அத்தியாயம் – 9
தாய் யசோதை ஸ்ரீ கிருஷ்ணரைக் கட்டுதல்
பதங்கள் 10.9.1 – 10.9.2 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ஒரு நாள் எல்லாப் பணிப்பெண்களும், வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட தாய் யசோதை, தயிரைத் தானே கடையத் துவங்கினாள். இவ்வாறு கடையும்பொழுது, கிருஷ்ணரின் குழந்தைத்தனமான செயல்களை நினைவுகூர்ந்த அவள், தனக்கே உரிய முறையில் அவற்றைப் பாடல்களாகத் தொகுத்து, தனக்குள் அச்செயல்களைப் பற்றி பாடி மகிழ்ந்தாள்.

பதம் 10.9.3 : காவி-மஞ்சள் நிற சேலையையும், இடையைச்சுற்றி ஒருகச்சையையும் அணிந்திருந்த தாய் யசோதை, கயிற்றை இழுத்து வெண்ணெயைக் கடைந்து கொண்டிருந்தாள். இவ்வாறு அதிக வேலையில் ஈடுபட்டிருந்த அவளது வளையல்களும், காதணிகளும் அசைந்தாடி ஓசையெழுப்பின. அவளது தேகம் முழுவதும் குலுங்கியது. தன் குழந்தையிடமுள்ள ஆழ்ந்த அன்பின் காரணத்தால் அவளது மார்பகங்கள் பாலால் நனைந்தன. மிகவும் அழகான புருவங்களைக் கொண்டிருந்த அவளது முகம் வியர்வையால் நனைந்திருந்தது. மல்லிகைப் பூக்கள் அவளது கூந்தலிலிருந்து சிதறி விழுந்தன.

பதம் 10.9.4 : தாய் யசோதை வெண்ணெய் கடைந்து கொண்டிருக்கும்பொழுது, அவளது முலைப்பாலைக் குடிக்க விரும்பிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவள் முன் வந்தார். மேலும் அவளது உன்னத ஆனந்தத்தை அதிகரிக்கும் பொருட்டு, அவர் மத்தைக் கையால் பிடித்துக்கொண்டு, அவள் வெண்ணெய் கடைவதைத் தடுத்து நிறுத்தத் துவங்கினார்.

பதம் 10.9.5 : பிறகு கிருஷ்ணரை அணைத்துக்கொண்ட தாய் யசோதை, அவரைத் தன் மடியில் அமரச் செய்து, பேரன்புடனும், பாசத்துடனும், அவரது முகத்தை நோக்கினாள். ஆழ்ந்த பாசத்தின் காரணத்தால் அவளது ஸ்தனங்களிலிருந்து பால் சுரந்தது. ஆனால் அடுப்பிலிருந்த பால் பொங்கி வழிவதைக் கண்ட அவள், குழந்தை தன் தாய்ப்பாலைக் குடித்து இன்னும் முழு திருப்தி அடையவில்லை என்றபோதிலும், அவரை உடனே ஒருபுறம் வைத்துவிட்டு, பொங்கி வழியும் பாலைக் கவனிக்கச் சென்று விட்டாள்.

பதம் 10.9.6 : மிகவும் கோபமடைந்து, பற்களால் தம் சிவந்த உதட்டைக் கடித்துக் கொண்ட கிருஷ்ணர். பொய்க் கண்ணீருடன், தயிர்ப் பானையை ஒரு கல்லால் உடைத்தார். பிறகு ஓர் அறைக்குள் புகுந்த அவர், ஒரு தனிமையான இடத்தில் புதிதாகக் கடைந்தெடுத்த வெண்ணெயை உண்ணத் துவங்கினார்.

பதம் 10.9.7 : தாய் யசோதை அடுப்பிலிருந்து பாலை இறக்கி வைத்தபின், வெண்ணெய் கடையும் இடத்திற்குத் திரும்பினாள். அங்கு தயிர்ப் பானை உடைந்து கிடப்பதையும், கிருஷ்ணர் இல்லாததையும் கண்ட அவள், பானையை உடைத்தது கிருஷ்ணரின் வேலையாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்தாள்.

பதம் 10.9.8 : அச்சமயத்தில் கிருஷ்ணர், குப்புறக் கவிழ்க்கப்பட்டிருந்த ஒரு மர உரலின் மேல் உட்கார்ந்துகொண்டு, தயிர், வெண்ணெய் போன்ற பால் தயாரிப்புகளை, தம் விருப்பம்போல் குரங்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார். திருட்டைச் செய்ததால். தம் தாயினால் தண்டிக்கப்படக்கூடும் என்றெண்ணி, மிகவும் கவலையுடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார். தாய் யசோதை அவரைக் கண்டதும், மிகவும் கவனத்துடன் பின்புறமிருந்து அவரை நெருங்கினாள்.

பதம் 10.9.9 : கையில் தடியுடனிருக்கும் தம் தாயைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மிக விரைவாக உரலிலிருந்து கீழே இறங்கி. பெரும் அச்சத்திற்குள்ளானவர் போல் ஓட்டம்பிடிக்கத் துவங்கினார். யோகிகள் கடுமையான தவ, விரதங்ளால் பகவானின் பிரகாசத்திற்குள் புக விருப்பங் கொண்டு, தியானத்தின் மூலமாக பகவானைப் பரமாத்மாவாக கைப்பற்ற முயல்கின்றனர் என்றாலும், அவர்கள் பகவானை அடையத் தவறி விடுகின்றனர். ஆனால் தாய் யசோதை, அதே பரமபுருஷரான கிருஷ்ணரைத் தன் மகன் என்றெண்ணி கிருஷ்ணரைப் பிடிப்பதற்காக, அவரைப் பின்தொடர்ந்து செல்லத் துவங்கினாள்.

பதம் 10.9.10 : கிருஷ்ணரைப் பின்தொடர்ந்த தாய் யசோதை,தன் பெரிய ஸ்தனங்களின் பளுவை அவளது மெல்லிய இடையால் தாங்கிக் கொள்ள இயலாமல், இயல்பாகவே தன் வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. கிருஷ்ணரை வேகமாகப் பின்தொடர்ந்து சென்றதால், அவளது கூந்தல் அவிழ்ந்து, அதிலிருந்த மலர்கள் அவளுக்குப் பின்னால் சிதறி விழுந்தன. எனினும், தன் மகனான கிருஷ்ணரை அவள் கைப்பற்றத் தவறவில்லை.

பதம் 10.9.11 : தாய் யசோதையிடம் பிடிபட்ட கிருஷ்ணர், இன்னும் அதிக அச்சமடைந்து, தான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொண்டார். அவரை நோக்கிய யசோதை அவர் அழுவதைக் கண்டாள். அவரது கண்ணீர் அவரது கண்களைச் சுற்றிப் பூசப்பட்டிருந்த கருப்பு மையுடன் கலந்தது. இந்நிலையில் அவர் தம் கைகளால் கண்களைக் கசக்கியபொழுது, அந்த மை அவரது முகம் முழுவதிலும் பரவியது. தாய் யசோதை தன் அழகிய புதல்வரின் கையைப் பற்றி, கனிவுடன் அவரை தண்டிக்கத் துவங்கினாள்.

பதம் 10.9.12 : கிருஷ்ணர் யார், அவர் எவ்வளவு சக்திவாய்ந்தவர் என்பதை அறியாத தாய் யசோதை எப்பொழுதும் கிருஷ்ணரின் ஆழ்ந்த அன்பிலேயே மூழ்கியிருந்தாள். கிருஷ்ணரிடமிருந்த தாய்ப்பாசத்தின் காரணத்தால், அவர் யாரென்பதை அறிவதில்கூட அவள் சிரத்தை காட்டவில்லை. எனவே, தன் மகன் மிகவும் பயந்துவிட்டதைக் கண்ட அவள் கம்பை எறிந்துவிட்டு, தொடர்ந்து குறும்புத்தனங்களை அவர் செய்யாமலிருக்க, அவரைக் கட்டிப்போட விரும்பினாள்.

பதங்கள் 10.9.13 – 10.9.14 : பரமபுருஷர், ஆதியும் அந்தமும், உள்ளும் புறமும், முன்னும் பின்னும் இல்லாதவர். அதாவது அவர் எங்கும் பரவியிருப்பவராவார். அவர் காலத்தின் ஆதிக்கத்திற்கு உட்படாதவர் என்பதால், அவருக்குக் கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களுக்கிடையில் எந்த வேறுபாடுமில்லை. இதனால் எல்லாக் காலங்களிலும் அவர் தமது சுயமான உன்னத ரூபத்திலேயே இருக்கிறார். அவர் சம்பந்த உண்மைக்கு அப்பாற்பட்ட பரிபூர்ணராய் இருப்பதால், அனைத்திற்கும் காரண, விளைவாக இருந்தபோதிலும், காரண விளைவிற்கு இடையிலுள்ள வேறுபாட்டிலிருந்து விடுபட்டிருக்கிறார். வெளிப்படையாகத் தோன்றாதவரும், புலன்களுக்கு அப்பாற்பட்டவருமான அவர் இப்பொழுது ஒரு மனிதக் குழந்தையாகத் தோன்றியுள்ளார். தாய் யசோதை அவரைத் தன் சொந்த குழந்தையாகக் கருதி, அவரை ஒரு கயிற்றால் மர உரலுடன் கட்டிப் போட்டாள்.

பதம் 10.9.15 : தாய் யசோதா, குறும்புத்தனம் செய்யும் குழந்தையைக் கட்ட முயன்றபோது, இரண்டு விரல் அங்குலம் கட்டும் கயிறு குறைவாக இருப்பதைக் கண்டார். இதனால் அதனுடன் இணைக்கப்பட இன்னொரு கயிற்றைக் கொண்டு வந்தாள்.

பதம் 10.9.16 : இப்புதிய கயிறும் இரண்டங்குலம் குறைவாகவே இருந்தது. மற்றொரு கயிறு அதனுடன் இணைக்கப்பட்ட பொழுது அதுவும் இரண்டங்குலம் குறைவாக இருந்தது. எத்தனை கயிறுகளை அவள் இணைத்தாளோ, அத்தனையும் குறைவாகவே இருந்தன; அவற்றின் நீளக்குறைவை வெற்றிகொள்ள இயலவில்லை.

பதம் 10.9.17 : இவ்வாறாக, வீட்டிலிருந்த எல்லாக் கயிறுகளையும் தாய் யசோதை இணைத்துப் பார்த்தாள். எனினும் கிருஷ்ணரைக் கட்டும் முயற்சியில் தோல்வியையே அடைந்தாள். சுற்றுப்புறத்தைச் சேர்ந்த தாய் யசோதையின் தோழிகளான வயது முதிர்ந்த கோபியர்கள் அந்த வேடிக்கையைக் கண்டு சிரித்து மகிழ்ந்தனர். அவர்களோடு தாய் யசோதையும் சிரித்தாள். அவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

பதம் 10.9.18 : தாய் யசோதையின் கடினமான உழைப்பின் காரணத்தால், அவளது உடல் வியர்த்து, அவளது கூந்தலிலிருந்து மலர்களும். சீப்பும் கீழே விழுந்தன. தன் தாய் இவ்வாறு களைத்து விட்டதைக் கண்ட குழந்தை கிருஷ்ணர், அவளிடம் கருணை கொண்டு, கட்டுப்பட ஒப்புக் கொண்டார்.

பதம் 10.9.19 : பரீட்சித்து மகாராஜனே! சிவபெருமான், பிரம்மதேவர், இந்திரன் போன்ற மிகச்சிறந்த தேவர்களை உள்ளடக்கிய இப்பிரபஞ்சம் முழுவதும் பரமபுருஷரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிருஷ்ணருடைய இந்த லீலையில் இது இப்பொழுது காட்டப்பட்டது.

பதம் 10.9.20 : இந்த ஜட உலகிலிருந்து முக்தியை அளிப்பவரான பரமபுருஷரிடமிருந்து எந்த அனுக்கிரத்தை தாய் யசோதை பெற்றாளோ, அதை பிரம்மதேவரோ, சிவபெருமானோ அல்லது எப்பொழுதும் பரமபுருஷரின் சரிபாதியாக உள்ள லக்ஷ்மி தேவியோகூட பெற முடியாது.

பதம் 10.9.21 : தாய் யசோதையின் மகனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தன்னிச்சையான அன்புத் தொண்டில் ஈடுபட்டுள்ள பக்தர்களுக்குச் சுலபமாக அடையக்கூடியவராவார். ஆனால் மனக்கற்பனை வாதிகளுக்கும், கடுந்தவ விரதங்களால் தன்னுணர்வு பெறப் போராடுபவர்களுக்கும், உடலையே தான் என்று கருதுபவர்களுக்கும் அவர் அவ்வளவு சுலபமாக அடையப்படக் கூடியவரல்ல.

பதம் 10.9.22 : தாய் யசோதை குடும்ப வேலைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தபொழுது, முன்னொரு யுகத்தில் குபேரனின் தேவ குமாரர்களாக இருந்த இரு மருத மரங்கள் தம்முன் நிற்பதை பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் கவனித்தார்.

பதம் 10.9.23 : நளகூவரன் மற்றும் மணிகிரீவன் என்ற இவ்விரு மகன்களும் முற்பிறவியில் மிகவும் செல்வச் சிறப்புடனும், அதிர்ஷ்டசாலிகளாகவும் இருந்தனர். ஆனால் அகங்காரத்தாலும், பொய்க் கெளரவத்தாலும் யாரைப் பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. இதனால் அவர்கள் நாரத முனிவரால் மரங்களாகும்படி சபிக்கப்பட்டனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare