அத்தியாயம் – 15
கடவுளின் பரலோக வர்ணணைகள்
பதம் 3.15.1 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: அன்பான விதுரனே கச்யப முனிவரின் மனைவி திதிக்குத் தன் கருப்பையில் வளரும் மைந்தர்கள் தேவர்களுக்குத் தொல்லைக்கொடுக்கப் போகிறார்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தும் அவள் பிறருக்குத் துன்பமளிக்கப் போகும் கச்யப முனிவரின் ஆற்றல் மிக்க சுக்கிலத்தைத் தன் அடிவயிற்றில் தொடர்ந்து நூறு வருடங்கள் சுமந்தாள்.

பதம் 3.15.2 : திதி கொண்ட கர்ப்பத்தின் வேகத்தினால் அனைத்து உலகங்களும் சூரிய சந்திர ஒளியின்றிப் போயின. அவ்வேகத்தினால் பாதிக்கப்பட்டப் பல்வேறு உலகங்களைச் சேர்ந்த தேவர்கள் பிரம்மதேவரை அணுகி அவரிடம் “எல்லாத் திக்குகளும் இருளால் சூழப்பட்டிருக்கின்றன; இதன் காரணம் என்ன?” என்று கேட்டனர்.

பதம் 3.15.3 : அதிர்ஷ்டமிக்க தேவர்கள் கூறினர்: ஓ, சிறப்பிற்குரியவரே, இவ்விருளைக் காணுங்கள், இதனை நீர் நன்கறிவீர். இது எங்களை கவலைக் கொள்ளச் செய்கிறது. காலத்தின் பாதிப்பு உம்மைத் தொட முடியாத காரணத்தினால் உமக்கு முன்னால் தோன்றாதது என்று எதுவுமில்லை.

பதம் 3.15.4 : ஓ, தேவதேவனே, பிரபஞ்சத்தைத் தாங்குபவரே, அனைத்து உலகங்களிலுமுள்ள தேவர்கள் அனைவர்க்கும் மணிமுடியாகத் திகழ்பவரே, ஆன்மீக மற்றும் இம்மண் உலகங்களிலுள்ள அனைத்து உயிர்களின் எண்ணங்களையும் நீர் நன்றாக அறிவீர்.

பதம் 3.15.5 : ஓ, ஆற்றலுக்கும் அறிவியலுக்கும் மூலாதாரமாக விளங்குபவரே, உமக்கு எமது அனைத்து வந்தனங்களும் உரியதாகுக- முழுமுதற் கடவுளிடமிருந்து வேறுபடுத்தப்பட்ட இரஜோ குணத்தினை நீர் ஏற்றுக் கொண்டிருக்கிறீர். புறச் சக்தியான மாயையின் உதவியினால் அவ்யக்த மூலத்தினின்று நீர் பிறந்தீர். அனைத்து வந்தனங்களும் உமக்கே ஆகுக.

பதம் 3.15.6 : ஓ, தேவனே! அனைத்து உலகங்களும் உம்மிடத்தில் இருக்கின்றன. அவ்வுலகங்களில் வாழும் அனைத்து உயிர்களும் உம்மிடமிருந்தே தோன்றின. ஆகையினால் இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கு நீரே காரணமாவீர். எவனொருவன் எந்தவித மாற்றமுமின்றி உம்மைத் தொடர்ந்து தியானிக்கின்றானோ அவன் பக்தித் தொண்டினை எய்துகிறான்.

பதம் 3.15.7 : சுவாசப் பயிற்சி முறையினால் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துபவர்களுக்கு இந்த உலகில் தோல்வி என்பதே கிடையாது. அவர்கள் சுயபக்குவமுடைய ஞானிகள் ஆகின்றனர். யோகத்தின் இந்நிறைவினாலேயே அவர்கள் உமது கருணையினை அடைகின்றனர்.

பதம் 3.15.8 : பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து உயிர்களும், காளைமாடு மூக்கணாங்கயிற்றின் மூலம் வழிகாட்டப்படுதல் போல் வேத மந்திரங்களின் கட்டளைகளினால் வழிநடத்தப்படுகின்றன. வேதங்களின் விதிகளை யாராலும் மீற முடியாது. வேதங்களை அளித்தவரும், எல்லோர்க்கும் தலைவராகவும் விளங்கும் உமக்கு எமது மரியாதைகளை அர்ப்பணிக்கிறோம்.

பதம் 3.15.9 : தேவர்கள் பிரம்ம தேவரை வணங்கினர்: அருள்கூர்ந்து உமது கருணை மிகு பார்வையினை எம்மீது வைப்பீராக. நாங்கள் துன்பப் புயலில் சிக்குண்டிருக்கிறோம். எம்மைச் சூழ்ந்திருக்கும் இருளினால் எமது அனைத்துக் கடமைகளும் தடைபட்டிருக்கின்றன.

பதம் 3.15.10 : எரிபொருள் நெருப்புப் பிழம்பினை அதிகரிக்கச் செய்வதுபோல், திதியின் கருப்பையில் புகுந்த கச்யபரின் சுக்கிலம் உருவாக்கிய கருவானது இப்பிரபஞ்சம் முழுவதும் இருட்கடலில் மூழ்குவதற்குக் காரணமாகியது.

பதம் 3.15.11 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: உன்னதமான ஒலியுதிர்வுகளினால் உணர்ந்துக் கொள்ளப்படும் பிரம்ம தேவர், தேவர்களின் பிரார்த்தனைகளின் மனம் மகிழ்ந்து அவர்களைத் திருப்திப்படுத்த முயன்றார்.

பதம் 3.15.12 : பிரம்ம தேவர் கூறினார்: சனகர், சநாதனர், சநந்தனர், சநத்குமாரர் என்னும் நால்வரும் எனது மனதிலிருந்து பிறந்தவர்கள். உங்கள் அனைவர்க்கும் அந்நால்வரும் மூத்தோர்கள் ஆவர், சில நேரங்களில் அவர்கள் பௌதிக மற்றும் ஆன்மீக வானங்களில் எந்தவித குறிப்பிட்ட விருப்பமுமின்றி பயணம் செய்வர்.

பதம் 3.15.13 : இவ்வாறு எல்லாப் பிரபஞ்சங்களுக்கும் பயணம் செய்து முடித்த பின்னர். அவர்கள் அனைத்து விதமான மாசுக்களில் இருந்தும் விடுதலை பெற்றதினால் ஆன்மீக வானத்தினுள்ளும் நுழைந்தனர். இந்த ஆன்மீக வானத்தில் வைகுண்ட லோகம் போன்ற ஆன்மீக உலகங்கள் இருக்கின்றன. இவைகளே முழுமுதற் கடவுள் மற்றும் அவரது தூய பக்தர்களின் உறைவிடங்களாகும். இவையே கண் கூடான இந்த உலகவாசிகள் அனைவராலும் வணங்கப்படுபவையுமாகும்.

பதம் 3.15.14 : வைகுண்ட லோகத்தில் இருக்கும் அனைவரும் முழுமுதற் கடவுளின் வடிவத்தைப் போன்று நான்கு கரங்களையுடையவர்களாக இருப்பர். இவர்கள் புலனுகர்ச்சி விருப்பம் எதுவும் இன்றி எப்பொழுதும் பகவானது பக்தித் தொண்டிலேயே ஈடுபட்டிருப்பர்.

பதம் 3.15.15 : வைகுண்ட லோகத்தில் இருக்கும் முழுமுதற் கடவுளே ஆதிக்கடவுளாவார். அவரை வேத இலக்கியங்களின் மூலமே அறிந்து கொள்ள முடியும். அவரிடம் இரஜோ மற்றும் தமோ குணத்திற்குத் துளியளவு இடமும் கிடையாது. அவர் மாசு மருவற்ற சத்துவ குணத்தினால் நிரப்பப்பட்டவர். அவர் பக்தர்களுக்கு சமய அறநெறியில் முன்னேற்றம் அளிக்கிறார்.

பதம் 3.15.16 : வைகுண்ட லோகத்தில் பல வனங்கள் இருக்கின்றன.அவையெல்லாம் மிகவும் புனிதமானவையாகும். அவ்வனங்களில் இருக்கும் மரங்கள் எல்லாம் நமது விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக விருட்சங்களாகும். எல்லாப் பருவங்களிலும் அவை மலர்களும், கனிகளும் பூத்துக் குலுங்கும். இதன் காரணம் வைகுண்ட லோகத்தில் உள்ள அனைத்தும் தனி உருவம் உடையன என்பதோடு ஆன்மீகமானவையும் கூட.

பதம் 3.15.17 : வைகுண்ட லோகத்தில் வாழ்பவர்கள் தங்கள் மனைவியரும், காதலியரும் உடன்வர விமானங்களில் பறப்பர். இவ்வாறு பறக்கும் பொழுது எப்பொழுதும் அமங்களக் குணங்கள் அற்ற பகவானின் குணங்களையும், செயல்களையும் அவர்கள் நித்தியமாகப் பாடுவர். இவ்வாறு பகவானின் புகழைப்பாடிக் கொண்டிருக்கும் பொழுது, தேனைச் சுமந்து கொண்டிருக்கும் நறுமணமிக்க மாதவி மலர்கள் கூட அவர்களுக்கு முக்கியமற்றவையாகத் தோன்றும்.

பதம் 3.15.18 : தலைமைத் தேனீ உச்சஸ்தாயியில் ரீங்கரிப்பதின் மூலம் இறைவனின் புகழையே பாடுகிறது. அப்போது புறா, குயில், நாரை, சக்கரவாகம், அன்னம், கிளி, கௌதாரி, மயில் போன்றவை எழுப்பும் ஓசையில் ஓர் இடைக்கால அமைதி ஏற்படுகிறது. இவ்வுன்னதப் பறவைகள் தங்கள் சொந்தப் பாடலையும் நிறுத்திவிட்டு பகவானின் புகழைக் கேட்பதில் ஆவல் கொள்கின்றன.

பதம் 3.15.19 : மேலும், மந்தாரம், குந்தம், குரபகம், உத்பலம், சம்பகம், அர்ணம், புன்னாகம், நாககேஸரம், பகுலம், மல்லிகை, மற்றும் பாரிஜாதம் போன்ற நறுமண மலர்கள் பல இருந்த போதிலும் அவை துளசிச் செடிசெய்யும் தவத்திலேயே கவனமுடையனவாக இருந்தன. துளசிக்கே பகவான் முதலிடம் தருகிறார். துளசி இலைகளையே அவர் மாலையாக அணிந்திருக்கிறார்.

பதம் 3.15.20 : வைகுண்ட லோகத்தில் உள்ளவர்கள், வைடூரியம், மரகதம் மற்றும் பொன்னால் செய்யப்பட்ட ஆகாய விமானங்களில் பயணம் செய்வர். புன்னகை முகமும் உடைய காதல் மங்கையர் சூழ்ந்திருந்த போதிலும் அவர்களது கவர்ச்சியினாலும் அழகினாலும் வைகுந்தவாசிகள் ஒருபோதும் உணர்ச்சி வசப்படுவதில்லை.

பதம் 3.15.21 : வைகுண்ட லோகத்திலுள்ள பெண்கள் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமி தேவியைப் போல் எழில்மிக்கவர்களாவர். உன்னத அழகுடைய அம்மங்கையரின் கரங்கள் செந்தாமரை மலர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும். அவர்களது பாதங்களிலோ சலங்கைகள் இனிய ஓசை எழுப்பிக் கொண்டேயிருக்கும். இவர்கள் பொன்னால் அலங்கரிக்கப்பட்டப் பளிங்குக் கல் மதில்களை, முழுமுதற் கடவுளின் கருணையைப் பெறுவதற்காக சிலநேரங்களில் துடைத்து சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.

பதம் 3.15.22 : அதிர்ஷ்ட தேவதைகள் தங்கள் நந்தவனத்திலுள்ள, பவளத்தினால் ஆனக் கரைகளையுடைய தாமரைத் தடாகங்களின் கரைகளில் துளசி இலைகளை அர்ப்பணித்து பகவானை வழிபடுவர். இவ்வாறு பகவானை வழிபடும் பொழுது நீரினுள் அவர்கள் தங்களது நேரான நாசிகளையுடைய எழில் முகங்களின் நிழல்களைக் காண்பர். பகவான் முத்தமிடுவதினால் நாணிச் சிவக்கும் எழில் முகங்களைப் போல் அவர்களது அழகியத் திருமுகங்கள் காட்சியளிக்கும்.

பதம் 3.15.23 : துரதிர்ஷ்டசாலிகள் வைகுண்ட லோகத்தின் விளக்கங்களைப் பற்றி விவாதிக்காது, ஒருவனது புத்தியைக் குழப்புவதும், கேட்பதற்குத் தகுதியற்றதுமான விஷயங்களைப் பேசுவதில் ஈடுபட்டிருப்பது மிகவும் இரங்கத்தக்கதாகும். வைகுண்ட லோகம் போன்ற புனிதமான விஷயங்களை விடுத்து நடப்பு உலகைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அறியாமை என்னும் அந்தகாரத்தினுள் தூக்கி எறியப்படுவார்கள்.

பதம் 3.15.24 : பிரம்ம தேவர் கூறினார்: அன்பிற்குரிய தேவர்களே, மனித வடிவு பெற்ற வாழ்க்கையானது, மிகவும் முக்கியமானது. நாமெல்லாம் கூட அந்த வாழ்க்கையினைப் பெற விருப்பங் கொள்கிறோம். மனித வடிவு கொண்ட வாழ்க்கையில் ஒருவன் சமய உண்மையின் நிறைவினையும் ஞானத்தையும் அடையமுடியும். மனித வடிவு பெற்ற வாழ்க்கையில் கூட ஒருவன் முழுமுதற் கடவுளைப் பற்றியோ, அவரது உறைவிடத்தைப் பற்றியோ அறிந்துக் கொள்ளவில்லையென்றால் அவன் புற இயற்கையின் செல்வாக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.

பதம் 3.15.25 : பகவானின் பெருமைகளைக் கேட்கும்பொழுது மெய்மறந்து, பெருமூச்சு விட்டு, உடல் புளகிதம் அடைந்து கண்ணீர் பெருக்கெடுப்ப வர்கள் தியானங்களிலோ ஐபதபங்களிலோ அக்கறையில்லாதவர்களாக இருந்தபோதிலும் கூட அவர்கள் கடவுளின் பரலோகத்திற்குச் செல்கின்ற உயர்வு பெறுகிறார்கள். பௌதிகப் பிரபஞ்சங்களுக்கும் மேலே கடவுளின் உலகம் இருக்கிறது. இது பிரம்ம தேவராலும், பிற தேவர்களினாலும் விரும்பப்படுகிறது.

பதம் 3.15.26 : இவ்வாறு மாமுனிவர்களான சனகர், சநாதனர், சநந்தனர், மற்றும் சநத் குமாரர் தமது யோக ஸித்தியின் பயனால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆன்மீக உலகிலுள்ள வைகுண்டத்தை அடைத்தவுடன் முன்னர் எப்பொழுதும் அனுபவித்தறியாத மகிழ்ச்சியினை உணர்ந்தனர். ஆன்மீக வானம் முழுவதும் பகவானின் சிறந்த பக்தர்களினால் ஓட்டிச் செல்லப்படும் விமானங்களினால் ஒளி செய்யப் பட்டிருப்பதையும் அங்கே முழுமுதற் கடவுளின் ஆட்சி நிலவுவதையும் அவர்கள் கண்டனர்.

பதம் 3.15.27 : பகவானின் உறைவிடமான வைகுண்ட புரியின் ஆறு வாயில்களைக் கடந்து சென்ற பின்னரும் கூட அங்கே செய்யப்பட்டிருந்த அலங்காரங்களினால் அவர்கள் ஆச்சரியம் எதுவும் அடையவில்லை. ஏழாவது வாயிலில் ஒத்தவயதுடைய இருவர் கைகளில் கதாயுதம் தாங்கி, வைர வைடூரியங்களினால் ஆன கிரீடங்கள், கை வளைகள் மற்றும் கண்ணைக் கவரும் வண்ண ஆடைகளும் அணிந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டனர்.

பதம் 3.15.28 : அந்த இரண்டு காவலர்களின் கழுத்தில் இடப்பட்டு நான்கு கரங்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்த புத்தம் புதுமலர்களினாலான மாலையில் வண்டுகள் மதுவருந்தி மயங்கிக் கொண்டிருந்தன. அவர்களது நெறித்த புருவங்களிலிருந்தும், நீண்டு விடைத்த நாசிகளிலிருந்தும், சிவந்த விழிகளிலிருந்தும் அவர்கள் எக்காரணத்தினாலோ சீற்றமுற்றிருக்கின்றனர் என்று தெரிந்தது.

பதம் 3.15.29 : சனகரின் தலைமையின் கீழ் உள்ள முனிவர்கள் சென்றபோது எங்கினும் தாமாகவே கதவுகள் திறந்து இருந்தன. “யாம் ” “எமது” என்னும் எண்ணம் முனிவர்களிடம் ஒரு சிறிதும் இருந்ததில்லை. இவ்வாறு வைர வைடூரியங்களினால் பதிக்கப் பெற்றிருந்த ஆறு வாயில்களையும் எந்தவித சிரமமுமின்றி கடந்து சென்று அவர்கள் களங்கமற்ற மனதினராகத் தமது விருப்பம்போல் ஏழாவது வாயிலினுள் நுழைந்தனர்.

பதம் 3.15.30 : அந்நான்கு முனிவர்களும் சூழலைத் தவிர வேறு ஆடையெதுவும் அணியாமல் பார்ப்பதற்கு ஐந்து வயது பாலர்களைப் போன்று தோன்றினாலும் அவர்கள் உயிர்கள் அனைவர்க்கும் மூத்தவர்கள் என்பதோடு ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவர்களும் கூட. ஆனால் அவர்களது தோற்றத்தைக் கண்ட பகவானால் சிறிதும் விரும்பப்படாத குணங்களையுடைய அவ்விரு காவலர்களும் முனிவர்களின் பெருமைகளை அறியாது, அவர்களை இழிவாகக் கருதி அவர்கள் தடுக்கப்படுவதற்கு உரியவர்கள் அல்லர் என்ற போதிலும் அதனை அறியாது தமது கரங்களிலுள்ள ஈட்டிகளினால் தடுத்து நிறுத்தினர்.

பதம் 3.15.31 : அம்முனிவர்கள் மேலான தகுதியுடையவராயிருந்தும் பிற தேவர்கள் முன்னிலையில், தாம் மேலே செல்ல முடியாதவாறு ஸ்ரீஹரியின் வாயில் காவலர்களினால் தடைசெய்யப்பட்டவுடன் அவர்களது விழிகள் சிவந்தன. தங்களது நேசிப்பிற்குரிய குருவும், முழுமுதற் கடவுளுமான ஸ்ரீ ஹரியினைக் காண வேண்டும் என்னும் ஆர்வம் தடை செய்யப்பட்டதினால் எழுந்த சினமுமே அதன் காரணமாம்.

பதம் 3.15.32 : முனிவர்கள் கூறினர்: யார் இந்த இருவர்? பகவானுக்குப் பணி செய்யும் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டும் முரண்பட்ட செயலைச் செய்கின்றார்கள். பகவானிடமுள்ள அதே உயர்குணங்கள் இவர்களிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடியதாயிற்றே? வைகுண்ட லோகத்தில் இவர்கள் இருவரும் எப்படி வாழ்கின்றனர்? இறைவனது உலகத்தில் பகைவர் எவ்வாறு நுழைய முடியும்? முழுமுதற் கடவுள் பகைவர்கள் இல்லாதவராயிற்றே. அவர் மீது யார் காழ்ப்புணர்ச்சி கொள்ள முடியும்? இவர்கள் இருவரும் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருத்தல் வேண்டும். அதனால்தான் இவர்கள் பிறரையும் தம்மைப் போல் கருதுகின்றனர்.

பதம் 3.15.33 : வைகுண்டலோகத்தில் முழுமுதற் கடவுளுக்கும் அங்கு வசிப்பவர்களுக்குமிடையே, எவ்வாறு பெரிய வானத்திற்கும் சிறிய வானத்திற்குமிடையே இணக்கம் நிலவுகிறதோ அதுபோல் முழு இணக்கம் நிலவுகிறது. சுமுகமான இணக்கம் நிலத்தில் அச்சத்தின் விதை எப்படி வேர் கொண்டது? இவ்விரு மனிதர்களும் வைகுண்டவாசிகளைப் போல் ஆடை அணிமணி அணிந்து தோன்றுகின்றனர். ஆனால் இவ்விணக்கமின்மையினை இவர்கள் எங்கிருந்து பெற்றிருந்தல் கூடும்?

பதம் 3.15.34 : ஆகையினால் மாசுற்ற இவ்விருவரையும் எப்படித் தண்டிப்பது என்று நாம் சிந்திப்போம். அத்தண்டனை மிகப் பொருத்தமுடையதாக இருக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் இருவருக்கும் நன்மையருளப்பட வேண்டும். வைகுண்ட வாழ்க்கையிலேயே அவர்கள் இருமையினைக் கண்டதினால் அவர்கள் மாசுடையவர்களே ஆவர். ஆகையினால் அவர்கள் இருவரின் உயிர்கள் மூன்று வகையானப் பகைவர்களைப் பெற்றிருக்கும் மண் உலகிற்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

பதம் 3.15.35 : நிச்சயமாகப் பகவானின் பக்தர்களாயிருந்த அவ்விரு வாயிற் காவலர்களும் தாம் அந்தணர்களினால் சபிக்கப்படப் போகிறோம், அவ்வாறு சபிக்கப்பட்டால் அந்தணரின் சாபத்தினை எந்தவித ஆயுதத்தினாலும் தடுக்க முடியாது என்பதை உணர்ந்து மிக்க கவலையுடன் அந்நால்வரின் பாதங்களில் வீழ்ந்தனர்.

பதம் 3.15.36 : இவ்வாறு முனிவர்களால் சபிக்கப்பட்டப் பின்னர் அக்காவலர்கள் கூறினர்: உம் போன்ற முனிவர்களுக்கு மரியாதையளிக்கத் தவறியமைக்காக நீங்கள் எம்மைத் தண்டித்தது நியாயமானதே. ஆயினும் எங்கள் பிரார்த்தனை என்னவென்றால் உங்கள் சாபத்தினால் நாங்கள் கீழுலகை அடைந்த போதிலும், முழுமுதற் கடவுளை மறக்கச் செய்யும் மாயைக்கு ஒரு நாளும் நாங்கள் ஆளாகிவிடக் கூடாது என்று எங்களுக்கு அருள்புரிய வேண்டுகிறோம்.

பதம் 3.15.37 : அதே நேரம், உந்திச் சுழியிலிருந்து தாமரை மலர் தோன்றியதினால் பத்மநாபர் என்றழைக்கப்படுபவரும், நேர்மையாளர்களின் மகிழ்ச்சியாக விளங்குபவருமான பகவான் தனது பணியாளர்களின் மூலம் முனிவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையினை அறிந்து கொண்டார். அதிர்ஷ்ட தேவதையான லட்சுமி தேவி உடன் வர அவர் துறவிகள் மற்றும் மகா முனிவர்களினால் நாளும் தேடப்படும் திருவடித் தாமரைகளினால் நடந்து அந்த இடத்தையடைந்தார்.

பதம் 3.15.38 : சனகரின் தலைமையின் கீழ் உள்ள முனிவர்கள், தம்மை மறந்த சமாதி நிலையில் தங்கள் உள்ளங்களில் தரிசித்த முழுமுதற் கடவுளான விஷ்ணுவை தங்கள் விழிகளினால் நேரே தரிசிக்கும் பாக்கியம் பெற்றனர். அவர் முன்னே வரும்பொழுது அவரது துணைவர்கள் அவருக்குரிய உபசாரப் பொருட்களான வெண்கொற்றக் குடை மற்றும் வெண்சாமரங்கள் போன்றவற்றை ஏந்திய வண்ணம் வந்தனர். வெண் சாமரங்கள் இரண்டும், இரு வெண்ணிற அன்னங்களைப் போல் வெண்மையான மயிர்களினால் செய்யப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து எழுந்த சுகமானக் காற்று வெண்கொற்றக் குடையிலிருந்த முத்து மாலைகளை அசைத்தபொழுது, முழு வெண்ணிலவிலிருந்து அமிர்தத் துளிகள் சிதறியது போன்றும் வெம்மைக்காற்றினால் வெண்பனிக்கட்டிகள் உருகி வழிவது போன்றும் இருந்தன.

பதம் 3.15.39 : பகவான் மகிழ்ச்சிகளின் உறைவிடமாக இருக்கின்றனர். அவரது மங்களகரமானத் தோற்றம் அனைவரையும் ஆசீர்வதிப்பதற்கானதாகும். அவரது நேசமிகுப் புன்னகையும் பாசமிகுப் பார்வையும் தம்மை ஊடுருவிச் சென்று இதயத்தைத் தொடும். பகவானின் எழில் உடல் கருநிறமுடையதாகும். அவரது பரந்து விரிந்த மார்பு அதிர்ஷ்ட தேவதையின் உறைவிடமாகும். தேவலோகங்களின் உச்சிச் சிகரமெனத் திகழும் ஆன்மீகலோகம் முழுவதையும் அவளே பெருமை செய்கின்றாள். இவ்வாறு ஆன்மீக உலகின் அழகினையும் நல்லதிர்ஷ்டத்தையும் பகவானே தனிப்பட்ட முறையில் விரிவடையச் செய்கின்றார் என்று தோன்றுகிறது.

பதம் 3.15.40 : அவரது விரித்த இடையில் அரைக்கச்சையாக உடுத்திருந்த பொன் மஞ்சள் நிற பட்டாடையின் மீது ஒளிர்கின்ற ஒட்டியாணம் ஒன்றை அணிந்திருந்தார். அவரது மார்பில் தொங்கிய அன்றலர்ந்த மலர்களினால் ஆன மாலையில் வண்டுகள் ரீங்காரமிட்டபடி மொய்த்துக் கொண்டிருந்தன. அவரது வன்மை மிக்க மணிக்கட்டுக்களை கைவளைகள் அணிசெய்தன. அவர் தனது ஒரு கரத்தினைத் தனது வாகனமாக கருடனின் தோள்மீது போட்டிருந்தார். மற்றொரு கரம் தாமரை மலரைச் சுழற்றியபடி இருந்தது.

பதம் 3.15.41 : அவரது திருமுகத்தினை வேறுபடுத்திக் காட்டும் இரு கன்னங்களும், இரு செவிகளில் மின்னலைப் போல் ஒளிசெய்த தொங்கும் மகரகுண்டலங்களின் அழகினை மேலும் அழகு செய்தன. அவரது நாசி உயர்ந்து ஒரே சீராக இருந்தது. வைரங்களும் வைடூரியங்களும் பதிக்கப் பெற்ற மணிமகுடம் அவரது திருமுடியினை அணி செய்து கொண்டிருந்தது. அவரது கழுத்திற்கும் நாற்கரங்களுக்கும் இடையே அழகிய அட்டிகைத் தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் கௌஸ்துப மணி பதிக்கப் பெற்றிருந்த மாலையொன்று அவர் கழுத்தினை அலங்கரித்தது.

பதம் 3.15.42 : பக்தர்களின் மதி நுட்பத்தினால் பல்லாற்றானும் விரித்துரைக்கப்படும் நாராயணரது கண்ணைக் கவரும் அழகு, அழகுக்கெல்லாம் அழகு செய்யும் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமியின் அழகினையும் வெல்லும் வண்ணம் இருந்தது. அன்பார்ந்த தேவர்களே, இவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் காட்டிய பகவான், என்னாலும், சிவபெருமானாலும், உங்கள் எல்லோராலும் வணங்குதற்குரியவராவார். திறந்த விழி மூடாது அவரது அழகினை அள்ளிப் பருகிய முனிவர்கள் ஆனந்தம் மீதுறத் தமது சென்னி தாழ்த்தி அவரது தாமரைத் திருவடிகளைப் பணிந்தனர்.

பதம் 3.15.43 : முழுமுதற் கடவுளின் திருவடித்தாமரைகளின் கீழிருந்த துளசி இலைகளில் இருந்து காற்றில் இழைந்து வந்த நறுமணமானது அம் முனிவர்களின் நாசிகளினுள் புகுந்தவுடன் அவர்கள் அருவப் பிரம்ம உணர்வில் மிகுந்த பற்றுடையோராக விளங்கிய போதிலும், தங்கள் உடல்களிலும் மனங்களிலும் ஒருமாற்றம் ஏற்படுவதை உணர்ந்தனர்.

பதம் 3.15.44 : பகவானின் அழகியத் திருமுகத் தோற்றம் நீல வண்ணத் தாமரையின் உட்பகுதியினைப் போல் அவர்களுக்கு காட்சி தந்தது. அவரது புன்னகையோ மலர்ந்த முல்லை மலர்களைப் போல் தோன்றியது. பகவானின் திருமுக அழகினைக் கண்டவுடன் அம்முனிவர்கள் முழுத் திருப்தியடைந்தனர். அவர்கள் அவரை மேலும் காண விரும்பி அவரது திருவடித்தாமரைகளில் சிவந்த இரத்தினங்களைப் போல் ஜொலித்த விரல் நகங்களை நோக்கினர். இவ்வாறு அவர்கள் பகவானின் உன்னத உடலின் எழிற்கோலங்களை மேலும் மேலும் கண்டு இறுதியில் பகவானின் தனிப்பட்ட வடிவத்தினைத் தியானிப்பதில் வெற்றியடைந்தனர்.

பதம் 3.15.45 : பகவானின் இக்கோலமே யோக முறைகளைப் பின்பற்றுபவர்களினால் தியானிக்கப்படுகிறது. இதுவே தியானத்தில் யோகிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மகா யோகிகளினால் நிரூபிக்கப்பட்டிருப்பதினால் இது கற்பனையன்று, உண்மையே ஆகும். பகவான் எட்டு வகையான சாதனைகளை முற்றிலும் உடையவராக விளங்குகிறார். ஆனால் பிறருக்கோ இச்சாதனைகள் முழு நிறைவுடன் கிடைப்பதற்குச் சாத்தியமே இல்லை.

பதம் 3.15.46 : குமாரர்கள் கூறினர்: போற்றுதலுக்குரிய பகவானே, நீர் அனைவரின் உள்ளங்களிலும் வீற்றிருந்த போதிலும் தீயவர்களிடத்து நீர் தோன்றுவதில்லை. நீர் எல்லையற்றவராக இருந்த போதிலும் எங்கள் மீது கருணை கொண்டு நாங்கள் நேருக்கு நேர் தரிசிக்கும் பாக்கியத்தினை எமக்கு அருளியிருக்கின்றீர். உம்மைப் பற்றி எங்கள் தந்தையான பிரம்ம தேவரிடமிருந்து செவி வழியாக நாங்கள் கேட்டறிந்தவையெல்லாம் உமது அன்புவடிவினைக் கண்ட பின்பே உண்மையில் உணரப்படுகின்றன.

பதம் 3.15.47 : நீரே பூரண உண்மையென்றும், மாசற்ற சத்துவ குணத்தின் உன்னத வடிவத்தினை வெளிப்படுத்தும் முழுமுதற் கடவுள் என்றும், நாங்கள் நன்கறிவோம். இந்த உன்னதமான உமது நித்திய வடிவமானது, தமது உள்ளங்களைத் தூய்மை செய்து கொண்ட மாமுனிவர்களினால், மாறாத பக்தித் தொண்டின் மூலம் பெறும் உமது கருணையினால் மட்டுமே உணர்ந்து கொள்ளக் கூடியதாகும்.

பதம் 3.15.48 : பொருட்களை உள்ளவாறு புரிந்து கொள்வதில் மிகுந்த தேர்ச்சியும் உயர்ந்த மதியும் உடையவர்கள் ஓதுவதற்கும் கேட்பதற்குமுரிய பகவானின் மங்களகரமான செயல்கள் மற்றும் லீலைகளைப் பற்றிய சரிதங்களைக் கேட்பதில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற மனிதர்கள் உலகின் மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படும் லெளகீக விடுதலையினைப் பற்றிக் கூடக் கவலைப்படுவதில்லை என்றால் முக்கியத்துவமற்ற தேவலோகம் போன்ற இன்பங்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பதம் 3.15.49 : ஓ, பகவானே உம்மை வணங்குகிறோம். நீர் எங்களை எந்தவித நரக நிலையுடைய வாழ்க்கையில் பிறக்கச் செய்தாலும், எங்களது இதயங்களும் மனங்களும் உமது திருவடித் தாமரைகளின் தொண்டில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கும் வரை எமது வார்த்தைகள் (உமது செயற்கரியச் செயல்களைப் பேசுவதினால்) துளசி இலைகள் உமது திருவடித் தாமரைகளுக்கு அர்ப்பணிக்கப்படும் பொழுது எவ்வாறு எழில் பெறுகின்றவோ அதுபோல் அழகு செய்யப்படுகின்றன. மேலும் எமது செவிகளோ எப்பொழுதும் உமது உன்னதக் குணங்களின் பாடல்களை கேட்டுக் கொண்டுள்ளன.

பதம் 3.15.50 : ஓ, வணங்குதற்குரிய பகவானே, ஆகையினால் நாங்கள் எமது மரியாதைக்குரிய வந்தனங்களை நீர் எங்கள் முன் மிகவும் அன்புடன் வெளிப்படுத்தியிருக்கும் முழுமுதற் கடவுளின் நித்திய வடிவத்திற்கு அர்ப்பணிக்கின்றோம். உமது மிக உயர்ந்த நித்திய வடிவத்தினைத் அறிவற்ற மூடர்களினால் காணவியலாது. ஆயினும் நாங்கள் எமது மனதாலும், பார்வையாலும் அதனைத் தரிசிப்பதில் மிகுந்த மன நிறைவு அடைகிறோம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare