அத்தியாயம் – 11
ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகைக்குள் பிரவேசித்தல்
பதம் 1.11.1. : சூத கோஸ்வாமி கூறினார்: ஆனர்த நாடு (துவாரகை) எனப்படும் மிகச் செழிப்பான அவரது தலைநகரின் எல்லையை அடைந்ததும், தமது வருகையை அறிவிப்பதற்காக பகவான் அவரது மங்களகரமான சங்கை ஊதினார். இந்த சங்க நாதம் துவாரகாவாசிகளின் சோகத்தை ஆற்றியது.

பதம் 1.11.2 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் ஊதப்பட்ட அந்த வெண்மையான, பருத்த சங்கு, அவரது கரத்தால் பற்றப்பட்டு இருந்ததாலும், அவரது திவ்யமான உதடுகளால் தொடப்பட்டதாலும், சிவந்து காணப்பட்டது. அது செந்தாமரையின் தண்டுக்கிடையில் புகுந்து விளையாடும் வெண்ணிற அன்னப்பறவையைப் போல் காட்சியளித்தது.

பதம் 1.11.3 : ஜடவுலகில் பய புருஷரையும் அச்சுறுத்தக்கூடிய அந்த ஓசையைக் கேட்ட துவாரகாவாசிகள், எல்லா பக்தர்களையும் காப்பவரான பகவானின் தரிசனத்தைப் பெறும் நீண்ட கால ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக, அவரை நோக்கி விரைந்தனர்.

பதங்கள் 1.11.4 – 1.11.5 :
தமது சுய சக்தியினால் மற்றவர்களுக்கு இடைவிடாமல் வழங்கிக் கொண்டிருப்பவரும், பூரண திருப்தியுடையவரும், சுய தேவை பூர்த்தி உடையவருமான பகவான் முன் வந்து சேர்த்த பிரஜைகள், அவரவர் அன்பளிப்புகளை பகவானுக்கு அளித்தனர். இந்த அன்பளிப்புகள், சூரியனுக்கு தீபம் காட்டுவதைப் போன்றவையாகும், இருப்பினும், குழந்தைகள் தங்களது இரட்சகரை அல்லது தந்தையை வரவேற்பதைப் போலவே, பிரஜைகள் பகவானை வரவேற்பதற்காக இன்பமான மொழியில் பேசத் துவங்கினர்.

பதம் 1.11.3 : தமது சுய சக்தியினால் மற்றவர்களுக்கு இடைவிடாமல் வழங்கிக் கொண்டிருப்பவரும், பூரண திருப்தியுடையவரும், சுய தேவை பூர்த்தி உடையவருமான பகவான் முன் வந்து சேர்ந்த பிரஜைகள், அவரவர் அன்பளிப்புகளை பகவானுக்கு அளித்தனர். இந்த அன்பளிப்புகள், சூரியனுக்கு தீபம் காட்டுவதைப் போன்றவையாகும். இருப்பினும், குழந்தைகள் தங்களது இரட்சகரை அல்லது தந்தையை வரவேற்பதைப் போலவே, பிரஜைகள் பகவானை வரவேற்பதற்காக இன்பமான மொழியில் பேசத் துவங்கினர்.

பதம் 1.11.6 : பிரஜைகள் கூறினர்: பகவானே, தாங்கள் பிரம்மா, நான்கு ஸனத் குமாரர்கள் மற்றும் ஸ்வர்க ராஜனைப் போன்ற எல்லா தேவர்களாலும் வழிபடப்படுகிறீர்கள். வாழ்வின் மிகவுயர்ந்த நன்மையை அடைய உண்மையாக ஆசைப்படுவர்களின் இறுதியான புகலிடம் தாங்களே. உன்னதமான பரம புருஷரும் தாங்களே. மேலும் தவிர்க்க முடியாத காலத்தால் உங்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது.

பதம் 1.11.7 : பிரபஞ்சத்தைப் படைத்தவரே, தாங்களே எங்களுடைய தாய், நண்பர், பகவான் தந்தை, ஆன்மீக குரு மற்றும் வழிபாட்டுக்குரிய மூர்த்தி ஆகியவையாக இருக்கிறீர்கள். உங்களுடைய அடிச்சுவடுகளை பின்பற்றியதால் நாங்கள் எல்லாவிதத்திலும் வெற்றி அடைத்திருக்கிறோம் எனவே, தொடர்ந்து உங்களுடைய கருணையைப் பொழியும்படி பிரார்த்திக்கிறோம்.

பதம் 1.11.8 : ஓ, பெருமானாகிய தாங்கள் ஸ்வர்கவாசிகளை காணச் செல்வது கூட மிகவும் அரிதாகும். எனவே இன்று உங்கள் முன்னிலையில், உங்களுடைய பாதுகாப்பின் கீழ் இருப்பது எங்களுடைய நல்லதிர்ஷ்டமாகும். அன்பான பார்வைகளைக் கொண்ட உங்களுடைய புன்னகை தவழும் முகத்தைக் காண்பது இன்று எங்களுக்கு சாத்திமாயிற்று, சர்வ மங்களம் நிறைந்த உங்களுடைய திவ்யமான உருவத்தை இப்பொழுது எங்களால் காணமுடிகிறது.

பதம் 1.11.9 : தாமரைக் கண்களை உடையவரே, உங்களுடைய நண்டர்களையும், உறவினர்களையும் சந்திக்க நீங்கள் மதுராவிற்கோ, விருந்தாவனத்திற்கோ அல்லது ஹஸ்தினாபுரத்திற்கோ சென்றுவிடும் போதெல்லாம், ஒவ்வொரு நொடிப்பொழுதும் எங்களுக்கு கோடிக்கணக்கான ஆண்டுகளைப் போல் காணப்படுகிறது. குறையற்றவரே, அச்சமயத்தில் சூரியன் இல்லாததைப் போல் எங்களுடைய கண்கள் பயனற்றுப்போகின்றன.

பதம் 1.11.10 : பகவானே. எப்பொழுதும் வெளியூரிலேயே நீங்கள் வாழ்ந்ததால் எங்களுடைய துன்பங்களை எல்லாம் அழித்துவிடக் கூடிய புன்னகை தவழும் உங்களுடைய திருமுகத்தை எங்களால் தரிசிக்க முடியாமல் போய்விடுமே. உங்களைக் காணாமல் எங்களால் எப்படி உயிர் வாழ முடியும்?
அவர்களுடைய பேச்சுகளைக் கேட்டதும், பிரஜைகளிடமும், பக்தர்களிடமும் பேரன்பு கொண்டவரான பகவான், தமது திவ்யமான பார்வையை அவர்கள் மீது செலுத்தி அவர்களுடைய வரவேற்பை ஏற்றுக் கொண்டபின் துவாரகை நகருக்குள் பிரவேசித்தார்.

பதம் 1.11.11 : நாகலோகத்தின் தலைநகரான போகவதி, நாகர்களால் பாதுகாக்கப்படுவதைப் போலவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இணையான பலசாலிகளாக போஜன், மது, தசார்ஹன், அர்ஹன், குகுரன், அந்தகன் ஆகியோரைப் போன்ற விருஷ்ணி வம்சத்தினரால் துவாரகா பாதுகாக்கப்படுகிறது.

பதம் 1.11.12 : துவாரகாபுரி நகரம் எல்லா பருவ காலங்களின் செல்வங்களாலும் நிறைந்திருந்தது. அங்கு ஆஷ்ரமங்களும், பழத்தோட்டங்களும், பூந்தோட்டங்களும், உல்லாசத் தோட்டங்களும் மற்றும் தாமரைப் பூக்கள் நிறைந்த நீர்த்தேக்கங்களும் இருந்தன.

பதம் 1.11.13 : நகர வாயில், வீட்டுக் கதவுகள் மற்றும் சாலையோர அலங்கார வளைவுகள் ஆகிய அனைத்தும் பகவானை வரவேற்பதற்காக, வாழை மரங்கள் மற்றும் மாவிலை தோரணங்கள் போன்ற விழாக் குறிகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கொடிகள், மாலைகள் மற்றும் வர்ணம் தீட்டப்பட்ட அடையாளங்கள், சுலோகங்கள் ஆகிய அனைத்தும் இணைந்து சூரிய ஒளியை மங்கச் செய்தன.

பதம் 1.11.14 : பெரு வீதிகள், சுரங்க வழிகள், சந்துகள், கடைத்தெருக்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்கள் ஆகிய அனைத்தும் நன்கு சுத்தம் செய்யப்பட்டபின் வாசனைத் தைலம் தெளித்து நனைக்கப்பட்டிருந்தன. மேலும் பகவானை வரவேற்பதற்காக, பழங்கள், மலர்கள், விதைகள் ஆகியவையும் எல்லா இடங்களிலும் தூவப்பட்டிருந்தன.

பதம் 1.11.15 : ஒவ்வொரு வீட்டு வாசலிலும், தயிர், உடையாத பழங்கள், கரும்பு, பூர்ண கும்பங்கள், வழிபாட்டுப் பொருட்கள், தூபம் மற்றும் தீபங்கள் ஆகிய எல்லா மங்களகரமான பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தன.

பதங்கள் 1.11.16 – 1.11.17 : மிக பிரியமானவரான கிருஷ்ணர் துவாரகாபுரியை நோக்கி வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும், பெருந்தன்மையுள்ள வசுதேவர், அக்ரூரர், உக்ரசேனர், (அமானுஷ்யமான சக்தி படைத்தவரான) பலராமர், பிரத்யும்னர், சாருதேஷ்ணர் மற்றும் ஜாம்பவதியின் புதல்வரான ஸாம்பன் ஆகிய அனைவரும் பேரானந்தம் அடைந்து உறக்கம், இருக்கை உணவு ஆகியவற்றைக் கைவிட்டனர்.

பதம் 1.11.18 : பிராமணர்கள் மலர்களை ஏந்திக் கொண்டிருக்க இரதங்கள் பகவானை நோக்கி விரைந்து சென்றன. அவர்களுக்கு முன்புறத்தில் நல்லதிர்ஷ்டத்தின் சின்னங்களான யானைகள் இருந்தன. சங்குகளும்; ஊது கொம்புகளும் முழங்கின. வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. இவ்வாறாக அவர்கள் மிகுந்த பாசத்துடன் தங்களது மரியதைகளைச் செலுத்தினர்.

பதம் 1.11.19 : அதே சமயத்தில், நூற்றுக்கணக்கான பிரபலமான விலைமாதர்களும் பற்பல வாகனங்களில் முன்னேறிச் சென்றனர். அவர்கள் அனைவரும் பசுவானைச் சந்திக்க பேராவல் கொண்டிருந்தனர். மேலும் அவர்களது அழகிய முகங்கள் பிரகாசிக்கும் காதணிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அது அவர்களுடைய நெற்றியழகை அதிகரித்தது.

பதம் 1.11.20 : கைதேர்ந்த நாடக ஆசிரியர்கள், கலைஞர்கள், நாட்டியம், ஆடுபவர்கள், சரித்திர ஆசிரியர்கள், பாடகர்கள், வம்ச வரலாறு எழுதுபவர்கள் மற்றும் கற்றறிந்த பேச்சாளர்கள் ஆகிய அனைவரும், பகவானின் அற்புத திருவிளையாடல்களில் ஊக்கங்கொண்டு, அவரவருக்குரிய விஷயதானங்களை அளித்தவாறு தொடர்ந்து சென்றனர்.

பதம் 1.11.21 : பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வரவேற்று உபசரிக்க வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள், பிரஜைகள் முதலான மற்ற அனைவரையும் அணுகிய பகவான், அவர்களில் ஒவ்வொருவருக்கும் தகுந்த வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்தினார்.

பதம் 1.11.22 : சர்வ வல்லமையுடைய பகவான், மிகத் தாழ்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் தமது சிரம்தாழ்த்தியும், வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டும், தழுவிக் கொண்டும், கை குலுக்கியும் பார்த்து புன்னகை செய்தும், உறுதிமொழிகள் கூறியும் மற்றும் ஆசீர்வதித்தும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பதம் 1.11.23 : பிறகு, பகவானின் பெருமைகளை பாடிக்கொண்டும், ஆசிகள் வழங்கிக் கொண்டும் இருந்த வயது முதிர்ந்த உறவினர்கள் மற்றும் வயது முதிர்ந்த பிராமணர்கள் ஆகிய அனைவரும் பின் தொடர பகவான் நகரத்திற்குள் பிரவேசித்தார்.

பதம் 1.11.24 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பொது சாலைகளைக் கடந்து சென்றபொழுது, துவாரகையின் மதிப்பிற்குரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அனைவரும், இதை மிகச்சிறந்த விழாவாகக் கருதி, பகவானை தரிசிப்பதற்காக அவர்களுடைய மாளிகைகளின் கூரைகளுக்குச் சென்றனர்.

பதம் 1.11.25 : துவாரகா வாசிகள், அழகுக் களஞ்சியமான குறையற்ற பகவானை அடிக்கடி காண்பதில் பழக்கப்பட்டிருந்தனர் என்றபோதிலும், அதில் அவர்களுக்கு சலிப்பே ஏற்படவில்லை.

பதம் 1.11.26 : பகவானின் மார்பு ஸ்ரீ தேவியின் வசிப்பிடமாகும். நிலவைப் போன்ற அவரது முகம், அழகுப் பொருட்களை எல்லாம் பருகிவிட விரும்பும் கண்களுக்கு அருந்தும் பாத்திரமாகும். அவரது கரங்கள் லோக பரிபாலனம் செய்யும் தேவர்களுக்கு இளைப்பாறும் இடங்களாகும். மேலும் அவரது தாமரைப் பாதங்கள், பெருமானைத் தவிர வேறெதையும் ஒருபோதும் பேசாத பாடாத தூய பக்தர்களின் புகலிடமாகும்.

பதம் 1.11.27 : பகவான் துவாரகையின் பொது சாலையில் சென்றபொழுது, வெண்குடையொன்று அவருடைய தலையை சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்தது. வெள்ளை இறகுகளைக் கொண்ட விசிறிகள் அரை வட்டமாக அசைந்தன. மேலும் சாலையின் மேல் மலர்கள் பொழிந்தன. அவரது மஞ்சள் நிற ஆடைகளும், மலர்மாலைகளும் காண்பதற்கு, இருண்ட மேகம் ஒன்றை சூரியன், சந்திரன், மின்னல் மற்றும் வானவில் ஆகியவை ஒரே நேரத்தில் சூழ்த்து கொண்டிருந்ததைபோல் காணபட்டன.

பதம் 1.11.28 : அவரது தந்தையின் வீட்டிற்குள் புகுந்ததும், (அவரது உண்மையான தாயான) தேவகியை தலைமையாகக் கொண்ட தாய்களால் அவர் தழுவிக்கொள்ளப்பட்டார். பகவானும் தமது தலையை அவர்களுடைய பாதங்களில் வைத்து அவர்களை வணங்கினார்.

பதம் 1.11.29 : தங்களது புதல்வனை தழுவிக்கொண்ட அவர்கள், பிறகு அவரை தங்களது மடிகளில் அமர்த்திக் கொண்டனர். தூய அன்பினால், அவர்களது ஸ்தனங்களிலிருந்து பால் சுரந்தது. ஆனந்தப் பரவசத்தால் கண்களிலிருந்து பெருகிய அவர்களுடைய கண்ணீர் பகவானை நனைத்தது.

பதம் 1.11.30 : அதன் பிறகு, பகவான் முற்றிலும் பூரணமாக இருந்த அவரது சொந்த அரண்மனைகளுக்குள் புகுந்தார். பதினாறாயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட அவரது மனைவிகள் அவற்றில் வாழ்ந்தனர்.

பதம் 1.11.31 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ராணிகள், நீண்ட நாட்களுக்குப் பின் அயலூலிரிருந்து வீடு திரும்பிய தங்கள் கணவரைக் கண்டு மன மகிழ்ந்தனர். ராணிகள் உடனடியாக தங்களது ஆசனங்களிலிருந்தும், தியானங்களிலிருந்தும் எழுந்து, சமூக வழக்கப்படி கூச்சத்துடன் தங்களுடைய முகங்களை மூடிக்கொண்டு, நாணத்துடன் பார்த்தனர்.

பதம் 1.11.32 : பரவசம் கடக்க முடியாத அளவிற்கு தீவிரம் அடைந்திருந்ததால், வெட்கப்பட்ட ராணிகள் முதலில் பகவானை அவர்களுடைய இதயங்களால் தழுவிக் கொண்டனர். பிறகு பார்வையால் தழுவினர். அதன்பிறகு தங்களுடைய மகன்களை அனுப்பி அவரை தழுவிக்கொள்ளச் செய்தனர். (இது தாங்களாகவே தழுவிக் கொள்வதற்குச் சமமாகும்). ஆனால், பிருகுகளில் தலைமைானவரே, தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், தங்களை அறியாமலேயே அவர்கள் கண்ணீர் சிந்தினர்.

பதம் 1.11.33 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இடையறாது அவர்கள் பக்கத்திலேயே இருந்த போதிலும், அவரது பாதங்கள் அவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் புத்தம் புதியதாகவே காட்சியளித்தன. லஷ்மிதேவி எப்பொழுதும் இயற்கையாகவே ஓய்வின்றி, நடமாடிக் கொண்டே இருந்தாலும், அவளால் பகவானுடைய பாதங்களை விட்டு விலக இயலவில்லை. எனவே அத்தகைய பாதங்களில் ஒருமுறை புகலிடம் கொண்ட எந்த பெண்ணால் அவற்றை விட்டு விலக இயலும்.

பதம் 1.11.34 : பூமிக்கு பாரமாக இருந்த அந்த அரசர்களைக் கொன்றபின் பகவான் சமாதனமடைந்தார். தங்களுடைய குதிரைப்படை, யானைப்படை, இரதப்படை மற்றும் காலட்படை போன்ற படைகளில் பலத்தினால் அவர்கள் திமிர்பிடித்தவர்களாக மாறியிருந்தனர். பகவான் எந்த கட்சிக்காகவும் போரிடவில்லை. ஆனால் சக்தி வாய்ந்த அரசர்களுக்கிடையில் போரை மட்டுமே அவர் தூண்டிவிட்டார். தங்களுக்கிடையில் அவர்கள் போர் செய்து கொண்டனர். அவர் மூங்கில்களுக்கிடையில் உராய்வை ஏற்படுத்தி, தீப்பொறியை விளைவிக்கும் காற்றைப் போல் நடந்துகொண்டார்.

பதம் 1.11.35 : அந்த பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணர், அவரது காரணமற்ற கருணையால், அவரது அந்தரங்க சக்தியின் வாயிலாக இந்த பூமியில் தோன்றி, பௌதிக விவகாரங்களில் ஈடுபட்டிருப்பதைப் போலவே, நல்ல பெண்மணிகளுக்கு இடையில் இன்பம் அனுபவித்தார்.

பதம் 1.11.36 : ராணிகளின் அழகிய புன்னகைகளும், கள்ளப் பார்வைகளும் மாசற்றவையாகவும், கிளர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருந்தது. அவை மன்மதனை அவனது வில்லைத் துறக்கும்படிச் செய்து அவனையே தோற்கடிக்கும்படி இருந்தது. சகிப்புமிக்க சிவனும்கூட ராணியரின் இச்செயலுக்கு இரையாகிவிடக்கூடும், என்றாலும் அவர்களது ஜால வித்தையாலும், கவர்ச்சியாலும் பகவானை கிளர்ச்சியூட்ட முடியவில்லை.

பதம் 1.11.37 : பௌதிகவாதிகளாக உள்ள சாதாரண பந்தப்பட்ட ஆத்மாக்கள் பகவானை தங்களில் ஒருவராக கற்பனை செய்கின்றனர். பகவான் ஜடப் பொருளில் பற்றற்றவராக இருந்தபோதிலும், அப்பற்றினால் அவர் பாதிப்படைகிறார் என்று அறியாமையால் அவர்கள் நினைக்கின்றனர்.

பதம் 1.11.38 : இதுவே பரம புருஷரின் தெய்வீகத் தன்மையாகும். ஜட இயற்கைக் குணங்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தபோதிலும், அவற்றினால் அவர் பாதிப்படைவதில்லை. அதைப் போலவே, பகவானிடம் புகலிடம் கொண்ட பக்தர்களும் இயற்கைக் குணங்களால் கவரப்படுவதில்லை.

பதம் 1.11.39 : எளிமையும், உயர்ந்த பண்பாடும் கொண்ட பெண்கள், தங்களுடைய அன்பிற்குரிய கணவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உண்மையாகவே அவர்களைப் பின்பற்றினார் என்றும் அவர்களாலேயே ஆளப்பட்டார் என்றும் எண்ணினர். பகவான் பரம ஆளுநரென்பதை நாஸ்திகர்கள் அறியாதிருப்பதைப் போலவே, அவர்களும் தங்களுடைய கணவரது பெருமைகளின் அளவை அறிந்திருக்கவில்லை.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare