அத்தியாயம் – 21
மனுவுக்கும் கர்தமருக்கும் இடையே உரையாடல்
பதம் 3.21.1 : விதுரர் கூறினார்: ஸ்வாயம்புவ மனுவின் பரம்பரை மிகவும் பெருமைக்குரியது. ஓ வணக்கத்துக்குரிய முனிவரே, புணர்தலால் பெருகிய சந்ததிகளை உடைய இந்த இனத்தைப் பற்றிய குறிப்புகளைத் தரும்படி உம்மை வேண்டுகிறேன்.

பதம் 3.21.2 : ஸ்வயாம்புவ மனுவின் இரு சிறந்த புதல்வர்களான ப்ரியவர்தரும் உத்தானபாதரும், மதக் கொள்கைகளின்படி, ஏழு தீவுகளைக் கொண்ட இந்த உலகை ஆட்சி செய்தனர்.

பதம் 3.21.3 : ஓ புனித பிராமணரே, ஒ பாவமற்றவரே, படைக்கப்பட்ட பொருட்களின் தலைவராகிய கர்தம முனிவருடைய மனைவியாகிய தேவஹூதி எனும் பெயருடைய, அவர் மகளைப் பற்றிப் பேசினீர்கள்.

பதம் 3.21.4 : யோகக் கொள்கைகளில் எட்டுவித நிறைவினைப் பெற்ற இளவரசியின் மூலமாக, சிறந்த யோகி எத்துணை குழந்தைகளைப் பெற்றார்? தயவு செய்து இதைச் சொல்லுங்கள்: இதைக் கேட்க ஆவல் கொண்டுள்ளேன்.

பதம் 3.21.5 : ஓ புனித முனிவரே, ஸ்வாயம்புவ மனுவின் மற்ற இரு பெண்களை, தங்கள் மனைவியராக அடைந்த பின்னர், வணங்கத்தக்க ருசியும், பிரம்மனின் மகன் தக்ஷனும் எவ்வாறு குழந்தைகளைப் படைத்தனர் என்று எனக்குக் கூறுங்கள்.

பதம் 3.21.6 : சிறந்த முனிவராகிய மைத்ரேயர் கூறினார்: பகவான் பிரம்ம தேவரால் குழந்தைகள் பெற ஆணையிடப்பட்ட கர்தம முனிவர், பத்தாயிரம் ஆண்டுக் காலத்திற்கு ஸரஸ்வதி நதியின் கரையில் தவம் செய்தார்.

பதம் 3.21.7 : தவம் செய்யும் காலத்தில், மெய்ம்மறந்த நிலையில் பக்தித் தொண்டினால் வழிபட்டார் கர்தம முனிவர். அப்போது தன்னிடம் சரணடைய ஓடிவருபவர்களுக்கு எல்லா அருளையும் விரைந்து அருளும்படி பரமபுருஷ பகவானை வேண்டிக் கொண்டார்.

பதம் 3.21.8 : பின்னர், சத்திய யுகத்தில், தாமரை போன்ற கண்களுடைய பரமபுருஷ பகவான், மகிழ்ந்து, கர்தம முனிவருக்குத் தன்னைக் காட்டி, வேதங்களின் மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த அவருடைய உன்னதமான வடிவைக் காட்டினார்.

பதம் 3.21.9 : கர்தம முனிவர், ஜடவுலகக் கறையிலிருந்து விடுபட்ட பரமபுருஷ பகவானை, அவருடைய அழிவற்ற வடிவில், கதிரவன் போன்ற ஒளியுடன், வெள்ளைத் தாமரைகளாலும் வெள்ளை அல்லிகளாலும் ஆன மாலை அணிந்த வடிவத்தில் கர்தம முனிவர் கண்டார். அவர் குற்றமற்ற மஞ்சள் பட்டு அணிந்திருந்தார். அவருடைய தாமரை போன்ற முகத்தின் ஓரத்தில் சீரான கரிய, சுருண்ட முடிக்கற்றைகள் தொங்கின.

பதம் 3.21.10 : மகுடத்தாலும் குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அவர் தன் மூன்று கரங்களில் தனக்கேயுரிய சங்கு, சக்கரம் மற்றும் கதையையும் நான்காவது கரத்தில் வெள்ளை அல்லியையும் தாங்கியிருந்தார். எல்லா பக்தர்களின் மனங்களையும் கவரக்கூடிய (பிடிக்கக்கூடிய), மகிழ்வுடன் புன்சிரிப்பும் கூடிய பார்வை பார்த்தார்.

பதம் 3.21.11 : கழுத்திலிருந்து தொங்கும் புகழ்மிக்க கௌஸ்துப மணி மார்பில் தங்கம் போல் மின்ன, கருடனின் தோள்களில் தன் தாமரை போன்ற திருவடிகளை வைத்து வானில் நின்றார்.

பதம் 3.21.12 : கர்தம முனிவர் பரமபுருஷ பகவானை நேரடியாக உணர்ந்த போது, அவருடைய உன்னதமான ஆசை நிறைவேறியதால் மிகவும் திருப்தி அடைந்தார். அவர் கீழே விழுந்து தலைவணங்கி, பகவானின் தாமரைத் திருவடிகளுக்கு, வணக்கங்களைத் தெரிவித்தார். அவர் மனம் இயற்கையிலேயே பகவானிடம் முழுமையான அன்பால் நிறைந்தது. கைகளைக் கூப்பிக் கொண்டு தன் வழிபாட்டால் அவர் பகவானைத் திருப்தி செய்தார்.

பதம் 3.21.13 : சிறந்த முனிவராகிய கர்தமர் கூறினார்: ஓ வணங்கத்தக்க பரமபுருஷ பகவானே, உயிர்களுக்கெல்லாம் இருப்பிடமாக விளங்கும் உங்களுடைய காட்சியினால் சிறந்த முழுமையை அடைந்து, எனது பார்க்கும் அற்றல் நிறைவு பெற்றுள்ளது. ஆழ்ந்த பல பிறவிகளில் தொடர்ந்து செய்த தியானத்தின் மூலம் முன்னேறிய யோகிகள் உங்களுடைய உன்னத வடிவைத் காண விரும்புகின்றனர்.

பதம் 3.21.14 : உங்கள் தாமரைப் பாதங்கள் இம்மையில் அறிவின்மை எனும் கடலைக் கடக்க உதவும் உண்மையான படகாகும். மயக்கும் சக்தியால் தங்களின் அறிவுக் கூர்மை இழந்தவர் மட்டுமே புலன்களின் சாரமற்ற, கணநேர இன்பங்களை அடைய விரும்பி அந்தப் பாதங்களை வணங்குவார்கள். இதை நரகத்தில் அலையும் மனிதர்களாலும் அடைய முடியும். என் பகவானே, அப்படிப் பட்டவர்களுக்கும் கூட கருணை காட்டும் அளவுக்கு நீங்கள் கருணை படைத்தவர்.

பதம் 3.21.15 : அதனால், அதே இயல்புள் ஒரு பெண்ணை மணந்து கொள்ள விரும்பி, என் இல்லற வாழ்வில் நிறைவைத் தரும் அந்தப் பெண்ணாக விளங்கப் போகிறவளைக் கொண்டு, என்னுடைய சிற்றின்ப ஆசையைத் திருப்தி செய்துகொள்ள நானும் உங்கள் பாதகமலங்களின் பாதுகாப்பை நாடினேன். அப்பாதங்களே எல்லாவற்றுக்கும் மூல காரணமாகும் ஏனென்றால் நீங்கள் ஆசையாகிய மரம் போன்றவர்.

பதம் 3.21.16 : ஓ என் பகவானே, நீங்களே எல்லா உயிர்ப் பொருள்களுக்கும் தலைவராகவும் வழிகாட்டியாகவும் விளங்குபவர். உங்களின் வழி காட்டுதலின் கீழ், எல்லாக் கட்டுப்பட்ட ஆன்மாக்களும், கயிற்றால் கட்டப்பட்டது போல, தொடர்ந்து, அவ்வவற்றின் ஆசைகளைத் திருப்தி செய்வதில் ஈடுபட்டுள்ளன. ஒ மதத்தின் உருவே, அவர்களைப் பின்பற்றி, நானும் என்றும் அழியாத காலங்களின் உருவமாகிய தங்களுக்கு எனது படையலை அளித்து வணங்குவேன்.

பதம் 3.21.17 : ஆயினும், பாரம்பரியமான உலக விஷயங்களை விட்டு விட்டவர்கள், இந்த உலக விஷயங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள், ஒருவரோடொருவர் கலந்துரையாடி மயக்கம் தரும் தேனாகிய உங்கள் குணங்கள் செயல்களைப் பருகுவதன் மூலம் உங்கள் பாத கமலங்களாகிய குடையின் பாதுகாப்பைப் பெற்றவர்கள் ஆகிய அனைவரும் உலக வாழ்வில் மனித உடம்பின் எல்லாத் தேவைகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.

பதம் 3.21.18 : மூன்று ஆரங்களைக் கொண்ட உங்கள் சக்கரம் என்றும் அழியாத பிரம்மனின் அச்சில் சுழல்கிறது. அது பதின்மூன்று ஆரங்களும், 360 இணைப்புகளும், ஆறு விளிம்புகளும், அதன் மேல் செதுக்கப்பட்ட எண்ணற்ற இலைகளும் கொண்டது. படைக்கப்பட்ட பொருள்களின் வாழ்நாளைத் துண்டித்தாலும், அச்சம் தரும் சுழற்சி வேகம் உடைய இந்தச் சக்கரம் பகவானுடைய பக்தர்களின் வாழ்நாளைத் தொட முடியாது.

பதம் 3.21.19 : என் அன்பு பகவானே, நீங்கள் மட்டும் (தனியாக) அண்டங்களைப் படைக்கிறீர்கள். ஓ இறைவனுக்கெல்லாம் இறைவனே இந்த அண்டங்களைப் படைக்க விரும்பி, பின் அவற்றைப் படைத்து, காத்து மீண்டும் உங்கள் சொந்த ஆற்றலால் அவற்றை அழிக்கிறீர்கள். அவை யோக மாயை எனப்படும் உங்கள் இரண்டாவது ஆற்றலின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரு சிலந்தி தன்னுடைய ஆற்றலால் நூலாம் படையைப் படைத்து அதை மீண்டும் அழிப்பது போல நீங்களும் செயல்படுகிறீர்கள்.

பதம் 3.21.20 : என் அன்பான பகவானே, உங்களுடைய விருப்பம் இல்லாவிட்டாலும் எங்களுடைய புலன் திருப்திக்காக நீங்கள் இந்த முழுமையான நுட்பமான பூதங்களால் ஆகிய படைப்பை வெளிப்படுத்துகிறீர்கள். உங்களுடைய அகாரணமான கருணை எங்கள் மீது இருக்கட்டும். ஒளி பொருந்திய துளசி இலைகளால் ஆன மாலையால் அலங்கரிக்கப்பட்டு உங்களுடைய அழிவற்ற வடிவத்தில் எங்கள் முன் தோன்றியுள்ளீர்கள்.

பதம் 3.21.21 : பிறர் வந்து சரண் அடையத்தகும் உங்களுடைய தாமரைப் பாதங்களுக்கு என் மரியாதைக்குரிய வணக்கங்களை, நான் தொடர்ந்து சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் அற்பமானவனிடத்தில் கூட நீங்கள் எல்லா ஆசிகளைப் பொழிகிறீர்கள். உங்களை உணருவதன் மூலம் பலன் நோக்குச் செயல்களிலிருந்து எல்லா உயிர் பொருள்களின் பிடிப்பை அகற்ற, நீங்கள் உங்கள் தனித்த சக்தியால் இந்த ஜடவுலகங்களை விரிவுபடுத்தியுள்ளீர்.

பதம் 3.21.22 : மைத்ரேயர் தொடர்ந்தார். உண்மையாக இந்தச் சொற்களால் புகழப்பட்டு, பகவான் விஷ்ணு கருடனின் தோள்களின் மீது அமர்ந்து கொண்டு மிகவும் அழகாக ஒளி வீசிக் கொண்டு, அமிர்தம் போன்ற இனிய சொற்களுடன் பதில் கூறினார். முனிவரை அன்புடன் கூடிய புன்னகையுடன் விஷ்ணு பகவான் பார்த்த போது அவரது புருவங்கள் மிக அழகுடன் அசைந்தன.

பதம் 3.21.23 : பகவான் கூறினார்: உங்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய வந்து, உங்கள் மனத்தாலும் புலன்களினாலும் என்னை எதற்காக வழிபட்டீர்களோ அதற்குரிய பலனை முன்னமேயே ஏற்பாடு செய்துவிட்டேன்.

பதம் 3.21.24 : பகவான் தொடர்ந்தார். என் அன்பான ரிஷியே, ஓ உலகில் உள்ள உயிர்ப் பொருள்களின் தலைவரே, என்னை வழிபடுவதன் மூலம் பக்தித் தொண்டு புரிபவருக்கு, சிறப்பாக எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்து விட்ட உங்களைப் போன்றவருக்கு, விரக்தி என்ற கேள்விக்கே இடமில்லை.

பதம் 3.21.25 : பகவான் பிரம்மனின் மகனும், தன் நல்ல செயல்களால் அறியப்பட்டவரும், ஆகிய மன்னர் மன்னன் ஸ்வாயம்புவ மனு, பிரம்மாவதத்தை இருப்பிடமாகக் கொண்டு ஏழு கடல்களுடன் பூமியை ஆட்சி செய்தார்.

பதம் 3.21.26 : ஓ பிராம்மணனே, நாளை மறுநாள் மதச் செயல்களில் வல்லுநராகிய அந்தப் புகழ் வாய்ந்த மன்னர் தன் அரசியான சாதரூபாவுடன் உங்களைப் பார்க்க விரும்பி இங்கு வருவார்.

பதம் 3.21.27 : அவருக்கு கரிய கண்களை உடைய பருவமடைந்த ஒரு பெண் உள்ளாள். அவள் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாள். அவள் நன்னடத்தையும் எல்லா நல்ல குணங்களும் கொண்டவள். அவளும் ஒரு நல்ல கணவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள். என் அன்பான ஐயா, அவளுக்குமிகப் பொருத்தமான பெற்றோர், தங்களது மகளை உங்களுக்கு மனைவியாக்க, உங்களைக் காண வருவார்கள்.

பதம் 3.21.28 : ஓ புனித முனிவரே, நீங்கள் இத்தனை ஆண்டுகளாக உங்கள் மனதில் நினைத்த வண்ணமே அந்த இளவரசி இருப்பாள். அவள் விரைவில் உங்களுடையவள் ஆகி, உங்கள் மனத் திருப்திக்கு ஏற்றபடி தொண்டு செய்வாள்.

பதம் 3.21.29 : உங்களால் அவளிடம் உண்டாக்கப்பட்ட கருவிலிருந்து அவர் ஒன்பது பெண்களைப் பெற்றெடுப்பாள், நீங்கள் பெற்ற பெண்களின் மூலமாக, முனிவர்கள் குழந்தைகளைப் பெறுவார்கள்.

பதம் 3.21.30 : என்னுடைய கட்டளையைச் சரியாக நிறைவேற்றுவதன் மூலம் உங்கள் மனது தூய்மையாக்கப்படுவதுடன், உங்களின் எல்லாச் செயல்களின் பயன்களையும் என்னிடம் விட்டுவிட்டு, இறுதியில் நீங்கள் என்னை வந்தடைவீர்கள்.

பதம் 3.21.31 : எல்லா உயிர்ப் பொருள்களிடம் அன்பு காட்டினால், நீங்கள் தன்னை உணரும் நிலையை அடைவீர்கள். எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு பற்றிய உறுதியைக் கொடுத்து, நீங்கள் உங்களை உற்று நோக்குவது மட்டுமின்றி என்னில் எல்லா அண்டங்களையும் உங்களிடம் என்னையும் காண்பீர்கள்.

பதம் 3.21.32 : ஓ சிறந்த முனிவரே, நான் உங்கள் மனைவி தேவஹூதிக்குப் பிறந்த ஒன்பது பெண்களுடன், என்னுடைய முழு பரிபூரணமான உருவத்தோடு மகனாகப் பிறப்பேன். பின்னர் இறுதியான கொள்கை மற்றும் கோட்பாடுகளுடன் தொடர்பு கொள்ளும் தத்துவத்தின் முறையை அவளுக்கு அறிவுறுத்துவேன்.

பதம் 3.21.33 : மைத்ரேயர் தொடர்ந்தார்; இவ்வாறு கர்தம முனிவரிடம் பேசியதும், கிருஷ்ண உணர்வில் புலன்கள் இருந்தால் மட்டுமே தன்னை வெளிப்படுத்தும் பகவான், ஸரஸ்வதி நதியால் சூழப்பட்ட பிந்து ஸரோவர் எனப்படும் ஏரியிலிருந்து வெளிப்பட்டார்.

பதம் 3.21.34 : முனிவர் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, எல்லா விடுதலை அடைந்த ஆன்மாக்களும் வாயாரப் புகழும், வைகுண்டத்திற்குச் செல்லும் பாதையில் பகவான் சென்றார். ஸாம வேதத்தின் அடிப்படையை உருவாக்கும் பாசுரங்களைக் கேட்டுக் கொண்டு முனிவர் நின்றார். அந்தப் பாசுரங்கள் பகவானின் வாகனமாகிய கருடனின் படபடக்கும் இறகுகளின் அதிர்வினால் வெளியாகியது.

பதம் 3.21.35 : பின்னர், பகவான் சென்ற பிறகு, வணங்கத்தக்க கர்தம முனிவர் பிந்து ஸரோவராவின் கரையில் தங்கி, பகவான் கூறிய நேரத்திற்காகக் காத்திருந்தார்.

பதம் 3.21.36 : ஸ்வாயம்புவ மனு, தன் மனைவியுடன் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறினார். தன் மகளையும் அவர்களுடன் அதில் ஏற்றி, இவ்வுலகெங்கும் பயணம் செய்யத் தொடங்கினர்.

பதம் 3.21.37 : ஓ விதுரனே, பகவானால் முன்கூட்டியே உரைக்கப்பட்ட அந்த நாளில், தன்னுடைய துறவறத்தின் சடங்குகளைப் பூர்த்தி செய்த முனிவரின் துறவி மாடத்தை அவர்கள் அடைந்தனர்.

பதங்கள் 3.21.38 – 3.21.39 : ஸரஸ்வதி நதியின் தண்ணீரால் வெள்ளமான புனித ஏரி பிந்து ஸரோவரா, மேம்பட்ட முனிவர் கூட்டத்திற்கு விரும்பி அணுகும் இடமாக விளங்கியது. அதன் புனித நீர் நன்மைக்கு உகந்ததாக மட்டும் இல்லாமல், அமிர்தம் போல் இனிமையாகவும் இருந்தது. அது பிந்து ஸரோவர என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால் தன்னுடைய பாதுகாப்பை விரும்பிய ஆன்மீக முனிவருக்காக ஏற்பட்ட மிகுந்த கருணையால் மூழ்கிய பகவானின் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர்த் துளிகள் அதில் விழுந்தன.

பதம் 3.21.40 : பலவித ஒலிகளை வெளியிடும் விலங்குகள் பறவைகளுக்குப் பாதுகாப்பு தருவதோடு, எல்லாப் பருவங்களிலும் மலர்களும் பழங்களும் அதிகம் உள்ள கொத்துக்களுடன் கூடிய மரங்களாலும் கொடிகளாலும் ஏரியின் கரை சூழப்பட்டிருந்தது. அது காட்டு மரத்தோப்புகளின் அழகால் மேலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பதம் 3.21.41 : அளவற்ற மகிழ்ச்சியோடிருந்த பறவைகளின் ஒலி அந்த இடத்தில் எதிரொலித்தது. மயங்கிய தேனீக்கள் அங்கு அலைந்து திரிந்தன. களிப்புடைய மயில்கள் பெருமையுடன் நடனமாடின. மகிழ்ச்சியான குயில்கள் ஒன்றோடொன்று அழைத்துத் தம்முள் கூவிக் கொண்டன.

பதங்கள் 3.21.42 – 3.21.43 : பிந்து ஸரோவர் ஏரி, கதம்பம், சம்பகம், அசாகம், கரஞ்ஜம், பகுலம், ஆஸனம், குந்தம், மந்தாரம், குடஜம் மற்றும் இள மாமரங்கள் போன்ற பூத்துக் குலுங்கும் மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காற்று, காரண்டவ வாத்துகள், பிலவங்கள், அன்னங்கள், மீன் கொத்திப் பறவைகள், நீர்க்கோழிகள், கொக்குகள், சக்ரவாகப் பறவைகள் மற்றும் சகோரப் பறவைகளின் இனிய ஒலிகளால் நிறைந்திருந்தது.

பதம் 3.21.44 : மான்கள், பன்றிகள், முள்ளம்பன்றிகள், ஆடுகள், யானைகள், பெரிய குரங்குகள், சிங்கங்கள், குரங்குகள், கீரிப்பிள்ளைகள் மற்றும் கஸ்தூரி மான்களால் ஏரியின் கரைகள் நிரம்பி இருந்தன.

பதங்கள் 3.21.45 – 3.21.47 : முதல் அரசாகிய ஸ்வாயம்புவ மனு, தன் மகளுடன் மிகவும் புனிதமான இடத்தில் நுழைந்து முனிவரின் அருகில் சென்று பார்த்த போது, முனிவர் தம் துறவு மாடத்தில் அமர்ந்திருந்தார். அவிர்பாகத்தைச் சொரிவதன் மூலம் புனித நெருப்பைத் தணிவித்தார். அவரது உடல் அறிவுக் கூர்மையுடன் ஒளிர்ந்தது. அவர் துறவறத் தவத்தில் நெடுங்காலம் ஈடுபட்டிருந்த போதிலும், பகவான் தன் அன்புப் பார்வையை அவர் பக்கமாகத் திருப்பியதாலும், மேலும் சந்திரன் போலும் பகவானின் குளிர்ந்த சொற்களை அமிர்தமழையாக அவர் கேட்டதாலும், அவர் உடல் சீர்குலையவில்லை. முனிவர் உயரமாக இருந்தார். அவர் கண்கள் தாமரை இதழ்களைப் போல் பெரிதாய் இருந்தன. அவர் தலையில் சடைமுடி இருந்தது. அவர் கந்தல் ஆடை அணிந்திருந்தார். ஸ்வாயம்புவ மனு அவரை அணுகிப் பார்த்தபோது, அவர் பட்டை தீட்டாத வைரம் போல் மங்கிய தோற்றத்துடன் விளங்கினார்.

பதம் 3.21.48 : மன்னர் அவருடைய ஆஸ்ரமத்திற்கு வந்து, தமக்கு முன்னால் தலைவணங்குவதைப் பார்த்த கர்தம முனிவர், மன்னரை ஆசிகள் கூறி, தகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.

பதம் 3.21.49 : முனிவரின் கவனத்தை ஈர்த்த பின்னர், மன்னர் கீழே அமர்ந்து மௌனமாக இருந்தார். பகவானின் கட்டளைகளை நினைவில் கொண்டு இனிய குரலில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கர்தம முனிவர் அரசரிடம் பின்வருமாறு பேசினார்.

பதம் 3.21.50 : ஓ பிரபுவே, நீங்கள் மேற்கொண்டுள்ள பயணமானது நிச்சயமாக நேர்மையானவர்களைக் காக்கவும், அசுரர்களைக் கொல்லவும் உறுதி செய்யப்பட்டதாகும். நீங்கள் ஸ்ரீ ஹரியின் காக்கும் ஆற்றலின் உரு ஆவீர்கள்.

பதம் 3.21.51 : அவசியமான பொழுது, நீங்கள் சூரியனின் பகுதி, சந்திரனின் பகுதி, அக்னியாகிய தீக்கடவுளின் பகுதி, இந்திரன் சொர்க்கத்தின் பிரபு, வாயு பகவான், நீதிக் கடவுள், தர்மன் அறக்கடவுள், மற்றும் வருணன், நீரை ஆட்சி புரிபவர் ஆகியோராக உரு எடுக்கிறீர்கள். பகவான் விஷ்ணுவைத் தவிர வேறு யாரும் அல்லாத உங்களுக்கு எல்லா வணக்கங்களும் உரித்தாகுக.

பதங்கள் 3.21.52 – 3.21.54 : பார்த்ததுமே குற்றவாளிகளை அச்சுறுத்தக் கூடிய உங்களது அலங்கரிக்கப்பட்ட தேரில் நீங்கள் ஏறவில்லை என்றால், உங்கள் வில்லைச் சுண்டுவதால் எழும் பயம் தரத்தக்க ஒலியை நீங்கள் உண்டாக்கவில்லை என்றால், ஒளி பொருந்திய கதிரவன் போல இந்த உலகை நீங்கள் வலம் வரவில்லை என்றால், பூமி நடுங்குவதற்குக் காரணமானதும், கால்களால் பூமியை மிதித்துச் செல்லும் பெரிய காலாட்படையை நீங்கள் நடத்தவில்லை என்றால், பின்னர், பகவானால் படைக்கப்பட்ட எல்லா வருணங்களையும் ஆசிரமங்களையும் ஆட்சி புரியும் ஒழுக்கம், சட்டங்கள், நீதிநெறிகள் ஆகிய அனைத்தும் போக்கிரிகளாலும் கயவர்களாலும் உடைக்கப்படும்.

பதம் 3.21.55 : நீங்கள் இந்த உலக நிலையைப் பற்றி சிந்திக்கா விட்டால், நேர்மையின்மை செழிக்கும், பணத்தின் பின்னால் அலையும் மனிதர்கள் தம் போக்கில் போய்க்கொண்டிருப்பர். அம்மாதிரி போக்கிரிகளால் தாக்கப்பட்டு இந்த உலகம் அழிந்து போகும்.

பதம் 3.21.56 : ஓ வீரம் மிகுந்த மன்னரே, உலகில் இந்த நிலையில் இருந்தும் கூட, நீங்கள் இங்கு வந்ததன் நோக்கத்தை நான் கேட்கிறேன். எதுவாக இருந்தாலும், எதையும் ஒதுக்காமல் நாங்கள் நிறைவேற்றி வைப்போம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare