அத்தியாயம் – 12
துருவ மகாராஜன் பரலோகம் அடைதல்
பதம் 4.12.1
மைத்ரேய உவாச
த்ருவம் நிவ்ருத்தம் ப்ரதியுத்த்ய வைஸஸாத்
அபேத-மன்யும் பகவான் தனேஸ்வர:
தத்ராகதஸ் சாரண-யக்ஷ-கின்னரை:
ஸம்ஸ்தூயமானோ ந்யவதத் க்ருதாஞ்ஜலிம்

மைத்ரேய: உவாச—மைத்ரேயர் கூறினார்; த்ருவம்—துருவர்; நிவ்ருத்தம்—நிறுத்தினார்; ப்ரதிபுத்த்ய—அறிந்துகொண்டு; வைஸஸாத்—கொல்வதிலிருந்து; அபேத—தணிந்து; மன்யும்—சினம்; பகவான்—குபேரன்; தன-ஈஸ்வர:—பொக்கிஷத் தலைவன்; தத்ர—அங்கு; ஆகத:—தோன்றினார்; சாரண—சாரணர்; யக்ஷ—யக்ஷர்கள்; கின்னரை:—கின்னரர்களினால்; ஸம்ஸ்தூயமான:—துதிக்கப்பட்டு; ந்யவதத்—கூறினார்; க்ருத-அஞ்ஜலிம்—கூப்பிய கரங்களுடன் நின்ற துருவனிடம்.

மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: அன்பிற்குரிய விதுரனே, துருவ மன்னர் தனது சினம் தணிந்து யக்ஷர்களைக் கொல்வதை முற்றிலும் நிறுத்தினார். இதனைக் கேள்வியுற்ற வணங்குதற்குரிய செல்வத்துக்குத் தலைவரான குபேரன் துருவனின் முன்னர் தோன்றினார். யக்ஷர்களாலும், கின்னரர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்பட்ட பின்னர் அவர் தன்முன் கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்த துருவ மன்னரிடம் பேசலுற்றார்.

பதம் 4.12.2
தனத உவாச
போ போ: க்ஷத்ரிய தாயாத பரிதுஷ்டோ ‘ஸ்மி தே ‘னக:
யத் த்வம் பிதாமஹா தேஸாத் வைரம் துஸ்த்யஜம் அத்யஜ:

தன-த: உவாச—பெருநிதியத் தலைவர் (குபேரன்) கூறினார்; போ: போ:—ஓ; க்ஷத்திரிய தாயாத—சத்திரியப் புத்திரனே; பரிதுஷ்ட:—மிக்க மகிழ்ச்சி; அஸ்மி—நான் அடைகிறேன்; தே—உன்னிடம்; அனக:—ஓ பாவமற்றோனே; யத்—ஏனென்றால்; த்வம்—நீ; பிதாமஹா—உனது தாத்தாவின்; ஆதேஸாத்—அறிவுரையின்படி; வைரம்—பகைமை; துஸ்த்யஜம்—விடுவதற்கரிய; அத்யஜ:—விட்டது.

பெருநிதியத்தின் தலைவரான குபேரன் கூறினார் ஒ, பாவமற்ற சத்திரியப் புத்திரனே, நீ உனது தாத்தாவின் அறிவுரையின்படி விடுவதற்கரியதாகிய உனது பகைமையைக் கைவிட்டதைக் கேள்வியுற்று நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உன்மீது எனது மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரிக்கிறது.

பதம் 4.12.3
ந பவான் அவதீத் யக்ஷான் ந யக்ஷா ப்ராதரம் தவ
கால ஏவ ஹி பூதானாம் ப்ரபுர் அப்யய-பாவயோ:

ந—இல்லை; பவான்—நீ; அவதீத—கொன்றது; யக்ஷான்—யக்ஷர்கள்; ந—இல்லை; ப்ராதரம்—சகோதரன்; தவ—உனது; கால:—காலம்; ஏவ—உறுதியாக; ஹி—ஆக; பூதானாம்—உயிர்களின்; ப்ரபு:—பரமபுருஷ பகவான்; அப்யய-பாவயோ:—பிறப்பும், அழிப்பும்.

உண்மைவில் நீ யக்ஷர்களைக் கொல்லவும் இல்லை; யக்ஷர்களால் உனது சகோதரன் கொல்லப்படவும் இல்லை. பிறப்பிற்கும் இறப்பிற்கும் மூலகாரணமாக விளங்குவது பரமபுருஷ பகவானின் நித்தியக் காலமேயாகும்.

பதம் 4.12.4
அஹம் த்வம் இதி அபார்தா தீர் அஜ்ஞானாத் புருஷஸ்ய ஹி
ஸ்வாப்னீ வாபாதி அதத்-த்யானாத் யயா பந்த-விபர்யயௌ

அஹம்—நான்; த்வம்—நீ; இதி—இவ்வாறு; அபார்தா—தவறாகக் கருதுவது; தீ:—மதியுடைமை; அஜ்ஞானாத்—அறியாமையிலிருந்து; புருஷஸ்ய—மனிதனின்; ஹி—உறுதியாக; ஸ்வாப்னி—ஒரு கனவு; இவ—போன்று; ஆபாதி—தோன்றுகிறது; அதத்த்யானாத்—உடற்கருத்துடைய வாழ்க்கையிலிருந்து; யயா—எதனால்; பந்த—பந்தம்; விபர்யயௌ—துன்பமும்.

ஒருவன் தன்னையும் பிறனையும் “நானென்றும்” “நீ” என்றும் தவறாகக் கருதுவது அறியாமையின் விளைவான உடற்சார்புடைய வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்ததாகும். இவ்வுடற் கருத்தானது பிறப்பு, இறப்புக்குக் காரணமாவதோடு தொடர்ந்து உலக வாழ்க்கையிலேயே நம்மை அமிழ்த்திவிடும்.

பதம் 4.12.5
தத் கச்ச த்ருவ பத்ரம் தே பகவர்தம் அதோக்ஷஜம்
ஸர்வ-பூதாத்ம-பாவேன ஸர்வ-பூதாத்ம-விக்ரஹம்

தத்—ஆகையினால்; கச்ச—வருக; த்ருவ—துருவனே; பத்ரம்—மங்களம்; தே—உனக்கு உண்டாவதாக; பகவந்தம்—முழுமுதற் கடவுளுக்கு; தோக்ஷஜம்—புலன்களின் உணர்வுகளுக்கு மேலானவர்; ஸர்வ-பூத—அனைத்து உயிர்களும்; ஆத்ம-பாவேன—அனைவரும் ஒன்றென்றும் நினைப்பினால்; ஸர்வ-பூத—அனைத்து உயிர்களின்; ஆத்ம—பரமாத்மா; விக்ரஹம்—வடிவத்தில் உள்ளார்.

எனதன்புக்குரிய துருவனே, முன்னே வருக. இறைவனது கருணை உனக்கு எப்போதும் கிட்டுவதாக. நமது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராக விளங்கும் முழுமுதற் கடவுளே அனைத்து உயிர்களிடத்தும் நிறைவாக விளங்குகிறார். அதனால் எந்தவித வேறுபாடுமின்றி அனைத்து உயிர்களும் ஒன்றே. ஆகையினால் அனைத்து உயிர்களுக்கும் இறுதிப் புகலிடம் தருபவராக விளங்கும் பகவானின் உன்னத வடிவத்திற்கு உனது தொண்டினைத் தொடங்குவாயாக.

பதம் 4.12.6
பஜஸ்வ பஜனீயாங்க்ரிம் அபவாய பவ-ச்சிதம்
யுக்தம் விரஹிதம் ஸக்த்யா குண-மய்யாத்ம-மாயயா

பஜஸ்வ—பக்தித் தொண்டில் ஈடுபடுதல்; பஜனீய—வணங்குவதற்குத் தகுந்தது; அங்க்ரிம்—அவரது தாமரைத் திருவடிகளுக்கு; அபவாய-ஜட வாழ்விலிருந்து கடைத்தேறுவதற்காக; பவாச்சிதம்—உலகியற் சிக்கலின் முடிச்சைத் துண்டிப்பவர்; யுக்தம்—பற்று; விரஹிதம்—தனியே; ஸக்த்யா—அவரது சக்திக்கு; குண-மய்யா—இயற்கையின் குணங்களினாலானது; ஆத்ம-மாயயா—அவரது நினைத்தற்கரிய சக்தி.

ஆகையினால் இறைபணி ஒன்றிலேயே முழுநேரமும் ஈடுபடுவாயாக. ஏனெனில் உலக வாழ்க்கையின் சிக்கலிலிருந்து இறைவனே நம்மை மீட்பவர் ஆவார். பகவான் ஆற்றல் மிகுந்து விளங்கினாலும் அவர் அதிலிருந்து தனித்தே இருக்கிறார். உலகில் நிகழும் அனைத்துமே முழுமுதற் கடவுளின் நினைத்தற்கரிய சக்தியினாலேயே நிகழ்கின்றன.

பதம் 4.12.7
வ்ருணீஹி காமம் ந்ருப யன் மனோ கதம்
மத்தஸ் த்வம் ஒளத்தானபதே ‘விஸங்கித:
வரம் வராஹோ ‘ம்புஜ-நாப-பாதயோர்
அனந்தரம் த்வாம் வயம் அங்க ஸுஸ்ரும

வ்ருணீஹி—அருள்கூர்ந்துகேள்; காமம்—இச்சை; ந்ருப—ஓ மன்னனே; யத்—எதுவாயினும்; மன:கதம்—உள் உள்ளத்திலுள்ளதை; மத்த:—என்னிடமிருந்து; த்வம்—நீ; ஓளத்தானபதே—ஓ, மாமன்னர் உத்தானபாதனின் மைந்தனே; அவிஸங்கித:—எவ்விதத் தயக்கமுமின்றி; வரம்—வரம்; வர-அர்ஹ:—வரம் பெறுவதற்குத் தகுதியான; அம்புஜ:—தாமரை மலர்; நாப—அவரது நாபியில்; பாதயோ:—அவரது திருவடித் தாமரையில்; அனந்தரம்—தொடர்ந்து; த்வாம்—உன்னைப்பற்றி; வயம்—நாங்கள்; அங்க—அன்புத் துருவனே; ஸுஸ்ரும—கேள்விப்பட்டிருக்கிறேன்.

அன்பிற்குரிய துருவ மன்னனே! உத்தானபாதனின் மைந்தனே, கொப்பூழில் தாமரை மலரையுடையவர் என்றறியப்படும் முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டில் தொடர்ந்து நீ ஈடுபட்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். ஆகையினால் எங்களிடமிருந்து எல்லா வரங்களையும் பெறுவதற்குரிய தகுதியினை நீ செய்திருக்கின்றாய். எனவே உனக்கு வேண்டிய வரத்தினை எந்தவிதத் தயக்கமுமின்றி என்னிடம் கேட்பாயாக

பதம் 4.12.8
மைத்ரேய உவாச
ஸ ராஜ-ராஜேன வராய சோதிதோ
த்ருவோ மஹா-பாகவதோ மஹாமதி:
ஹரௌ ஸ வவ்ரே ‘சலிதாம் ஸ்மிருதிம் யயா
தராதி அயத்னேன துரத்ய்யம் தம:

மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; ஸ:—அவர்; ராஜ-ராஜனே—ராஜ ராஜனால் (குபேரன்); வராய—வரத்திற்காக; சோடித:—கேட்டார்; த்ருவ:—துருவ மன்னர்; மஹா-பாகவத:—ஒரு முதல்தரமான தூயபக்தர்; மஹா-மதி:—சிறந்த அறிவரும் சிந்தனையாளரும் ஆவார்; ஹரௌ—முழுமுதற் கடவுளுக்கு; ஸ:—அவர்; வவ்ரே—கேட்டார்; அசலிதாம்—மாற்றமில்லாத; ஸ்மிருதிம்—நினைக்க; யயா—எதனால்; தரதி—கடப்பதற்கு; அயத்னேன—எவ்விதக் கஷ்டமுமின்றி; துரத்யயம்—கடப்பதற்கரிய; தம:—அறியாமை.

மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, இவ்வாறு யட்சர்களின் மன்னரால், வரம் பெறுக என வேண்டப்பட்டவுடன் மிகவும் உயர்ந்த, தூய பக்தரும், சிறந்த மதியூகியும், சிந்தனையாளருமான துருவ மன்னர் அவரிடம், தான் எப்போதும் முழுமுதற் கடவுளை நினைத்து மாறாத நம்பிக்கையுடையவராக இருக்கச் செய்யும் வரத்தினை அருள வேண்டுமென்று வேண்டினார். ஏனெனில் அதன் உதவியினாலேயே பிறரால் கடப்பதற்கரியதான அறியாமைக் கடலினை மிக எளிதில் ஒருவனால் கடக்க முடியும்.

பதம் 4.12.9
தஸ்ய ப்ரீதேன மனஸா தாம் தத்வைடவிடஸ் தத:
பஸ்யதோ ‘ந்தர்ததே ஸோ ‘பி ஸ்வ-புரம் ப்ரத்யபத்யத

தஸ்ய—துருவனிடம்; ப்ரீதேன—மிக்க மகிழ்ச்சியுற்று; மனஸா—இப்படிப்பட்ட உள்ளத்துடன்; தர்ம—அந்நிறைவு; தத்த்வா—அருளி; ஐடவிட:—இடவிடாவின் மைந்தனான குபேரன்; தத:—அதன் பின்னர்; பஸ்யத—துருவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே; அந்தர்ததே—மறைந்தார்; ஸ;—அவர் (துருவன்); அபி—கூட; ஸ்வ-புரம்—அவர் நகருக்கு; ப்ரதிபத்யத—திரும்பினார்.

இடவிடாவின் மைந்தனான பகவான் குபேரன் மிக்க மகிழ்ச்சியடைந்து துருவ மன்னன் கேட்ட வரத்தினை அவருக்கு அளித்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து மறைந்தார். துருவ மன்னரும் தன் தலைநகருக்குத் திரும்பிச் சென்றார்.

பதம் 4.12.10
அதாயஜத யஜ்ஞேஸம் க்ரதுபிர் பூரி-தக்ஷிணை:
த்ரவ்ய-க்ரியா-தேவதானாம் கர்ம கர்ம-பல-ப்ரதம்

அத—அதன்பிறகு; அயஜத—அவர் வழிபட்டார்; யஜ்ஞ-ஈஸம்—யக்ஞேஸ்வரர் (வேள்விகளின் தலைவர்); கர்துபி:—வேள்விச் சடங்குகளினால்; பூரி—சிறந்த; தக்ஷிணை:—தானங்களினால்; த்ரவ்ய-க்ரியா—தேவதானாம் (பல்வகை உள்ளிட்ட வேள்விகள்) திரவியம், வினைகள் மற்றும் தேவர்கள்; கர்ம—குறிக்கோள்; கர்ம-பல—செயல்களின் பலனை; ப்ரதம்—அவர் அருள்கிறார்.


துருவ மன்னர் இல்லறத்தில் இருந்தவரை வேள்விகளில் நாயகரான முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்காக பல்வேறு சிறந்த வேள்விச் சடங்குகளைச் செய்தார். குறிப்பிட்ட வேள்விச் சடங்குகள் என்பது சிறப்பாக பகவான் விஷ்ணுவை மகிழ்ச்சிப் படுத்துவதற்கானவையே ஆகும். ஏனெனில், அவரே வேள்விகளின் குறிக்கோளாகவும், வேண்டிய வரத்தினை அருள்பவராகவும் விளங்குகிறார்.

பதம் 4.12.11
ஸர்வாத்மணி அச்யுதே ‘ஸர்வே தீச்ரௌகாம் பக்திம் உத்வஹன்
ததர்ஸாத்மனி பூதேஷு தம் ஏவாவஸ்திதம் விபும்

ஸர்வ-ஆத்மனி—பரமாத்மாவிற்கு; அச்யுதே—குற்றமில்லாதவர்; அஸர்வே—அளவில்லாதவர்; தீவ்ர-ஓகாம்—மனமாற்றம் சிறிதுமின்றி; பக்திம்—பக்தித்தொண்டு; உத்வஹன்—செய்து; ததர்ஸ—அவர் பார்த்தார்; அத்மனி—பரமாத்மாவினிடத்தில்; பூதேஷு—அனைத்து உயிர்வாழிகளிடத்தும்; தம்—அவரது; ஏவ—மட்டும்; அவஸ்திம்—நிலைபெற்றிருத்தல்; விபும்—அனைத்து சக்திகளும்.

துருவர் தனது பக்தித்தொண்டினை, எல்லாவற்றையும் தன்னிடத்தே கொண்டிருக்கும் பரம்பொருளுக்கு உறுதியான மனத்துடன் ஆற்றி வந்தார். தனது பக்தித் தொண்டை அவர் செய்யும் பொழுது அனைத்தும் அவரிடம் நிலைபெற்றிருத்தலையும் அதுபோல் அவர் அனைத்து உயிர்களிடத்தும் இருப்பதையும் அவரால் காண முடிந்தது. பகவான் அச்சுதன் என்றழைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் தனது பக்திகளைக் காக்கும் தலையாய கடமையில் என்றும் தவறியதேயில்லை.

பதம் 4.12.12
தம் ஏவம் ஸுல-ஸம்பன்னம் ப்ரஹ்மண்யம் தீன-வத்ஸலம்
கோப்தாரம் தர்ம ஸேதூனாம் மேநிரே பிதரம் ப்ரஜா:

தம்—அவரது; ஏவம்—இவ்வாறு; ஸுல—தெய்வீகத்தன்மைகளுடன்; ஸம்பன்னம்—நிரம்பப்பெற்றவர்; ப்ரஹ்மண்யம்—அந்தணர்களிடத்து மரியாதையும்; தீன—ஏழைகளிடத்து; வத்ஸலம்—அன்புடனும்; கோப்தாரம்—பாதுகாப்பவர்; தர்ம-ஸேதூனாம்—சமய அறநெறிகளின்; மநிரே—சிந்தனை; பிதரம்—தந்தை; ப்ரஜா:—குடிமக்கள்.

துருவ மன்னர் அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர் ஆவார். அவர் இறைவனது பக்தர்களிடம் மிகவும் மரியாதையுடனும், ஏழை எளியவர்களிடம் மிகுந்த அன்புடனும் நடந்து கொண்டதோடு சமய அறநெறிகளைப் பாதுகாப்பவராகவும் விளங்கினார். இக்குணங்களினால் அவர் குடிமக்களின் உண்மையான தந்தையாகவும் கருதப்பட்டார்.

பதம் 4.12.13
ஷட்-த்ரிம்ஸத்-வர்ஷ-ஸாஹஸ்ரம் ஸஸாஸ க்ஷிதி-மண்டலம்
போகை: புண்ய-க்ஷயம் குர்வன்ன அபோனகர் அஸுப-க்ஷயம்

ஷம்-த்ரிம்ஸத்—முப்பத்தாறு; வர்ஷ—வருடங்கள்; ஸாஹஸ்ரம்—ஆயிரம்; ஸஸாஸ—ஆண்டார்; க்ஷிதிய—மண்டலம் பூமி; போகை:—போகத்தினால்; புண்ய—புண்ணியத்தை; க்ஷயம்—குறைந்தது; குர்வன்—செய்கின்ற; அபோகை:—அறங்களினால்; அஸுப—பாவச் செயல்கள்; க்ஷயம்—குறைந்தன.

துருவ மன்னர் இப்பூமியை முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் ஆண்டார். அவர் தனது போக அனுபவங்களினால் தனது புண்ணியப் பலன்களைக் குறைத்தும், தனது பற்றற்ற துறவு நெறிகளினால் பாவச் செயல்களைக் குறைத்தும் வாழ்ந்தார்.

பதம் 4.12.14
ஏவம் பஹு-ஸவம் காலம் மஹாத்மாவிசலேந்த்ரிய:
த்ரி-வர்கௌபயிகம் நீத்வா புத்ராயாதான் ந்ருபாஸனம்

ஏவம்—இவ்வாறு; பஹு—அனேக; ஸவம்—வருடங்கள்; காலம்—காலம்; மஹா—ஆத்மாத்மா; அவிசல-இந்த்ரிய:—புலன் உணர்ச்சியினால் துன்புறாது; த்வி-வர்க—மூன்று வகையான உலகச் செயல்கள்; ஒளபவிகம்—நிறைவேற்றுதற்குச் சாதகமான; நீத்வா—கழிந்தன; புத்ராய—தனது புத்திரனுக்கு; அதாத்—அளித்தார்; ந்ருப-ஆஸனம்—அரியாசனத்தினை.

இவ்வாறு தன்னை அடக்கிய மகாத்மாவை துருவ மன்னர் மூன்று வகை உலகச் செயல்களான சமய நெறி, பொருளாதார வளர்ச்சி மற்றும் அனைத்து இச்சைகளையும் திருப்திப்படுத்துதல் போன்றவற்றை நன்கு நிறைவேற்றி பல வருடங்களைக் கழித்தார். பின்னர் அவர் தனது பேரரசின் அரியாசனத்தைத் தன் மைந்தனுக்கு அளித்தார்.

பதம் 4.12.15
மன்யமான இதம் விஸ்வம மாயா-ரசிதம் ஆத்மனி
அவித்யா ரசித-ஸ்வப்ன-கந்தர்வ-நகரோபமம்

மன்யமான:—உணர்ந்து கொண்டு; இதம்—இந்த; விஸ்வம்—பிரபஞ்சம்; மாயா—மாயையினால்; ரசிதம்—உண்டு பண்ணிய; ஆத்மனி—உயிர்வாழிக்கு; அவித்யா—மாயையினால்; ரசித—உண்டு பண்ணப்பட்ட; ஸ்வப்ன—கனவு; கந்தர்வ-நகர—பொய்த் தோற்றம்; உபமம்—போன்றது.

துருவ மன்னர் இப்பிரபஞ்சத் தோற்றமானது உயிர்களை ஒரு கனவைப் போன்று அல்லது பொய்த் தோற்றத்தைப் போன்று மயக்குகிறது என்று உணர்ந்து கொண்டார். ஏனெனில் இப்பிரபஞ்சமானது இறைவனது புறச்சக்தியான மாயையினால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.

பதம் 4.12.16
ஆத்ம-ஸ்த்ரி-அபத்ய-ஸுஹ்ருதோ பலம் ருத்த-கோஸம்
அந்த:-புரம் பரிவிஹார-புவஸ் ச ரம்யா:
பூ-மண்டலம் ஜலதி-மேகலம் ஆகலய்ய
காலோபஸ்ருஷ்டம் இதி ஸ ப்ரயயௌ விஸாலாம்

ஆத்ம—உடல்; ஸ்த்ரீ—மனைவிகள்; அபத்ய—மழலைகள்; ஸுஹ்ருத:—நண்பர்கள்; பலம்—செல்வாக்கு; படை; ருத்த- கோஸம்—பொற்களஞ்சியம்; அந்த:-புரம்—அந்தப்புரம்; பரிவிஹார-புவ:—இன்பம் துய்ப்பிடங்கள்; ச—மேலும்; ரம்யா:—அழகான; பூ-மண்டலம்—பூ மண்டலத்தையும்; ஜல-தி—சமுத்திரங்களினால்; மேகலம்—கட்டப்பட்ட; ஆகவய்ய—நிலை; கால—காலத்தினால்; உபஸ்ருஷ்டம்—படைத்தல்; இதி—இவ்வாறு; ஸ:—அவர்; ப்ரயயௌ:—சென்றார்; விஸாலம்—பதரிகாஸ்ரமத்திற்கு.

இறுதியில் துருவ மன்னர் ஆழி சூழ் உலகெலாம் நீண்டிருந்த தனது ஆட்சியினைத் துறந்தார். அவர் தனது உடல், மனைவி, மக்கள், சுற்றம், படை, பொற்களஞ்சியம், மாட மாளிகைகள் மற்றும் இன்பம் துய்பிடங்கள் அனைத்தையும் மாயா சக்தியின் படைப்புக்கள் என்றே கருதினார். உரிய காலத்தில் அவர் ஒய்வு பெறுவதற்காக இமயமலையின் அடிவாரத்திலிருந்த “பத்திரிகாஸ்ரமம்” என்னும் வனத்திற்குச் சென்றார்.

பதம் 4.12.17
தஸ்யாம் விஸுத்த-கரண ஸிவ-வார் விகாய
பத்த்வாஸனம் ஜித-மருன் மனஸாஹ்ருதாக்ஷ:
ஸ்தூலே ததார பகவத்-ப்ரதிரூப ஏதத்
த்யாயம்ஸ் தத் அவ்யவஹிதோ வ்யஸ்ருஜத் ஸமாதௌ

தஸ்யாம்—பத்திரிகாஸ்ரமத்தில்; விஸுத்த—சுத்தம்; கரண:—அவரது புலன்கள்; ஸிவ—தூய; வா:—தண்ணீரில்; விகாய—நீராடி; பத்த்வா—நிலைநிறுத்தி; ஆஸனம்—அமர்கின்ற நிலை; ஜித—கட்டுப்படுத்தி; மருத்—சுவாச குறை; மனஸா—மனதினால்; ஆஹ்ருத—உள்ளிழுத்து; ஆக்ஷ:—அவர் புலன்கள்; ஸ்தூலே—ஸ்தூலமான; ததார—அவர் கவனம் செலுத்தினார்; பகவத்-ப்ரதிரூபே—பகவானின் உண்மை வடிவத்தினை; ஏதத்—மனதில்; த்யாயன்—தியானித்து; தத்—அந்த; அவ்ய-வஹித:—நிறுத்தாது; வ்யஸ்ருத்—அவர் நுழைந்தார்; ஸமாதௌ—சமாதி நிலையில்.

பத்திரிகாஸ்ரமத்தில் துருவ மன்னரின் புலன்கள் முற்றிலும் தூய்மையடைந்தன. ஏனெனில் தினமும் அவர் தன் உடலை பளிங்கு போன்ற தூய நீரில் நீராடி சுத்தம் செய்தார். அவர் ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து யோகப் பயிற்சியினால் தனது சுவாச முறைகளையும் உயிர்க் காற்றையும் கட்டுப்படுத்தினார்; இதன்மூலம் அவர் தனது புலன்களை முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். அவர் பகவானின் உண்மையான பிரதிபலிப்பான “அர்சா விக்ரஹ” வடிவத்தினைச் சிந்தித்து முற்றிலும் சமாதி நிலை அடைந்தார்.

பதம் 4.12.18
பக்திம் ஹரௌ பகவத் ப்ரவஹன்ன அஜஸ்ரம்
ஆனந்த-பாற்ப-கலயா முஹுர் அர்த்யமான:
விக்லித்யமான-ஹ்ருதய: புனகாசிதாங்கோ
நாத்மானம் அஸ்மரத் அஸாவ் இதி முக்த-லிங்க:

பக்திம்—பக்தித் தொண்டு; ஹரௌ—ஹரிக்கு; பகவதி—முழுமுதற் கடவுள்: ப்ரவஹன்—தொடர்ந்து ஈடுபட்டு; அஜஸ்ரம்—எப்போதும்; ஆனந்த—ஆனந்தம்; பாஷ்ப-கலயா—கண்ணீர் வழிந்தோட; முஹு:—மீண்டும் மீண்டும்; அர்த்யமான:—மெய்மறந்து; விக்லியத்யமான—உருகி; ஹ்ருதய:—அவரது இதயம்; புளக—புளக மெய்தியது; ஆசித—மூடப்பட்ட; அங்க:—அவர் உடல்; ந—இல்லை; ஆத்மானம்—உடல்; அஸ்மரத்—அவர் நினைத்தார்; அஸௌ—அவர்; இதி—இவ்வாறு; முக்த-லிங்க:—நுண்ணுடலிலிருந்து விடுதலையடைந்தார்.

அளவு கடந்த மகிழ்ச்சியினால் அவரது கண்களிலிருந்து நீர் பெருகி ஓடியது. அவரது உள்ளம் உருகியது. உடல் புனிதமடைந்து மயிர்க்கூச்செறிந்து நடுங்கியது. இவ்வாறு பக்தித் தொண்டில் சமாதி நிலையடைந்த பிறகு, துருவர் தனது உடல் பெற்ற வாழ்க்கையினை மறந்து மண்ணுலகப் பிடியிலிருந்து விடுதலை பெற்றவரானார்.

பதம் 4.12.19
ஸ ததர்ஸ விமானக்ருயம் நபஸோ ‘வதரத் த்ருவ:
விப்ராஜயத் தஸ திஸோ ராகாபதிம் இவோதிதம்

ஸ:—அவர்; ததர்ஸ—பார்த்தார்; விமான-ஆகாய—விமானத்தினை; அக்ருயம்—மிக அழகிய; நபஸ:—வானிலிருந்து; அவதரத்—இறங்கி வருவது; த்ருவ:—துருவ மகாராஜா; விப்ரா-ஜயத்—கண்ணைப் பறிக்கும் ஒளியுடன்; தஸ—பத்து; திஸ:—திசைகளிலும்; ராகா-பதிம்—பூரண சந்திரன்; இவ—போன்று; உதிதம்—தோன்றியது.

துருவ மன்னரிடம் முக்தியடைந்ததற்கான அடையாளங்கள். வெளிப்பட்டவுடன், பூரணச் சந்திரன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் போல் பத்து திக்குகளும் ஒளிமயமான ஓர் அழகிய விமானம் விண்ணிலிருந்து வருவதை அவர் பார்த்தார்.

பதம் 4.12.20
தத்ரானு தேவ-ப்ரவரௌ சதுர் புஜௌ
ஸ்யாமௌ கிஸோராவ் அருணாம் புஜே க்ஷணெள
ஸ்திதாவ் அவஷ்டப்ய கதாம் ஸுவாஸஸௌ
கிரீட-ஹாராங்கத-சாரு-குண்டலௌ

தத்ர—அங்கே; அனு—பிறகு; தேவ-ப்ரவரௌ—இரண்டு எழில்மிக்க தேவர்கள்; சது:-புஜௌ—நான்கு கரங்களுடன்; ஸ்யாமௌ—கருமை; கிஸோரௌ—இளமையுடன்; அருண்—சிவந்த; அம்புஜ—தாமரை மலர்; ஈக்ஷ-ணௌ—கண்களுடன்; ஸ்திதௌ—இருந்தனர்; அவஷ்டப்ய—ஏற்றியிருந்தனர்; கதாம்—கதாயுதம்; ஸுவாஸஸௌ—அழகிய ஆடைகளுடன்; கிரீட—கிரீடங்கள்; ஹார—கழுத்து அட்டிகைகள்; அங்கத—கை வளைகள்; சாரு—அழகிய; குண்டலௌ—குண்டலங்களுடன்.

பகவான் விஷ்ணுவின் எழில்மிக்க இரு துணைவர்கள் அவ்விமானத்தில் இருப்பதை துருவ மன்னர் பார்த்தார். அவர்கள் கருநிற உடலும், நான்கு கரங்களும் உடையவர்களாக இருந்தனர். அவர்கள் மேதகு தோற்றத்தோடும் செந்தாமரை மலர் போல் சிவந்த விழிகளை உடையவர்களாகவும் விளங்கினர். அவர்கள் தலைகளில் மணிமுடி தரித்து உயர்ந்த ஆடை அணிந்து, கழுத்தில் அட்டிகையும், கைகளில் வளைகளும், காதுகளில் குண்டலங்களும் அணிந்திருந்தனர். தங்கள் கரங்களில் கதாயுதங்களையும் ஏந்தியிருந்தனர்.

பதம் 4.12.21
விஜ்ஞாய தாவ் உத்தமஜாய-கிங்கராவ்
அப்யுத்தித: ஸாத்வஸ-விஸ்ம்ருத-க்ரம:
ந னாம நாமானி க்ருணன் மதுத்விஷ:
பார்ஷத்-ப்ரதானாவ் இதி ஸம்ஹதாஞ்ஜ்வி:

விஜ்ஞாய—புரிந்து கொண்டவுடன்; தெள—அவர்கள்; உத்தம-காய—பகவான் விஷ்ணுவின் (உயரிய புகழின்); கிங்கௌ—இரண்டு பணியாளர்கள்; அப்யுத்தித:—எழுந்து நின்று; ஸாத்வா—குழப்பமுற்று; விஸ்ம்ருத—மறந்தவராய்; க்ரம:—உரிய முறையில்; நானாம—வந்தனம் செய்து; நாமானி—நாமங்கள்; க்ருணன்—ஓதி; மது-த்விஷ:—பகவானின் (மதுவின் பகைவர்); பார்ஷத்—துணைவர்கள்; ப்ரதானௌ—தலைமையானவர்கள்; இதி—இவ்வாறு; ஸம்ஹத—மரியாதையுடன் இணைந்து; அஞ்ஜலி:—கூப்பிய கரங்களுடன்.

இச்சிறப்புக்குரிய இருவரும் முழுமுதற் கடவுளின் அணுக்கத் தொண்டர்களான கிங்கரர்கள் என்பதை அறிந்து கொண்ட துருவர் உடனே எழுந்து நின்றார். குழப்பத்தினாலும், தயக்கத்தினாலும் அவர்களை எவ்வாறு உரிய முறையில் வரவேற்பது என்று மறந்தவராய் திகைத்து நின்றார். ஆகையினால் அவர் கூப்பிய கரங்களுடன் அவர்களை வணங்கி பகவானின் புகழ்மிக்க புனிதப் பெயர்களை ஓதினார்.

பதம் 4.12.22
தம் க்ருஷ்ண-பாதாபி நிவிஷ்ட-சேதஸம்
பத்தாஞ்ஜலிம் ப்ரஸ்ரய நம்ர-கந்தரம்
ஸுநந்த-நந்தாவ் உபஸ்ருத்ய ஸஸ்மிதம்
ப்ரத்யூசது: புஷ்கரனாப-ஸம்மதெள

தம்—அவர்; க்ருஷ்ண—பகவான் கிருஷ்ணரின்; பாத—திருவடித் தாமரைகளை; அபிநிவிஷ்ட—சிந்தனையில் நினைத்து; சேதஸம்—அவரது இதயம்; பத்-அஞ்ஜலிம்—கூப்பிய கரங்களுடன்; ப்ரஷ்ரய—மிக்கப் பணிவுடன்; நம்ர—குனிந்து; கந்தரம்—அவரது கருத்தை; ஸுநந்த—சுநந்தன்; நந்தெள—நந்தன்; உபஸ்ருத்ய—அணுகி; ஸ-ஸ்மிதம்—புன்னகையுடன்; ப்ரத்யூசது:—உரையாடினர்; புஷ்கர-நாப—தாமரை நாபியினையுடைய பகவான் விஷ்ணுவின்; ஸம்மதௌ—நம்பிக்கைக்குரிய தொண்டர்கள்.

துருவ மன்னர் எப்போதும் பகவான் கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளின் சிந்தனையிலேயே ஆழ்ந்திருப்பார். அவர் இதயம் முழுவதிலும் கிருஷ்ணரே நிரம்பியிருந்தார். இறைவனின் நம்பிக்கைக்குரிய தொண்டர்களான நந்தனும், சுநந்தனும் மகிழ்ச்சியுடன் புன்னகை பூத்த முகத்தினராய் தன்னை நோக்கி வருதல் கண்டு துருவ மன்னர் கூப்பிய கரங்களுடன் பணிவாகக் குனிந்து நின்றார். அவர்கள் இருவரும் பின்னர் அவரிடம் கீழ்க்கண்டவாறு உரையாடலாயினர்.

பதம் 4.12.23
ஸுநந்த-நந்தால் ஊசது:
போ போ ராஜன் ஸுபத்ரம் தே வாசம் நோ ‘வஹித: ஸ்ருணு
ய: பாஞ்ச-வர்ஷஸ் தபஸா பகவான் தேவம் அதீத்ருபத்

ஸுநந்த—நந்தௌ ஊசுது:—சுநந்தனும், நந்தனும் கூறினர்; போ போ ராஜன்—ஓ, அன்பார்ந்த அரசனே; ஸும-பத்ரம்—மங்கலம்; தே—உனக்கு; வாசம்—வார்த்தைகள்; ந:—எமது; அவஹித:—சிரத்தையுடன்; ஸ்ருணு—கேட்டு; ய:—யார்; பாஞ்ச-வர்ஷ:—ஐந்து வயதில்; தபஸா—தவத்தினால்; பவான்—நீ; தேவம்—முழுமுதற் கடவுள்; அதீத்ருபத்—உயர்ந்த திருப்தியடைதல்.

பகவான் விஷ்ணுவின் நம்பிக்கைக்குரியத் தொண்டர்களான நந்தனும் சுநந்தனும் கூறினர்; அன்பார்ந்த மன்னனே! அனைத்து மங்கலங்களும் உனக்கு உண்டாவதாக. நாங்கள் கூறுவதைக் கவனமுடன் கேட்பாயாக. ஐந்து வயதிலேயே நீ கடுமையானத் தவங்களை மேற்கொண்டாய், அதன் மூலம் நீ முழுமுதற் கடவுளை மகிழ்வடையச் செய்தாய்.

பதம் 4.12.24
தஸ்யாகில-ஜகத-தாதுர் ஆவாம் தேவஸ்ய ஸார்ங்கின:
பார்ஷதாவ் இஹ ஸம்ப்ராப்தௌ நேதும் த்வாம் பகவத்-பதம்

தஸ்ய—அவரது; அகில—அகில; ஜகத்—உலகமும்; தாது:—படைத்தவர்; ஆவாம்—நாம்; தேவஸ்ய—முழுமுதற் கடவுளின்; ஸார்ங்கிண:—சாரங்கமென்னும் வில்லை உடையவர்; பார்ஷதௌ—துணைவர்கள்; இஹ—இப்பொழுது; ஸம்ப்ராப்தௌ—அணுகினோம்; நேதும்—கொண்டு செல்ல; த்வாம்—உன்னை; பகவத்-பதம்—முழுமுதற் கடவுளின் இருப்பிடத்திற்கு.

யாம் இப்பிரபஞ்சத்தைப் படைத்தவரும் சாரங்கம் என்னும் வில்லை ஏந்தியவருமான முழுமுதற் கடவுளின் தூதர்கள் ஆவோம். உம்மை ஆன்மீக உலகிற்கு அழைத்துச் செல்வதற்காக நாங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டிருக்கிறோம்.

பதம் 4.12.25
ஸுதுர்ஜயம் விஷ்ணு-பதம் ஜிதத் த்வயா
யத் ஸுரயோ ‘ப்ராப்ய விசக்ஷதே பரம்
ஆதிஷ்ட தச் சந்த்ர-திவாகராதயோ
க்ரஹர்க்ஷ-தாரா: பரியந்தி தக்ஷிணம்

ஸுதுர்ஜயம்—கிடைப்பதற்கரியது; விஷ்ணு-பதம்—வைகுண்டலோகம் அல்லது விஷ்ணுலோகம் எனப்படுவது; ஜிதம்—வென்றார்; த்வயா—உன்னால்; யத்—எது; ஸுரய:—சிறந்த தேவர்கள்; அப்ராப்ய—பெறுதலின்றி; விசக்ஷதே—பார்ப்பதற்கு; பரம்—பரம்; ஆதிஷ்ட—வருவாயாக; தத்—அது; சந்த்ர—சந்திரன்; திவ-ஆகா—சூரியன்; ஆதய:—மற்ற; க்ரஹ—நவக்கிரகங்கள்; (செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, பூமி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் ப்ளூட்டோ); ருக்ஷ-தாரா:—நட்சத்திரங்கள்; பரியந்தி—சுற்றிவரும்; தக்ஷிணம்—வலப்புறமாக.

விஷ்ணுலோகத்தை அடைவது மிகவும் அரிய செயலாகும். ஆயினும் அதனை உனது தவத்தினால் நீ வென்றுவிட்டாய். மிகப்பெரிய தேவர்களாலும், மகா முனிவர்களாலும் கூட இந்நிலையினை அடைய முடியாது. சூரியனும், சந்திரனும், பிறகிரகங்களும், நட்சத்திரக் கூட்டங்களும், சுற்றிக் கொண்டிருக்கும் அப்பரமபதத்தினை (விஷ்ணு லோகத்தை) காண்பதற்கு நீ வருவாயாக. உனக்கு அது நல்ல வரவாகும்.

பதம் 4.12.26
அநாஸ்திதம் தே பித்ருபிர் அன்யைர் அபி அங்க கர்ஹிசித்
ஆதிஷ்ட ஜகதாம் வந்த்யம் தத் விஷ்ணோ: பரமம் பதம்

அநாஸ்திதம்—அடைந்ததில்லை; தே—உனது; பித்ருபி:—முன்னோர்களினால்; அன்யை:—மற்றவர்களினால்; அபி—கூட: அங்க—ஒ, துருவனே; கர்ஹிசித்—எந்த காலத்திலும்; ஆதிஷ்ட—அருள் கூர்ந்து வந்து அங்கு வாழ்வாயாக; ஜகதாம்—பிரபஞ்சத்திலுள்ள அனைத்துலக வாசிகளும்; வந்த்யம்—வழிபடுவதற்குரிய; தத்—அந்த; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; பரமம்—பரம; பதம்—நிலை.

அன்பிற்குரிய துருவ மன்னனே, உனது முன்னோர்களும், பிறரும் உனக்கு முன்பு இவ்வுயர்ந்த உலகத்தை அடைந்ததே இல்லை. பகவான் விஷ்ணு வாழ்கின்ற விஷ்ணுலோகம் என்னும் உலகமானது அனைத்துலகங்களிலும் மிக உயர்ந்ததாகும். இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்துலகோராலும் அது வழிபடப்படுகிறது. அருள்கூர்ந்து எம்முடன் வந்து அங்கு நிலையான வாழ்வு பெறுவாயாக.

பதம் 4.12.27
ஏதத் விமான-ப்ரவரம் உத்தமஸ்லோக-மெளலினா
உபஸ்தாபிதம் ஆயுஷ்மன்ன அதிரோடும் த்வம் அர்ஹஸி

எதத்—இந்த; விமான—ஆகாய விமானம்; ப்ரவரம்—தனிச்சிறப்பு வாய்ந்தது; உத்தமஸ்லோக—முழுமுதற் கடவுள்; மௌலினா—உயிர்வாழிகள் அனைத்தின் தலைவர்; உபஸ்தாபிதம்—அனுப்பினால்; ஆயுஷ்மன்—ஓ, இறப்பில்லாதவனே; அதிரோடும்—ஏறி அமர்வது; த்வம்—நீ; அர்ஹஸி—தகுதி வாய்ந்தது.

ஓ. அழிவில்லாதவனே, இத்தனிச் சிறப்பு வாய்ந்த விமானமானது தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தியினால் வழிபடப்படுபவரும் அனைத்து உயிர்களின் தலைவருமான முழுமுதற் கடவுளால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. அவ்விமானத்தில் ஏறி அமர்வதற்குரிய தகுதி உன்னிடம் மட்டுமே உள்ளது.

பதம் 4.12.28
மைத்ரேய உவாச
நிஸம்ய வைகுண்ட-நியோஜ்ய-முக்யயோர்
மது ச்யுதம் வாசம் உருக்கரம-ப்ரிய:
க்ருதாபிஷேக: க்ருத-நித்ய-மங்கலோ
முனீன் ப்ரணம்யாஸிஷம் அப்யவாதயத்

மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; நிஸம்ய—இதனைக் கேட்டபிறகு; வைகுண்ட—பகவானின்; நியோஜ்ய—துணைவர்கள்; முக்யயோ:—தலைவனின்; மது-ச்யுதம்—தேன்மாரி பொழிந்தது போல்; வாசம்—வார்த்தைகள்; உரு-க்ரம-ப்ரிய:—பகவானுக்கு மிகவும் பிடித்தமான துருவ மன்னர்; க்ருத-அபிஷேக:—புனித நீராடி; க்ருத—செய்தார்; நித்ய-மங்கல:—அவரது நித்திய ஆன்மீகக் கடமைகள்; முனீன்—முனிவர்களுக்கு; ப்ரணம்ய—வணக்கம் செலுத்தி; ஆஸிஷம்—ஆசிகள்; அப்யவாதயத்—ஏற்றுக் கொண்டார்.

மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: முழுமுதற் கடவுளுக்கு துருவரை நிரம்பப் பிடிக்கும். தேனினும் இனிய சொற்களை பகவானின் தலைமைத் தூதர்கள் உரைக்கக் கேட்ட துருவர் உடனே புனித நீராடி, பொருத்தமான ஆடை அணிகலன்களை அணிந்து, செய்ய வேண்டிய நித்திய ஆன்மீகக் கடமைகளைச் செய்தார். அதன் பின்னர் அவர் அங்கு குழுமி இருந்த மகாமுனிவர்களுக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்து, அவர்களின் நல்லாசிகளை ஏற்றுக் கொண்டார்.

பதம் 4.12.29
பரீத்யாப்யர்ச்ய திஷ்ணுயாக்ரயம் பார்ஷதாவ் அபிவந்த்ய ச
இயேஷ தத் அதிஷ்டாதும் பிப்ரத் ரூபம் ஹிரண்மயம்

பரீத்ய—சுற்றி வந்து; அப்யர்ச்ய—வழிபட்டு; திஷ்ணுய-அக்ரியம்—அவ்வுன்னத விமானத்தை; யார்ஷதௌ—இரண்டு துணைவர்களுக்கும்; அபிவச்த்ய—வந்தனம் செய்து; ச—மேலும்; இயேஷ—முயற்சித்தார்; தத்—அந்த விமானம்; அதிஷ்டாதும்—ஏறுவதற்கு; பிப்ரத்—ஒளி வீசியது; ரூபம்—அவர் வடிவம்; ஹிரண்மயம்—பொன்னைப் போல்.

ஏறுவதற்கு முன்னர் துருவர் அவ்விமானத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கினார். பின்னர் பகவான் விஷ்ணுவின் துணைவர்களை வணங்கினார். இதற்கிடையில் உருக்கி வார்க்கப்பட்டப் பொன்னைப் போல் ஒளியும், எழிலும் பெற்றவராக அவர் மாறினார். அதன் பின்னரே அவர் அவ்விமானத்தில் ஏறுவதற்கு தயாரானார்.

பதம் 4.12.30
ததோத்தானபத: புத்ரோ ததர்ஸாந்தகம் ஆகதம்
ம்ருத்யோர் மூர்த்னி பதம் தத்த்வா ஆருரோஹாத்புதம் க்ருஹம்

ததா—பிறகு; உத்தானபத:—மன்னர் உத்தானபாதனின்; ததர்ஸ—காணமுடிந்தது; அந்தகம்—மரணத்தின் உருவம்; ஆகதம்—அணுகுவதை; ம்ருத்யோ: மூர்த்னி—மரணத்தின் தலையில்; பதம்—கால்களை; தத்த்வா—வைத்து; ஆருரோஹ—ஏறினார்; அத்புதம்—அற்புதமான; க்ருஹம்—ஒரு மாளிகையைப் போன்றிருந்தது அவ்விமானத்தின் தோற்றம்.

துருவர் அவ்விமானத்தில் ஏறுவதற்கு முயன்ற பொழுது மரணத்தின் உருவம் தன்னை நோக்கி வருவதைக் கண்டார். மரணத்தைக்கண்டு அஞ்சாது அக்காலனின் தலை மீது கால்களை வைத்து ஏறி அவ்விமானத்தினுள் சென்றார். அதுவோ ஒரு பெரிய மாளிகையைப் போன்றிருந்தது.

பதம் 4.12.31
ததா துந்துபயோ நேதுர் ம்ருதங்க—பணவாதய:
கந்தர்வ-முக்யா: ப்ரஜகு: பேது: குஸும-வ்ருஷ்டய:

ததா—அந்நேரம்; துந்துபய:—துந்துபிகள்; நேது:—ஒலித்தன; ம்ருதங்க—மிருதங்கம்; பணவ—சிறிய மத்தளங்கள்; ஆதய:—போன்றவை; கந்தர்வ-முக்யா:—கந்தர்வலோகத்தைச் சேர்ந்த கந்தர்வர்களின் தலைவர்கள்; ப்ரஜகு:—பாடினார்; பேது:—பெய்தனர்; குஸும—மலர்கள்; வ்ருஷ்டய:—மாரிபோன்று.

அப்போது வானிலிருந்து மத்தளங்களும், துந்துபிகளும் முழங்கின. கந்தர்வர்களின் தலைவர்கள் போற்றிப் பாடினர். தேவர்கள் துருவர் மீது மலர் மாரி பெய்தனர்.

பதம் 4.12.32
ஸ ச ஸ்வர்லோகம் ஆரோக்ஷ்யன் ஸுனீதிம் ஜனனிம் த்ருவ:
அன்வஸ்மரத் அகம் ஹித்வா தீனாம் யஸ்யே த்ரி-விஷ்டபம்

ஸ:—அவர்; ச—மேலும்; ஸ்வ:-லோகம்—தெய்வீக உலகிற்கு; ஆரோக்ஷ்யன்—ஏறுவதற்கு; ஸுனீதிம்—சுனீதி; ஜனனீம்—அன்னை; த்ருவ:—துருவ மகாராஜா; அன்வஸ்மரத்—உடனே நினைத்தார்; அகம்—அடைவதற்கரிய; ஹித்வா—விட்டுவிட்டு; தீனாம்—இரக்கத்திற்குரிய; யஸ்யே—நான் செல்வது; த்ரி-விஷ்டபம்—வைகுண்ட லோகத்திற்கு.

துருவ மன்னர் விமானத்தில் ஏறி அமர்ந்து அது புறப்படும் தறுவாயில் அவர் இரக்கத்திற்குரிய தன் அன்னை சுனீதியைப் பற்றி நினைத்தார். அவர் தனக்குள் “எனது பரிதாபத்திற்குரிய தாயை இந்நிலத்தில் விட்டு நான் எவ்வாறு வைகுண்ட லோகம் போவது?” என்றும் எண்ணினார்.

பதம் 4.12.33
இதி வ்யவஸிதம் தஸ்ய வ்யவஸாய ஸுரோத்தமௌ
தர்ஸயாம் ஆஸதுர் தேவீம் புரோ யானேன கச்சதீம்

இதி—இவ்வாறு; வ்யவஸிதம்—சிந்தையில் நினைத்தது; தஸ்ய—துருவனின்; வ்யவஸாய—புரிந்து கொண்டு; ஸுர-உத்தமௌ—இரண்டு தலைமைத் தூதர்களும்; தர்ஸயாம்-ஆஸது:—காட்டினர் (அவருக்கு); தேவீம்—தன்னேரில்லா சுனீதியை; புர:—முன்னால்; யானேன—விமானத்தில்; கச்சதீம்—சென்று கொண்டிருப்பதை.

துருவரின் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட பகவான் விஷ்ணுவின் தலைமைத் தூதர்களான நந்தனும், சுநந்தனும் அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த விமானத்தில் அவருடைய அன்னை சுனீதி இருப்பதை அவருக்குக் காட்டினர்.

பதம் 4.12.34
தத்ர தத்ர ப்ரஸம்ஸத்பி: பதி வைமானிகை: ஸுரை:
அவ கீர்யமாணோ தத்ருஸே குஸுமை:க்ரமஸோ க்ரஹான்

தத்ர தத்ர—இங்குமங்கும்; ப்ரம்ஸத்பி:—துருவரின் புகழைப் பாராட்டிக் கொண்டிருப்பார்; பதி—போகும் வழியில்; வைமானிகை:—பல்வேறு விமானங்களில் பறந்து கொண்டிருப்பதை; ஸுரை:—தேவர்கள்; அவகீர்யமாண:—முடப்பட்டிருப்பதை: தத்ரஸே—காண முடிந்தது; குஸுமை:—மலர்களினால்; க்ரமஸ:—ஒருவர் மாற்றி ஒருவர்; க்ரஹான்—சூரிய குடும்பத்திலுள்ள அனைத்துக் கிரஹங்கள்.

துருவர் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ஒவ்வொன்றாக சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகங்கள் அனைத்தும் அவர் கண்களில் தென்பட்டன. செல்லும் வழியெல்லாம் தேவர்கள் தங்கள் விமானங்களில் இருந்து அவர் மீது மலர் மாரி பெய்தனர்.

பதம் 4.12.35
த்ரி-லோகீம் தேவ-யானேன ஸோ ‘திவ்ரஜ்ய முனீன் அபி
பரஸ்தாத் யத் த்ருவ-கதிர் விஷ்ணோ: பதம் அதாப்யகாத்

த்ரி-லோகம்—மூன்று லோகங்களையும்; தே-யானேன—உன்னத விமானத்தினால்; ஸ:—துருவன்; அதிவ்ரஜ்ய—கடந்து சென்றார்; முனீன்—மகரிஷிகள்; அபி—கூட; பரஸ்தாத்—மேலே; யத்—எது; த்ருவ-கதி:—நித்திய வாழ்வு பெற்ற துருவன்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; பதம்—இருப்பிடம்; அத—பிறகு; அப்யகாத்—அடைந்தார்.

துருவ மன்னர் மகரிஷிகளான சப்தரிஷிகளின் ஏழு கிரஹங்களையும் கடந்து சென்றார். அதற்கும் மேலாக பகவான் விஷ்ணு உறையும் உலகில் அவர் என்றும் அழியாப் பேரின்ப வாழ்க்கை பெறும் நிலையை எய்தினார்.

பதம் 4.12.36
யத் ப்ராஜ மானம் ஸ்வ-ருசைவ ஸர்வதே
லோகாஸ் த்ரயோ ஹி அனு விப்ராஜந்த ஏதே
யன் நாவ்ரஜான் ஜந்துஷு யே ‘னனு க்ரஹா
வ்ரஜந்தி பத்ராணி சரந்தியே ‘னிஸம்

யத்—எந்த கிரஹத்தில்; ப்ராஜமானம்—ஒளிர்கின்ற; ஸ்வ-ருசா—சுய ஒளியினால்; ஏவ—மட்டுமே; ஸர்வத:—எங்கும்; லோகா:—உலகங்களும்; த்ரய:—மூன்று; ஹி—உறுதியாக; அனு—அதிலிருந்தே; விப்ராஜந்தே—ஒளி பெறுகின்றன; ஜந்துஷு—உயிர்கட்கு; வே—எவரொருவர்; அனனுக்ரஹா:—கருணையின்றி; வ்ரஜந்தி—அடைய; பத்ராணி—நலச்செயல்கள்; சரந்தி—ஈடுபடுதல்; யே—எவர்கள்; அனிஸம்—தொடர்ந்து.

சுய ஒளி கொண்ட வைகுண்டலோக கிரஹங்களின் ஒளியினைப் பெற்றே மண் உலகிலுள்ள கிரஹங்கள் எதிரொளி செய்கின்றன. மேலும் பிற உயிர்களிடம் கருணையின்றி நடந்து கொள்பவர்களினால் வைகுண்ட லோகத்தை எக்காலத்திலும் அடைய முடியாது. தொடர்ந்து பிற உயிர்களுக்கான நலச் செயல்களில் ஈடுபடுவர்களே அதனை அடைய முடியும்.

பதம் 4.12.37
ஸாந்தா: ஸம-த்ருஸ: ஸுத்தா: ஸர்வ-பூதானு ரஞ்ஜனா:
யாந்தி அஞ்ஜஸாச்யுத-பதம் அச்யுத-ப்ரிய-பாந்தவா:

ஸாந்தா:—சாந்தம்; ஸம-த்ருஸ:—சமத்துவம்; ஸுத்தா:—தூய்மை, சுத்தமான; ஸர்வ—எல்லா; பூத—உயிர்களையும்; அனுரஞ்ஜனா:—மகிழ்விப்பது; யாந்தி—செல்வது; அஞ்ஜனா—எளிதில்; அச்யுத—பகவானின்; பதம்—இருப்பிடத்திற்கு; அச்யுத-ப்ரிய—பகவானின் பக்தர்களுடன்; பாந்தவா:—நண்பர்கள்.

அமைதியும், சமநோக்கும், சுத்தமும், தூய்மையும் பெற்று உயிர்கள் அனைத்தையும் மகிழ்விக்கும் கலை அறிந்தவர்களும், பகவானின் பக்தர்களுடன் நட்புடையோர்கள் மட்டுமே, எளிதில் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைகின்றனர்.

பதம் 4.12.38
இதி உத்தானபத: புத்ரோ த்ருவ: க்ருஷ்ண-பராயண:
அபூத் த்ரயாணாம் லோகானாம் சூடா-மணிர் இவாமல:

இதி—இவ்வாறு; உத்தானபத:—மகாராஜா உத்தானபாதன்; புத்ர:—புத்திரன்; த்ருவ—துருவ மகாராஜா; க்ருஷ்ண-பராயண:—முற்றிலும் கிருஷ்ண உணர்வு; அபூத்—ஆனார்; த்ரயாணாம்-மூன்று; லோகானாம்—உலகங்களின்; சூடா-மணி:—சூடாமணிச் சிகரம்; இவ—போன்ற; அமல:—தூய்மையடைதல்.

இவ்வழியில் உத்தானபாதனின் கீர்த்திமிக்க மைந்தனும், முற்றிலும் கிருஷ்ண உணர்வு பெற்றவருமான துருவ மன்னர் மூவுலகங்களின் உச்சிச் சிகரத்தை அடைந்தார்.

பதம் 4.12.39
சம்பீர-வேகோ ‘னிமிஷம் ஜ்யோதிஷாம் சக்ரம் ஆஹிதம்
யஸ்மின் ப்ரமதி கெளரவ்ய மேட்யாம் இவ கவாம் கண:

கம்பீர-வேக:—மிகுந்த விசையுடனும், வேகத்துடனும்; அனிமிஷம்—இடைவிடாது; ஜ்யோதிஷாம்—ஒளிக்கோளங்கள்; சக்ரம்—வட்டமாக; ஆஹிதம்—இணைந்து; யஸ்மின்—அதனைச்சுற்றி; ப்ரமதி—சுழல்கிறது; கெளரவ்ய—ஓ, விதுரனே; மேட்யாம்—ஒரு மையத்தூணை; இவ—போன்று; கவாம்—மாடுகள்; கண:—கூட்டம்.

மைத்ரேய முனிவர் தொடர்ந்து உரைக்கலுற்றார். குருவம்சத் தோன்றலான எனதன்பிற்குரிய விதுரனே! மாடுகளின் கூட்டம் ஒரு மையத் தூணை வலப்புறமாகச் சுற்றி வருவதுபோல் இப்பிரபஞ்ச வானிலுள்ள அனைத்து ஒளிக் கோளங்களும் துருவ மன்னனின் இருப்பிடமான துருவ மண்டலத்தை மிகுந்த விசையுடனும், வேகத்துடனும் சுற்றி வருகின்றன.

பதம் 4.12.40
மஹிமானம் விலோக்யாஸ்ய நாரதோ பகவான் ரிஷி:
ஆதோத்யம் விதுதஞ் ஸ்லோகான் ஸத்ரே ‘காயத் ப்ரசேதஸாம்

மஹிமானம்—புகழினை; விலோக்ய—கண்டு; அஸ்ய—துருவ மன்னரின்; நாரத:—நாரத மகாமுனிவர்; பகவான்— முழுமுதற் கடவுளுக்கு இணையான மேன்மை; ரிஷி:—முனிவர்; ஆதோத்யம்—யாழ்; வீணை; விதுரன்—இசைத்து; ஸ்லோகான்—சுலோகங்கள்; ஸத்ரே—வேள்விச்சாலை; அகாயத்—ஓதினார்; ப்ரசேதஸாம்—பிரசேதர்களின்.

துருவ மன்னரின் புகழினைக் கண்ட பின்னர் மாமுனிவர் நாரதர் தன் வீணையை மீட்டிக் கொண்டே பிரசேதர்களின் வேள்விச் சாலைக்குச் சென்று பின்வரும் மூன்று சுலோகங்களை மிக்க மகிழ்ச்சியுடன் பாட ஆரம்பித்தார்.

பதம் 4.12.41
நாரத உவாச
நூனம் ஸீனீதே: பதி-தேவதாயாஸ்
தப:-ப்ரபாவஸ்ய ஸுதஸ்ய தாம் கதிம்
த்ருஷ்டவாப்யுபாயான் அபி வேத-வாதினோ
நைவாதிகந்தும் ப்ரபவந்தி கிம் ந்ருபா:

நாரத: உவாச—நாரதர் கூறினார்; நூனம்—உறுதியாக; ஸுனீதே:—சுனீதியின்; பதி-தேவதாயா:—தன் கணவனிடம் பயபக்தி கொண்டவள்; தப:-ப்ரபாவஸ்ய—தவத்தின் வலிமையினால்; ஸுதஸ்ய—மைந்தனின்; தாம்—அந்த; கதிம்—நிலை; த்ருஷ்ட்வா—கவனித்து; அப்யுபாயான்—வழியினால்; அபி—இருந்தாலும்; வேத-வாதின:—வேதாந்திகள் அல்லது வேதங்களை முறையாகப் பின்பற்றுவோர்; ந—இல்லை; ஏவ—உறுதியாக; அகிகந்தும்—எய்துவதற்கு; ப்ரபவந்தி—தகுதியுடையோர்; கிம்—என்ன சொல்வது; ந்ருபா:—சாதாரண மன்னர்களை.

மாமுனிவர் நாரதர் கூறினார்: தனது ஆன்மீக வளர்ச்சியினாலும், ஆற்றல் மிக்க தவத்தினாலும், தனது கணவனையே தெய்வமாகத் தொழும் சுனீதியின் மைந்தனான துருவர் வேதாந்திகளாலும், வேதங்களை முறையாகப் பின்பற்றுவோர்களாலும் அடைய முடியாத உயர்ந்த நிலையை அடைந்தார். எனவே சாதாரண மனிதர்களைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது!

பதம் 4.12.42
ய-பாஞ்ச-வர்ஷோ குரு-தார-வாக்-ஸரைர்
பின்னேன யாதோ ஹ்ருதயேன தூயதா
வனம் மத்-ஆதேஷ கரோ ‘ஜிதம் ப்ரபும்
ஜிகாய தத்-பக்த-குணை பாராஜிதம்

ய:—அவர்; பாஞ்ச-வர்ஷ:—ஐந்து வயதில்; குரு-தார—தன் தந்தையின் இரண்டாம் மனைவியினால்; வாக்-ஸரை:— கடுஞ்சொற்களினால்; பின்னேன—மிகுந்த வருத்தமுற்றார்; யாத:—சென்றார்; ஹ்ருதயேன—ஏனெனில் அவர் இதயம்; தூயதா—மிகுந்த காயமுற்றிருந்தது; வனம்—வனத்திற்கு; மத்—ஆதேஷ—எனது அறிவுரைகளுக்கேற்ப; கர:—செயல்பட்டு; அஜிதம்—வெல்வதற்குரிய; ப்ரபும்—முழுமுதற் கடவுள்; ஜிகாய—அவர் வென்றார்; தத்—அவரது; பக்த—பக்தர்களின்; குணை:—குணங்களினால்; பராஜிதம்—வென்றார்.

நாரத மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: துருவ மன்னர் எவ்வாறு தமது ஐந்து வயதில் தனது சிற்றன்னையின் கடுஞ்சொற்களினால் மனம் வருந்தி காட்டிற்குச் சென்று அங்கு எமது அறிவுரைக்களுக்கேற்ப தவம் செய்தார் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். முழுமுதற் கடவுளோ வெல்வதற்கரியவர். ஆயினும் துருவ மன்னர், பகவானின் பக்தர்களிடம் மட்டுமே இருக்கும் நற்குணங்களினால் அவரையும் வென்றுவிட்டார்.

பதம் 4.12.43
ய: க்ஷத்ர-பந்துர் புவி தஸ்யாதிரூடம்
அன்வ ஆருருக்ஷேத் அபி வர்ஷ-பூகை:
ஷட்-பஞ்ச-வர்ஷோ யத் அஹோபிர் அல்பை:
ப்ரஸாத்ய வைகுண்டம் அவாப தத்-பதம்

ய:—யாரொருவர்; க்ஷத்ர-பந்து:—ஒரு சத்திரியனின் புத்திரன்; புவி—புவி மீது; தஸ்ய—துருவனின்; அதிரூடம்—மேன்மைமிக்க நிலை; அனு—பின்னர்; ஆருருக்ஷேத்—அடைவதற்கு விரும்புதல்; அபி—கூட; வர்ஷ-பூகை:—பலவருடங்கள் கழித்து; ஷட்-பஞ்ச-வர்ஷ:—ஐந்தாறு வயதில்; யத்—எது; அஹோபி:-அல்பை:—சிறிது நாட்களில்; ப்ரஸாத்ய—மகிழச்செய்து; வைகுண்டம்—பகவான்; அவாப—அடைந்தார்; தத்-பதம்—அவரது இருப்பிடத்தை.

ஐந்து அல்லது ஆறு வயதிலேயே, ஆறு மாதங்கள் கடுமையான தவங்கள் செய்து துருவ மன்னர் மிகவும் மேன்மை மிக்க நிலையினை எய்தப் பெற்றார். அந்தோ இந்நிலையை ஒரு சிறந்த சத்திரிய மன்னனால் பல்வேறு வருடங்கள் தவம் செய்தாலும் அடைய முடியாதோ!

பதம் 4.12.44
மைத்ரேய உவாச
ஏதத் தே ‘பிஹிதம் ஸர்வம் யத் ப்ருஷ்டோ ‘ஹம் இஹ த்வயா
துர்வஸ்யோத்தாம-யஸஸஸ் சரிதம் ஸம்மதம் ஸதாம்

மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; ஏதத்—இந்த; தே—உனக்கு; அபிஹிதம்—விளக்கப்பட்ட; ஸர்வம்—எல்லாம்; யத்—என்ன; ப்ருஷ்ட: அஹம்—நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்; இஹ—இங்கே; த்வயா—உன்னால்; த்ருவஸ்ய—துருவ மன்னரின்; உத்தாம—மிகவுயர்ந்த; யஸஸ:—அவரது பெருமைகள்; சரிதம்—நடத்தைகள்; ஸம்மதம்—சம்மதித்தல்; ஸதாம்—சிறந்த பக்தர்களினால்.

மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, துருவ மன்னனின் உயர்ந்த புகழையும், சிறந்த குணங்களையும் நீ என்னிடம் உரைக்குமாறு வேண்டிக் கொண்டாய். நானும் கூடியவரை அவற்றை விளக்கமாகக் கூறியிருக்கிறேன். சிறந்த தெய்வீக மகான்களும், பக்தர்களும் துருவனின் வரலாற்றை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

பதம் 4.12.45
தன்யம் யஸஸ்யம் ஆயுஷ்யம் புண்யம் ஸவஸ்தி-அயனம் மஹத்
ஸ்வர்க்யம் த்ரௌவ்யம் ஸெனமனஸ்யம் ப்ரஸஸ்யம் அக-மர்ஷணம்

தன்யம்—தனம்; யஸஸ்யம்—புகழ்; ஆயுஷ்யம்—நீண்ட வாழ்நாள்; புண்யம்—புண்ணியம்; ஸ்வஸ்தி-அயனம்— மங்கலம் உண்டாக்கும்; மஹத்—சிறந்த; ஸ்வர்கயம்—சொர்க்கம் சேர்க்கும்; த்ரௌவ்யம்—துருவலோகத்தின்; ஸெனமனஸ்யம்—மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும்; ப்ரஸஸ்யம்—புகழ்மிக்க; அக-மர்ஷணம்—அனைத்து பாவங்களையும் நீக்கும்.

துருவரது வரலாற்றைக் கேட்பதால், ஒருவன் தனம், புகழ், நீண்ட வாழ்நாள் போன்றவற்றின் மீதுள்ள விருப்பம் நிறைவேற்றப் பெறுவான். அவன் மங்கலம் பெறுவதோடு சொர்க்கலோகம் அல்லது துருவ மன்னர் உறையும் துருவலோகத்தைக் கூட அடையலாம். தேவர்களும் இதனை விரும்புகின்றனர். ஏனெனில் இச்சரிதம் மிகவும் புகழ்மிக்கது என்பதோடு ஒருவன் செய்த அனைத்துப் பாவங்களையும் நீக்குகின்ற ஆற்றலுடையதாகவும் விளங்குகிறது.

பதம் 4.12.46
ஸ்ருத்வைதச் ச்ரத்தயாபீக்ஷ்ணம் அச்யுத-ப்ரிய-சேஷ்டிதம்
பவேத் பக்திர் பகவதி யயா ஸ்யாத் க்லேஸ-ஸங்க்ஷய:

ஸ்ருத்வா—கேட்பதினால்; ஏதத்—இந்த; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; அபீஷ்ணம்—திரும்பத் திரும்ப; அச்யுத—முழுமுதற் கடவுளுக்கு; ப்ரிய—பிரியமான; சேஷ்டிதம்—செயல்கள்; பவேத்—வளர்கிறது; பக்தி:—பக்தி; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; யயா—எதனால்; ஸ்யாத்—இருக்கவேண்டும்; க்லேஸ—துன்பங்கள்; ஸங்க்ஷய:—முற்றிலும் குறையும்.

எவனொருவன் திரும்பத்திரும்ப நம்பிக்கையும் பக்தியும் கொண்டு துருவ மன்னரின் வரலாற்றைக் கேட்டு அவரது தூய தன்மையைப் புரிந்து கொள்கிறானோ, அவன் தூய பக்தி நிலையினை அடைந்து தனது பக்தித் தொண்டை நிறைவேற்றுகிறான். இச்செயல்களின் மூலம் ஒருவன் வாழ்வின் மும்முனைத் துன்ப நிலைகளையும் குறைத்துக் கொள்பவனாகிறான்.

பதம் 4.12.47
மஹத்த்வம் இச்சதாம் தீர்த்தம் ஸ்ரோது: ஸீலாதயோ குணா:
யத்ர தேஜஸ் தத் இச்சூனாம் மானோ யத்ர மனஸ்வினாம்

மஹத்த்வம்—மகத்துவம்; இச்சதாம்—விரும்புகின்றவர்கள்; தீர்த்தம்—முறை; ஸ்ரோது:—கேட்பவனின்; ஸீல-ஆதய:—உயர்ந்த நடத்தை போன்றவை; குணா:—குணங்கள்; யத்ர—எதில்; தேஜ:—வீரம்; தத்—அந்த; இச்சூணாம்—விரும்புபவர்கள்; மான:—மதிப்பு; யத்ர—எதனில்; மனஸ்வினாம்:—சிந்திக்கின்ற மனிதர்களுக்கு.

துருவ மன்னனின் வரலாற்றைக் கேட்பவர்கள் அவரைப்போன்று உயர்ந்த குணநலன்கள் வாய்க்கப்பெறுவர். எவரேனும் உயர்வும், வீரமும், செல்வாக்கும் அடைய விரும்பினாரெனில் இதோ அவற்றை அடைவதற்குரிய வழி இங்கே இருக்கிறது. புகழ்ச்சியை விரும்பும் சிந்தனையாளர்களுக்கும் உரிய வழி இதுவேயாகும்.

பதம் 4.12.48
ப்ரயத: கீர்தயேத் ப்ராத: ஸமலாயே த்வி-ஜன்மனாம்
ஸாயம் ச புண்ய-ஸ்லோகஸ்ய த்ருவஸ்ய சரிதம் மஹத்

ப்ரயத:—மிகுந்த சிரத்தையுடன்; கீர்தயேத்—ஒருவன் ஓத வேண்டும்; ப்ராத:—காலையில்; ஸமவாயே—தொடர்பினால்; த்வி-ஜன்மனாம்—இரு பிறப்பாளரின்; ஸாயம்—மாலையில்; ச—மேலும்; புண்ய-ஸ்லோகஸ்ய—புண்ணியப் புகழினை; த்ருவஸ்ய—துருவனின்; சரிதம்—சரிதத்தினை; மஹத்—சிறந்த.

மாமுனிவர் மைத்ரேயர் பரிந்துரைக்கிறார்: துருவரின் குணங்களையும், செயல்களையும் மிகுந்த அக்கறையுடனும், கவனமுடனும், காலையிலும் மாலையிலும் இருபிறப்பாளர்கள் அல்லது அந்தண சமுதாயத்தினரின் மத்தியில் ஒருவன் ஓத வேண்டும்.

பதங்கள் 4.12.49 – 4.12.50
பௌர்ண மாஸ்யாம் ஸினீவால்யம் த்வாதஸ்யாம் ஸ்ரவணே ‘தவா
தின-க்ஷயே வ்யதீபாதே ஸங்க்ரமே ‘ர்கதினே ‘பி வா

ஸ்ராவயேச் ச்ரத்ததானானாம் தீர்த்த-பாத-பதாஸ்ரய:
நேச்சம்ஸ் தத்ராத்மனாத்மானம் ஸந்துஷ்ட இதி ஸித்யதி

பௌர்ணமாஸ்யாம்—பௌர்ணமி நாள்; ஸினீவாஸ்யாம்—அமாவாசை தினம்; த்வாதஸ்யாம்—ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி தினம்; ஸ்ரவணே—ஸ்ரவண நட்சத்திரத்தன்று; அதவா—அல்லது; தின-க்ஷயே—திதியின் முடிவில்; வ்யதிபாதே—பெயரின் ஒரு குறிப்பிட்ட நாள்; ஸங்க்ரமே—மாத இறுதியில்; அர்கதினே—ஞாயிற்றுக் கிழமை; அபி—மேலும்; வா—அல்லது; ஸ்ராவயேத்—ஒருவர் பாராயணம் செய்தல் வேண்டும்; ஸ்ரத்ததானானாம்—தகுதி வாய்ந்த பார்வையாளர்களுக்கு; தீர்த்த—பாத முழுமுதற் கடவுளின்; பத-ஆஸ்ரய:—தாமரைத் திருவடிகளைச் சரண் புகுந்த; ந-இச்சன்—ஊதியம் பெறாது; தத்ர—அங்கே; ஆத்மனா—ஒருவனால்; ஆத்மானம்—மனம்; ஸந்துஷ்ட:—அமைதியடையும்; இதி—இவ்வாறு; ஸித்யதி—தூய்மையடையும்.

பகவானின் திருவடித் தாமரைகளின் பால் ஈடுபாடு கொண்ட ஒருவன் துருவ மன்னரின் வரலாற்றை எந்தவித ஊதியமும் பெறாது பாராயணம் செய்தல் வேண்டும். இப்பாராயணமானது குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை, துவாதசி, திருவோண நட்சத்திரம், ஒரு குறிப்பிட்ட திதியின் இறுதியில் அல்லது வியதிபாத நாளில், மாத இறுதியில் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் செய்ய வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. நல்லொழுக்கம் வாய்ந்த கூட்டத்தினர் முன்பு தான் இப்பாராயணம் உண்மையில் செய்தல் வேண்டும். தொழில்முறை நோக்கமின்றி பாராயணமானது இம்முறையில் செய்யப்பட்டதென்றால் பாராயணம் செய்பவரும் குழுமியுள்ள மக்களும் நிறைவான மகிழ்ச்சி எய்துவர்.

பதம் 4.12.51
ஜ்ஞானம் அஜ்ஞாத-தத்த்வாய யே தத்யாத் ஸத்-பதே ‘ம்ருதம்
க்ருபாவோர் தீன-நாதஸ்ய தேவாஸ் தஸ்யானுக்கு ஹ்ருணதே

ஜ்ஞானம்—ஞானம்; அஜ்ஞாத தத்த்வாய—மெய்ம்மையைப் பற்றி அறியாதவர்; ய:—யார்; தத்யாத்—தெரிவித்தல்; ஸத்-பதே—மெய்ம்மையின் பாதையில்; அம்ருதம்—இறவாநிலை; க்ருபோல:—அன்பு; தீன-நாதஸ்ய—வறியோரைக் காப்பவர்; தேவா:—தேவர்கள்; தஸ்ய—அவருக்கு; அனுக்ருஹ்ணதே—ஆசிகள் அளிப்பார்.

துருவரின் வரலாறு இறவா நிலை அடைவதற்கு உதவும் மேன்மைமிக்க ஞானமாகும். முழுமெய்ப்பொருளை அறியாதவர்கள் உண்மையின் பாதையினை அடைவர். உன்னதமான அன்பினால் வறிய உயிர்களின் தலைமைப் பாதுகாவலர்களாக விளங்குபவர்கள் தாமாகவே தேவர்களின் அன்பினையும் ஆசிகளையும் பெறுவர்.

பதம் 4.12.52
இதம் மயா தே ‘பிதம் குரூ த்வஹ
த்ருவஸ்ய விக்யாத-விஸுத்த-கர்மண:
ஹித் வார்பக: க்ரீடனகானி மாதுர்
க்ருஹம் ச விஷ்ணும் ஸரணம் யோ ஜகாம

இதம்—இந்த; மயா—என்னால்; அபிஹிதம்—விளக்கப்பட்ட; குரு-உத்வஹ—ஓ, குருகுலத்தில் சிறந்தோனே; த்ருவஸ்ய—துருவனின்; விக்யாத—புகழ்மிக்க; விஸுத்த—தூய்மைமிக்க; கர்மண:—அவரது செயல்களை; ஹித்வ—நீங்கி; அர்பக:—குழந்தை; க்ரீட-னகானி—பொம்மை போன்ற விளையாட்டுப் பொருள்கள்; மாது:—அன்னையின்; க்ருஹம்—இல்லம்; ச—மேலும்; விஷ்ணும்—பகவான் விஷ்ணுவிற்கு; ஸரணம்—சரண்; ய:—யார்; ஜகாம—சென்றார்.

துருவ மன்னனின் உன்னதம் மிக்க செயல்கள் எல்லாம் மிகவும் துய்மையானவையென்று இவ்வுலக முழுவதும் நன்கறியும். தனது குழந்தைப் பருவத்திலேயே அவர் விளையாட்டு பொம்மைகளைத் தவிர்த்து தன் அன்னையின் பாதுகாப்பையும் உதறித் தள்ளி முழுமுதற் கடவுளான விஷ்ணுவை மிகத் தீவிரமாகச் சரணடைந்தார். ஆகையினால் அன்பார்ந்த விதுரனே, உனக்கு அனைத்தையும் மிகவும் விளக்கமாகக் கூறிவிட்டபடியால் இச்சரிதத்தை நான் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “துருவ மன்னர் முழுமுதற் கடவுளை அடைதல்” எனும் தலைப்பை கொண்ட பனிரெண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare