அத்தியாயம் – 7
துரோணரின் மகன் தண்டிக்கபடுதல்
பதம் 1.7.1
சௌனக உவாச
நிர்கதே நாரதா ஸூத பகவான் பாதராயண:
ஸ்ருதவாம்ஸ் தத்—அபிப்ரேதம் தத: கிம் அகரோத் விபு:

சௌனக-ஸ்ரீ சௌனகர்; உவாச-கூறினார்; நிர்கதே—சென்றதும்; நாரதே – நாரத முனிவர்; ஸூத—சூதரே; பகவான்—உன்னத சக்தி வாய்ந்த: பாதராயண-வேத வியாசர்; ஸ்ருதவான்-கேட்டவரான; தத்— அவரது : அபிப்ரேதம்— மனதின் ஆசை; தத-அதன் பிறகு; கிம்- என்ன; அகரோத்—அவர் செய்தார்; விபு- மிகச்சிறந்த.

சௌனக ரிஷி வினவினார்: சூதரே, மிகச்சிறந்தவரும் உன்னத சக்தி வாய்ந்தவருமான வியாசதேவர், ஸ்ரீ நாரத முனிவரிடமிருந்து அனைத்தையும் கேட்டறிந்தார். எனவே நாரதர் சென்றபிறகு வியாசதேவர் என்ன செய்தார்?

பதம் 1.7.2
சூத உவாச
ப்ரஹ்ம-நத்யாம் ஸரஸ்வத்யாம் ஆஸ்ரம: பஸ்சிமே தடே
ஸம்யாப்ராஸ இதி ப்ரோக்த ரிஷீணாம் ஸத்ர-வர்தன:

ஸூத-ஸ்ரீ சூதர் ; உவாச-கூறினார்; ப்ரஹ்ம-நத்யாம்:— வேதங்கள்,பிராமணர்கள், முனிவர்கள் மற்றும் பகவானுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள நதிக் கரையில்; ஸரஸ்வதியாம்—சரஸ்வதி: ஆஷ்ரம—தியானத்திற்கான ஆஷ்ரமம்; பஸ்சிமே—மேற்கில்; தடே – கரை: சம்யாப்ராஸ—சம்யாப்ராஸம் என்ற இடம்: இதி—இவ்வாறு; ப்ரோக்த—கூறப்பட்ட; ரிஷீணாம்-முனிவர்களின்; ஸத்ர – வர்தன:—செயல்களை உற்சாகப்படுத்துவது.

ஸ்ரீ சூதர் கூறினார்; வேதங்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள சரஸ்வதி நதியின் மேற்குக் கரையில், முனிவர்களின் உன்னதமான செயல்களை உற்சாகப்படுத்தக்கூடிய சம்யாப்ராஸம் என்னுமிடத்தில், தியான குடில் ஒன்றுள்ளது.

பதம் 1.7.3
தஸ்மீன் ஸ்வ ஆஸ்ரமே வ்யாஸோ பதரீ-ஷண்ட-மண்டிதே
ஆஸினோ ‘ப உபஸ்ப்ருஸ்ய ப்ரணி தத்யௌ மன: ஸ்வயம்

தஸ்மீன்—அதில் (ஆஷரமத்தில்);ஸ்வே—சொந்த; ஆஸ்ரமே—ஆஷ்ரமத்தில்; வ்யாஸ்-வியாச தேவர்: பதரீ—நாவல் பழம்; ஷண்ட –மரங்கள்; மண்டிதே-சூழப்பட்டு: ஆஸீன-அமர்ந்து; அப-உபஸ்ப்ருஸ்ய—நீரைத்தொட்டு; ப்ரணிதத்யௌ—ஒருமுகப்படுத்தினார்; மன-மனம்; ஸ்வயம்-சுயமாகவே.

ஸ்ரீலவியாசதேவர், அந்த இடத்தில் சிறு பழ மரங்களால் சூழப்பட்டிருந்த அவரது சொந்த அஷ்ரமத்தில், நீரைத் தொட்டு தம்மை புனிதப்படுத்திக் கொண்ட பின், தியானம் செய்வதற்காக கீழே அமர்ந்தார்.

பதம் 1.7.4
பக்தி-யோகேன மனஸி ஸம்யக் ப்ரணிஹிதே ‘மலே
அபஸ்யத் புருஷம் பூர்ணம் மாயாம் ச தத்-அபாஸ்ரயம்

பக்தி – பக்தித் தொண்டு ; யோகேன-இணைக்கும் முறையினால்; மனஸி – மனதில்; ஸம்யக் – முழுமையாக; ப்ரணிஹிதே—ஈடுபடுத்தி, அதன்மேல் பதித்து; அமலே—பௌதிக களங்கம் இல்லாமல்; அபஸ்யத்—கண்டார்; புருஷம்—பரம புருஷ பகவான்; பூர்ணம்—பூரணமான: மாயாம்-சக்தி; ச- மேலும்; தத்—அவரது; அபாஸ்ரயம்- முழுக் கட்டுபாட்டின் கீழ்.

இவ்வாறாக அவர் எவ்வித பௌதிக களங்கமும் இல்லாமல், தமது மனதை பக்தித் தொண்டில் (பக்தி யோகத்தில்) முழுமையாக ஈடுபடுத்தி நிலைபெறச் செய்தார். இதனால் அவர் பூரணமான முழுமுதற் கடவுளையும், அவரது முழு கட்டுப்பாட்டிலுள்ள அவருடைய பகிரங்க சக்தியையும் கண்டார்.

பதம் 1.7.5
யயா ஸம்மோஹிதோ ஜீவ ஆத்மானம் த்ரி-குணாத்மகம்
பரோ ‘பி மனுதே ‘நீர்தம் தத்-க்ருதம் சாபிபத்யதே

யயா—யாரால்; ஸம்மோஹித—மாயைக்குட்பட்ட; ஜீவ—ஜீவராசிகள் ; ஆத்மானம் —ஆத்மா: த்ரி—குண-ஆத்மகம்—இயற்கையின் முக்குணங்களால் பந்தப்படுத்தப்பட்ட அல்லது பௌதிகத்தின் ஒரு விளைபொருள்; பர-ஆன்மீகமாக; அபி-இருந்தும்; மனுதே-என்று நினைக்கிறான்; அனர்த்தம்—அனர்த்தங்கள்;தத்—அதனால்; க்ருதம் ச — விளைவுகளை; அபிபத்யதே —அதனால் அனுபவிக்கிறான்.

ஜீவராசி ஜட இயற்கையின் முக்குணங்களுக்கும் மேற்பட்டவன் என்றபோதிலும், இந்த பகிரங்க சக்தியின் காரணத்தால், தன்னை பெளதிகத்தின் ஒரு விளைபொருள் என்று எண்ணுகிறான். இதனால் அவன் பெளதிக விளைவுகளின் துன்பங்களுக்கு ஆளாகிறான்.

பதம் 1.7.6
அநர்தோபசமம் ஸாக்ஷாத் பக்தி-யோகம் அதோக்ஷஜே
லோகஸ்யாஜானதோ வித்வாம்ஸ் சக்ரே ஸத்வத—ஸம்ஹிதாம்

அனர்த-தேவையற்ற விஷயங்கள்; உபசமம்-குறைத்தல்; ஸாக்ஷாத்-நேரடியாக; பக்தி-யோகம் — (பகவானையும், ஜீவனையும்) இணைக்கும் முறையான பக்தித் தொண்டு; அதோக்ஷஜே —பகவானுடன்; லோகஸ்ய—பொதுமக்களின்; அஜானத—அதை அறியாதவர்கள்; வித்வான்-கற்றறிந்த பண்டிதரான; சக்ரே-தொகுத்தார்; ஸத்வத- பரம சத்தியத்தைப் பற்றியதான; ஸம்ஹிதாம்—வேத இலக்கியத்தை.

ஜீவராசிகளின் தேவையற்ற பௌதிக துன்பங்களை, பக்தி தொண்டுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் முறையால் குறைத்துவிட முடியும். ஆனால் மக்கள் இதை அறிந்திருக்கவில்லை. எனவே, கற்றுணர்ந்தவரான வியாசதேவர், பரம சத்தியத்துடன் தொடர்பு கொண்டுள்ள இந்த வேத இலக்கியத்தைத் தொகுத்தார்.

பதம் 1.7.7
யஸ்யாம் வை ஸ்ரூயமாணாயாம் க்ருஷ்ணே பரம-பூருஷே
பக்திர் உத்பத்யதே பும்ஸ: சோக-மோஹ-பயாபஹா

யஸ்யாம்-இந்த வேத இலக்கியத்தை; வை-நிச்சயமாக; ஸ்ரூயமாணாயாம்—காது கொடுத்துக் கேட்பதாலேயே; க்ருஷ்ணே—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்; பரம—உயர்ந்தவரான; பூருஷே—பரம புருஷ பகவானுக்கான; பக்தி:-பக்தியுணர்வு; உத்பத்யதே-முளைக்கிறது; பும்ஸ-ஜீவராசிகளின்; சோக-வருத்தம்; மோஹ—மாயை; பய— பயம்: அபஹா– அணைத்துவிடுவது.

இந்த வேத இலக்கியத்தைக் கேட்பதாலேயே, பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணருக்கு உன்னத அன்புத் தொண்டு செய்யும் உணர்வு உடனடியாக ஏற்பட்டு வருத்தம், மாயை மற்றும் பயம் எனும் நெருப்பை அது அணைத்துவிடுகிறது.

பதம் 1.7.8
ஸ ஸம்ஹிதாம் பாகவதீம் க்ருத்வானுக்ரம்ய சாத்ம-ஜம்
சுகம் அத்யாபயாம் ஆஸ நிவ்ருத்தி-நிரதம் முனி:

ஸ—அந்த; ஸம்ஹிதாம்—வேத இலக்கியத்தை; பாகவதீம்—பரம புருஷ பகவானுடன் தொடர்பு கொண்டுள்ள; க்ருத்வா—செய்தபின்; அனுக்ரம்ப—மீண்டும் திருத்துவதன் மூலம்; ச —மேலும்; ஆத்ம—ஜம்:-அவரது சொந்த மகனான; சுகம்—சுகதேவ கோஸ்வாமி; அத்யாபயாம்- ஆஸ:- கற்பித்தார்: நிவ்ருத்தி— தன்னுணர்வுப் பாதை; நிரதம்—ஈடுபட்டிருந்த; முனி-முனிவர்.

மாமுனிவரான வியாசதேவர், ஸ்ரீமத் பாகவதத்தைத் தொகுத்து, அதிலுள்ள பிழைகளைத் திருந்தியபின், ஏற்கனவே தன்னுணர்வுப் பாதையில் ஈடுபட்டிருந்த, அவரது சொந்த மகனான ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமிக்கு அதைக் கற்பித்தார்.

பதம் 1.7.9
சௌனக உவாச
ஸ வை நிவ்ருத்தி-நிரத; ஸர்வத்ரோபேக்ஷகோ முனி:
கஸ்ய வா ப்ருஹதீம் ஏதாம் ஆத்மாராம; ஸமப்யஸத்

சௌனக உவாச— ஸ்ரீ சௌனகர் வினவினார்; ஸ—அவர்; வை—சந்தேகமின்றி; நிவ்ருத்தி—தன்னுணர்வுப் பாதையில்; நிரத:—எப்பொழுதும் ஈடுபட்டிருந்தார்; ஸர்வத்ர—எல்லா விதத்திலும்; உபேக்ஷக-சிரத்தையற்ற; முனி—முனிவர்; கஸ்ய—என்ன காரணத்திற்காக; வா—அல்லது; ப்ருஹதீம்—பரந்ததான; ஏதாம்—இந்த; ஆத்மாராம—சுயதிருப்தி கொண்டவர்; ஸமப்ய்ஸத் –கற்பதை மேற்கொண்டார்.

ஸ்ரீ சௌனகர் சூத கோஸ்வாமியிடம் வினவினார்; ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி ஏற்கனவே தன்னுணர்வுப் பாதையில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் சுயதிருப்தி கொண்டவராக இருந்த அவர் ஏன் இத்தகைய ஒரு பரந்த நூலைக் கற்பதெனும் சிரமத்தை மேற்கொண்டார்?

பதம் 1.7.10
ஸூத உவாச
ஆத்மாராமாஸ் ச முனயோ நிர்க்ரந்தா அபி உருக்ரமே
குர்வந்தி அஹை துகீம் பக்திம் இத்தம்—பூத-குணோ ஹரி:

ஸூத உவாச— சூத கோஸ்வாமி கூறினார்; ஆத்மாராமா:—ஆத்ம திருப்தி அடைபவர்கள் (பொதுவாக, ஆன்மீக ஆத்மா); ச-தவிரவும்; முனய-முனிவர்கள்: நிர்க்ரந்தா—எல்லா பந்தத்திலிருந்தம் விடுபட்டவர்கள்; அபி—இருப்பினும்; உருக்ரமே—மிகச்சிறந்த சாகசங்களைப் புரிபவருக்கு; குர்வந்தி-செய்கின்றனர்; அஹைதுகிம்—கலப்படமில்லாத; பக்திம்—பக்தித் தொண்டு; இத்தம் பூத-அத்தகைய அற்புதமான; குண-குணங்கள்;
ஹரி—பகவானின்.

சூத கோஸ்வாமி கூறினார்: எல்லா வகையான ஆத்மாராமர்களும் (ஆன்மீக ஆத்மாவில் இன்பம் காண்பவர்கள்), முக்கியமாக தன்னுணர்வுப் பாதையில் நிலைபெற்றவர்கள், எல்லா வகையான பௌதிக பந்தத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டிருந்தபொழுதும் பரம புருஷ பகவானுக்கு கலப்படமற்ற தூய பக்தித் தொண்டைச் செய்ய விரும்புகின்றனர். அதாவது, பகவான் உன்னதமான குணங்களைப் பெற்றிருப்பதால், அவர் முக்திபெற்ற ஆத்மாக்கள் உட்பட அனைவரையும் கவர்ந்திழுக்கிறார் என்பதையே இது குறிக்கிறது.

பதம் 1.7.11
ஹரேர் குணாக்ஷிப்த-மதிர் பகவான் பாதராயணி:
அத்யகான் மஹத் ஆக்யானம் நித்யம் விஷ்ணு ஜன-ப்ரிய:

ஹரே-பரம புருஷ பகவானாகிய ஹரியின்; குண—திவ்யகுணங்கள்; ஆக்ஷிப்த—அதில் ஆழ்ந்து விட்டதால்; மதி:-மனம்: பகவான்—சக்தி வாய்ந்தவராக; பாதராயணி-வியாசதேவரின் புதல்வர்; அத்யகாத்— கல்வியை மேற்கொண்டார்; மஹத்—மிகப்பெரிய; ஆக்யானம்— வரலாறு: நித்யம்—தினந்தோறும்; விஷ்ணு-ஜன:—பகவானின் பக்தர்கள்; ப்ரிய-ப்ரியமானவர்.

இப்படியாக, ஸ்ரீல வியாசதேவரின் புதல்வரும், தெய்வீக சக்தி பெற்றவரும், பகவத் பக்தர்களுக்குப் பிரியமானவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி இச்சிறந்த வரலாற்றையும் (ஸ்ரீமத் பாகவதம்) கற்றறிந்தார்.

பதம் 1.7.12
பரீக்ஷிதோ ‘த ராஜர்ஷேர் ஜன்ம-கர்ம-விலாபனம்
ஸ்ம்ஸ்தாம் ச பாண்டு—புத்ராணாம் வக்ஷ்யே க்ருஷ்ண—கதோதயம்

பரீக்ஷித-பரீட்சித்து மகாராஜனின்; அத—இவ்வாறாக; ராஜர்ஷே:—அரசர்களுக் கிடையில் பெரும் ரிஷியாக விளங்கிய அரசரின்; ஜன்ம- பிறப்பு; கர்ம-செயல்கள்; விலாபனம்-முக்தி; ஸம்ஸ்தாம்—உலகத் துறவு; ச-மேலும்; பாண்டு-புத்ராணாம்:— பாண்டு புத்திரர்களின்; வக்ஷ்யே-நான் கூறுவேனாக; க்ருஷ்ண-கதா—உதயம்:—பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உன்னத வர்ணணைகளை எழச் செய்வது.

சௌனகரை தலைமையாகக் கொண்ட ரிஷிகளிடம் சூத கோஸ்வாமி இவ்வாறு கூறினார்! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றியும் அரசர்களுக்கிடையில் ரிஷியாக விளங்கிய பரீட்சித்து மகாராஜனின் பிறப்பு, செயல்கள் மற்றும் முக்தி பற்றியும், பாண்டு புத்திரர்கள் உலகைத் துறந்த விஷயங்கள் பற்றியுமான உன்னத வர்ணணைகளை இப்பொழுதுதான் நான் துவங்கப் போகிறேன்.

பதங்கள் 1.7.13 – 1.7.14
யதா ம்ருதே கௌரவ-ஸ்ருஜ்யானாம்
வீரேஷு அதோ வீர—கதிம் கதேஷு
வ்ருகோதரா வித்த—கதாபிமர்ச
பக்னோரு—தண்டே த்ருதராஷ்ட்ர—புத்ரே

பர்து: ப்ரியம் த்ரௌணிர் இதி ஸ்ம பஸ்யன்
க்ருஷ்ணா—ஸுதானாம் ஸ்வபதாம் சிராம்ஸி
உபாஹரத் விப்ரியம் ஏவ தஸ்ய
ஜுகுப்ஸிதம் கர்ம விகர்ஹயந்தி

யதா—எப்பொழுது; ம்ருதே—போர்க்களத்தில்; கௌரவ—த்ருதராஷ்டிரனின் குழுவினர்;ஸ்ருஜ்யானாம்—பாண்டவர்களுடைய குழுவினர்; வீரேஷு—வீரர்களின்; அதோ—இவ்வாறு; வீரகதிம்—வீரர்களின் தகுதிக்கேற்ற முடிவு; கதேஷு—அடைந்து; வ்ருகோதர—பீமன் (பாண்டவர்களில் இரண்டாமவர்); ஆவித்த—அடித்து; கதா;—கதையால்; அபிமர்ச-வருத்தத்துடன்; பக்ன—உடைந்து; உரு தண்டே—தொடை எலும்பு; த்ருதராஷ்ட்ர புத்ரே-த்ருதராஷ்டிரின் புத்திரன்; பர்து-தலைவரின்; ப்ரிய—பிரியமான; த்ரௌணி.— துரோணாச்சாரியரின் மகன்; இதி—இவ்வாறு; ஸ்ம-இருக்கும்; பஸ்யன்-கண்டு; க்ருஷ்ணா—திரௌபதி; ஸூதானம்—மகன்களின்; ஸ்வபதாம்—உறங்கும்பொழுது; சிராம்ஸி—தலைகள்: உபாஹரத்— ஒரு பரிசாக அளித்தான்; விப்ரியம்—திருப்திப்படுத்தும்; ஏவ—போன்று; தஸ்ய—அவனுடைய; குப்ஸிதம்-மிகக்கொடிய; கர்ம—செயல்; விகர்ஹயந்தி—ஆட்சேபிக்கும்.

குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் கொல்லப்பட்ட கௌரவ மற்றும் பாண்டவ வீரர்கள் அவரவர்களுக்கு தகுதியான இலக்குகளை அடைந்தனர். மேலும் திருதராஷ்டிரரின் மகன், பீமசேனரின் கதாயுதத்தால் அடிபட்டு, தொடை எலும்பு முறிந்து, தரையில் விழுந்து புலம்பிக் கொண்டு இருக்கும் வேளையில், துரோணாச்சாரியரின் மகன் (அஸ்வத்தாமன்), உறங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் ஐந்து மகன்களை சிரச்சேதம் செய்துவிட்டான். பிறகு, இத்தலைகளைக் கண்டு தலைவன் மகிழ்ச்சியடைவான் என்றெண்ணி அவற்றை அவனிடம் பரிசாக அளித்தான். ஆனால் துரியோதனனோ, அக்கொடிய செயலை ஆட்சேபித்ததுடன், அதனால் கொஞ்சங்கூட திருப்தியும் அடையவில்லை.

பதம் 1.7.15
மாதா சிஸூனாம் நிதனம் ஸூதானாம்
நிசம்ய கோரம் பரிதப்யமானா
ததாருதத் வாஷ்ப-கலாகுலாக்ஷி
தாம் ஸாந்த்வயன் ஆஹ கிரீடமாலீ

மாதா-தாய்; சிஸுனாம்—குழந்தைகளின்; நிதனம்—படு கொலையை; ஸுதானாம்—மகன்களின்:; நிசம்ய—கேள்விப்பட்டதும்; கோரம்—கோரமான; பரிதப்யமானா—துக்கமடைந்து; ததா —அச்சமயத்தில்; அருதத்—அழத் துவங்கினாள்; வாஷ்ப-கல—ஆகூல—அக்ஷி:—கண்களில் கண்ணீர் மல்க; தாம்— அவளை; ஸாந்தவயன்— சமாதானப்படுத்த; ஆஹ—கூறினார்; கிரீடமாலீ—அர்ஜுனன்.

பாண்டவர்களுடைய ஐந்து புத்திரர்களின் தாயாகிய திரௌபதி, தனது ஐந்து புத்திரர்களின் படுகொலையைப் பற்றி கேள்விப்பட்டதும், பெரும் இழப்பினால் கண்களில் கண்ணீர்மல்க துயரத்துடன் அழத் துவங்கினாள். அவளை சமாதானப்படுத்த முயன்ற அர்ஜுனன் அவளிடம் பின்வருமாறு கூறினார்:

பதம் 1.7.16
ததா சுசஸ் தே ப்ரம்ருஜாமி பத்ரே
யத் ப்ரஹ்ம-பந்தோ: சிர ஆததாயின:
காண்டீவ-முக்தைர் விசிகைர் உபாஹரே
த்வாக்ரம்ய யத் ஸ்னாஸ்யஸி தக்த-புத்ரா

ததா—அச்சமயத்தில் மட்டுமே; சுச:-துக்கக் கண்ணீர்; தே—உனது; ப்ரம்ருஜாமி—துடைப்பேன்: பத்ரே—நற்குணப் பெண்ணே; யத்— அப்பொழுது; ப்ரஹ்ம-பந்தோ:—இழிவடைந்த பிராமணனின்; சிர—தலையை; ஆததாயின:—அநியாயக்காரனின்; காண்டீவ-முக்தை:—காண்டீவம் எனும் வில்லினால் எய்து; விசிகை- அம்புகளால்; உபாஹரே-உனக்கு பரிசாக அளிப்பேன்; த்வா-நீ; ஆக்ரம்ய-அதன்மீது நின்று; யத்-எது; ஸ்னாஸ்யஸி-உன் ஸ்நானத்தை முடித்துக்கொள்; தக்த-புத்ரா- மகன்களை எரித்தபின்.

நற்குணப் பெண்ணே, எனது காண்டீவத்திலிருந்து செலுத்தப்படும் அம்பினால் அந்த பிராமணனின் தலையைக்கொய்து, அதை உனக்குப் பரிசாக அளித்த பிறகு, உன் கண்ணீரைத் துடைத்து உனக்கு நான் ஆறுதல் கூறுவேன். அதன் பிறகு உன் மகன்களின் உடல்களை தகனம் செய்ததும், அவனுடைய தலை மீது நின்றுகொண்டு உன் ஸ்நானத்தை நீ முடிப்பாயாக.

பதம் 1.7.17
இதி ப்ரியாம் வல்கு-விசித்ர-ஜல்பை:
ஸ ஸாந்த்வயித்வாச்யுத-மித்ர-ஸூத:
அன்வாத்ரவத் தம்சித உக்ர-தன்வா
கபி-த்வஜோ குரு-புத்ரம் ரதேன

இதி-இவ்வாறாக; ப்ரியாம்-பிரியமானவளுக்கு; வல்கு- இனிமையான; விசித்ர—பல வகையான; ஜல்பை—வார்த்தைகளால்; ஸ-அவர்; ஸாந்த்வயித்வா-திருப்திப்படுத்தி; அச்யுத-மித்ர—ஸூத:—வெல்ல முடியாத பகவானே ஒரு நண்பராகவும், தேரோட்டியாகவும் இருந்து வழிகாட்டப் படுபவரான அர்ஜுனன்; தம்சித—கவசத்தினால் பாதுகாக்கப்பட்டும்; உக்ர-தன்வா:—கொடிய ஆயுதங்களுடனும்; கபி த்வஜ:—அர்ஜுனன் (குரங்குக் கொடி உடையவன்); குரு-புத்ரம்—யுத்த குருவின் மகனை; ரதேன—இரதத்திலேறி.

இவ்வாறாக வெல்ல முடியாத பகவானையே நண்பராகவும், தேரோட்டியாகவும் கொண்ட அர்ஜுனன், தனது அன்பிற்குரியவளை இனிய வாத்த்தைகளால் திருப்திப்படுத்தினார். பிறகு கவசமணிந்து, கொடிய ஆயுதங்களுடன் இரதத்திலேறி, தனது யுத்த குருவின் மகனான அஸ்வத்தாமனைப் பின்தொடர்ந்து சென்றார்.

பதம் 1.7.18
தம் ஆபதந்தம் ஸ விலக்ஷ்ய தூராத்
குமார-ஹோத்விக்ன—மனா ரதேன
பராத்ரவத் ப்ராண பரீபீஸுர் உர்வ்யாம்
யாவத்- கமம் ருத்ர பயாத் யதா க:

தம்—அவரை; ஆபதந்தம்—கோபாவேசத்துடன் வரும்; ஸ—அவன்; விலக்ஷ்ய:— கண்டதும்; தூராத்—தூரத்திலிருந்தே; குமார—ஹா:—இளவரசர்களைக் கொன்றவனான; உத்விக்ன-மனா:—மனக் குழப்பமடைந்து; ரதேன—இரதத்தின் மீது; பாரத்ரவத்—தப்பி ஓடினான், ப்ராண-உயிரை: பரீப்ஸு-காப்பாற்றிக் கொள்ள; உர்வ்யாம்-மிகவும் வேகமாக; யாவத்-கமம்—அவர் தப்பி ஓடியதைப் போல்; ருத்ர பயாத் —சிவனிடம் கொண்ட பயத்தினால்; யதா-அவ்வாறு; க- பிரம்மா/(அல்லது அர்க-சூரியன்).

இளவரசர்களைக் கொன்றவனான அஸ்வத்தாமன், வெகுதூரத்தில் தன்னை நோக்கி வெகுவேகமாக அர்ஜுனன் வருவதைக் கண்டதும், சிவனுக்கஞ்சி ஓட்டம் பிடித்த பிரம்மாவைப் போன்று, பீதியடைந்து தன்னுயிரை காப்பாற்றிக் கொள்ள இரதத்திலேறி ஓட்டம் பிடித்தான்.

பதம் 1.7.19
யதாசரணம்ஆத்மானம் ஜக்ஷத ஸ்ராந்த –வாஜினம்
அஸ்த்ரம் ப்ரஹ்ம-சிரோ மேனே ஆத்ம-த்ராணம் த்விஜாத்மஜ:

யதா—அப்பொழுது; அசரணம்—பாதுகாப்புக்கு வேறு வழி இல்லாததை; ஆத்மானம்-தனது; ஜக்ஷத-கண்டான்; ஸ்ராந்த—வாஜினம்:—குதிரைகள் களைப்படைந்ததால்; அஸ்திரம்-அஸ்திரத்தை; ப்ரஹ்ம-சிர:—மிகச்சிறந்த அல்லது முடிவான (அணு ஆயுதம்); மேனே-பிரயோகித்தான்; ஆத்ம-த்ராணம்:—தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே; த்விஜ- ஆத்ம-ஜ:—பிராமணரின் மகன்.

தன் குதிரைகள் களைத்துவிட்டதைக் கண்ட பிராமணரின் மகன் (அஸ்வத்தாமன்), தன்னை காப்பாற்றிக் கொள்ள, பிரம்மாஸ்திரத்தை (அணுஆயுதத்தை) பிரயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதினான்.

பதம் 1.7.20
அதோபஸ்ப்ருஸ்ய ஸலிலம் ஸந்ததே தத் ஸமாஹித:
அஜானன் அபி ஸம்ஹாரம் ப்ராண-க்ருச்ர உபஸ்திதே

அத—இவ்வாறு; உபஸ்ப்ருஸ்ய-தொட்டு தூய்மையடைந்த: ஸலிலம்—நீரை; ஸந்ததே— மந்திரங்களை உச்சரித்தான்; தத்—அந்த; ஸமாஹித;—மனதை ஒருமுகப்படுத்த; அஜானன்—அறிந்திருக்கவில்லை: அபி—என்றபோதிலும்; ஸம்ஹாரம்—திரும்பப் பெறுவதை; ப்ராண-க்ருச்ரே—உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால்; உபஸ்திதே—இத்தகைய ஒரு நிலையில் வைக்கப்பட்டு.

அவனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், நீரைத் தொட்டு புனிதமடைந்த அவன், அணு ஆயுதங்களை திரும்பப் பெறும் கலையை அறித்திராதபோதிலும், அவற்றை பிரயோகிப்பதற்கான மந்திரங்களை உச்சரிப்பதில் மனதை ஒருமுகப்படுத்தினான்.

பதம் 1.7.21
தத: ப்ரா துஷ்க்ருதம் தேஜ: ப்ரசண்டம் ஸர்வதோ திசம்
ப்ராணாபதம் அபிப்ரேக்ஷ்ய விஷ்ணும் ஜிஷ்ணுர் உவாச ஹ

தத—அதன் பிறகு; ப்ராதுஷ்க்ருதம்—பரவியது; தேஜ:-மிகப் பிரகாசமான ஒளி; ப்ரசண்டம்—கொடூரமான; ஸர்வத:—எல்லா பக்கங்களிலும்; திசம்—திசைகளிலும்; ப்ராண ஆபதம்—உயிரை பாதிக்கும்; அபிப்ரேக்ஷய—அதைக் கண்டு; விஷ்ணும்:— பகவானிடம்; ஜிஷ்ணு:—அர்ஜுனன்; உவாச—கூறினார்; ஹ—கடந்தகாலத்தில்.

அதன் பிறகு, எல்லா திசைகளிலும் மிகப்பிரகாசமான ஒளி பரவியது. அது மிகக் கொடூரமானதாக இருந்ததால், தனது சொந்த உயிருக்கே ஆபத்து வந்துவிட்டது என்றெண்ணிய அர்ஜுனன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யத் துவங்கினார்.

பதம் 1.7.22
அர்ஜுன உவாச
க்ருஷ்ண க்ருஷ்ண மஹா-பாஹோ பக்தானாம் அபயங்கர
த்வம் ஏகோ தஹ்யமானானம் அபவர்கோ ‘ஸி ஸம்ஸருதே:

அர்ஜுன உவாச—அர்ஜுனன் கூறினார்; க்ருஷ்ண—ஓ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே; க்ருஷ்ண—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே; மஹா-பாஹோ:—எல்லாம் வல்லவரான அவர்; பக்த்தானாம்—பக்தர்களின்; அபயங்கர- பயத்தை அழிப்பவரான; த்வம்—தாங்கள்; ஏக:—மட்டுமே; தஹ்யமானானாம்—துன்பத்திற்கு ஆளாகி இருப்பவர்கள்; அபவர்க— முக்திக்கான வழி: அஸி—உள்ளனர்; ஸம்ஸ்ருதே—பௌதிக துன்பங்களுக்கு இடையில்.

அர்ஜுனன் கூறினார்: எம்பெருமானே ஸ்ரீ கிருஷ்ணா, தாங்கள் சர்வ வல்லமையுடைய பரம புருஷ பகவானாவீர். தங்களுடைய பல்வேறு சக்திகளுக்கு எல்லையே இல்லை. ஆகவே தாங்கள் ஒருவர்தான் உங்களுடைய பக்தர்களின் இதயங்களுக்கு அபயமளிக்கும் திறமை பெற்றவராவீர். பௌதிக துன்பமெனும் தீயில் கருகிக் கொண்டிருக்கும் அனைவரும் உங்களிடம் மட்டுமே முக்திக்கான வழியைக் காணமுடியும்.

பதம் 1.7.23
த்வம் ஆத்ய: புருஷ: ஸாக்ஷாத் ஈஸ்வர: ப்ருக்ருதே:பர:
மாயாம் வ்யுதஸ்ய சிச்-சக்த்யா கைவல்யே ஸ்தித ஆத்மனி

த்வம் ஆத்ய:- தாங்களே ஆதியானவர்; புருஷ:-அனுபவிக்கும் புருஷர்; ஸாக்ஷாத்—நேரடியாக; ஈஸ்வர:—ஆளுநர்; ப்ரக்ருதே:—ஜட இயற்கையின்; பர:-உன்னத; மாயாம்-பௌதிக சக்தி; வ்யுதஸ்ய—ஒதுக்கித் தள்ளியவர்; சித்-சக்த்யா:—அந்தரங்க சக்தியின் பலத்தால்; கைவல்யே—தூய்மையான நித்திய அறிவு மற்றும் ஆனந்தத்தில்; ஸ்தித—வைத்துக் கொண்டவர்; ஆத்மனி—,தன்னை.

தாங்களே மூல முழுமுதற் கடவுளாவீர், தாங்கள் சிருஷ்டி முழுவதிலும் விரிவடைந்திருப்பவரும், பௌதிக சக்திக்கு மேற்பட்ட வருமாவீர். உங்களுடைய ஆன்மீக சக்தியின் பலத்தினால் பௌதிக சக்தியின் விளைவுகளை நீங்கள் விலக்கி விடுகிறீர்கள். நீங்கள் எப்பொழுதும் நித்திய ஆனந்தத்திலும், உன்னத அறிவிலும் நிலை பெற்று இருக்கிறீர்கள்.

பதம் 1.7.24
ஸ ஏவ ஜீவ—லோகஸ்ய மாயா—மோஹித-சேதஸ:
விதத்ஸே ஸ்வேன வீர்யேண ஸ்ரேயோ தர்மாதி—க்ஷணம்

ஸ—அந்த தெய்விக புருஷர்; ஏவ—நிச்சயமாக; ஜீவ-லோகஸ்ய— பந்தப்பட்ட ஜீவராசிகளின்; மாயா-மோஹித:—மாயா சக்தியினால் கட்டப்பட்டு; சேதஸ.-இதயத்தால்; விதத்ஸே—நிறைவேற்றுகிறீர்கள்; ஸ்வேன—சுயமாகவே; வீர்யேண—ஆதிக்கம்; ஸ்ரேய—முடிவான நன்மை; தர்ம—ஆதி:—முக்திக்கான நான்கு கொள்கைகள்; லக்ஷணம் —வர்ணிக்கப்படும்.

தாங்கள் பௌதிக சக்திக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்த போதிலும், பந்தப்பட்ட ஆத்மாக்களின் முடிவான நன்மைக்காக மதம் முதலான முக்திக்கான நான்கு கொள்கைகளை செயற்படுத்துகிறீர்கள்.

பதம் 1.7.25
ததாயம் சாவதாரஸ் தே புவோ பார ஜிஹீர்ஷயா
ஸ்வானாம் சானன்ய—பாவானாம் அனுத்யானாய சாஸக்ருத்

ததா—இவ்வாறாக; அயம்—இந்த; ச—மேலும்; அவதார:— அவதாரம்; தே-உங்களுடைய; புவ—ஜடவுலகின்; பார— பாரத்தை; ஜிஹீர்ஷயா—அகற்றுவதற்கு; ஸ்வானாம்—நண்பர்களின்; ச-அனன்ய-பாவானாம்—மேலும் விசேஷமான பக்தர்களின்; அனுத்யானாய— எப்பொழுதும் நினைத்துக் கொண்டு இருப்பதற்கு; ச-மேலும்; அஸக்ருத்— முழு திருப்தியடைந்து.

இவ்வாறாக, உலகின் பாரத்தை நீக்குவதற்காகவும், முக்கியமாக உங்கள் மீது ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், உங்களது நண்பர்களும், உங்களுக்கே சொந்தமானவர்களுமான உங்களுடைய பக்தர்களின் நன்மைக்காகவுமே நீங்கள் இவ்வுலகில் அவதரிக்கிறீர்கள்.

பதம் 1.7.26
கிம் இதம் ஸ்வித் குதோ வேதி தேவ-தேவ ந வேத்மி அஹம்
ஸர்வதோ முகம் -ஆயாதி தேஜ: பரம-தாருணம்

கிம்— என்ன இருக்கிறது; இதம்—இது; ஸ்வித்— இது வருகிறது; சூத—எங்கிருந்து; வா இதி—எதுவாக இருப்பினும்; தேவ-தேவ—தேவ தேவனே; ந—இல்லை; வேத்மி— எனக்குத் தெரிகிறது; அஹம்—நான்; ஸர்வத—சுற்றிலும்; முகம்—திசைகள்; ஆயாதி-வருகிறது; தேஜ-பிரகாசம்; பரம—மிகவும் அதிகமாக; தாருணம்—ஆபத்தான.

தேவ தேவனே, எப்படி இந்த ஆபத்தான பிரகாசம் சுற்றிலும் பரவுகிறது? அது எங்கிருந்து வருகிறது? அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பதம் 1.7.27
ஸ்ரீ பகவான் உவாச-
வேத்தேதம் த்ரோண -புத்ரஸ்ய ப்ராஹ்மம் அஸ்த்ரம் ப்ரதர்சிதம்
நைவாசௌ வேத ஸம்ஹாரம் ப்ராண-பாத உபஸ்திதே

ஸ்ரீ பகவான் – பரம புருஷ பகவான்; உவாச—கூறினார்; வேத்த- என்னிடமிருந்து அறிந்து கொள்வாயாக; இதம்—இந்த; த்ரோண- புத்ரஸ்ய:—துரோணருடைய மகனின்; ப்ராஹ்மம் அஸ்த்ரம்—பிரம்மாஸ்திரத்திற்கு (அணு ஆயுதம்) உரிய மந்திரங்கள்: ப்ரதர்சிதம்— பிரயோகித்து விட்டான்; ந—இல்லை; ஏவ—கூட; அசௌ—அவன்; வேத—அதை அறிவான்; ஸம்ஹாரம்— திரும்பப் பெறுவதை ; ப்ராண பாதே —வாழ்வின் முடிவு; உபஸ்திதே-உடனடியாக நிகழப்போகிறது.

பரம புருஷ பகவான் கூறினார்; இது துரோணருடைய மகனின் செயல் என்பதை என்னிடமிருந்து அறிந்துகொள். பிரம்மாஸ்திரத்திற்கான (அணுஆயுதம்) மந்திரங்களை அவன் ஏவியிருக்கிறான். மேலும்அந்த அஸ்திரத்தை திரும்பப் பெறும் முறையை அவன் அறிந்திருக்கவில்லை. உடனடியாக நிகழப்போகும் மரணத்திற்கு அஞ்சி, வேறுவழியின்றி இப்படிச் செய்துவிட்டான்.

பதம் 1.7.28
ந ஹி அஸ்யான் பதமம் கிஞ்சித்
அஸ்த்ரம் ப்ரத்யவகர்சனம்
ஜஹி அஸ்த்ர-தேஜ உன்னதம்
அஸ்த்ர-க்ஞோ ஹி அஸ்த்ர-தேஜஸா

ந-இல்லை; ஹி—நிச்சயமாக; அஸ்ய—அதன்; அன்யதமம்—மற்றொரு; கிஞ்சித்—எதுவாயினும்; அஸ்திரம்—ஆயுதம்; ப்ரதி—எதிரான; அவகர்சனம்-எதிர்த்தாக்குதலான; ஜஹி-அதை வெற்றிகொள்; அஸ்த்ர—தேஜ:— அந்த ஆயுதத்தின் பெரும் பிரகாசம்; உன்னதம்—மிகவும் சக்தி வாய்ந்த; அஸ்த்ர-க்ஞ:—போர்க் கலையில் நிபுணன்; ஹி—உண்மையில்; அஸ்த்ர-தேஜஸா:—உன்னுடைய ஆயுதத்தின் வலிமையால்.

ஓ அர்ஜுனா, இந்த ஆயுதத்தை மற்றொரு பிரம்மாஸ்திரத்தால் மட்டுமே செயலிழக்கச் செய்ய முடியும். போர்க் கலையில் நீ சாமர்த்தியமுள்ளவன் என்பதால், உன்னுடைய சொந்த ஆயுதத்தின் சக்தியால் இந்த ஆயுதத்தின் பேரொளியை அடக்கிவிடு.

பதம் 1.7.29
ஸூத உவாச
ஸ்ருத்வா பகவதா ப்ரோக்தம்
ஃபால்குன: பர-வீர-ஹா
ஸ்ப்ருஷ்ட்வாபஸ் தம் பரிக்ரம்ய
ப்ராஹ்மம் ப்ராஹ்மாஸ்த்ரம் ஸந்ததே

ஸூத—சூத கோஸ்வாமி; உவாச-கூறினார்; ஸ்ருத்வா—கேட்டபின்; பகவதா—பரம புருஷரால்; ப்ரோக்தம்—கூறப்பட்டது; ஃபால்குன-ஸ்ரீஅர்ஜுனனின் மற்றொரு பெயர்; பர-வீர-ஹா:—பகைவனான வீரனை கொல்லக் கூடியவர்: ஸ்ப்ருஷ்ட்வா—தொட்டபின்; ஆப—நீரை; தம்—அவரை; பரிக்ரம்ய—வலம் வந்து; ப்ராஹ்மம்- பரம புருஷரை: ப்ராஹ்ம— அஸ்த்ரம்—பரம ஆயுதம்; ஸந்ததே-செலுத்தினார்.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பரம புருஷரிடமிருந்து இதைச் கேட்ட அர்ஜுனன், நீரைத் தொட்டு புனிதமடைந்தபின், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வலம் வந்தார். பிறகு அவர் தமது பிரம்மாஸ்திரந்தை பிரயோகித்து மற்றதை செயலிழக்கச் செய்தார்.

பதம் 1.7.30
ஸம்ஹத்யான்யோன்யம் உபயோஸ் தேஜஸீ சர—ஸம்வ்ருதே
ஆவ்ருத்ய ரோதஸீ கம் ச வவ்ருதாதே ‘ர்க-வஹ்னிவத்

ஸம்ஹத்யா- சேர்க்கையால்; அன்யோன்யம்—ஒன்றுடன் மற்றொன்று ; உபயோ-இரண்டின்; தேஜஸீ—பேரொளி; சர— ஆயுதங்கள்; ஸம்வ்ருதே-மறைத்து; ஆவ்ருத்ய—மூடி; ரோதஸீ—முழு ஆகாயத்தையும்; கம்ச-விண்வெளியும்கூட; வவ்ருதாதே- அதிகரித்து; அர்க—சூரிய மண்டலம்; வஹ்னி-வத்—தீயினைப் போல்.

இரு பிரம்மாஸ்திரங்களின் கதிர்களும் இணைந்தபொழுது சூரிய வட்டத்தைப் போன்றதொரு மிகப்பெரிய தீவட்டம், எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய விண்வெளி முழுவதையும் மறைத்தது.

பதம் 1.7.31
த்ருஷ்ட்வாஸ்த்ர-தேஜஸ் து தயோஸ் த்ரீல் லோகான் ப்ரதஹன் மஹத் தஹ்யமானா: ப்ரஜா: ஸர்வா: ஸாம்வர்தகம் அமம்ஸத

த்ருஷ்ட்வா-இவ்வாறு கண்டு;அஸ்த்ர-ஆயுதம்; தேஜ-உஷ்ணம்; து—ஆனால்; தயோ:-இரண்டின்; த்ரீன்-மூன்று; லோகான்—லோகங்கள்: ப்ரதஹத்—பிரகாசிக்கும்; மஹத்-கடுமையாக; தஹ்யமானா—எரிந்து; ப்ரஜா;—மக்கள்’; ஸர்வா:—அனைவரும்; ஸாம் வர்தகம்—பிரளய காலத்தில் பிரபஞ்சத்தை அழிக்கும் தீயீன் பெயர்; அமம்ஸத—சிந்திக்க ஆரம்பித்தனர்.

மூவுலகங்களிலும் உள்ள மக்கள் அனைவரும், ஆயுதங்களின் மொத்த வெப்பத்தினால் தகிக்கப்பட்டனர். அது அழிவு காலத்தில் தோன்றும் சாம்வர்தக நெருப்பை அனைவருக்கும் நினைவூட்டியது.

பதம் 1.7.32
ப்ரஜோபத்ரவம் ஆலக்ஷ்ய லோக-வ்யதிகரம் ச தம்
மதம் ச வாஸுதேவஸ்ய ஸஞ்ச ஹாரார் ஜூனோ த்வயம்

ப்ரஜா-பொதுமக்கள்; உபத்ரவம்—துன்பம்; ஆலக்ஷ்ய—அதனைக் கண்டதால்; லோக—லோகங்கள்; வ்யதிகரம்—அழிவு: ச—தவிரவும்: தம்—அந்த; மதம் ச—மேலும் அவரது கருத்து; வாஸூதேவஸ்ய- வாசுதேவனான ஸ்ரீ கிருஷ்னரின்; ஸஞ்சஹார:-திரும்பப் பெற்றார்; அர்ஜுன:—அர்ஜுனன்; த்வயம்—இரு ஆயுதங்களையும்.

இவ்வாறு பொதுமக்களின் துன்பத்தையும், உலகங்கள் அழியும் தறுவாயில் இருப்பதையும் கண்ட அர்ஜுனன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விருப்பப்படி, அவ்விரு பிரம்மாஸ்திரங்களையும் உடனடியாக திரும்பப் பெற்றார்.

பதம் 1.7.33
தத ஆஸாத்ய தரஸா தாருணம் கௌதமீ —ஸுதம்
பபந்தாமர்ஷ—தாம்ராக்ஷ:—பசும் ரசனயா யதா

தத—உடனே; ஆஸாத்ய—கைது செய்தார்; தரஸா—சாமர்த்தியமாக; தாருணம்-ஆபத்தான; கௌதமீ-ஸுதம்:— கௌதமியின் மகனை; பபந்த—கட்டினார்; அமர்ஷ—கோபம்; தாம்ர-அக்ஷ:—தாமிரத்தைப் போல் சிவந்த கண்கள்; பசும்—மிருகம்; ரசனயா—கயிறுகளால்; யதா—அதைப் போல்.

அர்ஜுனன் சிவந்து தாமிர குண்டுகளைப் போல் கோபத்தால் காட்சியளித்த சீற்றமடைந்த கண்களுடன், கௌதமியின் மகனை சாமர்த்தியமாக கைது செய்து, அவனை ஒரு மிருகத்தைப் போல் கயிறுகளால் கட்டினார்.

பதம் 1.7.34
சிபிராய நினீஷந்தம் ரஜ்வா பத்வா ரிபும் பலாத்
ப்ராஹார்ஜுனம் ப்ரகுபிதோ பகவான் அம்புஜேக்ஷண:

சிபிராய-இராணுவ முகாமிற்குச் செல்லும் வழியில்; நினீஷந்தம்— அவனைக் கொண்டு செல்லும்பொழுது; ரஜ்வா—கயிறுகளால்; பத்வா—கட்டப்பட்டு: ரிபும்-எதிரியை; பலாத்—பலாத்கரமாக; ப்ராஹ—கூறினார்; அர்ஜுனம்—அர்ஜுனனிடம்; ப்ரகுபித—கோபமான மனோநிலையில்; பகவான்—பரம புருஷ பகவான்;
அம்புஜ-ஈக்ஷண:— கமலக் கண்களுடன் காண்பவரான அவர்.

அஸ்வத்தாமனைக் கட்டிய பிறகு, அர்ஜுனன் அவனை இராணுவ முகாமிற்குக் கொண்டு செல்ல விரும்பினார். பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணர் தமது கமலக் கண்களுடன் நோக்கியவாறு, கோபாவேஷத்துடன் இருந்த அர்ஜுனனிடம் பேசினார்.

பதம் 1.7.35
மைனம் பார்தார்ஹஸி த்ரா தும் ப்ரஹ்ம-பந்தும் இமம் ஜஹி
யோ’ஸாவ் அனாகஸ: ஸுப்தான் அவதீன் நிசி பாலகான்

மா ஏனம்— ஒருபோதும் வேண்டாம்; பார்த—ஓ அர்ஜுனா; அர்ஹஸி—_வேண்டும்; த்ராதும்-விட்டுவிட; ப்ரஹ்ம-பந்தும்—ஒரு பிராமணரின் உறவினரான; இமம்—அவனை; ஜஹி—கொல்; யா—அவன் (செய்தவன்); அஸௌ—அந்த; அநாகஸ;:—குற்றமற்ற; ஸுப்தான்—உறங்கும்பொழுது; அவதீத்—கொன்றான்; நிசி—இரவில்; பாலகான்—சிறுவர்கனை.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: ஓ அர்ஜுனா, ஒரு பிராமணரின் உறவினனான (ப்ரஹ்ம-பந்து) இவன், குற்றமற்ற சிறுவர்கள் உறங்கும்பொழுது, அவர்களைக் கொன்றவன் என்பதால், இவனுக்குக் கருணை காட்டி இவனை நீ விடுவித்துவிடக் கூடாது.

பதம் 1.7.36
மத்தம் ப்ரமத்தம் உன்மத்தம் ஸுப்தம் பாலம் ஸ்த்ரியம் ஜடம்
ப்ரபன்னம் விரதம் பீதம் நரிபும் ஹந்தி தர்ம-வித்

மத்தம்-அஜாக்கிரதை; ப்ரமத்தம்—குடி மயக்கம்; உன்மத்தம்— பைத்தியம்; ஸுப்தம்-உறங்குபவன்; பாலம்—சிறுவன்; ஸ்த்ரியம்—பெண்; ஜடம்—முட்டாள்; ப்ரபன்னம் சரணடைந்தவன்; விரதம்— இரதத்தை இழந்தவன்; பீதம்-பதியடைந்தவன்; ந—இல்லை; ரிபும்—எதிரியை: ஹந்தி—கொல்ல; தர்ம-வித்:—மதக் கொள்கைகளை அறிந்தவன்.

மதக் கொள்கைகளை அறிந்துள்ள ஒருவன் அஜாக்கிரதையாக உள்ளவனையோ, குடி மயக்கத்திலோ, பைத்தியமாகவோ, உறக்கத்திலோ, அச்சத்துடனோ அல்லது இரதத்தை இழந்த நிலையிலோ உள்ளவர்களையும், ஒரு பெண்ணையோ, சிறுவனையோ, முட்டாளாக உள்ள ஒரு பிராணியையோ அல்லது சரணடைந்த ஓர் ஆத்மாவையோ கொல்லமாட்டான்.

பதம் 1.7.37
ஸ்வ-ப்ராணான் ய: பர-ப்ராணை: ப்ரபுஷ்ணாதி அக்ருண: கல:
தத்—வதஸ் தஸ்ய ஹி ஸ்ரேயோ யத்-தோஷத் யாதி அத: புமான்

ஸ்வ-ப்ராணான்:—ஒருவரது சொந்த உயிர்; ய–யாரொருவர்; பர-ப்ராணை:—பிறர் வாழ்வை அழித்து; ப்ரபுஷ்ணாதி-சுகமாக வாழ்பவன்; அக்ருணை-வெட்கம் இல்லாதவன்; கல-பாதகம்; தத் வத:—அவனைக் கொல்வது; தஸ்ய-அவனுடைய; ஹி-நிச்சயமாக; ஸ்ரேய-நன்மைக்காகவே: யத்-எதனால்; தோஷாத்-குற்றத்தினால்;யாதி-செல்கிறான்;அத-கீழ்நோக்கி;புமான்—ஒருவன்.

தனது வாழ்வை நடத்துவதற்காக மற்றவர்களைக் கெடுக்கும் இரக்கமற்றவனும், பாதகனுமான ஒருவனை அவனது சொந்த நன்மைக்காக கொன்று விடுவது நல்லது. இல்லையெனில் அவனுடைய தீய செயல்களினால் அவன் இன்னமும் தாழ்ந்து விடுவான்.

பதம் 1.7.38
ப்ரதிஸ்ருதம் ச பவதா பாஞ் சால்யை ஸ்ருண்வதோ மம
ஆஹரிஷ்யே சிரஸ் தஸ்ய யஸ் தே மானினி புத்ர-ஹா

ப்ரதிஸ்ருதம்—வாக்குறுதி செய்யப்பட்டது; ச—மேலும்; பவதா—உன்னால்; பாஞ்சால்யை-பாஞ்சால தேசத்து ராஜனின் மகளுக்கு (திரௌபதிக்கு); ஸிருண்வத:-கேட்கப்பட்டது; மம-என்னால்; ஆஹரிஷ்யே-நான் கொண்டு வருவேன்; சிர:-தலையை; தஸ்ய—அவனுடைய; ய—யார்; தே—உனது; மானினி— கருதுகிறேன்; புத்ர— ஹா:— உன் மகன்களைக் கொன்றவன்.

மேலும், திரௌபதியிடம் அவளுடைய மகன்களைக் கொன்றவனின் தலையைக் கொண்டு வருவதாக நீ வாக்களித்ததை நான் நேரடியாகக் கேட்டேன்.

பதம் 1.7.39
தத் அஸௌ வத்யதாம் பாப ஆததாய் ஆத்ம-பந்து—ஹா
பர் துஸ ச விப்ரியம் வீர க்ருதவான் குல—பாம்ஸன:

தத்—ஆகவே; அஸெவ—இவன்; வத்யதாம்—கொல்லப்படுவான்; பாப—பாவம் செய்தவன்; ஆததாயீ- மூர்க்கத்தனமாக தாக்கியவன்; ஆத்ம-சொந்த; பந்து —ஹா—மகன்களைக் கொன்றவன்; பர்து—தலைவனின்; ச—தவிரவும்: விப்ரியம்—திருப்திப்படுத்தாததால்; வீர—வீரனே; க்ருதவான்—அதனைச் செய்தவன்; குல-பாம்ஸன;— குடும்பத்தின் எரிந்த சாம்பல்.

இவன் உனது சொந்த குடும்ப அங்கத்தினர்களை வஞ்சித்துக் கொலை செய்தவனாவான். தவிரவும், அவனது தலைவனையும் கூட அவன் அதிருப்தியடையச் செய்திருக்கிறான். இவன், எரிந்துபோன இவனது குடும்பத்தின் சாம்பலேயாவான். எனவே உடனடியாக இவனைக் கொன்றுவிடு.

பதம் 1.7.40
ஸூத உவசா
ஏவம் பரீக்ஷதா தர்மம் பார்த: க்ருஷ்ணேன சோதித:
நைச்சத் தந்தும் குரு-ஸுதம் யத்யபி ஆத்ம-ஹனம் மஹான்

ஸூத—சூத கோஸ்வாமி; உவாச-கூறினார்; ஏவம்—இந்த; பரீக்ஷதா-பரிசோதித்து; தர்மம்—கடமையுணர்வில்; பார்த-ஸ்ரீஅர்ஜுனன்; க்ருஷ்ணே-பகவான் ஸ்ரீகிருஷ்னரால்; சோதித-உற்சாகப்படுத்தி; ந ஐச்சத்—விரும்ப வில்லை; ஹந்தும்-கொல்ல; குரு-ஸுதம்:—அவரது குருவின் மகன்; யத்யபி—எனினும்; ஆத்ம-ஹனம்:—மகன்களைக் கொன்றவன்; மஹான்-மிகசிறந்தவர்.

சூத கோஸ்வாமி கூறினார்: மதக் கொள்கைகளை அர்ஜூனன் பின்பற்றுகிறாரா என்பதைச் சோதித்துக் கொண்டிருந்த கிருஷ்ணர், துரோணாச்சாரியரின் மகனைக் கொன்றுவிடும்படி அர்ஜுனனை உற்சாகப்படுத்தினார். அஸ்வத்தாமன் அர்ஜுனனின் குடும்பத்தினரைக் கொன்ற வெறுக்கத்தக்க கொலைகாரன் என்றபோதிலும், அவனைக் கொன்றுவிடும் கருத்தை மகாத்மாவான அர்ஜுனன் விரும்பவில்லை.

பதம் 1.7.41
அதோபேத்ய ஸ்வ-சிபிரம் கோவிந்த ப்ரிய-ஸாரதி:
ஞவேதயத் தம் ப்ரியாயை சோசந்த்யா ஆத்ம-ஜான்:— ஹதான்

அத- அதன் பிறகு; உபத்ய—அடைந்ததும்; ஸ்வ-சொந்த; சிபிரம் – முகாம் ; கோவிந்த—புலன்களுக்கு புத்துயிரளிப்பவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்); ப்ரிய-பிரியமான; ஸாரதி:-சாரதி; ஞவேதயத்- ஒப்படைத்தார்; தம்—அவனை; ப்ரியாயை–பிரியமானவனளிடம்; சோசந்த்யை—அதனால் புலம்பிக்கொண்டு இருக்கும்; ஆத்ம-ஜான்— சொந்த மகன்கள்; ஹதான்- கொலையுண்ட.

அர்ஜூனன் அவரது மிகப்பிரியமான நண்பணும், சாரதியுமான ஸ்ரீ கிருஷ்ணருடன் தமது சொந்த முகாமை அடைத்தார். பிறகு கொலையுண்ட தனது மகன்களுக்காக புலம்பிக் கொண்டிருந்த, அவரது அன்பான மனைவியிடம் கொலைகாரனை ஒப்படைத்தார்.

பதம் 1.7.42
ததா ஹ்ருதம் பசுவத் பாச-பந்தம்
அவான்-முகம் கர்ம ஜுகுப்ஸிதேன
நிரீக்ஷ்ய க்ருஷ்ணாபக்ருதம் குரோ: ஸுதம்
வாம-ஸ்வபாவா க்ருப்பாயா நனாம ச

ததா—இவ்வாறு; ஆஸ்ருதம்— கொண்டுவரப்பட்ட; பசு-வத்:— ஒரு மிருகத்தைப் போல் பாச-பந்தம்—கயிறுகளால் கட்டப்பட்டு; அவாக்முகம்-வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வெளிவராமல்; கர்ம—செயல்கள், ஜுகுப்ஸிதேன—கொடூரமான: நிரீக்ஷ்ய—கண்டு; க்ருஷ்ணா—திரௌபதி; அபக்ருதம்—இழிவானதைச் செய்தவன்; குரோ—குருவின்;ஸுதம்—மகன்; வாம-அழகிய; ஸ்வபாவா—சுபாவம்; க்ருபாயா—கருணையால் ;நனாம-வணங்கினாள் ச-மேலும்.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பிறகு ஒரு மிருகத்தை போல் கயிறுகளால் கட்டப்பட்டும், மிகவும் அமங்களமான கொலையைச் செய்துவிட்டதால் மௌனமாகவும் இருந்த அஸ்வாத்தாமனை திரரௌபதி நோக்கினாள், அவளது பெண் சுபாவத்தினாலும், நன்டைத்தை கொண்ட அவளது இயற்கையான நற்குணத்தினாலும். ஒரு பிராமணருக்குரிய மரியாதையை அவனுக்கு அவள் காட்டினாள்.

பதம் 1.7.43
உவாச சாஸஹந்தி அஸ்ய பந்தனானயனம்: ஸதீ
முச்யதாம் முச்யதாம் ஏஷ ப்ராஹ்மணோ நிதராம் குரு:

உவாச-கூறினார்; ச-மேலும்; அஸஹந்தி-அவளுக்குத் தாங்க முடியாததாக இருந்ததால்; அஸ்ய-அவன்; பந்தன—கட்டப்பட்டு இருந்தது; ஆனயனம்— அவனைக் கொண்டு வந்து; ஸதீ – கற்புடையவள்; முச்சியதாம் முச்சியதாம் -அவரை விடுவித்து விடுங்கள்; ஏஷ-இந்த; ப்ராஹ்மண-ஒரு பிராமணன்; நிதராம்-நமது; குரு-குரு.

அஸ்வத்தாமன் கயிறுகளால் கட்டப்பட்டிருப்பதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும் கற்புடைய பெண்ணென்பதால், அவள் கூறினாள்: அவர் ஒரு பிராமணர், நமது ஆன்மீக குரு. எனவே அவரை விட்டுவிடுங்கள்.

பதம் 1.7.44
ஸரஹஸ்யோ தனுர்—வேத ஸவிஸர் கோபஸம்யம:
அஸ்த்ர-க்ராமஸ் ச பவதா சிக்ஷிதோ யத் அனுக்ரஹாத்

ஸ—ரஹஸ்ய:—இரகசிய; தனு-வேத:—வில் வித்தையைப் பற்றிய அறிவு; ஸ-விஸர்க:—பிரயோகித்தல்; உபஸம்யம் —கட்டுப்படுத்துதல்; அஸ்த்ர—ஆயுதங்களை; க்ராம—எல்லா வகையான; ச—மேலும்; பவதா—உங்களால்; சிக்ஷித-கற்றீர்கள்; யத்—யாருடைய; அனுக்ரஹாத்-கருணையால்.

துரோணாச்சாரியரின் கருணையால்தான் நீங்கள் வில் வித்தையையும், ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் இரகசிய கலையையும் கற்றறிந்தீர்கள்.

பதம் 1.7.45
ஸ ஏஷ பகவான் த்ரோண ப்ரஜா—ரூபேண வர்ததே
தஸ்யாத்மனோ ‘ர்தம் பத்னி ஆஸ்தே நான்வகாத் வீரஸு: க்ருபீ

ஸ—அவர், ஏஷ—நிச்சயமாக; பகவான்-சக்தி வாய்ந்த; த்ரோண:— துரோணாச்சாரியர்; ப்ரஜா—ரூபேண:— அவரது மகனான அஸ்வத்தாமனின் உருவில்; வர்ததே—வாழ்கிறார்; தஸ்ய-அவரது; ஆத்மன— உடலின்; அர்தம்—ஒரு பாதியான; பத்னீ-மனைவி; ஆஸ்தே— வாழ்கிறாள்; ந—இல்லை; அன்வகாத்— மேற்கொண்டாள்; வீரஸூ-மகன் இருப்பதால்; க்ருபீ-கிருபாச்சாரியரின் சகோதரி.

நிச்சயமாக அவர் (துரோணாச்சாரியர்) அவரைப் பிரதிநிதிக்கும் அவரது மகனின் உருவில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரது மனைவியான க்ருபீக்கு ஒரு மகன் இருப்பதால் அவருடன் அவள் உடன்கட்டை ஏறவில்லை.

பதம் 1.7.46
தத் தர்மக்ஞ—மஹா பாக பவத் பிர் கௌரவம் குலம்
வ்ருஜினம் நார்ஹதி ப்ராப்தும் பூஜ்யம் வந்த்யம் அபீக்ஷ்ணா:

த்த்—ஆகவே; தர்ம—க்ஞ—மதக் கொள்கைகளை அறிந்திருப்பவர்; மஹா—பாக:— பெரும் அதிர்ஷ்டசாலியானவரே; பவத்பி—உங்களால்; கௌரவம்—கௌரவமான; குலம்-குடும்பம்; வ்ருஜினம்-துன்பத்தை அளிக்கக்கூடியது; ந—இல்லை. அர்ஹதி—தகுதியானவன்; ப்ராப்தும்— பெறுவதற்காக; பூஜ்யம்- வணங்கத்தக்க; வந்த்யம்-மரியாதைக்கு உகந்தது; அபீக்ஷ்ணா—நிரந்தரமாக.

மதக் கொள்கைகளை அறிந்த பேரதிர்ஷ்டம் வாய்ந்தவரே, எப்பொழுதும் வணக்கத்திற்கும், மரியாதைக்கும் உரிய கௌரவமான குடும்பத்தினருக்கு வருத்தத்தை விளைவிப்பது உங்களுக்கு நல்லதல்ல.

பதம் 1.7.47
மா ரோதீத் அஸ்ய ஜனனீ கௌதமீ பதி-தேவதா
யதாஹம் ம்ருத—வத்ஸார்தா ரோதிமி அஸ்ரு முகீ முஹு;

மா-வேண்டாத; ரோதீத்—அழச் செய்ய; அஸ்ய-அவரது; ஜனனீ—தாயை; கௌதமி—துரோணரின் மனைவியை; பதி-தேவதா:—கற்புடையவள்; யதா-போல்; அஹம்—என்னை; ம்ருத-வத்ஸா—குழந்தையைப் பறிகொடுத்தவள்; ஆர்தா—துன்பப்படும்; ரோதிமி—அழும்; அஸ்ரு—முகீ:—கண்களில் கண்ணீருடன்; முஹூ—எப்பொழுதும்.

என் தலைவா, துரோணாச்சாரியரின் மனைவியையும் என்னைப் போல் அழ வைக்காதீர்கள். என் மகன்களின் மரணத்திற்காக நான் துயரப்படுகிறேன். அவளும் நிரந்தரமாக என்னைப் போல் அழ வேண்டாம்.

பதம் 1.7.48
யை: கோபிதம் ப்ரஹ்ம-குலம் ராஜன்யைர் அஜிதாத்மபி:
தத் குலம் ப்ரதஹத் ஆக ஸானுபந்தம் சுசார்பிதம்

யை:—அவர்களால்; கோபிதம்- கோபமூட்டினால்; ப்ரஹ்ம்—குலம்:—பிராமணர் குலம்: ராஜன்யை:-அரச குலத்தால்; அஜித— கட்டுப்பாடில்லாமல்; ஆத்மபி-ஒருவரால்; தத்—அந்த; குலம்—குடும்பம்; ப்ரதஹதி-எரித்துவிடும்; ஆக- மிகக்குறுகிய நேரத்திலேயே; ஸ—அனுபந்தம்:—குடும்பத்தினரை மொத்தமாக; சுசார்பிதம்- துயரத்தில் ஆழ்த்திவிடும்.

புலனடக்கத்தில் கட்டுப்பாடற்ற அரசாளும் குலத்தினர், பிராமணர் குலத்தினருக்குத் தீங்கிழைத்து அவர்களைக் கோபமூட்டுவார்களானால், அந்த கோபத்தீ அரச குடும்பம் முழுவதையுமே எரித்து அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திவிடும்.

பதம் 1.7.49
ஸூத உவாச
தர்ம்யம் ஞாயம் ஸகருணம் நிர்வ்யலீகம் ஸமம் மஹத்
ராஜா தர்ம—ஸுதோ ராக்ஞ்யா: ப்ரத்யனந்த வசோ த்விஜா:

ஸூத உவாச—சூத கோஸ்வாமி கூறினார்;. தர்ம்யம்-மதக் கொள்கைகளின் படி: ஞாயம்—நியாயம் நிறைந்தது; ஸ கருணம்—கருணை நிறைந்தது; நிர்வ்யலீகம்—தர்மத்தில் வஞ்சகமில்லாமல்; ஸமம்—சமநிலை; மஹத்-புகழுக்குரியது: ராஜா—மகாராஜன்; தர்ம—ஸுத:—மகன்; ராக்ஞ்யா-அரசியால்; ப்ரத்யனந்தத்—ஆதரித்தார்; வச:— கூற்றுக்களை; த்விஜா-பிராமணர்களே.

சூத கோஸ்வாமி கூறினார் பிராமணர்களே, மதக் கொள்கைகளுக்கு இசைந்தவையும், நியாயமென நிரூபிக்கப்பட்டவையும், பெருமை மிக்கவையும், கருணை மற்றும் சமத்துவம் நிறைந்தவையும், மற்றும் வஞ்சகம் இல்லாதவையுமான அரசியின் கூற்றுக்களை யுதிஷ்டிர மகாராஜன் முழுமையாக ஆதரித்தார்.

பதம் 1.7.50
நகுல: ஸஹதேவஸ் ச யுயுதானோ தனஞ்சய:
பகவான் தேவகீ-புத்ரோ யே சான்யே யாஸ் ச ‘யோஷித:

நகுவ-நகுலன்; ஸஹதேவ-ஸஹதேவன்; ச- மேலும்; யுயுதான- ஸாத்யகி; தனஞ்சய-அர்ஜுனன்: பகவான்—பரம புருஷ பகவான்; தேவகீ-புத்ரோ:—தேவகி புத்திரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; யே- அவர்களும்; ச-மேலும்; அன்யே- மற்றவர்களும்; யா-அவர்கள்; ச-மேலும்; யோஷித- பெண்கள்.

நகுலன் மற்றும் ஸஹதேவன் (ராஜனின் இளைய சகோதரர்கள், மேலும் ஸாத்யகி, அர்ஜுனன், தேவகி புத்திரரான பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பெண்கள் மற்றும் பிறர் அனைவரும் ஏகமனதாக அரசரின் கருத்தை ஆதரித்தனர்

பதம் 1.7.51
தத்ராஹாமர்ஷிதோ பீமஸ் தஸ்ய ஸ்ரேயான் வத: ஸ்ம்ருத:
ந பர் துர் நாத்மனஸ் சார்தே யோ ‘ஹன் ஸுப்தான் சிசூன் வ்ருதா

தத்ர;—அதனால்; ஆஹ-கூறினார்; அமர்ஷித- கோபத்துடன்; பீம-பீமன்; தஸ்ய-அவனுடைய; ஸ்ரேயான்-முடிவான நன்மை; வத-கொன்று: ஸ்ம்ருத-குறிக்கப்பட்டது; ந—இல்லை; பர்து— தலைவனின்; ந—அல்லது; ஆத்மன—அவனது சொந்த; ச—மேலும்; அர்தே-அதற்காக; ய:-யாரொருவன்; அஹன்-கொன்றான்; ஸுப்தான்—உறங்கும்; சிசூன்-குழந்தைகளை; வ்ருதா-நோக்கமின்றி.

ஆயினும், பீமன் அதற்குச் சம்மதிக்கவில்லை, சுயநலனுக்காகவோ அல்லது தலைவனின் நன்மைக்காகவோ கூட அதைச் செய்யாமல், எந்த பிரயோஜனமும் இல்லாமல், உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை கோபத்துடன் கொலை செய்தவனான இக்குற்றவாளியைக் கொன்று விடும்படி பீமன் கூறினார்.

பதம் 1.7.52
நிசம்ய பீம-கதிதம் த்ரௌபத்யாஸ் ச சதுர்-புஜ:
ஆலோக்ய வதனம் ஸக்யுர் இதம் ஆஹ ஹஸன் இவ

நிசம்ய— கேட்ட பிறகு; பீம-பீமன்; கதிதம்-பேசப்பட்ட; த்ரௌபத்யா-திரௌபதியின்; ச- மேலும்; சது-புஜ:— நான்கு கரங்களை உடையவர் (பரம புருஷ பகவான்); ஆலோக்ய—நோக்கி; வதனம்—முகத்தை; ஸக்யு-அவரது நண்பனின்; இதம்-இந்த: ஆஹ—கூறினார்; ஹஸன்—நகைப்பது; இவ—போல்.

சதுர்புஜ (நான்கு கரங்களைக் கொண்ட) மூர்த்தியான பரம புருஷ பகவான், பீமன், திரௌபதி முதலானவர்களின் வார்த்தைகளைக் கேட்டபின், அவரது பிரிய நண்பனான அர்ஜுனனின் முகத்தை நோக்கியவாறு. நகைப்பதுபோல் பேசத் துவங்கினார்.

பதங்கள் 1.7.53 – 1.7.54
ஸ்ரீபகவான் உவாச
ப்ரஹம—பந்தூர் ந ஹந்தவ்ய ஆததாயீ வதார்ஹண:
மயைவோயம் ஆம்னாதம் பரிபாஹி அனுசாஸனம்

குரு ப்ரதிஸ்ருதம் ஸத்யம் யத் யத் ஸாந்தவயதா ப்ரியாம்
ப்ரியம் ச பீம ஸேனஸ்ய பாஞ்சால்யா மஹ்யம் ஏவ ச

ஸ்ரீ பகவான்—பரம புருஷ பகவான்; உவாச-கூறினார்; ப்ரஹம—பந்து-ஒரு பிராமணரின் உறவினன்; ந—கூடாது: ஹந்தவ்ய—கொல்லப்பட; ஆகதாயீ—வலிய தாக்குபவன்; வத-அர்ஹண:— கொல்லப்பட வேண்டியவனாவான்; மயா—என்னால்; ஏவ-நிச்சயமாக; உபயம்—இருவரையும்; ஆம்னாதம் — அதிகாரியின் கட்டளைப்படி விவரிக்கப்பட்டுள்ள; பரிபாஹி—நிறைவேற்ற வேண்டும்; அனுசாஸனம்—கட்டளைகள்; குரு—உண்மையாக நடந்துகொள்; ப்ரதிஸ்குதம்—வாக்களித்தபடி; ஸத்யம்—சத்தியம்; யத் தத்— எதுவொன்று; ஸாந்த்வயதா—சமாதானப்படுத்தும் வேளையில்; ப்ரியாம்—அன்பிற்குரிய மனைவியை; ப்ரியம்-திருப்தி; ச—மேலும்: பீமஸேனஸ்ய—ஸ்ரீ பீமஸேனரின்; பாஞ்சால்யா—திரௌபதியின்; மஹ்யம்—என்னையும் கூட; ஏவ-நிச்சயமாக; ச—மேலும்.

பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்; ஒரு பிராமணரின் நண்பனை கொல்லக் கூடாது. ஆனால் அவன் வலிய தாக்குபவனாக இருந்தால் அவனைக் கொல்லத்தான் வேண்டும். இத்தீர்ப்புகள் அனைத்தும் சாஸ்திரங்களில் உள்ளன. அவற்றிற்கேற்ப நீ செயற்பட வேண்டும். உன் மனைவிக்கு நீயளித்த வாக்குறுதியை நீ காப்பாற்ற வேண்டும். அதேசமயம் பீமஸேனனையும், என்னையும் கூட நீ திருப்திப்படுத்த வேண்டும்.

பதம் 1.7.55
ஸூத உவாச
அர்ஜுன: ஸஹஸாக்ஞாய ஹரேர் ஹார்தம் அதாஸினா
மணிம் ஜஹார மூர்தன்யம் த்விஜஸ்ய ஸஹ-மூர்தஜம்

ஸூத —சூத கோஸ்வாமி; உவாச-கூறினார்; அர்ஜூன:—அர்ஜுனன்; ஸஹஸா-அப்பொழுதுதான்; ஆக்ஞாய-அதையறிந்து; ஹரே—பகவானின்; ஹார்தம்—உத்தேசம்;அத—இவ்வாறு; அஸினா—வாளினால்; மணிம்—மணி; ஜஹார—துண்டித்தார்; மூர்தன்யம்— தலைமீது; தீவிஜஸ்ய-இருபிறப்பு எய்தியவனின்; ஸஹ-உடன்; மூர்தஜம்-முடிகள்.

இரு பொருள்படும் உத்தரவுகளின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட பகவானின் உள்ளெண்ணத்தை அர்ஜுனனால் உடனே புரிந்துகொள்ள முடிந்தது. இவ்வாறாக அர்ஜுனன், அஸ்வத்தாமனின் தலையிலிருந்து முடி மற்றும் மணி ஆகிய இரண்டையுமே தனது வாளால் வெட்டியெறிந்தார்.

பதம் 1.7.56
விமுச்ய சரனா-பத்தம பால-ஹத்யா-ஹத-ப்ரபம்
தேஜஸா மணினா ஹீனம் சிபிரான் நிரயாபயத்

விமுச்ய-அவனை விடுதலை செய்தபின்; சரனா-பத்தம்:— கயிறுகளால் கட்டப்பட்ட நிலையிலிருந்து; பாலா—ஹத்யா:—குழந்தைகளைக் கொன்றவன்; ஹத-ப்ரபம்:—உடலின் பொலிவை இழுந்து; தேஜேஸா-பலத்தை; மணினா-ஆபரணத்தால்; ஹீனம்—இழந்ததால்; சிபிராத்-முகாமிலிருந்து; நிரயாபயத்—அவனை வெளியே துரத்தினர்.

குழந்தைகளைக் கொன்றதால் அவன் (அஸ்வத்தாமன்) ஏற்கனவே உடலின் பொலிவை இழந்துவிட்டவனாக இருந்தான். இப்பொழுது தலையிலுள்ள மணியையும் இழந்ததால், இன்னும் அதிக பலத்தை அவன் இழந்துவிட்டவனானான். இவ்வாறாக கட்டவிழ்த்து விடப்பட்ட அவன் முகாமிலிருந்து வெளியே துரத்தப்பட்டான்.

பதம் 1.7.57
வபனம் த்ரவிணாதானம் ஸ்தானான் நிர்யாபணம் ததா
ஏஷ ஹி ப்ரஹ்ம-பந்தூனாம் வதோ நான்யோ ’ஸ்தி தைஹிக:

வபனம்—தலை முடியைக் கத்தரிப்பது; த்ரவிண—செல்வத்தை; அதானம்—பறிமுதல் செய்வது; ஸ்தாணத்—வசிப்பிடத்திலிருந்து; நிர்யாபணம்—வெளியேற்றுவது; ததா—மேலும்; ஏஷ—இவை அனைத்தும்; ஹி—நிச்சயமாக; ப்ரஹ்ம-பந்தூனாம்—ஒரு பிராமணனுடைய உறவினர்களின்; வத:-கொல்வதோ; ந—இல்லை; அன்ய— வேறெந்த முறையோ; அஸ்தி-இருக்கிறது; தைஹிக:—உடலைப் பொறுத்த விஷயத்தில்.

தலை முடியைக் கத்தரிப்பது, செல்வத்தைப் பறிமுதல் செய்வது மற்றும் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றுவது ஆகியவையே ஒரு பிராமணரின் உறவினனுக்கு விதிக்கப்படும் தண்டனைகளாகும். உடலைக் கொல்வதைப் பற்றிய உத்தரவு எதுவும் அளிக்கப்படவில்லை.

பதம் 1.7.58
புத்ர-சோகா துரா: ஸர்வே பாண்டவா ஸஹ க்ருஷ்ணயா
ஸ்வானாம் ம்ருதானாம் யத் க்ருத்யம் சக்ருர் நிர்ஹரணாதிகம்

புத்ர-புத்திரன்; சோக-சோகம்; ஆதுரா—மேலோங்க; ஸர்வே—அவர்கள் அனைவரும்; பாண்டவா-பாண்டு புத்திரர்கள்; ஸஹ—அவர்களுடன்; க்ருஷ்ணயா-திரௌபதியுடன்; ஸ்வானாம்— உறவினர்களின்; ம்ருதானாம்-இறந்தவர்களின்; யத்—என்ன; க்ருத்யம்—செய்யப்பட வேண்டியதை; சக்கு:-செய்தனர்; நிர்ஹரண-ஆதிகம்:— செய்யக்கூடிய.

அதன் பிறகு பாண்டு புத்திரர்களும், திரௌபதியும் புத்திரசோகம் மேலோங்க, அவர்களது இறந்த உறவினர்களின் உடல்களுக்குச் செய்ய வேண்டிய முறையான சடங்குகளைச் செய்தனர்.


ஸ்ரீமத்பாகவதம், முதல் காண்டத்தின் “துரோணரின் மகன் தண்டிக்கப்படுதல்” எனும் தலைப்பைக் கொண்ட, ஏழாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare