அத்தியாயம் – 22
பிருது மகாராஜாவை நான்கு குமாரர்கள் சந்தித்தல்
பதம் 4.22.1 : மகாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: குடிமக்கள் இவ்வாறு மிகவும் ஆற்றல் பெற்ற மன்னரான பிருதுவைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த பொழுது செங்கதிரோனின் தங்கநிறம் அங்குமெங்கும் ஒளிவீச நான்கு குமாரர்களும் அந்த இடத்திற்கு வந்தனர்.

பதம் 4.22.2 : வீசுகின்ற ஒளியுடன், அனைத்து யோகஸித்திகளின் தலைவர்களான நான்கு குமாரர்களையும் கண்டவுடன், மன்னரும் அவரைச் சேர்ந்தவர்களும் இவர்கள் நால்வரும் வானின்று அவதரித்து வந்தவர்கள் என்பதைப் புரிந்து கொண்டனர்.

பதம் 4.22.3 : குமாரர்களின் வருகையினைக் கண்டதும், பிருது மகாராஜா அவர்களை வரவேற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டார். அரசரும் அவரைச் சார்ந்த அலுவலர்களும், ஒரு பந்தப்பட்ட ஆத்மாவின் புலன்கள் ஜட இயற்கையின் குணங்களினால் எத்துணை விரைவாக கவரப்படுகின்றனவோ அதுபோல் வேகமாக எழுந்தனர்.

பதம் 4.22.4 : முனிவர்கள் பெருமைகளினால் உணர்ச்சிவயப்பட்டப் பிருது மகாராஜா, சாஷ்டாங்கமாக அவர்கள் முன்னே வீழ்ந்து வணங்கினார், பிறகு சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள முறைக்கேற்ப அவர்களை வரவேற்று அவர்களுக்குரிய ஆசனங்களை மன்னர் சுட்டிக்காட்டியவுடன் அவர்களும் மன்னரது வரவேற்பினை மனதார ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய இடங்களில் அமர்ந்தனர்.

பதம் 4.22.5 : அதன் பின்னர் மன்னர் நீர் கொண்டு குமாரர்களின் பத்மபாதங்களைக் கழுவி அத்தீர்த்தத்தினைத் தன் தலையில் தெளித்துக் கொண்டார். மிக உயர்ந்த நிலையில் உள்ளமன்னர்கூட அம்மரியாதைக்குரியச் செயலினைச் செய்ததின் மூலம் உயர்ந்த ஆன்மீகப் பெரியவர்களை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை எல்லோருக்கும் எடுத்துக்காட்டினார்.

பதம் 4.22.6 : இந்நான்கு மகாமுனிவர்களும் சிவபெருமானுக்கு மூத்தவர்கள் ஆதலினால் அவர்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்திருந்த தோற்றமானது பலிபீடத்தில் எரிகின்ற நெருப்பினைப்போல் இருந்தது. பிருது மகாராஜா அவர்களிடத்துக் கொண்டிருந்த உயர்ந்த மரியாதை மற்றும் மதிப்பின் காரணமாக மிகவும் அடக்கத்துடன் பேசத் தொடங்கினார்.

பதம் 4.22.7 : பிருது மன்னர் கூறினார்: எனது மரியாதைக்குரிய மகாமுனிவர்களே. மங்கலமே உருவெடுத்து வந்தவர்களே, சக்திமிக்க யோகிகளின் பார்வைக்கும் நீங்கள் அரிதானவர்கள். உண்மையில் நீங்கள் மிகவும் அரிதாகக் காணப்படுபவர்கள். எந்தவித முயற்சியுமின்றி எனக்கு நீங்கள் காட்சி தந்தமைக்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ?

பதம் 4.22.8 : அந்தணர்களும் வைணவர்களும் யாரைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றனரோ அவனுக்கு அரியது இம்மையிலும் மறுமையிலும் எதுவுமில்லை. அதுமட்டுமல்ல அவன் அந்தணர்களும், வைணவர்களும் சூழ்ந்திருக்கும் மங்கலம் நிறைந்த சிவபெருமான் மற்றும் பகவான் விஷ்ணு போன்றோர்களின் அருளுக்கும் பாத்திரமாகிறான்.

பதம் 4.22.9 : பிருத மகாராஜா தொடர்ந்து கூறினார்: எல்லோர் மனங்களிலும் இருந்து கொண்டு நடக்கின்ற எல்லாவற்றையும் ஓர் சாட்சியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முழுமுதற் கடவுளை ஒருவனால் அறிய முடியாதது போலவே, எல்லா உலகங்களுக்கும் சென்று வரும் உங்களையும் அறிய முடியாதவர்களாக மக்கள் இருக்கின்றனர். ஏன், பிரம்மதேவனும், சிவபெருமானும் கூட பரமாத்மாவை அறிய முடியாதவர்களே.

பதம் 4.22.10 : குடும்ப வாழ்க்கையில் பற்றுடையவன், பெரிய செல்வந்தனாக இல்லாது இருந்தபோதும் அவனது இல்லத்திற்கு தெய்வீக அருளாளர்கள் விஜயம் செய்தால் அவன் மிகவும் பெருமையுடையவனாகிறான். அவ்வருளாளர்களுக்கு நீரும், அமர்வதற்கான ஆசனமும், உபசாரப் பொருட்களும் வழங்கும் அந்த வீட்டின் எஜமானனும் பணியாட்களும் பெருமையடைகின்றனர். ஏன் அவனது இல்லமே பெருமையடைகின்றது.

பதம் 4.22.11 : எல்லாச் செல்வங்களும் பொருள் வளமும் பெற்றிருந்தும் ஓர் தனவந்தன் தன் வீட்டிற்கு வரும் தெய்வீக அருளாளர்களுக்கு அனுமதி மறுப்பதோ அவர்கள் திருவடிகளைக் கழுவுவதற்கு நீர் தர மறுப்பதோ எதனைப் போன்றதென்றால் விஷப்பாம்புகள் வாழும் மரத்தினைப் போன்றது அவன் மாளிகையாகும்.

பதம் 4.22.12 : பிருது மகாராஜா நான்கு குமாரர்களையும் வரவேற்கும் பொழுது அவர்களை அந்தணர்களில் சிறந்தோர் என்று கூறினார். அவர்களை வரவேற்றுப் பேசும்பொழுது: நீங்கள் பிறந்தநாள் தொட்டு இன்று வரை பிரம்மச்சரிய விரதத்தைக் காத்து வருகின்றீர்கள், மேலும் நீங்கள் முக்திநெறியில் நல்லனுபவம் உடையவர்களாக விளங்கிய போதிலும் உங்களைக் குழந்தைகளைப் போல் வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

பதம் 4.22.13 : பிருது மகாராஜா அம்முனிவர்களிடம் கேட்டார், தங்களது முன்வினைப் பயனால் ஆபத்தான பௌதீக வாழ்க்கையில் வந்து சிக்கிக் கொண்ட மனிதர்களில் லட்சியமே புலன்நுகர்ச்சி ஒன்றின் மேல்தான் இருக்கின்றது அவர்களுக்கு ஏதேனும் நன்மைகள் அருளப்படுமா?

பதம் 4.22.14 : பிருது மகாராஜா தொடர்ந்து கூறினார்: நீங்கள் எப்போதும் ஆன்மீக இன்பத்தில் திளைப்பவர்கள் ஆதலினால் உங்களிடம் நல்லதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டத்தினைப் பற்றிக் கேட்க வேண்டிய தேவை இல்லை. மங்கலம் அல்லது அமங்கலம் போன்றவற்றினால் ஏற்படும் மனக்குழப்பங்கள் உங்களிடம் தோன்றுவதில்லை.

பதம் 4.22.15 : பௌதீக வாழ்க்கை நெருப்பில் எரிந்து கொண்டிருப்பவர்களின் உற்ற துணைவர்கள் நீங்கள்தான் என்பதில் நான் உறுதியுடையவனாய் இருக்கின்றேன். ஆகையினால் இப்பௌதீக உலகில் எவ்வாறு நாங்கள் எங்கள் உயர்ந்த இலட்சியத்தினை விரைவில் எய்தக்கூடும் என்று கேட்க விரும்புகிறேன்.

பதம் 4.22.16 : முழுமுதற் கடவுள் தன் அங்கத்தில் முக்கிய அங்கங்களாக விளங்கும் உயிர்களைக் கடைத்தேற்றுவதிலேயே எப்போதும் ஆர்வமுடையவராக இருக்கின்றார். அவர்களின் சிறந்த நன்மைக்காக பகவான் உங்களைப் போன்ற தன்னை உணர்ந்த ஞானிகளின் வடிவத்தில் எல்லா உலகங்களுக்கும் வருகை தருகிறார்.

பதம் 4.22.17 : மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: பிரம்மச்சாரிகளில் சிறந்த ஸனத் குமாரர்கள் பிருது மன்னரின், அர்த்தமுள்ள, சரியான, முற்றிலும் மதிப்புமிக்க வார்த்தைகளினால் ஆன, கேட்பதற்கு மிகவும் இனிமையான பேச்சினைக் கேட்டு முழு நிறைவுடன் புன்னகை பூத்து கீழ்க்கண்டபடி பேசத் துவங்கினர்.

பதம் 4.22.18 : சனத் குமாரர் கூறினார் அன்பான பிருதுமன்னனே, உன்னால் நான் மிகவும் மென்மையாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கின்றேன். இதுபோன்ற கேள்விகள் எல்லா உயிர்களுக்குமே நலன் பயப்பன, ஏனென்றால் எப்போதும் பிறர் நலன் விரும்பும் உன்னால் அல்லவா இக்கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் தெரிந்த நீயே இக்கேள்விகளைக் கேட்டிருக்கின்றாய் ஏனென்றால் அதுதானே தெய்வீக அருளாளரின் குணம். உனது நிலைக்கு உன் புத்திசாலித்தனம் சரியாகப் பொருந்துகின்றது.

பதம் 4.22.19 : பக்தர்கள் ஒருங்கிணைந்திருக்கும் அவையில் நடைபெறும் கேள்வி பதில்கள், விவாதம் போன்றவற்றின் முடிவுகள் பேச்சாளர் அவையினர் என இருவருக்குமே ஏற்புடையனவாக இருக்கும். இவ்வாறு இதுபோன்ற கூட்டம் எல்லோருக்கும் உண்மை இன்பத்தை அளிக்கிறது.

பதம் 4.22.20 : சனத் குமாரர் தொடர்ந்து கூறுகிறார்: எனது அன்பான மன்னனே நீ ஏற்கெனவே முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளைப் போற்றிப் புகழ்வதில் நாட்டமுடையவனாக இருக்கின்றாய். இதுபோன்ற நாட்டம் அடைவதற்கு மிகவும் அரியதாகும், ஆனால் ஒருவன் பகவானின் மீது இதுபோன்ற தொய்வில்லாத நம்பிக்கை வைக்கும் போது அது அவன் மனதில் உள்ள பேராசைகளைத் தானே நீக்கி தெளிவு பெறச் செய்கிறது.

பதம் 4.22.21 : ஆய்ந்து அறிந்த வேதங்களின் முடிவாக இருப்பது என்னவென்றால், மனித சமுதாயத்திற்கு நலன் பயக்கும் வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியம், உடலியற் கருத்துக்களிலிருந்து விடுபட்டு ஜட இயற்கையின் குணங்களைக் கடந்து உன்னத நிலையில் இருக்கும் பரமபுருஷ பகவான் மீது நீங்காத பற்று வைக்க வேண்டும் என்பதே.

பதம் 4.22.22 : பரமபுருஷரிடம் கொண்ட பற்றினை வளர்ப்பதற்குரிய வழிகளாக, பக்தித் தொண்டில் ஈடுபடுதல், முழுமுதற் கடவுளைப் பற்றிக் கேட்டறிவது, பக்தியோகத்தினை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது, யோககேஸ்வரரை வழிபடுவது, முழுமுதற் கடவுளின் பெருமைகளை ஓதுவது போன்றவைகளாகும். இச்செயல்கள் எல்லாம் புனிதமானவைகளாகும்.

பதம் 4.22.23 : ஆன்மீக வாழ்க்கையில் வளர்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் ஒருவன் பணத்தின் மீதே குறியாக இருப்பவனிடமும், புலன் நுகர்ச்சியில் திளைப்பவனிடமும் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களோடு மட்டுமல்லாது அவர்களோடு தொடர்புடையவர்களிடமும் கூட உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன், ஹரி என்றழைக்கப்படும் முழுமுதற் கடவுளின் பெருமை என்னும் அமிர்தத்தைப் பருகாமல் நிம்மதியாக வாழ முடியாது. புலன் இன்பம் என்னும் போதையிடம் வெறுப்படையும் பொழுதே ஒருவன் இவ்வாறு உயர்வடை முடியும்.

பதம் 4.22.24 : ஆன்மீக வளர்ச்சியில் பங்கு பெறுபவன் அஹிம்சாவாதியாகவும், உயர்ந்த ஆச்சார்யர்களின் பாதையினைப் பின்பற்றுபவனாகவும், முழுமுதற் கடவுளின் தீராத விளையாட்டு என்னும் அமிர்தத்தைப் பற்றியே எப்போதும் நினைப்பவனாகவும், பொருள் ஆசையின்றி ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடிப்பவனாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடிக்கும் பொழுது பிறரை நிந்திக்கக் கூடாது. ஒரு பக்தன் எப்போதும் எளிய வாழ்க்கை வாழ்ந்து, எதிரெதிர் தன்மைகளையுடைய பொருட்களின் இருமையினால் துன்புறாது இருத்தல் வேண்டும். அவன் அவற்றைப் பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பதம் 4.22.25 : ஒரு பக்தன் முழுமுதற் கடவுளின் தெய்வீக லீலைகளைப் பற்றித் தொடர்ந்து கேட்பதின் மூலம் பக்தித் தொண்டினை படிப்படியாக அதிகரித்துக் கொள்ள வேண்டும். இந்த லீலைகள் எல்லாம் பக்தர்களின் காதுகளை அலங்கரிக்கும் அணிகலன்களாகும். பக்தித் தொண்டு செய்வதினாலும், பௌதீகக் குணங்களைக் கடப்பதினாலும் ஒருவன் முழுமுதற் கடவுளின் உன்னதத்தில் மிக எளிதாக நிலைபெற முடியும்.

பதம் 4.22.26 : ஆன்மீக குருவின் அருளினால் பற்றுக்களைத் துறந்து, தெளிவு பெற்று முழுமுதற் கடவுளிடத்து தனதுப் பற்றுதலை நிலைநிறுத்திக் கொண்ட உயிரானது பஞ்சபூதங்களினால் மூடப்பட்டு இதயத்தின் நடுவில் இருந்தாலும் எவ்வாறு விறகிலிருந்து தோன்றிய நெருப்பு அதனையே எரித்துச் சாம்பலாக்குவது போல் அது தனது பௌதீகச் சூழல்களையும் எரிக்கிறது.

பதம் 4.22.27 : ஒருவன் தன்னிடத்தில் உள்ள எல்லா பௌதீக ஆசைகளையும் ஒழித்து, எல்லாப் பௌதீகத் தன்மைகளில் இருந்தும் விடுதலை பெறும்போது அவன் தன் அகத்திலும் புறத்திலும் நடக்கும் செயல்களின் வேறுபாடுகளைக் கடந்தவனாகிறான். அப்போது தன்னை உணர்வதற்கு முன்பிருந்த ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள வேறுபாடு அழிகின்றது. கனவு முடியும் போது அதனைக் கண்டவனுக்கும் கனவிற்கும் உள்ள வேறுபாடு நீண்ட நேரம் நிலைப்பதில்லை அல்லவா.

பதம் 4.22.28 : புலன் நுகர்ச்சிக்காக ஆத்மா இருக்கும் பொழுது அவன் பல்வேறு ஆசைகளை உருவாக்குகிறான், அதன் காரணமாக பல்வேறு தகுதி நிலைகளுக்குப் பாத்திரமானவனாகிறான், ஆனால் அவன் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இருக்கும் பொழுது முழுமுதற் கடவுளின் திருப்தி ஒன்றினைத் தவிர வேறெவற்றினிடத்தும் ஆர்வம் காட்டுவதில்லை.

பதம் 4.22.29 : ஒருவன் தன் உருவத்தின் பிரதிபலிப்பை நீரிலும், எண்ணையிலும் கண்ணாடியிலும் எத்தனை வேறுபாடு உடையதாகக் காண்கின்றானோ அதுபோல் பல்வேறு காரணங்களினால் ஒருவன் தன்னிடமிருந்து மற்றொருவனை வேறுபாட்டுடன் காண்கிறான்.

பதம் 4.22.30 : ஒருவனது மனமும் புத்தியும் புலன்களுக்கு இன்பம் அளிக்கும் பொருள்களினால் கவரப்படும் பொழுது அவனது மனம் கிளர்ச்சியடைகின்றது. இவ்வாறு ஓருவன் புலன்களுக்கு இன்பம் அளிக்கும் போகப் பொருட்களைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் நீர்நிறைந்த ஏரியின் கரையில் நிற்கும் நாணல் காடு எப்படி நீர் முழுவதையும் படிப்படியாக உறிஞ்சி காலி செய்துவிடுகின்றதோ அதுபோல் அவனும் தன்னுடைய உண்மையான உணர்வினை இழந்து விடுகின்றான்.

பதம் 4.22.31 : ஒருவன் தனது உண்மை உணர்வினை விட்டு விலகும் பொழுது அவன் தனது முந்தைய நிலையினையும், தனது தற்கால நிலையினையும் நினைத்துப் பார்க்கும் சக்தியினை இழந்துவிடுகிறான். அவ்வாறு நினைவு தப்பும் பொழுது அவன் சேர்த்த அறிவெல்லாம் பொய்ம்மை அஸ்திவாரத்தின் மீது அமைந்ததாகின்றது. இந்நிலை ஏற்படும் பொழுதே கற்றறிந்த அறிஞர்கள் அவனது ஆத்மா தொலைந்து விட்டது என்று கருதுகின்றனர்.

பதம் 4.22.32 : ஆத்மாவைப்பற்றி அறிதலை விட பிறபொருள் பற்றிய விஷயங்களை நினைப்பது ஒருவனுக்கு அதிக சுகம் அளிக்குமென்றால் அதுவே அவன் சொந்த நன்மைக்குப் பெருந்தடையாக வந்து வாய்க்கின்றது.

பதம் 4.22.33 : மனித சமுதாயம் எப்போதும் பணத்தை எவ்வாறு சம்பாதிப்பது, அதைக் கொண்டு எப்படிப் புலன் நுகர்ச்சியினைத் திருப்திப்படுத்துவது என்றே நினைத்துக் கொண்டிருந்தால் அது எல்லோரின் நலன்களையும் அழிப்பதாக அமைகின்றது. ஒருவன் முற்றிலும் அறிவு மற்றும் பக்தித் தொண்டு இல்லாதவனாக ஆகும் பொழுது அவன் மரம், கல் போன்ற அஃறிணைப் பொருளாகப் பிறக்கின்றான்.

பதம் 4.22.34 : அறியாமைக் கடல் கடக்க வேண்டும் என மிக அதிகம் விரும்புவோர் அவ்வறியாமைக் குணங்களோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. தற்காலிக இன்பம் அளிக்கும் செயல்கள் எல்லாம், சமய நெறிகளை அறிவதற்கும், பொருளாதார வளத்திற்கும், புலன் நுகர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் கடைசியில் விடுதலைக்கும் பெருந்தடைகளாக விளங்கும்.

பதம் 4.22.35 : இந்நான்கு கொள்கைகளில், அதாவது சமயம், பொருள்வளம், புலன் நுகர்ச்சி மற்றும் விடுதலை என்பவற்றில், விடுதலை ஒன்றினை மட்டுமே நாம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் மற்ற மூன்றும் இயற்கையின் விலக்கொணாத சட்டமான மரணத்திற்கு ஆட்படுபவைகளாகும்.

பதம் 4.22.36 : இழிந்த வாழ்க்கை நிலைகளிலிருந்து வேறுபாடுடைய உயர்ந்த வாழ்வு நிலைகளை நாம், ஆசிகளாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த வேறுபாடுகள் எல்லாம் ஜட இயற்கைக் குணங்களின் பரஸ்பர மாற்றத்தினால் உண்டாகின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில் வாழ்வின் இதுபோன்ற உயர்ச்சி தாழ்ச்சிகள் எல்லாம் நிரந்தரமானவையன்று. ஏனென்றால் இவைகள் எல்லாம் பரமபுருஷ பகவானால் ஒரு நாள் அழிக்கப்படும்.

பதம் 4.22.37 : சனத் குமாரர் அரசருக்கு அறிவுறுத்துகிறார்: ஆகையினால் எனது அன்பிற்குரிய பிருது மன்னனே! அசையும் அசையா உயிர்களின் உடல்களினுள் இருக்கும் ஆத்மாக்களுடன் சேர்ந்து ஒவ்வொருவர் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் முழுமுதற் கடவுளை அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்வாயாக. ஒவ்வொருவர் ஆத்மாவும் பஞ்ச பூதங்களால் ஆன உடலாலும், மூச்சுக்காற்று மற்றும் புத்தி என்னும் நுண்மையான உடலினாலும் மூடப்பட்டிருக்கின்றது.

பதம் 4.22.38 : இந்த உடலிலேயே காரணமாகவும் அதன் விளைவாகவும் முழுமுதற் கடவுள் தன்னைத் தோன்றச் செய்கிறார், ஆழ்ந்த ஆராய்ச்சியினால் ஒருவன் இந்த மாயையின் ஆற்றலைக் கடந்து விடுவானானால், பாம்பைக் கயிறாக எண்ணும் தவறானக் கருத்து அவனை விட்டு விலகுகிறது. அதன்பிறகு அவன் முழுமுதற் கடவுளானவர் பெளதீகப் படைப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி தூய அகச் சக்தியில் நித்தியமாக இருப்பவர் என்பதைப் புரிந்து கொள்வான். இவ்வாறு பகவான் ஜடத்தின் மாசுக்கள் அனைத்துக்கும் மேலாகவே இருக்கின்றார். அவரையே ஒருவன் சரணடைதல் வேண்டும்.

பதம் 4.22.39 : பகவானின் தாமரைத் திருவடிகளிலுள்ள விரல்களுக்கு எப்போதும் பக்தித் தொண்டு செய்யும் பக்தர்களால் பலன்தரும் செயல்களின் மீதான வன்மைமிக்க ஆசையினை வெல்ல முடியும். இது மிகவும் கடினமானது. ஆதலினால் ஞானிகள், யோகிகள் போன்ற அப்பக்தர்கள் என்னதான் புலனுகர்ச்சி அலைகளைத் தடுத்து நிறுத்த முயன்ற போதிலும், அவர்களுக்கு அது முடியாது. அதனால் நீ, வசுதேவரின் மைந்தரான கிருஷ்ணரின் பக்தித் தொண்டில் ஈடுபடுவாயாக.

பதம் 4.22.40 : அறியாமைக் கடலானது கடப்பதற்கு மிகவும் அரியதொன்றாகும். ஏனென்றால் அது பயங்கரமான சுறாமீன்களால் நிரப்பப்பட்டிருக்கின்றது. பக்தர்கள் அல்லாதவர்கள் அதனைக் கடப்பதற்குப் பல்வேறு கடினமான தவங்கள், நோன்புகள் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கு எங்கள் எளிய பரிந்துரை என்னவென்றால், பகவானின் தாமரைத் திருவடிகளைச் சரண் அடையுங்கள், அவைகள் அக்கடலைக் கடப்பதற்கு உதவும் படகுகளாகும். அக்கடலைக் கடப்பது மிகவும் கடினமானதுதான். இருந்தாலும் அவரது தாமரைத் திருவடிகளைத் தஞ்சம் அடையும் பொழுது நீங்கள் எல்லா ஆபத்துக்களையும் கடந்து விடலாம்.

பதம் 4.22.41 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: இவ்வாறு பிரம்மதேவரின் மைந்தரும், ஆன்மீக அறிவில் உயர்ந்த தேர்ச்சி பெற்றவருமான நான்கு குமாரர்களில் ஒருவரால் ஆன்மீக ஒளி ஏற்றப்பட்டவுடன் பிருத மகாராஜா அவர்களை வணங்கிக் கீழ்க்கண்ட வார்த்தைகளைக் கூறலுற்றார்.

பதம் 4.22.42 : மன்னர் கூறினார்: ஓ அந்தணரே, ஆற்றல் மிக்கவரே, முன்னர் பகவான் விஷ்ணு என்மீது கொண்ட தனது அளவற்ற கருணையினால், நீங்கள் எல்லோரும் எனது மாளிகைக்கு வரவிருப்பதாகக் குறிப்பிட்டார். அதுபோல் நீங்கள் வந்ததின் மூலம் அவ்வாசையினைப் பூர்த்தி செய்துள்ளீர்கள்.

பதம் 4.22.43 : எனது அன்பிற்குரிய அந்தணரே, நீர் பகவானைப் போல் கருணையுடையவர் ஆதலின் அக்கட்டளையினை முற்றிலும் நிறைவேற்றியிருக்கின்றீர். அதனால் உமக்கு காணிக்கையாக எதையாவது கொடுப்பது என் கடமையாகின்றது, ஆனால் என்னிடம் இருப்பதெல்லாம் தெய்வீக அருளாளர் பயன்படுத்திய மிச்ச உணவே அதனால் எதனை நான் கொடுப்பது?

பதம் 4.22.44 : மன்னர் தொடர்ந்தார்: ஆகையினால் எனது அன்பிற்குரிய அந்தணர்களே, எனது உயிர், மனைவி, மக்கள், வீடு, அலங்கார அணிகலன்கள் குறிப்பாக எனது கருவூலம் எல்லாவற்றையும் உங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 4.22.45 : வேதங்களில் கூறப்பட்டுள்ள அறநெறிகளை முற்றிலும் கற்றுணர்ந்த ஒருவரே, படைத்தளபதியாகவும், நாட்டை ஆள்பவராகவும் தண்டனை அளிப்பவராகவும் உலகத்திற்கே அதிபதியாகவும் வரக்கூடும். அப்படிப்பட்ட பிருது மகாராஜா தன்னிடமுள்ள எல்லாவற்றையும் குமாரர்களுக்கு அர்ப்பணித்தார்.

பதம் 4.22.46 : சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் போன்றோர் அந்தணர்களின் அளவற்ற கருணையினாலேயே தங்கள் உணவினை உண்கின்றனர். அந்தணர்கள் தங்கள் சொந்த சொத்துக்களின் மூலமே மகிழ்ச்சியடைகின்றனர், தங்கள் சொந்த சொத்துக்களின் மூலம் வரும் ஆடைகளையே உடுத்துகின்றனர், தங்கள் சொந்தச் சொத்துக்களில் இருந்தே தானம் வழங்குகின்றனர்.

பதம் 4.22.47 : பிருது மகாராஜா தொடர்ந்து கூறினார்: முழுமுதற் கடவுளுக்குத் தொடர்புடைய ஆத்ம உணர்வுப் பாதையை, வேதங்களின் ஆதாரத்தின் அடிப்படையில் மனித சமுதாயம் மெய்யறிவு பெறவேண்டும் என்பதற்காக விளங்குவதின் மூலம், அளப்பரிய சேவைசெய்யும் மகான்களுக்குக் கைம்மாறாக அவர்களைத் தொழுவதைத்தவிர, வேறு என்ன செய்ய முடியும்? அப்படிப்பட்ட மகான்கள் அவர்களின் செயல்களின் மூலமே திருப்தியடைய முடியும். அச்செயல்கள் அவர்களது அளவற்ற கருணையினால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்படுகின்றன.

பதம் 4.22.48 : மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறுகிறார்: மகாராஜா பிருதுவினால் இவ்வாறு வணங்கப்பட்டவுடன் பக்தித் தொண்டின் நாயகர்களான நான்கு குமாரர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையில் அவர்கள் வான்வெளியில் தோன்றி பிருது மன்னரின் குணநலன்களை மிகவும் பாராட்டிப் பேசினர். அவைகளை எல்லோரும் கவனித்தனர்.

பதம் 4.22.49 : உயர்ந்த மனிதர்களுக்கு நடுவே மகாராஜா பிருது நடுநாயகமாக விளங்கினார். காரணம் ஆன்மீக ஞானத்தில் அவர் உறுதியுடன் நிலை பெற்றிருந்ததுவேயாகும். ஆன்மீக உணர்வில் முழு வெற்றி எய்தப்பெற்றமையினால் அவர் முழுத் திருப்தியுடன் இருந்தார்.

பதம் 4.22.50 : ஆத்ம திருப்தியுடன் பிருது மகாராஜா தன்னுடையக் கடமைகளை எத்தனை நிறைவாகச் செய்ய வேண்டுமோ அத்தனை நிறைவாக, காலத்திற்கும் நிலைமைக்கும் ஏற்றவாறும், தன்னுடைய வலிமைக்கும் பொருள் வசதிக்கும் தக்கவாறும் செய்துவந்தார். முழுமெய்ப் பொருளைத் திருப்திப்படுத்துவது ஒன்றே அவர் குறிக்கோளாக இருந்தது. இவ்வழியிலேயே அவர் செயல்பட்டார்.

பதம் 4.22.51 : மகாராஜா பிருது ஜட இயற்கை கடந்த முழுமுதற் கடவுளுக்குத் தன்னை ஒரு நித்தியத் தொண்டனாக முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர். இதனைத் தொடர்ந்து அவர் செய்யும் செயல்களின் பலன்கள் எல்லாம் பகவானுக்கே அர்ப்பணிக்கப்பட்டன; அவர் எப்போதும் தன்னை எல்லாவற்றிற்கும் எஜமானராக விளங்கும் முழுமுதற் கடவுளின் தொண்டராகவே நினைத்தார்.

பதம் 4.22.52 : பிருது மகாராஜா தனது ஆட்சி முழுவதும் செழிப்பாக விளங்கினமையால் ஏராளமான செல்வவளம் பெற்றிருந்தும் ஒரு சாதாரண இல்லறத்தானாகவே தனது இல்லத்தில் இருந்தார். அவர் தனது செல்வங்களைத் தன் புலன்நுகர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. அவர் எப்போதும், ஒரு சூரியன் எவ்வாறு சூழ்நிலைகளினால் பாதிக்கப்படுவதில்லையோ அவ்வாறு ஒரு பற்றற்றவராகவே தன்னை வைத்திருந்தார்.

பதம் 4.22.53 : பக்தித் தொண்டில் விடுதலை பெற்ற நிலையில் வாழ்ந்த பிருது மகாராஜா பலன் தரும் செயல்கள் அனைத்தையும் செய்ததோடு ஐந்து மைந்தர்களையும் தன் மனைவி அர்சி என்பாள் மூலம் பெற்றெடுத்தார். உண்மையில் அந்த ஐந்து மைந்தர்களையும் அவர் விருப்பத்திற்கேற்றவாறே பெற்றெடுத்தார்.

பதம் 4.22.54 : தனது ஐந்து மைந்தர்களான விஜிதாஸ்வன், தூம்ரகேஸன், ஹர்யக்ஷன், திரவிணன் மற்றும் விருகன் போன்றவர்களைப் பெற்றெடுத்தப் பிறகும் பிருது மகாராஜா இவ்வுலகைத் தொடர்ந்து ஆண்டு வந்தார். அவர் மற்ற உலகங்களைச் சேர்ந்த தேவதைகளின் எல்லாக் குணங்களையும் ஏற்றுக் கொண்டார்.

பதம் 4.22.55 : பிருது மகாராஜா முழுமுதற் கடவுளின் தூய பக்தராக விளங்கினமையினால் பகவானின் படைப்பான பல்வேறு குடிமக்களையும் அவர்களது பல்வேறு ஆசைகளை நிறைவேற்றி அவர்களை மகிழச் செய்வதின் மூலம் பாதுகாக்க விரும்பினார். எனவே பிருது மகாராஜா தனது மனம், வாக்கு, செயல் மற்றும் நடத்தையின் மூலம் அவர்களை எல்லா வழிகளிலும் மகிழச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பதம் 4.22.56 : சந்திரமண்டலத்தின் மன்னர் ஸோமராஜனைப் போல் மகாராஜா பிருது கொண்டாடப்பட்டார். அவர் சூரியதேவன் எவ்வாறு வெம்மையையும் ஒளியையும் கொடுத்துவிட்டுப் பூமியில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொள்கிறானோ அதுபோல் பிருது மகாராஜாவும் ஆற்றலிலும் வரி வசூலிப்பதிலும் அவ்வாறே விளங்கினார்.

பதம் 4.22.57 : நெருப்பினை எவ்வாறு ஒருவரால் வெற்றி கொள்ள முடியாதோ அதுபோல் பிருது மகாராஜாவின் ஆணையையும் யாராலும் மீற முடியாது. ஏனென்றால் அவர் ஆற்றலும் வலிமையும் மிக்கவராக விளங்கினார். யாராலும் வெல்ல முடியாத சொர்க்காதிபதி தேவேந்திரனை வலிமையில் நிகர்த்தவர். அதுபோல் பிருது மகாராஜா பொறுமையில் பூமியைப் போன்றவர். அவர் சொர்க்கத்தைப் போல பூமியில் வாழும் மனித இனத்தின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றினார்.

பதம் 4.22.58 : மழைநீர் எவ்வாறு ஒருவனது விருப்பங்களை நிறைவேற்றுகின்றதோ அதுபோல் மகாராஜா பிருதுவும் எல்லோரின் விருப்பங்களையும் நிறைவேற்றினார். பிறரால் அறிந்துகொள்ள முடியாத ஆழமான கடலாகவும், உறுதியில் மலைகளின் ராஜா என்று சொல்லப்படும் மேருவைப் போன்றும் விளங்கினார்.

பதம் 4.22.59 : மகாராஜா பிருது கல்வியிலும் அறிவிலும் மரணத்தின் தேவனான யமராஜனைப் போன்றிருந்தார். செல்வ வளத்தில் அவர் இமவான் (இமயமலையின் அதிபதி) போல ஏராளமான மதிப்புமிக்க நகைகளையும், ஆபரணங்களையும் வைத்திருந்தார். குபேரபுரியின் தலைவன் குபேரனோடு ஒப்பிடக்கூடிய அளவிற்கு செல்வந்தராகத் திகழ்ந்தார். ரகசியங்களைக் காப்பதில் வருண பகவானை ஒத்திருந்தார்.

பதம் 4.22.60 : உடல் மற்றும் புலன் வலிமையில் பிருது மகாராஜா எங்கும், எதிலும் செல்லக் கூடிய காற்றினைப் போல் சக்தி மிக்கவர் ஆவார். தடுக்க முடியாத ஆற்றலில் அவர் சிவபெருமான் அல்லது சதாசிவனின் அவதாரமான எல்லாம் வல்ல இந்திரனைப் போன்றவர் ஆவார்.

பதம் 4.22.61 : அழகில் அவர் மன்மதனைப் போன்றவர், நினைவாற்றலில் சிங்கத்துக்கு நிகரானவர். பாசத்தில் அவர் ஸ்வாயம்புவ மனுவைப் போன்றவர். அடக்கியாளும் திறமையில் அவர் பிரம்மதேவனுக்கு ஒப்பானவர்.

பதம் 4.22.62 : தனிப்பட்ட நடத்தையில் பிருது மகாராஜா எல்லா நற்குணங்களையும் வெளிப்படுத்துபவராக விளங்கினார். ஆன்மீக அறிவில் அவர் பிரகஸ்பதியைப் போன்றவர். சுயக்கட்டுப்பாட்டில் அவர் முழுமுதற் கடவுளைப் போன்றவர். பக்தித் தொண்டைப் பொருத்தமட்டில் ஆன்மீக குருவிற்குத் தொண்டும், அந்தணர்களுக்குப் பணியும் பசுக்களைப் பாதுகாப்பது போன்ற புனிதச் செயலைச் செய்யும் பக்தர்களின் சிறந்த அடியவராக விளங்கினார். மனித இனத்தின் மீது இரக்கம் கொண்டு செய்யும் செயல்களில் அவை தனக்குச் செய்யப்படுவது போன்ற ஈடுபாட்டுடன் செய்பவர் ஆவார்.

பதம் 4.22.63 : மேலுலகம், நடுவுலகம், கீழுலகம் என்று இப்பிரபஞ்சம் முழுவதும் பிருது மகாராஜாவின் புகழ் பேசப்பட்டது. எல்லாப் பெண்களும், தெய்வீக அருளாளர்களும் பகவான் ராமச்சந்திர மூர்த்தியின் புகழ் கேட்டு எத்தனை இன்புறுவார்களோ அதேபோல் பிருது மகாராஜாவின் புகழினைக் கேட்டும் இன்புற்றார்கள்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare