அத்தியாயம் – 33
கபிலரின் செயல்கள்
பதம் 3.33.1 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: இவ்வாறு பகவான் கபிலரின் அன்னையும் கர்தம முனிவரின் மனைவியும் ஆன தேவஹூதி பக்தித் தொண்டு மற்றும் எல்லை கடந்த அறிவு பற்றிய அறியாமையில் இருந்து விடுபட்டாள். விடுதலைக்குப் பின்புலமான சாங்கிய முறைத் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் ஆசிரியராகிய பகவானுக்கு அவள் தன் வணக்கத்தை அர்ப்பணித்தாள், அவள் அவரைப் பின்வரும் வேண்டுதல்களின் பதங்களால் திருப்தி செய்தாள்.

பதம் 3.33.2 : தேவஹூதி கூறினார் ப்ரம்மா பிறப்பற்றவர் என்று கூறப்படுகிறார். ஏனென்றால் அண்டத்தின் அடியில் உள்ள கடலில் நீங்கள் பள்ளி கொண்டிருக்கும் பொழுது உங்கள் வயிற்றிலிருந்து வளரும் தாமரை மலரிலிருந்து பிறக்கிறார். ஆனால் எல்லையற்ற அண்டங்களின் மூலாதாரமாகிய உடலையுடைய பிரம்மனும் உங்களைக் குறித்துத் தியானித்தார்.

பதம் 3.33.3 : என் அன்பு பகவானே, தனிப்பட்ட முறையில் நீங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை என்றாலும், இயற்கைக் குணங்களின் எதிர்ச் செயல்களில் உங்கள் சக்திகளைப் பகிர்ந்து அளித்துள்ளீர்கள், அந்தக் காரணத்திற்காக, இயலுலக வெளிப்பாட்டின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் நடைபெறுகின்றன. என் அன்பு பகவானே, நீங்கள் உறுதியானவர். எல்லா உயிரினங்களின் பரம புருஷ பகவான். அவர்களுக்காக நீங்கள் இந்த வெளி உலகைப் படைத்தீர்கள், நீங்கள் ஒருவராக இருந்தாலும், உங்கள் பல்வேறு பட்ட சக்திகள் பல்வேறு வகைகளில் செயற்பட முடியும் இது எங்களால் நினைத்துப் பார்க்க இயலாதது.

பதம் 3.33.4 : பரம புருஷ பகவானாக, நீங்கள் என் வயிற்றிலிருந்து பிறந்துள்ளீர்கள். ஓ என் பகவானே, எல்லா உலகையும் தன் வயிற்றில் கொண்ட மேலான ஒருவருக்கு அது எவ்வாறு முடிந்தது? பதில் அது முடியும் என்பதுவே பதில் ஏனெனில் யுக முடிவில் நீங்கள் ஆலமரத்தின் இலைமீது, ஒரு சிறிய குழந்தை போல, உங்கள் பாதகமலத்தின் விரலைச் சப்பிக் கொண்டு படுத்திருப்பீர்கள்.

பதம் 3.33.5 : என் அன்பு பகவானே, நீங்கள் நெறிதவறியோரின் பாவச் செயல்களைக் குறைக்கும் பொருட்டும், அவர்களின் அறிவை பக்தியிலும் விடுதலையிலும் வளம்பெறச் செய்யும் பொருட்டும் இந்த உடலை எடுத்துள்ளீர்கள். இந்தப் பாவம் நிறைந்த மக்கள் உங்கள் வழிகாட்டலைச் சார்ந்துள்ளதால், உங்கள் சொந்த விருப்பத்தால் நீங்கள் ஒரு காட்டுப்பன்றி மற்றும் பிற வடிவங்களாகப் பிறப்பு எடுக்கிறீர்கள். அதுபோல, உங்களைச் சார்ந்தவர்களுக்கு எல்லை கடந்த அறிவை வழங்கும் பொருட்டு நீங்கள் தோன்றியுள்ளீர்கள்.

பதம் 3.33.6 : ஒருவர் ஒருமுறை பரம புருஷ பகவானின் புனிதப் பெயரைக் கூறினால் அல்லது அவரைப் பற்றி இசைத்தல் அவரது திருவிளையாடல்கள் பற்றிக் கேட்டால், அவருக்கு வணக்கங்களை அர்ப்பணித்தால், அல்லது அவரை நினைவு கூர்ந்தாலும் கூட அவர் நாய்க்கறி உண்ணும் குடும்பத்தில் பிறந்தவராயினும் உடனே வேத வேள்விகளை நிகழ்த்துவதற்குத் தகுதியானவர் ஆகிறார் என்றால், பரம புருஷரை நேருக்கு நேர் பார்க்கும் மனிதர்களின் ஆன்மீக முன்னேற்றம் பற்றிச் சொல்ல ஏதுமில்லை.

பதம் 3.33.7 : ஓ, அவர்கள் எத்துணை புகழ் பெற்றவர்கள் அவர்களின் நாக்குகள் உங்களின் புனிதப் பெயரை உச்சரிக்கின்றன. நாய் உண்பவர்களின் குடும்பங்களில் பிறந்திருந்தாலும் அந்த மனிதர்கள் வழிபடத்தக்கவர்கள். உங்கள் மேலாட்சியின் புனிதப் பெயரை உச்சரிப்வர்கள் எல்லாவிதமான துறவுகள், அக்னியாகங்கள் ஆகியவற்றை நிறைவேற்றி இருக்கவேண்டும், ஆரியர்களின் எல்லா நல்ல முறைகளையும் அடைந்திருக்க வேண்டும். உங்கள் மேலாட்சியின் புனிதப் பெயரை உச்சரிப்பதற்கு, அவர்கள் யாத்திரை செய்யும் புனித இடங்களில் குளித்திருக்க வேண்டும், வேதங்களைப் படித்திருக்க வேண்டும் தேவையான எல்லாவற்றையும் நிறைவேற்றி இருக்க வேண்டும்.

பதம் 3.33.8 : என் பகவானே, நீங்கள் கபிலர் என்ற பெயரிலிருக்கும் பகவான் விஷ்ணுவே என்றும், நீங்கள் பரம புருஷ பகவான், மேலான பிரம்மன் என்றும் நான் நம்புகிறேன். புனிதர்களும் முனிவர்களும், மனம் மற்றும் புலன்களின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, உங்களைக் குறித்து த்யானிக்கிறார்கள், ஏனெனில் உங்கள் கருணையால் மட்டுமே ஒருவர் ஜடஇயற்கையின் மூன்று குணங்களின் பிடிகளிலிருந்து விடுபடமுடியும். அழிவின் போது, எல்லா வேதங்களும் உங்களிடம் மட்டும் தக்க வைக்கப்படுகின்றன.

பதம் 3.33.9 : இவ்வாறு பரம புருஷ பகவான் கபிலர், தான் மிகவும் அன்பு கொண்டுள்ள தன் அன்னையின் சொற்களால் திருப்தி அடைந்து, மதிப்புடன் பதிலளித்தார்.

பதம் 3.33.10 : பரம புருஷ பகவான் கூறினார்: என் அன்பு அன்னையே, நான் உங்களுக்கு முன்பே அறிவுறுத்திய தன்னை உணர்தலின் வழி மிகவும் எளிமையானது. நீங்கள் இந்த முறையைக் கஷ்டமின்றி நிறைவேற்றலாம், அதைப் பின்பற்றுவதால், உங்கள் தற்போதைய உடலினுள்ளே விடுதலையை, நீங்கள் மிக விரைவில் பெறுவீர்கள்.

பதம் 3.33.11 : என் அன்புத் தாயே, மெய்யறிவாளர்களாய் இருப்பவர்கள், நான் உங்களுக்குத் தந்துள்ளது போன்ற அறிவுரைகளை உறுதியாகப் பின்பற்றுவார்கள். உங்களுக்கு மற்றவை உறுதியளிக்கப்பட்டவை, அதாவது, நீங்கள் சரியாகத் தன்னை அறியும் பாதையைக் கடந்து சென்றால் உறுதியாக நீங்கள் அச்சம் தரத்தக்க குற்றத்திலிருந்து விடுபடுவீர்கள், இறுதியில் என்னை அடைவீர்கள். அம்மா, பக்தித் தொண்டின் இந்த முறையைக் கற்றுணராதவர்கள், உறுதியாக பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியிலிருந்து வெளியில் வர இயலாது.

பதம் 3.33.12 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: பரம புருஷ பகவானாகிய கபிலர், தன் அன்பான அன்னைக்கு அறிவுறுத்திய பிறகு, அவர் சமயப் பணி நிறைவேறியதால், அன்னையிடம் அனுமதி பெற்று வீட்டை விட்டுச் சென்றார்.

பதம் 3.33.13 : அவள் மகனால் அறிவுறுத்தப்பட்டதுபோல, தேவஹூதியும் அந்த ஆஸ்ரமத்திலேயே பக்தி யோகத்தைப் பயிற்சி செய்யத் தொடங்கினாள். அவள், மலர்களால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு, ஸரஸ்வதி நதியின் மலர்க்கிரீடமாகக் கருதப்பட்ட கர்தம முனிவரின் இல்லத்தில் சமாதி நிலையைப் பயிற்சி செய்தாள்.

பதம் 3.33.14 : அவள் தினமும் மூன்று முறை குளிக்கத் தொடங்கினாள், இவ்வாறு அவள் சுருண்ட கருங் கூந்தல் படிப்படியாக நரைத்துப் போனது. தவத்தால், அவள் உடல் படிப்படியாக இளைத்துப் போனது, அவள் பழைய உடைகளை அணிந்தாள்.

பதம் 3.33.15 : பிரஜாபதிகளில் ஒருவராகிய கர்தம முனிவரின் வீடும், அகப்பரிவாரமும், அவருடைய தவம் மற்றும் யோகத்தின் அறிவாற்றலின் விளைவாக, அவரது செல்வவளம் சில சமயம் வான்வெளியில் வானூர்திகளில் பயணம் செய்பவர்களாலும் பொறாமைப்படும் விதத்தில் அமைந்திருந்தது.

பதம் 3.33.16 : இங்கு கர்தம முனிவரின் வீட்டுச் செல்வவளம் வர்ணிக்கப்படுகிறது. படுக்கை விரிப்புகளும் படுக்கைகளும் பாலின் நுரைபோல் வெண்மையாக இருந்தன, நாற்காலிகளும் மேஜைகளும் தங்கத்தால் செய்யப்பட்டு, தங்கத்தால் ஆன சரிகைச் சித்திர வேலையுடன் கூடிய துணியால் மூடப்பட்டிருந்தன, படுக்குமிடம் தங்கத்தால் செய்யப்பட்டு, மிகவும் மென்மையான தலையணைகளைக் கொண்டிருந்தது.

பதம் 3.33.17 : வீட்டின் சுவர்கள் முதல் தரமான பளிங்கினால் கட்டப்பட்டிருந்தன, மதிப்புமிக்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விளக்கிற்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை, ஏனெனில் வீடு இந்த நகைகளின் ஒளிக் கதிர்களால் ஒளிவீசிப் பிரகாசித்தது. வீட்டில் உள்ள பெண்மணிகள் ஏராளமான நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.

பதம் 3.33.18 : வீட்டின் சுற்றுச்சுவர் ஆழகிய தோட்டங்களாலும், இனிய, மணமுள்ள மலர்களாலும், உயர்ந்த, அழகிய, புதுப்பழங்களைத் தரும் பல மரங்களாலும் சூழப்பட்டிருந்தது. அந்தத் தோட்டங்களில் பாடும் பறவைகள் மரங்களின் மீது அமரும், அவற்றின் பேசும் ஒலிகள், தேனீக்களின் முனகும் ஒலி இவை அந்தச் சூழலையே எத்துணை முடியுமோ அத்துணை இனிமையாக ஆக்கி இருந்ததால் மிகவும் கவர்ச்சியாய் இருந்தன.

பதம் 3.33.19 : தாமரை மலர்கள் நிரம்பிய குளத்தில் குளிப்பதற்காக, அந்த அழகிய தோட்டத்தில் தேவஹூதி நுழையும்போது, வானுலக வாசிகளின் துணைவர்களாகிய கந்தர்வர்கள், கர்தம முனிவரின் புகழ்மிக்க இல்லற வாழ்வு பற்றிப் பாடுவார்கள். அவளின் சிறந்த கணவராகிய, கர்தமர், அவளுக்கு எல்லா நேரத்திலும் எல்லாப் பாதுகாப்பும் அளித்தார்.

பதம் 3.33.20 : எல்லாப் பக்கங்களிலும் அவள் நிலை தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், புனிதவதியான தேவஹூதி, மேலுலகப் பெண்களும் பொறாமைப்படும் அளவிற்கு அவளுக்கு உடைமைகள் இருந்தபோதிலும், எல்லா வசதிகளையும் விட்டு விட்டாள். அவள் தனது மகன் தன்னிடமிருந்து பிரிக்கப்படுகிறாரே என்று மட்டும் வருந்தினாள்.

பதம் 3.33.21 : தேவஹூதியின் கணவர் முன்பே வீட்டை விட்டுச் சென்று துறவு வாழ்வை ஏற்றுக் கொண்டார், பின்னர் அவளது ஒரே மகன், கபிலர், வீட்டை விட்டுச் சென்றார். அவளுக்கு வாழ்வு மற்றும் மரணத்தின் எல்லா உண்மைகளும் தெரியும் என்றாலும், அவள் மனம் எல்லா மாசும் நீங்கித் தூய்மையடைந்திருந்தது என்றாலும், ஒரு பசு தன் கன்று இறக்கும் பொழுது பாதிக்கப்படுவதுபோல, அவள் மகனின் இழப்பிற்குப் பெரிதும் வருந்தினாள்.

பதம் 3.33.22 : ஓ விதுரரே, இவ்வாறு அவள் மகனாகிய பரம புருஷ பகவானை, கபில தேவரை நோக்கி எப்போதும் தியானித்து, அவள் மிக விரைவில் அவளது நன்கு அலங்கரிக்கப்பட்ட வீட்டிடம் பற்றின்றிப் போனாள்.

பதம் 3.33.23 : அதனால் எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய பரம புருஷ பகவான், கபில தேவர், அவள் மகனிடமிருந்து எல்லாவற்றையும் விளக்கமாகவும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டதும், தேவஹூதி நிலையாகத் தொடர்ந்த பகவானின் விஷ்ணு வடிவத்தைக் குறித்து தியானிக்கத் தொடங்கினாள்.

பதங்கள் 3.33.24 – 3.33.25 : அவள் அவ்வாறு சீரிய ஈடுபாட்டுடன் பக்தித் தொண்டு புரிந்தாள். அவள் ஆழ்ந்த துறவு நிலை மேற்கொண்டதால், அவள் உடலின் அடிப்படைத் தேவைகளை மட்டும் ஏற்றுக் கொண்டாள். பரம சத்தியத்தை உணர்ந்து கொண்டதால் அறிவு பெற்றாள், அவள் மனம் தூய்மை அடைந்தது, அவள் பரம புருஷ பகவானைக் குறித்து தியானம் செய்வதில் முழுவதும் ஆழ்ந்து விட்டாள், இயற்கையின் குணங்களால் ஏற்பட்ட எல்லா அச்ச உணர்வுகளும் அவளிடமிருந்து மறைந்தன.

பதம் 3.33.26 : அவள் மனம் பகவானிடம் முழுதும் ஈடுபட்டது, அவள் தானாகவே அருவ பிரம்மன் பற்றிய அறிவை உணர்ந்தாள். பிரம்மனை உணர்ந்த ஆத்மாவாக, அவள் வாழ்வின் உலோகாயதக் கருத்தின் நெறிமுறையினின்று விடுபட்டாள். இவ்வாறு எல்லா உலகத் துன்பங்களும் மறைந்தன. அவள் எல்லை கடநத் இன்பம் அடைந்தாள்.

பதம் 3.33.27 : நிலையான மயக்கத்தில் இருந்து இயற்கையின் குணங்களால் வலியுறுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு, ஒருவர் கனவில் தன்னுடைய வேறுபட்ட உடல்களை மறப்பதுபோல அவள் தன் பருவுடலை மறந்தாள்.

பதம் 3.33.28 : அவளது உடல் அவள் கணவராகிய கர்தமர் படைத்த அழகிய ஆன்மீக பெண்களால் பராமரிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவளுக்கு மனக் கவலை இல்லாததால், அவளது உடல் இளைக்க வில்லை. அவள் புகையால் சூழப்பட்ட நெருப்பு போலத் தோன்றினாள்.

பதம் 3.33.29 : அவள் எப்போதும் பரம புருஷ பகவானுடைய நினைவில் மூழ்கி இருந்ததால், அவள் கூந்தல் சிலசமயம் தளர்த்தப்பட்டு இருந்ததையோ அல்லது அவளது உடைகள் ஒழுங்கின்றிக் கலைந்து இருந்ததையோ அவள் அறியவில்லை.

பதம் 3.33.30 : என் அன்பு விதுரரே, கபிலரால் அறிவுறுத்தப்பட்ட தத்துவங்களைப் பின்பற்றுவதால், தேவஹூதி விரைவில் உலகப் பிணிப்பிலிருந்து விடுதலை அடைந்தாள், அவள் கடினமின்றி, பரமாத்மா ஆகிய பரம புருஷ பகவானை அடைந்தாள்.

பதம் 3.33.31 : என் அன்பு விதுரரே, தேவஹூதி அவளது பரிபூரணத்தை அடைந்த அரண்மனை மிகவும் புனித இருப்பிடமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அது மூன்று உலகங்களிலும் ஸித்தபத என்று குறிப்பிடப்படுகிறது.

பதம் 3.33.32 : அன்பு விதுரனே, அவள் உடலில் மூலப் பொருட்கள் நீராய் உருகி இப்போது ஓடும் நதியாகும். அது எல்லா நதிகளிலும் மிகவும் புனிதமானது. அந்த நதியில் குளிப்பவர் எவரும் முழுமை அடைகிறார், அதனால் முழுமையை விரும்பும் எல்லா மனிதர்களும் அங்கு சென்று குளிப்பார்.

பதம் 3.33.33 : என் அன்பு விதுரரே, மிகச்சிறந்த முனிவராகிய கபிலர், பரம புருஷ பகவான், அவருடைய தாயின் அனுமதியுடன் அவர் தந்தையின் துறவு மாடத்தை விட்டு நீங்கி வடகிழக்குத் திசை நோக்கிச் சென்றார்.

பதம் 3.33.34 : அவர் வடதிசையில் கடந்து செல்லும் பொழுது, எல்லா மேலுலக வாசிகளான சாரணர்கள் மற்றும் கந்தர்கள், முனிவர்கள் மற்றும் மேலுலகக் கோள்களின் அழகிய பெண்கள் அவரை வேண்டி, அவருக்கு எல்லா மரியாதைகளும் அளித்தனர். கடல் அவருக்குப் படையல்கள் அளித்து, தங்குவதற்கு இடம் கொடுத்தது.

பதம் 3.33.35 : இப்போதும் கூட கபில முனிவர் மூன்று உலகங்களிலுமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மாக்களின் விடுதலைக்காக அங்கு தியானத்தில் இருக்கிறார், சாங்கியத் தத்துவ முறையின் ஆசார்யர்கள் அல்லது சிறந்த ஆசிரியர்கள் அவரை வணங்குகின்றனர்.

பதம் 3.33.36 : என் அன்பு மகனே, நீ என்னிடமிருந்து கேட்டதால், நான் பதில் கூறினேன். ஓ பாவமற்றவனே, கபில தேவர், அவர் அன்னை மற்றும் அவர்களது செயல்கள் பற்றிய வர்ணனைகள் எல்லாத் தூய உரையாடல்களைக் காட்டிலும் மிகவும் தூய்மையானது.

பதம் 3.33.37 : கபிலதேவர் மற்றும் அவரது அன்னையின் செயல்கள் பற்றிய வர்ணனை மிகவும் ரகசியமானது, இந்த வர்ணனையைப் பற்றிக் கேட்பவர் அல்லது படிப்பவர் கருடரால் தாங்கப்படும் பரம புருஷ பகவானுக்குப் பக்தராகிறார், அதன் பின்னர், அவர் பகவானின் எல்லை கடந்த அன்புத் தொண்டில் ஈடுபடுவதற்கு பகவானின் இருப்பிடத்தில் நுழைகிறார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare