அத்தியாயம் – 8
குந்தி மகாராணியின் பிரார்த்தனைகள்
பதம் 1.8.1 : சூத கோஸ்வாமி கூறினார்: அதன் பிறகு, நீரைப் பெற விரும்பிய மரணமடைந்த உறவினர்களுக்கு நீரை தர்ப்பணம் செய்யும் விருப்பத்துடன், பெண்கள் முன்னால் நடந்து செல்ல, பாண்டவர்கள் திரௌபதியுடன் கங்கையை நோக்கிச் சென்றனர்.

பதம் 1.8.2 : அவர்களை நினைத்து விசனப்பட்டு, போதுமான அளவு கங்கை நீரை அவர்களுக்கு அர்ப்பணம் செய்தபின், கங்கையில் அவர்கள் நீராடினர். அந்த கங்கை நீர் பகவானுடைய மலர்ப்பாதங்களின் தூசுகளுடன் கலந்து புனிதம் அடைந்திருந்தது.

பதம் 1.8.3 : அந்த இடத்தில், குரு வம்சத்தின் அரசரான யுதிஷ்டிர மகாராஜன் தமது இளைய சகோதரர்களுடனும், திருதராஷ்டிரர், காந்தாரி, குந்தி மற்றும் திரௌபதி ஆகியோருடனும் துக்கத்தில் ஆழ்ந்தவராய் அமர்ந்திருந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் கூட அங்கு இருந்தார்.

பதம் 1.8.4 : சர்வ சக்தி படைத்தவரின் கடுமையான சட்டங்களும், அவற்றின் பிரதிபலன்களும் எப்படி ஜீவராசிகளிடம் செயற்படுகின்றன என்பதை எடுத்துக்கூறி, அதிர்ச்சியும், பாதிப்பும் அடைந்திருந்தவர்களை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், முனிவர்களும் சமாதானப்படுத்த ஆரம்பித்தனர்.

பதம் 1.8.5 : எதிரியற்றவரான யுதிஷ்டிரரின் இராஜ்யத்தை வஞ்சகர்களான துரியோதனனும், அவனது குழுவினரும் தந்திரமாக அபகரித்துக் கொண்டனர். பகவானின் கருணையால், இழந்தது திரும்பப் பெறப்பட்டது. மேலும் துரியோதனனுடன் இணைந்து கொண்ட யோக்கியமற்ற அரசர்கள் பகவானால் கொல்லப்பட்டனர். ராணி திரௌபதியின் கூந்தலை முரட்டுத்தனமாக கையாண்டதற்காக மற்றவர்களும்கூட ஆயுள் குறைக்கப்பட்டு மரணமடைந்தனர்.

பதம் 1.8.6 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நன்கு இயற்றப்பட்ட மூன்று அஸ்வமேத யாகங்களை நடத்தும்படி யுதிஷ்டிர மகாராஜனைத் தூண்டினார். இவ்வாறாக, இத்தகைய நூறு யாகங்களைச் செய்ததால் எல்லா திசைகளிலும் போற்றப்படும் இந்திரனின் புகழைப் போல் யுதிஷ்டிர மகாராஜனின் நேர்மையான புகழும் எல்லாத் திசைகளிலும் போற்றப்படுவதற்கு பகவான் காரணமாக இருந்தார்.

பதம் 1.8.7 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறகு புறப்படுவதற்குத் தயாரானார். ஸ்ரீல வியாசதேவரை தலைமையாகக் கொண்ட பிராமணர்களால் வழிபடப்பட்ட பின், பாண்டு புத்திரர்களை அவர் அழைத்தார். பகவானும் அவர்களுடன் அன்புப் பரிமாற்றம் செய்து கொண்டார்.

பதம் 1.8.8 : துவாரகையை நோக்கிப் புறப்பட அவர் இரதத்தில் அமர்ந்த உடனேயே, உத்தரா பயத்துடன் தன்னை நோக்கி அவசரமாக வருவதை அவர் கண்டார்.

பதம் 1.8.9 : உத்தரா கூறினாள்: தேவ தேவனே, அகில லோக நாயகனே, தாங்கள் யோகிகளிலெல்லாம் மிகச்சிறந்தவராவீர். இருமையுடைய இவ்வுலகில், மரணத்தின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றக்கூடியவர் வேறொருவரும் இல்லை என்பதால், தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்.

பதம் 1.8.10 : எம்பெருமானே, தாங்கள் சர்வசக்தி படைத்தவராவீர். இரும்பாலான, தீப்போன்ற அம்பு ஒன்று என்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது. பெருமானே, தாங்கள் விரும்பினால் அது என்னை எரித்துவிடட்டும். ஆனால் அது என் கருவை எரித்து, அதைச் சிதைத்துவிட அனுமதிக்க வேண்டாம். பகவானே, தயவுசெய்து எனக்கு இவ்வுதவியைச் செய்யுங்கள்.

பதம் 1.8.11 : சூத கோஸ்வாமி கூறினார்: அவளது வார்த்தைகளைப் பொறுமையாகக் கேட்டபின், பாண்டவ வம்சத்தின் கடைசி குழந்தையையும் கொன்று விடுவதற்காக, துரோணாச்சாரியரின் மகனான அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்திருக்கிறான் என்பதை, தமது பக்தர்களிடம் எப்பொழுதும் மிகவும் பிரியம் கொண்டவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உடனடியாக புரிந்துகொள்ள முடிந்தது.

பதம் 1.8.12 : மிகச்சிறந்த முனிவர்களுள் முதன்மையானவரே (சௌனகர்), மிகப்பிரகாசமான பிரம்மாஸ்திரம் தங்களை நோக்கி வருவதைக் கண்ட பாண்டவர்கள், தங்களுடைய ஐந்து ஆயுதங்களைக் கையிலெடுத்தனர்.

பதம் 1.8.13 : சர்வ வல்லமையுள்ள பரமபுருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணர், பூரண சரணாகதி அடைந்த ஆத்மாக்களாகிய அவரது தூய பக்தர்களுக்கு பேராபத்து சம்பவிக்கப்போவதைக் கண்டு, அவர்களைக் காப்பாற்றுவதற்காக உடனே தமது சுதர்சன சக்கரத்தைக் கையிலெடுத்தார்.

பதம் 1.8.14 : பரம யோக சக்திகளுக்கும் இறைவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கிறார். அவ்வாறாக, குரு வம்சத்தின் சந்ததியைக் காப்பாற்றுவதற்காக, தமது சுய சக்தியினால் அவர் உத்தரையின் கர்ப்பத்தை மூடிவிட்டார்.

பதம் 1.8.15 : சௌனகரே, அஸ்வத்தாமனால் விடப்பட்ட இணையற்ற பிரம்மாஸ்திரத்தை தடுக்கவோ, வெல்லவோ அல்லது முறிக்கவோ முடியாது என்றபோதிலும், விஷ்ணுவின் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்) பலத்தினால் எதிர்க்கப்பட்டபொழுது அது தடுக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டது.

பதம் 1.8.16 : பிராமணர்களே, அதிஅற்புதமானவரும், குறையற்றவருமான பரமபுருஷ பகவானின் செயல்களில், இச்செயல் மிகவும் அற்புதமானதென்று நினைக்க வேண்டாம். பகவான் பிறப்பற்றவர் என்றபோதிலும் தமது சொந்த தெய்வீக சக்தியினால் எல்லா பௌதிகப் பொருட்களையும் காத்து, அழிக்கிறார்.

பதம் 1.8.17 : இவ்வாறாக பிரம்மாஸ்திரத்தின் வெப்பக் கதிர்களிலிருந்து காப்பாற்றப்பட்டதும், பகவானின் விசுவாசமுள்ள பக்தரான குந்தியும், அவளது ஐந்து மகன்களும் மற்றும் திரௌபதியும், வீடு திரும்பத் தயாரயிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து பின்வருமாறு கூறினர்.

பதம் 1.8.18 : ஸ்ரீமதி குந்தி கூறினார்: கிருஷ்ணா, தாங்கள் ஆதி புருஷரும் ஜட இயற்கைக் குணங்களினால் பாதிக்கப்படாதவருமாவீர். எனவே தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். அனைத்திற்கும் உள்ளேயும், வெளியேயும் தாங்கள் இருப்பினும், யாருக்கும் புலப்படாதவராகவே இருக்கிறீர்கள்.

பதம் 1.8.19 : நீங்கள் குறையுடைய புலன் உணர்வின் எல்லைக்கு அப்பாற்பட்டவராவீர். நீங்கள் மாயச் சக்தியின் திரையால் மூடப்பட்டுள்ள, குறையற்றவராகவே என்றும் இருக்கிறீர்கள். நடிகரைப் போல் உடை அணிந்திருப்பவரை அடையாளம் காண முடியாததைப் போலவே, முட்டாள்களின் கண்களுக்கு நீங்கள் புலப்படாதவராகவே இருக்கிறீர்கள்.

பதம் 1.8.20 : ஜடத்தையும், ஆன்மீகத்தையும் பகுத்தறிந்ததால் தூய்மை பெற்று முன்னேறியுள்ள ஆன்மீகிகள் மற்றும் மனக் கற்பனையாளர்கள் ஆகியோரின் இதயங்களில், பக்தித் தொண்டைப் பற்றிய தெய்வீக விஞ்ஞானத்தை விருத்தி செய்வதற்காக தாங்களே வந்து அவதரிக்கிறீர்கள். அப்படியிருக்கும்பொழுது, பெண்களான எங்களால் எப்படி உங்களைப் பூரணமாக அறியமுடியும்?

பதம் 1.8.21 : எனவே, வசுதேவரின் புதல்வரும், தேவகியின் இன்பமும், நந்தருக்கும், பிருந்தாவனத்தின் மற்ற இடையர்களுக்கும் செல்வனும், மேலும் பசுக்களுக்கும், புலன்களுக்கும் உற்சாகம் அளிப்பவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எனது மரியாதையான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 1.8.22 : எம்பெருமானே, தாமரையைப் போன்ற நாபியையும், எப்பொழுதும் தாமரைப் பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பவரும், தாமரையைப் போல் குளிர்ந்த பார்வையை உடையவரும், தாமரைகள் பொறிக்கப்பட்ட பாதங்களை உடையவருமான தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

பதம் 1.8.23 : இறைவற்கிறைவனும், புலன்களுக்கு அதிபதியுமான ஹ்ரிஷிகேசனே, பொறாமை கொண்ட கம்ச மன்னனால் சிறைப்படுத்தப்பட்டு, துன்பத்திற்கு ஆளாகியிருந்த உங்களுடைய தாயான தேவகியையும், என்னையும், என் மகன்களையும் கூட தொடர்ச்சியான பல அபாயங்களில் இருந்து தாங்கள் விடுவித்தீர்கள்.

பதம் 1.8.24 : எனதருமை கிருஷ்ணா, பகவானாகிய தாங்கள் விஷப் பலகாரத்திலிருந்தும், பெருந் தீயிலிருந்தும், நரபட்சணிகளிடமிருந்தும், துஷ்டர்களின் சபையிலிருந்தும், எங்களுடைய வன வாசத்தின்போது ஏற்பட்ட துன்பங்களில் இருந்தும் மற்றும் பெருந்தளபதிகள் போர் செய்த யுத்தக்களத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றினீர்கள். இப்பொழுது அஸ்வத்தாமனின் ஆயுதத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றி இருக்கிறீர்கள்.

பதம் 1.8.25 : அந்த விபத்துக்கள் அனைத்தும் திரும்பத் திரும்ப நிகழவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதனால் உங்களையும் திரும்பத் திரும்ப எங்களால் காண முடியும். ஏனெனில், உங்களைக் காண்பதென்றால் பிறப்பு, இறப்பெனும் தொடர்ச்சியை இனி நாங்கள் காணமாட்டோம் என்பதாகும்.

பதம் 1.8.26 : எம்பெருமானே, பகவானாகிய தங்களை சுலபமாக அணுகிவிட முடியும். ஆனால் பௌதிக வாழ்வில் முற்றிலும் விரக்தி அடைந்தவர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். கௌரவமான குடும்பம், பெரும் செல்வம், உயர்ந்த கல்வி மற்றும் உடலழகு ஆகியவற்றில் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயலும் ஒருவரால் உண்மையான உணர்வுடன் உங்களை அணுக முடியாது.

பதம் 1.8.27 : பௌதிக ஏழ்மையில் உள்ளவர்களின் செல்வமாகிய தங்களுக்கு எனது வணக்கங்கள். ஜட இயற்கைக் குணங்களின் செயல் விளைவுகளுடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நீங்கள் சுயதிருப்தியுடையவர் என்பதால், சாந்த சொரூபியாகவும், அத்வைதிகளின் தலைவராகவும் இருக்கிறீர்கள்.

பதம் 1.8.28 : எம்பெருமானே, தங்களை நான் நித்திய காலமாகவும், பரம ஆளுநராகவும். துவக்கமோ முடிவோ, இல்லாதவராகவும், எங்கும் பரவியிருப்பவராகவும் கருதுகிறேன். உங்களுடைய கருணையை விநியோகிப்பதில் நீங்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்கிறீர்கள். ஜீவராசிகளுக்கு இடையிலுள்ள சண்டை சச்சரவுகளுக்கு சமூக தொடர்புகளே காரணம்.

பதம் 1.8.29 : பகவானே, மனித செயலைப் போல் காணப்படும் உங்களுடைய திவ்யமான லீலைகளை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. எனவே அவை வழிதவறச் செய்கின்றன. உங்களால் ஆதரிக்கப்படும் பொருளோ அல்லது வெறுக்கப்படும் பொருளோ எதுவுமில்லை என்றாலும், வெறும் கற்பனையால், நீங்கள் பாரபட்சம் கொண்டவரென மக்கள் நினைக்கின்றனர்.

பதம் 1.8.30 : பிரபஞ்சத்தின் ஆத்மாவே, தாங்கள் செயலற்றவர் என்றபோதிலும் செயற்படுகிறீர்கள். தாங்கள் பிறப்பற்றவராகவும், ஜீவசக்தியாகவும் இருப்பினும், பிறப்பை ஏற்கிறீர்கள். நீங்கள் மிருகங்கள், மனிதர்கள், முனிவர்கள் மற்றும் நீரினங்கள் ஆகியோருக்கிடையில் அவதரிக்கிறீர்கள். உண்மையில் இது திகைப்பூட்டுவதாகும்.

பதம் 1.8.31 : எனதன்புள்ள கிருஷ்ணா, நீங்கள் ஓரு குற்றத்தைச் செய்துவிட்டபொழுது, உங்களை கட்டிப்போடுவதற்காக யசோதை ஒரு கயிற்றைக் கையிலெடுத்தாள். இதனால் அமைதியிழந்த உங்களுடைய கண்களிலிருந்து பெருகி வழிந்த கண்ணீர், கண்ணிமையில் பூசப்பட்டிருந்த மையை அழித்தது. மேலும் பய சொரூபியே உங்களைக் கண்டு அஞ்சியபோதிலும், நீங்கள் அதனால் அச்சத்திற்கு உள்ளானீர்கள். இக்காட்சி என்னை குழப்பமடையச் செய்கிறது.

பதம் 1.8.32 : பிறப்பற்றவர், புண்ணியர்களான அரசர்களை மேன்மைப் படுத்துவதற்காக பிறக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர். மற்றும் சிலர் உங்களுடைய பிரியமான பக்தர்களில் ஒருவரான யது மகாராஜனை சந்தோஷப்படுத்துவதற்காக அவர் பிறக்கிறார் என்று கூறுகின்றனர். மலய மலைகளில் சந்தனம் தோன்றுவதைப் போலவே, அவரது குடும்பத்தில் நீங்கள் தோன்றுகிறீர்கள்.

பதம் 1.8.33 : வசுதேவர் மற்றும் தேவகி ஆகிய இருவரும் உங்களுக்காக பிரார்த்தனை செய்ததால், அவர்களுடைய மகனாக நீங்கள் பிறந்தீர்கள் என்று மற்றவர்கள் கூறுகின்றனர். சந்தேகமின்றி தாங்கள் பிறப்பற்றவர்தான். எனினும் அவர்களுடைய நன்மைக்காவும், தேவர்களிடம் பொறாமை கொண்டுள்ளவர்களை அழிப்பதற்காகவும் நீங்கள் பிறக்கிறீர்கள்.

பதம் 1.8.34 : கடலிலுள்ள படகைப் போல் அதிக சுமை ஏற்றப்பட்ட உலகம் மிகவும் பாதிப்படைந்தது என்றும், உங்களது மகனான பிரம்மா உங்களிடம் வேண்டியதால், தொல்லைகளைக் குறைப்பதற்காக நீங்கள் தோன்றினீர்கள் என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்.

பதம் 1.8.35 : பௌதிக துன்பங்களினால் துன்புறும் பந்தப்பட்ட ஆத்மாக்கள் கேட்டல், நினைவிற் கொள்ளுதல் மற்றும் வழிபடுதல் முதலான பக்தித் தொண்டு முறைகளைப் பின்பற்றி முக்தியடைய வேண்டும் என்பதற்காக, அம்முறைகளைப் புதுப்பிப்பதற்காகவே நீங்கள் தோன்றினீர்கள் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.

பதம் 1.8.36 : கிருஷ்ணா, உங்களுடைய தெய்வீக செயல்களைப் பற்றி எப்பொழுதும் கேட்டு, பாடி அதைத் திரும்பவும் சொல்பவர்களால் அல்லது மற்றவர்கள் அவ்வாறு செய்வதில் ஆனந்தம் அடைபவர்களால் நிச்சயமாக உங்களுடைய தாமரைப் பாதங்களைக் காண முடியும். அப்பாதங்கள் மட்டுமே தொடர்ந்த பிறவிச் சக்கரத்தை நிறுத்தக் கூடியவையாகும்.

பதம் 1.8.37 : எம்பெருமானே, இதுவரை எல்லாக் கடமைகளையும் நீங்களாகவே நிறைவேற்றினீர்கள். இப்பொழுது எல்லா அரசர்களும் எங்களிடம் விரோதம் கொண்டுள்ளனர். எங்களைப் பாதுகாக்கக்கூடியவர் வேறொருவரும் இல்லாத இச்சமயத்தில், உங்களுடைய கருணையையே நாங்கள் முற்றிலும் நம்பியிருக்கிறோம் என்ற போதிலும், இன்று எங்களைப் புறக்கணித்து விட்டு நீங்கள் சென்றுவிடப் போகிறீர்களா?

பதம் 1.8.38 : ஓருடலிலிருந்து உயிர் மறைந்துவிடும் பொழுது, அக்குறிப்பிட்ட உடலின் பெயரும், புகழும் முடிந்து விடுகின்றன. அதைப் போலவே, எங்களுடனேயே நீங்கள் இருக்காவிட்டால், பாண்டவர்களுடையதும், யாதவர்களுடையதும் மற்றும் எங்களுடையதுமான எல்லாப் புகழும், செயல்களும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

பதம் 1.8.39 : ஓ கதாதர (கிருஷ்ணா), எங்களது இராஜ்ஜியம் இப்பொழுது உங்களுடைய பாத சுவடுகளின், அடையாளங்களால் பொறிக்கப்படுவதால் அது அழகாக காட்சியளிக்கிறது. ஆனால் நீங்கள் பிரிந்து சென்றபின் இந்நிலை நீடிக்காது.

பதம் 1.8.40 : மூலிகைகளும், தானியங்களும் ஏராளமாக விளைகின்றன. மரங்களில் கனிகள் நிறைந்தும், நதிகள் ஓடியவாறும், குன்றுகளில் தாதுப்பொருட்கள் நிறைந்தும், சமுத்திரங்களில் செல்வம் நிறைந்தும் காணப்படுகினை. இதனால் இவ்வெல்லா நகரங்களும், கிராமங்களும், எல்லா விதத்திலும் செழிப்புடன் விளங்குகின்றன. அவற்றின் மீதுள்ள உங்களுடைய அருட்பார்வையே இவையனைத்திற்கும் காரணமாகும்.

பதம் 1.8.41 : ஆகவே, அகில லோக நாயகனே, அகிலத்தின் ஆத்மாவே, விஸ்வரூப மூர்த்தியே, எனது உறவினர்களான பாண்டவர்களிடமும், விருஷ்ணிகளிடமும் எனக்குள்ள பாசப் பிணைப்பை தயவுசெய்து துண்டித்து விடுங்கள்.

பதம் 1.8.42 : மதுவின் இறைவனே. கங்கை தடையில்லாமல் எப்பொழுதும் கடலை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பதைப் போலவே, என்னுடைய கவனம் வேறு யாரிடமும் திசை மாறிச் சென்றுவிடாமல், எப்பொழுதும் உங்களால் கவரப்பட்டதாகவே இருக்க அருள்புரியுங்கள்.

பதம் 1.8.43 : அர்ஜுனனின் நண்பரே, கிருஷ்ணா, விருஷ்ணி வம்சத்தினரில் முதன்மையானவரே, இந்த பூமியின் மீது விளையும் தொல்லைகளுக்கு மூல காரணமாகவுள்ள அந்த அரசியல் கட்சிகளை அழிப்பவர் தாங்களே. உங்களுடைய வீரியம் ஒருபோதும் குறைவதில்லை. நீங்கள் ஆன்மீக உலகின் உரிமையாளராவீர். மேலும் பசுக்கள், பிராமணர்கள் மற்றும் பக்தர்களின் துன்பங்களைப் போக்குவதற்காகவே நீங்கள் அவதரிக்கிறீர்கள். எல்லா யோக சக்திகளையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். முழு பிரபஞ்சத்தின் குருவும் நீங்களே. நீங்கள் தான் சர்வ வல்லமையுடைய பகவானாவீர். எனது பணிவான வணக்கங்களை உங்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 1.8.44 : சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக பகவானைப் புகழ்ந்து பாடுவதற்காக மிகச் சிறந்த வார்த்தைகளால் இயற்றப்பட்ட குந்திதேவியின் பிரார்த்தனைகளைக் கேட்ட பகவான் இலேசான புன்முறுவல் செய்தார். அவரது மாயா சக்தியைப் போலவே அந்த புன்முறுவலும் வசியப்படுத்துவதாக இருந்தது.

பதம் 1.8.45 : இவ்வாறு ஸ்ரீமதி குந்திதேவியின் பிரார்த்தனைகளை ஏற்ற பகவான், அதைப் பின்தொடர்ந்து, அஸ்தினாபுர அரண்மனைக்குள் பிரவேசிப்பதன் வாயிலாக, மற்ற பெண்களுக்கும் தாம் புறப்படப் போவதைப் பற்றி அறிவித்தார். ஆனால் புறப்படத் தயாராகும் வேளையில், அவர் யுதிஷ்டிர மகாராஜனால் அன்புடன் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பதம் 1.8.46 : எல்லா சரித்திர ஆதாரங்களும் இருந்த போதிலும், வியாசரை தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்களின் உபதேசங்களினாலோ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களினாலோ கூட, பெருந்துயரில் ஆழ்ந்துவிட்ட யுதிஷ்டிர மகாராஜனை வாதித்து வழிப்படுத்த இயலவில்லை.

பதம் 1.8.47 : தருமரின் (யமராஜன்) மகனான யுதிஷ்டிர மகாராஜன், அவரது நண்பர்களின் மரணத்தினால் அதிர்ச்சியடைந்து, ஒரு சாதாரண பௌதிகவாதியைப் போலவே பாதிப்படைந்தார். முனிவர்களே, இவ்வாறாக பாசத்தினால் உணர்ச்சிவசப்பட்ட அவர் பேசத் துவங்கினார்.

பதம் 1.8.48 : யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: என் விதியே! நான் மிகப் பெரிய பாவியாவேன்! அறியாமை நிரம்பியுள்ள என் இதயத்தைப் பார்! முடிவாக பிறருக்காகவே இருக்க வேண்டிய இவ்வுடல், பற்பல படைப்பிரிவுகளைக் கொண்ட வீரர்களைக் கொன்று குவித்துள்ளது.

பதம் 1.8.49 : பல சிறுவர்கள், பிராமணர்கள், பிறர் நலம் விரும்புவோர், நண்பர்கள், பெற்றோர்கள், ஆசான்கள் மற்றும் சகோதரர்கள் ஆகியோரை நான் கொன்றேன். என்னுடைய இப்பாவங்களுக்கெல்லாம் எனக்காக காத்திருக்கும் நரகத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும் அதிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்காது.

பதம் 1.8.50 : குடிமக்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டுள்ள ஓர் அரசர் சரியான காரணத்திற்காக கொலை செய்வாரானால் அதில் பாவமில்லை. ஆனால் இவ்வுத்தரவு எனக்குப் பொருந்தக் கூடியதல்ல.

பதம் 1.8.51 : நான் பல நண்பர்களையும், பெண்களையும் கொன்றிருக்கின்றேன். இவ்வாறாக, பௌதிகமான பொதுநல சேவையினால் அதை மாற்றியமைப்பதற்குச் சாத்தியமில்லாதபடி, அளவுக்கதிகாமன விரோதத்தை நான் ஏற்படுத்திக் கொண்டேன்.

பதம் 1.8.52 : சேற்றை சேற்று நீரால் வடிகட்டுதல் சாத்தியமல்ல, அல்லது ஒரு சாராயப் பாத்திரத்தை சாராயத்தினால் தூய்மைப்படுத்துதல் சாத்தியமல்ல என்பதைப் போலவே, மனித வதையை மிருக பலியினால் நிஷ்பலப்படுத்த இயலாது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare