அத்தியாயம் – 5
வியாசருக்கு நாரதரின் உபதேசங்கள்
பதம் 1.5.1 : சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக தேவரிஷி (நாரதர்) வசதியாக ஆசனத்தில் அமர்ந்ததும், பிரம்ம ரிஷியைப் (வியாசதேவர்) பார்த்து, புன்முறுவலுடன் கூறினார்.

பதம் 1.5.2 : பராசரரின் புதல்வரான வியாசதேவரிடம் நாரதர் வினவினார்: உடல் அல்லது மனமே நான் என்பதிலும், அவற்றை அறிவதே தன்னுணர்வின் நோக்கம் என்பதிலும் நீங்கள் திருப்தி அடைகிறீர்களா?

பதம் 1.5.3 : கல்வி கேள்விகளில் நீர் பூரணமானவர். மேலும் எல்லா வகையான வேத சம்பவங்களையும் தெளிவாக விளக்கும் மகாபாரதத்தை சிறப்பாகவும், அற்புதமாகவும் நீர் தயாரித்திருக்கிறீர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பதம் 1.5.4 : நீர் அருவ பிரம்மத்தை மட்டுமின்றி, அதிலிருந்து பெறப்படும் அறிவையும் கூட முழுமையாக விளக்கி இருக்கிறீர். அப்படியிருந்தும், பிரபு, உமது முயற்சி பாழாகிவிட்டது என்றெண்ணி ஏன் மனச்சோர்வு அடைகிறீர்?

பதம் 1.5.5 : ஸ்ரீல வியாசதேவர் கூறினார்; என்னைப்பற்றி தாங்கள் கூறியவை அனைத்தும் முற்றிலும் உண்மை. இருப்பினும் எனக்கு சமாதானம் ஏற்படவில்லை. சுயமாகப் பிறந்த (பௌதிக தாய், தந்தையர் இல்லாத) ஒருவரின் (பிரம்மா) புத்திராக தாங்கள் இருப்பதால், எல்லையற்ற அறிவு படைத்தவராகவும் இருக்கிறீர். ஆகவே எனது அதிருப்திக்குரிய மூல காரணத்தைப் பற்றி உம்மிடமிருந்து கேட்டறிய விரும்புகிறேன்.

பதம் 1.5.6 : என் பிரபுவே, ஜடவுலகைப் படைத்து அதை அழிப்பவரும், ஆன்மீக உலகைப் பராமரிப்பவரும், ஜட இயற்கையின் முக்குணங்களைக் கடந்தவருமான மூல முழுமுதற் கடவுளை தாங்கள் வழிபடுவதால், மனித அறிவுக்கு எட்டாத அனைத்தையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்.

பதம் 1.5.7 : சூரியனைப் போல், மூவுலகங்களில் சஞ்சரிக்கவும், காற்றைப் போல் அனைவரது மனதிற்குள்ளும் புகுந்து சஞ்சரிக்கவும் உம்மால் முடியும். இதனால் தாங்கள் சர்வ வியாபகமுடைய பரமாத்மாவுக்கு நிகரானவராவீர். ஆகவே ஒழுக்கக்கட்டுப்பாடுகளையும் விரதங்களையும் மேற்கொண்டு நான் தெய்வீகத்தில் ஆழ்ந்திருந்த போதிலும், என்னிடமுள்ள குறை என்னவென்பதை தயவுசெய்து காட்டியருள வேண்டும்.

பதம் 1.5.8 : ஸ்ரீ நாரதர் கூறினார்: நீர் உண்மையில் பரம புருஷரின் மேன்மையான, களங்கமற்ற பெருமைகளை பரப்பவில்லை. பகவானின் உன்னத புலன்களை திருப்திப்படுத்தாத அந்த தத்துவம் பயனற்றதென கருதப்படுகிறது.

பதம் 1.5.9 : பெரும் முனிவராகிய நீர், மதச் சடங்குகளுடன் ஆரம்பமாகும் நான்கு கொள்கைகளை மிகவும் விரிவாக விளக்கியபோதிலும், பரம புருஷராகிய வாசுதேவனின் மகிமைகளை விளக்கவில்லை.

பதம் 1.5.10 : பிரபஞ்சத்தின் முழு சூழ்நிலையையும் தூய்மைப்படுத்தக்கூடியவர் பகவான் ஒருவரேயாவார். அவரது பெருமைகளை விவரிக்காத அந்த சொற்கள் காக்கைகளைப் போன்ற கர்மிகளின் தீர்த்தம் என்று புண்ணிய புருஷர்களால் கருதப்படுகின்றன. பூரணத்துவம் பெற்றவர்கள் பரலோகவாசிகளாக இருப்பதால், காக்கைகளுக்குரிய இடத்தில் அவர்கள் எவ்வித இன்பத்தையும் பெறுவதில்லை.

பதம் 1.5.11 : அதே சமயம், எல்லையற்றவரான பரம புருஷரின் பெயர், புகழ், லீலைகள் இவை பற்றிய உன்னதமான வர்ணணைகள் அடங்கிய இலக்கியம், வழி தவறி முறையற்றவர்களாக வாழும் மனிதர்களுடைய நோக்கத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உண்டானதாகும். இத்தகைய நூல்கள், தவறுகள் நிறைந்தவையாக இருப்பினும், நேர்மையான தூய மனிதர்களால் கேட்கவும், படிக்கவும் மற்றும் ஏற்கவும் படுகின்றன.

பதம் 1.5.12 : தன்னுணர்வைப் பற்றிய அறிவு எல்லா பௌதிகக் கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டிருந்தபோதிலும், அழிவற்றவரைப் (பகவான்) பற்றிய சிந்தனை இல்லாததாக இருக்குமானால் அது நலம் தராது. இதனால், துன்பம் தரும் நிலையற்ற கருமங்களை பகவானின் பக்தித் தொண்டிற்காக பயன்படுத்தவில்லை என்றால் அவற்றால் என்ன நன்மை விளையப் போகிறது?

பதம் 1.5.13 : வியாசதேவரே, உமது பார்வை பூரணமானதும், நற்புகழ் களங்கமற்றதுமாகும். நீர் விரதத்தில் உறுதியாகவும், சத்தியத்தில் நிலையாகவும் இருக்கிறீர். எனவே, பொதுமக்கள் எல்லா ஜட பந்தத்திலிருந்தும் முக்தி அடைவதற்கு உதவும் பகவானின் லீலைகளை தியானம் செய்து அவற்றைத் தெளிவாக விளக்கவும்.

பதம் 1.5.14 : பகவானுடன் சம்பந்தப்படாத எதையெல்லாம் நீர் விளக்க முயன்றாலும், அது பல்வேறு உருவங்களுடனும், பெயர்களுடனும், பலன்களுடனும் செயற்பட்டு, அணைவதற்கு இடமில்லாத படகு ஒன்று காற்றால் அலைக்கழிக்கப்படுவதைப் போல், மனதை அலைக்கழிக்கிறது.

பதம் 1.5.15 : பொதுமக்கள் இயல்பாகவே சுகம் அனுபவிக்கும் சுபாவத்தைக் கொண்டுள்ளனர். மேலும் மதம் எனும் பெயரில் நீர் அதற்குத் தூண்டு கோலாகவும் இருந்திருக்கிறீர். இது நிச்சயமாக நிந்தனைக்குரியதும் தகாது செயலுமாகும். அவர்கள் உமது உபதேசங்களின்படி வழிகாட்டப்படுவதால், மதத்தின் பெயரில் அத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்வார்கள். தடைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

பதம் 1.5.16 : பரம புருஷர் எல்லையற்றவராவார்; பௌதிக சுகங்களைத் துறந்தவர்தான் ஆன்மீக அறிவைப் புரிந்துகொள்ளும் தகுதி படைத்தவராவார். எனவே ஜடப்பற்றின் காரணத்தால் தகுதியற்ற நிலையில் உள்ளவர்களுக்கு, பரம புருஷரின் உன்னதமான செயல்களைப் பற்றிய வர்ணணைகளின் மூலமாக, ஆன்மீக தன்னுணர்வுக்கான வழிகளை நீர் காட்ட வேண்டும்.

பதம் 1.5.17 : பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்காக தனது பௌதிக உத்தியோகங்களைக் கைவிட்ட ஒருவர், பக்குவமடையாத நிலையில் இருக்கும்போது சில சமயங்களில் இழிவடையக்கூடும். இருப்பினும், அவரது தோல்வியால் அவருக்கு ஆபத்தில்லை. மாறாக, பக்தனல்லாத ஒருவன் உத்தியோகக் கடமைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தபோதிலும், அதனால் எந்த இலாபத்தையும் அடைவதில்லை.

பதம் 1.5.18 : உண்மையில் புத்திசாலிகளாகவும், தத்துவப் பிரியர்களாகவும் இருப்பவர்கள், பிரம்மலோகத்திலிருந்து பாதாள லோகம் வரை சுற்றித் திரிந்தாலும் அடைய முடியாத அவ்வுயர்ந்த முடிவிற்காக மட்டுமே முயல வேண்டும். துன்பங்களை நாம் விரும்பாத போதிலும் காலப்போக்கில் அவற்றை நாம் அடைவதைப் போலவே, புலன்நுகர்வால் பெறப்படும் மகிழ்ச்சியையும் காலப்போக்கில் தானாகவே நம்மால் அடைய முடியும்.

பதம் 1.5.19 : என் அன்புள்ள வியாசரே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனொருவர் ஏதோ ஒரு காரணத்தினால் சில சமயங்களில் நிலை தவற நேர்ந்தாலும், அவர் பிறரைப் போல் (பலன்நோக்குக் கருமிகள், முதலான) ஜடவாழ்வை நிச்சயமாக அனுபவிக்கமாட்டார். ஏனெனில், பகவானின் தாமரைப் பாதங்களை ஒருமுறை அனுபவித்து மகிழ்ந்தவரால், அப்பரவச நிலையை திரும்பத் திரும்ப நினைவிற் கொள்வதைத் தவிர, அவரால் வேறெதையும் செய்யமுடியாது.

பதம் 1.5.20 : பரம புருஷரான முழுமுதற் கடவுள் தாமாகவே இப்பிரபஞ்சமாக விரிவடைந்திருக்கிறார் என்றாலும் அதிலிருந்து அவர் பிரிந்தே இருக்கிறார். அவரிடமிருந்து தான் இப்பிரபஞ்சம் தோன்றியுள்ளது. அவரையே அது சார்ந்துள்ளது. மேலும் அழிவுக்குப்பின் அவருக்குள்ளேயே அது புகுந்தும் விடுகின்றது. இவற்றையெல்லாம் நீர் அறிவீர். நான் ஒரு சுருக்கத்தை மட்டுமே கொடுத்திருக்கிறேன்.

பதம் 1.5.21 : மேன்மை தாங்கிய நீர் திவ்யமான பார்வையைப் பெற்றிருக்கிறீர். நீர் பகவானின் ஒரு விரிவங்கமாக இருப்பதால், உம்மால்தான் பரமாத்மாவான முழுமுதற் கடவுளை அறிய முடியும். பிறப்பற்றவராக இருந்தும், அனைத்து மக்களின் நன்மைக்காக இந்த பூமியில் தோன்றியிருக்கிறீர். ஆகவே தயவுசெய்து, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத லீலைகளை இன்னும் தெளிவாக விளக்குவீராக.

பதம் 1.5.22 : தவம், வேதக் கல்வி, யாகம், மந்திர பாராயணம் மற்றும் தானம் ஆகியவை அறிவு முதிர்ச்சிக்குரிய உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவையாகும். இவை மிகச்சிறந்த கவிதைகளால் வர்ணிக்கப்படுபவரான பகவானைப் பற்றிய தெய்வீகமான வர்ணணைகளில் உச்ச நிலையை அடைகின்றன என்று அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

பதம் 1.5.23 : முனிவரே, முந்திய யுகத்தில் வேதாந்த கொள்கைகளைப் பின்பற்றும் பிராமணர்களின் தொண்டில் ஈடுபட்டிருந்த, யாரோ ஒரு வேலைக்காரியின் மகனாக நான் பிறந்திருந்தேன். நான்கு மாத மழைக்காலத்தில் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர்களுடைய சொந்த சேவையில் நான் ஈடுபட்டிருந்தேன்.

பதம் 1.5.24 : அவர்கள் இயல்பாகவே பாரபட்சம் இல்லாதவர்கள் என்ற போதிலும், வேதாந்தத்தைப் பின்பற்றுபவர்களான அவர்கள் தங்களது தனிப்பெரும் கருணையால் என்னை வாழ்த்தினார். என்னைப் பொறுத்தவரை, நான் சிறுவனாக இருந்தும், விளையாட்டில் பற்றில்லாதவனாகவும், புலனடக்கம் உள்ளவனாகவும், பணிவுள்ளவனாகவும் இருந்தேன். மேலும் தேவைக்கதிகமாக நான் பேசவுமில்லை.

பதம் 1.5.25 : அவர்களது அனுமதியுடன், ஒரு முறைதான் அவர்கள் உண்டு மிஞ்சிய உணவை நான் உண்டேன். அதனால் என்னுடைய எல்லா பாவங்களும் உடனடியாக களையப்பட்டு என் இதயம் தூய்மை அடைந்தது. உடனே அவர்களது வாழ்வில் எனக்கு கவர்ச்சி ஏற்பட்டது.

பதம் 1.5.26 : வியாசதேவரே, அச்சிறந்த வேதாந்திகளின் சகவாசத்தாலும், கருணையாலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வசீகரமான லீலைகளைப் பற்றிய அவர்களது உரையாடலை என்னால் கேட்க முடிந்தது. இவ்வாறு கவனமாகக் கேட்டதனால், பரம புருஷரைப் பற்றி கேட்பதிலுள்ள எனது சுவை ஒவ்வொரு அடியிலும் அதிகரித்தது.

பதம் 1.5.27 : மாமுனிவரே, பரம புருஷ பகவானிடம் உள்ள சுவையை நான் பெற்றவுடனேயே, பகவானைப் பற்றி கேட்பதில் என் கவனம் சிதறாமல் இருந்தது. மேலும் பகவானும், நானும் ஆன்மீகமானவர்கள் என்பதால், என்னுடைய சுவை வளர வளர, அறியாமையால்தான் நான் ஸ்தூல மற்றும் சூட்சுமத் திரைகளை உண்மையானவையாக ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதை என்னால் உணர முடிந்தது.

பதம் 1.5.28 : இவ்வாறாக மழைக்காலத்திலும், இலையுதிர்காலத்திலும் மகாத்மாக்களான இம்முனிவர்கள் பகவான் ஹரியின் கலப்பற்ற பெருமைகளை இடைவிடாமல் பாடுவதைக் கேட்கும் வாய்ப்பை நான் பெற்றேன். இதன் விளைவாக எனது பக்தித் தொண்டு துவங்கியதும், ரஜோ மற்றும் தமோ குணங்களின் திரைகள் மறைந்தன.

பதம் 1.5.29 : அந்த முனிவர்களிடம் நான் மிகவும் அன்பு கொண்டிருந்தேன். நடத்தையில் நான் சாதுவாக இருந்தேன். அவர்களது தொண்டில் எனது பாவங்கள் அனைத்தும் வேரறுக்கப்பட்டன. அவர்களிடம் நான் இதயபூர்வமான நம்பிக்கை கொண்டிருந்தேன். எனது புலன்களை நான் கட்டுப்படுத்தியதுடன், உடலாலும், மனதாலும் அவர்களை நான் உறுதியாகப் பின்பற்றினேன்.

பதம் 1.5.30 : நிராதரவான ஆத்மாக்களிடம் மிகவும் அன்பு கொண்டிருந்த அந்த பக்தி வேதாந்திகள் புறப்பட்டுச் செல்லும்போது, பரம புருஷராலேயே உபதேசிக்கப்பட்டதான மிகவும் இரகசியமான அந்த விஷயத்தைப் பற்றி எனக்கு உபதேசித்தனர்.

பதம் 1.5.31 : அந்த இரகசியமான அறிவினால், அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய சக்தியின் ஆதிக்கத்தை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதை அறிவதால், அவரிடம் திரும்பிச் சென்று, அவரை நேருக்கு நேராக ஒருவரால் சந்திக்க முடியும்.

பதம் 1.5.32 : பிராமணரான வியாசதேவரே, ஒருவரது செயல்களை பரம புருஷரான முழுமுதற் கடவுளுக்கு (ஸ்ரீகிருஷ்ணர்) அர்ப்பணிப்பதுதான் எல்லா தொல்லைகளையும், துன்பங்களையும் அகற்றுவதற்கான மிகச்சிறந்த நோய் தீர்க்கும் முறை என்று கற்றவர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பதம் 1.5.33 : நல்லாத்மாவே, மருத்துவ சிகிச்சைக்கேற்ப அளிக்கப்பட்ட ஒரு பொருள், அதே பொருளால் விளைவிக்கப்பட்ட ஒரு நோய்க்கு மருந்தாக இருப்பதில்லையா?

பதம் 1.5.34 : இவ்வாறாக, ஒரு மனிதனின் எல்லாச் செயல்களும் பகவானின் தொண்டிற்காக அர்ப்பணிக்கப்படும் போது, நிரந்தரமான பந்தத்தை விளைவித்த அதே செயல்களே, செயல் எனும் மரத்தை அழித்துவிடக்கூடியவையாக மாறுகின்றன.

பதம் 1.5.35 : இங்கு, இப்பிறவியில், பகவானின் திருப்திக்காக மேற்கொள்ளப்படும் எச்செயலும் பக்தி யோகம், அல்லது பகவானின் உன்னத அன்புத் தொண்டு என அழைக்கப்படுகிறது. மேலும், அறிவு என்று அழைக்கப்படுவது இந்த பக்தி யோகத்துடன் இணை பிரியாததாக ஆகிவிடுகின்றது.

பதம் 1.5.36 : பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரின் உத்தரவுக்கேற்ப கடமைகளைச் செய்யும் வேளையில் ஒருவர் பகவானையும், அவரது நாமங்களையும், குணங்களையும் இடைவிடாமல் நினைத்துக் கொண்டு இருக்கிறார்.

பதம் 1.5.37 : பகவானின் பூரண விரிவங்கங்களாகிய பிரதியும்னர், அநிருத்தர் மற்றும் சங்கர்ஷணர் ஆகியோரின் பெருமைகளுடன் வாசுதேவரின் பெருமைகளையும் நாம் பாடுவோம்.

பதம் 1.5.38 : இவ்வாறாக, பௌதிக உருவம் இல்லாத பரம புருஷ பகவானாகிய விஷ்ணுவை, திவ்யமான ஒலி வடிவில் வழிபடுபவர்தான் உண்மையான ஞானியாவார்.

பதம் 1.5.39 : பிராமணரே, வேதங்களின் அந்தரங்கப் பகுதிகளில் கூறப்படுவதுபோல், முதலில் எனக்கு பகவானைப் பற்றிய உன்னத அறிவு பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரால் புகட்டப்பட்டது. பிறகு ஆன்மீக ஐஸ்வர்யங்களும், அதன் பிறகு அந்தரங்கமான அன்புத் தொண்டும் அவரால் அளிக்கப்பட்டன.

பதம் 1.5.40 : ஆகவே, தயவுசெய்து, உமது பரந்த வேத அறிவினால் நீர் கற்றறிந்த, சர்வ வல்லமையுள்ள பகவானின் செயல்களைப் பற்றி விளக்குவீராக. ஏனெனில் அது பேரறிஞர்களின் விருப்பங்களை திருப்திப்படுத்தும். அதே சமயம், எப்பொழுதும் கடுமையான வேதனைகளால் துன்புறும் பாமர மக்களின் துன்பங்களையும் குறைத்துவிடும். உண்மையில், இத்தகைய துன்பங்களில் இருந்து வெளியேறுவதற்கு வேறு வழியில்லை.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare