அத்தியாயம் – 14
ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவு
பதம் 1.14.1 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைக் கண்டு அவரது அடுத்த நடவடிக்கைகளை அறியவும், மற்ற நண்பர்களைக் காணவும் அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றார்.

பதம் 1.14.2 : சில மாதங்கள் கழிந்தன. அர்ஜுனன் திரும்பி வரவில்லை. யுதிஷ்டிர மகாராஜன் பிறகு, அச்சமூட்டும் சில கெட்ட சகுனங்களைக் காண ஆரம்பித்தார்.

பதம் 1.14.3 : நித்திய காலத்தின் போக்கு மாறிவிட்டதை அவர் கண்டார். இது நினைக்கவே பயங்கரமாக இருந்தது. பருவகால ஒழுங்குமுறைகளில் பிளவுகள் ஏற்பட்டன. பொதுமக்கள் பெரும் பேராசைக்காரர்களாகவும், கோபக்காரர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும் மாறியிருந்தனர். மேலும் அவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக தீய வழிமுறைகளைக் கையாள்வதையும் அவர் கண்டார்.

பதம் 1.14.4 : நண்பர்களுக்கு இடையிலுள்ள விவகாரங்கள் உட்பட, எல்லா சாதாரண விவகாரங்களிலும் வஞ்சகம் நிறைந்துவிட்டது. மேலும் குடும்ப விவகாரங்களிலும் கூட தாய், தந்தையர், மகன்கள், சகோதரர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோருக்கு இடையில் எப்பொழுதும் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. கணவன், மனைவிக்கிடையிலும் கூட எப்பொழுதும் அவநம்பிக்கையும், சண்டையும் இருந்து வந்தது.

பதம் 1.14.5 : பொதுமக்களும் நாளடைவில் பேராசை, கோபம், கர்வம் போன்றவைகளுக்கு பழக்கப்பட்டுவிட்டனர். இந்த சகுனங்களை எல்லாம் கவனித்த யுதிஷ்டிர மகாராஜன், அவரது இளைய சகோதரரிடம் பின்வருமாறு கூறினார்.

பதம் 1.14.6 : யுதிஷ்டிர மகாராஜன் தமது இளைய சகோதரனான பீமசேனனிடம் கூறினார்: அர்ஜுனனை அவனது நண்பர்களை சந்திக்கவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து அவரது செயற்திட்டத்தை அறிந்து வரவும் நான் துவாரகைக்கு அனுப்பி வைத்தேன்.

பதம் 1.14.7 : அவன் சென்று ஏழு மாதங்கள் ஆகியும் இன்னும் திரும்பவில்லை. அங்கு என்ன நடக்கிறதென்பது உண்மையாகவே எனக்குப் புரியவில்லை.

பதம் 1.14.8 : தேவரிஷி நாரதர் சுட்டிக்காட்டியதைப் போல், அவரது மண்ணுலக லீலைகளை அவர் முடித்துக் கொள்ளப் போகிறாரா? அந்த நேரம் வந்துவிட்டதா?

பதம் 1.14.9 : அவரிடமிருந்துதான், நம்முடைய ராஜபோக வாழ்வு, மனைவிகள், உயிர்கள், சந்ததியினர், பிரஜைகளை ஆளும் சக்தி, நல்ல எதிரிகளை வெல்லும் சக்தி மற்றும் எதிர்காலத்தில் உயர் கிரகங்களில் வாழும் வசதி ஆகிய அனைத்தும் சாத்தியமாகியுள்ளன. நம் மீதான அவரது தனிப்பெருங்கருணையே இதற்குக் காரணமாகும்.

பதம் 1.14.10 : ஒரு புலியின் பலத்தைப் பெற்றவனே, உயர் கிரகங்களின் ஆதிக்கத்தாலும், பூமியில் விளையும் பிரதிபலன்களாலும் மற்றும் உடலால் விளையும் துன்பங்களாலும் எத்தனை இன்னல்கள் விளைந்துள்ளன பார். இவை அனைத்தும், வெகுவிரைவில் நம் புத்தியைக் கெடுத்து ஆபத்தை விளைவிக்கப்போகும் கெட்ட சகுனங்களாகும்.

பதம் 1.14.11 : என்னுடைய உடலின் இடப்புறம், என் தொடைகள், கரங்கள் மற்றும் கண்கள் ஆகியவற்றில் அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது. பயத்தால் இதயம் அடித்துக் கொள்கிறது. விரும்பத்தகாத நிகழப்போவதையே இவை சுட்டிக்காட்டுகின்றன.

பதம் 1.14.12 : பீமா, அந்த பெண் நரி எப்படி அழுதுகொண்டு நெருப்பைக் கக்குகிறது, இந்த நாய் எப்படி என்னைப் பார்த்து பயமில்லாமல் குரைக்கிறது என்பதைப் பார்.

பதம் 1.14.13 : மனிதரில் புலியான பீமசேனா, இப்பொழுது பசுவைப் போன்ற உபயோகமுள்ள மிருகங்கள் இடப்புறமாக என்னைக் கடந்து செல்கின்றன. கழுதைகளைப் போன்ற தாழ்ந்த மிருகங்கள் என்னை வலம் வருகின்றன. என்னைக் கண்டதும் என் குதிரைகள் அழுவனபோல் காணப்படுகின்றன.

பதம் 1.14.14 : இப்புறா ஒரு மரணத் தூதனைப் போல காணப்படுவதைப் பார். ஆந்தைகளின் வீறிட்டலறல்களும், அவற்றுடன் போட்டியிடும் காகங்களும் என் இதயத்தை நடுங்கச் செய்கின்றன. பிரபஞ்சத்தையே சூனியமாகச் செய்துவிட விரும்புவதைப் போல் இவை காணப்படுகின்றன.

பதம் 1.14.15 : புகை எப்படி வானத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார். பூமியும், மலைகளும் துடிப்பதைப் போல் காணப்படுகின்றன. மேகமில்லாத நீல வானிலிருந்து இடியோசை கேட்பதைப் பார்.

பதம் 1.14.16 : வேகமாக வீசும் காற்று மண்ணை வாரியடித்து இருளடறச் செய்கிறது. எல்லா இடங்களிலும் மேகங்கள் மழையைப் பொழிந்து இரத்தம் சிந்தச் செய்யும் நாசத்தை விளைவிக்கின்றன.

பதம் 1.14.17 : சூரிய கதிர்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று சண்டை செய்வதாகக் காணப்படுகிறது. குழம்பிய ஜீவராசிகள் எரிவது போலும், அழுவது போலும் காணப்படுகின்றன.

பதம் 1.14.18 : நதிகள், உபநதிகள், குட்டைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் மனம் ஆகிய அனைத்தும் கலங்கியுள்ளன. நெய்யினால் அக்னி ஜொலிக்கவில்லை. என்ன அசாதாரணமான நேரம் இது? என்ன நடக்கப் போகிறதோ!

பதம் 1.14.19 : கன்றுகள் பசுக்களின் பால் காம்புகளை உறிஞ்சிக் குடிக்கவில்லை; பசுக்களும் பால் கறக்கவில்லை. அவை கண்களில் நீர் மல்க அழுது கொண்டு நிற்கின்றன. மேலும் காளைகளும் மேய்ப்பு நிலங்களில் இன்பங்காணவில்லை.

பதம் 1.14.20 : ஆலயத்திலுள்ள விக்கிரகங்கள் அழுவனபோலும், வியர்வை சொரிவன போலும் அங்கிருந்து வெளியேற நினைப்பது போலும் காணப்படுகின்றன. நகரங்கள், கிராமபுரங்கள், நந்தவனங்கள், சுரங்கங்கள் மற்றும் ஆஷ்ரமங்கள் ஆகிய அனைத்தும் பொலிவிழந்தும், மகிழ்ச்சியற்றும் காணப்படுகின்றன. எத்தகைய துன்பங்கள் நமக்காகக் காத்திருக்கின்றனவோ நானறியேன்.

பதம் 1.14.21 : இந்த மண்ணுலகக் குழப்பங்களெல்லாம், உலகின் நல்லதிர்ஷ்டத்தில் பெரும் இழப்பைச் சுட்டிக்காட்டுவதாகவே நான் நினைக்கிறேன். உலகம் பகவானின் தாமரைப் பாத சுவடுகளால் அலங்கரிக்கப்படும் பாக்கியத்தைப் பெற்றிருந்தது. இந்நிலை நீடிக்காது என்பதையே இந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டுகின்றன.

பதம் 1.14.22 : பிராமணரான சௌனகரே, அச்சமயத்தில் பூமியில் காணப்பட்ட கெட்ட சகுனங்களைக் கண்டு, யுதிஷ்டிர மகாராஜன் தமக்குள் சிந்தித்தவராய் இருக்கையில், யதுபுரியிலிருந்து (துவாரகை) அர்ஜுனன் திரும்பி வந்தார்.

பதம் 1.14.23 : தமது பாதங்களில் அவர் சிரம்தாழ்த்தி வணங்கியபொழுது, அவரது சோகம் புதுமையாக இருப்பதை அரசர் கவனித்தார். அவரது சிரம் தாழ்ந்திருந்தது, அவரது தாமரைக் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.

பதம் 1.14.24 : மனவருத்தத்தினால் அர்ஜுனனின் பொலிவிழந்த தோற்றத்தைக் கண்ட அரசர் யுதிஷ்டிரர், நாரத முனியின் குறிப்புகளை நினைவுகூர்ந்து, நண்பர்களுக்கிடையில் இருந்த அவரிடம் வினவினார்.

பதம் 1.14.25 : யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: அன்புள்ள சகோதரனே, மது, போஜ, தசார்ஹ, ஆர்ஹ, சாத்வத, அந்தக மற்றும் யது வம்ச அங்கத்தினர்கள் போன்ற நமது நண்பர்களும், உறவினர்களும் அவர்களது நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்து வருகின்றனரா என்று தயவுசெய்து என்னிடம் கூறு.

பதம் 1.14.26 : மரியாதைக்குரிய எனது பாட்டனார் சூரசேனர் மகிழ்ச்சியுடன் இருக்கிறாரா? எனது தாய் மாமனான வசுதேவரும், அவரது இளைய சகோதரர்களும் நலமா?

பதம் 1.14.27 : தேவகியை தலைமையாகக் கொண்ட அவரது ஏழு மனைவிகளும் சகோதரிகளாவர். அவர்களும், அவர்களது மகன்களும், மருமகள்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

பதங்கள் 1.14.28 – 1.14.29 :தீயவனான கம்சனை மகனாகப் பெற்ற உக்ரசேனரும், அவரது இளைய சகோதரரும் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா? இருதீகரும், அவரது மகன் க்ருதவர்மனும் மகிழ்ச்சியுடன் உள்ளனரா? அக்ரூரர், ஜயந்தர், கத, சாரணர் மற்றும் சத்ருஜித் ஆகிய அனைவரும் நலமா? பரம புருஷரும், பக்தர்களின் காவலருமான பலராமர் எப்படி இருக்கிறார்?

பதம் 1.14.30 : விருஷ்ணி குடும்பத்தின் பெருந்தளபதியான பிரதியும்னர் எப்படி இருக்கிறார். அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறாரா? மேலும் பரம புருஷரின் விரிவங்கமாகிய அநிருத்தர் நலமா?

பதம் 1.14.31 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரது மகன்களின் தலைவர்களான சுஷேணர், சாருதேஷ்ணர் போன்றவர்கள், ஜாம்பவதியின் மகனான சாம்பன் மற்றும் ரிஷபர் ஆகிய அனைவரும் அவர்களது மகன்களுடன் நலமாக இருக்கிறார்களா?

பதங்கள் 1.14.32 – 1.14.33 : மேலும், சுருததேவர், உத்தவர் போன்ற மற்றவர்களும், பகவானின் இணைபிரியா சகாக்களும், பகவான் ஸ்ரீ பலராமராலும், கிருஷ்ணராலும் பாதுகாக்கப்படும், முக்திபெற்ற ஆத்மாக்களின் தலைவர்களான நந்த, சுனந்த போன்றவர்களும், மற்றவர்களும் அவரவர் நன்கு செயற்படுகின்றனரா? நித்தியமான நட்பால் கடமைகளில் நம்முடன் பிணைக்கப்பட்டுள்ள அவர்கள் நம்முடைய நலனைப் பற்றி ஞாபகம் வைத்திருக்கிறார்களா?

பதம் 1.14.34 : பசுக்களுக்கும், புலன்களுக்கும், பிராமணர்களுக்கும் இன்பம் அளிப்பவரும், பக்தர்களிடம் மிகவும் அன்பு கொண்டவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகாபுரியில் பக்தர்களாலும், நண்பர்களாலும் சூழப்பட்டவராய் சுகமாக இருக்கிறாரா?

பதங்கள் 1.14.35 – 1.14.36 : அனுபவிப்பவரான மூல முழுமுதற் கடவுளும், ஆதியான பகவான் அநந்தராகிய பலராமரும், முழு பிரபஞ்சத்தின் நன்மைக்காகவும், பாதுகாப்புக்காகவும் மற்றும் பொதுவான முன்னேற்றத்திற்காகவும், யது வம்சமெனும் சமுத்திரத்தில் தங்கியிருக்கின்றனர். மேலும் பகவானுடைய கரங்களால் பாதுகாக்கப்படும் யது வம்சத்தினர் ஆன்மீக உலகவாசிகளைப் போல் வாழ்வை அனுபவிக்கின்றனர்.

பதம் 1.14.37 : சத்தியபாமா முதலான துவாரகாபுரி ராணிகள், சேவைகளிலேயே மிக முக்கியமானதான பாத சேவையை பகவானுக்குச் செய்து அவரைத் திருப்திப்படுத்துவதாலேயே, தேவர்களைத் தோற்கடிக்கும்படி அவர்கள் பகவானைத் தூண்டினர். இவ்வாறாக, வஜ்ராயுதங்களை ஆள்பவருடைய மனைவிகளின் தனிப்பட்ட உரிமைகளையும் ராணிகள் அனுபவித்தனர்.

பதம் 1.14.38 : யது வம்சத்தின் சிறந்த வீரர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கரங்களால் எப்பொழுதும் பாதுகாக்கப்பட்டிருப்பதால், எந்த விஷயத்திலும் அவர்களுக்கு அச்சமில்லை. எனவே மிகச்சிறந்த தேவர்களுக்குச் சொந்தமான சுதர்மா எனப்படும் தேவலோக ராஜசபையை அவர்களிடமிருந்து பறித்து, அதை அவர்கள் அலட்சியமாக தங்களது பாதங்களால் மிதித்தனர்.

பதம் 1.14.39 : அன்புள்ள சகோதரனே அர்ஜுனா, உனக்கு உடல் நலம் சரிதானே? நீ பொலிவிழந்தவன்போல் காணப்படுகிறாயே நீண்ட காலமாக நீ துவாரகையில் தங்கியதால் பிறர் உன்னை அலட்சியத்தால் அவமரியாதை செய்ததால் இந்நிலை ஏற்பட்டதா?

பதம் 1.14.40 : யாராவது உன்னை அன்பில்லா வார்த்தைகளால் அழைத்தார்களா? அல்லது உன்னை பயமுறுத்தினார்களா? கேட்டவருக்கு உன்னால் தானம் கொடுக்க முடியாமற் போயிற்றா? அல்லது உன்னுடைய வாக்குறுதியைக் காப்பாற்ற இயலவில்லையா?

பதம் 1.14.41 : பிராமணர்கள், குழந்தைகள், பசுக்கள், பெண்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்கள் போன்ற ஜீவன்களை எப்பொழுதும் காப்பவனாக நீ இருக்கிறாய். உன்னிடம் பாதுகாப்பைத் தேடி வந்த அவர்களுக்கு உன்னால் பாதுகாப்பளிக்க இயலவில்லையா?

பதம் 1.14.42 : தீயொழுக்கமுள்ள ஒரு பெண்ணுடன் நீ தொடர்பு கொண்டாயா அல்லது தகுதியுள்ள ஒரு பெண்ணை நீ முறையாக நடத்தவில்லையா? அல்லது வழியில் உன்னை விட தாழ்ந்த அல்லது உனக்குச் சமமான ஒருவரால் தோற்கடிக்கப்பட்டாயா?

பதம் 1.14.43 : உன்னுடன் உணவருந்தத் தகுதியுடையவர்களான முதியோர்களையும், சிறுவர்களையும் உதாசீனப்படுத்திவிட்டு, நீ மட்டும் தனியாக உணவருந்தினாயா? ஏதேனும் மன்னிக்க முடியாத, வெறுக்கத்தக்க குற்றத்தை நீ செய்தாயா?

பதம் 1.14.44 : அல்லது உன்னுடைய மிகவும் நெருங்கிய நண்பரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நீ இழந்திருக்கக்கூடும் என்பதால், நிரந்தரமான சூனியத்தை நீ உணர்கிறாயா? எனதன்பு சகோதரனே, அர்ஜுனா, உன்னுடைய பெரும் சோகத்திற்கான வேறெந்த காரணத்தையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare