அத்தியாயம் – 12
துருவ மகாராஜன் பரலோகம் அடைதல்
பதம் 4.12.1 : மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: அன்பிற்குரிய விதுரனே, துருவ மன்னர் தனது சினம் தணிந்து யக்ஷர்களைக் கொல்வதை முற்றிலும் நிறுத்தினார். இதனைக் கேள்வியுற்ற வணங்குதற்குரிய செல்வத்துக்குத் தலைவரான குபேரன் துருவனின் முன்னர் தோன்றினார். யக்ஷர்களாலும், கின்னரர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்பட்ட பின்னர் அவர் தன்முன் கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்த துருவ மன்னரிடம் பேசலுற்றார்.

பதம் 4.12.2 : பெருநிதியத்தின் தலைவரான குபேரன் கூறினார் ஒ, பாவமற்ற சத்திரியப் புத்திரனே, நீ உனது தாத்தாவின் அறிவுரையின்படி விடுவதற்கரியதாகிய உனது பகைமையைக் கைவிட்டதைக் கேள்வியுற்று நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உன்மீது எனது மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரிக்கிறது.

பதம் 4.12.3 : உண்மைவில் நீ யக்ஷர்களைக் கொல்லவும் இல்லை; யக்ஷர்களால் உனது சகோதரன் கொல்லப்படவும் இல்லை. பிறப்பிற்கும் இறப்பிற்கும் மூலகாரணமாக விளங்குவது பரமபுருஷ பகவானின் நித்தியக் காலமேயாகும்.

பதம் 4.12.4 : ஒருவன் தன்னையும் பிறனையும் “நானென்றும்” “நீ” என்றும் தவறாகக் கருதுவது அறியாமையின் விளைவான உடற்சார்புடைய வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்ததாகும். இவ்வுடற் கருத்தானது பிறப்பு, இறப்புக்குக் காரணமாவதோடு தொடர்ந்து உலக வாழ்க்கையிலேயே நம்மை அமிழ்த்திவிடும்.

பதம் 4.12.5 : எனதன்புக்குரிய துருவனே, முன்னே வருக. இறைவனது கருணை உனக்கு எப்போதும் கிட்டுவதாக. நமது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராக விளங்கும் முழுமுதற் கடவுளே அனைத்து உயிர்களிடத்தும் நிறைவாக விளங்குகிறார். அதனால் எந்தவித வேறுபாடுமின்றி அனைத்து உயிர்களும் ஒன்றே. ஆகையினால் அனைத்து உயிர்களுக்கும் இறுதிப் புகலிடம் தருபவராக விளங்கும் பகவானின் உன்னத வடிவத்திற்கு உனது தொண்டினைத் தொடங்குவாயாக.

பதம் 4.12.6 : ஆகையினால் இறைபணி ஒன்றிலேயே முழுநேரமும் ஈடுபடுவாயாக. ஏனெனில் உலக வாழ்க்கையின் சிக்கலிலிருந்து இறைவனே நம்மை மீட்பவர் ஆவார். பகவான் ஆற்றல் மிகுந்து விளங்கினாலும் அவர் அதிலிருந்து தனித்தே இருக்கிறார். உலகில் நிகழும் அனைத்துமே முழுமுதற் கடவுளின் நினைத்தற்கரிய சக்தியினாலேயே நிகழ்கின்றன.

பதம் 4.12.7 : அன்பிற்குரிய துருவ மன்னனே! உத்தானபாதனின் மைந்தனே, கொப்பூழில் தாமரை மலரையுடையவர் என்றறியப்படும் முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டில் தொடர்ந்து நீ ஈடுபட்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். ஆகையினால் எங்களிடமிருந்து எல்லா வரங்களையும் பெறுவதற்குரிய தகுதியினை நீ செய்திருக்கின்றாய். எனவே உனக்கு வேண்டிய வரத்தினை எந்தவிதத் தயக்கமுமின்றி என்னிடம் கேட்பாயாக

பதம் 4.12.8 : மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, இவ்வாறு யட்சர்களின் மன்னரால், வரம் பெறுக என வேண்டப்பட்டவுடன் மிகவும் உயர்ந்த, தூய பக்தரும், சிறந்த மதியூகியும், சிந்தனையாளருமான துருவ மன்னர் அவரிடம், தான் எப்போதும் முழுமுதற் கடவுளை நினைத்து மாறாத நம்பிக்கையுடையவராக இருக்கச் செய்யும் வரத்தினை அருள வேண்டுமென்று வேண்டினார். ஏனெனில் அதன் உதவியினாலேயே பிறரால் கடப்பதற்கரியதான அறியாமைக் கடலினை மிக எளிதில் ஒருவனால் கடக்க முடியும்.

பதம் 4.12.9 : இடவிடாவின் மைந்தனான பகவான் குபேரன் மிக்க மகிழ்ச்சியடைந்து துருவ மன்னன் கேட்ட வரத்தினை அவருக்கு அளித்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து மறைந்தார். துருவ மன்னரும் தன் தலைநகருக்குத் திரும்பிச் சென்றார்.

பதம் 4.12.10 : துருவ மன்னர் இல்லறத்தில் இருந்தவரை வேள்விகளில் நாயகரான முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்காக பல்வேறு சிறந்த வேள்விச் சடங்குகளைச் செய்தார். குறிப்பிட்ட வேள்விச் சடங்குகள் என்பது சிறப்பாக பகவான் விஷ்ணுவை மகிழ்ச்சிப் படுத்துவதற்கானவையே ஆகும். ஏனெனில், அவரே வேள்விகளின் குறிக்கோளாகவும், வேண்டிய வரத்தினை அருள்பவராகவும் விளங்குகிறார்.

பதம் 4.12.11 : துருவர் தனது பக்தித்தொண்டினை, எல்லாவற்றையும் தன்னிடத்தே கொண்டிருக்கும் பரம்பொருளுக்கு உறுதியான மனத்துடன் ஆற்றி வந்தார். தனது பக்தித் தொண்டை அவர் செய்யும் பொழுது அனைத்தும் அவரிடம் நிலைபெற்றிருத்தலையும் அதுபோல் அவர் அனைத்து உயிர்களிடத்தும் இருப்பதையும் அவரால் காண முடிந்தது. பகவான் அச்சுதன் என்றழைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் தனது பக்திகளைக் காக்கும் தலையாய கடமையில் என்றும் தவறியதேயில்லை.

பதம் 4.12.12 : துருவ மன்னர் அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர் ஆவார். அவர் இறைவனது பக்தர்களிடம் மிகவும் மரியாதையுடனும், ஏழை எளியவர்களிடம் மிகுந்த அன்புடனும் நடந்து கொண்டதோடு சமய அறநெறிகளைப் பாதுகாப்பவராகவும் விளங்கினார். இக்குணங்களினால் அவர் குடிமக்களின் உண்மையான தந்தையாகவும் கருதப்பட்டார்.

பதம் 4.12.13 : துருவ மன்னர் இப்பூமியை முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் ஆண்டார். அவர் தனது போக அனுபவங்களினால் தனது புண்ணியப் பலன்களைக் குறைத்தும், தனது பற்றற்ற துறவு நெறிகளினால் பாவச் செயல்களைக் குறைத்தும் வாழ்ந்தார்.

பதம் 4.12.14 : இவ்வாறு தன்னை அடக்கிய மகாத்மாவை துருவ மன்னர் மூன்று வகை உலகச் செயல்களான சமய நெறி, பொருளாதார வளர்ச்சி மற்றும் அனைத்து இச்சைகளையும் திருப்திப்படுத்துதல் போன்றவற்றை நன்கு நிறைவேற்றி பல வருடங்களைக் கழித்தார். பின்னர் அவர் தனது பேரரசின் அரியாசனத்தைத் தன் மைந்தனுக்கு அளித்தார்.

பதம் 4.12.15 : துருவ மன்னர் இப்பிரபஞ்சத் தோற்றமானது உயிர்களை ஒரு கனவைப் போன்று அல்லது பொய்த் தோற்றத்தைப் போன்று மயக்குகிறது என்று உணர்ந்து கொண்டார். ஏனெனில் இப்பிரபஞ்சமானது இறைவனது புறச்சக்தியான மாயையினால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.

பதம் 4.12.16 : இறுதியில் துருவ மன்னர் ஆழி சூழ் உலகெலாம் நீண்டிருந்த தனது ஆட்சியினைத் துறந்தார். அவர் தனது உடல், மனைவி, மக்கள், சுற்றம், படை, பொற்களஞ்சியம், மாட மாளிகைகள் மற்றும் இன்பம் துய்பிடங்கள் அனைத்தையும் மாயா சக்தியின் படைப்புக்கள் என்றே கருதினார். உரிய காலத்தில் அவர் ஒய்வு பெறுவதற்காக இமயமலையின் அடிவாரத்திலிருந்த “பத்திரிகாஸ்ரமம்” என்னும் வனத்திற்குச் சென்றார்.

பதம் 4.12.17 : பத்திரிகாஸ்ரமத்தில் துருவ மன்னரின் புலன்கள் முற்றிலும் தூய்மையடைந்தன. ஏனெனில் தினமும் அவர் தன் உடலை பளிங்கு போன்ற தூய நீரில் நீராடி சுத்தம் செய்தார். அவர் ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து யோகப் பயிற்சியினால் தனது சுவாச முறைகளையும் உயிர்க் காற்றையும் கட்டுப்படுத்தினார்; இதன்மூலம் அவர் தனது புலன்களை முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். அவர் பகவானின் உண்மையான பிரதிபலிப்பான “அர்சா விக்ரஹ” வடிவத்தினைச் சிந்தித்து முற்றிலும் சமாதி நிலை அடைந்தார்.

பதம் 4.12.18 : அளவு கடந்த மகிழ்ச்சியினால் அவரது கண்களிலிருந்து நீர் பெருகி ஓடியது. அவரது உள்ளம் உருகியது. உடல் புனிதமடைந்து மயிர்க்கூச்செறிந்து நடுங்கியது. இவ்வாறு பக்தித் தொண்டில் சமாதி நிலையடைந்த பிறகு, துருவர் தனது உடல் பெற்ற வாழ்க்கையினை மறந்து மண்ணுலகப் பிடியிலிருந்து விடுதலை பெற்றவரானார்.

பதம் 4.12.19 : துருவ மன்னரிடம் முக்தியடைந்ததற்கான அடையாளங்கள். வெளிப்பட்டவுடன், பூரணச் சந்திரன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் போல் பத்து திக்குகளும் ஒளிமயமான ஓர் அழகிய விமானம் விண்ணிலிருந்து வருவதை அவர் பார்த்தார்.

பதம் 4.12.20 : பகவான் விஷ்ணுவின் எழில்மிக்க இரு துணைவர்கள் அவ்விமானத்தில் இருப்பதை துருவ மன்னர் பார்த்தார். அவர்கள் கருநிற உடலும், நான்கு கரங்களும் உடையவர்களாக இருந்தனர். அவர்கள் மேதகு தோற்றத்தோடும் செந்தாமரை மலர் போல் சிவந்த விழிகளை உடையவர்களாகவும் விளங்கினர். அவர்கள் தலைகளில் மணிமுடி தரித்து உயர்ந்த ஆடை அணிந்து, கழுத்தில் அட்டிகையும், கைகளில் வளைகளும், காதுகளில் குண்டலங்களும் அணிந்திருந்தனர். தங்கள் கரங்களில் கதாயுதங்களையும் ஏந்தியிருந்தனர்.

பதம் 4.12.21 : இச்சிறப்புக்குரிய இருவரும் முழுமுதற் கடவுளின் அணுக்கத் தொண்டர்களான கிங்கரர்கள் என்பதை அறிந்து கொண்ட துருவர் உடனே எழுந்து நின்றார். குழப்பத்தினாலும், தயக்கத்தினாலும் அவர்களை எவ்வாறு உரிய முறையில் வரவேற்பது என்று மறந்தவராய் திகைத்து நின்றார். ஆகையினால் அவர் கூப்பிய கரங்களுடன் அவர்களை வணங்கி பகவானின் புகழ்மிக்க புனிதப் பெயர்களை ஓதினார்.

பதம் 4.12.22 : துருவ மன்னர் எப்போதும் பகவான் கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளின் சிந்தனையிலேயே ஆழ்ந்திருப்பார். அவர் இதயம் முழுவதிலும் கிருஷ்ணரே நிரம்பியிருந்தார். இறைவனின் நம்பிக்கைக்குரிய தொண்டர்களான நந்தனும், சுநந்தனும் மகிழ்ச்சியுடன் புன்னகை பூத்த முகத்தினராய் தன்னை நோக்கி வருதல் கண்டு துருவ மன்னர் கூப்பிய கரங்களுடன் பணிவாகக் குனிந்து நின்றார். அவர்கள் இருவரும் பின்னர் அவரிடம் கீழ்க்கண்டவாறு உரையாடலாயினர்.

பதம் 4.12.23 : பகவான் விஷ்ணுவின் நம்பிக்கைக்குரியத் தொண்டர்களான நந்தனும் சுநந்தனும் கூறினர்; அன்பார்ந்த மன்னனே! அனைத்து மங்கலங்களும் உனக்கு உண்டாவதாக. நாங்கள் கூறுவதைக் கவனமுடன் கேட்பாயாக. ஐந்து வயதிலேயே நீ கடுமையானத் தவங்களை மேற்கொண்டாய், அதன் மூலம் நீ முழுமுதற் கடவுளை மகிழ்வடையச் செய்தாய்.

பதம் 4.12.24 : யாம் இப்பிரபஞ்சத்தைப் படைத்தவரும் சாரங்கம் என்னும் வில்லை ஏந்தியவருமான முழுமுதற் கடவுளின் தூதர்கள் ஆவோம். உம்மை ஆன்மீக உலகிற்கு அழைத்துச் செல்வதற்காக நாங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டிருக்கிறோம்.

பதம் 4.12.25 : விஷ்ணுலோகத்தை அடைவது மிகவும் அரிய செயலாகும். ஆயினும் அதனை உனது தவத்தினால் நீ வென்றுவிட்டாய். மிகப்பெரிய தேவர்களாலும், மகா முனிவர்களாலும் கூட இந்நிலையினை அடைய முடியாது. சூரியனும், சந்திரனும், பிறகிரகங்களும், நட்சத்திரக் கூட்டங்களும், சுற்றிக் கொண்டிருக்கும் அப்பரமபதத்தினை (விஷ்ணு லோகத்தை) காண்பதற்கு நீ வருவாயாக. உனக்கு அது நல்ல வரவாகும்.

பதம் 4.12.26 : அன்பிற்குரிய துருவ மன்னனே, உனது முன்னோர்களும், பிறரும் உனக்கு முன்பு இவ்வுயர்ந்த உலகத்தை அடைந்ததே இல்லை. பகவான் விஷ்ணு வாழ்கின்ற விஷ்ணுலோகம் என்னும் உலகமானது அனைத்துலகங்களிலும் மிக உயர்ந்ததாகும். இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்துலகோராலும் அது வழிபடப்படுகிறது. அருள்கூர்ந்து எம்முடன் வந்து அங்கு நிலையான வாழ்வு பெறுவாயாக.

பதம் 4.12.27 : ஓ. அழிவில்லாதவனே, இத்தனிச் சிறப்பு வாய்ந்த விமானமானது தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தியினால் வழிபடப்படுபவரும் அனைத்து உயிர்களின் தலைவருமான முழுமுதற் கடவுளால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. அவ்விமானத்தில் ஏறி அமர்வதற்குரிய தகுதி உன்னிடம் மட்டுமே உள்ளது.

பதம் 4.12.28 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: முழுமுதற் கடவுளுக்கு துருவரை நிரம்பப் பிடிக்கும். தேனினும் இனிய சொற்களை பகவானின் தலைமைத் தூதர்கள் உரைக்கக் கேட்ட துருவர் உடனே புனித நீராடி, பொருத்தமான ஆடை அணிகலன்களை அணிந்து, செய்ய வேண்டிய நித்திய ஆன்மீகக் கடமைகளைச் செய்தார். அதன் பின்னர் அவர் அங்கு குழுமி இருந்த மகாமுனிவர்களுக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்து, அவர்களின் நல்லாசிகளை ஏற்றுக் கொண்டார்.

பதம் 4.12.29 : ஏறுவதற்கு முன்னர் துருவர் அவ்விமானத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கினார். பின்னர் பகவான் விஷ்ணுவின் துணைவர்களை வணங்கினார். இதற்கிடையில் உருக்கி வார்க்கப்பட்டப் பொன்னைப் போல் ஒளியும், எழிலும் பெற்றவராக அவர் மாறினார். அதன் பின்னரே அவர் அவ்விமானத்தில் ஏறுவதற்கு தயாரானார்.

பதம் 4.12.30 : துருவர் அவ்விமானத்தில் ஏறுவதற்கு முயன்ற பொழுது மரணத்தின் உருவம் தன்னை நோக்கி வருவதைக் கண்டார். மரணத்தைக்கண்டு அஞ்சாது அக்காலனின் தலை மீது கால்களை வைத்து ஏறி அவ்விமானத்தினுள் சென்றார். அதுவோ ஒரு பெரிய மாளிகையைப் போன்றிருந்தது.

பதம் 4.12.31 : அப்போது வானிலிருந்து மத்தளங்களும், துந்துபிகளும் முழங்கின. கந்தர்வர்களின் தலைவர்கள் போற்றிப் பாடினர். தேவர்கள் துருவர் மீது மலர் மாரி பெய்தனர்.

பதம் 4.12.32 : துருவ மன்னர் விமானத்தில் ஏறி அமர்ந்து அது புறப்படும் தறுவாயில் அவர் இரக்கத்திற்குரிய தன் அன்னை சுனீதியைப் பற்றி நினைத்தார். அவர் தனக்குள் “எனது பரிதாபத்திற்குரிய தாயை இந்நிலத்தில் விட்டு நான் எவ்வாறு வைகுண்ட லோகம் போவது?” என்றும் எண்ணினார்.

பதம் 4.12.33 : துருவரின் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட பகவான் விஷ்ணுவின் தலைமைத் தூதர்களான நந்தனும், சுநந்தனும் அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த விமானத்தில் அவருடைய அன்னை சுனீதி இருப்பதை அவருக்குக் காட்டினர்.

பதம் 4.12.34 : துருவர் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ஒவ்வொன்றாக சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகங்கள் அனைத்தும் அவர் கண்களில் தென்பட்டன. செல்லும் வழியெல்லாம் தேவர்கள் தங்கள் விமானங்களில் இருந்து அவர் மீது மலர் மாரி பெய்தனர்.

பதம் 4.12.35 : துருவ மன்னர் மகரிஷிகளான சப்தரிஷிகளின் ஏழு கிரஹங்களையும் கடந்து சென்றார். அதற்கும் மேலாக பகவான் விஷ்ணு உறையும் உலகில் அவர் என்றும் அழியாப் பேரின்ப வாழ்க்கை பெறும் நிலையை எய்தினார்.

பதம் 4.12.36 : சுய ஒளி கொண்ட வைகுண்டலோக கிரஹங்களின் ஒளியினைப் பெற்றே மண் உலகிலுள்ள கிரஹங்கள் எதிரொளி செய்கின்றன. மேலும் பிற உயிர்களிடம் கருணையின்றி நடந்து கொள்பவர்களினால் வைகுண்ட லோகத்தை எக்காலத்திலும் அடைய முடியாது. தொடர்ந்து பிற உயிர்களுக்கான நலச் செயல்களில் ஈடுபடுவர்களே அதனை அடைய முடியும்.

பதம் 4.12.37 : அமைதியும், சமநோக்கும், சுத்தமும், தூய்மையும் பெற்று உயிர்கள் அனைத்தையும் மகிழ்விக்கும் கலை அறிந்தவர்களும், பகவானின் பக்தர்களுடன் நட்புடையோர்கள் மட்டுமே, எளிதில் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைகின்றனர்.

பதம் 4.12.38 : இவ்வழியில் உத்தானபாதனின் கீர்த்திமிக்க மைந்தனும், முற்றிலும் கிருஷ்ண உணர்வு பெற்றவருமான துருவ மன்னர் மூவுலகங்களின் உச்சிச் சிகரத்தை அடைந்தார்.

பதம் 4.12.39 : மைத்ரேய முனிவர் தொடர்ந்து உரைக்கலுற்றார். குருவம்சத் தோன்றலான எனதன்பிற்குரிய விதுரனே! மாடுகளின் கூட்டம் ஒரு மையத் தூணை வலப்புறமாகச் சுற்றி வருவதுபோல் இப்பிரபஞ்ச வானிலுள்ள அனைத்து ஒளிக் கோளங்களும் துருவ மன்னனின் இருப்பிடமான துருவ மண்டலத்தை மிகுந்த விசையுடனும், வேகத்துடனும் சுற்றி வருகின்றன.

பதம் 4.12.40 : துருவ மன்னரின் புகழினைக் கண்ட பின்னர் மாமுனிவர் நாரதர் தன் வீணையை மீட்டிக் கொண்டே பிரசேதர்களின் வேள்விச் சாலைக்குச் சென்று பின்வரும் மூன்று சுலோகங்களை மிக்க மகிழ்ச்சியுடன் பாட ஆரம்பித்தார்.

பதம் 4.12.41 : மாமுனிவர் நாரதர் கூறினார்: தனது ஆன்மீக வளர்ச்சியினாலும், ஆற்றல் மிக்க தவத்தினாலும், தனது கணவனையே தெய்வமாகத் தொழும் சுனீதியின் மைந்தனான துருவர் வேதாந்திகளாலும், வேதங்களை முறையாகப் பின்பற்றுவோர்களாலும் அடைய முடியாத உயர்ந்த நிலையை அடைந்தார். எனவே சாதாரண மனிதர்களைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது!

பதம் 4.12.42 : நாரத மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: துருவ மன்னர் எவ்வாறு தமது ஐந்து வயதில் தனது சிற்றன்னையின் கடுஞ்சொற்களினால் மனம் வருந்தி காட்டிற்குச் சென்று அங்கு எமது அறிவுரைக்களுக்கேற்ப தவம் செய்தார் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். முழுமுதற் கடவுளோ வெல்வதற்கரியவர். ஆயினும் துருவ மன்னர், பகவானின் பக்தர்களிடம் மட்டுமே இருக்கும் நற்குணங்களினால் அவரையும் வென்றுவிட்டார்.

பதம் 4.12.43 : ஐந்து அல்லது ஆறு வயதிலேயே, ஆறு மாதங்கள் கடுமையான தவங்கள் செய்து துருவ மன்னர் மிகவும் மேன்மை மிக்க நிலையினை எய்தப் பெற்றார். அந்தோ இந்நிலையை ஒரு சிறந்த சத்திரிய மன்னனால் பல்வேறு வருடங்கள் தவம் செய்தாலும் அடைய முடியாதோ!

பதம் 4.12.44 : மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த விதுரனே, துருவ மன்னனின் உயர்ந்த புகழையும், சிறந்த குணங்களையும் நீ என்னிடம் உரைக்குமாறு வேண்டிக் கொண்டாய். நானும் கூடியவரை அவற்றை விளக்கமாகக் கூறியிருக்கிறேன். சிறந்த தெய்வீக மகான்களும், பக்தர்களும் துருவனின் வரலாற்றை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

பதம் 4.12.45 : துருவரது வரலாற்றைக் கேட்பதால், ஒருவன் தனம், புகழ், நீண்ட வாழ்நாள் போன்றவற்றின் மீதுள்ள விருப்பம் நிறைவேற்றப் பெறுவான். அவன் மங்கலம் பெறுவதோடு சொர்க்கலோகம் அல்லது துருவ மன்னர் உறையும் துருவலோகத்தைக் கூட அடையலாம். தேவர்களும் இதனை விரும்புகின்றனர். ஏனெனில் இச்சரிதம் மிகவும் புகழ்மிக்கது என்பதோடு ஒருவன் செய்த அனைத்துப் பாவங்களையும் நீக்குகின்ற ஆற்றலுடையதாகவும் விளங்குகிறது.

பதம் 4.12.46 : எவனொருவன் திரும்பத்திரும்ப நம்பிக்கையும் பக்தியும் கொண்டு துருவ மன்னரின் வரலாற்றைக் கேட்டு அவரது தூய தன்மையைப் புரிந்து கொள்கிறானோ, அவன் தூய பக்தி நிலையினை அடைந்து தனது பக்தித் தொண்டை நிறைவேற்றுகிறான். இச்செயல்களின் மூலம் ஒருவன் வாழ்வின் மும்முனைத் துன்ப நிலைகளையும் குறைத்துக் கொள்பவனாகிறான்.

பதம் 4.12.47 : துருவ மன்னனின் வரலாற்றைக் கேட்பவர்கள் அவரைப்போன்று உயர்ந்த குணநலன்கள் வாய்க்கப்பெறுவர். எவரேனும் உயர்வும், வீரமும், செல்வாக்கும் அடைய விரும்பினாரெனில் இதோ அவற்றை அடைவதற்குரிய வழி இங்கே இருக்கிறது. புகழ்ச்சியை விரும்பும் சிந்தனையாளர்களுக்கும் உரிய வழி இதுவேயாகும்.

பதம் 4.12.48 : மாமுனிவர் மைத்ரேயர் பரிந்துரைக்கிறார்: துருவரின் குணங்களையும், செயல்களையும் மிகுந்த அக்கறையுடனும், கவனமுடனும், காலையிலும் மாலையிலும் இருபிறப்பாளர்கள் அல்லது அந்தண சமுதாயத்தினரின் மத்தியில் ஒருவன் ஓத வேண்டும்.

பதங்கள் 4.12.49 – 4.12.50 : பகவானின் திருவடித் தாமரைகளின் பால் ஈடுபாடு கொண்ட ஒருவன் துருவ மன்னரின் வரலாற்றை எந்தவித ஊதியமும் பெறாது பாராயணம் செய்தல் வேண்டும். இப்பாராயணமானது குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை, துவாதசி, திருவோண நட்சத்திரம், ஒரு குறிப்பிட்ட திதியின் இறுதியில் அல்லது வியதிபாத நாளில், மாத இறுதியில் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் செய்ய வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. நல்லொழுக்கம் வாய்ந்த கூட்டத்தினர் முன்பு தான் இப்பாராயணம் உண்மையில் செய்தல் வேண்டும். தொழில்முறை நோக்கமின்றி பாராயணமானது இம்முறையில் செய்யப்பட்டதென்றால் பாராயணம் செய்பவரும் குழுமியுள்ள மக்களும் நிறைவான மகிழ்ச்சி எய்துவர்.

பதம் 4.12.51 : துருவரின் வரலாறு இறவா நிலை அடைவதற்கு உதவும் மேன்மைமிக்க ஞானமாகும். முழுமெய்ப்பொருளை அறியாதவர்கள் உண்மையின் பாதையினை அடைவர். உன்னதமான அன்பினால் வறிய உயிர்களின் தலைமைப் பாதுகாவலர்களாக விளங்குபவர்கள் தாமாகவே தேவர்களின் அன்பினையும் ஆசிகளையும் பெறுவர்.

பதம் 4.12.52 : துருவ மன்னனின் உன்னதம் மிக்க செயல்கள் எல்லாம் மிகவும் துய்மையானவையென்று இவ்வுலக முழுவதும் நன்கறியும். தனது குழந்தைப் பருவத்திலேயே அவர் விளையாட்டு பொம்மைகளைத் தவிர்த்து தன் அன்னையின் பாதுகாப்பையும் உதறித் தள்ளி முழுமுதற் கடவுளான விஷ்ணுவை மிகத் தீவிரமாகச் சரணடைந்தார். ஆகையினால் அன்பார்ந்த விதுரனே, உனக்கு அனைத்தையும் மிகவும் விளக்கமாகக் கூறிவிட்டபடியால் இச்சரிதத்தை நான் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare