸம் பரம்
ஸீகம் தரதி துஷ்பாரம் ஜ்ஞான-நௌர் வ்யஸனால்நவம்

ஸ்ரேயஸாம்—எல்லா வரங்களிலும்; இஹ—இவ்வுலகின்; ஸர்வேஸாம்—எல்லோரும்; ஜ்ஞானம்—ஞானம்; நி: ஸ்ரேயஸம்—பரமபலன்; பரம்—உன்னதமான; ஸீகம்—மகிழ்ச்சி; தரதி—கடப்பது; துஷ்பாரம்—கடக்கமுடியாது; ஜ்ஞான—ஞானம்; நெ:—படகு; வ்யஸன—ஆபத்தானது; அர்ணவம்—கடல்.

இப்பௌதீக உலகில் அடைவதற்குரியவை எத்துணையோ இருக்கின்றன. அவற்றுள் எல்லாம் தலையானது ஞானமேயாகும். ஏனெனில் ஞானமெனும் படகினால் தான் அறியாமைக் கடலினை ஒருவன் கடக்கமுடியும். இல்லையெனில் அக்கடல் கடப்பதற்கரியதாகும்.

பதம் 4.24.76
ய இமம் ஸ்ரத்தயா யுக்தோ மத்-கீதம் பகவத்-ஸ்தவம்
அதீயானோ துராராத்யம் ஹரியம் ஆராதயதி அஸென

ய:—யாரேனும்; இமம்—இந்த; ஸ்ரத்தயா—மிகுந்த நம்பிக்கையுடன்; யுக்த:—பயபக்தியுடன்; மத்-கீதம்—என்னால் இயற்றிப் பாடப்பட்டப் பாடலை; பகவத்-ஸ்தவம்—முழுமுதற் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரார்த்தனையை; அத்யான:—தொடர்ந்து கற்பதினால்; துராராத்யம்—வழிபடுதற்கு கடினமாக; ஹரிம்—முழுமுதற் கடவுள்; ஆராத்யதி—அவனால் வழிபடமுடியும்; அஸென—அந்த மனிதன்.

முழுமுதற் கடவுளை பக்தித் தொண்டின் மூலம் வழிபடுவது ஒருவனுக்குக் கடினமானதாக இருந்தால் அவன் என்னால் இயற்றிப் பாடப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தினை (பிரார்த்தனையினை) படித்தானாயின் முழுமுதற் கடவுளின் கருணைக்கு விரைவில் பாத்திரமாவான்.

பதம் 4.24.77
விந்ததே புருஷோ ‘முஷ்மாத் யத் யத் இச்சதி அஸத்வரம்
மத்-கீத-கீதாத் ஸீப்ரீதாச் ச்ரேயஸாம் ஏக-வல்லபாத்

விந்ததே—அடைதல்; புருஷ:—பக்தன்; அமுஷ்மாத்—முழுமுதற் கடவுளிடமிருந்து; யத்-யத்—எது, எது; இச்சதி—இச்சைகள்; அஸத்வரம்—நிலைநிற்றல்; மத்-சீதா—என்னால் பாடப்பட்ட; கீதாத்—பாடலினால்; ஸீ-ப்ரீதாத்—மிகவும் மகிழ்ச்சியுற்றப் பகவானிடமிருந்து; ஸ்ரேயஸாம்—எல்லா வரங்களின்; ஏக—ஒன்று; வல்லபாத்—மிகவும் அன்புக்குரியவரிடமிருந்து.

மங்கலமான வரங்கள் அனைத்திலும் உயர்ந்த நேசிப்பிற்குரியவராக முழுமுதற் கடவுளே விளங்குகிறார். நான் பாடிய பாடலைப் பாடும் மனிதன் முழுமுதற் கடவுளை மகிழ்ச்சிப்படுத்துகிறான். இவ்வாறு பகவானின் பக்தித் தொண்டில் நிலைநிற்கும் பக்தன் தான் விரும்பும் அனைத்தையும் பகவானிடமிருந்து பெறுகிறான்.

பதம் 4.24.78
இதம் ய: கல்ய உத்தாய ப்ராஞ்ஜலி: ஸ்ரத்தயான்வித:
ஸ்ருணுயாச் சீராவயேன் மர்த்யோ முச்யதே கர்ம-பந்தனை:

இதம்—இந்தப்பிரார்த்தனை; ய:—எந்த ஒரு பக்தனால்; கல்யே—அதிகாலையில்; உத்தாய—எழுந்தவுடன்; ப்ராஞ்ஜலி—கூப்பியக்கரங்களுடன்; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடனும் பக்தியுடனும்; அன்வித:—இவ்வாறு ஆழ்ந்திருந்தால்; ஸ்ருணுயாத்—தனிப்பட்ட முறையில் கேட்டல் மற்றும் ஓதுதல்; ஸ்ராவயேத்—பிறரையுங் கேட்கச் செய்தல்; மர்த்ய:—அப்படிப்பட்ட மனிதன்; முச்யதே—விடுதலை பெறுகிறான்; கர்ம-பந்தனை:—பலன்தரும் செயல்களின் எல்லா விளைவுகளிலிருந்தும்.

ஒரு பக்தன் அதிகாலையில் எழுந்து கூப்பியகரங்களுடன் சிவபெருமான் பாடியப் பிரார்த்தனைப் பாடலை ஓதியும், அதனைப் பிறர் கேட்கும்படியும் செய்தானென்றால் அவன் பலன்தரும் செயல்களின் எல்லாக் கட்டுக்களில் இருந்தும் உறுதியாக விடுதலை பெறுகிறான்.

பதம் 4.24.79
கீதம் மயேதம் நரதேவ-நந்தனா:
பரஸ்ய பும்ஸ: பரமாத்மன: ஸ்தவம்
ஜபந்த ஏகாக்ர-தியஸ் தபோ மஹத்
சரத்வம் அந்தே தத ஆப்ஸ்யதேப்ஸிதம்

கீதம்—பாடிய; மயா—என்னால்; இதம்—இந்த; நரதேவ-நந்தனா:—ஓ, மன்னன் மைந்தர்களே; பரஸ்ய—பரமபுருஷரின்; பும்ஸ:—முழுமுதற் கடவுள்; பரம-ஆத்மன:—எல்லோரிடமும் உள்ள பரமாத்மா; ஸ்தவம்—பிரார்த்தனை; ஜபந்த:—ஜெபம்; ஏக—முழு ஈடுபாட்டுடன்; திய:—ஞானம்; தப:—தவங்கள்; மஹத்—சிறந்த; சரத்வம்—நீங்கள் பயிற்சித்தால்; அந்தே—முடிவில்; தத:—அதன்பிறகு; ஆப்ஸ்யத—அடைவான்; ஈப்ஸிதம்—வேண்டிய பலன்.

எனது அன்பிற்குரிய அரச புத்திரர்களே, நான் உங்களுக்கு இசைத்த இப்பிரார்த்தனையானது உண்மையில் பரமாத்மாவான முழுமுதற் கடவுளை மகிழ்ச்சியடையச் செய்வதற்கே இசைக்கப்பட்டது. உங்களுக்கு எனது அறிவுரை, பெருந்தவங்களுக்கு ஈடான இப்பிரார்த்தனைகளை நீங்களும் இசைக்க வேண்டும் என்பதே. இவ்வழியில் நீங்கள் முதிர்ச்சி பெற்றால் உங்கள் வாழ்க்கை வெற்றியடைவதோடு நீங்கள் அடைய விரும்பும் எல்லாவற்றையும் தோல்வியின்றி உறுதியாக அடையலாம்.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “சிவபெருமான் பாடிய துதிப்பாடல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தி நான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare