அத்தியாயம் – 29
கபில பகவானின் பக்தித் தொண்டு பற்றிய விளக்கம்
பதங்கள் 3.29.1 – 3.29.2 : தேவஹுதி விசாரித்தாள்; என் அன்பு பகவானே, நீங்கள் முன்பே ஸாங்க்ய தத்துவ முறைப்படி ஆத்மாவின் குணநலன்களையும், முழு இயற்கையின் அடையாளங்களையும் அறிவுபூர்வமாக வர்ணித்தீர்கள். இப்போது நான் தத்துவ முறைகளின் இறுதி முடிவாகிய பக்தித் தொண்டின் பாதையை விளக்கும்படி வேண்டுகிறேன்.

பதம் 3.29.3 : தேவஹூதி தொடர்ந்தாள்; என் அன்பு பகவானே, எனக்காவும் பொதுவில் மக்களுக்காகவும் பிறப்பு இறப்பின் தொடர்ந்த முறையை தயவுசெய்து விளக்கமாக வருணியுங்கள், ஏனெனில் அந்தப் பேரிடர்களைக் கேட்பதன் மூலம் நாம் இந்த உலகின், செயல்களிலிருந்து ஒதுங்கியிருக்க முடியும்.

பதம் 3.29.4 : உங்கள் தோற்றம் என்றும் அழியாத காலத்தைப் பிரதிபலிக்கிறது. பக்திச் செயல்களை நிகழ்த்துவதில் ஈடுபட்டுள்ள மக்களைப் பொதுவாகப் பாதிக்கும் அந்த நிலையான காலத்தைப் பற்றியும் தயவு செய்து வர்ணியுங்கள்.

பதம் 3.29.5 : என் அன்பு பகவானே, நீங்கள் சூரியனைப் போன்றவர், ஏனெனில் நீங்கள் உயிரினங்களின் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வின் இருளுக்கு ஒளி தருபவர். அவர்களின் அறிவுக்கண்கள் மூடியிருப்பதால் உங்கள் பாதுகாப்பு இன்றி அந்த வீட்டில் நிரந்தரமாக உறங்குகிறார்கள். அதனால் அவர்கள் தங்கள் உலகியல் நடவடிக்கைகளின் செயல்கள் மற்றும் எதிர்ச்செயல்களால் போலியாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அவர்கள் மிகவும் களைப்படைந்தவர்களாகத் தோன்றுகின்றனர்.

பதம் 3.29.6 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: ஓ குருக்களில் சிறந்தவரே, சிறந்த முனிவர் கபிலர் அவர் புகழ்பெற்ற அன்னையின் சொற்களால் மகிழ்ந்து, கருணையால் நெகிழ்ந்து, பின்வருமாறு பேசினார்.

பதம் 3.29.7 : பரமபுருஷ பகவான் ஆகிய பகவான் கபிலர் பதில் கூறினார்: ஓ உயர்குடிப் பிறந்த பெருமாட்டியே, அனுஷ்டிப்பவரின் வேறுபட்ட குணங்களுக்கேற்ப பல்வேறு வகையான பக்தி நெறிகள் உள்ளன.

பதம் 3.29.8 : பொறாமை, தற்பெருமை, வன்முறை மற்றும் கோபம் இவை உள்ள ஒருவரால் நிறைவேற்றப்படும் பக்தித் தொண்டு இருட்டாகிய (தமோ) குணத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது.

பதம் 3.29.9 : மாறுபட்ட சிந்தனையாளரால் கோவிலில், உலக இன்பம், புகழ் பொருள் இவற்றுக்கான நோக்கங்களுடன் செய்யப்படும் தெய்வ வழிபாடு ரஜோ குணத்தில் செலுத்தப்படும் பக்தியாகும்.

பதம் 3.29.10 : ஒரு பக்தர் பரமபுருஷ பகவானை வழிபட்டு செயல் விளைவுகளின் மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு தமது செயல்களின் பயனை அர்ப்பணிக்கும் பொழுது, அவரது பக்தி ஸத்வ குணத்தில் இருக்கும்.

பதங்கள் 3.29.11 – 3.29.12 : எல்லாருடைய மனதிலும் குடியிருக்கும் பரமபுருஷ பகவானின் குணங்கள் மற்றும் உன்னதமான பெயரையும் கேட்டதும் ஒருவருடைய மனம் உடனே கவரப்படும் பொழுது, கலப்படமற்ற பக்தித் தொண்டின் வெளிப்பாடு காட்டப்படுகிறது. கங்கையின் நீர் இயல்பாகவே கடலை நோக்கிப் பாய்வது போல, அந்தப் பக்திப் பேரின்பம் எந்த பூவுலகச் சூழலாலும் தடைப்படாமல், பகவானை நோக்கிப் பாய்கிறது.

பதம் 3.29.13 : ஒரு தூய பக்தர்-ஸாலோக்யம், ஸார்ஷ்டி ஸாமீப்யம், ஸாரூப்யம் அல்லது ஏகத்வம் ஆகிய இப்பதவிகள் பரமபுருஷ பகவானாலேயே கொடுக்கப்பட்டாலும் கூட, இத்தகைய எந்தவித விடுதலையையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

பதம் 3.29.14 : நான் விளக்கியது போல, பக்தித் தொண்டின் மிகவுயர்ந்த நிலையை அடைவதால், ஒருவர் ஜட இயற்கையின் மூன்று குணங்களின் பாதிப்பை மிஞ்ச முடியும். பகவானைப்போல, உன்னதமான நிலையில் அமையமுடியும்.

பதம் 3.29.15 : ஒரு பக்தர் உலகியல் லாபங்களைக் கருதாமல், புகழ் பெற்ற, தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யவேண்டும். அதிக வன்முறையின்றி, ஒருவர் ஒழுங்காக தமது பக்திச் செயல்களை நிகழ்த்த வேண்டும்.

பதம் 3.29.16 : பக்தர் ஒழுங்காக என் சிலைகளைக் கோவிலில் பார்க்க வேண்டும். என் தாமரைத் திருவடிகளைத் தொடவேண்டும் வணங்கத் தகுந்த கொடி, வேண்டுதல்களை அர்ப்பணிக்க வேண்டும். அவர் துறவின் ஆத்மாவில், ஸத்வ குணத்திலிருந்து, எல்லா உயிரினத்தையும் ஆன்மீகமானதாகப் பார்க்கவேண்டும்.

பதம் 3.29.17 : தூய பக்தர் ஆன்மீக குரு மற்றும் ஆச்சார்யர்களுக்கு மிகச் சிறந்த மதிப்புத் தருவதன் மூலம் பக்தித் தொண்டு புரியவேண்டும். அவர் ஏழைகளிடம் கருணையுள்ளவராய் இருக்க வேண்டும், அவருக்குச் சமமானவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அவரது எல்லாச் செயல்களும் ஒழுங்கு மற்றும் புலன்களின் கட்டுப்பாட்டுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

பதம் 3.29.18 : ஒரு பக்தர் எப்போதும் ஆன்மீக விஷயங்களைப் பற்றிக் கேட்க முயற்சி செய்ய வேண்டும். எப்போதும் பகவானின் புனிதப் பெயரை உச்சரிப்பதில் தன் நேரத்தைப் பயன்படுத்தவேண்டும். அவரது நடத்தை எப்போதும் நேரானதாக, எளிமையாக இருக்கவேண்டும், அவர் பொறாமை அற்றவராக, ஆனால் எல்லாரிடமும் நட்புடன் இருந்த போதிலும், அவர் ஆன்மீகத்தில் முன்னேறாதவர்களின் நட்பைத் தவிர்க்க வேண்டும்.

பதம் 3.29.19 : ஒருவர் இந்த மனோவாக்குக் காயம் கடந்த இயல்புகளுடன் முழுதும் தகுதிபெற்று அவரது உணர்வு நிலை முழுதும் தூய்மையடையும் பொழுது, அவர் என் பெயரைக் கேட்பதன் மூலமே அல்லது என் தத்துவ குணங்களைக் கேட்பதன் மூலமே கவரப்படுகிறார்.

பதம் 3.29.20 : காற்றாகிய தேர் நறுமணத்தை அதன் மூலத்திலிருந்து தாங்கி வந்து, உடனே முகரும் புலனைக் கவர்வதுபோல் பக்தித் தொண்டில், கிருஷ்ண உணர்வில் தொடர்ந்து ஈடுபடும் ஒருவர், எல்லா இடத்திலும் சமமாக இருக்கும் முழுமுதற் கடவுளை அடைய முடியும்.

பதம் 3.29.21 : நான் பரமாத்மாவாக ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கிறேன். எவராவது எங்கும் அந்தப் பரமாத்மாவைப் புறக்கணித்து அல்லது மதிக்காமல், கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபடுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், அது போலியாகும்.

பதம் 3.29.22 : கோவில்களில் பகவானை தெய்வமாக வழிபடும் ஒருவர், பகவான் பரமாத்மாவாக ஒவ்வொரு உயிரினத்தின் மனத்திலும் அமைந்திருக்கிறார் என்று அறியவில்லையாயின் அவர் அறியாமையில் இருக்கிறார் என்று பொருள். அவர் படையல்களைச் சாம்பலில் அர்ப்பணிப்பவருடன் ஒப்பிடப்படுகிறார்.

பதம் 3.29.23 : எனக்கு மதிப்புத்தரும் ஒருவர், மற்றவரின் உடல்களைக் கண்டு பொறாமைப்பட்டால், வேறுபாட்டு உணர்ச்சியோடு இருந்தால் அவர் ஒருபோதும் மன அமைதி பெறுவதில்லை, ஏனெனில் அவர் பிற உயிரினங்களிடத்தில் பகைமையுணர்ச்சி உடையவர்.

பதம் 3.29.24 : என் அன்பு அன்னையே, அவர் முறையான சடங்குகள், கொடிகளுடன் வழிபட்டாலும், எல்லா உயிரினங்களிலும் யான் பரவி இருப்பதை அறியாதவர், கோவிலில் தெய்வங்களின் வழிபாட்டால் ஒருபோதும் என்னை மகிழ்விப்பதில்லை.

பதம் 3.29.25 : தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்து கொண்டு ஒருவர் இறைவன் இருப்பதைத் தன் மனதில் உணர்ந்து உயிரனங்களின் மனதிலும் உணர்த்தும் வரை பரமபுருஷ பகவானின் தெய்வ நிலையை வழிபடவேண்டும்.

பதம் 3.29.26 : தனக்கும் பிற உயிரனங்களுக்கும் இடையில் வேறுபாடான மனநிலை கொண்டு பிறவற்றைக் கீழாக எண்ணுபவர்களிடம் மரணமாகிய ஒளிவீசும் நெருப்பு போல நான் மிகுந்த அச்சத்தைத் தோற்றுவிக்கிறேன்.

பதம் 3.29.27 : அதனால், தானமாக வழங்கக்கூடிய பரிசுகள் மற்றும் மதிப்பு மூலமும், நட்பான நடத்தை மூலமும் மற்றும் எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பதன் மூலமும், ஒருவர் எல்லா உயிரினங்களிலும் அவற்றின் ஆத்மாவாக உறையும் என்னை அமைதிப்படுத்த வேண்டும்.

பதம் 3.29.28 : ஓ ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே, உயிரினங்கள் உயிரற்ற பொருட்களை விட மேலானவை, உயிர் இருப்பதற்கான அடையாளங்களை வெளிப்படுத்தும் உயிரினங்கள் மேலும் மேம்பட்டவை. வளர்ச்சியடைந்த உணர்வு நிலையுடன் உள்ள விலங்குகள் அவற்றை விட மேம்பட்டவை, புலனுணர்வை வளர்த்துக் கொண்டவை இன்னும் மேம்பட்டவை.

பதம் 3.29.29 : புலனுணர்வை வளர்த்துக் கொண்ட உயிரினங்களில், சுவைப் புலனை வளர்த்துக் கொண்டவர்கள் தொடு புலனை மட்டும் வளர்த்துக் கொண்டவர்களை விட மேலானவர்கள். அவர்களைவிட முகரும் புலனை வளர்த்துக் கொண்டவர்கள் மேலனாவர்கள், கேட்கும் புலனை வளர்த்துக் கொண்டவர்கள் இன்னும் மேலானவர்கள்.

பதம் 3.29.30 : ஒலியை உற்றுணரக் கூடிய உயிரினங்களை விட மேம்பட்டவர்கள் பொருளுக்கும் மற்றொன்றிற்கும் இடையே வேறுபாடு கண்டுபிடிப்பவர்கள் ஆவர். அவர்களைவிட மேம்பட்டவர்கள் மேல் வரிசை கீழ்வரிசைப் பற்கள் உடையவர்களாவர், அவர்களை விட மேலும் மேம்பட்டவர்கள் பல கால்களை உடையவர்களாவர். அவர்களைவிட நான்கு கால்களை உடையவர்கள் மேம்பட்டவர்கள், மனித உயிர்கள் இன்னும் மேம்பட்டவை.

பதம் 3.29.31 : மனித உயிரினங்களில் தகுதி மற்றும் வேலைக்கு ஏற்றபடி பிரிக்கப்பட்ட சமுதாயம் சிறந்தது, அந்தச் சமுதாயத்தில் பிராம்மணர்களாக அமர்த்தப்பட்ட புத்திசாலி மனிதர்கள் சிறந்தவர்கள். பிராம்மணர்களில் வேதங்களைப் படித்தவர்கள் சிறந்தவர்கள், வேதங்களைப் படித்த பிராம்மணர்களிலும் வேதத்தின் உண்மையான பொருளுரையை அறிந்தவர் சிறந்தவர்.

பதம் 3.29.32 : வேதங்களின் நோக்கத்தை அறிந்த பிராம்மணர்களைவிட எல்லாச் சந்தேகங்களையும் சிதற அடிப்பவர் மேலானவர், பிராம்மணக் கொள்கைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுபவர் அவரை விட மேலானவர். எல்லா ஜட மாசிலிருந்தும் விடுபட்டவர் அவரை விட மேலானவர் அவரை விட மேலானவர் பிரதிபலனை எதிர்ப்பாக்காமல் பக்தித் தொண்டை நிறைவேற்றும் தூய பக்தர் ஆவார்.

பதம் 3.29.33 : அதனால் என்னைத் தவிர வெளியில் எதிலும் ஆர்வமில்லாத தனியொருவரை விடச் சிறந்தவரை நான் காணவில்லை. அவர் அதனால் தன் வாழ்நாள் முழுவதும், ஓய்ச்சல் ஒழிவின்றி என்னிடம் ஈடுபட்டு தன் செயல்களை எல்லாம் அர்ப்பணிக்கிறார்.

பதம் 3.29.34 : அந்த முழுமையான பக்தர் எல்லா வாழும் உயிரினத்திற்கும் மதிப்புத் தருகிறார். ஏனென்றால் பரமபுருஷ பகவான், பரமாத்மாவாக, அல்லது அதிகாரியாக எல்லா உயிரினத்தின் உடலிலும் ஊடுருவியுள்ளார் என்று உறுதியாகக் கூறி உள்ளார்.

பதம் 3.29.35 : என் அன்புத் தாயே, ஓ மனு மகளே, பக்தித் தொண்டையும், மாய யோக அறிவியலையும் இப்படிப் பிரயோகிக்கிற ஒரு பக்தரே, அந்த பக்தித் தொண்டினால் தான் பரம புருஷனின் இருப்பிடத்தை அடைய முடியும்.

பதம் 3.29.36 : தனிப்பட்ட ஆத்மா அணுக வேண்டிய இந்தப் புருஷர், பிரம்மன் மற்றும் பரமாத்மா என்று அறியப்படும் பரமபுருஷ பகவானின் நிலையான வடிவமாகும். அவர் உன்னதமான தலைவர் (பரமன்) அவரது எல்லாச் செயல்களும் புனிதமானவை.

பதம் 3.29.37 : பல்வேறு பருவுடல் வெளிப்பாடுகளின் மாற்றத்திற்குக் காரணமாகிய காலக் கூறு பரமபுருஷபகவானின் மற்றொரு அம்சமாகும். காலமானது அதே பரமபுருஷ பகவான் தான் என்று அறியாதவர் காலக் கூற்றுக்குப் பயப்படுகிறார்.

பதம் 3.29.38 : எல்லா வேள்விகளையும் அனுபவிப்பவராகிய பகவான் விஷ்ணு, பரமபருஷ பகவானே காலக் கூறாவார். அவரே எல்லாத் தலைவர்களின் தலைவர். அவர் எல்லாருடைய மனத்திலும் ஊடுருவிச் செல்கிறார். அவர் எல்லாருக்கும் துணைவர், அவர் எல்லா உயிரினமும் மற்றொன்றால் நிர்மூலமாக்கப்படுவதற்குக் காரணமாகிறார்.

பதம் 3.29.39 : பரமபுருஷ பகவானுக்கு மிக அன்பானவர் என்று யாருமில்லை, யாரும் அவருக்கு எதிரியோ அல்லது நண்பனோ இல்லை. ஆனால் அவர் தன்னை மறக்காதிருப்பவர்களுக்குத் தூண்டுதலைத் தந்து தன்னை மறப்பவர்களை அழிக்கின்றார்.

பதம் 3.29.40 : பரமபுருஷ பகவானிடம் கொண்ட அச்சத்தால் காற்று வீசுகிறது, அவரிடம் கொண்ட பயத்தால் கதிரவன் ஒளி வீசிகிறது, அவரிடம் கொண்ட பயத்தால் மழை பொழிகிறது, அவரிடம் கொண்ட பயத்தால் மேலுலகக் கோளங்கள் தங்கள் ஒளியைச் சிந்துகின்றன.

பதம் 3.29.41 : பரமபுருஷ பகவானிடமுள்ள பயத்தால் மரங்கள், கொடிகள், மூலிகைகள் மற்றும் பருவகாலத் தாவரங்கள் மற்றும் பூக்கள் மலர்ந்து, காய் கனிகளை அதனதன் பருவத்தில் கொடுக்கின்றன.

பதம் 3.29.42 : பரமபுருஷ பகவானிடம் உள்ள பயத்தால் நதிகள் பாய்கின்றன, கடல்கள் நிரம்பி வழிவதில்லை. அவரிடம் உள்ள பயத்தால் மட்டுமே நெருப்பு எரிகிறது, பூமி அதன் மலைகளுடன் அண்டத்தின் நீரில் மூழ்காமல் உள்ளது.

பதம் 3.29.43 : பரமபுருஷ பகவானின் கட்டுபாட்டுக்கு உட்பட்டு, எண்ணிலடங்கா உயிரினங்களைத் தாங்கிய பல்வேறு கோள்களும் வான் வெளியில் தங்கியிருக்க வானம் அனுமதிக்கிறது. முழு அண்டவுடலும், அவருடைய மேலான கட்டுப்பாட்டின் கீழ் அதன் ஏழு அடுக்குகளுடன் விரிவடைகிறது.

பதம் 3.29.44 : பரமபுருஷ பகவானிடம் உள்ள பயத்தால், இயற்கையின் குணங்களின் பொறுப்பில் உள்ள வழிகாட்டும் தேவர்கள், படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்கின்றனர். இந்த பூதவுலகினுள் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

பதம் 3.29.45 : நிலையான காலக் கூறு தொடக்கமும் முடிவும் இல்லாதது. குற்ற இயல்புடைய உலகைப் படைப்பாகிய அது பரமபுருஷ பகவானின் பிரதிநிதி ஆகும். அது குறிப்பிடத்தக்க உலகை ஒரு கட்டத்தில் முடிவுக்குக் கொண்டு வருகிறது, ஒரு தனிப்பட்டவரை மற்றொன்றிலிருந்து வாழ்விற்குக் கொண்டு வருவதன் மூலம் படைப்புத் தொழிலைச் செய்கிறது, அதுபோல, மரணதேவன் ஆகிய யமராஜனையும் அழிப்பதன் மூலம் அது அண்டத்தைக் கலைக்கிறது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare