அத்தியாயம் – 19
பிருது மகாராஜனின் நூறு அஸ்வமேத யாகங்கள்
பதம் 4.19.1 : மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, பிருது மன்னர், சரஸ்வதி நதி கீழ்த் திசையில் பாயும் இடத்தில் நூறு அசுவமேத யாகங்கள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அந்நிலப்பகுதி பிரம்மாவர்தம் என்று அழைக்கப்பட்டது. அது சுயாம்புவ மனுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

பதம் 4.19.2 : இதனைக் கண்ணுற்ற மிகச் சக்தி வாய்ந்தவனும் தேவர்களின் தலைவனுமான தேவேந்திரன், பிருது மன்னர் பலன் தரும் செயல்களில் நிச்சயம் தன்னை மிஞ்சி விடுவார் என்னும் உண்மையினை உணர்ந்து கொண்டான். இதனால் பிருது மன்னரால் நடத்தப்படும் மிகப் பெரிய வேள்வியினை இந்திரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பதம் 4.19.3 : முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவே அனைவரது உள்ளங்களிலும் பரமாத்மாவாகவும், அனைத்து லோகங்களுக்கும் தலைவராகவும் அனைத்து வேள்விகளின் பலன்களை அனுபவிப்பவராகவும் விளங்குகிறார். அவர் பிருது மன்னர் நடத்திய வேள்வியில் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டார்.

பதம் 4.19.4 : பகவான் விஷ்ணு வேள்விச் சாலையில் தோன்றிய பொழுது அவருடன் பிரம்மதேவன், சிவபெருமான், அனைத்துக் கிரகங்களின் ஆதிபத்தியத் தலைமைத் தேவர்கள் மற்றும் அவர்கள் அடியவர்கள் அனைவரும் அவரோடு சேர்ந்து வந்தனர். அவர் அங்கே தோன்றியவுடன் கந்தர்வ லோகத்தைச் சேர்ந்தவர்களும், அப்ஸர லோகத்தைச் சேர்ந்தவர்களும் அவரைப் போற்றிப் புகழ்ந்தனர்.

பதம் 4.19.5 : பகவான் சித்தலோகத்தைச் சேர்ந்தவர்களினாலும், வித்தியாதர லோகத்தைச் சேர்ந்தவர்களினாலும், திதியின் வாரிசுகளை அசுரர்கள் மற்றும் யக்ஷர்களினால் சூழ்ந்து வரப்பட்டார். அவர் தமது தலைமைத் துணைவர்களான சுநந்தனும், நந்தனும் உடன்வர வந்தார்.

பதம் 4.19.6 : முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டில் எப்போதும் ஈடுபட்டிருக்கும் மகாபக்தர்கள், கபிலர், நாரதர், தத்தாத்ரேயர் போன்ற மகாமுனிவர்கள், சனக குமாரர் தலைமையில் யோக சக்திகளின் தலைவர்கள் ஆகிய அனைவரும் பகவான் விஷ்ணுவுடன் சேர்ந்து அந்த மகா வேள்வியில் கலந்து கொண்டனர்.

பதம் 4.19.7 : அன்பான விதுரனே, அச்சிறந்த வேள்வியில் இவ்வுலகம் முழுதுமே ஒரு காமதேனுவைப் போல் மாறியது, அதனால் வேள்வி செய்வதினால் தினசரி வாழ்க்கைக்குத் தேவைப்பட்ட அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டன.

பதம் 4.19.8 : ஓடும் நதிகள் அனைத்துச் சுவைகளையும் இனிப்பு, காரம், புளிப்பு போன்ற எல்லாவற்றையும் வழங்குகிறது. உயர்ந்த மரங்கள் கனிகளையும், தேனையும் அளவின்றித் தருகின்றன. போதுமான அளவு பசும் புல்லை உண்ணும் பசுக்கள் அதிக அளவில் பாலைப் பொழிவதினால், தயிர், சுத்தமான வெண்ணெய் மற்றும் இது போன்ற தேவையான பொருட்களைப் பெற முடிகிறது.

பதம் 4.19.9 : பிருது மன்னருக்கு குடிமக்களும் சர்வலோகங்களிலும் உள்ள ஆதிபத்தியத் தேவர்களும் பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கினர். கடல்களும், சமுத்திரங்களும் முத்து, பவளம் போன்ற மதிப்பு மிக்க இரத்தினங்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது, மலைகள், இரசாயனங்களும், உரங்களும் அதிக அளவில் உடையனவாக இருக்கின்றன. நான்கு வகையான உணவுப் பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டன.

பதம் 4.19.10 : அதோக்ஷஜன் என்றறியப்படும் முழுமுதற் கடவுளையே பிருது மன்னர் முற்றிலும் சார்ந்திருந்தார். பிருது மன்னர் பல்வேறு வேள்விகளைச் செய்ததன் மூலம் மனித சக்திக்கும் அப்பாற்பட்ட நிலையில் முழுமுதற் கடவுளின் கருணையைப் பெற்றிருந்தார். பிருது மன்னரின் வளங்கள் உயர்வதைக் கண்டு தாங்க முடியாத தேவர்களின் தலைவனான இந்திரன் அவர் வளம் பெருகுவதைத் தடுத்து நிறுத்த முயன்றான்.

பதம் 4.19.11 : பிருது மன்னர் தனது கடைசி அசுவமேத யாகத்தினைச் செய்து கொண்டிருந்த பொழுது யாருடைய கண்களுக்கும் புலனாகாதவாறு தேவேந்திரன் யாகத்திற்காக வைத்திருந்த குதிரையினைத் திருடினான். இதனை அவன் பிருது மன்னர் மீது கொண்ட வெறுப்பினாலேயே செய்தான்.

பதம் 4.19.12 : இந்திரன் குதிரையினைத் திருடிக் கொண்டு வெளியே வந்த பொழுது வீடுபேறு பெற்ற துறவியைப் போன்று வேடமணிந்திருந்தான். உண்மையில் அவனது ஆடை வஞ்சகத்தின் ஒரு வடிவமாகும். ஏனெனில் அது சமயத்தினைப் பற்றி ஒரு பொய்ம்மை எண்ணத்தினை உருவாக்கியுள்ளது. இந்திரன் இவ்வாறு விண்வெளியில் பறந்து கொண்டிருந்த பொழுது மாமுனிவர் அத்திரி அவனைக் கண்டு கொண்டதோடு என்ன நடந்திருக்கும் என்பதையும் உடனே புரிந்து கொண்டார்.

பதம் 4.19.13 : பிருது மன்னரின் மைந்தனிடம் அத்திரி முனிவர் இந்திரரின் தந்திரத்தைப் பற்றிக் கூறியவுடன், அவன் மிகுந்த ஆத்திரங்கொண்டு இந்திரனைக் கொல்வதற்காக அவனைத் தொடர்ந்து சென்று “ஏய்…நில் நில்” என்று கூறினான்.

பதம் 4.19.14 : இந்திரன் துறவியைப் போன்று காவியுடை தரித்து, ஜடா முடியுடன் உடலெங்கும் திருநீறு பூசியிருந்தான். இத்தோற்றத்தில் இந்திரனைப் பார்த்தவுடன் பிருது மன்னரின் மைந்தன் அவனை ஒரு புனிதமான துறவி என்றே கருதினான். அதனால் இந்திரன் மீது அவன் அம்பு தொடுக்கவில்லை.

பதம் 4.19.15 : இவ்வாறு பிருது மன்னரின் மைந்தன் இந்திரனைக் கொல்லாது அவனால் ஏமாற்றப்பட்டுத் திரும்பி வருவதைக் கண்ட அத்திரி முனிவர், மீண்டும் அவனிடம், உடனே இந்திரனைக் கொல்ல வேண்டுமென்று கூறினர். ஏனெனில் பிருது மன்னர் செய்யும் வேள்வியினை இந்திரன் தடுத்து நிறுத்தினான். அதனால் தேவர்கள் அனைவரினும் மிகவும் இழிந்தவனாகக் கருதப்பட்டான்.

பதம் 4.19.16 : இவ்வாறு அறிவுறுத்தப்பட்டவுடன் மன்னன் வேனனின் பேரன் வானத்தில் மிகுந்த வேகத்துடன் விரைந்து செல்லும் இந்திரனை மீண்டும் பின் தொடர்ந்தான். அவன் இந்திரன் மீது மிகுந்த சினம் கொண்டு, கழுகுகளின் வேந்தனான ஜடாயு, இராவணனை விரட்டிச் சென்றது போல் விரட்டிச் சென்றான்.

பதம் 4.19.17 : பிருது மன்னரின் மைந்தன் தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கண்ட இந்திரன் தனது துறவி வேடத்தினைக் களைந்து விட்டு, அக்குதிரையினை விட்டு விட்டான். உண்மையில் அவன் அந்த இடத்திலிருந்து யாரும் காணா வண்ணம் மறைந்து விட்டான். அதன் பின்னர் மிகச் சிறந்த வீரனான பிருது மன்னரின் மைந்தன் அக்குதிரையினை கைப்பற்றிக் கொண்டு பிருது மன்னரின் வேள்விச் சாலைக்கு வந்தான்.

பதம் 4.19.18 : அன்பார்ந்த விதுரனே, பிருது மன்னரின் மைந்தனின் அற்புதமான செயலினைக் கண்ணுற்ற அனைத்து முனிவர்களும் அவனுக்கு “விஜிதாஸ்வன்” என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டச் சம்மதித்தனர்.

பதம் 4.19.19 : அன்பார்ந்த விதுரா, தேவேந்திரன் மிகவும் சக்தியுடையவனாதலினால் அவன் உடனே வேள்விச் சாலையின் மீது அடர்ந்த இருள் கவியுமாறு செய்தான். இருள் மூடியவுடன் அவன் விலங்குகள் பலியிடப்படும் கட்டையின் அருகில் தங்கச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த குதிரையை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் வெளியேறினான்.

பதம் 4.19.20 : மாமுனிவர் அத்திரி பிருது மன்னரின் மைந்தனிடம் மீண்டும் இந்திரன் வானில் விரைந்து செல்வதைக் காண்பித்தார். மாவீரனான பிருதுவின் மைந்தன் மீண்டும் அவனைத் தொடர்ந்து சென்றான். இப்போதும் இந்திரன் தனது கையில் ஒரு கோலும் அதன் உச்சியில் ஒரு மண்டை ஓடும் வைத்துக் கொண்டு துறவியின் வேடத்தில் செல்வதைக் கண்டு அவனைக் கொல்வதற்குத் தயங்கினான்.

பதம் 4.19.21 : அத்திரி முனிவரின் வழிகாட்டுதலின்படி மிகவும் சினம் கொண்டிருந்த பிருது மன்னரின் மைந்தன் தனது வில்லில் ஒரு அம்பினைப் பூட்டி நாணேற்றினான். இதனைக் கண்ட இந்திரன் உடனே தனது துறவிக் கோலத்தைக் களைந்து குதிரையை அங்கேயே விட்டு விட்டு மறைந்தான்.

பதம் 4.19.22 : பின்னர் பிருது மன்னரின் மைந்தனும் மிகச் சிறந்த வீரனுமான விஜிதாஸ்வன், மீண்டும் அக்குதிரையினைக் கைப்பற்றித் தனது தந்தையின் வேள்விச் சாலைக்கு கொணர்ந்தான். அக்காலத்திலிருந்தே மதியிலே குறையுடைய சில மனிதர்கள் கபட சந்நியாசி வேடம் புனையத் தொடங்கினர். இதனை அறிமுகப்படுத்தியவன் தேவேந்திரனே ஆவான்.

பதம் 4.19.23 : இந்திரன் குதிரையைத் திருட வேண்டும் என்னும் விருப்பத்தின் காரணமாக பிச்சைக்காரன் வேடம் போன்ற எத்தனை வேடங்கள் மேற்கொண்டாலும் அவையெல்லாம் நாத்திக சித்தாந்தத்தின் அடையாளங்களாகும்.

பதங்கள் 4.19.24 – 4.19.25 : இவ்வாறு தேவேந்திரன் பிருது மன்னர் வேள்விச் சாலையிலிருந்து குதிரையைத் திருடுவதற்காகப் பல்வேறு துறவு வேடங்களை மேற்கொண்டான். சில சந்நியாசிகள் நிர்வாணமாகச் செல்கின்றனர், சிலர் கபாலிகர்கள் என்ற பெயரில் சிவப்பு ஆடை உடுத்துகின்றனர். இவையெல்லாம் அவர்கள் செய்யும் பாவத்தின் அடையாளங்களேயாகும். இவர்கள் அனைவரும் பாவிகளினால் மிகவும் பாராட்டப் படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் எல்லோரும் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்கள். ஆயினும் தங்கள் தரப்பை எடுத்து விவாதிப்பதற்குரிய நாவன்மை படைத்தவர்கள். அவர்கள் எல்லாம் பற்பல மதங்களோடு ஒட்டிக்கொண்டு காலம் கழிப்பவர்களேயன்றி உண்மையில் சமயவாதிகள் அல்லர். துரதிர்ஷ்டவசமாக குழப்பமுற்றோர் அவர்களை சமயவாதிகள் என்று ஏற்றுக்கொண்டு அவர்களால் ஈர்க்கப்படுகின்றனர். பின்னர் தங்கள் வாழ்க்கையினை அழித்துக் கொள்கின்றனர்.

பதம் 4.19.26 : எல்லோராலும் மிகவும் ஆற்றல் மிக்கவர் என்று போற்றப்படும் பிருது மன்னர் தனது வில்லையும், அம்புகளையும், எடுத்துக்கொண்டு இந்திரனைக் கொல்வதற்கு ஆயத்தமானார். ஏனென்றால் இது போன்ற முறையற்ற சந்நியாச நெறிகளை இந்திரன்தான் அறிமுகப்படுத்தினான்.

பதம் 4.19.27 : புரோகிதர்களும், மற்றவர்களும், பிருது மன்னர் மிகுந்த சினங்கொண்டு இந்திரனைக் கொல்வதற்கு முயல்வதைக் கண்டவுடன் அவரிடம் “ஓ மகாத்மாவே! அவனைக் கொல்லாதீர், சாத்திரங்களின்படி வேள்விச் சாலையில் விலங்குகள் மட்டுமே கொல்லப்படலாம்” என்று கூறினர்.

பதம் 4.19.28 : அன்பிற்குரிய மன்னரே! வேள்வியைத் தடை செய்ய முயன்றதினால் இந்திரன் தனது ஆற்றலின் பெரும்பகுதியினை இழந்துவிட்டான். இதற்கு முன்னர் பயன்படுத்தப்படாத வேத மந்திரங்களை உச்சரித்து அவனை அழைப்போம். அதனால் அவன் நிச்சயம் இங்கே வருவான். அவன் உனது எதிரியாதலின், எங்களது மந்திரத்தின் வலிமையினால் நாங்கள் அவனை வேள்வித்தீயில் பலியிடுவோம்.

பதம் 4.19.29 : அன்பார்ந்த விதுரனே, மன்னரிடம் இவ்வாறு உரைத்து விட்டு அப்புரோகிதர்கள் மிகுந்த சினத்துடன் தேவர்களின் தலைவனான இந்திரனை அழைப்பதற்கான வேள்வியினைச் செய்யத் தொடங்கினர். அவர்கள் யாககுண்டத்தின் நெருப்பில் பொருள்களை போடும் பொழுது பிரம்மதேவன் திடீரென்று தோன்றி அவ்வேள்வியினைத் தடுத்தார்.

பதம் 4.19.30 : பிரம்மதேவன் அவர்களிடம் இவ்வாறு கூறினார்: அன்பார்ந்த, வேள்வியினைச் செய்பவர்களே, நீங்கள் தேவர்களின் தலைவனான இந்திரனைக் கொல்ல முடியாது. இது உங்களுக்குரிய கடமையுமல்ல. இந்திரனும் முழுமுதற் கடவுளைப் போன்றவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உண்மையில் அவன் முழுமுதற் கடவுளின் ஆற்றல் வாய்ந்த துணைவன் ஆவான். நீங்கள் செய்யும் வேள்விகளின் மூலம் அனைத்துத் தேவர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள், இத்தேவர்கள் இந்திரனின் பாகங்களேயாவர் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். உண்மை இவ்வாறிருக்க அவனை எப்படி நீங்கள் இச்சிறந்த வேள்வியில் கொல்ல முடியும்?

பதம் 4.19.31 : பிருது மன்னர் செய்யும் வேள்விக்கு இடையூறு செய்யவும் அவ்வேள்வியைச் செய்யவிடாமல் தடுக்கவும் தேவேந்திரன் மேற்கொண்ட சில வழிமுறைகள் எதிர்காலத்தில் அறநெறி சான்ற வாழ்வினை அழித்து விடும். இதனை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மேலும் நீங்கள் அவனை எதிர்த்தீர்கள் என்றால் அவன் இதுபோன்று சமயத்திற்குப் புறம்பான முறைகளை உருவாக்குவான்.

பதம் 4.19.32 : “மாமன்னர் பிருதுவிற்கான வேள்விகள் மொத்தம் தொண்ணூற்று ஒன்பதாக இருக்கட்டும்” என்று கூறி பிரம்மதேவர் தனது உரையினை நிறைவு செய்தார். பின்னர் அவர் பிருதுவைப் பார்த்து, வீடுபேற்றுக்கான வழிமுறைகளை முற்றிலும் அறிந்திருக்கும் அவர் மேலும் மேலும் வேள்விகள் செய்வதினால் என்ன பயன் அடையப் போகிறார்? என்று கேட்டார்.

பதம் 4.19.33 : பிரம்மதேவன் தொடர்ந்து கூறினார்: உங்கள் இருவருக்கும் மங்கலம் உண்டாகட்டும். நீயும், தேவேந்திரனும் முழுமுதற் கடவுளின் பகுதிகளேயாவீர். ஆகையினால் உன்னிலிருந்து வேறுபாடற்றவனான தேவேந்திரனிடம் நீ சினங்கொள்ள வேண்டாம்.

பதம் 4.19.34 : அன்பிற்குரிய அரசனே, விதியின் செயலால் நீ செய்த வேள்விகள் தடைப்பட்டன. அதனால் நீ மனக் கவலையோ, கொந்தளிப்போ அடைய வேண்டாம். எனது வார்த்தைகளை தகுந்த மரியாதையுடன் எடுத்துக் கொள்வாயாக. விதியின் செயலினால் ஏதாவது நேர்ந்ததென்றால் அதற்காக நாம் வருத்தப்படக்கூடாது. அதனை மாற்றியே தீர வேண்டுமென்ற மேலும் மேலும் நாம் முயன்றால் உலகியற் சிந்தனை என்னும் அடர்ந்த இருட் பிரதேசத்தினுள் நாம் வெகுதூரம் சென்று விடுவோம்.

பதம் 4.19.35 : பிரம்மதேவன் தொடர்ந்து கூறினார்: இந்திரனைத் தர்மத்திற்குப் புறம்பான பல்வேறு செயல்களைச் செய்வதற்குத் தூண்டுகின்ற இவ்வேள்விகள் அனைத்தையும் நிறுத்துவாயாக. தேவர்களுக்கிடையிலும் கூட தேவையில்லாத பல ஆசைகள் இருக்கின்றன என்பதை நீ நன்கறிவாய்.

பதம் 4.19.36 : சற்று சிந்தித்துப் பார், வேள்வி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இடையில் இந்திரன் வேள்விக் குதிரையைத் திருடியதின் மூலம் எவ்வாறு இடையூறு செய்தான் என்று. அவன் அறிமுகப்படுத்திய இக்கவர்ச்சி மிக்க பாவச் செயல்கள் பின்னாளில் பொதுமக்களினால் பின்பற்றப்படும்.

பதம் 4.19.37 : ஓ, வேனனின் மைந்தனான பிருது மன்னனே, நீ பகவான் விஷ்ணுவின் ஒரு பகுதியாவாய். மன்னன் வேனனின் தவறான செயல்களினால் சமய அறநெறிகள் ஏறத்தாழத் தொலைந்து போயின. அச்சமயத்தில் அதிர்ஷ்டவசமாக நீ பகவான் விஷ்ணுவின் மறுபிறப்பெனப் பிறந்துள்ளாய். உண்மையில், சமய அறநெறிகளைக் காப்பதற்காகவே நீ மன்னன் வேனனின் உடலிலிருந்து தோன்றினாய்.

பதம் 4.19.38 : ஓ, பொதுமக்களின் பாதுகாவலனே, விஷ்ணுவின் அவதாரமாக நீ பிறப்பெடுத்த நோக்கம் என்னவென்பதனை அருள் கூர்ந்து சிந்திப்பாயாக. இந்திரனால் படைக்கப்பட்ட புறச்சமய நெறிகள் தேவையற்ற பற்பல சமயங்களுக்குக் காரணமாக உள்ளன. அதனால் இப்போலிகளின் வளர்ச்சியினை உடனே தடுத்து நிறுத்துக.

பதம் 4.19.39 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: ஜகத் குருவான பிரம்மதேவனால் பிருது மன்னர் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டவுடன் அவர் யாகங்களின் மீது கொண்டிருந்த மோகத்தினை ஒழித்து இந்திரனுடன் மிகுந்த அன்புடன் சமாதானம் செய்து கொண்டார்.

பதம் 4.19.40 : இதன் பின்னர், வேள்வி முடிந்தவுடன் செய்யும் நீராட்டத்தினை பிருது மன்னர் முடித்துக் கொண்டார். அதன் பிறகு, அவர்தம் செயலினால் மிகவும் மகிழ்ச்சியடைந்த தேவர்களினால் அருளப்பட்ட வரங்களையும், ஆசிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

பதம் 4.19.41 : மிகுந்த மரியாதையுடன் ஆதி ராஜாவான பிருது மன்னர் அவ்வேள்விச் சாலையில் குழுமியிருந்த அனைத்து அந்தணர்களுக்கும் வேண்டிய பரிசுகளை வழங்கினார். வந்திருந்த அந்தணர்கள் அனைவரும் மிகுந்த திருப்தியுற்று தமது நல்லாசிகளை மனதார மன்னருக்கு அருளினர்.

பதம் 4.19.42 : அனைத்து மாமுனிவர்களும் அந்தணர்களும் கூறினர்: பெருந்தோளுடைய மன்னனே, உமது அழைப்பின் பேரிலேயே அனைத்து வகையான உயிர்களும் இங்கே கூடியிருக்கின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தைச் சேர்ந்தவர்கள், தேவர்கள், மாமுனிவர்கள் மற்றும் சாமான்ய மனிதர்கள், இக்கூட்டத்தில் பங்கு பெற்றிருக்கின்றனர். இப்போது அவர்கள் அனைவரும் உமது நடவடிக்கைகளினாலும் அவர்களுக்கு நீர் அளித்துள்ள தானங்களினாலும் மிகுந்த மகிழ்ச்சியுற்றிருக்கின்றனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare