அத்தியாயம் – 4
ஸ்ரீ நாரதரின் தோற்றம்
பதம் 1.4.1
வ்யாஸ உவாச
இதி ப்ருவாணம் ஸம்ஸ் தூய முனீனாம் தீர்க-ஸத்ரிணாம்
வ்ருத்த:குல-பதி: ஸுதம் பஹ்வ்ருச: சௌனகோ ‘ப்ரவீத்

வ்யாஸ—வியாசதேவர்; உவாச-கூறினார். இதி—இவ்வாறு; ப்ருவாணம்—பேசி; ஸம்ஸ்தூய—பாராட்டி: முனீனாம்—பெரும் முனிவர்களின்; தீர்க—நீடித்த: ஸத்ரிணாம்—யாகம் செய்வதில் ஈடுபட்டு இருந்தவர்களின்; வ்ருத்த:—வயதான; குல—பதி:—சபைத் தலைவர்: ஸுதம்—சூத கோஸ்வாமியிடம்; பஹு—ருச:—கற்றறிந்த; சௌனக:— சௌனகர் எனும் பெயர் கொண்ட: அப்ரவீத்—கூறினார்.

இவ்வாறாக, நீடித்த யாகத்தில் ஈடுபட்டிருந்த முனிவருக்கெல்லாம் வயது முதிர்ந்த தலைவராக இருந்த சௌனக முனி, சூத கோஸ்வாமி பேசியதைக் கேட்டு, அவரைப் பின்வருமாறு பாராட்டிப் பேசினார்.

பதம் 1.4.2
சௌனக உவாச
ஸூத ஸூத மஹா-பாக வத நோ வததாம் வர
கதாம் பாகவதீம் புண்யாம் யத் ஆஹ பகவான் சுக:

சௌனக—சௌனகர்; உவாச-கூறினார்; ஸூத ஸூத—சூதகோஸ்வாமி: மஹா-பாக—பேரதிர்ஷ்டம் வாய்ந்தவர்; வத—தயவுசெய்து கூறுங்கள்: ந—எங்களிடம்; வததாம்-பேசக்கூடியவர்களில்; வர—மரியாதைக்குரிய; கதாம்—செய்தியை; பாகவதீம்—பாகவதத்தின்: புண்யாம்—புண்ணியம் வாய்ந்த: யத்—அது; ஆஹ—பேசப்பட்ட; பகவான்-சக்திமிக்க; சுக—ஸ்ரீ சுக தேவ கோஸ்வாமி.

சௌனகர் கூறினார்; சூத கோஸ்வாமியே, பேச்சாளர்களில் தாங்களே பேரதிர்ஷ்டம் உடையவரும், மரியாதைக்கு உரியவருமாவீர். சக்திமிக்க முனி சிரேஷ்டராகிய சுகதேவ கோஸ்வாமியால் பேசப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் புண்ணியச் செய்தியை தயவுசெய்து கூற வேண்டுகிறோம்.

பதம் 1.4.3
கஸ்மின் யுகே ப்ரவ்ருத்தேயம் ஸ்தானே வா கேன ஹேதுனா
குத: ஸஞ்சோதித: க்ருஷ்ண: க்ருதவான் ஸம்ஹிதாம் முனி:

கஸ்மின்—எந்த; யுகே—யுகத்தில்; ப்ரவ்ருத்தா—துவங்கியது; இயம்—இது; ஸ்தானே—இடத்தில்; வா—அல்லது; கேன—எதனால்; ஹேதுனா—காரணத்தினால்; குத:- எங்கிருந்து; ஸஞ்சோதித—தூண்டப்பட்டு; க்ருஷ்ண:—கிருஷ்ண த்வைபாயன வியாசர்; க்ருதவான்—தொகுத்தார்; ஸம்ஹிதாம்—வேத இலக்கியம்; முனி—கற்றறிந்த.

எப்போது, எங்கு இது முதலில் ஆரம்பமானது? இது ஏன் இயற்றப்பட்டது? இந்த இலக்கியத்தைத் தொகுப்பதற்கான ஊக்கம் கிருஷ்ண த்வைபாயன வியாசருக்கு எங்கிருந்து கிடைத்தது?

பதம் 1.4.4
தஸ்ய புத்ரோ மஹா-யோகீ ஸம-த்ருண் நிர்விகல்பக:
ஏகாந்த-மதிர் உன்னித்ரோ கூடோ மூட இவேயதே

தஸ்ய-அவரது; புத்ர:-புத்திரர்; மஹா-யோகீ—சிறந்ததொரு பக்தர்: ஸம-த்ருக்-சமநிலையுள்ளவர்; நிர்விகல்ப:—சுத்த அத்வைதி; ஏகாந்த-மதி:—அத்வைதத்தில் அல்லது மன ஒருமையில் நிலைத்து; உன்னித்ர:- அறியாமையைக் கடந்தவர்; கூட:—அறிமுகமாகவில்லை; மூட—மூடனை; இவ—போல்; இயதே—போல் தோன்றுகிறார்.

மிகச்சிறந்த பக்தரான அவரது (வியாசதேவரின்) புத்திரர், சமநிலையுடைய ஓர் அத்வைதியாவார். அவரது மனம் எப்பொழுதும் அத்வைதத்திலேயே நிலைத்திருந்தது. அவர் பௌதிக செயல்களுக்கு மேற்பட்டவராக இருந்தார். ஆனால் புற அறிமுகம் இல்லாததால், அவர் அறியாமையில் உள்ளவரைப் போல் காணப்பட்டார்.

பதம் 1.4.5
த்ருஷ்ட்வானுயாந்தம் ருஷிம் ஆத்மஜம் அபி அனக்னம்
தேவ்யோ ஹ்ரியா பரித துர் ந ஸுதஸ்ய சித்ரம்
தத் வீக்ஷ்ய ப்ருச்சதி முனௌ ஜக துஸ் தவாஸ்தி
ஸ்த்ரீ-பும்-பிதா ந து ஸுதஸ்ய விவிக்த—த்ருஷ்டே:

த்ருஷ்ட்வா-காண்பதன் மூலமாக; அனுயாந்தம்-பின்தொடர்ந்து; ருஷிம்—முனிவர்; ஆத்மஜம்—அவரது மகன்: அபி—எனினும், அனக்னம்—உடையுடன்; தேவ்ய:-அழகிய இளம் பெண்கள்; ஹ்ரியா—வெட்கத்தால்; பரிதது—உடலை மறைத்தனர்; ந—இல்லை; ஸுதஸ்ய—மகனின்; சித்ரம்—ஆச்சரியமாக இருந்தது; தத் வீக்ஷ்ய—அதைக் கண்டு; ப்ருச்சதி— கேட்கும்; முனௌ—முனிவரிடம் (வியாசரிடம்); ஜகது—பதிலளித்தார்; தவ—உமது; அஸ்தி—அங்குள்ள; ஸ்த்ரீ—பும்;—ஆண், பெண்: பிதா—வேறுபாடுகள்; ந—இல்லை; து-ஆனால்; ஸுதஸ்ய-புத்திரனின்; விவிக்த— தூய்மையடைந்த; த்ருஷ்டே—காணும் ஒருவரின்.

வியாசதேவர் தமது புதல்வரை பின்தொடரும்போது அவர் ஆடை அணிந்திருந்தபோதிலும், ஆடையின்றி நீராடிக் கொண்டிருந்த அழகிய இள மங்கைகள் துணியால் தங்கள் உடல்களை மறைத்துக் கொண்டனர். ஆனால் அவரது புதல்வர் கடந்து செல்லும் போது அவர்கள் அப்படிச் செய்யவில்லை. முனிவர் இதைப் பற்றி விசாரித்தார். அதற்கு அந்த இளம் பெண்கள், அவரது புத்திரன் தூய்மையடைந்த நிலையில் இருந்ததால், தங்களைக் காணும் போது ஆண், பெண் வேறுபாட்டை அவர் உணரவில்லை என்றும், ஆனால் முனிவரோ அத்தகைய வேறுபாடுகளைக் கொண்டிருந்தார் என்றும் கூறினர்.

பதம் 1.4.6
கதம் ஆலக்ஷித: பௌரை: ஸம்ப்ராப்த: குரு-ஜாங்கலான்
உன்மத்த-மூக-ஜடவத் விசரன்—கஜ-ஸாஹ்வயே

கதம்—எப்படி; ஆலக்ஷித-அறிந்தனர்; பௌரை:-மக்களால்; ஸம்ப்ராப்த: — அடைந்து; குரு-ஜாங்கலான்:—குரு ஜாங்கல பிரதேசத்தில்; உன்மத்த-பித்து; மூக-ஊமை; ஜடவத்-வளர்ச்சி குன்றிய; விசரன்—சுற்றித் திரியும்; கஜ—ஸாஹ்வயே: —ஹஸ்தினாபுரம்.

பித்தனைப் போலவும், ஊமையாகவும், வளர்ச்சி குன்றியவரைப் போலவும் தோன்றிய அவர் (வியாசரின் புதல்வராகிய ஸ்ரீல சுகதேவர்) குரு, ஜாங்கள பிரதேசங்களில் சுற்றித்திரிந்தபின், ஹஸ்தினாபுர (இப்போதுள்ள டெல்லி) நகரத்தினுள் பிரவேசித்தபோது, எந்த விதத்தில் மக்கள் அவரை அடையாளம் கண்டனர்?

பதம் 1.4.7
கதம் வா பாண்டவேயஸ்ய ராஜர்ஷேர் முனினா ஸஹ
ஸம்வாத: ஸமபூத் தாத யத்ரைஷா ஸாத்வதீ ஸ்ருதி:

கதம்-அதெப்படி: வா-தவிரவும்; பாண்டவேயஸ்ய—பாண்டுவின் வம்சத்தில் வந்தவரின் (பரீட்சித்து): ராஜர்ஷே-ராஜரிஷியின்: முனினா—முனிவருடன்; ஸஹ—உடன்; ஸம்வாத:—உரையாடல்; ஸமபூத்—நிகழ்ந்தது: தாத—பேரன்புமிக்கவரே; யத்ர—அதன் பிறகு; ஏஷா—இதைப் போன்ற: ஸாத்வதீ—உன்னதமான; ஸ்ருதி:-வேதங்களின் சாராம்சம்.

வேதங்களின் சாரமான உன்னதமான இந்த (பாகவத) சம்வாதம், மாமுனிவரான சுகதேவருக்கும், பரீட்சித்து மகாராஜனுக்கும் இடையில் எப்படி ஏற்பட்டது?

பதம் 1.4.8
ஸகோ-தோஹன-மாத்ரம் ஹி க்ருஹேஷு க்ருஹ-மேதினாம்
அவேக்ஷதே மஹா-பாகஸ் தீர்தி-குர்வம்ஸ் தத் ஆஸ்ரமம்

ஸ-அவர் (சுகதேவ கோஸ்வாமி); கோ—தோஹன-மாத்ரம்—பசுவை கறப்பதற்குத் தேவையான நேரம் மட்டுமே; ஹி-நிச்சயமாக; க்ருஹேஷு—வீட்டில்; க்ருஹ—மேதினாம்:—குடும்பஸ்தர்களின்; அவேக்ஷதே—காத்திருக்கிறார்; மஹா-பாக:—மகாபாக்கியசாலி; தீர்தீ—தீர்த்த யாத்திரை; குர்வன்—உருமாற்றம்; தத் ஆஸ்ரமம்—வசிப்பிடம்.

அவர் (சுகதேவ கோஸ்வாமி), பசு கறக்கப்படும் கால அளவுக்கு இல்லறவாசி ஒருவரின் வீட்டு வாயிலில் காத்திருக்கும் பழக்கம் உள்ளவராவார். இவ்வாறு அவர் செய்தது கூட அந்த வீட்டை புனிதப்படுத்துவதற்குத்தான்.

பதம் 1.4.9
அபிமன்யு-ஸுதம் ஸூத ப்ராஹூர் பாகவதோத்தமம்
தஸ்ய ஜன்ம மஹாஸ்சர்யம் கர்மாணி ச க்ருணீஹி ந:

அபிமன்யு—ஸுதம்—அபிமன்யுவின் புதல்வரான: ஸூத-சூதரே; ப்ராஹு—என்று கூறப்படுகிறது; பாகவத—உத்தமம் — பகவானின் முதல்தரமான பக்தர்; தஸ்ய—அவரது; ஜன்ம-பிறப்பு; மஹா ஆஸ்சர்யம்—மிகவும் அற்புதமான; கர்மாணி- செயல்கள்; ச-மேலும்; க்ருணீஹி—தயவுசெய்து கூறுங்கள்; ந:— எங்களிடம்

பரீட்சித்து மகாராஜன் பகவானின் முதல்தரமான பக்தன் என்றும், அவரது பிறப்பும், செயலும் அற்புதமானவை என்றும், சொல்லப்படுகிறது. தயவுசெய்து அவரைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்.

பதம் 1.4.10
ஸ ஸம்ராத் கஸ்ய வா ஹேதோ: பாண்டூனாம் மான-வர்தன:
ப்ராயோபவிஷ்டோ கங்காயாம் அனாத்ருயாதிராட்-ஸ்ரீயம்

ஸ—அவர். ஸம்ராத்—சக்கரவர்த்தி, கஸ்ய—என்ன; வா—அல்லது; ஹேதோ—காரணத்திற்காக; பாண்டூனாம்—பாண்டு புத்திரர்களின்; மான-வர்தன:—குடும்பத்தை சிறப்பிப்பவர், ப்ராய-உபவிஷ்ட:—அமர்ந்து கொண்டும், உபவாசம் இருந்து கொண்டும்; கங்காயாம்—கங்கை நதிக்கரையில்; அனாத்ருத்ய—அலட்சியம் செய்து; அதிராட்— அடைந்த இராஜ்ஜியத்தை; ஸ்ரீயம்—-செல்வங்கள்.

அவர் பெரும் சக்கரவர்த்தியாக இருந்ததுடன், அவரது இராஜ்ஜியத்தின் எல்லாச் செல்வங்களையும் தன்னுடையதாகவும் பெற்றிருந்தார். பாண்டு வம்சத்தின் கௌரவத்தை அதிகரிக்கும் அளவுக்கு அவர் மிக உயர்ந்தவராகவும் இருந்தார். அவர் ஏன் அனைத்தையும் துறந்து கங்கைக் கரையில் இறக்கும்வரை உபவாசம் இருந்தார்?

பதம் 1.4.11
நமந்தி யத்—பாத—நிகேதம் ஆத்மன:
சிவாய ஹானீய தனானி சத்ரவ:
கதம் ஸ வீர: ஸ்ரீயம் அங்க துஸ்த்யஜாம்
யுவைஷதோத்ஸ்ரஷ்டும் அஹோ ஸஹாஸுபி:

நமந்தி—தலை வணங்குகின்றனர்; யத்-பாத:—யாருடைய பாதங்களின்; நிகேதம்—கீழ்; ஆத்மன:—சொந்த; சிவாய — நன்மை; ஹானீய—கொண்டு வருவது வழக்கம்; தனானி-தனம்; சத்ரவ:—எதிரிகள்; கதம்—என்ன காரணத்திற்காக; ஸ—அவர்; வீர:—வீரமுள்ள; ஸ்ரீயம்— செல்வங்களை; அங்க—ஓ; துஸ்த்யஜாம்—கடக்க முடியாத; யுவா—முழு இளமையில்; ஐஷத— விரும்பினார்; உத்ஸ்ரஷ்டும்—கைவிட; அஹோ—வியப்புக்குறி; ஸஹ—உடன்; அஸுபி:—வாழ்வு.

அவர் மிகச்சிறந்த சக்கரவர்த்தி என்பதால் அவரது எதிரிகளும் கூட முன்வந்து, அவரது பாதங்களில் வணங்கி, தங்களது சொந்த நன்மைக்காக தங்களது செல்வங்களை எல்லாம் அவரிடம் ஒப்படைத்தனர். அவர் இளமையும், பலமும் மிக்கவராகவும், அளவற்ற ஐஸ்வர்யங்களைப் பெற்றிருப்பவராகவும் இருந்தார். அவர் ஏன் உயிரையும் மற்றவைகளையும் துறக்க விரும்பினார்?

பதம் 1.4.12
ஷிவாய லோகஸ்ய பவாய பூதயே
ய உத்தம-ஸ்லோக-பராயணா ஜனா:
ஜீவந்தி நாத்மார்தம் அஸௌ பராஸ்ரயம்
முமோச நிர்வித்ய குத: கலேவரம்

ஷிவாய—நலம்; லோகஸ்ய—அனைத்து ஜீவராசிகளின்; பவாய—செழிப்புக்காக; பூதயே—பொருளாதார முன்னேற்றத்துக்காக; யே—உள்ள ஒருவர்; உத்தம-ஸ்லோகபராயணா:—முழு முதற் கடவுளுக்காக அர்ப்பணித்துக் கொண்ட; ஜனா:—மக்களின்; ஜீவந்தி— வாழ்கின்றனர்; ந—ஆனால் இல்லை; ஆத்ம-அர்தம்—சுயநலத்தில்; அஸெள—அது; பர—ஆஸ்ரயம்—மற்றவர்களின் அடைக்கலத்துக்காக; முமோச—துறந்தார்; நிர்வித்ய—எல்லா பற்றுக்களில் இருந்தும் விடுபட்டு; குத—எந்தக் காரணத்தினால்; கலேவரம்-நிலையற்ற உடல்.

முழுமுதற் கடவுளிடம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், மற்றவர்களின் நலம், முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றுக்காகவே வாழ்கின்றனர். வேறெந்த சுய நலத்திற்காகவும் அவர்கள் வாழ்வதில்லை. எனவே சக்கரவர்த்தி (பரீட்சித்து) பெளதிக உடமையின் மீதுள்ள எல்லா பற்றிலிருந்தும் விடுபட்டவராக இருந்தபோதிலும், பிறருக்கு அடைக்கலமாக விளங்கிய அவரது உடலை அவர் எப்படி துறக்கக்கூடும்?

பதம் 1.4.13
தத் ஸர்வம் ந: ஸமாசக்ஷ்வ ப்ருஷ்டோ யத் இஹ கிஞ்சன
மன்யே த்வாம் விஷயே வாசாம் ஸ்னாதம் அன்யத்ர சாந்தஸாத்

தத்—அவை: ஸர்வம்—அனைத்தையும்: ந—எங்களிடம்; ஸமாசக்ஷ்வ—தெளிவாக விளக்குவீராக; ப்ருஷ்ட:—வினவப்பட்ட, யத் இஹ—இங்கு: கிஞ்சன—அனைத்தையும்: மன்யே—நாங்கள் நினைக்கிறோம்; த்வாம்—தாங்கள்: விஷயே—எல்லா விஷயங்களிலும்; வாசாம்—வார்த்தைகளின் அர்த்தங்கள்; ஸ்னாதம்—முழுமையாக அறிந்திருக்கிறீர்: அன்யத்ர—தவிர; சாந்தஸாத்—வேதங்களின் ஒரு பகுதியை.

வேதங்களில் உள்ள சில விஷயங்களைத் தவிர மற்றெல்லா விஷயங்களின் பொருளையும் அறிவதில் தாங்கள் நிபுணர் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே உங்களிடம் இப்போது நாங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் உரிய விடைகளை உங்களால் தெளிவாக விளக்கிக் கூற முடியும்.

பதம் 1.4.14
ஸூத உவாச
த்வாபரே ஸமனுப்ராப்தே த்ருதீயே யுக—பர்யயே
ஜாத: பராசராத் யோகி வாஸவ்யாம் கலயா ஹரே:

ஸூத—சூத கோஸ்வாமி; உவாச-கூறினார்; த்வாபரே—இரண்டாவது யுகத்தில்; ஸமனுப்ராப்தே—தோற்றத்தின் போது; த்ருதீய-மூன்றாவது; யுக—யுகம்; பர்யயே—அந்த இடத்தில்; ஜாத:—பெறப்பட்டார்; பராசராத்—பராசரரால்; யோகி—மாமுனிவர்; வாஸவ்யாம்—வஸுவினுடைய புதல்வியின் கருவில்; கலயா—விரிவங்கத்தில்; ஹரே:—முழுமுதற் கடவுளின்.

சூத கோஸ்வாமி கூறினார்: இரண்டாவது யுகமும், மூன்றாவது யுகமும் முன்னும் பின்னுமாகத் தோன்றிய வேளையில், வஸுவின் புதல்வியாகிய சத்தியவதியின் கருவில், பராசரரின் புதல்வராக மாமுனிவர் (வியாசதேவர்) அவதரித்தார்.

பதம் 1.4.15
ஸ கதாசித் ஸரஸ்வத்யா உபஸ்ப்ருஸ்ய ஜலம் சுசி:
விவிக்த ஏக ஆஸீன உதிதே ரவி—மண்டலே

ஸ—அவர்; கதாசித்—ஒருமுறை; ஸரஸ்வத்யா—சரஸ்வதி நதிக்கரையில்; உபஸ்ப்ருஸ்ய-காலை நீராட்டத்தை முடித்துக் கொண்டபின்; ஜலம்—நீர்; சுசி:—தூய்மையடைந்து; விவிக்தே—மனஒருமை; ஏக-தனியாக; ஆஸீன—இவ்வாறாக அமர்ந்து; உதிதே-உதயத்தின் போது; ரவி-மண்டலே—சூரிய கோளத்தின்.

ஒரு முறை அவர் (வியாசதேவர்) சூரிய உதயத்தின் போது, சரஸ்வதி நதியில் தமது சந்தியா வந்தனத்தை முடித்து விட்டு, மனதை ஒருமுகப்படுத்துவதற்காக தனிமையாக அமர்ந்தார்.

பதம் 1.4.16
பராவர-க்ஞ:ஸருஷி: காலேனாவ்யக்த-ரம்ஹஸா
யுக-தர்ம-வ்யதிகரம் ப்ராப்தம் புவி யுகே யுகே

பர—அவர—கடந்த மற்றும் எதிர் காலங்கள்; க்ஞ:—அறிபவர்; ஸ—அவர்; ருஷி:—வியாசதேவர்; காலேன—காலப்போக்கில்: அவ்யக்த—தோன்றாத; ரம்ஹஸா—பெரும் சக்தியால்; யுக-தர்ம — யுகத்திற்கேற்ப செயற்படுகிறார்; வ்யதிகரம்— ஒழுங்கின்மைகள்; ப்ராப்தம்—பெருகியதால்; புவி— பூமியில்; யுகே யுகே—வெவ்வேறு யுகங்கள்.

மாமுனிவரான வியாசதேவர் யுகக் கடமைகளில் முரண்பாடுகளைக் கண்டார். வெவ்வேறு யுகங்களில் நிகழும் இது, காலப்போக்கில் கண்ணுக்குப் புலப்படாத சக்திகளால் பூமியில் நிகழ்கின்றது.

பதங்கள் 1.4.17 – 1.4.18
பௌதிகானாம் ச பாவானாம் சக்தி-ஹ்ராஸம் ச தத்—க்ருதம்
அஸ்ரத்ததானான் நிஹ்ஸத்வான் துர்மேதான் ஹ்ரஸிதாயுஷ:
துர்பகாம்ஸ் ச ஜனான் வீக்ஷ்ய முனிர் திவ்யேன சக்ஷுஷா
ஸர்வ—வர்ணாஸ்ரமாணாம் யத் த்யௌ ஹிதம் அமோக-த்ருக்

பௌதிகானாம் ச—பௌதிகமான அனைத்தைப் பற்றியும் கூட; பாவானாம்—செயல்கள்; சக்தி—ஹ்ராஸம் ச;—மேலும் இயற்கைச் சக்தியின் சீரழிவு; தத்-க்ருதம்;—அதனால் செய்யப்பட்ட; அஸ்ரத்ததானான்—நம்பிக்கையற்றவர்களின்; நிஹ்ஸத்வான்—நற்குணத்தில் இல்லாததால் விளைந்த பொறுமையின்மை; துர்மேதான்—மந்த புத்தியுள்ள; ஹ்ரஸித—குறைக்கப்பட்ட; ஆயுஷ—ஆயுளின்; துர்பகான் ச—அதிர்ஷ்டம் இல்லாதவர்களாகவும்; ஜனான்—பொதுமக்கள்; வீக்ஷ்ய—காண்பதன் மூலம்: முனி—முனிவர்; திவ்யேன—தெய்வீகத்தின் மூலம்; சக்ஷுஷா—காட்சி; ஸர்வ—எல்லா; வர்ணஆஸ்ரமாணாம்—வாழ்வின் எல்லா நிலைகளின், யத்—என்ன; தத்யௌ—ஆழ்ந்து சிந்தித்தார்; ஹிதம்—நன்மை; அமோக-த்ருக்— பூரண அறிவாற்றலைக் கொண்டவர்.

யுகத்தின் தூண்டுதலால் பௌதிகமான அனைத்தும் சீரழியப் போவதைப் பூரண ஞானம் கொண்ட அந்த மாமுனிவரால், அவரது ஞானக் கண்களைக் கொண்டு காண முடிந்தது. பொதுவாக மக்களுடைய ஆயுள் குறைந்துவிடுவதுடன், நற்குணத்தின் பற்றாக்குறையால் அவர்கள் பொறுமை இழந்தவர்களாகவும் இருப்பார்கள் என்பதையும் கூட அவரால் காணமுடிந்தது. இவ்வாறாக எல்லா வர்ணங்களிலும் ஆஷ்ரமங்களிலும் உள்ள எல்லோருடைய நன்மைக்காகவும் அவர் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார்.

பதம் 1.4.19
சா துர் ஹோத்ரம் கர்ம சுத்தம் ப்ரஜானாம் வீக்ஷ்ய வைதிகம்
வ்யததாத் யக்ஞ-ஸந்தத்யை வேதம் ஏகம் சதுர்-விதம்

சாது—நான்கு; ஹோத்ரம்-யாகத் தீ; கர்ம சுத்தம்—செயலின் தூய்மை; ப்ரஜானாம்—பொதுமக்களின்; வீஷ்ய-கண்டபின்; வைதிகம்—வேதச் சடங்குகளுக்கு ஏற்ப; வ்யததாத்—ஆக்கினார்; யக்ஞ—யாகம்; ஸந்தத்யை—பெருகச் செய்வதற்கு; வேதம் ஏகம்—ஒரே வேதத்தை; சது-விதம்:— நான்கு பிரிவுகளில்.

வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யாகங்கள்தான் மக்களின் அலுவல்களை தூய்மைப்படுத்துவதற்கு ஏற்ற வழி என்பதை அவர் கண்டார். மேலும் இம்முறையை எளியதாக்குவதற்கும், மக்களிடையே அதைப் பரப்புவதற்கும், வேதத்தை அவர் நான்காகப் பிரித்தார்.

பதம் 1.4.20
ரிக்-யஜு:ஸாமாதர்வாக்யா வேதாஸ் சத்வார உத்ருதா:
இதிஹாஸ-புராணம் ச பஞ்சமோ வேத உச்யதே

ரிக்-யஜு-ஸாம-அதர்வ-ஆக்யா—நான்கு வேதங்களின் பெயர்கள்; வேதா—வேதங்கள்; சத்வார—நான்கு; உத்ருதா:—தனிப்பாகங்களாக ஆக்கப்பட்டன; இதிஹாஸ—சரித்திரக் குறிப்புகள் (மகாபாரதம்); புராணம் ச—மஹாபுராணங்கள்; பஞ்சம:—ஐந்தாவது; வேத—அறிவின் ஆதி மூலம்; உச்யதே—என்று கூறப்படுகிறது.

வேதங்களின் நான்கு பிரிவுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. ஆனால் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சரித்திர நிகழ்ச்சிகளும், உண்மையான கதைகளும் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுகின்றன.

பதம் 1.4.21
தத்ரர்க்-வேத-தர:பைல: ஸாமகோ ஜைமினி: கவி:
வைசம்பாயன ஏவைகோ நிஷ்ணாதோ யஜுஷாம் உத

தத்ர-அதன் பிறகு; ரிக்-வேத-தர—ரிக் வேதத்தின் பேராசிரியராகவும்; பைல—பைல எனும் ரிஷி: ஸாமக-சாம வேதத்திற்கும். ஜைமினி:- ஜைமினி எனும் ரிஷி; கவி:- உயர்ந்த தகுதியுள்ள; வைசம்பாயன—வைசம்பாயன எனும் ரிஷி; ஏவ—மட்டுமே; ஏக— தனியாக; நிஷ்ணாத:-நன்கு கற்றறிந்தவர்; யஜுஷாம்—யஜுர் வேதத்தின்; உத—புகழப்பட்டார்.

வேதங்கள் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டபின், பைல ரிஷி ரிக் வேதத்தின் பேராசிரியரானார். ஜைமினி சாம வேதத்திற்கு பேராசிரியரானார். வைசம்பாயனர் மட்டும் யஜுர் வேதத்தினால் புகழப்படுவரானார்.

பதம் 1.4.22
அதர்வாங்கிரஸாம் ஆஸித் ஸுமந்துர் தாருணோ முனி:
இதிஹாஸ—புராணானாம் பிதா மே ரோமஹர்ஷண:

அதர்வ—அதர்வ வேதம்; அங்கிரஸாம்—அங்கிரா ரிஷியிடம்; ஆஸீத் —ஒப்படைக்கப்பட்டது; ஸுமந்து—சுமந்து முனி என்று கூட அறியப்படுபவர்; தாருண—அதர்வ வேதத்தில் தீவிர சிரத்தை கொண்டவர்; முனி—முனிவர்; இதிஹாஸபுராணானாம்-சரித்திரக் குறிப்புகள் மற்றும் புராணங்கள் ஆகியவற்றின்; பிதா—தந்தை; மே—எனது; ரோமஹர்ஷண-ரோமஹர்ஷண ரிஷி.

சுமந்து முனி எனப்படும் அங்கிரா முனிவர் ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் அதர்வ வேதம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் எனது தந்தையான ரோமஹர்ஷணரிடம் புராணங்களும், சரித்திரக் குறிப்புகளும் ஒப்படைக்கப்பட்டன.

பதம் 1.4.23
த ஏத ருஷயோ வேதம் ஸ்வம் ஸ்வம் வ்யஸ்யன் அனேகதா
சிஸ்யை: ப்ரசிஷ்யைஸ் தச்-சிஷ்யைர் வேதாஸ் தே சாகினோ ‘பவன்

தே—அவர்கள்; ஏதே—இவ்வெல்லா; ருஷய—கற்றறிந்த அறிஞர்கள்; வேதம்—குறிப்பிட்ட வேதங்கள்; ஸ்வம் ஸ்வம்—அவரவர்களிடம் ஓப்படைக்கப்பட்ட வேதங்களில்; வ்யஸ்யன்—ஒப்படைத்தனர்; அநேகதா-அநேக; சிஷ்யை:—சீடர்கள்; ப்ரசிஷ்யை— சீடர்களின் சீடர்கள்: த்த்சிஷ்யை—கொள்ளு சீடர்கள்; வேதா: தே—தனிப்பட்ட வேதங்களைப் பின்பற்றுபவர்கள்; சாகின:—வேறுபட்ட கிளைகள்; அபவன்;-இவ்வாறு ஏற்பட்டது.

வேத வல்லுநர்களான இவர்கள் அனைவரும், வேதங்களை அவர்களது பல சீடர்களிடமும், சீடர்களின் சீடர்களிடமும், கொள்ளு சீடர்களிடமும் ஒப்படைத்தனர். இவ்வாறாக வேதங்களைப் பின்பற்றுபவர்களின் தனிப்பட்ட கிளைகள் உபயோகத்திற்கு வந்தன.

பதம் 1.4.24
த ஏவ வேதா துர்மேதைர் தார்யந்தே புருஷைர் யதா
ஏவம் சகார பகவான் வ்யாஸ: க்ருபண வத்ஸல:

தே-அந்த; ஏவ—நிச்சயமாக; வேதா—அறிவு நூல்; துர்மேதை—குறைந்த அறிவுள்ளவர்களால்; தார்யந்தே-கிரகிக்க முடியும்; புருஷை-மனிதனால்; யதா-இயன்ற அளவு; ஏவம்—இவ்வாறாக; சகார—தொகுத்தார்; பகவான்-சக்தி வாய்ந்தவர்; வ்யாஸ—மாமுனிவரான வியாசர்; க்ருபண வத்ஸல—அறியாமை மிகுந்த பாமர மக்களிடம் மிகவும் அனுதாபம் கொண்டார்.

இவ்வாறாக, அறியாமையிலுள்ள பாமர மக்களிடம் பெரும் அனுதாபம் கொண்டவரும், சிறந்த முனிவருமான வியாசதேவர், குறைந்த அறிவு படைத்தவர்களால் புரிந்துகொள்ளும் வகையில் வேதங்களை தொகுத்தளித்தார்.

பதம் 1.4.25
ஸ்த்ரீ-சூத்ர-த்விஜ பந்தூனாம் த்ரயீ ந ஸ்ருதி-கோசரா
கர்ம-ஸ்ரேயஸி மூடானாம் ஸ்ரேய ஏவம் பவேத் இஹ
இதி பாரதம் ஆக்யானம் க்ருபயா முனினா க்ருதம்

ஸ்த்ரீ—பெண் வகுப்பினர்; சூத்ர—தொழிலாளி வகுப்பினர்; த்விஜ பந்தூனாம்— இருபிறப்பு எய்தியவர்களுடைய நண்பர்களின்; த்ரயீ — மூன்று ; ந—இல்லை; ஸ்ருதி-கோசரா;—புரிந்துகொள்ள; கர்ம—செயல்களில்; ஸ்ரேயஸி-நலனில்; மூடானாம் –மூடர்களின்; ஸ்ரேய—உயர்ந்த நன்மை; ஏவம்—இவ்வாறாக, பவேத்—அடைந்தனர்; இஹ— இதனால்; இதி—இவ்வாறு எண்ணி; பாரதம்-புகழ் பெற்ற மகாபாரதம்; ஆக்யானம்— சரித்திர நிகழ்ச்சிகள் ; க்ருபயா – தனிப்பெருங்கருணையினால்; முனினா-முனிவரால்; க்ருதம்—முடிக்கப்பட்டது.

இரக்கமுள்ள மாமுனிவர், வாழ்வின் முடிவான இலட்சியத்தை அடைய இது மனிதனுக்கு உதவும் என்று எண்ணினார். இவ்வாறாக பெண்கள், தொழிலாளிகள் மற்றும் இருபிறப்பு எய்தியவர்களின் நண்பர்கள் ஆகியோருக்காக, மகாபாரதம் எனப்படும் மிகச்சிறந்த சரித்திர வரலாற்றை அவர் தொகுத்தார்.

பதம் 1.4.26
ஏவம் ப்ரவ்ருத்தஸ்ய ஸதா பூதானாம் ஸ்ரேயஸி த்விஜா:
ஸர்வாத்மகேனாபி யதா நா துஷ்யத் த்ருதயம் தத:

ஏவம்—இவ்வாறு; ப்ரவ்ருத்தஸ்ய—ஈடுபட்டு இருப்பவர்; ஸதா—எப்பொழுதும்; பூதானாம்-ஜீவராசிகளின்; ஸ்ரேயசி-முடிவான நன்மையில்; த்விஜா—இருபிறப்பு எய்தியவரே; ஸர்வாத்மகேன அபி—எல்லா வழிகளிலும்; யதா— அப்போதும்; ந—இல்லை; அதுஷ்யத் — திருப்தியடைந்தார்; ஹ்ருதயம்—மனம்; தத:— அப்போது

இருபிறப்பை எய்திய பிராமணர்களே, அனைவருடைய நன்மைக்காகவும் உழைப்பதில் தம்மை அவர் ஈடுபடுத்திக் கொண்டபோதிலும், அவரது மனம் திருப்தி அடையவில்லை.

பதம் 1.4.27
நாதிப்ரஸீதத் த்ருதய: ஸரஸ்வத்யாஸ் தடே சுசௌ
விதர்கயன் விவிக்த—ஸ்த இதம் சோவாச தர்ம-வித்

ந-இல்லை; அதிப்ரஸீதத் – மிகவும் மனத்திருப்தியடைந்து; ஹ்ருதய:- இதயத்தில்; ஸரஸ்வத்யா-சரஸ்வதி நதியின்; தடே— கரையில்; சுசௌ—தூய்மை பெற்று; விதர்கயன்- கருத்திற் கொண்டு; விவிக்த-ஸ்த:—தனியான ஓரிடத்தில் அமைந்துள்ள; இதம் ச— இதுவும் ; உவாச-கூறினார்; தர்ம-வித் — மதமென்பது என்ன என்பதை அறிந்தவர்.

இவ்வாறாக, மனத்திருப்தி அடையாத முனிவர் உடனே சிந்திக்கத் துவங்கினார். மதத்தின் சாராம்சத்தை அவர் அறிந்திருந்ததால், தமக்குள் பின்வருமாறு சொல்லிக் கொண்டார்.

பதங்கள் 1.4.28 – 1.4.29
த்ருத-வ்ரதேன ஹி மயா சந்தாம்ஸி குரவோ ‘க்னய:
மானிதா நிர்வ்யலீகேன க்ருஹீதம் சானுசாஸனம்
பாரத-வ்யபதேசேன ஹி ஆம்னாயார்தஸ் ச ப்ரதர்சித:
த்ருஸ்யதே யத்ர தர்மாதி ஸ்த்ரீ—சூத்ராதிபிர் அபி உத

த்ருத–வ்ரதேன:—கண்டிப்பானதொரு நல்லொழுக்க விரதத்தின் கீழ்; ஹி—நிச்சயமாக; மயா—என்னால்; சந்தாம்ஸி—வேத மந்திரங்கள்; குரவ:—ஆன்மீக குருமார்கள்; அக்னய:-யாகத் தீ; மானிதா — முறையாக வழிபட்டேன்; நிர்வ்யலீகேன—பாசாங்கு செய்யாமல்; க்ருஹீதம்—அதையும் ஏற்றுக்கொண்டேன்; அனுசாஸனம்—பரம்பரை ஒழுக்கம்; பாரத-மகாபாரதத்தை; வ்யபதேசேன—தொகுத்ததன் மூலமாக; ஹி—நிச்சயமாக; ஆம்னாய-அர்த—சீடப் பரம்பரையின் கருத்தை; ச-மேலும்; ப்ரதர்சித:—சரியாக விளக்கினேன்; த்ருஸ்யதே — எது தேவைப்படுகிறதோ அதன் வாயிலாக; யத்ர—எங்கு; தர்மஆதி— மதத்திற்குரிய வழியை; ஸ்த்ரீ-சூத்ர:—ஆதிபி; அபி—பெண்கள் மற்றும் சூத்திரர்கள் முதலியவர்களாலும்; உத—பேசப்பட்டது.

வஞ்சனையின்றி என்னால் விரதங்கள் அனுஷ்டிக்கப்பட்டு, வேதங்களும், அக்னிகளும், குருமார்களும் பூஜிக்கப்பட்டு, அவர்களுடைய கட்டளைகளும் நிறைவேற்றப்பட்டன. மகாபாரதத்தை விளக்கியதன் மூலமாக சீடப்பரம்பரையின் கருத்தையும் நான் தெளிவுப்படுத்தியுள்ளேன். இதனால் பெண்களாலும் சூத்திரர்களாலும் மற்றவர்களாலும் (இருபிறப்பு எய்தியவர்களின் நண்பர்கள்) கூட மதத்திற்கான வழியைக் கண்டு கொள்ள முடியும்.

பதம் 1.4.30
ததாபி பத மே தைஹ்யோ ஹி ஆத்மா சைவாத்மனா விபு:
அஸம்பன்ன இவாபாதி ப்ரஹ்ம-வர்சஸ்ய ஸத்தம:

ததாபி—என்றபோதிலும்; பத—குறை; மே—என்னுடையது; தைஹ்ய:—உடலில் அமைந்திருக்கும்; ஹி-நிச்சயமாக; ஆத்மா- ஜீவராசி; ச—மேலும்; ஏவ-கூட; ஆத்மனா-நானே; விபு—போதுமான; அஸம்பன்ன—தேவைப்படும்; இவ ஆபாதி-போல் காணப்படுகிறது; ப்ரஹ்ம-வர்சஸ்ய—வேதாந்திகளின்; ஸத்தம:—பரமன்.

என்னிடம் வேதங்களுக்குத் தேவையான அனைத்தும் முழுமையாக இருந்தாலும் எனக்கு மனநிறைவு ஏற்படவில்லை.

பதம் 1.4.31
கிம் வா பாகவதா தர்மா ந ப்ராயேண நிரூபிதா:
ப்ரியா: பரமஹம்ஸானாம் த ஏவ ஹி அச்யுத-ப்ரியா:

கிம்-வா:—அல்லது; பாகவதா-தர்மா:—உயிர்வாழிகளின் பக்தித் தொண்டு; ந—இல்லை; ப்ராயேண—கிட்டத்தட்ட; நிரூபிதா:—கற்பிக்கப்பட்டனர்; ப்ரியா:—பிரியமான: பரமஹம்ஸானாம்—பக்குவமடைந்த ஜீவன்களின்; தே ஏவ—அது கூட; ஹி—நிச்சயமாக; அச்யுத— களங்கமற்றவை ; ப்ரியா: – கவரும்.

பக்குவமடைந்த ஜீவன்களுக்கும், களங்கமற்றவரான பகவானுக்கும் பிரியமான பகவானின் பக்தித் தொண்டை நான் வலியுறுத்தாததே இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

பதம் 1.4.32
தஸ்யைவம் கிலம் ஆத்மானம் மன்ய மானஸ்ய கித்யத:
கிருஷ்ணஸ்ய நாரதோ ‘ப்யாகாத ஆஸ்ரமம் ப்ராக் உதாஹ்ருதம்

தஸ்ய — அவரது; ஏவம்—இவ்வாறாக; கிலம்- தாழ்ந்த; ஆத்மானம்— ஆத்மா; மன்யமானஸ்ய—மனதிற்குள் எண்ணி; கித்யத: – வருந்தி; க்ருஷ்ணஸ்ய—கிருஷ்ண த்வைபாயன வியாசரின்; நாரத: அப்யாகாத்—நாரதர் அங்கு வந்தார்; ஆஸ்ரமம்- குடிசை; ப்ராக்—முன்பு; உதாஹ்ருதம்— கூறினார்.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், கிருஷ்ண த்வைபாயன வியாசர் தமது குறைகளை எண்ணி வருந்திக்கொண்டு இருக்கும்போது, சரஸ்வதி நதிக் கரையிலுள்ள அவரது குடிலுக்கு நாரதர் வந்து சேர்ந்தார்.

பதம் 1.4.33
தம் அபிக்ஞாய ஸஹஸா ப்ரத்யுத்தாயாகதம் முனி:
பூஜயாம் ஆஸவிதிவன் நாரதம் ஸுர-பூஜிதம்

தம் அபிக்ஞாய—அவரது (நாரதரின்) வருகையின் நல்லதிர்ஷ்டத்தினைக் கண்டு; ஸஹஸா—திடீரென்று; ப்ரத்யுத்தாய— எழுந்து நின்று: ஆகதம்— வந்து சேர்ந்தார்; முனி: – வியாசதேவர்; பூஜயாம் ஆஸ—வழிபட்டார்; விதிவத்—விதிக்கு (பிரம்மாவுக்கு) அளிக்கப்படும் அதே மரியாதை; நாரதம்—நாரதருக்கு; ஸுரபூஜிதம் —தேவர்களால் வழிபடப்படும்.

ஸ்ரீ நாரதரின் மங்களமான வருகையின் போது, ஸ்ரீல வியாசதேவர் மரியாதையுடன் எழுந்து நின்று, சிருஷ்டிகர்த்தாவான பிரம்ம தேவருக்கு அளிக்கப்படுவதற்கு இணையான பய பக்தியுடன் அவரை வழிபட்டார்.



ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “ஶ்ரீ நாரதரின் தோற்றம்” எனும் தலைப்பைக் கொண்ட நான்காம் அத்தியாயத்திற்கான பக்தி வேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன..

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare