அத்தியாயம் – 12
குமாரர்கள் மற்றும் பல்லோரின் படைப்பு
பதம் 3.12.1 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: ஓ. கல்வியிற் சிறந்த விதுரனே, இதுவரை காலம்போன்று செயற்பட்டு வரும் முழுமுதற் கடவுளின் பெருமைகளைப் பற்றி உனக்கு விளக்கினேன். இப்பொழுது நீ என்னிடமிருந்து அனைத்து வேதங்களுக்கும் உறைவிடமாகத் திகழும் பிரம்ம தேவரின் படைப்பினைப் பற்றி அறிந்து கொள்வாயாக.

பதம் 3.12.2 : பிரம்ம தேவர் முதலில் சுய வஞ்சனை, மரண உணர்ச்சி, எண்ணம் நிறைவேறாததினால் வரும் ஆத்திரம், தவறான உடைமை உரிமை, உடலியற் மாயக் கருத்து, அல்லது ஒருவனது உண்மையான அடையாளம் பற்றிய மறதி போன்ற ஐயுறவுக் கொள்கைகளையே படைத்தார்.

பதம் 3.12.3 : இதுபோன்ற தவறான படைப்பினைப் பாவமாகக் கருதிய பிரம்ம தேவர் தனது செயலினால் மிக்க மகிழ்ச்சிடையவில்லை. அதனால் அவர் முழுமுதற் கடவுளைத் தியானித்துத் தன்னைப் புனிதப்படுத்திக் கொண்டார். இதன் பின்னர் அவர் படைப்பின் அடுத்த கட்டத்தை துவக்கினார்.

பதம் 3.12.4 : ஆரம்பத்தில் பிரம்மதேவர் சனகர், சனந்தர், சநாதனர் மற்றும் சனத் குமாரர் என்னும் நான்கு மாமுனிவர்களைப் படைத்தார். அவர்கள் அனைவரும் பௌதிகச் செயல்களில் ஈடுபட விரும்பவில்லை. ஏனெனில் அவர்களது சுக்கிலம் மேல்நோக்கிப் பாய்ந்த காரணத்தினால் அவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தனர்.

பதம் 3.12.5 : அவர்கள் நால்வரையும் படைத்தப் பின்னர் பிரம்ம தேவர் அவர்களிடம் கூறினார்: “அன்பார்ந்த மைந்தர்களே, இப்பொழுது பிரஜைகளைப் படைப்பீராக” என்று. அவர்கள் முழுமுதற் கடவுளான வாசுதேவரிடம் பற்றுக் கொண்டு விடுதலையினை நோக்கமாகக் கொண்டிருந்ததினால், அவர்கள் தங்கள் விருப்பமின்மையைத் தெரியப்படுத்தினர்.

பதம் 3.12.6 : தமது தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படியாத மைந்தர்களின் மீது பிரம்மதேவருக்கு மிகுந்த சினம் எழுந்தது. அதனை அவர் வெளிப்படுத்தாது மிகுந்த சிரமத்துடன் அச்சினத்தினை அடக்குவதற்கு முயன்றார்.

பதம் 3.12.7 : அவர் தனது சினத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும் அது, அவரது புருவங்களுக்கு மத்தியிலிருந்து நீலமும், சிவப்பும் கலந்த வண்ணத்தில் ஒரு குழந்தையாகத் தோன்றியது.

பதம் 3.12.8 : பிறந்தவுடன் அது சுதறி அழத் தொடங்குகிறது; ஓ, விதியை நிர்ணயிப்பவரே. ஜகத் குருவே, அருள் கூர்ந்து எனது பெயரையும், இடத்தையும் குறிப்பிடுவீராக.

பதம் 3.12.9 : அனைத்துச் சக்திகளும் நிறைந்தவரும் தாமரை மலரிலிருந்து பிறந்தவருமான பிரம்மா அக் குழந்தையின் வேண்டுகோளை ஏற்று அதைச் சமாதானப்படுத்தும் வகையில் கூறினார்: “அழ வேண்டாம், நிச்சயம் நீ விரும்பியதை நான் நிறைவேற்றுவேன்” என்று.

பதம் 3.12.10 : அதன் பின்னர் பிரம்மா கூறினார்: ஒ, தேவர்களின் தலைவனே, நீ ருத்திரன் என்று மக்களால் அழைக்கப்படுவாய். ஏனெனில் நீ மிகவும் கவலை கொண்டு அழுதமையே இதற்குக் காரணமாகும்.

பதம் 3.12.11 : அன்புக் குழந்தையே, உனது இருப்பிடமாக நான் ஏற்கெனவே கீழ்க்கண்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து விட்டேன். அவை: இதயம், புலன்கள், மூச்சுக்காற்று, வானம், காற்று, அக்னி, தண்ணீர், பூமி, சூரியன், சந்திரன் மற்றும் தவம் முதலியவையாகும்.

பதம் 3.12.12 : பிரம்ம தேவர் கூறினார்: அன்புக் குழந்தையே, உனக்கு மற்றும் பதினோரு பெயர்களும் உண்டு. அவை: மன்யு, மனு, மஹினஸன், மஹான், சிவன், ருத்வஜன், உக்ரரேதான், பவன், காலன், வாமதேவன், மற்றும் திருதவிரதன் என்பவையாகும்.

பதம் 3.12.13 : ஓ.ருத்திரனே, உனக்குப் பதினோரு மனைவியர் உண்டு. அவர்கள் ருத்ராணீகள் என்றழைக்கப்படுவர். அவர்களின் பெயர்கள்: தீ, திருதி, ரஸலா, உமா, நியுத், ஸர்பி, இலா, அம்பிகா, இராவதீ, ஸ்வதா மற்றும் தீக்ஷா என்பவையாகும்.

பதம் 3.12.14 : அன்புக் குழந்தையே, நீ இப்பொழுது உனக்குரிய பல நாமங்களையும், உனக்கும், உன் பல்வேறு மனைவியர்க்கும் உரிய பல்வேறு இருப்பிடங்களையும் ஏற்றுக் கொள்வாயாக. இப்பொழுது நீயும் உயிர்களின் தலைவர்களுள் ஒருவன். ஆதலினால் மக்கட் தொகையினைப் பெருமளவில் நீ உற்பத்தி செய்வாயாக.

பதம் 3.12.15 : நீலமும் சிவப்பும் கலந்த உடல் வண்ணமுடைய ஆற்றல் மிக்க ருத்திரன் தன்னைப் போன்றே கொடூர குணமும், வலிமையும், உடல் தோற்றமும் கொண்ட பல பிரஜைகளை உற்பத்தி செய்தார்.

பதம் 3.12.16 : ருத்திரனால் உண்டுபண்ணப்பட்டக் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் எண்ணற்றவர்களாவர். அவர்கள் கூடி நிற்பதைக் கண்டால் பிரபஞ்சத்தையே விழுங்கி விடுவர் போன்று தோன்றுவர். உயிர்வாழிகளின் தந்தையான பிரம்ம தேவர் இதனைக் கண்டு மிகுந்த அச்சங் கொண்டார்.

பதம் 3.12.17 : பிரம்ம தேவர் ருத்திரனிடம் கூறினார்: ஓ. தேவர்களிற் சிறந்தோனே, இக்குணமுடைய உயிர்களை நீ படைப்பது தேவையற்றது இவர்கள் தங்கள் கண்களிலிருந்து எழும் தீ பிழம்புகளினால் எல்லாத் திசைகளையும் எரித்துப் பொசுக்கத் துவங்கி விட்டனர், ஏன் இவர்கள் என்னையே கூடத் தாக்கியுள்ளனர்.

பதம் 3.12.18 : அன்பு மைந்தனே, நீ தவம் செய்வதுதான் உனக்கு நன்மையளிக்கும். அதுவே அனைத்து உயிர்வாழிகளுக்கும் மங்களகரமானதும் ஆகும். மேலும் அவையே உனக்கு நல்லாசிகள் அனைத்தையும் அளிக்கும். தவத்தினால் மட்டுமே நீ இப்பிரபஞ்சத்தினை முன்னரே இருந்தது போல் படைக்க முடியும்.

பதம் 3.12.19 : அனைத்து உயிர்களின் இதயங்களில் இருப்பவரும் அதே நேரம் புலன்களினால் அறிவதற்கு அரியவருமான முழுமுதற் கடவுளை ஒருவன் தவத்தினால் மட்டுமே அணுக முடியும்.

பதம் 3.12.20 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: இவ்வாறு தனது தந்தையான பிரம்ம தேவரால் கட்டளையிடப்பட்ட ருத்திரன், வேதங்களின் குருவான பிரம்ம தேவரைச் சுற்றி வந்தார். அவரது ஒப்புதலை வார்த்தைகளினால் தெரிவித்த பிறகு அவர் தவம் செய்வதற்காக வனத்தினுள் புகுந்தார்.

பதம் 3.12.21 : முழுமுதற் கடவுளினால் அதிகாரமளிக்கப்பட்டப் பிரம்ம தேவர் உயிர்களைப் படைக்க வேண்டியதை மனதிற்கொண்டு ஜனப் பெருக்கத்திற்காக பத்துப் புதல்வர்களைப் படைத்தார்.

பதம் 3.12.22 : மரீசி, அத்திரி, அங்கிரஸௌ, புலஸ்தியர், புலஹர், கிரது, பிருகு, வசிஷ்டர், தக்ஷன் முதலிய புதல்வர்களும் பத்தாவதாக நாரதரும் பிறந்தனர்.

பதம் 3.12.23 : பிரம்ம தேவரது உடலின் மிகச்சிறந்த பகுதியான சிந்திக்கும் தன்மை உடைய உள்ளத்திலிருந்து நாரதர் பிறந்தார். வசிஷ்டர் அவரது சுவாசத்திலிருந்தும், தக்ஷன் அவரது கட்டை விரலிலிருந்தும், பிருகு முனிவர் அவரது தொடு உணர்ச்சியிலிருந்தும், கிரது முனிவர் அவரது கரத்தினின்றும் தோன்றினர்.

பதம் 3.12.24 : புலஸ்தியர் காதுகளில் இருந்தும், அங்கிரசு வாயிலிருந்தும், அத்திரி விழிகளில் இருந்தும், மரீசி மனதிலிருந்தும், புலஹர் பிரம்ம தேவரின் நாபியிலிருந்தும் தோன்றினர்.

பதம் 3.12.25 : சமய அறநெறியானது முழுமுதற் கடவுளான நாராயணர் உறையும் பிரம்ம தேவரின் மார்பிலிருந்து தோன்றியது. சமயத்திற்குப் புறம்பானவை அவரது பிருஷ்டத்திலிருந்து தோன்றியது. உயிர் வாழிக்கு அச்சந்தரும் மரணமானது அங்கே தான் நிகழ்கிறது.

பதம் 3.12.26 : பிரம்ம தேவரின் இதயத்திலிருந்து காமமும், புருவங்களுக்கு இடையில் இருந்து குரோதமும், உதடுகளின் வழியே பேராசையும், வாயிலிருந்து வாக்கும், ஆண் குறியிலிருந்து கடல்களும், அனைத்துப் பாவங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் எருவாயிலிருந்து இழிந்த வெறுக்கத்தகும் செயல்களும் தோன்றின.

பதம் 3.12.27 : மிகச்சிறந்த தேவஹுதியின் கணவரான கர்தம முனிவர் பிரம்ம தேவரின் நிழலிலிருந்து தோன்றினார். இவ்வாறு அனைவரும் பிரம்ம தேவரின் உடல் அல்லது மனதிலிருந்து தோன்றினர்.

பதம் 3.12.28 : ஓ, விதுரனே, பிரம்ம தேவர் உடலிலிருந்து தோன்றிய வாக்கு என்னும் அவரது புதல்வி காம இச்சை இல்லாதவளாக இருந்தும் பிரம்ம தேவரின் மனதினை அவள் கவர்ந்ததினால் அவர் அவளிடம் பாலுறவுக் கவர்ச்சி உடையவரானார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பதம் 3.12.29 : தனது தந்தையின் முறைகேடானச் செயலைக் கண்டு மரீசி முனிவர் உள்ளிட்ட பிரம்ம தேவரின் புதல்வர்கள் அனைவரும் மிகுந்த மரியாதையுடன் பின்வருமாறு கூறினர்.

பதம் 3.12.30 : ஓ தந்தையே, ஒரு இக்கட்டானச் சூழ்நிலைக்கு உம்மை ஆளாக்கிக் கொள்ளும் இச்செயலானது உமக்கு முந்தைய பிரம்மாக்களினாலோ, வேறு எவராலுமோ செய்யப்பட்டதில்லை. நீரே இதற்கு முந்தைய கல்பங்களிலோ செய்ததுமில்லை. இனி வருங்காலத்தில் எவரும் செய்வதற்கு முயற்சிக்கப் போவதுமில்லை. நீரே இப்பிரபஞ்சத்தின் உயர்ந்த உயிர் ஆவீர். அவ்வாறிருக்க உமது இச்சைகளை அடக்க முடியாது நீர் ஏன் உமது புதல்வியுடன் பாலுறவு கொள்ள விரும்பினீர்?

பதம் 3.12.31 : நீரே மிகவும் சக்தியுடையவராக விளங்கிய போதிலும் உமது தகாத பாலுறவுச் செயல் பொருந்துவதன்று. ஏனெனில் ஆன்மீக வளர்ச்சிக்காகப் பொதுமக்கள் உம்மைப் பின்பற்றுகின்றனர்.

பதம் 3.12.32 : தம்மில் நிலைத்தவாறே தமது ஜோதியினால் இப்பிரபஞ்சத்தினைத் தோற்றுவித்த முழுமுதற் கடவுளுக்கு நமது மரியாதைக்குரிய வந்தனங்களைச் சமர்ப்பிப்போம். அனைத்து நன்மைகளுக்காகவும் அவர் சமய அறநெறிகளைக் காப்பாராக.

பதம் 3.12.33 : அனைத்துப் பிரஜாபதிகளின் தந்தையான பிரம்மதேவர் தனது பிரஜாபதி புத்திரர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு வெட்கிக் குறுகினார். தான் ஏற்றுக் கொண்டிருந்த உடலை உடனடியாகத் துறக்கவும் செய்தார். பின்னர் அவ்வுடல் இருளின் ஆபத்தான பனி மூட்டம் போல் அனைத்துத் திக்குகளிலும் காட்சியளித்தது.

பதம் 3.12.34 : முன்னொரு காலத்தில், பிரம்ம தேவர் கடந்த கல்பத்தில் இருந்த உலகங்களைப் போன்று எவ்வாறு உலகங்களைப் படைப்பது என்று ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்த பொழுது பல்வேறு ஞானங்களையுடைய நான்கு வேதங்களும் அவரது நான்கு வாய்களிலிருந்தும் வெளிப்பட்டன.

பதம் 3.12.35 : அக்கினி வேள்வி செய்யும்பொழுது தேவைப்படும் நான்கு வகையான கருவிகள்: செய்பவர் (ஒதுபவர்), அர்ப்பணிப்பவர், நெருப்பு, உபவேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கேற்ற செயல்கள் போன்றவையாகும். மேலும் நான்கு, சமய அறநெறிகள் (சத்தியம், துறவு நெறி, கருணை மற்றும் தூய்மை) மற்றும் நான்கு வகையான சமுதாயப் பிரிவுகளின் தர்மங்கள் போன்றவை அனைத்தும் வெளிப்பட்டன.

பதம் 3.12.36 : விதுரர் கூறினார்: ஓ, தவத்தை மட்டுமே செல்வமாகக் கொண்டிருக்கும் மாமுனிவரே, பிரம்ம தேவர் வாயினின்று வெளி வந்த வேத ஞானத்தினை யாருடைய உதவியினால் எவ்வாறு அவர் நிறுவினார் என்பதை அருள்கூர்ந்து விளக்குவீராக.

பதம் 3.12.37 : மைத்ரேயர் கூறினார்: பிரம்ம தேவரின் முன்புற முகத்திலிருந்து தொடங்கி நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்பவை தோன்றின. அதனைத் தொடர்ந்து முன்னர் உச்சாடனம் செய்யப்படாத வேத சாத்திரங்கள், புரோகிதச் சடங்குகள், துதிப்பதற்குரிய கருப்பொருட்கள், மற்றும் மனவாசகங்கடந்த செயல்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவப்பட்டன.

பதம் 3.12.38 : அவர் மேலும், மருத்துவ விஞ்ஞானம், இராணுவ விஞ்ஞானம், இசைக்கலை, சிற்பக்கலை போன்றவற்றையெல்லாம் வேதங்களிலிருந்து படைத்தார். இவையெல்லாம் அவரது முன்பக்கமுள்ள முகத்திலிருந்து தொடங்கி ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின.

பதம் 3.12.39 : பின்னர் அவர் கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என்னும் முக்காலங்களையும் காணும் ஆற்றல் பெற்றவராதலினால் ஐந்தாம் வேதமான புராணங்களையும், இதிகாசங்களையும் தமது வாய்களிலிருந்து படைத்தளித்தார்.

பதம் 3.12.40 : அக்கினி வேள்விகளின் பல்வேறு வகைகளும் (ஷோடஷீ, யுக்தம், புரீஷி, அக்னிஷ்டோமம், ஆப்தோர்யாமம், அதிராத்ரம், வாஜபேயம், மற்றும் கோஸவம்) பிரம்ம தேவரின் கீழ்த்திசை வாயினின்று வெளிப்பட்டன.

பதம் 3.12.41 : தானம், தவம், கல்வி, சத்தியம் போன்றவை சமயத்தின் நான்கு அங்கங்கள் என்று கூறப்படுகின்றன. இவற்றைக் கற்றுக் கொள்வதற்கு வாழ்க்கைத் தொழில் மற்றும் பல்வேறு பிரிவுகளைப் பொருத்து நான்கு அமைப்புக்கள் இருக்கின்றன. பிரம்மதேவர் இவையனைத்தையும் ஒழுங்குமுறையில் படைத்தார்.

பதம் 3.12.42 : இதன் பின்னர், இரு பிறப்பாளருக்கான உபநயன விழா துவக்கப் பெற்றது. இதனுடைய நோக்கம், வேதங்களை ஏற்றுக் கொண்ட பிறகு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு அவ்விதிகளைப் பின்பற்றுவது, பாலுறவு வாழ்க்கையினை முற்றிலும் தவிர்ப்பது, வேதங்களின் கட்டளைகளுக்கேற்ப வாழ்க்கைத் தொழில் புரிவது, இல்லற வாழ்க்கைக்குரிய தொழில் தர்மங்களைச் செய்வது, பூமியில் சிதறிக் கிடக்கும் தானியங்களைக் கொண்டு யாருடைய உதவியுமின்றி வாழ்வது போன்றவையாகும்.

பதம் 3.12.43 : ஓய்வு பெற்ற வாழ்க்கை என்பது நான்கு வகைப்படும், அவை: வைகானஸஸ், வாலகில்யஸ், ஔதும்பரஸ், ஃபேனபஸ் என்பவையாகும். துறவு வாழ்க்கையின் நான்கு பிரிவுகள், குடீசகஸ், பஹ்வோதஸ், ஹம்ஸஸ், நிஷ்க்ரியஸ் என்பவையாகும். இவையனைத்தும் பிரம்ம தேவரிடமிருந்தே தோன்றின.

பதம் 3.12.44 : தருக்க சாத்திரம், வேதத்தில் கூறப்படும் வாழ்க்கை இலட்சியங்கள். சட்டம் ஒழுங்கு, நன்னடத்தை விதிகள், சிறந்த வழிபாட்டுப் பண்களான பூ: புவ: ஸ்வ: போன்றவையெல்லாம் பிரம்ம தேவரின் வாய்களிலிருந்து தோன்றின. பிரணவ ஓம்கார மந்திரம் அவரது இதயத்திலிருந்து வெளிப்பட்டது.

பதம் 3.12.45 : இதன்பின்னர் இலக்கியக் கலையான உஷ்ணிக் என்பது எல்லாம் வல்ல பிரஜாபதியின் உடலிலுள்ள ரோமக் கால்களிலிருந்து தோன்றியது. தலையாய வேதப் பனுவலான காயத்ரீ அவரது தோலிலிருந்து தோன்றியது. த்ரிஷ்டுப் அவரது தசையிலிருந்தும், அனுஷ்டுப் அவரது நரம்புகளிலிருந்தும், ஜகதீ அவரது எலும்புகளிலிருந்தும் தோன்றியது.

பதம் 3.12.46 : பண்களை எழுதும் கலையான பங்க்தி அவரது எலும்பின் மஜ்ஜையிலிருந்து தோன்றியது. ப்ருஹதீ என்னும் மற்றொரு வகையானப் பண் உயிர்களின் தலைவரான பிரம்ம தேவரின் மூச்சுக் காற்றிலிருந்தும் பிறந்தது.

பதம் 3.12.47 : பிரம்ம தேவரின் ஆத்மாவானது ஸ்பரிச எழுத்துக்களாக வெளிப்பட்டதாகும். அவரது உடல் உயிரெழுத்துக்களாகவும், புலன்கள் சீறொலி எழுத்துக்களாகவும், அவரது சக்தி இடையின எழுத்துக்களாகவும், புலன்களின் செயல்கள் ஏழு ஸ்வரங்களாகவும் இருக்கின்றன.

பதம் 3.12.48 : மனவாசகங்கடந்த ஒலிக்கு ஆதாரமாகவும், கண்ணுக்குப் புலனாகின்ற புலனாகாத கருத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராகவும் விளங்கும் முழுமுதற் கடவுளின் தனிப்பட்ட அவதாரமே பிரம்மதேவர் ஆவார். பிரம்ம தேவர் நானாவித சக்திகளையும் தன்னிடத்தே கொண்டு வந்திருப்பதோடு முழு மெய்ப்பொருளின் முழு வடிவமும் ஆவார்.

பதம் 3.12.49 : அதன்பிறகு பாலுறவு வாழ்க்கைக்குத் தடையில்லாத மற்றொரு உடலினைப் பிரம்ம தேவர் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் மீண்டும் படைப்புத் தொழிலில் ஈடுபடலானார்.

பதம் 3.12.50 : ஒ, குருகுலத் தோன்றலே, ஆற்றல் மிக்க உயர் சக்தியுடையவர்களாக இம் மாமுனிவர்கள் இருந்த போதிலும் ஜனத்தொகை போதுமான அளவு அதிகரிக்கவில்லை என்பதை பிரம்ம தேவர் உணர்ந்தார். அதனால் எவ்வாறு மக்கட் தொகையினைப் பெருக்குவது என்று அவர் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார்.

பதம் 3.12.51 : பிரம்மதேவர் தனக்குள் இவ்வாறு எண்ணினார்: அந்தோ நான் இப்பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்தவனாக இருந்த போதிலும் கூட மக்கட் தொகைப் பெருக்கமானது போதிய அளவு இல்லையென்பது ஓர் அதிசயமே ஆகும். இத்துரதிர்ஷ்ட நிலைக்கு விதியைத் தவிர வேறு யாரைக் காரணம் சொல்வது.

பதம் 3.12.52 : இவ்வாறு அவர் ஆழ்ந்து சிந்தித்து இயற்கைக்கும் மேலான சக்தியினைத் தியானித்தபொழுது, இரண்டு உருவங்கள் அவர் உடலிலிருந்து தோன்றின. அவை பிரம்மதேவரின் உடலாக இன்றும் போற்றப்படுகின்றன.

பதம் 3.12.53 : இவ்வாறு தனித்தனியே வந்த புதிய உடல்கள் இரண்டும் பாலுறவு நிலையில் ஒன்றாக இணைந்தன.

பதம் 3.12.54 : அவர்கள் இருவரில் ஒருவர் ஆண், அவர்தான் பிற்காலத்தில் சுவாயம்புவ மனு என்று அழைக்கப்பெறும் சிறப்புடையவர். மற்றொருத்தி பெண், இவளே மகாத்மா மனுவின் மனைவி என்றறியப்படும் அரசி சதரூபா என்பவள்.

பதம் 3.12.55 : இதன்பின்னர் அவர்கள் இருவரும் பாலுறவின் மூலம் உலகின் மக்கட் தொகையை ஒன்றன்பின் ஒன்றாக அதிகரித்தனர்.

பதம் 3.12.56 : ஒ, பரதகுலத் தோன்றலே, உரிய காலத்தில் அவர் (மனு) சதரூபாவினிடத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவர்களுள் இருவர் ஆண்கள். ஒருவன் பிரியவிரதன், மற்றொருவன் உத்தானபாதன். மீதி மூவர் பெண்கள், ஆகூதி, தேவஹூதி மற்றும் பிரஸூதி என்பன அவர்கள் பெயர்கள்.

பதம் 3.12.57 : தந்தையான மனு தன் மூத்த புதல்வி ஆகூதியை ருசி என்னும் முனிவருக்கும், இரண்டாவது புதல்வி தேவஹூதியை கர்தம முனிவருக்கும், கடைசிப் பெண் பிரஸூதியை தக்ஷனுக்கும் மணமுடித்துக் கொடுத்தார். இவர்களில் இருந்ததே உலகின் மக்கட் தொகை பெருக ஆரம்பித்து.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare