அத்தியாயம் – 2
சிவபெருமானை தட்சன் சபித்தல்
பதம் 4.2.1 : விதுரர் கேட்டார்: தட்சன் தன் புதல்வி மீது மிகவும் பாசம் வைத்திருந்தும் மேன்மையானவர்களில் மிகச் சிறந்த சிவபெருமான் மீது ஏன் வெறுப்பினைக் கொண்டிருந்தார்? தனது அருமை மகளை தட்சன் ஏன் புறக்கணித்தார்?

பதம் 4.2.2 : இவ்வுலகிற்கெல்லாம் ஆன்மீக குருவாக விளங்கும் சிவபெருமான் பகையுணர்ச்சி ஏதுமில்லாதவர், அமைதி நிறைந்தவர் என்பதோடு தன்னுள் திருப்தியுற்றவரும் ஆவார். அனைத்துத் தேவர்களிலும் மிகச் சிறந்தவர். உண்மை இவ்வாறிருக்க தட்சன் ஏன் அவரிடம் பகைமை பாராட்டினார்?

பதம் 4.2.3 : எனது அன்பிற்குரிய மைத்ரேயரே, ஒருவர் தனது உயிரை விட்டுவிடுவது என்பது எத்துணைக் கடினமானது! இப்பேர்ப்பட்ட மருமகனும், மாமனாரும் ஏன் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர் என்பதையும், சிறந்த பெண் தெய்வமான சதீ தனது உயிரை ஏன் மாய்த்துக் கொண்டாள் என்பது பற்றியும் என்மீது அன்பு கொண்டு விளக்குவீரா?

பதம் 4.2.4 : மைத்ரேய முனிவர் கூறினார்: உலகைப் படைத்த முக்கியத் தலைவர்கள் எல்லோரும் முன்னொரு காலத்தில் சேர்ந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றினைச் செய்தனர். அதில் மாமுனிவர்கள், தத்துவவாதிகள், தேவர்கள் மற்றும் அக்கினிக் கடவுள்கள் அனைவரும் தங்கள் அடியவர்களுடன் கலந்து கொண்டனர்.

பதம் 4.2.5 : பிரஜாபதிகளின் தலைவரான தட்சன் அந்த வேள்விச் சாலையினுள் நுழைந்த பொழுது அவனது உடலிலிருந்து வீசிய ஒளியானது சூரியனது பொற்கதிர்களைப் போல் ஒளிர்ந்தது அவ்வேள்விச் சாலையினையே ஒளிமிக்கதாய்ச் செய்தது. அங்கு கூடியிருந்த அனைவருமே அவர்முன் சிறப்பிழந்து போனார்கள்.

பதம் 4.2.6 : அவரது உடலிலிருந்து வீசிய ஒளியின் தாக்கத்தினால் சிவபெருமானையும், பிரம்ம தேவனையும் தவிர அங்கிருந்த அக்கினிதேவர்கள் உட்பட அனைவரும் தட்சனுக்குரிய மரியாதை நிமித்தம் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றனர்.

பதம் 4.2.7 : அப்பெரிய வேள்விக் கூடத்தின் தலைவராக விளங்கிய பிரம்ம தேவனால், தட்சன் முறைப்படி வரவேற்கப்பட்டார். பிரம்ம தேவனுக்கு மரியாதை செலுத்திய பிறகு, அவரது ஆணையின் பேரில் தட்சன் தனது இருக்கையில் முறைப்படி அமர்ந்தார்.

பதம் 4.2.8 : இருப்பினும் தனது இருக்கையில் அமர்வதற்கு முன்னர் சிவபெருமானைப் பார்த்த தட்சன், அவர் தனக்கு எந்தவித மரியாதையும் செலுத்தாது அமர்ந்திருந்ததைக் கண்டு மிகவும் ஆவேசமுற்றார். ஆத்திரத்தினால் அவனது இரு விழிகளும் சிவந்தன. எனவே அவர் சிவபெருமானுக்கு எதிராக மிகவும் கடுமையான வார்த்தைகளைக் கூறத் தொடங்கினார்.

பதம் 4.2.9 : இங்கு குழுமியிருக்கும் முனிவர்களே. அந்தணர்களே, அக்கினித் தேவர்களே! மேன்மையானவர்களின் நடைமுறைகளைப் நான் கூறப் போவதைக் கவனமுடன் கேட்பீராக, நான் இதனை அறியாமையினாலோ அல்லது பொறாமையினாலோ பேசவில்லை.

பதம் 4.2.10 : சிவபெருமான், உலக ஆளுநர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கிறார். நாகரீக நடைமுறைகளின் பாதையினை மாசுபடுத்துகிறார். காரணம் அவர் வெட்கங்கெட்டவர் என்பதோடு எவ்வாறு நடந்து கொள்வது என்பதையும் அறியாதவர் ஆவார்.

பதம் 4.2.11 : அக்கினி சான்றாக அந்தணர்களின் முன்னே எனது புதல்வியை எப்பொழுது கரம் பற்றினாரோ அப்பொழுதே அவர் எனக்கு அடுத்த கீழ் நிலையில் உள்ளவர் என்பதை ஏற்றுக் கொண்டார். காயத்ரீக்கு இணையான எனது புதல்வியை மணந்து கொண்டதோடு ஒரு நேர்மையான மனிதரைப் போல் அவர் நாடகமாடுகிறார்.

பதம் 4.2.12 : இளம் மானைப் போன்ற அழகிய விழிகளையுடைய எனது புதல்வியை, மந்தியினைப் போல் விழிகளுடைய இவர் மணந்து கொண்டார். ஆனாலும் என்னைக் கண்டு எழுந்து நிற்கவோ, இனிமையான வார்த்தை கூறி இவர் வரவேற்கவோ இல்லை.

பதம் 4.2.13 : நாகரீக விதிகள் அனைத்தையும் சீர்குலைத்த இவருக்கு எனது புதல்வியைக் கொடுக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால் ஒழுங்குமுறை விதிகள் எதனையும் கடைப்பிடிக்காத மாசுற்றவர் இவர். இருந்தாலும் சூத்திரனுக்கு வேதத்தினை உணர்த்துவது போல் நான் இவருக்கு எனது மகளைக் கொடுக்கச் சம்மதித்தேன்.

பதங்கள் 4.2.14 – 4.2.15 : அழுக்கு நிரம்பிய சுடுகாட்டில் அவர் வசிக்கிறார். அவரது நண்பர்களோ பேய்களும், பூதங்களுமாகும். உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு பித்தனைப் போல் ஒரு நேரம் சிரித்துக் கொண்டும், மறு நேரம் அழுது கொண்டும் இருப்பார். ஒழுங்காக முழுவதும் நீராடுவதே இல்லை. ஆபரணங்களாக அணிந்து கொள்வதோ மண்டை ஓடுகளையும், எலும்புகளையும், மங்கலம் எனும் பொருள் தரும் சிவன் எனும் சொல் அவரது பெயரில் மட்டுமே உள்ளது. உண்மையில் அவர் பித்தனும், அமங்கலமானவனும் ஆவார். தமோ குணம் நிரம்பிய பித்தர்களின் நெருங்கிய நண்பரும், அவர்களின் தலைவரும் இவரேயாவார்.

பதம் 4.2.16 : தூய்மை என்பது ஒரு சிறிதுமின்றி மனத்துக்கண் மாசுடையவராக இவர் விளங்கிய போதிலும், பிரம்மதேவன் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே கற்பிற்சிறந்த எனது அருமை மகளை இவருக்கு அளித்தேன்.

பதம் 4.2.17 : மைத்ரேய முனிவர் தொடர்ந்து கூறினார்: இதன் பின் தட்சன் தனக்கெதிராக சிவபெருமான் அமர்ந்திருப்பதைக் கண்டு தனது கரங்களையும், வாயினையும் நீரால் கழுவிவிட்டு பின்வரும் வார்த்தைகளினால் மீண்டும் அவரைச் சபித்தார்.

பதம் 4.2.18 : வேள்விகளில் கிடைக்கும் அவிர்பாகங்களைப் பெறுவதற்கு தேவர்கள் உரியவராவர் என்றாலும் அனைத்துத் தேவர்களிலும் கீழானவராக சிவபெருமானுக்கு எந்தவித அவிர்பாகமும் இனி கிடையாது.

பதம் 4.2.19 : மைத்ரேயர் கூறினார்: வேள்விச் சாலையில் இருந்த அனைவரும் தட்சனை வேண்டிக்கொண்டும், சினம் தணியாத தட்சன் சிவபெருமானைச் சபித்து விட்டு அங்கிருந்து வெளியேறி தன் இல்லம் சேர்ந்தார்.

பதம் 4.2.20 : தட்சன் சிவபெருமானைச் சபித்ததைக் கண்டு அவரது முக்கியத் துணைவரான நந்திபகவான் மிகவும் ஆத்திரமுற்றார். கோபத்தினால் அவரது கண்கள் சிவந்தன. தட்சனையும், கொடிய வார்த்தைகளினால் அவன் சிவபெருமானைச் சபித்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்தணர்களையும் சபிப்பதற்கு அவர் தயாரானார்.

பதம் 4.2.21 : வெறுப்பின் காரணமாக தட்சனை உயர்வாகவும், சிவபெருமானைத் தாழ்வாகவும் நினைப்பவர் அறிவிற்குறைந்தோர் ஆவர். காரணம் அவரது பார்வையில் இருமை உள்ளது. அப்படிப்பட்டவர் தனது உன்னதமான ஆன்மீக அறிவினை விரைவில் இழந்து விடுவர்.

பதம் 4.2.22 : போலியான சமயத்தன்மை கொண்ட இல்லறத்தான் பொருள் இன்பங்களினாலும், வேதங்களின் மேம்போக்கான விளக்கங்களினாலும் கவரப்படுவதோடு தனது அனைத்து ஞானங்களையும் இழந்து பலன் தரும் செயல்களே எல்லாம் என்று கருதி அவற்றின் மீதே பற்று வைக்கிறான்.

பதம் 4.2.23 : தட்சன் இவ்வுடலே எல்லாம் என்று ஏற்றுக்கொண்டவர். அவர் விஷ்ணுபாதத்தினையோ அல்லது விஷ்ணு கதியினையோ மறந்ததின் விளைவாக பாலுறவு வாழ்வில் பற்று மிகுந்து அலைகிறார். அதற்கு தண்டனையாக மிகவிரைவில் அவர் ஒரு ஆட்டின் முகத்தினைப் பெறப்போகிறார்.

பதம் 4.2.24 : பொருள் அடிப்படையிலான கல்வி மற்றும் அறிவை முனைந்து வளர்ப்போர் செய்தி ஞானத்தில் மந்தமானவர்கள் ஆவதோடு தங்கள் அறியாமையினால் பலன் தரும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் வேண்டுமென்றே சிவபெருமானை அவமதிக்கின்றனர். இவர்கள் தொடர்ந்து பிறப்பு, இறப்பின் சுழற்சியில் இருப்பாராக.

பதம் 4.2.25 : வேத மந்திரங்களின் மலர் போன்ற மென்மையான மொழியில் மயங்கி சிவபெருமான் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட மந்த மதியாளர்கள் எப்போதும் பலன் தரும் செயல்களிலேயே பற்றுடையோராக இருப்பாராக.

பதம் 4.2.26 : இந்த அந்தணர்கள் கற்பது தவம் செய்வது, நோன்பு நோற்பது போன்றவையெல்லாம் தங்கள் உடலைப் பேணுவதற்காகவே ஆகட்டும். அவர்கள் எதனை உண்பது எதனை உண்ணக் கூடாது என்று பிரித்தறியத் தெரியாதவர்களாக மாறட்டும். உடலைப் பேணுவதற்காகப் பொருள் தேடி வீடுகள் தோறும் சென்று அவர்கள் இறந்து பிழைக்கட்டும்.

பதம் 4.2.27 : பரம்பரை அந்தணர்கள் அனைவரும் நந்தியம் பெருமானால் இவ்வாறு சபிக்கப்பட்டதைக் கண்ட பிருகு முனிவர் சிவபெருமானின் அடியவர்களைக் கடுமையான அந்தண சாபத்தினால் கண்டித்தார்.

பதம் 4.2.28 : சிவபெருமானை நயமுறச் செய்வதற்கென்று நோன்பு நோற்பவர்களோ அல்லது அக்கொள்கைகளைப் பின்பற்றுபவர்களோ நிச்சயமாக நாத்திகர்களாக மாறி உன்னதமான சாத்திரக் கட்டளைகளை மீறி நடப்பவர்களாகுக.

பதம் 4.2.29 : சிவபெருமானை வழிபடும் உறுதி பூண்டோர் அவரைப் போலியாகப் பின்பற்றித் தாங்களும் மூடத்தனமாக சடை முடி வைத்துக் கொள்கின்றனர். சிவபெருமானை வழிபடுவதற்குத் தீட்சை பெறும் பொழுதே அவர்கள் மது, மாமிசம் போன்றவற்றைத் தங்கள் வாழ்வில் விரும்பி ஏற்றுக் கொள்கின்றனர்.

பதம் 4.2.30 : பிருகு முனிவர் தொடர்ந்து கூறினார்: வேதங்களையும், வேதக்கொள்கைகளைப் பின்பற்றும் அந்தணர்களையும் நீங்கள் தூற்றியதால், கடவுள் மறுப்புக் கொள்கைகளிடம் நீங்கள் முன்னமேயே தஞ்சம் அடைந்திருக்கின்றீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

பதம் 4.2.31 : வேதங்களின் நிலையான நெறி முறைகள் மனித சமுதாயத்தின் மங்களகரமான முன்னேற்றத்திற்கு உரியவைகளாகும். அக்கொள்கைகள் முற்காலத்தில் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. இக்கொள்கைகளுக்கு உறுதியான ஆதாரமாக விளங்குபவர், அனைத்து உயிர்களின் நலன் விரும்பியாக உள்ளவர், ஜனார்த்தனன் என்றழைக்கப்படும் முழுமுதற் கடவுளே ஆவார்.

பதம் 4.2.32 : தூய்மை மிக்கதும், தெய்வீக அருளாளர்களுக்கு உயர்ந்த வழிகாட்டுவதாகவும் விளங்கும் வேதநெறிகளைப் பழிப்பதால், பூதபதியான சிவபெருமானின் அடியவர்களே, நீங்கள் நாத்திகர்களாகத் தாழ்ந்து விடுவீர்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

பதம் 4.2.33 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: இவ்வாறு சிவபெருமானின் அடியவர்களும், தட்சன் மற்றும் பிருகு முனிவரின் ஆதரவாளர்களும் ஒருவர் மீது மற்றொருவர் சாபத்தினை அள்ளி இறைத்துக் கொண்டிருந்த பொழுது சிவபெருமான் மிகவும் வாட்டமுடன் இருந்தார். அவர் ஒன்றுமே கூறாது தனது அடியவர்களுடன் அவ்வேள்விச் சாலையினை விட்டு வெளியேறினார்.

பதம் 4.2.34 : மைத்ரேய முனிவர் தொடர்ந்தார்: ஓ விதுரனே, முழுமுதற் கடவுளும், பரமபுருஷ பகவானுமான ஹரியினை வழிபடுவதற்கு வேள்விகளே சிறந்த வழி. ஆதலினால் இவ்வுலக மக்களின் முன்னோர்கள் ஆயிரம் வருடங்கள் அவ்வேள்வியினைச் செய்தனர்.

பதம் 4.2.35 : அன்பிற்குரிய விதுரனே, வில்லும் அம்பும் ஏந்திய தேவர்கள் அனைவரும் வேள்வியினை முடித்துவிட்டு கங்கையும், யமுனையும் கலக்குமிடத்தில் நீராடினர். இந்நீராட்டத்திற்கு அவப்ருத ஸ்நானம் என்று பெயர். இவ்வாறு அவர்கள் தமது மனங்களைத் தூய்மை செய்துகொண்டு தத்தமக்குரிய இடங்களை அடைந்தனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare