அத்தியாயம் – 19
சுகதேவ கோஸ்வாமியின் வருகை
பதம் 1.19.1 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: வீடு திரும்பும்பொழுது, குற்றமற்றவரும், சக்தி வாய்ந்தவருமான பிராமணருக்கு எதிராக தாம் வெறுக்கத்தக்க அநாகரிகமான செயலைச் செய்துவிட்டதை உணர்ந்த அரசர், இதையெண்ணி வருந்தினார்.

பதம் 1.19.2 : பரீட்சித்து மகாராஜன் எண்ணினார்: பகவானின் கட்டளைகளை மீறியதால், விரைவில் சில கஷ்டங்களை நான் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துன்பம் இப்பொழுதே வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். இதனால் நான் பாவத்திலிருந்து விடுபடக்கூடும் என்பதுடன், இத்தகைய ஒரு குற்றத்தை மீண்டும் செய்து விடாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் கூடும்.

பதம் 1.19.3 : பிராமண பண்பாட்டையும், தெய்வீக உணர்வையும் மற்றும் பசு பராமரிப்பையும் அலட்சியம் செய்ததால் நான் மரியாதையற்றவனும், பாவியுமாவேன். எனவே எனது இராஜ்ஜியமும், பலமும், செல்வங்களும் பிராமணனின் கோபத்திற்கு உடனே இரையாகட்டும். இதனால் எதிர்காலத்திலாவது இத்தகைய அமங்களமான மனோபாவத்தினால் நான் வழிநடத்தப்படாமல் இருப்பேனாக.

பதம் 1.19.4 : அரசர் இப்படி வருந்திக் கொண்டிருக்கும் பொழுது, முனி புத்திரனுடைய சாபத்தின்படி, சர்ப்பராஜனின் கடியால் விளையப்போகும் தமது திடீர் மரணத்தைப் பற்றிய செய்தியை அரசர் பெற்றார். தாம் உலகைத் துறந்து விடுவதற்கு இதுவே காரணமாக இருக்கப் போகிறது என்பதால், இந்த நற்செய்தியை அரசர் வரவேற்றார்.

பதம் 1.19.5 : ஸ்ரீ கிருஷ்ணருக்குச் செய்யும் உன்னத அன்புத் தொண்டு, மற்றெல்லா முறைகளுக்கும் மேலான கிடைத்தற்கரிய பேறு என்பதால், பரீட்சித்து மகாராஜன் தம் மனதை கிருஷ்ண உணர்வில் ஒருமுனைப்படுத்த உறுதிகொண்டு கங்கைக் கரையில் அமர்ந்தார்.

பதம் 1.19.6 : கங்கை நதி பகவானின் தாமரைப் பாத தூசிகளுடனும், துளசி இலைகளுடனும் கலந்த மிகவும் மங்களகரமான நீரை ஏந்திச் செல்கிறது. எனவே அந்நீர் மூவுலகங்களின் உள்ளும், புறமும் மட்டுமல்லாமல் சிவபெருமானையும் மற்ற தேவர்களையும் கூட புனிதப்படுத்துகிறது. ஆகையால் இறக்கப்போகும் அனைவரும் இந்த நதியைப் புகலிடம் கொள்ள வேண்டும்.

பதம் 1.19.7 : இவ்வாறாக, தகுதியுள்ள பாண்டவ குலத்தவரான அரசர், யாரொருவரால் மட்டுமே பகவான் முக்தியை அளிக்க முடியுமோ, அந்த ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தம்மையே ஒப்படைத்து, இறக்கும்வரை உபவாசம் இருக்கத் தீர்மானித்து, கங்கைக் கரையில் அமர்ந்தார். இவ்வாறு முனி விரதத்தை ஏற்ற அவர் எல்லா உறவுகளிலிருந்தும், பற்றுக்களிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டார்.

பதம் 1.19.8 : அப்போது சீடர்களால் சூழப்பட்ட மகான்களும், தங்களது வரவால் தீர்த்தங்களையும் புனிதப்படுத்தக்கூடிய முனிவர்களும், யாத்திரீகர்கள் என்ற சாக்கில் அங்கு வந்து சேர்ந்தனர்.

பதங்கள் 1.19.9 – 1.19.10 : பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் பின்வரும் மாமுனிவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்: அத்ரி, சவனர், சரத்வான், அரிஷ்டனேமி, பிருகு, வஸிஷ்டர், பராசரர், விஸ்வாமித்திரர், அங்கிரர், பரசுராமர், உதத்யர், இந்தரபிரமதர், இத்மவாஹு,மேதாதிதி, தேவலர், ஆர்ஷ்டிஷேணர், பாரத்வாஜர், கௌதமர், பிப்பலாதர், மைத்ரேயர், ஒளர்வர், கவஷர், கும்பயோனி, துவைபாயனர் மற்றும் மஹாபுருஷரான நாரதர்.

பதம் 1.19.11 : வெவ்வேறு முனிவர்களின் வம்சங்களைச் மற்றும் பலதேவ ராஜரிஷிகளும் மற்றும் அருணாதயர்கள் எனப்படும் அரச விசேஷ பிரிவைச் சேர்ந்தவர்களும் அங்கு கூடியிருந்தனர். அவர்களனைவரையும், அவர் சிரம்தாழ்த்தி வணங்கி, நன்கு வரவேற்றார்.

பதம் 1.19.12 : ரிஷிகளும், மற்றனைவரும் சுகமாக அமர்ந்தபின், கூப்பிய கரங்களுடன் அடக்கமாக அவர்கள் முன் நின்றிருந்த அரசர், இறக்கும்வரை உபவாசம் இருப்பதெனும் தமது முடிவை அவர்களிடம் கூறினார்.

பதம் 1.19.13 : பாக்கியசாலியான அரசர் கூறினார்: உண்மையில் சிறந்த ஆத்மாக்களிடமிருந்து உதவி பெறுவதில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அரசர்களில் நாங்கள் தான் மிகவும் நன்றிக்கடன் பட்டவர்களாவோம். பொதுவாக அரசுரிமை விலக்கப்பட வேண்டிய கழிவு என்றும், அதை தூரத்தில் வைக்க வேண்டுமென்றும் நீங்கள் (முனிவர்கள்) கருதுகிறீர்கள்.

பதம் 1.19.14 : ஜட மற்றும் ஆன்மீக உலகங்களை ஆள்பவரான பரம புருஷ பகவான், ஒரு பிராமணனுடைய சாபத்தின் வடிவில் அன்புடன் என்னை ஆட்கொண்டார். குடும்ப வாழ்வில் நான் அளவுக்கதிகமான பற்றுக் கொண்டிருந்ததால், பயத்தால் மட்டுமே என்னை நான் உலகிலிருந்து விடுவித்துக் கொள்வேன் என்ற முறையில், என்னைக் காப்பாற்றுவதற்காகவே பகவான் பயத்தின் வடிவில் என் முன் தோன்றியுள்ளார்.

பதம் 1.19.15 : பிராமணர்களே, நான் பகவானின் தாமரைப் பாதங்களை என் இதயத்தில் ஏந்திக்கொண்டு விட்டேன் என்பதால், என்னை பூரண சரணாகதியடைந்த ஆத்மாவாக ஏற்று அருள்புரியுங்கள். பகவானின் பிரதிநிதியான கங்கைத் தாயும் அவ்வாறே என்னை ஏற்றருளட்டும். பிராமணன் சிருஷ்டித்த சர்ப்பராஜனோ அல்லது வேறெந்த மாயா ஜாலப் பொருளோ உடனே என்னைக் கடிக்கட்டும். நீங்களனைவரும் பகவான் விஷ்ணுவின் செயல்களைப் பாடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை மட்டுமே நான் விரும்புகிறேன்.

பதம் 1.19.16 : மீண்டும் இந்த ஜடவுலகில் நான் பிறவியெடுக்க நேர்ந்தால், எல்லையற்றவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பூரண பற்றுதல் கொண்டவனாகவும், அவரது பக்தர்களின் சகவாசத்தைப் பெற்றவனாகவும், எல்லா ஜீவராசிகளிடமும் சிநேகமான உறவு கொண்டவனாகவும் இருக்க, பிராமணர்களான உங்களனைவரையும் மீண்டும் வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

பதம் 1.19.17 : ஏற்கனவே கூறியபடி, பரீட்சித்து மகாராஜன் அரசாங்கச் சுமையை மகனிடம் ஒப்படைத்துவிட்டு, கங்கையின் தென்கரையில், தன் தர்ப்பை வேர்கள் கிழக்கு நோக்கி பரப்பப்பட்ட ஆசனத்தில் வடக்கு நோக்கியவராய், பூரண புலனடக்கத்துடன் அமர்ந்தார்.

பதம் 1.19.18 : இவ்வாறு இறக்கும்வரை உபவாசம் இருப்பதற்காக அமர்ந்துவிட்ட பரீட்சித்து மகாராஜனின் செயல்களைப் போற்றிய உயர் கிரகங்களைச் சேர்ந்த தேவர்கள் அனைவரும், பேரிகைகளை அடித்துக் கொண்டு பூமியின் மீது தொடர்ந்து பூமாரி பொழிந்தனர்.

பதம் 1.19.19 : அங்கு கூடியிருந்த மாமுனிவர்களும் கூட பரீட்சித்து மகாராஜனின் முடிவைப் புகழ்ந்து, “மிக நன்று” என்று கூறி, தங்களுடைய சம்மதத்தைத் தெரிவித்தனர். அவர்கள் பகவானின் எல்லா குணங்களையும் பெற்று சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால், இயற்கையாகவே பொதுமக்களுக்கு நன்மை செய்வதில் ஆர்வமுடையவர்களாக உள்ளனர். எனவே பகவானின் பக்தரான பரீட்சித்து மகாராஜனைக் கண்டு மிகவும் திருப்தியடைந்த அவர்கள் பின்வருமாறு கூறினர்.

பதம் 1.19.20 : (முனிவர்கள் கூறினர்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வழியை உறுதியாகப் பின்பற்றிய பாண்டவ வம்சத்தின் புனித மன்னர்களிலெல்லாம் நீர் தலைமையானவராவீர். பரம புருஷரின் நித்திய சகவாசத்தை அடையும் பொருட்டு, பல அரசர்களின் கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள உமது அரியாசனத்தையும் நீர் துறந்ததில் சிறிதும் ஆச்சரியமில்லை.

பதம் 1.19.21 : பகவானின் பரலோகம் எல்லா வகையான பௌதிக களங்கங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் முற்றிலும் விடுபட்டதாகும். அப்பரலோகத்திற்கு, மிகச்சிறந்த பகவத் பக்தரான பரீட்சித்து மகாராஜன் திரும்பிச் செல்லும்வரை நாமனைவரும் இங்கேயே காத்திருப்போம்.

பதம் 1.19.22 : மாமுனிவர்களால் பேசப்பட்டவை இனிமையாகவும், அனைத்தும் அர்த்தம் பொதிந்தவையாகவும் செவிக்கு மற்றும் பூரண உண்மை என்று உணரச் செய்யும் வகையில் தகுந்தவாறு அளிக்கப்பட்டவையாகவும் இருந்தன. எனவே அவர்கள் பேசியதைக் கேட்டு அவர்களைப் பாராட்டிய பரீட்சித்து மகாராஜன், பிறகு பரம புருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி கேட்க ஆவல் கொண்டார்.

பதம் 1.19.23 : அரசர் கூறினார்: மாமுனிவர்களே, நீங்களனைவரும் பிரபஞ்சத்தின் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கூடியிருக்கிறீர்கள். நீங்கள் பல மூவுலகங்களுக்கும் மேலுள்ள (சத்தியலோக) கிரகத்தில் வாழும் வேத ஞான சொரூபிக்கு இணையாக விளங்குகிறீர்கள். பிறருக்கு இயற்கையாகவே நன்மை செய்வதைத் தவிர உங்களுக்கு இம்மையிலோ, மறுமையிலோ வேறு நோக்கமில்லை.

பதம் 1.19.24 : நம்பத்தகுந்த பிராமணர்களே, உடனடியாக நான் செய்ய வேண்டிய கடமை என்னவென்று இப்பொழுது உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். எல்லாச் சூழ்நிலைகளிலும் இருக்கக்கூடியவர்களின், குறிப்பாக மரணவாயிலில் இருப்பவர்களின் பரிசுத்தமான கடமையைப் பற்றி, நிதானித்த ஆழ்ந்த யோசனைக்குப் பின் எனக்குக் கூறியருள வேண்டுகிறேன்.

பதம் 1.19.25 : அச்சமயம், விருப்பற்றவராக பூமியில் சஞ்சரித்தவரும், ஆத்ம திருப்தியுடையவருமானசக்தி வாய்ந்த வியாசபுத்திரர் அங்கு தோன்றினார். வர்ணாஸ்ரம அடையாளங்கள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. பிறரால் புறக்கணிக்கப்பட்டவரைப் போல் உடையில்லாதவராக இருந்த அவர் பெண்களாலும், பாலர்களாலும் சூழப்பட்டிருந்தார்.

பதம் 1.19.26 : வியாசதேவரின் இப்புதல்வர் ஈரெட்டு வயதினராக இருந்தார். அவரது பாதங்கள், முன் கைகள், தொடைகள், கரங்கள், தோள்கள், நெற்றி ஆகியவையும், அவரது உடலின் பிற பகுதிகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன. அவரது கண்கள் அகன்றும் மூக்கு எடுப்பாகவும் காதுகள் சமமாகவும் இருந்ததால் அவரது முகம் மிகவும் கவர்ச்சியுடன் விளங்கியது. சங்கு போல் வடிவமைந்த அவரது கழுத்து அழகாக இருந்தது.

பதம் 1.19.27 : அவரது கழுத்தின் கீழெலும்புகள் சதைப்பிடிப்பு உள்ளவையாகவும், அவரது விரிந்து உயர்ந்தும், நாபி ஆழமாகவும், வயிறு மடிந்து அழகாகவும் இருந்தன. அவரது கரங்கள் நீண்டும், சுருள்கள் அவரது அழகிய முகத்தில் தவழ்ந்தும் காணப்பட்டன. ஆடையின்றி அவரது தேக வர்ணத்தைப் பிரதிபலித்தது.

பதம் 1.19.28 : கருநிற மேனியராக இருந்த அவர் தமது இளமையின் காரணத்தால் மிகவும் அழகாக காணப்பட்டார். அவரது தேகத்தின் வசீகரத்தாலும், சிரித்த முகத்தாலும் பெண்களின் மனதுக்கினியவராக விளங்கிய அவர் தமது இயற்கையான பெருமைகளை மறைத்துக் கொள்ள முயன்றார். எனினும் அங்கிருந்த மாமுனிவர்கள் அனைவரும் அங்க இயலின் கலையில் கைதேர்ந்தவர்களாக இருந்ததால், அவர்கள் தங்களுடைய ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

பதம் 1.19.29 : விஷ்ணுராதர் (பகவான் விஷ்ணுவால் எப்பொழுதும் பாதுகாக்கப்படுபவர்) எனப்படுபவரான பரீட்சித்து மகாராஜன், சிரம் தாழ்த்தி வணங்கி, முக்கிய அதிதியான சுகதேவ கோஸ்வாமியை வரவேற்றார். அதைக் கண்டு அவரைத் தொடர்ந்து வந்த அறிவிலிகளான பெண்களும், சிறுவர்களும் பின்னடைந்தனர். அனைவராலும் பூஜிக்கப் பெற்ற அவர் சிறந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

பதம் 1.19.30 : சந்திரன் நட்சத்திரங்களாலும் கிரகங்களாலும் மற்றும் பிற வானொலிக் கோள்களாலும் சூழப்பட்டிருப்பதைப் போலவே, சுகதேவ கோஸ்வாமியும் பிறகு மாமுனிவர்களாலும், தேவர்களாலும் சூழப்பட்டவரானார். அவரது முன்னிலை சிறப்புடையதாக இருந்ததுடன், அனைவராலும் அவர் பூஜிக்கவும்பட்டார்.

பதம் 1.19.31 : சாந்த சொரூபியாக வீற்றிருந்த மாமுனிவரும், மகா மேதாவியுமான சுகதேவ கோஸ்வாமி, எந்த கேள்விக்கும் தயக்கமின்றி விடை யளிக்கத் தயாராக இருந்தார். சிறந்த பக்தரான பரீட்சித்து மகாராஜன் அவரை அணுகி, அவர் முன் சிரம்தாழ்த்தி, வணங்கி, கூப்பிய கரங்களுடன், இனிய சொற்களால் அடக்கத்துடன் கேட்கலானார்.

பதம் 1.19.32 : பாக்கியசாலியான பரீட்சித்து மகாராஜன் கூறினார்: ஓ பிராமணர்களே, உங்களுடைய கருணையாலும், என்னுடைய அதிதிகளாக இங்கு வருகை தந்திருப்பதாலுமே, எங்களை நீங்கள் புனிதப்படுத்தி, தீர்த்த ஸ்தலங்களைப் போல் மாற்றியிருக்கிறீர்கள். உங்களுடைய கருணையால் யோக்கியதையில்லாத க்ஷத்திரியர்களான நாங்கள், பக்தருக்குத் தொண்டு செய்யும் தகுதி உடையவர்களானோம்.

பதம் 1.19.33 : உங்களைப் பற்றி சிந்திப்பதாலேயே எங்கள் வீடுகள் உடனே புனிதமடைகின்றன. உங்களைக் காண்பதாலும், தொடுவதாலும், உங்கள் திருவடிகளைக் கழுவுவதாலும், எங்களுடைய வீட்டில் உங்களுக்கு ஆசனம் அளிப்பதாலும் கிடைக்கக்கூடிய நன்மையைப் பற்றி என்னவென்று சொல்வது?

பதம் 1.19.34 : பரம புருஷரின் முன்னிலையில் நாஸ்திகர்களால் நிற்க முடியாது. அதுபோலவே ஓ முனிவரே! மகா யோகியே! தங்களுடைய வரவால் ஒருவரின் தீராத பாவங்களும் உடனே அழிந்துவிடுகின்றன.

பதம் 1.19.35 : பரம புருஷரும், பாண்டு புத்திரர்களுக்கு மிகப்பிரியமானவருமான பகவான் கிருஷ்ணர், தமது அத்தை மகன்களை திருப்திப்படுத்துவதற்காகவே, அவ்வுறவினர்களில் ஒருவனாக அவ்வுறவினர்களில் என்னையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பதம் 1.19.36 : இல்லையெனில் மரணவாயிலிருக்கும் எங்களுடைய கண்களுக்குப் புலப்படாமல், சாதாரண மக்களுக்கிடையில் மாறுவேடத்தில் நடமாடியபோதிலும், (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் தூண்டப்படாமல்) தன்னிச்சையாக தாங்கள் இங்கு தோன்றியிருப்பது எப்படி சாத்தியமாகும்?

பதம் 1.19.37 : பெரும் முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் தாங்கள்தான் பரமகுரு. எனவே அனைவருக்கும் ஏற்ற பூரணத்துவம் அடையும் வழியை, குறிப்பாக மரணவாயிலில் இருப்பவனுக்கேற்ற வழியைக் காட்டியருளும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

பதம் 1.19.38 : பிரபுவே ஒரு மனிதன் கேட்கத்தக்கது, ஜபிக்கத்தக்கது, நினைக்கத்தக்கது மற்றும் வணங்கத்தக்கது என்னவென்பதையும், அவன் செய்யத்தகாதது என்னவென்பதையும் தயவுசெய்து எனக்குக் கூறியருளுங்கள்.

பதம் 1.19.39 : சக்தி வாய்ந்த பிராமணரே, தாங்கள் பசுவைக் கறப்பதற்குத் தேவையான கால அளவுகூட குடும்பஸ்தர்களின் வீடுகளில் தங்குவது அரிது என்று கூறப்படுகிறது.

பதம் 1.19.40 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக அரசர் இனிய மொழிகளால் முனிவரிடம் பேசியதுடன், கேள்விகளையும் கேட்டார். பிறகு சக்தி வாய்ந்த புருஷரும் சமயக் கோட்பாடுகளை அறிந்தவருமான வியாச புத்திரர் பதில் கூறத் தொடங்கினார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare