அத்தியாயம் – 18
பிருது மகாராஜன் மண்ணுலகைச் சாறு இறக்குதல்
பதம் 4.18.1 : மாமுனிவர் மைத்ரேயர் விதுரரிடம் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, பூமிக்கோளம் ஆகிய அவன் வழிபாடுகளை முடித்த பின்னருங் கூட பிருது மன்னர் சமாதானமடையவில்லை. அவர் உதடுகள் மிகுந்த சினத்தினால் துடித்தன. அன்னை பூமி அச்சங்கொண்டாலும் அவள் தனது மனதினை திடப்படுத்திக் கொண்டு மன்னரைச் சமாதானப்படுத்துவதற்காக பின்வருவனவற்றைக் கூறத் தொடங்கினாள்.

பதம் 4.18.2 : வணக்கத்திற்குரிய மன்னரே, சினம் தவிர்த்து, நான் கூறுவனவற்றைப் பொறுமையுடன் அருள் கூர்ந்து கேட்பீராக, தயை கூர்ந்து உமது கவனத்தை இதன் பால் திருப்புவீராக. நான் ஒரு ஏழையாக இருக்கலாம். ஆனாலும் தும்பியானது பல்வேறு மலர்களில் இருந்து எவ்வாறு தேனை சேகரிக்கிறதோ அது போல் கற்றவன் அறிவின் சாரத்தை எல்லா இடங்களில் இருந்தும் பெற்றுக் கொள்கிறான்.

பதம் 4.18.3 : இப்பிறவிக்குமட்டுமல்லாது மறுபிறவிக்கும் சேர்த்து சிறந்த மகான்களும் முனிவர்களும் அனைத்து மனித சமுதாயத்தின் நன்மைக்காகவும், பொதுமக்களின் வளத்திற்காகவும் பயன்படும் பல்வேறு முறைகளைக் கூறிச் சென்றிருக்கின்றனர்.

பதம் 4.18.4 : முற்காலத்தில் மாமுனிவர்களினால் அருளப்பட்ட அறிவுரைகளையும் கட்டளைகளையும் ஒருவன் தன் வாழ்வின் நடைமுறை நோக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்பவன் வாழ்வில் மிக எளிதில் மகிழ்ச்சி அடைகிறான்.

பதம் 4.18.5 : சிலர் மனம் போன போக்கில் தம் விருப்பப்படியே வாழ்வின் வழிமுறைகளை வகுத்துக் கொள்கின்றனர். மாசுமறுவில்லாத நெறிகளையும், நியதிகளையும் ஏற்படுத்தியுள்ள மாமுனிவர்களது ஆணைகளையும் ஏற்பது இல்லை. இத்தகைய முட்டாள்கள் மீண்டும் மீண்டும் எவ்வளவு முயன்றாலும் தத்தமது வாழ்வில் வெற்றியடைவது இல்லை.

பதம் 4.18.6 : அன்பிற்குரிய அரசரே, பிரம்மதேவனால் முன்பு படைத்தளிக்கப்பட்ட விதைகளும், வேர்களும், தாவரங்களும், தானியங்களும், இந்நாளில் அனைத்து ஆன்மீக அறிவும் சூன்யமாகிப் போன கடவுள் நம்பிக்கையற்றவர்களினால் பயன்படுத்தப்படுகின்றன.

பதம் 4.18.7 : அன்பார்ந்த மன்னவா, தானியங்களும், தாவரங்களும் பக்தரல்லாதவர்களினால் பயன்படுத்தப்பட்டது மட்டுமன்றி, என்னைப் பொருத்தமட்டில் நானும் ஒழுங்காகப் பேணப்படவில்லை. புலனுகர்ச்சிக்காகத் தானியங்களைப் பயன்படுத்தும் இத்திருடர்கள் முதலில் தீயோராக இருந்தபொழுது மக்களால் தண்டிக்கப்படாமையினால் நானுங்கூட அம்மன்னர்களால் புறக்கணிக்கப்பட்டேன். அதனாலேயே நான் வேள்விக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய இத்தானியங்களை என் வயிற்றினுள் மறைத்து வைத்தேன்.

பதம் 4.18.8 : என்னுள் நீண்ட நாட்களுக்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் இத்தானிய விதைகள் நிச்சயமாகக் கெட்டுப் போய் இருக்கும். எனவே நீர், ஆச்சாரியர்களும் சாத்திரங்களும் கூறியுள்ள முறைப்படி உடனடியாக இத்தானிய விதைகளை வெளியே கொண்டு வருவதற்கான ஏற்பாட்டினைச் செய்தல் வேண்டும்.

பதங்கள் 4.18.9 – 4.18.10 : ஓ, மிகச்சிறந்த வீரரே, உயிர்களைக் காத்தருள்பவனே, நீர் போதுமான உணவு தானியங்களை அளித்து உயிர்களைக் காக்க விரும்பினாலோ, அவர்களுக்கு எனது பாலினைக் கொடுத்து ஊட்டச்சத்து அளிக்க விரும்பினாலோ அதற்குத் தேவையான, பொருத்தமானக் கன்றுக்குட்டி, பால் கறப்பதற்கான கலசம் மற்றும் பாலைக் கறக்கும் பால்காரர் என்று இவற்றைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை உடனே செய்வீராக. மேலும் நான் எனது கன்றினிடத்தில் அதிகப் பிரியம் உடையவனாக இருப்பேன். ஆதலால் என்னிடமிருந்து பால் கறக்கும் உமது எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.

பதம் 4.18.11 : அன்பார்ந்த அரசரே, நீர் பூமிப் பரப்பினை சமதளமாக்க வைத்தல் வேண்டும் என்பதனை உமக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். மழை பெய்யாது போனாலுங்கூட இது எனக்கு உதவி செய்யும். தேவேந்திரன் கருணையினால் மழை பெய்கிறது. மழை நீர் பூமியில் விழுந்து அதனை எப்போதும் ஈரப்பதத்தில் வைத்திருப்பதினால் பூமியானது எல்லாவகை உற்பத்திக்கும் மங்கலமானதாக இருக்கின்றது.

பதம் 4.18.12 : பூமியின் மங்கலகரமான, இனிமையான வார்த்தைகளைக் கேட்ட பிருது மன்னர் அவற்றை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் சுயம்புவமனுவைக் கன்றாக மாற்றி பசு வடிவங்கொண்ட பூமியிலிருந்து எல்லாத் தாவரங்கள் மற்றும் தானியங்களைப் பாலாகக் கறந்து அவற்றைத் தம் குவித்த கரங்களில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

பதம் 4.18.13 : பிருது மன்னரைப் போன்று இருந்த புத்திமான்களும் பூமியிலிருந்த சாற்றினை வெளியே எடுத்துக் கொண்டனர். உண்மையில் ஒவ்வொருவரும் பிருது மன்னரைப் பின்பற்றி இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டதோடு, அவர்கள் விரும்பியது அனைத்தையும் பூமியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

பதம் 4.18.14 : அனைத்து முனிவர்களும் சேர்ந்து பிரகஸ்பதியை கன்றாக மாற்றி புலன்களைக் கலசமாகச் செய்து சிந்தனை, சொல், செயல் ஆகியனவற்றைத் தூய்மை செய்வதற்காக அனைத்து வேதங்களின் ஞானத்தினையும் பாலாகக் கறந்தனர்.

பதம் 4.18.15 : தேவர்கள் அனைவரும் சேர்ந்து தேவேந்திரனைக் கன்றாக மாற்றி பூமியிலிருந்து சோம ரசத்தினை பாலாகக் கறந்தனர். அதனால் அவர்கள் மனோசக்தியும், உடல் வலிமையும், புலன்களின் ஆற்றலும் அதிகரிக்கப் பெற்றனர்.

பதம் 4.18.16 : திதியின் மைந்தர்களும் அசுரர்களும் சேர்ந்து அசுரர் குலத்தில் அவதரித்த பிரகலாத மன்னரைக் கன்றுக்குட்டியாக மாற்றி பல்வேறு வகையான மதுபானங்களைக் கறந்து அவற்றை ஓர் இரும்புப் பானையில் தேக்கி வைத்தனர்.

பதம் 4.18.17 : கந்தர்வலோகம் மற்றும் அப்ஸரலோகத்தைச் சேர்ந்தவர்கள் விஷ்வாவசுவைக் கன்றாக மாற்றி ஒரு தாமரை மலர்ப் பாத்திரத்தில் பாலைக் கறந்தனர். அந்தப் பால் இனிமையும் எழிலும் வாய்ந்த இசைக் கலையாக மாறியது.

பதம் 4.18.18 : சிரார்த்தங்களில் தலைமை ஏற்கும் பித்ரு லோகத்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலிகள் தங்கள் தலைவனான அர்யமணா கன்றுக்குட்டியாக்கினார். மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் மூதாதையர்க்கு அர்ப்பணிக்கப்படும் ‘கவ்யம்’ என்னும் பாலைக் கறந்து வேகாத மண் பானையில் எடுத்து வைத்தனர்.

பதம் 4.18.19 : இதன் பின்னர் சித்தலோகத்தைச் சேர்ந்தவர்களும், வித்தியாதர லோகத்தைச் சேர்ந்தவர்களும், மாமுனிவர் கபிலரைக் கன்றாக்கி வானத்தைக் கலசமாக்கி அதில் “அனிமா”விலிருந்து தொடங்கும் யோகஸித்திகளைப் பாலாகக் கறந்தனர். உண்மையில் வித்தியாதர லோகத்தைச் சேர்ந்தவர்கள் வானில் பறக்கும் ஆற்றலுடையவர்கள் ஆவர்.

பதம் 4.18.20 : கிம்புருட லோகத்தைச் சேர்ந்த பிறருங் கூட மயன் என்னும் அசுரனைக் கன்றாக்கி மாயா சக்திகளைப் பாலாகக் கறந்தனர். அச்சக்தியின் துணை கொண்டு, கண்ணுக்குத் தெரியாதவாறு மறையலாம் வேறொரு வடிவத்தில் தோன்றலாம்.

பதம் 4.18.21 : யட்சர்களும், ராட்சதர்களும், பேய்களும், பூதங்களும் நரமாமிசம் உண்போராவர், பின்னர் இவர்களெல்லாம் சேர்ந்து சிவபெருமானின் அவதாரமான ருத்திரனைக் (பூதநாதன்) கன்றாக்கி இரத்தத்தினால் செய்யப்படும் மதுபானத்தைக் கறந்து அதனை மண்டையோடுகளில் தேக்கினர்.

பதம் 4.18.22 : இதன் பின்னர், படமெடுக்காத பாம்புகள், பெரிய நாகங்கள், தேள்கள் மற்றும் நச்சு உயிர்கள் அனைத்தும் பூமியிலிருந்து பாலாக விஷம் முழுவதையும் கறந்து அவ்விஷத்தைப் புற்றுக்களைப் பாத்திரமாக்கி அதில் வைத்துக் கொண்டன. அவைகள் தக்ஷகனிலிருந்து ஒரு கன்றினை உருவாக்கியிருந்தன.

பதங்கள் 4.18.23 – 4.18.24 : நான்கு கால் பிராணிகளான பசுக்கள் போன்றவை சிவபெருமானின் வாகனமான காளை மாட்டிலிருந்து ஒரு கன்றினையும், காட்டினைப் பாத்திரமாகவும் செய்து பால் கறந்தன. அதனால் அவை உண்பதற்கு பசும் புற்களைப் பெற்றுக் கொண்டன. கொடிய விலங்குகளான புலிகள் போன்றவை ஒரு சிங்கத்தை கன்றாக்கி அதன் மூலம் தசைகளைப் பாலாகப் பெற்றன. பறவைகள் கருடனிலிருந்து ஒரு கன்றினை உருவாக்கி பூமியிலிருந்து அசையும் சிறு பூச்சிகள் மற்றும் அசையாத செடி, கொடிகள் போன்றவற்றின் வடிவில் பாலைப் பெற்றுக் கொண்டன.

பதம் 4.18.25 : மரங்களெல்லாம் சேர்ந்து ஆலமரத்திலிருந்து ஒரு கன்றினை உருவாக்கி பல்வேறு சுவைமிக்க சாறுகளைப் பாலாக எடுத்துக் கொண்டன. மலைகளெல்லாம் இமயமலையினைக் கன்றாக்கி பல் வேறு கனிமங்களையும் தாதுப்பொருட்களையும் சிகரமென்னும் பாத்திரங்களில் கறந்து கொண்டன.

பதம் 4.18.26 : பூமி எனும் கிரகமானது ஒவ்வொருவருக்கும் அவருக்குத் தேவையான உணவினை அளித்தது. பிருது மன்னரின் காலத்தில் பூமியானது அவரது முழுக்கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது. இவ்வாறு பூமியிலுள்ள அனைவரும் பல்வேறு வகையான கன்றுகளின் வடிவத்தில் அவர்களுக்குரிய குறிப்பிட்ட உணவினைப் பாலாகக் கறந்து பல்வேறு வகையான பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டனர்.

பதம் 4.18.27 : குரு வம்சத்தின் தலைவனான அன்புக்குரிய விதுரனே, இவ்வாறு பிருது மன்னரும், மற்றவர்களும் தங்கள் வாழ்விற்குரிய உணவினை, பல்வேறு வகையான கன்றுகளின் வடிவில் பல்வேறு வகையான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். இவ்வாறு அவர்கள் தங்கள் பல்வேறு வகையான உணவுகளை பாலின் வடிவத்தில் பெற்றுக் கொண்டனர்.

பதம் 4.18.28 : பூமியானது பல்வேறு வகையான உயிர்களுக்குரிய பல்வேறு வகையான உணவுப் பொருட்களை போதுமான அளவிற்கு அளித்ததைக் கண்டு பிருது மன்னர் பூமியினிடம் மிகுந்த திருப்தியுற்றார். அதனால் அவர் பூமியின் மீது தனது சொந்த புதல்வியினைப் போல் பாசமுடையவரானார்.

பதம் 4.18.29 : இதன் பின்னர் மன்னர்களின் மன்னரான பிருது தமது வில்லின் வலிமையினால் மலைகளை உடைத்துத் துண்டு துண்டாக்கி பூமியின் மேற்பரப்பினை சமதளமாக்கினார். அவரது கருணையினால் பூமியின் மேற்பரப்பு பெரும்பாலும் சமதளமாகியது.

பதம் 4.18.30 : தனது நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த தந்தையினைப் போல் விளங்கினார். அவர் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை ஆதாரங்கள் போன்றவற்றை வழங்குவதில் வெளிப்படையாக ஈடுபட்டிருந்தார். அவர் பூமியின் மேற்பரப்பினை சமதளமாக்கிய பின்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வகையான இடங்களை குடியிருப்புக்களாக அடையாளமிட்டு பிரித்துக் கொடுத்தார்.

பதம் 4.18.31 : இவ்வழியே பிருது மன்னர் பல்வகையான கிராமங்கள், குடியிருப்புக்கள், பட்டினங்கள், கோட்டைகள், இடைச்சேரிகள், மாட்டுத் தொழுவங்கள், அரசு விருந்தினர் மாளிகைகள், சுரங்கங்கள், விவசாய நகரங்கள் மற்றும் மலைவாழ் குடியிருப்புகள் போன்றவற்றை உருவாக்கினார்.

பதம் 4.18.32 : பிருது மன்னரின் காலத்திற்கு முன்பு பல்வேறு வகையான கிராமங்கள், நகரங்கள், மேய்ச்சல் நிலங்கள் என்பவையெல்லாம் திட்டமிட்டு அமைக்கப்படவில்லை. ஒழுங்கின்றி அங்குமிங்குமாக சிதறியிருந்தன. மேலும் அக்குடியிருப்புக்களை மக்கள் தம் வசதிக்கேற்ப மனம் போன போக்கில் கட்டிக்கொண்டனர். ஆயினும் பிருது மன்னர் நகர் மற்றும் கிராமங்கள் அனைத்தையும் திட்டமிட்டு அமைத்துக் கொடுத்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare