அத்தியாயம் – 1
இறை உணர்வில் முதற்படி
பிரார்த்தனை
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம்- எம்பெருமானே; நம: – உமக்கு என்னுடைய மதிப்பிற்குரிய வணக்கங்கள்; பகவதே- முழுமுதற் கடவுளிடம்; வாஸுதேவாய- வசுதேவரின் புதல்வராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்.
எம்பெருமானே, எங்கும் பரவியுள்ள முழுமுதற்கடவுளே, என்னுடைய மதிப்பிற்குரிய வணக்கங்களை உமக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 2.1.1
ஸ்ரீ சுக உவாச
வரீயான் ஏஷ தே ப்ரஸன: க்ருதோ லோக-ஹிதம் ன்ருப
ஆத்மவித் -ஸம்மத: பும்ஸாம் ஸ்ரோதவ்யாதிஷு ய: பர:
ஸ்ரீசுக: உவாச- ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; வரீயான்- புகழுக்குரிய; ஏஷ- இந்த; தே – உமது; பிரசன்ன-கேள்வி; க்ருத-உம்மால் கேட்கப்பட்ட; லோக ஹிதம்- எல்லோருக்கும் நன்மை பயக்கக்கூடியது; ன்ருப- அரசனே; ஆத்மவித் – ஆன்மீகி; ஸம்மத- ஏற்றுக்கொள்ளப்பட்ட; பும்ஸாம்- எல்லா மனிதரிலும்; ஸ்ரோதவ்ய ஆதிஷு- எல்லா வகையான ஓசையிலும்; ய- எது ; பர: மிக உயர்ந்தது.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: என் அன்பிற்குரிய அரசே, உமது கேள்வி எல்லா வகையான மக்களுக்கும் மிகவும் நன்மை பயக்கக் கூடியதாக இருப்பதால் அது பெரும் புகழுக்கு உரியதாகும். இந்த கேள்விக்கு உரிய பதில், கேட்பதற்குரிய முக்கியமான விஷயமாகையால், எல்லா ஆன்மீகிகளாலும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பதம் 2.1.2
ஸ்ரோதவ்யாதீனி ராஜேந்திர ன்ருணாம் ஸந்தி ஸஹஸ்ரச:
அபஸ்யதாம் ஆத்ம-தத்வம் க்ருஹேஷு க்ருஹ-மேதினாம்
ஸ்ரோதவ்ய ஆதீனி- கேட்பதற்குரிய விஷயங்கள்; ராஜேந்திர பேரரசனே; ன்ருணாம்- மனித சமூகத்தின்; ஸந்தி- உள்ளன; ஸஹஸ்ரச— நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும்; அபஸ்யதாம்-குருடர்களின்; ஆத்ம – தத்வம் ஆத்ம ஞானம்; முடிவான உண்மை; க்ருஹேஷு — இல்லத்தில்; க்ருஹ – மேதினாம்- ஜட வாழ்வுக்காக மனதைப் பறிகொடுத்தவர்கள்.
மகாராஜனே, முடிவான உண்மையின் ஞானத்தைப் பற்றி அறிந்திராத காரணத்தால், ஜட வாழ்வுக்காக மனதைப் பறிகொடுத்தவர்கள் செவியுறுவதற்காக, மனித சமூகத்தில் பல விஷயங்கள் உள்ளன.
பதம் 2.1.3
நிரத்யா ஹ்ரியதே நக்தம் வ்யவானேன ச வா வய:
திவா சார்தேஹயா ராஜன் குடும்ப-பரணேன வா
நிரத்யா- உறங்குவதன் வழியாக; ஹ்ரியதே- வீணாக்குகிறான்; நக்தம்- இரவு; வ்யவானேன- உடலுறவை அனுபவித்தல்; ச -அதோடு; வா – இரண்டில் ஒன்று; வய – ஆயுள்; திவா – நாட்கள்; ச -மேலும்; அர்த- பொருளாதாரம்; ஈஹயா- முன்னேற்றம்; ராஜன் — அரசனே; குடும்ப- குடும்ப அங்கத்தினர்கள்; பரணேன- பாதுகாத்தல்; வா – இரண்டில் ஒன்று.
இத்தகைய பொறாமை கொண்ட குடும்பஸ்தனின் ஆயுள் இரவில் உறக்கத்திலோ அல்லது உடலுறவு வாழ்விலோ கழிகிறது. பகற் பொழுதில் பணம் சம்பாதிப்பதிலோ அல்லது குடும்ப அங்கத்தினர்களைப் பராமரிப்பதிலோ கழிகிறது.
பதம் 2.1.4
தேஹாபத்ய-கலத்ராதிஷு ஆத்ம-ஸைன்யேஷு அஸத்ஷு அபி
தேஷாம் ப்ரமத்தோ நிதனம் பஸ்யன் அபி ந பஸ்யதி
தேஹ- உடல்; அபத்ய- குழந்தைகள்; கலத்ர- மனைவி; ஆதிஷு- மேலும் அவற்றிற்குச் சம்பந்தமுள்ள அனைத்திலும்; ஆத்ம- சொந்த; ஸைன்யேஷு — போர் வீரர்கள்; அஸத்ஷு- பிழை செய்யக்கூடிய; அபி- அவ்வாறு இருந்தும்; தேக்ஷாம்- அவர்கள் அனைவரிலும்; ப்ரமத்த- அதிக பற்று கொண்டு; நிதனம்- மரணம்; பஸ்யன் – அனுபவித்திருப்பதால்; அபி – இருப்பினும்; ந- இல்லை; பஸ்யதி- அதைக் காண.
ஆத்ம-தத்வ ஞானமற்றவர்கள், உடல், குழந்தை மற்றும் மனைவி ஆகியோரிடம் பற்று கொண்டிருப்பதால், வாழ்வின் பிரச்சினைகளைப் பற்றி ஆராய்வதில்லை. போதுமான அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தாலும், தவிர்க்க முடியாத மரணத்தை அவர்களால் உணர முடிவதில்லை.
பதம் 2.1.5
தஸ்மாத் பாரத ஸர்வாத்மா பகவான் ஈஸ்வரோ ஹரி:
ஸ்ரோதவ்ய: கீர்திதவ்யஸ் ச ஸ்மர்தவ்யஸ் சேச்சதாபயம்
தஸ்மாத்—இக்காரணத்திற்காக; பாரத-பரத குலத் தோன்றலே; ஸர்வாத்மா- பரமாத்மா; பகவான்- முழுமுதற் கடவுள்; ஈஸ்வர- ஆளுநர்; ஹரி-சர்வ துன்பங்களையும் முறியடிக்கும் இறைவன்; ஸ்ரோதவ்ய-கேட்கப்பட வேண்டும்; கீர்திதவ்ய-போற்றப்பட வேண்டும்; ச-மேலும்; ஸ்மர்தவ்ய-நினைவிற் கொள்ள வேண்டும்; ச-மற்றும்; இச்சதா—விருப்பம் கொள்பவரின்; அபயம்-விடுதலை.
பரத குலத் தோன்றலே, எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட விருப்பம் கொண்டுள்ள ஒருவன், பரமாத்மாவும், ஆளுனரும், எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவருமான முழுமுதற் கடவுளைப் பற்றி செவியுறவும், துதிக்கவும், அவரை நினைவிற்கொள்ளவும் வேண்டும்.
பதம் 2.1.6
ஏதாவான் ஸாங்க்ய-யோகாப்யாம் ஸ்வ-தர்ம பரிநிஷ்டயா
ஜன்ம-லாப: பர: பும்ஸாம் அந்தே நாராயண-ஸ்ம்ருதி:
ஏதாவான்—இவையனைத்தும்; ஸாங்க்ய—ஜடம் மற்றும் ஆன்மீகத்தைப் பற்றிய பூரண அறிவு; யோகாப்யாம்-அற்புத சக்திகளைப் பற்றிய அறிவு; ஸ்வ-தர்ம – ஒருவனது கடமை; பரிநிஷ்டயா—பூரண அறிவுணர்ச்சியால்; ஜன்ம-பிறப்பு; லாப:- இலாபம்; பர:-பரமன்; பும்ஸாம்—ஒருவரின்; அந்தே-இறுதியில்; நாராயண – முழுமுதற் கடவுள்; ஸ்ம்ருதி-நினைவு.
ஜடம் மற்றும் ஆன்மீகத்தைப் பற்றிய பூரண அறிவாலோ, அஷ்ட சித்திகளைப் பயில்வதாலோ, வர்ணாஸ்ரம கடமையை நன்கு நிறைவேற்றுவதாலோ அடையப்படும் மனித வாழ்வின் மிக உயர்ந்த பக்குவமாக இருப்பது, வாழ்வின் இறுதி கட்டத்தில் முழுமுதற் கடவுளை நினைவிற்கொள்வதேயாகும்.
பதம் 2.1.7
ப்ராயேண முனயோ ராஜன் நிவ்ருத்தா விதி-ஷேதத:
நைர்குண்ய-ஸ்தா ரமந்தே ஸ்ம குணானுகதனே ஹரே:
ப்ராயேண—முக்கியமாக; முனய- எல்லா முனிவர்களும்; ராஜன்-ராஜனே; நிவ்ருத்தா—மேலே; விதி-கட்டுப்பாட்டு விதிகள்; ஷேதத- கட்டுப்பாடுகளிலிருந்து; நைர்குண்ய-ஸ்தா-திவ்ய நிலையிலுள்ள; ரமந்தே- ஆனந்தம் அடைகின்றனர்;, ஸ்ம- தெளிவாக; குண அனுகதனே-பெருமைகளை விளக்கிக் கூறுவதில்; ஹரே- பகவானின்.
பரீட்சித்து மகாராஜனே, முக்கியமான கட்டுப்பாடுகளுக்கும், அதன் விதிகளுக்கும் அப்பாற்பட்டுள்ள மிகச் சிறந்த ஆன்மீகிகள் பகவானின் பெருமைகளைப் பாடுவதில் ஆனந்தம் அடைகின்றனர்.
பதம் 2.1.8
இதம் பாகவதம் நாம புராணம் ப்ரஹ்ம-சம்மிதம்
அதீதவான் த்வாபராதௌ பிதுர் த்வைபாயனாத் அஹம்
இதம்- இந்த; பாகவதம்-ஸ்ரீமத் பாகவதம்; நாம- என்ற பெயருடைய; புராணம்-வேத அநுபந்தம் (பிற்சேர்க்கை); ப்ரஹ்ம-சம்மிதம்- வேதங்களின் சாரம் என்று அங்கீகரிக்கப்பட்ட; அதீதவான்- பயின்றேன்; த்வாபர—ஆதௌ—த்வாபர யுகத்தின் இறுதியில்; பிது- என் தந்தையிடமிருந்து; த்வைபாயனாத்—துவைபாயன வியாசதேவர்; அஹம்—நான்.
துவாபர யுகத்தின் இறுதியில், ஸ்ரீமத் பாகவதம் எனும் பெயர் கொண்டதும், வேதங்களுக்குச் சமமானதுமான இச்சிறந்த வேத அனுபந்தத்தை, எனது தந்தையான ஸ்ரீல துவைபாயன வியாசரிடமிருந்து நான் கற்றறிந்தேன்.
பதம் 2.1.9
பரிநிஷ்டிதோ ‘பி நைர்குண்ய உத்தம-ஸ்லோக-லீலயா
க்ருஹீத-சேதா ராஜர்ஷே ஆக்யானம் யத் அதீதவான்
பரிநிஷ்டித:- முற்றிலும் உணர்ந்த; அபி- இருப்பினும்; நைர்குண்யே-ஆன்மீகத்தில்; உத்தம-ஞானம் பெற்ற ; ஸ்லோக- ஸ்லோகம்; லீலயா-திருவிளையாடல்களால்; க்ருஹீத-கவரப்பட்டு; சேதா-கவனம்; ராஜர்ஷே-புனிதமான மகாராஜனே; ஆக்யானம்- வர்ணனை; யத்—அந்த; அதீதவான்-நான் கற்றேன்.
புண்ணிய புருஷனான மகாராஜனே, நான் ஆன்மீகத்தில் பூரணமாக நிலைபெற்றிருந்தேன். இருப்பினும் ஞான ஒளியூட்டும் சுலோகங்களால் விவரிக்கப்படும் பகவானுடைய திருவிளையாடல்களின் வர்ணனைகளால் நான் கவரப்பட்டேன்.
பதம் 2.1.10
தத் அஹம் தே ‘பிதாஸ்யாமி மஹா-பௌருஷிகோ பவான்
யஸ்ய ஸரத்தததாம் ஆக ஸ்யான் முகுந்தே மதி: ஸதீ
தத் -அந்த; அஹம் – நான்; தே-உனக்கு : அபிதாஸ்யாமி- கூறுவேனாக; மஹா பௌருஷிக-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகச் சிறந்த பக்தன்: பவான்- சிறப்புடையவரான நீர்; யஸ்ய-எதன்; ஸரத்தததாம் -முழுமையான வணக்கத்தையும், கவனத்தையும் அளிக்கும் ஒருவரின்; ஆக-மிக விரைவில்: ஸ்யான்—அது அவ்வாறு ஆகின்றது; முகுந்தே – முக்தி அளிப்பவரான பகவானுக்கு: மதி- நம்பிக்கை; ஸதீ- உறுதியான.
நீர், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மிகச் சிறந்த பக்தராகையால், அதே ஸ்ரீமத் பாகவதத்தை உமக்கு நான் கூறப்போகிறேன். ஸ்ரீமத் பாகவதத்தை முழு கவனத்துடனும், வணக்கத்துடனும் கேட்பவன், முக்தி அளிப்பவரான பரம புருஷரிடம் உறுதியான நம்பிக்கையைப் பெறுவான்.
பதம் 2.1.11
ஏதன் நிர்வித்யமானானாம் இச்சதாம் அகுதோ -பயம்
யோகினாம் ன்ரூப நிர்ணீதம் ஹரேர் நாமானுகீர்தனம்
ஏதன்—இதுவே: நிர்வித்யமானானாம்-எல்லா ஐட ஆசைகளில் இருந்தும் முற்றிலும் விடுபட்டவர்களின்; இச்சதாம் எல்லா வகையான ஐட இன்பங்களையும் அனுபவிக்க விரும்புபவர்கள்; அகுத- பயம்—அனைத்து சந்தேகங்கள் மற்றும் பயம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு; யோகினாம்—சுய திருப்தியுடைய அனைவரும்; ன்ரூப- ராஜனே; நிர்ணீதம்—தீர்மானிக்கப்பட்ட உண்மை; ஹரே:-பகவான் ஸ்ரீகிருஷ்ணரின்; நாம-புனித நாமம்; அனு-பின்பற்றி, எப்பொழுதும்; கீர்தனம்-பாடுதல்.
மகாராஜனே, பெரும் அதிகாரிகள் பகவானின் புனித நாமங்களை இடைவிடாமல் பாடியவண்ணமாக இருக்கின்றனர். அவர்களின் வழியைப் பின்பற்றுவதே சந்தேகமும், பயமும் அற்றதும், அனைவருக்கும் வெற்றி அளிக்கக் கூடியதுமான வழியாகும். இவ்வழி, அனைத்து ஜட ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களுக்கும், ஜட இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கும், மற்றும் உன்னத அறிவின் பயனாக சுய திருப்தி அடைந்துள்ளவர்களுக்கும் ஏற்றதாகும்.
பதம் 2.1.12
கிம் ப்ரமத்தஸ்ய பஹுபி: பரோக்க்ஷைர் ஹாயநைர் இஹ
வரம் முஹுர்தம் விதிதம் கடதே ஸ்ரேயஸே யத:
கிம்—என்னஇருக்கிறது; ப்ரமத்தஸ்ய-குழப்பத்தில் உள்ளவர்களின்; பஹுபி:-எண்ணிக்கையில் அதிகமான; பரோக்க்ஷைர்:-அனுபவமற்ற; ஹாயநை-ஆண்டுகள்; இஹ-இவ்வுலகில்; வரம் சிறந்தது; முஹுர்தம்—நொடி நேரம்; விதிதம்- உணர்வுடன்; கடதே- ஒருவன் முயற்சிக்கலாம்; ஸ்ரேயஸே-மிகவுயர்ந்த நன்மை எனும் விஷயத்தில்; யத:—அதனால்.
இவ்வுலகில் பலவருடங்களாக அனுபவம் பெறாமலேயே வாழ்ந்து, வாழ்வை வீணாகக் கழித்து விட்ட நீண்ட ஆயுளால் என்ன பயன்? ஒரு நொடி நேரமாவது முழு உணர்வுடன் வாழ்வது சிறந்தது. ஏனெனில், ஒருவன் தன்னுடைய மிகவுயர்ந்த நன்மையைத் தேடி அலைவதற்குரிய துவக்கத்தை அது வழங்குகிறது.
பதம் 2.1.13
கத்வாங்கோ நாம ராஜர்ஷீர் ஞாத்வேயத்தாம் இஹாயுஷ:
முஹுர்தாத் ஸர்வம் உத்ஸ்ருஜ்ய கதவான் அபயம் ஹரிம்
கத்வாங்க—கத்வாங்க மகாராஜன்; நாம-பெயர்; ராஜ-ரிஷி- ராஜரிஷி; ஞாத்வா-அறிந்ததால்; இயத்தாம்—ஆயுள்; இஹ- இவ்வுலகில்; ஆயுஷ:-ஒருவருடைய வாழ்வின்; முஹுர்தாத்- ஒரு நொடிக்குள்ளாக; ஸர்வம்—அனைத்தும்; உத்ஸ்ருஜ்ய- ஒருபுறம் ஒதுங்கி; கதவான்—அனுபவித்தார்; . அபயம் – பூரண பாதுகாப்பு; ஹரிம்-முழுமுதற் கடவுள்.
தமது வாழ்வு இன்னும் ஒரு நொடி நேரம் மட்டுமே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்ட ராஜ ரிஷியாகிய கத்வாங்க மகாராஜன், எல்லா பௌதிகச் செயல்களிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டு, அபயம் அளிப்பவரான முழுமுதற் கடவுளிடம் உடனே தஞ்சமடைந்தார்.
பதம் 2.1.14
தவாபி ஏதர்ஹி கௌரவ்ய ஸப்தாஹம் ஜீவிதாவதி:
உபகல்பய தத் ஸர்வம் தாவத் யத் ஸாம்பராயிகம்
தவ-உமது; அபி-மேலும்; ஏதர்ஹி-எனவே; கௌரவ்ய-குரு வம்சத்தில் பிறந்தவரே; ஸப்தாஹம்- ஏழு நாட்கள்; ஜீவித-ஆயுள்; அவதி-வரம்பு வரை; உபகல்பய—அவைகளை நிறைவேற்றுவீராக; தத்-அந்த; ஸர்வம்-எல்லா; தாவத்-இவ்வளவு நீண்ட; யத் அவைகள்; ஸாம்பராயிகம்—மறு பிறவிக்குரிய சடங்குகள்.
பரீட்சித்து மகாராஜனே, இப்பொழுது உமது ஆயுள் இன்னும் ஏழு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். எனவே இக்காலத்தில் உமது அடுத்த பிறவியின் சிறந்த நன்மைக்குத் தேவையான எல்லாக் கடமைகளையும் உம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
பதம் 2.1.15
அந்த-காலே து புருஷ ஆகதே கத-ஸாத்வஸ:
சிந்யாத் அஸங்க-சாஸ்த்ரேண ஸ்ம்ருஹாம் தேஹே ‘நுயே ச தம்
அந்த-காலே-வாழ்வின் இறுதி கட்டத்தில்;து-ஆனால்; புருஷ-ஒரு நபர்: ஆகதே—அடைத்து; கத ஸாத்வஸ- மரணத்தைப் பற்றிய எவ்வித பயமும் இல்லாமல்; சிந்யாத்- துண்டித்து விட வேண்டும்; அஸங்க—பற்றற்ற; சாஸ்த்ரேண—எனும் ஆயுதத்தால்; ஸ்ம்ருஹாம் — எல்லா ஆசைகளையும்; தேஹே-ஜட உடலின் விஷயத்தில்; அனு— சம்பந்தமான; யே—அவை அனைத்தும்; ச-மேலும்; தம்—அவற்றை.
வாழ்வின் இறுதி கட்டத்தில், மரணத்தைப் பற்றி அஞ்சாமல் இருப்பதற்குப் போதுமான தைரியம் உள்ளவனாக ஒருவன் இருக்க வேண்டும். ஆனால், ஜட உடல், அதற்குச் சம்பந்தம் உள்ளவை மற்றும் அதனுடைய ஆசைகள் முதலான எல்லா பற்றுகளிலிருந்தும் ஒருவன் தன்னை துண்டித்துக் கொள்ள வேண்டும்.
பதம் 2.1.16
க்ருஹாத் ப்ரவ்ரஜிதோ தீர: புண்ய-தீர்த்த-ஜலாப்லுத:
சுசௌ விவிக்த ஆஸினோ விதிவத் கல்பிதாஸனே
க்ருஹாத்- ஒருவனின் இல்லத்தில் இருந்து; ப்ரவ்ரஜித: வெளியேறி; தீர:-புலன்களை அடக்கிய; புண்ய தீர்த்த—புனித இடம்; ஜல ஆப்லுத:-முற்றிலும் கழுவப்பட்டு; சுசௌ-நீராடி; விவிக்தே- தனிமையான; ஆஸீன்-அமர; விதிவத்-விதிகளுக்கு ஏற்றவாறு; கல்பித-செய்து; ஆஸனே—ஓர் ஆசனத்தின் மேல்.
ஒருவன் இல்லத்திலிருந்து வெளியேறி புலனடக்கத்தைப் பயில வேண்டும். அவன் புனித தீர்த்தத்தில் தினமும் நீராடி, சரிவர தூய்மைப்படுத்தப்பட்ட தனிமையான ஓரிடத்தில் அமர வேண்டும்.
பதம் 2.1.17
அப்யஸேன் மனஸா சுத்தம் த்ரிவ்ருத்-ப்ரஹ்மாக்ஷ்ரம் பரம்
மனோ யச்சேஜ் ஜித-ஸ்வாஸோ ப்ரஹ்ம-பீஜம் அவிஸ்மரன்
அப்யஸேத்-ஒருவன் பழக வேண்டும்; மனஸா-மனதால்; சுத்தம்- புனிதம்; த்ரி வ்ருத்-மூன்றாகத் தொகுக்கப்பட்ட; ப்ரஹ்மஅக்ஷ்ரம்- பிரம்ம அட்சரங்கள் (தெய்வீக எழுத்துக்கள்); பரம்-மிக உயர்ந்த; மன:-மனம்; யச்சேத்—கட்டுப்பாட்டிற்குள் நிறுத்தி; ஜித ஸ்வாஸ- சுவாசக் காற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக; ப்ரஹ்ம- பூரணம்; பீஜம்—விதை; அவிஸ்மரன்-மறந்துவிடாமல்.
மேற்கூறியவாறு அமர்ந்த பின், மூன்று பிரம்ம அட்சரங்களை (அ-உ-ம்) மனதில் நிலைக்கச் செய்யவேண்டும். அதன் பின், சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக, பிரணவத்தை மறந்து விடாது இருக்கும் வகையில் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பதம் 2.1.18
நியச்சேத் விஷயெப்யோ ‘க்ஷான் மனஸா புத்தி-ஸாரதி:
மன: கர்மபிர் ஆக்ஷிப்தம் சுபார்தே தாரயேத் தியா
நியச்சேத்— பின்வாங்கு; விஷயெப்ய:-புலன் இயக்கங்களிலிருந்து; அக்ஷான்—புலன்கள்; மனஸா – மனோபலத்தால்; ஸாரதி-சாரதி; மன-மனது; கர்மபி:-பலன் கருதும் செயலால்; புத்தி – புத்தி; ஆக்ஷிப்தம்-ஆழத்திலிருந்து; சுப-அர்தே-இறைவனுக்காக; தாரயேத் -நிலைக்கச் செய்; தியா-முழு உணர்வுடன்.
படிப்படியாக, மனம் ஆன்மீக முன்னேற்றம் அடைய அடைய, புலன் நுகர்விலிருந்து அதைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ள வேண்டும். பிறகு புத்தியால் புலன்கள் அடக்கப்பட்டுவிடும். ஜடச் செயல்களில் அளவுக்கதிகமாக ஆழ்ந்துள்ள மனதை முழுமுதற் கடவுளின் தொண்டில் ஈடுபடுத்தி, உன்னத உணர்வில் முழுமையாக அதை நிலைக்கச் செய்ய வேண்டும்.
பதம் 2.1.19
தத்ரைக்காவயவம் த்யாயேத் அவ்யுச்சினனேன சேதஸா
மனோ நிர்விஷயம் யுக்த்வா தத: கிஞ்சன ந ஸ்மரேத்
பதம் தத் பரமம் விஷ்ணோர் மனோ யத்ர ப்ரஸீததி
தத்ர- எனவே; ஏக-ஒவ்வொன்றாக; உறுப்புக்கள்; அவயவம் உடலின் வேண்டும்; த்யாயேத்-ஒருமுனைப்படுத்தப்பட சேதஸா-மனதால்; மன:- மனம்; நிர்விஷயம்-புலன் வஸ்துக்களால் களங்கப்படுத்திவிடாமல்; யுக்த்வா-நன்றாகப் பொருத்தி; தத- அதன்பின்; கிஞ்சன-எதுவும்; ந இல்லை; ஸ்மரேத்-நினைத்து; பதம்-நபர்; தத்-அது; பரமம்- பரமம்; விஷ்ணோ:-விஷ்ணு: மன-மனம்; யத்ர-அதன்பிறகு; ப்ரஸீததி-ஒருமைப்பட்டு விடுகின்றது.
அதன் பிறகு, விஷ்ணுவின் அங்கங்களின் மீது ஒவ்வொன்றாக, முழு உடலைப் பற்றிய கருத்திலிருந்து விலகி விடாமல் நீர் தியானிக்க வேண்டும். இவ்வாறாக, அனைத்துப் புலன் பொருட்களிலிருந்தும் மனம் விடுபடுகிறது. வேறெதைப் பற்றியும், நினைக்கக் கூடாது. பரம புருஷ பகவானாகிய விஷ்ணுவே பரம சத்தியமாக இருப்பதால், அவரில் மட்டுமே மனதால் பூரணமாக ஒத்துப்போக முடியும்.
பதம் 2.1.20
ரஜஸ்-தமோப்யாம் ஆக்ஷிப்தம் விமூதம் மன ஆத்மன:
யச்சேத் தாரணயா தீரோ ஹந்தி யா தத்-க்ருதம் மலம்
ரஜ:- இயற்கையின் உணர்ச்சி வயப்பட்ட குணம்; தமோப்யாம்- அதோடு ஜட இயற்கையின் அறியாமைக் குணத்தாலும்; ஆக்ஷிப்தம்- கிளர்ச்சியடைந்து; விமூதம்- குழப்பம் அடைந்து; மன-மனம்; ஆத்மன-ஒருவனுக்கு சொந்தமான; யச்சேத்-அதைச் சீர்ப்படுத்தி; தாரணயா-(விஷ்ணுவின்) எண்ணத்தால்; தீர:- சாந்தமடைந்த; ஹந்தி-அழித்துவிடுகிறது; யா—அவையனைத்தையும்; தத் க்ருதம்- அவைகளால் இயற்றப்பட்ட; மலம்—அசுத்தம்.
ஒருவனின் மனது, ஜட இயற்கையின் ரஜோ குணத்தால் தொடர்ந்த கிளர்ச்சிக்கும், இயற்கையின் தமோ குணத்தால் குழப்பத்திற்கும் காரணமாகிறது. ஆனால், விஷ்ணுவின் உறவால் அத்தகைய கருத்துக்களை ஒருவன் சீர்ப்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறாக அவற்றால் உருவாக்கப்பட்ட அசுத்தங்களைக் களைவதன் மூலம் அவன் சாந்தமடைகிறான்.
பதம் 2.1.21
யஸ்யாம் ஸந்தார்யமாணாயாம் யோகினோ பக்தி-லக்ஷண:
ஆசு ஸம்பத்யதே யோகா ஆஸ்ரயம் பத்ரம் ஈக்ஷத:
யஸ்யாம்—ஒழுங்காக ஞாபகத்தில் வைக்கும் இத்தகைய முறையால்; ஸந்தார்யமாணாயாம்—மேலும் இத்தகைய பழக்கத்தில் நிலைத்து ; யோகின:-யோகிகள்;பக்தி_லக்ஷண:-பக்தி மார்க்கத்தை பழகியதால்; ஆசு-மிக விரைவில்; ஸம்பத்யதே-வெற்றியடைவான்; யோக- பக்தித் தொண்டால் விளையும் சம்பந்தம்; ஆஸ்ரயம்—பாதுகாப்பின் கீழ்; பத்ரம்-மிகச் சிறந்த; ஈக்ஷத:-அதைக் காணும்.
அரசே, நினைவிற் கொள்ளும் இம்முறையாலும், மிகச் சிறப்பு உடையதான பகவானின் உருவாம்சத்தில் நிலைத்திருப்பதாலும், பகவானின் நேரான பாதுகாப்பின் கீழ் மிக விரைவில் ஒருவன் அவரது பக்தித் தொண்டை அடைய முடியும்.
பதம் 2.1.22
யதா ஸந்தார்யதே ப்ரஹ்மன் தாரணா யத்ர ஸம்மதா
யாத்ருசீ வா ஹரேத்ஆசு புருஷஸ்ய மனோ-மலம்
ராஜா உவாச-பாக்கியசாலியான பரீட்சித்து மகாராஜன் கூறினார்; யதா—உள்ளபடி; ஸந்தார்யதே-எண்ணம் உருவாக்கப்படுகிறது; ப்ரஹ்மன்—ஓ பிராமணரே; தாரணா—கருத்து; யத்ர-எங்கு, எவ்வாறு; ஸம்மதா—சுருக்கமான; யாத்ருசீ-அதற்குரிய வழி; வா—அல்லது;ஹரேத்-விடுவித்துக் கொள்ள; ஆசு- தாமதமின்றி; புருஷஸ்ய- ஒருவனின்; மன-மனதின்; மலம்—அசுத்தமான விஷயங்கள்.
பாக்கியசாலியான பரீட்சித்து மகாராஜன், தொடர்ந்து விசாரணை செய்தார்: ஓ பிராமணரே, மனதை எப்படி, எங்கு பதியச் செய்ய வேண்டும் என்பதையும், எவ்விதத்தில் கருத்தைப் பதியும் படி செய்தால் ஒருவனால் மனதிலுள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள முடியும் என்பதையும் தயவு கூர்ந்து விளக்குவீராக.
பதம் 2.1.23
ஸ்ரீ-சுக உவாச
ஜிதாஸனோ ஜித-ஸ்வாஸோ ஜித-ஸங்கோ ஜிதேந்ரிய:
ஸ்தூலே பகவதோ ரூபே மன: ஸந்தாரயேத் தியா
ஸ்ரீசுக உவாச-சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஜித-ஆஸன- கட்டுப்படுத்தப்பட்ட ஆசனம்; ஜித-ஸ்வாஸ-கட்டுப்படுத்தப்பட்ட சுவாச முறை; ஜித–ஸங்க:-கட்டுப்படுத்தப்பட்ட உறவு; ஜித இந்ரிய:-கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள்; ஸ்தூலே- ஸ்தூலமான ஜடத்தின்; பகவத-முழுமுதற் கடவுளிடம்; ரூபே-ரூபத்தில்; மன-மனம்; ஸந்தாரயேத்—பதியச் செய்ய வேண்டும்; தியா-புத்தியால்.
சுகதேவ கோஸ்வாமி விடை கூறினார்; ஒருவன், ஆசனத்தைக் கட்டுப்படுத்தி, யோக பிராணாயாம் (மூச்சடக்கம்) சுவாசத்தைக் கட்டுப்படுத்தி, இதனால் மனதையும், புலன்களையும் முறையால் அடக்க வேண்டும். அதன் பின் புத்தியைப் பயன்படுத்தி பகவானின் (விராட்-ரூபம் என்று அழைக்கப்படும்) ஸ்தூல சக்திகளில் மனதைச் செலுத்த வேண்டும்.
பதம் 2.1.24
விசேஷஸ் தஸ்ய தேஹோ ‘யம் ஸ்தவிஷ்தஸ் ச ஸ்தவீயஸாம்
யத்ரேதம் வ்யஜயதே விஸ்வம் பூதம் பவ்யம் பவச் ச ஸத்
விசேஷ:– சொந்தமான; தஸ்ய-அவருடைய (கடவுளின்); இடம்; யத்ர தேஹ-உடல்; அயம்-இந்த; ஸ்தவிஷ்த-ஸ்தூலமான; ச-மேலும்; ஸ்தவீயஸாம்-மொத்த ஜடப் பொருளின்; யத்ர -அதனில்; இதம்—அதிசயமான இவைகள் அனைத்தும்; வ்யஜயதே- அனுபவிக்கப்படுகின்றது; விஸ்வம்- பிரபஞ்சம்; பூதம் -இறந்த காலம்; பவ்யம் — எதிர்காலம்; பவச்- நிகழ்காலம்; ச-மேலும்; ஸத் -பலனாக.
பிரம்மாண்டமான இந்த பௌதிக படைப்பு முழுமுதற் கடவுளின் சொந்த உடலாகும். இதில் தான் இறந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களின் பிரபஞ்ச பலன்கள் அனுபவிக்கப்படுகின்றன.
பதம் 2.1.25
அண்ட-கோசே சரீரே ‘ஸ்மின் ஸப்தாவரண-ஸம்யுதே
வைராஜ: புருஷோ யோ ‘செள பகவான் தாரணாஸ்ரய:
அண்ட -கோசே-பிரபஞ்ச ஓட்டிற்குள்; சரீரே—அதன் உடலுக்குள்; அஸ்மின்- இது; ஸப்த—ஏழு அடுக்கு ; ஆவரண மூடிகள்; ஸம்யுதே இப்படிச் செய்து ; வைராஜ: -பிரம்மாண்டமான பிரபஞ்சம்; புருஷ: பகவானுடைய உருவம்; ய:- அது; அசௌ—அவர்; பகவான் முழுமுதற் கடவுள்; தாரணா—எண்ணம்; ஆஸ்ரய:-உரிய பொருள்.
பிரபஞ்ச ஓடு எனப்படும் உடலுக்குள், ஏழு அடுக்குகளாக உள்ள பௌதிக மூலப் பொருட்களால் மூடப்பட்டுருக்கும் முழுமுதற் கடவுளின் பிரம்மாண்டமான பிரபஞ்சத் தோற்றமே, “விராட்” எனும் கருத்துக்குரிய விஷயமாகும்.
பதம் 2.1.26
பாதாளம் ஏதஸ்ய ஹி பாத-மூலம்
பதந்தி பார்ஷ்ணி-ப்ரபதே ரஸாதளம்
மஹாதளம் விஸ்வ-ஸ்ருஜோ ‘த குல்பௌ
தளாதளம் வை புருஷஸ்ய ஜங்கே
பாதாளம்-பிரபஞ்சத்தின் அடியிலுள்ள பாதாள; ஏதஸ்ய-அவருடைய (கடவுள்); ஹி -அப்படியே; பாத மூலம் உள்ளங்கால்கள்; பதந்தி— அதை அவர்கள் கற்றறிகின்றனர்; பார்ஷ்ணி குதிகால்கள்; ப்ரபதே-கால்விரல்கள்; ரஸாதளம்-ரஸாதளம் என்ற பெயர் கொண்ட உலகங்கள்; மஹாதளம்-மஹாதளம் என்ற பெயர் கொண்ட உலகங்கள்; விஸ்வ-ஸ்ருஜ:-பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தா; அத இவ்வாறாக; குல்பௌ-கணுக்கால்கள்; தளாதளம் தளாதளம் என்ற பெயர் கொண்ட உலகங்கள்; வைஅவற்றைப் போலவே; புருஷஸ்ய-பிரம்மாண்டமான புருஷரின்; ஜங்கே-கால்கள்.
அதை உணர்ந்தவர்கள், விஸ்வ ரூபத்தினுடைய பாதங்களின் அடிப்பாகங்களில் பாதாள லோகங்கள் அமைகின்றன என்பதையும், குதிகால்களாகவும், கால் விரல்களாகவும் ரஸாதள உலகங்களும், கணுக்கால்களாக மஹாதள உலகங்களும், அவருடைய கால்களாக தளாதள உலகங்களும் அமைகின்றன என்பதையும் ஆராய்ந்து அறிந்துள்ளனர்.
பதம் 2.1.27
த்வே ஜானூனீ ஸுதளம் விஸ்வ-மூர்தேர்
ஊரு-த்வயம் விதளம் சாதளம் ச
மஹீதளம் தஜ்-ஜகனம் மஹீபதே
நபஸ்தளம் நாபி-ஸரோ க்ருணந்தி
த்வே-இரண்டு; ஜானூ-இரு முழங்கால்கள்; ஸுதளம்- சுதளம் என்றழைக்கப்படும் கிரக அமைப்பு; விஸ்வமூர்தே-விஸ்வரூபத்தின்; ஊருத்வயம்—இரு தொடைகள்; விதளம்- விதளம் என்றழைக்கப்படும் கிரக அமைப்பு; ச-மேலும்; மஹீதளம்-மஹீதளம் என்றழைக்கப்படும் கிரக அமைப்பு; ச-மேலும்; அதளம்- என்ற பெயர் கொண்ட உலகங்கள்; தஜ்—அதன்; ஜகனம் இடுப்பகள்: மஹீபதே-ஓ அரசனே; நபஸ்தளம்- வானவெளி; நாபி—ஸர நாபிக்குழி; க்ருணந்தி—அவ்வாறு அவர்கள் அதை ஏற்கின்றனர்.
விஸ்வ ரூபத்தின் முழங்கால்களாக சுதளம் எனப்படும் கிரக அமைப்பும், இரு தொடைகளாக விதள மற்றும் அதள அமைப்புக்களும் உள்ளன. மேலும் இடுப்புகள் மஹீதளமாகவும், அவரது நாபிக்குழியாக வானவெளியும் உள்ளன.
பதம் 2.1.28
உர-ஸ்தலம் ஜ்யோதிர்-அனீகம் அஸ்ய
கிரீவா மஹர் வதனம் வை ஜனோ ‘ஸ்ய
தபோ வராதீம் விதுர் ஆதி-பும்ஸ:
ஸத்யம் து சீர்ஷாணி ஸஹஸ்ர-சீர்ஷண:
உர:-உயரே; ஸ்தலம்-இடம் (மார்பு): ஜ்யோதிர் – அனீகம் பிரகாசமுடைய உலகங்கள்: அஸ்ய-அவரது: க்ரீவா- கழுத்து: மஹ- பிரகாசிக்கும் உலகங்களுக்கு மேலே உள்ள கிரக அமைப்பு: வதனம்- வாய்; வை—அதே போன்று; ஜன-மஹர்- எனும் கிரக அமைப்புக்கு மேலே உள்ள கிரகங்கள்: அஸ்ய-அவரது; தப- ஜனஸ்- எனும் கிரக அமைப்புக்கு மேலே உள்ள கிரகங்கள்; வராதீம்-நெற்றி; விது- அறியப்படுகிற; ஆதி-ஆதியான; பும்ஸ-புருஷர்; ஸத்யம்- மிக உயர்ந்த கிரக அமைப்பு; து-ஆனால்; சீர்ஷாணி- தலை; ஸெஹஸ்ர-ஆயிரம்; சீர்வுண—தலைகளுடன் இருப்பவர்.
விஸ்வ ரூபத்தின் மூல புருஷரான அவரது மார்பாக பிரகாசமுடைய கிரக அமைப்பும், அவரது கழுத்தாக மஹர் லோகங்களும் அவரது வாயாக ஜன மேலும் அவரது நெற்றியாக தபோ லோகங்களும் உள்ளன. ஆயிரம் தலைகளைக் கொண்ட அவரது தலையாக இருப்பது சத்திய லோகம் எனப்படும் மிக உயர்ந்த கிரக அமைப்பாகும்.
பதம் 2.1.29
இந்ராதயோ பாஹவ ஆஹுர் உஸ்ரா:
கர்ணௌ திச: ஸ்ரோத்ரம் அமுஷ்ய சப்த:
நாஸத்ய-தஸ்ரௌ பரமஸ்ய நாஸே
க்ராணோ ‘ஸ்ய கந்தோ முகம் அக்னிர் இத்த:
இந்ர ஆதயோ —சுவர்க்கத்தைச் சேர்ந்த அரசனான இந்திரனை தலைமையாகக் கொண்ட தேவர்கள்; பாஹவ-கரங்கள்; ஆஹு- அழைக்கப்படுகின்றன; உஸ்ரா:-தேவர்கள்; கர்ணௌ-செவிகள்; திச- நான்கு திசைகள்; ஸ்ரோத்ரம்-கேட்கும் புலன்; அமுஷ்ய- கடவுளின்; சப்த-ஓசை; நாஸத்ய-தஸ்ரௌ—அஸ்வினி குமாரர்கள் என்று அழைக்கப்படும் தேவர்கள்; பரமஸ்ய-பரமனின்; நாஸே- துவாரங்கள்; க்ராண:-முகரும் புலன்; அஸ்ய-அவரிடமிருந்து(கடவுள்); கந்த:-நறுமணம்; முகம்-வாய்; இத்த:- கொழுந்து விட்டு எரியும்.;அக்னி:—நெருப்பு:
இந்திரன் முதலான தேவர்கள் அவரது கரங்களாகும். பத்து திசைகளாக இருப்பது அவரது செவிகளாகும். மேலும் பௌதிக ஓசையாக இருப்பது அவரது செவியுரும் புலனாகவும், அவரது இரு நாசித்துவாரங்கள் இரு அஸ்வினி குமாரர்களாகவும், பௌதிக நறுமணமாய் இருப்பது அவரது முகரும் புலன்களாகவும், அவரது வாய் கொழுந்துவிட்டு எரியும் தீச்சுடராகவும் விளங்குகின்றன.
பதம் 2.1.30
த்யௌர் அக்க்ஷிணீ சக்க்ஷுர் அபூத் பதங்க:
பக்க்ஷ்மாணி விஷ்ணோர் அஹனீ உபே ச
தத்-ப்ரூ-விஜ்ரும்ப: பரமேஷ்தி-திஷ்ண்யம்
ஆபோ ‘ஸ்ய தாலூ ரஸ ஏவ ஜிஹ்வா
த்யெளர்-விண்வெளிப் பிரதேசம்; அக்க்ஷிணீ—கண்விழிகள்; க்ஷு:-கண்களுடைய (புலன்கள்); அபூத்—அது இவ்வாறு உருவானது; பதங்க:-சூரியன்; பக்க்ஷ்மாணி—கண் இமைகள்: விஷ்ணோ-முழுமுதற் கடவுளான ஸ்ரீவிஷ்ணுவின்: அஹனீ-பகலும், இரவும்; உபே-இரண்டும் ; ச-மேலும்; தத்—அவருடைய (கடவுள்); ப்ரூ- புருவங்கள்; விஜ்ரும்ப-அசைவுகள்; பரமேஷ்தி- தலைமையான ஜீவன் (பிரம்மா); திஷ்ண்யம்-பதவி; ஆப-நீரை நிர்வகிப்பவரான, வருணன்; அஸ்ய—அவரது; தாலூ-மேல்வாய்; ரஸ- ரசம்; ஏவ- நிச்சமாக; ஜிஹ்வா-நாக்கு.
விண்வெளிப் பிரதேசமாக அவரது கண்குழிகளும், பார்க்கும் சக்தி கொண்ட சூரியனாக கண்விழியும் உள்ளன. இரவும், பகலுமாக அவரது இரு கண் இமைகள் உள்ளன. அவரது புருவங்களின் அசைவில், பிரம்மா மற்றும் அவரைப் போன்ற உயர் அதிகாரிகள் வாழ்கின்றனர். நீரை நிர்வகிப்பவரான, வருணன் அவரது மேல்வாய் ஆவார். மேலும் அனைத்திற்கும் சாராம்சமாக அல்லது ரசமாக இருப்பது அவரது நாக்காகும்.
பதம் 2.1.31
சந்தாம்ஸி அனந்தஸ்ய ஸிரோ க்ருணந்தி
தம்ஸ்த்ரா யம: ஸ்னேஹ-கலா த்விஜானி
ஹாஸோ ஜனோன்மாத-கரீ ச மாயா
துரந்த-ஸர்கோ யத்-அபாங்க-மோக்ஷ:
சந்தாம்ஸி-_வேத மந்திரங்கள்; அனந்தஸ்ய-பரமனின்: ஸிர- மூளைப் பாதை; க்ருணந்தி—அவர்கள் கூறுகின்றனர்; தம்ஸ்த்ரா- பற்கள் உள்ள தாடைகள்; யம-பாவிகளை நிர்வகிப்பவரான யமராஜன்; ஸ்னேஹ—கலா–நட்பு எனும் கலை; த்விஜானி—பற்களின் கோவை; ஹஸ—புன்னகை; ஜன உன்மாத—கரீ-மிகவும் வசியப்படுத்தும்; ச -மேலும்; மாயா- மாயா சக்தி; துரந்த-மிஞ்ச முடியாத; ஸர்க-ஜட சிருஷ்டி; யத்–அபாங்க—அவரது கண்ணோட்டம்; மோக்ஷ:-மீது செலுத்தி.
வேத மந்திரங்கள் பகவானின் மூளைப் பாதை என்றும், பற்களைக் கொண்ட அவரது தாடைகள், பாவிகளை தண்டிக்கும் மரண தேவனான யமன் என்றும், பாசக்கலையாக அவரது பற் கோவையும், மேலும் மிகவும் வசியப்படுத்தும் மாயையான ஜட சக்தியாக அவரது புன்னகையும் உள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். ஜட சிருஷ்டி எனப்படும் இப்பெருங்கடலானது, பகவான் நம் மீது செலுத்தும் வேகமான பார்வையாகும்.
பதம் 2.1.32
வ்ரீடோத்தரௌஷ்தோ ‘தர ஏவ லோபோ
தர்ம: ஸ்தனோ ‘தர்ம-பதோ ‘ஸ்ய ப்ருஷ்தம்
கஸ் தஸ்ய மேத்ரம் வ்ருஷணௌ ச மித்ரௌ
குக்க்ஷி! ஸமுத்ரா கிரயோ ‘ஸ்தி-ஸங்கா:
வ்ரீட-நாணம்; உத்தர-மேல்; ஒஸ்த-உதடு; அதர- முகவாய்க் கட்டை; ஏவ்—நிச்சயமாக லோப-ஆசைப்படுதல்; தர்ம-மதம்; ஸ்தன-மார்பு: அதர்ம-அதர்மம்; பத- பாதை; அஸ்ய-அவரது (கடவுள்): ப்ருஷ்தம் – முதுகு: க-பிரம்மா: தஸ்ய-அவரது; மேத்ரம்- பாலுறுப்புகள்; வ்ருஷணௌ-பீஜங்கள்; ச-மேலும்; மித்ரௌ-மித்ரா வருணர்கள்; குக்க்ஷி:-இடுப்பு; ஸமுத்ரா-சமுத்திரங்கள்; கிரய- குன்றுகள்: அஸ்தி- எலும்புகள்: ஸங்கா-குவியல்கள்.
நாணம் அவரது உதடுகளின் மேற்புறமாகவும், ஆசை அவரது முகவாய்க் கட்டையாகவும், மதம் அவரது மார்பாகவும், மற்றும் அதர்மம் அவரது முதுகுப்புறமாகவும் உள்ளன. ஜட உலகில் எல்லா ஜீவ ராசிகளையும் உற்பத்தி செய்பவரான் பிரம்ம தேவர், அவரது பாலுறுப்புகளாகவும், மித்திர-வருணர்கள் அவரது இரு விதைகளாகவும் இருக்கின்றனர். அவரது இருப்பாக சமுத்திரமும், அவரது எலும்புக் குவியல்களாக குன்றுகளும், மலைகளும் இருக்கின்றன.
பதம் 2.1.33
நத்யோ ‘ஸ்ய நாத்யோ ‘த தனூ-ருஹாணி
மஹு-ருஹா விஸ்வ-தனொர் ந்ருபேந்ர
அனந்த-வீர்ய: ஸ்வஸிதம் மாதரிஸ்வா
கதிர் வய: கர்ம குண-ப்ரவாஹ:
நத்யோ-நதிகள்; அஸ்ய-அவரது; நாத்ய-நாடி நரம்புகள்: அத- எனவே; தனூ-ருஹாணி-உடலில் உள்ள முடிகள்; மஹீ-ரூஹ- செடிகளும், மரங்களும்; விஸ்வ—தனொ-விஸ்வரூபத்தின்; நீ இந்த—ஓ அரசனே; அனந்தவீர்ய-சர்வ சக்தியுள்ள; ஸ்வளிதம்- சுவாசம்; மாதரிஸ்வா—காற்று; கதி-அசைவு; வய-கடக்கும் யுகங்கள்: கர்ம-செயல்கள்; குண—ப்ரவாஹ-இயற்கை குணங்களின் பிரதிபலன்கள்.
அரசே, விஸ்வரூபத்தின் நாடி நரம்புகளாக நதிகளும், அவரருடலின் உரோமங்களாக மரங்களும், அவரது மூச்சாக சர்வ சக்தி படைத்த காற்றும் உள்ளன. அவரது அசைவுகளாக கடக்கும் யுகங்களும், அவரது செயல்களாக ஜட இயற்கையின் மூக்குணங்களின் பிரதி பலன்களும் உள்ளன.
பதம் 2.1.34
ஈசஸ்ய கேசான் விதுர் அம்புவாஹான்
வாஸஸ் து ஸந்யாம் குரு-வர்ய பூமன:
அவ்யக்தம் ஆஹுர் ஹ்ருதயம் மனஸ் ச
ஸ சந்ரமா: ஸர்வ-விகார-கோச:
ஈசஸ்ய-பரம் ஆளுனரின்; கேசான்—தலையிலுள்ள விது-என்னிடமிருந்து நீர் அதை அறியலாம்; அம்பு வாஹாம்- ஏந்திச் செல்லும் மேகங்கள்; வாஸது-ஆடை; ஸந்த்யாம்-இரவுகளின் முடிவு: குரு-வர்ய-குரு வம்சத்தினரில் சிறந்த; பூமன-சர்வ வல்லமை உள்ளவரின்; அவ்யக்தம்-ஜட சிருஷ்டிக் முக்கிய காரணம்; ஆஹு—கூறப்பட்டுள்ளது; ஹ்ருதம்-புத்தி: மன-ச-மனதும்; ஸ—அவர்; சந்ரமா—சந்திரன்; ஸர்வ-விகாரவேட எல்லா மாற்றங்களுக்கும் களஞ்சியம்.
குரு வம்சத்தில் சிறந்தவரே, நீரை ஏந்திச் செல்லும் மேகங்கள் தலையிலுள்ள கேசமாகும். பகல் நேரங்களின் அல்லது இரவு நேரங்களின் முடிவாக அவரது ஆடையும், ஜட சிருஷ்டியின் பரம காரணமாய் புத்தியும் இருக்கின்றன. எல்லா மாற்றங்களுக்கும் களஞ்சியமான சந்திரம் அவரது மனமாகும்.
பதம் 2.1.35
விஞ்ஞான-சக்திம் மஹிம் ஆமனந்தி
ஸர்வாத்மனோ ‘ன்த:-கரணம் கிரித்ரம்
அஸ்வாஸ்வதரி-உஷ்த்ர-கஜா நகானி
ஸர்வே ம்ருகா: பசவ: ஸ்ரோணி தேசே
விஞ்ஞான- சக்திம்-உணர்வு; மஹிம்-ஜடத்தின் அடிப்படை கொள்கை: ஆமனந்தி—அவர்கள் அதை அவ்வாறு அழைக்கின்றனர்; ஸர்வ ஆத்மன:-எங்கும் உள்ளவரின்; அன்த:-கரணம்-அகங்காரம்; கிரித்ரம்-ருத்திரன் (சிவன்); அஸ்வ-குதிரை; அஸ்வதரி-கோவோ கழுதை; உஷ்த்ர—ஒட்டகம்; கஜா-யானை; நகானி- நகங்கள்; ஸர்வே-மற்றெல்லா; ம்ருகா:-ஆண் கலைமான்கள்; பசவ:- நான்கு கால்களுள்ள மிருகங்கள்; ஸ்ரோணி தேச—கச்சைப் பகுதி.
நிபுணர்கள் வலியுறுத்தி இருப்பதைப் போல், ஜடத்தின் அடிப்படைக் கொள்கையாக (மஹத் தத்வம்), எங்கும் வியாபித்துள்ள பகவானின் உணர்வு இருக்கிறது. அவரது அகங்காரமாக ருத்ரதேவன் உள்ளார். குதிரை, கோவேறு கழுதை, ஒட்டகம் மற்றும் யானை அவரது நகங்களாகும். மேலும் வன விலங்குகளும், நான்கு கால்களுள்ள மற்றவைகளும் பகவானின் கச்சைப் பகுதியில் அமைந்துள்ளன.
பதம் 2.1.36
வயாம்ஸி தத்-வ்யாகரணம் விசித்ரம்
மனுர் மனீஷா மனுஜோ நிவாஸ;
கந்தர்வ-வித்யாதர-சாரணாப்ஸர
ஸ்வர-ஸ்மிருதிர் அஸுரானீக-வீர்ய:
வயாம்ஸி–பலவகைப்பட்ட பறவைகள்; தத் -வ்யாகரணம்- வார்த்தைகள்; விசித்ரம்—கலை நுட்பம்; மனு:-மனித குலத் தந்தை; மனிஷா—எண்ணங்கள்; மனுஜ:-மனித வர்க்கம் (மனுவின் மகன்கள்); நிவாஸ- வசிப்பிடம்; கந்தர்வ-கந்தர்வர்கள் என்றழைக்கப்படும் மனிதர்கள்; வித்யாதர—வித்யாதரர்கள்; சாரண-சாரணர்கள்; அப்ஸர-தேவதைகள்; ஸ்வர-கரம்; ஸ்மிருதி:-ஞாபகம்; அஸுர அனீக -அசுரத்தனமுள்ள வீரர்கள்; வீர்ய-வீரியம்.
பலவகையான பறவைகள் அவரது சாதுர்யமான கலை நுட்ப உணர்ச்சியை சுட்டிக் காட்டுகின்றன. மனித குலத் தந்தையான மனு, அவரது நிலையான புத்திக்கு அடையாளமாவார். அவரது இருப்பிடமாக மனித வர்க்கம் உள்ளது. சுவர்க்க லோக மனித இனங்களாகிய கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள் மற்றும் தேவதைகளைப் போன்றவர்கள் அனைவரும் அவரது இசைநயத்தை பிரதிநிதிக்கின்றனர். அசுர வீரர்கள் அவரது அற்புதமான வீரீயத்தின் பிரதிநிதிகளாவர்.
பதம் 2.1.37
ப்ரஹ்மானனம் க்ஷத்ர புஜோ மஹாத்மா
வித் ஊருர் அங்ரி- ஸ்ரிதே- க்ருஷ்ண வர்ண;
நானபிதாபீஜ்ய கணோபபன்னோ
த்ரவ்யாத்மக: கர்ம விதான-யோக:
ப்ரஹ்ம-பிராமணர்கள், ஆனனம்- முகம். க்ஷத்ர- க்ஷத்திரியர்கள்; புஜ – கரகங்கள்: மஹாத்மா-விராட் புருஷர்’; வித-வைசியர்கள்: தாகு—தொடைகள்: அங்ரிஸ்ரித- அவரது பாதங்களின் பதுகாப்பில்: கிருஷ்ண வர்ண — சூத்திரர்கள்: தாவக- பல்வேறு; அபிதா- பெயர்களால்; அபீஜ்ய-கண- தேவர்கள்: உப்பன்ன- வெற்றி கொள்ளப்பட்டு; த்ரவ்ய ஆத்மக-தங்களால் இயன்ற உணவு வகைகளுடன்; கர்ம-செயல்கள்; விதான-யோக:-யாகங்கள் செய்தல்.
பிராமணர்களாக “விராட் புருஷரின் முகமும், க்ஷத்திரியர்களாக அவரது கரங்களும், வைசியர்களாக அவரது தொடைகளும், உள்ளன. மேலும் சூத்திரர்கள் அவரது பாதங்களின் பாதுகாப்பில் உள்ளனர். வழிபாட்டுக்குரிய தேவர்களும் கூட அவரால் வெற்றி கொள்ளப்பட்டு உள்ளனர். தங்களால் இயன்ற பொருட்களைக் கொண்டு யாகங்கள் செய்து பகவானைத் திருப்திபடுத்த வேண்டியது அனைவருடைய கடமையாகும்.
பதம் 2.1.38
இயான் அஸாவ் ஈஸ்வர-விக்ரஹஸ்ய
ய: ஸன்னிவேச: கதிதோ மயா தே
ஸந்தார்யதே ‘ஸ்மின் வபுஷி ஸ்தவிஷ்தே
மன: ஸ்வ-புத்தியா ந யதோ ‘ஸ்தி கிஞ்சித்
இயான்- இவையெல்லாம்; அஸௌ-அந்த; ஈஸ்வர- பரம புருஷர்: விக்ரஹஸ்ய-உருவத்தின்; ய:-எதுவாயினும்,;ஸன்னிவேச:—அவைகள் அமைந்திருப்பதைப் போல; கதித- தெளிவாக்கி ; மயா-என்றால்; தே-உம்மிடம்; ஸந்தார்யதே-மனதை ஒருவன் ஒருமுகப்படுத்த முடியும்; அஸ்மின்-இதில்; வபுஷி_’விராட்- தோற்றம்; ஸ்தவிஷ்தே-ஸ்தூலத்தில்; மன:-மனம்: ஸ்வ- புத்தியா- ஒருவனின் சுய புத்தியால்; ந-இல்லை; யத:-அவருக்கு (கடவுள்) அப்பால்; அஸ்தி-இருக்கிறது; கிஞ்சித்-வேறெதுவும்.
இவ்வாறாக, முழுமுதற் கடவுளின் பிரம்மாண்டமான ஸ்தூல ஜடத் தோற்றத்தை உமக்கு நான் விளக்கினேன். முக்தியை மிகவும் விரும்பும் ஒருவன் தன் மனதை பகவானின் இந்த உருவத்தின் மீது பதியச் செய்வான். ஏனெனில், ஜட உலகில், இதை விட, அதிகமானது வேறொன்றும் இல்லை.
பதம் 2.1.39
ஸ ஸர்வ-தீ-வ்ருத்தி-அனுபூத-ஸர்வ
ஆத்மா யதா ஸ்வப்ன ஜனேக்ஷிதைக:
தம் ஸத்யம் ஆனந்த-நிதிம் பஜேத
நான்யத்ர ஸஜ்ஜேத் யத ஆத்ம-பாத:
ஸ: அவர் பரம் புருஷர்); ஸர்வ தீ-வ்ருத்தி—பல்வேறு விதமான அறிவாற்றலால் தன்னிலை அறியும் முறை; அனுபூத- பூரணமாக அறிந்துள்ள; ஸர்வே—அனைவரும்; ஆத்மா-பரமாத்மா: யதா- அவ்வளவுக்கவ்வளவு; ஸ்வப்ன ஜன-கனவு காணும் ஒருவன்; ஈக்ஷித-காணப்படும்; ஏக:-ஒன்றேயான; தம்-அவரிடம்; ஸத்யம்- பரம சத்தியம்; ஆனந்த-நிதிம்—ஆனந்தக் கடல்; பஜேத-ஒருவன் வழிபட வேண்டும்; ந-எப்போழுதும் இல்லை; அன்யத்ர—வேறு எதுவும்; ஸஜ்ஜேத்—பற்றுக்கொண்டு ; யத:-அதனால்; ஆத்ம-பாத: ஒருவரின் இழிவு.
ஒரு சாதாரண மனிதன், அவன் காணும் கனவுகளில் ஆயிரக்கணக்கான தோற்றங்களை சிருஷ்டிப்பதைப் போலவே, பல்வேறு தோற்றங்களின் தம்மை விரித்துக் கொள்பவரான பரமபுருஷரின் மீது மட்டுமே ஒருவன் தன் மனதை பதியச் செய்ய வேண்டும். ஒன்றேயான சர்வானந்த மெய்ப்பொருளின் மீது மட்டுமே தன் மனதை ஒருவன் பதிக்க வேண்டும். இல்லையெனில், ஒருவன் தவறாக வழிநடத்தப்பட்டு, தனது இழிவுக்கு தானே காரணமாகி விடுவான்.
ஸ்ரீமத் பாகவதம், இரண்டாம் காண்டத்தின், “இறை உணர்வில் முதற்படி” என்ற தலைப்பைக் கொண்ட முதல் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்த பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

