அத்தியாயம் – 23
தேவஹூதியின் புலம்பல்
பதம் 3.23.1
மைத்ரேய உவாச
பித்ருப்யாம் ப்ரஸ்திதே ஸாத்வீ பதிமிங்கித-கோவிதா
நித்யம் பர்யசரத்ப்ரீச்யா பவானீவ பவம் ப்ரபும்

மைத்ரேய உவாச-மைத்ரேயர் கூறினார்; பித்ருப்யாம்—பெற்றோர்களால்; ப்ரஸ்திதே-பிரிவின் போது; ஸாத்வீ—கற்புள்ள பெண்; பதிம்-அவள் கணவர்; இங்கித கோவிதா—ஆசைகளைப் புரிந்து கொள்ளல்; நித்யம்-நிலையாக; பர்யசரத்—அவள் சேவை புரிந்தாள்; ப்ரீத்யா-மிகுந்த அன்புடன்; பவானீ-தேவி பார்வதீ; இவ-போல; பவம்-பகவான் சிவன்; ப்ரபும்—அவள் தலைவர்.

மைத்ரேயர் தொடர்ந்தார்: பெற்றோர்களை விட்டுப் பிரிந்த பிறகு, கணவரின் விருப்பங்களைப் புரிந்து கொள்ள முடிந்தவளாகிய கற்புடைய பெண் தேவஹுதி, சிவபெருமானின் மனைவியான பவானீ, அவள் கணவருக்குத் தொண்டு செய்தது போல, மிகுந்த அன்புடன் தனது கணவருக்குப் பணிவிடை செய்தாள்.

பதம் 3.23.2
விஸ்ரம் பேணாத்ம-ஸௌசேன கௌரவேண தமேன ச
கஸ்ருஷயா ஸௌஹ்ருதேன வாசா மதுரயா ச போ:

விஸ்ரம்பேண-நெருங்கிய உறவு நிலையுடன்; ஆத்ம சௌசேன-மனம், உடலின் தூய்மையுடன்; கௌரவேண-மிகுந்த மரியாதையுடன்; தமேன-புலன்கள் கட்டுப்பாட்டுடன்; ச-மற்றும்; கஸ்ருஷயா—தொண்டுடன்; ஸெளஹ்ருதேன-அன்புடன்; வாசா-சொற்களுடன்; மதுரயா-இனிமை; ச-மற்றும்; போ:-ஓ விதூரரே.

ஓ விதுரரே, தேவ கீதி மிகவும் நெருக்கமாக மிகுந்த மரியாதையுடன், புலன் கட்டுப்பாட்டுடன், அன்புடன் மற்றும் இனிய சொற்களுடன் அவள் கணவருக்குப் பணிவிடை செய்தாள்.

பதம் 3.23.3
விஸ்ருஜ்ய காமம் தம்பம் ச த்வேஷம் லோபமகம் மதம்
அப்ரமத்தோத்யதா நித்யம் தேஜீயாம்ஸமதோஷயத்

விஸ்ருஜ்ய-விட்டுவிட்டு; காமம்-இச்சை; தம்பம்-கர்வம்; ச-மற்றும்; த்வேஷம்- பொறாமை; லோபம்-பேராசை; அகம்-பாவச் செயல்கள்; மதம்-வீண் தற்பெருமை; அப்ரமத்தர்-நல்லறிவு நிலையுடைய; உத்யதா—அயராது உழைத்து; நித்யம்-எப்போதும்; தேஜீயாம்ஸம்—அவளின் ஆற்றல் மிகுந்த கணவர்; அதோஷயத்—அவள் மகிழ்வித்தாள்.

நல்லறிவு நிலையில் அயராது உழைத்து, இச்சை, கர்வம், பொறாமை, பேராசை, பாவச் செயல்கள், வீண் தற்பெருமை இவற்றை விட்டுவிட்டு, அவள் ஆற்றல் மிகுந்த தனது கணவரை மகிழ்வித்தாள்.

பதங்கள் 3.23.4 – 3.23.5
ஸ வை தேவர்ஷி-வர்யஸ்தாம் மானவீம் ஸமனுவ்ரதாம்
தைவாத் கரீயஸ: பத்யுர் ஆசாஸானாம் மஹாசிஷ:

காலேன பூயஸா க்ஷாமாம் கர்சிதாம் வ்ரத-சர்யயா
ப்ரேம -கத்கதயா வாசா பீடித: க்ருபயாப்ரவீத்

ஸ:-அவர் (கர்தமர்); வை-நிச்சயமாக; தேவ ர்ஷி-மேல் உலக முனிவர்களில்; வர்ய:-எல்லாருக்கும் முதன்மையான; தாம்—அவளை; மானவீம்—மனுவின் மகள்; ஸமனுவ்ரதாம்-முழுதும் ஒப்படைத்து; தைவாத்-பகவானை விட; கரீயஸ:-சிறந்தவராக; பத்யு:-அவள் கணவனிடமிருந்து; ஆசாஸானாம்-எதிர்பார்த்து; மஹா ஆசிஷ:-சிறந்த ஆசிகள்; காலேன பூயஸா—நீண்ட நேரத்திற்காக; க்ஷாமாம்-பலவீனம்; கர்சிதாம்—மெலிந்து; வ்ரச கர்யாய—மதச் சடங்கு முதலியன கடைப்பிடிப்பதால்; ப்ரேம-அன்புடன்; கத்கதயா-திக்கிப் பேசுதல்; வாசா-குரலுடன்; பீடித:-மிஞ்சி மேம்பட்டு; க்ருபயா-அன்புடன்; அப்ரவீத்—அவர் கூறினார்.

மனுவின் மகள், தன் கணவரிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டவள், அவரை பகவானை விடவும் சிறந்தவராகப் பார்த்தாள். இவ்வாறு அவள் அவரிடம் இருந்து சிறந்த ஆசிகளை எதிர்பார்த்தாள். நீண்ட காலமாக அவருக்குப் பணிவிடை செய்ததால் அவள் பலவீனமடைந்து, மதச் சடங்கினையும் கடைப்பிடித்ததால் மிக மெலிந்தாள். அவள் நிலையைப் பார்த்ததும், மேலுலக முனிவர்களில் முன்னணியில் இருப்பவராகிய கர்தமர் அன்பு மேலிட்டு, தடுமாறும் குரலுடன் அவளிடம் பேசினார்.

பதம் 3.23.6
கர்தம உவாச
துஷ்டோ ஹமத்ய தவ மானவிமானதாயா:
கஸ்ரூஷயா பரமயா பரயா ச பக்த்யா
யோ தேஹிநாமயமதீவ கஹ்ருத் தேஹோ
நாவேக்ஷித: ஸமுசித: க்ஷபிதும் மதர்தே

கர்தம உவாச-சிறந்த முனிவர் கர்தமர் கூறினார்; துஷ்ட:-மகிழ்ந்து; அஹம்-நான்; அத்ய—இன்று; தவ—உன்னுடன்; மானவி-ஒ மனுவின் மகளே; மானதாயா:-மரியாதைக்குரிய; சுஸ்ரூஷயா-தொண்டினால்; பரமயா-மிகவும் உன்னதமான; பரயா-உயர்ந்த; ச-மற்றும்; பக்த்யா—பக்தியால்; ய:-அந்த; தேஹினாம்-உடலோடு தோன்றியவற்றிற்கு; அயம்-இந்த; அதீவ-மிகவும்; சுஹ்ருத்-அன்பான; ஸ:—அந்த; தேஹ:-உடல்; ந-இல்லை; அவேக்ஷித:-கவனிக்கப்பட்டு; ஸமுசித:-ஒழுங்காக; க்ஷபிதும்-பயன்படுத்த; மத் அர்தே-என் பொருட்டு.

கர்தம முனிவர் கூறினார்: ஒ மரியாதைக்குரிய ஸ்வாயம்புவ மனுவின் பெண்ணே, இன்று உன் சிறந்த பக்திக்காகவும் மிகவும் உன்னதமான அன்புப் பணிவிடைக்காகவும் நான் மிகவும் மகிழ்கிறேன். உடல் அதனுடன் தோன்றிய அங்கங்களுடன் நெருங்கியதாக இருந்தாலும் நீ என் பொருட்டு உன் உடலையே நீ கவனிக்காமல் விட்டதால் நான் அதிர்ச்சி அடைகிறேன்.

பதம் 3.23.7
யே மே ஸ்வ-தர்ம -நிரதஸ்ய தப:ஸமாதி
வித்யாத்ம-யோக-விஜிதா பகவத்-ப்ரஸாதா:
தானேவ தே மதனுஸேவனயாவருத்தான்
த்ருஷ்டிம் ப்ரபச்ய விதராம்யபயாநசோகான்

யே-அவை; மே-என்னால்; ஸ்வதர்ம-சொந்த மத வாழ்வு; நிரதஸ்ய—முழுதும் இடங்கொண்டதுடன்; தப:-தவம்; ஸமாதி-தியானத்தில்; வித்யா—கிருஷ்ணர் பற்றிய உணர்வில்; ஆத்மயோக-மனத்தை நிலை நிறுத்துவதால்; விஜிதா—அடைந்து; பகவத்ப்ரஸாதா—பகவானின் அருள்; தான்—அவர்களுக்கு; ஏவ-கூட; தே-உன்னால்; மத்-என்னிடம்; அனுஸேவனயா—அர்ப்பணித்த தொண்டினால்; அவருத்தான்—அடைத்து; த்ருஷ்டிம்—மெய்யறிவார்ந்த பார்வை; ப்ரபச்ய-பார்த்து; விதராமி-நான் தருகிறேன்; அபயான்-பயத்திலிருந்து விடுபட்டவை; அசோகான்—புலம்பலிலிருந்து விடுபட்டவை.

கர்தம முனிவர் தொடர்ந்தார்: தவம், தியானம், கிருஷ்ண உணர்வு நிலை இவற்றால் ஆன என் மத வாழ்வைக் கடைப்பிடிப்பதில் நான் பகவானின் ஆசிகளைப் பெற்றுள்ளேன். நீ பயம், புலம்பலிலிருந்து விடுபட்ட இத்தகைய சாதனைகளை இன்னும் அனுபவிக்கவில்லை என்றாலும் அவை எல்லாவற்றையும் நான் உனக்குத் தருகிறேன். ஏனென்றால் நீ எனக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருக்கிறாய். இப்பொழுது அந்தச் சாதனைகளைப் பார். அவை எவ்வளவு நன்றாக இருக்கின்றன என்பதைப் பார்க்கும் மெய்யறிவுப் பார்வையை நான் உனக்குத் தருகிறேன்.

பதம் 3.23.8
அந்யே புனர்பகவதோ ப்ருவ உத்விஜ்ரும்ப
விப்ரம்சிதார்த்தரசனா: கிமுருக்ரமஸ்ய
ஸித்தாஸி புங்க்ஷ்வ விபவாந்நிஜ-தர்ம-தோஹான் திவ்யாந்நரைர்துரதிகாந்ந்ருப-விக்ரியாபி:


அந்யே-பிறர்; புன:-மீண்டும்; பகவத:-பகவானின்; ப்ருவ:-புருவங்களின்; உத்விஜ்ரும்ப—அசைவினால்; விப்ரம்சித-அழிக்கப்பட்டு; அர்த்தரசனா:—ஜடவுலகச் சாதனைகள்; கிம்-என்ன பயன்; உருக்ரமஸ்ய-பகவான் விஷ்ணுவின் (நீண்ட காலடி எடுத்து வைத்தல்); ஸித்தா—வெற்றிகரமான; அஸி-நீங்கள்; புங்க்ஷ்வ—அனுபலி; விபவாந்-பரிசுகள்; நிஜ தர்ம—உங்கள் சொந்த பக்தியின் கொள்கைகளால்; தோஹான்-பயனடைந்து; திவ்யாந்- எல்லாம் கடந்த; நரைர்—மனிதர்களால்; துரதிகாந்—பெறுவதற்குக் கடினமான; ந்ருபவிக்ரியாபி:- மேற்குடியினரின் கர்வம்.

கர்தம முனிவர் தொடர்ந்தார்: பகவானின் அருளை அன்றிப் பிற இன்பங்களால் என்ன பயன்? எல்லாவித உலகச் சாதனைகளும் பரமபுருஷ பகவானாகிய பகவான் விஷ்ணுவின் எளிய புருவங்களின் அசைவினால் அழிவுக்குள்ளாகும் நிச்சயமற்ற தன்மை படைத்தவை. உன் கணவனிடம் நீ கொண்டுள்ள பக்தியின் கொள்கைகளால், நீ மெய்யறிவார்ந்த பரிசுகளை அடைந்து மகிழ்ச்சியை அனுபவிக்கிறாய். மேற்குடிப்பிறப்பினாலும், கர்வத்தினாலும் வாழ்கின்றோருக்கு இத்தகைய மகிழ்ச்சி கிடைக்காது.

பதம் 3.23.9
ஏவம் ப்ருவாணமபலாகில் -யோகமாயா
வித்யா-விசக்ஷணமவேஷ்ய கதாதிராஸீத்
ஸம்ப்ரஸ்ரய-ப்ரணய -விஹ்வலயா கிரேஷத்
வ்ரீடாவலோக-விலஸத் -தஸிதானனாஹ

ஏவம்—இவ்வாறு; ப்ருவாணம்-பேசுதல்; அபலா—பெண்; அகில-எல்லா; யோகமாயா-எல்லாம் கடந்த அறிவியல்; வித்யா-விசக்ஷணம்-அறிவியல் மேம்பட்டு; அவேக்ஷ்ய-கேட்ட பிறகு; கதாதி:-திருப்தியடைந்து; ஆஸீத்-அவள் பொருந்தியவளாகி; ஸம்ப்ரஸ்ரய-பணிவுடன்; ப்ரணய–அன்புடன்; விஹ்வலயா-திணறிய: கிரா-குரலுடன்; ஈஷத்-சிறிதாக; வ்ரீடா-நாணமுள்ள; அவலோக-பார்வையுடன்; விலஸத்-ஒளிவீசி; ஹஸித-புன்சிரிப்பு; ஆனனா- அவள் முகம்; ஆஹ—அவள் பேசினாள்.

எல்லாவிதமான மெய்யறிவு சார்ந்த அறிவியல் கண்ணோட்டம் மேலோங்கிய அவள் கணவர் பேசியதைக் கேட்டதும், இவற்றை அறிந்திராத தேவஹூதி மிகவும் திருப்தியடைந்தாள். அவள் முகம் சிறிய வெட்கப் பார்வையுடன் மின்னியது. அவள் சிறந்த பணிவினால் அன்பினால் திணறிய குரலில் பேசினாள்.

பதம் 3.23.10
தேவஹுதி உவாச
ராத்தம் பத த்விஜவ்ருஷைததமோகயோக
மாயாதிபேத்வயி விபோததவைமி பர்த:
யஸ்தேப்ய தாயிஸமய: ஸக்ருதங்கஸங்கோ
பூயாத் கரீயஸி குண: ப்ரஸவ: ஸதீனாம்

தேவஹுதி உவாச—தேவஹுதி கூறினாள்; ராத்தம்-அடையப்பட்டது; பத-உண்மையில்; த்விஜ வ்ருஷ-ஓ பிராம்மணர்களில் சிறந்தவரே; ஏதத்-இந்த; அமோக-தவறிழைக்காத; யோக மாயா-அறிவார்ந்த ஆற்றல்; அதிபே-தலைவர்; த்வயி—உங்களிடம்; விபோ-ஓ சிறந்தவரே; தத்-அந்த; அவைமி-நான் அறிவேன்; பர்த்த-ஓ கணவரே; ய-அந்த; தே-உங்களால்; அப்யதாயி-கொடுக்கப்பட்டது; ஸமய:-உறுதிமொழி; ஸக்ருத்-ஒரு சமயம்; அங்க ஸங்க-உடல் இணைவு; பூயாத்-இருந்தால்; கரீயஸி-புகழ்பெற்ற பொழுது; குண:-சிறந்தகுணம்; ப்ரஸவ—சந்ததி; ஸதீனாம் கற்புடைய பெண்களின்.

ஸ்ரீ தேவஹூதி கூறினாள்: என் அன்புக் கணவரே, பிராம்மணர்களில் சிறந்தவரே, நீங்கள் முழுமையை அடைந்துள்ளீர்கள். தவறு செய்யாத அறிவார்ந்த ஆற்றலுக்கு நீங்கள் தலைவர்; ஏனென்றால் நீங்கள் எல்லாம் கடந்த இயற்கையாகிய யோக மாயாவின் பாதுகாப்பில் உள்ளீர்கள் என்பதையும் நான் அறிவேன். புகழ் மிகுந்த கணவனை அடைந்த கற்புள்ள பெண்ணுக்கு குழந்தைகளே சிறந்த தகுதியை அளிக்கின்றன என்று உறுதிமொழி அளித்தீர்கள். ஆதலால் நமது உடல் புணர்வு இப்பொழுது பயன் தருமாறு நிறைவேற வேண்டும்.

பதம் 3.23.11
தத்ரேதி-க்ருத்யமுபசிக்ஷ யதோபதேசம்
யேநைஷமே கர்சிதோ திரிரம்ஸயாத்மா
ஸித்த்யேத தே -க்ருதமனோ பவ தர்ஷிதாயா
தீனஸ்ததீச பவனம் ஸத்ருசம் விசக்ஷ்வ

தத்ர—அதில்; இதி—க்ருத்யம்-அவசியமாகச் செய்யப்பட வேண்டியது; உபசிக்ஷ-நிகழ்வு; யதா—அதன்படி; உபதோம்-புனித நூலுக்கு அறிவுரை; யேன-எதனால்; ஏஷ-இந்த; மே-என்னுடைய; கர்சித:-மெலிந்து; அதிரிரம்ஸயா-மும்முரமான உணர்ச்சி திருப்தி அடையாததால்; ஆத்மா-உடல்; ஸித்யேத-இசைவாக அளித்தல்; தே-உங்களுக்காக; க்ருத- தூண்டிவிடுதல்; மன:பவ-உணர்ச்சியால்; தர்ஷிதாயா:-தாக்கப்பட்டு; தீன:-ஏழை; தத்-அதனால்; ஈச—ஓ என் அன்புத்தலைவரே; பவனம்-வீடு; ஸத்ருசம்-தகுதியான; விசக்ஷ்வ—தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.

தேவஹூதி தொடர்ந்தாள்: என் அன்புத் தலைவரே, நான் உங்களிடம் கொண்டுள்ள உணர்ச்சித் தூண்டுதலால் தாக்கப்பட்டுள்ளேன். அதனால் புனித நூல்களின்படி செய்ய வேண்டிய ஏற்பாடுகளைத் தயவு செய்து செய்யுங்கள். அதனால் திருப்தி அடையாத உணர்ச்சியால் இளைத்துள்ள என் மெலிந்த உடல் உங்களுக்குத் தகுதியான நிலைக்கு வரவேண்டும். என் தலைவரே, இந்த நோக்கத்திற்காக ஒரு தகுந்த வீட்டையும் தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.

பதம் 3.23.12
மைத்ரேய உவாச
ப்ரியாயா: ப்ரியமந்விச்சன் கர்தமோ யோகமாஸ்தித:
விமானம் காம-கம் க்ஷத்தஸ் தர்ஹி ஏவாவிரசீகரத்

மைத்ரேயர்—சிறந்த முனிவர் மைத்ரேயர்; உவாச-கூறினார்; ப்ரியாய:-அவர் அன்பான மனைவியின்; ப்ரியம்-இன்பம்; அந்விச்சன்-விரும்பி; கர்தம-கர்தம முனிவர்; யோகம்-யோக ஆற்றல்; ஆஸ்தித:-பயிற்சி செய்யப்பட்டு; விமானம்-ஆகாய விமானம்; காமகம்-விருப்பத்தில் அசைந்து; க்ஷத்த—ஓ விதுரரே; தர்ஹி-திடீரென்று: ஏவ-முற்றிலும்; ஆவாவிரசீகரத்—அவர் உருவாக்கினார்.

மைத்ரேயர் தொடர்ந்தார்: ஓ விதுரரே, கர்தம முனிவர் தனது அன்பான மனைவியை மகிழ்விக்க விரும்பி, தன் யோக ஆற்றலை உபயோகித்து உடனடியாக அவர் விருப்பத்தின்படி பயணம் செய்யும் ஒரு ஆகாய மாளிகையை உருவாக்கினார்.

பதம் 3.23.13
ஸர்வ-காம-துகம் திவ்யம் ஸர்வ-ரத்ன-ஸமந்விதம்
ஸர்வர்த்தி -உபசயோ தர்கம் மணி- ஸ்தம்பை ருபஸ்க்ருதம்

ஸர்வ-எல்லா; காம-ஆசைகள்; துகம்—விளைவு; திவ்யம்- அற்புதமான; ஸர்வ ரத்ன—எல்லாவித நகைகள்; ஸமந்விதம்—ஒப்பனை செய்யப்பட்டு; ஸர்வ-எல்லா; ர்த்தி-செல்வம்; உபசய—அதிகரித்து; உதர்கம்—படிப்படியாக; மணி-மதிப்பு மிக்க கற்களின்; ஸ்தம்பை:-தூண்களுடன்; உபக்ருதம்-அலங்கரிக்கப்பட்டது.

அது ஒரு அற்புதமான அமைப்பு, எல்லாவிதமான அணிகளால் ஒப்பனை செய்யப்பட்டு, மதிப்பு மிக்க கற்களால் ஆகிய தூண்களுடன் அலங்கரிக்கப்பட்டு, ஒருவர் விரும்பும் பொருளை எல்லாம் தரத்தக்கதாய் விளங்கியது. வீட்டிற்குத் தேவையான பொருட்களுடன் காலப்போக்கில் அதிகரிக்கும் செல்வ வளத்தாலும் அம்மாளிகை நிறைந்திருந்தது.

பதங்கள் 3.23.14 – 3.23.15
திவ்யோபகரணோபேதம் ஸர்வ-கால-சுகாவஹம்
பட்டிகாபி: பதாகாபிர்விசித்ராபிரலங் க்ருதம்

ஸ்ரக்பிர்விசித்ர-மால்யாபிர் மஞ்ஜு -சிஞ்ஜத்ஷடங்க்ரிபி:
துகூல -க்ஷெளமகௌசேயைர் நானா-வஸ்த்ரைர் விராஜிதம்

திவ்ய-அற்புதமான; உபகரண—பரிவாரத்துடன்; உபேதம்- நிறைந்து இருந்தது; ஸர்வகால—எல்லாப் பருவங்களிலும்; சுகாவஹம்-மகிழ்ச்சியைக் கொண்டுவருதல்; பட்டிகாபி:-தோரணங்களுடன்; பதாகாபி:-கொடிகளுடன்; விசித்ராபி:-பலவித வண்ணங்கள், துணிகளுடன்; அலங்க்ருதம்- அலங்கரிக்கப்பட்டு; ஸ்ரக்பி:-மலர் மாலைகளுடன்; விசித்ர மால்யா பி:-வனப்புடைய மலர்களுடன்; மஞ்சு-இனிமை; ஸிஞ்ஜத்-முனகுகிற; ஷட் அங்க்ரிபி:-தேளிக்களுடன்; துகூல-நல்ல துணி; க்ஷெளம-நாரால் செய்யப்பட்ட துணி; கௌசேயை:-பட்டுத் துணியின்; நானா-பலவித; வஸ்த்ரை:- திரைச்சீலைகளுடன்; விராஜிதம்-அழகுபடுத்தப்பட்டது.

அந்த மாளிகை தேவையான எல்லாப் பொருட்களாலும் நிறைந்திருந்தது. எல்லாப் பருவங்களிலும் இனிமையுடன் விளங்கியது. அது கொடிகள், தோரணங்கள், பல்வேறு வண்ணங்கள் நிரம்பிய கலை நயம் மிக்க வேலைப்பாடுகளால் எல்லாப் பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது மேலும் இனிமையாகப் பாடும் தேனீக்களைக் கவரும் அழகிய மலர் மாலைகளுடனும், நார், பட்டு மற்றும் பிற வகைத் துணிகளாலும் அழகு செய்யப்பட்டிருந்தது.

பதம் 3.23.16
உபர்யுபரி விந்யஸ்த- நிலயேஷீ ப்ரதக்ப்ருதக்
க்ஷிப்தை: கசிபுபி: காந்தம் பர்யங்க-வ்யஜனாஸனை:

உபரிஉபரி-ஒன்றின் மேல் ஒன்று; விந்யஸ்த-வைக்கப்பட்டு; நிலயேசு—அடுக்குகளாக; ப்ருதக்ப்ருதக்-தனியாக; க்ஷிப்தை:- சீராக அமைக்கப்பட்டு; கசிபுபி:-கட்டில்களுடன்; காந்தம்- அழகிய; பர்யங்க-படுக்கைகள்; வ்யஜன—விசிறிகள்; ஆஸனை:-இருக்கைகளுடன்.

அந்த அரண்மனை பார்ப்பதற்கு அழகாக, கட்டில்களுடன், படுக்கைகளுடன், விசிறிகள், இருக்கைகள் கொண்டதாக எல்லாம் தனித்தனியாக ஏழு நிலைகளில் (மாடிகளில்) அமைக்கப்பட்டிருந்தது.

பதம் 3.23.17
தத்ர தத்ர விநிக்ஷிப்த- நானாசில்போபசோபிதம்
மஹா-மரகத-ஸ்தல்யா ஜூஷ்டம் வித்ரும-வேதிபி:

தத்ர தத்ர – இங்கும் அங்கும்; விநிக்ஷிப்த-வைக்கப்பட்டு; நானா— பலவித: சில்ப-கலைநயம் மிக்க செதுக்கு வேலைப்பாடுகளுடன்; உபசோபிதம்-வியக்கத்தக்க அளவு அழகிய; மஹாமரகத-சிறந்த பச்சைக் கற்களின்: ஸ்தல்யா- தலையுடன்; ஜுஷ்டம்-சாமான்கள் அமைக்கப்பட்ட; வித்ரும்-பவழத்தின்; வேதிபி:-மேடைகளுடன்.

அதன் அழகு சுவர்களில் இங்கும் அங்கும் உள்ள கலைநயம் மிக்க செதுக்கு வேலைப்பாடுகளால் மேம்பட்டது. அதன் தரை பச்சைக் கற்களால் ஆகி பவழ மேடைகளுடன் விளங்கியது.

பதம் 3.23.18
த்வா:சு வித்ரும-தேஹல்யா பாதம் வஜ்ர-கபாடவத்
சிகரேஷ்விந்த்ரனீலேசு ஹேம-கும்பைரதிஸ்ரிதம்

த்வா:சு- நுழைவாயில்களில்; வித்ரும-பவழத்தின்; தேஹல்யா- முகப்புடன்; பாதம்—அழகான; வஜ்ர-வைரங்களால் அழகு படுத்தப்பட்டு; கபாடவத்—கதவுகளுடன்; சிகரேசு-மாடங்களில்; இந்த்ரனீலேசு—நீலக்கற்களின்; ஹேமகும்பை:-தங்க முகடுகளுடன்; அதிஸ்ரிதம்-மகுடம் சூட்டப்பட்டு.

அரண்மனை, பவழ முகப்புகள் கொண்ட வாயில்களுடன், வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கதவுகளுடன் மிகவும் அழகாக விளங்கியது. நீலக்கற்கள் பதிக்கப்பட்ட மாடங்களில் தங்க முகடுகள் மகுடமாக விளங்கின.

பதம் 3.23.19
சக்ஷு மத்பத்மராகாக்ர்யைர் வஜ்ரபித்திஷு நிர்மிதை:
ஜுஷ்டம் விசித்ர-வைதானைர் மஹார்ஹைர் ஹேம-தோரணை:

சக்ஷுஷ்மத்-கண்களின் உடைமைப் பொருள் போல; பத்மராக- சிவப்புக் கற்களுடன்; அக்ர்யை-நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட; வஜ்ர-வைரத்தின்; பித்திஷு-சுவர்களில்; நிர்மிதை:-பொருத்தப்பட்டு; ஜூஷ்டம்-பொருட்கள் அமைக்கப்பட்டு; விசித்ர-பலவித; வைதானை:-கவிகை மாடங்கள்; மஹார்ஹை:- சிறந்த மதிப்புள்ள; ஹேதோரணை:-தங்கத்தாலான வாயில்களுடன்.

வைரச் சுவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவப்புக் கற்கள் பதிக்கப்பட்டு சுவர்களுக்கே கண்கள் உள்ளனவோ எனத் தோன்றியது. அது அற்புதமான கவிகை மாடங்களுடன் சிறந்த மதிப்புள்ள தங்கத்தாலான மாடங்களையும் கொண்டு விளங்கியது.

பதம் 3.23.20
ஹம்ஸ-பாராவத-வ்ராதைஸ் தத்ர தத்ர நிகூஜிதம்
க்ருத்ரிமான் மந்யமானை: ஸ்வான் அதிருஹ்யாதிருஹ்யச

ஹம்ஸ-அன்னங்களின்; பாராவத-புறாக்களின்; வ்ராதை:- கூட்டங்கள்; தத்ர தத்ர-இங்கும் அங்கும்; நிகூஜிதம்-அதிர்ந்து; க்ருத்ரிமான்-செயற்கையான; மந்யமானை:-நினைப்பு; ஸ்வான்-அதன் சொந்த வகையைச் சேர்ந்த; அதிருஹ்ய அதிருஹ்ய-மீண்டும் மீண்டும் பறந்து; ச-மற்றும்.

அந்த அரண்மனையில் இங்கும் அங்கும் உயிருள்ள அன்னங்களும் புறாக்களும் கூட்டங்களாக இருந்தன. மேலும் செயற்கையான அன்னங்களும் புறாக்களும் உயிருள்ளவை போல் தோற்றமளித்த காரணத்தால், உண்மையான அன்னங்கள் மீண்டும் மீண்டும் அவற்றின் மீது பறந்து, அவற்றையும் தம்மைப் போன்றே உயிருள்ள பறவைகள் என்று நினைத்தன. இவ்வாறு அந்த அரண்மனை இந்தப் பறவைகளின் ஒலியால் அதிர்ந்தது.

பதம் 3.23.21
விஹார-ஸ்தான -விஸ்ராம ஸம்வேசப்ராங்கணாஜிரை:
யதோபஜோஷம் ரசிதைர் விஸ்மாபனமிவாத்மன:

விஹார ஸ்தான—இன்பம் தரும் இடங்கள்; விஸ்ராம-ஓய்வு கொள்ளும் இடங்கள்; ஸம்வேச-படுக்கை அறைகள்; ப்ராங்கண— உள்ளிடங்கள்; அஜிரை:-வெளிதாழ்வாரங்களுடன்; யதா உபஜோஷம்-வசதிக்குத் தக்கபடி; ரசிதை:-அமைக்கப்பட்டு; விஸ்மாபனம் ஆச்சரியம் தரத்தக்க; இவ-உண்மையில்; ஆத்மன:-அவருக்கே (கர்தமர்).

அந்த மாளிகை மகிழ்ச்சி தரும் இடங்கள், தங்கும் இடங்கள் படுக்கையறைகள், உள், வெளித் தாழ்வாரங்கள், ஆகியவற்றை வசதிக்காகக் கொண்டிருந்தது. இவை எல்லாம் முனிவருக்கே ஆச்சரியத்தை விளைவித்தன.

பதம் 3.23.22
ஈத்ருக் க்ருஹம் தத்பச்யந்தீம் நாதிப்ரீதேன சேதஸா
ஸர்வ-பூதாசயாபிக்ஞ: ப்ராவோசத்கர்தம: ஸ்வயம்

ஈத்ருக்-அம்மாதிரி; க்ருஹம்-வீடு; தத்-அந்த; பச்யந்தீம்- பார்ப்பதை; நாதிப்ரீதேன—அதிகம் மகிழாமல்; சேதஸா- மனத்துடன்; ஸர்வ-பூத-எல்லாரின்; ஆசா-அபிக்ஞ-மனத்தைப் புரிந்து கொள்ளுதல்; ப்ராவோசத்-அவர் அழைத்துக் கூறினார்; கர்தம:-கர்தமர்; ஸ்வயம்-தனியாக.

தேவஹுதி அந்த மிகப் பெரிய பொருள்வளமுள்ள அரண்மனையை மகிழ்ச்சி இல்லாத மனத்துடன் பார்த்தபொழுது, கர்தம முனிவரால் அவள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால், அவரால் யாருடைய மனத்தையும் புரிந்து கொள்ள இயலும். எனவே அவர் தனியாக அவர் மனைவியை அழைத்துப் பின்வருமாறு கூறினார்.

பதம் 3.23.23
நிமஜ்ஜ்யாஸ்மின் ஹ்ரதே பீரு விமானமிதமாருஹ
இதம் சுக்ல – க்ருதம் தீர்த்தம் ஆசிஷாம் யாபகம் ந்ருணாம்

நிமஜ்ஜய-குளித்த பிறகு; அஸ்மின்-இதில்; ஹ்ரதே-ஏரியில்; பீரு-ஓ அச்சம் நிறைந்தவளே; விமானம்-வானூர்தி; இதம்-இந்த; ஆருஹ-உயர்ந்து; இதம்—இந்த; சுக்லக்ருதம்—பகவான் விஷ்ணுவால் படைக்கப்பட்ட; தீர்த்தம்-புனித ஏரி; ஆசிஷாம்-ஆசைகள்; யாபகம்—அளித்தல்; ந்ருணாம் -மனித உயிர்களின்.

என் அன்பான தேவஹூதியே, நீ மிகவும் அச்சப்படுபவளாகக் காணப்படுகிறாய். முதலில் மனித உயிருக்கு எல்லா ஆசைகளையும் கொடுக்கும் பகவான் விஷ்ணுவால் படைக்கப்பட்ட பிந்து ஸரோவர ஏரியில் குளித்து பின்னர் இந்த விமானத்தில் ஏறுவாயாக.

பதம் 3.23.24
ஸா தத்பர்து: ஸமாதாய வச: குவலயேக்ஷணா
ஸரஜம் பிப்ரதீ வாஸோ வேணீ- பூதாம்ஸ்ச மூர்த்தஜான்

ஸா—அவள்; தத்-பின்னர்; பர்து:-அவள் கணவரின்; ஸமாதாய- ஒப்புக் கொண்டு; வச:-சொற்கள்; குவலயேக்ஷணா—தாமரை போன்ற கண்கள் உடைய; ஸரஜம்-அழுக்கு; பிப்ரதீ-அணிந்து; வாஸ:-உடை; வேணீ பூதான்—சடையாகிவிட்ட; ச-மற்றும்; மூர்த்த ஜான்-முடி.

தாமரை போன்ற கண்களை உடைய தேவஹூதி தன் கணவரின் கட்டளையை ஏற்றுக் கொண்டாள். அவளின் அழுக்கான உடை, தலையில் சடையாகிவிட்ட முடி ஆகியவற்றினால் அவள் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கவில்லை.

பதம் 3.23.25
அங்கம் ச மலபங்கேன ஸஞ்சந்தம் சபலஸ்தனம்
ஆவிவேச ஸரஸ்வத்யா: ஸர: சிவ-ஜலாசயம்

அங்கம்—உடல்; ச-மற்றும்; மல பங்கேன—அழுக்குடன்; ஸஞ்சந்தம்-மூடி; சபல-வண்ணம் மங்கி; ஸ்தனம்-மார்புகள்; ஆவி வேச-அவள் நுழைந்தாள்; ஸரஸ்வத்யா:-ஸரஸ்வதி நதியின்; ஸர:-ஏரி; சிவ-புனிதமான; ஜல-தண்ணீர்; ஆசயம்—கொண்டிருத்தல்.

தூசியின் அளவு தடிமனாகப் போய் அவள் உடல் அழுக்கினால் மூடப்பட்டிருந்தது. அவள் மார்பகங்கள் நிறம் மங்கியிருந்தன. இந்நிலையில், அவள் ஸரஸ்வதீ நதியின் புனித நீரால் நிறைந்த ஏரியில் பாய்ந்தாள்.

பதம் 3.23.26
ஸாந்த:ஸரஸி வேச்ம-ஸ்தா: சதானி தச கந்யகா:
ஸர்வா: கிசோர-வயஸோ ததர்சோத்- பலகந்தய:

ஸா-அவள்; அந்த:-உள்ளே; ஸரஸி-ஏரியில்; வேச்ம ஸ்தா:- வீட்டில் அமைக்கப்பட்ட; சதானி தச—ஆயிரம்; கந்யகா:-பெண்கள்; ஸர்வா:-எல்லா; கிசோர வயஸோ-இளமையின் தொடக்கத்தில்; ததர்ச—அவள் பார்த்தாள்; உத்பல-தாமரைகள் போல்; கந்தய:-மணம்.

ஏரியின் உள்ளே அவள் தாமரைகள் போல் மணம் வீசும் இளமையின் தொடக்கத்தில் உள்ள ஆயிரம் பெண்களைப் பார்த்தாள்.

பதம் 3.23.27
தாம் த்ருஷ்ட்வா ஸஹஸோத்தாய ப்ரோசு: ப்ராஞ்ஜலய: ஸ்த்ரிய:
வயம் கர்ம-கரீஸ்துப்யம் சாதி ந: கரவாம கிம்

தாம்-அவளை; த்ருஷ்ட்வா-பார்த்ததும்; ஸஹஸா-திடீரென்று; உத்தாய-உயர்ந்து; ப்ரோசு:-அவர்கள் கூறினர்; ப்ராஞ்ஜலய:- கைகளைப் கூப்பிக் கொண்டு; ஸ்த்ரிய:-அழகிய பெண்கள்; வயம்-நாங்கள்; கர்ம கரீ:-பணிப்பெண்கள்; துப்யம்- உங்களுக்காக; சாதி-தயவுசெய்து கூறுங்கள்; ந-எங்களுக்கு; கரவாம-நாங்கள் செய்ய முடிந்தவை; கிம்- என்ன.

அவளைப் பார்த்ததும், அந்த அழகிய பெண்கள் திடீரென்று எழுந்து, கைகளைக் குவித்துக் கொண்டு கூறினர், “நாங்கள் உங்கள் பணிப்பெண்கள். உங்களுக்காக நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறுங்கள். “

பதம் 3.23.28
ஸ்நானேன தாம் மஹார்ஹேண ஸ்நாபயித்வா மனஸ்விநீம்
லே நிர்மலே நூத்னே ததுரஸ்யைச மானதா:

ஸ்நானேன-குளிக்கும் தைலங்களுடன்; தாம்-அவளை; மஹார்ஹேண-மிகவும் விலையுயர்ந்த; ஸ்நாபயித்வா-குளித்த பிறகு; மனஸ்விநீம்-நல்லொழுக்கமுடைய மனைவி; லே-நல்ல ஆடையில்; நிர்மலே-குற்றமில்லாத; நூத்னே-புதிய; தது:-அவர்கள் கொடுத்தனர்; அஸ்யை-அவளிடம்; ச-மற்றும்; மானதா:-மதிப்பு மிக்க பெண்கள்.

தேவஹூதியிடம் மிகவும் மரியாதையுள்ள பெண்கள், விலையுயர்ந்த தைலங்கள் மருந்து நெய்யால் அவள் குளித்த பிறகு, அவள் உடலைப் போர்த்த நல்ல புதிய குற்றமில்லாத ஆடையை அவள் முன்பு கொண்டு வந்தனர்.

பதம் 3.23.29
பூஷணானி பரார்த்யானி வரீயாம்ஸி த்யுயமந்தி ச
அன்னம் ஸர்வ-குணோபேதம் பானம் சைவாம்ருதாஸவம்

பூஷணானி-நகைகள்; பர-அர்த்யானி-மிகவும் விலை உயர்ந்த; வரீயாம்ஸி-மிகச் சிறந்த; த்யுமந்தி-ஒளிரும்; ச-மற்றும்; அன்னம்-உணவு; ஸர்வ குண-எல்லா நல்ல குணங்கள்; உபேதம்- நிறைந்த; பானம்-மதுபானம்; ச-மற்றும்; ஏவ-கூட; அம்ருத- இனிமை; ஆஸவம்-வெறியூட்டும்.

அவர்கள் பின்னர் பளிச்சென ஒளிரும் மிகவும் சிறந்த விலையுயர்ந்த நகைகளால் அவளை அலங்கரித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் எல்லா நல்ல குணங்கள், இனிமையான ஆஸவம் எனும் வெறியூட்டும் பானம் நிறைந்த உணவை அவளுக்கு அளித்தனர்.

பதம் 3.23.30
அதாதர்சே ஸ்வமாத்மானம் ஸ்ரக்விணம் விரஜாம்பரம்
விரஜம் க்ருத-ஸ்வஸ்த்யயனம் கந்யாபிர்பகு-மானிதம்

அத-பிறகு; ஆதர்சே—கண்ணாடியில்; ஸ்வம் ஆத்மானம்- அவளின் பிம்பம்; ஸ்ரக்விணம்-மாலையால் அலங்கரிக்கப்பட்டு; விரஜ- களங்கம் இல்லாத; அம்பரம்-உடுப்பு; விரஜம்-உடல் அழுக்கிலிருந்து நீங்கி; க்ருதஸ்வஸ்த்யயனம்— மங்கலக் குறிகளால் அலங்கரிக்கப்பட்டு; கந்யாபி:— பணிப்பெண்களால்; பகுமானிதம்— மரியாதையுடன் தொண்டு செய்யப்பட்டு.

பின்னர் ஒரு கண்ணாடியில் அவள் தன் பிம்பத்தைப் பார்த்தாள். அவள் உடல் எல்லா அசுத்தத்திலிருந்தும் நீங்கி சுத்தமாய் இருந்தது. அவள் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். களங்கம் இல்லாத ஆடைகள் அணிந்து, மங்கலக் குறியாகிய திலகம் அணிந்து, பணிப் பெண்களால் மிகவும் மரியாதையுடன் பணிவிடை செய்யப்பட்டாள்.

பதம் 3.23.31
ஸ்னாதம் க்ருத-சிர: ஸ்நானம் ஸர்வாபரண-பூஷிதம்
நிஷ்க-க்ரீவம் வலயினம் கூஜத்-காஞ்சனநூபுரம்

ஸ்னாதம்-குளித்து; க்ருதசிர:-தலையும் சேர்த்து; ஸ்நானம்- குளித்து; ஸர்வ—எல்லா இடத்திலும்; ஆபரண—நகைகளுடன்; பூஷிதம்—அணிந்து கொண்டு; நிஷ்க-பதக்கத்துடன் உள்ள தங்க அட்டிகை; க்ரீவம்—கழுத்தில்; வலயினம்-வளையல்களுடன்; கூஜத்-ஒளிவீசும்; காஞ்சன-தங்கத்தால் ஆன; நூபுரம்-கால் சலங்கைகள்.

அவள் உடல் முழுவதும், தலையுடன் சேர்த்து குளித்து இருந்தாள். எல்லா இடங்களிலும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவள் ஒரு சிறப்பான பதக்கத்துடன் கூடிய கழுத்து மாலை அணிந்திருந்தாள். அவள் மணிக்கட்டுகளில் வளையல்களும், அவள் கணுக்கால்களில் தங்கத்தாலான, ஒளிவீசும் கொலுசுகளும் அணிந்திருந்தாள்.

பதம் 3.23.32
ஸ்ரோண்யோரத்யஸ்தயா காஞ்சயா காஞ்சன்யா பகு-ரத்நயா
ஹாரேண ச மஹார்ஹேண ருசகேன ச பூஷிதம்

ஸ்ரோண்யோ:-இடையில்; ஆத்யஸ்தயா—அணிந்து; காஞ்சயா— ஒட்டியாணத்துடன்; காஞ்சன்யா-தங்கத்தால் ஆகிய; பகுரத் நயா—எண்ணற்ற நகைகளால் அலங்கரிக்கப்பட்ட; ஹாரேண- முத்தாபரணத்துடன்; ச-மற்றும்; மஹார்ஹேண-மதிப்பு மிக்க; ருசகேன-மங்கலப் பொருட்களுடன்; ச-மற்றும்; பூஷிதம்- அலங்கரிக்கப்பட்டு.

அவள் இடையில் தங்கத்தால் ஆன ஒட்டியானமும் மற்றும் எண்ணற்ற நகைகளும் அணிந்திருந்தாள். அவள் மேலும் விலைமதிப்பில்லாத முத்தாபரணமும் மற்றும் மங்கலப் பொருட்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தாள்.

பதம் 3.23.33
சுததா சுப்ருவா ஸ்லக்ஷ்ண ஸ்னிக்தாபாங்கேன சக்ஷீசா-
பத்ம-கோச-ஸ்ப்ருநா நீலைர் அலகைஸ்ச லஸந்-முகம்

சுததா- அழகிய பற்களுடன்; சுப்ருவா-அழகிய புருவங்களுடன்;
ஸ்லக்ஷ்ண—அழகான; ஸ்னிக்த-ஈரம் படிந்த; அபாங்கேன-கண்களின் ஓரங்களில்; சக்சூசா—கண்களுடன்; பத்மகோச-தாமரை மொட்டுகள்; ஸ்ப்ருதா-தோற்று; நீலை-நீலநிற; அலகை:-சுருள் கூந்தலுடன்; ச- மற்றும்; லஸத்—ஒளி வீசும்; முகம்- முகத் தோற்றம்.

அவள் முகம், அழகிய பற்களுடனும், அழகிய புருவங்களுடனும் ஒளி வீசியது. அவள் கண்கள், அழகிய ஈரம் படிந்த ஓரங்களால் வேறுபட்டு, அழகிய தாமரை மொட்டுகளைத் தோற்கடித்தன. அவள் முகம் கரிய சுருண்ட கூந்தலால் சூழப்பட்டிருந்தது.

பதம் 3.23.34
யதா ஸஸ்மார ர்ஷபம் ருஷீணாம் தயிதம் பதிம்
தத்ர சாஸ்தே ஸஹ ஸ்த்ரீபிர் யத்ராஸ்தேஸ ப்ரஜாபதி:

யதா—எப்பொழுது; ஸஸ்மார-அவள் நினைத்தாளோ; ரிஷபம்- முதன்மையான; நிஷீணாம்-ரிஷிகளில்; தயிதம்-அன்பான; பதிம்—கணவர்; தத்ர—அங்கு; ச-மற்றும்; ஆஸ்தே—அங்கு இருந்தாள்; ஸஹ—உடன்; ஸ்த்ரீபி:-பணிப் பெண்கள்; யத்ர-எங்கு; ஆஸ்தே—இருந்தாள்; ஸ:-அவர்; ப்ரஜாபதி:-ப்ரஜாபதி (கர்தமர்)

அவளின் சிறந்த கணவராகிய, முனிவர்களில் சிறந்தவரை, கர்தம முனிவரை, அவளுக்கு மிகவும் நெருங்கியவரை அவள் பணிப் பெண்களுடன் நினைத்த பொழுதே, உடனே அவர் இருக்குமிடத்தில் தோன்றினார்.

பதம் 3.23.35
பர்த்து: புரஸ்தாதாத்மானம் ஸ்த்ரீ-ஸஹஸ்ரவ்ருதம் ததா
நிஸாம்ய தத்-யோக-கதிம் ஸம்சயம் ப்ரத்யபத்யத

பர்த்து:—அவள் கணவரின்; புரஸ்தாத்-முன்னிலையில்; ஆத்மானம்-அவள்; ஸ்த்ரீ-ஸஹஸ்ர-ஆயிரம் பணிப்பெண்களால்; விருதம்-சூழப்பட்டு; ததா-பின்னர்; நிசாம்ய-பார்த்து; தத்—அவருடைய; யோக கதிம்-யோக ஆற்றல்; ஸம்சயம் ப்ரத்யபத்யத—அவள் திகைத்தாள்.

அவள் கணவரின் முன்னிலையில் ஆயிரம் பணிப் பெண்களால் அவள் சூழப்பட்டு இருந்த போது அவரின் யோக ஆற்றலை அவள் கண்டு பெரிதும் திகைத்தாள்.

பதங்கள் 3.23.36 – 3.23.37
ஸ தாம் க்ருத-மல-ஸ்நானாம் விப்ராஜந்தீம பூர்வவத்
ஆத்மனோ பிப்ரதீம் ரூபம் ஸம்-வீதருசிரஸ்தனீம்

வித்யாதரீ-ஸஹஸ்ரேண ஸேவ்யமானாம் சுவாஸஸம்
ஜாத-பாவோ விமானம் தத் ஆரோஹயதமித்ர-ஹன்

ஸ:-முனிவர்; தாம்-அவளை (தேவகீதி); க்ருத-மல-ஸ்நானாம்- சுத்தமாகக் குளித்து; விப்ராஜந்தீம்-ஒளிவீசி; அபூர்வ-வத்-ஈடு இணையற்ற; ஆத்மன:-அவளின்; பிப்ரதீம்-உடைமை; ரூபம்- அழகு; ஸம்வீத—கச்சை கட்டிய; ருசிர-அழகிய; ஸ்தனீம்— மார்புகளுடன்; வித்யாதரீ-கந்தர்வப் பெண்களின்; ஸஹஸ்ரேண-ஆயிரத்தால்; ஸேவ்யமானாம்-காத்திருந்து; சுவாஸஸம்-மிகச் சிறந்த ஆடைகள் அணிந்து; ஜாதபார—அன்பினால் தாக்கப்பட்டு; விமானம்-மாளிகை போன்ற வானூர்தி; தத்-அந்த; ஆரோஹயத்—அவளை மாளிகையில் இருத்தினார்; அமித்ரஹன்—ஓ பகைவரை அழிப்பவரே.

தேவஹூதி தன்னைச் சுத்தமாக்கிக் கொண்டு ஒளிவீசி முந்தைய மனைவி போலன்றி இருப்பதைப் பார்த்தார் முனிவர். அரசனின் பெண்ணாக, அவள் உண்மையான அழகினை மீண்டும் பெற்றாள். ஆயிரம் கந்தர்வப்பெண்கள் பணிவிடை செய்யக் காத்திருக்க, மிகச் சிறந்த ஆடை அணிந்து, கச்சையால் கட்டப்பட்ட மார்பகங்களுடன் அவள் பொலிந்தாள். ஓ பகைவரை அழிப்பவரே, அவருக்கு அவள் மீது அன்பு வளர்ந்தது. அவர் அவளை அந்த ஆகாய மாளிகையில் இருத்தினார்.

பதம் 3.23.38
தஸ்மிந்நலுப்தமஹிமா ப்ரியயானு ரக்தோ
வித்யாதரீ பிருபசீர்ண வபுர்விமானே
பப்ராஜ உத்கச-குமுத்கணவானபீச்ய
ஸ்தாராபிராவ்ருத இவோடுபதிர்னப:ஸ்த:

தஸ்மிந்-அதில்; அலுப்த-இழக்கவில்லை; மஹிமா-புகழ்; ப்ரியயா-அவர் அன்பான துணையுடன்; அனுரக்த-இணைத்து; வித்யாதரீபி:- கந்தர்வப் பெண்களால்; உப்சீர்ண-காத்து இருந்து; வபு:-அவரை; விமானே-வானூர்தியில்; பப்ராஜ-அவர் ஒளி வீசினார்; உத்கச-திறந்து; குமுத்கணவான்-குமுத மலர் வரிசைகளால் தொடரப்பட்ட சந்திரன்; அபீசய-மிகவும் அழகிய; தாராபி:-நட்சத்திரங்களால்; ஆவ்ருத:-சூழப்பட்டு; இவ-போல; உடுபதி:-சந்திரன் (நட்சத்திரங்களின் தலைவன்); நபப:ஸ்த:-வானத்தில்.

கந்தர்வப் பெண்களால் பணிவிடை செய்யப்பட்டு, தமது மனைவியுடன் அவர் இணைந்திருப்பதைப் போல் தோன்றினாலும், அவரது ஆட்சி முறையின் புகழை முனிவர் இழக்கவில்லை. அந்த வான மாளிகையில், கர்தம முனிவர் அவர் மனைவியுடன் ஒளிவீசித் திகழ்ந்தது எவ்வாறு இருந்தது என்றால், இரவில் குவளை மலர்களை மலரச் செய்யும் சந்திரன் வானில் நட்சத்திரங்களுக்கு இடையில் அழகாகப் பிரகாரிப்பதைப் போலிருந்தது.

பதம் 3.23.39
தேனாஷ்ட-லோகப- விஹார-குலாசலேந்த்ர
த்ரோணீஸ்வனங்க ஸக-மாருத- ஸௌபகாசு
ஸித்தைர்நுதோ த்யதுனிபாதசிவ-ஸ்வனாக
ரேமே சிரம் தனதவல்லனாதீ

தேன-அந்த வானூர்தியால்; அஷ்டலோகப—எட்டு மேலுலகக் கோள்களின் மேம்பட்டிருக்கும் தெய்வங்களின்; விஹார—இன்பம் தரும் இடங்கள்; குல அசல இந்த்ர-மலைகளின் அரசன் (மேரு); த்ரோணீசு-பள்ளத்தாக்குகளில்; அனங்க-உணர்ச்சியின்; ஸக—அன்பின்; மாருத-காற்றின்; ஸௌபகாக-அழகிய; ஸித்தை:-ஹித்தர்களால்; நுத:-போற்றப்பட்டு; த்யுதுனி—கங்கையின்; பாத—வீழ்ச்சியின்; சிவஸ்வனாசு—மங்கள இசையுடன் அதிர்ந்து; ரேமே-அவர் அனுபவித்தார்; சிரம்-நீண்ட காலத்திற்கு; தனதவத்—குபேரன் போல்; லலனா—அழகிய பெண்களால்; வரூதீ-சூழப்பட்டு.

அந்த வானூர்தி மாளிகையில் அவர் மேருமலையின் இன்பமான பள்ளத்தாக்குகளுக்குப் பயணம் செய்தார். அவை குளிர்ந்த மென்மையான, மணம் பொருந்திய காற்றால் மேலும் இனிமையைச் சொரிந்தன. அவை உணர்ச்சியைத் தூண்டின. இந்தப் பள்ளத்தாக்குகளில், செல்வங்களின் அதிபதியான குபேரன். அழகிய பெண்களால் சூழப்படும் ஸித்தர்களால் போற்றப்பட்டு, பொதுவாக இன்பம் அனுபவிப்பார். கர்தம முனிவரும் அழகிய பெண்களாலும், அவர் மனைவியாலும் சூழப்பட்டு, அங்கு சென்று பலப்பல ஆண்டுகள் அனுபவித்தார்.

பதம் 3.23.40
வைஸ்ரம்பகே சுரஸனே நந்தனே புஷ்பபத்ரகே
மானஸே சைத்ரரத்யேச ஸரேமே ராமயா ரத:

வைஸ்ரம்பகே—வைஸ்ரம்பக தோட்டத்தில்; சுரஸனே—சுரஸனவில்; நந்தனே-நந்தனத்தில்; புஷ்பபத்ரகே-புஷ்பபத்ரகவில்; மானஸே-மானஸஸரோவர ஏரியில்; சைத்ரரத்யே-சைத்ரரத்யேவில்; ச-மற்றும்; ஸ:-அவர்; ரேமே-அனுபவித்தார்; ராமயா—அவர் மனைவியால்; ரத:-திருப்தியடைந்தார்.

மனைவியால் திருப்தியடைந்து, அவர் அந்த வானுலக மாளிகையில், மேரு மலையில் மட்டும் அல்லாமல், வேறு பல தோட்டங்களான, வைஸ்ரம்பக, சுரஸன, நந்தன, புஷ்பபத்ரக மற்றும் சைத்ரரத்யவிலும், மற்றும் மானஸ ஸரோவர ஏரியிலும் அவர் அனுபவித்தார்.

பதம் 3.23.41
ப்ராஜிஷ்ணுனா விமானேன காம-கேன மஹீயஸா
வைமானிகானத்யசேத சரன்லோகான் யதானில:

ப்ராஜிஷ்ணுனா—ஒளி நிறைந்த; விமானேன-வானூர்தியுடன்; காம-கேன—அவர் விருப்பப்படி பறந்த; மஹீயஸா-மிகச் சிறந்த; வைமானிகான்-தேவர்கள் அவர்கள் விமானங்களில்; அத்யசேத-மிஞ்சியிருந்தார்; சரன்-பயணித்து; லோகான்-கோள்கள் வழியே; யதா-போல; அனில்–காற்று.

பல்வேறு கோள்களின் வழியாக, எல்லாத் திசையிலும் கட்டுக் கடங்காத காற்று வீசும்போது அவர் அந்த வழியில் பயணித்தார். சிறந்த, ஒளி வீசும் அவர் விருப்பப்படி பறக்கும் வானுலக மாளிகையில் காற்றைக் கிழித்துக் கொண்டு, அவர் தேவர்களையும் மிஞ்சிக் கொண்டு சென்றார்.

பதம் 3.23.42
கிம் துராபாதனம் தேஷாம் பும்ஸாம் உத்தாம – சேதஸாம்
யைராஸ்ரிதஸ்தீர்த்த-பதஸ் சரணோ வ்யஸனாத்யய:

கிம்-என்ன; துராபாதனம்—அடைவதற்குக் கடினமானது; தேஷாம்—அவர்களுக்கு; பும்ஸாம்-மனிதர்கள்; உத்தாம சேதஸாம்-உறுதி செய்யப்பட்டவர்கள்; யை:-யாரால்; ஆஸ்ரித:-பாதுகாப்பு எடுத்து; தீர்த்த பத:-பரமபுருஷ பகவானின்; சரண:- பாதங்கள்; வ்யஸனாத் யய:-அபாயங்களை வென்றடக்கும்.

பரம புருஷ பகவானின் தாமரைத் திருவடிகளின் பாதுகாப்பைப் பெற்ற உறுதியான மனிதர்களுக்கு எந்தப் பணி கடினமானது ஆகும்? அவருடைய திருவடிகள் கங்கை போன்ற புனிதமான நதிகளுக்கு ஆதாரமாகும். இம்மைக்குரிய வாழ்வின் அபாயங்களுக்கு அவை முடிவைத் தருவன.

பதம் 3.23.43
ப்ரேக்ஷயித்வா புவோ கோலம் பந்த்யை யாவான் ஸ்வஸம்ஸ்தயா
பஹ்வாஸ்சர்யம் மஹா-யோகீ ஸ்வாஸ்ரமாய நியவர்தத

ப்ரேக்ஷயித்வா—காட்டிய பிறகு; புவ:-அண்டத்தின்; கோலம்- உலக உருண்டை; பந்த்யை—அவர் மனைவிக்கு; யாவான்-மிகுதியாக; ஸ்வளம்ஸ்தயா-ஏற்பாடுகளுடன்; பகு ஆஸ்சர்யம்-பல அற்புதங்கள் நிறைந்த; மஹா-யோகீ-சிறந்த யோகீ (கர்தமர்); ஸ்வ ஆஸ்ரமாய—அவர் சொந்த துறவு மாடத்திற்கு; ந்யவர்த்தத—திரும்பினார்.

அவருடைய மனைவிக்கு அண்டத்தின் உலக உருண்டை, அதன் வேறுபட்ட அமைப்புகள், பல அற்புதங்கள் நிறைந்திருப்பதைக் காட்டிய பிறகு, சிறந்த யோகியாகிய கர்தம முனிவர் தன் துறவு மாடத்திற்குத் திரும்பினார்.

பதம் 3.23.44
விபஜ்ய நவதாத்மானம் மானவீம் கரதோத்சுகாம்
ராமாம் நிரமயன் ரேமே வர்ஷ-பூகாந் முஹுர்தவத்

விபஜ்ய-பிரிக்கப்பட்டு; நவதா-ஒன்பதாக; ஆத்மானாம்—அவருக்கு; மானவீம்-மனுவின் பெண் (தேவஹூதி); சுரத—புணர்வு வாழ்வுக்கு; உத்சுகாம்-ஆவலுள்ளவர்; ராமாம்—அவர் மனைவிக்கு; நிரமயன்-இன்பம் கொடுத்து; ரேமே-அவர் அனுபவித்தார்; வர்ஷ—பூகாந்-பல ஆண்டுகளுக்கு; முகூர்தவத்- ஒரு கணம் போல.

அவருடைய துறவு மாடத்திற்கு மீண்டும் வந்த பிறகு, உடலுறவில் விருப்பமுடைய, மனுவின் பெண்ணாகிய தேவகீதிக்கு இன்பம் தருவதற்கு, தன்னை ஒன்பது தனியாளாகப் பிரித்துக் கொண்டார். இந்த வழியில் ஒரு கணம் போல ஒடிய, பலப்பல ஆண்டுகளுக்கு அவளுடன் இன்பம் அனுபவித்தார்.

பதம் 3.23.45
தஸ்மிந் விமான உத்க்ருஷ்டாம் சய்யாம் ரதி-கரீம் ஸ்ரிதா
ந சாபுத்யத தம் காலம் பத்யாபீச்யேன ஸங்கதா

தஸ்மிந்-அதில்; விமானே-விமானம்; உத்க்ருஷ்டம்-மிகச் சிறந்தது; சய்யாம்-படுக்கை; ரதிகரீம்—கலவி ஆசைகளை அதிகரித்தல்; ஸ்ரிதா—மேல் அமைந்த; ந-இல்லை; ச-மற்றும்; அபூத்யத—அவள் கவனித்தாள்; தம்—அந்த; காலம்—நேரம்; பத்யா—அவள் கணவருடன்; அபீச்யேன-மிகவும் அழகான; ஸங்கதா—துணையில்.

அந்த வான மாளிகையில், தேவகீதி தனது அழகான கணவரின் துணையில், கலவி ஆசைகளை அதிகரிக்கும் மிகச்சிறந்த படுக்கையில் அமர்ந்து, எவ்வளவு நேரம் போனது என்பதை உணர முடியாமல் மகிழ்ச்சியை அனுபவித்தாள்.

பதம் 3.23.46
ஏவம் யோகானுபாவேன தம்-பத்யோ ரமமாணயோ:
சதம் வ்யதீயு:சரத: காம- லாலஸயோர்மநாக்

ஏவம்—இவ்வாறு; யோக அனுபாவேன-யோக ஆற்றலால்; தம்பத்யோ:- தம்பதிகள்; ரமமாணயோ:-அவர்கள் அனுபவிக்கும் பொழுது; சதம்—நூறு; வ்யதீயு:-கழிந்தன; சரத:-இலையுதிர் காலங்கள்; காம—கலவியின்பம்; லாலஸயோ:-ஆர்வத்துடன் ஏங்குபவர்கள்; மனாக்-குறைந்த காலமாக.

தம்பதிகள் இருவரும் கலவி இன்பத்திற்கு ஆவலுடன் ஏங்கி, அறிவார்ந்த ஆற்றலின் குணத்தால் அவர்கள் அனுபவித்துக் கொண்டு இருந்த பொழுது நூறு இலையுதிர் காலங்கள் ஒரு சிறிது காலம் போல் ஓடின.

பதம் 3.23.47
தஸ்யாமாதத்த ரேதஸ்தாம் பாவயந்நாத்மனாத்மவித்
நோதா விதாய ரூபம் ஸ்வம் ஸர்வ-ஸங்கல்ப-வித்விபு:

தஸ்யாம்-அவளிடம்; ஆதத்த-சேர்த்த பிறகு; ரேத:-விந்து; தாம்- அவளை; பாவயந்-மதித்து; ஆத்மனா—அவரில் பாதியாக; ஆத்மவித்-ஆத்ம மெய்ப்பொருளை அறித்தவர்; நோதா-ஒன்பதாக; விதாய-பிரிக்கப்பட்டு; ரூபம்-உடல்; ஸ்வம்—அவருடைய; ஸர்வ ஸங்கல்பவித்—எல்லா ஆசைகளையும் அறிந்தவர்; விபு:-ஆற்றல் மிகுந்த கர்தமர்.

ஆற்றல் மிகுந்த கர்தமர் எல்லாருடைய மனத்தையும் அறிந்தவர், ஒருவர் எதை விரும்பினாலும் அதை அளிக்கக் கூடியவர். மெய்ப்பொருளான ஆன்மாவை உணர்ந்து, அவளைத் தன் உடலின் சரிபாதியாக மதித்தவர், தன்னை ஒன்பது வடிவங்களாகப் பிரித்துக் கொண்டு, ஒன்பது முறை ஏற்பட்ட விந்துக் கசிவால் அவளைக் கருவுறச் செய்தார்.

பதம் 3.23.48
அத: ஸா சுஷீவே ஸத்யோ தேவஹூதி: ஸ்த்ரிய: ப்ரஜா:
ஸர்வாஸ்தாஸ்சாரு -ஸர்வாங்க்யோ லோஹிதோத்பலகந்தய:

அத:-பின்னர்; ஸா-அவள்; சுஷீவே-பெற்றெடுத்து; ஸத்யோ- அதே நாளில்; தேவஹூதி:-தேவகீதி; ஸ்த்ரிய:-பெண்கள்; ப்ரஜா:-சந்ததி; ஸர்வா:-எல்லா; தா:-அவர்கள்; சாரு ஸர்வ அங்கய:- ஒவ்வொரு உறுப்பிலும் அழகாக; லோஹித-சிவந்த; உத்பல-தாமரை போல; கந்தய:-மணம் (வாசனை)

அதன் பின்னர் உடனே, அதே நாளில் தேவகீதி ஒன்பது பெண் குழந்தைகளைப் பெற்றாள். எல்லாமே ஒவ்வொரு உறுப்பிலும் அழகாக, சிவந்த தாமரை மலரின் மணத்தோடு விளங்கின.

பதம் 3.23.49
பதிம்ஸா ப்ரவ்ரஜிஷ்யந்தம் ததாலக்ஷ்யோசதீ பஹி:
ஸ்மயமானா விக்லவேன ஹ்ருதயேன விதூயதா

பதிம்—அவள் கணவர்; ஸார்—அவள்; ப்ரவ்ரஜிஷ்யந்தம்-வீட்டை விட்டுச் செல்பவர்; ததா-பின்னர்; ஆலக்ஷ்ய—பார்த்த பிறகு; உசதீ—அழகிய; பஹி:-வெளிப்படையாக; ஸ்மயமானா:—புன்னகைத்து; விக்லவேன-அலைக்கழிக்கப்பட்டு; ஹ்ருதயேன—மனத்துடன்; விதூ யதா-துன்பத்திற்கு ஆளாகி.

அவள் கணவர் வீட்டை விட்டுச் செல்வதை அவள் பார்த்து வெளிப்படையாகப் புன்னகைத்தாலும் மனம் அலைக்கழிக்கப்பட்டு துன்பத்திற்கு ஆளானாள்.

பதம் 3.23.50
லிகந்த்யதோ-முகீ பூமிம் பதா நக-மணி-ஸ்ரியா
உவாச லலிதாம் வாசம் நிருத்யாஸ்ரு-கலாம் சநை:

லிகந்தீ-கீறினாள்; அத:முகீ-அவள் தலை குனிந்து இருந்தாள்; பூமிம்-பூமியை; பதா—அவள் பாதத்துடன்; நக-நகங்கள்; மணி-மணி போன்ற; ஸ்ரியா-ஒளிப் பிழம்புடன்; உவாச-அவள் பேசினாள்; லிலிதாம்-அழகான; வாசம்-மொழி; நிருத்ய-அடக்கிக் கொண்டு; அஸ்ரு கலாம்-கண்ணீர்; சநை:-மெதுவாக.

அவள் நின்று, அவளுடைய ஒளிவீசும் மணி போன்ற நகங்கள் கொண்ட பாதத்தால் தரையைக் கீறினாள். அவள் தலை குனிந்து, கண்ணீரை அடக்கிக் கொண்டு, அழகான மொழியில் மெதுவாகப் பேசினாள்.

பதம் 3.23.51
தேவஹுதிருவாச
ஸர்வம் தத்பகவாந்மஹ்யம் உபோவாஹ ப்ரதிஸ்ருதம்
அதாபி மே ப்ரபந்நாயா அபயம் தாது மர்ஹஸி

தேவஹூதி:- தேவஹூதி; உவாச-கூறினாள்; ஸர்வம் எல்லா; தத் -அந்த; பகவான்-உங்கள் மேலான ஆட்சி; மஹ்யம்-எனக்காக; உபோவாஹ-நிறைவேறியது; ப்ரதிஸ்ருதம்-உறுதிமொழி தரப்பட்ட; அத அபி-ஆயினும்; மே-என்னிடம்; ப்ரபந்நாயை-சரணடைந்தவரிடம்; அபயம்-பயமின்மை; தாதும்—கொடுக்க; அர்ஹஸி-நீங்கள் தகுதி பெற்றவர்.

ஸ்ரீ தேவஹூதி கூறினாள். என் பிரபுவே, நீங்கள் எனக்குக் கொடுத்த எல்லா உறுதிமொழிகளையும் நீங்கள் நிறைவேற்றினீர்கள். ஆயினும் நான் உங்களிடம் சரண் அடைந்துள்ளதால், நீங்கள் எனக்கு அச்சம் இன்மையையும் தர வேண்டும்.

பதம் 3.23.52
ப்ரம்மந்துஹித்ருபிஸ்துப்யம் விமிருக்யா: பதய: ஸமா:
காஸ்சித்ஸ்யாந்மே விசோகாய த்வயிப்ரவ்ரஜிதே வனம்

ப்ரம்மன்-என் அன்பான பிராம்மணரே; துஹிக்ருபி:-பெண்களாலேயே; துப்யம்-உங்களுக்கு; விம்ருக்யா-கண்டுபிடிக்கப்பட்டு; பதய:-கணவர்கள்; ஸமா:-தகுந்த; கஸ்சித்-யாரேனும்; ஸ்யாத்-இருக்க வேண்டும்; மே-என்; விசோகாய ஆறுதலுக்கு; த்வயி—நீங்கள்; ப்ரவ்ரஜிதே-செல்லும் பொழுது; வனம்—வனத்திற்கு.

என் அன்புப் பிராம்மணரே; உங்கள் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களுக்குத் தகுந்த கணவரைக் கண்டு பிடித்து, அவர்களுக்கான வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் நீங்கள் துறவியாகப் பிரிந்து சென்ற பின் யார் எனக்கு ஆறுதல் அளிப்பார்கள்?

பதம் 3.23.53
ஏதாவதாலம் காலேன வ்யதிக்ராந்தேன மே ப்ரபோ
இந்த்ரியார்த-ப்ரஸங்கேன பரித்யக்த -பராத்மன:

ஏதாவத-அதிகமாக; அல-ஒன்றுமில்லாததற்கு; காலேன-நேரம்; வ்யதிக்ராந்தேன-கழிந்தது; மே-என்னுடைய; ப்ரபோ-ஓ என் பிரவுவே; இந்த்ரிய அர்த்த-புலன் திருப்தி; ப்ரஸங்கேன திருப்திப்படுத்துவதில்; பரித்யக்த-புறக்கணித்து; பர ஆத்மன:-பகவான் பற்றிய அறிவு.

இதுவரை நாம் புலன் நுகர்ச்சியிலேயே அதிக நேரத்தை வீணாக்கி விட்டோம் பகவான் பற்றிய அறிவை வளர்ப்பதைப் புறக்கணித்துவிட்டோம்.

பதம் 3.23.54
இந்த்ரியார்த்தேஷு ஸஜ்ஜந்த்யா ப்ரஸங்கஸ்த்வயி மேக்ருத:
அஜானந்த்யா பரம் பாவம் ததாப்யஸ்த்வபயாய மே

இந்த்ரிய அர்ததேக-புலன் திருப்திக்கு; ஸஜ்ஜந்த்யா-பிடிப்புள்ள; ப்ரஸங்க:-உறவு, த்வயி-உங்களுக்காக மே-என்னால்; க்ருத- செய்யப்பட்டது; அஜானந்த்யா-தெரியாமல்; பரம் பாவம்- உங்கள் மெய்யறிவு பெற்ற நிலை; ததா அபி-ஒன்றும் இல்லாமல்; அஸ்து—இருக்கட்டும்; அபயாய-பயமின்மைக்காக; மே-என்னுடைய.

உங்கள் மெய்யறிவார்ந்த தன்மையை அறியாமல், புலன்களின் பொருட்களின் மீது பற்றுக் கொண்ட நிலையில், நான் உங்களை விரும்பினேன். எப்படியாயினும், உங்கள் மீது நான் வளர்த்திருக்கும் உறவு, எல்லா பயத்திலிருந்தும் என்னை விடுவிக்கட்டும்.

பதம் 3.23.55
ஸங்கோ ய: ஸ்ம்ஸ்ருதேர் ஹேதுர் அசத்சு விஹிதோ தியா
ஸஏவ ஸாதுஷுக்ருதோ நிஸங்கத்வாய கல்பதே

ஸங்க:-தொடர்பு; ய-எந்த; ஸம்ஸ்ருதே-பிறப்பு, இறப்புகளின் சுழற்சி; ஹேது-காரணம்; அஸத்சு-புலன் திருப்தியில் ஈடுபட்டிருப்பவர்களுடன்; விஹித-முடித்து; அதியா-அறியாமையின் மூலம்; ஸ:-அதே பொருள்; ஏவ-நிச்சயமாக; ஸாதுஷு-புனிதமானவருடன்; க்ருத:-நிகழ்ந்தது; நி:ஸங்கத்வாய-விடுதலைக்கு; கல்பதே-அழைத்துச் செல்லும்.

புலன் நுகர்ச்சிக்காகத் தொடர்பு கொள்ளுதல் நிச்சயமாக நம்மைப் பிடித்து வைக்கும் வழியாகும். ஆனால் அதே மாதிரியான தொடர்பு, புனிதமானவருடன் நிகழ்ந்தால், அது அறிவில்லாமல் நிகழ்த்தாலும் கூட, வீடுபேற்றின் வழிக்கு அது அழைத்துச் செல்லும்.

பதம் 3.23.56
நேஹ யத்கர்ம தர்மாய ந விராகாய கல்பதே
ந தீர்த்த-பத-ஸேவாயை ஜீவந்நபி ம்ருதோ ஹிஸ:

ந-இல்லை; இஹ-இங்கு; யத்-எந்த; கர்தம-வேலை; தர்மாய- மதவாழ்வின் முழுமைக்காக; ந-இல்லை; விராகாய-கட்டவிழ்த்து விடுவதற்காக; கல்பதே-வழிநடத்தும்; ந-இல்லை; தீர்த்த பத- பகவானின் தாமரைத் திருவடிகளின்; ஸேவாயை-பக்தித் தொண்டிற்கு; ஜீவ-வாழ்தல்; அபி-இருந்த போதிலும்; ம்ருத-மரணம்; ஹி-உண்மையில்; ஸ—அவர்.

யாருடைய பணி மதவாழ்வுக்கு அவனை உயர்த்தவில்லையோ, யாருடைய மதச் சடங்குகள் அவனைத் துறவுக்கு உயர்த்தவில்லையோ, துறவில் உள்ளவனை எது பரமபுருஷ பகவானின் பக்தித் தொண்டுக்கு அழைத்துச் செல்லவில்லையோ, அவன் சுவாசித்துக் கொண்டிருந்தாலும் இறந்தவனாகக் கருதப்பட வேண்டும்.

பதம் 3.23.57
ஸாஹம் பகவதோ நூனம் வஞ்சிதா மாயயா த்ருடம்
யத் த்வம் விமுக்திதம் ப்ராப்ய நமுமுக்ஷேய பந்தநாத்

ஸா-அந்த மனிதரே; அஹம்-நான்; பகவத:-பகவானின்; நூனம் -நிச்சயமாக; வஞ்சிதா-ஏமாற்றப்பட்டு; மாயயா-மாயையின் சக்தியால்; த்ருடம்-உறுதியாக; யத்-ஏனென்றால்; தவம்—நீங்கள்; விமுக்திதம்-விடுதலைதருபவர்; ப்ராப்ய—அடைந்து; நமுமுக்ஷேய-நான் விடுதலையை விரும்பவில்லை: பந்தநாத்— பருவுலகப் பிடிப்பிலிருந்து.

என் தலைவரே, கடப்பதற்கு அரிய பரமபுருஷ பகவானின் மாயைச் சக்தியால் நான் உறுதியாக ஏமாற்றப்பட்டேன். ஏனென்றால், பருவுலகப் பிடிப்பிலிருந்து விடுதலை தரும் உங்களுடன் தொடர்பு கொண்டும் கூட, நான் விடுதலையை விரும்பவில்லை.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “தேவஹூதியின் புலம்பல்” எனும் தலைப்பைக் கொண்ட இருபத்து மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare