அத்தியாயம் – 3
பிருந்தாவனத்திற்கு வெளியில் பகவானின் லீலைகள்
பதம் 3.3.1
உத்தவ உவாச
தத: ஸ ஆகத்ய புரம் ஸ்வ-பித்ரோஸ்
சிகீர்ஷயா சம் பலதேவ-ஸம்யுத:
நிபாத்ய துங்காத் ரிபு-யூத-நாதம்
ஹதம் வ்யகர்ஷத் வ்யஸும் ஒஜஸோர்வ்யாம்

உத்தவ: உவாச—ஸ்ரீ உத்தவர் கூறினார்; தத:—அதன்பிறகு; ஸ:—பகவான்; ஆகத்ய—வந்து; புரம்—மதுராபுரிக்கு; ஸ்வ-பித்ரோ:—சொந்த பெற்றோர்; சிகீர்ஷயா—நன்மையை விரும்பி; சம்—நல்வாழ்வு; பலதேவ-ஸம்யுத:—பகவான் பலதேவருடன்; நிபாத்ய—கீழே இழுத்து; துங்காத்—அரியாசனத்திலிருந்து; ரிபு-யூத-நாதம்—பொதுஜன எதிரிகளின் தலைவனை; ஹதம்—கொன்றார்; வ்யகர்ஷத்—இழுத்து; வ்யஸும்—இறந்தான்; ஒஜஸா—பலத்துடன்; உர்வ்யாம்—தரையில்.

ஸ்ரீ உத்தவர் கூறினார்: பிறகு ஸ்ரீ பலதேவருடன் மதுராபுரிக்குச் சென்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தம் பெற்றோர்களை மகிழ்விக்கும் பொருட்டு. பொதுஜன எதிரிகளின் தலைவனான கம்சனை பெரும்பலத்துடன் அவனது அரியாசனத்திலிருந்து கீழே இழுத்துத்தள்ளிக் கொன்றார்.

பதம் 3.3.2
ஸாந்தீபனே: ஸக்ருத் ப்ரோக்தம் ப்ரஹ்மாதீத்ய ஸ-விஸ்தரம்
தஸ்மை ப்ராதாத் வரம் புத்ரம் ம்ருதம் பஞ்ச-ஜனோதராத்

ஸாந்தீபனே:—சாந்தீபனி முனிவரின்; ஸக்ருத்—ஒரே ஒருமுறை; ப்ரோக்தம்—உபதேசிக்கப்பட்ட; ப்ரஹ்ம—அனைத்து வேதங்களையும், அவற்றின் வெவ்வேறு கிளைகளையும்; அதீத்ய—கற்றபின்; ஸ-விஸ்தரம்—விவரமாக; தஸ்மை—அவருக்கு; ப்ராதாத்—அளித்தார்; வரம்—ஒரு வரத்தை; புத்ரம்—அவரது மகனை; ம்ருதம்—இறந்துவிட்ட; பஞ்ச-ஜன—மரணமடைந்த ஆத்மாக்களின் பிரதேசம்; உதராத்—உள்ளிருந்து.

பகவான் அவரது குருவான சாந்தீபனி முனிவரிடமிருந்து ஒரே ஒருமுறை கேட்டதாலேயே எல்லா வேதங்களையும், அவற்றின் வெவ்வேறு பிரிவுகளையும் கற்றறிந்தார். இதனால் மரணமடைந்த அவரது மகனை யமலோகத்திலிருந்து திரும்பக் கொண்டுவந்து, அவருக்குப் பரிசாக அளித்தார்.

பதம் 3.3.3
ஸமாஹுதா பீஷ்மக-கன்யயா யே
ஸ்ரிய: ஸவர்ணேன புபூஷயைஷாம்
காந்தர்வ-விருத்யா மிஷதாம் ஸ்வ-பாகம்
ஜஹ்ரே பதம் மூர்த்னி ததத் ஸுபர்ண:

ஸமாஹுதா:—அழைக்கப்பட்டு; பீஷ்மக—பீஷ்மக மகாராஜனின்; கன்யயா—புதல்வியால்; யே—அவர்கள் அனைவரும்; ஸ்ரிய:—செல்வம்; ஸவர்ணேன—அதே போன்ற தொடர்ச்சியினால்; புபூஷயா—என்று எதிர்பார்க்கும்; ஏஷாம்—அவர்களின்; காந்தர்வ—மணப்பதில்; வ்ருத்யா—அத்தகைய ஒரு வழக்கத்தால்; மிஷதாம்—அவ்வாறு தூக்கி, சென்றதைப்போல்; ஸ்வ-பாகம்—சொந்த பாகமாக; ஜஹ்ரே—தூக்கிச் சென்றார்; பதம்—பாதங்கள்; மூர்த்னி—தலைமீது; ததத்—வைத்து; ஸுபர்ண—கருடன்.

பீஷ்மக ராஜனின் மகளான ருக்மிணியின் அழகாலும், செல்வத்தாலும் கவரப்பட்ட பல சிறந்த இளவரசர்கள் அவளை மணந்து கொள்வதற்காகக் கூடியிருந்தனர். ஆனால் அமுதத்தினைத் தூக்கிச் சென்ற கருடனைப்போல், மற்ற போட்டியாளர்களின் நம்பிக்கையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிதறடித்து, அவளை தமது பங்காக அங்கிருந்து தூக்கிச் சென்றுவிட்டார்.

பதம் 3.3.4
ககுத்மினோ ‘வித்த-நஸோ தமித்வா
ஸ்வயம்வரே நாக்னஜிதீம் உவாஹ
தத்-பக்னமானான் அபி க்ருத்யதோ ‘க்ஞான்
ஜக்னே ‘க்ஷத சஸ்த்ர-ப்ருத: ஸ்வ-சஸ்த்ரை:

ககுத்மின:—மூக்கணாங்கயிறு பூட்டப்படாத காளைகளை; அவித்த-நஸ:—மூக்கில் துளைக்கப்பட்டு; தமித்வா—அடக்கி; ஸ்வயம்வரே—சுயம்வரப் போட்டியில்; நாக்னஜிதீம்—நாக்னிஜிதி இளவரசியை; உவாஹ—மணந்தார்; தத்-பக்னமானான்—அவ்வாறு ஏமாற்றமடைந்த அனைவரும்; அபி—என்ற போதிலும்; க்ருத்யத:—விரும்பிய; அக்ஞான்—மூடர்களை; ஜக்னே—கொன்றார், காயப்படுத்தினார்; அக்ஷத:—காயமடையாமல்; சஸ்த்ர-ப்ருத:—எல்லா ஆயுதங்களுடனும்; ஸ்வ-சஸ்த்ரை:—அவரது சொந்த ஆயுதங்களால்.

சுயம்வரச் சடங்கில் மூக்கணாங்கயிறு பூட்டப்படாத ஏழுகாளைகளை அடக்கிய பகவான், நாக்னஜிதி இளவரசியை மணந்தார். பகவான் வெற்றியடைந்த போதிலும், இளவரசியைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அவரது போட்டியாளர்கள் கேட்டனர். இவ்வாறாக அவர்களுக்கிடையில் போர்மூண்டது. ஆயுதபாணியான பகவான், அவர்களனைவரையும் கொன்றார் அல்லது காயப்படுத்தினார், ஆனால் அவர் காயப்படவில்லை.

பதம் 3.3.5
ப்ரியம் ப்ரபுர் க்ராம்ய இவ ப்ரியாயா
விதித்ஸுர் ஆர்ச்சத் த்யுதரும் யத்-அர்தே
வஜ்ரி ஆத்ரவத் தம் ஸ-கணோ ருஷாந்த:
க்ரீடா-ம்ருகோ நூனம் அயம் வதூனாம்

ப்ரியம்—அன்பு மனைவியின்; ப்ரபு:—பகவான்; க்ராம்ய:—சாதாரண ஜீவராசி; இவ—போலவே; ப்ரியாயா:—மகிழ்விப்பதற்காக; விதித்ஹு:—விருப்பங்கொண்டு; ஆர்ச்சத்—கொண்டு வந்தான்; த்யுதரும்—பாரிஜாத பூமரத்தை; யத்—எதற்காக; அர்தே—அவ்விஷயத்தில்; வஜ்ரீ—சுவர்க்க ராஜனான இந்திரன்; ஆக்ரவத் தம்—அவருடன் சண்டையிடச் சென்றார்; ஸ-கண:—முழு பலத்துடன்; ருஷா—கோபத்தால்; அந்த:—குருடராகி; க்ரீடா-ம்ருக:—மனைவிகளுக்கு அடங்கிய; நூனம்—சந்தேகமில்லை; அயம்—இந்த; வதூனாம்—மனைவிகளின்.

ஒரு சாதாரண மனிதனைப்போல், தம் பிரிய மனைவியை மகிழ்விப்பதற்காக பகவான் சுவர்க்கத்திலிருந்து பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார். ஆனால் (தன்மனைவிகளுக்கு அடங்கி நடக்கிற) சுவர்க்க ராஜனான இந்திரன், தன் மனைவிகளால் தூண்டப்பட்டு, பகவானுடன் சண்டை செய்ய முழுபலத்துடன் அவர்பின் ஒடினார்.

பதம் 3.3.6
ஸுதம் ம்ருதே கம் வபுஷா க்ரஸந்தம்
த்ருஷ்ட்வா ஸுனாபோன்மதிதம் தரித்ரியா
ஆமந்த்ரிதஸ் தத்-தனயாய சேஷம்
தத்வா தத்-அந்த: புரம் ஆவிவேச

ஸுதம்—மகன்; ம்ருதே—போரில்; கம்—ஆகாயம்; வபுஷா—அவனது உடலால்; க்ரஸந்தம்—விழுங்கும் பொழுது; த்ருஷ்ட்வா—கண்டு; ஸுனாப—சுதர்சன சக்கரத்தால்; உன்மதிதம்—கொன்றார்; தரித்ரியா—பூமியால்; ஆமந்த்ரித:—வேண்டிக்கொள்ளப்பட்டு; தத்-தனயாய—நரகாசுரனின் மகனிடம்; சேஷம்—அதிலிருந்து எடுக்கப்பட்டதை; தத்வா—திருப்பிக் கொடுத்து; தத்—அவனுடைய; அந்த:-புரம்—வீட்டினுள்; ஆவிவேச—புகுந்தார்.

தரித்ரி எனும் பூமியின் மகனான நரகாசுரன், ஆகாய வெளி முழுவதையும் கைப்பற்ற முயன்றான். இதற்காக அவன் பகவானால் போரில் கொல்லப்பட்டான். அவனுடைய தாய் பிறகு பகவானிடம் வேண்டினாள். இவ்வாறாக ராஜ்யத்தை நரகாசுரனின் மகனிடம் திருப்பிக் கொடுத்த பகவான், அசுரனின் வீட்டிற்குள் புகுந்தார்.

பதம் 3.3.7
தத்ராஹ்ருதாஸ் தா நர-தேவ-கன்யா:
குஜேன த்ருஷ்ட்வா ஹரிம் ஆர்த-பந்தும்
உத்தாய ஸத்யோ ஜக்ருஹு: ப்ரஹர்ஷ-
வ்ரீடானுராக-ப்ரஹிதாவலோகை:

தத்ர—நரகாசுரனின் வீட்டினுள்; ஆஹ்ருதா:—கடத்தப்பட்டிருந்த; தா—அவர்கள் அனைவரும்; நர-தேவ-கன்யா:—பல அரசகுமாரிகள்; குஜேன—அசுரனால்; திருஷ்ட்வா—கண்டு; ஹரிம்—பகவானை; ஆர்த-பந்தும்—துன்புற்றவரின் நண்பரான; உத்தாய—உடனே எழுந்தனர்; ஸத்ய:—அங்கேயே, அப்பொழுதே; ஜக்ருஹு:—ஏற்றனர்; ப்ரஹர்ஷ—மகிழ்ச்சியுடன்; வ்ரீட—வெட்கம்; அனுராக—பற்று; ப்ரஹித-அவலோகை:—ஆவலான பார்வைகளால்.

நரகாசுரனால் கடத்தப்பட்டு, அவனுடைய வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த இளவரசிகள் அனைவரும், துன்புற்றவர்களின் நண்பரான பகவானைக் கண்டவுடனேயே உற்சாகம் அடைந்தனர். அவரைப் பெரும் ஆவலுடனும், ஆனந்தத்துடனும், வெட்கத்துடனும் கண்ட அவர்கள், அவருடைய மனைவிகளாக தங்களையே அவரிடம் ஒப்படைத்தனர்.

பதம் 3.3.8
ஆஸாம் முஹூர்த ஏகஸ்மின் நாநாகாரேஷு யோஷிதாம்
ஸ-விதம் ஜக்ருஹே பாணீன் அனுரூப: ஸ்வ-மாயயா

ஆஸாம்—அவர்கள் அனைவரும்; முஹூர்தே—ஒரு சமயத்தில்; ஏகஸ்மின்—ஏக காலத்தில்; நானா-காரேஷு—வெவ்வேறு அறைகளில்; யோஷிதாம்—பெண்களின்; ஸ-விதம்—எல்லாச் சடங்குகளுடனும்; ஜக்ருஹே—ஏற்றார்; பாணீன்—கரங்களை; அனுரூப:—நன்கு பொருந்தும் வகையில்; ஸ்வ-மாயயா—அவரது அந்தரங்க சக்தியால்.

அந்த இளவரசிகள் அனைவரும் வெவ்வேறு அறைகளில் வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு இளவரசிக்கும் பொருந்தும் வகையில், பகவான் தமது உடலை வெவ்வேறாக விரிவடையச் செய்து கொண்டார். தமது அந்தரங்க சக்தியின் மூலமாக முழுசடங்குகளுடன் அவர்களை அவர் ஏற்றுக்கொண்டார்.

பதம் 3.3.9
தாஸ்வ் அபத்யானி அஜனயத் ஆத்ம-துல்யானி ஸர்வத:
ஏகைகஸ்யாம் தச தச ப்ரக்ருதேர் விபுபூஷயா

தாஸு—அவர்களிடம்; அபத்யானி—குழந்தைகளை; அஜனயத்—பெற்றார்; ஆத்ம-துல்யானி—அவரை ஓத்த; ஸர்வத:—எல்லா வகையிலும்; ஏக-ஏகஸ்யம்—அவர்கள் ஒவ்வொருவரிலும்; தச—பத்து; தச—பத்து; ப்ருக்குதே:—தம்மை விரிவடையச் செய்வதற்காக; விபுபூஷயா—அவ்வாறு விருப்பம் கொண்டு.

தமது உன்னத அம்சங்களுக்கேற்ப தம்மை விரிவடையச்செய்து கொள்வதற்காக, அவர்கள் ஒவ்வொருவரிடமும், தமது சொந்த குணங்களையொத்த பத்து மகன்களை பகவான் பெற்றார்.

பதம் 3.3.10
கால-மாகத-சால்வாதீன் அனீகை ருன்தத: புரம்
அஜீகனத் ஸ்வயம் திவ்யம் ஸ்வ-பும்சாம் தேஜ ஆதிசத்

கால—காலயவனன்; மாகத—மகத ராஜன் (ஜராஸந்தன்); சால்வ—சால்வ ராஜன்; ஆதீன்—மற்றும் பிறர்; அனீகை:—வீரர்களால்; ருன்தத:—சூழ்ந்து கொள்ளப்பட்டு; புரம்—மதுராபுரி; அஜீகனத்—கொன்றார்; ஸ்வயம்—சுயமாக; திவ்யம்—திவ்யமான; ஸ்வ-பும்சாம்—அவரது சொந்த ஆட்களின்; தேஜ:—வீரத்தை; ஆதிசத்—வெளிப்படுத்தினார்.

மகத ராஜனான காலயவனனும், சால்வனும் மதுராபுரியைத் தாக்கினர். ஆனால் பகவான் தமது சொந்த ஆட்களின் வீரத்தைக் காட்டுவதற்காக, நகரத்தைச் சூழ்ந்து கொண்டிருந்த அவர்களுடைய வீரர்களைத்தாமே கொல்வதிலிருந்து பகவான் விலகி இருந்தார்.

பதம் 3.3.11
சம்பரம் த்விவிதம் பாணம் முரம் பல்வலம் ஏவ ச
அன்யாம்ஸ் ச தந்தவக்ராதீன் அவதீத் காம்ஸ் ச காதயத்

சம்பரம்—சம்பரன்; த்விவிதம்—துவிவிதன்; பாணம்—பாணன்; முரம்—முரன்; பல்வலம்—பல்வலன்; ஏவ ச—அதுபோலவே; அன்யான்—மற்றவர்களையும்; ச—கூட; தந்தவக்ர-ஆதீன்—தந்தவக்ரனையும், மற்றவர்களையும் போன்ற; அவதீத்—கொன்றார்; கான் ச—மேலும் மற்றும் பலரை; காதயத்—கொல்லக் காரணமாக இருந்தார்.

சம்பரன், துவிவிதன், பாணன், முரன், பல்வலன் முதலான அரசர்களிலும், தந்தவக்ரன் முதலான பல அசுரர்களிலும், சிலரை பகவானே நேரடியாகக் கொன்றார். சிலரை (ஸ்ரீ பலதேவர் முதலான) மற்றவர்களால் கொல்லும்படி செய்தார்.

பதம் 3.3.12
அத தே ப்ராத்ரு-புத்ராணாம் பக்ஷயோ: பதிதான் ந்ருபான்
சசால பூ: குருக்ஷேத்ரம் யேஷாம் ஆபததாம் பலை:

அத—அதன்பிறகு; தே—உங்களுடைய; ப்ராத்ரு-புத்ராணாம்—சகோதர புத்திரர்களின்; பக்ஷயோ:—இரு பக்கங்களின்; பதிதான்—கொல்லப்பட; ந்ருபான்—அரசர்கள்; சசால—உலுக்கினர்; பூ:—பூமியை; குருக்ஷேத்ரம்—குருட்சேத்திர யுத்தம்; யேஷாம்—யாரின்; ஆபததாம்—சஞ்சரித்து; பலை:—பலத்தால்.

விதுரரே, பிறகு, எதிரிகள் பக்கமும், உங்களுடைய சகோதர புத்திரர்கள் பக்கமும் உள்ள எல்லா அரசர்களையும், குருட்சேத்திரப் போர்க்களத்தில் கொல்லப்படும்படி பகவான் செய்தார். அந்த அரசர்கள் அனைவரும் பெரும் பலசாலிகள் என்பதால், போர்க்களத்தில் அவர்கள் சஞ்சரித்த பொழுது, பூமியே அதிர்வது போல் காணப்பட்டது.

பதம் 3.3.13
ஸ கர்ண-துஹ்சாஸன-ஸௌபலானாம்
குமந்த்ர-பாகேன ஹத-ஸ்ரியாயுஷம்
ஸுயோதனம் ஸானுசரம் சயானம்
பக்னோரும் ஊர்வ்யாம் ந நனந்த பஸ்யன்

ஸ:—அவர் (பகவான்); கர்ண—கர்ணன்; துஹ்சாஸன—துச்சாதனன்; ஸௌபலானாம்—சௌபலன்; குமந்த்ர-பாகேன—சிக்கலான துர்போதனையால்; ஹத-ஸ்ரிய—அதிர்ஷ்டத்தை இழந்த; ஆயுஷம்—ஆயுள்; ஸுயோதனம்—துரியோதனன்; ஸ-அனுசரம்—ஆதரவாளர்களுடன்; சயானம்—கீழே விழுந்து; பக்ன—உடைந்து; ஊரும்—தொடைகள்; ஊர்வ்யாம்—மிக சக்திவாய்ந்த; ந—இல்லை; நனந்த—மகிழ்ச்சி கொள்ள; பஸ்யன்—அதைக்கண்டு.

கர்ணன், துச்சாதனன் மற்றும் சௌபலன் ஆகியோரின் துர்போதனைகளின் காரணத்தால், துரியோதனன் அதிர்ஷ்டத்தையும், ஆயுளையும் இழந்தவனானான். சக்திவாய்ந்தவன் என்றபோதிலும் தொடைகள் உடைபட்டு தன் ஆதரவாளர்களுடன் தரையில் அவன்விழுந்து கிடப்பதைக்கண்ட பகவான் மகிழ்ச்சியடையவில்லை.

பதம் 3.3.14
கியான் புவோ ‘யம் க்ஷபிதோரு-பாரோ
யத் த்ரோண-பீஷ்மார்ஜுன-பீம-மூலை:
அஷ்டாதசாக்ஷௌஹிணிகோ மத்-அம்சைர்
ஆஸ்தே பலம் துர்விஷஹம் யதூனாம்

கியான்—என்ன இது; புவ:—பூமியின்; அயம்—இந்த; க்ஷபித—குறைந்தார்; உரு—மிகப்பெரிய; பார:—பாரத்தை; யத்—எது; த்ரோண—துரோணர்; பீஷ்ம—பீஷ்மர்; அர்ஜுன—அர்ஜுனன்; பீம—பீமன்; மூலை:—உதவியுடன்; அஷ்டாதச—பதினெட்டு; அக்ஷௌஹிணிக:—படைவியூகங்கள் (பாகவதம் 1.16.34-ஐப் பார்க்கவும்); மத்-அம்சை:—என் வம்சத்தினருடன்; ஆஸ்தே—அவர்களும் உள்ளனர்; பலம்—பெரும்பலம்; துர்விஷஹம்—தாங்க முடியாத; யதுனாம்—யது வம்சத்தின்.

(குருக்ஷேத்திர யுத்தத்தின் முடிவில் பகவான் கூறினார்): துரோணர், பீஷ்மர், அர்ஜுனன் மற்றும் பீமன் ஆகியோரின் உதவியால், பூமிக்கும் பெரும்பாரமாக இருந்த பதினெட்டு அக்ஷெளணிகளைக் கொண்ட படைபலம் இப்பொழுது குறைக்கப்பட்டது. ஆனால், என்ன இது? அதிக பூ பாரத்தை ஏற்படுத்தக் கூடியதும், என்னிலிருந்து பிறந்தததுமான யதுவம்சம் இன்னமும் இருக்கிறதே.

பதம் 3.3.15
மிதோ யதைஷாம் பவிதா விவாதோ
மது-ஆமதாதாம்ர-விலோசனானாம்
நைஷாம் வதோபாய இயான் அதோ ‘ன்யோ
மய் த்யதே `ன்தர்தததே ஸ்வயம் ஸ்ம

மித:—ஒருவரோடு ஒருவர்; யதா—அப்பொழுது; ஏஷாம்—அவர்களின்; பவிதா—நிகழும்; விவாத:—விவாதம்; மது-ஆமத—குடிபோதையால்; ஆதாம்ர-விலோசனானாம்—அவர்களுடைய சிவந்த கண்களின்; ந—இல்லை; ஏஷாம்—அவர்களின்; வத-உபாய:—மறைவுக்குரிய வழி; இயான்—இதைப்போலவே; அத:—இதைத்தவிர; அன்ய:—வேறு வழி; மயி—என்னுடையதின்; உத்யதே—மறைவு; அந்த:-தததே—மறைவார்கள்; ஸ்வயம்—தாங்களாகவே; ஸ்ம—நிச்சயமாக.

குடிபோதையினால் கண்கள் சிவந்து தங்களுக்கிடையில் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள். இதன் மூலமாகத்தான் அவர்களால் மறைய முடியும். இல்லையெனில் அது சாத்தியமல்ல. நான் மறைந்ததும் இச்சம்பவம் நிகழும்.

பதம் 3.3.16
ஏவம் ஸஞ்சிந்த்ய பகவான் ஸ்வ-ராஜ்யே ஸ்தாப்ய தர்மஜம்
நந்தயாம் ஆஸ ஸுஹ்ருத: ஸாதூனாம் வர்த்ம தர்சயன்

ஏவம்—இவ்வாறாக; ஸஞ்சிந்த்ய—தமக்குள் எண்ணி; பகவான்—பரம புருஷர்; ஸ்வ-ராஜ்யே—அவரது சொந்த ராஜ்யத்தில்; ஸ்தாப்ய—அமர்த்தி; தர்மஜம்—யுதிஷ்டிர மகாராஜன்; நந்தயாம் ஆஸ—சந்தோஷப்படுத்தினார்; ஸுஹ்ருத:—நண்பர்களை; ஸாதூனாம்—சாதுக்களின்; வர்த்ம—வழியை: தச்சயன்—சுட்டிக் காட்டுவதன் மூலம்.

தமக்குள் இவ்வாறு எண்ணிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தர்ம வழியில் செல்லும் சீரிய அரசாட்சியை காட்டுவதற்காக யுதிஷ்டிர மகாராஜனை உலகின் மிக உயர்ந்த ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்.

பதம் 3.3.17
உத்தராயாம் த்ருத பூரோர் வம்ச ஸாது-அபிமன்யுனா
ஸ வை த்ரௌணி-அஸ்த்ர-ஸம்ப்லுஷ்ட புனர் பகவதா த்ருத:

உத்தராயாம்—உத்தரைக்கு; த்ருத:—கருத்தரித்த; பூரோ:—பூருவின்; வம்ச:—வம்சம்; ஸாது-அபிமன்யுனா—வீரரான அபிமன்யுவால்; ஸ:—அவர்; வை—நிச்சயமாக; த்ரௌணி-அஸ்த்ர—துரோணரின் மகனான திரௌணியின் ஆயுதத்தால்; ஸம்ப்லுஷ்ட:—எரிக்கப்பட்டதால்; புன:—மீண்டும் இரண்டாவது முறையாக; பகவதா—பரமபுருஷரால்; த்ருத:—காப்பாற்றப்பட்டார்.

பூரு வம்சத்தின் மகாவீரரான அபிமன்யுவால், அவரது மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் பெறப்பட்ட கரு, துரோண புத்திரனின் ஆயுதத்தால் எரிக்கப்பட்டது. ஆனால் பிறகு அது பகவானால் மீண்டும் காப்பாற்றப்பட்டது.

பதம் 3.3.18
அயாஜயத் தர்ம-ஸுதம் அஸ்வாமேதைஸ் த்ரிபிர் விபு:
ஸோ ‘பி க்ஷ்மாம் அனுஜை ரக்ஷன் ரேமே க்ருஷ்ணம் அனுவ்ரத:

அயாஜயத்—செய்யச் செய்தார்; தர்ம-ஸுதம்—தர்ம புத்திரரால் (யுதிஷ்டிர மகாராஜன்); அஸ்வமேதை:—அசுவமேத யாகங்களால்; த்ர்பி:—மூன்று; விபு:—பரமபுருஷர்; ஸ:—யுதிஷ்டிர மகாராஜன்; அபி—மேலும்; க்ஷ்மாம்—பூமியை; அனுஜை:—அவரது தம்பிகளின் உதவியுடன்; ரக்ஷன்—பாதுகாத்து; ரேமே—அனுபவித்தார்; கிருஷ்ணம்—பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர்; அனுவ்ரத:— இணைபிரியா சகாவாக.

பரமபுருஷர் தர்மபுத்திரரை மூன்று அசுவமேத யாகங்களைச் செய்யும்படி தூண்டினார். யுதிஷ்டிர மகாராஜன் எப்பொழுதும் பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணரைப் பின்தொடர்ந்து சென்று, தமது தம்பிகளின் உதவியுடன் பூமியைப் பாதுகாத்து, அதை அனுபவித்து வந்தார்.

பதம் 3.3.19
பகவான் அபி விஸ்வாத்மா லோக-வேத-பதானுக:
காமான் ஸிஷேவ த்வார்வத்யாம் அஸக்த ஸாங்க்யம் ஆஸ்தித:

பகவான்—பரமபுருஷர்; அபி:—கூட; விஸ்வ-ஆத்மா—பிரபஞ்சத்தின் பரமாத்மா; லோக—வழக்கப்படியான; வேத—வேதக் கொள்கைகள்; பத-அனுக:—வழியைப் பின்பற்றுபவர்; காமான்—வாழ்வின் தேவைகளை; ஸிஷேவ—அனுபவித்தார்; த்வார்வத்யாம்—துவாரகாபுரியில்; அஸக்த:—பற்றுக் கொள்ளாமல்; ஸாங்க்யாம்—ஸாங்க்ய தத்துவ ஞானத்தில்; ஆஸ்தித:—நிலைபெற்ற.

அதே சமயத்தில், பகவானும் வேத விதிகளுக்கேற்ப துவாரகாபுரியில் வாழ்வை அனுபவித்து வந்தார். ஸாங்க்ய தத்துவத்திற்கேற்ப பகவான் துறவிலும், ஞானத்திலும் நிலைபெற்றிருந்தார்.

பதம் 3.3.20
ஸ்நிக்த-ஸ்மிதாவலோகேன வாசா பீயூஷ-கல்பயா
சரித்ரேணாநவத்யேன ஸ்ரீ -நிகேதேன சாத்மனா

ஸ்நிக்த—அமைதியான; ஸ்மித-அவலோகேன—இனிய புன்னகையுடன் கூடிய பார்வையால்; வாசா—வார்த்தைகளால்; பீயூஷ-கல்பயா—அமுதத்துடன் ஒப்பிடப்படும்; சரித்ரேண—குணத்தால்; அனவத்யேன—குறையற்ற; ஸ்ரீ—அதிர்ஷ்டம்; நிகேதேன—வசிப்பிடம்; ச—மேலும்: ஆத்மனா—அவரது உன்னத உடலால்.

அவர் அதிர்ஷ்ட தேவதையின் (லக்ஷ்மியின்) வசிப்பிடமான தமது உன்னத உடலில், வழக்கம்போல் அமைதியான இனிய புன்னகை பூத்த முகத்துடனும், அமுதம் போன்ற வார்த்தைகளுடனும், குறையற்ற குணத்துடனும் விளங்கினார்.

பதம் 3.3.21
இமம் லோகம் அமும் சைவ ரமயன் ஸுதராம் யதூன்
ரேமே க்ஷணதயா தத்த-க்ஷண-ஸ்த்ரீ-க்ஷண-ஸௌஹ்ருத:

இமம்—இந்த; லோகம்—உலகம்; அமும்—மற்றும் பிற உலகங்கள்; ச—கூட; ஏவ—நிச்சயமாக; ரமயன்—இன்பமூட்டும்; ஸுதராம்—குறிப்பாக; யதூன்—யாதவர்கள்; ரேமே—அனுபவித்தார்; க்ஷணதயா—இரவால்; தத்த—அளிக்கப்பட்ட; க்ஷண—ஒய்வுநேரம்; ஸ்த்ரீ—பெண்களுடன்; க்ஷண—மாதுரிய அன்பு; ஸௌஹ்ருத:—சிநேகம்.

பகவான், யாதவர்களின் சகவாசத்துடன் இவ்வுலகிலும், பிற உலகங்களிலும், (உயர்கிரகங்கள்) நிகழ்த்திய லீலைகளை நன்கு அனுபவித்தார். இரவில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் பெண்களுடனான நட்பில் மாதுரிய அன்பை அனுபவித்தார்.

பதம் 3.3.22
தஸ்யைவம் ரமமாணஸ்ய ஸம்வத்ஸர-கணான் பஹூன்
க்ருஹமேதேஷு யோகேஷு விராக: ஸமஜாயத

தஸ்ய—அவரது; ஏவம்—இவ்வாறாக; ரமமாணஸ்ய—அனுபவிக்கும்; ஸம்வத்ஸர—ஆண்டுகள்; கணான்—பல; பஹூன்—மிகப் பல; க்ருஹமேதேஷு—குடும்ப வாழ்வில்; யோகேஷு—பாலுறவு வாழ்வில்; விராக:—துறவு; ஸமஜாயத—விழிப்படைந்தது.

இவ்வாறாக பகவான் பற்பல ஆண்டுகளாக இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தார். ஆனால் இறுதியில், நிலையற்ற பாலுறவு வாழ்விலிருந்த அவரது பற்றற்ற நிலை முழுமையாக வெளிப்பட்டது.

பதம் 3.3.23
தைவாதீனேஷு காமேஷு தைவாதீன: ஸ்வயம் புமான்
கோ விஸ்ரம்பேத யோகேன யோகேஸ்வரம் அனுவ்ரத:

தைவ—தெய்வீகமான; அதீனேஷு—ஆளப்படும்; காமேஷு—புலன் நுகர்வில்; தைவ-அதீன:—தெய்வீக சக்தியால் ஆளப்படும்; ஸ்வயம்—சுயமாக; புமான்—ஜீவராசி; க:—யாராயிருந்தாலும்; விஸ்ரம்பேத—அதில் நம்பிக்கை கொண்டிருக்கக் கூடிய; யோகேன—பக்தித் தொண்டால்; யோகேஸ்வரம்—பரமபுருஷர்; அனுவ்ரத:—தொண்டுசெய்யும்.

ஒவ்வொரு ஜீவராசியும் ஒரு தெய்வீகமான சக்தியால் ஆளப்படுகிறான். இதனால் அவனது புலன்நுகர்வும் கூட அத்தெய்வீக சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. எனவே பக்தித்தொண்டின் மூலம் பகவானின் ஒரு பக்தராக மாறியிருப்பவரைத் தவிர, வேறுயாராலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னதமான புலன் செயல்களில் நம்பிக்கை வைக்க முடியாது.

பதம் 3.3.24
புர்யாம் கதாசித் க்ரீடத்பிர் யது-போஜ-குமாரகை:
கோபிதா முனய: சேபுர் பகவன்-மத-கோவிதா

புர்யாம்—துவாரகாபுரியில்; கதாசித்—ஒரு சமயம்; க்ருடத்பி:—விளையாட்டான செயல்களால்; யது—யது வம்சத்தினர்; போஜ—போஜ வம்சத்தினர்; குமாரகை:—அரச குமாரர்கள்; கோபிதா:—கோபமூட்டப்பட்டு; முனய:—மாமுனிவர்கள்; சேபு:—சபித்தனர்; பகவத்—பரமபுருஷர்; மத—விருப்பம்; கோவிதா:—தெரிந்துள்ள.

ஒரு சமயம் துவாரகாபுரியில் யாதவ மற்றும் போஜ வம்சத்து அரச குமாரர்களின் விளையாட்டான செயல்களால் கோபமூட்டப்பட்ட முனிவர்கள், பகவானின் திருவுள்ளக் குறிப்புப்படி அவர்களைச் சபித்தனர்.

பதம் 3.3.25
தத: கதிபயைர் மாஸைர் வ்ருஷ்ணி-போஜாந்தகாதய:
யயு: ப்ரபாஸம் ஸம்ஹ்ருஷ்டா ரதைர் தேவ-விமோஹிதா:

தத:—அதன்பிறகு; கதிபயை:—ஒரு சில; மாஸை:—மாதங்கள் கடந்தன; விருஷ்ணி—வ்ருஷ்ணி வம்சத்தினர்; போஜ—போஜ வம்சத்தினர்; அந்தக:-ஆதய:—மேலும் அந்தக புத்திரர்களைப் போன்ற மற்றவர்களும்; யயு:—சென்றனர்; ப்ரபாஸம்—பிரபாஸம் என்ற புண்ணிய தீர்த்தம்; ஸம்ஹ்ருஷ்டா:—பெரு மகிழ்ச்சியுடன்; ரதை:—அவர்களது இரதங்களின்; தேவ—கிருஷ்ணரால்; விமோஹிதா:—மதியிழந்து.

ஒரு சில மாதங்கள் கடந்தபின், தேவர்களின் அவதாரங்களான விருஷ்ணி, போஜ மற்றும் அந்தக வம்சத்தினர் அனைவரும் கிருஷ்ணரால் (விதியால்) மதியிழந்து, பிரபாஸத்திற்குச் சென்றனர். அதே சமயம் பகவானின் நித்திய பக்தர்கள் அங்கு செல்லாமல் துவாரகையிலேயே இருந்தனர்.

பதம் 3.3.26
தத்ர ஸ்னாத்வா பித்ரூன் தேவான் ருஷீம்ஸ்வை தத்-அம்பஸா
தர்பயித்வாத விப்ரேப்யோ காவோ பஹு-குணா தது:

தத்ர—அங்கு; ஸ்னாத்வா—ஸ்நானம் செய்து; பித்ரூன்—மூதாதையர்கள்; தேவான்—தேவர்கள்; ருஷீன்—மாமுனிவர்கள்; ச—தவிரவும்; ஏவ—நிச்சயமாக; தத்—அதன்; அம்பஸா—நீரால்; தர்பயித்வா—திருப்திப்படுத்தியதின் மூலம்; அத—அதன்பிறகு; விப்ரேப்ய:—பிராமணர்களுக்கு; காவ:—பசுக்களை; பஹு-குணா:—மிகவும் பயனுள்ள; தது:—தானமாகக் கொடுத்தனர்.

அந்த இடத்தை அடைந்த அவர்கள், அப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடி மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் பெரும் முனிவர்களுக்கும் தர்ப்பணம் செய்தும், சிறந்த பசுக்களை பிராமணர்களுக்குத் தானம் செய்தும், அவர்களை திருப்திப்படுத்தினர்.

பதம் 3.3.27
ஹிரண்யம் ரஜதம் சய்யாம் வாஸாம்ஸி அஜின-கம்பலான்
யானம் ரதான் இபான் கன்யா தராம் வ்ருத்தி-கரீம் அபி

ஹிரண்யம்—தங்கம்; ரஜதம்—தங்கக் காசுகள்; சய்யாம்—படுக்கை; வாஸாம்ஸி—ஆடை; அஜின—மிருகத்தோல் ஆசனங்கள்; கம்பலான்—போர்வைகள்; யானம்—குதிரைகள்; ரதான்—ரதங்கள்; இபான்—யானைகள்; கன்யா:—பெண்கள்; தராம்—நிலம்; வ்ருத்தி-கரீம்—வாழ்க்கைத் தேவைகளை அளிப்பதற்கு; அபி—கூட.

பிராமணர்களுக்கு, சிறந்த பசுக்கள் மட்டுமல்லாமல் வாழ்க்கைக்குத் தேவையான தங்கம், தங்கக்காசுகள், படுக்கை, உடை, மிருகத்தோல் ஆசனங்கள், போர்வைகள், குதிரைகள், யானைகள், பெண்கள் மற்றும் போதுமான நிலம் ஆகிய பொருட்களும் கூட அளிக்கப்பட்டன.

பதம் 3.3.28
அன்னம் சோரு-ரஸம் தேப்யோ தத்வா பகவத்-அர்பணம்
கோ-விப்ரார்தாஸவ: சூரா: ப்ரணேமுர் புவி மூர்தபி:

அன்னம்—உணவு வகைகள்; ச—கூட; உரு-ரஸம்—அறுசுவை; தேப்ய:—பிராமணர்களுக்கு; தத்வா—அளித்தபின்; பகவத்-அர்பணம்—பகவானுக்கு முதலில் அர்ப்பணம் செய்யப்பட்ட; கோ—பசுக்கள்; விப்ர—பிராமணர்கள்; அர்த—நோக்கம்; அஸவ:—உயிர்வாழும் நோக்கம்; சூரா:—சூரர்களான க்ஷத்திரியர்கள் அனைவரும்; ப்ரணேமு:—வணங்கினர்; புவி—பூமியைத்தொட்டு; மூர்தபி:—தங்கள் தலைகளால்.

அதன் பிறகு, பகவானுக்கு முதலில் அர்ப்பணம் செய்யப்பட்ட அறுசுவை உணவு வகைகளை பிராமணர்களுக்கு அளித்த அவர்கள், தங்கள் தலைகள் பூமியைத் தொட, பணிவுடன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தினர். பசுக்களையும், பிராமணர்களையும் பராமரித்து பக்குவமாக அவர்கள் வாழ்ந்து வந்தனர்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின் “பிருந்தாவனத்திற்கு வெளியில் பகவானின் லீலைகள்” எனும் தலைப்பைக் கொண்ட மூன்றாம் அத்தியாயம் இவ்வாறாக நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare