அத்தியாயம் – 9
பகவானுக்கு ஏற்புடைய விடைகள்
பதம் 2.9.1
ஸ்ரீ-சுக உவாச
ஆத்ம-மாயாம் ருதே ராஜன் பரஸ்யானபவாத்மன:
ந கடேதார்த-ஸம்பந்த: ஸ்வப்ன-த்ரஷ்டுர் இவாஞ்சஸா

ஸ்ரீசுக: உவாச-ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஆத்ம- பரம்புருஷ பகவான்; மாயாம்-சக்தி; ருதே-இல்லாமல்; ராஜன்-ராஜனே; பரஸ்ய-தூய ஆத்மாவின்; அனுபவ—ஆத்மன:-தூய உணர்வு கொண்டவரின்; ந-ஒருபொழுதும் இல்லை; கடேத—அது அவ்வாறு நிகழக் கூடும்; அர்த—அர்த்தம்; ஸம்பந்த:-ஜட உடலுடன் கொண்ட உறவு; ஸ்வப்ன-சொப்பனம்; த்ரஷ்டு:-காண்பவரின்; இவ-போன்று; அஞ்சஸா-முழுமையாக.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அரசே, ஒருவன் பரமபுருஷ பகவானின் சக்தியால் கவரப்பட வேண்டும். இல்லையெனில் தூய ஆத்மா ஜட உடலுடன் கொண்டுள்ள உறவில் எந்த அர்த்தமும் இல்லை. அத்தகைய உறவு, தனது உடல் இயங்குவதை ஒருவன் சொப்பனத்தில் காண்பதைப் போன்றதாகும்.

பதம் 2.9.2
பஹு-ரூப இவாபாதி மாயயா பஹு-ரூபயா
ரமமாணோ குணேஷு அஸ்யா மமாஹம் இதி மன்யதே

பஹுரூப:-அநேக ரூபங்கள்; இவ—அது இருந்ததைப் போன்று; ஆபாதி- தோற்றுவிக்கப்பட்ட; மாயயா- பகிரங்க சக்தியின் ஆதிக்கத்தால்; பஹு-ரூபயா-அநேக ரூபங்களில்; ரமமாண:-இருப்பதாக எண்ணி அனுபவிக்கிறது; குணேஷு-வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட குணங்களில்; அஸ்யா:-பகிரங்க சக்தியின்; மம- என்னுடைய; அஹம்-நான்; இதி-இவ்வாறாக; மன்யதே- எண்ணுகிறான்.

மாயையால் கவரப்பட்ட ஜீவராசி பகவானின் பகிரங்க சக்தியால் அளிக்கப்படும் பலவித ரூபங்களில் தோன்றுகிறான். ஜட இயற்கைக் குணங்களில் இன்பம் அனுபவிக்கும் வேளையில், சிறைப்பட்ட ஜீவராசி, “நான், எனது” எனும் தப்பெண்ணத்தில் ஆழ்ந்து விடுகிறான்.

பதம் 2.9.3
யர்ஹி வாவ மஹிம்னி ஸ்வே பரஸ்மின் கால-மாயயோ:
ரமேத கத-ஸம்மோஹஸ் த்வக்த்வோதாஸ்தே ததோபயம்

யர்ஹி-எச்சமயத்திலும்; வாவ-நிச்சயமாக; மஹிம்னி- மகிமையில்; ஸ்வே-அவனுடைய; பரஸ்மின்-பரமனில்; கால-காலம்; மாயயோ:-ஜட சக்தியின்; ரமேத-அனுபவிக்கிறான்; கத-ஸம்மோஹ-தப்பான அபிப்பிராயத்திலிருந்து விடுபட்டு; த்யக்த்வா-கைவிட்டு; உதாஸ்தே-முழுமையாக; ததா-பிறகு; உபயம்-இரண்டும் (நான்,எனது எனும் தப்பபிப்பிராயங்கள்).

ஜீவராசி தனது மகிமை வாய்ந்ததான உண்மையான நிலையில் நிலைபெற்று, காலத்திற்கும் ஜட சக்திக்கும் அப்பாற்பட்ட உன்னதத்தை அனுபவிக்கத் துவங்குகிற உடனேயே, (நான், எனது எனும்) இரு தப்பான எண்ணங்களைத் துறந்து பரிபூரண ஆத்மாவாக தோற்றமளிக்கிறான்.

பதம் 2.9.4
ஆத்ம-தத்வ-விசுத்தி-அர்தம் யத் ஆஹ பகவான் ருதம்
ப்ரஹ்மணே தர்சயன் ரூபம் அவ்யலீக-வ்ரதாத்ருத:

ஆத்ம-தத்வ-பகவான் அல்லது ஜீவராசிகளைப் பற்றிய விஞ்ஞானம்; விசுத்தி-தூய்மை; அர்தம்-இலக்கு; யத்-எதுவொன்று; ஆஹ-கூறினார்; பகவான்-முழுமுதற் கடவுள்; ருதம்-உண்மையில்; ப்ரஹ்மணே-பிரம்ம தேவரிடம்; தர்சயன்-தரிசனம் அளிப்பதன் மூலமாக; ரூபம்-நித்தியமான ரூபம்; அவ்யலீக-எவ்விதமான ஏமாற்றும் நோக்கமும் இல்லாமல்; வ்ரத-விரதம்; ஆத்ருத:- வழிபட்டார்.

ராஜனே, பிரம்ம தேவர் பக்தியோகத்தில் உண்மையான தவத்தை மேற்கொண்டார். இதனால் மிகவும் திருப்தியடைந்த முழுமுதற் கடவுள். தமது நித்தியமான உன்னத ரூபத்துடன் பிரம்மாவின் எதிரே காட்சியளித்தார். அதுவே பந்தப்பட்ட ஆத்மாவை தூய்மைப்படுத்துவதற்குரிய குறிக்கோளாகும்.

பதம் 2.9.5
ஸ ஆதி-தேவோ ஜகதாம் பரோ குரு:
ஸ்வதிஷ்ண்யம் ஆஸ்தாய ஸிஸ்ருக்ஷயைக்ஷத
தாம் நாத்யகச்சத் த்ருசம் அத்ர ஸம்மதாம்
ப்ரபஞ்ச-நிர்மாண-விதிர் யயா பவேத்

ஸ:-அவர்; ஆதி-தேவ:-முதல் தேவர்; ஜகதாம்-பிரபஞ்சத்தின்; பர:-உயர்ந்தவர்; குரு:-ஆன்மீக குரு; ஸ்வதிஷ்ண்யம்—அவரது தாமரை ஆசனம்; ஆஸ்தாய—அதன் மூலத்தைக் கண்டுபிடிக்க; ஸிஸ்ருக்ஷயா-பிரபஞ்ச படைப்பிற்காக, ஜக்ஷத-சிந்திக்கத் துவங்கினார்; தாம்-அவ்விஷயத்தில்; ந-முடியவில்லை; அத்யகச்சத்- புரிந்துகொள்ள; த்ருசம்—திசை; அத்ர—அங்கு; ஸம்மதாம்—சரியான வழியை; ப்ரபஞ்ச-ஜடம்; நிர்மாண-நிர்மாணம்; விதி:-முறை; யயா-இயன்ற அளவு; பவேத்-இருக்க வேண்டும்.

முதல் ஆன்மீக குருவும், பிரபஞ்சத்திலேயே உயர்ந்தவருமான பிரம்ம தேவரால் தமது தாமரை ஆசனத்திற்குரிய பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஜட உலகைப் படைக்க வேண்டுமென்று அவர் சிந்தித்தபொழுது, அதற்கான சரியான மார்க்கத்தை அவரால் புரிந்து கொள்ள முடியாதது மட்டுமல்லாமல், அத்தகைய படைப்பிற்கான முறையையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பதம் 2.9.6
ஸ சிந்தயன் த்வி-அக்ஷரம் ஏகதாம்பஸி
உபாஸ்ருணோத் த்விர்-கதிதம் வசோ விபு:
ஸ்பர்சேஷு யத் ஷோடசம் ஏகவிம்சம்
நிஷ்கிஞ்சனானாம் ந்ருப யத் தனம் விது:

ஸ:-அவர்; சிந்தயன்—இவ்வாறு நினைக்கும் வேளையில்; த்வி—இரண்டு; அக்ஷரம்-அட்சரங்கள்; ஏகதா-முன்னொரு காலத்தில்; அம்பஸி—நீரில்; உபாஸ்ருணோத்—அருகாமையில் அதை செவியுற்றார்; த்வி:-இருமுறைகள்; கதிதம்-உச்சரிக்கப்பட்ட; வங்:—வார்த்தைகளை; விபு:- மிகச் சிறந்த; ஸ்பர்சேஷு-ஸ்பர்ச” எழுத்துக்களில்; யத்— எது; ஷோடசம்-பதினாறாம்; ஏகவிம்சம்-மற்றும் இருபத்தொன்றாம்; நிஷ்கிஞ்சனானாம்-வாழ்வின் துறவு நிலையின்; ந்ருப-ராஜனே; யத்-எது; தனம்-செல்வம்; விது:-அது அறியப்பட்டவாறு.

நீருக்குள், இத்தகைய சிந்தனையில் ஈடுபட்டிருந்த வேளையில், அருகில் இரு அட்சரங்கள் இருமுறை ஒலித்ததைக் கேட்டார். அட்சரங்களில் ஒன்று, ‘ஸ்பர்ச” எழுத்துக்களின் பதினாறாம் இடத்திலிருந்தும், மற்றது இருபத்தொன்றாம் இடத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையாகும். இரண்டும் இணைந்து துறவு வாழ்வின் செல்வமாயின.

பதம் 2.9.7
நிசம்ய தத்-வக்த்ரு-தித்ருக்ஷயா திசோ
விலோக்ய தத்ரான்யத் அபஸ்யமான:
ஸ்வதிஷ்ண்யம் ஆஸ்தாய விம்ருஸ்ய தத்-திதம்
தபஸி உபாதிஷ்ட இவாததே மன:

நிசம்ய-செவியுற்ற பின்; தத்—அதை; வக்த்ரு-பேசியவர்; தித்ருக்ஷயா-பேசியது யாரென்பதை கண்டுபிடிப்பதற்காகவே; திச-எல்லா திசைகளிலும்; விலோக்ய-கண்டு; தத்ர-அங்கு; அன்யத்-வேறெந்த; அபஸ்யமான:-காணப்படவில்லை; ஸ்வதிஷ்ண்யம்- அவரது தாமரை ஆசனத்தின் மீது; ஆஸ்தாய-அமர்ந்து; விம்ருஸ்ய-சிந்தித்து; தத்-அது; ஹிதம்-நன்மை; தபஸி-தவத்தில்; உபாதிஷ்ட:-அவருக்குக் கட்டளை இடப்பட்டவாறு; இவ-அதற்கு இணங்க; ஆததே-அளித்தார்; மன:-கவனம்.

ஒசையைக் கேட்டதும் அதை உச்சரித்தவர் யாரென்பதை எல்லாத் திசைகளிலும் தேடிக் கண்டுபிடிக்க அவர் முயன்றார். ஆனால் தன்னைத் தவிர வேரொருவரையும் அவரால் காண முடியவில்லை, அச்சமயம் தனக்குக் கட்டளை இடப்பட்டதுபோல், தன் தாமரை ஆசனத்தில் திடமாக அமர்ந்து, தவத்தை நிறைவேற்றுவதில் தன் கவனத்தைச் செலுத்துவதுதான் விவேகம் என்று அவர் எண்ணினார்.

பதம் 2.9.8
திவ்யம் ஸஹஸ்ராப்தம் அமோக-தர்சனோ
ஜிதானிலாத்மா விஜிதோபயேந்ரியா:
அதப்யத ஸ்மாகில-லோக-தாபனம்
தபஸ் தபீயாம்ஸ் தபதாம் ஸமாஹித:

திவ்யம்—உயர்கிரகங்களிலுள்ள தேவர்கள் சம்பந்தமான; ஸஹஸ்ர-ஆயிரம்; அப்தம்-ஆண்டுகள்; அமோக- அசுத்தத்தின் அறிகுறி கூட இல்லாமல், தூய்மையாக; தர்சன:-வாழ்வில் அத்தகைய ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ள ஒருவர்; ஜித-கட்டுப்படுத்தினார்; அனில- வாழ்வு; ஆத்மா-மனது; விஜித-மீது ஆதிக்கம் செலுத்தினார்; உபய-இரண்டையும்; இந்ரிய:-அத்தகைய புலன்கனைப் பெற்றிருப்பவர்; அதப்யத-தவமியற்றினார்; ஸ்ம-கடந்த காலத்தில்; அகில- அனைத்து; லோக-கிரகம்; தாபனம்-அறிவூட்டும்; தப:- தவம்; தபீயான்-கடுந்தவம்; தபதாம்-தவம் இயற்றுபவர்கள் அனைவரிலும்; ஸமாஹித:-அவ்வாறு அமையப் பெற்று.

பிரம்ம தேவர் தேவர்களின் கணக்குப்படி ஆயிரம் ஆண்டுகள் தவமியற்றினார். உன்னதமான இந்த அசரீரியைக் கேட்ட அவர், அதை தெய்வவாக்காக ஏற்று தமது மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்தினார். அவர் இயற்றிய தவங்கள் ஜீவராசிளுக்கு மிகச் சிறந்த பாடமாக அமைகின்றன. இவ்வாறாக அவர் எல்லா தபஸ்விகளிலும் மிகச்சிறந்தவரென அறியப்படுகிறார்.

பதம் 2.9.9
தஸ்மை ஸ்வ-லோகம் பகவான் ஸபாஜித:
ஸந்தர்ஸயாம் ஆஸ பரம் ந யத்-பரம்
வ்யபேத-ஸங்க்லேச-விமோஹ-ஸாத்வஸம்
ஸ்வ-த்ருஷ்டவத்பிர் புருஷைர் அபிஷ்டுதம்

தஸ்மை-அவரிடம்; ஸ்வ-லோகம்-அவரது சொந்த கிரகம் அல்லது வசிப்பிடம்; பகவான்-பரமபுருஷர்; ஸபாஜித:-பிரம்மாவின் தவத்தால் திருப்தியடைந்து; ஸந்தர்சயாம் ஆஸ-தோற்றுவிக்கப்பட்ட; பரம்-பரமன்; ந-இல்லை; யத்- எதன்; பரம்-இன்னும் பரமான; வ்யபேத-முற்றும் துறந்துவிட்ட; ஸங்கலேச-ஐந்து வகையான ஜடத் துன்பங்கள்; விமோஹ-மாயையற்ற; ஸாத்வஸம்-ஜட வாழ்விலுள்ள பயம்; ஸ்வ-த்ருஷ்ட-வத்பி:-ஆத்மாவைப் பூரணமாக உணர்ந்தவர்களால்; புருஷை:-நபர்களால்; அபிஷ்டுதம்-வழிபடப்படுகிறது.

பிரம்ம தேவரின் தவத்தில் மிகவும் திருப்தியுற்ற முழுமுதற் கடவுள். தமது சொந்த வசிப்பிடமாகிய வைகுண்டத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார். வைகுண்டம் மற்றெல்லாக் கிரகங்களையும் விட பரமானதாகும். பகவானின் உன்னதமான இவ்வசிப்பிடம், எல்லாத் துன்பங்களிலிருந்தும், பௌதிக பயத்திலிருந்தும் விடுபட்டுள்ள தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்களால் வணங்கப்படுகிறது.

பதம் 2.9.10
ப்ரவர்ததே யத்ர ரஜஸ் தமஸ் தயோ:
ஸத்வம் ச மிஸ்ரம் ந ச கால-விக்ரம:
ந யத்ர மாயா கிம் உதாபரே ஹரேர்
அனுவ்ரதா யத்ர ஸுராஸுரார்சிதா:

ப்ரவர்ததே-இருக்கிறது; யத்ர-எங்கு; ரஜ: தம:-ரஜோ மற்றும் தமோ குணங்கள்; தயோ:-அவ்விரண்டின்; ஸத்வம்-சத்வகுணம்; ச-மேலும்; மிஸ்ரம்-கலவை; ந-ஒரு பொழுதுமில்லை; ச-மேலும்; கால-காலம்; விக்ரம்- ஆதிக்கம்; ந-அதுவுமல்ல; யத்ர—அங்கு; மாயா- மாயையான, பகிரங்கசக்தி; கிம்-என்ன; உத—அங்குள்ளது; அபரே-பிறர்; ஹரே:-முழுமுதற் கடவுளின்; அனுவ்ரதா:-பக்தர்கள்; யத்ர—எங்கு; ஸுர—தேவர்களாலும்; அஸுர—மற்றும் அசுரர்களாலும்; அர்சிதா:- வழிபடப்படுகிறார்.

பகவானுக்குச் சொந்தமான அந்த வசிப்பிடத்தில், பௌதிக குணங்களான அறியாமையும், தீவிர உணர்ச்சியும் கிடையாது. அங்குள்ள நற்குணத்தின் மீது அவற்றின் ஆதிக்கமும் கிடையாது. அங்கு காலத்தின் ஆதிக்கம் இல்லை. ஆகவே மாயையான, பகிரங்க சக்தியைப் பற்றி கூற என்ன இருக்கிறது; அப்பிரதேசத்தினுள் அதனால் புக முடியாது. வித்தியாசமில்லாமல் தேவர்களும், அசுரர்களும் பக்தர்களாக இருந்து பகவானை வழிபடுகின்றனர்.

பதம் 2.9.11
ஸ்யாமாவதா: சத-பத்ர-லோசனா:
பிசங்க-வஸ்த்ரா: ஸுருச: ஸுபேசஸ:
ஸர்வே சதுர்-பாஹவ உன்மிஷன்-மணி-
ப்ரவேக-நிஷ்காபரணா: ஸுவர்சஸ:

ஸ்யாம்-ஆகாய வர்ணம் (நீல நிறம்); அவதாதா:- பிரகாசிக்கும்; சத-பத்ர-தாமரை மலர்; லோசனா:- கண்கள்; பிசங்க-மஞ்சள் நிற; வஸ்த்ரா:-ஆடை; ஸுருச:- மிகவும் கவர்ச்சியான; ஸுபேசஸ:-வளரும் இளமை; ஸர்வே-அவர்கள் அனைவரும்; சது:-நான்கு; பாஹவ:-காரங்கள்; உன்மிஷன்-எழும் காந்தி; மணி—முத்துக்கள்; ப்ரவேக-உயர்ந்த தரம்; நிஷக—ஆபரணா:-அலங்காரப் பதக்கங்கள்; ஸுவர்சஸ:-பிரகாசம்.

வைகுண்டலோக வாசிகள், பிரகாசிக்கும் நீல நிற மேனியைப் பெற்றிருப்பதாக வர்ணிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கண்கள் தாமரைப் பூக்களை ஒத்திருக்கின்றன. அவர்களின் ஆடை மஞ்சள் நிறமுடையதும், தேக அம்சங்கள் மிகவும் கவர்ச்சியானவையுமாகும். அவர்கள் இளமைப் பருவத்துடனும், நான்கு கரங்களுடனும், அலங்காரப் பதக்கங்கள் கொண்ட முத்தாரங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு பிரகாசத்துடனும் காணப்படுகின்றனர்.

பதம் 2.9.12
ப்ரவால – வைதூர்ய – ம்ருணால் – வர்சஸ:
பரிஸ்ஃபுரத் – குண்டல – மெளலி – மாலின:

ப்ரவால-பவளம்; வைதூர்ய-வைடூர்யம்; ம்ருணால—விண்ணுலக தாமரை; வர்சஸ:-கதிர்கள்; பரிஸ்ஃபுரத்-பிரகாசிக்கும்; குண்டல-குண்டலம்; மௌலி-தலைகள்; மாலின:- மாலைகளுடன்.

அவர்களில் சிலர் பவளத்தையும், வைடூர்யத்தையும் போல் பிரகாசமான தோற்றத்தைக் கொண்டிருப்பதுடன், தாமரை மலர்களைப் போல் பிரகாசிக்கும் மாலைகளைத் தலைகளில் அணிந்துள்ளனர், சிலர் குண்டலங்களை அணிந்துள்ளனர்.

பதம் 2.9.13
ப்ராஜிஷ்ணுபிர் ய: பரிதோ விராஜதே
லஸத்-விமானாவலிபிர் மஹாத்மனாம்
வித்யோதமான: ப்ரமதோத்தமாத்யுபி:
ஸவித்யுத் அப்ராவலிபிர் யதா நப:

ப்ராஜிஷ்ணுபி:-பிரகாசத்தால்; ய:- வைகுண்ட லோகங்கள்; பரித:-சூழப்பட்டுள்ள; விராஜதே—அவ்வாறு அமையப்பெற்று; லஸத்-பளபளப்பான; விமான-ஆகாய விமானங்கள்: அவலிபி:-கூட்டம்; மஹா—ஆத்மனாம்- சிறந்த பகவத் பக்தர்களின்; வித்யோதமான:- மின்னலைப் போல் அழகிய; ப்ரமத—பெண்மணிகள்; உத்தம-விண்ணுலக; அத்யுபி:-தோற்றத்தால்; ஸ-வித்யுத்-மின்சார மின்னலுடன்; அப்ராவலிபி:-வானத்தில் மேகங்களுடன்; யதா— இருந்ததைப் போல்; நப:-வானம்.

வைகுண்ட லோகங்களும் கூட பளபளப்பாக, ஒளி வீசும் ஆகாய விமானங்களால் சூழப்பட்டுள்ளன. இவ்விமானங்கள் சிறந்த மகாத்மாக்களுக்கு அல்லது பகவத் பக்தர்களுக்குச் சொந்தமானவையாகும். பெண்மணிகள் தங்களின் விண்ணுலக தேக வர்ணங்களினால் மின்னலைப் போன்ற அழகுடன் விளங்குகின்றனர். இவையனைத்தும் இணைந்து, மேகங்களாலும் மின்னலாலும் அலங்கரிக்கப்பட்ட வானத்தைப் போலவே காட்சியளிக்கின்றன.

பதம் 2.9.14
ஸ்ரீர் யத்ர ரூபிணி உருகாய-பாதயோ:
கரோதி மானம் பஹுதா விபூதிபி:
ப்ரேங்கம் ஸ்ரிதா யா சூஸுமாகரானுகைர்
விகீயமானா ப்ரிய-கர்ம காயதீ

ஸ்ரீ:-லக்ஷ்மி தேவி; யத்ர-வைகுண்ட லோகங்களில்; ரூபிணி -அவளது உன்னத ரூபத்தில்; உருகாய-சிறந்த பக்தர்களால் பாடப்படுபவரான, பகவான்; பாதயோ:- பகவானுடைய தாமரைப் பாதங்களின் கீழ்; கரோதி- செய்கிறார்; மானம்-வணக்கத்திற்குரிய சேவைகள்; பஹுதா—பலவிதமான பொருட்களில்; விபூதிபி:-தமது சொந்த சகாக்களால் தொடரப்பட்டவளாய்; ப்ரேங்கம்- இன்ப அசைவு, ஸ்ரிதா-புகலிடம் ஏற்று; யா-யார்; குஸுமாகர—வசந்த காலம், அனுகை:-கருந்தேனீக்களால்; விகீயமானா—பாடல்களால் பின்பற்றப்பட்டு; ப்ரிய-கர்ம- மிகப் பிரியமானவரின் செயல்கள்; காயதீ-பாடும்.

உன்னத வடிவம் கொண்ட லக்ஷ்மி தேவி பகவானின் தாமரைப் பாதங்களில் அன்புத் தொண்டாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறாள். வசந்த கால கருந்தேனீக்களால் உணர்ச்சியூட்டப்பட்ட அவள், இணைபிரியாத தமது சகாக்களுடன் பகவானின் தொண்டில் ஈடுபட்டு, அவருடைய செயல்களின் பெருமைகளைப் பாடுவதில் ஈடுபட்டுள்ளாள்.

பதம் 2.9.15
ததர்ங் தத்ராகில்-ஸாத்வதாம் பதிம்
ஸ்ரிய: பதிம் யக்ஞ-பதிம் ஜகத்-பதிம்
ஸுனந்த -நந்த -ப்ரபலார்ஹணாதிபி:
ஸ்வ- பார்ஷதாக்ரை: பரிஸேவிதம் விபும்

ததர்ச-பிரம்மா கண்டார்; த்தர—அங்கு (வைகுண்ட லோகத்தில்); அகில்-அகில்; ஸாத்வதாம்-சிறந்த பக்தர்களின்; பதிம்-பகவான்; ஸ்ரிய:-லக்ஷ்மி தேவியின்; பதிம்-பகவான்; யக்ஞ-யக்ஞங்களின்; பதிம்-பகவான்; ஜகத்-பிரபஞ்சத்தின்; பதிம்-பகவான்; ஸுனந்த-சுனந்தா; நந்த-நந்தர்; ப்ரபல-பிரபலர்; அர்ஹண-அர்ஹணர்; ஆதிபி:-அவர்களால்; ஸ்வ-பார்ஷத-சொந்த சகாக்கள்; அக்ரை:-முதன்மையானவர்களால்; பரிஸேவிதம்-உன்னத அன்புடன் தொண்டாற்றப்படும்; விபும்-சர்வசக்தி படைத்தவர்.

பக்தர் குழாம் முழுமைக்கும் பகவானாக இருப்பவரும், லக்ஷ்மி தேவியின் பதியும், அனைத்து யக்ஞங்களின் உரிமையாளரும், அகில லோக நாயகனும், நெருங்கிய சகாக்களான நந்தர், சீனந்தர், பிரபலர் மற்றும் அர்ஹணர் முதலான அந்தரங்க தொண்டர்களால் சேவிக்கப் படுபவருமான முழுமுதற் கடவுளை, வைகுண்ட லோகங்களில் பிரம்ம தேவர் தரிசித்தார்.

பதம் 2.9.16
ப்ருத்ய-ப்ரஸாதாபிமுகம் த்ருக்-ஆஸவம்
ப்ரஸன்ன-ஹாஸாருண-லோங்னானனம்
கிரீடினம் குண்டலினம் சதுர்-புஜம்
பிதாம்சுகம் வக்ஷஸி லக்ஷிதம் ஸ்ரியா

ப்ருத்ய-தொண்டன்; ப்ரஸாத—அன்பு; அபிமுகம்—ஆதரவுடன் நோக்கும்; த்ருக்-தோற்றம்; ஆஸவம்-போதை; ப்ரஸன்ன—மிகவும் திருப்தியடைந்த; ஹாஸ-புன்னகை; அருண-சிவந்த; லோசன-கண்கள்; ஆனனம்-முகம்; கிரீடினம்-கிரீடத்துடன்; குண்டலினம்-குண்டலங்களுடன்; சது:-புஜம்—நான்கு கரங்களுடன்; பீத-மஞ்சள்; அம்சுகம்—உடை; வக்ஷஸி-மார்பின் மீது; லக்ஷிதம்-குறியிடப்பட்ட; ஸ்ரியா-லக்ஷ்மியுடன்.

பரமபுருஷர், அவரது அன்பிற்குரிய தொண்டர்களிடம் பாரபட்சம் கொண்டவராவார் போதையூட்டுபவராகவும், கவர்ச்சியுடனும் தோற்றமளித்த அவர், மிகவும் திருப்தியுடையவராகக் காணப்பட்டார். அவர், மயக்கமூட்டும் சிவந்த வர்ணத்தால் அலங்கரிக்கப்பட்டார், புன்னகை பூத்த முகத்துடன், மஞ்சள் நிற ஆடையணிந்து, காதில் குண்டலங்களுடனும், தலையில் கிரீடத்துடனும் காட்சியளித்தார். அவருக்கு நான்கு கரங்கள் இருந்தன. மேலும் அவரது மார்பு லக்ஷ்மி கோடுகளால் குறிக்கப்பட்டிருந்தது.

பதம் 2.9.17
அத்யர்ஹணீயாஸனம் ஆஸ்திதம் பரம்
வ்ருதம் சது:-ஷோடா-பஞ்ச-சக்திபி:
யுக்தம் பகை: ஸ்வைர் இதரத்ர சாத்ருவை:
ஸ்வ ஏவ தாமன் ரமமாணம் ஈஸ்வரம்

அத்யர்ஹணீய-பெரிதும் வழிபடத்தக்க; ஆஸனம்- சிம்மாசனம்; ஆஸ்திதம்-அதன் மீது அமர்ந்திருந்தார்; பரம்—பகவான்; வ்ருதம்-சூழப்பட்டு; சது:-பிரகிருதி, புருஷர், மஹத் மற்றும் அகங்காரம் எனப்படும் நான்கு; ஷோட்ச-பதினாறு; பஞ்ச-ஐந்து; சக்திபி:-சக்திகளால்; யுக்தம்-அதிகாரமளிக்கப்பட்ட; பகை:-அவரது ஐசுவரியங்கள்; ஸ்வை:-சொந்த; இதரத்ர-மற்ற சாதாரண சக்திகள்; ச-தவிரவும்; அத்ருவை:-தற்காலிகமான; ஸ்வே-சொந்த; ஏவ-நிச்சயமாக; தாமன்-வசிப்பிடம்; ரமமாணம்- அனுபவிக்கும்; ஈஸ்வரம்- பரமபுருஷர்.

தமது சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள பகவான், நான்கு, பதினாறு, ஜந்து மற்றும் ஆறு இயற்கையான ஐசுவரியங்கள் எனப்படும் வேறுபட்ட சக்திகளாலும். நிலையற்ற மற்ற சாதாரண சக்திகளாலும் சூழப்பட்டவராய் அமர்ந்திருந்தார். தமது சொந்த வசிப்பிடத்தை அனுபவிப்பவரான அவரே உண்மையான பரமபுருஷராவார்.

பதம் 2.9.18
தத்-தர்ங்னாஹ்லாத-பரிப்லுதான்தரோ
ஹ்ருஷ்யத் – தனு: ப்ரேம-பராஸ்ரு-லோசன:
நனாம பாதாம்புஜம் அஸ்ய விஸ்வ-ஸ்ருக்
யத் பாரமஹம்ஸ்யேன பதாதிகம்யதே

தத்-தர்சன-பகவானின் அந்த தரிசனத்தால்; ஆஹ்லாத—ஆனந்தம்; பரிப்லுத-பொங்கியெழுந்து; அன்தர:- இதயத்தினுள்; ஹ்ருஷ்யத்-முழு பரவசத்தில்; தனு:-உடல்; ப்ரேம-பர-முழுமையான உன்னத அன்பில்; அஸ்ரு-கண்ணீர்; லோசன:-கண்களில்; நனாம-தலை வணங்கினார்; பாத—அம்புஜம்-தாமரைப் பாதங்களின் கீழ்; அஸ்ய-பகவானின்; விஸ்வ-ஸ்ருக்-பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தா; யத்-எது; பாரமஹம்ஸ்யேன-மிகச் சிறந்த முக்தி பெற்ற ஆத்மாவால்; பதா-பாதை; அதிகம்யதே-பின்பற்றப்படுகிறது.

இவ்வாறாக முழுமுதற் கடவுளை முழு தோற்றத்தில் தரிசித்த பிரம்ம தேவர், ஆனந்தத்தால் அன்பும், பரவசமும் மேலிட, கண்களில் அன்புக் கண்ணீர் ததும்பியபடி, பகவானின் முன் தலை வணங்கினார். அதுவே ஜீவராசிகளுக்குரிய மிகவுயர்ந்த பூரணத்துவ (பரமஹம்ஸ) நிலையை அடைவதற்கான வழியாகும்.

பதம் 2.9.19
தம் ப்ரீயமாணம் ஸமுபஸ்திதம் கவிம்
ப்ரஜா-விஸர்கே நிஜ-சாஸனார்ஹணம்
பபாஷ ஈஷத் – ஸ்மித-சோசிஷா கிரா
ப்ரிய: பரியம் ப்ரீத-மனா: கரே ஸ்ப்ருசன்

தம்-பிரம்ம தேவரிடம்; ப்ரீயமாணம்-பிரியப்படுவதற்கு தகுதி படைத்த; ஸமுபஸ்திதம்-முன்னிலையில் இருக்கும்; கவிம்-சிறந்த கல்விமான்; ப்ராஜா-ஜீவராசிகள்; விஸர்கே- படைக்கும் விவகாரத்தில்; நிஜ-அவருக்குச் சொந்தமான; சாஸன-ஆதிக்கம்; அர்ஹணம்-சற்றே பொருத்தமான; பபாஷே-அறிவித்தார்; ஈஷத்-சாந்தமாக; ஸ்மித-புன்னகை பூத்தவாறு; சோசிஷா-ஞானம் புகட்டக்கூடிய; கிரா-சொற்கள்; ப்ரிய:-பிரியமானவர்; ப்ரியம்—அன்பின் மறுவடிவம்; ப்ரீத-மனா:-மிகவும் திருப்தியடைந்து; கரே- கரம்; ஸ்ப்ருசன்-குலுக்கி.

தம் முன் பிரம்மா இருப்பதைக் கண்ட பகவான், ஜீவராசிகளை படைப்பதற்குத் தகுதி வாய்ந்தவராக அவரை ஏற்று, தம் விருப்பப்படியே அவரால் ஆளப்படுவதற்கு உடன்பட்டார். இவ்வாறாக அவரிடம் மிகவும் திருப்தியடைந்த பகவான், பிரம்மாவுடன் கரம்குலுக்கி, இலேசாக புன்னகை செய்து, பின்வருமாறு கூறினார்.

பதம் 2.9.20
ஸ்ரீ-பகவான் உவாச
த்வயாஹம் தோஷித: ஸம்யக்
வேத-கர்ப ஸிஸ்ருக்ஷயா
சிரம் ப்ருதேன் தபஸா
துஸ்தோஷ: கூட- யோகினாம்

ஸ்ரீ-பகவான் உவாச-சர்வ அழகு படைத்த பரமபுருஷர் கூறினார்; த்வயா-உம்மால்; அஹம்-நான்; தோஷத:- திருப்தியடைந்தேன்; ஸம்யக்-முழுமையான; வேத-கர்ப-வேதங்களால் நிரப்பப்பட்டு; ஸிஸ்ருக்ஷயா-படைப்பதற்காக; சிரம்-நீண்ட காலமாக; ப்ருதேன- சேகரிக்கப்பட்ட; தபஸா-தவத்தால்; துஸ்தோஷ:- மகிழ்விப்பது மிகவும் கடினம்; கூட-யோகினாம் போலி யோகிகளுக்காக.

அழகிய முழுமுதற் கடவுள் பிரம்ம தேவரை நோக்கிக் கூறினார்: ஒ பிரம்மா, என்னிடமிருந்து வேதங்களைப் பெற்று, சிருஷ்டிக்கும் விருப்பத்துடன் நீண்ட காலமாக நீர் செய்த தவத்தில் நான் மிகவும் திருப்தியடைகிறேன். போலித்தனமுடைய யோகிகளிடம் நான் திருப்தியடைவதில்லை.

பதம் 2.9.21
வரம் வரய பத்ரம் தே வரேசம மாபிவாஞ்சிதம்
ப்ரஹ்மஞ் ச்ரேய:- பரிஸ்ராம: பும்ஸாம் மத்-தர்ங்னாவதி:

வரம்-வரம்; வரய-என்னிடம் கேளும்; பத்ரம்-மங்களம்; தே- உமக்கு; வர-ஈசம்—அனைத்து வரங்களையும் அளிப்பவர்; மா (மாம்)-என்னிடமிருந்து; அபிவாஞ்சிதம்-ஆசீர்வதிக்கும்; ப்ரஹ்மன்-ஓ பிரம்மா; ஸ்ரேய:-முடியான வெற்றி; பரிஸ்ராம:-அனைத்து தவங்களுக்காகவும்; பும்ஸாம்-அனைவருக்காகவும்; மத்-எனது; தர்சன-தன்னுணர்வு; அவதி:-எனும் எல்லை வரை.

உமக்கு நன்மை உண்டாக வாழ்த்துகிறேன். ஓ பிரம்மா, அனைத்து வரங்களையும் அளிக்கும் என்னிடமிருந்து நீர் விரும்புவதையெல்லாம் கேட்கலாம். தங்களால் அடையப்படும் தன்னுணர்வின் மூலமாக, என்னை தரிசிப்பதே மிகச்சிறந்த வரம் என்பதை நீர் அறிவீராக.

பதம் 2.9.22
மனீஷிதானுபாவோ ‘யம் மம லோகாவலோகனம்
யத் உபஸ்ருத்ய ரஹஸி ங்கர்த பரமம் தப:

மனீஷித-சாமாத்தியம்; அனுபாவ:-காணுதல்; அயம்-இது; மம-எனது; லோக-உலகம்; அவலோகனம்-நிஜமான அனுபவத்துடன் காண்பது; யத்—ஏனெனில்; உபஸ்றுத்ய-செவி சாய்த்தல்; ரஹஸி-கடுந்தவத்தில்; சகாத்-நிறைவேற்றியதால்; பரமம்-மிகவுயர்ந்த; தப:-தவம்,

எனது லோகங்களைச் சொந்தமாக அனுபவித்தறிவதே மிகவுயர்ந்த பூரணத்துவமாகும். மேலும் என்னுடைய கட்டளைக்கேற்ப கடுந்தவத்தை இயற்றுவதில் நீர் மேற்கொண்ட அடக்கமான மனோ நிலையால் இது சாத்தியமாகியுள்ளது.

பதம் 2.9.23
ப்ரத்யாதிஷ்டம் மயா தத்ர த்வயி கர்ம-விமோஹிதே
தபோ மே ஹ்ருதயம் ஸாக்ஷாத் ஆதிமாஹம் தபஸோ‘ நக

ப்ரத்யாதிஷ்டம்-கட்டளையிடப்பட்டது; மயா-என்னால்; தத்ர-காரணத்தால்; த்வயி-உமக்கு; கர்ம-கடமை; விமோஹிதே-கலக்கமுற்றிருந்த; தப:-தவம்; மே-நான்; ஹ்ருத்யம்-இதயம்; ஸாக்ஷாத்-நேரடியாக; ஆத்மா-உயிரும், ஆத்மாவும்; அஹம்-நான்; தபஸ:-தவத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரின்; அனக—ஒ பாவமற்றவரே.

பாவமற்றவரே, கடமையில் நீர் கலக்கமுற்றிருந்தபொழுது தவத்தை மேற்கொள்ளுமாறு முதலில் கட்டளையிட்டது நானே என்பதை அறிவீராக. அத்தகைய தவமே எனது இதயமும், ஆத்மாவுமாகும். எனவே தவத்திற்கும் எனக்கும் வேறுபாடில்லை.

பதம் 2.9.24
ஸ்ருஜாமி தபஸை வேதம் க்ரஸாமி தபஸா புன:
பிபர்மி தபஸா விஸ்வம் வீர்யம் மே துஸ்சரம் தப:

ஸ்ருஜாமி-நான் படைக்கிறேன்; தபஸா—அதே தவ சக்தியால்; ஏவ-நிச்சயமாக; இதம்-இந்த; க்ரஸாமி தபஸா-அதே சக்தியால் அதை நான் ஒடுக்கியும் விடுகிறேன்; புன:-மீண்டும்; பிபர்மி-பாதுகாக்கிறேன்; தபஸா—தவத்தால்; விஸ்வம்-பிரபஞ்சம்; வீர்யம்-சக்தி; மே-என்னுடைய; துஸ்சரம்-கடுமையான; தப:-தவம்.

அத்தகைய தவத்தால் இப்பிரபஞ்சத்தை நான் படைத்து, அதே சக்தியால் அதைக் காத்து, மீண்டும் அதே சக்தியால் அவையனைத்தையும் ஒடுக்கியும் விடுகிறேன். எனவே மறைந்துள்ள சக்தி தவம் மட்டுமேயாகும்.

பதம் 2.9.25
ப்ரஹ்மா உவாச
பகவான் ஸர்வ-பூதானாம் அத்யக்ஷோ ‘வஸ்திதோ குஹாம்
வேத ஹி அப்ரதிருத்தேன் ப்ரக்ஞானேன சிகீர்ஷிதம்

ப்ரஹ்மா உவாச-பிரம்மதேவர் கூறினார்; பகவான்-எம்பெருமானே; ஸர்வ பூதானாம்—அனைத்து ஜீவராசிகளின்; அத்யக்ஷ:-வழிகாட்டி; அவஸ்தித:- அமைந்திருக்கும்; குஹாம்-இதயத்தினுள்; வேத—அறிவீர்; ஹி-நிச்சயமாக; அப்ரதிருத்தேன-தடையின்றி; ப்ரக்ஞானேன்-சிறந்த மதி நுட்பத்தால்; சிகீர்ஷிதம்- முயற்சிகள்.

பிரம்ம தேவர் கூறினார்: எம்பெருமானே- தாங்கள் அனைத்து ஜீவராசிகளின் இதயத்திலும் பரம வழிகாட்டியாக அமர்ந்திருக்கிறீர்கள். இதனால் உங்களது சிறந்த மதிநுட்பத்தின் மூலமாக, ஜீவராசிகளின் எல்லா முயற்சிகளைப் பற்றியும் எவ்வித இடையூறுமின்றி நீங்கள் அறிகிறீர்கள்.

பதம் 2.9.26
தநாபி நாதமானஸ்ய நாத நாதய நாதிதம்
பராவரே யதா ரூபே ஜானீயாம் தேத்வரூபிண:

ததா அபி—அது அவ்வாறிருந்தும்; நாதமானஸ்ய-யாசகம் செய்யும் ஒருவரின்; நாத-பகவானே; நாதய—தயவு செய்து அளிக்க வேண்டும்; நாதிதம்—ஆசைப்பட்டவாறு; பர-அவரே-பௌதிக மற்றும் ஆன்மீக விஷயங்களில்; யதா—உள்ளவாறு; ரூபே-உருவில்; ஜானீயாம்-அது அறிவிக்கப்படுமாக; தே-தங்களுடைய; து-ஆனால்; அரூபிண:- உருவமில்லாதவர்.

எம்பெருமானே அப்படியிருந்தும், எனது விருப்பத்தை தாங்கள் அன்புடன் நிறைவேற்ற வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன். உங்களது உருவம் உன்னதமானது. பௌதிக உருவம் உங்களுக்கு இருந்ததில்லை என்றாலும், அத்தகைய உருவத்தை தாங்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை தயவுசெய்து என்னிடம் அறிவிக்க வேண்டுகிறேன்.

பதம் 2.9.27
யதாத்ம-மாயா-யோகேன
நானா-சக்தி-உபப்ரும்ஹிதம்
விலும்பன் விஸ்ருஜன் க்ருஹ்ணன்
பிப்ரத் ஆத்மானம் ஆத்மனா

யதா-அந்த அளவுக்கு; ஆத்ம-சொந்த; மாயா-சக்தி; யோகேன-இணைப்பால்; நானா-பல்வேறு; சக்தி-சக்தி; உபப்ரும்ஹிதம்-இணைப்பாலும்; மாற்றத்தாலும்; விலும்பன்-அழிக்கும் விஷயத்தில்; விஸ்ருஜன்-படைக்கும் விஷயத்தில்; க்ருஹ்ணன்-அங்கீகரிக்கும் விஷயத்தில்; பிப்ரத்-காக்கும் விஷயத்தில்; ஆத்மானம்-தாமே; ஆத்மனா—சுயமாக.

மேலும், சேர்க்கையின் மூலமாக, மாற்றத்தின் மூலமாகவும் தாங்கள் எப்படி அழிக்கவும், உற்பத்தி செய்யவும், ஏற்கவும் மற்றும் பராமரிக்கவும் பலதரப்பட்ட சக்திகளை வெளிப்படுத்துகிறீர்கள்? (தயவுசெய்து என்னிடம் தெரிவிக்கவும்).

பதம் 2.9.28
க்ரீடஸி அமோக-ஸங்கல்ப
ஊர்ணநாபிர் யதோர்ணுதே
ததா தத்-விஷயாம் தேஹி
மனிஷாம் மயி மாதவ

க்ரீடஸி-தாங்கள் நடப்பதைப் போல்; அமோக-தவறாத; ஸங்கல்ப-தீர்மானம்; ஊர்ணநாபி:-சிலந்தி; யதா-அது போலவே; உர்ணுதே-மறைந்து கொள்கிறது; ததா- அவ்வாறு; தத்-விஷயாம்-அவ்வெல்லா விஷயங்களிலும்; தேஹி-எனக்குக் கூறுங்கள்; மனீஷாம்-தத்துவார்த்தமாக; மயி-என்னிடம்; மாதவ-சர்வ சக்திகளுக்கும் எஜமானரே.

சர்வ சக்திகளுக்கும் எஜமானரே, அவைகளைப் பற்றிய அனைத்தையும் தத்துவார்த்தமாக தயவு செய்து என்னிடம் கூறியருளுங்கள். சிலந்தி தன்னுடைய சொந்த சக்தியால் தன்னை மறைத்துக் கொள்வதைப் போலவேதான் தாங்களும் நடந்து கொள்கிறீர்கள். உங்களுடைய தீர்மானம் என்றுமே தவறாததாகும்.

பதம் 2.9.29
பகவச்-சிக்ஷிதம் அஹம்
கரவாணி ஹி அதன்ரித:
நேஹமான: ப்ரஜா-ஸர்கம்
பத்யேயம் யத்-அனுக்ரஹாத்

பகவத்-பரமபுருஷரால்; சிக்ஷிதம்—கற்பித்து; அஹம்—நான்; கரவாணி-செயற்படுவதால்; ஹி-நிச்சயமாக; அதன்ரித:-கருவியாக; ந-ஒருபொழுதும் இல்லை; இஹமான:-செயற்பட்டாலும்; ப்ரஜா—ஸர்கம்—ஜீவராசிகளின் படைப்பு; பத்யேயம்-பந்தப்பட்டு; யத்- உண்மையிலேயே; அனுக்ரஹாத்-கருணையால்.

பரமபுருஷரான தங்களுடைய உபதேசத்தின் மூலமாக இவ்விஷயத்தில் நான் கற்பிக்கப்பட்டால், ஜீவராசிகளைப் படைப்பதில் நான் உங்களுடைய கருவியாகச் செயற்பட்டு, அத்தகைய செயல்களால் பந்தப்பட்டுவிடாமல் என்னால் இருக்க முடியும். எனவே அவைகளைப் பற்றி தயவுசெய்து எனக்குக் கூறுங்கள்.

பதம் 2.9.30
யாவத் ஸகா ஸக்யுர் இவேச தே க்ருத:
ப்ரஜா-விஸர்கே விபஜாமி போ ஜனம்
அவிக்லவஸ் தே பரிகர்மணி ஸ்திதோ
மா மே ஸமுன்னத்த-மதோ ‘ஜ மானின:

யாவத்—உள்ளவாறு; ஸகா-நண்பன்; ஸக்யு:-நண்பனிடம்; இவ-அதைப்போல; ஈச-பெருமானே; தே-தாங்கள்; க்ருத:- ஏற்றுக் கொண்டீர்கள்; ப்ரஜா-ஜீவராசிகள்; விஸர்கே- படைப்பின் விவகாரத்தில்; விபஜாமி-நான் அதை வேறுவிதமாக செய்யப் போவதைப்போல்; போ:- எம்பெருமானே; ஜனம்-பிறந்தவர்கள்; அவிக்லவ:- குழப்பம் அடைந்துவிடாமல்; தே-தங்களது; பரிகர்மணி- சேவையின் விவகாரத்தில்; ஸ்தித:-அவ்வாறு அமையப்பெற்று; மா-ஒருபொழுதும் அவ்வாறு இல்லாதிருக்குமாக; மே-என்னிடம்; ஸமுன்னத்த-எழுச்சியை விளைவிக்கும்; மத:-மதம்பிடித்த நிலை; அஜ-பிறப்பற்றவரே; மானின்:-அப்படி எண்ணும் வகையில்.

எம்பெருமானே. பிறப்பற்றவரே, ஒரு நண்பனைப் போல் (சம நிலையில் இருப்பவரைப் போல்) தாங்கள் என்னுடன் கரம் குலுக்கினீர்கள், வெவ்வேறு வகையான ஜீவராசிகளைப் படைப்பதில் ஈடுபட்டு, தங்களுடைய சேவையில் நான் ஆழ்ந்துவிட வேண்டும். எந்த குழப்பமும் எனக்கு ஏற்படாதிருக்க வேண்டும். மேலும் நானே பரமன் என்றெண்ணி, இவையனைத்தும் என்னிடம் கர்வத்தை எழுப்பிவிடாமல் இருக்க வேண்டுமென்றும் பிரார்த்திக்கிறேன்.

பதம் 2.9.31
ஸ்ரீபகவான் உவாச
ஞானம் பரம-குஹ்யம் மே
யத் விக்ஞான-ஸமன்விதம்
ஸரஹஸ்யம் தத்-அங்கம் ச
க்ருஹாண கதிதம் மயா

ஸ்ரீ-பகவான் உவாச-முழுமுதற் கடவுள் கூறினார்; ஞானம்- பெறப்பட்ட அறிவு; பரம-மிகவும் அதிகமாக; குஹ்யம்-இரகசியமானது; மே-எனது; யத்-எது; விக்ஞான-உணர்வு; ஸமன்விதம்-கிரமமாக இணைக்கப்படுகிறது; ஸ-ரஹஸ்யம்-பக்தித் தொண்டுடன்; தத்-அதன்; அங்கம் ச- தேவையான விஷயங்கள்; க்ருஹாண—சற்றே முயன்று பாரும்; கதிதம்- விவரிக்கப்பட்டுள்ள; மயா—என்னால்.

முழுமுதற் கடவுள் கூறினார்: சாஸ்திரங்களில் விவரிக்கப் பட்டுள்ளதைப் போல், என்னைப் பற்றிய அறிவு மிகவும் இரகசியமானதாகும். அதை பக்தித் தொண்டின் உதவியுடன் உணர வேண்டும். அதற்குத் தேவையான விஷயம் இப்பொழுது என்னால் விளக்கப்படுகிறது. இதை நீர் கவனத்துடன் கேளும்.

பதம் 2.9.32
யாவான் அஹம் யதா-பாவோ
யத்-ரூப-குண-கர்மக:
ததைவ தத்வ-விக்ஞானம்
அஸ்து தே மத்-அனுக்ரஹாத்

யாவான்-எனது நித்திய உருவில் நான் உள்ளவாறு; அஹம்—நான்; யதா-தேவையான அளவு; பாவ:-உன்னத வாழ்வு; யத்-அந்த; ரூப-பல்வேறு உருவங்களும், நிறங்களும்; குண-குணங்கள்; கர்மக:-செயல்கள்; ததா-போன்றவை; ஏவ-நிச்சயமாக; தத்வ-விக்ஞானம்- உண்மையான தன்னுணர்வு; அஸ்து—அப்படியே ஆகட்டும்; தே-உமக்கு; மத்—எனது; அனுக்ரஹாத்—அகாரணமான கருணையால்.

எனது உண்மையான நித்திய ரூபம், எனது உன்னத வாழ்வு, வர்ணம், குணங்கள் மற்றும் செயல்கள் ஆகிய என்னைப் பற்றிய அனைத்தும், எனது அகாரணமான கருணையில், உமது உண்மையான இறையுணர்வின் மூலமாக உமக்குள் எழுந்தருளட்டும்.

பதம் 2.9.33
அஹம் ஏவாஸம் ஏவாக்ரே நான்யத் யத் ஸத்-அஸத் பரம் பஸ்சாத் அஹம் யத் ஏதச் ங் யோ ‘வசிஷ்யேத ஸோ ‘ஸ்மி அஹம்

அஹம்-பரமபுருஷரான நான்; ஏவ-நிச்சயமாக; ஆஸம்- இருந்தேன்; ஏவ-மட்டுமே; அக்ரே-படைப்பிற்கு முன்; ந-ஒரு பொழுதுமில்லை; அன்யத்—வேறெதுவும்; யத்—அவ்வெல்லா; ஸத்-விளைவு; அஸத்-காரணம்; பரம்-பரமன்; பஸ்சாத்-முடிவில்; அஹம்-முழுமுதற் கடவுளாகிய; யத்—இவ்வெல்லா; ஏத்த-படைப்பு; ச-தவிரவும்; ய-அனைத்தும்; அவசிஷ்யேத-எஞ்சியுள்ளது; ஸ-அது; அஸ்மி-நான் இருக்கிறேன்; அஹம்-முழுமுதற் கடவுளாகிய நான்.

பிரம்மா, படைப்பிற்கு முன் முழுமுதற் கடவுளாகிய என்னைத்தவிர வேறொன்றும் இருக்கவில்லை. இப்படைப்பிற்குக் காரணமாக இருக்கும் ஜட இயற்கையும் கூட அப்பொழுது இருக்கவில்லை. இப்பொழுது நீர் காண்பவையும் கூட முழுமுதற் கடவுளாகிய நானே, மேலும் அழிவுக்குப் பின் எஞ்சியிருக்கப் போவதும் முழுமுதற் கடவுளாகிய நானே.

பதம் 2.9.34
ருதே ‘ர்தம் யத் ப்ரதீயேத ந ப்ரதீயேத சாத்மனி
தத் வித்யாத் ஆத்மனோ மாயாம் யதாபாஸோ யதா தம:

ருதே-இல்லாமல்; அர்தம்-மதிப்பு; யத்-எது; ப்ரதீயேத- தோற்றமளிக்கும்; ந-இல்லை; ப்ரதீயேத-தோற்றமளிக்கும்; ச-மேலும்; ஆத்மனி-என்னுடனான உறவில்; தத்—அது; வித்யாத்-நீர் அறிய வேண்டும்; ஆத்மன:-என்னுடைய; மாயாம்-மாயா சக்தி; யதா-அதைப்போலவே; ஆபாஸ:- பிரதிபலிப்பு; யதா—அதுபோல்; தம:-இருள்.

ஓ பிரம்மா, மதிப்புடையதாகக் காட்சியளிப்பது எதுவானாலும், அது என்னுடைய சம்பந்தப்பட்டு இருக்கவில்லையெனில் அதில் உண்மையில்லை. இருளில் உள்ளதாகச் காட்சியளிக்கும் அந்த பிரதிபலிப்பை எனது மாயா சக்தியென அறிவீராக.

பதம் 2.9.35
யதா மஹாந்தி பூதானி பூதேஷூச்சாவசேஷு அனு ப்ரவிஷ்டானி அப்ரவிஷ்டானி ததா தேஷு ந தேஷு அஹம்

யதா—அவ்வாறே; மஹாந்தி-பிரபஞ்ச; பூதானி-ஐம்பூதங்கள் (மூலப் பொருட்கள்); பூதேஷு-உச்ச—அவசேஷு-மிகச்சிறிய மற்றும் பிரம்மாண்டமானவைகளில்; அனு-பிறகு; ப்ரவிஷ்டானி-நுழைந்தன; அப்ரவிஷ்டானி-நுழையவில்லை; ததா-ஆகையால்; தேஷு-அவற்றினுள்; ந—இல்லை; தேஷு—அவற்றினுள்; அஹம்—நான்.

ஓ பிரம்மா, பஞ்சபூதங்கள் பிரபஞ்சத்தினுள் நுழைகின்றன, அதேசமயம் நுழையாமலும் இருக்கின்றன; அதைப் போலவே, படைக்கப்பட்ட அனைத்திற்குள்ளும் நான் இருக்கிறேன், அதேசமயம் அவற்றிற்கு வெளியிலும் இருக்கிறேன்.

பதம் 2.9.36
ஏதாவத் ஏவ ஜிக்ஞாஸ்யம் தத்வ- ஜிக்ஞாஸுனாத்மன:
அன்வய-வ்யதிரேகாப்யாம் யத் ஸ்யாத் ஸர்வத்ர ஸர்வதா

ஏதாவத்-இதுவரை; ஏவ-நிச்சயமாக; ஜிக்ஞாஸ்யம்-விசாரிக்கப்பட வேண்டும்; தத்வ-பரம சத்தியம்; ஜிக்ஞாஸுனா-மாணவனால்; ஆத்மன:-ஆத்மாவின் (பகவானின்); அன்வய-நேராக; வ்யதிரேகாப்பாம்- மறைமுகமாக; யத்-எதுவாக; ஸ்யாத்-அது இருப்பினும்; ஸர்வத்ர-எக்காலத்திலும், எவ்விடத்திலும்; ஸர்வதா- எல்லாச் சூழ்நிலைகளிலும்.

பரம சத்தியமான முழுமுதற் கடவுளைத் தேடும் ஒருவன், எல்லாச் சூழ்நிலைகளிலும், எக்காலத்திலும், எவ்விடத்திலும், நேராகவோ அல்லது மறைமுகமாகவோ, இந்நிலை வரைக்கும் தேடுவான் என்பது நிச்சயம்.

பதம் 2.9.37
ஏதன் மதம் ஸமாதிஷ்ட பரமேண ஸமாதினா
பவான் கல்ப-விகல்பேஷு ந விமுஹ்யதி கர்ஹிசித்

ஏதத்-இந்த; மதம்-முடிவை; ஸமாதிஷ்ட-நிலையாக இரு; பரமேண-பரமனால்; ஸமாதினா-மன ஒருமை; பவான்- நீர்; கல்ப-இடைப்பட்ட அழிவு (பிரளயம்) ; விகல்பேஷு- இறுதியான அழிவில்; ந-விமுஹ்யதி-ஒருபொழுதும் குழப்பத்திற்கு ஆளாகமாட்டீர்; கர்ஹிசித்-திருப்தியைப் போலுள்ள எதுவும்.

ஓ பிரம்மா, இம்முடிவை உறுதியான மன ஒருமையுடன் நீர் பின்பற்ற வேண்டும். இதனால் இடைபட்ட அல்லது முடிவான அழிவு காலத்தில், எவ்விதமான அகங்காரமும் உமது அமைதியைக் குலைக்காது.

பதம் 2.9.38
ஸ்ரீ – சுக உவாச
ஸம்ப்ரதிஸ்யவம் அஜனோ ஜனானாம் பரமேஷ்டினம் பஸ்யதஸ் தஸ்ய நத் ரூபம் ஆத்மனோ ன்யருணத் தரி:

ஸ்ரீ-சுக: உவாச-ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸம்ப்ரதிஸ்ய—பிரம்ம தேவருக்கு முழுமையாக உபதேசித்து; ஏவம்-இவ்வாறாக; அஜன:-பரமபுருஷர்; ஜனானாம்-ஜீவராசிகளின்; பரமேஷ்டினம்-பிரதான தலைவராகிய பிரம்மாவிடம்; பஸ்யத:-அவர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது; தஸ்ய—அவருடைய; தத் ரூபம் உன்னதமான அவ்வுருவம்; ஆத்மன:-பகவானின்; ஸ்யருணத்-மறைந்துவிட்டார்; ஹரி:-முழுமுதற் கடவுளான பகவான்.

சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து மகாராஜனிடம் கூறினார் ஜீவராசிகளின் தலைவரான பிரம்ம தேவருக்கு உபதேசிக்கும்பொழுது தமது உன்னதமான உருவத்தில் காணப்பட்ட பரமபுருஷரான ஹரி, பிறகு மறைந்துவிட்டார்.

பதம் 2.9.39
அந்தர்ஹிதேந்ரியார்தாய ஹரயே விஹிதாஞ்சலி:
ஸர்வ-பூதமயோ விஸ்வம் ஸஸர்ஜேதம் ஸ பூர்வவத்

அந்தர்ஹித-மறைந்ததும்; இந்ரிய-அர்தாய-எல்லாப் புலன்களுக்கும் இலக்காக உள்ள முழுமுதற் கடவுளிடம்; ஹரயே-பகவானிடம்; விஹித-அஞ்சலி:-கூப்பிய கரங்களுடன்; ஸர்வ-பூத-அனைத்து ஜுவராசிகளையும்; மய:-நிரம்பிய; விஸ்வம்-பிரபஞ்சம்; ஸஸர்ஜ-படைத்தார்; இதம்-இது; ஸ:-அவர் (பிரம்மதேவர்); பூர்வ—வத்-முன்பு இருந்ததைப் போலவே.

பக்தர்களுடைய புலன்களுக்கு உன்னதமான இன்பத்தை அளிப்பவரான பரமபுருஷ பகவான் ஸ்ரீஹரியின் மறைவுக்குப் பின், பிரம்மா, கூப்பிய கரங்களுடன், முன்பு ஜீவராசிகளால் நிரப்பப்பட்டிருந்ததைப் போன்ற பிரபஞ்சத்தை மறுபடியும் சிருஷ்டிக்கத் துவங்கினார்.

பதம் 2.9.40
ப்ரஜாபதிர் தர்ம-பதிர் ஏகதா நியமான் யமான்
பத்ரம் ப்ரஜானாம் அன்விச்சன் ஆதிஷ்டத் ஸ்வார்த- காம்யயா

ப்ரஜா-பதி:-அனைத்து ஜீவராசிகளுக்கும் மூதாதை; தர்ம- பதி:-சமய வாழ்வின் தந்தை; ஏகதா-முன்னொரு காலத்தில்; நியமான்-சட்ட திட்டங்கள்; யமான்-கட்டுப்பாட்டு விதிகள்; பத்ரம்-நன்மையை; ப்ரஜானாம்—ஜீவராசிகளின்; அன்விச்சன்-விரும்பி; ஆதிஷ்டத்- இருந்தார்; ஸ்வ-அர்த-தன்னலம்; காம்யயா—அவ்வாறு விருப்பம் கொண்டு.

இவ்வாறாக, முன்னொரு காலத்தில், ஜீவராசிகளின் மூதாதையும், சமயத்தில் தந்தையுமான பிரம்ம தேவர், அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை செய்ய விரும்பி, கட்டுப்பாடான வாழ்வை மேற்கொண்டார்.

பதம் 2.9.41
தம் நாரத: ப்ரியதமோ ரிக்தாதனாம் அனுவ்ரத: கஸ்ரூஷமாண : சீலேன ப்ரஸ்ரயேண தமேன ச

தம்-அவருக்கு; நாரத:-சிறந்த முனிவரான நாரதர்; ப்ரியதம:-மிகவும் பிரியமான; ரிக்த-ஆதானாம்-வாரிசாக உள்ள மகன்களில்; அனுவ்ரத:-நன்கு கீழ்ப்படிந்து நடக்கும்; சீஸ்ரூஷமாண:-சேவை செய்ய எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும்; சீலேன-நன்னடத்தையால்; ப்ரஸ்ரயேண-அடக்கத்தினால்; தமேண-புலனடக்கத்தால்; ச-மேலும்.

பிரம்மாவின் வாரிசுகளிலேயே மிகப் பிரியமானவரான நாரதர், தமது தந்தைக்குச் சேவை செய்ய எப்பொழுதும் தாயாராக இருப்பதுடன், அவரது கட்டளைகளை, நன்னடத்தையுடனும், பணிவுடனும் மற்றும் புலனடக்கத்துடனும் கண்டிப்பாகப் பின்பற்றுகிறார்.

பதம் 2.9.42
மாயாம் விவதிஷன் விஷ்ணோர் மாயேசஸ்ய மஹா-முனி:
மஹா-பாகவதோ ராஜன் பிதாம் பர்யதோஷயத்

மாயாம்-சக்திகளை; விவிதிஷன்-அறிய ஆவல் கொண்டு; விஷ்ணோ:-முழுமுதற் கடவுளின்; மாயா-ஈங்ஸ்ய-சர்வ சக்திகளுக்கும் உரிமையாளரின்; மஹா-முனி:-மகா முனிவர்; மஹா-பாகவத:-பகவானின் முதல்தர பக்தர்; ராஜன்-ஒ ராஜனே; பிதாம்-அவரது தந்தையிடம்; ப்ர்யதோஷயத்-மிகவும் திருப்தியடைந்தார்.

ராஜனே, முனிவர்களுக்கெல்லாம் தலை சிறந்தவராகவும், பக்தர்களுக்கெல்லாம் சிகரமாகவும் விளங்கி, தம் தந்தையை மிகவும் திருப்திபடுத்திய நாரதர், சர்வ சக்திகளுக்கும் எஜமானராகிய விஷ்ணுவின் சக்திகளைப் பற்றிய அனைத்தையும் அறிய விரும்பினார்.

பதம் 2.9.43
துஷ்டம் நிசாம்ய பிதாம் லோகானாம் ப்ரபிதாமஹம் தேவர்ஷி: பரியப்ரச்ச பவான் யன் மானுப்ருச்சதி

துஷ்டம்-திருப்தியடைத்திருப்பதை; நிசாம்ய-கண்ட பிறகு; பிதாம்-தந்தை; லோகானாம்-முழு பிரபஞ்சத்தின்; ப்ரபிதாமஹம்-கொள்ளு பாட்டன் (பிதாமகர்); தேவர்ஷி:- சிறந்த முனிவரான நாரதர்; பரிபப்ரச்ச-விசாரித்தார்; பவான்-நீரே; யத்-உள்ளவாறு; மா-என்னிடமிருந்து; அனுப்ருச்சதி- விசாரிக்கும்.

தமது தந்தையும், பிரபஞ்சங்களின் பிதாமகருமான பிரம்மா, நன்கு திருப்தியடைந்திருப்பதைக் கண்ட பின், மிகச் சிறந்த முனிவரான நாரதரும் அவரிடமிருந்து விவரமாக விசாரித்தார்.

பதம் 2.9.44
தஸ்மா இதம் பாகவதம் புராணம் தச – லக்ஷணம்
ப்ரோக்தம் பகவதா ப்ராஹ ப்ரீத: புத்ராய பூத – க்ருத்

தஸ்மை-அதன்பிறகு; இதம்-இந்த; பாகவதம்-பகவானின் பெருமைகள் அல்லது பகவத் விஞ்ஞானம்; புராணம்—வேத அநூபந்தம்; தச-லக்ஷணம்-பத்து சிறப்பியல்புகள்: ப்ரோக்தம்-விவரிக்கப்பட்ட; பகவதா-முழுமுதற் கடவுளால்; ப்ராஹ-கூறினார்; ப்ரீத:-திருப்தியுடன்; புத்ராய-புத்திரனிடம்; பூத-க்ருத-பிரபஞ்சத்தின் சிருஷ்டிக் கர்த்தா.

அதன் பிறகு, முழுமுதற் கடவுளால் விவரிக்கப்பட்டதும், பத்து சிறப்பியல்புகளைக் கொண்டதும், வேத அநுபந்தமுமான ஸ்ரீமத் பாகவதம், தந்தையால் (பிரம்மா) அவரது மகன் நாரதருக்கு திருப்தியுடன் கூறப்பட்டது.

பதம் 2.9.45
நாரத: ப்ராஹ முனயே ஸரஸ்வத்யாஸ் தடே ந்ருப
த்யாயதே ப்ரஹம பரமம் வ்யாஸாயாமித – தேஜஸே

நாரத:-மகா முனிவர் நாரதர்; ப்ராஹ-உபதேசித்தார்; முனயே-பெரும் முனிவரிடம்; ஸரஸ்வத்யா:-சரஸ்வதி நதியின்; தடே-கரையில்; ந்ருப—ஓ ராஜனே; த்யாயதே-தியானத்தில் இருப்பவரிடம்; ப்ரஹம-பரபிரம்மம்; பரமம்- பரமன்; வ்யாஸாய-ஸ்ரீல வியாஸ தேவரிடம்; அமித- எல்லையற்ற; தேஜஸே-சக்தி வாய்ந்தவரிடம்.

அரசே! சரஸ்வதி நதிக்கரையில், பரமபுருஷரிடம் அல்லது பரபிரம்மத்திடம் பக்திபூர்வமாக தியானத்தில் ஆழ்ந்திருந்தவரான, எல்லையற்ற சக்தி படைத்த வியாஸதேவரிடம், மகாமுனிவரான நாரதர், பரம்பரையின் வாயிலாக ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார்.

பதம் 2.9.46
யத் உதாஹம் த்வயா ப்ருஷ்டோ வைராஜாத் புருஷாத் இதம்
யதாஸீத் தத் உபாக்யாஸ்தே ப்ரஸ்னான் அன்யாம்ஸ் ச க்ருத்ஸ்னச:

யத்-என்ன; உத-ஆயினும்; அஹம்-நான்; த்வயா-உம்மால்; ப்ருஷ்ட:-கேட்டுக் கொள்ளப்பட்டேன்; வைராஜாத்-பிரபஞ்ச ரூபத்திலிருந்து: புருஷாத்-பரமபுருஷரிடமிருந்து; இதம்-இவ்வுலகம்; யதா-ஆஸீத்-இருந்தவாறு; தத்—அது; உபாக்யாஸ்தே-நான் விளக்குவேனாக; ப்ரஸ்னா-எல்லாக் கேள்விகளையும்; அன்யான்-மற்றவைகளையும்; ச-மேலும்; க்ருத்ஸ்னச:-விவரமாக.

அரசே முழுமுதற் கடவுளின் விஸ்வ ரூபத்திலிருந்து பிரபஞ்சம் எப்படி தோற்றுவிக்கப்பட்டது என்ற உமது கேள்விக்கும், பிற கேள்விகளுக்கும், ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பதங்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலமாக விவரமாக நான் விடையளிக்கப் போகிறேன்.


ஸ்ரீமத் பாகவதம், இரண்டாம் காண்டத்தின், “பகவானுக்கு ஏற்புடைய விடைகள்” எனும் தலைப்பைக் கொண்ட ஒன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare