அத்தியாயம் – 1
இறை உணர்வில் முதற்படி
எம்பெருமானே, எங்கும் பரவியுள்ள முழுமுதற்கடவுளே, என்னுடைய மதிப்பிற்குரிய வணக்கங்களை உமக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 2.1.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: என் அன்பிற்குரிய அரசே, உமது கேள்வி எல்லா வகையான மக்களுக்கும் மிகவும் நன்மை பயக்கக் கூடியதாக இருப்பதால் அது பெரும் புகழுக்கு உரியதாகும். இந்த கேள்விக்கு உரிய பதில், கேட்பதற்குரிய முக்கியமான விஷயமாகையால், எல்லா ஆன்மீகிகளாலும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பதம் 2.1.2 : மகாராஜனே, முடிவான உண்மையின் ஞானத்தைப் பற்றி அறிந்திராத காரணத்தால், ஜட வாழ்வுக்காக மனதைப் பறிகொடுத்தவர்கள் செவியுறுவதற்காக, மனித சமூகத்தில் பல விஷயங்கள் உள்ளன.

பதம் 2.1.3 : இத்தகைய பொறாமை கொண்ட குடும்பஸ்தனின் ஆயுள் இரவில் உறக்கத்திலோ அல்லது உடலுறவு வாழ்விலோ கழிகிறது. பகற் பொழுதில் பணம் சம்பாதிப்பதிலோ அல்லது குடும்ப அங்கத்தினர்களைப் பராமரிப்பதிலோ கழிகிறது.

பதம் 2.1.4 : ஆத்ம-தத்வ ஞானமற்றவர்கள், உடல், குழந்தை மற்றும் மனைவி ஆகியோரிடம் பற்று கொண்டிருப்பதால், வாழ்வின் பிரச்சினைகளைப் பற்றி ஆராய்வதில்லை. போதுமான அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தாலும், தவிர்க்க முடியாத மரணத்தை அவர்களால் உணர முடிவதில்லை.

பதம் 2.1.5 : பரத குலத் தோன்றலே, எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட விருப்பம் கொண்டுள்ள ஒருவன், பரமாத்மாவும், ஆளுனரும், எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவருமான முழுமுதற் கடவுளைப் பற்றி செவியுறவும், துதிக்கவும், அவரை நினைவிற்கொள்ளவும் வேண்டும்.

பதம் 2.1.6 : ஜடம் மற்றும் ஆன்மீகத்தைப் பற்றிய பூரண அறிவாலோ, அஷ்ட சித்திகளைப் பயில்வதாலோ, வர்ணாஸ்ரம கடமையை நன்கு நிறைவேற்றுவதாலோ அடையப்படும் மனித வாழ்வின் மிக உயர்ந்த பக்குவமாக இருப்பது, வாழ்வின் இறுதி கட்டத்தில் முழுமுதற் கடவுளை நினைவிற்கொள்வதேயாகும்.

பதம் 2.1.7 : பரீட்சித்து மகாராஜனே, முக்கியமான கட்டுப்பாடுகளுக்கும், அதன் விதிகளுக்கும் அப்பாற்பட்டுள்ள மிகச் சிறந்த ஆன்மீகிகள் பகவானின் பெருமைகளைப் பாடுவதில் ஆனந்தம் அடைகின்றனர்.

பதம் 2.1.8 : துவாபர யுகத்தின் இறுதியில், ஸ்ரீமத் பாகவதம் எனும் பெயர் கொண்டதும், வேதங்களுக்குச் சமமானதுமான இச்சிறந்த வேத அனுபந்தத்தை, எனது தந்தையான ஸ்ரீல துவைபாயன வியாசரிடமிருந்து நான் கற்றறிந்தேன்.

பதம் 2.1.9 : புண்ணிய புருஷனான மகாராஜனே, நான் ஆன்மீகத்தில் பூரணமாக நிலைபெற்றிருந்தேன். இருப்பினும் ஞான ஒளியூட்டும் சுலோகங்களால் விவரிக்கப்படும் பகவானுடைய திருவிளையாடல்களின் வர்ணனைகளால் நான் கவரப்பட்டேன்.

பதம் 2.1.10 : நீர், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மிகச் சிறந்த பக்தராகையால், அதே ஸ்ரீமத் பாகவதத்தை உமக்கு நான் கூறப்போகிறேன். ஸ்ரீமத் பாகவதத்தை முழு கவனத்துடனும், வணக்கத்துடனும் கேட்பவன், முக்தி அளிப்பவரான பரம புருஷரிடம் உறுதியான நம்பிக்கையைப் பெறுவான்.

பதம் 2.1.11 : மகாராஜனே, பெரும் அதிகாரிகள் பகவானின் புனித நாமங்களை இடைவிடாமல் பாடியவண்ணமாக இருக்கின்றனர். அவர்களின் வழியைப் பின்பற்றுவதே சந்தேகமும், பயமும் அற்றதும், அனைவருக்கும் வெற்றி அளிக்கக் கூடியதுமான வழியாகும். இவ்வழி, அனைத்து ஜட ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களுக்கும், ஜட இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கும், மற்றும் உன்னத அறிவின் பயனாக சுய திருப்தி அடைந்துள்ளவர்களுக்கும் ஏற்றதாகும்.

பதம் 2.1.12 : இவ்வுலகில் பலவருடங்களாக அனுபவம் பெறாமலேயே வாழ்ந்து, வாழ்வை வீணாகக் கழித்து விட்ட நீண்ட ஆயுளால் என்ன பயன்? ஒரு நொடி நேரமாவது முழு உணர்வுடன் வாழ்வது சிறந்தது. ஏனெனில், ஒருவன் தன்னுடைய மிகவுயர்ந்த நன்மையைத் தேடி அலைவதற்குரிய துவக்கத்தை அது வழங்குகிறது.

பதம் 2.1.13 : தமது வாழ்வு இன்னும் ஒரு நொடி நேரம் மட்டுமே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்ட ராஜ ரிஷியாகிய கத்வாங்க மகாராஜன், எல்லா பௌதிகச் செயல்களிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டு, அபயம் அளிப்பவரான முழுமுதற் கடவுளிடம் உடனே தஞ்சமடைந்தார்.

பதம் 2.1.14 : பரீட்சித்து மகாராஜனே, இப்பொழுது உமது ஆயுள் இன்னும் ஏழு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். எனவே இக்காலத்தில் உமது அடுத்த பிறவியின் சிறந்த நன்மைக்குத் தேவையான எல்லாக் கடமைகளையும் உம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

பதம் 2.1.15 : வாழ்வின் இறுதி கட்டத்தில், மரணத்தைப் பற்றி அஞ்சாமல் இருப்பதற்குப் போதுமான தைரியம் உள்ளவனாக ஒருவன் இருக்க வேண்டும். ஆனால், ஜட உடல், அதற்குச் சம்பந்தம் உள்ளவை மற்றும் அதனுடைய ஆசைகள் முதலான எல்லா பற்றுகளிலிருந்தும் ஒருவன் தன்னை துண்டித்துக் கொள்ள வேண்டும்.

பதம் 2.1.16 : ஒருவன் இல்லத்திலிருந்து வெளியேறி புலனடக்கத்தைப் பயில வேண்டும். அவன் புனித தீர்த்தத்தில் தினமும் நீராடி, சரிவர தூய்மைப்படுத்தப்பட்ட தனிமையான ஓரிடத்தில் அமர வேண்டும்.

பதம் 2.1.17 : மேற்கூறியவாறு அமர்ந்த பின், மூன்று பிரம்ம அட்சரங்களை (அ-உ-ம்) மனதில் நிலைக்கச் செய்யவேண்டும். அதன் பின், சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக, பிரணவத்தை மறந்து விடாது இருக்கும் வகையில் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பதம் 2.1.18 : படிப்படியாக, மனம் ஆன்மீக முன்னேற்றம் அடைய அடைய, புலன் நுகர்விலிருந்து அதைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ள வேண்டும். பிறகு புத்தியால் புலன்கள் அடக்கப்பட்டுவிடும். ஜடச் செயல்களில் அளவுக்கதிகமாக ஆழ்ந்துள்ள மனதை முழுமுதற் கடவுளின் தொண்டில் ஈடுபடுத்தி, உன்னத உணர்வில் முழுமையாக அதை நிலைக்கச் செய்ய வேண்டும்.

பதம் 2.1.19 : அதன் பிறகு, விஷ்ணுவின் அங்கங்களின் மீது ஒவ்வொன்றாக, முழு உடலைப் பற்றிய கருத்திலிருந்து விலகி விடாமல் நீர் தியானிக்க வேண்டும். இவ்வாறாக, அனைத்துப் புலன் பொருட்களிலிருந்தும் மனம் விடுபடுகிறது. வேறெதைப் பற்றியும், நினைக்கக் கூடாது. பரம புருஷ பகவானாகிய விஷ்ணுவே பரம சத்தியமாக இருப்பதால், அவரில் மட்டுமே மனதால் பூரணமாக ஒத்துப்போக முடியும்.

பதம் 2.1.20 : ஒருவனின் மனது, ஜட இயற்கையின் ரஜோ குணத்தால் தொடர்ந்த கிளர்ச்சிக்கும், இயற்கையின் தமோ குணத்தால் குழப்பத்திற்கும் காரணமாகிறது. ஆனால், விஷ்ணுவின் உறவால் அத்தகைய கருத்துக்களை ஒருவன் சீர்ப்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறாக அவற்றால் உருவாக்கப்பட்ட அசுத்தங்களைக் களைவதன் மூலம் அவன் சாந்தமடைகிறான்.

பதம் 2.1.21 : அரசே, நினைவிற் கொள்ளும் இம்முறையாலும், மிகச் சிறப்பு உடையதான பகவானின் உருவாம்சத்தில் நிலைத்திருப்பதாலும், பகவானின் நேரான பாதுகாப்பின் கீழ் மிக விரைவில் ஒருவன் அவரது பக்தித் தொண்டை அடைய முடியும்.

பதம் 2.1.22 : பாக்கியசாலியான பரீட்சித்து மகாராஜன், தொடர்ந்து விசாரணை செய்தார்: ஓ பிராமணரே, மனதை எப்படி, எங்கு பதியச் செய்ய வேண்டும் என்பதையும், எவ்விதத்தில் கருத்தைப் பதியும் படி செய்தால் ஒருவனால் மனதிலுள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள முடியும் என்பதையும் தயவு கூர்ந்து விளக்குவீராக.

பதம் 2.1.23 : சுகதேவ கோஸ்வாமி விடை கூறினார்; ஒருவன், ஆசனத்தைக் கட்டுப்படுத்தி, யோக பிராணாயாம் (மூச்சடக்கம்) சுவாசத்தைக் கட்டுப்படுத்தி, இதனால் மனதையும், புலன்களையும் முறையால் அடக்க வேண்டும். அதன் பின் புத்தியைப் பயன்படுத்தி பகவானின் (விராட்-ரூபம் என்று அழைக்கப்படும்) ஸ்தூல சக்திகளில் மனதைச் செலுத்த வேண்டும்.

பதம் 2.1.24 : பிரம்மாண்டமான இந்த பௌதிக படைப்பு முழுமுதற் கடவுளின் சொந்த உடலாகும். இதில் தான் இறந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களின் பிரபஞ்ச பலன்கள் அனுபவிக்கப்படுகின்றன.

பதம் 2.1.25 : பிரபஞ்ச ஓடு எனப்படும் உடலுக்குள், ஏழு அடுக்குகளாக உள்ள பௌதிக மூலப் பொருட்களால் மூடப்பட்டுருக்கும் முழுமுதற் கடவுளின் பிரம்மாண்டமான பிரபஞ்சத் தோற்றமே, “விராட்” எனும் கருத்துக்குரிய விஷயமாகும்.

பதம் 2.1.26 : அதை உணர்ந்தவர்கள், விஸ்வ ரூபத்தினுடைய பாதங்களின் அடிப்பாகங்களில் பாதாள லோகங்கள் அமைகின்றன என்பதையும், குதிகால்களாகவும், கால் விரல்களாகவும் ரஸாதள உலகங்களும், கணுக்கால்களாக மஹாதள உலகங்களும், அவருடைய கால்களாக தளாதள உலகங்களும் அமைகின்றன என்பதையும் ஆராய்ந்து அறிந்துள்ளனர்.

பதம் 2.1.27 : விஸ்வ ரூபத்தின் முழங்கால்களாக சுதளம் எனப்படும் கிரக அமைப்பும், இரு தொடைகளாக விதள மற்றும் அதள அமைப்புக்களும் உள்ளன. மேலும் இடுப்புகள் மஹீதளமாகவும், அவரது நாபிக்குழியாக வானவெளியும் உள்ளன.

பதம் 2.1.28 : விஸ்வ ரூபத்தின் மூல புருஷரான அவரது மார்பாக பிரகாசமுடைய கிரக அமைப்பும், அவரது கழுத்தாக மஹர் லோகங்களும் அவரது வாயாக ஜன மேலும் அவரது நெற்றியாக தபோ லோகங்களும் உள்ளன. ஆயிரம் தலைகளைக் கொண்ட அவரது தலையாக இருப்பது சத்திய லோகம் எனப்படும் மிக உயர்ந்த கிரக அமைப்பாகும்.

பதம் 2.1.29 : இந்திரன் முதலான தேவர்கள் அவரது கரங்களாகும். பத்து திசைகளாக இருப்பது அவரது செவிகளாகும். மேலும் பௌதிக ஓசையாக இருப்பது அவரது செவியுரும் புலனாகவும், அவரது இரு நாசித்துவாரங்கள் இரு அஸ்வினி குமாரர்களாகவும், பௌதிக நறுமணமாய் இருப்பது அவரது முகரும் புலன்களாகவும், அவரது வாய் கொழுந்துவிட்டு எரியும் தீச்சுடராகவும் விளங்குகின்றன.

பதம் 2.1.30 : விண்வெளிப் பிரதேசமாக அவரது கண்குழிகளும், பார்க்கும் சக்தி கொண்ட சூரியனாக கண்விழியும் உள்ளன. இரவும், பகலுமாக அவரது இரு கண் இமைகள் உள்ளன. அவரது புருவங்களின் அசைவில், பிரம்மா மற்றும் அவரைப் போன்ற உயர் அதிகாரிகள் வாழ்கின்றனர். நீரை நிர்வகிப்பவரான, வருணன் அவரது மேல்வாய் ஆவார். மேலும் அனைத்திற்கும் சாராம்சமாக அல்லது ரசமாக இருப்பது அவரது நாக்காகும்.

பதம் 2.1.31 : வேத மந்திரங்கள் பகவானின் மூளைப் பாதை என்றும், பற்களைக் கொண்ட அவரது தாடைகள், பாவிகளை தண்டிக்கும் மரண தேவனான யமன் என்றும், பாசக்கலையாக அவரது பற் கோவையும், மேலும் மிகவும் வசியப்படுத்தும் மாயையான ஜட சக்தியாக அவரது புன்னகையும் உள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். ஜட சிருஷ்டி எனப்படும் இப்பெருங்கடலானது, பகவான் நம் மீது செலுத்தும் வேகமான பார்வையாகும்.

பதம் 2.1.32 : நாணம் அவரது உதடுகளின் மேற்புறமாகவும், ஆசை அவரது முகவாய்க் கட்டையாகவும், மதம் அவரது மார்பாகவும், மற்றும் அதர்மம் அவரது முதுகுப்புறமாகவும் உள்ளன. ஜட உலகில் எல்லா ஜீவ ராசிகளையும் உற்பத்தி செய்பவரான் பிரம்ம தேவர், அவரது பாலுறுப்புகளாகவும், மித்திர-வருணர்கள் அவரது இரு விதைகளாகவும் இருக்கின்றனர். அவரது இருப்பாக சமுத்திரமும், அவரது எலும்புக் குவியல்களாக குன்றுகளும், மலைகளும் இருக்கின்றன.

பதம் 2.1.33 : அரசே, விஸ்வரூபத்தின் நாடி நரம்புகளாக நதிகளும், அவரருடலின் உரோமங்களாக மரங்களும், அவரது மூச்சாக சர்வ சக்தி படைத்த காற்றும் உள்ளன. அவரது அசைவுகளாக கடக்கும் யுகங்களும், அவரது செயல்களாக ஜட இயற்கையின் மூக்குணங்களின் பிரதி பலன்களும் உள்ளன.

பதம் 2.1.34 : குரு வம்சத்தில் சிறந்தவரே, நீரை ஏந்திச் செல்லும் மேகங்கள் தலையிலுள்ள கேசமாகும். பகல் நேரங்களின் அல்லது இரவு நேரங்களின் முடிவாக அவரது ஆடையும், ஜட சிருஷ்டியின் பரம காரணமாய் புத்தியும் இருக்கின்றன. எல்லா மாற்றங்களுக்கும் களஞ்சியமான சந்திரம் அவரது மனமாகும்.

பதம் 2.1.35 : நிபுணர்கள் வலியுறுத்தி இருப்பதைப் போல், ஜடத்தின் அடிப்படைக் கொள்கையாக (மஹத் தத்வம்), எங்கும் வியாபித்துள்ள பகவானின் உணர்வு இருக்கிறது. அவரது அகங்காரமாக ருத்ரதேவன் உள்ளார். குதிரை, கோவேறு கழுதை, ஒட்டகம் மற்றும் யானை அவரது நகங்களாகும். மேலும் வன விலங்குகளும், நான்கு கால்களுள்ள மற்றவைகளும் பகவானின் கச்சைப் பகுதியில் அமைந்துள்ளன.

பதம் 2.1.36 : பலவகையான பறவைகள் அவரது சாதுர்யமான கலை நுட்ப உணர்ச்சியை சுட்டிக் காட்டுகின்றன. மனித குலத் தந்தையான மனு, அவரது நிலையான புத்திக்கு அடையாளமாவார். அவரது இருப்பிடமாக மனித வர்க்கம் உள்ளது. சுவர்க்க லோக மனித இனங்களாகிய கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள் மற்றும் தேவதைகளைப் போன்றவர்கள் அனைவரும் அவரது இசைநயத்தை பிரதிநிதிக்கின்றனர். அசுர வீரர்கள் அவரது அற்புதமான வீரீயத்தின் பிரதிநிதிகளாவர்.

பதம் 2.1.37 : பிராமணர்களாக “விராட் புருஷரின் முகமும், க்ஷத்திரியர்களாக அவரது கரங்களும், வைசியர்களாக அவரது தொடைகளும், உள்ளன. மேலும் சூத்திரர்கள் அவரது பாதங்களின் பாதுகாப்பில் உள்ளனர். வழிபாட்டுக்குரிய தேவர்களும் கூட அவரால் வெற்றி கொள்ளப்பட்டு உள்ளனர். தங்களால் இயன்ற பொருட்களைக் கொண்டு யாகங்கள் செய்து பகவானைத் திருப்திபடுத்த வேண்டியது அனைவருடைய கடமையாகும்.

பதம் 2.1.38 : இவ்வாறாக, முழுமுதற் கடவுளின் பிரம்மாண்டமான ஸ்தூல ஜடத் தோற்றத்தை உமக்கு நான் விளக்கினேன். முக்தியை மிகவும் விரும்பும் ஒருவன் தன் மனதை பகவானின் இந்த உருவத்தின் மீது பதியச் செய்வான். ஏனெனில், ஜட உலகில், இதை விட, அதிகமானது வேறொன்றும் இல்லை.

பதம் 2.1.39 : ஒரு சாதாரண மனிதன், அவன் காணும் கனவுகளில் ஆயிரக்கணக்கான தோற்றங்களை சிருஷ்டிப்பதைப் போலவே, பல்வேறு தோற்றங்களின் தம்மை விரித்துக் கொள்பவரான பரமபுருஷரின் மீது மட்டுமே ஒருவன் தன் மனதை பதியச் செய்ய வேண்டும். ஒன்றேயான சர்வானந்த மெய்ப்பொருளின் மீது மட்டுமே தன் மனதை ஒருவன் பதிக்க வேண்டும். இல்லையெனில், ஒருவன் தவறாக வழிநடத்தப்பட்டு, தனது இழிவுக்கு தானே காரணமாகி விடுவான்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare