அத்தியாயம் – 15
பாண்டவர்களின் துறவு
பதம் 1.15.1 : சூத கோஸ்வாமி கூறினார்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புகழ்பெற்ற நண்பனான அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணரை விட்டுப் பிரிந்ததால் பெருந்துக்கத்திற்கு ஆளானார். இது யுதிஷ்டிர மகாராஜனின் கற்பனையான விசாரணைகளையும் மீறியதாக இருந்தது.

பதம் 1.15.2 : துக்கத்தினால் அர்ஜுனனின் வாயும், தாமரை போன்ற இதயமும் உலர்ந்துவிட்டன. இதனால் அவரது உடல் ஒளியை இழந்தது. இப்பொழுது பரம புருஷரை நினைவுபடுத்திக் கொண்ட அவரால், பதிலாக ஒரு சொல்லைக்கூட சரியாக உச்சரிக்க இயலவில்லை.

பதம் 1.15.3 : அவர் மிகவும் சிரமத்துடன், கண்களை மறைத்த துன்பக் கண்ணிரை தடுத்து நிறுத்தினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கண் பார்வையிலிருந்து மறைந்து போனதால், பெருந்துயரத்தில் ஆழ்ந்த அவர், பகவானிடமுள்ள அன்பு அதிகரிப்பதை உணர்ந்தார்.

பதம் 1.15.4 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நல்லாசிகளையும், சிநேகத்தையும், நெருங்கிய குடும்ப உறவுகளையும் மற்றும் அவரது தேரோட்டும் பணியையும் நினைவுகூர்ந்த அர்ஜுனன் சோகத்தில் அமிழ்ந்து, பெருமூச்சுடன் பேசத் துவங்கினார்.

பதம் 1.15.5 : அர்ஜுனன் கூறினார்: அரசே என்னை ஓர் ஆத்ம நண்பனைப் போலவே பாவித்த பரம புருஷ பகவான் ஹரி என்னைத் தனியாக விட்டுச் சென்றுவிட்டார். இவ்வாறாக, தேவர்களையும் வியப்பில் ஆழ்த்திய எனது அற்புத சக்தியையும் இழந்தேன்.

பதம் 1.15.6 : யாருடைய நொடிநேரப் பிரிவுகூட, எல்லா பிரபஞ்சங்களையும், உயிரற்ற உடல்களைப் போல் சூனியமாகவும், அர்த்தமற்றவையாகவும் மாற்றிவிடுமோ, அவரை நான் இழந்து விட்டேன்.

பதம் 1.15.7 : துருபத ராஜனின் அரண்மனையில், சுயம்வர சடங்கில் பங்கேற்கக் கூடியிருந்த சிற்றின்ப இச்சை கொண்ட இளவரசர்களை, கருணையுடன் அவரளித்த பலத்தைக் கொண்டுதான் என்னால் வெல்ல முடிந்தது. அத்துடன் என் அம்பினால் மீன் குறியைத் துளைத்து, திரௌபதியையும் என்னால் அடைய முடிந்தது.

பதம் 1.15.8 : அவர் என்னருகில் இருந்ததால், சக்தி வாய்ந்த ஸ்வர்க ராஜனான இந்திரனையும், அவரது தேவ கணங்களையும் மிகவும் சாமர்த்தியமாக வென்று, அவருடைய காண்டவ வனத்தை அழிக்க அக்னிதேவனுக்கும் என்னால் உதவ முடிந்தது. மேலும் அவரது கருணையால்தான் மயா என்ற அரக்கனும் எரியும் காண்டவ வனத்திலிருந்து காப்பாற்றப்பட்டான். ராஜஸுய யாகத்தின்போது, அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட எந்த இடத்தில் எல்லா ராஜ குமாரர்களும் கூடி உங்களுக்குக் கப்பம் கட்டினார்களோ, அந்த ராஜசபையையும் மயானைக் கொண்டு நம்மால் கட்ட முடிந்தது.

பதம் 1.15.9 : பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவரான, மரியாதைக்குரிய உங்களுடைய இளைய சகோதரர் பகவானின் கருணையால் பல அரசர்களால் வணங்கப்பட்ட ஜராசந்தனைக் கொன்றார். இந்த அரசர்கள் ஜராசந்தனின் மஹாபைரவ யாகத்தில் பலியிடுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்தனர். இவ்வாறு விடுவிக்கப்பட்ட அவர்கள், பிறகு மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கப்பம் செலுத்தினர்.

பதம் 1.15.10 : சிறந்த ராஜஸுய யாகத்திற்காக நன்கு வாரி முடித்து புனிதப்படுத்தப்பட்டிருந்த தங்களுடைய ராணியின் கொண்டையை அவிழ்க்கத் துணிந்த அந்த துஷ்டர்களுடைய மனைவிகளின் கேசங்களை எல்லாம் அவரல்லவா அவிழ்த்து விட்டார். அச்சமயத்தில் அவள் கண்களில் கண்ணீருடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்தாள்.

பதம் 1.15.11 : நாம் வனவாசத்தில் இருந்தபொழுது, பத்தாயிரம் சீடர்களுடன் புசிப்பவரான துர்வாச முனிவர், நமது எதிரிகளுடன் சேர்ந்து, நம்மை ஆபத்தான நிலைமையில் புகுத்துவதற்காக சதித்திட்டத்தில் ஈடுபட்டார். அச்சமயத்தில் அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்) மீதி உணவை உண்டு நம்மைக் காப்பாற்றினார். இவ்வாறு அவர் உணவை உட்கொண்டதும் நதியில் குளித்துக் கொண்டிருந்த முனிவர் கூட்டம் வயிராற உண்டு திருப்தியடைந்ததுபோல் உணர்ந்தனர். மூவுலகங்களும்கூட திருப்தியடைந்தன.

பதம் 1.15.12 : அவரது ஆதிக்கத்தினால் தான், சக்தி வாய்ந்த சிவபெருமானுடன் நான் புரிந்த போரில், அவரையும், இமயமலையின் மகளான அவரது மனைவியையும் என்னால் திருப்திப்படுத்த முடிந்தது. இவ்வாறு என்னிடம் திருப்தியடைந்த அவர் (சிவபெருமான்) அவரது சொந்த ஆயுதத்தையே எனக்குப் பரிசாக அளித்தார். பிற தேவர்களும் கூட அவரவர் ஆயுதங்களை எனக்களித்தனர். அதுமட்டுமின்றி, இந்த உடலுடனேயே ஸ்வர்க லோகங்களை என்னால் அடைய முடிந்ததுடன், பாதி உயர்ந்த ஆசனமும் எனக்கு அளிக்கப்பட்டது.

பதம் 1.15.13 : ஸ்வர்க லோகங்களில் சில நாட்கள் நான் விருந்தாளியாக தங்கியிருந்தபொழுது, நிவாதகவசன் என்ற அசுரனைக் கொல்வதற்காக, இந்திரன் உட்பட எல்லா தேவர்களும், காண்டீவ வில்லை ஏந்திய எனது கரங்களில் தஞ்சம் புகுந்தனர். அரசே, ஆஜமீட குலத் தோன்றலே, யாருடைய தூண்டுதலால் நான் அவ்வளவு சக்தி வாய்ந்தவனாக இருந்தேனோ, அந்த பரம புருஷ பகவானை இப்பொழுது நான் இழந்தவனானேன்.

பதம் 1.15.14 : கௌரவர்களின் படைபலம் வெல்ல முடியாத பல சூழ்நிலைகளைக் கொண்ட ஒரு சமுத்திரத்தைப் போல் காட்சியளித்தது. எனவே அது கடக்க முடியாததாகும். ஆனால் அவரது நட்பினால், இரதத்தில் அமர்ந்திருந்த என்னால் அதைக் கடக்க முடிந்தது. மேலும் அவரது கருணையால் தான் என்னால் பசுக்களை திரும்பப் பெற முடிந்தது. தவிரவும் ஒளியின் பிறப்பிடங்களாக விளங்கிய இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட, அரசர்களின் பல கிரீடங்களை அவர்களிடமிருந்து என்னால் பறிக்க முடிந்ததற்கும் அவரது கருணை மட்டுமே காரணமாகும்.

பதம் 1.15.15 : அனைவருடைய ஆயுளையும் பறித்தவரும், பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன் போன்ற கௌரவ தலைவர்களால் அணிவகுக்கப் பட்ட பெரும் படைப் பிரிவுகளிலிருந்து மனோவன்மை, வீரியம் ஆகியவற்றைப் பறித்தவரும் அவர் ஒருவரேயாவார். அவர்களது ஏற்பாடு தீமையானதாகவும், தேவைக்கு அதிகமாகவும் இருந்த போதிலும், முன் செல்லும்பொழுது இவையனைத்தையும் அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்) செய்தார்.

பதம் 1.15.16 : பீஷ்மர், துரோணர், கர்ணன், பூரிஸ்ரவர், சுசர்மா, சல்லியன், ஜயத்ரதன் மற்றும் பாலிகர் போன்ற சிறந்த தளபதிகள் அனைவரும் தடுக்க முடியாத அவர்களது ஆயுதங்களை என் மீது பிரயோகித்தனர். ஆனால் அவரது (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்) கருணையால், என் தலையிலுள்ள ஒரு முடியைக்கூட அவற்றால் தொட முடியவில்லை. இதைப் போலவே, பகவான் நரசிம்ஹதேவரின் பரம பக்தரான பிரகலாத மகாராஜனும் கூட அவருக்கெதிராக அசுரர்களால் உபயோகிக்கப்பட்ட ஆயுதங்களால் பாதிக்கப்படவில்லை.

பதம் 1.15.17 : களைப்படைந்த என் தேர்க் குதிரைகளுக்கு நீர் கொண்டு வருவதற்காக நான் தேரிலிருந்து கீழே இறங்கியபோது, எதிரிகள் அலட்சியமாக இருந்து விட்டதற்கு அவருடைய கருணை மட்டுமே கராரணம். முக்தி பெறுவதற்காக அவரைப் புண்ணிய புருஷர்களும் வழிபட்டு, அவருக்குத் தொண்டு செய்கின்றனர் என்பதால், எம்பெருமானிடம் எனக்கிருந்த மரியாதை குறைவால் அல்லவா அவரை என் தேரோட்டியாக ஈடுபடுத்தும் துணிவு எனக்கு வந்தது.

பதம் 1.15.18 : அரசே கபடமற்ற அவரது விளையாட்டுப் பேச்சுக்கள் புன்னகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன. “ஏ நண்பனே, பிருதாவின் மகனே, குரு வம்சத்தின் மகனே” என்றெல்லாம் உள்ளதைத் தொடும் வகையில் அன்புடன் அழைத்த மாதவனின் சொற்களை இப்பொழுது நினைத்துப்பார்க்கும் பொழுது, அவை என் இதயத்தைத் துளைக்கின்றன.

பதம் 1.15.19 : பொதுவாக நாங்களிருவரும் ஒன்றாகவே உறங்குவதும் அமர்ந்திருப்பதும், சுற்றித் திரிவதும், வாழ்வதும் வழக்கம். அச்சமயத்தில் வீரச் செயல்களுக்காக ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்ளும்போது, முரண்பாடுகள் ஏற்பட்ட சமயங்களில், “நண்பா, நீ சத்தியமே உருவானவன்” என்று கூறி அவரை நான் கடிந்து கொள்வது வழக்கம். அவரது மதிப்பு குறைக்கப்பட்ட அத்தகைய நேரங்களிலும் கூட,பரமாத்மா என்ற முறையில், என் பிழைகளை எல்லாம் அவர் ஒருநண்பனுக்கு நண்பன் போலும், பிள்ளைக்குத் தகப்பன் போலும் பொறுத்துக் கொண்டார்.

பதம் 1.15.20 : அரசர் பெருமானே! எனது நண்பரும், என் நலனில் பெரும் அக்கறை கொண்டவருமான பரம புருஷரிடமிருந்து இப்பொழுது நான் பிரிக்கப்பட்டுவிட்டேன். எனவே என் இதயமே சூனியமாகிவிட்டது போல் காணப்படுகிறது. கிருஷ்ணருடைய எல்லா மனைவிகளின் உடல்களையும் நான் காப்பாற்றி வருகையில், அவரில்லாத சமயத்தில் துஷ்டர்களான சில இடையர்களால் நான் வெல்லப்பட்டேன்.

பதம் 1.15.21 : என்னிடம் அதே காண்டீவ வில்லும், அதே அம்புகளும், அதே குதிரைகள் பூட்டப்பட்ட அதே இரதமும்தான் உள்ளன. மேலும் யாருக்கு எல்லா அரசர்களும் தகுந்த மரியாதைகளைச் செலுத்தினார்களோ, அதே அர்ஜுனனாகத்தான் அவற்றை நான் உபயோகிக்கிறேன். ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாத காரணத்தால் அவையனைத்தும், சாம்பலில் ஊற்றிய நெய் போலவும், மந்திர ஜாலத்தால் பொருள் திரட்டியது போலவும், வறண்ட நிலத்தில் விதை விதைத்ததைப் போலவும், ஒரு நொடியில் சூனியமாகிவிட்டது.

பதங்கள் 1.15.22 – 1.15.23 : அரசே, துவாரகாபுரியிலுள்ள நமது நண்பர்களைப் பற்றியும்,உறவினர்களைப் பற்றியும் நீங்கள் விசாரித்ததால், அவர்களனைவரும் பிராமணர்களால் சபிக்கப்பட்டனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் விளைவாக புளிக்க வைத்த சாதத்தால் செய்யப்பட்ட மதுபானத்தால் மதிமயங்கி, ஒருவரையொருவர் அறியாமலேயே, இப்பொழுது நாலைந்து பேர்களே எஞ்சியுள்ளனர். தங்களுக்கிடையில் தடிகளால் அடித்துக் கொண்டு மாண்டுபோயினர்.

பதம் 1.15.24 : உண்மையில் இவையனைத்தும் பரம புருஷராகிய பகவானின் விருப்பத்தினால்தான் விளைந்துள்ளன. சில சமயங்களில் மக்கள் ஒருவரையொருவர் கொலை செய்து கொள்கின்றனர். வேறு சமயங்களில் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்கின்றனர்.

பதங்கள் 1.15.25 – 1.15.26 : அரசே, கடலில் பெரிய பலமுள்ள நீர்வாழ் பிராணிகள் சிறிய, பலமற்றவைகளை விழுங்கிவிடுகின்றன. அதைப் போலவே, பரம் புருஷ பகவான் பூபாரத்தைக் குறைப்பதற்காக, அதிக பலமுள்ள யதுக்கள் பலமற்றவர்களையும், பெரிய யதுக்கள் சிறியவர்களையும் கொல்லும்படி செய்துவிட்டார்.

பதம் 1.15.27 : பரம புருஷரால் (கோவிந்தன்) எனக்கு அளிக்கப்பட்ட உபதேசங்கள், காலம் மற்றும் தேசம் ஆகிய எல்லாச் சூழ்நிலைகளிலும் ஏற்படக்கூடிய இதய தகிப்பை அகற்றுவதற்கு உரியவையாகும். எனவே அந்த உபதேசங்களிடம் எனக்கு இப்பொழுது கவர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பதம் 1.15.28 : சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு மிக நெருங்கிய சிநேக முறையில் பகவானால் உபதேசிக்கப்பட்ட போதனைகளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி, அவரது பாதகமலங்களைப் பற்றி சிந்தித்த அர்ஜுனன் அமைதியடைந்து, எல்லா பௌதிக களங்கங்களிலிருந்தும் விடுபட்டார்.

பதம் 1.15.29 : அர்ஜுனன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கமல பாதங்களை இடையறாது நினைவுகூர்ந்ததால் அது அவரது பக்தியை வேகமாக பெருகச் செய்தது. இதனால் அவரது மனதிலுள்ள எல்லா குப்பைகளும் மறைந்தன.

பதம் 1.15.30 : பகவானின் லீலைகள் மற்றும் செயல்களினாலும், அவரது மறைவினாலும் அவர் விட்டுச் சென்ற உபதேசங்களை அர்ஜுனன் மறந்து விட்டதுபோல் காணப்பட்டது. ஆனால் இது உண்மையல்ல. மீண்டும் அவர் தன் புலன்களுக்கு எஜமானரானார்.

பதம் 1.15.31 : அவர் ஆன்ம ஞானத்தைப் பெற்றிருந்ததால், இருமையைப் பற்றிய சந்தேகங்கள் முற்றிலும் களையப்பட்டன. இவ்வாறாக அவர் ஜட இயற்கையின் முக்குணங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, ஆன்மீக நிலையில் வைக்கப்பட்டார். அவர் பௌதிக உருவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால், இனிமேலும் பிறப்பிலும் இறப்பிலும் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு இல்லாமற்போயிற்று.

பதம் 1.15.32 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது வசிப்பிடத்திற்குச் சென்றுவிட்டதையும், யது குலத்தின் முடிவையும் கேள்விப்பட்ட யுதிஷ்டிர மகாராஜன், பகவானின் வசிப்பிடத்திற்கு திரும்பிச் சென்றுவிட முடிவு செய்தார்.

பதம் 1.15.33 : யது வம்சத்தின் முடிவைப் பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவைப் பற்றியும் அர்ஜுனன் கூறக்கேட்ட குந்தியும், பரம புருஷரின் பக்தித் தொண்டில் முழு கவனத்துடன் ஈடுபட்டு, பௌதிக வாழ்வின் சுழற்சியிலிருந்து விடுபட்டாள்.

பதம் 1.15.34 : பிறப்பற்றவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், யது வம்சத்தினரை, தங்களது உடல்களை கைவிடச் செய்து பூமியின் பாரத்தைக் குறைத்தார். இச்செயல், முள்ளை முள்ளால் எடுப்பதைப் போன்றதாகும். ஆள்பவருக்கு இவ்விரண்டுமே சமம்தான்.

பதம் 1.15.35 : பரம புருஷர் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவரால் தோற்றுவிக்கப்பட்ட உடலைக் கைவிட்டார். ஒரு மந்திரவாதியைப் போலவே, அவர் ஒருடலைக் கைவிட்டு, மச்சவதாரத்தையும் மற்றவைகளையும் போன்ற வேறுபட்ட உடல்களை ஏற்கிறார்.

பதம் 1.15.36 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது சுய உருவத்துடன் இம்மண்ணுலகை விட்டுச் சென்ற அதே நாளிலிருந்து, ஏற்கனவே ஒரு பகுதி மட்டும் தோன்றியிருந்த கலி, அறிவு பற்றாக்குறையாக உள்ளவர்களுக்கு அமங்களமான சூழ்நிலையை விளைவிப்பதற்காக முழுமையாக வெளிப்பட்டது.

பதம் 1.15.37 : தலைநகரிலும், நாட்டிலும், வீட்டிலும், தனி நபர்களுக்கிடையிலும் பெருகிக் கொண்டிருக்கும் பேராசை பொய், நேர்மையின்மை மற்றும் மூர்க்கத்தனம் ஆகியவற்றின் மூலமாக கலி யுகத்தின் ஆதிக்கம் மேலோங்குவதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு யுதிஷ்டிர மகாராஜன் புத்திசாலியாக இருந்தார். எனவே புத்திசாலித்தனமாக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தம்மைத் தயார் செய்து கொண்ட அவர், அதற்கேற்ற உடையையும் அணிந்து கொண்டார்.

பதம் 1.15.38 : அதன் பிறகு, பயிற்சி பெற்று தமக்கு நிகரான தகுதியைப் பெற்றிருந்த தம் பேரனை, கடல்களால் சூழப்பட்டிருந்த எல்லா நிலத்திற்கும் சக்கரவர்த்தியாக சிம்மாசனத்தில் அமர்த்தினார்.

பதம் 1.15.39 : பிறகு அவர் அநிருத்தரின் மகனான (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பேரன்) வஜ்ரனை சூரஸேன நாட்டின் அரசராக மதுராபுரியில் அமர்த்தினார். அதன் பிறகு, யுதிஷ்டிர மகாராஜன் ஒரு பிராஜாபத்ய யாகத்தைச் செய்து, குடும்ப வாழ்வைக் கைவிடும் துறவறத் தீயை தமக்குள் ஏற்றி வைத்தார்.

பதம் 1.15.40 : யுதிஷ்டிர மகாராஜன் உடனே அரசருக்குரிய ஆடைகள், கச்சை மற்றும் ஆபரணங்கள் ஆகிய அனைத்தையும் துறந்து, எதிலும் சிரத்தையற்றவராகவும், பற்றற்றவராகவும் ஆனார்.

பதம் 1.15.41 : பிறகு அவர் புலனுறுப்புக்கள் அனைத்தையும் மனதிலும், பிறகு மனதை உயிரிலும், உயிரை சுவாசத்திலும், அவரது மொத்த வாழ்வையே ஐம்பூத வடிவமான உடலிலும் மற்றும் உடலை மரணத்திலும் கலக்கச் செய்துவிட்டார். அதன் பிறகு தூய ஆத்மா என்ற முறையில், வாழ்வின் பௌதிகமான எண்ணத்திலிருந்து அவர் விடுபட்டவரானார்.

பதம் 1.15.42 : இவ்வாறாக பஞ்ச பூதங்களாலான ஸ்தூல உடலை ஜட இயற்கையின் முக்குணங்களுடன் ஐக்கியப்படுத்தி, அவற்றை ஒன்றேயான அறியாமையில் கலந்துவிடச் செய்தார். பிறகு அந்த அறியாமையை, எச்சூழ்நிலையிலும் முடிவற்றதாக உள்ள பிரம்மனில் லயிக்கச் செய்தார்.

பதம் 1.15.43 : அதன் பிறகு, யுதிஷ்டிர மகாராஜன் கிழிந்த ஆடையை அணிந்து, கெட்டியான உணவு வகைகளைக் கைவிட்டு தலைவிரி கோலத்துடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இவையனைத்தும் சேர்ந்து, அவரை ஒரு வேலையற்ற துஷ்டனைப் போல் அல்லது பித்தனைப் போல் காட்சியளிக்கச் செய்தது. அவரது சகோதரர்களின் தயவை அவர் நம்பியிருக்கவில்லை. மேலும் ஒரு செவிடனைப் போல் அவர் எதையும் கேட்கவுமில்லை.

பதம் 1.15.44 : பிறகு அவர், பரம புருஷ பகவானைப் பற்றிய சிந்தனையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்காக, இதற்கு முன் அவரது முன்னோர்களும், மகான்களும் ஏற்ற வழியைப் பின்பற்றி, வடக்கு நோக்கிப் புறப்பட்டார். மேலும் சென்ற இடமெல்லாம் இதே முறையில்தான் அவர் வாழ்ந்தார்.

பதம் 1.15.45 : உலகம் முழுவதிலும் கலி யுகம் பரவிவிட்டதையும், தீய பழக்கங்களுக்கு மக்கள் அடிமையாகி விட்டதையும் கண்ட யுதிஷ்டிர மகாராஜனின் இளைய சகோதரர்கள், அவர்களது மூத்த சகோதரரின் பாத சுவடுகளைப் பின்பற்ற முடிவு செய்தனர்.

பதம் 1.15.46 : அவர்களனைவரும் மதக் கொள்கைகளை எல்லாம் சரிவர நிறைவேற்றினர். அதன் பலனாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்கள்தான் அனைவருக்கும் முடிவான புகலிடம் என்று சரியாக முடிவு செய்து, அவரது பாதங்களை இடையறாது தியானித்தனர்.

பதங்கள் 1.15.47 – 1.15.48 : இவ்வாறாக இடையறாத பக்திப்பூர்வமான சிந்தனையால் விளைந்த தூய உணர்வின் மூலமாக,பரம நாராயணரான, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் ஆளப்படும் ஆன்மீக வெளியை அவர்கள் அடைந்தனர். வழி பிறழாமல் ஒரே பரம புருஷரை தியானிப்பவர்களால் மட்டுமே இந்நிலை அடையப்படுகிறது. கோலோக விருந்தாவனம் எனப்படும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த வசிப்பிடத்தை, பெளதிக வாழ்வில் ஆழ்ந்துள்ளவர்களால் அடைய முடியாது. ஆனால் பௌதிக களங்கங்களை எல்லாம் முழுமையாகத் துடைத்துவிட்ட பாண்டவர்கள் அதே உடல்களுடன் அந்த வசிப்பிடத்தை அடைந்தனர்.

பதம் 1.15.49 : விதுரர், தீர்த்த யாத்திரையை மேற்கொண்டிருந்தபொழுது, பிரபாஸ என்னுமிடத்தில் அவரது உடலை விட்டார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததால், அவர் பித்ரு லோக வாசிகளால் வரவேற்கப்பட்டு, அவரது மூல பதவிக்குத் திரும்பினார்.

பதம் 1.15.50 : திரௌபதியும்கூட தன் கணவன்மார்கள் தன்னைப் பற்றி கவலைப்படாமல் வீட்டை விட்டு வெளியேறுவதைக் கண்டாள். பகவான் வாசுதேவனை, கிருஷ்ணரை அவள் நன்கு அறிவாள். கிருஷ்ணரின் சிந்தனையில் லயித்துப் போன திரௌபதி மற்றும் சுபத்ரா ஆகிய இருவரும், அவர்களது கணவன்மார்கள் அடைந்த அதே பலன்களை அடைந்தனர்.

பதம் 1.15.51 : பாண்டு புத்திரர்கள், வாழ்வின் இறுதி நோக்கமான பரமபதத்தை நோக்கிப் புறப்பட்ட விஷயம் சர்வ மங்களகரமானதும், பரிசுத்தமானதுமாகும். எனவே இக்கதையை பக்தி சிரத்தையுடன் கேட்பவர் யாராயினும் அவர் வாழ்வின் மிக உயர்ந்த பூரணத்துவமான, பகவானின் பக்தித் தொண்டை அடைவது நிச்சயம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare