அத்தியாயம் – 20
விஷ்ணு பிருது மன்னரின் வேள்விச் சாலையில் தோன்றுதல்
பதம் 4.20.1
மைத்ரேய உவாச
பகவான் அபி வைகுண்ட: ஸாகம் மகவதா விபு:
யஜ்ஞைர் யஜ்ஞா-பதிஸ் துஷ்டோ யஜ்ஞா-புக் தம் அபாஷத

மைத்ரேய உவாச—மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; பகவான்—முழுமுதற் கடவுள், விஷ்ணு; அபி—கூட; வைகுண்ட:—வைகுண்டத்தின் அதிபதி; ஸாகம்—அவருடன்; மகவதா—தேவேந்திரன்; விபு:—பகவான்; யஜ்ஞை:—வேள்விகளினால்; பதி:—வேள்விகளின் நாயகர்; துஷ்ட:—மனநிறைவடைதல்; யஜ்ஞ-புக்—வேள்விகளினால் மகிழ்பவர்; தம்—பிருது மன்னனுக்கு; அபாஷத—கூறினார்.

மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: எனது அன்பிற்குரிய விதுரரே! தொன்னூற்று ஒன்பது வேள்விகளினால் மிக்க மனநிறைவடைந்த முழுமுதற் கடவுள், பகவான் விஷ்ணு அங்கே தோன்றினார். அவரோடு இணைந்து தேவேந்திரனும் வந்திருந்தான். பகவான் விஷ்ணு கூறலானார்.

பதம் 4.20.2
ஸ்ரீ பகவான் உவாச
ஏஷ தே ‘கார்ஷீத் பங்கம் ஹய-மேத-ஸதஸ்ய ஹ
க்ஷமாபயத ஆத்மானம் அமுஷ்ய க்ஷந்தும் அர்ஹஸி

ஸ்ரீ பகவான் உவாச—முழுமுதற் கடவுளாகிய பகவான் விஷ்ணு கூறினார்; ஏஷ:—இந்திரதேவன்; தே—உனது; அகார்ஷீத்—செய்யப்பட்ட; பங்கம்—குறைவு; ஹய—குதிரை; மேத—வேள்வி; ஸதஸ்ய—நூறாவது; ஹ—உண்மையில்; க்ஷமாப-யத:—மன்னிக்க வேண்டுகிறான்; ஆத்மனம்—உன்னிடத்தில்; அமுஷ்ய—அவனை; க்ஷந்தும்—மன்னிப்பாயாக; அர்ஹஸி—கட்டாயமாக.

முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணு கூறினார்: எனது அன்பிற்கினிய பிருது மன்னனே! சொர்க்காதிபதி தேவேந்திரன் உனது நூறு வேள்விகளையுமே நிறைவேறவிடாது தொல்லை கொடுத்திருக்கிறான். அதற்கான வருத்தத்தை உன்னிடம் தெரிவிப்பதற்காக இங்கே வந்திருக்கிறான். ஆகையினால் அவனை நீ மன்னிப்பாயாக.

பதம் 4.20.3
ஸீதிய: ஸாதவோ லோகே நர தேவ நரோத்தமா:
நாபித்ருஹ்யந்தி பூதேப்யோ யர்ஹி நாத்மா கலேவரம்

ஸீதிய—அறிவில் உயர்ந்த பெரியோர்; ஸாதவ:—நற்செயல்கள் செய்வதில் முனைப்புடையோர்; லோகே—இவ்வுலகத்தில்; நர-தேவ—ஓ, மன்னனே; நர-உத்தமா:—மனிதரில் சிறந்ததோர்; ந-அபித்ருஹ்-யந்தி—கெடுமதியாளர் ஆவதில்லை; பூதேப்ய:—பிற உயிர்களுக்கு; யர்ஹி—ஏனென்றால்; ந—இல்லை; ஆத்மா—தான் அல்லது ஆத்மா; கலேவரம்—இந்த பூத உடல்.


ஓ மன்னனே! புத்தியில் சிறந்தோரும், பிறர் நலன் விரும்புவோரும் மனிதர்களில் சிறந்தவர் எனக் கருதப்படுவர். ஓர் உயர்ந்தமனிதன் பிறருக்கு கேடு நினைக்க மாட்டான். அறிவிலே உயர்ந்தோர்கள் ஆத்மா வேறு, உடல் வேறு என்பதை எப்போதும் உணர்ந்தவர்களே.

பதம் 4.20.4
புருஷா யதி முஹ்யந்தி த்வாத்ருஷா தேவ-மாயயா
ஸ்ரம ஏவ பரம் ஜாதோ தீர்கயா வ்ருத்த ஸேவயா

புருஷ:—மனிதர்கள்; யதி—இப்படி இருந்தார்; முஹ்யந்தி—குழப்பமடைகின்றனர்; த்வா-த்ருஷா:—உன்னைப்போல்; தேவ—பரமபுருஷர்; மாயயா—சங்கதியினால்; ஸ்ரம:—பெருமுயற்சி; ஏவ—உறுதியாக; பரம்—ஒன்றே; ஜாத:—உண்டாக்கியது; தீர்கயா—நீண்டகாலத்திற்கு; வ்ருத்தஸேவயா—தனது முன்னோடிகளுக்குப் பணி செய்வதின் மூலம்.

உன்னைப் போன்றவர்கள் உனது முந்தைய ஆச்சார்யர்களின் கட்டளைகளின்படி நடந்ததினாலேயே இவ்வாறு சிறந்து விளங்க முடிகின்றது. அப்படியில்லாது எனது பௌதீக சக்தியின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தால் உனது முன்னேற்றம் என்பது காலவிரயம் என்றே கருதப்படும்.

பதம் 4.20.5
அத: காயம் இமம் வித்வான் அவித்யா-காம-கர்மபி:
ஆரப்த இதி நைவாஸ்மின் ப்ரதிபுத்தோ ‘னுஷஜ்ஜதே

அத:—ஆகையினால்; காயம்—உடல்; வித்வான்—அறிவுடையோர்; அவித்யா—அறியாமையினால்; காம—இச்சைகள்; கர்மபி:—செயல்களினாலும்; ஆரப்த:—செய்யப்பட்டது; இதி:—இவ்வாறு; ந—இல்லை; ஏவ—உறுதியாக; அஸ்மிம்—இந்த உடலுக்கு; ப்ரதிபுத்த:—அறிகிறவன்; அனுஷஜ்ஜதே—பழக்கத்திற்கு அடிமையாதல்.

உடலின் புறத்தோற்றக் கருத்துக்களை நன்கறிந்தவர்கள், இந்த உடலானது அறியாமை, ஆசை மற்றும் மாயையின் விளைவினால் வரும் செயல்கள் அடங்கியவை என்றும் ஆகையினால் இவ்வுடலுக்கு நாம் அடிமையாகிவிடக் கூடாது என்றும் உணர்ந்தவர்களே.

பதம் 4.20.6
அஸம்ஸக்த: ஸரீரே ‘ஸ்மின்ன் அமுனோத்பாதிதே க்ருஹே
அபத்யே த்ரவிணே வாபி கஹ் குர்யான் மமதாம் புத:

அஸம்ஸக்த:—பற்றில்லாதிருக்கின்ற; ஸரீரே—உடலுக்கு; அஸ்மின்—இந்த; அமுனா—இதுபோன்ற உடல் சார்ந்த உணர்வு; உத்பாதிதே—செய்யப்பட்டது; க்ருஹே—வீடு; அபத்யே—குழந்தைகள்; மமதாம்—நெருங்கிய தொடர்பு; புத:—அறிஞர்கள்.

உடல் சார்ந்த உணர்வின் பால் தொடர்பில்லாத அறிஞர்கள் எவ்வாறு உடல் சார்ந்த வீடு, குழந்தைகள், செல்வம் போன்ற உடலியற் பொருள்களினால் பாதிக்கப்படுவர்?

பதம் 4.20.7
ஏக: ஸீத்த: ஸ்வயம்-ஜ்யோதிர் நிர்குணோ அஸௌ குணாஸ்ரய:
ஸர்வ கோ ‘னாவ்ருத: ஸாக்ஷ நிராத்மாத்மாத்மந: பர:

ஏக:—ஒன்று; ஸீத்த:—தூய; ஸ்வயம்—ஆத்மா; ஜ்யோதி:—ஒளி; நிர்குண:—பௌதீகத் தகுதிகள் இன்றி; அஸௌ—அந்த; குண-ஆஸ்ரய:—நற்றகுதி (நல்ல தகுதிகள்)களின் உறைவிடம் பெற்றோர்; அனாவ்ருத:—விஷயங்களினால் மறைக்கப்படாதிருக்கின்ற; ஸாக்ஷீ—சாட்சி; நிராத்மா—மற்றொரு ஆத்மா இன்றி; ஆத்ம-ஆத்மந:—உடல் மற்றும் மனதிற்கு; பர:—உன்னதமான்.

தனிப்பட்ட ஆத்மாவானது தனிப்பட்ட ஒன்றாகவும், தூய்மையானதாகவும், பெளதீகமற்றதாகவும், சுய ஒளி கொண்டதாகவும் இருக்கிறது. அவரே நற்குணங்களின் உறைவிடமாகவும் எங்கும் நிறை பொருளாகவும் இருக்கிறார். அவருக்கு எந்தவித பொருள்களினாலான மேல் உறையும் கிடையாது, அவரே எல்லாவிதமானச் செயல்களுக்கும் சாட்சியாக இருக்கின்றார். பிற உயிர்களிடமிருந்து அவர் தன்னைத் தனியே வேறுபடுத்தி வைத்திருக்கின்றார். உருவெடுத்து வந்த ஆத்மாக்களுக்கு என்றும் அவர் மேலானவராக இருக்கின்றார்.

பதம் 4.20.8
ய ஏவம் ஸந்தம் ஆத்மாநம் ஆத்ம-ஸ்தம் வேத பூருஷ
நாஜ்யதே ப்ரக்ருதி-ஸ்தோ ‘பி தத்-குணை ஸ மயி ஸ்தித

ய:—யாரேனும் ஒருவர்; ஏவம்—இவ்வாறு; ஸந்தம்—இருக்கின்ற; ஆத்மானம்—தனிப்பட்ட ஆத்மா மற்றும் முழுமுதற் கடவுள் அதாவது பரமாத்மா; ஆத்ம-ஸ்தம்—அவனது உடலினுள் இருக்கப் பெற்ற; வேத—அறிகிறவன்; பூருஷ:—மனிதன்; ந—இல்லை; அஜ்யதே—பாதிக்கப்படுதல்; ப்ரக்ருதி—ஜட இயற்கையினால்; ஸ்த:—இடம் பெறுதல்; அபி—இருந்தாலும்; தத்-குணை:—ஜட இயற்கையின் குணங்களினால்; ஸ:—அப்படிப்பட்ட மனிதன்; மயி—என்னிடம்; ஸ்தித:—நிலையாய் இருக்கின்றான்.

ஜட இயற்கையினுள்ளே இருந்தாலும் பரமாத்மாவைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் முழு அறிவுடையோன் ஜட இயற்கையின் குணங்களினால் பாதிக்கப்படுவதில்லை, அவன் எப்போதும் எனது உன்னத அன்புத் தொண்டிலேயே இருக்கின்றான்.

பதம் 4.20.9
ய: ஸ்வ-தர்மேன மாம் நித்யம் நிரா ஷீ: ஸ்ரத்த யான்வித:
பஜதே ஸனைகஸ் தஸ்ய மனோ ராஜன் ப்ரஸீததி

ய:—யாரேனும் ஒருவன்; ஸ்வ-தர்மேன—தனது சொந்தக் கடமைகளினால்; மாம்—எனக்கு; நித்யம்—தொடர்ந்து; நிராஷீ:—எந்தவித எதிர்பார்ப்புமின்றி; ஸ்ரத்யா—நம்பிக்கையுடனும், பக்தியுடனும்; அன்வித:—பயன்கருதாது; பஜதே—பிரார்த்தித்தால்; ஸனகை:——படிப்படியாக; தஸ்ய—அவனுடைய; மன:—மனம்; ராஜன்—ஒ, பிருது மன்னனே; ப்ரஸீததி—முற்றிலும் தன்னிறைவடைகிறான்.

முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணு தொடர்ந்து கூறினார்: எனது அன்பிற்குரியவன் தொழில் சார்ந்து இருந்த போதிலும் அவன் எந்தவிதமான பொருள் ஆசையும் இன்றி எனது அன்புப் பணியில் ஈடுபடுவானாயின் அவன் தனக்குள்ளே திருப்தியுடையவனாகிறான்.

பதம் 4.20.10
பரித்யக்த-குண: ஸம்யக் தர்ஸனோ விஸதாஸய:
ஸாந்திம்மே ஸமவஸ்தானம் ப்ரஹ்ம கைவல்யம் அஸ்நுதே

பரித்யக்த-குண:—ஜட இயற்கையின் முக்குணங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒருவன்; ஸம்யக்—சமமாக; தர்ஸன:—அவனது பார்வை; விஸத—மாசுபடாத; ஆஸய:—அவனது மனம் அல்லது இதயம்; ஸாந்திம்—அமைதி; மே—எனது; ஸமவஸ்-தானம்—சமமான சூழ்நிலை; ப்ரஹ்ம—தெய்வீகநிலை; கைவல்யம்—பொருள்களின் மாசுக்களிலிருந்து விடுதலை; அஸ்நுதே—அடைகிறான்.

மனமானது எல்லாவித பௌதீக மாசுக்களில் இருந்தும் தூய்மையடைந்துவிட்டால், ஒரு பக்தனின் மனம் விரிந்து தெளிவு பெற்றதாய் விளங்குகிறது. அந்நிலையில் அவனால் எல்லாவற்றையும் சமபார்வை பார்க்க முடிகிறது. அந்நிலையில் அவன் வாழ்க்கை அமைதியாகவும், சச்சிதானந்த நிலையில் என்னோடு சமமாகவும் இருக்க முடிகிறது.

பதம் 4.20.11
உதாஸீனம் இவாத்யக்ஷம் த்ரவ்ய-ஜ்ஞான-க்ரியாத்மனாம்
கூட-ஸ்தம் இமம் ஆத்மானம் யோ வேதாப்னோதி ஸோபனம்

உதாஸீனம்—வேறுபாடற்றது; இவ—அமைதியாக; அத்யக்ஷம்—கண்காணிப்பாளர்; த்ரவ்ய—உடல்சார்ந்த பொருள்கள்; ஜ்ஞான—அறிவினைப் பெறும் புலன்கள்; க்ரியா—உழைக்கின்ற புலன்கள்; ஆத்மனாம்—மனிதன்; கூடஸ்தம்—உறுதிசெய்யப்பட்ட; இமம்—இந்த; ஆத்மானம்—ஆத்மா; ய:—யாரேனும் ஒருவர்; வேத—அறிந்தவன்; அப்னோதி—பெறுகிறான்; ஸோபனம்—எல்லா நன்மைகளும்.

இந்த ஜட உடலானது ஐம்பெரும் பூதங்களினாலும் உணர்வுப் புலன்களினாலும், செயற் புலன்களினாலும், மனதினாலும் செய்யப்பட்டு நிலைத்த ஆத்மாவினால் கண்காணிக்கப்படுகிறது என்பதை அறிபவன், பௌதீக பந்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்குத் தகுதியுடையவனாவான்.

பதம் 4.20.12
பின்னஸ்ய விங்கஸ்ய குண-ப்ரவாஹோ
த்ரவ்ய-க்ரியா-காரக-சேதனாத்மந:
த்ருஷ்டாஸீ ஸம்பத்ஸீ விபத்ஸீ ஸீரயோ
ந விக்ரியந்தே மயி பத்த ஸெளஹ்ருதா:

பின்னஸ்ய—வேறுபாடு; விங்கஸ்ய—உடலினது; குண—ஜட இயற்கையின் முக்குணங்களின்; ப்ரவாஹ—தொடர்ந்து ஏற்படும் மாறுதல்; த்ரவ்ய—பௌதீகப் பொருள்கள்; க்ரியா—புலன்களின் செயல்கள்; காரக—தேவர்கள்; சேதனா—மனமும்; ஆத்மந:—சேர்ந்திருக்கின்ற; திருஷ்டாஸீ—அனுபவிக்கும் பொழுது; ஸம்பத்ஸீ—மகிழ்ச்சி; விபத்ஸீ—துன்பம்; ஸீர்ய:—அறிவிலே தெளிவு பெற்றோர்; ந—இல்லை; விக்ரியந்தே—பாதிக்கப்படுதல்; மயி—என்னிடம்; பத்த-ஸௌஹ்ருதய—நட்பில் கட்டுண்டவன்.

பகவான் விஷ்ணு பிருது மன்னனிடம் கூறினார் எனது அன்பிற்குரிய மன்னனே! ஜட இயற்கையின் முக்கணங்களின் தொடர்புகளினாலேயே இந்தப் பௌதீக உலகமானது நாளும் மாறிக்கொண்டே இருக்கின்றது. ஐம்பூதங்கள், புலன்கள், புலன்களை ஆளும் தேவர்கள், ஆத்மாவினால் கிளர்ச்சியுறும் மனம் இவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்தே ஒரு உடல் உண்டாகின்றது. இருந்தும் ஆத்மாவானது இந்த ஸ்தூல மற்றும் சூட்சுமப்பொருள்களின் கூட்டுக் கலவையினின்று வேறுபட்டதினால், என்னிடத்து ஆழ்ந்த நட்பும், அன்பும் கொண்ட, பூரண அறிவு கொண்ட எனது பக்தன் இந்தப் பௌதீக இன்ப துன்பங்களினால் பாதிப்படைவதில்லை.

பதம் 4.20.13
ஸம: ஸமாநோத்தம-மத்யமாதம:
ஸீகே சதுக்கே ஜிதேந்த்ரியாஸய:
மயோபக்லுப்தாகில லோக-ஸம்யுதோ
விதத்ஸ்வ வீராகில-லோக ரக்ஷணம்

ஸம:—சமநிலையில்; ஸமான—எல்லாம் சரிநிகர் என்று; உத்தம—உயர்ந்த நிலையில் இருப்போர்; மத்யம—நடுநிலையில் இருப்பவர்; அதம:—வாழ்க்கையில் கீழ்நிலையில் இருப்போர்; ஸீகே—மகிழ்ச்சியில்: ச—மேலும்; துக்கே—துன்பத்தில்; ச—மேலும்; ஜித-இந்த்ரிய—புலன்களை கட்டுப்படுத்துகின்ற; ஆஸய:—மனம்; மயா—என்னால்; உபக்லுப்த—ஏற்பாடு செய்யப்பட்ட; அகில—எல்லாம்; லோக—மக்களால்; ஸம்யுத:—உடன் சேர்ந்து; விதத்ஸ்வ—அளிக்கிறது; வீர—வீரனே; அகில—எல்லாம்; லோக—மக்களும்; ரக்ஷணம்—பாதுகாப்பு.

எனது அன்பிற்குரிய உயர்ந்த மன்னனே, எப்போதும் எதிலும் சாராத நடுநிலையில் இருந்து மக்கள் எல்லோரையும், அவர்கள் உன்னைவிட உயர்ந்தவர்களாயிருந்தாலும், உனக்குச் சமதையாக இருந்தாலும் அல்லது உனைக்காட்டிலும் கீழானவர்களாயிருந்தாலும் அவர்களை ஒரே சீராக நேராக நடத்துவாயாக! வந்து போகும் இன்ப துன்பங்களினால் கவலையடையாதே, மனதையும், புலன்களையும் எப்போதும் உன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பாயாக! இப்படிப்பட்ட உன்னதமான நிலையில் ஒரு மன்னனாக வாழ்க்கையில் எந்த நிலையில் நீ எனது ஏற்பாட்டினால் வைக்கப்பட்ட போதிலும் அந்நிலையில் இருந்து கொண்டு எனது ஆட்சியின் எல்லைக்குட்பட்ட மக்களை பாதுகாப்பது ஒன்றையே உன் கடமையாகக் கொண்டு அதை நிறைவேற்ற முயல்வாயாக.

பதம் 4.20.14
ஸ்ரேய: ப்ரஜா-பாலனம் ஏவ ராஜ்ஞோ
யத் ஸாம்பராயே ஸீக்ருதாத் ஷஷ்டம் அம்ஸம்
ஹர்தான்யதா ஹ்ருத-புண்ய: ப்ரஜானாம்
அரக்ஷிதா கர ஹாரோ ‘கம் அத்தி

ஸ்ரேய:—புனிதமான; ப்ரஜா-பாலனம்—பொதுமக்களின் மீது ஆட்சி செலுத்துவது; ஏவ—உறுதியாக; ராஜ்ஞா:—அரசனுக்கு; யத்—ஏனென்றால்; ஸாம்பராயே—மறுபிறவியில்; ஸீ-க்ருதாத்—புண்ணியச் செயல்களின்; ஷஷ்டம்-அம்ஸம்—ஆறில் ஒரு பங்கு; ஹர்தா—வசூலிப்பவன்; அன்யதா—அப்படியின்றி; ஹ்ருதி-புண்ய:—புண்ணியச் செயல்களினால் வரும் பலன்களை இழக்கின்ற; ப்ரஜானாம்—மக்களின்; அரக்ஷிதா—பாதுகாக்காத ஒருவன்; கர-ஹார:—வரிவசூலிப்பவர்; அகம்—பாவம்; அத்தி—பெறுகிறான் அல்லது துன்புறுகிறான்.

தனது ஆட்சியின் கீழ் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதே அரசனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தர்மம் ஆகும். அவ்வாறு செயல்படும் மன்னன் தன் குடிமக்களின் புண்ணியச் செயல்களின் ஆறில் ஒரு பங்கினை தனது அடுத்தப் பிறவியில் அடைகிறான். ஆனால் ஓர் அரசனோ அல்லது ஒரு நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவனோ தன் மக்களிடம் இருந்து வரிகளை மட்டும் வசூலிக்கவிட்டு அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் அவனது புண்ணியச் செயல்களின் பலன்களை அவனது குடிமக்கள் பெறுகின்றனர். பதிலுக்கு அவர்கள் செய்யும் பாவச் செயல்களுக்குரிய தண்டனையை அவன் ஏற்க வேண்டியவனாகிறான்.

பதம் 4.20.15
ஏவம் த்விஜாக்ரியானுமதானுவ்ருத்த
தர்ம-ப்ரதானோ ‘ன்யதமோ ‘விதாஸ்யா:
ஸ்ரஸ்வேன காலேன க்ருஹோபயாதான்
த்ரஷ்டாஸி ஸித்தான் அனுவக்த-லோக:

ஏவம்—இவ்வாறு; த்விஜ—அந்தணர்களின்; அக்ரிய—மிக உயர்ந்த; அனுமத—அங்கீகரிக்கப்பட்ட; அனுவ்ருத்த—சீடபரம்பரையின் மூலம் பெறப்பட்ட; தர்ம—சமயநெறிகள்; ப்ரதான:—அவரது முக்கியமான நோக்கம்; அன்யதம:—பற்றில்லாதிருத்தல்; அவிதா—பாதுகாப்பவர்; அஸ்யா:—பூமியில்; ஹ்ரஸ்வேன—குறுகிய; காலேன—காலத்தில்; க்ரஹ—எனது வீட்டிற்கு; உபயாதான்—தனிப்பட்ட முறையில் வருகின்ற; த்ரஷ்டாஸி—நீ காண்பாய்; ஸித்தான்—நிறைவு பெற்றவர்கள்; அநுரக்த-லோக:—மக்களால் விரும்பப்படுவர்.

பகவான் மகாவிஷ்ணு தொடர்ந்து கூறினார் எனது அன்பிற்குரிய பிருது மன்னனே, குருவிடமிருந்து சீடன் என்று செவி வழியாகவே கேட்டு சீட பரம்பரையில் வந்த உயர்ந்த அந்தணர்களின் கட்டளைக்கிணங்க குடிமக்களைத் தொடர்ந்து பாதுகாத்து வருவான் என்றால், அவர்களது சமய நெறிகளை, மன யூகங்களுக்கேற்ப வரும் யோசனைகளில் பற்றில்லாதுப் பின்பற்றுவாயென்றால், ஒவ்வொரு குடிமகனும், மகிழ்ச்சியடைவான், உன்னை விரும்புவான். வெகுவிரைவில் விடுதலை பெற்ற நான்கு குமாரர்கள் (சனகன், சநாதனன், சநந்தனன், மற்றும் சநத் குமாரன்) போன்ற மகாத்மாக்களை உன்னால் தரிசிக்க இயலும்.

பதம் 4.20.16
வரம் ச மத் கஞ்சன மானவேந்த்ர
வ்ருணீஷ்வ தே ‘ஹம் குண-ஸீல-யந்த்ரித:
நாஹம் மகைர் வை ஸீலபஸ் தபோபிர்
யோகேன வா யத் ஸம-சித்த-வர்தீ

வரம்—வரம்; ச—மேலும்; மத்—என்னிடமிருந்து; கஞ்சன—நீ விரும்புகின்ற எதையும்; மானவ-இந்த்ர—மனிதர்களில் சிறந்தவனே; வ்ருணீஷ்வ—என்னிடம் கேட்பாயாக; தே—உன்னுடைய; அஹம்—நான்; குண-ஸீல—உனது உயர்ந்த குணங்களும், சிறந்த நடத்தையும்; யந்த்ரித—மனதைக் கவர்ந்தன; ந—இல்லை; அஹம்—நான்; மகை:—வேள்விகளினால்; வை—உறுதியாக; ஸீ-லப:—எளிதில் கிடைக்கப் பெற்ற; தபோபி:—தவத்தினால்; யோகேன—தெய்வீக யோகத்தின் பயிற்சியினாலும்; வா—அல்லது; யத்—எதன் காரணத்தினால்; ஸம-சித்த—இருமனம் இல்லாத; வர்தீ—இருக்கின்றேன்.

எனது அன்பிற்குரிய மன்னனே, உனது உயர்ந்த குணங்களும், சிறந்த நடத்தைகளும் என்னைக் கவர்ந்ததினால் இன்று உனக்கு நான் மிகவும் ஆதரவுடையவனாக இருக்கின்றேன். ஆகையினால் உனக்கு வேண்டும் வரங்களை என்னிடம் கேட்பாயாக. உயர்ந்த குணங்களும், சிறந்த நடத்தைகளும் இல்லாத ஒருவன் பெரிய வேள்விகள் செய்வதினாலேயோ, கடுமையான தவங்களின் மூலமாகவோ அல்லது தெய்வீகமான யோகங்களினாலோ எனது கருணையினைப் பெற்றுவிட முடியாது. எல்லாச் சூழ்நிலைகளிலும் இருவேறு மன இயல்பில்லாது சமநிலையில் மனதினை வைத்திருப்போன் மனதில் எப்போதும் சமநிலையில் தான் வீற்றிருப்பேன்.

பதம் 4.20.17
மைத்ரேய உவாச
ஸ இத்ம் லோக-குருணா விஷ்வக்ஷேனேன விஸ்வ-ஜித்
அனுஸாஸித ஆதேஸம் ஸிரஸா ஜக்ருஹே ஹரே:

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; ஸ:—அவர்; இத்தம்—இவ்வாறு; லோக-குருணா—எல்லாமக்களின் குருவானவர்; விஷ்வக்ஷேனேன—முழுமுதற் கடவுளினால்; விஸ்வ-ஜீத்—உலகினை வென்றவர் (மகாராஜா பிருது); அனுஸாஸித:—கட்டளையிடப்பட்டு; ஆதேஸம்—அறிவுரைகள்; ஸிரஸா—தலையின் மேல்; ஜக்ருஹே—சம்மதித்தார்; ஹரே:—முழுமுதற் கடவுள்.

மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: எனது அன்பான விதுரரே, இவ்வாறு உலகினை வென்றவரான மகாராஜா பிருது முழுமுதற் கடவுளின் கட்டளைகளைத் தன் தலைமேற் கொண்டார்.

பதம் 4.20.18
ஸ்ப்ருஸந்தம் பாதயோ: ப்ரேம்ணா வ்ரீடிதம் ஸ்வேன கர்மணா
தை-க்ரதும் பரிஷ்வஜ்ய வித்வேஷம் விஸஸர்ஜ ஹ:

ஸ்ப்ருஸந்தம்—தொடுகின்ற; பாதயோ:—பாதங்கள்; ப்ரேம்ணா—பெரும் மகிழ்ச்சி; வ்ரீடிதம்—வெட்கினான்; ஸ்வேன—அவனது; கர்மணா—செயல்களினால்; ஸத-க்ரதும்—தேவேந்திரன்; பரிஷ்வஜ்ய—தழுவிக்கொண்டு; வித்வேஷம்—துவேஷம்; விஸஸர்ஜ—விட்டு விடுதல்; ஹ—உண்மையாக.

அங்கே நின்று கொண்டிருந்த இந்திரன் தனது செயல்களினால் வெட்கமுற்று பிருது மன்னரின் திருவடித் தாமரைகளைத் தொடுவதற்காக அவர் முன் வீழ்ந்தான். ஆனால் பிருது மகாராஜாவோ பெரும் மகிழ்ச்சியினால் அவனை அப்படியே தாங்கி தன் மார்புறத் தழுவிக் கொண்டு தன் வேள்விக்குரிய குதிரையை அவன் திருடியதினால் அவன் மீது ஏற்பட்ட துவேஷத்தையும் ஆத்திரத்தினையும் விட்டுவிட்டார்.

பதம் 4.20.19
பகவான் அத விஸ்வாத்மா ப்ருதுநோபஹ்ருதார் ஹண: ஸமுஜ்ஜிஹானயா பக்த்யா க்ருஹீத-சரணாம்புஜ:

பகவான்—முழுமுதற் கடவுள்; அத—அதன்மேல்; விஸ்வ-ஆத்மா—பரமாத்மா; ப்ருதுநா—பிருதுமன்னன்; உபஹ்ருத—அர்ப்பணித்தல்; அர்ஹண:—பிரார்த்தனையில் முழுக்கவனம் கொண்டு; ஸமுஜ்ஜி-ஹானயா—படிப்படியாக உயர்ந்தது; பக்த்யா—அவரது பக்திப்பணி; க்ருஹீத—கொண்டு சென்றது; சரண-அம்புஜ:—அவரது திருவடித் தாமரை.

தன் மீது கருணை கொண்ட முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகளை பிருது மன்னர் முழுநிறைவுடன் வணங்கினார். பகவானின் திருவடித் தாமரைகளை இவ்வாறு வணங்கிக் கொண்டிருக்கும் பொழுதே அவர் பக்தித் தொண்டில் தன்னையிழந்த மகிழ்ச்சியினை அதிகரித்துக் கொண்டார்.

பதம் 4.20.20
ப்ரஸ்தானாபிமுகோ ‘பியேனம் அநுக்ரஹ-விலம்பித:
பஸ்யன் பத்ம-பலாஸாகே ‘ஷா ந பிரதஸ்தே ஸீஹ்ருத் ஸதாம்

பிரஸ்தான—விட்டுச் செல்வதற்கு; அபிமுக:—தயாரான; அபி—இருந்தும்; யேனம்—அவரது (பிருது); அநுக்ர:—அன்பினால்; விலம்பித:—தாமதித்தார்; பஸ்யன்—பார்க்கின்ற; பத்ம-பலாஸ-அக்ஷ:—பகவான், அவரது கண்கள் சிவந்த தாமரை இதழ் போன்றவையாகும்; ந—இல்லை; ப்ரதஸ்தே—புறப்படுதல்; ஸீஹ்ருத்—நலன் விரும்புபவர்; ஸதாம்—பக்தர்களின்.

பகவான் செல்வதற்குத் தயாராக இருந்தும், பிருது மன்னரின் செயலினால் அவர்மீது கொண்டிருந்த நாட்டத்தினால் அவர் புறப்படவில்லை. மகாராஜா பிருதுவின் நடத்தையினை தனது செந்தாமரை விழிகளினால் கண்டு அவர் சற்று தாமதித்தார். காரணம் அவர் எப்பொழுதும் பக்தர்களின் நலன் விரும்புபவர் ஆவார்.

பதம் 4.20.21
ஸ ஆதி-ராஜோ ரசிதாஞ்சலிர் ஹரிம்
விலோகிதும் நாஸகத் அஸ்ரு-லோசன:
ந கிஞ்சனோவாச ஸ பாஷ்ப-விக்லவோ
ஹ்ருதோபகுஹ்யாமும் அதாத் அவஸ்தித:

ஸ:—அவர்; ஆதி-ராஜ:—ஆதி அரசர்; ரசித-அஞ்சலி:— கூப்பிய கரங்களுடன்; ஹரிம்—முழுமுதற் கடவுள்; விலோகிதும்—பார்ப்பதற்கு; ந—இல்லை; அஸகத்—இயலும்நிலை; அஸ்ரு-லோசன—நீர்நிறைந்த கண்களுடன்; ந—இல்லை; கிஞ்சன—எதுவும்; உவாச—பேச; ஸ:—அவர்; பாஷ்ப-விக்லவா:—கம்மிய குரலில்; ஹ்ருதா—மார்புடன்; உபகுஹ்ய—தழுவிக்கொண்டு; அமும்—பகவான்; அதாத்—அப்படியே; அவஸ்தித:—நின்றார்.

ஆதி மன்னரான மகாராஜா பிருது கண்களில் நீர் நிரம்ப குரல் நடுநடுங்க பகவானைக் கூர்ந்து பார்க்கவோ அல்லது அவரிடம் பேசவோ முடியாதிருந்தார். அவர் பகவானை தனது உள்ளத்தில் தழுவிக் கொண்டு கூப்பியக் கரங்களுடன் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

பதம் 4.20.22
அதாவம்ருஜ்யாஸ்ரு-கலா விலோகயன்ன
அத்ருப்த-த்ருக்-கோசரம் ஆஹ பூருஷம்
பதா ஸ்ப்ருஸந்தம் க்ஷிதிம் அம்ஸ உன்னதே
வின்யஸ்த-ஹஸ்தாக்ரம் உரங்க-வித்விஷ:

அத—அதன்பிறகு; அவம்ருஷ்ய—துடைத்துக்கொண்டு; அஸ்ரு-கலா:—கண்களில் உள்ளக் கண்ணீரை; விலோகயன்—ஆழ்ந்து கவனித்து; அத்ருப்த—திருப்தியடையாது; த்ருக்-கோசரம்—அவரது விழிகளில் தெரிந்த; ஆஹ—அவர் சொன்னால்; பூருஷம்—முழுமுதற் கடவுளுக்கு; பதா—அவரது திருவடித் தாமரையின்; ஸ்ப்ருஸந்தம்—மெதுவாகத் தொட்டு; க்ஷிதிம்—நிலத்தில்; அம்ஸே—தோள்களின் மேல்; உன்னதே—உயர்ந்து; வின்யஸ்த—ஊன்றி; ஹஸ்த—அவர் கையினால்; அக்ரம்—முன்பகுதி; உரங்க-வித்விஸ:—பாம்புகளின் பகைவரான கருடனின்.

பாம்புகளின் பகைவரான கருடனின் தோள்களின் மீது தன் கைகளைப் போட்டபடி முழுமுதற் கடவுள் தன்னுடைய திருவடித் தாமரைகள் சற்றேறத்தாழ நிலத்தில் தெரியும்படி நின்று கொண்டிருந்தார். பிருது மகாராஜா தன்னுடைய கண்களிலுள்ள கண்ணீரைத் துடைத்தபடி மீண்டும் பகவானைப் பார்ப்பதற்கு முயற்சி செய்தது பகவானை அதிக நேரம் பார்த்தும் இன்னும் அவர் திருப்தியடையாதது போல் இருந்தது. இவ்வாறு மன்னர் கீழ்க்கண்ட பிரார்த்தனைகளைச் செய்தார்.

பதம் 4.20.23
ப்ருதுர் உவாச
வரான் விபோ த்வத் வரதேஷ்வராத் புத:
கதம் வ்ருணீதே குண-விக்ரியாத்மநாம்
யே நாரகாணாம் அபி ஸந்தி தேஹிநாம்
தான் ஈஸ கைவல்ய-பதே வ்ருணே ந ச

ப்ருது: உவாச—பிருது மகாராஜா கூறினார்; வரான்—வரங்கள்; விபோ—எனது அன்பிற்குரிய பரமபுருஷ பகவானே; த்வத்—உம்மிடமிருந்து; வர-த-ஈஸ்-வராத்—வரம் அருள்வதில் மிகவும் உயர்ந்தவரான முழுமுதற் கடவுள்; புத:—படித்த அறிஞன்; கதம்—எவ்வாறு; வ்ருணதே—கேட்கக்கூடும்; குண-விக்ரியா—ஜட இயற்கையின் குணங்களினால் குழப்பமுற்று; ஆத்மநாம்—வாழ்கின்ற உயிர்கள்; யே—எவை; நாரகாரணம்—நரகத்தில் வாழ்கின்ற உயிர்கள்; அபி—கூட; ஸந்தி—வெளிப்படுகின்ற; தேஹிநாம்—உருவம் பெற்று; தான்—அவைகள் எல்லாம்; ஈஸ—ஓ பரம்பொருளே; கைவல்ய-பதே—பகவானுடன் இணைவதற்கு வரம் அருளுபவர்; வ்ருணே—நான் வேண்டுவது; ந—இல்லை; ச—கூட.

வரம் அருளும் தேவர்களுக்குள்ளே நீயே சிறந்தவர். எனவே கற்றறிந்த அறிஞன் ஏன் இயற்கையின் குணங்களினால் குழப்பமும் உயிர்களுக்குரிய வரங்களை உம்மிடம் கேட்க வேண்டும்? நரகத்தின் கொடுமைகளைத் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் உயிர்களுக்குக் கூட அவ்வரங்கள் தாமாகவே கிடைக்கின்றன. எனது அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய பகவானே உமது தோற்றத்துடன் நான் இணைவதற்கு அருள நிச்சயம் உம்மால் முடியும். ஆனாலும் அப்படிப்பட்ட வரத்தினைப் பெறுவதற்குக் கூட நான் விரும்புவதில்லை.

பதம் 4.20.24
ந காமயே நாத தத் அபி அஹம் க்வசின்
ந யத்ர யுஷ்மச்-சரணாம்புஜாஸவ:
மஹத்தமாந்தர்-ஹ்ருதயான் முக-ச்யுதோ
விதத்ஸ்வ கர்ணாயுதம் ஏஷ மே வர:

ந—இல்லை; காமயே—விரும்புவது; நாத—நாதரே; தத்—அந்த; அபி—அதுகூட; அஹம்—நான்; க்வசித்—எந்தநேரமும்; ந—இல்லை; யத்ர—எங்கே; யுஷ்மத்—உம்முடைய; சரண-அம்புஜ—திருவடித் தாமரைகளின்; ஆஸவ:—அமிர்த மதுவினில்; மஹத்-தம—சிறந்த பக்தர்களின்; அந்த:-ஹ்ருதயாத்—இதய மத்தியில்; முக—வாயிலிருந்து; ச்யுத:—வெளிவருகின்ற; விதத்ஸ்வ—கொடும்; கர்ண—காதுகள்; அயுதம்—பத்துலட்சம்; ஏஷ:—இந்த; மே—எனது; வர:—வரமாகும்.

எனது அன்பிற்கினிய பகவானே, உமது திருவடித் தாமரை என்னும் மலரிலிருந்து வரும் அமிர்த மது இல்லாத வரமான உமது தோற்றத்துடன் இணைகின்ற வரத்தினைப் பெறுவதற்கு ஒருபோதும் நான் விரும்பமாட்டேன். நான் வேண்டும் வரம் என்பதெல்லாம் உமது பக்தர்களின் வாயிலிருந்தும் வரும் உமது பெருமைகளைக் கேட்பதற்கும் பத்து லட்சம் காதுகள் வேண்டும் என்பதே.

பதம் 4.20.25
ஸ உத்தமஸ்லோக மஹன்-முக-ச்யுதோ
பவத்-பதாம்போஜ ஸீதா கணாநில:
ஸ்ம்ருதிம் புனர் விஸ்ம்ருத-தத்த்வ-வர்த் மனாம்
குயோகினாம் நோ விதரதி அலம் வரை:

ஸ:—அந்த; உத்தம-ஸ்லோக—ஓ, பகவான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்களால் புகழப்படுபவர்; பவத்—உமது; பத-அம்போஜ—திருவடித் தாமரையிலிருந்து; ஸீதா—தேனின்; கண—துகள்கள்; அநில:—மென்மையான தென்றல்காற்று; ஸ்ம்ருதிம்—நினைவில் இருக்கின்ற; புன:—மீண்டும்; விஸ்ம்ருத—மறந்துவிடுகின்ற; தத்த்வ—உண்மைக்கு; வர்த்மனாம்—அப்படிப்பட்ட மனிதர்களின் பாதை; கு-யோகினாம்—பக்திப் பணியில் இல்லாத மனிதர்கள்; ந:—நமது; விதரதி—திரும்ப அடைதல்; அலம்—தேவையற்ற; வரை:—பிற வரங்கள்.

மிக உயர்ந்த மனிதர்களின் சிறந்த பாடல்களினால் நீர் பெருமைப்படுத்தப்படுகின்றீர்! உமது பாத கமலத்தின் அப்பெருமைகள் எல்லாம் மகரந்தத் துகள்களைப் போன்றவையாகும். உமது கமல பாதத்தின் மகரந்தத்தூளின் நறுமணத்தை மிகச் சிறந்த பக்தர்களின் நாவிலிருந்து புறப்படும் தெய்வீக ஒலி சுமந்து வரும் பொழுது தனது உண்மை நிலையினை மறந்து போயிருக்கும் உயிர்வாழி மெல்ல மெல்ல உம்மோடு கொண்டிருந்த நித்திய உறவினை நினைவு கூர்கிறான். பக்தர்கள் இவ்விதம் வாழ்வின் உண்மை மதிப்புப் பற்றிய சரியான முடிவிற்குப் படிப்படியாக வருகின்றனர். எனது அன்பிற்கினிய இறைவனே உமது புகழினை உமது உண்மையான பக்தனது நாவிலிருந்து கேட்கின்ற பாக்கியத்தைத்தவிர வேறெந்த வரமும் நான் வேண்டேன்.

பதம் 4.20.26
யஸ: ஸிவம் ஸீஸ்ரவ ஆர்ய-ஸங்கமே
யத்ருச்சயா சோபஸ்ருணோதி தே ஸக்ருத்
கதம் குண-ஜ்ஞோ விரமேத் விநா பஸீம்
ஸ்ரீர் யத் ப்ரவவ்ரே குண-ஸங்ரஹேச்சயா

யஸ:—பெருமைகள்; ஸிவம்—எல்லா நன்நிமித்தங்களும்; ஸீ-ஸ்ரவ:—ஓ உயர்ந்த பெருமைகளையுடைய பகவானே; ஆர்ய-ஸங்கமே—உயர்ந்த பக்தர்களின் தொடர்பினால்; யத்ருச்சயா—எவ்வாறேனும்; ஸ—மேலும்; உபஸ்ருணோதி—கேட்பது; தே—உமது; ஸக்ருத்—ஒரு முறையேனும்; கதம்—எப்படி; குண-ஜ்ஞா:—நல்ல தன்மைகளைப் பாராட்டுபவர்; விமேத்—விட்டுவிடக் கூடிய; விநா—இல்லையேல்; பஸீம்—ஒரு விலங்கு; ஸ்ரீ:—அதிர்ஷ்டதேவதை; யத்—எது; ப்ரவவ்ரே—சம்மதித்தல்; குணா—உமது குணங்கள்; ஸங்கர்ஹ—பெறுவதற்கு; இச்சயா—இச்சையுடன்.

எனது வணக்கத்திற்குரிய உயர்ந்த பெருமையுடைய பகவானே, தூய பக்தர்களோடு உறவுகொண்டு ஒருவன் உமது செயல்களின் பெருமைகளைப் பற்றி ஒரு முறை கேட்பான் என்றால் அவன் ஒரு விலங்காக இல்லாதிருக்கும் பட்சத்தில், அப்பக்தர்களின் உறவினை எக்காரணம் கொண்டும் விட்டுவிட மாட்டான், புத்திமான் அவர்களது உறவினைக் கைவிட அக்கறை கொள்ளமாட்டான். உமது திருப்புகழை ஓதுவதும், கேட்பதும், அதிர்ஷ்ட தேவதையினால் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அத்தேவதை உமது அளவற்ற லீலைகளையும், உன்னதமான பெருமைகளையும் கேட்கவே விரும்புகின்றாள்.

பதம் 4.20.27
அதாபஜே த்வாகில-பூருஷோத்தமம்
குணாலயம் பத்ம-கரேவ வாலஸ:
அபி ஆவயோர் ஏக-பதி-ஸ்ப்ருதோ:கலிர்
ந ஸ்யாத் க்ருத-த்வச்-சரணைக தானயோ:

அத—ஆகவே; ஆபஜே—நான் பக்தித் தொண்டில் ஈடுபடுவேன்; த்வா—உமக்கு; அகில—எல்லாம் சேர்ந்த; பூருஷ-உத்தமம்—முழுமுதற் கடவுள்; குண-ஆலயம்—தெய்வீகத் தன்மைகளின் உறைவிடம்; பத்ம-கரா—அதிர்ஷ்ட தேவதை தனது கையில் தாமரை மலரை வைத்திருப்பவர்; இவ—அதுபோல்; வாலஸ:—ஆர்வம் கொண்டு; அபி—உண்மையில்; ஆவயோ:—நானும், லட்சுமியும்; பதி—ஒரு நாயகர்; ஸ்ப்ருதோ:—போட்டி போட்டுக் கொண்டு; கலி:—சண்டை; ந—இல்லை; ஸ்யாத்—நடைபெறலாம்; க்ருத—செய்கின்ற; த்வத்-சரண—உமது திருவடித் தாமரைக்கு; ஏக-தானயோ:—ஒரே கவனமுடன்.

நான் இப்பொழுது முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரையினிடத்து, கையில் தாமரை மலருடன் இருக்கின்ற அதிர்ஷ்ட தேவதை செய்யும் பணியினைப் போல் என்னையும் அப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் நமது மேன்மைக்குரிய முழுமுதற் கடவுள், எல்லாத் தெய்வீகத் தன்மைகளையும் தன்னிடத்தே கொண்ட உறைவிடமாவார். நானும் அதிர்ஷ்ட தேவதையும் ஒரே பணியில் ஈடுபட்டிருப்பதினால் எங்களுக்குள் சண்டை வருமோ என நான் அஞ்சுகிறேன்.

பதம் 4.20.28
ஜகஜ்-ஜனன்யாம் ஜகத்-ஈஸ வைஸஸம்
ஸ்யாத் ஏவ யத்-கர்மணி ந: ஸமீஹிதம்
கரோஷி பல்க்வ அபி உரு தீன-வத்ஸல:
ஸ்வ ஏவ திஷ்ண்யே ‘பிரதஸ்ய கிம் தயா

ஜகத்-ஜனன்யாம்—உலகத்தின் தாய் (லட்சுமி); நுகத்-ஈஸ—பிரபஞ்சநாயகன்; வைஸஸம்—ஆத்திரம்; ஸ்யாத்—எழலாம்; ஏவ—உறுதியாக; யத்-கர்மணி—எவரது செயலினால்; ந:—எனது; ஸமீஹிதம்—விருப்பம்; கரோஷி—நீர் கருதுவது; பல்கு—முக்கியமற்ற பணி; அபி—அது கூட; உரு—மிகஉயர்ந்த; தீன-வத்ஸவ:—எப்போதும் ஏழைகளில் பால் இரக்கமுள்ளவர்; ஸ்வே—சுயமாக; ஏவ—உறுதியாக; திஷ்ண்யே—உமது செல்வவளத்தில்; அபிரதஸ்ய—முழு நிறைவடைந்த ஒருவரில்; கிம்—என்னதேவை இருக்கிறது; தயா—அவருடன் (அதிர்ஷ்ட தேவதை).

எனது அன்பிற்குரிய உலகின் நாயகரே, உலகின் தாயாக அதிர்ஷ்ட தேவதை லட்சுமி இருந்தும், அவரது ரசபாவத்தில் இருந்து உமக்கு நான் தொண்டு செய்வது அவரது உரிமையில் குறுக்கிடுவது என்று அவர் என்மீது கோபிக்கலாமோ என்று நான் நினைக்கின்றேன். இப்படிப்பட்ட தவறான எண்ணம் இருந்தாலும் நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன். காரணம் நீர் என் போன்ற ஏழைகளின் பால் அதிக அன்பு உடையவர், நாங்கள் சாதாரணமாகச் செய்யும் தொண்டினைக் கூட பெரிதாக மதிப்பவர். ஆகையினால் நீர் என் பக்கம் இருப்பீர் என்பதினால்தான். அப்படியே அவர் கோபித்தால் கூட உமக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது. காரணம் எல்லாவற்றிலும் முழு நிறைவடைந்தவரான நீர் அவர் இல்லாமலேயே எதையும் செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதை நான் அறிவேன்.

பதம் 4.20.29
பஜந்தி அத த்வாம் அத ஏல ஸாதவோ
வ்யுதஸ்த-மாயா-குணா-விப்ரமோதயம்
பவத்-பதானுஸ்மரணாத் ருதே ஸதாம்
நிமித்தம் அன்யத் பகவன் ந வித்மஹே

பஜந்தி—அவர்கள் துதிப்பது; அத—ஆகையினால்; த்வாம்—நீர்; அத: ஏவ—ஆகையினால்; ஸாதவ:—முனிவர்கள்; வ்யுதஸ்த—நீக்கிக் கொள்கின்றனர்; மாயாகுணா—ஜடஇயற்கையின் குணங்கள்; விப்ரம—தவறான கருத்துகள்; உதயம்—தோன்றுகிறது; பவத்—உமது; பத—தாமரைப்பாதங்கள்; அனுஸ்மரணாத்—தொடர்ந்து நினைப்பது; ருதே—தவிர; ஸதாம்—மகாமுனிவர்கள்; நிமித்தம்—காரணம்; அன்யத்—அடுத்த; பகவன்—ஓ, முழுமுதற் கடவுளே; ந—இல்லை; வித்மஹே—நான் அறியக்கூடியது.

எப்பொழுதும் வீடுபேறு பெற்ற மகாமுனிவர்கள் உமக்கு பக்தித் தொண்டு புரிகின்றனர்; காரணம் பக்தித் தொண்டின் மூலமே ஒருவனால் பௌதீக வாழ்வின் மாயையிலிருந்து விடுதலை பெறமுடியும். ஓ, பகவானே, அப்படி வீடு பேறு பெற்றவர்கள், உமது திருவடித் தாமரைகளையே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர அவர்கள் உமது திருவடித் தாமரைகளைச் சரண்புக வேறு காரணம் எதுவுமில்லை.

பதம் 4.20.30
மன்யே கிரம் தே ஜகதாம் விமோஹினீம்
வரம் வ்ருணீஷ்வேதி பஜந்தம் ஆத்த யத்
வாசா நு தந்த்யா யதி தே ஜனோ ‘ஸித:
கதம் புன: கர்ம கரோதி மோஹித:

மன்யே—நான் கருதுகிறேன்; கிரம்—வார்த்தைகள்; தே—உமது; ஜகதம்—பௌதீக உலகம்; விமோஹினீம்—மயக்குகின்ற; வரம்—வரம்; வ்ருணீஷ்வ—ஏற்றுக்கொள்ளுதல்; இதி—இவ்வாறு; பஜந்தம்—உமது பக்தனுக்கு; ஆத்த—நீர் சொன்னது; யத்—ஏனென்றால்; வாசா—வேதங்களிலுள்ள கருத்துக்களினால்; நு—உறுதியாக; தந்த்யா—கயிறுகளினால்; யதி—அப்படி இருந்தால்; தே—உமது; ஜன—பொதுமக்கள்; அஸித:—கட்டுப்படுவதில்லை; கதம்—எவ்வாறு; புன:—மீண்டும் மீண்டும்; கர்ம—பலன்தரும் செயல்கள்; கரோதி—செய்வது; மோஹித:—மோகம் கொண்டிருக்கின்ற.

எனது அன்பிற்குரிய பகவானே! நீர் உமது தூய பக்தனுக்குச் சொல்லியிருக்கின்றவையெல்லாம் நிச்சயம் அதிகக் குழப்பமுடையவைகளே. வேதங்களில் நீர் தருகின்ற கவர்ச்சிமிக்க வாசகங்கள் தூய பக்தனுக்கு ஒத்து வராதவைகளாகும். வேதங்களின் இனிய வார்த்தைகளில் மயங்கிய மக்கள் மீண்டும் மீண்டும் பலன்தரும் தொழில்களையே செய்து அவற்றின் விளைவான பயன்களில் மோகமுறுகிறார்கள்.

பதம் 4.20.31
த்வன்-மதாயயாத்தா ஜன ஈஸ கண்டிதோ
யத் அன்யத் ஆஸாஸ்த ருதாத்மநோ ‘புத:
யதா சரேத் பால-ஹிதம் பிதாஸ்வயம்
த்தா த்வம் ஏவார்ஹஸி ந: ஸமீஹிதும்

த்வத்—உமது; மாயயா—மாயையினால்; அத்தா—உறுதியாக; ஜன—பொதுமக்கள்; ஈஸ—ஓ, எனது பகவானே; கண்டித:—தனியாகப்பிரித்து: யத்—ஏனென்றால்; அன்யத்—அடுத்த; ஆஸாஸ்தே—அவர்கள் விரும்புகின்றனர்; ருத—உண்மையான; ஆத்மந:—ஆத்மாவிலிருந்து; அபுத:— சரியாகப் புரிந்து கொள்ளாமல்; யதா—இருக்கின்றாற்போல்; சரேத்—ஈடுபடுவதில்; பால-ஹிதம்—ஒருவனது குழந்தையின் நலத்தில்; பிதா—தந்தை; ஸ்வயம்—தனிப்பட்ட முறையில்; ததா—அதுபோல்; த்வம்—உமது மேன்மையான ஆட்சியில்; ஏவ—நிச்சயம்; அர்ஹஸி ந:-ஸமீஹிதும்—எனக்காகச் செயல்படுவீர்.

எனது பகவானே! உமது மாயா சக்தியினால் இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் தங்களது உண்மையான நிலையினை மறந்து அறியாமையினால், சமுதாயம், நட்பு, காதல் போன்ற பௌதீக இன்பங்களை விழைகின்றன. ஆகையினால் இதுபோன்ற பௌதிக இன்பங்களைத் தரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும்படி கருணை கூர்ந்து கேட்காதீர், ஒரு தந்தை, தன்மகன் எதுவும் தன்னிடம் கேட்காமலேயே அவனுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வது போல் நீரும் எனக்கு எது நன்மை என்று கருதுகின்றீரோ அதனையே அருள்வீராக!

பதம் 4.20.32
மைத்ரேய உவாச
இதி ஆதி-ராஜேன நுத: ஸ விஸ்வ த்ருக்
தம் ஆஹ ராஜன் மயிபக்திர் அஸ்துதே
திஷ்ட்யேத்ருஸீ தீர் மயி தே க்ருதா யயா
மாயாம் மதீயாம் தரதி ஸ்ம துஸ்த்யஜாம்

மைத்ரேய:—மைத்ரேயர், மகாமுனிவர்; உவாச—கூறினார்; இதி—இவ்வாறு; ஆதி ராஜேன—ஆதி அரசர் (ப்ருது); நுத:—வணங்குகின்ற; ஸ:—அவர் (முழுமுதற் கடவுள்); விஸ்வ-த்ருக்—இப்பிரபஞ்சம் முழுவதையும் உணர்ந்தவர்; தம்—அவருக்கு; ஆஹ—சொன்னார்; ராஜன்—எனது அன்பான அரசனே; மயி—எனக்கு; பக்தி:—பக்தித் தொண்டு; அஸ்து—இருக்கின்றபடியே; தே—உன்னால்; க்ருதா—செய்யப்பட்டிருக்கின்ற; யயத—எதனால்; மாயாம்—மாயாசக்தி; மதீயாம்—எனது; தரதி—கடப்பது; ஸ்ம—உறுதியாக; துஸ்த்யஜாம்—விடுவதற்கு கடினமானது.

மகாமுனிவரான மைத்ரேயர், இப்பிரபஞ்சம் முழுவதையும் உணர்ந்த பகவான், பிருத மகாராஜாவின் பிரார்த்தனையைக் கேட்டு அவரிடம் கூறியதைத் தொடர்ந்து கூறினார்: எனது அன்பான மன்னனே! நீ எப்போதும் எனது பக்தித்தொண்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன். நீ மிகவும் புத்திசாலித்தனமாகக் கேட்ட அத்தூய்மையான நோக்கம் ஒன்றே யாரும் கடக்க முடியாத மாயா சக்தியினைக் கடக்க உதவுவதாகும்.

பதம் 4.20.33
தத் த்வம் குரு மாயாதிஷ்டம் அப்ரமத்த: ப்ரஜாபதே
மத்-ஆதேஷ-கரோ லோக: ஸர்வத்ராப்னோதி ஸோபனம்

தத்—ஆகையினால்; த்வம்—நீ; குரு—செய்; மயா—என்னால்; ஆதிஷ்டம்—என்ன கட்டளையிடப்பட்டதோ; அப்ரமத்த:—தவறான பாதையில் செல்லாது; ப்ரஜா-பதே—ஓ, மக்களின் நாயகனே; மத்—எனது; ஆதேஷ-கர:—நிறைவேற்றுபவன்; லோக:—யாரேனும் மனிதன்; ஸர்வத்ர—எங்கெங்கும்; ஆப்னோதி—அடைதல்; ஸோபஸம்—சர்வமங்களங்களும்.

எனது அன்பான மன்னனே, குடிமக்களைக் காப்பவனே! இன்றிலிருந்து எவ்வாறாலும் நீ தவறான பாதைக்குச் செல்லாமல் எனது கட்டளைகளை நிறைவேற்றுவாயாக. யாரேனும் ஒருவன் இவ்வாறு வாழ்ந்து எனது கட்டளைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றுவான் என்றால் அவன் இவ்வுலகமெங்கணும் எப்போதும் நல்லதர்ஷ்டத்தையேக் காண்பான்.

பதம் 4.20.34
மைத்ரேய உவாச
இதி வைன்யஸ்ய ராஜர்ஷே: ப்ரதிநந்த்யார்வத் வச:
பூஜிதோ ‘னுக்ருஹீத்வைனம் கந்தும் சக்ரே ‘ச்யுதோ மதிம்

மைத்ரேய: உவாச—மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; இதி—இவ்வாறு; வைன்யஸ்ய—வேன என்றும் மன்னனின் மைந்தன்; (பிருது மகாராஜா); ராஜர்ஷே:—ராஜரிஷி; ப்ரதிநந்த்ய—பாராட்டுகின்ற; அர்த்த-வத்-வச:—அர்த்தம் நிறைந்த பிரார்த்தனைகள்; பூஜித:—பூஜிக்கின்ற; அனுக்ருஹீத்வா—போதுமான அனுக்கிரகங்கள்; ஏனம்—பிருது மன்னர்; கந்தும்—அவ்விடத்தை விட்டுச் செல்வதற்கு; சக்ரே—செய்தார்; அச்யுத:—குற்றமற்றப் பகவான்; மதிம்—அவர் மனம்.

விதுரரிடம் மகாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: முழுமுதற் கடவுள், மகாராஜா பிருதுவின் ஆழமானப் பொருள் நிறைந்த பிரார்த்தனைகளை மனம் திறந்து பாராட்டினார். இவ்வாறு மன்னரால் முறையாக வணங்கப் பெற்றபிறகு, பகவான் அவரை ஆசீர்வதித்துப் புறப்படுவதற்குத் தயாரானார்.

பதங்கள் 4.20.35 – 4.20.36
தேவர்ஷி-பித்ரு-கந்தர்வ ஸித்த-சாரண-பன்னகா:
கின்னராப்ஸரஸோ மர்த்யா: ககா பூதானி அநேகஸ:

யஜ்ஞேஸ்வர-தியா ராஜ்ஞா வாக்-வித்தாஞ்சலி-பக்தித:
ஸபாஜிதா யயு: ஸர்வே வைகுண்டானுகதாஸ் தத:

தேவ—தேவர்கள்; ரிஷி—மகாமுனிவர்கள்; பித்ரு—பித்ரு லோகத்தைச் சேர்ந்தவர்கள்; கந்தர்வ—கந்தர்வ லோகத்தைச் சேர்ந்தவர்கள்; ஸித்த—ஸித்த லோகத்தைச் சேர்ந்தவர்கள்; சாரண—சாரண லோகத்தைச் சேர்ந்தவர்கள்; பன்னகா:—நாக லோகத்தைச் சேர்ந்தவர்கள்; கின்னர—கின்னர லோகத்தைச் சேர்ந்தவர்கள்; அப்ஸரஸ:—அப்ஸர லோகத்தைச் சேர்ந்தவர்கள்; மர்த்யா:—பூலோகத்தைச் சேர்ந்தவர்கள்; ககா:—பறவைகள்; பூதானி—மற்றும் பல உயிர்க்குலங்கள்; அனேகஸ—அனேகம்; யஜ்ஞ-ஈஸ்வர-தியா—முழுமுதற் கடவுளின் முக்கிய அங்கத்தினைப் பற்றிய உயரிய ஞானம்; ராஜ்ஞா—அரசரால்; வாக்—இனிமையான வார்த்தைகளுடன்; வித்த—செல்வம்; அஞ்சலி—கூப்பிய கரங்களுடன்; பக்தித்:—பக்தித் தொண்டு செய்யும் வேகத்தில்; ஸபாஜிதா:—முறையாக பிரார்த்திக்கப்பட்டு; யயு:—சென்றார்; ஸர்வே—எல்லோரும்; வைகுண்ட—முழுமுதற் கடவுளான விஷ்ணு; அனுகதா:—அடியவர்கள்; தத:—அந்த இடத்தினின்று.

பிருது மன்னர், தேவர்களையும், மகாமுனிவர்களையும், பித்ரு லோகத்தைச் சேர்ந்தவர்களையும், கந்தர்வலோகத்தைச் சேர்ந்தவர்களையும், சித்தலோகத்தைச் சேர்ந்தவர்களையும், சாரண லோகத்தைச் சேர்ந்தவர்களையும், நாக லோகத்தைச் சேர்ந்தவர்களையும், கின்னர லோகத்தைச் சேர்த்தவர்களையும், அப்ஸர லோகத்தைச் சேர்ந்தவர்களையும், பூலோகத்தைச் சேர்ந்தவர்களையும், பறவை லோகத்தைச் சேர்ந்தவர்களையும் வணங்கினார். கூப்பிய கரங்களுடன் இவர்கள் எல்லோரையும் வணங்கியது போல் முழுமுதற் கடவுளையும், அவரது துணைவர்களையும், எல்லாவகைச் செல்வங்களுடன், இனிமையான வார்த்தைகளையும் சேர்த்து அர்ப்பணித்துப் பிரார்த்தித்தார். இவ்விழா நிறைவு பெற்றவுடன் பகவான் விஷ்ணுவைத் தொடர்ந்து எல்லோரும் தத்தம் இருப்பிடம் சென்றார்கள்.

பதம் 4.20.37
பகவான் அபி ராஜர்ஷே: ஸோபாத் யாயஸ்ய சாச்யுத:
ஹரன்ன் இவ மனோ ‘முஷ்ய ஸ்வ-தாம ப்ரத்யபத்யத

பகவான்—முழுமுதற் கடவுள்; அபி—கூட; ராஜர்ஷே:—ராஜரிஷியான அரசர்; ஸ-உபத்யாயஸ்ய—புரோகிதர்கள் எல்லோருடனும்; ச—கூட; அச்யுத:—குற்றமற்ற இறைவன்; ஹரன்—வசீகரிப்பவர்; இவ—உண்மையில்; மன:—மனம்; அமுஷ்ய—அவரது; ஸ்ம-தாம—அவரது இருப்பிடம்; ப்ரத்யபத்யத—திரும்பினார்.

குற்றமற்றவரான முழுமுதற் கடவுள் அங்கே நின்று கொண்டிருந்த மன்னர் மற்றும் புரோகிதர்கள் போன்ற எல்லோரின் மனங்களையும் கவர்ந்து கொண்டு ஆன்மீக லோகத்திலுள்ள தனது இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

பதம் 4.20.38
அத்ருஷ்டாய நமஸ்க்ருத்ய ந்ருப: ஸந்தர்ஸிதாத்மனே
அவியக்தாய ச தேவாநாம் தேவாய ஸ்வ-புரம் யயௌ

அத்ருஷ்டாய—பௌதீகக் காட்சிக்கும் அப்பால் பார்க்கக் கூடிய ஒருவருக்கு; நம:-க்ருத்ய—வந்தனங்களைத் தெரிவித்து; ந்ருப:—அரசர்; ஸந்தர்ஸித—காண்பதற்கு அனுமதி; ஆத்மனே—முழுமுதற் கடவுளுக்கு; அவ்யக்தாய—இப்பௌதீக உலகத் தோற்றங்களுக்கெல்லாம் மேற்பட்டவர்; ச—மேலும்; தேவாநாம்—தேவர்களின்; தேவாய—பரமபுருஷ பசுவானுக்கு; ஸ்வ-புரம்—தனது இல்லம்; யயெள—திரும்பினார்.

தேவர்களின் தெய்வமான முழுமுதற் கடவுளுக்கு பிருத மகாராஜா தன் மரியாதைக்குறிய வந்தனங்களைத் தெரிவித்தார். சாதாரண கண்களுக்குப் புலப்படாதவராயிருந்தாலும் பிருது மகாராஜாவிற்குத் தன்னைக் காணும் சக்தியினை பகவான் அருளினார். முழுமுதற் கடவுளுக்குத் தன் வந்தனங்களைத் தெரிவித்த பிறகு பிருது மகாராஜா தன் அரண்மனை திரும்பினார்.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “பகவான் விஷ்ணு மாமன்னன் பிருதுவின் வேள்விச் சாலையில் தோன்றுதல்” எனும் தலைப்பை கொண்ட இருபதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare