அத்தியாயம் – 9
படைப்புச் சக்திக்காக பிரம்மதேவர் செய்த பிரார்த்தனைகள்
பதம் 3.9.1 : பிரம்ம தேவர் கூறினார்: ஒ பகவானே, நெடுங்காலமாகத் தவம் செய்து உம்மை அறியும் அறிவைப் பெற்றிருக்கிறேன். ஒ, உம்மை அறிவதற்கில்லாத உடலைப் பெற்றிருக்கும் உயிர்ப் பொருள்களின் துர்பாக்கிய நிலையினை என்னென்பேன்! எனது பகவானே, நீர் ஒருவரே அறிந்து கொள்ளத் தக்கவர், ஏனென்றால் உம்மை விட உயர்ந்தது எதுவுமில்லை. அவ்வாறு ஒன்று இருக்குமென்றால் அது முழுமையுடையதாயிராது. பொருள்களின் படைப்புச் சக்தியினை வெளிப்படுத்தியதின் மூலம் நீரே பரமனாக விளங்குகிறீர்.

பதம் 3.9.2 : நான் காணும் வடிவமானது ஜட மாசுக்களிலிருந்து நித்திய விடுதலை பெற்றது என்பதோடு, அது பக்தர்களிடத்துக் கருணை காட்டுவதற்காக வந்த அகச்சக்தியின் வெளிப்பாடுமாகும். இவ்வவதாரமானது பல்வேறு அவதாரங்களுக்குக் காரணமான மூல அவதாரமாகும். மேலும் நான் உமது நாபி என்னும் இல்லத்திலிருந்து வளர்ந்த தாமரை மலரில் பிறந்தவனுமாவேன்.

பதம் 3.9.3 : ஒ, பகவானே, நீர் இப்பொழுதிருக்கின்ற சச்சிதானந்த வடிவத்தைக் காட்டிலும் ஒர் உயர்ந்த வடிவினை நான் கண்டதே இல்லை. ஆன்மீக வானில் இருக்கும் உமது அருவ பிரம்மஜோதிக்கு, எப்பொழுதேனும் ஏற்படுகின்ற மாற்றமோ, அல்லது அகச்சக்தியினால் ஏற்படும் அழிவோ இல்லை. நான் உம்மைச் சரணடைகிறேன், ஏனெனில் நான் எனது ஜடவுடல் மற்றும் புலன்களினால் வீண் கர்வம் கொண்டிருக்க, மேலாண்மைக்குரியத் தாங்களோ பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்தும், விஷய சம்பந்தம் ஏதும் இல்லாதவராக விளங்குகிறீர்.

பதம் 3.9.4 : முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் இப்போதைய வடிவை அல்லது உட்புலனுக்கு மேற்பட்ட ஓர் உன்னதமான வடிவம் அனைத்து உலகங்களுக்கும் மங்களகரமானதேயாகும். மேலும் நீர், உமது பக்தர்கள் உளமுருகி வணங்கும் தனிப்பட்ட நித்திய வடிவிலேயே தோன்றியிருக்கிறீர். ஆகையினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன். நரகத்தின் பாதையில் பயணம் செய்வதற்காகப் பிறந்தவர்கள் உமது தனிப்பட்ட வடிவினைப் புறக்கணிக்கின்றனர், ஏனெனில், உலகியல் பொருட்களின் மீது தமது கவனத்தை அவர்கள் செலுத்துகின்றனர்.

பதம் 3.9.5 : பகவானே, உமது தாமரைத் திருவடிகளின் நறுமண சுகந்தத்தினை சுவாசித்தும், காற்றில் வரும் வேத ஒலிகளைச் செவிகளில் வாங்கிக் கொண்டும் மனிதர்கள் உமது பக்தித் தொண்டினை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களைப் பொருத்தமட்டில் நீங்கள் அவர்களது இதயத் தாமரைகளிலிருந்து பிரித்திருப்பதேயில்லை.

பதம் 3.9.6 : ஒ, பகவானே, உலகிலுள்ள மக்கள் அனைவரும் தங்களது உலகியல் கவலைகளினால் நிலை தடுமாறுகின்றனர். அவர்கள் எப்பொழுதும் அஞ்சுகின்றனர். அவர்கள் எப்பொழுதும் செல்வத்தையும், உடலையும், நண்பர்களையும் பாதுகாக்க முயல்கின்றனர். அவர்கள் சோகத்தினாலும், சட்டத்திற்குப் புறம்பான ஆசைகளினாலும், உடைமைகளினாலும் கவலைப்படுகின்றனர். மேலும் அவர்கள் பேராசையின் அடிப்படையில் “நான்”“எனது ” என்னும் அழியக்கூடியக் கருத்துக்களின் மீதே எதனையும் ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் எத்தனைக் காலம் உமது திருவடித் தாமரைகளைச் சரணடையாதிருக்கின்றனரோ அத்தனைக் காலமும் இத்தகைய கவலைகளில் ஆழ்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

பதம் 3.9.7 : ஒ, பகவானே, உமது உன்னதச் செயல்களைப் பற்றி கேட்டல் மற்றும் ஓதுதல் என்னும் அனைத்து மங்கள காரியங்களைத் தொலைத்தவர்கள் நிச்சயம் துரதிர்ஷ்டசாலிகளே. மேலும் அவர்கள் தங்கள் தற்புத்தியினையும் இழந்தவர்களே ஆவர். அவர்கள் அமங்களச் செயல்களில் ஈடுபட்டு புலனுகர்ச்சி இன்பங்களில் சிறிது காலத்திற்குத் திளைத்திருப்பர்.

பதம் 3.9.8 : ஓ, எந்தன் பகவானே, இவ்வேழை ஜென்மங்கள் எல்லாம் பசி, தாகம், வாதம், பித்தம், சிலேட்டுமம் போன்றவற்றினால் குழப்பமுறுகின்றனர். மேலும் அவை உயிரை உறையச் செய்யும் பனி, எரியச் செய்யும் வெயில், மழை போன்ற பல இயற்கை இடையூறுகளினால் இடருற்று காமாக்கினியினாலும், ஆற்ற முடியாத சினத்தாலும் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றனர். நான் அவர்கள் மீது மிகுந்த இரக்கமும் கவலையும் கொள்கிறேன்.

பதம் 3.9.9 : ஒ, பகவானே, உலகியற் துன்பங்கள் என்பவை ஆத்மாவைப் பொறுத்தவரை துன்பங்களே அல்ல. ஆயினும் மேலும் பந்தப்பட்ட ஆத்மா உடலை புலனின்பத்திற்கானது என்று எண்ணும் வரை அவன் உமது புறச்சக்தி என்னும் மாயையினால் பாதிக்கப்பட்டு உலகியற் துன்பங்கள் என்னும் வலையிலிருந்து மீளவே முடியாது.

பதம் 3.9.10 : இத்தகைய பக்தரல்லாதார் தங்கள் புலன்களைத் துன்பந் தருகின்ற விரிவான வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர். அதனால் அவர்கள் இரவில் உறக்கமின்றி அவதியுறுகின்றனர். காரணம் அவர்கள் புத்தியானது பல்வேறு மன யூகங்களைச் செய்து அவர்கள் தூக்கத்தைத் தொடர்ந்து கெடுக்கிறது. இயற்கை மீறிய சக்தியினால் அவர்களது பல்வேறு திட்டங்களும் சீர்குலைவதினால் அவர்கள் சோர்வுறுகின்றனர். ஏன் உம்மைப்பற்றிய உன்னத சித்தனைக்கு எதிரான மாமுனிவர்கள் கூட நடப்பு உலகில் கற்றிச் சுழல வேண்டியவர்களாகின்றனர்.

பதம் 3.9.11 : பகவானே, சரியான முறையில் உம்மைப் பற்றிக் கேட்பதின் மூலம் உமது பக்தர்கள் தங்கள் காதுகளினாலேயே உம்மைக் காண்கின்றனர். அவ்வாறு அவர்கள் தங்கள் இதயங்களைச் சுத்தி செய்து கொண்ட பின்னர் நீர் அங்கே வந்தமர்கிறீர். நீர் உமது பக்தர்கள் மீது அளவற்ற கருணையுடையவராக விளங்குகிறீர். அதனால்தான் அவர்கள் உம்மை எந்நேரமும் தியானிக்கும் உமது குறிப்பிட்ட நித்திய வடிவத்திலேயே நீர் காட்சி தருகிறிர்.

பதம் 3.9.12 : எந்தன் பகவானே, பல்வேறு பூஜைப் பொருட்களுடன் மிகவும் ஆடம்பரமாக உம்மை வழிபடும் தேவர்கள் மீது நீர் மனநிறைவு அடைவதில்லை. ஏனெனில் அவர்கள் லௌகீகப் பேராசைகளுக்கு ஆட்பட்டுள்ளனர். நீர் உமது அகாரணமான கருணையினைக் காட்டுவதற்காக அனைவரின் உள்ளங்களிலும் பரமாத்மாவாக வீற்றிருக்கிறீர். மேலும் நீரே காலந்தோறும் மக்கள் நலனை விரும்புகின்றீர். ஆயினும் பக்தரல்லாதார்க்கு நீர் கானல் நீர் போன்று காணமுடியாது ஒதுங்கி விடுகின்றீர்.

பதம் 3.9.13 : மக்களின் புண்ணியச் செயல்களான, தானம், தவம், துறவு மற்றும் வேள்விகள்
போன்றவையும், உம்மை வழிபடுவதற்காகச் செய்யப்படும் இறைபணிச் செயல்கள். நீர் திருப்தியுறும் வண்ணம் உமக்கு அர்ப்பணிக்கப்படும் அச்செயல்களின் பலன்கள் போன்றவை அனைத்தும் நன்மை தருவனவேயாகும். இவை போன்ற அறநெறிச் செயல்கள் என்றும் வீணாகப் போவதில்லை.

பதம் 3.9.14 : தமது அகச்சக்தியினால் தம்மை நித்தியமாக வேறுபடுத்திக் காட்டுபவரும், எல்லாம் கடந்த பரம்பொருளாக விளங்குபவருக்கும் எனது வந்தனங்களை நான் சமர்ப்பிக்கிறேன். தன்னுணர்வு பெறுவதற்கான புத்தியின் மூலமே அவரது வேறுபாடில்லாத அருவத் தன்மையானது அறிந்து கொள்ளப்படுகிறது. இப்பிரபஞ்சத்தின் படைத்தலும், காத்தலும், அழித்தலுமாகிய செயல்களை தமது லீலைகளினால் அனுபவித்து மகிழ்பவருக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக.

பதம் 3.9.15 : லோகாயதச் செயல்களைப் போன்று புரியாத பாவனைகளாகத் தோன்றும் அவரது அவதாரங்கள், குணங்கள் மற்றும் செயல்களைக் கொண்ட பகவானின் தாமரைத் திருவடிகளை நான் சரணடைவேனாக. சுய உணர்வு இழந்த நிலையில் இவ்வாழ்வு நீங்கி வெளியேறும்பொழுதுகூட ஒருவன், அவரது புனித நாமங்களை உச்சரித்தானென்றால், அவன் பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் உடனடியாக நீங்குவதோடு, பகவானை நிச்சயம் அடைகின்றவனாகவும் ஆகிறான்.

பதம் 3.9.16 : இறைவனாகிய தாங்களே பிரபஞ்ச அமைப்பின் மூலவேராக விளங்குகிறீர். இம்மரமானது, தனது மூன்று அடிமரங்களினால் – யான், சிவபெருமான் மற்றும் பகவானான தாங்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்பவையாக முதலில் இயற்கையினை ஊடுருவி வளர்ந்து, மேலும் நாம் மூவரும் பல கிளைகளாகவும் வளர்ச்சி பெற்றோம். ஆகையினால் பிரபஞ்சத் தோற்றம் என்னும் மரமாக விளங்கும் உமக்கு எனது வணக்கங்களை அர்ப்பணிக்கிறேன்.

பதம் 3.9.17 : பொதுவாக மக்கள் எல்லோரும் மூடச் செயல்களிலேயே ஈடுபடுகின்றனர். அம்மூடச்செயல்கள் எல்லாம் அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக உம்மால் நேரடியாக விளக்கியருளப்பட்ட பயன்தரும் செயல்கள் அன்று. மூடச் செயல்களிடத்து அவர்கள் உறுதியுடன் இருக்கும் வரையில் வாழ்க்கைப் போராட்டத்தில் அவர்கள் போடும் திட்டங்கள் எல்லாம் தவிடு பொடியாகவே செய்யும். ஆகையினால் நான் எனது வணக்கங்களைக் காலந்தோறும் அழியாமல் செயல்படும் தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 3.9.18 : எந்தன் மேலான பகவானே. தளர்ச்சியடையாக் காலமாகவும், அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவராகவும் விளங்கும் உமக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கிறேன். இரண்டு பரார்தங்கள் வரை தொடர்ந்திருக்கும் ஓர் உலகில் நான் இருந்த போதிலும், பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உலகங்களுக்கும் நானே தலைவனாக இருந்த போதிலும், எண்ணற்ற தவங்களை நான் தன்னுணர்வு பெறுவதற்காகச் செய்திருந்த போதிலும் கூட நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.

பதம் 3.9.19 : ஓ எந்தன் பகவானே, நீர் உமது உன்னத லீலைகளை நடத்திக் காட்ட வேண்டுமெனும் விருப்பத்தின் பேரில் மனிதர்களை விட இழிந்த விலங்குகளாகவும், அவர்களை விட மேலான தேவர்களாகவும் அவதரிக்கின்றீர். நீர் உலகியல் மாசுக்களினால் பாதிக்கப்படுவதே இல்லை. நீர் உமக்குச் சொந்தமான உமது சமய அறநெறிகளை நிறைவேற்றும் நோக்கத்தின் பேரிலேயே இங்கு வருகை தருகிறீர். இவ்வாறு பல்வேறு வடிவங்களில் தோன்றும் முழுமுதற் கடவுளாகிய தங்களுக்கு எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பதம் 3.9.20 : யுக இறுதிக் காலத்தில் மோதிக் கொண்டு வரும் அலைகளையுடைய பிரளய வெள்ளத்தில் நித்திரை கொள்வது உமக்கு சுகமானதாகும். மேலும் பாம்புப் படுக்கையின் மீது பள்ளி கொண்டு நீர் உமது மகிழ்ச்சியினைப் புத்தியுள்ள உமது பக்தர்களுக்கு காட்டியருள்கிறீர். அந்நேரம் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உலகங்களும் உமது அடிவயிற்றில் அடக்கமாகி உள்ளன.

பதம் 3.9.21 : ஓ. நான் வழிபடுவதற்குரிய குறிக்கோளாக விளங்குபவரே, நான் உமது கருணையினால், பிரபஞ்சத்தினைப் படைப்பதற்கென்றே உமது நாபிக் கமலத்திலிருந்து பிறந்தேன். இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உலகங்களும் நீர் மகிழ்ச்சியாக நித்திரை கொள்ளும் பொழுது உமது உன்னத வயிற்றினுள் நிலைபெற்றுள்ளன. இப்பொழுது உமது துயில் களைந்து விட்டது. உமது விழிகளோ எழில் மிக்க செந்தாமரை மலர்கள் போல் அலர்ந்து சிரிக்கின்றன.

பதம் 3.9.22 : முழுமுதற் காரணமாகிய பகவான் என்மீது தமது கருணையினைப் பொழிவாராக. அவர் ஒருவரே இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களின் ஒரே நண்பரும் ஆத்மாவும் ஆவார். மேலும் அவர் தமது ஆறுவகை வளங்களினால் அவர்கள் இறுதி இன்பம் பெறுவதற்காக அவர்களைக் காக்கவும் செய்கிறார். நானும் பகவானுக்கு மிகவும் விருப்பமான சரணடைந்த ஆத்மா ஆதலினால் அவர் முன்பு போல் நான் படைப்பதற்குரிய அகநோக்கினை கொடுத்து அருள் புரிவாராக.

பதம் 3.9.23 : முழுமுதற் கடவுளான பரமபுருஷ பகவானே எப்பொழுதும் தம்மைச் சரணடைந்த ஆத்மாக்களுக்கு வரமருள்பவராக இருக்கிறார். அவரது செயல்கள் அனைத்தும் அவரது அகச்சக்தியான ரமா அல்லது அதிர்ஷ்ட தேவதையின் மூலமே சட்டமாக்கப்படுகிறது. அவரது செயலான படைப்புத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே நான் அவரை வழிபடுகிறேன். மேலும் நான் எனது தொழிலின் மூலம் உலகப் பற்றால் பாதிப்படையக் கூடாது என்றும் பிரார்த்திக்கிறேன். ஏனெனில் அதுவே தான் படைக்கிறேன் என்னும் ஆணவத்திலிருந்து என்னைக் காக்கக் கூடியதாகும்.

பதம் 3.9.24 : பகவானின் சக்திகள் எண்ணற்றன. அவர் பிரளய வெள்ளத்தில் அறிதுயில் கொண்டிருந்தபொழுது அவர் உந்திச் சுழி என்னும் குளத்திலிருந்து தோன்றிய தாமரை மலரில் மொத்தப் பிரபஞ்சத்தின் சக்தியாக நான் பிறந்தேன். நான் இப்பொழுது, அவரது வேறுபாடுடையர் சக்திகளை பிரபஞ்சத் தோற்றத்தின் வடிவமாக வெளிப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறேன். ஆகையினால் பௌதிகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் வேளையில் வேத மந்திரங்களின் ஒலி அதிர்வுகளிலிருந்து நான் விலகி விடாதிருக்கும்படி வரமருளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

பதம் 3.9.25 : பரமபுருஷரும், ஆதியானவருமான பகவான் அளவற்ற கருணை உடையவர். அவர் தமது தாமரை விழிகளைத் திறந்து என்னை நோக்கி, புன்னகையுடன் தமது கருணையினை எனக்கு அளிப்பாராக, மேலும் அவர் இப்பிரபஞ்சம் முழுவதையும் மேம்படுத்தும் வன்மை மிக்கவர் என்பதோடு தமது அறிவுரைகளை அன்புடன் கூறி நமது அழுக்குகளை நீக்குபவரும் ஆவார்.

பதம் 3.9.26 : மைத்ரேய முனிவர் கூறினார்: ஒ, விதுரரே, முழுமுதற் கடவுளே தனது பிறப்பிற்கு ஆதாரம் என்பதை நினைவு கூர்ந்த பிரம்ம தேவர் அவரைத் தனது மனம் மற்றும் வாக்கினால் எந்த அளவிற்குப் பிரார்த்திக்க முடியுமோ அந்த அளவிற்கு அவரது கருணையினை வேண்டிப் பிரார்த்தித்தார். பிறகு அவர் தனது தவம், ஞானம் மற்றும் மனதின் ஒருமுகத் தன்மை போன்ற செயல்களினால் களைப்படைந்தவர் போன்று அமைதியாக இருந்தார்.

பதங்கள் 3.9.27 – 3.9.28 : பிரம்ம தேவர் பல்வேறு உலகங்களை நிர்மாணித்தல் மற்றும் அவற்றிற்காகத் திட்டமிடுதல் போன்றவற்றில் ஆர்வமும், பிரளய வெள்ளத்தைக் கண்டு கவலையும் அடைந்திருப்பதை பகவான் கண்டார். பிரம்ம தேவரின் மனநிலையை நன்கு புரிந்து கொண்ட பகவான் அவரிடம் எழுந்துள்ள மாயையினைப் போக்கும் நோக்கத்தில் மிகவும் ஆழ்ந்து சிந்தித்துப் பேசினார்.

பதம் 3.9.29 : முழுமுதற் கடவுள் பின்னர் கூறினார்: ஒ, பிரம்மதேவனே, வேத ஞானத்தின் ஆழம் அறிந்தவரே, படைப்புத் தொழிலை நிறைவேற்றுவதற்காக நீர் கவலையோ மனச்சோர்வோ அடைய வேண்டிய தேவையில்லை. நீர் என்னிடம் என்ன வேண்டிக் கேட்டீரோ, அது ஏற்கனவே உமக்கு அருளப்பட்டு விட்டது.

பதம் 3.9.30 : பிரம்மனே. எனது தயவினைப் பெறுவதற்காக எப்பொழுதும் தவத்திலும் தியானத்திலும் இருந்து ஞானத்திற்குரிய விதிகளைப் பின்பற்றுவீராக. இச்செயல்களினால் நீர் உமது உள்ளுணர்வாலேயே அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற முடியும்.

பதம் 3.9.31 : ஓ, பிரம்மனே, நீர் உமது படைப்புத் தொழிலைச் செய்யும் பொழுது பக்தித் தொண்டில் முற்றிலும் ஈடுபடுவீரானால் நீர் உமது உள்ளத்தில் மட்டுமல்லாது இப்பிரபஞ்சம் அனைத்திலும் என்னைக் காண்பீர், மேலும் என்னிடத்தில் உம்மையும், இப்பிரபஞ்சத்தையும் அனைத்து உயிர்களையும் கூடக் காண்பீர்.

பதம் 3.9.32 : விறகினுள் தீ இருப்பதைப் போன்று அனைத்து உயிர்ப் பொருள்களிடத்தும், அனைத்துப் பிரபஞ்சங்களிடத்தும் நான் இருப்பதை நீர் காணலாம். மனவாசகங் கடந்த பார்வையினை நீர் பெறும் பொழுதே அனைத்து வகையான மாயைகளிடம் இருந்தும் நீர் விடுதலை பெறமுடியும்.

பதம் 3.9.33 : ஸ்தூல மற்றம் சூட்கமக் கருத்துக்களிலிருந்து நீர் விடுதலை பெறும் பொழுதும், ஜட இயற்கைக் குணங்களின் பாதிப்புக்களிலிருந்து உமது புலன்கள் விடுதலை பெறும் பொழுதும், என்னுடனான தொடர்பில் உமது தூய வடிவத்தினை நீர் உணரலாம். அச்சமயமே நீர் உமது தூய உணர்வில் நிலைபெற முடியும்.

பதம் 3.9.34 : மக்கட்தொகையினை எண்ணற்ற அளவிற்குப் பெருக்க வேண்டும் என்று நீர் விருப்பங் கொண்டிருப்பதினாலும் மேலும் உமது தொண்டினைப் பலவகையாக நீர் விரிவுபடுத்தியிருப்பதினாலும் இதுபற்றிய எதையும் நீர் இழக்கப்போவதில்லை. ஏனெனில் நான் உம்மீது வைத்திருக்கும் அளவற்ற கருணையானது காலா காலங்களுக்கும் உயரக் கூடிய தன்மையுடையதாகும்.

பதம் 3.9.35 : நீரே ஆதி ரிஷியாவீர், உமது உள்ளம் எப்பொழுதும் என்மீது கட்டுண்டு இருப்பதனால், நீர் பல்வேறு வகையான பிரஜைகளை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும் ஒழுக்கக் குறைவான பேராசைக் குணமானது (ரஜோ குணம்) உம்மை அத்துமீறிக் கொண்டு வளர்வதில்லை.

பதம் 3.9.36 : ஏதேனும் தளையால் கட்டுண்ட ஆத்மா என்னை அறிதற்கு இயலாது. ஆயினும் நீர் எம்மை அறிந்து கொண்டதற்குக் காரணம் நான் எந்தவித ஜடப்பொருளுமன்று, அதிலும் குறிப்பாக யாம் பஞ்ச பூதங்களினாலும் மூன்று நுண்மைப் பொருட்களினாலும் ஆக்கப்பட்டவன் இல்லை என்பதை நீர் அறிந்து கொண்டதினாலேயாம்.

பதம் 3.9.37 : நீவிர் பிறந்த தாமரை மலரின் தண்டிற்கு ஆதாரமான இடம் ஒன்று இருக்கிறதா என்று அறிய அத்தண்டின் நாளத்தின் வழியே உட்புகுந்து சென்றும் உம்மால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. அதே சமயம் நான் எனது வடிவத்தினை உமக்கு உள்ளிருந்து வெளிப்படுத்துவேன்.

பதம் 3.9.38 : ஒ, பிரம்ம தேவரே, மனவாசகங்கடந்த எனது செயல்களை நீர் போற்றிப் புகழ்ந்த பிரார்த்தனைகள், என்னை அறிந்து கொள்வதற்காக நீர் செய்த தவங்கள், என்மீது நீர் கொண்ட நம்பிக்கை – இவையனைத்தும் எனது அளவற்றக் கருணையாகக் கருதப்படுதல் வேண்டும்.

பதம் 3.9.39 : லோகாயதவாதிகளுக்கு லோகாயதமாகத் தோன்றும் எனது உன்னதக் குணங்களின் மூலம் என்னை நீர் விளக்கியது கண்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உமது செயல்களினால் அனைத்து உலகங்களிலும் நான் புகழப்பட வேண்டும் என்னும் உமது விருப்பத்திற்கு எனது எல்லா ஆசிகளும் உரியதாகும்.

பதம் 3.9.40 : பிரம்ம தேவரைப் போன்று எந்தவொரு மனிதனும் என்னை வணங்கினால் நான் அவனது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவேன். நானே அனைத்து வரங்களுக்கும் தலைமை ஆவேன்.

பதம் 3.9.41 : மரபு வழியே செய்யப்பட்டு வரும் நற்செயல்களின் இறுதி லட்சியம், தவங்கள், வேள்விகள், தானங்கள், யோகங்கள் மற்றும் சமாதி நிலைகள் எல்லாம் எனது திருப்திக்காகத் தொழுது செய்யப்படுபவன என்பது தேர்ந்த ஞானிகளின் கருத்தாகும்.

பதம் 3.9.42 : ஒவ்வொரு தனிப்பட்டவரிடமும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். அனைவரிடத்தும் நானே பரம இயக்குநரும் மிகவும் அன்புடையோனுமாக இருக்கிறேன். மக்கள் தவறாகப் பூத மற்றும் நுண்ணுடல்களின் மேல் பற்றுடையோராயிருக்கின்றனர். ஆனால் அவர்கள் என்மீது மட்டுமே பற்றுடையோராயிருத்தல் வேண்டும்.

பதம் 3.9.43 : எனது அறிவுரைகளைப் பின்பற்றுவதின் மூலம் நீர் அன்று போலவே இன்றும் உயிர்களை உமது முழு வேத ஞானத்தினாலும் எல்லாவற்றிற்கும் மூல காரணமாக விளங்கும் என்னிடமிருந்து பெற்ற உடலினாலும் படைக்கக் கூடியவராவீர்.

பதம் 3.9.44 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: பிரபஞ்சத்தினைப் படைப்பவராகிய பிரம்ம தேவருக்கு அதனை எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பதற்கான அறிவுரைகளைக் கூறிய பின்னர் ஆதி புருஷரும், அவரது தனிப்பட்ட வடிவத்தில் வந்த முழுமுதற் கடவுளும் ஆகிய நாராயணர் அவ்விடத்திலிருந்து மறைந்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare