அத்தியாயம் – 1
மனுவின் புதல்வியரது குடிவழிப் பட்டியல்
பதம் 4.1.1 : தெய்வத்திரு மைத்ரேயர் கூறினார்: ஸ்வாயம்புவமனு தனது மனைவி ஷதரூபா என்பவள் மூலம் மூன்று புதல்வியரை ஈன்றெடுத்தார். அவர்கள் பெயர்கள், ஆகூதி, தேவகீதி மற்றும் பிரசூதி என்பவையாகும்.

பதம் 4.1.2 : ஆகூதிக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தும் மன்னர் ஸ்வாயம்புவ மனு அவளை பிரஜாபதி ருசி என்பவருக்கு, அவள் ஈன்றெடுக்கும் புதல்வனைத் தன்னிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் மனைவியாக்கினார். இதனை அவர் தனது மனைவி ஸதரூபாவுடன் கலந்து பேசிய பின்னரே செய்தார்.

பதம் 4.1.3 : அந்தணத் தன்மைகள் அனைத்தும் தன்னிடத்தேக் கொண்ட ருசி உயிர்களின் மூதாதையராக நியமிக்கப்பட்டவர் ஆவார். அவர் தன் மனைவி ஆகூதியினிடத்தில் ஓர் மைந்தனையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தார்.

பதம் 4.1.4 : ஆகூதிக்குப் பிறந்த இரு குழந்தைகளில், ஆண்மகவு முழுமுதற் கடவுளின் நேரடி அவதாரமாகும். அதன் பெயர் யக்ஞா என்பதாகும். இப்பெயர் பகவான் விஷ்ணுவின் மற்றொரு பெயராகும். பெண் சூழந்தையானது பகவான் விஷ்ணுவின் நித்தியத் துணைவியான அதிர்ஷ்ட தேவதை லட்சுமியின் முழுத்தன்மையோடு விளங்கியது.

பதம் 4.1.5 : ஸ்வாயம்புவ மனு மிக்க மகிழ்ச்சியுடன் எழில் நிறைந்த ஆண் மகவான யக்ஞனைத் தன் இல்லத்திற்குக் கொண்டு சென்றார். அவரது மருமகனான மாமுனிவர் ருசி தன் மகளான தட்சிணாவைத் தன்னிடமே வைத்துக் கொண்டார்.

பதம் 4.1.6 : வேள்விகளின் நாயகரான பகவான், முழுமுதற் கடவுளையே தனது கணவனாக வரிக்கவேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டிருந்த தட்சிணாவை மணம்புரிந்தார். அவள் தனக்குப் பன்னிரெண்டு குழந்தைகளைப் பெற்றுத் தந்தமை கண்டு பகவான் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

பதம் 4.1.7 : யக்ஞனுக்கும் தட்சிணாவிற்கும் பிறந்த பன்னிரெண்டு புதல்வர்களின் பெயர்கள் வருமாறு, தோஷன், பிரதோஷன், ஸந்தோஷ, பத்ரதன, சாந்தி, இடஸ்பதி, இத்மன், கலி, விபு, ஸ்வஹ்நன், சுதேவன் மற்றும் ரோசனன் என்பவைகளாகும்.

பதம் 4.1.8 : ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில் இப்புத்திரர்கள் அனைவரும் துஷிதர்கள் என்னும் தேவர்களாக ஆனார்கள். மரீசி ஷப்த ரிஷிகளின் தலைவராகவும், யக்ஞன் தேவர்களின் தலைவரான இந்திரனாகவும் ஆயினர்.

பதம் 4.1.9 : ஸ்வாயம்புவ மனுவிற்கு பிரியவிரதன், உத்தானபாதன் என்று இரண்டு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் ஆற்றல் மிக்க அரசர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் இம்மூவுலகிலும் பரவி இருந்தனர்.

பதம் 4.1.10 : எனது அன்பிற்குரிய மைந்தனே, ஸ்வாயம்புவ மனு தனது மிகுந்த பாசத்திற்குரிய மகளான தேவகீதியை கர்தம முனிவருக்கு மண முடித்தார். அவர்களைப் பற்றி நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். நீயும் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறாய்.

பதம் 4.1.11 : பிரம்ம தேவனின் மகனும் உயிர்ப் பொருட்களின் மூதாதையர்களில் ஒருவருமான தட்சன் என்பவருக்கு ஸ்வாயம்புவ மனு தனது மகளான பிரசூதியை மணம் செய்வித்தார். தட்சனின் வம்சாவழியினர் மூன்று உலகிலும் பரவினர்.

பதம் 4.1.12 : ஒன்பது முனிவர்களிடம் ஏற்கெனவே மணமுடித்துக் கொடுக்கப்பட்ட கர்தம முனிவரின் ஒன்பது புதல்விகளைப் பற்றி ஏற்கெனவே நீ அறிவாய். இப்போது நான் அந்த ஒன்பது புதல்விகளின் சந்ததியினரைப் பற்றிக் கூறப் போகிறேன். கவனமுடன் கேட்பாயாக.

பதம் 4.1.13 : கர்தம முனிவரின் மகளான கலா என்பவள் மரீசி என்பவரை மணந்து காச்யபர் மற்றும் பூர்ணிமா என்னும் இரண்டு புதல்வர்களை ஈன்றெடுத்தாள். அவர்களின் சந்ததியினர் இவ்வுலகம் முழுவதும் விரிந்து, பரந்து வாழ்ந்தனர்.

பதம் 4.1.14 : அன்பான விதுரனே, காச்யபர் மற்றும் பூர்ணிமான் என்னும் இருவரில், பூர்ணிமான் விரஜன், விஸ்வகன், மற்றும் தேவகுல்யை என்னும் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தான். இம்மூவரில் தேவகுல்யை என்பவள் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளைக் கழுவி வரும் நீராகும். அதுவே பின்னர் பெருக்கெடுத்து தேவலோகத்திலுள்ள கங்கையாக மாறுகிறது.

பதம் 4.1.15 : அத்திரி முனிவரின் மனைவி அனசூயை மூன்று புகழ்வாய்ந்த மைந்தர்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள் சோமன், தத்தாத்ரேயர் மற்றும் துர்வாசர் ஆவர். இவர்கள் மூவரும், பகவான் விஷ்ணு, சிவபெருமான் மற்றும் பிரம்மதேவன் ஆகிய மூவரின் அம்ச அவதாரங்கள் ஆவர். சோமன் பிரம்மதேவனின் தன்மையோடும், தத்தாத்ரேயர் பகவான் விஷ்ணுவின் இயல்போடும், துர்வாசர் சிவபெருமானின் இயல்போடும் அவதரித்தனர்.

பதம் 4.1.16 : இதனைக் கேட்ட பிறகு மைத்ரேயரிடம் விதுரர் கேட்டார்: எனது அன்பிற்குரிய குருவே, படைத்தல், காத்தல், அழித்தல் என்றும் முத்தொழிலுக்கும் உரியவர்களான நான்முகப் பிரம்மனும், விஷ்ணுவும், சிவபெருமானும் அத்திரி முனிவரின் மனைவியினிடத்தில் குழந்தைகளாக எவ்வாறு பிறந்தனர் என்பதைக் கூறியருளமாட்டீரா?

பதம் 4.1.17 : மைத்ரேயர் கூறினார்: அத்திரி முனிவர் அனசூயையினை மணந்த பின்னர் மக்கட்தொகையைப் பெருக்க வேண்டும் என்னும் பிரம்ம தேவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டும், கடுமையான தவத்தினை மேற்கொள்ளவும் அவர் தன் மனைவியுடன் ருக்ஷம் என்னும் மலைக்குச் சென்றார்.

பதம் 4.1.18 : அம்மலையின் அடிவாரத்தில் நிர்விந்தியை என்னும் நதி ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரைகளில் அசோக மரங்களும், பலாச மரங்களும் நிறைந்தது. அவற்றின் மலர்கள் எங்கும் மணம் பரப்பிக் கொண்டும் மிக அருகில் உள்ள அருவியிலிருந்து எப்போதும் வரும் இழுமென்னும் ஒலி இனிமை நிறைந்தும் இருந்தது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியினை அத்திரி முனிவரும் அவர் மனைவியும் அடைந்தனர்.

பதம் 4.1.19 : அங்கு அம்மாமுனிவர் யோக சுவாசப் பயிற்சியில் தன் மனதைச் செலுத்தி எல்லாப் பற்றுக்களையும் அறுத்து வெறும் காற்றை மட்டும் உண்டு ஒற்றைக் காலில் நின்று நூறு வருடங்கள் தவம் செய்தார்.

பதம் 4.1.20 : அவர் நினைக்கலுற்றார்: நான் யாரைச் சரண் புகுந்திருக்கின்றேனோ அவ்வுலக நாயகனார் என் மீது கருணை கொண்டு அவரைப் போலவே எனக்கு ஒரு மைந்தனை அளித்து அருள வேண்டும்.

பதம் 4.1.21 : அத்திரி முனிவர் இவ்வாறு கடுமையான தவம் இயற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவர் செய்த பிராணாயாமப் பயிற்சியினால் அவர் தலையிலிருந்து தீப்பிழம்பு ஒன்று வெளிவந்தது. இதனை மூவுலகங்களிலுள்ள மும்மூர்த்திகளும் கண்டனர்.

பதம் 4.1.22 : உடன் மும்மூர்த்திகளும், அப்ஸரஸுகள், கந்தர்வர்கள், ஸித்தர்கள், வித்யாதரர்கள், நாகர்கள், மற்றும் தேவர்கள் புடை சூழ அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்தினை அடைந்தனர். இவ்வாறு அவர்கள் தமது தவத்தினால் புகழ்பெற்ற மாமுனிவர் அத்திரியின் தவச்சாலைக்குள் சென்றனர்.

பதம் 4.1.23 : ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்து கொண்டிருந்த முனிவர் மும்மூர்த்திகளும் தன்முன் ஒரே சமயத்தில் தோன்றியது கண்டு உளம் பூரித்து மிகுந்த முயற்சியுடன் அவ்வொற்றைக் காலுடனேயே நடந்து அவர்களை அடைந்தார்.

பதம் 4.1.24 : அதன் பின்னர், கையில் சிறுபறையும், தர்ப்பைப்புல்லும், சக்கரமும் ஏந்தி காளையின் மீதும், அன்னத்தின் மீதும், கருடனின் மீதும், அமர்ந்திருந்த மும்மூர்த்திகளையும் அவர் வழிபடலானார். நீண்ட நெடுமரம் போல் நிலத்தில் வீழ்ந்து அம்முனிவர் மும்மூர்த்திகளையும் வணங்கினார்.

பதம் 4.1.25 : மும்மூர்த்திகளும் தன்மீது கருணை கொண்டு தனக்கு காட்சி தந்தமை கண்டு அத்திரி முனிவர் மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவர்களிடமிருந்து வீசிய ஒளி தனது கண்களை கூசச் செய்தமையினால் அவர் சிறிது நேரம் தனது கண்களை மூடினார்.

பதங்கள் 4.1.26 – 4.1.27 : மும்மூர்த்திகளினால் கவரப்பட்டு தன் இதயம் பறி கொடுத்து சிறிது நேரம் மெய்மறந்திருந்த அத்திரி முனிவர் தன்னுணர்வு பெற்று உலக நாயகர்களைக் கூப்பிய கரங்களுடனும், இனிமையான வார்த்தைகளுடனும் துதிக்க ஆரம்பித்தார். ஒ, பிரம்ம தேவனே, மகாவிஷ்ணுவே, சிவ பெருமானே! யுகங்கள் தோறும் படைத்தல், காத்தல், அழித்தல் என்பவற்றிற்காக ஜட இயற்கையின் முக்குணங்களை ஏற்றுக் கொள்வதின் மூலம் நீங்கள் தனித்தனி உடல்களைப் பெற்று உங்களுக்குள் பிரிந்திருக்கின்றீர்கள். உங்கள் மூவருக்கும் எனது தலை தாழ்த்தி வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு எனது தவத்தினால் உங்களில் யாரை அழைத்தேன் என்று அறிந்து கொள்ளவும் விரும்புகிறேன்.

பதம் 4.1.28 : நான் எனக்கு முழுமுதற் கடவுளைப் போன்றே ஓர் குழந்தை வேண்டும் என்று நினைத்து அவரை அழைத்தேன். ஆனால் அவரோ மனிதனின் மன யூகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருந்த போதிலும் நீங்கள் மூவரும் இங்கே எழுந்தருளியுள்ளீர்கள். நீங்கள் மூவரும் எவ்வாறு இங்கு வந்தீர்கள் என்பதை அன்பு கொண்டு மிகவும் குழப்பமுற்றிருக்கும் எனக்கு விளக்கி அருள்வீராக.

பதம் 4.1.29 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: அத்திரி முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மும்மூர்த்திகளும் புன்னகை புரிந்து கீழ் வரும் பதிலை இனிய வார்த்தைகளினால் கூறினர்.

பதம் 4.1.30 : மும்மூர்த்திகளும் அத்திரி முனிவரிடம் கூறினர்: அன்பான அந்தணரே, உமது லட்சியத்தில் நீர் உறுதியாக இருந்தீர். அதனாலேயே நாங்கள் வந்தோம். இல்லையேல் நிச்சயம் வந்திருக்கமாட்டோம். நீர் யாரை நினைத்துத் தவமியற்றினீரோ அவர் நாங்கள் தான், ஆகையினால் நாங்கள் உம் முன் தோன்றினோம்.

பதம் 4.1.31 : எங்களது இயல்புடன் கூடிய புதல்வர்கள் உமக்குப் பிறப்பார்கள்; எல்லா நன்மைகளும் உமக்கு உண்டாகவேண்டுமென்று விரும்புவதால் அப்புதல்வர்கள் உமது புகழினை இவ்வுலகமெங்கணும் பரப்புவார்கள்.

பதம் 4.1.32 : இவ்வாறு பிரம்ம தேவனும், மகாவிஷ்ணுவும், சிவபெருமானும் அத்திரி முனிவர் வேண்டிய வரத்தினை அவருக்கு அருளிவிட்டு, அத்திரி முனிவரும் அவர் மனைவியும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அங்கிருந்து மறைந்தனர்.

பதம் 4.1.33 : அதன் பிறகு பிரம்ம தேவனின் இயல்புடன் திங்கட் கடவுளும், பகவான் விஷ்ணுவின் இயல்புடன் மிகச் சிறந்த யோகியான தத்தாத்ரேயரும், பகவான் சங்கரரின் (சிவபெருமான்) இயல்புகளுடன் மாமுனிவர் துர்வாசரும் பிறந்தனர். இப்பொழுது நீ என்னிடமிருந்து அங்கிரச முனிவரின் பரம்பரையினரைப் பற்றி அறிவாயாக.

பதம் 4.1.34 : அங்கிரசு முனிவரின் மனைவி சிரத்தை என்பவள் சினிவாலீ, குகூ, ராகா மற்றும் அனுமதி என்னும் நான்கு புதல்விகளை ஈன்றாள்.

பதம் 4.1.35 : இந்நான்கு புதல்வியர்களைத் தவிர அவள் இரண்டு புதல்வர்களையும் ஈன்றெடுத்தாள். ஒருவர் உதத்யர் என்பவர் ஆவார். மற்றொருவர் கற்றறிந்த ஞானியான பிரகஸ்பதி ஆவார்.

பதம் 4.1.36 : புலத்தியர் தன் மனைவி அவிர்பூ என்பவள் மூலம் அகத்திய முனிவரைப் பெற்றெடுத்தார். இவரே மறுபிறப்பில் தராக்னியாக விளங்கினார். இவருக்குப் பின் புலத்தியர் மிகச் சிறந்த தவப்புதல்வரான விஸ்ரவானை ஈன்றெடுத்தார்.

பதம் 4.1.37 : விஸ்ரவானுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி இடவிடாவிற்கு இயக்கர்களின் தலைவனான குபேரன் பிறந்தான். இரண்டாவது மனைவி கேசினீ, இராவணன், கும்பகர்ணன், வீடணன் என்னும் மூவரை ஈன்றெடுத்தாள்.

பதம் 4.1.38 : புலஹ முனிவரின் மனைவியான கதி என்பவள் கர்மஸ்ரேஷ்டன், வரீயான், ஸஹிஷ்ணு என்னும் மூன்று மைந்தர்களை ஈன்றெடுத்தாள். அம்மூவருமே மிகச் சிறந்த முனிவர்களாவர்.

பதம் 4.1.39 : மாமுனிவர் கிரதுவின் மனைவியான கிரியா என்பவள் அறுபதனாயிரம் முனிவர்களை ஈன்றெடுத்தாள். அவர்கள் வாலகில்யர்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே ஆன்மீக அறிவில் தேர்ந்தவர்களாகவும் அவ்வறிவின் ஒளி தங்கள் உடல்களில் ஒளிரப் பெற்றும் விளங்கினார்கள்.

பதம் 4.1.40 : மாமுனிவர் வசிஷ்டரின் மனைவியும் அருந்ததி என்றழைக்கப்படுகின்றவளுமாகிய ஊர்ஜா, மாசு மருவற்ற ஏழு முனிபுங்கவர்களை ஈன்றெடுத்தாள். அவர்களின் தலைவர் சித்ரகேது என்பவர்.

பதம் 4.1.41 : இவ்வேழு முனிவர்களின் பெயர்கள் பின்வருமாறு: சித்ரகேது, ஸுரோசி, விரஜான், மித்திரன், உல்பணன், வஸுப்ருத்யனன் மற்றும் துயுமான் ஆகும். வசிஷ்டரின் மற்றொரு மனைவியிடமிருந்தே மற்றுஞ் சில தேர்ந்த புதர்வர்களும் பிறந்தனர்.

பதம் 4.1.42 : அதர்வான் முனிவரின் மனைவியான சித்தி என்பவள் அஸ்வஸிரான் என்னும் மைந்தனை ஈன்றெடுத்தாள். அவள் தத்யஞ்சம் என்னும் மிகப்பெரிய உறுதிமொழியினை மேற்கொண்டவள். இப்பொழுது நீ என்னிடமிருந்து பிருகு முனிவரின் பரம்பரையினைப் பற்றி அறிவாயாக.

பதம் 4.1.43 : பிருகு மாமுனிவர் மிகப்பெரிய பேறு பெற்றவர். அவர் தனது மனைவியான கியாதி என்பவளிடத்து தாதா, விதாதா என்னும் இரு மைந்தர்களையும் ஸ்ரீ என்னும் ஒரு மகளையும் பெற்றெடுத்தார். அம்மகள் முழுமுதற் கடவுளினிடத்துச் சிறந்த பற்றுடையவளாக விளங்கினாள்.

பதம் 4.1.44 : மேரு முனிவருக்கு இரண்டு புதல்விகள். அவர்களது பெயர்கள் ஆயதி மற்றும் நியதி என்பவையாகும். அவர்களிருவரும் தாதா மற்றும் விதாதாவை மணம் புரிந்தனர். இம்மகளிர் இருவரும் மிருகண்டரையும் பிராணரையும் ஈன்றெடுத்தனர்.

பதம் 4.1.45 : மிருகண்டரிடமிருந்து மார்கண்டேய முனிவரும், பிராணரிடமிருந்து வேதஸிரானும் பிறந்தனர். வேதஸிரானின் மைந்தனே கவி என்றழைக்கப்படும் உஷனா (சுக்கிராச்சாரியார்) ஆவார். எனவே கவி என்பாரும் பிருகு பரம்பரையினைச் சார்ந்தவர் ஆகிறார்.

பதங்கள் 4.1.46 – 4.1.47 : எனது அன்பிற்குரிய விதுரனே, உலகின் மக்கட் தொகையானது முனிவர்களின் மரபினராலும், கர்தம முனிவரின் புதல்விகளினாலும் இவ்வாறு பெருகியது. இவ்வம்சாவழியினரைப் பற்றிய விவரங்களை நம்பிக்கையுடன் கேட்கும் ஒருவர் தனது எல்லாவிதப் பாவங்களில் இருந்தும் விடுதலையடைகிறார். மனுவின் மற்றொரு புதல்வியான பிரசூதி என்பவள் பிரம்மாவின் புதல்வனான தட்சனை மணந்தாள்.

பதம் 4.1.48 : தட்சன் தனது மனைவி பிரசூதியினிடத்தில் செந்தாமரை போன்ற சிவந்த விழிகளையுடைய அழகிய பதினாறு புதல்விகளைப் பெற்றெடுத்தாள். இவர்களுள் பதின்மூன்று பேர்கள் தர்மராஜனுக்கும் ஒருத்தி அக்கினி தேவனுக்கும் மணமுடிக்கப்பட்டனர்.

பதங்கள் 4.1.49 – 4.1.52 : மீதமிருந்த இருவரில் ஒருத்தி தேவலோகத்திற்குத் தானமாக வழங்கப்பட்டாள். அங்கே அவள் அமைதியுடன் வாழ்ந்தாள். மற்றொருத்தி உலகப் பிடிப்புகளில் இருந்து பாவிகளை விடுவிக்கும் சிவபெருமானுக்கு மணமுடிக்கப்பட்டாள். தர்மராஜனுக்குக் கொடுக்கப்பட்ட தக்ஷனின் பதின்மூன்று புதல்வியரும் பின்வரும் மைந்தர்களை ஈன்றெடுத்தனர்: சிரத்தை சுபனையும், மைத்ரி பிரஸாதனையும், தயை அபயனையும், சாந்தி சுகனையும், துஷ்டி முதனையும், புஷ்டி சுமயனையும், கிரியா யோகனையும், உன்னதி தர்பனையும், புத்தி அர்தனையும், மேதை ஸ்மிருதியையும், திதிக்ஷை க்ஷேமனையும், ஹிரீ என்பவள் பிரஷ்ரயனையும் எல்லா நற்குணங்களையும் தன்னிடத்தே கொண்ட மூர்தி என்பவள் முழுமுதற் கடவுளான நமோ நாராயணனையும் ஈன்றெடுத்தாள்.

பதம் 4.1.53 : ஓம்-நாராயணர் தோன்றியதைக் கண்டு இவ்வுலகம் முற்றும் மகிழ்ச்சியில் மூழ்கியது. அனைவரின் உள்ளங்களும் அமைதியடைந்தன. மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்துத் திக்குகளிலுமுள்ள காற்றும், நதிகளும், மலைகளும் கூட களிப்பில் திகைத்தன.

பதங்கள் 4.1.54 – 4.1.55 : தேவர்கள் மங்கல வாத்தியங்கள் முழங்கினர். மலர் மாரி பொழிந்தனர். நர-நாராயணர் தோன்றியமையால் சாந்தியுற்ற முனிவர்கள் வேத மந்திரங்களை முழங்கினர். தேவலோகத்துக் கந்தர்வர்களும் கின்னரர்களும் பாடி மகிழ, எழில் சிந்தும் தேவமகளிர் ஆடி மகிழ்ந்தனர். மும்மூர்த்திகளுள் ஒருவரான பிரம்ம தேவனும் தனது மரியாதைக்குரிய வணக்கங்களைத் தெரிவித்தார்.

பதம் 4.1.56 : தேவர்கள் கூறினர்: தனது புறச் சக்தியினால் இவ்வியல் உலகினைப் படைத்து, காற்றும், மேகமும் எவ்வாறு வானில் உள்ளனவோ அதைப்போல் இவ்வுலகினையும் தன்னுள் வைத்திருப்பவருமான முழுமுதற் கடவுள் தர்மரின் இல்லத்தில் இப்பொழுது நர நாராயண முனிவராக அவதரித்துள்ளார். அ வருக்கு நமது மரியாதைக்குரிய வந்தனங்களைத் தெரிவிப்போமாக.

பதம் 4.1.57 : உண்மையாக அங்கீகரிக்கப்பட்ட வேத இலக்கியங்களினால் அறிந்து கொள்ளப்பட்டவரும், தன்னால் படைக்கப்பட்ட இவ்வுலகில், உள்ள அனைத்துப் பேரிடர்களையும் நீக்குவதற்காக, அமைதியினையும், செல்வத்தினையும் படைத்தவருமான முழுமுதற் கடவுள் அன்பு கொண்டு தனது கருணை மிக்கப் பார்வையினை தேவர்கள் மீது வைப்பாராக. நல்லூழ் விளைக்கும் தேவதை வாழ்கின்ற குற்றமற்ற செந்தாமரையின் அழகினையும் வெல்லும் தன்மை வாய்ந்தது அவரது கருணை மிக்க பார்வையாகும்.

பதம் 4.1.58 : (மைத்ரேயர் கூறினார்:) ஓ, விதுரனே, தேவர்கள் இவ்வாறு நர நாராயணராக பிறப்பெடுத்த முழுமுதற் கடவுளை வணங்கினர். பகவானும் தமது கருணை மிக்க விழிகளினால் அவர்களைப் பார்த்துவிட்டு கந்தமாதனம் என்னும் மலையினை நோக்கிப் புறப்பட்டனர்.


பதம் 4.1.59 : கிருஷ்ணரின் அம்சமான நர நாராயண ரிஷியே யது மற்றும் குரு குலத்தில் கிருஷ்ணராகவும், அர்ச்சுனனாகவும், இவ்வுலகின் துன்பத்தினைக் குறைப்பதற்காகப் பிறந்துள்ளார்.

பதம் 4.1.60 : அக்கினி எனும் அதிபதித் தெய்வம் தன் மனைவி சுவாகாவினிடத்தில் பாவகன், பவமானன் மற்றும் சுசி என்னும் மூன்று புதல்வர்களை ஈன்றெடுத்தார். அவர்களே வேள்வித் தீயில் அர்ப்பணிக்கப்படுபவற்றை உண்டு உயிர் வாழ்பவர் ஆவர்.

பதம் 4.1.61 : அம்மூன்று புதர்வர்களுக்கும் நாற்பத்தைந்து மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் அனைவரும் அக்கினித் தேவர்களேயாவர். ஆகவே, அக்கினித் தேவர்களின் மொத்த எண்ணிக்கை தந்தையாரையும், தாத்தாக்களையும் சேர்த்து நாற்பத்தொன்பது ஆகும்.

பதம் 4.1.62 : அருவவாதிகளான அந்தணர்களால் வேள்வித் தீயில் எரியப்படும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றுக் கொள்பவர்கள் இந்த நாற்பத்தொன்பது அக்கினித் தேவர்களேயாவர்.

பதம் 4.1.63 : அக்கினிஷ்வாத்தர்கள், பர்ஹிஷதர்கள், சௌம்யர்கள், மற்றும் ஆஜ்யபர்கள் அனைவரும் பிதாக்கள் ஆவர். அவர்கள் ஸாக்னிகள் அல்லது நிராக்னிகள் ஆவர். இவ்வனைத்துப் பிதாக்களின் மனைவியானவள் தட்ச சக்ரவர்த்தியின் மகளான சுவதா ஆவாள்.

பதம் 4.1.64 : பிதாக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுவதா என்பாள் வயுனா, தாரிணீ என்னும் இரண்டு புதல்விகளை ஈன்றெடுத்தாள். அவர்கள் இருவருமே அருவவாதிகள், என்பதோடு உன்னத அறிவும், வேத அறிவும் மிக்கவர்களாகவும் விளங்கினர்.

பதம் 4.1.65 : தட்சனின் பதினாறாவது புதல்வி சதீ என்பவள். அவள் தான் சிவபெருமானின் மனைவியும் ஆவாள். எப்போதும் தன் கணவருக்கு நம்பிக்கையுடன் பணிவிடைகள் செய்தும் அவளுக்கு குழந்தைப் பேறு கிடைக்கவில்லை.

பதம் 4.1.66 : இதன் காரணம் என்னவென்றால் சதீயின் தந்தையான தட்சன் குற்றமில்லாதவராயிருந்தும் சிவபெருமானை எப்போதும் நிந்தித்ததேயாகும். இதனைத் தொடர்ந்து சதீ முதிர்ச்சியடையாத பருவத்திலேயே யோக சித்தியின் மூலம் தனது உடலை விட்டுவிட நேர்ந்தது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare