அத்தியாயம் – 9
பீஷ்மதேவரின் மரணம்
பதம் 1.9.1. : சூத கோஸ்வாமி கூறினார். குருட்சேத்திரப் போர்க்களத்தில் அநேக பிரஜைகளைக் கொன்றுவிட்டதை எண்ணி அச்சமடைந்த யுதிஷ்டிர மகாராஜன் படுகொலை நிகழ்ந்த இடத்திற்குச் சென்றார். அங்கு, பீஷ்மதேவர் ஓர் அம்புப் படுக்கையில் படுத்தவாறு உயிரைவிடும் நிலையில் இருந்தார்.

பதம் 1.9.2. : அச்சமயத்தில் அவரது சகோதரர்கள் அனைவரும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, முதல்தரமான குதிரைகளால் இழுக்கப்பட்ட அழகிய இரதங்களில் அவரைப் பின்தொடர்ந்த சென்றனர். (பாண்டவர்களின் புரோகிதரான) தௌம்யரைப் போன்ற ரிஷிகளும், வியாசரும், மற்றவர்களும் அவர்களுடன் இருந்தனர்.

பதம் 1.9.3 : பிரம்ம ரிஷியே, பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரும் கூட அர்ஜூனனுடன் இரதத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தார். இவ்வாறாக நண்பர்களால் (குஹ்யர்களால்) சூழப்பட்ட குபேரனைப் போல் யுதிஷ்டிர மகாராஜனும் கம்பீரமான கோலத்துடன் காணப்பட்டார்.

பதம் 1.9.4 : ஆகாயத்திலிருந்து விழுந்துவிட்ட ஒரு தேவரைப் போல் தரையில் படுத்துக்கிடந்த அவரைக் (பீஷ்மரை) கண்டு, பாண்டவ ராஜனான யுதிஷ்டிரர் அவரது இளைய சகோதரர்களுடனும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடனும் அவர் முன் தலை வணங்கினார்.

பதம் 1.9.5 : பரத மகாராஜனுடைய வம்சத்தினரில் தலைமையானவரை (பீஷ்மர்) காண்பதற்காகவே, நற்குணத்தில் நிலைபெற்றவர்களும். பிரபஞ்சத்திலுள்ள மகாத்மாக்களுமாகிய எல்லா தேவரிஷிகளும், பிரம்ம ரிஷிகளும் மற்றும் ராஜ ரிஷிகளும் அங்கு கூடியிருந்தனர்.

பதங்கள் 1.9.6 – 1.9.7 : பர்வத முனி, நாரதர், தௌம்யர், பகவானின் அவதாரமான வியாசர், பிருகதஸ்வர், பரத்வாஜர் மற்றும் பரசுராமர் அவரது சீடர்கள், வஸிஷ்டர், இந்ரப்ரமதர், திரிதர், கிருத்ஸமதர், அஸிதர், கக்ஷிவான், கௌதமர், அத்ரி, கௌசிகர் மற்றும் ஸுதர்சனர் போன்ற எல்லா முனிவர்களும் அங்கு கூடியிருந்தனர்.

பதம் 1.9.8 : மேலும் சுகதேவ கோஸ்வாமியும், தூய்மையடைந்த மற்ற ஆத்மாக்களும், கஸ்யபரும், ஆங்கிரஸரும், இவர்களைப் போன்ற மற்றும் பலரும் முறையே அவரவர் சீடர்களால் சூழப்பட்டவாறு அங்கு வந்து சேர்ந்தனர்.

பதம் 1.9.9 : எட்டு வஸுக்களிலும் மிகச்சிறந்தவரான பீஷ்மதேவர், காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப எல்லா மதக்கொள்கைகளையும் நன்கு அறிந்திருந்தார் என்பதால், அங்கு கூடியிருந்த புகழ்பெற்றவர்களும், சக்தி வாய்ந்தவர்களுமான ரிஷிகள் அனைவரையும் உபசரித்து வரவேற்றார்.

பதம் 1.9.10 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார் என்ற போதிலும், அவரது அந்தரங்க சக்தியினால் அவருடைய தெய்வீக உருவத்தை அவர் தோற்றுவிக்கிறார். இதே பகவான் பீஷ்மதேவரின் முன் அமர்ந்திருந்தார். அவரது பெருமைகளை பீஷ்மதேவர் அறிந்திருந்தார் என்பதால், பகவானை அவர் தகுந்தபடி வழிபட்டார்.

பதம் 1.9.11 : பாண்டு மகாராஜனின் மகன்கள், உயிரைவிடும் நிலையிலுள்ள அவர்களது பாட்டனாரின் மீதுள்ள பாசத்தினால் பீடிக்கப்பட்டு அவருக்கருகில் மௌனமாக அமர்ந்திருந்தனர். இதைக் கண்ட பீஷ்மதேவர் உணர்ச்சி ததும்ப அவர்களைப் பாராட்டினார். அன்பாலும் பாசத்தாலும் பூரிப்படைந்த அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்பியது.

பதம் 1.9.12 : பீஷ்மதேவர் கூறினார்: ஓ, எவ்வளவு பயங்கரமான துன்பம் எவ்வளவு பயங்கரமான அநீதி. தர்மமே சொரூபமானவரின் மகன்களாக இருந்ததால், நல்லாத்மாக்களான நீங்கள் இவ்வளவு துன்பங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. அப்பெருந்துன்பங்களுக்கிடையில் நீங்கள் உயிரோடிருந்தது சாத்தியமாகக் கூடியதல்ல இருப்பினும் பிராமணர்களாலும், பகவானாலும், தர்மத்தினாலும் பாதுகாக்கப்பட்டீர்கள்.

பதம் 1.9.13 : எனது மருமகளான குந்தியைப் பொறுத்தவரை, பெரும் தளபதியான பாண்டுவின் மரணத்திற்குப் பின், அவள் பல குழந்தைகளைக் கொண்ட ஒரு விதவையானாள். இதனால் அவள் மிகவும் துன்பப்பட்டாள். நீங்கள் பருவமடைந்தபொழுது, உங்களுடைய செயல்களாலும் அவளுக்கு பெருந்துன்பம் விளைந்தது.

பதம் 1.9.14 : இவையனைத்தும் தவிர்க்க முடியாத காலத்தினால் விளைந்தவையே என்பது என் அபிப்பிராயமாகும். மேகங்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படுவதைப் போலவே, எல்லா கிரகங்களிலும் உள்ள அனைவரும் காலத்தினால் ஆளப்படுகின்றனர்.

பதம் 1.9.15 : தவிர்க்க முடியாத காலத்தின் ஆதிக்கம் எவ்வளவு அற்புதமாக உள்ளது. அது மாற்றப்பட முடியாததாகும். இல்லையெனில், தர்மதேவரின் மகனான யுதிஷ்டிர மகாராஜன்; கதாயுத வீரரான பீமன்;சக்தி வாய்ந்த காண்டீபத்தை கொண்ட, சிறந்த வில்லாளியான அர்ஜூனன்; மேலும் அனைத்திற்கும் மேலாக, பாண்டவர்களின் நலத்தில் நேரடியாக அக்கறை கொண்டுள்ள பகவான் ஆகியோரின் முன் எப்படி கஷ்டங்கள் ஏற்படக்கூடும்?

பதம் 1.9.16 : ராஜனே பகவானின் (ஸ்ரீ கிருஷ்ணர்) திட்டத்தை ஒருவராலும் அறியமுடியாது. பெரும் தத்துவவாதிகள் முழுமையாக விசாரணைகளைச் செய்தபோதிலும், அவர்களும் குழப்பமடைகின்றனர்.

பதம் 1.9.17 : ஆகவே, பரத வம்சத்தில் சிறந்தவனே (யுதிஷ்டிரர்), இவையனைத்தும் பகவானின் திட்டப்படியே நடத்துள்ளன என்று நான் நினைக்கிறேன். நினைத்தற்கரிய பகவானின் திட்டத்தை எற்று அதை நீ பின்பற்ற வேண்டும். அரசே, இப்பொழுது நிர்வாகத் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீ, அநாதைகளாக கைவிடப்பட்ட பிரஜைகளை கவனித்துக் கொள்ளவேண்டும்.

பதம் 1.9.18 : இந்த ஸ்ரீ கிருஷ்ணர், கற்பனைக்கு எட்டாத மூல முழு முதற்கடவுளைத் தவிர வேறொருவரும் இல்லை. அவர் பரம அனுபவிப்பாளரான முதல் நாராயணனாவார். ஆனால் அவர் விருஷ்ணி மகாராஜனின் வம்சத்தில் நம்மில் ஒருவரைப் போலவே நடமாடிக் கொண்டு இருக்கிறார். மேலும் அவரது சுய சக்தியினால் நம்மை அவர் தடுமாறச் செய்து கொண்டும் இருக்கிறார்.

பதம் 1.9.19 : ராஜனே, சிவபெருமான், தேவரிஷியான நாரதர் மற்றும் பகவானின் அவதாரமான கபிலர் ஆகியோர் பகவானுடன் கொண்ட நேரடியான தொடர்பின் வாயிலாக, மிகவும் இரகசியமான அவரது பெருமைகளைப் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.

பதம் 1.9.20 : ராஜனே, அறியாமையால் உனது மாமனென்றும், மிகப்பிரியமான நண்பரென்றும், உன் நலம் விரும்புபவர் என்றும், ஆலோசகரென்றும், தூதரென்றும் மற்றும் ஆதரவாளர் என்றும் நீ நினைத்திருந்த அந்நபர் அதே பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரேயாவார்.

பதம் 1.9.21 : பரம புருஷ பகவான் என்பதால் அவர் அனைவருடைய இதயத்திலும் இருக்கிறார். அனைவரிடமும் சம அன்பு கொண்டவரான அவர் வேற்றுமை எனும் பொய் அகங்காரத்திலிருந்து விடுபட்டவராவார். எனவே சமநிலை கொண்டவரான அவரது செயல்களும் பௌதிக களங்கத்திலிருந்து விடுபட்டவையாகும்.

பதம் 1.9.22 : அவர் அனைவரிடமும் சம அன்பு கொண்டவர் என்றபோதிலும் நான் அவரது, உறுதியான தொண்டன் என்பதால், வாழ்வை நான் முடித்தும் கொள்ளும் வேளையில், அவர் அன்புடன் என் முன் வந்துள்ளார்.

பதம் 1.9.23 : பக்தி நிறைந்த கவனத்தினாலும், தியானத்தாலும் மற்றும் புனித நாம ஜெபத்தினாலும் பக்தரின் மனதில் தோன்றும் பரம புருஷ பகவான், பக்தன் ஜடவுடலைக் கைவிடும் வேளையில் அவனை கர்ம பந்தங்களிலிருந்து விடுவிக்கிறார்.

பதம் 1.9.24 : உதயசூரியனைப் போல் சிவந்த கண்களுடனும், அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள தாமரை முகத்துடனும் புன்னகை பூத்தவாறு நின்றிருக்கும் நான்கு கரங்களையுடைய என் பெருமான், இந்த ஜடவுடலை நான் விடும்வரை தயவுகூர்ந்து இங்கேயே இருக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.

பதம் 1.9.25 : சூத கோஸ்வாமி கூறினார்: மனதை உருக்கும் குரலில் பீஷ்மதேவர் பேசியதைக் கேட்ட யுதிஷ்டிர மகாராஜன், எல்லா சிறந்த ரிஷிகளின் முன்னிலையிலும், பல்வேறு மதக் கடமைகளின் முக்கிய கொள்கைகளைப் பற்றியெல்லாம் அவரிடம் வினவினார்.

பதம் 1.9.26 : யுதிஷ்டிர மகாராஜனின் கேள்விக்கு பீஷ்மதேவர் முதலில், தனி மனிதனின் தகுதிகளுக்கேற்ப, சமூக மற்றும் ஆன்மீக பிரிவுகளின் தரங்களை விளக்கினார். பிறகு அவர் துறவினால் பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவதையும், பற்றினால் பௌதிக பக்கத்தில் சிக்கிக் கொள்வதையும் பற்றி தெளிவாக விளக்கினார்.

பதம் 1.9.27 : பிறகு அவர் தான தருமங்கள், அரசர்களின் நீதி வழுவாத செயல்கள் மற்றும் மோட்சத்தை அளிக்கும் செயல்கள் ஆகியவற்றை தனித்தனியாக விளக்கினார். பிறகு பெண்கள் மற்றும் பக்தர்களின் கடமைகளை சுருக்கமாகவும், விரிவாகவும் விளக்கினார்.

பதம் 1.9.28 : பிறகு, உண்மையை நன்கு அறிந்திருந்த அவர், இதிகாசதிலிருந்து உதாரணங்களை எடுத்துக் கூறி, வெவ்வேறு சமூக மற்றும் ஆன்மீக பிரிவுகளின் கடமைகளை விளக்கினார்.

பதம் 1.9.29 : பீஷ்மதேவர் தனி நபரின் கடமைகளைப் பற்றி விவரிக்கும்பொழுது சூரியன் வடதிசையின் அடிவானத்தில் சஞ்சரித்தது. இது, தங்கள் விருப்பப்படி உயிரைவிடும் யோகிகளால் விரும்பப்படும் நேரமாகும்.

பதம் 1.9.30 : அதன் பிறகு, ஆயிரக்கணக்கான அர்த்தங்களைக் கொண்ட வெவ்வேறு விஷயங்களைப் பற்றி பேசியவரும், ஆயிரக்கணக்கான யுத்தங்களைக் கண்டவரும், ஆயிரக்கணக்கான மனிதர்களைக் காப்பாற்றியவருமான அந்த மனிதர் பேச்சை நிறுத்தினார். மேலும் எல்லா பந்தத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டிருந்ததால், மற்ற அனைத்திலிருந்தும் மனதை உள்ளுக்கிழுத்துக் கொண்ட அவர், நான்கு கரங்களுடனும், மின்னும் மஞ்சள் நிற ஆடைகளுடனும் தனக்கெதிரே நின்றிருந்த ஆதி புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் மீது, அகலத் திறந்த தமது கண்களைப் பதித்தார்.

பதம் 1.9.31 : தூய தியான நிலையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கிக் கொண்டிருந்த அவர், எல்லா பௌதிக அபசகுனங்களில் இருந்தும், அம்புக் காயங்களினால் விளைந்த எல்லா உடல் வேதனையிலிருந்தும் உடனே விடுதலை அடைந்தார். இவ்வாறாக அவரது புலன்களின் புறச்செயல்கள் அனைத்தும் உடனே நின்றுவிட்டன. மேலும் அவரது ஜடவுடலைவிடும் பொழுது, எல்லா ஜீவராசிகளையும் ஆள்பவரிடம் அவர் திவ்யமான பிரார்த்தனைகளைச் செய்தார்.

பதம் 1.9.32 : பீஷ்மதேவர் கூறினார்; இதுவரை வெவ்வேறு விஷயங்களிலும், கடமைகளிலும் ஈடுபட்டிருந்த எனது சிந்தனை, உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவற்றை இப்பொழுது நான் சர்வசக்தி படைத்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரில் ஈடுபடுத்துவேனாக, அவர் எப்பொழுதும் சுய திருப்தியுடையவராவார். ஆனால் அவரிடமிருந்து தான் ஜடவுலக படைக்கப்படுகிறது என்றாலும், அவர் பக்தர்களில் தலைவராக இருப்பதால், ஐடவுவகில் அவதரித்து தெய்வீக இன்பத்தை அவர் அனுபவிக்கிறார்.

பதம் 1.9.33 : ஸ்ரீ க்ருஷ்ணர், அர்ஜுனனின் நெருங்கிய நண்பராவார். அவர் தமால மரத்தின் நீல நிறத்தையொத்த திவ்யமான உடலுடன் இவ்வுலகில் தோன்றியுள்ளார். மூன்று கிரக அமைப்புக்களில் (மேல், மத்திய, கீழ்) உள்ள அனைவரையும் அவரது உடல் கவர்ந்திழுக்கிறது. பளபளக்கும் அவரது மஞ்சள் நிற ஆடையும், சந்தனக் குழம்பினால் வரையப்பட்ட சித்திரங்களைக் கொண்ட, அவரது தாமரை முகமும் என்னைக் கவர்ந்திழுக்கும் பொருட்களாக அமைய வேண்டும். மேலும் கர்ம பலன்களில். நான் பற்றில்லாமல் இருப்பேனாக.

பதம் 1.9.34 : (சிநேகத்தினால் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஏவல் புரிந்த இடமான) போர்க்களத்தில், குதிரைகளின் குளம்புகளால் எழுப்பப்பட்ட தூசுகளினால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அலைபாயும் கேசம் சாம்பல் நிறமாக மாறியது. மேலும் அவரது பணியினால் விளைந்த வியர்வை முத்துக்கள் அவரது முகத்தை நனைத்தன. எனது கூரிய அம்புகள் தைத்த காயங்களால் அதிகரிக்கப்பட்ட இவ்வெல்லா அலங்காரங்களையும் அவர் அனுபவித்தார். என் மனம் ஸ்ரீ கிருஷ்ணரிடமே ஆழ்ந்து விடட்டும்.

பதம் 1.9.35 : ` பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது நண்பனின் உத்தரவை ஏற்று, அர்ஜுனனுடைய சேனைக்கும்,துரியோதனனின் சேனைக்கும் மத்தியில் தேரை ஓட்டினார். அங்கிருந்த சமயத்தில், தமது கருணை மிகுந்த பார்வையால் எதிரிலுள்ள படைப்பிரிவினரின் ஆயுளைக் குறைத்து விட்டார். எதிரியின் மீது பார்வையைச் செலுத்தியே இதை அவர் சாதித்துவிட்டார். அந்த கிருஷ்ணரின் மீது என் மனம் நிலைக்கட்டும்.

பதம் 1.9.36 : போர்க்களத்தில் தனக்கு முன் இருந்த வீரர்களையும், சேனாதிபதிகளையும் பார்வையிட்ட அர்ஜுனன், அறியாமையினால் கலக்கமடைந்ததாக காணப்பட்ட பொழுது, பகவான் அவருக்கு ஆன்மீக அறிவைப் புகட்டி அவரது அறியாமையைக் களைந்தார். அவரது தாமரைப் பாதங்கள் எப்பொழுதும் என்னைக் கவர்ந்திழுக்கும் பொருளாக அமையட்டும்.

பதம் 1.9.37 : அவரது சொந்த வாக்குறுதியை மீறி என் ஆசையை நிறைவேற்றும் வகையில் தேரிலிருந்து கீழே குதித்த அவர், அதன் சக்கரத்தை கையில் எடுத்துக்கொண்டு, சிங்கம் யானையைக் கொன்றுவிட செய்வதை போல், என்னை நோக்கி விரைவாக ஓடிவந்தார். வழியில் அவ மேலாடையும் கூட சரிந்து கீழே விழுந்தது.

பதம் 1.9.38 : முக்தி அளிப்பவரான, அந்த பரம் புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக எனது கூரிய அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல், போர்க்களத்தில் என்னை அவர் திடீரென்று தாக்க முற்பட்டார். அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது. மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது.

பதம் 1.9.39 : இறக்கும் சமயத்தில் எனது இறுதி கவர்ச்சி பரம புருஷராகிய ஸ்ரீகிருஷ்ணர் மீது நிலைபெறட்டும். வலது கரத்தில் ஒரு சாட்டையையும். இடது கரத்தில் கடிவாளத்தையும் பிடித்திருந்தவரும், எல்லா வகையிலும் அர்ஜுனனின் இரதத்திற்குப் பாதுகாப்பளிப்பதில் மிகவும் கவனமாக இருந்தவருமான, அர்ஜுனனுடைய சாரதியின் மீது என் மனதை நான் ஒருமுனைப்படுத்துகிறேன். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அவரைக் கண்டவர்கள், மரணத்திற்குப் பின் அவர்களது சுய உருவங்களைப் பெற்றனர்.

பதம் 1.9.40 : அன்பான புன்னகையாலும், அசைவுகளாலும் விருந்தாவனத்தின் இளநங்கைகளைக் (கோபியர்கள்) கவர்ந்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் என் மனம் நிலை பெறட்டும். (ராச நடனத்திலிருந்து பகவான் மறைந்த பிறகு) இளநங்கைகள் பகவானின் அங்க அசைவுகளை அப்படியே நடித்துக் காட்டினர்.

பதம் 1.9.41 : யுதிஷ்டிர மகாராஜனால் இயற்றப்பட்ட ராஜஸூய யாகத்தின் போது, அரச குடும்பத்தினர் மற்றும் பண்டிதர்கள் ஆகிய மிகச்சிறந்த உலகப் பிரமுகர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். அச்சிறந்த கூட்டத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவராலும் இணையற்ற பரம புருஷராக வழிபடப்பட்டார். இச்சம்பவம் நான் இருக்கும்பொழுது நடந்ததாகும். மேலும் பகவானிடம் என் மனதை பதிப்பதற்காகவே இச்சம்பவத்தை நான் நினைவு கூர்ந்தேன்.

பதம் 1.9.42 : பகவான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார், மனக் கற்பனையாளர்களின் இதயத்திலும் இருக்கிறார் என்பதற்கு எதிரான எண்யத்திலிருந்து இப்பொழுது நான் விடுபட்டுவிட்டேன் என்பதால் இப்பொழுது என் முன் நிற்கும் அந்த ஒரே பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரை முழு மன ஒருமையுடன் என்னால் தியானிக்க முடிகிறது.

பதம் 1.9.43 : சூத கோஸ்வாமி கூறினார். இவ்வாறாக பீஷ்மதேவர் அவரது மனம், பேச்சு, பார்வை மற்றும் செயல்கள் ஆகியவற்றுடன் பரமாத்மாவாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு மெளனமானார். அவரது மூச்சும் நின்றது.

பதம் 1.9.44 : பீஷ்மதேவர் பரம புருஷரின் வரம்பற்ற நித்தியத் தன்மைக்குள் ஐக்கியமாகி விட்டார் என்பதை அறிந்த அங்கு கூடியிருந்த அனைவரும், பகல் நேரத்தின் முடிவில் பறவைகள் நிசப்தமாவதைப் போல் மௌனமாயினர்.

பதம் 1.9.45 : அதன்பிறகு மனிதர்களும் தேவர்களும் மரியாதைக்காக பேரிகைகளை கொட்டினர். நேர்மையுள்ள அரச மரியாதைக்காக வம்சத்தினர் மரியாதைக்கும் வணக்கத்திற்கும் சின்னமாக இராணுவ அணிவகுப்புக்களை ஆரம்பித்தனர். வானத்திலிருந்து பூமாரி பொழிந்தது.

பதம் 1.9.46 : ஓ பிருகு வம்சத்தவரே (சௌனகர்) பீஷ்மதேவரின் உடலுக்கு ஈமச் சடங்குகளைச் செய்தபின், யுதிஷ்டிர மகாராஜன் நொடி நேர துக்கத்திற்கு ஆளானார்.

பதம் 1.9.47 : பிறகு மாமுனிவர்கள் அனைவரும் அங்கிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை திவ்ய வேத மந்திரங்களால் போற்றிப் புகழ்ந்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் பசுவான் ஸ்ரீ கிருஷ்ணரை தங்களது இதயத்தில் தாங்கியவாறு அவரவர் .ஆஷ்ரமங்களுக்குத் திரும்பினர்.

பதம் 1.9.48 : அதன் பிறகு, யுதிஷ்டிர மகாராஜன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் தொடரப்பட்டவராய், தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்குச் சென்றார். அங்கு அவரது பெரியப்பாவுக்கும். தபஸ்வினியாக இருந்த பெரியம்மா காந்தாரிக்கும் அவர் ஆறுதல் கூறினார்.

பதம் 1.9.49 : இதன்பிறகு ராஜரிஷியான யுதிஷ்டிர மகாராஜன், அவரது பெரியப்பா திருதராஷ்டிரர் அனுமதியுடன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட சட்டங்களுக்கும், அரச நீதிக்கும் ஏற்ப, உறுதியாக அரசாட்சியை நடத்தி வந்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare