அத்தியாயம் – 2
இதயக் கடவுள்
பதம் 2.2.1 : ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்: முற்காலத்தில், பிரபஞ்சத் தோற்றத்திற்கு முன், “விராட்-ரூபத்தை” தியானித்து பகவானை திருப்திப்படுத்தியதால், பிரம்ம தேவர் தமது இழந்த உணர்வை மீண்டும் பெற்றார். இவ்வாறாக, படைப்பை முன்பு இருந்ததைப் போலவேதிரும்பவும் ஏற்படுத்த அவரால் முடிந்தது.

பதம் 2.2.2 : வேத மந்திரங்களில் வழங்கப்பட்டுள்ள முறை மிகவும் குழப்பத்தை உண்டாக்குவதாக இருப்பதால், அதனால் சுவர்க்கலோகங்களைப் போன்ற அர்த்தமற்ற பொருள்களை நோக்கி மக்களின் புத்தியை அது திருப்புகின்றது. கட்டுண்ட ஆத்மாக்கள் மாயையான அத்தகைய சுவர்கம் போன்ற இன்பக் கனவுகளில் மிதக்கின்றனர். ஆனால் உண்மையில், எவ்வித திடமான சந்தோஷத்தையும் அத்தகைய இடங்களில் அவர்கள் அனுபவிப்பதில்லை.

பதம் 2.2.3 : எனவே அறிவொளி பெற்றவன், பெயர்களை மட்டுமே கொண்டுள்ள இவ்வுலகில் இருக்கும்பொழுது வாழ்வின் குறைந்தபட்ச தேவைகளுக்காக மட்டுமே முயல வேண்டும். அத்தகைய முயற்சிகள் அனைத்தும் பலனற்ற கடின உழைப்பு மட்டுமேயாகும் என்பதை நடைமுறையில் காண்பதற்குரிய தகுதி பெற்றிருப்பதால், தேவையற்ற பொருட்களை அடைய முயலாமல், அவன் புத்தியில் நிலைபெற்றவனாக இருக்க வேண்டும்.

பதம் 2.2.4 : படுப்பதற்கு ஏராளமான சம தரைகள் இருக்கும் பொழுது, கட்டில் மெத்தைகளுக்கு என்ன அவசியம்? தனது சொந்த கரங்களை ஒருவன் உபயோகிக்க முடியும் என்ற பொழுது ஒரு தலையணைக்கு என்ன அவசியம்? தன் உள்ளங்கைகளை ஒருவன் உபயோகிக்க முடியும் என்றால் பலவகைப்பட்ட பாத்திரங்கள் எதற்கு? மிகுதியான மறைப்புகள் அல்லது மரத்தோல்கள் இருக்கும் பொழுது ஆடை அணிகலன்களுக்கு என்ன அவசியம் இருக்கிறது?

பதம் 2.2.5 : பொது சாலையில் கிடக்கும் கிழிந்து போன ஆடைகளே இல்லையா? பிறரை பராமரிப்பதற்காகவே வாழும் மரங்கள் தானம் செய்வதை நிறுத்திவிட்டனவா? நதிகள் வறண்டு விட்டதால் தகித்திருப்போருக்கு நீர் கொடுப்பதை அவை நிறுத்திவிட்டனவா? மலைக்குகைகள் இப்பொழுது மூடப்பட்டு விட்டனவா, அல்லது அனைத்திற்கும் மேலாக, பூரண சரணாகதி அடைந்துள்ள ஆத்மாக்களுக்கு சர்வ வல்லமை பொருந்திய பகவான் பாதுகாப்பு அளிக்கவில்லையா? பின் எதற்காக, கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தால் மதிமயங்கிக் கிடப்பவர்களை முகத்துதி செய்வதற்காக கற்றறிந்த முனிவர்கள் செல்கின்றனர்?

பதம் 2.2.6 : இவ்வாறு நிலைபெற்ற பின், தமது சர்வ வல்லமையின் மகத்துவத்தால் ஒருவனின் இதயத்தில் பரமாத்மாவாக வீற்றிருப்பவருக்கு அவன் தொண்டாற்ற வேண்டும். அவர் சர்வ வல்லமை பொருந்திய பரமபுருஷ பகவானாகவும், நித்தியமானவராகவும், அளவற்றவராகவும் இருப்பதால் அவரே வாழ்வின் இறுதி லட்சியமாவார். அவரை வழிபடுவதன் மூலம் வாழ்வின் பந்தப்பட்ட நிலைக்குரிய காரணத்தை ஒருவன் நிறுத்தி விட முடியும்.

பதம் 2.2.7 : தங்களின் சுய கர்ம பலன்களை ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாக துன்பக் கடலில் வீழ்ந்துவிட்ட பாமர மக்களைக் கண்ட பிறகும் இத்தகைய உன்னத சிந்தனையை அலட்சியம் செய்துவிட்டு நிலையற்றவையான பெயர்களை மட்டுமே ஏற்கக் கூடியவர்கள், பௌதிக வாழ்வில் மூழ்கிவிட்ட பௌதிகவாதிகளைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.

பதம் 2.2.8 : உடலுக்குள், இதயப் பிரதேசத்தில் வாழ்பவரும், எட்டு அங்குல அளவு மட்டுமே உள்ளவரும், நான்கு கைகளுடன் முறையே தாமரை, சக்கரம், சங்கு மற்றும் கதை ஆகியவற்றை ஏந்தியவருமான முழுமுதற் கடவுளை மற்றவர்கள் உணர்கின்றனர்.

பதம் 2.2.9 : அவரது வாய் அவருடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறது. அவரது கண்கள் தாமரை இதழ்களைப் போல் விரிந்துள்ளன. மேலும் கடம்ப மலரைப் போல் மஞ்சள் நிறமாக உள்ள அவரது ஆடைகள் விலையுயர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவருடைய ஆபரணங்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டு, இரத்தினங்களால் இழைக்கப்பட்டுள்ளன. மேலும் பிரகாசமான தலைப்பாகையையும் குண்டலங்களையும் அவர் அணிந்துள்ளார்.

பதம் 2.2.10 : அவரது தாமரைப் பாதங்கள், சிறந்த யோகிகளின் தாமரை போன்ற இதயங்களின் மீது வைக்கப்பட்டுள்ளன. அழகிய கன்றுக்குட்டியின் உருவம் இழைக்கப்பட்ட கௌஸ்துப மாலை அவரது மார்பையும் மற்ற இரத்தினங்கள் அவரது தோள்களையும் அலங்கரிக்கின்றன. அவரது உடல் முழுவதும் மிகவும் பசுமையான மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பதம் 2.2.11 : இடுப்பைச் சுற்றியுள்ள விலையுயர்ந்த இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மோதிரங்களாலும் அவர் நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ளார். அவரது கால் சலங்கைகள், காப்புகள், எண்ணெய் தடவப்பட்ட இள நீல நிறம் கொண்ட மயிர்ச் சுருள் மற்றும் அவரது அழகிய புன்சிரிப்பு தவழும் முகம் ஆகிய அனைத்தும் மிகவும் இன்பமளிக்கக் கூடியவை ஆகும்.

பதம் 2.2.12 : பகவானின் பெருந்தன்மையுள்ள திருவிளையாடல்களும், அவரது புன்னகை பொழியும் முகத்தில் பிரகாசிக்கும் பார்வையும் அவரது பரந்த அனுக்கிரகத்தின் அறிகுறிகளாகும். எனவே, தியானத்தின் வழியாக மனதை ஒருநிலைப்படுத்த முடியும் வரை பகவானின் இந்த உன்னத உருவத்தின் மீது தன் மனதை ஒருவன் பதியச் செய்ய வேண்டும்.

பதம் 2.2.13 : தியானத்தை முழுமுதற் கடவுளின் தாமரைப் பாதங்களில் துவங்கி அவரது புன்னகை பூத்த முகம் வரை முன்னேறச் செய்ய வேண்டும். தியானத்தை முதலில் தாமரைப் பாதங்களில் பதித்து, பிறகு கெண்டைக் கால்களிலும் அதன் பின் தொடைகளிலும் பதியச் செய்து இப்படியாக உயர உயரச் செல்ல வேண்டும். அங்கங்களின் வெவ்வேறு பகுதிகளின் மீது ஒவ்வொன்றாக எவ்வளவு அதிகமாக மனம் நிலைக்கிறதோ, அவ்வளவு அதிகமாக புத்தி தூய்மையடைகிறது.

பதம் 2.2.14 : ஆழ்ந்த பௌதிகவாதி, ஆன்மீக மற்றும் ஜட உலகங்கள் ஆகிய இரண்டையும் காண்பவரான பரமபுருஷரிடம் உணர்வை விருத்தி செய்து கொண்டால் பக்தித் தொண்டு அல்லாது, அவளது விதிக்கப்பட்ட கடமைகளின் முடிவில் அவன் பகவானின் விஸ்வரூபத்தை நினைப்பதையோ அல்லது அதைத் தியானிப்பதையோ மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

பதம் 2.2.15 : மகாராஜனே, எப்பொழுதெல்லாம் ஒரு யோகி இந்த மானிடர்களின் கிரகத்தை விட்டு வெளியேற விரும்புகிறானோ, அச்சமயம் சரியான நேரம் அல்லது இடத்தைப் பற்றி அவன் குழப்பமடையாமல் சுகாசனத்தில் அமர்ந்து, உயிர்க்காற்றை கட்டுப்படுத்தி, புலன்களை மனதால் அடக்க வேண்டும்.

பதம் 2.2.16 : அதற்குப்பின், யோகி தனது தூய புத்தியை உபயோகித்து, தன் மனதை ஜீவனோடு இரண்டறக் கலக்கச் செய்து, பிறகு ஜீவனை பரமாத்மாவுடன் ஐக்கியப் படுத்திவிட வேண்டும். இதைச் செய்வதால் பூரண திருப்தியடைந்த ஜீவராசி, திருப்தியின் மிகவுயர்ந்த நிலையில் அமையப் பெற்று, மற்றெல்லாச் செயல்களையும் நிறுத்திவிடுகிறான்.

பதம் 2.2.17 : “லப்தொபசாந்தி” எனும் இவ்வுன்னத நிலையில், ஜீவன்களை ஆளக்கூடிய சக்தியளிக்கப்பட்டுள்ள சுவர்க்கலோக இகலோக தேவர்களையும் கட்டுப்படுத்துவதான அழிவை உண்டாக்கும் காலம் செல்லாததாகிவிடுகிறது. (இந்நிலையில் தேவர்களைப் பற்றி என்ன சொல்வது?) அந்த நிலையில் பௌதிக ஸத்வ, ரஜோ, தமோகுணங்களோ, பொய்யகங்காரமோ, பௌதிக காரணக் கடலோ, பெளதிக இயற்கையோ இல்லை.

பதம் 2.2.18 : பரமபுருஷரான விஷ்ணுவுடன் அனைத்தும் சம்பந்தப்பட்டுள்ள, அந்த மிகவுயர்ந்த நிலையை ஆன்மீகிகள் அறிந்திருப்பதால், தெய்வீகமற்ற அனைத்தையும் விலக்கிவிட அவர்கள் விரும்புகின்றனர். எனவே பகவானோடு பரிபூரண இணக்கம் கொண்டுள்ள தூய பக்தனோருவன் குழப்பங்களை உண்டாக்குவதற்குப் பதிலாக, பகவானின் தாமரைப் பாதங்களை இதய பூர்வமாக ஏற்று இடைவிடாமல் அவற்றைப் பூஜிக்கிறான்.

பதம் 2.2.19 : விஞ்ஞான பூர்வமான அறிவின் வலிமையால் ஒருவன் உன்னத உணர்வில் நிலைபெற்றிருக்க வேண்டும். இவ்வாறாக எல்லா பௌதிக ஆசைகளையும் அவனால் அணைத்துவிட முடியும். அதன் பின் காற்றுத் துவாரத்தை (மலம் கழிக்கப்படும் துவாரம்) குதிகாலால் அடைத்து, உயிர்க் காற்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு உயர்த்துவதன் மூலமாக ஆறு முக்கிய இடங்களுக்கு அதை உயர்த்தியபின், ஜட உடலை ஒருவன் விட வேண்டும்.

பதம் 2.2.20 : தியானத்திலிருக்கும் பக்தன், உயிர் மூச்சை நாபியிலிருந்து மேலேயுள்ள இதயத்திற்கு மெதுவாகத் தள்ளி, அங்கிருந்து மார்புக்கும், பிறகு மேல்வாயின் மூலஸ்தானத்திற்கும் தள்ள வேண்டும். புத்தியால் சரியான இடங்களை அவன் கண்டறிய வேண்டும்.

பதம் 2.2.21 : அதன் பிறகு பக்தியோகி, உயிர் மூச்சை புருவங்களுக்கு மத்தியில் மேலே தள்ள வேண்டும். பிறகு, உயிர் மூச்சு வெளியெறும் ஏழு துவாரங்களை அடைத்த பின் பரம் பதத்தைச் சென்றடையும் அவனுடைய குறிக்கோளில் அவன் உறுதியாக இருக்க வேண்டும். ஜட இன்பத்திற்குரிய எல்லா ஆசைகளிலிருந்தும் அவன் முற்றிலும் விடுபட்டவனாக இருந்தால், மூளைத் துவாரத்தை அடையும் அவன், பிறகு பகவானை அடைந்து, தன் பௌதிக தொடர்புகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்.

பதம் 2.2.22 : ஆனால் அரசனே, மிக உயர்ந்த கிரகமான பிரம்ம லோகத்திற்குச் செல்வது, அல்லது வைஹாயஸர்கள் என்பவர்களுடன் விண்வெளியில் பிரயாணம் அல்லது ஒருவித செய்வது போன்ற அஷ்ட சித்திகளை லட்சக்கணக்கிலுள்ள கிரகங்களில் சூழ்நிலையை விரும்புவது போன்ற ஏதேனும் அடைவது, ஒன்றில் முன்னேற்றமான ஜட இன்பங்களுக்குரிய ஆசையை யோகி வைத்திருப்பானாயின், பௌதிகமான மனதையும், புலன்களையும் அவன் தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

பதம் 2.2.23 : ஆன்மீகிகள் ஆன்மீக உடலில் அக்கறை கொண்டுள்ளனர். அதனால் அவர்களுடைய பக்தித் தொண்டு, தவங்கள், யோக சித்தி மற்றும் உன்னத அறிவு ஆகியவற்றின் வலிமையால், ஜட உலகங்களின் உள்ளும் புறமும் நிபந்தனையற்ற முறையில் அவர்களால் இயங்க முடியும். கருமிகளால், அல்லது ஆழ்ந்த பௌதிகவித்களால் அவ்வாறு ஒருபொழுதும் இயங்க முடியாது.

பதம் 2.2.24 : அரசே, அத்தகைய ஒரு யோகி, மிக உயர்ந்த பிரம்மலோகத்தைச் சென்றடைவதற்காக, பிரகாசமான “சுஷீம்ஸு வழியாக பால் வீதியைக் கடந்து செல்லும் பொழுது, முதலி அவன் “வைஸ்வானரம்” எனப்படும் அக்னி தேவனின் கிரகத்திற்கு செல்கிறான். அங்கு எல்லா அழுக்குகளிலிருந்தும் அவன் முற்றிலும் தூய்மை அடைந்த பின், முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ ஹரியுடன் சம்பந்தம் கொள்வதற்காக, தொடர்ந்து மேல் நோக்கி சிசுமார வட்டத்திற்குச் செல்கிறான்.

பதம் 2.2.25 : இந்த சிசுமாரம், முழுபிரபஞ்சமும் சுழல்வதற்குரிய அச்சாக அழைக்கப்படுகிறது. யோகிகள் மட்டுமே இந்த சிசுமார வட்டத்தைக் கடந்து சென்று, 430 கோடி சூரிய ஆண்டுகள் கொண்ட காலத்தை அனுபவிக்கும், பிருகுவைப் போன்ற தூய்மை அடைந்த முனிவர்கள் வாழும் கிரகத்தை (மஹா லோகம்) அடைகின்றனர். உன்னத நிலையிலுள்ள முனிவர்களுக்கும் இக்கிரகம் வழிபாட்டுக்கு உரியதாகும்.

பதம் 2.2.26 : முழு பிரபஞ்சத்தின் இறுதியான பிரளய காலத்தில் (பிரம்மாவின் ஆயுட்கால முடிவில்), அனந்தனின் வாயிலிருந்து, (பிரபஞ்சத்தின் அடியில்) ஒரு தீச்சுடர் தோன்றுகிறது. பிரபஞ்சத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாவதைக் கண்டு, சிறந்த தூய்மை பெற்ற ஆத்மாக்களால் உபயோகிக்கப்படும் ஆகாய விமானங்களின் மூலம் யோகி சத்தியலோகத்துக்குப் புறப்படுகிறான். சத்தியலோகத்திலுள்ள ஆயுட்காலம் 15,480,000,000,000 கணக்கிடப்பட்டுள்ளது.

பதம் 2.2.27 : சத்தியலோகம் எனப்படும் அக்கிரகத்தில், துக்கமோ, அல்லது மரணமோ இல்லை. எவ்வகையான துன்பமும் அங்கு இல்லாத மூப்போ காரணத்தால் அங்கு கவலைகளும் இல்லை. மாறாக, சில சமயங்களில் உணர்வின் காரணத்தால், பக்தித் தொண்டு முறையை அறியாதவர்கள் மீதும், கடக்க முடியாத ஜட உலகத் துன்பங்களுக்கு உட்பட்டவர்கள் மீதும் ஓர் இரக்க உணர்வு அங்கு காணப்படுகிறது.

பதம் 2.2.28 : சத்திய லோகத்தை அடைந்தபின், பயமின்மையால், தனது உடலை ஸ்தூல உருவிலிருந்து சூட்சும உருவிற்கு மாற்றிக் கொள்ள பக்தனால் முடிகிறது. படிப்படியாக ஒன்றுக்குப் பின் ஒன்றாக, நிலத்தன்மையில் இருந்து நீர்த்தன்மைக்கும், பிறகு நெருப்பு, பிரகாசம், காற்று மற்றும் ஆகாயம் போன்ற அதிக சூட்சுமமான வாழ்நிலைகளையும் அவன் அடைகிறான்.

பதம் 2.2.29 : இவ்வாறாக, முகர்வதால் உண்டாகும் நறுமணம், உண்பதால் உண்டாகும் சுவை, வடிவங்களைக் காண்பதால் உண்டாகும் காட்சி தொடர்பால் உண்டாகும் ஸ்பரிசம், ஆகாயத்தால் உண்டாகும் ஒலியதிர்வு மற்றும் பௌதிகச் செயல்களால் உண்டாகும் புலன் உறுப்புக்கள் போன்ற சூட்சுமமான புலன் விஷயங்களை பக்தன் கடந்து விடுகிறான்.

பதம் 2.2.30 : பக்தன் இவ்வாறு ஸ்தூல மற்றும் சூட்சும வடிவிலுள்ள திரைகளைக் கடந்து, அகங்காரம் எனும் நிலைக்குள் புகுகிறான். அந்நிலையில் அவன் ஜட இயற்கைக் குணங்களை (ரஜோ, தமோ குணங்கள்) கரைத்துவிடும் நிலையுடன் ஐக்கியமாகி, சத்வ குண அகங்காரத்தை அடைகிறான். இதன் பிறகு, முழு அகங்காரமும் மஹத்-தத்வத்தோடு இரண்டறக் கலந்துவிடுவதால், தூய தன்னுணர்வு நிலைக்கு அவன் வருகிறான்.

பதம் 2.2.31 : தூய்மையடைந்த ஆத்மா மட்டுமே அவனுடைய உண்மையான நிலையில், முழுமுதற் கடவுளுடன் பூரண ஆனந்தத்துடனும், திருப்தியுடனும் உறவாடும் பக்குவத்தைப் பெற முடியும். இத்தகைய பக்தியின் பூரணத்துவத்தை புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலுள்ள எவரும் இந்த ஜட உலகினால் மீண்டும் கவரப்படுவதுமில்லை, திரும்பி வருவதுமில்லை.

பதம் 2.2.32 : மாட்சிமை தாங்கிய பரீட்சித்து மகாராஜனே, முறையான உமது விசாரணைக்கு பதிலளிக்கும் முகமாக நான் கூறியவை அனைத்தும் வேதங்களின் கருத்துக்கு உடன்பாடானவையே என்பதையும், அவை நித்தியமான உண்மை என்பதையும் அறிவீராக. பிரம்மனால் முறையாக வழிபாடு செய்யப்பட்டதனால் அவரிடம் திருப்தியடைந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தாமே இதை அவருக்கு விவரித்தார்.

பதம் 2.2.33 : ஜட பிரபஞ்சத்தில் சஞ்சரிப்பவர்களுக்கு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடியான பக்தித் தொண்டை நோக்கமாகக் கொண்டிருக்கும் வழியைத் தவிர முக்தியளிக்கும் அனுகூலமான உபாயம் வேறில்லை.

பதம் 2.2.34 : மிகச் சிறந்தவரான பிரம்மா, அதிக கவனத்துடனும், ஒருமையுடனும், வேதங்களை மும்முறைகள் பயின்று அவற்றை மன ஆழ்ந்த பரிசோதனை செய்தபின், பரமபுருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கவர்ச்சி கொள்வதே மதத்தின் மிக உயர்ந்த பக்குவமாகும் என்பதைக் கண்டறிந்தார்.

பதம் 2.2.35 : முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் தனித்தன்மையுள்ள ஆக்மாக்களுடன் ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் இருக்கிறார். நாம் காணும் செயல்களிலும், புத்தியிடமிருந்து உதவி பெறும் செயல்களிலும் இவ்வுண்மையை நம்மால் உணரவும், அநுமானிக்கவும் முடிகிறது.

பதம் 2.2.36 : ஆகவே ராஜனே, பரமபுருஷரான பற்றி எப்பொழுதும், எல்லா இடங்களிலும் செவியுறுவதும், அவரை முழுமுதற் வாழ்த்துவதும், நினைவில் கொள்வதும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமானவையாகும்.

பதம் 2.2.37 : பக்தர்களின் அன்புக்குரியவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரினத அமிர்தம் போன்ற கதைகளை செவிகள் மூலமாக அருந்துபவர்கள், ஜட இன்பமெனும் களங்கப்பட்ட வாழ்வின் நோக்கத்தை புனிதப் படுத்தி, பரமபதத்தை, அவரது (முழுமுதற் கடவுள்) தாமரைப் பாதங்களைச் சென்றடைகின்றனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare