அத்தியாயம் – 3
தூய பக்தித் தொண்டு இதயத்தின் மாற்றம்
பதம் 2.3.1 : ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, மரணத்தின் வாயிலில் உள்ள மதி நுட்பமுள்ள மனிதனின் கடமையைப் பற்றிய உமது விசாரணைக்கு ஏற்றவாறு நானும் பதில் கூறியிருக்கிறேன்.

பதங்கள் 2.3.2 – 2.3.7 : அருவமான பிரம்மஜோதிப் பேரொளியில் ஆழ்ந்துவிட ஆசைப்படுபவன் வேதங்களின் ஆசானை (பிரம்ம தேவர் அல்லது கற்றறிந்த பிருஹஸ்பதி) வழிபட வேண்டும். சக்திமிக்க காம சுகத்தை விரும்புபவன் தேவராஜனான இந்திரனையும், நன்மக்கட்பேறை விரும்புபவன் பிரஜாபதிகள் என்று அழைக்கப்படும் முன்னோர்களையும் வழிபட வேண்டும். நல்லதிர்ஷ்டத்தை விரும்புபவன் ஜட உலகின் மேலதிகாரியாகிய துர்கா தேவியை வழிபட வேண்டும். மிகவும் சக்தியுடையவர்களாக ஆக விரும்புபவன் அக்னியையும், பணத்திற்காக மட்டுமே ஆசைப்படுபவன் வசுக்களையும் வழிபட வேண்டும். புகழ் படைத்த வீரனாக விரும்புபவன் சிவபெருமானின் ருத்திர அவதாரங்களை வழிபட வேண்டும். தானியங்களின் சேமிப்பை வேண்டுபவன் அதிதியையும், சுவர்க்க லோகங்களை அடைய விரும்புபவன் அதிதியின் மகன்களையும் வழிபட வேண்டும். இராஜ்யத்தை விரும்புபவன் விஸ்வதேவரையும், பொது மக்களிடையே நன்மதிப்பைப் பெற ஆசைப்படுபவன் ஸாத்யன் என்ற தேவனையும் வழிபட, ஆயுளை விரும்புபவன் அஸ்வினி குமாரர்கள் எனப்படும் தேவர்களையும், வலிமை பொருந்தியதோர் உடற்கட்டை விரும்புகிறவன் பூமியை வழிபட வேண்டும். நிலைத்த பதவிக்கு ஆசைப்படுபவன் தொடுவானத்தையும், பூமியையும் சேர்த்து வழிபட வேண்டும். அழகுடையவனாக இருக்க ஆசைப்படுபவன் கந்தர்வலோகத்து அழகிய வாசிகளையும், நல்ல மனைவியை விரும்புபவன் சுவர்க்கலோகங்களைச் சேர்ந்த அப்ஸரஸ் மற்றும் ஊர்வசி எனப்படும் சமூகப் பெண்களையும் வழிபட வேண்டும். பிறர் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புபவன் பிரபஞ்சத்தின் தலைவராகிய பிரம்மதேவரையும், உண்மையான கீர்த்தியை விரும்புகிறவன் முழுமுதற் கடவுளையும் வழிபட வேண்டும். வங்கியில் அதிகமான பண இருப்புக்கு ஆசைப்படுபவன் வருணன் என்ற தேவனை வழிபட வேண்டும். பெரும் புலமை பெற்ற ஒரு மனிதனாக ஒருவன் ஆக விரும்பினால் அவன் சிவபெருமானின் மனைவியாகிய, கற்புடைய உமாதேவியையும் வழிபட வேண்டும்.

பதம் 2.3.8 : அறிவுபூர்வமான ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒருவன் பகவான் விஷ்ணுவையோ அல்லது அவரது பக்தரையோ வழிபட வேண்டும். மேலும் வம்சத்தின் பாதுகாப்பிற்கும், அதன் முன்னேற்றத்திற்கும் ஒருவன் வெவ்வேறு தேவர்களை வழிபட வேண்டும்.

பதம் 2.3.9 : ஒரு ராஜ்யத்தையோ அல்லது சாம்ராஜ்யத்தையோ ஆள விரும்பு கிறவன் மனுக்களை வழிபட வேண்டும். எதிரியை வெல்லும் விரும்புபவன் இன்பத்தை ஆவலுள்ளவன் அசுரர்களையும், புலனின்பத்தை சந்திரனையும் வழிபட வேண்டும். ஆனால் ஜட இன்பத்தை விரும்பாதவன் பரம புருஷ பகவானை வழிபட வேண்டும்.

பதம் 2.3.10 : தெளிந்த புத்தியுள்ள ஒருவன், பௌதிக ஆசைகள் நிரம்பியவனாகவோ, பௌதிக ஆசைகளே இல்லாதவனாகவோ, அல்லது முக்தியை விரும்புபவனாகவோ இருந்தாலும், அவன் எல்லா வழிகளிலும் பரம பூரணராகிய முழுமுதற் கடவுளையே வழிபட வேண்டும்.

பதம் 2.3.11 : பல்வேறு தேவர்களை வெவ்வேறு வழிபாட்டு முறைகளால் வழிபடும் இவர்களனைவரும், பரமபுருஷ பகவான் மீது உண்டாகும் இயற்கையான கவர்ச்சியெனும் மிக உயர்ந்த பக்குவத்தை, தூய பகவத் பக்தர்களின் கூட்டுறவால் மட்டுமே அடைய முடியும்.

பதம் 2.3.12 : பரம புருஷரான ஹரியுடன் சம்மந்தமுள்ள உன்னத அறிவு, பௌதீக குணங்களின் அலைகளையும் சுழற்சிகளையும் பூரணமாக நிறுத்தி விடுகிறது. அத்தகைய அறிவு ஜடப் பற்றிலிருந்து விடுபட்டிருப்பதால் திருப்தியை அளிப்பதாகும். மேலும் அது உன்னதமாக இருப்பதால் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவால் கவரப்படாம யார் இருக்க முடியும்?

பதம் 2.3.13 : சௌனகர் கூறினார்: வியாச தேவரின் மகனான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி மிகவும் கற்றறிந்த ஒரு முனிவராக இருந்ததுடன், கவிதை முறையில் விஷயங்களை விவரிக்கக் கூடியவராகவும் இருந்தார். அவர் கூறியவற்றை எல்லாம் கேட்ட பின் பரீட்சித்து மகாராஜன் மறுபடியும் என்ன விசாரித்தார்?

பதம் 2.3.14 : புலமை பெற்ற சூத கோஸ்வாமியே- நாங்கள் அனைவரும் கேட்க மிகவும் ஆவலுடன் இருப்பதால், தயவு கூர்ந்து அத்தகைய விஷயங்களைத் தொடர்ந்து விவரிப்பீராக. மேலும் பகவான் ஹரியின் விஷயங்கள் உறுதியாக பக்தர்களின் சபையில் விவாதிக்கப்பட வேண்டியதாகும்.

பதம் 2.3.15 : பாண்டவர்களின் பேரனான பரீட்சித்து மகாராஜன் அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே பகவானின் மிகச் சிறந்த பக்தராவார். பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதும் கூட குடும்பத்தைச் சேர்ந்த விக்கிரக வழிபாட்டைப் பின்பற்றி ஸ்ரீ கிருஷ்ணரை அவர் வழிபடுவது வழக்கம்.

பதம் 2.3.16 : வியாசதேவரின் மகனான சுகதேவ கோஸ்வாமியும் உன்னத அறிவில் முழுமை பெற்றவராக இருந்ததுடன், வஸுதேவரின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பக்தராகவும் இருந்தார். எனவே, சிறந்த பக்தர்களின் கூட்டத்திலும், பெரும் தத்துவ வாதிகளாலும் போற்றப்படுபவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உரையாடல் அங்கு நிகழ்ந்திருக்க வேண்டும்.

பதம் 2.3.17 : நன்மை பயக்கும் முழுமுதற் கடவுளைப் பற்றிய விஷயங்களை உரையாடுவதில் காலத்தைப் பயன்படுத்துபவனைத் தவிர, மீதமுள்ள ஒவ்வொருவரின் ஆயுளையும், சூரியனானது உதயத்தாலும், அஸ்தமிப்பாலும் குறைத்துவிடுகிறது.

பதம் 2.3.18 : மரங்கள் உயிர்வாழவில்லையா? கொல்லனின் துருத்தி சுவாசிக்கவில்லையா? நம்மைச் சுற்றியுள்ள மிருகங்கள் உண்ணவும், விந்துவை வெளியிடவும் இல்லையா?

பதம் 2.3.19 : நாய்கள், பன்றிகள், ஒட்டகங்கள் மற்றும் கழுதைகளைப் போன்றவர்கள், எல்லாத் தீங்குகளிலிருந்தும் விடுவிப்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னதமான லீலைகளுக்கு ஒருபோதும் செவி சாய்க்காதவர்களைப் போற்றுகின்றனர்.

பதம் 2.3.20 : முழுமுதற் கடவுளின் வீர்யம் மற்றும் அற்புதச் செயல்களைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்படாமலும், மேன்மையுள்ள அவரது பாடல்களை உரக்கப் பாடாமலும் இருப்பவனின் நாவு, என்றும் ஒரு தவளையினுடையதைப் போன்றது என்று கருதப்பட வேண்டும்.

பதம் 2.3.21 : தலையை பட்டாலான தலைப்பாகை அலங்கரித்தாலும், முக்தி அளிப்பவரான முழுமுதற் கடவுளின் முன் தலை வணங்கவில்லை எனில், அது பெரும் சுமை மட்டுமே ஆகும். கரங்கள் பளபளக்கும் காப்புகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும், முழுமுதற் கடவுளான ஹரியின் தொண்டில் ஈடுபடவில்லை எனில் அவை பிணத்தின் கரங்களைப் போன்றவையாகும்.

பதம் 2.3.22 : பரமபுருஷரான விஷ்ணுவின் (உருவங்கள், பெயர், இயல்பு முதலான) அடையாள அம்சங்களைக் காணாத கண்கள், மயிலிறகிலுள்ள கண்களைப் போன்றவையாகும். மேலும் (பகவத் சிந்தனையைத் தூண்டும்) புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லாத கால்கள் அடிமரங்களைப் போன்றவையென கருதப்படுகின்றன.

பதம் 2.3.23 : தூய பகவத் பக்தரின் பாதத் தூசியை தன் தலைமீது ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளாதவன், வெறும் உயிரற்ற உடலென்பதில் சந்தேகமில்லை. மேலும் பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து வரும் துளசி இலைகளின் நறுமணத்தை என்றுமே அனுபவித்தறியாதவன், சுவாசித்துக் கொண்டிருந்தாலும், அவனும் ஒரு சவமேயாவான்.

பதம் 2.3.24 : பகவானின் புனித நாமத்தை மன ஒருமையுடன் ஒருவன் பாடியதும், பரவச நிலை ஏற்படும் பொழுதோ, கண்களில் கண்ணீர் ததும்பும் பொழுதோ, மெய்சிலிர்க்கும் பொழுதோ, இளகாமலேயே இருக்கும் ஒருவனது இதயம் இரும்பைப் போன்றது என்பதில் சந்தேகமில்லை.

பதம் 2.3.25 : ஓ சூத கோஸ்வாமி, உமது வார்த்தைகள் எங்களுடைய மனங்களுக்கு இன்பத்தை அளிக்கின்றன. எனவே, உன்னத அறிவில் சமர்த்தரும், கேட்டுக் கொள்ளப்பட்டதன் மேல் பரீட்சித்து மகாராஜனிடம் பேசிவரும், சிறந்த பக்தருமான சுகதேவ கோஸ்வாமியால் பேசப்பட்டதைப் போன்று தயவு செய்து இதை எங்களிடம் விளக்கிக் கூறுவீராக.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare