அத்தியாயம் – 17
பிருது மகாராஜன் பூமியிடம் கோபம் கொள்ளல்
பதம் 4.17.1
மைத்ரேய உவாச
ஏவம் ஸ பகவான் வைன்ய: கியாபிதோ குண-கர்மபி:
சந்தயாம் ஆஸ தான் காமை: ப்ரதிபூஜ்யாபினந்த்ய ச

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் மாமுனிவர் தொடர்ந்து கூறினார்; ஏவம்—இவ்வாறு; ஸ:—அவர்; பகவான்—முழுமுதற் கடவுள்; வைன்ய:—மன்னன் வேனனின் மைந்தன் வடிவில்; க்யாபித—புகழப்பட்டு; குண-கர்மபி:—குணங்கள் மற்றும் உண்மையானச் செயல்களினால்; சந்தயாம் ஆஸ—சாந்தப்படுத்தி; தான்—அக்கலைஞர்கள்; காமை:—பல்வேறு பரிசுகளினால்; ப்ரதிபூஜ்ய—அனைத்து மரியாதைகளும் செலுத்தி; அபிநந்த்ய—பிரார்த்தனைகள் செலுத்தி; ச—மேலும்.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: இவ்வாறு அவ்விசைக் கலைஞர்கள் பிருது மன்னரின் குணங்களையும் வீரச் செயல்களையும் போற்றிப் புகழ்ந்தனர். இறுதியில் பிருது மகாராஜா அவர்களை வணங்கி, மரியாதை செலுத்தி மதிப்பு மிக்கப் பரிசுப் பொருட்களை அவர்களுக்கு வழங்கினார்.

பதம் 4.17.2
ப்ராஹ்மண-ப்ரமுகான் வர்ணான் ப்ருத்யாமாத்ய-புரோதஸ:
பெளரான் ஜான-பதான் ஸ்ரேணீ: ப்ரக்ருதீ: ஸமபூஜயத்

ப்ராஹ்மண-ப்ரமுகான்—அந்தணக் குலத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு; வர்ணான்—பிற இனத்தோருக்கும்; ப்ருத்ய—பணியாளர்கள்; அமாத்ய—அமைச்சர்கள்; புரோதஸ:—புரோகிதர்கள்; பௌரான்—குடிமக்கள்; ஜான-பதான்—அவரது நாட்டு மக்களுக்கு; ஸ்ரேணீ:—பல்வேறு குலத்தார்க்கும்; ப்ரக்ருதீ;—ஆர்வலர்களுக்கும்; ஸமபூஜயத்—அவர் உரிய மரியாதைகள் செய்தார்.

இவ்வாறு பிருது மன்னர் அந்தணர் குலத்தலைவர்களுக்கும், பிற குலத்தார்க்கும், பணியாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும், புரோகிதர்களுக்கும், பொது மக்களுக்கும், பிறகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், மற்றவர்க்கும் அனைத்து மரியாதைகளும் செய்து திருப்திப்படுத்தின்மையால் அனைவரும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.

பதம் 4.17.3
விதுர உவாச
கஸ்மாத் ததாத கோ-ரூபம் தரித்ரீ பஹீ-ரூபிணீ
யாம் துதோஹ ப்ருதுஸ் தத்ர கோ வத்ஸோ தோஹனம் சகிம்

விதுர: உவாச—விதுரர் வினவினார்; கஸ்மாத்—ஏன்; ததார—எடுத்தாள்; கோரூபம்—ஒரு பசுவின் வடிவில்; தரித்ரீ—பூமி; பஹீ-ரூபிணீ—அவள் பல்வேறு வடிவங்கள் கொண்டவள்; யாம்—எவனை; துதோஹ—பால் கறந்தார்; ப்ருது:—பிருது மகாராஜா; தத்ர—அங்கே; க:—யார்; வத்ஸ:—கன்று; தோஹனம்—பால் கலயம்; ச—மேலும்; கிம்—என்ன.

மாமுனிவர் மைத்ரேயரிடம் விதுரர் வினவினார்: அன்பார்ந்த அந்தணரே, அன்னை பூமி பல்வேறு வடிவங்களை உடையவளாக இருந்தும் அவள் ஏன் ஒரு பசுவின் வடிவில் தோன்றினாள்? மேலும் பிருது மன்னர் அப்பசுவினிடம் பால் கறந்த பொழுது கன்றுக் குட்டியாக இருந்தது யார்? பால் கலயம் எது ?

பதம் 4.17.4
ப்ரக்ருத்யா விஷமா தேவீ க்ருதா தேன ஸமா கதம்
தஸ்ய மேத்யம் ஹயம் தேவ: கஸ்ய ஹேதோர் அபாஹரத்

ப்ரக்ருத்யா—இயற்கையினால்; விஷமா—சமமின்றி; தேவீ—பூமி; க்ருதா—செய்யப்பட்டது; தேன—அவரால்; ஸமா—சமமாக; கதம்—எவ்வாறு; தஸ்ய—அவரது; மேத்யம்—வேள்விக்கானது; ஹயம்—குதிரை; தேவ:—தேவேந்திரன்; கஸ்ய—எதற்காக; ஹேதோ:—காரணம்; அபாஹரத்—திருடப்பட்டது.

இயற்கையிலேயே பூமியானது சில இடங்களில் மேடாகவும் சில இடங்களில் பள்ளமாகவும் இருக்கும். பிருது மன்னர் எவ்வாறு பூமியினைச் சமதளமாக்கினார்? மேலும் வேள்விக்காக வைத்திருந்த குதிரையை தேவேந்திரன் ஏன் திருடினான்?

பதம் 4.17.5
ஸநத்-குமாராத் பகவதோ ப்ரஹ்மன் ப்ரஹ்ம-வித்-உத்தமாத்
லப்த்வா ஜ்ஞானம் ஸ-விஜ்ஞானம் ராஜருஷி: காம் கதிம் கத:

ஸநத்-குமாராத்—சனத் குமாரரிடமிருந்து; பகவத:—மிகச் சக்தி வாய்ந்த; ப்ரஹ்மன்—எனதன்பிற்குரிய அந்தணரே; ப்ரஹ்ம-வித்-உத்தமாத்—வேத ஞானத்தில் சிறந்தவர்; லப்த்வா—பெற்றபிறகு; ஜ்ஞானம்—ஞானம்; ஸ-விஞ்ஞானம்—நடைமுறையில் பயன்படுத்துவதற்காக; ராஜ-ருஷி:—சிறந்த ராஜரிஷி; காம்—எதனை; திம்—இலக்கு; கத:—அடைந்தார்.

பிருது மன்னர் வேதங்களில் தலைச்சிறந்த அறிஞரான சனத் குமாரரிடமிருந்து ஞானத்தைப் பெற்றார். நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படுவதற்கான அந்த ஞானத்தினைப் பெற்ற பிறகு அந்த ராஜரிஷி தான் விரும்பிய குறிக்கோளை அடைந்தாரா?

பதங்கள் 4.17.6 – 4.17.7
யச் சான்யத் அபி க்ருஷ்ணஸ்ய பவான் பகவத: ப்ரபோ:
ஸ்ரவ: ஸுஸ்ரவஸ புண்யம் பூர்வ்-தேஹ-கதாஸ்ரயம்

பக்தாய மே ‘னுக்ரதாய தவ சாதோக்ஷஜஸ்ய ச
வக்தும் அர்ஹஸி யோ ‘துஹ்யத் வைன்ய-ரூபேண காம் இமாம்

யத்—எது; ச—மேலும்; அன்யத்—பிற; அபி—உறுதியாக; க்ருஷ்ணஸ்ய—கிருஷ்ணரின்; பவான்—தங்கள் மேலான; பகவத:—முழுமுதற் கடவுளின்; ப்ரபோ:—சக்தி வாய்ந்த, ஸ்ரவ:—புகழ் மிக்கச் செயல்கள்; ஸு-ஸ்ரவஸ:—கேட்பதற்கு மிகவும் இனிமையாயிருக்கின்ற; புண்யம்—புண்ணியம்; பூர்வ-தேஹ—அவரது முந்தைய அவதாரத்தின்; பக்தாய—பக்தனுக்கு; கதா-ஆஸ்ரயம்—கதைக்குத் தொடர்பான; பக்தாய—பக்தனுக்கு; மே—எனக்கு; அனுரப்தாய—மிகுந்த கவனமுடன்; தவ—உமது; ச—மேலும்; அதோக்ஷஜஸ்ய—அதோக்ஷஜன் எனப்படும் பகவான்; ச—மேலும்; வக்தும்-அர்ஹஸி—அருள் கூர்ந்து உரைப்பீராக; ய:—யார்; அதுஹ்யத்—கறந்தார்; வைன்ய-ரூபேண—மன்னன் வேனனின் மைந்தன் வடிவில்; கர்ம—பசு; பூமி; இமாம்—இந்த.

பிருது மன்னர் பகவான் கிருஷ்ணரின் சக்தி மிக்க மறுபிறப்பாவர். இதனைத் தொடர்ந்து அவர் செயல்கள் பற்றிய எந்தக் கதையும் கேட்பதற்கு நிச்சயம் மிகவும் இனிமையாக இருக்கும். மேலும் அது அனைத்து மங்கலங்களையும் அருள்வதாகும். என்னைப் பொருத்த மட்டில் நான் உமது பக்தனாக இருப்பதோடு அதோக்ஷஜன் எனும், இறைபணியாளரின் பக்தனும் ஆவேன். ஆகையினால் பசுவின் வடிவான பூமியிலிருந்து பால் கறந்த மன்னன் வேனனின் மைந்தனான பிருது மன்னர் தொடர்புடைய அனைத்துக் கதைகளையும் அருள் கூர்ந்து உரைப்பீராக.

பதம் 4.17.8
ஸுத உவாச
சோதிதோ விதுரேணைவம் வாஸுதேவ-கதாம் ப்ரதி
ப்ரஸஸ்ய தம் ப்ரீத-மனா மைத்ரேய: ப்ரத்யபாஷத

ஸுத: உவாச—சூத கோஸ்வாமி கூறினார்; சோதித:—கவரப்பட்டு; விதுரேண—விதுரரால்; ஏவம்—இவ்வாறு; வாஸுதேவ—பகவான் கிருஷ்ணரின்; கதாம்—கதை; ப்ரதி—பற்றி; ப்ரஸஸ்ய—புகழ்ந்து; தம்—அவரது; ப்ரீத-மனா:—மிக்க இன்புறுதல்; மைத்ரேய:—மைத்ரேய முனீவர்; ப்ரத்யபாஷத—பதில் கூறினார்.

சூத கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: விதுரர், பகவான் கிருஷ்ணரின் செயல்களைப் பல்வேறு அவதாரங்களின் மூலம் கேட்பதற்கு ஆர்வங்கொண்டதைக் கண்டு மைத்ரேயரும் விதுரருடன் இணைந்து ஆர்வமும் மகிழ்ச்சியும் கொண்டதோடு அவரைப் பாராட்டவும் தொடங்கினார். பின்னர் மைத்ரேயர் பின்வருவனவற்றைக் கூறினார்.

பதம் 4.17.9
மைத்ரேய உவாச
யதாபிஷிக்த: ப்ருதர் அங்க விப்ரைர்
ஆமந்த்ரிதோ ஜனதாயாஷ் ச பால:
ப்ரஜா நிரன்னே க்ஷிதி-ப்ருஷ்ட ஏத்ய
க்ஷத்-க்ஷாம-தேஹா: பதிம் அப்யவோசன்

மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; யதா—எப்பொழுது; அபிஷிக்த:—அரியணை ஏறியவுடன்; ப்ருது:—மன்னர் பிருது; அங்க—அன்பார்ந்த விதுரனே; விப்ரை:—அந்தணர்களினால்; ஆமந்த்ரித:—அறிவிக்கப்பட்டு; ஜனதாயா:—மக்களின்; ச—மேலும் பால:—பாதுகாப்பவர்; ப்ரஜா:—குடிமக்கள்; நிரன்னே—உணவு தானியங்கள் இன்றி; க்ஷிதி—ப்ருஷ்டே—பூமியின் மீது; எத்ய—அருகில் வந்து; க்ஷீத்—பசியினால்; க்ஷாம—மெலிந்த; தேஹா:—அவர் உடல்கள்; பதிம்—பாதுகாப்பவருக்கு; அப்யவோசன்—அவர்கள் கூறினர்.

மைத்ரேய மாமுனிவர் கூறினார்: அந்தணர்களினாலும், மாமுனிவர்களினாலும் மன்னர் பிருது அரியாசனம் ஏற்றப்பட்டு, இவர் தான் குடிமக்களின் காவலர் என்று அறிவிக்கப்பட்ட பொழுது நாட்டில் உணவு பற்றாக்குறை அதிக அளவில் இருந்தது. பஞ்சத்தின் காரணமாக மக்கள் மெலிந்த தேகத்தினராய்க் காட்சியளித்தனர். ஆகையினால் அவர்கள் மன்னரிடம் சென்று தங்களது உண்மை நிலையினை அவருக்குத் தெரிவித்தனர்.

பதங்கள் 4.17.10 – 4.17.11
வயம் ராஜான் ஜாடரேணாபிதப்தா
யதாக்னினா கோடர-ஸ்தேன வ்ருக்ஷா:
த்வாம் அத்ய யாதா: ஸரணம் ஸரண்யம்
ய: ஸாதிதோ வ்ருத்தி-கர: பதிர்ந:

தன் னோ பவான் தது ராதவே ‘ன்னம்
க்ஷ தார்திதானாம் நரதேவ-தேவ
யாவன் ன நங்க்ஷ்யாமஹ உஜ்ஜி தோர்ஜா
வார்தா-பதிஸ் த்வம் கில லோக பால:

வயம்—நாங்கள்; ராஜன்—ஓ, மன்னனே; ஜாடரேண—பசித்தீயினால்; அபிதப்தா—மிகுந்த துன்பமுறுகிறோம்; யதா—போன்று; அக்னினா—தீயினால்; கோடர-ஸ்தேன—மரப்பொந்தில்; வ்ருக்ஷா:—மரம்; த்வாம்—உமக்கு; அத்ய—இன்று; யாதா:—நாங்கள் வந்திருக்கிறோம்; ஸரணம்—சரண்; அடைக்கலம்; ஸரண்யம்—அடைக்கலம் புகுவதற்குரிய இடம்; ய:—யார்; ஸாதித:—நியமித்தல்; வ்ருத்தி-கர:——வேலை வாய்ப்பு அளிப்பவர்; பதி:—தலைவர்; ந:—எங்கள்; தத்—ஆகையினால்; அன்னம்—உணவு தானியங்கள்; க்ஷீதா—பசியுடன்; அர்திதானாம்—வருந்துவது; நர-தேவ-தேவ—மன்னர்களுக்கெல்லாம் மன்னரே; யாவத் ந—நிகழாதிருக்கும்படி; நங்க்ஷ்யாமஹே—நாங்கள் அழிந்து போவோம்; உஜ்ஜித—இழக்கின்ற; ஊர்ஜா:—உணவு தானியங்கள்; வார்தா—செய்கின்ற தொழில்களின்; பதி:—அருள்பவர்; த்வம்—நீர்; கில—உண்மையில்; லோக-பால:—குடிமக்களைப் பாதுகாப்பவர்.

மரப்பொந்திடை வைத்த அக்கினிக் குஞ்சு மரம் முழுவதையும் எரித்துச் சாம்பலாக்கி விடுவதைப் போல் எங்கள் வயிற்றில் எரியும் பசி என்னும் நெருப்பினால் யாமும் விரைவில் சாம்பலாவோம். நீரே சரண் புகுந்த ஆத்மாக்களின் பாதுகாவலர். எனவே நீரே எங்களுக்கு வேலைவாய்ப்புத் தருவதற்காகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றீர். ஆகையினால் பாதுகாப்பை நாடி நாங்கள் உம்மை அடைந்திருக் கிறோம். நீர் மன்னர் மட்டுமல்ல! கடவுளின் மறு பிறப்பும் ஆவீர். உண்மையில் நீர் அரசர்களுக்கெல்லாம் பேரரசராக இருப்பவர். நீரே எங்கள் வாழ்வின் தலைவராதலின், நீர் தான் எங்களுக்குப் பல்வேறு வேலை வாய்ப்புக்களையும் தருதல் வேண்டும். ஆகையினால் மன்னர் மன்னனே, சரியான முறையில் உணவு தானியங்களை விநியோகித்து எங்கள் பசிப்பிணியினைத் தீர்த்தருள்வீராக. நீர் எம்மைக் காக்கவில்லை என்றால் பசியினால் நாங்கள் விரைவில் மாண்டு போவோம்.

பதம் 4.17.12
மைத்ரேய உவாச
ப்ருது: ப்ரஜானாம் கருணம் நிஸம்ய பரிதேவிதம்
தீர்கம் தத்யௌ குருஸ்ரேஷ்ட நிமித்தம் ஸோ ‘ன்வபத்யத

மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; ப்ருது:—மன்னர் பிருது; ப்ரஜானாம்—குடிமக்களின்; கருணம்—இரங்கத் தக்கநிலை; நிஸம்ய—கேட்டு; பரிதேவிதம்—துக்கம்; தீர்கம்—நெடுநேரம்; தத்யென—சிந்தித்தார்; குரு-ஸ்ரேஷ்ட—ஓ, விதுரனே; நிமித்தம்—காரணம்; ஸ:—அவர்; அன்வபத்யத—காண்பதற்காக.

குடிமக்களின் துயரத்தினையும், அவர்களின் இரங்கத்தக்க நிலையினையும் கண்டு பிருது மன்னர் இவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்னவென்று அறிவதற்காக நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தார்.

பதம் 4.17.13
இதி வ்யவஸிதோ புத்யா ப்ரக்ருஹீத-ஸராஸன:
ஸந்ததே விஸிகம் பூமே: க்ருத்தஸ் த்ரிபுர-ஹா யதா

இதி—இவ்வாறு; வ்யவஸித:—ஓர் முடிவிற்கு வந்து; புத்தியா—கூர்ந்த மதியினால்; ப்ரக்ருஹீத—எடுத்துக் கொண்டு; ஸராஸன:—வில்லை; ஸந்ததே—பொருத்தினார்; விஸிகம்—ஓர் அம்பினை; பூமே—பூமியை நோக்கி; க்ருத்த:—சினத்துடன்; த்ரி-புர-ஹா—திரிபுரம் எரித்த சிவபெருமானை; யதா—போன்று.

ஓர் முடிவிற்கு வந்த மன்னர் தன்கையிலிருந்த வில்லில் அம்பினைப் பொருத்தி, திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளைப் போல் மிகுந்த சீற்றத்துடன் பூமியை நோக்கிக் குறி வைத்தார்.

பதம் 4.17.14
ப்ரவேபமான தரணீ நிஸாம்யோதாயுதம் சதம்
கௌ: ஸதி அபாத்ரவத் பீதா ம்ருகீவ ம்ருகயு-த்ருதா

ப்ரவேபமானா—நடுநடுங்கி; தரணீ—பூமி; நிஸாம்ய—கண்டு;
உதாயுதம்—தனது வில்லையும்; அம்பையும் எடுத்தவுடன்; ச—மேலும்; தம்—மன்னர்; கௌ:—ஒரு பசு; ஸ்தீ—ஆனது; அபாத்ரவத்—தப்பியோடத் தொடங்குதல்; பீதா—மிகுந்த அச்சங்கொண்டு; ம்ருகீ இவ—மானைப்போன்று; ம்ருகயு—ஒரு வேடனால்; த்ருதா—துரத்தப்பட்டு.

பிருது மன்னர் தன் வில்லையும், அம்பையும் தன்னைக் கொல்வதற்காக எடுக்கக் கண்டவுடன் பூமியானது மிகுந்த அச்சங்கொண்டு நடு நடுங்கியது. ஒரு வேடனால் துரத்தப்பட்ட மான் துள்ளி ஓடுவது போல் அவளும் ஓடத் தொடங்கினாள். பிருதுவின் மீது கொண்ட அச்சத்தின் விளைவாக அவள் ஒரு பசுவின் வடிவம் பெற்று ஓடத் தொடங்கினாள்.

பதம் 4.17.15
தாம் அன்வதாவத் தத் வைன்ய: குபிதோ ‘த்யருணேக்ஷண:
ஸரம் தனுஸி ஸந்தாய யத்ர யத்ர பலாயதே

தாம்—பசு வடிவங்கொண்ட பூமி; அன்வதாவத்—அவர் விரட்டினார்; தத்—பின்னர்; வைன்ய:—மன்னர் வேனனின் மைந்தன்; குபித:—மிகுந்த ஆத்திரங்கொண்டு; அதி-அருண—மிகச் சிவந்த; ஈக்ஷண:—–அவரது கண்கள்; ஸரம்—ஓர் அம்பு; தனுஸி—வில்லில்; ஸந்தாய—பொருத்தி; யத்ர யத்ர—எங்கெங்கும்; பலாயதே—அவள் தப்பி ஓடினாலும்.

இதனைக் கண்டு மிகுந்த சினமுற்ற பிருது மன்னரின் கண்கள் காலை இளஞ்சூரியனைப் போன்று சிவந்தன. தனது வில்லில் ஓர் அம்பினைப் பொருத்தி நாணேற்றியவாறு அவர் பசு வடிவங்கொண்ட அன்னை பூமி எங்கெல்லாம் ஓடினாளோ அங்கெல்லாம் பின் தொடர்ந்தார்.

பதம் 4.17.16
ஸா திஸோ விதிஸேன விதிஸோ தேவீ ரோதஸீ சாந்தரம் தயோ:
தாவந்தீ தத்ர தத்ரைனம் ததர்ஸானூத்யதாயுதம்

ஸா—பசு வடிவம் பெற்ற பூமி; திஷ:—நான்கு திசைகளிலும்; விதிஸ:—பல்வேறு திக்குகளிலும்; தேவீ—தேவதை; ரோதஸீ—விண்ணுக்கும் மண்ணுக்கும்; ச—மேலும்; அந்தரம்—இடையே; தயோ:—அவர்கள்; தாவந்தீ—ஓடினாள்; தத்ர தத்ர—இங்குமங்கும்; ஏனம்—மன்னர்; ததர்ஸ—அவள் பார்த்தாள்; அனு—பின்னால்; உத்யதா—எடுத்துக் கொண்டு; ஆயுதம்—அவரது ஆயுதங்கள்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே உள்ள வெளியில் பசு வடிவம் பெற்ற பூமியானது இங்குமங்குமாக ஓடினாள், அவள் எங்கெங்கு ஓடினாலும் அவளை விடாது கையில் வில்லை ஏந்திக் கொண்டு மன்னரும் பின் தொடர்ந்து ஓடினார்.

பதம் 4.17.17
லோகே நாலிந்தத த்ராணம் வைன்யான் ம்ருத்யோர் இவ ப்ரஜா:
த்ரஸ்தா ததா நிவவ்ருதே ஹ்ருதயேன விதூயதா

லோகே—மூன்று லோகங்களிலும்; ந—இல்லை; அவிந்தத—அடைவதற்கு; த்ராணம்—விடுதலை; வைன்யாத்—மன்னன் வேனனின் மைந்தன் கையிலிருந்து; மருத்யோ:—மரணத்திலிருந்து; இவ—போன்று; ப்ரஜா:—மனிதர்கள்; த்ரஸ்தா—மிகுந்த அச்சங்கொண்டு; ததா—அந்த நேரம்; நிவவ்ருதே—திரும்பினாள்; ஹ்தேயேன—அவள் இதயத்தினுள்; விதூயதா—மிகுந்த துன்பமுற்றாள்.

மரணத்தின் கொடிய கரங்களில் இருந்து ஒரு மனிதன் எவ்வாறு தப்ப முடியாதோ அதுபோல் வேனனின் மைந்தன் கரங்களில் இருந்து பசு வடிவம் பெற்ற பூமியும் தப்ப முடியாது. முடிவில் ஒன்றும் செய்வதறியாது அப்பூமியானவள் மனதில் மிகுந்த துன்பமும் அச்சமும் கொண்டு திரும்பி நின்றாள்.

பதம் 4.17.18
உவாச ச மஹா-பாகம் தர்ம-ஜ்ஞாபன்ன-வத்ஸல
த்ராஹி மாம் அபி பூதானாம் பாலனே ‘வஸ்திதோ பவான்

உவாச—அவள் கூறினாள்; ச—மேலும்; மஹா-பாக—சிறந்த அதிர்ஷ்டமிக்க மன்னருக்கு; தர்ம-ஜ்ஞா—ஓ, சமயத்தின் அறநெறிகளை நன்குணர்ந்தோரே; ஆபன்ன-வத்ஸவ—ஓ, சரணடைவோரின் அடைக்கலமே; த்ராஹி—பாதுகாப்பு; மாம்—எனக்கு; அபி—உண்மையில்; பூதானாம்—உயிர்களின்; பாலனே—பாதுகாப்பில்; அவஸ்தி-த:—நிலைபெறுதல்; பவான்—மன்னரே.

மிகச் சிறந்த வளமிக்க பிருது மன்னரை சமய அறநெறிகளை நன்கறிந்தவரென்றும் சரணடைந்தோரின் அடைக்கலம் என்றும் விளித்து அவன் கூறினாள்: என்னைக் காத்தருள்வீர், அனைத்து உயிர்களையும் காப்பவர் நீரே. இப்போது நீர் இப்பூமண்டலத்தின் மன்னராகவும் விளங்குகின்றீர்.

பதம் 4.17.19
ஸத்வம் ஜிகாம்ஸஸே கஸ்மாத் தீனாம் அக்ருத-கில்பிஷாம்
ஆஹனிஷ்யத் கதம் யோஷாம் தர்ம-ஜ்கு இதி யோ மத:

ஸ:—அச்சிறப்புமிக்கவர்; த்வம்—நீர்; ஜிகாம்-ஸஸே—கொல்ல விரும்புவது; கஸ்மாத்—ஏன்; தீனாம்—ஏழை; அக்ருத—ஒன்றும் செய்யாத; கில்பிஷாம்—பாவச் செயல்கள்; அஹனிஷ்யத்—கொல்வது; கதம்—எவ்வாறு; யோஷாம்—ஒரு பெண்ணை; தர்ம-ஜ்ஞ—சமய அறநெறிகளை அறிந்தவர்; இதி—இவ்வாறு; ய:—யார்; மத:—கருதப்படுகிறவர்.

பசு வடிவம் பெற்ற பூமியானவள் மன்னரைக் கெஞ்சினாள் நானோ ஓர் ஏழை, எந்த விதமானப் பாவமும் செய்யாதவள். நீர் ஏன் என்னைக் கொல்ல விரும்புகிறீர்? சமய அறநெறிகளை நன்கறிந்தவரான நீர் ஏன் என் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டும், மேலும் ஒரு பெண்ணைக் கொல்வதற்கு ஏன் நீர் இத்துணை ஆர்வம் கொள்ள வேண்டும்?

பதம் 4.17.20
ப்ரஹரந்தி ந வை ஸ்த்ரீஷீ க்ருதாக: ஸ்வ அபி ஜந்தவ:
கிம் உத த்வத்-விதா ராஜன் கருணா தீன-வத்ஸலா:

ப்ரஹாந்தி—கொல்வது; ந—இல்லை; வை—உறுதியாக; ஸ்த்ரீஷீ—பெண்கள்; க்ருத-ஆக; ஸீ—பாவச் செயல்கள் செய்திருந்தாலும்; அபி—இருந்தாலும்; ஜந்தவ:—மனித இனம்; கிம் உத—என்ன சொல்ல இருக்கிறது; த்வத்-விதா:—உம்போன்ற சிறந்தவர்கள்; ராஜன்—ஓ, மன்னரே; கருணா:—கருணையும்; தீன-வத்ஸலா:—ஏழைகளிடத்து அன்பு மிக்கவர்.

ஒரு பெண் தவறே செய்திருந்தாலுங் கூட அவள் மீது கை வைப்பதற்கு எவரும் துணியார். இவ்வாறிருக்க கருணை மயமானவரான உம்மைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது. நீரே ஏழைகளிடத்து பாசம் வைத்து அவர்களைக் காப்பவராக இருக்கின்றீர்.

பதம் 4.17.21
மாம் விபாட்யாஜராம் நாவம் யத்ர விஸ்வம் ப்ரதிஷ்டிதம்
ஆத்மானம் ச ப்ரஜாஸ் சேமா: கதம் அம்பஸி தாஸ்யஸி

மாம்—என்னை; விபாட்ய—சுக்கு நூறாக உடைத்தால்; அஜராம்—மிக வலிமையான; நாவம்—படகு; யத்ர—எங்கே; விஸ்வம்—உலகிலுள்ள அனைத்தும்; ப்ரதிஷ்டிதம்—நிற்பது; ஆத்மானம்—நீரும்; ச—மேலும்; ப்ரஜா:—உமது மக்களும்; இமா:—இவர்களெல்லாம்; கதம்—எவ்வாறு; அம்பஸி—தண்ணீரினுள்; தாஸ்யஸி—நீர் தாங்குவது.

பசு வடிவம் பெற்ற பூமி தொடர்ந்து கூறினாள்: நான் ஒரு வலிமை மிக்க படகு போன்றவள், பூமியிலுள்ள அனைத்தும் என் மீதே நிற்கின்றன. நீ என்னைச் சுக்கு நூறாக உடைத்தாயென்றால் எவ்வாறு உம்மையும், உமது குடிமக்களையும் மூழ்குவதிலிருந்து காத்தல் கூடும்?

பதம் 4.17.22
ப்ருதுர் உவாச
வஸீதேத்வாம் வதிஷ்யாமி மச்-சாஸன-பரான்-முகீம்
பாகம் பர்ஹிஷி யா வ்ருங்க்தே ந தனோதி ச நோ வஸீ

ப்ருது: உவாச—பிருது மன்னர் பதிலுரைத்தார்; வஸீ-தே—எனதன்பான பூமண்டலமே; த்வாம்—நீ; வதிஷ்யாமி—நான் கொல்வேன்; மத்—எனது; ஸாஸன—தீர்ப்புக்கள்; பராக்-முகீம்—கீழ்ப்படியாமைக்கு; பாகம்—அவிர்பாகம்; ப்ரஹிஷி—வேள்வியின்; யா—யார்; வ்ருங்க்தே—ஏற்றுக்கொள்ளல்; ந—இல்லை; தனோதி—வெளியிடல்; ச—மேலும்; ந:—எங்களுக்கு; வஸீ—உற்பத்தி.

பூமிக் கிரஹத்திற்கு பிருது மன்னர் பதில் கூறினார்: எனதன்பான பூமியே! நீ எனது தீர்ப்புக்களையும் ஆணைகளையும் மீறியிருக்கிறாய். ஒரு தேவதையின் வடிவில் வேள்விகளில் நாங்கள் அளிக்கும் அவிர்பாகத்தினை நீ ஏற்றுக் கொண்டும் அதற்குப் பலனாக போதுமான உணவு தானியங்களை நீ விளைவிப்பதில்லை. எனவே, உன்னை நான் கொல்லுதல் வேண்டும்.

பதம் 4.17.23
யவஸம் ஜக்தி அனுதினம் நைவ தோக்தி ஒளதஸம் பய:
தஸ்யாம் ஏவம் ஹி துஷ்டாயாம் தண்டோ நாத்ர ந ஸஸ்யதே

யவஸம்—பசும்புல்; ஜக்தி—நீ தின்றும்; அனுதினம்—தினசரி; ந—இல்லை; ஏவ—உறுதியாக; தோக்தி—நீ விளைவிப்பது; ஔதஸம்—பால்மடியில்; பய:—பால்; தஸ்யாம்—பசுவானது; ஏவம்—இவ்வாறு; ஹி—உறுதியாக; துஷ்டாயாம்—குற்றவாளி; தண்ட:—தண்டனை; ந—இல்லை; அத்ர—இங்கே; ந—இல்லை; ஸஸ்யதே—உசிதமானது.

நீ தினமும் பசும்புல்லை வேண்டியமட்டும் தின்றும், நாங்கள் பயன்படுத்துகின்ற பாலை நீ உன் மடியில் சுரப்பதில்லை. இவ்வாறு திட்டமிட்டே நீ குற்றம் செய்திருப்பதினால் நீ எடுத்திருக்கும் பசு வடிவமானது நிச்சயம் உன்னைக் காப்பாற்றும் என்று கூற இயலாது.

பதம் 4.17.24
த்வம் கல்வ ஓஷதி-பீஜானி ப்ராக் ஸ்ருஷ்டானி ஸ்வயம்புவா
ந முஞ்சஸி ஆத்ம-ருத்தானி மாம் அவஜ்ஞாய மந்த-தீ:

த்வம்—நீ; கலு—உறுதியாக; ஓஷதி—மூலிகை; தாவரங்கள்; மற்றும் தானியங்கள்; பீஜனி—விதைகள்; ப்ராக்—முன்னர்; ஸ்ருஷ்டானி—படைக்கப்பட்ட; ஸ்வயம்புவா—பிரம்மதேவனால்; ந—கூடாது; முஞ்சஸி—வெளியிட; ஆத்ம-ருத்தானி—எனக்குள் மறைத்துவைத்திருக்கிறாய்; மாம்—எனது; அவஜ்ஞாய—கீழ்ப்படியாமை; மந்த-தீ:—புத்தியற்ற.

பிரம்ம தேவனால் படைக்கப்பட்ட மூலிகைகள் மற்றும் பயிர்களுக்கான விதைகளை எனது ஆணைப்படி நீ வெளிக் கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக நீ அவற்றை உனக்குள் மறைத்து வைத்துக் கொண்டாய்.

பதம் 4.17.25
அமூஷாம் க்ஷ த்-பரீதானாம் ஆர்தானாம் பரிதேவிதம்
ஸமயிஷ்யாமி மத்-பானைணர் பின்னாயாஸ் தவ மேதஸா

அமஷாம்—அவர்கள் அனைவரின்; க்ஷீத்-பரீதானாம்—பசியில்வாடுவதை; ஆர்தானாம்—துன்புறுவோரின்; பரிதேவிதம்—அழுது அரற்றுதல்; ஸமயிஷ்யாமி—நான் அமைதிப்படுத்துவேன்; மத்-பாணை:—எனது அம்புகளினால்; பின்னாயா:—துண்டு துண்டாக்கி; தவ—உனது; மேதஸா—உடற்சதையினால்.

உணவு தானியங்கள் இன்றி வருந்தும் எனது குடிமக்களின் பசியினை, எனது அம்புகளினால் உனது உடலைக் கிழித்துக் கிடைக்கும் சதைத்துண்டுகளின் மூலம் திருப்திப்படுத்துவேன். அழுது கொண்டிருக்கும் எமது குடிமக்களின் துயர்தனைக்களைவேன்.

பதம் 4.17.26
புமான் யோஷித் உத் க்லீப ஆத்ம-ஸம்பாவனோ ‘தம:
பூதேஷு நிரனுக்ரோஸோ ந்ருபாணாம் தத்-வதோ ‘வத:

புமான்—ஒரு ஆண்; யோஷித்—ஒரு பெண்; உத—மேலும்; க்லீப:—ஓர் அலி; ஆத்ம-ஸம்பா-வன:—தன்னைப் பேணுவதில் மட்டுமே விருப்பமிருந்தால்; அதம:—இழிபிறவியாவான்; பூதேஷீ—பிற உயிர்களுக்கு; நிரனுக்ரோஷ:—கருணையின்றி; ந்ருபாணாம்—அரசர்களுக்கு; தத்—அவனை; வந்த:—கொல்வது; அவத:—கொல்லாதது.

ஒரு கொடியவன் அவன் ஆணாயினும், பெண்ணாயினும் அல்லது அலியாயினும் பிற உயிர்களிடத்துக் கருணையின்றி தன்னை மட்டுமே காத்துக் கொள்ளும் சுயநலமியாக இருந்தால் அவன் அரசனால் கொல்லப்படலாம். அதனைக் கொலை என்று கருதலாகாது.

பதம் 4.17.27
த்வாம் ஸ்தப்தாம் துர்மதாம் நீத்வா மாயா-காம் திலஸ: ஸரை:
ஆத்ம-யோக-பலேனேமா தாரயிஷ்யாமி அஹம் ப்ரஜா:

த்வாம்—நீ; ஸ்தப்தாம்—மிகுந்த ஆணவமுற்று; துர்மதாம்—மதி மயங்கி; நீத்வா—இது போன்ற நிலையினை உண்டாக்கியிருக்கிறாய்; மாயா-காம்—மாயப்பசு; திலஸ:—தானியங்கள் அளவிற்குத் துண்டு துண்டாக்குவேன்; ஸரை:—எனது அம்புகளினால்; ஆத்ம—தனிப்பட்ட; யோக-பனேன—யோக மாயையினால்; இமா:—இவையெல்லாம்; தாரயிஷ்-யாமி—தூக்கி நிறுத்துவேன்; அஹம்—நான்; ப்ரஜா:—எல்லாக் குடிமக்களையும்; அல்லது அனைத்து உயிர்களையும்.

நீ வீண் பெருமையினால் ஆணவமுற்று அதனால் மதி மயங்கி இருக்கின்றாய். உனது மாயா சக்தியினால் நீ இப்போது பசு வடிவம் எடுத்திருக்கிறாய். ஆயினும் உன்னை நான் கடுகளவிற்கு துண்டு துண்டாக எனது அம்புகளினால் துண்டித்து இவ்வுலக மக்கள் அனைவரையும் எனது யோக பலத்தால் தூக்கி நிறுத்துவேன்.

பதம் 4.17.28
ஏவம் மன்யு மயீம் மூர்திம் க்ருதாந்தம் இவ பிப்ரதம்
ப்ரணதா ப்ராஞ்ஜலி: ப்ராஹ மஹீ ஸஞ்ஜாத-வேபது:

ஏவம்—இவ்வாறு; மன்யு-மயீம்—மிகுந்த ஆத்திரத்துடன்; ஆர்திம்—வடிவம்; க்ருத-அந்தம்—மரணத்தின் உருவெடுத்து; யமராஜன்; இவ—போன்று; பிப்ரதம்—வைத்துக் கொண்டு; ப்ரணதா—சரணடைந்து; ப்ராஞ்ஜலி:—கூப்பிய கரங்களுடன்; ப்ராஹ—கூறினாள்; மஹீ—பூமி தேவி; ஸஞ்ஜாத—எழுதல்; வேபது:—உடல் நடுங்கிய வண்ணம்.

அந்நேரம் பிருது மன்னர் யமராஜனைப் போல் தோன்றினார். அவரது உடல் முழுவதும் ஆத்திரமே நிரம்பி அவர் சினத்தின் உருவாக மாறினார். அவள் அவரைச் சரணடைந்து கூப்பிய கரங்களுடன் பின்வருமாறு கூறத் தொடங்கினாள்.

பதம் 4.17.29
தரோவாச
நம:பரஸ்மை புருஷாய மாயயா
வின்யஸ்த-நானா-தனவே குணாத்மனே
நம: ஸ்வரூபானுபவேன நிர்துத-
த்ரவ்ய-கிரீயா-காரக்-விப்ரமோர்மயே

தரா—பூமியானவள்; உவாச—கூறினாள்; நம:—எனது வந்தனங்கள் உரியதாகட்டும்; பரஸ்மை—உன்னதமானவருக்கு; புருஷாய—புருஷருக்கு; மாயயா—பௌதீக சக்தியினால்; வின்யஸ்த—விரிதல்; நானா—பல்வேறு; தனவே—அவரது வடிவங்கள்; குண-ஆத்மனே—ஜட இயற்கையின் முக்குணங்களின் ஆதாரமாக விளங்குபவருக்கு; நம:—எனது வணக்கங்கள்; ஸ்வ-ரூப—உண்மை வடிவின்; அனுபவேன—புரிந்து கொண்டதினால்; நிர்துத—பாதிக்கபடாததினால்; த்ரவ்ய—திரவியம்; விஷயம்; க்ரியா—செயல்; காரக—செய்பவர்; விப்ரம—குழப்பமான நிலை; ஊர்மயே—ஜடத்தோற்றத்தின் அலைகள்.

பூமி பேச ஆரம்பித்தாள்: போற்றுதற்கரிய தேவனே, ஓ, முழுமுதற் கடவுளே, நீர் உமது நிலையில் மிகவும் உன்னதமானவராக விளங்குகின்றீர். மேலும் நீர் இயற்கையின் முக்குணங்களின் எதிரெதிர் செயலின் மூலமும் உமது ஆற்றலினால் நீர் உம்மைப் பல்வேறு வடிவங்களாக விரித்துக் கொள்வதோடு பல்வேறு உயிரினங்களாகவும் உருவெடுக்கின்றீர். மற்ற தேவர்களைப் போல் அல்லாது நீர் உமது மெய்யுணர்வு நிலையில் எப்போதும் நிலைத்து இருப்பதோடு, பல்வேறு பௌதீக எதிரெதிர் செயலுக்கு ஆட்பட்ட உலகப் படைப்பினாலும் பாதிக்கப்படுவதில்லை. அதனால் உலகச் செயல்களினால் நீர் குழப்பமடைவதில்லை.

பதம் 4.17.30
யேனாஹம் ஆத்மாயதனம் விநிர்மிதா
தாத்ரா யதோ ‘யம் குண-ஸர்க-ஸங்க்ரஹ:
ஸ ஏவ மாம் ஹந்தும் உதாயுத: ஸ்வராத்
உபஸ்திதோ ‘ன்யம் ஸரணம் கம் ஆஸ்ரயே

யேன—அவரால்; அஹம்—நான்; ஆத்ம-ஆயுத-னம்—உயிர்கள் தங்குமிடம்; விநிர்மிதா—படைக்கப்பட்டது; தாத்ரா—பரம புருஷ பகவானால்; யத:—அவர் பொருட்டு; அயம்—இந்த; குண-ஸர்க-ஸங்குரஹ—பல்வேறு பொருட்களின் கலப்பினால்; ஸ:—அவர்; ஏவ—உறுதியாக; மாம்—எனது; ஹந்தும்—கொல்வதற்கு; உதாயுத:—ஆயுதங்களுடன் தாயாராக; ஸ்வராத்—முற்றிலும் சுதந்திரமான; உபஸ்தித:—இப்போது என் முன்; அன்யம்—அடுத்த; ஸரணம்—அடைக்கலம்; கம்—அவருக்கு; ஆஸ்ரயே—யாரிடம் செல்வது.

அன்னை பூமி மேலும் கூறினாள் போற்றுதற்குரிய பகவானே! உலகின் படைப்புக்களை நெறிப்படுத்துபவர் நீரே. இப்பிரபஞ்சத் தோற்றத்தினையும் உயிர்களின் முக்குணங்களையும் நீரே படைத்தருளினீர் ஆகையினால் உயிர்கள் அனைத்தும் உறைவதற்கு உரிய இடமாக இருக்கும் பூமியாகிய என்னையும் நீரே படைத்தீர், நீர் எப்போதும் சுதந்திரமானவர். எந்தன் பகவானே! இப்போது என் முன் கையில் ஆயுதத்துடன் என்னைக் கொல்வதற்காக நிற்கின்றீர்! உம்மைவிட்டால் யார் எனக்கு அடைக்கலம் தருவார், யாரிடம் நான் சரண் புகுவது என்பதை எனக்கு அருள் கூர்ந்து உரைப்பீராக.

பதம் 4.17.31
ய ஏதத் ஆதாவ் அஷ்ருஜச் சராசரம்
ஸ்வ-மாயயாத்மாஸ்ரயயாவிதர்க்யயா
தயைவ ஸோ ‘யம் கில கோப்தும் உத்யத:
கதம் நு மாம் தர்ம-பரோ ஜிகாம்ஸதி

ய:—யாரொருவர்; ஏதத்—இவை; ஆதௌ—படைப்பின் ஆரம்பத்தில்; அஸ்ருஜத்—படைத்தார்; சர-அசரம்—அசையும்; அசையா உயிர்கள்; ஸ்வ-மாயயா—அவரது சுய சக்தியினால்; ஆத்ம-ஆஸ்ரயயா—அவரது சொந்த பாதுகாப்பின் கீழ் அடைக்கலம்; அவிதர்க்யயா—கற்பனைக் கொட்டாதது: தயா—அதே மாயையினால்; ஏவ—உறுதியான; ஸ:—அவர்; அயம்—இம்மன்னர்; கில—உறுதியாக; கோப்தும்-உத்யத:—பாதுகாப்பளிப்பதற்கு தயாராகுதல்; கதம்—எவ்வாறு; நு—பின்னர்; மாம்—என்னை; தர்ம பர:—சமய அறநெறிகளைக் கடுமையாகப் பின்பற்றுபவர்; ஜிகாம்ஸதி—கொல்ல விரும்புவது.

படைப்பின் ஆரம்பத்தில் உமது கற்பனைக் கெட்டாத சக்தியினால் நீர் அனைத்து அசையும், அசையாத உயிர்களைப் படைத்தீர். அதே ஆற்றலினாலேயே இப்பொழுது உயிர்களைக் காக்கவும் செய்கின்றீர். உண்மையில் சமய அறநெறிகளைக் காப்பவர் நீரே ஆவீர். அதனால் ஒரு பசு வடிவிலிருக்கும் என்னைக் கொல்வதற்கு ஏன் இத்துணை ஆர்வமுடையவராய் இருக்கின்றீர்?

பதம் 4.17.32
நூனம் பதேஸஸ்ய ஸமீ ஹிதம் ஜனனஸ்
தன்-மாயயா துர்ஜயயாக்ருதாத்மபி:
ந லக்ஷ்யதே யஸ் த்வ அகரோத் அகாரயத்
யோ’னேக ஏக: பரதஸ் ச ஈஸ்வர:

நுனம்—நிச்சயமாக; பத—உறுதியாக; ஈஸஸ்ய—முழுமுதற் கடவுளின்; ஸமீஹிதம்—செயல்கள், திட்டம்; ஜனன:—மக்களினால்; தத-மாயயா—அவரது சக்தியினால்; துர்ஜயயா—அது வெற்றி கொள்ள முடியாதது; அக்ருத-ஆத்மபி:—போதுமான அனுபவம் அற்றோர்; ந—இல்லை; லக்ஷ்யதே—காணப்படுகின்றனர்; ய:—யார்; து—பின்னர்; அகரோத்—படைத்தனர்; அகாரயத்—படைப்பிற்குக் காரணமானார்; ய:—யார்; அனேக:—அனேகம்; ஏக:—ஒன்று; பரத—அவரது கற்பனைக்கெட்டாத சக்திகளினால்; ச—மேலும்; ஈஸ்வர:—நெறிப்படுத்துபவர்.

போற்றுவதற்குரிய பகவானே, நீர் ஒருவராயிருந்த போதிலும் உமது கற்பனைக் கெட்டாத சக்திகளினால் பல்வேறு வடிவங்களாக உம்மை விரித்துக் கொள்கின்றீர், பிரம்ம தேவன் என்னும் முகவரின் மூலம் நீர் இப்பிரபஞ்சத்தினைப் படைத்தீர். ஆகையினால் நேரடியாக நீரே முழுமுதற் கடவுளாக விளங்குகின்றீர். போதுமான அனுபவமற்றவர்களினால் உமது மெய்யுணர்வுச் செயல்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் உமது மாய சக்தியினால் மூடப்பட்டிருக்கின்றனர்.

பதம் 4.17.33
ஸர்காதி யோ ‘ஷ்யானுருணத்தி ஸக்திபிர்
த்ரவ்ய-க்ரியா காரக-சேதனாத்மபி:
தஸ்மை ஸமுன்னத்த-நிருத்த-ஸக்தயே
நம: பரஸ்மை புருஷாய வேதஸே

ஸர்க-ஆதி—படைத்தல்; காத்தல், அழித்தல்; ய:—யார் ஒருவரே; அஸ்ய—இந்த உலகின்; அனுருணத்தி—காரணங்கள்; த்ரவ்ய—பருப்பொருட்கள்; க்ரியா—புலன்கள்; காரக—கட்டுப்படுத்தும் தேவர்கள்; சேதனா—புத்தி; ஆத்மபி:——தவறான ஆணவங்கொண்டு; தஸ்மை—அவருக்கு; ஸமுன்னத்த—வெளிப்படுதல்; நிருத்த—சக்தி; ஸக்தயே—இச்சக்திகளை உடையவர்; நம:—வணக்கங்கள்; பரஸ்மை—உன்னதமானவருக்கு; புருஷாய—முழுமுதற் கடவுள்; வேதஸே—காரணங்கள் எல்லாவற்றிக்கும் மூல காரணம்.

எனது அன்பிற்குரிய பகவானே, உமது சுயசக்திகளினால் நீரே பொருட்கள் அனைத்திற்கும் மூலகாரணர் மட்டுமல்லாது செயற்கருவிகள் (புலன்கள்) புலன்களைத் தொழிற்படுத்துபவர்கள், (நெறிப்படுத்தும் தேவர்கள்) புத்தி மற்றும் ஆணவம் போன்ற அனைத்திற்கும் கூட அவரே மூலகாரணர் ஆவார். உமது சக்தியினாலேயே நீர் பிரபஞ்சம் முழுவதையும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் போன்ற முத்தொழில்களையும் செய்கின்றீர். உமது சக்தியினால் மட்டுமே எல்லாம் தோன்றவும் சில நேரங்களில் மறையும் செய்கின்றன. ஆதலினால் முழுமுதற் கடவுளான நீரே அனைத்துக் காரணங்களுக்கும் மூல காரணமாவீர் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை உமக்குச் செலுத்துகிறேன்.

பதம் 4.17.34
ஸ வை பவான் ஆத்ம-விநிர்மிதம் ஜகத்
பூதேந்த்ரியாந்த:-கரணாத்மகம் விபோ
ஸம்ஸ்தாபயிஷ்யன்ன அஜ மாம் ரஸாதலாத்
அப்யுஜ்ஜஹாராம்பஸ ஆதி-ஸீகர:

ஸ:—அவர்; வை—உறுதியாக; பவான்—உமது; ஆத்ம—உம்மால்; விநிர்மிதம்—உண்டாக்கப்பட்டது; ஜகத்—இவ்வுலகம்; பூத—பௌதீக பூதங்கள், பௌதீகப் பொருட்கள்; இந்த்ரிய—புலன்கள்; அந்த:-கரண—புத்தி, மனம்; ஆத்மகம்—உனதாயிருக்கிறது; விபோ—ஒ, பகவான்; ஸம்ஸ்தாபயிஷ்யன்—காப்பது; அஜ—ஓ, பிறப்பில்லாதவரே; மாம்—என்னை; ரஸாதவாத்—பாதாள லோகத்திலிருந்து; அப்யுஜ்ஜஹார—எடுத்தீர்; அம்பஸ:—நீரிலிருந்து; ஆதி—ஆதியான; ஸீகர:—வராகம்.

போற்றுதற்குரிய பகவானே! நீர் எப்போதும் பிறப்பற்றவர் ஆவிர். ஒருமுறை நீர் வராக அவதாரம் எடுத்து கடலின் அடியில் பாதாள லோகத்திலிருந்து என்னைக் காப்பாற்றி வெளியே கொணர்ந்தீர், உமது சுயச்சக்தியினால் நீர் பஞ்ச பூதங்களையும் புலன்களையும், மனதையும் உலகப் பாதுகாப்பிற்காகப் படைத்தீர்.

பதம் 4.17.35
அபாம் உபஸ்தே மயி நாலி அவஸ்திதா:
ப்ரஜா பவான் அத்ய ரிரக்ஷிஷீ: கில
ஸ வீர-மூர்தி: ஸமபூத் தரா-தரோ
யோ மாம் பயஸி உக்ர-ஸரோ ஜிகாம்ஸஸி

அபாம்—நீரின்; உபஸ்தே—நிலப் பகுதியில்; மயி—என்னை; நாலி—படகில்; அவஸ்திதா:—நின்று கொண்டு; ப்ரஜாக்—உயிர்கள்; பவான்—உமது; அத்ய—இப்பொழுது; ரிரக்ஷிஷீ:—காப்பதற்கான விருப்பம்; கில—உண்மையில்; ஸ:—அவர்; வீர-முர்தி:—ஒரு சிறந்த வீரரின் வடிவில்; ஸமபூத்—ஆனார்; தரா-தர:—பூமண்டலத்தினைக் காப்பவர்; ய:—யாரொருவர்; மாம்—என்னை; பயஸி—பாலின் பொருட்டு; உக்ர-ஸர:—கூர்மையான அம்புகளினால்; ஜிகாம்ஸஸி—நீர் கொல்வதற்கு விரும்புகின்றீர்.

வணக்கத்திற்குரிய இறைவனே! இவ்வாறு ஒருமுறை நீர் என்னைக் கடலின் அடியிலிருந்து காத்தமையால் உமது பெயர் பூமியினைத் தாங்கியிருப்பவர் என்று பொருள்படும் தராதரன் என்று புகழப்பட்டது. இப்போது ஒரு சிறந்த வீரரின் வடிவத்தில் கையில் கூர் அம்புகளுடன் என்னைக் கொல்வதற்காக நிற்கீன்றீர். நானோ எல்லாவற்றையும் சுமந்து கொண்டு நீரில் மிதக்கும் படகு போன்று இருக்கிறேன்.

பதம் 4.17.36
நூனம் ஜனைர் ஈஹிதம் ஈஸ்வராணாம்
அஸ்மத்-விதைஸ் தத்-குண-ஸர்க-மாயயா
ந ஜ்ஞாயதே மோஹித-சித்த-வர்த்மபிஸ்
தேப்யோ நமோ வீர-யஸஸ்-கரேப்ய:

நூனம்—நிச்சயமாக; ஜனை:—பொது மக்களினால்; ஈஹிதம்—செயல்கள்; ஈஸ்வராணாம்—நெறியாளர்களின்; அஸ்மத்-விதை:—என்னைப் போல்; தத்—முழுமுதற் கடவுளின்; குண—இயற்கைக் குணங்களின்; ஸர்க—அவையே படைப்பைக் கொண்டு வருகிறது; மாயயா—உமது சக்தியினால்; ந—இல்லை; ஞாயதே—புரிந்து கொள்ளப்படுகின்றன; மோஹித—குழப்பமடைதல்; சித்த—சித்தத்தில்; வர்த்மபி:—வழி; தேப்ய:—அவர்களுக்கு; நம:—வந்தனங்கள்; வீர-யஸ:-கரேப்ய:—சிறந்த வீரர்களுக்குப் புகழ் தருபவர்.

போற்றுதற்கரிய பகவானே, ஜட இயற்கையின் முக்குணங்களினாலான உமது ஆற்றல் மிக்க படைப்பில் நானும் ஒன்று. உமது செயல்களினால் நான் இப்போது மிகவும் குழப்பமுற்றிருக்கிறேன். உமது பக்தர்களின் செயல்களையே புரிந்து கொள்ள முடியாத போது உமது திருவிளையாடல்களைப் பற்றி என்ன சொல்ல முடியும். இவ்வாறு எல்லாமே எங்களுக்கு முரணாகவும் வியப்பாகவும் காட்சியளிக்கின்றன.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “பூமியினிடத்துப் பிருது மன்னர் கொண்ட சினம்” எனும் தலைப்பை கொண்ட பதினேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare