அத்தியாயம் – 10
படைப்பின் பிரிவுகள்
பதம் 3.10.1 : ஸ்ரீ விதுரர் கூறினார்: ஓ, மாமுனிவரே, அனைத்துலகப் பிரஜைகளின் தாத்தாவான பிரம்ம தேவர், முழுமுதற் கடவுள் மறைந்த பிறகு தனது உடலிலிருந்தும், மனதிலிருந்தும் எவ்வாறு உயிர்களின் உடல்களைப் படைத்தார் என்பதை எனக்கு அருள் கூர்ந்து உரைக்கமாட்டீரா!

பதம் 3.10.2 : ஓ, கல்வியிற் சிறந்தவரே, அன்புடன் எனது சந்தேகங்கள் அனைத்தையும் நீக்கி, நான் வினவிய அனைத்தையும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை விளக்கியருள்வீராக.

பதம் 3.10.3 : சூத கோஸ்வாமி கூறினார்: பிருகுவின் மைந்தனே, மைத்ரேய மாமுனிவர் விதுரரின் இக்கேள்விகளினால் புத்துணர்ச்சி கொண்டவரானார். எல்லாம் அவர் இதயத்தினுள்ளே இருந்தன. ஆகையினால் அவர் அக்கேள்விகளுக்கான பதில்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கூறத் தொடங்கினார்.

பதம் 3.10.4 : கல்வியிற் சிறந்த மைத்ரேய மாமுனிவர் கூறினார்: ஓ, விதுரரே, முழுமுதற் கடவுளின் அறிவுரைக்கேற்ப பிரம்மதேவர் நூறு தேவ வருடங்கள் தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திப் பின்னர் பகவானின் பக்தித் தொண்டில் இணைத்துக் கொண்டார்.

பதம் 3.10.5 : அதன்பிறகு பிரம்ம தேவர் தான் அமர்ந்திருந்த தாமரை மலரும், அத்தாமரை மலருக்கு ஆதாரமாக விளங்கிய நீரும் வலிமையான சூறைக் காற்றினால் ஆடுவதைக் கண்டார்.

பதம் 3.10.6 : நெடிய தவமும் தன்னுணர்வு பெறுவதற்கான மிக உயர்ந்த அறிவும் நடைமுறை அறிவில் பிரம்ம தேவரை முதிர்ச்சியடையச் செய்திருந்ததினால், அவர் அச்சூறைக் காற்றை நீருடன் சேர்த்துப் பருகினார்.

பதம் 3.10.7 : பின்னர் அவர் தான் அமர்ந்திருந்த தாமரையானது, பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்திருந்ததைக் கண்டார். இதே தாமரையில் முன்னர் இணைந்திருந்த அனைத்து உலகங்களையும் எவ்வாறு படைப்பது என்று அவர் ஆழ்ந்து சிந்திக்கலானார்.

பதம் 3.10.8 : இவ்வாறு முழுமுதற் கடவுளின் தொண்டில் ஈடுபட்டிருந்த பிரம்ம தேவர் தாமரையின் இதழ் அடுக்கினுள் புகுந்து கொண்டார். அது பிரபஞ்சம் எங்கும் பரந்து விரிந்திருந்ததனால் அவர் முதலில் அதை மூன்று பிரிவுகளாகவும் பின்னர் பதினான்கு பிரிவுகளாகவும் பிரித்தார்.

பதம் 3.10.9 : பிரம்ம தேவர் இப்பிரபஞ்சத்திலேயே மிகவுயர்ந்த சான்றோர் ஆவார். இதற்குக் காரணம், முதிர்ந்த உன்னத ஞானத்தில் பகவானுக்கு அவர் செய்த காரணமற்றப் பக்தித் தொண்டேயாகும். ஆதலினால் அவர் பல்வேறு வகையான உயிர்கள் வசிப்பதற்காகப் பதினான்கு உலகப் பிரிவுகளைப் படைத்தார்.

பதம் 3.10.10 : மைத்ரேயரிடம் விதுரர் வினவினார்: ஓ, பிரபுவே, ஓ, கற்றறிந்த முனிவரே, அற்புதச் செயல் செய்யும் முழுமுதற் கடவுளின் மற்றொரு வடிவமான நித்திய காலத்தைப் பற்றி அருள்கூர்ந்து விளக்குவீராக. நித்திய காலத்தின் அடையாளங்கள் என்ன? அருள் கூர்ந்து அதை விளக்க வேண்டுகிறேன்.

பதம் 3.10.11 : மைத்ரேயர் கூறினார்: என்றும் அழியாத காலம் என்பது உலக இயற்கையின் முக்குணங்களின் செயல் மற்றும் எதிர் செயல்களுக்கு ஆதாரமாக ஆதியிலிருந்து இருப்பதாகும். அது மாறாதது என்பதோடு அளவற்றதுமாகும். மேலும் அது பௌதிகப் படைப்பில் முழுமுதற் கடவுளின் லீலைகளுக்காக, அவரது கருவியாகச் செயல்படுகின்றது.

பதம் 3.10.12 : இப்பிரபஞ்சத் தோற்றமானது காலப்போக்கில் பரமபுருஷ பகவானிடமிருந்து உலகியல் சக்தியாகத் தனியே பிரிக்கப்பட்டதாகும். காலமானது உருவெளித் தோற்றமற்ற, பகவானின் அருவத் தன்மையாகும். இது, பகவானின் உருவமற்ற வெளிப்பாடாக இருக்கிறது என்பதோடு பகவான் விஷ்ணுவினுடைய செல்வாக்கின் உலகியல் சக்தியின் கீழும் இருக்கிறது.

பதம் 3.10.13 : இப்பிரபஞ்சத் தோற்றமானது இப்போதிருக்கின்ற நிலையிலேதான் கடந்த காலத்திலும் இருந்தது. இனி வருங்காலத்திலும் தொடர்ந்து இப்படியேதான் இருக்கப் போகிறது.

பதம் 3.10.14 : குணங்கள் ஒன்றினோடொன்று இணைந்து செயற்படும் வினைத் தொடர்புகளினால் இயற்கையிலேயே விளைந்த ஒன்றினைத் தவிர மேலும் ஒன்பது வகையான படைப்புக்கள் இருக்கின்றன. காலத்தினாலும், உலகியல் காரணங்களாலும், ஒருவனது தொழிலின் இயல்புகளினாலும் ஏற்படும் அழித்தல் மூன்று வகையாகும்.

பதம் 3.10.15 : ஒன்பது படைப்புக்களில் முதலாம் படைப்பு மஹத் தத்துவம் அல்லது பொருட்களது ஆக்கக் கூறுகளின் கூட்டு மொத்தம் ஆகும். அங்கே பகவானின் முன்னிலையில் குணங்கள் ஒன்றினோடொன்று வினைத் தொடர்புகள் கொள்கின்றன. இரண்டாம் படைப்பில் ஆணவம் பிறந்தது. அதிலிருந்து பௌதிக ஆக்கக் கூறுகள், உலகியல் அறிவு மற்றும் உலகியற் செயல்கள் தோன்றின.

பதம் 3.10.16 : புலன் உணர்வுகள் மூன்றாம் படைப்பில் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றிலிருந்தே ஐம்புலன்கள் தோன்றின. நான்காவது படைப்பு அறிவு மற்றும் தொழில் திறமையின் படைப்பாகும்.

பதம் 3.10.17 : ஐந்தாவது படைப்பு என்பது நற்குணங்களின் எதிரெத செயல்களினால் ஆனக் கட்டுப்படுத்தும் தேவர்களாவர், அதில் மனமே ஒட்டுமொத்தச் சாரமாகும். ஆறாவது படைப்பு உயிர்ப் பொருளின் அறியாமை இருளாகும், இதுவே ஒருவனை முட்டாளாகச் செயல்படச் செய்யும்.

பதம் 3.10.18 : மேலே கூறப்பட்டப் படைப்புக்கள் அனைத்தும் பகவானின் புறச்சக்தியினால் ஆன இயற்கைப் படைப்புக்களாகும். இப்பொழுது ரஜோ குணத்தின் அவதாரமான பிரம்ம தேவரால் படைக்கப்பட்டப் படைப்புக்களைப் பற்றி அறிவாயாக. படைப்பினைப் பொருத்த மட்டிலும் அவரது அறிவு முழுமுதற் கடவுளுக்கு இணையானதாகும்.

பதம் 3.10.19 : ஏழாவது படைப்பு என்பவை அசையாத உயிர்களாகும். அவை ஆறு வகைப்படும்: பூக்களில்லாத கனிமரங்கள், பழம் பழுக்கும் வரை மட்டுமுள்ள மரங்கள், செடிகள், கொடிகள், குழல் செடிகள், துணை வலுவற்றக் கொடிகள், பூக்களும், கனிகளும் உடைய மரங்கள் போன்றவையாம்.

பதம் 3.10.20 : அசையாத அனைத்து செடிகளும் மரங்களும் தம் வாழ்வாதாரத்திற்கு மேல்நோக்கியே நிற்கின்றன. அவைபெரும்பாலும் உணர்ச்சியற்றவையே. ஆயினும் அவற்றிற்கு வலி உணர்ச்சி உண்டு. அவை பல்வகை வண்ண வேறுபாடுடையவைகளாக காட்சியளிக்கின்றன.

பதம் 3.10.21 : எட்டாவது படைப்பானது இழிந்த உயிர்ப்பொருள்களாகும். அவை பல்வேறு வகைகளாகும். அவற்றின் எண்ணிக்கை இருபத்தெட்டாகும். அவையனைத்தும் அறிவில்லாதவை. அறியாமை மிக்க இயல்புடையன. அவை தமது தேவைகளை சுவாசத்தின் மூலம் முகர்ந்து அறிந்து கொள்கின்றன. ஆயினும் அவை மனதில் இருத்தி எதனையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவை.

பதம் 3.10.22 : ஓ, தூய்மையான விதுரரே, கீழ்நிலை விலங்குகளான பசு, வெள்ளாடு, எருமை, கிருஷ்ண மான், பன்றி, கவய மிருகம், மான், செம்மறியாடு, மற்றும் ஒட்டகம் போன்றவற்றிற்கு பாதங்களில் இரு குளம்புகள் உண்டு.

பதம் 3.10.23 : குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை, வெண்ணிற மான், கௌரம், ஸரபம் என்னும் காட்டெருமை, காட்டுப் பசு இவையனைத்தும் பாதங்களில் ஒரே ஒரு குளம்பு மட்டுமே உடையன. இப்பொழுது என்னிடமிருந்து கால்களில் ஐந்து நகங்களையுடைய விலங்குகளைப் பற்றி அறிவாயாக.

பதம் 3.10.24 : நாய், குள்ளநரி, புலி, ஓநாய், பூனை, முயல், ஸஜாரு, சிங்கம், குரங்கு, யானை, ஆமை, முதலை, கோஷாபம் போன்றவற்றிற்குப் பாதங்களில் ஐந்து நகங்கள் உண்டு. இவை “பஞ்ச நகங்கள்” என்றழைக்கப்படுகின்றன.

பதம் 3.10.25 : கொக்கு, கழுகு, நாரை, பருந்து, பாஸம், பல்லூகம், மயில், அன்னம், ஸாரஸம், சக்கரவாகம், காக்கை, ஆந்தை போன்றவை பறவை இனங்கள்.

பதம் 3.10.26 : ஒரே இனமும், தங்கள் உண்பனவற்றைக் கீழ்முகமாகக் செலுத்தித் தமது வயிற்றில் வைத்துக் கொள்பவர்களுமான மனிதர்கள் ஒன்பதாவது சுழற்சியில் படைக்கப்படுகின்றனர். மனித இனம் ரஜோ குணத்தையே மிகவும் முக்கியத் தன்மையாகக் கொண்டிருக்கிறது. துன்பமயமான வாழ்க்கைக்கு நடுவிலும் எல்லா வழியிலும் மிக்க மகிழ்ச்சியுடையோராகத் தம்மைக் கருதுபவர்கள் மனிதர்களேயாவர்.

பதம் 3.10.27 : ஓ, சிறந்த விதுரரே, இறுதியான இம்மூன்று படைப்புக்களும், தேவர்களின் படைப்பும் (பத்தாவது படைப்பு) வைக்ருத படைப்புக்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை முன்னர் குறிப்பிடப்பட்டிருக்கும் ப்ராக்ருத (இயற்கை) படைப்புக்களிலிருந்து வேறுபட்டவையாகும். குமாரர்களின் தோற்றம் இவ்விரண்டிலுமே உண்டு.

பதங்கள் 3.10.28 – 3.10.29 : தேவர்களின் படைப்பானது எட்டு வகைப்படும். அவை: (1) தேவர்கள், (2) பித்ருக்கள், (3) அசுரர்கள், (4) கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் அல்லது தேவதைகள் (5) யக்ஷர்கள் மற்றும் இராட்சதர்கள், (6) சித்தர்கள், சாரணர்கள் மற்றும் வித்தியாதரர்கள் (7) பூதங்கள், பிரேதாக்கள் மற்றும் பிசாசுகள், (8) கின்னரர்கள் என்னும் மனித சக்திக்கு மேற்பட்டவர்களும், வானத்து இசைக் கலைஞர்கள் போன்றவர்களாவர். இவர்கள் அனைவருமே பிரபஞ்சத்தினைப் படைத்த பிரம்ம தேவரால் படைக்கப்பட்டவர்களே.

பதம் 3.10.30 : இப்பொழுது நான் மனுக்களின் பரம்பரையினரைப் பற்றி விளக்கப் போகிறேன். படைப்பவரும், முழுமுதற் கடவுளது ரஜோ குணத்தின் அவதாரமாக வந்தவருமான பிரம்ம தேவர், பகவானின் சக்தியின் துணையினால் பிரபஞ்சச் செயல்களை ஒவ்வொரு கல்பத்திலும் மிகுந்த விருப்பத்துடன் படைக்கின்றார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare