அத்தியாயம் – 28
பக்தித் தொண்டைச் செயற்படுத்துவதில்
கபிலரின் அறிவுரைகள்
பதம் 3.28.1
ஸ்ரீ-பகவானுவாச
யோகஸ்ய லக்ஷணம் வக்ஷ்யே ஸபீஜஸ்ய ந்ருபாத்மஜே
மனோ யேநைவ விதினா ப்ரஸந்நம் யாதி ஸத்-பதம்

ஸ்ரீ-பகவான் உவாச-பரமபுருஷ பகவான் கூறினார்; யோகஸ்ய-யோக முறையின்; லக்ஷணம்—வர்ணனை; வக்ஷ்யே-நான் விளக்குவேன்; ஸபீஜஸ்ய-அதிகாரம் வழங்கப்பட்ட; ந்ருபாத்மஜே-ஓ அரசனின் புதல்வியே; மன:-மனம்; யேன-அதனால்; ஏவ-நிச்சயமாக; விதினா-பயிற்சியால்; ப்ரஸந்நம்-மகிழ்ச்சி; யாதி-அடைந்து; ஸத்பதம்-பரம சத்தியத்தின் வழி.

பரமபுருஷ பகவான் கூறினார்: என் அன்பு அன்னையே, ஓ அரசனின் புதல்வியே, இப்போது நான் உங்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யோக முறையை விளக்குவேன். இந்த முறையைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சி அடைய முடியும், பூரணமான உண்மையாகிய இறைவனது வழியை நோக்கி முன்னேற முடியும்.

பதம் 3.28.2
ஸ்வ-தர்மாசரணம் சக்த்யா விதர்மாச்ச நிவர்தனம்
தைவால்லப்தேன ஸந்தோஷ ஆத்ம விச்-சரணார்சனம்

ஸ்வதர்ம ஆசரணம்-ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுதல்; சக்த்யா-ஒருவரின் மிகச் சிறந்த திறமைக்கு; விதர்மாத்—அதிகாரப்பூர்வமற்ற கடமைகள்; ச-மற்றும்; நிவர்தனம்-தவிர்த்தல்; தைவாத்-பகவானின் கருணையால்; லப்தேன-அடையப்பட்டதுடன்; ஸந்தோஷ-திருப்தியடைந்து; ஆத்மவித்—தன்னை அறிந்த ஆத்மாவின்; சரண:-பாதங்கள்; அர்சனம்-வழிபாடு.

ஒருவர் தனக்கென்று வரையறுக்கப்பட்ட கடமைகளை, தன் திறமைக்கு தக்கபடி நிறைவேற்ற வேண்டும், தனக்கென்று தரப்படாத கடமைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பகவானின் அருளால் அவர் அடையும் நன்மையைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். ஒருவர் ஆன்மீக குருவின் பாத கமலங்களை வழிபட வேண்டும்.

பதம் 3.28.3
க்ராம்ய-தர்ம-நிவ்ருத்திஸ்ச மோக்ஷ-தர்ம-ரதிஸ்ததா
மித-மேத்யாதனம் ஸஸ்வத் விவிக்த-க்ஷேம-ஸேவனம்

க்ராம்ய-மரபு சார்ந்த; தர்ம-மதச்சடங்கு; நிவ்ருத்தி:-முடிவுறுதல்; ச-மற்றும்; மோக்ஷ-மோக்ஷத்திற்கு; தர்ம-மதச்சடங்கு; ரதி-கவரப்பட்டு; ததா-அந்த விதத்தில்; மித-சிறிய; மேத்ய-தூய; அதனம்—உண்ணுதல்; சஸ்வத்-எப்போதும்; விவிக்த-ஒதுங்கி; க்ஷேம-அமைதியான; ஸேவனம்-தங்குதல்.

ஒருவர் மரபு சார்ந்த மதச்சடங்குகளை நிறுத்த வேண்டும், முக்திக்கு அழைத்துச் செல்லுபவற்றால் கவரப்பட வேண்டும். ஒருவர் குறைந்த அளவே உண்ண வேண்டும், எப்போதும் தனியாக இருக்க வேண்டும், அதனால் அவரால் வாழ்வின் உயர்த்த நிறைவினை அடைய முடியும்.

பதம் 3.28.4
அஹிம்ஸா ஸத்யமஸ்தேயம் யாவ-தர்த்தபரிக்ரஹ:
ப்ரஹ்மசர்யம் தப: சௌசம் ஸ்வாத்யாய: புருஷார்சனம்

அஹிம்ஸா-அஹிம்சை; ஸத்யம்—உண்மை; அஸ்தேயம்- திருட்டிலிருந்து விலகியிருத்தல்; யாவத் அர்த—தேவயைான அளவு; பரிக்ரஹ:-உடைமை கொள்ளல்; ப்ரம்மசர்யம்:-பிரம்மசரிய நிலை; தப:-துறவு; சௌசம்-தூய்மை; ஸ்வ அத்யாய:-வேதங்கள் பற்றிய கல்வி; புருஷ அர்சனம்-பரமபுருஷ பகவான் பற்றிய வழிபாடு.

ஒருவர் அஹிம்ஸையையும், உண்மையையும் கடைப்பிடிக்க வேண்டும், திருட்டைத் தவிர்க்க வேண்டும், அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையானதை மட்டும் உடைமையாகக் கொண்டு திருப்தியடைய வேண்டும். அவர் புலன்நுகர் வாழ்வில் இருந்து விலகியிருத்தல் வேண்டும், துறவறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், தூய்மையாக இருக்க வேண்டும், வேதங்களைப் படிக்க வேண்டும், பரமபுருஷ பகவானின் தெய்வீக வடிவத்தை வழிபட வேண்டும்.

பதம் 3.28.5
மௌனம் ஸதா-ஸனஜய: ஸ்தைர்யம் ப்ராணஜய: சநை: ப்ரத்யாஹாரஸ்சேந்த்ரியாணாம் விஷயாந்மனஸா ஹ்ருதி

மௌனம்-அமைதி; ஸத்-நன்மை; ஆஸன-யோக நிலைகள்; ஐய:-கட்டுப்படுத்துதல்; ஸ்தைர்யம்—நிலைத்த தன்மை; ப்ராணஜய:-உயிர் நிலைக் காற்றைக் கட்டுப்படுத்துதல்; சநை:-படிப்படியாக; ப்ரத்யாஹர:-பின் இழுத்துக் கொள்ளல்; ச-மற்றும்; இந்த்ரியாணாம்-புலன்களின்; விஷயாத்—புலனுக்கான பொறிகளிலிருந்து; மனஸா-மனத்துடன்; ஹ்ருதி—இதயத்தில்.

ஒருவர் வேறுபட்ட யோக நிலைகளைப் பயிற்சி செய்வதன் மூலம் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும், நித்ய தன்மையைப் பெறுதல் வேண்டும், உயிர்நிலையான காற்றைச் சுவாசிப்பதைக் கட்டுப்படுத்தி, புலனுக்கான பொறிகளிலிருந்து புலன்களைப் பின் இழுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு இதயத்தில் மனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்.

பதம் 3.28.6
ஸ்வ-திஷ்ண்யானாமேக-தேசே மனஸா ப்ராண-தாரணம்
வைகுண்ட- லீலாபித்யானம் ஸமாதானம் ததாத்மன:

ஸ்வாதிஷ்ண்யானாம்—உயிர்நிலையான காற்று வட்டங்களுக்குள்; ஏகதேசே-ஒருபுள்ளியில்; மனஸா-மனத்துடன்; ப்ராண—உயிர்நிலைக் காற்று: தாரணம்-நிறுத்துதல்; வைகுண்டலீலா—பரமபுருஷ பகவானின் திருவிளையாடல்களின் மேல்; அபித்யானம்-ஒருமுகப்படுத்துதல்; ஸமாதானம்-ஸமாதி; ததா-இவ்வாறு; ஆத்மன:-மனத்தின்.

உடலுக்குள் உயிர்நிலைக் காற்று சுழற்சியின் ஆறு வட்டங்களில் ஒன்றில் மனத்தையும் உயிர்நிலைக் காற்றையும் நிறுத்துதல், இவ்வாறு பரமபுருஷ பகவானின் உன்னதமான லீலைகளில் ஒருவரின் மனத்தை ஒருமுகப்படுத்துதல் மனத்தின் ஸமாதி அல்லது ஸமாதானம் என்று அழைக்கப்படும்.

பதம் 3.28.7
ஏதைரந்யைஸ்ச பதிபிர் மனோ துஷ்டமஸத்பதம்
புத்த்யா யுஞ்ஜீத சனகைர்ஜிதப்ராணோ ஹ்யதந்த்ரித:

ஏதை:-இவற்றால்; அந்யை:-பிறவற்றால்; ச-மற்றும்; பதபி:-முறைகள்; மன:-மனம்; துஷ்டம்-மாசு அடைந்து; அஸத்பதம்-ஜட இன்பத்தின் வழியில்; புத்த்யா-அறிவுக் கூர்மையால்; யுஞ்ஜீத-ஒருவர் கட்டுப்படுத்த வேண்டும்; சனகை:-படிப்படியாக; ஜிதப்ராண:-வாழ்வின் காற்று நிறுத்தப்பட்டு; ஹி-உண்மையில்; அதந்த்ரித:-விழிப்பு.

இந்த முறைகளால் அல்லது வேறு எந்த உண்மையான முறையால், ஒருவர் எப்போதும் உலக இன்பத்தால் கவரப்படும் மாசடைந்த கடிவாளம் இடப்பெறாத் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு தன்னை, பரமபுருஷ பகவானின் நினைவில் நிறுத்த வேண்டும்.”

பதம் 3.28.8
சசெள தேசே ப்ரதிஷ்டாப்ய விஜிதாஸன ஆஸனம்
தஸ்மின் ஸ்வஸ்தி ஸமாஸீன ருஜீ-காய: ஸமப்யஸேத்

சசெளதேசே-புனிதமான இடத்தில்; ப்ரதிஷ்டாப்ய-அமர்ந்த பிறகு; விஜித ஆஸன-அமரும் நிலைகளைக் கட்டுப்படுத்துதல்; ஆஸனம்-இருக்கை; தஸ்மின்—அந்த இடத்தில்; ஸ்வஸ்தி ஸமாஸீன-எளிய முறையில் அமர்தல்; ருஜுகாய:-உடலை நிமிர்த்தி வைத்தல்; ஸமப்யஸேத்-ஒருவர் பயிற்சி செய்ய வேண்டும்.

ஒருவருடைய மனத்தைக் கட்டுப்படுத்தி அமரும் நிலைகளை பழக்கப்படுத்திய பின்னர், ஒருவர் இருக்கையை, தனியான புனிதமான இடத்தில் விரித்து, அங்கு எளிமையான நிலையில் அமர்ந்து உடலை நிமிர்த்தி வைத்துக் கொண்டு, ஸ்வாஸத்தைக் கட்டுப்படுத்தப் பயிற்சி செய்ய வேண்டும்.

பதம் 3.28.9
ப்ராணஸ்ய சோதயேந்மார்கம் பூர-கும்பக-ரேசகை:
ப்ரதிகூலேன வா சித்தம் யதா ஸ்திரமசஞ்சலம்

ப்ராணஸ்ய-உயிர்நிலையான காற்றின்; சோதயேத்-ஒருவர் தெளிவுபடுத்த வேண்டும்; மார்கம்-வழி; பூர கும்பக-ரேசகை:-உள்ளிழுத்து தக்கவைத்து, வெளிவிடுவதால்; ப்ரதிகூலேன—நேர்மாறாக்குதலால்; வா-அல்லது; சித்தம்-மனம்; யதா—அதனால்; ஸ்திரம்-நிலையாக; அசஞ்சலம்- தொல்லைகளிலிருந்து விடுதலை.

யோகி பின்வரும் முறையில் சுவாசித்து உயிர்நிலைக் காற்றின் வழியைச் சுத்தமாக்க வேண்டும். முதலில் அவர் மிக ஆழ்ந்து உள்ளிழுக்க வேண்டும். பின்னர் மூச்சைத் தக்க வைக்கவேண்டும், இறுதியாக வெளிவிட வேண்டும். அல்லது அந்த முறையை நேர்மாறாக்கலாம், யோகி முதலில் வெளிவிட்டு, பின்னர் மூச்சை வெளியில் தக்க வைத்து, இறுதியாக உள்ளிழுக்க முடியும். இவ்வாறு செய்யப்படும்போது மனம் உறுதி கொண்டு, வெளிப்புறத் தொல்லைகளிலிருந்து விடுபடுகிறது.

பதம் 3.28.10
மனோசிராத்ஸ்யாத்விரஜம் ஜித-ஸ்வாஸஸ்ய யோகின:
வாய்-வக்னிப்யாம் யதா லோஹம் த்மாதம் த்யஜதிவைமலம்

மன:-மனம்; அசிராத்-விரைவில்; ஸ்யாத்-முடியும்; விரஜம்-தொல்லைகளிலிருந்து விடுதலை; ஜிதஸ்வாஸஸ்ய—அவருடைய உயிர்ப்பு கட்டுப்படுத்தப்படுகிறது; யோகின:-யோகியின்; வாயு அக்னிப்யாம்-காற்று மற்றும் நெருப்பால்; யதா—அது போல; லோஹம்-பொன்; த்மாதம்-விசிறுதல்; த்யஜதி-இருந்து விடுதலை அடைய; வை—நிச்சயமாக; மலம்-மாசு.

தங்கமானது நெருப்பில் இடப்பட்டு, காற்றால் விசிறப்படும் பொழுது எல்லா மாசுகளிலிருந்தும் விடுபடுவது போல, மூச்சுவிடும் பயிற்சிகளைச் செய்யும் யோகிகள் மிக விரைவில் எல்லா மனத் தொல்லைகளிலிருந்தும் விடுபடுகின்றனர்.

பதம் 3.28.11
ப்ராணாயாமைர்தஹேத் தோஷான் தாரணாபிஸ்ச கில்பிஷான்
ப்ரத்யாஹாரேண ஸம்ஸர்கான் த்யானேனானீஸ்வரான் குணான்

ப்ராணாயாமை:-ப்ராணாயாமத்தைப் பயிற்சி செய்வதால்; தஹேத்-ஒருவரால் வேருடன் அழிக்கமுடியும்; தோஷான்- மாசுகள்; தாரணாபி-மனத்தை ஒருமுகப்படுத்துவதால்; ச-மற்றும்; கில்பிஷான்-பாவச் செயல்கள்; ப்ரத்யாஹோரேண—புலன்களைத் தடை செய்வதால்; ஸம்ஸர்கான்-ஜடத்தொடர்பு; த்யானேன-தியானிப்பதால்; அனீஸ்வரான் குணான்-ஜட இயற்கையின் குணங்கள்.

ப்ராணாயம முறையைப் பயிற்சி செய்வதால், ஒருவர் தன் உடல் நிலையில் உள்ள மாசை வேருடன் அழிக்க முடியும், மனத்தை ஒருமுகப்டுத்துவதால் ஒருவர் எல்லா பாவச் செயல்களிலிருந்தும் விடுபட முடியும். புலன்களை அடக்குவதால் ஒருவர் உலகியல் தொடர்பிலிருந்து தன்னை விடுவிக்க முடியும், பரம புருஷ பகவானைத் தியானிப்பதால் ஒருவர் உலகப் பற்றின் மூன்று குணங்களிலிருந்து விடுபட முடியும்.

பதம் 3.28.12
யதா மன: ஸ்வம் விரஜம் யோகேன சுஸமாஹிதம்
காஷ்டாம் பகவதோ த்யாயேத் ஸ்வனாஸாக்ராவலோகன:

யதா-எப்பொழுது; மன:-மனம்; ஸ்வம்-சொந்தமான; விரஜம்-தூய்மைப்படுத்தப்பட்ட; யோகேன-யோகப்பயிற்சியால்; சுஸமாஹிதம்-கட்டுப்படுத்தப்பட்ட; காஷ்டாம்-முழுநிறைவான விரிவு; பகவத:-பரமபுருஷ பகவானின்; த்யாயேத்-ஒருவர் தியானிக்க வேண்டும்; ஸ்வ-நாஸா அக்ர-ஒருவரின் மூக்கு நுனி; அவலோகன:-பார்த்து.

இந்த யோகப் பயிற்சியால் மனம் முழுமையாகத் தூய்மை அடையும்பொழுது ஒருவர் பாதி மூடிய விழிகளுடன் மூக்கின் நுனியில் ஒருமுகப்படுத்தி, பரம புருஷ பகவானின் வடிவத்தைப் பார்க்க வேண்டும்.

பதம் 3.28.13
ப்ரஸந்ந-வதனாம்போஜம் பத்ம-கர்பாருணேக்ஷணம்
நீலோத்பல-தளச்-யாமம் சங்க-சக்ர-கதா-தரம்

ப்ரஸந்ந-மனநிறைவோடு கூடிய; வதன-முகம்; அம்போஜம்-தாமரை போன்ற; பத்ம-கர்ப-தாமரையின் உள்புறம்; அருண-சிவந்த நிறமுடைய; ஈக்ஷணம்-கண்களுடன்; நீல-உத்பல-நீலத் தாமரை; தள-இதழ்கள்; சியாமம்-கருமை; சங்க-சங்கு; சக்ர—சக்கரம்; கதா-கதை; தரம்—தாங்குதல்.

பரமபுருஷ பகவான் மனமகிழ்ச்சி கொண்ட, தாமரை போன்ற முகமும் தாமரையில் உட்புறம் போன்ற சிவந்த கண்களும், நீலத் தாமரையின் இதழ்கள் போன்ற கருமை நிறம் கொண்ட உடலும் கெண்டவர். அவர் தன் மூன்று கரங்களில் சங்கும், சக்கரமும் கதையும் ஏந்தி உள்ளார்.

பதம் 3.28.14
லஸத்-பங்கஜகிஞ்ஜல்க- பீத கௌசேய- வாஸஸம்
ஸ்ரீவத்ஸ வக்ஷஸம் ப்ராஜத் கெளஸ்துபாமுக்த-கந்தரம்

லஸத்-ஒளிவீசுதல்; பங்கஜ-தாமரையின்; கிஞ்ஜல்க- இழைகள்; பீத-மஞ்சள்; கௌசேய-பட்டுத்துணி; வாஸஸம்-அவருடைய உடை; ஸ்ரீவத்ஸ-ஸ்ரீவத்ஸம் எனும் மச்சத்தைத் தாங்கிய; வக்ஷஸம்-மார்பு; ப்ராஜத்-ஒளி வீசும்; கௌஸ்துப-கௌஸ்துப மணி; ஆமுக்த-அணிந்து; கந்தரம்-அவர் கழுத்து.

அவருடைய இடுப்பு, தாமரையின் இழைகளைப் போன்ற மஞ்சள் நிறமுடைய ஒளிவீசும் ஆடையால் மூடப்பட்டுள்ளது. அவர் மார்பில் ஸ்ரீவத்ஸம் எனும் மச்சத்தைக் குறிப்பிடும் ஒரு சுருள் வெள்ளை முடி உள்ளது. ஒளிவீசும் கௌஸ்துப மணி அவர் கழுத்திலிருந்து தொங்குகிறது.

பதம் 3.28.15
மத்த – த்விரேபகலயா- பரீதம் வனமாலயா
பரார்த்ய-ஹார-வலய கிரீடாங்கத நூபுரம்

மத்த-மயங்கிய; த்விரேப-தேனீக்களுடன்; கலயா-ரீங்காரம்; பரீதம்-மாலையணிந்து; வனமாலயா-காட்டுப்பூக்களாலான மாலையுடன்; பரார்த்ய-விலைமதிப்புள்ள; ஹார-முத்தாரம்; வலய-கைவளைகள்; கிரீட-மகுடம்; அங்கத-வங்கிகள்; நூபுரம்-கழல்கள்.

அவர் கழுத்தைச் சுற்றி கவர்ச்சியான முல்லைகளால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்திருக்கிறார், அந்த மாலையின் நறுமணத்தால் மயங்கிய தேனீக்கூட்டம், மாலையைச் சுற்றி ரீங்காரம் இடுகின்றது. அவர் மேலும் மிகவும் அழகிய முத்தாரம், மகுடம், ஜோடி வங்கிகள், கைவளைகள் மற்றும் கழல்கள் இவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார்.

பதம் 3.28.16
காஞ்சீ-குணோல்லஸச்-ச்ரோணிம் ஹ்ருதயாம் போஜவிஷ்டரம்
தர்சனீயதமம் சாந்தம் மனோ-நயன-வர்தனம்

காஞ்சீ-ஒட்டியாணம்; குண-தன்மை; உல்லஸத்-ஒளிவீசும்; ச்ரோணிம்—அவருடைய இருப்பும் அரையும்; ஹ்ருதய—இதயம்; அம்போஜ-தாமரை; விஷ்டரம்—அவருடைய இருக்கை; தர்சனீய தமம்-பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய; சாந்தம்-அமைதியான; மன:-மனங்கள் இதயங்கள்; நயன-கண்கள்; வர்தனம்-மகிழ்ச்சி தரும்.

அவருடைய இடையிலும் இடுப்பிலும் இடையணி அணியப்பட்டு, அவர் பக்தரின் இதயமாகிய தாமரையில் நிற்கிறார், அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக விளங்குகிறார், அவருடைய அமைதியான தன்மை கண்களுக்கும் அவரை நோக்கும் பக்தர்களின் ஆத்மாக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பதம் 3.28.17
அபீச்ய-தர்சனம் சஸ்வத் ஸர்வ-லோக-நமஸ்க்ருதம்
ஸந்தம் வயஸி கைசோரே ப்ருத்யானுக்ரஹ-காதரம்

அபீச்ய தர்சனம்-பார்ப்பதற்கு மிகவும் அழகான; சஸ்வத்- நிலையான; ஸர்வலோக-ஒவ்வொரு கோளின் குடியிருப்பு வாசிகளால்; நமஸ்: க்ருதம்-வணங்கத்தகுந்த; ஸந்தம்—அமைந்து; வயஸி-இளமையில்; கைசோரே-பிள்ளைப்பருவத்தில்; ப்ருத்ய-அவர் பக்தரின் மீது; அனுக்ரஹ—ஆசிகளை வழங்க; காதரம்-ஆர்வமான.

பகவான் நிலைத்த, அழகுடையவர், அவர் ஒவ்வொரு கோளின் குடியிருப்பு வாசிகளால் வணங்கத்தகுந்தவர், அவர் எப்போதும் இளமையானவர், எப்போதும் அவருடைய பக்தர்களுக்குத் தன் ஆசிகளை வழங்க விரும்புகிறவர்.

பதம் 3.28.18
கீர்தந்ய-தீர்த-யசஸம் புண்ய -ச்லோக-யசஸ்கரம்
த்யாயேத்தேவம் ஸமக்ராங்கம் யாவந்த ச்யவதே மன:

கீர்தந்ய-பாடுவதற்குத் தகுந்த; தீர்தயசஸம்-பகவானின் புகழ்; புண்ய-ஸ்லோக-பக்தர்களின்; யச:கரம்-புகழை மேம்படுத்துதல்; த்யாயேத்-ஒருவர் தியானிக்க வேண்டும்; தேவம்-பகவான் மீது; ஸமக்ராங்கம்-எல்லா உறுப்புகள்; யாவத்-அப்படியே; ந-இல்லை; ச்யவதே-மாறுபட்டு; மன:-மனம்.

பகவானின் புகழ் எப்போதும் பாடுவதற்குத் தகுதியானது, ஏனெனில் அவர் புகழ் அவருடைய பக்தர்களின் புகழை உயர்த்துகிறது. அதனால் ஒருவர் பரமபுருஷ பகவானின் மீதும், அவர் பக்தர்களைக் குறித்தும் தியானிக்க வேண்டும். ஒருவர் மனம் நிலையாக ஊன்றி நிற்கும் வரை பகவானின் என்றும் அழியாத வடிவத்தைக் குறித்து தியானம் செய்ய வேண்டும்.

பதம் 3.28.19
ஸ்திதம் வ்ரஜடந்தமாஸீனம் சயானம் வா குஹாசயம்
ப்ரேக்ஷணீயேஹிதம் த்யாயேச்சுத்தபாவேன சேதஸா

ஸ்திதம்-நிற்றல்; வ்ரஜந்தம்-அசைதல்; ஆஸீனம்-அமர்தல்; சயானம்-படுத்தல்; வா—அல்லது; குஹா ஆஸயம்—மனதில் குடியிருக்கும் பகவான்; ப்ரேக்ஷணீய—அழகு; ஈஹிதம்—திருவிளையாடல்கள்; த்யாயேத்—அவர் கற்பனை செய்து காண வேண்டும்; சுத்த-பாவேன-தூய; சேதஸா-மனத்தால்.

இவ்வாறு யோகியானவர் பக்தித்தொண்டில் எப்போதும் கலந்து, பகவானை, நிற்பது, அசைவது, படுப்பது அல்லது அவரிடத்தில் அமர்வது ஆகிய நிலைகளில் கற்பனை செய்து காண்கிறார். ஏனெனில் பகவானின் லீலைகள் எப்போதும் அழகானவை, கவருபவை.

பதம் 3.28.20
தஸ்மில்லப்த-பதம் சித்தம் ஸ்ர்வாவயவ-ஸம்ஸ்திதம்
விலக்ஷ்யைகத்ர ஸம்யுஜ்யாத் அங்கே பகவதோ முனி:

தஸ்மின்-பகவானின் வடிவத்தில்; லப்தபதம்-நிறுத்தி; சித்தம்-மனம்; ஸர்வ-எல்லா; அவயவ—உறுப்புகள்; ஸம்ஸ்திதம்-நிறுத்தி; விலக்ஷ்ய-வேறுபடுத்தப்பட்டு; ஏகத்ர-ஒரு இடத்தில்; ஸம்யுஜ்யாத்-மனத்தைப் பதிய வைக்க வேண்டும்; அங்கே—ஒவ்வொரு உறுப்பிலும்; பகவத:-பகவானின்; முனி-முனிவர்.

பகவானின் நிலயைான வடிவத்தில் யோகி தன்னுடைய மனத்தை ஈடுபடுத்துவதில் இறைவனது எல்லா உறுப்புகளின் மொத்த நோக்கத்தை மனதிற்கொள்ளாது பகவானின் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பிலும் தன் சிந்தனையைப் பதிய வைக்க வேண்டும்.

பதம் 3.28.21
ஸஞ்சிந்தயேத் பகவதஸ்சரணாரவிந்தம்
வஜ்ராங்குச-த்வஜஸரோருஹ-லாஞ்சனாட்யம்
உத்துங்க-ரக்த விலஸந்-நக -சக்ரவாள
ஜ்யோத்ஸ்னாபிராஹதமஹத் -த்ருதயாந்தகாரம்

ஸஞ்சிந்தயேத்—அவர் ஒருமுகப்படுத்த வேண்டும்; பகவத:- பகவானின்; சரணாரவிந்தம்—தாமரைத் திருவடிகளில்; வஜ்ர-இடி; அங்குச—அங்குசம் (யானைகளை ஒட்டும் தடி); த்வஜ-கொடி; ஸரோஹ-தாமரை; லாஞ்சன-குறிகள்; ஆத்யம்—அலங்கரிக்கப்பட்டு; உத்துங்க-ப்ரதானமான; ரக்த-சிவப்பு; விலஸத்-ஒளிமிக்க; நக-நகங்கள்; சக்ரவாள—நிலவின் வட்டம்; ஜ்யோத்ஸ்னாபி:-ஒளியுடன்; ஆஹத-சிதறடித்து; மஹத்-அடர்ந்த; ஹ்ருதய-மனத்தின்; அந்தகாரம்—இருள்.

முதலில், இடியேறு, அங்குசம், கொடி, தாமரை, முதலிய குறிகளால் அலங்கரிக்கப்பட்ட பகவானின் பாத கமலங்களில் ஒரு பக்தர் மனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும் இறைவனது அழகிய சிவந்த நகங்களின் ஒளி, நிலவின் வட்டத்தை ஒத்திருக்கிறது. அந்த ஒளி ஒருவரின் மனத்திலுள்ள அடர்ந்த இருளைப் போக்குகிறது.

பதம் 3.28.22
யச்-சௌசநி: ஸ்ருரித்-ப்ரவரேதகேன
தீர்த்தேன மூர்த்ந்யதிக்ருதேன சிவ: சிவோ பூத்
த்யாதுர் மன: சமல -சைல -நிஸ்ருஷ்ட-வஜ்ரம்
த்யாயேச்சிரம் பகவதஸ் சரணாரவிந்தம்

யத்-பகவானின் தாமரைப் பாதங்கள்; சௌச-கழுவுதல்; நிஸ்ருத-சென்று முள்; ஸரித்ப்ரவர-கங்கையின்; உதகேன-தண்ணீரால்; தீர்த்தேன-புனிதமான; மூர்த்தி-அவர் தலையில்; அதிக்ருத்தேன-தாங்கி; சிவ:-சிவபிரான்; சிவ:- மங்கலம்; ஆபூத்-உருவாகி; த்யாது:-தியானிப்பவரின்; மன:-மனம்; சமலசைல-பாவமாகிய மலை; நிஸ்ருஷ்ட-வீசி எறிந்து; வஜ்ரம்-இடியேறு; த்யாயேத்-ஒருவர் தியானம் செய்ய வேண்டும்; சிரம்-நீண்ட காலத்திற்கு; பகவத்:-பகவானின்; சரண-அரவிந்தம்-தாமரைப் பாதங்களில்.

பகவானின் பாதகமலங்களைக் கழுவும் நீரில் தன் மூல இருப்பிடத்தை உடைய கங்கையின் புனித நீரைத் தன் தலையில் தாங்குவதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட சிவபிரான், மேலும் ஆசி பெற்றவராகிறார். தியானிக்கும் பக்தரின் மனத்தில் சேர்த்து வைக்கப்பட்ட பாவமாகிய மலையைத் தூளாக்கி வீசி எறியும் இடியேறுகளாக பகவானது பாதங்கள் செயல்படுகின்றன. அதனால் ஒருவர் நெடுங்காலத்திற்கு பகவானின் பாதகமலங்களைத் தியானிக்க வேண்டும்.

பதம் 3.28.23
ஜானுத்வயம் ஜலஜ-லோசனயா ஜனந்யா
லக்ஷ்ம்யாகிலஸ்ய சுரவந்திதயா விதாது:
ஊர்வோர்னிதாய கர-பல்லவ-ரோசிஷா யத்
ஸம்லாலிதம் ஹ்ருதி விபோபரஸ்ய குர்யாத்

ஜானுத்வயம்-முழங்கால்கள் வரை; ஜலஜ லோசனயா- தாமரைக் கண்கள் கொண்ட; ஜனந்யா-அன்னை; லக்ஷ்ம்யா—லக்ஷ்மியால்; அகிலஸ்ய-முழு அண்டத்தின்; சுரவந்திதயா-தேவர்களால் வழி படப்பட்டு; விதாது:- பிரம்மாவின்; ஊர்வோ:-தொடைகளில்; நிதாய-வைக்கப்பட்டு; கர-பல்லவ-ரோசிஷா-அவள் ஒளி பொருந்திய விரல்களுடன்; யத்-எந்த; ஸம்லாவிதம்-பிடித்துவிட்டு; ஹ்ருதி-இதயத்தில்; விபோ:-பகவானின்; அபரஸ்ய-ஜட இருப்பைக் கடந்தது; குர்யாத்-ஒருவர் தியானிக்க வேண்டும்.

யோகியானவர் எல்லாக் கடவுள்களாலும் வழிபடப்படும், மேலானவராகிய பிரம்மாவுக்கு அன்னையாகிய, அதிர்ஷ்ட தேவதையான லக்ஷ்மியின் செயல்களைத் தன் மனத்தில் இருத்த வேண்டும். அவள் உன்னதமாக பகவானின் கால்களைப் பிடித்துவிட்டபடி தொண்டு புரிவதைக் காணலாம். இந்தப் பணியினை மிகவும் கவனமாக அவள் செய்து வருகிறாள்.

பதம் 3.28.24
ஊரூ சுபர்ண-புஜயோரதிசோபமானா
ஓஜோ-நிதீ அதஸிகா- குசுமாவபாஸௌ
வ்யாலம் -பிபீத -வரவாஸஸி வர்த்தமான
காஞ்சீ-கலாப-பரிரம்பி நிதம்ப-பிம்பம்

ஊரூ-இரு தொடைகள்; சுபர்ண-கருடனின்; புஜயோ:-இரு தோள்கள்; அதி-மேல்; சோபமானெள—அழகிய; ஓஜ: நிதீ- எல்லா சக்தியின் இருப்பிடம்; அதஸிகா குஸூம-ஆளிவிதைப் பூவின்; அவபாஸௌ-ஒளி போல; வ்யாலம்பி-கீழை நீட்டி; பீத-மஞ்சள்; வர-பகட்டான; வாஸஸி-துணியின் மேல்; வர்த்தமான-இருப்பு; காஞ்சீ-கலாப-ஒட்டியாணத்தால்; பரிரம்பி-சுற்றப்பட்டு; நிதம்ப-பிம்பம்-அவருடைய வட்டமான இடுப்பு.

அடுத்து, யோகி தன் மனத்தை எல்லாச் சக்தியின் சேமிப்பு இடமான பரமபுருஷ பகவானின் தொடைகளைப் பற்றிய தியானத்தில் நிறுத்த வேண்டும். பகவானின் தொடைகள் வெண்மை கலந்த நீல நிறத்தில், ஆளிவிதைப் பூவின் ஒளி போல் உள்ளன. பகவான் கருடனின் தோள்களில் தாங்கப்படும் போது அவை மிகவும் அழகாகத் தோன்றுகின்றன. மேலும் யோகி, பகவானின் கணுக்கால்கள் வரை நீண்ட பகட்டான மஞ்சள் பட்டாடையின் மேல் சுற்றப்பட்ட ஒட்டியாணம் உடைய வட்டமான இடுப்பை ஆழ்ந்து நினைக்க வேண்டும்.

பதம் 3.28.25
நாபி-ஹ்ரதம் புவன -கோச-குஹோத-ரஸ்தம்
யத்ராத்ம-யோநிதிஷணாகிலலோக பத்மம்
வ்யூடம் ஹரிந்மணிவ்ருஷஸ்தனயோரமுஷ்ய
த்யாயேத் த்வயம் விசத-ஹார-மயூக-கௌரம்

நாபி-ஹ்ரதம்-வயிறாகிய ஏரி; புவனகோபீ-எல்லா உலகங்களின்; குஹா-அடிப்பட; உதர-வயிற்றில்; ஸ்தம்-அமைந்த; யத்ர-எங்கு; ஆத்ம-யோனி-பிரம்மாவின்; திஷண-இருப்பிடம்; அகிலலோக-எல்லா சூரிய மண்டலங்களையும் உள்ளடக்கிய; பத்மம்-தாமரை; வ்யூடம்-மலர்ந்து; ஹரிந்மணி-பச்சைக் கற்கள் போல; வ்ருஷ-மிகவும் பகட்டான; ஸ்தனயோ:-காம்புகளின்; அமுஷ்ய-பகவானின்; த்யாயேத்-அவர் தியானம் செய்ய வேண்டும்; த்வயம்-ஜோடி; விசத-வெள்ளை; ஹார-முத்தாரங்களின்; மயூக-விளக்கிலிருந்து; கௌரம்-வெண்மையான.

பின்னர் யோகி அவர் வயிற்றின் நடுவில் அவருடைய சந்திரன் போன்ற உந்தியில் தியானிக்க வேண்டும். முழு அண்டத்தின் அடிப்படையான அவருடைய உந்தியிலிருந்து எல்லா வேறுபட்ட சூரிய மண்டலங்களையும் உள்ளடக்கிய தாமரைத்தண்டு மலர்ந்தது. அந்தத் தாமரை முதலில் படைக்கப்பட்ட உயிரினமான பிரம்மாவின் இருப்பிடமாகும். அதே விதத்தில், யோகி, பகவானின் மார்பை அலங்கரிக்கும் பால் வெள்ளை நிற முத்தாரங்களின் கதிர்களால் வெண்மையாகத் தோன்றுவதும், மிகவும் பகட்டான ஜோடி பச்சைக் கற்களை ஒத்திருப்பதுமான பகவானின் மார்புக் காம்புகளைத் தன் மனத்தில் ஒருமுகப்படுத்த வேண்டும்.

பதம் 3.28.26
வக்ஷோதிவாஸம் ருஷபஸ்ய மஹா-விபூதே
பும்ஸாம் மனோ-நயன-நிர்வ்ருதிமாத தானம்
கண்டம் ச கௌஸ்துபமணே-ரதி பூஷணார்த்தம் குர்யாந்மனஸ்யகிலலோக-நமஸ்க்ருதஸ்ய

வக்ஷ:-மார்பு; அதிவாஸம்-இருப்பிடம்; ருஷபஸ்ய-பரமபுருஷ பகவானின்; மஹா-விபூதே-மஹாலக்ஷ்மியின்; பும்ஸாம்-மனிதர்களின்; மன-மனதிற்கு; நயன-கண்களுக்கு; நிர்வ்ருதிம்—தத்துவ இன்பம்; ஆததானம்-அருளுதல்; கண்டம்-கழுத்து; ச-கூட; கௌஸ்துப-மணே:-கௌஸ்துப மணியின்; அதிபூஷண அர்த்தம்—அழகை மேம்படுத்துவது; குர்யாத்—அவர் தியானிக்க வேண்டும்; மனஸி-மனத்தில்; அகிலலோக-முழு அண்டத்தால்; நமஸ்க்ருத்ய-வழிபடப்படுபவர்.

பின்னர் யோகியானவர் மஹாலக்ஷ்மி தேவியின் உறைவிடமாகிய பரமபுருஷ பகவானின் மார்பை தியானிக்க வேண்டும். பகவானின் மார்பு மனதிற்கு ஆன உன்னதமான இன்பத்தின் மூலமாகும். கண்களுக்கான முழு திருப்தியுமாகும். பின்னர் யோகி தன் மனத்தை முழு அண்டத்தாலும் வழிபடப்பெறும் பரமபுருஷ பகவானின் கழுத்தில் பதிக்க வேண்டும். பகவானின் கழுத்து, அவர் மார்பில் தொங்கும் கௌஸ்துப மணியின் அழகை மேம்படுத்த உள்ளது.

பதம் 3.28.27
பாஹும்ஸ்ச மந்தரகிரே: பரிவர்த்தனேன
நிர்ணிக்த-பாஹீ-வலானதிலோக-பாலான்
ஸஞ்சிந்தயேத் தச-சதாரமஸஹ்ய-தேஜ:
சங்கம் ச தத்கர-ஸரோருஹராஜ-ஹம்ஸம்

பாஹுன்—கைகள்; ச-மற்றும்; மந்தர-கிரே:- மந்தரமலையின்; பரிவர்த்தனேன-சுற்றுவதால்; நிர்ணிக்த—மெருகேற்றப்பட்டு; பாஹு-வலயான்-கரங்களில் அணியும் நகைகள்; அதி—லோக பாலான்— அண்டத்தைக் கட்டுப்படுத்துபவர்களின் மூலம்; ஸஞ்சிந்தயேத்-ஒருவர் தியானிக்க வேண்டும்; தசசதி— அரம்-சுதர்சன சக்கரம் (பத்தாயிர ஆரங்கள்); அஸஹ்ய-தேஜ-மின்னும் ஒளி; சங்கம்-சங்கு; ச-மற்றும்; தத்கர-பகவானின் கரத்தில்; ஸரோருஹ-தாமரை போன்ற; ராஜ-ஹம்ஸம்-அன்னம் போல.

யோகி மேலும் பகவானின் நான்கு கரங்களைத் தியானிக்க வேண்டும். அவை இயற்கையின் பல்வேறு செயல்களைக் கட்டுப்படுத்தும் தேவர்களின் எல்லாச் சக்திகளுக்கும் ஆதாரமாகும். பின்னர் மந்தரமலை சுற்றும் போது தேய்ந்தால் மெருகேற்றப்பட்ட நகைகளில் யோகி கவனம் செலுத்த வேண்டும். அவர் பகவானின் சக்கரமாகிய சுதர்சன சக்கரத்தைச் சரியாக நினைக்க வேண்டும், அது மின்னும் ஒளியுடன் கூடிய ஆயிரம் ஆரங்களைக் கொண்டது, பகவானின் தாமரை போன்ற உள்ளங்கையில் உள்ள அன்னம் போல் தோன்றும் சங்கினையும் நினைக்க வேண்டும்.

பதம் 3.28.28
கௌமோதகீம் பகவதோ தயிதாம் ஸ்மரேத
திக்தாமராதி-பட-சோணிதகர்தமேன
மாலாம் மதுவ்ரத-வரூத-கிரோபகுஷ்டாம்
சைத்யஸ்ய தத்வமமலம் மணிமஸ்ய கண்டே

கௌமோதகீம்-கௌமோதகீ எனும் பெயருடைய கதை; பகவத—பரமபுருஷ பகவானின்; தயிதாம்-மிக அன்பான; ஸ்மரேத-ஒருவர் நினைவுகூற வேண்டும்; திக்தாம்-பூசி; அராதி-பகைவர்களின்; பட-வீரர்கள்; சோணித கர்தமேன-இரத்தக் கறைகளுடன்; மாலாம்-மாலை; மதுவ்ரத-பெரிய வண்டுகளின்; வரூத-கூட்டத்தின்; கிரா—ஒலியுடன்; உபகுஷ்டாம்-சூழப்பட்டு; சைத்யஸ்ய-வாழும் உயிரினத்தின்; தத்வம்-தத்துவம்; அமல-தூய்மை; மணிம்- முத்தாரம்; அஸ்ய-பகவானின்; கண்டே-கருத்தில்

யோகி அவருக்கு மிகவும் அன்பான, கௌமோதகீ எனப் பெயருடைய அவருடைய கதாயுதத்தைத் தியானிக்க வேண்டும். இந்தக் கதை பகைமையுடைய வீரர்களான அரக்கர்களைத் தகர்த்து அவர்களின் குருதியால் பூசப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள அழகிய மாலையின் மேல் கவனம் செலுத்த வேண்டும், அந்த மாலை எப்போதும் ரீங்காரமிடும் வண்டுகளால் குழப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள முத்தாரத்தைத் தியானிக்க வேண்டும். அது எப்போதும் அவரது பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள தூய உயிரினங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

பதம் 3.28.29
ப்ருத்யானுகம்பித -தியேஹ க்ருஹீத -மூர்த்தே:
ஸஞ்சிந்தயேத்பகவதோ வதனாரவிந்தம்
யத்விஸ்புரந்மகர- குண்டல-வல்கிதேன
வித்யோதிதாமலக-போலமுதார-நாஸம்

ப்ருதய-பக்தர்களுக்கு; அனுகம்பித-தீயா-அன்பினால்; இஹ-இந்த உலகில்; க்ருஹீத-மூர்த்தே-வேறுபட்ட வடிவங்களைத் தருபவர்; ஸஞ்சிந்தயேத்-ஒருவர் தியானிக்க வேண்டும்; பகவத-பரமபுருஷ பகவானின்; வதன—முகம்; அரவிந்தம்-தாமரை போன்ற; யத்-எந்த; விஸ்புரந்-பளபளக்கும்; மகர-முதலை வடிவம் கொண்ட; குண்டல—அவர் தோடுகள்; வல்கிதேன-ஊசலாடுவதால்; வித்யோதித-ஒளிவீசி; அமல-பளிங்கு போல் தெளிவான; கபோலம் அவர் கன்னங்கள்; உதார-எடுப்பாக; நாஸம்—அவர் மூக்கு.

யோகி பின்னர், ஆர்வமுடைய பக்தர்களுக்காக அன்பின் பொருட்டு இந்த உலகில் அவருடைய வேறுபட்ட வடிவங்களைத் தரும் பகவானின் தாமரை போன்ற முகத்தைத் தியானிக்க வேண்டும். அவரது மூக்கு எடுப்பாக உள்ளது; அவரது பளிங்கு போன்ற தெளிவான கன்னங்கள், அவரது ஒளிவீசும் முதலை வடிவத்தோடுகள் இங்கும் அங்கும் ஊசலாடுவதால் மின்னுகின்றன.

பதம் 3.28.30
யச்ச்ரீ-நிகேதம் அலிபி: பரிஸேவ்யமானம்
பூத்யா ஸ்வயா குடிலகுந்தளவ்ருந்தஜுஷ்டம்
மீனத்வயாஸ்ரயம் அதிக்ஷிபதப்ஜ-நேத்ரம்
த்யாயேந்மனோமயமதந்த்ரித உல்லஸத்ப்ரு

யத்:—பகவானின் அந்த முகம்; ஸ்ரீ நிகேதம்-ஒரு தாமரை; அலிபி:-தேனீக்களால்; பரிஸேவ்யமானம்—ஆழப்பட்டு; பூத்யா-அழகால்; ஸ்வயா—அதன்; குடில—சுருள்; குந்தள—முடியின்; வ்ருந்த-கூட்டத்தால்; ஜுஷ்டம்—அலங்கரிக்கப்பட்டு; மீன-மீனின்; த்வய-ஜோடி; ஆஸ்ரயம்—தங்குதல்; அதிக்ஷிபத்—வெட்கப்பட்டு; அப்ஜ-தாமரை; நேத்ரம்—கண்கள் கொண்டு; த்யாயேத்—ஒருவர் தியானிக்க வேண்டும்; மன: மயம்—மனத்தில் உருவாக்கி; அதந்த்ரித:-கருத்துள்ள; உல்லஸத்-நடனம்; ப்ரு-புருவங்கள் கொண்டு.

அதன்பின் யோகி இறைவனின் அருள் முடிகளால் அழகுபடுத்தப்பட்டதும், தாமரை போன்ற விழிகளாலும் நடமாடும் புருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான திருமுகத்தைத் தியானம் செய்கிறார், ரீங்கரிக்கும் வண்டுகளால் சூழப்பட்ட தாமரையும் இணையாயுள்ள மீன்களும் இத்திருமுகத்தின் விலாசங் கண்டு வெட்கும்.

பதம் 3.28.31
தஸ்யாவலோகமதிகம் க்ருபயாதிகோர-
தாப-த்ரயோபசமனாய நிஸ்ருஷ்டமக்ஷ்ணோ:
ஸ்நிக்தஸ்மிதாநுகுணிதம் விபுல-ப்ரஸாதம்
த்யாயேச்சிரம்விபுல-பாவனயா குஹாயாம்

தஸ்ய-பரமபுருஷ பகவானின்; அவலோகம்-பார்வைகள்; அதிகம்—அடிக்கடி; க்ருபயா-அருளுடன்; அதிகோர-மிகவும் அச்சம் தரத்தக்க; தாபத்ரய-மூன்று வித துயரங்கள்; உபசமனாயை-ஆறுதலான; நிஸ்ஷ்டம்-வீச்சு; அக்ஷ்னோ:-அவர் கண்களிலிருந்து; ஸ்நிக்த-அன்பான; ஸ்மித-புன்சிரிப்பு; அநுகுணிதம்—உடன்வருதல்; விபுல- அதிகமாக; ப்ரஸாதம்-முழு அருளின்; த்யாயேத்-அவர் ஆழ்ந்து நினைக்க வேண்டும்; சிரம்-நீண்ட நேரத்திற்கு; விபுல முழுமையாக; பாவனயா—பக்தியுடன்; குஹாயாம்-மனதில்.

யோகிகள் முழு பக்தியுடன் பகவானின் கண்களிலிருந்து அடிக்கடி வீசும் அன்புப் பார்வைகளை ஆழ்ந்து நினைக்க வேண்டும். ஏனெனில் அவரது பக்தர்களின் அச்சம் தரத்தக்க மூன்று வித வேதனைகளுக்கு அவை ஆறுதல் அளிக்கின்றன. இனிய புன்சிரிப்பினைத் தொடர்ந்துவரும், அவரது பார்வைகள் அதிகமான அருள் நிறைந்தவை.

பதம் 3.28.32
ஹாஸம் ஹரேரவனதாகில-லோக-தீவ்ர
ஸோகாஸ்ரு-ஸாகர-விஸோஷணமத்யுதாரம்
ஸம்மோஹனாய ரசிதம் நிஜ-மாயயாஸ்ய
ப்ரூ-மண்டலம் முனி-க்ருதே மகரத்-வஜஸ்ய

ஹாஸம்-புன்சிரிப்பு; ஹரே-பகவான் ஸ்ரீஹரியின்; அவனத-குனிந்து; அகில-எல்லா; லோக-மனிதர்களுக்காக; தீவ்ர-சோக-ஆழ்ந்த துன்பத்தால் ஏற்பட்ட; அஸ்ரு-ஸாகர-கண்ணீர்க்கடல்; விசோஷணம்-வற்றி; அதி-உதாரம்- மிகவும் இரக்கமுள்ள; ஸம்மோஹனாய—அழகிற்காக; ரசிதம்—வெளிப்படுத்தப்பட்டு; நிஜ-மாயயா-அவர் உள்ளார்ந்த ஆற்றலால்; அஸ்ய-அவருடைய; ப்ரூ- மண்டலம்—வளைந்த புருவங்கள்; முனிக்ருதே-முனிவர்களின் நன்மைக்காக; மகரத்வஜஸ்ய-மன்மதனின்.

ஒரு யோகி அனைவரும் தலைவணங்கும் பகவான் ஸ்ரீஹரியின் மிகுந்த இரக்கமுள்ள புன்சிரிப்பைத் தியானிக்க வேண்டும், அச்சிரிப்பு அந்த துயரத்தால் விளைந்த கண்ணிர்க் கடலை வற்றச் செய்கிறது. யோகி பகவானின் வளைந்த புருவங்களைத் தியானிக்க வேண்டும் ஏனெனில் அப்புருவங்கள் மன்மதனை மயக்கும் பொருட்டு இறைவனுடைய அந்தரங்க சக்தியால் இயக்கப்படுகின்றன. மன்மதன் மயங்குவதால் முனிவர்களுக்கு நன்மை ஏற்படுகிறது.

பதம் 3.28.33
த்யானாயனம் ப்ரஹஸிதம் பஹுலாதரோஷ்ட
பாஸாருணாயித-தனு-த்விஜ-குந்த -பங்க்தி
த்யாயேத்ஸ்வதேஹ-குஹரே வஸிதஸ்ய விஷ்ணோர்
பக்த்யார்த்ரயார்பித-மனா ந ப்ருதக்தித்ருக்ஷேத்

த்யான—ஆயனம்-எளிதாக தியானம் செய்ய; ப்ரஹஸிதம்-சிரிப்பு; பஹுல—அதிகம்; அதர—ஓஷ்ட—அவர் உதடுகளின்; பாஸ-ஒளியால்; அருணாயித—சிவந்த நிறம் தந்த; தனு—சிறிய; த்விஜ-பற்கள்; குந்த—பங்க்தி-மல்லிகை மொட்டுகளின் வரிசை போல; த்யாயேத்—அவர் தியானிக்க வேண்டும்; ஸ்வதேஹ-குஹரே-மனத்தின் ஆழத்தில்; அவஸிதஸ்ய-வசிப்பவர்; விஷ்ணோ:-விஷ்ணுவின்; பக்த்யா-பக்தியுடன்; ஆர்த்ரயா—அன்பில் ஆழ்ந்து; அர்பித-மனா—அவர் மனம் பதிந்து; ந-இல்லை; ப்ருதக்-வேறு ஏதேனும்; தித்ருக்ஷேத்—அவர் பார்க்க விரும்ப வேண்டும்.

அன்பு மற்றும் பற்றும் நிறைந்த பக்தியுடன், யோகி தன் மனத்தின் அடியில் பகவான் விஷ்ணுவின் சிரிப்பைத் தியானிக்க வேண்டும். விஷ்ணுவின் சிரிப்பு மிகவும் கவரக்கூடியதால், அதைத் தியானிப்பது மிகவும் எளிதாகும். பகவான் சிரிக்கும் பொழுது, ஒருவரால் அவரது உதடுகளின் ஒளியால் சிவந்த நிறம் தரும் மல்லிகை மொட்டுகளை ஒத்த அவருடைய சிறிய பற்களைப் பார்க்க முடியும். தன் மனத்தை இதற்கென்றே ஒரு கட்டத்தில் ஒதுக்கிய பிறகு, யோகி மேலும் வேறு எதையும் பார்ப்பதற்கு ஆசைப்படக் கூடாது.

பதம் 3.28.34
ஏவம் ஹரௌ பகவதி ப்ரதிலப்தபாவோ
பக்த்யா த்ரவ-த்ஹ்ருதய உத்புலக: ப்ரமோதாத்
ஓளத்கண்ட்ய பாஷ்பகலயா முஹுரர்த்யமான
ஸ்தச்சாபி சித்த-படிசம் சனனகர்வியுங்க்தே

ஏவம்-இவ்வாறு; ஹரௌ-பகவான் ஹரியை நோக்கி; பகவதி-பரமபுருஷ பகவான்; ப்ரதியப்த—வளர்ச்சி பெற்று; பாவ-தூய அன்பு; பக்த்யா-பக்தித் தொண்டால்; த்ரவத்-உருகுதல்; ஹ்ருதய-அவர் இதயம்; உத்புலக—உடல் புல்லரிப்பதை அனுபவித்தல்; ப்ரமோதாத்-மிகுந்த இன்பத்திலிருந்து; ஒளக்கண்டய-ஆழ்ந்த அன்பினால் விளைந்த; பாஷ்பகலயா-கண்ணீரின் ஓடையால்; முஹ-தொடர்ந்து; அர்த்யமான-துன்பப்பட்டு; தத்-அந்த; ச-மற்றும்; அபி-இருந்தும்; சித்த-மனம்; படிசம்-தூண்டில்; சனகை-படிப்படியாக; வியுஸ்க்தே-திரும்பப்பெறுதல்.

இந்த வழியைப் பின்பற்றுவதன் மூலம் யோகி படிப்படியாக பரமபுருஷ பகவானாகிய ஹரியிடம் தூய அன்பை வளர்க்கிறார். பக்தித் தொண்டில் அவருடைய முன்னேற்றத்தின் வழியில், மிகுந்த மகிழ்ச்சியால் அவர் உடல் மயிர்க்கூச்செறிகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த அன்பினால் விளைந்த கண்ணீரின் ஓடையில் குளிக்கிறார். படிப்படியாக, பகவானைக் கவர்வதற்கு அவர் பயன்படுத்திய மனமும் கூட, மீனைக் கவர்வதற்குப் போகும் தூண்டிலைப் போல, உலகியல் தொல்லையிலிருந்து மீள்கிறது.

பதம் 3.28.35
முக்தாஸ்ரயம் யர்ஹி நிர்விஷயம் விரக்தம்
நிர்வாணம்ருச்சதி மன: ஸஹஸா யதார்சி:
ஆத்மானமத்ர புருஷோவ்யவதானமேக
மந்வீக்ஷதே ப்ரதிநிவ்ருத்த-குண-ப்ரவாஹ:

முக்த ஆஸ்ரயம்—விடுதலையில் அமைந்து; யர்ஹி—அந்த நேரத்தில்; நிர்விஷயம்-புலனுக்கான பொறிகளிலிருந்து விடுபட்டு; விரக்தம்-வேறுபட்டு; நிர்வாணம்-மறைவு; ருச்சதி-பெற்று; மன:-மனம்; ஸஹஸா-உடனே; யதா—போல; அர்சி:-தீக்கொழுந்து; ஆத்மானம்-மனம்; அத்ர— இந்த நேரத்தில்; புருஷ-மனிதர்; அவ்யவதானம்-பிரிவு இன்றி; ஏகம்-ஒன்று; அந்வீக்ஷதே-அனுபவங்கள்; ப்ரதிநிவ்ருத்த—விடுபட்டு; குணப்ரவாஹ:—ஜட குணங்களின் ஓட்டத்திலிருந்து.

மனம் எல்லா மாசிலிருந்தும் இவ்வாறு முழுவதும் விடுபட்டு உலகியல் குறிக்கோள்களிலிருந்து பற்று அறும் பொழுது, அது ஒரு விளக்கின் தீச்சுடரினைப் போன்றதாகும். அந்த நேரத்தில் மனம் உண்மையில் பகவானுடன் சரியாகப் பொருந்தி அவருடன் ஒன்றாக இணைகிறது அப்பொழுது அது உலக இயல்புகளினின்றும் வேறுபட்டுவிடுகிறது.

பதம் 3.28.36
ஸோப்யேதயா சரமயா மனஸோ நிவ்ருத்யா
தஸ்மிந் மஹிம்ந்யவஸித: சுகது: கபாஹ்யே
ஹேதுத்வமப்யஸதி கர்த்தரி து: கயோர்யத்
ஸ்வாத்மன் விதத்த உபலப்த-பராத்ம-காஷ்ட:

ஸ:-யோகி; அபி-மேலும்; ஏதயா-இதனால்; சரமயா-இறுதி; மனஸ:-மனத்தின்; நிவ்ருத்யா-ஜட பிரதிக்ரியைகளின் ஒழிவால்; தஸ்மின்-அவருடையதில்; மஹிமி-இறுதியான புகழ்; அவஸித-அமைந்து; சுகது:க பாஹ்யே-இன்பதுன்பங்களுக்கு வெளியில்; ஹேதுத்வம்-காரணம்; அபி-உண்மையில்; அஸதி—அறியாமையின் விளைவு; கர்த்தரி-போலி ஆளுமையில்; து:கயோ-இன்பம் மற்றும் வலியின்; யத்-எந்த; ஸ்வ-ஆத்மன்-அவருடைய சொந்தமானதற்கு; விதத்தே-அவர் கற்பித்துக் கூறுகிறார்; உபலப்த-உணர்ந்து; பர-ஆத்ம-பரமபுருஷ பகவானின்; காஷ்ட— மிகவுயர்ந்த உண்மை.

இவ்வாறு மிகவுயர்ந்த ஆன்மீக நிலையில் அமைந்த மனம் எல்லா ப்ரதிக்ரியைகளிலிருந்தும் விடுபடுகிறது, அதன் சொந்தப் புகழில் அமைகிறது, இன்பதுன்பங்களின் எல்லா கருத்துகளுக்கும் எல்லை கடந்ததாகிறது. அந்த நேரத்தில் யோகி பரமபுருஷ பகவானுடனான தன் உறவின் உண்மையை உணர்கிறார். அவர் தனக்குத் தானே கற்பித்துக் கொண்ட இன்ப துன்பங்களும் மற்றும் அதன் ப்ரதிக்ரியைகளும் அறியாமையின் விளைவாகிய போலி ஆளுமையால் ஏற்பட்டவை ஆகும் என்று கண்டறிகிறார்.

பதம் 3.28.37
தேஹம் ச தம் ந சரம்: ஸ்திதமுத்திதம் வா
ஸித்தோ விபச்யதி யதோத்யகமத் ஸ்வரூபம்
தைவாதுபேதமத தைவ-வசாதபேதம்
வாஸோ யதா பரிக்ருதம் மதிரா-மதாந்த:

தேஹம்-ஜடவுடல்; ச-மற்றும்; தம்—அந்த; ந—இல்லை; சரம- இறுதி; ஸ்திதம்-அமர்தல்; உத்திதம்-உயர்ந்து; வா-அல்லது; ஸித்த-உணர்ந்த ஆன்மா; விபசயதி-உணரமுடியும்; யத-ஏனென்றால்; அத்யகமத்—அவர் அடைந்துள்ளார்; ஸ்வரூபம்-அவர் உண்மையான தனித்தன்மை; தைவாத் விதியின்படி; உபேதம்-சேர்ந்து; அத-மேலும்; தைவவசாத்-விதியின்படி; அபேதம்-விட்டுப் பிரிந்து; வாஸ-உடை; யதா-போல; பரிக்ருதம்—அணிந்து; மதிரா-மத-அந்த:-மயக்கத்தால் குருடானவர்.

அவர் உண்மையான தனித்தன்மையை அடைந்துள்ளதால், முழுதும் உணர்ந்த ஆத்மா, மதுமயக்கமுடைய ஒருவர் தன் உடலில் ஆடை உள்ளதா இல்லையா என்று புரிந்து கொள்ள முடியாதது போல, பூதவுடல் எவ்வாறு அசைகிறது அல்லது செயல்படுகிறது என்பதை எண்ணிப்பார்க்க முடியாது.

பதம் 3.28.38
தேஹோபி தைவ-வசக: கலுகர்ம யாவத்
ஸ்வாரம்பகம் ப்ரதிஸமீக்ஷத ஏவ ஸாக:
தம் ஸ-ப்ரஞ்சம் அதிரூட-ஸமாதி-யோக
ஸ்வாப்னம் புனர் ந பஜதே ப்ரதிபுத்த-வஸ்து:

தேஹ-உடன்; அபி-மேலும்; தைவ—வசு-க-பரமபுருஷ பகவானின் கட்டுப்பாட்டின் கீழ்; கலு-உண்மையில்; கர்ம- செயல்கள்; யாவத்—அதே அளவு; ஸ்வ-ஆரம்பகம்-அவரால் தொடங்கப்பட்டது; ப்ரதி ஸமீக்ஷதே-தொடர்ந்து வேலை செய்ய; ஏவ-நிச்சயமாக; ஸ அசு:-புலன்களுடன்; தம்-உடல்; ஸ-ப்ரபஞ்சம்-அதன் விரிவுகளுடன்; அதிரூட-ஸமாதி யோக:-யோகப் பயிற்சியால் ஸமாதியில் அமர்ந்துகொண்டு; ஸ்வாப்னம்-கனவில் பிறந்து; புன- மீண்டும்; ந-இல்லை; பஜதே-அவருடையதாக அவர் ஏற்றுக் கொள்கிறார்; ப்ரதிபுத்த-விழித்து; வஸ்து-அவர் உடல் நிலைக்கு.

அந்த விடுதலை பெற்ற யோகியின் உடல், புலன்களுடன், பரமபுருஷ பகவானால் பொறுப்பேற்றுக் கொள்ளப்படுகிறது. அதற்கென விதிக்கப்பட்ட செயல்கள் முடியும் வரை அந்த உடல் தனது வேலையைச் செய்கிறது. விடுதலை பெற்ற பக்தர், அவருடைய உடல் அமைப்பு நிலையில் விழித்துக் கொண்டு, இவ்வாறு யோகத்தின் மிகவுயர்ந்த முழுமையடைந்த நிலையாகிய ஸமாதியில் அமைந்து, பூதஉடலின் பலாபலன்களைத் தன்னுடையதாக ஏற்க மாட்டார். இவ்வாறு அவர் உடலின் செயல்களைக் கனவில் நடக்கும் செயல்களைப் போலக் கருதுகிறார்.

பதம் 3.28.39
யதா புத்ராச்ச வித்தாச்ச ப்ருதங்மர்த்ய ப்ரதீயதே
அப்யாத்மத்வேனாபிமதாத் தேஹாதே: புருஷஸ்ததா

யதா-போல; புத்ரா-மகனிடமிருந்து; ச-மற்றும்; வித்தாத்-செல்வத்திலிருந்து; ச-கூட; ப்ருதக்—வேறுபாடாக; மர்த்ய— சாவுக்குரிய மனிதன்; ப்ரதீயதே-புரிந்து கொள்ளப்படுகிற; அபி-இருந்தும்; ஆத்மத்வேன—இயற்கையால்; அபிமதாத்—அதற்காக ஒருவர் கொள்ளும் பற்று; தேஹ ஆதே—அவர் ஜடவுடலிலிருந்து புலன்கள் மற்றும் மனத்திலிருந்து; புருஷ—விடுதலை பெற்ற ஆத்மா; ததா—அதுபோல.

குடும்பம் மற்றும் செல்வத்தின் மீதுள்ள பற்றால், ஒருவர் மகனையும் மற்றொருவர் பணத்தையும் தன்னுடையதாக ஏற்றுக் கொள்கிறார்; பூதவுடலுக்கான பற்றால், ஒருவர் அது தன்னுடையது என்று நினைக்கிறார். ஆனால் உண்மையில், ஒருவர் தன் குடும்பம் மற்றும் செல்வமும் அவரிடமிருந்து வேறுபட்டன என்று புரிந்து கொள்ள முடிவது போல, விடுதலை பெற்ற ஆத்மா தானும் தன் உடலும் ஒன்று அல்ல என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

பதம் 3.28.40
யதோல்முகாத்விஸ்புலிங்காத் தூமாத்வாபி ஸ்வஸம்பவாத்
அப்யாத்மத்வேநாபிமதாத் யதாக்நி: ப்ருதகுல்முகாத்

யதா-போல; உல்முகாத்-கொழுந்துகளிலிருந்து; விஸ்புலிங்காத்-பொறிகளிலிருந்து; தூமாத்-புகையிலிருந்து; வா-அல்லது; அபி-இருந்தும்; ஸ்வ- ஸம்பவாத்—அதிலிருந்து உருவாக்கப்பட்டது; அபி- இருப்பினும்; ஆத்மத்வேன—இயற்கையால்; அபிமதாத்-நெருங்கிய தொடர்பு கொண்டு; யதா-போல; அக்நி- நெருப்பு; ப்ருதக்-வேறுபட்ட; உல்முகாத்-கொழுந்துகளிலிருந்து.

ஒளிவீசும் நெருப்புக்கொழுந்து தீப்பிழம்பு, தீப் பொறிகளில் இருந்தும், புகையிலிருந்தும் வேறுபட்டது. ஆனால் அவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. ஏனென்றால் அவை அதே எரியும் மரத்திலிருந்து பிறந்தவை.

பதம் 3.28.41
பூதேந்த்ரியாந்த: கரணாத்ப்ரதானாஜ்ஜீவ -ஸம்க்ஞிதாத்
ஆத்மா ததா ப்ருதக்த்ரஷ்டா பகவான் ப்ரம்ஹ-ஸம்க்ஞித

பூத-ஐந்து மூலப்பொருட்கள்; இந்தரிய-புலன்கள்; அந்த: கரணாத்-மனத்திலிருந்து; ப்ரதானாத்-ப்ரதானத்திலிருந்து; ஜீவ-ஸம்க்ஞிதாத்-ஜீவ ஆத்மாவிலிருந்து; ஆத்மா-பரமாத்மா; ததா-அதனால்; ப்ருதக்-வேறுபாடு; த்ரஷ்டா-பார்ப்பவர்; பகவான்-பரமபுருஷ பகவான்; ப்ரம்ஹஸம்க்ஞித-பிரம்மன் எனப்படும்.

பரப்பிரம்மன் என்று அறியப்படும் பரமபுருஷ பகவான் தனித்து உணருபவர் ஆவார். புலன்கள், ஐந்து மூலப்பொருட்கள் மற்றும் உணர்வு நிலையுடன் இணைந்த தனிப்பட்ட உயிரினம் அல்லது ஜீவாத்மாவிலிருந்து அவர் வேறுபட்டவர்.

பதம் 3.28.42
ஸர்வ-பூதேஷு சாத்மானம் ஸர்வ-பூதானி சாத்மனி
ஈஷேதானந்ய-பாவேன பூதேஷ்விவ ததாத்மதாம்

ஸர்வ-பூதேஷு-எல்லா வெளிப்பாடுகளில்; ச-மற்றும்; ஆத்மானம்-ஆத்மா; ஸர்வ-பூதானி—எல்லா வெளிப்பாடுகள்; ச-கூட; ஆத்மனி-பரமாத்மாவில்; ஈக்ஷேத—அவர் பார்க்க வேண்டும்; அனந்ய பாவேன-சமமான பார்வையுடன்; பூதேசு-எல்லா வெளிப்பாடுகளில்; இவ-போல; தத்-ஆத்மதாம்—அதனுடைய இயற்கை.

ஒரு யோகி அதே ஆத்மாவை எல்லா வெளிப்பாடுகளில் காண வேண்டும். ஏனெனில் இருப்பவை எல்லாம் பரமனின் வேறுபட்ட சக்திகளின் வெளிப்பாடு ஆகும். இம்முறையில் பக்தர் எல்லா உயிரினங்களையும் வேறுபாடு இன்றிப் பார்க்க வேண்டும். அதுவே பரமாத்மாவின் உணர்ந்ததற்குரிய அடையாளம் ஆகும்.

பதம் 3.28.43
ஸ்வ-யோனிஷு யதா ஜ்யோதிர் ஏகம் நானா ப்ரதீயதே
யோனீனாம்குண-வைஷம்யாத் ததாத்மா ப்ரக்ருதௌஸ்தித:

ஸ்வ-யோனிஷு-மரத்தின் வடிவங்களில்; யதா—போல; ஜ்யோதி-நெருப்பு; ஏகம்-ஒன்று; நானா-வேறுபட்ட; ப்ரதீயதே-வெளிப்படுத்தப்பட்டு; யோனீனாம்-வேறுபட்ட கருப்பைகளின்; குண—வைஷம்யாத்—குணங்களின் வேறுபட்ட சூழ்நிலைகளிலிருந்து; ததா—அதனால்; ஆத்மா- ஆத்மா; ப்ரக்ருதௌ-ஜட இயற்கையில்; ஸ்தித—அமைந்து.

நெருப்பு காடுகளில் வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுவது போல, இயற்கையின் குணங்களின் வேறுபட்ட சூழ்நிலைகளின் கீழ், தூய ஆத்மா தன்னை வேறுபட்ட உடல்களில் வெளிப்படுத்துகிறது.

பதம் 3.28.44
தஸ்மாதிமாம் ஸ்வாம் ப்ரக்ருதிம் தைவீம் ஸ்த-ஸதா-த்மிகாம்
துர்விபாவ்யாம் பராபாவ்ய ஸ்வரூபேணாவதிஷ்டதே

தஸ்மாத்—இவ்வாறு; இமாம்-இந்த; ஸ்வாம்—சொந்த; ப்ரக்ருதிம்-ஜட சக்தி; தைவீம்—தெய்வத்தன்மை; ஸத் அஸத் ஆத்மிகம்-காரணமும் விளைவும் உள்ளடக்கிய; துர்விபாவ்யாம்—புரிந்து கொள்ளக் கடினமாக; பராபாவ்ய-பிடித்த பிறகு; ஸ்வரூபேண-தன்னை அறிந்த நிலையில்; அவதிஷ்டதே-அவர் இருப்பார்.

இந்த உலக வெளிப்பாட்டின் காரணமாகவும் அதன் விளைவாகவும் இருக்கின்ற மாயையின் வெல்ல முடியாத மயக்கத்தை வென்ற பிறகு யோகி தன்னை அறிந்த நிலையில் இருக்க முடியும்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “பக்தித் தொண்டைச் செயற்படுத்துவதில் கபிலரின் அறிவுரைகள்” எனும் தலைப்பைக் கொண்ட இருபத்தெட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare