அத்தியாயம் – 22
கர்தம முனிவருக்கும் தேவ கீதிக்கும் திருமணம்
பதம் 3.22.1
மைத்ரேய உவாச
ஏவமாவிஷ்க்குதாசேஷ குண-கர்மோதயோ முனிம்
ஸவ்ரீட இவ தம் ஸம்ராட் உபாரத முவாச ஹ

மைத்ரேய-சிறந்த முனிவர் மைத்ரேயர்; உவாச-கூறினார்; ஏவம்-இவ்வாறு; ஆவிஷ்க்ருத—வர்ணிக்கப்பட்டு; ஆசேஷ-எல்லா; குண-குணங்களின்; கர்ம-செயல்களின்; உதய-சிறப்பு: முனிம்-சிறந்த முனிவர்; ஸவ்ரீட-தன்னடக்கமாக உணர்தல்; இவ-போல; தம்-அவரை (கர்தமர்); ஸம்ராட்-மன்னர் மனு; உபாரதம்-மௌனம்; உவாசஹ—அழைத்தார்.

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: அரசனின் பலவித குணங்களின் செயல்களின் சிறப்பை வர்ணித்த பிறகு, முனிவர் அமைதியானார். மன்னர் தன் அடக்கத்துடன் பின்வருமாறு அவரை அழைத்தார்.

பதம் 3.22.2
மனுருவாச
ப்ரம்மாஸ்ருஜத்ஸ்வ- முகதோ யுஷ்மானாத்மரீப்ஸயா
சந்தோமயஸ்த போ -வித்யா- யோ-கயுக்தானலம்படான்

மனு-மனு; உவாச-கூறினார்; பிரம்மா-பகவான் பிரம்மா; அஸ்ருஜத்-படைத்தார்; ஸ்வமுகதோ—அவர் முகத்திலிருந்து; யுஷ்மான்-உங்களை (பிராம்மணர்கள்); ஆத்ம பரிப்ஸயா-விரிவடைவதன் மூலம் அவரைப் பாதுகாக்க; சந்த மய-வேதங்களின் வடிவம்; தப வித்யா யோக யுத்தான்-துறவறம், அறிவு, அறிவுநிலை கடந்த ஆற்றலின் முழுமை; அலம்படான்-புலன் திருப்திக்கு வெறுப்பு.

மனு பதிலுரைத்தார்: வேதத்தின் உருவமாகிய பகவான் பிரம்மா, வேத அறிவில் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள, தவம், அறிவு, அறிவு கடந்த ஆற்றல், புலன் நுகர்ச்சியில் வெறுப்பு இவை நிறைந்த பிராம்மணர்களாகிய உங்களைத் தன் முகத்திலிருந்து படைத்தார்.

பதம் 3.22.3
தத் – த்ராணாயஸ்ருஜச் மான் தோ: ஸஹஸ்ராத்ஸஹஸ்ரபாத்
ஹ்ருதயம் தஸ்ய ஹி ப்ரம்ம க்ஷத்ரமங்கம் ப்ரசக்ஷதே

தத் த்ராணாய-பிராம்மணர்களின் பாதுகாப்பிற்காக; அஸ்ருஜத்-படைத்தார்; ச- மற்றும்; அஸ்மாந்-எங்களை (க்ஷத்தியர்கள்); தோ: ஸஹஸ்ராத்—அவர் ஆயிரம் கரங்களிலிருந்து; ஸஹஸ்ரபாத்—ஆயிரம் கால்களையுடைய பரமன் (அண்டத்தின் வடிவம்); ஹ்ருதயம்-மனம்; தஸ்ய—அவருடைய; ஹி-ஆக; பிரம்ம-பிராம்மணர்கள்; க்ஷத்ரம்—க்ஷத்ரியர்கள்; அங்கம்-கரங்கள்; ப்ரசக்ஷதே- சொல்லப்படுகின்றனர்.

பிராம்மணர்களின் பாதுகாப்பிற்காக, ஆயிரம் பாதங்களை உடைய பரமன், அவருடைய ஆயிரம் கரங்களிலிருந்து க்ஷத்ரியர்களாகிய எங்களைப் படைத்தார். எனவே, பிராம்மணர்கள் அவருடைய மனமாகவும், க்ஷத்ரியர்கள் அவருடைய கரங்களாகவும் சொல்லப்படுகின்றனர்.

பதம் 3.22.4
அதோ ஹியந்யோந்யமாத்மானம் ப்ரம்ம க்ஷத்ரம் ச ரக்ஷத:
ரக்ஷதி ஸ்மாவ்யயோ தேவ: ஸ ய: ஸத-ஸதாத் மக:

அத:-இதிலிருந்து; ஹி-நிச்சயமாக; அந்யோந்யம்-ஒருவருக்கு ஒருவர்; ஆத்மானாம்-தங்களை; பிரம்ம-பிராம்மணர்கள்; க்ஷத்ரம்-க்ஷத்ரியர்கள்; ச-மற்றும்; ரக்ஷத:-பாதுகாத்து; ரக்ஷதிஸ்ம-பாதுகாக்கிறார்; அவ்யயா—மாற்ற முடியாத; தேவ-பகவான்; ஸ-அவர்; ய:-யார்; ஸத் அஸத்-ஆத்மக:-காரணம், விளைவின் வடிவம்.

அதனாலே பிராம்மணர்களும் க்ஷத்ரியர்களும் தங்களையும் பாதுகாத்து, ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்கிறார்கள். காரணம் மற்றும் விளைவு இரண்டுமாக இருப்பினும், மாற்ற முடியாதவராக இருக்கும் பகவானே, ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் அவர்களைப் பாதுகாக்கிறார்.

பதம் 3.22.5
தவ ஸந்தர்சனாதேவச்சிந்தா மே ஸர்வ-ஸம்சயா:
யதஸ்வயம் பகவான் ப்ரீத்யா தர்மமாஹ ரிரக்ஷிஷோ:

தவ—உங்களை; ஸந்தர்சநாத்-பார்ப்பதால்; ஏவ-மட்டும்; சிந்தா—தெளிவு பெற்றேன்; மே-என்னுடைய; ஸர்வஸம்சயா:-எல்லாச் சந்தேகங்கள்; யத்-அவ்வாறே; ஸ்வயம்-தானாகவே: பகவான்-உங்கள் பெருமகள் ஆட்சியுரிமை; ப்ரீத்யா-அன்பான, தர்மம்-கடமை; ஆஹ-விளக்கப்பட்டு; ரிரக்ஷிஷோ:-அரசன் தன் மக்களைக் காப்பாற்ற விரும்பி.

இப்பொழுது உங்களைச் சந்தித்ததனால் என்னுடைய எல்லாச் சந்தேகங்களிலிருந்தும் தெளிவு பெற்றேன். ஏனென்றால், தன் மக்களைக் காப்பாற்ற விரும்பும் அரசனுடைய கடமையை பகவானாகிய தாங்கள் கருணையுடனும் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள்.

பதம் 3.22.6
திஷ்ட்யா மே பகவான் த்ருஷ்டோதுர்தர்ஷோயோ க்ருதாத்மனாம்
திஷ்ட்யா பாத-ரஜ: ஸ்பருஷ்டம் சீஷ்ர்ணா மே பவத: சிவம்

திஷ்ட்யா-நல்ல அதிர்ஷ்டத்தால்; மே-என்னுடைய; பகவான்-எல்லாம் வல்ல; த்ருஷ்ட-பார்க்கப்பட்டு; துர்தர்ஷ-எளிதாகப் பார்க்க இயலாத; ய-யார்; அக்ருதாத்மனாம்-தங்கள் மனம், புலன்களை அடக்காதவர்களின்; திஷ்ட்யா- என் நல்ல அதிர்ஷ்டத்தால்; பாத ரஜ:-பாதத்தில் தூசி; ஸ்ப்ருஷ்டம்-தொடப்பட்டு; சீஷ்ர்ணா-தலையால்; மே-எனக்கு; பவத:-உங்களுடைய; சிவம்-மங்கலத்தைத் தரும்.

உங்களைப் பார்க்க முடிந்தது என் நல்ல வாய்ப்பாகும். ஏனெனில் தங்கள் மனத்தையும், புலன்களையும் அடக்காத மனிதர்களால் இறைவன் பார்க்க இயலாதவர். உங்களின் ஆசிர்வதிக்கப்பட்ட பாதங்களின் தூசி என் தலையில் படுவதற்கு நான் மேலும் அதிர்ஷ்டம் செய்துள்ளேன்.

பதம் 3.22.7
திஷ்ட்யா த்வயாறு சிஷ்டோ ஹம் க்ருதஸ்சானுக்ரஹோ மஹான் அபாவ்ருதை: கர்ணரந்ரைர் ஜூஷ்டா திஷ்ட்யோசதீர் கிர:

திஷ்ட்யா-அதிர்ஷ்டவசாக; த்வயா—உங்களால்; அனுசிஷ்ட-அறிவுறுத்தப்பட்டு; அஹம்-நான்; க்ருத-ஆசீர்வதிக்கப்பட்டு; ச-மற்றும்; அனுக்ரஹ—ஆதரவு; மஹான்-சிறந்த; அபாவ்ருதை-சிறந்து; கர்ணரந்ரைர்:-காதுகளின் துளைகளுடன்; ஜூஷ்டா—பெற்று; திஷ்ட்யா—நல்ல அதிர்ஷ்டத்தால்; உசதீ—தூய்மை; கிர:-சொற்கள்.

உங்களால் அறிவுறுத்தப்படும் அதிர்ஷ்டமும், தங்களது ஆதரவும் யான் பெற்றுள்ளேன். நான் உங்கள் புனித சொற்களை, என் காதுகளால் தெளிவாகக் கேட்டதற்காக பகவானுக்கு நன்றி கூறுகிறேன்.

பதம் 3.22.8
ஸ பவாந்துஹித்ரு- ஸ்னே- ஹபரிக்லிஷ்டாத்மனோ மம
ஸ்ரோதுமர்ஹஸி தீனஸ்ய ஸ்ராவிதம் க்ருபயா முனே

ஸ-நீங்கள்; பவாந்-மேன்மை பொருந்திய தாங்கள்; துஹித்ருஸ் னேஹ-என் மகள் மீதுள்ள அன்பினால்; பரிக்லிஷ்ட-ஆத்மன:-அமைதியற்ற மனம் உடையவர்; மம-என்னுடைய; ஸ்ரோதும்-கேட்க; அர்ஹஸி-மகிழ்ந்து; தீனஸ்ய- தாழ்மையுள்ள நான்; ஸ்ராவிதம்-வேண்டதலுக்கு; க்ருபயா-கருணையுடைய; முனே:-ஓ முனிவரே.

ஓ சிறந்த முனிவரே, என் மனம் என் மகள் மீது வைத்த பாசத்தால் குழம்பியிருக்கிறபடியால், தாழ்மையான என் விருப்பத்தைக் கேட்டு மகிழ்ந்து அருள் புரியவேண்டும்.

பதம் 3.22.9
ப்ரியவ்ரதோத் தானபதோ: ஸ்வஸேயம் துஹிதா மம
அந்விச்சதி பதிம் யுக்தம் வய: சீல-குணாதிபி:

ப்ரியவ்ரத-உத்தானபதோ:-ப்ரியவ்ரதன், உத்தானபாதனின்; ஸ்வ ஸா-சகோதரி; இவம்-இந்த; துஹிதா-பெண்; மம-என்னுடைய; அந்விச்சதி-தேடுகின்றாள்; பதிம்-கணவனை; யுக்தம்-தகுந்த; வய: சீல குண ஆதிபி:-வயது, நடத்தை, நல்ல குணங்கள் முதலியவற்றால்.

ப்ரியவ்ரதனுக்கும் உத்தானபாதனுக்கும் என் மகள் சகோதரி ஆவாள். அவள் வயது, நடத்தை, நல்ல குணங்கள் ஆகியவற்றில் தனக்குப் பொருந்திய கணவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள்.

பதம் 3.22.10
யதா து பவத: சீல-ஸ்ருத-ரூபவயோ -குணான்
அஸ்ருணோந்நாரதா தேஷா த்வய்யாஸீத்க்ருதனீஸ்சயா

யதா—எப்பொழுது; து-ஆனால்; பவத:-உங்களுடைய; சீல-உயர் நடத்தை; ஸ்ருத-ஸ்ருத-கற்றல்; ரூப-அழகிய தோற்றம்; வய-இளமை; குணான்-குணங்கள்; அஸ்ருணோத்-கேட்டு; நாரதாத்-நாரத முனிவரிடமிருந்து; ஏஷா—தேவஹூதி; த்வயி-உங்களிடம்; ஆஸீத்—ஆனாள்; க்ருதனீஸ்சயா—உறுதியில் நிற்றல்.

நாரத முனிவரிடமிருந்து உங்களின் உயர் நடத்தை, கல்வி, அழகிய தோற்றம், இளமை மற்றும் பிற குணங்களைப் பற்றிக் கேட்ட மாத்திரத்தில் அவளது சிந்தனை அல்லது எண்ணம் தங்களை நாடலாயிற்று.

பதம் 3.22.11
தத்ப்ரதீச்ச த்விஜாக்ர்யேமாம் ஸ்ரத்தயோபஹ்ருதாம் மயா ஸர்வாத்மனானுரூபாம் தே க்ருஹமேதீஷூ கர்மஸூ

தத்—அதனால்; ப்ரதிச்ச-தயவு செய்து ஒப்புக் கொள்ளுங்கள்; த்விஜ அகர்ய-ஓ பிராம்மணர்களில் சிறந்தவரே; இமாம்-இவளை; ஸ்ரத்தயா-உண்மையுடன்; உபஹ்ருதாம்-பரிசாகக் கொடுத்தேன்; மயா—என்னால்; ஸர்வ ஆத்மனா—எல்லா வழியிலும்; அனுரூபாம்-பொருந்திய; தே-உங்களுக்கு; க்ருஹ மேதிஷூ-குடும்ப அமைப்பில்; கர்மஸூ-கடமைகள்.

ஓ பிராம்மணர்களில் சிறந்தவரே, நான் அவளை மனப்பூர்வமாகக் கொடுப்பதால், தயவு செய்து அவளை ஏற்றுக் கொள்ளுங்கள். அவள் எல்லாவிதத்திலும் உங்களுக்கு மனைவியாக இருக்கத் தகுதியானவள். உங்கள் குடும்பக் கடமைகளை ஏற்கும் பொறுப்பையும் அவள் எடுத்துக் கொள்ளத் தகுதியானவள்.

பதம் 3.22.12
உத்யதஸ்ய ஹி காமஸ்ய ப்ரதிவாதோ ந சஸ்யதே
அபி நிர்முக்த -ஸங்கஸ்ய காம-ரக்தஸ்ய கிம் புன:

உத்யதஸ்ய-தானாகவே வந்தது; ஹி-உண்மையில்; காமஸ்ய-ஜடவுலக ஆசையின்; ப்ரதிவாத-மறுப்பு; ந-இல்லை; சஸ்யதே-புகழப்படும்; அபி-இருந்தாலும்; நிர்முக்த-சுதந்திரமாக இருப்பவரின்; ஸங்கஸ்ய-பிடிப்பிலிருந்து; காம-புலனின்பங்களுக்கு; ரக்தஸ்ய- அடிமையானவரின்; கிம் புன;-குறைவாக இருந்தல்.

எல்லாப் பிடிப்பிலிருந்தும் முழுவதுமாக விடுதலை அடைந்தவர் கூட, தானாகவே வரும் காணிக்கை ஒன்றை மறுப்பது பாராட்டத்தக்கதல்ல. புலனின்பத்திற்கு அடிமையானவர்களோ நிச்சயம் இதற்குக் குறைந்தவர் அல்லர்.

பதம் 3.22.13
ய உத்யதமனாத்ருத்ய கீனாசமபியாசதே
க்ஷூயதே தத்-யச: ஸ்பீதம் மானஸ் சாவக்ஞயா ஹத:

ய:-யார்; உத்யதம்-காணிக்கை; அனாத்ருத்ய—மறுத்து; கீனாசம்-கஞ்சனிடமிருந்து; அபியாசதே-பிச்சை எடுத்தல்; க்ஷூயதே-தொலைத்து; தத்—அவருடைய; யச:-நற்பெயர்; ஸ்பீதம்-மிகப் பரவலாயுள்ள; மான:-மதிப்பு; ச-மற்றும்; அவக்ஞயா-புறக்கணிக்கும் நடத்தையால்; ஹத:-அழிந்து.

தானாகவே வரும் காணிக்கையை மறுத்துவிட்டுப் பின்னர் கஞ்சனிடமிருந்து வரத்தைக் கெஞ்சிக் கேட்பவர், தன் பரவலான மதிப்பை இழக்கிறார்; அவர் பெருமை பிறரது புறக்கணிக்கும் நடத்தையால் தாழ்த்தப்படுகிறது.

பதம் 3.22.14
அஹம் த்வாஸ்குணவம் வித்வன் விவாஹார்த்த ஸமுத்யதம்
அதஸ்த்வமுபகுர்வாண: ப்ரத்தாம் ப்ரதிக்ருஹாண மே

அஹம்-நான்; த்வா-நீங்கள்; அஸ்ருணவம்-கேட்டு; வித்வன்-ஓ விவேகமுடையவரே; விவாஹ அர்த்தம்-திருமணத்திற்காக; ஸமுத்யதம்- தயாராக இருத்தல்; அத:-இதனால்; த்வம்—நீங்கள்; உபகுர்வாண:-நிலையான மனத்துறவு கொள்ள சபதம் எடுக்காமல்; ப்ரத்தாம்—அளித்து; ப்ரதிக்ருஹாண—தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மே-என்னிடமிருந்து.

ஸ்வாயம்புவ மனு தொடர்ந்தார்: அறிவிற் சிறந்தவரே- நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக நான் கேள்வியுற்றேன். நீங்கள் நிலையான பிரம்மச்சரியம் மேற்கொள்ளும் உறுதி எடுக்காததால், தயவு செய்து என்னால் அளிக்கப்படும் இவளது கரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பதம் 3.22.15
ரிஷிருவாச
பாடம் உத்வோது-காமோ ஹமப்ரத்தா ச தவாத்மஜா
ஆவயோரனுரூபோ ஸாவாத்யோ வைவாஹிகோ விதி:

ரிஷி:-சிறந்த முனிவர் கர்தமர்; உவாச-கூறினார்; பாடம்-மிக நன்றாக; உத்வோது காம-மணக்க விருப்பம் கொண்டு; அஹம்-நான்; அப்ரத்தா—யாருக்கும் நிச்சயிக்கப்படாமல்; ச-மற்றும்; ஆத்மஜா-மகள்; ஆவயோ-எங்கள் இருவரின்; அனுரூப-சரியான; அஸௌ-இந்த; ஆத்ய:-முதல்; வைவஹிக-திருமணத்தின்; விதி:-சடங்கு நிகழ்ச்சி.

சிறந்த முனிவர் பதில் கூறினார்: எனக்கு மணந்து கொள்ளும் விருப்பம் நிச்சயம் உள்ளது. உங்கள் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அல்லது அவள் யாருக்கும் வாக்களிக்கவில்லை. அதனால் வேத முறைப்படி எங்கள் திருமணம் நடக்கலாம்.

பதம் 3.22.16
காம: ஸ பூயாந்தரதேவ தே ஸ்யா:
புத்ர்யா: ஸமாம்நாய-விதௌ ப்ரதீத:
க ஏவ தே தனயாம் நாத்ரீயேத
ஸ்வயைய காந்த்யா க்ஷிபதீமிவஸ்ரியம்

காம:-விருப்பம்; ஸ-அந்த; பூயாத—நிறைவேறட்டும்; நரதேவ-ஓ அரசரே; தே-உங்களுடைய; அஸ்யாத்-இந்த; புத்ர்யா:-மகளின்; ஸமாம்நாயவிதௌ-வேத நூல்களின் முறையில்; ப்ரதீத:-அங்கீகரிக்கப்பட்ட; க:-யார்; ஏவ—உண்மையில்; தே-உங்களுடைய; தனயாம்-மகள்; ந ஆத்ரீயதே-போற்றப்படாமல்; ஸ்வயா- அவளால்; ஏவ-மட்டும்; காந்திய-உடலின் ஒளி; க்ஷிபதீம்-மிஞ்சி நிற்றல்; இவ-போல; ஸ்ரியம்-நகைகள்.

வேத நூல்களில் விதிக்கப்பட்ட நியதிகளின்படி, திருமண விருப்பம் நிறைவேறட்டும். யார் தான் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டார்? அவள் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அழகை மிஞ்சும் ஒளி பொருந்திய அவள் மிகுந்த பேரழகு வாய்ந்தவள்.

பதம் 3.22.17
யாம் ஹர்ம்ய-ப்ருஷ்டே கவணதங்க்ரிய-சாபாம்
விக்ரீடதீம் கந்துகவிஹ்வலாக்ஷம்
விஸ்வாவஸீர் ந்யபதத்ஸ்வாத்விமானாத்
விலோக்ய ஸம்மோஹ-விமூட சேதா:

யாம்-யாருடைய; ஹர்ம்ய ப்ருஷ்டே-அரண்மனையின் உச்சிப் பகுதி: க்வணதங்க்ரி சோபாம்—அவள் காலில் அணித்திருந்த ஒளிரும் ஆபரணத்தால் அவளின் அழகு உயர்ந்தது; விக்ரீடதீம்-விளையாடி; கந்துக விஹ்வல அக்ஷீம்-கண்கள் தடுமாற்றத்துடன், அவள் பந்தைப் பின் தொடர்ந்து; விஸ்வாஸூ-விஸ்வாவஸூ; நியபதத்-கீழே விழுந்து; ஸ்வாத்—அவரிடமிருந்து; விமானாத்-விமானத்திலிருந்து; விலோக்ய-பார்த்து; ஸம்மோஹ விமூட சேதா:—அவருடைய மனம் உணர்ச்சி மழுங்கி.

சிறந்த கந்தர்வனாகிய விஸ்வாவஸூ, தங்கள் பெண் அரண்மனையின் மேன்மாடத்தில் பந்துடன் விளையாடுவதைப் பார்த்த பிறகு, மோகத்தால் அறிவு மழுங்கி, விமானத்திலிருந்து கீழே விழுந்தான். ஏனென்றால் அவள் கண்கள் அங்கும் இங்கும் அலைந்தன. அவள் கால்களில் ஒளிர்ந்து மிளிர்ந்து ஓசையெழுப்பிய கொலுசுகளுடன் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.

பதம் 3.22.18
தாம் ப்ரார்தயந்தீம் லலனா-லலாம
மஸேவித-ஸ்ரீசரணைர திருஷ்டாம்
வத்ஸாம் மனோரூச்சபத: ஸ்வஸாரம்
கோ நானுமந்யேத புதோபியாதாம்

தாம்-அவளை; ப்ரார்த்தயந்தீம்—விரும்பி; லலனா லலாம்-பெண்களின் ஆபரணம்; அஸேவிதஸ்ரீசரணை-லக்ஷ்மியின் திருவடிகளை வணங்காதவர்களால்; அத்ருஷ்டாம்-பார்த்திராத; வத்ஸாம்—அன்பு மகள்; மனோ:—ஸ்வாயம்புவ மனுவின்; உச்சபத:-உத்தானபாதாவின்; ஸ்வஸாரம்-சகோதரி; க:-என்ன; ந—அனுமந்யேத-வரவேற்காமல்; புத:-விவேகம் உள்ள மனிதன்; அபியாதாம் தானாகவே வந்து இருப்பவளை.

ஸ்வாயம்புவ மனுவின் அன்பு மகளும், உத்தானபாதாவின் சகோதரியும், பெண்மைக்கு அணிகலனாக விளங்குபவளுமான இவளை, எந்த விவேகி வரவேற்கமாட்டான்? அதிர்ஷ்ட தேவதையின் சிறப்பான திருப்பாதங்களை வணங்காதவர்களால், அவளை மனத்தாலும் உணர இயலாது. ஆயினும் அவள் என் கரம் பற்ற விரும்பி தானாகவே வந்திருக்கிறாள்.

பதம் 3.22.19
அதோ பஜிஷ்யே ஸமயேன ஸாத்வீம்
யாவத்தேஜோ பிர்ருயாதாத்மனோ மே
அதோ தர்மான் பாரமஹம்ஸ்ய- முக்யான்
சுக்லப்ரோக்தான் பஹூ மந்யே விஹிம்ஸ்ரான்

அத:-அதனால் ; பஜிஷ்யே-நான் ஒப்புக் கொள்வேன்; ஸமயேன- நிலைமையில்; ஸாத்வீம்-கற்புடைய பெண்; யாவத்-அதுவரை; தேஜ:-விந்து; பிப்ருயாத்-தாங்கும்; ஆத்மன:என் உடலிலிருந்து; மே-என்னுடைய; அத:-பின்னர்; தர்மான்-கடமைகள்: பாரமஹம்ஸ்ய முக்யான்-பரமஹம்ஸங்களில் சிறந்தது; சுக்ல ப்ரோக்தான்—பகவான் விஷ்ணுவால் உரைக்கப்பட்டவை; பஹூ-மிகவும்; மந்யே-நான் ஆராய்ந்து பார்ப்பேன்; அவிஹிம்ஸ்ரான்- பொறாமையிலிருந்து விடுபட்டது.

அதனால் நான் இந்தக் கற்புள்ள பெண்ணை ஒரு நியதியோடு என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். அவள் என் உடலிலிருந்து வரும் விந்துவைப் பெற்றுக்கொண்ட பிறகு, நான் பெரும்பாலான பரிபூரண மனிதர்கள் ஏற்றுக்கொண்ட பக்தித் தொண்டை ஏற்றுக் கொள்வேன். அதன் செயல்முறை பகவான் விஷ்ணுவால் பலபடப் பேசப்பட்டுள்ளது. அப்பணி பொறாமைக்கும் அப்பாற்பட்ட சீரிய செயலாகும்.

பதம் 3.22.20
யதோ பவத் விஸ்வமிதம் விசித்ரம்
ஸம்கஸ்தாஸ்யதே யத்ர ச வாவதிஷ்டதே
ப்ரஜாபதீனாம் பதிரேஷ மஹ்யம்
பரம் ப்ரமாணம் பகவானனந்த:

யத:-யாரிடமிருந்து; அபவத்-தோன்றியது; விஸ்வம்-படைப்பு: இதம்-இந்த; விசித்ரம்-அற்புதம்; ஸம்ஸ்தாஸ்யதே-மறையும்; யத்ர-யாரிடம்; ச-மற்றும்; வா—அல்லது; அவதிஷ்டதே-இப்போது இருப்பது; ப்ரஜாபதீனாம்—ப்ரஜாபதிகளின்; பதி:-பகவான்; ஏஷ-இந்த; மஹ்யம்-என்னிடம்; பரம்-உயர்ந்த; ப்ரமாணம்-அதிகாரி; பகவான்-பரமபுருஷ பகவான்; அனந்த:-முடிவில்லாத.

எனக்கு மிகவும் உயர்ந்த அதிகாரி, எல்லையற்ற பரம் பொருளாகிய பகவான் ஆவார். அவரிடமிருந்து இந்த அற்புதமான உலகப் படைப்பு தோன்றியது. அவரிடமே அதன் ஆக்கமும், அழிவும் உள்ளது. இந்த உலகில் வாழும் உயிர்ப் பொருள்களை உருவாக்குபவர்களான எல்லா பிரஜாபதிகளுக்கும் அவர் முழுமுதற் காரணமாவார்.

பதம் 3.22.21
மைத்ரேய உவாச
ஸ உக்ரந்வந்தியதோவாபபாஷே
ஆஸீச் ச தூஷ்ணீமரவிந்த-நாபம்
தியோபக்ருஹ்ணன் ஸ்மித-சோபிதேன
முகேன சேதோ லுலுபே தேவஹூத்யா:

மைத்ரேய:-சிறந்த முனிவர் மைத்ரேயர்; உவாச-கூறினார்; ஸ:-அவர் (கர்தமர்); ராஉக்ரதந்வந்—ஓ சிறந்த போர்வீரரான விதுரரே; இயத்—இவ்வளவு; ஏவ-மட்டும்; ஆபபாஷே-பேசினார்; ஆஸீத்-ஆனார்; ச-மற்றும்; தூஷ்ணீம்-மௌனம்; அவவிந்த-நாபம்; பகவான்—விஷ்ணு (தாமரையால் அலங்கரிக்கப்பட்ட நாபியுடையவர்); தியா-நினைவால்; உபக்ருஹ்ணன்-பிடிப்பு; ஸ்மித சோபிதேன—அவர் புன் சிரிப்பில் அழகானதாகி; முகேன—அவர் முகத்தால்; தேச-மனம்; லுலுபே-பிடிக்கப்பட்டு; தேவகீத்யா:-தேவகீதியின்.

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: ஓ சிறந்த வீரரான விதுரரே. கர்தம முனிவர் இவ்வளவு தான் கூறினார். பின்னர் மௌனமானார். நாபியில் தாமரை உள்ள அவரின் வணங்கத் தகுந்த பகவான் விஷ்ணுவைப் பற்றி நினைத்தார். அவர் மௌனமாகச் சிரித்தபோது, அவர் முகம், சிறந்த முனிவரைத் தியானிக்கத் தொடங்கிய தேவஹூதியின் மனத்தைப் பற்றிக் கொண்டது.

பதம் 3.22.22
ஸோனு க்ஞாத்வா வ்யவஸிதம் மஹிஷ்யா துஹிது: ஸ்புடம்
தஸ்மை குண-கணாத்யாய ததௌ துல்யாம் ப்ரஹர்ஷித:

ஸ:-அவர் (மன்னர் மனு); அனு-பின்னர்; க்ஞாத்வா-தெரிந்து; வ்யவஸிதம்-நிலைத்த முடிவு; மஹிஷ்யா-ராணியின்; துஹிது:-அவர் மகளின்; ஸ்புடம்-தெளிவாக; தஸ்மை-அவரிடம்; குண-கணாத்யாய—நல்ல குணங்கள் அளிக்கப்பட்டவர்; ததௌ-கொடுத்து; துல்யாம்-சமமாக (நல்ல குணங்களில்); ப்ரஹர்ஷித:-மிகவும் மகிழ்ந்து.

இராணியின் முடிவைக் குற்றமில்லாமல் தெரிந்து கொண்ட பிறகு, தேவஹூதியின் முடிவைத் தெரிந்து கொண்ட பிறகு, மன்னர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் மகளை, நல்ல குணங்களில் எல்லாம் அவளுக்குச் சமமாக இருந்த முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

பதம் 3.22.23
சதரூபா மஹா-ராக்ஞீ பாரிபர்ஹந்மஹா-தனான்
தம்பத்யோ: பர்யதாத்ப்ரீத்யா பூஷாவாஸ: பரிச்சதான்

சதரூபா-இராணி சதரூபா; மஹாராக்ஞீ-இராணி; பாரிபர்ஹந்-வரதட்சணை; மஹாதனான்—மதிப்புள்ள பரிசுகள்; தம்பத்யோ;-மணமகன், மணமகளுக்கு; பர்யதாத்-கொடுத்து; ப்ரீத்யா-அன்பினால்; பூஷா-நகைகள்; வாஸ:-ஆடைகள்; பரிச்சதான்-வீட்டுக்குப் பயன் படும் பொருட்கள்.

இராணி சதரூபா, மணமகளுக்கும் மணமகனுக்கும், அந்த வேளைக்குத் தகுந்தவாறு, நகைகள், ஆடைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் போன்ற மிகவும் விலையுயர்ந்த பரிசுகளை அன்புடன் கொடுத்தாள்.

பதம் 3.22.24
ப்ரத்தாம் துஹிதரம் ஸம்ராட் ஸத்ருக்ஷாய கத-வ்யத:
உபகுஹ்ய ச பாஹூப்யாமௌத் கண்ட்யோந்மதிதாஸய:

ப்ரத்தாம்—கொடுக்கப்பட்டவர்; துஹிதரம்-மகள்; ஸம்ராட்-மன்னர் (மனு); ஸத்ருஷாய—தகுந்தவருக்கு; கதவ்யத:-அவர் பொறுப்பிலிருந்து விடுபட்டு; உபகுஹ்ய-அனைத்து; ச-மற்றும்; பாஹூப்யாம்—அவர் இரண்டு கரங்களுடன்; ஒலித்கண்ட்ய- உந்மதித-ஸய:-கவலையுள்ள, அமைதி இழந்த மனமுடைய,

இவ்வாறு தன் மகளை, தகுந்த மனிதருக்குக் கொடுத்ததன் மூலம் தன் பொறுப்பிலிருந்து விடுபட்ட ஸ்வாயம்புவ மனுவின் மனம் மகளைப் பிரிகிறோம் எனும் துன்பத்தால் வாடியது. எனவே தன் இரு கரங்களாலும் தன் அன்பு மகளை அணைத்துக் கொண்டார்.

பதம் 3.22.25
அசக்நுவம்ஸ் தத்-விரஹம் முஞ்சன் பாஷ்ப-கலாம் முஹீ:
ஆஸிஞ்சதம்ப வத்ஸேதி நேத்ரோதைர்துஹிது: சிகா:

அசக்நுவன்—தாங்க இயலாமல்; தத்விரஹம்-அவளிடமிருந்து பிரிந்திருப்பது; முஞ்சன்—விடுதல்; பாஷ்பகலாம்-கண்ணீர்; முஹீ:-மீண்டும் மீண்டும்; ஆஸிஞ்சத்—அவர் நனைத்து; அம்ப-என் அன்பு அன்னை; வத்ஸ்—என் அன்பு மகள்; இதி-இவ்வாறு; நேத்ர உதை:-அவர் கண்களிலிருந்து வழியும் நீரால்; துஹிது:-அவர் மகளின்; சிகா:—கூந்தல் கற்றைகள்.

மன்னர் மன்னரால் தன் மகளின் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அதனால் அவர் கண்களிலிருந்து மீண்டும் மீண்டும் கண்ணீர் வழிந்து அவர் மகளின் தலையை நனைத்தது. அவர், “என் அன்பு அன்னையே- என் அன்பு மகளே!” என்று கதறினார்.

பதங்கள் 3.22.26 – 3.22.27
ஆமந்தர்கய தம் முனி- வரமனுக்ஞாத: ஸஹாநுக:
ப்ரதஸ்தே ரதமாருஹ்ய ஸபார்ய: ஸ்வ-புரம் ந்ருப:

உபயோர் ர்ஷி-குல்யாயா: ஸரஸ்வத்யா: ஸூரோதஸோ:
ர்ஷீணா முபசாந்தானாம் பச்யந்நாஸ்ரம-ஸம்பத:

ஆமந்தர்ய-செல்ல அனுமதி பெற்று; தம்-அவரிடமிருந்து (கர்தமர்); முனிவரம்- முனிவர்களில் சிறந்தவரிடமிருந்து; அநுக்ஞா:-செல்ல அனுமதிக்கப்பட்டு; ஸ:-அநுக:-பரிவாரத்துடன்; ப்ரதஸ்தே-தொடங்கி; ரதம் ஆருஹ்ய-அவர் தேரில் ஏறி; ஸபார்ய:-அவர் மனைவியுடன்; ஸ்வபுரம்-அவர் சொந்தத் தலை நகரம்; ந்ருப:- மன்னர்: உபயோ:-இரண்டிடம்: ர்ஷிகுல்யாயா:-முனிவர்களுக்குச் சம்மதமான; ஸரஸ்வத்யா-ஸரஸ்வதி நதியின்; ஸூரோதஸோ:-அழகிய கரைகள்; ர்ஷிணாம்-சிறந்த முனிவர்களின்; உபசாந்தானாம்—அமைதியான; பச்யாந்- பார்த்து; ஆஸ்ரம ஸம்பத:-அழகிய துறவு மாடங்களின் வளமை.

செல்வதற்கு, சிறந்த முனிவரிடம் அனுமதி கேட்டுப் பெற்ற பிறகு, மன்னர் தன் மனைவியுடன் தேரில் ஏறி, தன் பரிவாரங்கள் பின்தொடர, தன் தலைநகர் நோக்கிச் செல்லத் தொடங்கினார். வழியெங்கும், அவர் முனிவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஸரஸ்வதி நதியின் அழகிய கரைகளில் இருந்த அழகான ஆசிரமக் குடில்களில் அமைதியான வளமையினைக் கண்டார்.

பதம் 3.22.28
தமாயாந்தமபிப்ரேத்ய ப்ரஹ்மாவர்தாத்ப்ரஜா: பதிம்
கீத-ஸம்ஸ்துதி-வாதித்ரை: ப்ரத்யுதீயு: ப்ரஹர்ஷிதா:

தம்-அவரிடம்; ஆயாந்தம்-வந்தவர்; அபிப்ரேத்ய-தெரிந்து; ப்ரஹ்மாவர்தாத்-ப்ரம்ஹாவர்தத்திலிருந்து; ப்ரஜா:-மக்கள்; பதிம்-தங்கள் தலைவரை; கீதஸம்ஸ்துதி—வாதித்ரை:-பாட்டுகள், புகழ்ச்சி, வாத்திய இசையுடன்; ப்ரத்யுதீயு:—வரவேற்க முன்வந்து; ப்ரஹர்ஷிதா:-மிகவும் மகிழ்ந்து.

அவர் வரவை அறிந்து மிகவும் மகிழ்ந்து, அவர் குடிமக்கள் பாட்டுகள், போற்றுதல்கள், வாத்திய இசையுடன், திரும்பி வரும் மன்னரை வரவேற்க, பிரம்மாவர்த்தத்திலிருந்து வந்தார்கள்.

பதங்கள் 3.22.29 – 3.22.30
பர்ஹிஷ்மதீ நாம புரீ ஸர்வ-ஸம்பத்- ஸமந்விதா
ந்யபதன் யத்ர ரோமாண யக்ஞஸ்யாங்கம் விதுந்வத:

குசா: காசாஸ்த ஏவாஸன் சஸ்வத்-தரித-வர்சஸ:
ர்ஷயோயை: பராபாவ்ய யக்ஞ-க்னான் யக்ஞமீஜிரே

பர்ஹிஷ்மதீ-பர்ஹிஷ்மதீ; நாம-பெயர் உடையர்; புரீ-நகரம்; ஸர்வஸம்பத்-எல்லாவிதச் செல்வங்களின்; ஸமந்விதா- முழுவதும்; நியபதன்-கீழே விழுந்து; யத்ர-எங்கு; ரோமாணி-முடிகள்; யக்ஞஸ்ய-வராகப் பிறவியின்; அங்கம்-அவர் உடல்; விதுன்வத:-குலுக்கி; குசா:-குசாபுல்; காசா—காசா புல்; தே—அவை; ஏவ—நிச்சயமாக; ஆஸன்-உருவாகி; சஸ்வத் ஹரித-எப்பொழுதும் பசுமையாக; வர்சஸ:-நிறம் கொண்டு; ரிஷய-முனிவர்கள்; யை:-அதனால்; பராபாவ்ய- தோற்கடித்து; யக்ஞகனான்-வேள்விச் சடங்குகளைத் தொல்லை செய்பவர்கள்; யக்ஞம்-பகவான் விஷ்ணு; இஜிரே-அவர்கள் வணங்கினர்.

எல்லாவித செல்வமும் நிறைந்த நகரமாகிய பர்ஹிஷ்மதீ, அப பெயரால் அழைக்கப்பட்டது. ஏனென்றால், பகவான் விஷ்ணுவின் முடி, அவர் வராக அவதாரமாக வெளிப்பட்ட போது அவர் உடலில் இருந்து அங்கு விழுந்தது. அவர் தன் உடலைக் குலுக்கியபோது, இந்த முடி விழுந்தது. அது குசாப் புல்லாகவும் காசா புல்லாகவும் (பாய்க்காக பயன்படும் மற்றொரு புல் வகை) என்றும் பசுமையானதாக மாறியது. அதைக் கொண்டு முனிவர்கள் அவர்களின் வேள்விச் சடங்கில் தலையிட்ட தீயவர்களைத் தோற்கடித்த பின்னர் பகவான் விஷ்ணுவை வழிபட்டார்கள்.

பதம் 3.22.31
குசகா-சமயம் பர்ஹிர் ஆஸ்தீர்ய பகவாந்மனு:
அயஜத்யக்ஞ-புருஷம் லப்தா ஸ்தானம் யதோ புவம்

குச-குச புல்லின்; காச-மற்றும் காச புல்லின்; மயம்-உருவாகிய; பர்ஹி:-இருக்கை; ஆஸ்தீர்ய-பரப்பி; பகவான்-சிறந்த அதிர்ஷ்டமுள்ள; மனு:-ஸ்வாயம்புவ மனு; அயஜத்-வணங்கி; யக்ஞாபுருஷம்-பகவான் விஷ்ணு; லப்தா—அடைந்து; ஸ்தானம்-இருப்பிடம்; யத:-யாரிடமிருந்து; புவம்-பூமி.

மனு, குச மற்றும் காச புல்லால் ஆன இருக்கையைப் பரப்பி பரமபுருஷ பகவானை வணங்கி, அவர் அருளால் இந்த நிலவுலக உருண்டையின் ஆட்சியைப் பெற்றார்.

பதம் 3.22.32
பர்ஹிஷ்மதீம் நாம விபுர்யாம் நிர்விஷ்ய ஸமாவஸத்
தஸ்யாம் ப்ரவிஷ்டோ பவனம் தாப-த்ரய-விநாஸனம்

பர்ஹிஷ்மதீம்-பர்ஹிஷ்மதி நகரம்; நாம-பெயருடைய; விபு:-மிகுந்த வல்லமையுடைய ஸ்வாயம்புவ மனு; யாம்—எந்த; நிர்விஷ்ய—நுழைந்ததும்; ஸமாவஸத்—அவர் முன்பு வாழ்ந்தார்; தஸ்மாம்-அந்த நகரத்தில்; ப்ரவிஷ்ட:-நுழைந்து; பவனம்-அரண்மனை; தாபத்ரய-மூன்றுவிதத் துன்பங்கள்; விநாஸனம்—அழித்தல்.

மனு தாம் முன்னால் வாழ்ந்த நகரமாகிய பர்ஹிஷ்மதீயில் நுழைந்ததும் ஜடவுலக இருப்பின் மூவிதத் தொல்லைகளை அழித்ததும் நல்ல சூழல் நிறைந்ததுமான தன் அரண்மனைக்குள் நுழைந்தார்.

பதம் 3.22.33
ஸபார்ய: ஸப்ரஜ: காமாந் புபுஜே ந்யாவிரோதத:
ஸங்கீயமானஸத்-கீர்த்தி: ஸஸ்த்ரீபி: சுர-காயகை:
ப்ரத்யூஷேஷ்வனுபத்தேன ஹ்ருதா ஸ்ருண்வன் ஹரே: கதா:

ஸபார்ய:-அவர் மனைவியுடன்; ஸப்ரஜ:-அவர் மக்களுடன்; காமான்—வாழ்வின் இன்றியமையாதவை; புபுஜே-அவர் மகிழ்ந்தார்; அந்ய-பிறரிடமிருந்து; அவிரோதத:-தொல்லையின்றி; ஸங்கீயமான-புகழப்பட்டு; ஸத்கீர்த்தி—பக்திச் செயல்களுக்கான பெருமதிப்பு; ஸஸ்த்ரீபி:—அவர்களின் மனைவிகளுடன்; சுர காயகை-மேலுலகப் பாடகர்கள்; ப்ரதி உஷேசு-தினமும் காலையில்; அநுபத்தேன-பற்றிக் கொண்டு; ஹ்ருதா—மனத்துடன்; ஸ்ருண்வன்-கேட்டு; ஹரே-பகவான் ஹரியின்; கதா:-தலைப்புகள்

மன்னர் ஸ்வாயம்புவ மனு மதத்தின் நடைமுறைக்கு எதிரானதும் வேண்டாததும் ஆன கொள்கைகளால் தொல்லைக்கு ஆளாகாமல், தன் மனைவியுடனும், குடிமக்களுடனும் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவருடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டார். விண்ணுலகப் பாடகர்கள் தங்கள் மனைவிகளுடன், மன்னரின் தூய பெருமதிப்பைப் பற்றி விடியற்காலையில் கூட்டமாகப் பாடினர். அவர் அன்பான மனத்துடன் பரமபுருஷ பகவானின் திருவிளையாடல்களைப் பற்றி அன்றாடம் கேட்பது வழக்கம்.

பதம் 3.22.34
நிஷ்ணாதம் யோகமாயாக முனிம் ஸ்வாயம்புவம் மனும்
யதாப்ரசம்சயிதும் போகா ந சேகுர்பகவத்-பரம்

நிஷ்ணாதம்-ஆழ்ந்து; யோகமாயாக-தற்காலிக இன்பத்தில்; முனிம்-முனிவருக்குச் சமமானவர்; ஸ்வாம்புவம்-ஸ்வாம்புவ; மனும்-மனு; யத்-அதிலிருந்து; அம்ரம்சயிதும்-விலகிச் செல்லக் காரணமான; போகா—ஜடவுலக இன்பங்கள்; ந-இல்லை; சேகு-முடிந்த; பகவத்-பரம பரமபுருஷ பகவானின் சிறந்த பக்தர்.

ஸ்வாயம்புவ மனு ஒரு ராஜரிஷி. மண்ணுலக இன்பத்தில் ஆழ்ந்திருந்தாலும் அவர் வாழ்வின் கடைநிலைக்கு இழுத்துச் செல்லப்படவில்லை. ஏனெனில் அவர் உலக இன்பத்தை கிருஷ்ண உணர்வுச் சூழலில் எப்போதும் அநுபவித்தார்.

பதம் 3.22.35
அயாத-யாமாஸ்தஸ்யாஸன் யாமா: ஸ்வாந்தர-யாபனா:
ஸ்ருண்வதோ த்யாயதோ விஷ்ணோ குர்வதோ ப்ருவத:கதா:

அயாத யாமா:-நேரம் ஒரு போதும் கடக்கவில்லை; தஸ்ய-மனுவின்; ஆஸன்-இருந்த; யாமா:-மணிகள்; ஸ்வ-அந்தர-அவர் வாழ்வின் காலம்; யாபனா:-முடிவுக்குக் கொண்டுவருதல்; ஸ்ருண்வத:-கேட்டு; த்யாயத:-ஆழ்ந்து நினைத்தல்; விஷ்ணோ—பகவான் விஷ்ணுவின்; குர்வத:-செயல்பட்டு; ப்ருவத:-பேசி; கதர்- கதைகள்

அதன் விளைவாக, ஒரு மன்வந்தர ஊழி அடங்கிய அவரது நெடிய வாழ்வு ஒரு முடிவுக்கு படிப்படியாக வந்த போதிலும், அந்த வாழ்வு வீணாகக் கழிக்கப்படவில்லை. ஏனெனில், எப்போதும் பகவானின் திருவிளையாடல்களை உச்சரிப்பதிலும் எழுதுவதிலும், ஆழ்ந்து நினைப்பதிலும் கேட்பதிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

பதம் 3.22.36
ஸ ஏவம் ஸ்வாந்தரம் நிந்யே யுகானாமேக ஸப்ததிம்
வாசுதேவ -ப்ரஸங்கேன பரிபூத -கதி-த்ரய:

ஸ:-அவர் (ஸ்வாயம்புவ மனு); ஏவம்-இவ்வாறு: ஸ்வ அந்தரம்-அவர் காலம்: நிந்யே-கழித்தார்; யுகானாம்-நான்கு யுகங்களின் சுழற்சிகளின்; ஏக ஸப்ததிம்- எழுபத்தொன்று; வாசுதேவ-வாசுதேவருடன்; ப்ரஸ்ங்கேன-தொடர்புடைய செய்திகளால், பரிபூத-எல்லை கடந்து; கதித்ரய:-மூன்று பயண இடங்கள்.

அவர் நான்கு யுகங்களின் 71 சுழற்சிகளாக இருந்த அவர் காலத்தை, எப்போதும் வாசுதேவனை நினைப்பதிலும், வாசுதேவர் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு இருப்பதிலும் கழித்தார். இவ்வாறு அவர் மூன்று பயண இலக்குகளின் எல்லையைக் கடந்தார்.

பதம் 3.22.37
சாரீரா மானஸா திவ்யா வையாஸே யேச மானுஷா:
பௌதிகாஸ்ச கதம் க்லேசா பாதந்தே ஹரிஸம்ஸ்ரயம்

சாரீரா—உடலுக்குச் சம்பந்தப்பட்டது; மானஸா-மனதுக்குச் சம்பந்தப்பட்டது; திவ்யா-இயல்பு நிலை கடந்த ஆற்றல்களுக்குச் சம்பந்தப்பட்டது (தேவர்கள்); வையாஸே-ஓ விதுரரே; யே-அவை; ச-மற்றும்; மானுஷா-பிற மனிதருடன் சம்பந்தப்பட்டது; பௌதிகா—பிற வாழும் உயிர்களுக்குச் சம்பந்தப்பட்டது; ச-மற்றும்; கதம்-எப்படி; க்லேசா-துன்பங்கள்; பாதந்தே-தொல்லை தர இயலும்; ஹரிஸம்ஸ்ரயம்-பகவான் கிருஷ்ணரிடம் அடைக்கலம் பெற்றவர்.

அதனால் ஓ விதுரரே, இறை பணி செய்து கொண்டு பகவான் கிருஷ்ணரின் பாதுகாப்பில் முழுமையாக உள்ளவர்களின் உடல் மனம், இயற்கை, பிற மனிதர் இவற்றோடு உயிரினங்களின் தொடர்பு பட்ட அனைத்தும் எவ்வாறு துன்பங்களுக்கு ஆளாக இயலும்.

பதம் 3.22.38
ய: ப்ருஷ்டோ முனிபி:ப்ராஹ தர்மாந்நாநாவிதாஞ்சுபான்
ந்ருணாம் வர்ணாஸ்ரமாணாம் ச ஸர்வ-பூத -ஹித: ஸதா

ய:-யார்; ப்ருஷ்ட:-கேட்கப்பட்டு; முனிபி:-முனிவர்களால்; ப்ராஹி-கூறி; தர்மாந்- கடமைகள்; நாநாவிதாந்—பலவகைகள்; சுபான்—மங்கலமானவை; ந்ருணாம்-மனித சமுதாயத்தின்; வர்ணாஸ்ரமாணாம்-வர்ணங்கள், ஆஸ்ரமங்களின்; ச-மற்றும்; ஸர்வ-பூத-எல்லா வாழும் உயிர்களுக்கும்; ஹித:-நன்மை செய்பவர்; ஸதா-எப்போதும்.

குறிப்பிட்ட முனிவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையாக, அவர் (ஸ்வாயம்புவ மனு) எல்லாப் பொருள்களிடம் உள்ள அன்பினால், பொதுவாக மனிதர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியும் வேறுபட்ட வர்ணங்கள், ஆசிரமங்களின் பணிகளைப் பற்றியும் கற்பித்தார்.

பதம் 3.22.39
ஏதத்தே ஆதி-ராஜஸ்ய மனோஸ்சரிதமத்புதம்
வர்ணிதம் வர்ணனீயஸ்ய தத-பத்யோதயம் ஸ்ருணு

ஏதத்-இந்த; தே-உங்களிடம்; ஆதி ராஜஸ்ய-முதல் மன்னரின்; மனோ:-ஸ்வாயம்புவ மனுவின்; சரிதம்-குணம்(நடத்தை); அத்புதம்-அற்புதமான; வர்ணிதம்-வர்ணிக்கப்பட்டு; வர்ணனீயஸ்ய-வர்ணிக்கப்படத் தகுதி உள்ள மதிப்புடையவர்; தத் அபத்ய-அவர் மகளின்; உதயம்-செழித்து விளங்கும்; ஸ்ருணு-தயவுசெய்து கேளுங்கள்.

வர்ணிக்கத் தகுதியானவரும் மதிப்புடையவரும் உண்மையான அரசரும் ஆகிய ஸ்வாம்புவ மனுவின் அற்புதமான குணத்தைப் பற்றி நான் உங்களிடம் கூறினேன். அவரின் செழுமையான பெண் தேவகீதி பற்றியும் தான் கூறப்போவதைத் தயவு செய்து கேளுங்கள்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “கர்தம முனிவருக்கும் தேவஹுதிக்கும் திருமணம்” எனும் தலைப்பைக் கொண்ட இருபத்து இரண்டாவது அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare