அத்தியாயம் – 1
முனிவர்களின் கேள்விகள்
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
பதம் 1.1.1 : எம்பெருமானே, ஸ்ரீ கிருஷ்ணா, வசுதேவரின் புதல்வரே, எங்கும் வியாபித்திருக்கும் முழுமுதற் கடவுளே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன். தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரபஞ்சங்களின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய காரணங்களுக்கு மூல காரணமாகவும், பூரண உண்மையாகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால் அவரை நான் தியானிக்கிறேன். எல்லா தோற்றங்களையும் அவர் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ அறிந்துள்ளார். மேலும் அவருக்கப்பால் வேறேந்த காரணமும் இல்லாததால் அவர் சுதந்திரமானவராவார், முதல் ஜீவனான பிரம்மாவின் இதயத்தில் ஆதியில் வேத அறிவைப் புகட்டியவர் அவரேயாவார். நெருப்பினுள் காணப்படும் நீராகவும், நீர் மேல் காணப்படும் நிலமாவும் தோற்றமளிக்கும் மாயாஜாலத்தினால் ஒருவன் குழப்பமடைவதைப் போல், ஸ்ரீ கிருஷ்ணரால் பெரும் முனிவர்களும், தேவர்களும் கூட மாயையில் புகுத்தப்படுகின்றனர். இயற்கையின் முக்குண பிரதிபலன்களால் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டுள்ள ஜடப் பிரபஞ்சங்கள் பொய்யானவை. ஆயினும், அவை உண்மையானவையாக காட்சியளிப்பதற்கு உரிய ஒரே காரணப் பொருளும் அவரேயாவார். எனவே, ஜடவுலக மாயைகளிலிருந்து நிரந்தரமாக விடுபட்டுள்ள பரலோகத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நித்திய வாசம் புரிகின்றார். அவரே பூரண உண்மையாகையால் நான் அவரைத் தியானிக்கின்றேன்.

பதம் 1.1.2 : பௌதிக நோக்கங்களைக் கொண்ட எல்லா மதச் சடங்குகளையும் முற்றிலும் விலக்கி, பூரண இதயத் தூய்மை உடையவர்களான அந்த பக்தர்களால் புரிந்துகொள்ளக்கூடிய மிகவுயர்ந்த உண்மையை இந்த பாகவத புராணம் விவரிக்கின்றது. எல்லோருடைய நன்மைக்காகவும் மாயையிலிருந்து பிரித்தறியப்படும் நிஜமான நிலையே பரம உண்மையாகும். அத்தகைய உண்மை மூவகைத் துன்பங்களை களைந்தெறியச் செய்கின்றது. மஹா முனிவரான வியாசதேவரால் (அவரது முதிர்ந்த நிலையில்) தொகுக்கப்பட்டதான இந்த அழகிய பாகவதம் ஒன்றே, இறையுணர்வை உண்டாக்கப் போதுமானதாகும். வேறெந்த சாஸ்திரத்திற்கும் என்ன அவசியம் உள்ளது? பாகவதத்தின் செய்தியை ஒருவர் கவனத்துடனும், பணிவுடனும் கேட்டவுடனேயே, அறிவைப் பண்படுத்தும் இம்முறையினால் அவருடைய இதயத்திற்குள் பரம புருஷர் நிலை நிறுத்தப்படுகின்றார்.

பதம் 1.1.3 : திறமையும், சிந்தனையும் மிக்கவர்களே, கல்ப விருட்சமாகிய வேத இலக்கியங்களின், கனிந்த பழமாகிய ஸ்ரீமத் – பாகவதத்தை அனுபவியுங்கள். அமிர்தம் போன்ற அதன் ரசம் முக்தி பெற்ற ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் ஏற்கனவே அனுபவிக்கக் கூடியதாக இருந்தாலும், ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியின் உதடுகளிலிருந்து அது வெளிவந்திருப்பதால், இந்த பழம் அதைவிட அதிக சுவையுடையதாக ஆகியிருக்கிறது .

பதம் 1.1.4 : ஒருமுறை நைமிஷாரண்ய வனத்திலுள்ள புனிதமான ஓரிடத்தில், சௌனக ரிஷியைத் தலைமையாகக் கொண்ட மகரிஷிகள், பகவானையும் அவரது பக்தர்களையும் திருப்திப் படுத்துவதற்காக, ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் மிகப்பெரிய யாகத்தை நடத்துவதற்காகக் கூடினர்.

பதம் 1.1.5 : ஒரு நாள் ஹோமம் செய்து தங்களது ஆராதனையை முடித்துக்கொண்டபின், சூதரை மதிப்பிற்குரிய ஓர் ஆசனத்தில் அமரச் செய்ததும், அவர்கள் பின்வரும் கேள்விகளை அவரிடம் கேட்டனர்.

பதம் 1.1.6 : ரிஷிகள் கூறினர். மதிப்பிற்குரிய சூத கோஸ்வாமியே, எல்லா களங்கத்திலிருந்தும் தாங்கள் முற்றிலும் விடுபட்டிருக்கிறீர்கள். சமய வாழ்வுக்குத் தேவையான புகழ்பெற்ற எல்லா சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் மற்றும் சரித்திரங்களிலும் கூட தாங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். அவற்றை முறையான வழிகாட்டலின் கீழ் தாங்கள் கற்றதுடன், அவற்றை நீங்கள் விளக்கியும் இருக்கிறீர்கள்.

பதம் 1.1.7 : ஓ சூத கோஸ்வாமியே, கற்றறிந்த வேதாந்தகளில் மூத்தவரான தாங்கள், பரம புருஷரின் அவதாரமாகிய வியாசதேவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறீர்கள். எல்லா வகையான பௌதிக மற்றும் தம் ஆன்மீக அறிவுகளில் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களான மற்ற முனிவர்களைப் பற்றியும் தாங்கள் அறிவீர்கள்.

பதம் 1.1.8 : நீங்கள் பணிவு உள்ளவராகையால், உங்களுடைய ஆன்மீக குருமார்கள், ஒரு நற்பண்புள்ள சீடருக்கு அளிக்கப்பட வேண்டிய எல்லா கல்விகளையும் உங்களுக்கு அளித்துள்ளனர். எனவே, அவர்களிடமிருந்து தாங்கள் கற்றறிந்ததையெல்லாம் எங்களுக்குக் கூறுவீராக.

பதம் 1.1.9 : நீண்ட ஆயுள் படைத்தவரே எது பொதுமக்களுக்கு, பூரணமானதாகவும், முடிவான நன்மையுடையதாகவும் இருக்கும் என்பதை சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தயவுசெய்து எங்களுக்கு விளக்கிக் கூறும்படி வேண்டுகிறோம்.

பதம் 1.1.10 : ஓ கற்றறிந்தவரே, இரும்பு யுகமான இக்கலியுகத்தில் மக்கள் பெரும்பாலும் அற்ப ஆயுளுள்ளவர்களாகவும், சண்டைப் பிரியர்களாகவும், மந்த புத்தி படைத்தவர் களாகவும், அதிர்ஷ்ட மற்றவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக எப்பொழுதும் அமைதியற்றவர்களாகவும் உள்ளனர்.

பதம் 1.1.11 : பல வகையான சாஸ்திரங்களில் பல வகையான கடமைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் பல்வேறு பிரிவுகளையும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் கற்றறிய முடியும். எனவே, ஓ முனிவரே, தயவுசெய்து இவ்வெல்லா சாஸ்திரங்களிலிருந்தும் சாராம்சத்தைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும் தயவுகூர்ந்து அதை விளக்குங்கள். இத்தகைய உபதேசங்களால் அவர்களுடைய இதயங்கள் பூரணமாக திருப்தியடையக்கூடும்.

பதம் 1.1.12 : ஓ சூத கோஸ்வாமியே , உமக்கு மங்களம் உண்டாகட்டும். எக்காரணத்துக்காக, வசுதேவரின் மகனான பரம புருஷர் தேவகியின் கருவில் தோன்றினார் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

பதம் 1.1.13 : ஓ சூத கோஸ்வாமியே, பரம புருஷரையும் அவரது அவதாரங்களையும் பற்றி அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம். முந்தைய ஆச்சாரியர்களால் அளிக்கப்பட்ட உபதேசங்களை தயவுசெய்து எங்களுக்கு விளக்கிக் கூறுங்கள். ஏனெனில், அவைகளைப்பற்றி பேசுவதாலும், கேட்பதாலும், ஒருவர் உயர்வடைகிறார்.

பதம் 1.1.14 : பயமே சொரூபமானதும் கூட, கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கண்டு அஞ்சுகிறது. அத்தகைய புனித நாமத்தை அறியாமல் உச்சரிப்பதாலும் கூட, பிறப்பு, இறப்பெனும் சூழலில் சிக்கிக் கிடக்கும் ஜீவராசிகள் உடனே விடுவிக்கப்படுகின்றன.

பதம் 1.1.15 : ஓ சூதரே, பகவானின் தாமரைப் பாதங்களில் பூரணமாக புகலிடம் கொண்டவர்களான அச்சிறந்த முனிவர்களால், தங்களுடன் தொடர்பு கொள்பவர்களை உடனே புனிதப்படுத்திவிட முடியும். ஆனால் கங்கை நீரோ தொடர்ந்த உபயோகத்திற்குப் பின்தான் புனிதமடையச் செய்கிறது.

பதம் 1.1.16 : கலி யுகத்திலுள்ள களங்கங்களிலிருந்து விடுபட விரும்பும் அதே சமயம், பகவானின் மாசற்ற மகிமைகளைக் கேட்க விரும்பாதவராகவும் இருப்பவர் யாராவது உண்டா ?

பதம் 1.1.17 : அவரது உன்னதச் செயல்கள் அற்புதமும், கவர்ச்சியும் கொண்டவையாகும். நாரதரைப் போன்ற கற்றறிந்த மகா முனிவர்கள் அவற்றைப் புகழ்ந்து பாடுகின்றனர். ஆகவே, பல்வேறு அவதாரங்களில் அவர் இயற்றும் சாகச செயல்களைப் பற்றி கேட்க ஆவலாக உள்ள எங்களிடம் அவற்றைக் கூறுவீராக.

பதம் 1.1.18 : விவேகியான சூதரே, பரம புருஷரின் பல வகையான அவதாரக் கதைகளை தயவுகூர்ந்து எங்களுக்கு விவரிப்பீராக. பரம ஆளுநரான, பகவானின் இத்தகைய மங்களகரமான சாகசங்களும், திருவிளையாடல்களும் அவரது அந்தரங்க சக்திகளால் நிறைவேற்றப் படுகின்றன.

பதம் 1.1.19 : மந்திரங்களாலும் பிரார்த்தனைகளாலும் புகழப்படுபவரான பரம புருஷரின் தெய்வீகமான திருவிளையாடல்களைக் கேட்பதில் நாங்கள் களைப்படைவதே இல்லை. பகவானுடனான உன்னதமான உறவுமுறைகளில் ஒரு சுவையை விருத்தி செய்து கொண்டவர்கள் ஒவ்வொரு கணமும் அவரது திருவிளையாடல்களைக் கேட்டு இன்பம் அடைகின்றனர்

பதம் 1.1.20 : தன் சொரூபத்தை மறைத்துக் கொண்டு மனிதரைப் போல் நடித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பலராமருடன் கூடி மனித சக்தியை மீறிய பல அற்புதங்களைச் செய்துள்ளார்.

பதம் 1.1.21 : கலி யுகம் துவங்கிவிட்டதை நன்குணர்ந்து, பரம புருஷரின் உன்னதமான செய்தியை நீண்ட காலம் தொடர்ந்து செவியுறுவதன் வழியாக, யாகம் இயற்றுவதற்காக, புனிதமான இவ்விடத்தில் நாங்கள் கூடியுள்ளோம்.

பதம் 1.1.22 : இறையருளால்தான் மேன்மை தங்கியவரான தங்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இதனால் ஒரு மனிதனின் எல்லா நற்குணங்களையும் சீரழிப்பதான கலி, யுகமெனும் துன்பக் கடலைக் கடக்க உதவும் கப்பல் தலைவராக தங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்

பதம் 1.1.23 : எல்லா யோக சக்திகளுக்கும் எஜமானரும், பரம சத்தியமுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமது சொந்த வசிப்பிடத்துக்கு திரும்பிச் சென்று விட்டதால், சமயக் கொள்கைகள் இப்போது யாரிடம் சென்று அடைக்கலம் புகுந்துள்ளன என்பதை தயவுகூர்ந்து எங்களுக்குக் கூறுவீராக.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare