அத்தியாயம் – 19
பிருது மகாராஜனின் நூறு அஸ்வமேத யாகங்கள்
பதம் 4.19.1
மைத்ரேய உவாச
அதாதீக்ஷத ராஜா து ஹயமேத-ஸதேன ஸ:
ப்ரஹ்மாவர்தே மனோ: க்ஷேத்ரே யத்ர ப்ராசீ ஸரஸ்வதீ

மைத்ரேய: உவாச—மைத்ரேய முனிவர் கூறினார்; அத—அதன் பின்னர்; அதீக்ஷத—செய்ய முயலுதல்; து—பின்னர்; ஹய—குதிரை (அசுவம்); மேத—வேள்விகள்; ஸதேன—நூறு செய்வதற்கு; ஸ:—அவர்; ப்ரஹ்மாவர்தே—பிரம்மாவர்தம் எனப்படும்; மனோ:—சுவாயம்புவ மனுவின்; க்ஷேத்ரே—நிலப்பகுதியில்; யத்ர—எங்கே; ப்ராசீ—கிழக்கு; ஸரஸ்வதீ—சரஸ்வதி ஆறு.

மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, பிருது மன்னர், சரஸ்வதி நதி கீழ்த் திசையில் பாயும் இடத்தில் நூறு அசுவமேத யாகங்கள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அந்நிலப்பகுதி பிரம்மாவர்தம் என்று அழைக்கப்பட்டது. அது சுயாம்புவ மனுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

பதம் 4.19.2
தத் அபிப்ரேத்ய பகவான் கர்மாதிஸயம் ஆத்மன:
ஸத-க்ரதுர் ந மம்ருஷே ப்ருதோர் யஜ்ஞ-மஹோத்ஸவம்

தத் அபிப்ரேத்ய—இதனைக் கருத்தில் கொண்ட; பகவான்—மிகச் சக்தி வாய்ந்த; கர்ம-அதிஸயம்—பலன் தரும் செயல்களில் மேம்பட்ட; ஆத்மன:—அவனது; ஸத-க்ரது:—தேவேந்திரன் அவனும் நூறு அசுவமேத யாகங்கள் செய்தவன்; ந—இல்லை; மம்ருக்ஷே—தாங்குவதற்கு; ப்ருதோ:—பிருதி மன்னரின்; யஜ்ஞ—வேள்வி; மஹா-உத்ஸவம்—பெரிய விழாக்கள்.

இதனைக் கண்ணுற்ற மிகச் சக்தி வாய்ந்தவனும் தேவர்களின் தலைவனுமான தேவேந்திரன், பிருது மன்னர் பலன் தரும் செயல்களில் நிச்சயம் தன்னை மிஞ்சி விடுவார் என்னும் உண்மையினை உணர்ந்து கொண்டான். இதனால் பிருது மன்னரால் நடத்தப்படும் மிகப் பெரிய வேள்வியினை இந்திரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பதம் 4.19.3
யத்ர யஜ்ஞ-பதி: ஸாக்ஷாத் பகவான் ஹரிர் ஈஸ்வர:
அன்வபூயத ஸர்வாத்மா ஸர்வ-லோக-குரு: ப்ரபு:

யத்ர—எங்கே; யஜ்ஞ-பதி:—வேள்விகளின் நாயகன்; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவான்—முழுமுதற் கடவுள்; ஹரி:—பகவான் விஷ்ணு; ஈஸ்வர:—பரம நெறியாளர்; அன்வபூயத—காட்சியளித்தார்; ஸர்வ-ஆத்மா—அனைவரிடமும் இருக்கும் பரமாத்மா; ஸர்வ-லோக-குரு:—ஜகத்குரு அல்லது அனைத்து லோகங்களின் தலைவர்; ப்ரபு:—எஜமான்.

முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவே அனைவரது உள்ளங்களிலும் பரமாத்மாவாகவும், அனைத்து லோகங்களுக்கும் தலைவராகவும் அனைத்து வேள்விகளின் பலன்களை அனுபவிப்பவராகவும் விளங்குகிறார். அவர் பிருது மன்னர் நடத்திய வேள்வியில் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டார்.

பதம் 4.19.4
அன்விதோ ப்ரஹ்ம-ஸர்வாப்யாம் லோக-பாலை: ஸஹானுகை:
உபகீயமானோ கந்தர்வைர் முனிபிஸ் சாப்ஸரோ-கணை:

அன்விதோ:—ஆழ்ந்து வர; ப்ரஹ்ம—பிரம்மதேவன்; ஸர்வாப்யாம்—சிவபெருமான்; லோக-பாலை:—பல்வேறு கிரகங்களின் ஆதிபத்தியத் தேவர்கள்; ஸஹ-அனுகை:—அவர்கள் அடியவர்களுடன்; உபகீயமானோ:—புகழப்பட்டு; கந்தர்வைர்:—கந்தவர்கள்; முனிபிஸ்:—மாமுனிவர்கள்; ச—மேலும்; அப்ஸர:-கணை:—அப்ஸர லோகத்தைச் சேர்ந்தவர்கள்.

பகவான் விஷ்ணு வேள்விச் சாலையில் தோன்றிய பொழுது அவருடன் பிரம்மதேவன், சிவபெருமான், அனைத்துக் கிரகங்களின் ஆதிபத்தியத் தலைமைத் தேவர்கள் மற்றும் அவர்கள் அடியவர்கள் அனைவரும் அவரோடு சேர்ந்து வந்தனர். அவர் அங்கே தோன்றியவுடன் கந்தர்வ லோகத்தைச் சேர்ந்தவர்களும், அப்ஸர லோகத்தைச் சேர்ந்தவர்களும் அவரைப் போற்றிப் புகழ்ந்தனர்.

பதம் 4.19.5
ஸித்த வித்யாதரா தைத்யா தானவா குஹ்யகாதய:
ஸூநந்த-நந்த-ப்ரமுகா: பார்ஷத-ப்ரவரா ஹரே:

ஸித்தா:—சித்தலோகத்தினர்; வித்யாதரா:—வித்தியாதர லோகத்தைச் சேர்ந்தோர்; தைத்யா:—திதியினிடமிருந்து பிறந்த அசுரர்கள்; தானவா:—அசுரர்கள்; குஹ்யக-ஆதய:—யட்சகர்கள் போன்றோர்; ஸூநந்த-நந்த-ப்ரமுகா:—பகவான் விஷ்ணுவிற்கு தலைமைத் துணைவர்களான வைகுண்ட லோகத்தைச் சேர்ந்த சுநந்தன் மற்றும் நந்தனின் தலைமையின் கீழுள்ளவர்கள்; பார்ஷத—துணைவர்கள்; ப்ரவரா:—மிகுந்த மரியாதைக்குரிய; ஹரே:—முழுமுதற் கடவுள்.

பகவான் சித்தலோகத்தைச் சேர்ந்தவர்களினாலும், வித்தியாதர லோகத்தைச் சேர்ந்தவர்களினாலும், திதியின் வாரிசுகளை அசுரர்கள் மற்றும் யக்ஷர்களினால் சூழ்ந்து வரப்பட்டார். அவர் தமது தலைமைத் துணைவர்களான சுநந்தனும், நந்தனும் உடன்வர வந்தார்.

பதம் 4.19.6
கபிலோ நாரதோ தத்தோ யோகேஸா: ஸனகாதய:
தம் அன்வீயுர் பார்கவதா யே ச தத்-ஸேவனோத்ஸூகா:

கபிலோ:—கபில முனிவர்; நாரத:—நாரத முனிவர்; தத்த:—தத்தாத்திரேயர்; யோக-ஈஸா:—யோக ஸித்திகளின் தலைவர்கள்; ஸனக-ஆதய:—சனகரின் தலைமையின் கீழ்; தம்—பகவான் விஷ்ணு; அன்வீயு:—தொடர்ந்து; பார்கவதா:—சிறந்த பக்தர்கள்; யே—எவர்கள் அனைவரும்; ச—மேலும்; தத்-ஸேவன-உத்ஸூகா:—எப்போதும் பகவானுக்குத் தொண்டு புரியும் ஆர்வமுடையோர்.

முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டில் எப்போதும் ஈடுபட்டிருக்கும் மகாபக்தர்கள், கபிலர், நாரதர், தத்தாத்ரேயர் போன்ற மகாமுனிவர்கள், சனக குமாரர் தலைமையில் யோக சக்திகளின் தலைவர்கள் ஆகிய அனைவரும் பகவான் விஷ்ணுவுடன் சேர்ந்து அந்த மகா வேள்வியில் கலந்து கொண்டனர்.

பதம் 4.19.7
யத்ர தர்ம-துகா பூமி: ஸர்வ-காம-துகா ஸதீ
தோக்தி ஸ்மாபீப்ஸிதான் அர்தான் யஜமானஸ்ய பாரத

யத்ர—எங்கே; தர்ம-துகா—தர்மத்திற்குத் தேவையான பால் உற்பத்தி செய்தல்; பூமி:—பூமி; ஸர்க-காம—அனைத்து விருப்பங்களும்; துகா—பாலைப் போல் பெறப்பட்டு; ஸதீ—பசு; தோக்திஸ்ம—நிறைவேற்றப்பட்டது; அபீப்ஸிதான்—வேண்டிய விருப்பம்; அர்தான்—பொருட்கள்; யஜமானஸ்ய—வேள்வி செய்வோனின்; பாரத—அன்பான விதுரன்.

அன்பான விதுரனே, அச்சிறந்த வேள்வியில் இவ்வுலகம் முழுதுமே ஒரு காமதேனுவைப் போல் மாறியது, அதனால் வேள்வி செய்வதினால் தினசரி வாழ்க்கைக்குத் தேவைப்பட்ட அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டன.

பதம் 4.19.8
ஊஹூ: ஸர்வ-ரஸான் நத்ய: க்ஷூர-ததி-அன்ன-கோ-ரஸான்
தரவோ பூரி-வர்ஷ்மாண: ப்ராஸூயந்த மது-ச்யுத:

ஊஹூ:—உடையது; ஸர்வ-ரஸான்—அனைத்துச் சுவைகளும்; நத்ய:—ஆறுகள்; க்ஷூர—பால்; ததி—தயிர்; அன்ன—பல்வேறு உணவு வகைகள்; கோ-ரஸான்—பிற பால் பொருட்கள்; தரவ:—மரங்கள்; பூரி—சிறந்த; வர்ஷ்மாண:—உடல் பெற்று; ப்ராஸூயந்த—கனிகள் உடைய; மது-ச்யுத:—தேன் தரும்.

ஓடும் நதிகள் அனைத்துச் சுவைகளையும் இனிப்பு, காரம், புளிப்பு போன்ற எல்லாவற்றையும் வழங்குகிறது. உயர்ந்த மரங்கள் கனிகளையும், தேனையும் அளவின்றித் தருகின்றன. போதுமான அளவு பசும் புல்லை உண்ணும் பசுக்கள் அதிக அளவில் பாலைப் பொழிவதினால், தயிர், சுத்தமான வெண்ணெய் மற்றும் இது போன்ற தேவையான பொருட்களைப் பெற முடிகிறது.

பதம் 4.19.9
ஸிந்தவோ ரத்ன-நிகரான் கிரயோ ‘ன்னம் சதுர்-விதம்
உபாயதம் உபாஜஹ்ரு: ஸர்வே லோகா: ஸ-பாலகா:

ஸிந்தவோ:—சமுத்திரங்கள்; ரத்ன-நிகரான்—இரத்தினக் குவியல்கள்; கிரய:—மலைகள்; அன்னம்—உணவுப் பொருட்கள்; சது:-விதம்—நான்கு வகை; உபாயதம்—பரிசுகளாக; உபாஜஹ்ரு:—எடுத்து வருகிறது; ஸர்வே—எல்லாம்; லோகா:—அனைத்து உலகங்களிலும் உள்ளவர்கள்; ஸ—பாலகா:—ஆளுநர்களுடன்.

பிருது மன்னருக்கு குடிமக்களும் சர்வலோகங்களிலும் உள்ள ஆதிபத்தியத் தேவர்களும் பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கினர். கடல்களும், சமுத்திரங்களும் முத்து, பவளம் போன்ற மதிப்பு மிக்க இரத்தினங்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது, மலைகள், இரசாயனங்களும், உரங்களும் அதிக அளவில் உடையனவாக இருக்கின்றன. நான்கு வகையான உணவுப் பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டன.

பதம் 4.19.10
இதி சாதோக்ஷஜேஸஸ்ய ப்ருதோஸ் து பரமோதயம்
அஸூயென் பகவான் இந்த்ர: ப்ரதிகாதம் அசீகரத்

இதி—இவ்வாறு; ச—மேலும்; அதோக்ஷஜ-ஈஸஸ்ய—அவர் அதோக்ஷஜனரைத் தான் வழிபடும் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்; ப்ருதோ:—பிருது மன்னரின்; து—பின்னர்; பரம—பரமம், மிகவுயர்ந்த; உதயம்—வளம்; அஸூயன்—காழ்ப்புணர்ச்சியினால்; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; இந்த்ர:—சொர்க்கத்தின் தலைவன்; ப்ரதிகாதம்—தடைகள்; அசீகரத்—செய்தார்.

அதோக்ஷஜன் என்றறியப்படும் முழுமுதற் கடவுளையே பிருது மன்னர் முற்றிலும் சார்ந்திருந்தார். பிருது மன்னர் பல்வேறு வேள்விகளைச் செய்ததன் மூலம் மனித சக்திக்கும் அப்பாற்பட்ட நிலையில் முழுமுதற் கடவுளின் கருணையைப் பெற்றிருந்தார். பிருது மன்னரின் வளங்கள் உயர்வதைக் கண்டு தாங்க முடியாத தேவர்களின் தலைவனான இந்திரன் அவர் வளம் பெருகுவதைத் தடுத்து நிறுத்த முயன்றான்.

பதம் 4.19.11
சரமேணாஸ்வமேதேன யஜமானே யஜூஷ்-பதிம்
வைன்யே யஜ்ஞ-பஸூம் ஸ்பர்தன்ன அபோவாஹ திரோஹித:

சரமேன—கடைசி ஒன்று; அஸ்வ-மேதேன—அசுவமேத யாகம்; யஜமானே—அவர் அதனைச் செய்தபொழுது; யஜூ:-பதிம்—வேள்வியின் தலைவரான யஜ்ஞர் எனப்படும் விஷ்ணுவின் திருப்திக்காக; வைன்யே—மன்னர் வேனன்; யஜ்ஞ-பஸூம்—யக்ஞத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் விலங்கு; ஸ்பர்தன்—பொறாமை கொண்டு; அபோவாஹ—திருடினான்; திரோஹித:—கண்களுக்குப் புலனாகாதவாறு.

பிருது மன்னர் தனது கடைசி அசுவமேத யாகத்தினைச் செய்து கொண்டிருந்த பொழுது யாருடைய கண்களுக்கும் புலனாகாதவாறு தேவேந்திரன் யாகத்திற்காக வைத்திருந்த குதிரையினைத் திருடினான். இதனை அவன் பிருது மன்னர் மீது கொண்ட வெறுப்பினாலேயே செய்தான்.

பதம் 4.19.12
தம் அத்ரிர் பகவான் ஐக்ஷத் த்வரமாணம் விஹயஸா
ஆமுக்தம் இவ பாகண்டம் யோ ‘தர்மே தர்ம-விப்ரம:

தம்—தேவேந்திரன்; அத்ரி:—அத்ரி முனிவர்; பகவான்—மிகச் சக்தி வாய்ந்த; ஐக்ஷத்—காண முடிந்தது; த்வரமாணம்—மிக வேகமாகச் சென்றான்; விஹயஸா—விண்வெளியில்; ஆமுக்தம்-இவ—ஒரு முக்தியடைந்தவன் போன்று; பாகண்டம்—ஏமாற்றுபவன்; ய:—யார் ஒருவன்; அதர்மே—அதர்மமாக; தர்ம—தர்மம், சமயம்; விப்ரம:—தவறு.

இந்திரன் குதிரையினைத் திருடிக் கொண்டு வெளியே வந்த பொழுது வீடுபேறு பெற்ற துறவியைப் போன்று வேடமணிந்திருந்தான். உண்மையில் அவனது ஆடை வஞ்சகத்தின் ஒரு வடிவமாகும். ஏனெனில் அது சமயத்தினைப் பற்றி ஒரு பொய்ம்மை எண்ணத்தினை உருவாக்கியுள்ளது. இந்திரன் இவ்வாறு விண்வெளியில் பறந்து கொண்டிருந்த பொழுது மாமுனிவர் அத்திரி அவனைக் கண்டு கொண்டதோடு என்ன நடந்திருக்கும் என்பதையும் உடனே புரிந்து கொண்டார்.

பதம் 4.19.13
அத்ரிணா சோதிதோ ஹந்தும் ப்ருது-புத்ரோ மஹா-ரத:
அன்வதாவத ஸங்க்ருத்தஸ் திஷ்ட திஷ்டேதி சாப்ரவீத்

அத்ரிணா—அத்திரி முனிவரால்; சோதிதோ:—ஊக்கப்படுத்தப்பட்டு; ஹந்தும்—கொல்வதற்கு; ப்ருது-புத்ர:—பிருது மன்னரின் புத்திரன்; மஹா-ரத:—சிறந்த வீரன்; அன்வதாவத—பின் தொடர்ந்தான்; ஸங்க்ருத்த:—மிகுந்த ஆத்திரங் கொண்டு; திஷ்ட திஷ்ட—ஏய், நில், நில்; இதி—இவ்வாறு; ச—மேலும்; அப்ரவீத்—அவன் கூவினான்.

பிருது மன்னரின் மைந்தனிடம் அத்திரி முனிவர் இந்திரரின் தந்திரத்தைப் பற்றிக் கூறியவுடன், அவன் மிகுந்த ஆத்திரங்கொண்டு இந்திரனைக் கொல்வதற்காக அவனைத் தொடர்ந்து சென்று “ஏய்…நில் நில்” என்று கூறினான்.

பதம் 4.19.14
தம் தாத்ருஸாக்ருதிம் வீக்ஷ்ய மேனே தர்மம் ஸரீரிணம்
ஜடிலம் பஸ்மனாச்சன்னம்தஸ்மை பாணம் ந முஞ்சதி

தம்—அவனை; தாத்ருஸ-ஆக்ருதிம்—இது போன்ற ஆடையில்; வீக்ஷ்ய—கண்டவுடன்; மேனே—கருதினான்; தர்மம்—புனிதமான, தர்மமான; ஸரீரிணம்—உடலைக் கொண்டவன்; ஜடிலம்—ஜடா முடியுடன்; பஸ்மனா—திருநீற்றினால்; ஆச்சன்னம்—உடல் முழுவதும் பூசியிருந்தான்; தஸ்மை—அவனுக்கு; பாணம்—அம்பு; ந—இல்லை; முஞ்சதி—அவன் விடவில்லை.

இந்திரன் துறவியைப் போன்று காவியுடை தரித்து, ஜடா முடியுடன் உடலெங்கும் திருநீறு பூசியிருந்தான். இத்தோற்றத்தில் இந்திரனைப் பார்த்தவுடன் பிருது மன்னரின் மைந்தன் அவனை ஒரு புனிதமான துறவி என்றே கருதினான். அதனால் இந்திரன் மீது அவன் அம்பு தொடுக்கவில்லை.

பதம் 4.19.15
வதான் நிவ்ருத்தம் தம் பூயோ ஹந்தவே ‘த்ரிர் அசோதயத்
ஜஹி யஜ்ஞ-ஹனம் தாத மஹேந்த்ரம் விபுதாதமம்

வதான்—கொல்வதிலிருந்து; நிவ்ருத்தம்—நிறுத்துதல்; தம்—பிருதுவின் மைந்தன்; பூய:—மீண்டும்; ஹந்தவே—கொல்லும் நோக்கத்தில்; அத்ரி:—மாமுனிவர் அத்திரி; அசோதயத்—ஊக்கினார்; ஜஹி—கொல்ல; யஜ்ஞ-ஹனம்—வேள்வி செய்வதைத் தடை செய்யும் ஒருவன்; தாத—அன்பு மைந்தனே; மஹா-இந்த்ரம்—தேவேந்திரன்; விபுத-அதமம்—தேவர்கள் அனைவரினும் மிக இழிந்தவன்;

இவ்வாறு பிருது மன்னரின் மைந்தன் இந்திரனைக் கொல்லாது அவனால் ஏமாற்றப்பட்டுத் திரும்பி வருவதைக் கண்ட அத்திரி முனிவர், மீண்டும் அவனிடம், உடனே இந்திரனைக் கொல்ல வேண்டுமென்று கூறினர். ஏனெனில் பிருது மன்னர் செய்யும் வேள்வியினை இந்திரன் தடுத்து நிறுத்தினான். அதனால் தேவர்கள் அனைவரினும் மிகவும் இழிந்தவனாகக் கருதப்பட்டான்.

பதம் 4.19.16
ஏவம் வைன்ய-ஸீத: ப்ரோக்தஸ் த்வரமாணம் விஹாயஸா
அன்வத்ரவத் அதிக்ருத்தோ ராவணம் க்ருத்ர-ராட் இவ

ஏவம்—இவ்வாறு; வைன்ய-ஸீத:—பிருது மன்னரின் மைந்தன்; ப்ரோக்த:—கட்டளையிடப்பட்டு; த்வரமாணம்—விரைந்து செல்லும் இந்திரன்; விஹாயஸா—வானத்தில்; அன்வத்ரவத்—துரத்தத் தொடங்கினான்; அபிக்ருத்த:—மிகுந்த ஆத்திரத்துடன்; ராவணம்—இராவணன்; க்ருத்ர-ராட்—கழுகுகளின் தலைவன்; இவ—போன்று.

இவ்வாறு அறிவுறுத்தப்பட்டவுடன் மன்னன் வேனனின் பேரன் வானத்தில் மிகுந்த வேகத்துடன் விரைந்து செல்லும் இந்திரனை மீண்டும் பின் தொடர்ந்தான். அவன் இந்திரன் மீது மிகுந்த சினம் கொண்டு, கழுகுகளின் வேந்தனான ஜடாயு, இராவணனை விரட்டிச் சென்றது போல் விரட்டிச் சென்றான்.

பதம் 4.19.17
ஸோ ‘ஸ்வம் ரூபம் ச தத்தித்வா தஸ்மா அந்தர்ஹித: ஸ்வராட்
வீர: ஸ்வ-பஸீம் ஆதாய பிதுர் யஜ்ஞம் உபேயிவான்

ஸோ:—தேவேந்திரன்; அஸ்வம்—குதிரை; ரூபம்—கபட சந்நியாசியின் ஆடையில்; ச—மேலும்; தத்—அந்த; ஹித்வா—விட்டுவிடுதல்; தஸ்மை—அவனுக்காக; அந்தர்ஹித:—மறைந்தான்; ஸ்வ-ராட்—இந்திரன்; வீர:—சிறந்த வீரன்; ஸ்வ-பஸீம்—அவனது குதிரையினை; ஆதாய—எடுத்துக் கொண்டு; பிதுர்—தனது தந்தையின்; யஜ்ஞம்—வேள்விச் சாலைக்கு; உபேயிவான்—அவன் திரும்பி வந்தான்.

பிருது மன்னரின் மைந்தன் தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கண்ட இந்திரன் தனது துறவி வேடத்தினைக் களைந்து விட்டு, அக்குதிரையினை விட்டு விட்டான். உண்மையில் அவன் அந்த இடத்திலிருந்து யாரும் காணா வண்ணம் மறைந்து விட்டான். அதன் பின்னர் மிகச் சிறந்த வீரனான பிருது மன்னரின் மைந்தன் அக்குதிரையினை கைப்பற்றிக் கொண்டு பிருது மன்னரின் வேள்விச் சாலைக்கு வந்தான்.

பதம் 4.19.18
தத் தஸ்ய சாத்புதம் கர்ம விசக்ஷ்ய பரமர்ஷய:
நாமதேயம் ததுஸ் தஸ்மை விஜிதாஸ்வ இதி பிரபோ

தத்—அந்த; தஸ்ய—அவன்; ச—மேலும்; அத்புதம்—அற்புதம்; கர்ம—வீரச்செயல்; விசக்ஷ்ய—கண்டபிறகு; பரம்-ருஷய:—மாமுனிவர்கள்; நாமதேயம்—பெயர்; தது:—வழங்கினர்; தஸ்மை—அவனுக்கு; விஜித-அஷ்வ:—விஜிதாஸ்வன் (குதிரையை வெற்றி கொண்டவன்); இதி—இவ்வாறு; ப்ரபோ—சிறந்த விதுரனே;

அன்பார்ந்த விதுரனே, பிருது மன்னரின் மைந்தனின் அற்புதமான செயலினைக் கண்ணுற்ற அனைத்து முனிவர்களும் அவனுக்கு “விஜிதாஸ்வன்” என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டச் சம்மதித்தனர்.

பதம் 4.19.19
உபஸ்ருஜ்ய தமஸ் தீவ்ரம் ஜஹாராஸ்வம் புனர் ஹரி:
சஷால-யூபதஸ் சன்னோ ஹிரண்ய-ரஸனம் விபு:

உபஸ்ருஜ்ய—ஏற்படுத்துதல்; தம:—இருள்; தீவ்ரம்—கருமையான; ஜஹார—எடுத்துச் சென்றான்; அஸ்வம்—குதிரை; புன:—மீண்டும். ஹரி:—தேவேந்திரன்; சஷால-யூபத:—விலங்குகள் கட்டப்பட்டிருக்கும் முளைக்கட்டையிலிருந்து; சன்ன:—மூடப்பட்டு; ஹிரண்ய-ரஸனம்—தங்கச் சங்கிலியினால் கட்டப்பட்ட; விபு:—மிகச் சக்தி வாய்ந்த.

அன்பார்ந்த விதுரா, தேவேந்திரன் மிகவும் சக்தியுடையவனாதலினால் அவன் உடனே வேள்விச் சாலையின் மீது அடர்ந்த இருள் கவியுமாறு செய்தான். இருள் மூடியவுடன் அவன் விலங்குகள் பலியிடப்படும் கட்டையின் அருகில் தங்கச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த குதிரையை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் வெளியேறினான்.

பதம் 4.19.20
அத்ரி: ஸந்தர்ஸயாம் ஆஸ த்வரமாணம் விஹாயஸா
கபால-கட்வாங்க-தரம் வீரோ நைனம் அபாதத

அத்ரி:—அத்திரி முனிவர்; ஸந்தர்ஸயாம் ஆஸ—காண்பதற்கு காரணமான; த்வரமாணம்—மிகவும் வேகமாகச் செல்லுதல்; விஹாயஸா—வானத்தில்; கபால-கட்வாங்க—கையில் ஒரு கோலும் அதன் நுனியில் ஒரு மண்டை ஓடும் இருந்தது; தரம்—அவன் வைத்திருந்தான்; வீர:—அவ்வீரன் (பிருது மன்னரின் மைந்தன்); ந—இல்லை; ஏனம்—தேவர்களின் தலைவன்; இந்திரன்; அபாதத—கொல்வதற்கு;

மாமுனிவர் அத்திரி பிருது மன்னரின் மைந்தனிடம் மீண்டும் இந்திரன் வானில் விரைந்து செல்வதைக் காண்பித்தார். மாவீரனான பிருதுவின் மைந்தன் மீண்டும் அவனைத் தொடர்ந்து சென்றான். இப்போதும் இந்திரன் தனது கையில் ஒரு கோலும் அதன் உச்சியில் ஒரு மண்டை ஓடும் வைத்துக் கொண்டு துறவியின் வேடத்தில் செல்வதைக் கண்டு அவனைக் கொல்வதற்குத் தயங்கினான்.

பதம் 4.19.21
அத்ரிணா சோதிதஸ் தஸ்மை ஸந்ததே விஸிகம் ருஷா
ஸோ ‘ ஸ்வம் சதத் தித்வா தஸ்தாவ் அந்தர்ஹித்: ஸ்வராட்

அத்ரிணா—மாமுனிவர் அத்திரி; சோஜித:—ஊக்கமளித்தார்; தஸ்மை—தேவர் தலைவன் இந்திரன்; ஸந்ததே—பொருத்தி; விஸிகம்—அவன் வில்லில்; ருஷா—மிகுந்த சினத்துடன்; ஸ:—தேவேந்திரன்; அஸ்வம்—குதிரை; ரூபம்—துறவியின் வேடத்தில்; ச—மேலும்; தத்—அந்த; ஹித்வா—விட்டு விட்டு; தஸ்தௌ—அங்கே இருந்து; அந்தர்ஹித:—மறைந்தான்; ஸ்வ-ராட்—சுதந்திரமான இந்திரன்.

அத்திரி முனிவரின் வழிகாட்டுதலின்படி மிகவும் சினம் கொண்டிருந்த பிருது மன்னரின் மைந்தன் தனது வில்லில் ஒரு அம்பினைப் பூட்டி நாணேற்றினான். இதனைக் கண்ட இந்திரன் உடனே தனது துறவிக் கோலத்தைக் களைந்து குதிரையை அங்கேயே விட்டு விட்டு மறைந்தான்.

பதம் 4.19.22
வீரஸ் சாஸ்வம் உபாதாய பித்ரு-யஜ்ஞம் அதாவ்ரஜத்
தத் அவத்யம் ஹரே ரூபம் ஜக்ருஹீர் ஜ்ஞான-துர்பலா:

வீர:—பிருது மன்னரின் மைந்தன்; ச—மேலும்; அஸ்வம்—குதிரை; உபாதாய—எடுத்துக் கொண்டு; பித்ரு-யஜ்ஞம்—தனது தந்தையின் வேள்விச்சாலைக்கு; அத—அதன் பின்னர்; அவ்ரஜத்—சென்றான்; தத்—அந்த; அவத்யம்—வெறுக்கத்தக்க; ஹரே:—இந்திரனின்; ரூபம்—வேடம்; ஜக்ருஹீ:—மேற்கொண்டது; ஜ்ஞான-துர்பலா:—மதிகுறைவுடையோரின்.

பின்னர் பிருது மன்னரின் மைந்தனும் மிகச் சிறந்த வீரனுமான விஜிதாஸ்வன், மீண்டும் அக்குதிரையினைக் கைப்பற்றித் தனது தந்தையின் வேள்விச் சாலைக்கு கொணர்ந்தான். அக்காலத்திலிருந்தே மதியிலே குறையுடைய சில மனிதர்கள் கபட சந்நியாசி வேடம் புனையத் தொடங்கினர். இதனை அறிமுகப்படுத்தியவன் தேவேந்திரனே ஆவான்.

பதம் 4.19.23
யானி ரூபாணி ஜக்ருஹே இந்த்ரோ ஹய-ஜிஹீர்ஷயா
தானி பாபஸ்ய கண்டானி லிங்கம் கண்டம் இஹோச்யதே

யானி—அவையெல்லாம்; அபாணி—வடிவங்கள்; ஜக்ருஹே—ஏற்றுக்கொள்ளப்பட்டது; இந்த்ர:—தேவர்களின் தலைவனான இந்திரன்; ஹய—குதிரை; ஜிஹீர்ஷயா—திருடுவதற்கு விருப்பம்; தானி—அவையெல்லாம்; பாபஸ்ய—பாவச் செயல்களின்; கண்டானி—அடையாளங்கள்; லிங்கம்—குறியீடு; கண்டம்—கண்டம் என்னும் வார்த்தை; இஹ—இங்கே; உச்யதே—கூறப்படுகிறது.

இந்திரன் குதிரையைத் திருட வேண்டும் என்னும் விருப்பத்தின் காரணமாக பிச்சைக்காரன் வேடம் போன்ற எத்தனை வேடங்கள் மேற்கொண்டாலும் அவையெல்லாம் நாத்திக சித்தாந்தத்தின் அடையாளங்களாகும்.

பதங்கள் 4.19.24 – 4.19.25
ஏவம் இந்த்ரே ஹரதி அஸ்வம் வைன்ய-யஜ்ஞ-ஜிகாம்ஸயா
தத்-க்ருஹீத-விஷ்ருஷ்டேஷூ பாகண்டேஷூ மதிர் ந்ருணாம்

தர்ம இதி உபதர்மேஷூ நக்ன-ரக்த-படர்திஷூ
ப்ராயேண ஸஜ்ஜதே ப்ராந்த்யா பேஸலேஷூ ச வாக்மிஷூ

ஏவம்—இவ்வாறு; இந்த்ரே—தேவர்களின் தலைவன் இந்திரன்; ஹரதி—திருடிய பொழுது; அஸ்வம்—குதிரை; வைன்ய—மன்னன் வேனனின் மைந்தன்; யஜ்ஞ—வேள்வி; ஜிகாம்ஸயா—நிறுத்துவதற்கு விருப்பங்கொண்டு; தத்—அதனால்; க்ருஹீத—ஏற்றுக்கொள்ளப்பட்ட; விஷ்ருஷ்டேஷூ—இழிந்த; பாகண்டேஷூ—புனையப்பட்ட போலி வேடத்திற்கு; மதி:—கவர்ச்சி; ந்ருணாம்—பொதுமக்கள்; தர்ம:—சமயநெறி முறை; இதி—இவ்வாறு; உபதர்மேஷூ—தவறான சமயநெறி முறைக்கு; நக்ன—நிர்வாணம்; ரக்த-பட—சிவப்புக் கயிற்றினால்; ஆதீஷூ—போன்றவை; ப்ராயேண—பொதுவான; ஸஜ்ஜதே—கவரப்பட்டு; ப்ராந்த்யா—முட்டாள்தனமாக; பேஸலேஷூ—தேர்ச்சி பெற்றோர்; ச—மேலும்; வாக்மிஷூ—நாத்திகம் படைத்தோர்.

இவ்வாறு தேவேந்திரன் பிருது மன்னர் வேள்விச் சாலையிலிருந்து குதிரையைத் திருடுவதற்காகப் பல்வேறு துறவு வேடங்களை மேற்கொண்டான். சில சந்நியாசிகள் நிர்வாணமாகச் செல்கின்றனர், சிலர் கபாலிகர்கள் என்ற பெயரில் சிவப்பு ஆடை உடுத்துகின்றனர். இவையெல்லாம் அவர்கள் செய்யும் பாவத்தின் அடையாளங்களேயாகும். இவர்கள் அனைவரும் பாவிகளினால் மிகவும் பாராட்டப் படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் எல்லோரும் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்கள். ஆயினும் தங்கள் தரப்பை எடுத்து விவாதிப்பதற்குரிய நாவன்மை படைத்தவர்கள். அவர்கள் எல்லாம் பற்பல மதங்களோடு ஒட்டிக்கொண்டு காலம் கழிப்பவர்களேயன்றி உண்மையில் சமயவாதிகள் அல்லர். துரதிர்ஷ்டவசமாக குழப்பமுற்றோர் அவர்களை சமயவாதிகள் என்று ஏற்றுக்கொண்டு அவர்களால் ஈர்க்கப்படுகின்றனர். பின்னர் தங்கள் வாழ்க்கையினை அழித்துக் கொள்கின்றனர்.

பதம் 4.19.26
தத் அபிஜ்ஞாய பகவான் ப்ருது: ப்ருது-பராக்ரம:
இந்த்ராய குபிதோ பாணம் ஆதோத்தோத்யத-கார்முக:

தத்—அந்த; அபிஜ்ஞாய—புரிந்துகொண்டு; பகவான்—முழுமுதற் கடவுளின் அவதாரம்; ப்ருது:—பிருது மன்னர்; ப்ருது-பராக்ரம:—மிகவும் சக்திவாய்ந்தவர் என்று கொண்டாடப்படும்; இந்த்ராய—இந்திரன் மீது; குபித:—மிகவும் சினங்கொண்டு; பாணம்—ஓர் அம்பினை; ஆதோத்—எடுத்து; தோத்யத—எடுத்துக்கொண்டு; கார்முக:—வில்.

எல்லோராலும் மிகவும் ஆற்றல் மிக்கவர் என்று போற்றப்படும் பிருது மன்னர் தனது வில்லையும், அம்புகளையும், எடுத்துக்கொண்டு இந்திரனைக் கொல்வதற்கு ஆயத்தமானார். ஏனென்றால் இது போன்ற முறையற்ற சந்நியாச நெறிகளை இந்திரன்தான் அறிமுகப்படுத்தினான்.

பதம் 4.19.27
தம் ருத்விஜ: ஸக்ர-வதாபிஸந்திதம்
விசக்ஷ்ய துஷ்ப்ரேக்ஷயம் அஸஹ்ய-ரம்ஹஸம்
நிவாரயாம் ஆஸூர் அஹோ மஹா மதே
ந யுஜ்யதே ‘த்ரான்ய-வத: ப்ரசோதிதாத்

தம்—பிருது மன்னர்; ருத்விஜ:—புரோகிதர்கள்; ஸக்ர-வத—தேவர்களின் அரசனைக் கொல்வது; அபிஸந்திதம்—இவ்வாறு தன்னைத் தயார் செய்து கொண்டு; விசக்ஷ்ய—கவனித்தவர்கள்; துஷ்பிரேக்ஷயம்—பார்ப்பதற்கு பயங்கரமான; அஸஹ்ய—தாங்க முடியாத; ரம்ஹஸம்—அவரது வேகம்; நிவாராயம்-ஆஸூ:—அவர்கள் தடுத்தனர்; அஹோ—அந்தோ; மஹா-மதே—ஓ மகாத்மா; ந—இல்லை; யுஜ்யதே—உனக்குத் தகுந்ததன்று; அத்ர—இவ்வேள்விச் சாலையில்; அன்ய—பிற; வத:—கொலை; ப்ரசோதிதாத்—சாத்திரங்களின் கட்டளைகளில் இருந்து.

புரோகிதர்களும், மற்றவர்களும், பிருது மன்னர் மிகுந்த சினங்கொண்டு இந்திரனைக் கொல்வதற்கு முயல்வதைக் கண்டவுடன் அவரிடம் “ஓ மகாத்மாவே! அவனைக் கொல்லாதீர், சாத்திரங்களின்படி வேள்விச் சாலையில் விலங்குகள் மட்டுமே கொல்லப்படலாம்” என்று கூறினர்.

பதம் 4.19.28
வயம் மருத்வந்தம் இஹார்த-நாஸனம்
ஹ்வயாமஹே த்வச் ச்ரவஸா ஹத-த்விஷம்
அயாத்யாமோபஹவைர் அனந்தரம்
ப்ரஸஹ்ய ராஜன் ஜூஹவாம தே ‘ஹிதம்

வயம்—நாங்கள்; மருத்-வந்தம்—தேவேந்திரன்; இஹ—இங்கே; அர்த—உமது விருப்பத்தின்; நாஸனம்—கெடுத்தவன்; ஹ்வயாமஹே—நாங்கள் அழைப்போம்; த்வத்-ஸ்ரவஸா—உமது புகழினால்; ஹத-த்விஷம்—ஏற்கெனவே அவனது சக்தியினை இழந்து விட்டான்; அயாத்யாமோ—முன்னர் பயன்படுத்தியதில்லை; உபஹவை:—மந்திரங்களினால் வேண்டிக்கொண்டால்; அனந்தரம்—தாமதமின்றி; ப்ரஸஹ்ய—வலிமையினால்; ராஜன்—ஓ, அரசனே; ஜூஹவாம—நாங்கள் வேள்வித்தீயில் பலியிடுவோம்; தே—உமது; அஹிதம்—எதிரி.

அன்பிற்குரிய மன்னரே! வேள்வியைத் தடை செய்ய முயன்றதினால் இந்திரன் தனது ஆற்றலின் பெரும்பகுதியினை இழந்துவிட்டான். இதற்கு முன்னர் பயன்படுத்தப்படாத வேத மந்திரங்களை உச்சரித்து அவனை அழைப்போம். அதனால் அவன் நிச்சயம் இங்கே வருவான். அவன் உனது எதிரியாதலின், எங்களது மந்திரத்தின் வலிமையினால் நாங்கள் அவனை வேள்வித்தீயில் பலியிடுவோம்.

பதம் 4.19.29
இதி அமந்த்ரிய க்ரது பதிம் விதுராஸ்யர்த்விஜோ ருஷா
ஸ்ருக்-கஸ்டாஞ் ஜூஹ்வதோ ‘ப்யேத்ய ஸ்வயம்பூ: ப்ரத்யஷேதத

இதி—இவ்வாறு; அமந்த்ரிய—உரைத்துவிட்டு; க்ரது-பதிம்—வேள்வியின் தலைவரான பிருது மன்னர்; விதுர—ஓ, விதுரனே; அஸ்ய—பிருதுவின்; ருத்விஜ:—புரோகிதர்கள்; ருஷா—மிகுந்த சினங்கொண்டு; ஸ்ருக்-ஹஸ்தான்—வேள்விக்கான அகப்பையினைக் கையில் ஏந்தி; ஜூஹ்வத:—யாக குண்டத்தின் தீயில்; அப்யேத்ய—தொங்கும் பொழுது; ஸ்வயம்பூ:—பிரம்மதேவன்; ப்ரத்யஷேதத—நிறுத்தும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

அன்பார்ந்த விதுரனே, மன்னரிடம் இவ்வாறு உரைத்து விட்டு அப்புரோகிதர்கள் மிகுந்த சினத்துடன் தேவர்களின் தலைவனான இந்திரனை அழைப்பதற்கான வேள்வியினைச் செய்யத் தொடங்கினர். அவர்கள் யாககுண்டத்தின் நெருப்பில் பொருள்களை போடும் பொழுது பிரம்மதேவன் திடீரென்று தோன்றி அவ்வேள்வியினைத் தடுத்தார்.

பதம் 4.19.30
ந வத்யோ பவதாம் இந்த்ரோ யத் யஞ்ஞோ பகவத்-தனு:
யம் ஜிகாம்ஸத யஜ்ஞேன யஸ்யேஷ்டாஸ் தவை: ஸூரா:

ந—இல்லை; வத்ய:—கொல்லப்படுவது; பவதாம்—உங்கள் அனைவரினால்; இந்த்ர:—தேவர்களின் தலைவன்; யத்—ஏனென்றால்; யஜ்ஞ:—இந்திரனின் பெயரில்; பகவத்-தனு:—முழுமுதற் கடவுளின் உடலில் ஓர் அங்கம்; யம்—எவனை; ஜிகாம்ஸத—நீங்கள் கொல்ல விரும்புவது; யஜ்ஞேன—வேள்வியினைச் செய்வதினால்; யஸ்ய—இந்திரனின்; இஷ்டா:—வழிபட்டு; தவை:—உடலின் பகுதிகளின்; ஸூரா:—தேவர்கள்.

பிரம்மதேவன் அவர்களிடம் இவ்வாறு கூறினார்: அன்பார்ந்த, வேள்வியினைச் செய்பவர்களே, நீங்கள் தேவர்களின் தலைவனான இந்திரனைக் கொல்ல முடியாது. இது உங்களுக்குரிய கடமையுமல்ல. இந்திரனும் முழுமுதற் கடவுளைப் போன்றவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உண்மையில் அவன் முழுமுதற் கடவுளின் ஆற்றல் வாய்ந்த துணைவன் ஆவான். நீங்கள் செய்யும் வேள்விகளின் மூலம் அனைத்துத் தேவர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள், இத்தேவர்கள் இந்திரனின் பாகங்களேயாவர் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். உண்மை இவ்வாறிருக்க அவனை எப்படி நீங்கள் இச்சிறந்த வேள்வியில் கொல்ல முடியும்?

பதம் 4.19.31
தத் இதம் பஸ்யத மஹத் தர்ம-வ்யதிகரம் த்விஜா: இந்த்ரேணானுஷ்டிதம் ராஜ்ஞ: கர்மைதத் விஜிகாம்ஸதா

தத்—பின்னர்; இதம்—இந்த; பஸ்யத—பாருங்கள்; மஹத்—சிறந்த; தர்ம—சமயநெறிகள்; வ்யதிகரம்—மீறுதல்; த்விஜா:—சிறந்த அந்தணர்களே; இந்த்ரேன—இந்திரனால்; அனுஷ்டிதம்—செய்யப்பட்ட; ராஜ்ஞ:—மன்னரின்; கர்ம—செயல்; ஏதத்—இவ்வேள்வியில்; விஜிகாம்ஸதா—தடை செய்ய விரும்புதல்.

பிருது மன்னர் செய்யும் வேள்விக்கு இடையூறு செய்யவும் அவ்வேள்வியைச் செய்யவிடாமல் தடுக்கவும் தேவேந்திரன் மேற்கொண்ட சில வழிமுறைகள் எதிர்காலத்தில் அறநெறி சான்ற வாழ்வினை அழித்து விடும். இதனை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மேலும் நீங்கள் அவனை எதிர்த்தீர்கள் என்றால் அவன் இதுபோன்று சமயத்திற்குப் புறம்பான முறைகளை உருவாக்குவான்.

பதம் 4.19.32
ப்ருது:-கீர்தே: ப்ருதோர் பூயாத் தர்ஹி ஏகோன-ஸத-க்ரது:
அலம் தே க்ரதுபி: ஸ்விஷ்டைர் யத் பவான் மோக்ஷ-தர்ம-வித்

ப்ருது-கீர்தே:—பிருதுவின் புகழ்; ப்ருதோ:—பிருது மன்னரின்; பூயாத்—நடைபெறட்டும்; தர்ஹி—ஆகையினால்; ஏக-ஊன- ஸத-க்ரது:—தொண்ணூற்றொன்பது வேள்விகளைச் செய்தவர்; அலம்—பெறுகின்ற நன்மை ஒன்றுமில்லை; தே—உமது; க்ரதுபி:—வேள்விகளைச் செய்வதினால்; ஸூ-இஷ்டை:—நன்கு செய்யப்பட்ட; யத்—ஏனென்றால்; பவான்—உனது; மோக்ஷ-தர்ம-வித்—விடுதலைக்கான பாதையினை அறிந்தவர்.

“மாமன்னர் பிருதுவிற்கான வேள்விகள் மொத்தம் தொண்ணூற்று ஒன்பதாக இருக்கட்டும்” என்று கூறி பிரம்மதேவர் தனது உரையினை நிறைவு செய்தார். பின்னர் அவர் பிருதுவைப் பார்த்து, வீடுபேற்றுக்கான வழிமுறைகளை முற்றிலும் அறிந்திருக்கும் அவர் மேலும் மேலும் வேள்விகள் செய்வதினால் என்ன பயன் அடையப் போகிறார்? என்று கேட்டார்.

பதம் 4.19.33
நை வாத்மனே மஹேந்த்ராய ரோஷம் ஆஹர்தும் அர்ஹஸி
உபாவ் அபி ஹி பத்ரம் தே உத்தமஸ்லோக-விக்ரஹௌ

ந—இல்லை; ஏவ—உறுதியாக; ஆத்மனே—உன்னிலிருந்து வேறானவன் அல்லன்; மஹா-இந்த்ராய—சொர்க்கத்தின் மன்னனான இந்திரன்; ரோஷம்—சினம்; ஆஹர்தும்—பயன்படுத்துதல்; அர்ஹஸி—வேண்டும்; உபௌ—நீங்கள் இருவரும்; அபி—உறுதியாக; ஹி—மேலும்; பத்ரம்—மங்கலம்; தே—உனக்கு; உத்தம-ஸ்லோக-விக்ரஹௌ—முழுமுதற் கடவுளின் அவதாரம்.

பிரம்மதேவன் தொடர்ந்து கூறினார்: உங்கள் இருவருக்கும் மங்கலம் உண்டாகட்டும். நீயும், தேவேந்திரனும் முழுமுதற் கடவுளின் பகுதிகளேயாவீர். ஆகையினால் உன்னிலிருந்து வேறுபாடற்றவனான தேவேந்திரனிடம் நீ சினங்கொள்ள வேண்டாம்.

பதம் 4.19.34
மாஸ்மின் மஹாராஜ க்ருதா: ஸ்ம சிந்தாம்
நிஸாமயாஸ்மத்-வச ஆத்ருதாத்மா
யத் த்யாயதோ தைவ-ஹதம் நு கர்தும்
மனோ ‘திருஷ்டம் விஸதே தமோ ‘ந்தம்

மா—வேண்டாம்; அஸ்மின்—இதில்; மஹாராஜ—ஓ, மன்னனே; க்ருதா:—செய்வாயாக; ஸ்ம—கடந்த காலத்தில் செய்தபடி; சிந்தாம்—மனதின் கொந்தளிப்பு; நிஸாமய—கருதுவாயாக; அஸ்மத்—எனது; வது:—வார்த்தைகள்; ஆத்ருத-ஆத்மா—மிகவும் மரியாதைக்குரிய; யத்—ஏனென்றால்; த்யாயத:—ஆழ்ந்து சிந்திப்பவனின்; தைவ-ஹதம்—தெய்வச் செயலால் தடை செய்யப்பட்டது; நு—உறுதியாக; கர்தும்—செய்வதற்கு; மன:—மனம்; அதி-ருஷ்டம்—மிகுந்த சினம்; விஸதே—நுழைதல்; தம:—இருள்; அந்தம்—அடர்ந்த.

அன்பிற்குரிய அரசனே, விதியின் செயலால் நீ செய்த வேள்விகள் தடைப்பட்டன. அதனால் நீ மனக் கவலையோ, கொந்தளிப்போ அடைய வேண்டாம். எனது வார்த்தைகளை தகுந்த மரியாதையுடன் எடுத்துக் கொள்வாயாக. விதியின் செயலினால் ஏதாவது நேர்ந்ததென்றால் அதற்காக நாம் வருத்தப்படக்கூடாது. அதனை மாற்றியே தீர வேண்டுமென்ற மேலும் மேலும் நாம் முயன்றால் உலகியற் சிந்தனை என்னும் அடர்ந்த இருட் பிரதேசத்தினுள் நாம் வெகுதூரம் சென்று விடுவோம்.

பதம் 4.19.35
க்ரதுர் விரமதாம் ஏஷ தேவேஷூ துரவக்ரஹ:
தர்ம வ்யதிகரோ யத்ர பாகண்டைர் இந்த்ர-நிர்மிதை:

க்ரது:—வேள்வி; விரமதாம்—நிறுத்துவாயாக; ஏஷ:—இந்த; தேவேஷூ—தேவர்களுக்கு மத்தியில்; துரவக்ரஹ:—வேண்டாதவற்றிற்கு அடிமையாதல்; தர்ம-வ்யதிகர:—சமய அறநெறிகளை மீறுதல்; யத்ர—எங்கே; பாகண்டை:—பாவச் செயல்களினால்; இந்த்ர—தேவர்களின் தலைவனால்; நிர்மித:—உண்டாக்கப்பட்டன.

பிரம்மதேவன் தொடர்ந்து கூறினார்: இந்திரனைத் தர்மத்திற்குப் புறம்பான பல்வேறு செயல்களைச் செய்வதற்குத் தூண்டுகின்ற இவ்வேள்விகள் அனைத்தையும் நிறுத்துவாயாக. தேவர்களுக்கிடையிலும் கூட தேவையில்லாத பல ஆசைகள் இருக்கின்றன என்பதை நீ நன்கறிவாய்.

பதம் 4.19.36
ஏபிர் இந்த்ரோபஸம்ஸ்ருஷ்டை: பாகண்டைர் ஹாரிபிர் ஜனம்
ஹ்ரியமாணம் விசக்ஷ்வைனம் யஸ் தே யஜ்ஞ-த்ருக் அஸ்வ முட்

ஏபி:—இவைகளினால்; இந்த்ர-உபஸம்ஸ்ருஷ்டை:—தேவேந்திரனால் உண்டுபண்ணப்பட்ட; பாகண்டை:—பாவச் செயல்கள்; ஹாரிபி:—இதயத்திற்குக் கவர்ச்சியளிப்பவை; ஜனம்—பொதுமக்கள்; ஹ்ரியமாணம்—கொண்டு செல்லப்பட்ட; விசக்ஷ்வ—பார்; ஏனம்—இவைகள்; ய:—யார்; தே—உனது; யஜ்ஞ-த்ருக்—வேள்வியினைச் செய்யும் போது செய்யப்பட்ட இடையூறு; அஷ்வ—முட்—அவன் குதிரையைத் திருடினான்.

சற்று சிந்தித்துப் பார், வேள்வி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இடையில் இந்திரன் வேள்விக் குதிரையைத் திருடியதின் மூலம் எவ்வாறு இடையூறு செய்தான் என்று. அவன் அறிமுகப்படுத்திய இக்கவர்ச்சி மிக்க பாவச் செயல்கள் பின்னாளில் பொதுமக்களினால் பின்பற்றப்படும்.

பதம் 4.19.37
பவான் பரித்ராதும் இஹாவதீர்னோ
தர்மம் ஜனானாம் ஸமயானுரூபம்
வேனாபசாராத் அவலுப்தம் அத்ய
தத் தே ஹதோ விஷ்ணு-காலஸிவைன்ய

பவான்—சிறந்த மன்னனே; பரித்ராதும்—மீட்பதற்காகவே; அவதீர்ண:—அவதரித்தாய்; தர்மம்—தர்ம அறநெறிகள்; ஜனானாம்—பொதுமக்களின்; ஸமய-அனுரூபம்—கர்வம் மற்றும் சூழ்நிலையைப் பொருத்து; வேன-அபசாராத்—மன்னன் வேனனின் தவறான நடத்தையினால்; அவாதுப்தம்—ஏறத்தாழ தொலைந்து; அத்ய—இப்பொழுது; தத்—அவனது; தேஹத:—உடலிலிருந்து; விஷ்ணு—பகவான் விஷ்ணுவின்; கவா—அம்சத்தின் ஒரு பகுதியாக; அஸி—நீ; வைன்ய—ஓ, மன்னன் வேனனின் மைந்தனே.

ஓ, வேனனின் மைந்தனான பிருது மன்னனே, நீ பகவான் விஷ்ணுவின் ஒரு பகுதியாவாய். மன்னன் வேனனின் தவறான செயல்களினால் சமய அறநெறிகள் ஏறத்தாழத் தொலைந்து போயின. அச்சமயத்தில் அதிர்ஷ்டவசமாக நீ பகவான் விஷ்ணுவின் மறுபிறப்பெனப் பிறந்துள்ளாய். உண்மையில், சமய அறநெறிகளைக் காப்பதற்காகவே நீ மன்னன் வேனனின் உடலிலிருந்து தோன்றினாய்.

பதம் 4.19.38
ஸத்வம் விம்ருஸ்யாஸ்ய பவம் ப்ரஜாபதே
ஸங்கல்பனம் விஸ்வ-ஸ்ருஜாம் பிபீப்ருஹி
ஐந்த்ரீம் ச மாயாம் உபதர்ம-மாதரம்
ப்ரசண்ட-பாகண்ட-பதம் ப்ரபோ ஜஹி

ஸ:—மேற்சொன்ன; த்வம்—நீ; விம்ருஸ்ய—கவனித்து; அஸ்ய—உலகின்; பவம்—வாழ்விற்கு; ப்ரஜா-பதே—ஓ, மக்களின் பாதுகாவலனே; ஸங்கல்பனம்—தீர்மானம், உறுதி; விஸ்வ-ஸ்ருஜாம்—உலகிலுள்ள மூதாதையர்களின்; பிபீப்ருஹி—நிறைவேற்றுவாயாக; ஐந்த்ரீம்—இந்திரனால் உருவாக்கப்பட்டது; ச—மேலும்; மாயாம்—மாயை; உபதர்ம—சந்நியாசம் என்றழைக்கப்படும் சமயநெறிக்குப் புறம்பான; மாதரம்—அன்னை; பாகண்ட-பதம்—பாவச்செயல்களுக்கான பாதை; ப்ரபோ—ஓ, மன்னனே; ஜஹி—வெல்வாயாக.

ஓ, பொதுமக்களின் பாதுகாவலனே, விஷ்ணுவின் அவதாரமாக நீ பிறப்பெடுத்த நோக்கம் என்னவென்பதனை அருள் கூர்ந்து சிந்திப்பாயாக. இந்திரனால் படைக்கப்பட்ட புறச்சமய நெறிகள் தேவையற்ற பற்பல சமயங்களுக்குக் காரணமாக உள்ளன. அதனால் இப்போலிகளின் வளர்ச்சியினை உடனே தடுத்து நிறுத்துக.

பதம் 4.19.39
மைத்ரேய உவாச
இத்தம் ஸ லோக-குருணா ஸமாதிஷ்டோ விஷாம்பதி:
ததா ச க்ருத்வா வாத்ஸல்யம் மகோனாபி ச ஸந்ததே

மைத்ரேய: உவாச—மைத்ரேய—மாமுனிவர் கூறினார்; இத்தம்—இவ்வாறு; ஸ:—பிருது மன்னர்; லோக-குருணா—உலக குரு, பிரம்மதேவன்; ஸமாதிஷ்ட:—அறிவுறுத்தப்பட்டு; விஷாம்-பதி:—மக்கள் தலைவனான மன்னன்; ததா—அவ்வழியில்; ச—மேலும்; க்ருத்வா—செய்வதற்கு; வாத்ஸல்யம்—பாசம்; மகோனா—இந்திரனுடன்; அபி—கூட; ச—மேலும்; ஸந்ததே—அமைதி வழியை நாடுதல்.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: ஜகத் குருவான பிரம்மதேவனால் பிருது மன்னர் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டவுடன் அவர் யாகங்களின் மீது கொண்டிருந்த மோகத்தினை ஒழித்து இந்திரனுடன் மிகுந்த அன்புடன் சமாதானம் செய்து கொண்டார்.

பதம் 4.19.40
க்ருத்வாப்ருத-ஸ்நானாய ப்ருதவே பூரி-கர்மனே
வரான் ததுஸ் தே வரதா யே தத்-ப்ரஹிஸி தர்பிதா:

க்ருத—நிறைவேற்றப்பட்டு; அவப்ருத-ஸ்நானாய—வேள்வி முடிந்தவுடன் நீராடுதல்; ப்ருதவே—பிருது மன்னருக்கு; பூரி-கர்மணே—வீரச் செயல்கள் செய்து புகழ்பெற்றவர்; வரான்—வரங்கள்; தது:—அளித்தனர்; தே—அவர்கள் அனைவரும்; வர-தா:—ஆசிகள் அருளும் தேவர்கள்; யே—அவர்; தத்-பர்ஹிஷி—இது போன்ற யக்ஞங்கள் செய்வது; தர்பிதா:—மகிழ்ச்சியடைந்தனர்.

இதன் பின்னர், வேள்வி முடிந்தவுடன் செய்யும் நீராட்டத்தினை பிருது மன்னர் முடித்துக் கொண்டார். அதன் பிறகு, அவர்தம் செயலினால் மிகவும் மகிழ்ச்சியடைந்த தேவர்களினால் அருளப்பட்ட வரங்களையும், ஆசிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

பதம் 4.19.41
விப்ரா: ஸத்யாஸிஷஸ் துஷ்டா: ஸ்ரத்தாய லப்த-தக்ஷிணா:
ஆஸிஷோ யுயுஜூ: க்ஷத்தர் ஆதி-ராஜாய ஸத் க்ருதா:

விப்ரா:—அனைத்து அந்தணர்களும்; ஸத்ய—உண்மை; ஆஸிஷ:—அவர்களது ஆசிகள்; துஷ்டா:—மிகுந்த திருப்தியுடன்; ஸ்ரத்தயா—மிகுந்த மரியாதையுடன்; லப்த-தக்ஷிணா:—பரிசுகள் பெற்றனர்; ஆஸிஷ:—ஆசிகள்; யுயுஜூ:—அளித்தனர்; க்ஷத்த:—ஓ, விதுரனே; ஆதி-ராஜாய—உண்மையான மன்னரின் மீது; ஸத்-க்ருதா:—கௌரவிக்கப்பட்டனர்.

மிகுந்த மரியாதையுடன் ஆதி ராஜாவான பிருது மன்னர் அவ்வேள்விச் சாலையில் குழுமியிருந்த அனைத்து அந்தணர்களுக்கும் வேண்டிய பரிசுகளை வழங்கினார். வந்திருந்த அந்தணர்கள் அனைவரும் மிகுந்த திருப்தியுற்று தமது நல்லாசிகளை மனதார மன்னருக்கு அருளினர்.

பதம் 4.19.42
த்வயாஹூதா மஹா-பாஹோ ஸர்வ ஏவ ஸமாகதா:
பூஜிதா தான-மானப்யாம் பித்ரு-தேவருஷி மானவா:

த்வயா—உம்மால்; ஆஸூதா—அழைக்கப்பட்டனர்; மஹா-பாஹோ—ஓ, புஜபல பராக்கிரமனே; ஸர்வே—அனைவரும்; ஏவ—உறுதியாக; ஸமாகதா:—கூடியிருந்தனர்; பூஜிதா:—கௌரவிக்கப்பட்டனர்; தான—தானம்; மானாப்யாம்—மரியாதையினால்; பித்ரு—பித்ருலோகத்தைச் சேர்ந்தவர்கள்; தே—தேவர்கள்; ருஷி—மா முனிவர்கள்; மானவா:—அதுபோல் சாதாரண மனிதர்கள்.

அனைத்து மாமுனிவர்களும் அந்தணர்களும் கூறினர்: பெருந்தோளுடைய மன்னனே, உமது அழைப்பின் பேரிலேயே அனைத்து வகையான உயிர்களும் இங்கே கூடியிருக்கின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தைச் சேர்ந்தவர்கள், தேவர்கள், மாமுனிவர்கள் மற்றும் சாமான்ய மனிதர்கள், இக்கூட்டத்தில் பங்கு பெற்றிருக்கின்றனர். இப்போது அவர்கள் அனைவரும் உமது நடவடிக்கைகளினாலும் அவர்களுக்கு நீர் அளித்துள்ள தானங்களினாலும் மிகுந்த மகிழ்ச்சியுற்றிருக்கின்றனர்.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “மன்னர் பிருதுவின் நூறு அசுவமேத யாகங்கள்” எனும் தலைப்பை கொண்ட பத்தொன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare