அத்தியாயம் – 15
பிருது மகாராஜனின் தோற்றமும், பட்டாபிஷேகமும்
பதம் 4.15.1 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: அன்பார்ந்த விதுரனே, அதன் பிறகு அம்மாமுனிவர்கள் மீண்டும் மறைந்த மன்னன் வேனனின் உடலிலிருந்த இருகரங்களையும் கடைந்தனர். அதன் விளைவாக அக்கரங்களிலிருந்து ஆணும் பெண்ணுமான ஓர் இணை தோன்றினர்.

பதம் 4.15.2 : அம்மாமுனிவர்கள் வேத ஞானத்தில் மிகுந்த தேர்ச்சியுடையோராவர். அவர்கள், ஆணும் பெண்ணுமான ஒரு தம்பதியினர் வேனனின் கரங்களிலிருந்து தோன்றியது கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் அத்தம்பதியினர் முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவின் அம்சத்தின் ஒரு பகுதியினர் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

பதம் 4.15.3 : அம்மாமுனிவர்கள் கூறினர்: அந்த ஆண்மகன், இவ்வுலகைக் காக்கும் பகவான் விஷ்ணுவின் இயல்பினைப் பெற்றவர். மேலும் அப்பெண் அதிர்ஷ்ட தேவதையான மகாலக்ஷ்மியின் இயல்புகள் பொருந்தியவள். அவள் பகவானை விட்டு என்றும் பிரியாதவள் ஆவாள்.

பதம் 4.15.4 : அவ்விருவரில் அந்த ஆண்மகன் தனது புகழினை இவ்வுலகம் முழுவதும் பரப்பப் போகிறவராவார். அவர் பெயர் பிருது என்பதாகும். உண்மையில் அவர் அரசர்களில் முதன்மையானவராக விளங்கப் போகிறார்.

பதம் 4.15.5 : முத்துப்போல் ஒளிமிக்கப் பற்களும், எழிலும், நற்குணங்களும் கொண்ட அப்பெண் உண்மையில் தான் அணிந்திருந்த அணிகலன்களுக்கு அழகு சேர்த்தாள். அவளது பெயர் அர்சி என்பதாக இருக்கும். வருங்காலத்தில் அவள் பிருது மன்னரைக் கணவனாக அடையப்போகிறாள்.

பதம் 4.15.6 : பிருது மன்னரின் வடிவில் இவ்வுலக மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே முழுமுதற் கடவுள் தமது சக்தியின் ஒரு அம்சமாக அவதரித்திருக்கின்றார். பகவானை விட்டு இணைபிரியாத அவர் துணைவி மகாலக்ஷ்மி பிருது மன்னரை மணம் செய்யப்போகும் அர்சியாகப் பிறந்துள்ளாள்.

பதம் 4.15.7 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, அப்போது அனைத்து அந்தணர்களும் மன்னர் பிருதுவின் சிறப்புக்களையும், பெருமைகளையும் புகழ்ந்து பாராட்டினர். கந்தர்வலோகத்தைச் சேர்ந்தவர்கள் அவர் புகழைப் பாடலாக இசைத்தனர். சித்தலோகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்மீது மலர் மாரி பெய்தனர். தேவலோகத்தைச் சேர்ந்த பேரழகு மங்கையர் தம்மை மறந்து நடனமாடினர்.

பதம் 4.15.8 : சங்குகளும், கொம்புகளும், துந்துபிகளும் வானில் முழங்கின. தேவலோகத்திலிருந்தும் அதுபோல் பிற உலகங்களில் இருந்தும் மாமுனிவர்களும், மூதாதைகளும், மகான்களும் மண்ணுலகிற்கு வந்தனர்.

பதங்கள் 4.15.9 – 4.15.10 : ஜகத்குருவான பிரம்மதேவன், தேவலோகங்களின் தலைவர்களும், தேவர்களும் சூழ்ந்து வர அங்கே வருகை தந்தார். பிருது மன்னரின் வலது உள்ளங்கையிலிருந்து பகவான் விஷ்ணுவின் ரேகைகளும், அவர் பாதங்களில் தெரிந்த தாமரை மலர் சின்னங்களையும் கண்டு பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் அம்சமாவார் என்பதை பிரம்மதேவன் புரிந்து கொண்டார். ஒருவரது உள்ளங்கையில் சங்கு, சக்கர இரேகைகளும் இது போன்ற பிற மங்கலச் சின்னங்களும் இருக்குமானால் அவர் பரமபுருஷ பகவானின் அம்சம் அல்லது அவதாரம் என்று கருதப்படல் வேண்டும்.

பதம் 4.15.11 : வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சடங்குகளினிடத்துப் பற்றுடைய கற்றறிந்த அந்தணர்கள் மன்னரின் முடிசூட்டு விழாவிற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். அனைத்துத் திசைகளிலிருந்தும் மக்கள் அவ்விழாவிற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் சேகரித்து வந்தனர். இவ்வாறு அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டன.

பதம் 4.15.12 : எல்லா நதிகளும், கடல்களும், மலைகளும், சிகரங்களும், நாகங்களும், பசுக்களும், பறவைகளும், விலங்குகளும், தேவலோகங்களும், பூலோகமும் மற்றும் அனைத்து உயிர்களும் மன்னனுக்குப் பரிசாகத் தத்தமக்குரிய ஆற்றலுக்கு ஏற்ற பொருட்களைத் திரட்டி வந்தன.

பதம் 4.15.13 : இவ்வாறு மதிப்பு மிக்க ஆடை, அணிகலன்களினால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பிருது மன்னர் முடிசூட்டப்பட்டு அரியணை ஏறினார். மன்னரைப் போன்றே நன்கு ஆடை, அணிகலன்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர் மனைவி அர்சியும், மன்னரும் பார்ப்பவர் கண்களுக்கு நெருப்பைப்போல் ஒளி மிகுந்தவர்களாக விளங்கினர்.

பதம் 4.15.14 : மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, தேவர்களின் தன அதிகாரியான குபேரன் பொன்னால் செய்யப்பட்ட சிம்மாசனம் ஒன்றினை பிருது மன்னருக்குப் பரிசாக அளித்தார். அதுபோல் வருண தேவன் சந்திரனைப் போன்று ஒளிமிக்கதும், எப்போதும் நீர்த்துளிகளைக் குளிர்ச்சியாகச் சிந்திக் கொண்டிருக்கும் வெண்கொற்றக் குடையினைப் பரிசாக அளித்தார்.

பதம் 4.15.15 : காற்றுத் தேவனான வாயு பகவான் பிருது மன்னருக்கு கவரிமான் முடியினாலான இரு சாமரங்களைப் பரிசளித்தார்; அறக்கடவுள் மன்னரின் புகழைப் பரப்பும் மாலையினைப் பரிசளித்தார்; தேவர்களின் தலைவனான தேவேந்திரன் மதிப்பு மிக்க மணிமுடியைப் பரிசாகக் கொடுத்தார்; கால தேவனான யமராஜன் இவ்வுலகை ஆள்வதற்குரிய செங்கோல் ஒன்றினைப் பிருது மன்னருக்குப் பரிசாக அளித்தார்.

பதம் 4.15.16 : பிரம்மதேவன் பிருது மன்னருக்கு ஆன்மீக ஞானத்தினாலான பாதுகாப்புக் கவசம் ஒன்றைப் பரிசளித்தார். பிரம்மதேவனின் மனைவியான பாரதி (சரஸ்வதி) ஓர் உன்னதமான கழுத்து அட்டி கையைப் பரிசளித்தார். பகவான் விஷ்ணு சுதர்சனச் சக்கரத்தினையும் அவர் துணைவியான இலக்குமி தேவி அழிவற்ற செல்வங்களையும் பரிசாக ஈந்தனர்.

பதம் 4.15.17 : சிவபெருமான் பத்து சந்திரன்களினால் அலங்கரிக்கப்பட்ட உறையுடன் கூடிய வாள் ஒன்றினையும் அவர் தேவி துர்கை நூறு சந்திரன்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேடயம் ஒன்றினையும் பரிசளித்தனர். சோமன் எனப்படும் சந்திரதேவன் அமிர்தத்தினாலான குதிரைகளைப் பரிசளிக்க, தேவதச்சன் விஸ்வகர்மா அழகிய இரதம் ஒன்றினைப் பரிசளித்தார்.

பதம் 4.15.18 : பசுக்கள், ஆடுகளின் கொம்புகளினாலான வில் ஒன்றை அக்கினி தேவனும், சூரிய தேவன் தன் கதிர்களைப் போன்று ஒளியுடைய அம்பினையும் பரிசளித்தனர். பூலோகத்தின் ஆற்றல் மிகுந்த தேவதை மாயா சக்தியுடைய இரண்டு பாதக் குறடுகளைப் பரிசளித்தாள். வான மண்டலத்தைச் சேர்ந்த பிற தேவர்கள் மலர்களைப் பரிசுப் பொருட்களாகக் கொணர்ந்தனர்.

பதம் 4.15.19 : வானில் எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கும் தேவர்கள், நாடகம், இசை, இசைக்கருவிகளை மீட்டல் மற்றும் பிறர் கண்களுக்குப் புலனாகாதவாறு மறைதல் போன்ற கலைகளை பிருது மன்னருக்குப் பரிசளித்தனர். மாமுனிவர்கள் அழிவற்றத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். சமுத்திரத்தேவன் தன்னிடமுள்ள வலம்புரிச் சங்கினை மன்னருக்குப் பரிசாக அளித்தார்.

பதம் 4.15.20 : நதிகளும், கடல்களும், மலைகளும் அவரது இரதம் செல்வதற்குரிய வசதியான பெரும் வீதிகளை வழங்கின. மேலும் சூதன், மாகதன், வந்தீ போன்றோர் புகழ்ந்து வழிபட்டனர். அவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளைச் செய்வதற்காக அங்கே வந்திருந்தனர்.

பதம் 4.15.21 : வேனனின் மைந்தரும் ஆற்றல் மிக்கவருமான மன்னன் பிருது அக்கலைஞர்கள் தன்னைப் புகழ்வதைக் கண்டு புன்னகை புரிந்தார், மேலும் இடியோசை போன்று அதிரச் செய்யும் குரலில் அவர் கீழ்க் கண்டவாறு பேசத் தொடங்கினார்.

பதம் 4.15.22 : பிருது மன்னர் கூறினார்: ஓ, நேர்மையான சூதரே, மாகதரே, வழிபாடு செய்யும் தொண்டர்களே! நீங்கள் கூறிய புகழுரைகள் அனைத்தும் எனது சிறப்பிற்கானவையன்று. இவ்வாறு என்னிடம் இல்லாத குணங்களைப் பற்றி நீங்கள் ஏன் புகழ வேண்டும்? இவை எனக்கான வார்த்தைகள் என்று கருதி அவற்றை வீணாக்க நான் விரும்பவில்லை. இவ்வார்த்தைகள் உண்மையிலேயே வேறொருவருக்கு அளிக்கப்படுவது நல்லதே.

பதம் 4.15.23 : ஓ, நேர்மை மிக்க கலைஞர்களே, நீங்கள் போற்றிய குணங்கள் அனைத்தும் என்று என்னால் உண்மையில் வெளிப்படுத்தப்படுகின்றனவோ அன்று இவ்வழிபாடுகளை எனக்கு நீங்கள் அருளலாம். முழுமுதற் கடவுளுக்குத் தனது வழிபாட்டினைச் செலுத்தும் நேர்மையான இக்குணங்களையெல்லாம் தன்னிடம் கொண்டிராத ஒரு மனிதனுக்கு இருப்பதாகக் கற்பித்துக் கூறுவதில்லை.

பதம் 4.15.24 : இம்மேன்மை மிக்க குணங்களை அடைவதற்குரிய ஆன்றோர், அக்குணங்கள் உண்மையில் தன்னிடம் புகழுமாறு எவ்வாறு அனுமதிக்கக் கூடும்? ஒருவனை இவன் மட்டும் கல்வி அறிவு பெற்றிருந்தால் அவன் பெரிய அறிஞனாகவோ, அல்லது மகானாகவோ கட்டாயம் ஆகியிருப்பான் என்று புகழ்ந்துரைப்பது மோசடிதான். இப்புகழுரைகளை ஏற்றுக் கொள்ளும் மூடன் இவ்வார்த்தைகள் உண்மையில் தன்னை அவமதிப்பவையென்று அறியாதவனேயாவான்.

பதம் 4.15.25 : நேர்மையும், தாராள குணமும் உடையோர் தமது வெறுக்கத்தக்க செயல்களைப் பற்றிக் கேட்பதற்கு விரும்பமாட்டார். அதுபோல் மிகுந்த புகழும் ஆற்றலுமிக்கோர் பிறர் தம்மைப் புகழ்ந்து பேசுவதையும் விரும்பமாட்டார்.

பதம் 4.15.26 : மன்னர் பிருது தொடர்ந்து கூறினார்: சூதரின் தலைமையில் கீழுள்ள எனது அன்புமிக்க பக்தர்களே, இப்போது நான் எனது செயல்களின் மூலம் புத்திமானாக இல்லாமல் உள்ளேன். ஏனென்றால் நீங்கள் புகழக்கூடிய அளவிற்கு பாராட்டத்தக்கச் செயல்கள் எதையும் நான் இன்னும் செய்யவில்லை. இவ்வாறிருக்க, ஒரு குழந்தையைப் போல் நான் உங்களை எனது செயல்களைப் புகழ்வதில் எப்படி ஈடுபடுத்த முடியும்?

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare