அத்தியாயம் – 14
திதி எனும் நங்கை மாலையில் கருவுறுதல்
பதம் 3.14.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பகவான் வராஹரின் அவதாரத்தினை மாமுனிவர் மைத்ரேயரிடமிருந்து கேட்ட பின்னர் உயர்ந்த விரதம் மேற்கொண்டிருக்கும் விதுரர் அத்துடன் திருப்தியடையாதவராக, கூப்பியக் கரங்களுடன் மைத்ரேய முனிவரிடம் பகவானின் உன்னதச் செயல்களை மேலும் கூறியருளுமாறு வேண்டினார்.

பதம் 3.14.2 : ஶ்ரீ விதுரர் கூறினார்: ஓ, மாமுனிவரே, ஆதி அசுரனான இரண்யாட்சன் வேள்விகளின் வடிவமான முழுமுதற்கடவுளாகிய பகவான் வராஹரால் கொல்லப்பட்டான் என்பதை நான் சீட பரம்பரையின் வாயிலாக கேட்டிருக்கிறேன்.

பதம் 3.14.3 : பூமியைக் கடலிலிருந்து தூக்கி வந்து திருவிளையாடல் புரிந்த பகவான் வராஹருக்கும் அசுர மன்னனுக்கும் ஏன் யுத்தம் நடந்தது? அந்தணரே, அதன் காரணம் யாது?

பதம் 3.14.4 : புதியனவற்றை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல் என் மனதில் அதிகரிக்கிறது. மேலும் பகவானின்,அவதாரத் தோற்றத்தினைப் பற்றிக் கேட்கக் கேட்கத் திகட்டுவதே இல்லை. ஆகையினால் நம்பிக்கை கொண்ட ஒரு பக்தனுக்கு அவரைப் பற்றி மேலும் மேலும் விளக்கியருள்வீராக.

பதம் 3.14.5 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: ஓ. வீரனே, நீ என்னிடம் கேட்டறிய விழைந்தது ஒரு பக்தனுக்கு மிகவும் பொருத்தமானதானதாகும். ஏனெனில் அது முழுமுதற்கடவுளின் அவதாரங்களைப் பற்றியதாகும். மரணமே எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் ஜனன மரணப் பிணைப்பின் விடுதலைக்கு அவர் ஒருவரே ஆதாரம் விளங்குகின்றார்.

பதம் 3.14.6 : இவ்வீர சரிதங்களைப் பற்றி நாரதமுனிவரிடம் கேட்டறிந்த மன்னன் உத்தானபாத மன்னனின் மைந்தனாகிய துருவன் முழுமுதற் கடவுளின் ஞானம் பெற்றதோடு, மரணத்தின் தலையில் கால் வைத்து ஏறி பகவானின் உறைவிடத்தையும் அடைந்தார்.

பதம் 3.14.7 : பகவான் வராஹருக்கும், இரண்யாட்சனுக்கும் (அசுரன்) நடைபெற்ற யுத்தம் பற்றிய வரலாற்றினை, முன்னொரு சமயம் தேவர்களுக்கெல்லாம் உயர்ந்த தேவரான பிரம்ம தேவன் சக தேவர்களிடம் விவரித்துக் கொண்டிருந்த போது நான் கேள்விப்பட்டேன்.

பதம் 3.14.8 : தட்சனின் புதல்வியான திதி, குழந்தை வேண்டும் என்பதற்காக மரீசியின் மைந்தனும் தனது கணவருமான கச்யபரிடம் மாலை நேரத்தில் உடலுறவு கொள்ள விரும்பினாள்.

பதம் 3.14.9 : மேற்றிசையில் சூரியன் மறைந்தான். யாகத் தீயை நாவாகக் கொண்ட முழுமுதற் கடவுளுக்கு நிவேதனங்களைப் படைத்த பின்னர் முனிவர் சமாதியில் அமர்ந்தார்.

பதம் 3.14.10 : அப்பொழுது எழில் மங்கை திதி தனது இச்சையினை எடுத்துரைத்தாள். ஓ, கற்றறிந்தவரே, மதங் கொண்ட யானை வாழைக்கன்றினை மிதித்துச் சீர்குலைப்பதைப் போல் மன்மதன் தனது மலர்க்கணைகளினால் என்னைத் தொல்லைப்படுத்துகிறான்.

பதம் 3.14.11 : ஆகையினால் உமது முழுக் கருணையினையும் என்மீது வைப்பதின் மூலம் என்னிடம் அன்புடன் நடந்து கொள்வீராக. எனது சக கிழத்திகளின் வளத்தினைக் காண நான் துன்புறுகிறேன், எனக்கும் மழலைச் செல்வம் வேண்டுமென்று விரும்புகிறேன். இதனை நிறைவேற்றுவதின் மூலம் நீரும் மகிழ்ச்சியடையலாம்.

பதம் 3.14.12 : ஒரு பெண் அவளது கணவனின் ஆசியினாலேயே இவ்வுலகில் கௌரவிக்கப்படுகிறான். உம்போன்ற கணவன்மார்களோ புதல்வர்களைப் பெறுவதினால் புகழடைகின்றனர். ஏனெனில் உமது படைப்பின் நோக்கமே உயிர்களைப் பெருக்குவதுதானே!

பதம் 3.14.13 : மிகுந்த செல்வமுடையவரும், தனது புதல்விகளிடம் மிக்க அன்புடையவருமான எங்களது தந்தை தக்ஷன்; நீண்ட நாட்களுக்கு முன்னர், எங்களிடம் தனியே யாரை நீங்கள் உங்கள் கணவராக வரிக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்.

பதம் 3.14.14 : எங்களது நலத்தில் மிகுந்த அக்கறையுடைய எங்கள் தந்தை தக்ஷன், எங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு தமது பதின்மூன்று புதல்விகளையும் உமக்கு மணமுடித்துக் கொடுத்தார். அன்றிலிருந்து நாங்கள் அனைவரும் உம்மிடம் முழு நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம்.

பதம் 3.14.15 : ஒ, செந்தாமரை விழிகளுக்குச் சொந்தக்காரரே, எனது இச்சையினைத் தீர்த்து வைக்கும் ஆசியினை எனக்கு அன்புடன் அருள்வீராக. துன்பமுறும் ஒருவன் அது நீங்கும் பொருட்டு உயர்ந்தவரை அணுகினால் அவனது வேண்டுகோள் வீணாகப் போகாது.

பதம் 3.14.16 : சிறந்த வீரனே (விதுரா) இவ்வாறு இச்சை என்னும் குறையினால் பீடிக்கப்பட்ட திதி, ஏழையாகி இரங்கலுற்றதும் மரீசியின் மைந்தன் (கச்யபர்) அவளைத் தகுந்த வார்த்தைகளினால் சமாதானப்படுத்தினார்.

பதம் 3.14.17 : ஓ, துன்பத்தினால் வருந்துபவளே, உனது விருப்பம் எதுவாயினும் உடனடியாக அதை நான் நிறைவேற்றுவேன். உன்னைத் தவிர வேறு யார் விடுதலைக்கான மூன்று நியதிகளுக்கு ஆதாரமாக உள்ளார்?

பதம் 3.14.18 : நீரில் மிதந்து செல்லும் படகு போன்றவற்றினால் ஒருவன் கடலைக் கடப்பது போல், ஆபத்து நிறைந்த உலக வாழ்வு என்னும் கடலினை ஒருவன் மனைவியுடன் இல்வாழ்க்கை நடத்துவதன் மூலமே கடக்க முடியும்.

பதம் 3.14.19 : ஓ, மரியாதைக்குரியவளே, ஒரு மனைவி மிகவும் உதவிகரமாக இருப்பதினாலேயே அவள் ஒரு ஆடவனின் உடலின் நற்பாதி என்று அழைக்கப்படுகிறாள். காரணம் அவள் அனைத்து மங்களச் செயல்களிலும் பங்கு பெறுகிறாள். ஆதலால் ஒரு ஆண் தன் மனைவியிடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்துவிட்டு கவலையின்றி வாழ முடியும்.

பதம் 3.14.20 : ஒரு கோட்டையின் பாதுகாவலன் அத்துமீறி நுழையும் கொள்ளைக்காரர்களை எளிதில் வெற்றி கொள்வதைப் போல மனைவியைச் சரணடைவதின் மூலம் ஒருவன் புலன்களை வெற்றி கொள்ள முடியும். இவை, பிற சமுதாயப் அமைப்புகளில் வெற்றி கொள்ள முடியாதவையாகும்.

பதம் 3.14.21 : ஓ, இல்லத்தின் அரசியே, உன்னைப் போன்று நாங்கள் செயல்படவோ, அல்லது நீ செய்தவற்றுக்கு இவ்வாழ்க்கை மட்டுமல்ல, மறுபிறவியிலும் நன்றி செலுத்தவோ செய்யவோ எங்களால் முடியாது. தனிப்பட்டக் குணங்களைப் பாராட்டுவோரும் கூட உமது நற்செயல்களுக்கு நன்றி செலுத்துவது என்பது சாத்தியமற்றதாகும்.

பதம் 3.14.22 : உனக்குத் திருப்பிச் செய்வது எனக்கு இயலாததாயினும் கூட, குழந்தைப் பேற்றிற்காக உனது காம இச்சையினை நான் உடனே திருப்திப்படுத்துவேன். ஆனாலும் ஒரு சில விநாடிகள் நீ பொறுத்திருக்க வேண்டும். அப்போதுதான் பிறர் என்னைப் பழி கூற மாட்டார்.

பதம் 3.14.23 : இக்குறிப்பிட்ட நேரமானது மிகவும் அமங்களமானதாகும். ஏனென்றால் இந்நேரத்தில் பயங்கரமானத் தோற்றமுடைய பூத கணங்களும், அவற்றின் தலைவரும் அவரோடு இருக்கும் அவர் துணைவர்களும் கண்ணுக்குத் தென்படுகின்றனர்.

பதம் 3.14.24 : இந்த நேரம் பூத கணங்களின் தலைவரான சிவபெருமான் தனது காளை வாகனத்தின் மீது அமர்ந்து வர, அவருடன் தமது நன்மைக்காக அவரைப் பின்பற்றும் பூதங்களும் சேர்ந்து வரும் நேரமாகும்.

பதம் 3.14.25 : சிவபெருமானின் மேனி சிவந்த நிறமுடையது. அவர் களங்கமற்றவர் என்பதோடு தன் உடலெங்கும் சாம்பலைத் திருநீறாகப் பூசியிருப்பவரும் ஆவார். அவரது சடைமுடியில் சுழற்காற்றினால் பறந்து வந்த சுடுகாட்டுத் தூசி ஒட்டியிருக்கும். அவர் உனது கணவரின் இளைய சகோதரர் ஆவார். அவருக்கு மூன்று விழிகள் உண்டு.

பதம் 3.14.26 : சிவபெருமான் யாரையும் தனது உறவினராகக் கருதுவதில்லை. இருந்தும் அவரோடு தொடர்பு இல்லாதவர் என்று ஒருவரும் இல்லை. அவர் யாரிடத்தும் விருப்பும் கொள்வதில்லை. வெறுப்பும் கொள்வதில்லை. அவருக்கு அளிக்கப்படும் நிவேதனங்களை நாம் மரியாதையுடன் வழிபடுவோம். அவரால் புறக்கணிக்கப்பட்டவற்றை நாம் ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி ஏற்போம்.

பதம் 3.14.27 : சிவபெருமானுக்கு இணையாக அல்லது அவரை விட உயர்வாக இப்பூத உலகில் ஒருவரும் இல்லை என்ற போதிலும், அவரது குற்றங் கூற முடியாத தன்மையினை தங்களது அறியாமை நீங்க வேண்டும் என்பதற்காக மகாத்மாக்கள் பின்பற்றிய போதிலும், அவர், ஒரு பிசாசு பகவானின் பக்தர்களுக்கு முக்தியளிப்பதைப் போன்று விளங்குகிறார்.

பதம் 3.14.28 : துரதிர்ஷ்டசாலிகளான மூடர்கள், அவர் தன்னுணர்வில் ஈடுபட்டிருக்கிறார் என்பதையறியாது அவரைப் பரிகசிக்கின்றனர். அம்மூடர்கள் நாய்கள் தின்னப் போகும் தமது உடலை ஆடை, அணிகலன்கள், மலர் மாலைகள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றைக் கொண்டு பேணுவதில் ஈடுபடுகின்றனர்.

பதம் 3.14.29 : பிரம்மா போன்ற தேவர்களும் சிவபெருமான் கடைப்பிடிக்கும் சமயச் சடங்குகளைப் பின்பற்றுகின்றனர். நடப்பு உலகின் படைப்பிற்குக் காரணமான ஜட இயற்கையினைக் கட்டுப்படுத்துபவர் அவரே ஆவார். அவர் மிக உயர்ந்தவர். ஆதலினால் அவரது பேய்த் தன்மைகள் என்பவை ஒரு பாவனையேயாகும்.

பதம் 3.14.30 : மைத்ரேயர் கூறினார்: திதி இவ்வாறு தன் கணவானல் அறிவுறுத்தப்பட்டும், அவள் பாலுறவு கொள்வதற்கு மன்மதனால் தூண்டப்பட்டாள். எனவே அவள் வெட்கமும் நாணமும் அற்ற ஒரு பரத்தையினைப் போல் அச்சிறந்த அந்தண முனிவரின் ஆடைகளைப் பிடித்து இழுத்தாள்.

பதம் 3.14.31 : மனைவியின் உள்ளக் கிடக்கையினை அறிந்து கொண்ட அவர், அத்தடை செய்யப்பட்டிருக்கும் செயலைச் செய்வதற்குச் சம்மதித்தார். பின்னர் அவர் வணங்குதற்குரிய விதிக்குத் தனது வணக்கத்தினைச் செலுத்திய பின்னர், ஒரு தனிமையான இடத்தில் அவளுடன் கூடினார்.

பதம் 3.14.32 : அதன் பின்னர் அவ்வந்தணர் நீராடிவிட்டு சமாதி நிலையில் அமர்ந்து, பேச்சைக்கட்டுப்படுத்தி, காயத்திரி மந்திரத்தினை வாயினுள் ஜெபித்தபடி பிரம்ம ஜோதியின் தியானத்தில் ஆழ்ந்தார்.

பதம் 3.14.33 : ஓ பரதகுலத் தோன்றலே, இதன்பின்னர் திதி தன் கணவனிடம் சென்றாள். தவறான செயலினால் அவள் முகம் வாடி தலை குனிந்திருந்தது. அவள் பின்வருமாறு கூறினாள்.

பதம் 3.14.34 : எழில் மிக்க திதி கூறினாள் அன்பிற்குரிய அந்தணரே, அனைத்து உயிர்களுக்கும் தலைவரான சிவபெருமான் எனது கருவினை அழிக்காதிருக்கும்படி அருள் கூர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் அவருக்கெதிராக மிகப் பெரிய குற்றத்தினை நான் புரிந்திருக்கிறேன்.

பதம் 3.14.35 : ஒரே சமயத்தில் கொடூரமான தேவராகவும், உலக ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவருமான சினமிக்க சிவபெருமானுக்கு எனது வந்தனங்களை சமர்ப்பிக்கிறேன். அவர் அனைத்து மங்களங்கள் உடையவராகவும், மன்னித்தருள்பவராகவும் விளங்குகிறார். ஆயினும் அவரது கொடிய சினமோ உடனே ஒருவனை தண்டிக்க வல்லதாகும்.

பதம் 3.14.36 : எனது இளைய சகோதரி சதீயின் கணவர் ஆதலினால் அவர் எனக்கு மைத்துனர் ஆவார். அவர் என்மீது மகிழ்ச்சி அடைவாராக. பெண்கள் அனைவரின் வணக்கத்திற்குரிய தேவரும் அவரே ஆவார். அவர் அனைத்து வளங்களும் நிறைந்தவராவார். கல்வியறிவில்லாத வேடர்களினாலுலும் மன்னித்தருளப்படும் பெண்களிடத்து அவர் மிக்க கருணையுடையவராவார்.

பதம் 3.14.37 : மைத்ரேயர் கூறினார் கச்யபர் அவர் மனைவியிடம் இவ்வாறு கூறிக் கொண்டிருந்த பொழுது தனது கணவரிடம் தவறிழைத்து விட்டோமோ என்னும் அச்சத்தின் காரணமாக அவள் உடல் நடுங்கியது. அவரது நித்தியக் கடமையான சந்தியாவந்தன பிரார்த்தனையினைச் செய்ய விடாது அவரது கவனம் திசை திருப்பப்பட்டது என்பதை அவள் புரிந்து கொண்டாள். இருந்தும் இவ்வுலகில் தன் குழந்தைகளின் நலனை விரும்பினாள்.

பதம் 3.14.38 : கற்றறிந்த கச்யபர் கூறினார்; உனது மனம் மாசுற்ற காரணத்தினாலும், அக்குறிப்பிட்ட நேரம் குறையுடையதாக இருந்த காரணத்தினாலும், எனது அறிவுரைகளை நீ புறக்கணித்தக் காரணத்தினாலும், தேவர்களிடத்து நீ பாராமுகமாக நடந்து கொண்ட காரணத்தினாலும் எல்லாம் அமங்களமாகிவிட்டன.

பதம் 3.14.39 : ஒ, இறுமாப்புடையவளே, உனது நிந்தனைக்குரிய கருப்பையிலிருந்து இரண்டு ஆணவமிக்க மைந்தர்கள் பிறப்பார்கள். அதிர்ஷ்டமில்லாதவளே, மூவுலகங்களுக்கும் அவர்கள் தொடர்ந்து தொல்லைகளைத் தருவர்.

பதம் 3.14.40 : அவர்கள் ஏழை மற்றும் குற்றமற்ற உயிர்வாழிகளைக் கொல்வர், பெண்களைக் கொடுமைப்படுத்துவர், மகாத்மாக்களை சினமூட்டுவர்.

பதம் 3.14.41 : அந்த நேரம் இப்பிரபஞ்சத்தின் நாயகரான பகவானும், உயிர்களின் நலன் விரும்புபவருமான முழுமுதற் கடவுள் தன்னை அவதரித்துக் கொண்டு, இந்திரன் தன் கையிலுள்ள வஜ்ராயுதத்தினால் மலைகளை உடைத்து நொறுக்குவது போல் அவர்களை அழிப்பார்.

பதம் 3.14.42 : திதி கூறினாள்: எனது புதல்வர்கள் மிகவும் பெருந்தன்மையாக முழுமுதற் கடவுளின் கரத்திலுள்ள சுதர்சனச் சக்கரத்தினால் கொல்லப்படுவதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். ஓ எந்தன் பிரபுவே, அவர்கள் அந்தணர்களின் சீற்றத்தின் காரணமாகக் கொல்லப்பட மாட்டார்கள் அல்லவா.

பதம் 3.14.43 : அந்தணரால் நிந்திக்கப்பட்டவன் அல்லது உயிர்களுக்கு எப்பொழுதும் அச்சந்தருபவன், நரகத்தில் உள்ளவர்களினால் அல்லது அவன் பிறந்த இனத்தினரால் கூட கருணை செய்யப்படுவதில்லை.

பதங்கள் 3.14.44 – 3.14.45 : கற்றறிந்த கச்யபர் கூறினார்: உனது சோகம், அனுதாபம், முதிர் சிந்தனை போன்றவற்றினாலும், முழுமுதற் கடவுளிடத்து நீ வைத்திருக்கும் மாறாத நம்பிக்கையினாலும், சிவபெருமானிடத்தும் என்னிடத்தும் நீ வைத்திருக்கின்ற பக்தியினாலும் உனது புத்திரனின் (இரண்யகசிபு) புத்திரர்களுள் ஒருவன் (பிரஹலாதன்) பகவானின் பக்தனாக அங்கீகரிக்கப்படுவான். அவனது புகழும் முழுமுதற் கடவுளின் புகழைப் போலவே விரிந்து பரவும்.

பதம் 3.14.46 : அவனது காலடிகளைப் பின்பற்றுவதற்கு, மகான்கள்; எவ்வாறு தங்கத்திலுள்ள குறைகளை தூய்மை செய்யும் முறையினால நீக்குகின்றனரோ அதுபோல் பகைமையிலிருந்து விடுதலை பெறுவதற்கான பயிற்சியினால் அவனது நடத்தையினை முன்மாதிரியாகக் கொள்வதற்கு முயல்வர்.

பதம் 3.14.47 : அனைவருமே அவனிடத்து மகிழ்ச்சியடைவர் ஏனென்றால் இப்பிரபஞ்சத்தின் பரம நெறியாளரான முழுமுதற் கடவுள், அவரைத் தவிர வேறு எதையும் விரும்பாத பக்தனிடம் எப்பொழுதும் திருப்தியுடைவராவார்.

பதம் 3.14.48 : பகவானின் மிகச்சிறந்த பக்தன் விரிந்த புத்தியும் விரிந்த செல்வாக்கும், மகாத்மாக்கள் அனைவரிலும் மிகச்சிறந்தவனாகவும் விளங்குவான். முதிர்ந்த பக்தித் தொண்டினால் அவன் உன்னதமான மெய்மறக்கும் நிலை எய்துவான். மேலும் இப்பௌதிக உலகைத் துறந்த பிறகு அவன் ஆன்மீக வானுள் புகுவான்.

பதம் 3.14.49 : ஒழுக்கமிக்க நற்குணங்கள் அனைத்தின் உறைவிடமாக அவன் திகழ்வான். பிறர் மகிழ்ச்சியில் தான் மகிழ்வான். பிறர் துன்பங்கண்டு தான் துன்புறுவான். அவனுக்குப் பகைவரே இருக்கப் போவதில்லை. கோடைச் சூரியன் மறைந்த பிறகு வரும் குளிர் நிலவைப் போல் அவன் அனைத்துப் பிரபஞ்சங்களின் துக்கங்களையும் அழிப்பவனாக விளங்குவான்.

பதம் 3.14.50 : எழில்மிக்க இலட்சுமி தேவியைத் துணைவியாக அடைந்திருக்கும் முழுமுதற் கடவுளை அகத்திலும், புறத்திலும் உனது பேரனால் காண முடியும். பக்தன் விரும்பும் வடிவத்தைப் பகவானால் மேற்கொள்ள முடியும். அவரது அழகுத் திருமுகத்திற்குச் செவிக்குண்டலங்கள் மேலும் அழகு செய்யும்.

பதம் 3.14.51 : மைத்ரேய மாமுனிவர் கூறினார்: தனது பேரக்குழந்தை மிகச் சிறந்த பக்தனாக விளங்குவான் என்றும், தனது புத்திரர்கள் கிருஷ்ணரால் கொல்லப்படுவார்கள் என்றும் கேட்டவுடன் திதி அகத்தினில் மிக்க மகிழ்ச்சி கொண்டாள்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare