அத்தியாயம் – 8
ஸ்ரீ கிருஷ்ணரின் வாய்க்குள் விஸ்வரூப தரிசனம்
பதம் 10.8.1
ஸ்ரீ-சுக உவாச
கர்க: புரோஹிதோ ராஜன் யதூனாம் ஸுமஹா-தபா:
வ்ரஜம் ஜகாம நந்தஸ்ய வஸுதேவ-ப்ரசோதித:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; கர்க:—கர்கமுனி; புரோஹித:—குருவான (புரோகிதரான); ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; யதூனாம்—யது வம்சத்தின்; ஸு-மஹா-தபா:—தவ, விரதங்களில் மிகவும் முன்னேறிய; வ்ரஜம்—விரஜபூமி எனும் கிராமத்திற்கு; ஜகாம—சென்றார்; நந்தஸ்ய—நந்த மகாராஜனின்; வஸுதேவ-ப்ரசோதித:—வசுதேவரால் ஊக்குவிக்கப்பட்டு.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே! யது வம்சத்தின் குருவான கர்கமுனி தவ, விரதங்களில் சிறந்து விளங்கினார். நந்த மகாராஜனை அவரது வீட்டில் சென்று காணும்படி வசுதேவரால் அவர் அனுப்பப்பட்டார்.

பதம் 10.8.2
தம் த்ருஷ்ட்வா பரம-ப்ரீத: ப்ரத்யுத்தாய க்ருதாஞ்ஜலி:
ஆனர்ச்சாதோக்ஷஜ-தியா ப்ர்ணிபாத-புரஹ்ஸரம்

தம்—அவரை (கர்கமுனியை); த்ருஷ்ட்வா—கண்டதும்; பரம-ப்ரீத:—நந்த மகாராஜன் மிகவும் மகிழ்ந்தார்; ப்ரத்யுத்தாய—அவரை வரவேற்க எழுந்து நின்று; க்ருத-அஞ்சலி:—கூப்பிய கரங்களுடன்; ஆனர்ச—வணங்கினார்; அதோக்ஷஜ-தியா—கர்கமுனி புலன்களால் காணப்படக் கூடியவராக இருந்தபோதிலும், நந்த மகாராஜன் அவரிடம் மிகவும் உயர்வான மரியாதையை வைத்திருந்தார்; ப்ரணிபாத-புரஹ்ஸரம்—நந்த மகாராஜன் அவர்முன் விழுந்து வணங்கினார்.

கர்கமுனி தம் வீட்டிற்கு வந்திருப்பதைக் கண்ட நந்த மகாராஜன், எழுந்து நின்று மிகவும் மகிழ்ச்சியுடன் கரம் கூப்பி அவரை வரவேற்றார். கர்கமுனியைத் தம் கண்களால் அவர் கண்ட போதிலும், அவர் அதோக்ஷஜர், அதாவது பெளதிகப் புலன்களால் காணக்கூடிய சாதாரண ஒரு மனிதரல்ல என்ற அவரது மகிமையை நந்த மகாராஜன் உணர்ந்திருந்தார்.

பதம் 10.8.3
ஸூபவிஷ்டம் க்ருதாதித்யம் கிரா ஸூன்ருதயா முனிம்
நந்தயித்வாப்ரவித் ப்ரஹ்மன் பூர்ணஸ்ய கரவாம கிம்

ஸு-உபவிஷ்டம்—கர்கமுனி மிகவும் வசதியாக அமர்ந்ததும்; க்ருத-ஆதித்யம்—ஒரு விருந்தினராக அவர் நன்கு வரவேற்கப்பட்டு; கிரா—வார்தைகளால்; ஸூன்ருதயா—மிகவும் இனிமையான; முனிம்—கர்க முனியை; நந்தயித்வா—இவ்வாறு அவரைத் திருப்திப்படுத்தி; அப்ரவீத்—கூறினார்; ப்ரஹ்மன்—பிராமணரே; பூர்ணஸ்ய—அனைத்திலும் பூரணமானவரான; கரவாம கிம்—உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும் (என்று தயவுகூர்ந்து உத்தரவிடுங்கள்).

கர்கமுனியை ஒரு விருந்தினராக நன்கு வரவேற்று வசதியாக அமரச் செய்ததும், நந்த மகாராஜன் பணிவும், மரியாதையும் நிறைந்த வார்த்தைகளுடன் பேசினார்: முனிவரே, நீங்கள் பக்தரென்பதால் அனைத்திலும் தன்னிறைவு உடையவராவீர். எனினும் உங்களுக்குத் தொண்டு செய்வதே என் கடமை, உங்களுக்காக நான் செய்ய வேண்டியது என்னவென்பதை தயவுகூர்ந்து எனக்குக் கட்டளையிடுங்கள்.

பதம் 10.8.4
மஹத்-விசலனம் ந்ரூணாம் க்ருஹிணாம் தீன-சேதஸாம்
நிஹ்ஸ்ரேயஸாய பகவன் கல்பதே நான்யதா க்வசித்

மஹத்-விசலனம்—பரந்த மனம் படைத்தவர்களின் நடமாட்டம்; ந்ருணாம்—சாதாரண மக்களின் வீடுகளில்; க்ருஹிணாம்—குறிப்பாக குடும்பஸ்தர்கள்; தீன-சேதஸாம்—குடும்ப பராமரிப்பைத் தவிர வேறெதிலும் ஈடுபாடு கொள்ளாத எளிய மனம் படைத்தவர்கள்; நிஹ்ஸ்ரேயஸாய—சிறந்த பக்தரொருவர், குடும்பஸ்தனின் நன்மைக்காகவே அவனது வீட்டிற்குச் செல்கிறார், அதற்கு வேறு காரணமில்லை; பகவன்—மிகவும் சக்திவாய்ந்த பக்தரே; கல்பதே—அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்; ந அன்யதா—வேறெந்த நோக்கத்திற்காகவும் அல்ல; க்வசித்—எச்சமயத்திலும்.

பிரபுவே, மிகச்சிறந்த பக்தரே, உம்மைப் போன்றவர்கள் எளிய மனம் படைத்த குடும்பஸ்தர்களின் நன்மைக்காகவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கிறார்கள், சுய நலனுக்காக அல்ல. இல்லையெனில் இடம் விட்டு இடம் செல்லும் விருப்பம் அவர்களுக்கில்லை.

பதம் 10.8.5
ஜ்யோதிஷாம் அயனம் ஸாக்ஷாத் யத் தத் ஞானம் அதீந்ரியம்
ப்ரணீதம் பவதா யேன புமான் வேத பராவரம்

ஜ்யோதிஷாம்—ஜோதிட அறிவு (அதனுடன் மனிதப் பண்பாட்டின் மற்ற அம்சங்கள், குறிப்பாக நாகரிகமடைந்த சமூகத்தின் சமூகத்தில் ஜோதிட அறிவு இருக்க வேண்டும்); அயனம்—மனித சமூகத்துடன் தொடர்பு கொண்டுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் அசைவுகள்; ஸாக்ஷாத்—நேரடியாக; யத் தத் ஞானம்—இத்தகைய அறிவு; அதி-இந்ரியம்—எது சாதாரண மனிதனின் பார்வைக்குப் புலப்படாததாக இருப்பதால் அவனால் புரிந்துகொள்ள முடியாதோ அது; ப்ரணீதம் பவதா—பக்குவமான ஓர் அறிவு நூலை நீங்கள் தயாரித்திருக்கிறீர்கள்; யேன—எதனால்; புமான்—எவராலும்; வேத—புரிந்துகொள்ள முடியும்; பர-அவரம்—விதியின் காரண, விளைவுகளை.

மாமுனிவரே, ஜோதிட அறிவை நீங்கள் தொகுத்து அளித்திருக்கிறீர்கள். இதனால் காண முடியாத கடந்த கால மற்றும் நிகழ்கால விஷயங்களை ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். இந்த அறிவின் வலிமையால், எந்த மனிதனாலும், கடந்த வாழ்வில் தான் செய்தது என்ன, அது எப்படி தற்போதைய வாழ்வைப் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

பதம் 10.8.6
த்வம் ஹி ப்ரஹ்ம-விதாம் ஸ்ரேஷ்ட: ஸம்ஸ்காரான் கர்தும் அர்ஹஸி
பாலயோர் அனயோர் ந்ரூணாம் ஜன்மனா ப்ராஹ்மணோ குரு:

த்வம்—புனிதமானவரே; ஹி—உண்மையில்; ப்ரஹ்ம-விதாம்—பிராமணர்களிலேயே அல்லது பிரம்மத்தை அறிந்தவர்களிலேயே (ப்ரஹ்ம ஜானாதீதி ப்ராஹ்மண:); ஸ்ரேஷ்ட:—நீங்கள் சிறந்தவராவீர்; ஸம்ஸ்காரான்—சீர்திருத்தச் சடங்கு (இச்சடங்குகளினால் ஒருவர் இரண்டாவது பிறப்பை ஏற்கிறார்; (ஸம்ஸ்காராத் பவேத் த்விஜ:); கர்தும் அர்ஹஸி—நீங்கள் இங்கு வந்திருப்பதால், தயவுகூர்ந்து நிறைவேற்றுங்கள்; பாலயோ:—இவ்விரு மகன்களின் (கிருஷ்ண பலராமரின்); அனயோ:—இவ்விருவரின்; ந்ரூணாம்—இவர்களுக்கு மட்டுமின்றி, மனித சமூகம் முழுவதற்குமே; ஜன்மனா—அவன் பிறந்ததும்; ப்ராஹ்மண:—பிராமணன் உடனடியாக ஆகிறான்; குரு:—வழிகாட்டி.

பிரபு குறிப்பாக நீண்ட ஜோதிட சாஸ்திரத்தை நன்கு அறிந்திருப்பதால் நீங்கள் பிராமணர்களிலேயே மிகச் சிறந்தவராவீர். எனவே இயல்பாகவே அனைவருக்கும் நீங்கள் ஆன்மீக குருவாவீர். இதனால் அருள்கூர்ந்து என் வீட்டிற்கு வருகை அளித்துள்ள தாங்கள், என் இருபுதல்வர்களின் வேதச் சடங்கை (சம்ஸ்காரத்தை நிறைவேற்ற வேண்டுகிறேன்.

பதம் 10.8.7
ஸ்ரீ-கர்க: உவாச
யதூனாம் அஹம் ஆசார்ய: க்யாதஸ் ச புவி ஸர்வதா
ஸுதம் மயா ஸம்ஸ்க்ருதம் தே மன்யதே தேவகீ-ஸுதம்

ஸ்ரீ-கர்க: உவாச—கர்கமுனி கூறினார்; யதூனாம்—யது வம்சத்தின்; அஹம்—நான் இருக்கிறேன்; ஆசார்ய:—குருவாக, அல்லது புரோகிதராக; க்யாத: ச—இது அனைவரும் அறிந்ததே; புவி—எங்கும்; ஸர்வதா—எப்பொழுதும்; ஸுதம்—மகன்; மயா—என்னால்; ஸம்ஸ்க்ருதம்—வைதிகச் சடங்கை மேற்கொண்டு; தே—உமது; மன்யதே—என்று கருதப்படுவார்; தேவகீ-ஸுதம்—தேவகி புத்திரர் என்று.

கர்க முனி கூறினார்: அன்பிற்குரிய நந்த மகாராஜனே, நான் யது வம்சத்தின் புரோகிதன் என்பதை உலகறியும். எனவே உமது புத்திரர்களுக்குரிய வைதிகச் சடங்கை நான் செய்து வைத்தால், கம்சன் அவர்களை தேவகி புத்திரர்களாகக் கருதுவான்.

பதங்கள் 10.8.8 – 10.8.9
கம்ஸ: பாப-மதி: ஸக்யம் தவ சானகதுந்துபே:
தேவக்யா அஷ்டமோ கர்போ ந ஸ்த்ரீ பவிதும் அர்ஹதி

இதி ஸஞ்சிந்தயஞ் ச்ருத்வா தேவக்யா தாரிகா-வச:
அபி ஹந்தா கதாசங்கஸ் தர்ஹி தன் நோ ‘நனயோ பவேத்

கம்ஸ:—கம்ச மன்னன்; பாப-மதி:—களங்கப்பட்ட மதியுடையவன் என்பதால், பெரும் பாவியான; ஸக்யம்—நட்பை; தவ—உமது; ச—மேலும்; ஆனகதுந்துபே:—வசுதேவரின்; தேவக்யா:—தேவகியின்; அஷ்டம: கர்ப:—எட்டாவது கர்பம்; ந—இல்லை; ஸ்த்ரீ—ஒரு பெண்ணாக; பவிதும் அர்ஹதி—இருப்பது சாத்தியம்; இதி—இவ்வாறு; ஸஞ்சிந்தயன்—எண்ணியும்; ஸ்ருத்வா:—மேலும் (இச்செய்தியைக்) கேட்டும்; தேவக்யா:—தேவகியின்; தாரிகா-வச:—மகளிடமிருந்து வரும் செய்தி; அபி—இருந்தபோதிலும்; ஹந்தா கத-ஆசங்க:—கம்சன் இக்குழந்தையைக் கொல்லத் திட்டமிடுவான் என்பதற்கு வாய்ப்புண்டு; தர்ஹி—எனவே; தத்—அச்சம்பவம்; ந:—நமக்கு; அனய: பவேத்—நன்மை பயக்காததாக இருக்கக்கூடும்.

கம்சன் ஒரு பெரிய ராஜதந்திரியும், மகாபாவியுமாவான். எனவே, தன்னைக் கொல்லப்போகும் குழந்தை வேறொரு இடத்தில் பிறந்துவிட்டது என்பதை யோகமாயையிடமிருந்து கேட்டிருப்பதுடன், தேவகியின் எட்டாவது கர்ப்பம் ஒரு பெண் குழந்தையாக இருக்க முடியாது என்பதையும் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். மேலும் வசுதேவரிடம் உமக்குள்ள நட்பையும் அவன் அறிந்திருப்பதால், யதுவம்சப் புரோகிதரான என்னால் சீர்திருத்தச் சடங்கு நிறைவேற்றப்பட்டதை அவன் கேள்விப்பட்டதும், இவ்விஷயங்களையெல்லாம் கருத்திற்கொண்டு, கிருஷ்ணர், தேவகி வசுதேவரின் புதல்வர்தான் என்று சந்தேகித்து, கிருஷ்ணரைக் கொல்லும் திட்டங்களை அவன் மேற்கொள்ளக்கூடும். அது பேராபத்தை விளைவிக்கும்.

பதம் 10.8.10
ஸ்ரீ-நந்த உவாச
அலக்ஷிதோ ‘ஸ்மின் ரஹஸி மாமகைர் அபி கோ-வ்ரஜே
குரு த்விஜாதி-ஸம்ஸ்காரம் ஸ்வஸ்தி-வாசன-பூர்வகம்

ஸ்ரீ-நந்த: உவாச—(கர்கமுனியிடம்) நந்த மகாராஜன் கூறினார்; அலக்ஷித:—கம்சனுக்குத் தெரியாமல்; அஸ்மின் இந்த மாட்டுத் தொழுவத்தில்; ரஹஸி—தனிமையான ஓரிடத்தில்; மாமகை:—என் உறவினர்களால்கூட; அபி—அதைவிட இன்னும் தனிமையான ஓரிடம்; கோ-வ்ரஜே—மாட்டுத் தொழுவத்தில்; குரு—செய்து விடுங்கள்; த்விஜாதி-ஸம்ஸ்காரம்—இரண்டாவது பிறப்பிற்குரிய தூய்மைப்படுத்தும் சடங்கை (ஸம்ஸ்காராத் பவேத் த்விஜ:); ஸ்வஸ்தி-வாசன-பூர்வகம்—தூய்மைப்படுத்தும் சடங்கிற்குரிய வேத மந்திரங்களை ஓதி.

நந்த மகாராஜன் கூறினார்: அன்பிற்குரிய மாமுனிவரே, இந்த தூய்மைப்படுத்தும் சடங்கை நீங்கள் செய்வது கம்சனை சந்தேகிக்கச் செய்யும் என்று நீங்கள் நினைத்தால் என் உறவினர்களுக்குக்கூட இது தெரிய வேண்டாம். இங்கு என் வீட்டிலுள்ள மாட்டுத் தொழுவத்தில், இரகசியமாக வேத மந்திரங்களை ஓதி, இரண்டாவது பிறப்பிற்குரிய (துவிஜர்களுக்குரிய) தூய்மைச் சடங்கைச் செய்தருளுங்கள். ஏனெனில் இந்த தூய்மைப்படுத்தும் சடங்கு மிகவும் முக்கியமானதாகும்.

பதம் 10.8.11
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் ஸம்ப்ரார்திதோ விப்ர: ஸ்வ-சிகீர்ஷிதம் ஏவ தத்
சகார நாம-கரணம் கூடோ ரஹஸி பாலயோ:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறாக; ஸம்ப்ரார்தித:—ஆவலுடன் வேண்டிக்கொண்டதால்; விப்ர:—பிராமணரான கர்கமுனி; ஸ்வ-சிகீர்ஷிதம் ஏவ—எதைச் செய்ய அவர் முன்பே விரும்பினாரோ, எதற்காக அவர் அங்கு சென்றிருந்தாரோ; தத்—அதை; சகார—செய்தார்; நாம-கரணம்—பெயர் சூட்டும் சடங்கை; கூட:—இரகசியமாக; ரஹஸி—தனிமையான ஓரிடத்தில்; பாலயோ:—(கிருஷ்ணர் மற்றும் பலராமர் ஆகிய) இரு சிறுவர்களின்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: குறிப்பாக நந்த மகாராஜனால் இவ்வாறு வேண்டிக்கொள்ளப்பட்டதால், எதைச் செய்ய கர்கமுனி முன்பே தீர்மானித்திருந்தாரோ, அந்த கிருஷ்ண, பலராமரின் பெயர் சூட்டும் சடங்கை அவர் தனிமையான ஓரிடத்தில் செய்து முடித்தார்.

பதம் 10.8.12
ஸ்ரீ-கர்க உவாச
அயம் ஹி ரோஹிணீ-புத்ரோ ரமயன் ஸுஹ்ருதோ குணை:
ஆக்யாஸ்யதே ராம இதி பலாதிக்யாத் பலம் விது:
யதூனாம் அப்ருதக்-பாவாத் ஸங்கர்ஷணம் உசந்தி அபி

ஸ்ரீ-கர்க: உவாச—கர்கமுனி கூறினார்; அயம்—இந்த; ஹி—உண்மையில்; ரோஹிணீ-புத்ர:—ரோகிணியின் மகன்; ரமயன்—இன்பம் தரும்; ஸுஹ்ருத:—அவரது எல்லா நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்; குணை:—உன்னத குணங்களால்; ஆக்யாஸ்யதே—அழைக்கப்படுவார்; ராம:—பரம அனுபவிப்பாளர் என்று பொருள்படும் ராமர் என்ற பெயரால்; இதி—இவ்வாறாக; பல-ஆதிக்யாத்—அசாதாரண பலத்தின் காரணத்தால்; பலம் விது:—பலராமர் என்று அறியப்படுவார்; யதூனாம்—யது வம்சத்தின்; அப்ருதக்-பாவாத்—உம்மிடமிருந்து பிரிக்கப்படாத காரணத்தால்; ஸங்கர்ஷணம்—இரு‌குடும்பங்களை இணைப்பவர் என்று பொருள்படும் சங்கர்ஷணர் என்ற பெயரால்; உசந்தி—கவர்கிறார்; அபி—கூட.

கர்கமுனி கூறினார்: ரோகிணியின் மகனான இக்குழந்தை, தன் உன்னத குணங்களினால், தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எல்லா மகிழ்ச்சியையும் அளிப்பார். எனவே இவர் ராமர் என்று அறியப்படுவார். மேலும் அசாதாரண தேக பலத்தை இவர் வெளிப்படுத்துவார் என்பதால், பாலா என்றும் அறியப்படுவார். அத்துடன், வசுதேவர் மற்றும் நந்த மகாராஜன் ஆகிய இருவரின் குடும்பங்களையும் இணைப்பவர் என்பதால், இவர் சங்கர்ஷணர் என்றும் அறியப்படுவார்.

பதம் 10.8.13
ஆஸன் வர்ணாஸ் த்ரயோ ஹி அஸ்ய க்ருஹ்ணதோ ‘நுயுகம் தனு:
சுக்லோ ரக்தஸ் ததா பீத இதானீம் க்ருஷ்ணதாம் கத:

ஆஸன்—ஏற்கப்பட்டன; வர்ணா: த்ரய:—மூன்று வர்ணங்கள்; ஹி—உண்மையில்; அஸ்ய—உமது மகனான கிருஷ்ணரின்; க்ருஹ்ணத:—ஏற்று; அனுயுகம் தனூ:—வெவ்வேறு யுகங்களுக்கேற்ப உன்னத உடல்களை; சுக்ல:—சிலசமயம் வெள்ளை; ரக்த:—சிலசமயம் சிவப்பு; ததா—அதுமட்டுமின்றி; பீத:—சிலசமயம் மஞ்சள்; இதானீம் க்ருஷ்ணதாம் கத:—தற்பொழுது அவர் கருமை நிறத்தை ஏற்றுள்ளார்.

உமது புத்திரரான கிருஷ்ணர் ஒவ்வொரு யுகத்திலும் ஓர் அவதாரமாகத் தோன்றுகிறார், கடந்த காலத்தில் அவர் வெள்ளை, சிவப்பு, மற்றும் மஞ்சள் என்ற மூவேறு வர்ணங்களை ஏற்றார். இப்பொழுது கருமை நிறத்தில் தோன்றியுள்ளார். வேறொரு துவாபர யுகத்தில் அவர் (பகவான் ராமச்சந்திரராக) ஒரு கிளியின் வர்ணத்தில் தோன்றினார். இத்தகைய அவதாரங்கள் அனைவரும் இப்பொழுது கிருஷ்ணரில் ஒன்று கூடியுள்ளனர்.

பதம் 10.8.14
ப்ராக் அயம் வஸுதேவஸ்ய க்வ்சிஜ் ஜாதஸ் தவாத்மஜ:
வாஸுதேவ இதி ஸ்ரீமான் அபிக்ஞா: ஸம்ப்ரசக்ஷதே

ப்ராக்—முன்பு; அயம்—இக்குழந்தை; வஸுதேவஸ்ய—வசுதேவரின்; க்வசித்—சிலசமயம்; ஜாத:—பிறந்திருக்கிறார்; தாவா—உமது; ஆத்மஜ:—உமது குழந்தையாகப் பிறந்துள்ள கிருஷ்ணர்; வாஸுதேவ:—எனவே வாசுதேவன் என்ற பெயரையும் இவருக்குச் சூட்டலாம்; இதி—இவ்வாறு; ஸ்ரீமான்—மிகவும் அழகான; அபிக்ஞா:—கற்றோர்; ஸம்ப்ரசக்ஷதே—கிருஷ்ணரை வாசுதேவன் என்றும் கூறுகின்றனர்.

உம்முடைய இந்த அழகான மகன், பல காரணங்களுக்காக முன்பு வசுதேவரின் மகனாகத் தோன்றினார். எனவே, கற்றோர், சிலசமயங்களில் இக்குழந்தையை வாசுதேவன் என்றும் அழைப்பதுண்டு.

பதம் 10.8.15
பஹூணி ஸந்தி நாமானி ரூபாணி ச ஸுதஸ்ய தே
குண-கர்மானுரூபாணி தானி அஹம் வேத நோ ஜனா:

பஹூனி—பல்வேறு; ஸந்தி—உள்ளன; நாமானி—நாமங்கள்; ரூபானி—ரூபங்கள்; ச—கூட; ஸுதஸ்ய—மகனுக்கு; தே—உமது; குண-கர்ம-அனுரூபாணி—அவரது இயல்புகளுக்கும், செயல்களுக்கும் ஏற்ப; தானி—அவற்றை; அஹம்—நான்; வேத—அறிவேன்; நோஜனா:—சாதாரண மனிதர்கள் அல்ல.

உம்முடைய இந்த மகனின் உன்னதமான குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப பல நாமங்களும் ரூபங்களும், அவருக்கு உள்ளன இவற்றை நானறிவேன், ஆனால் பொது மக்கள் இவற்றை அறிவதில்லை.

பதம் 10.8.16
ஏஷ வ: ஸ்ரேய ஆதாஸ்யத் கோப-கோகுல-நந்தன:
அனேன ஸர்வ-துர்காணி யூயம் அஞ்ஜஸ் தரிஷ்யத

ஏஷ:—இக்குழந்தை; வ:—உங்கள் அனைவருக்கும்; ஸ்ரேய:—மிகவும் மங்களகரமான; ஆதாஸ்யத்—மிகவும் மங்களகரமாக செயற்படுவார்; கோப-கோகுல-நந்தன:—கோகுலத்தின் மகனாக, இடையர் குலத்தில் பிறந்துள்ள ஓர் இடைச்சிறுவனைப் போலவே; அனேன—அவரால்; ஸர்வ-துர்காணி—எல்லாக் துன்பச் சூழ்நிலைகளையும்; யூயம்—நீங்களனைவரும்; அக்ஞ:—சுலபமாக; தரிஷ்யத—கடந்து விடுவீர்கள்.

கோகுலத்தைச் சேர்ந்த இடையர்களில் உன்னத ஆனந்தத்தை அதிகரிப்பதற்காக. இக்குழந்தை எப்பொழுதும் உமக்கு மங்களம் அருளும் வகையில் செயற்படுவார். இவரது அருளால்தான் நீர் எல்லாக் கஷ்டங்களையும் எளிதில் கடக்கப்போகிறீர்.

பதம் 10.8.17
புராணேன வ்ரஜ-பதே ஸாதவோ தஸ்யு பீடிதா:
அராஜகே ரக்ஷ்யமாணா ஜிக்யுர் தஸ்யூன் ஸமேதிதா:

புரா—முன்பு; அனேன—கிருஷ்ணரால்; வ்ரஜ-பதே—விரஜ மன்னரே; ஸாதவ:—நேர்மையானவர்கள்; தஸ்யு-பீடிதா:—அயோக்கியர்களாலும், திருடர்களாலும் தொல்லை கொடுக்கப்பட்டு; அராஜகே—ஒழுங்கற்ற அரசாங்கம் ஏற்பட்டிருந்தபொழுது; ரக்ஷ்யமானா:—பாதுகாக்கப்பட்டனர்; ஜீக்யு:—தோற்கடித்தார்; தஸ்யூன்—அயோக்கியர்களையும், திருடர்களையும்; ஸமேதிதா:—செழிப்படைந்தனர்.

நந்த மகாராஜனே! சரித்திரத்தில் குறித்து வைக்கப்பட்டுள்ளது போல், இந்திரன் அரசுரிமையிலிருந்து இறக்கப்பட்டு, ஒழுங்கற்ற, திறமையற்ற ஓர் அரசாங்கம் ஏற்பட்டபொழுதும், மக்கள் திருடர்களால் சதா தொந்தரவு செய்யப்பட்ட பொழுதும், மக்களைப் பாதுகாத்து அவர்களை செழிப்புறச் செய்வதற்காகவும், அயோக்கியர்களையும், திருடர்களையும் அடக்குவதற்காகவும் இக்குழந்தை தோன்றியுள்ளார்.

பதம் 10.8.18
ய ஏதஸ்மின் மஹா-பாகா: ப்ரீதிம் குர்வந்தி மானவா:
நாரயோ ‘பிபவந்தி ஏதான் விஷ்ணு-பக்ஷான் இவாஸுரா:

யே—அவர்கள்; ஏதஸ்மின்—இக்குழந்தையிடம்; மஹா-பாகா:—மிகவும் அதிர்ஷ்டசாலிகளாவர்; ப்ரீதிம்—பாசம்; குர்வந்தி—கொள்பவர்கள்; மானவா:—இத்தகையவர்கள்; ந—இல்லை; அரய:—பகைவர்கள்; அபிபவந்தி—வெற்றி கொள்கின்றனர்; ஏதான்—கிருஷ்ணரிடம் பற்றுடையவர்கள்; விஷ்ணு-பக்ஷான்—எப்பொழுதும் பகவான் விஷ்ணுவைத் தங்களுக்கு ஆதரவாகப் பெற்றுள்ள தேவர்கள்; இவ—போல்; அஸுரா:—அசுரர்கள்.

பகவான் விஷ்ணுவை எப்பொழுதும் தங்களுக்கு ஆதரவாகப் பெற்றுள்ள தேவர்களுக்கு அசுரர்களால் தீங்கிழைக்க முடியாது. அது போலவே, எந்த ஒரு நபர் அல்லது பிரிவு கிருஷ்ணரிடம் பற்றுக் கொண்டுள்ளாரோ, அவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாவார். இத்தகையவர்கள் கிருஷ்ணரிடம் மிகவும் பாசம் கொண்டிருப்பதால், இவர்களை கம்சனின் சகாக்களைப் போன்ற நண்பர்களால் (அல்லது உள்ளிருக்கும் பகைவர்களான புலன்களால்) வெற்றி கொள்ள முடியாது.

பதம் 10.8.19
தஸ்மான் நந்தாத்மஜோ ‘யம் தே நாராயண-ஸமோ குணை:
ஸ்ரியா கீர்த்யானுபாவேன கோபாயஸ்வ ஸமாஹித:

தஸ்மாத்—எனவே; நந்த—நந்த மகாராஜனே; ஆத்மஜ:—உமது மகன்; அயம்—இந்த; தே—உம்முடைய; நாராயண-ஸம:—நாராயணருக்குச் சமமானவர் (உன்னத குணங்களைக் காட்டும் நாராயணரேயாவார்); குணை:—குணங்களால்; ஸ்ரியா—ஐசுவரியத்தால்; கீர்த்யா—குறிப்பாக அவரது நாமம், புகழ் ஆகியவற்றினால்; அனுபாவேன—மேலும் அவரது செல்வாக்கினால்; கோபாயஸ்வ—இக்குழந்தையை வளர்த்து வாருங்கள்; ஸமாஹித:—மிகவும் கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடனும்.

எனவே, நந்த மகாராஜனே! முடிவாக உம்முடைய இக்குழந்தை நாராயணருக்குச் சமமானவராவார். இவரது உன்னதமான குணங்கள், ஐசுவரியம், நாமம், புகழ் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றில் இவர் நாராயணரைப் போன்றவர். நீங்களனைவரும் இக்குழந்தையை மிகவும் கவனத்துடனும், முன்யோசனையுடனும் வளர்த்துவர வேண்டும்.

பதம் 10.8.20
ஸ்ரீ-சுக உவாச
இதி ஆத்மானம் ஸமாதிஸ்ய கர்கே ச ஸ்வ-க்ருஹம் கதே
நந்த: ப்ரமுதிர்தோ மேனே ஆத்மானம் பூர்ணம் ஆசிஷாம்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ஆத்மானம்—பரமாத்மாவான பரம சத்தியத்தைப் பற்றி; ஸமாதிஸ்ய—முழுமையாக உபதேசித்த பின்; கர்கே—கர்கமுனி; ச—கூட; ஸ்வ-க்ருஹம்—அவரது சொந்த வசிப்பிடத்திற்கு; கதே—சென்றதும்; நந்த:—நந்த மகாராஜன்; ப்ரமுதித:—மிகவும் மகிழ்ச்சியுடையவரானார்; மேனே—கருதினார்; ஆத்மானம்—தம்மை; பூர்ணம் ஆசிஷாம்—எல்லா நல்லதிர்ஷ்டங்களும் நிரம்பியவராக.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: நந்த மகாராஜனுக்கு கிருஷ்ணரைப்பற்றி உபதேசித்த கர்கமுனி, தமது சொந்த வீட்டிற்குச் சென்றபின், பேரானந்தத்தில் ஆழ்ந்த நந்த மகாராஜன், தம்மை எல்லா நல்லதிர்ஷ்டங்களும் நிரம்பப் பெற்றவராகக் கருதினார்.

பதம் 10.8.21
காலேன வீரஜதால்பேன கோகுலே ராம-கேசவௌ
ஜானுப்யாம் ஸஹ பாணிப்யாம் ரிங்கமாணௌ விஜஹ்ரது:

காலேன வ்ரஜதா—காலம் கடந்ததும்; அல்பேன—மிகவும் குறுகிய; கோகுலே—கோகுலத்தில், விரஜ-தாமத்தில்; ராம-கேசவெள—கிருஷ்ணரும், பலராமரும்; ஜானுப்யாம்—அவர்களது முழங்கால்களின் பலத்தைக்கொண்டு; ஸஹ பாணிப்யாம்—அவர்களது கரங்களை ஊன்றி; ரிங்கமாணௌ—தவழ்ந்து சென்று; விஜஹ்ரது:—பிள்ளைப் பிராயத்து விளையாட்டை அனுபவித்தனர்.

சிறிது காலம் கடந்ததும், சகோதரர்களான ராமரும், கிருஷ்ணரும் தங்களது கரங்களையும், முழங்கால்களையும் ஊன்றி, விரஜ பூமியில் தவழத் துவங்கினார். இவ்விதமாக தங்களது பிள்ளைப் பிராயத்து விளையாட்டை அவர்கள் அனுபவித்தனர்.

பதம் 10.8.22
தாவ் அங்ரி-யுக்மம் அனுக்ருஷ்ய ஸரீஸ்ருபந்தெள
கோஷ-ப்ரகோஷ-ருசிரம் வ்ரஜ-கர்தமேஷு
தன்-நாத-ஹ்ருஷ்ட-மனஸாவ் அனுஸ்ருத்ய லோகம்
முக்த-ப்ரபீதவத் உபேயதுர் அந்தி மாத்ரோ:

தாவ்—கிருஷ்ணரும், பலராமரும்; அங்ரி-யுக்மம் அனுக்ருஷ்ய—அவர்களது கால்களை இழுத்துக்கொண்டு; ஸரீஸ்ருபந்தௌ—பாம்புகள் போல் ஊர்ந்து; கோஷ-ப்ரகோஷ-ருசிரம்—தங்களுடைய கால் சலங்கைகளால் மிகவும் இனிமையான ஓசையை எழுப்பிக் கொண்டு; வ்ரஜ-க்ரதமேஷு—விரஜபூமியில் கோமியத்தாலும், கோஜலத்தாலும் உண்டாக்கப்பட்ட சேற்றில்; தத்-நாத—அக்கொலுசுகளின் ஓசையால்; ஹ்ருஷ்ட-மனஸெள—மிகவும் மகிழ்ந்து; அனுஸ்ருத்ய—பின்தொடர்ந்து; லோகம்—மற்றவர்களை; முக்த—இவ்வாறு வசீகரிக்கப்பட்டு; ப்ரபீத-வத்—பிறகு மீண்டும் அவர்களைக் கண்டு அஞ்சி; உபேயது:—உடனே திரும்பி வந்தனர்; அந்தி மாத்ரோ:—அவர்களுடைய தாய்களை நோக்கி.

கிருஷ்ணரும், பலராமரும் தங்களுடைய கால்களின் பலத்தைக் கொண்டு, கோமியத்தாலும், கோஜலத்தாலும் உண்டாக்கப்பட்ட விரஜையின் சேற்றுப் பகுதிகளில் தவழ்ந்து சென்றனர். அது பாம்புகள் ஊர்ந்து செல்வதை ஒத்திருந்தது. அவர்களது கால் சலங்கைகளின் ஒசையும் மிகவும் வசீகரமாக இருந்தது. மற்றவர்களுடைய சலங்கையொலியால் மிகவும் மகிழ்ந்த அவர்கள், தங்கள் தாய்களை நோக்கிச் செல்வதாக எண்ணி அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். ஆனால் அவர்கள் வேற்று மனிதர்கள் என்பதைக் கண்டதும். அச்சமடைந்த அவர்கள் தங்கள் உண்மைத் தாய்களான யசோதை, மற்றும் ரோகிணியிடம் திரும்பி வந்தனர்.

பதம் 10.8.23
தன்-மாதரௌ நிஜ-ஸுதெள க்ருணயா ஸ்னுவந்த்யௌ
பங்காங்க-ராக-ருசிராவ் உபக்ருஹ்ய தோர்ப்பாம்
தத்வா ஸ்தனம் ப்ரபிபதோ: ஸ்ம முகம் நிரீக்ஷ்ய
முக்த-ஸ்மிதால்ப-தசனம் யயது: ப்ரமோதம்

தன்-மாதரெள—அவர்களுடைய தாய்கள் (ரோகிணியும், யசோதையும்); நிஜூ-ஸுதெள—அவரவர் மகன்களை; க்ருணயா—மிகவும் பாசத்துடன்; ஸ்னுவந்த்யௌ—மிகவும் மகிழ்ச்சியுடன் தங்கள் முலைப்பாலைக் குடிக்கச் செய்தனர்; பங்க-அங்க-ராக-ருசிரௌ—அவர்களது உன்னதமான அழகிய உடல்கள் கோமியமும், கோஜலமும் கலந்த சேற்றினால் மூடப்பட்டிருந்தன; உபக்ருஹ்ய—பற்றித் தூக்கி; தோர்ப்யாம்—அவர்களது கரங்களால்; தத்வா—அவர்களுக்குக் கொடுத்து; ஸ்தனம்—முலைப் பாலை; ப்ரபிபதோ:—குழந்தைகள் குடிக்கும் பொழுது; ஸ்ம—உண்மையில்; முகம்—வாயை; நிரீக்ஷ்ய—கண்டு; முக்த-ஸ்மித-அல்ப-தசனம்—அவர்களது வாய்களிலிருந்து வெளிவந்த சின்னஞ்சிறு பற்களுடன் புன்னகை செய்வதை (கண்ட அவர்கள் இன்னும் அதிகமாகக்கவரப்பட்டனர்); யயது:—அனுபவித்தனர்; ப்ரமோதம்—உன்னத ஆனந்தத்தை.

கோமியமும், கோஜலமும் கலந்த சேற்றினால் தோய்ந்திருந்த ஆடைகளுடனிருந்த குழந்தைகள் மிகவும் அழகாகக் காணப்பட்டனர். தங்கள் தாய்களான யசோதையிடமும், ரோகிணியிடமும் சென்ற அவர்களை மிகவும் பாசத்துடன் தூக்கி அனைத்துக்கொண்ட அவர்கள், தங்கள் முலைப்பாலை அவர்களுக்கு ஊட்டினர். முலைப் பாலைக் குடித்துக் கொண்டிருந்த குழந்தைகள் சிரித்தபொழுது அவர்களது சிறிய பற்கள் காணப்பட்டன. அவ்வழகிய பற்களைக் கண்ட தாய்கள் உன்னதமான பேரானந்தத்தை அனுபவித்தனர்.

பதம் 10.8.24
யர்ஹி அங்கனா-தர்சனீய-குமார-லீலாவ்
அந்தர்-வ்ரஜே தத் அபலா: ப்ரக்ருஹீத-புச்சை:
வத்ஸைர் இதஸ் தத உபாவ் அனுக்ருஷ்யமாணெள
ப்ரேக்ஷந்த்ய உஜ்ஜித-க்ருஹா ஜஹ்ருஷுர் ஹஸந்த்ய:

யர்ஹி—அப்பொழுது; அங்கனா-தர்சனீய—வீட்டிலுள்ள பெண்களால் மட்டுமே காணப்பட்ட; குமார-லீலௌ—குழந்தைகளாக இருந்த கிருஷ்ண, பலராமரின் லீலைகள்; அந்தர்வ்ரஜே—விரைஜயின் உட்புறத்தில், நந்த மகாராஜனின் வீட்டில்; தத்—அப்பொழுது; அபலா:—எல்லாப் பெண்களும்; ப்ரக்ருஹீத-புச்சை:—அவற்றின் வால்கள் கிருஷ்ண, பலராமரால் பற்றிக் கொள்ளப்பட்டதால்; வத்ஸை:—கன்றுகளால்; இதஸ் தத:—இங்கும் அங்குமாக; உபௌ—கிருஷ்ணரும், பலராமரும்; அனுக்ருஷ்ய மானெள—இழுத்துச் செல்லப்பட்டு; ப்ரேக்ஷந்த்ய:—இவற்றைக் கண்டு; உஜ்ஜித—கைவிடப்பட்டு; க்ருஹா:—அவர்களுடைய வீட்டு வேலைகள்; ஜஹ்ருஷு:—மிகவும் அனுபவித்தனர்; ஹஸந்த்ய:—சிரித்துக் கொண்டே.

நந்த மகாராஜனின் வீட்டிற்குள், இடையர்குலப் பெண்கள், குழந்தைகளான கிருஷ்ண, பலராமரின் லீலைகளைக் கண்டு களித்தனர். குழந்தைகள், கன்றுகளுடைய வால்களின் நுனிகளைப் பற்றிக்கொள்வார்கள். கன்றுகளும் அவர்களை இங்குமங்குமாக இழுத்துச் செல்லும் இந்த லீலைகளைக் கண்ட பெண்கள், உண்மையாகவே தங்கள் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு, இச்சம்பவங்களைக் கண்டு சிரித்து மகிழ்ந்தனர்.

பதம் 10.8.25
ஸ்ருங்கி-அக்னி-தம்ஷ்ட்ரீ-அஸி-ஜல-த்விஜ-கண்டகேப்ய:
க்ரீடா-பராவ் அதிசலௌ ஸ்வ-ஸுதெள நிஷேத்தும்
க்ருஹ்யாணி கர்தும் அபி யத்ர ந தஜ்-ஜனன்யௌ
சேகாத ஆபதுர் அலம் மனஸோ ‘நவஸ்தாம்

ஸ்ருங்கீ—பசுக்களுடன்; அக்னி—நெருப்பு; தம்ஷ்ட்ரீ—குரங்குகள் மற்றும் நாய்கள்; அஸி—வாள்கள்; ஜல—நீர்; த்விஜ—பறவைகள்; கண்டகேப்ய:—மற்றும் முட்கள்; க்ரீடா-பரௌ: அதி-சலௌ—சிறிதும் அமைதியற்ற குழந்தைகள் விளையாட்டில் ஈடுபட்டனர்; ஸ்வ-ஸுதெள—தங்களது சொந்த இரு மகன்கள்; நிஷேத்தும்—அவர்களை நிறுத்துவதற்காகவே; க்ருஹ்யாணி—வீட்டு வேலைகளை; கர்தும் அபி—செய்வதன் மூலம்; யத்ர—அப்பொழுது; ந—இல்லை; தத்-ஜனன்யெள—அவர்களது தாய்கள் (ரோகிணி மற்றும் யசோதை); சேகாதே—முடிந்தது; ஆபது:—அடைய; அலம்—உண்மையில்; மனஸ:—மனதின்; அனவஸ்தாம்—சமநிலையை.

கொம்புள்ள பசுக்கள், நெருப்பு, கூரிய பல் மற்றும் நகங்களுடன் கூடிய குரங்குகளையும், நாய்களையும், பூனைகளையும் போன்ற மிருகங்கள், தரையிலுள்ள முட்கள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்கள் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத பொழுது, தாய் யசோதையும், ரோகிணியும் இடையறாத கவலைக்குள்ளாயினர். அவர்களது வீட்டு வேலைகள் தடைப்பட்டன. அச்சமயத்தில், அவர்களது மனங்களில் தாய்ப்பாசம் மேலோங்கியதால், அதனால் உண்டான துன்பம் எனப்படும் உன்னத பரவச நிலையில் முழுமையாக அவர்கள் ஆழ்ந்தனர்.

பதம் 10.8.26
காலேனால்பேன ராஜர்ஷே ராம: க்ருஷ்ணஸ் ச கோகுலே அக்ருஷ்ட-ஜானுபி: பத்பிர் விசக்ரமதுர் அஞ்ஜஸா

காலேன அல்பேன—மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக; ராஜர்ஷே—அரசே (பரீட்சித்து மகாராஜனே); ராம: க்ருஷ்ண: ச—ராமர், கிருஷ்ணர் இருவரும்; கோகுலே—கோகுலத்தில்; அக்ருஷ்ட-ஜானுபி:—அவர்களது முழங்கால்களில் தவழவேண்டிய அவசியமின்றி; பத்பி:—அவர்களது கால்களால் மட்டுமே; விசக்ரமது:—நடக்கத் துவங்கினர்; அஞ்ஜஸா—மிகச் சுலபமாக.

பரீட்சித்து மகாராஜனே! ராமர், கிருஷ்ணர் ஆகிய இருவரும் மிகவும் குறுகிய காலத்திலேயே, தவழும் அவசியமின்றி, தங்களது சொந்த பலத்தைக் கொண்டு, தங்களது கால்களால் மிகச் சுலபமாக கோகுலத்தில் நடக்கத் துவங்கினர்.

பதம் 10.8.27
ததஸ் து பகவான் க்ருஷ்ணோ வயஸ்யைர் வ்ரஜ-பாலகை:
ஸஹ-ராமோ வ்ரஜ-ஸ்த்ரீணாம் சிக்ரீடே ஜனயன் முதம்

தத:—அதன்பிறகு; து—ஆனால்; பகவான்—பரமபுருஷரான; க்ருஷ்ண:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; வயஸ்யை:—அவர்களது விளையாட்டு நண்பர்களுடன்; வ்ரஜ-பாலகை:—மற்ற வ்ரஜை சிறு குழந்தைகளுடன்; ஸஹ-ராம:—பலராமருடன்; வ்ரஜ-ஸ்த்ரீணாம்—விரஜைப் பெண்கள் அனைவரின்; சிக்ரீடே—மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினர்; ஜனயன்—எழச் செய்து; முதம்—உன்னத ஆனந்தத்தை.

அதன்பிறகு, மற்ற இடைச் சிறுவர்களுடன் விளையாடத் துவங்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இடையர்குலப் பெண்களின் உன்னத ஆனந்தத்தை பெருகச் செய்தார்.

பதம் 10.8.28
க்ருஷ்ணஸ்ய கோப்யோ ருசிரம் வீக்ஷ்ய கௌமார-சாபலம்
ஸ்ருண்வந்த்யா: கில தன்-மாதுர் இதி ஹோக: ஸமாகதா:

க்ருஷ்ணஸ்ய—கிருஷ்ணரின்; கோப்ய:—கோபியர் அனைவரும்; ருசிரம்—மிகக் கவர்ச்சிகரமான; வீக்ஷ்ய—கண்டு; கௌமார-சாபலம்—அமைதியற்ற குழந்தைத்தனமான லீலைகளை; ஸ்ருண்வந்த்யா:—அவற்றை மீண்டும் மீண்டும் கேட்பதற்காகவே; கில—உண்மையில்; தத்-மாது:—அவரது தாயின் முன்னிலையில்; இதி—இவ்வாறு; ஹ—உண்மையில்; ஊக:—கூறினர்; ஸமாகதா:—அங்கு கூடி.

கிருஷ்ணரின் மிகக் கவர்ச்சிவாய்ந்த, குழந்தைத்தனமான அமைதியின்மையைக் கண்ட சுற்றுப்புறத்திலுள்ள கோபியர்கள் அனைவரும், மீண்டும் மீண்டும் கிருஷ்ணரின் செயல்களைப்பற்றிக் கேட்கும் பொருட்டு, தாய் யசோதையை அணுகி, அவளிடம் பின்வருமாறு கூறினார்.

பதம் 10.8.29
வத்ஸான் முஞ்சன் க்வசித் அஸமயே க்ரோச-ஸஞ்ஜாத-ஹஸ:
ஸ்தேயம் ஸ்வாத்வத்தி அத ததி-பய: கல்பிதை: ஸ்தேய-யோகை:
மர்கான் போக்ஷ்யன் விபஜதி ஸ சேன் நாத்தி பாண்டம் பின்னத்தி
த்ரவ்யாலாபே ஸக்ருஹ-குபிதோ யாதி உபக்ரோஸ்ய தோகான்

வத்ஸான்—கன்றுகளை; முஞ்சன்—அவிழ்த்து விட்டுவிடுவான்; க்வசித்—சிலசமயம்; அஸமயே—வழக்கமில்லாத நேரங்களில்; க்ரோச-ஸஞ்ஜாத-ஹாஸ:—இதன்பிறகு வீட்டுத் தலைவர் கோபத்திற்குள்ளானதும், கிருஷ்ணன் சிரிக்கத் துவங்குவான்; ஸ்தேயம்—திருடிப் பெற்ற; ஸ்வாது—மிகவும் சுவையான; அத்தி—உண்பான்; அத—இவ்வாறு; ததி-பய:—தயிறு அல்லது பால் பாணையை; கல்பிதை:—திட்டமிட்டு; ஸ்தேய-யோகை:—ஏதோ ஒரு திருட்டுச் செயலால்; மர்கான்—குரங்குகளுக்கு; போக்ஷ்யன்—சாப்பிடக் கொடுத்து; விபஜதி—அவற்றின் பாகத்தைப் பிரித்து; ஸ:—குரங்கு; சேத்—என்றால்; ந—இல்லை; அத்தி—சாப்பிட; பாண்டம்—பாத்திரத்தை; பின்னத்தி—அவன் உடைப்பான்; த்ரவ்ய-அலாபே—உணவு வகைகள் கிடைக்காதபொழுது அல்லது இத்தகைய பாத்திரங்களை அவனால் கண்டுபிடிக்க முடியாதபொழுது; ஸ-க்ருஹ-குபித:—வீட்டுவாசிகளிடம் அவன் கோபப்படுவான்; யாதி—அவன் சென்று விடுவான்; உபக்ரோஸ்ய—எரிச்சலூட்டியும், கிள்ளியும்; தோகான்—சிறு குழந்தைகளை.

“எங்கள் அன்புத் தோழியே யசோதா, சிலசமயம் உன் மகன் பசுக்களைக் கறக்குமுன் எங்கள் வீடுகளுக்கு வந்து கன்றுகளை அவிழ்த்து விட்டுவிடுகிறான், வீட்டின் எஜமானர் கோபப்படும் பொழுது உன் மகன் சிரிக்கிறான். சிலசமயம் அவன் ஏதேனும் திட்டம் தீட்டி, சுவையான தயிர், வெண்நெய், பால் ஆகியவற்றைத் திருடி, அவற்றை உண்டு, அருந்தி மகிழ்கிறான். குரங்குகள் அங்கு கூடிவிடும் பொழுது, அவற்றிற்கும் அதைப் பங்கிட்டுக் கொடுக்கிறான். குரங்குகள் தங்கள் வயிறுகள் நிரம்பி சாப்பிட மறுக்கும் பொழுது, அவன் பாத்திரங்களை உடைத்து விடுகிறான். சிலசமயம் ஏதேனும் ஒரு வீட்டில் வெண்ணையோ, பாலோ திருடும் வாய்ப்புக் கிடைக்காத பொழுது, குடும்பஸ்தர்களிடம் கோபம் கொள்ளும் அவன், அதற்குப் பழிவாங்கும் வகையில் சிறு குழந்தைகளைக் கிள்ளி அவர்களைத் துன்புறுத்துகிறான். பிறகு குழந்தைகள் அழத்துவங்கும்பொழுது, கிருஷ்ணன் அங்கிருந்து சென்றுவிடுகிறான்”.

பதம் 10.8.30
ஹஸ்தாக்ராஹ்யே ரசயதி விதிம் பீடகோலூகலாத்யைஸ்
சித்ரம் ஹி அந்தர்-நிஹித-வயுன: சிக்ய-பாண்டேஷு தத்-வித்
த்வாந்தாகாரே த்ருத-மணி-கணம் ஸ்வாங்கம் அர்த-ப்ரதிபம்
காலே கோப்யோ யர்ஹி க்ருஹ-க்ருத்யேஷு ஸுவ்யக்ர-சித்தா:

ஹஸ்த-அக்ராஹ்யே—அடையவேண்டிய பொருள் தம் கைக்கெட்டாதபடி இருக்கும்பொழுது; ரசயதி—செய்ய ஏற்பாடு செய்கிறான்; விதம்—ஒரு வழியை; பீடக—மரப் பலகைகளைப் பீடம் போல் அடுக்கி; உலூகல-ஆத்யை:—வாசனைத் திரவியங்கள் இடிப்பதற்குரிய உரலைத் திருப்பிப் போட்டு; சித்ரம்—ஒரு துவாரத்தை; ஹி—உண்மையில்; அந்த:-நிஹித—பானையில் உள்ள பொருளைப் பற்றிய; வயுன:—இத்தகைய அறிவுடன்; சிக்ய—ஓர் உரியில் தொங்கிக் கொண்டிருக்கும்; பாண்டேஷு—பாத்திரங்களில்; தத்-வித்—அந்த அறிவில் புலமையுடன், அல்லது முழு அறிவுடன்; த்வாந்த-ஆகாரே—மிகவும் இருண்ட ஓர் அறையில்; த்ருத-மணி-கணம்—விலையுயர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காரணத்தால்; ஸ்வ-அங்கம்—அவரது சொந்த உடல்; அர்த-ப்ரதிபம்—இருளில் காண்பதற்குத் தேவையான ஒளியாகியது; காலே—அதன்பிறகு, காலப் போக்கில்; கோப்ய:—வயதான கோபியர்கள்; யர்ஹி—உடனேயே; க்ருஹ-க்ருத்யேஷு—குடும்ப விவகாரங்களைக் கவனிப்பதில்; ஸு-வ்யக்ர-சித்தா:—சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

“பாலும், வெண்ணெயும் கூரையின் கீழ் உயரமான ஓர் உறியில் இருந்த பொழுது கிருஷ்ணராலும், பலராமராலும் அவற்றை எட்டிப்பிடிக்க முடியாததால், பலகைகளை அடுக்கியும், உரலைத் திருப்பிப் போட்டும் அவற்றை அடைய ஏற்பாடு செய்கின்றனர். பானையிலிருப்பதை நன்கறிந்துள்ள அவர்கள் அதில் துளையிடுகின்றனர். வயதான கோபியர்கள் தங்கள் குடும்ப விவகாரங்களைக் கவனித்துக்கொண்டு இருக்கும்பொழுது, கிருஷ்ணரும், பலராமரும் சிலசமயங்களில் ஓர் இருட்டறைக்குள் சென்று, தங்களின் உடலில் அணிந்துள்ள விளையுயர்ந்த இரத்தினங்கலாலும், ஆபரணங்களாலும் அந்த இடத்தை பிரகாசப்படுத்தி, இவ்வொளியை, திருடுவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.”

பதம் 10.8.31
ஏவம் தார்ஷ்ட்யானி உசதி குருதே மேஹனாதீனி வாஸ்தௌ
ஸ்தேயோபாயைர் விரசித-க்ருதி: ஸுப்ரதீகோ யதாஸ்தே
இத்தம் ஸ்த்ரீபி: ஸ-பய-நயன-ஸ்ரீ-முகாலோகினீபிர்
வ்யாக்யாதார்த்தா ப்ரஹஸித-முகீ ந ஹி உபாலப்தும் ஜச்சத்

ஏவம்—இவ்வாறாக; தார்ஷ்ட்யானி—குறும்புச் செயல்கள்; உசதி—சுத்தமான ஓரிடத்தில்; குருதே—சிலசமயம் செய்கிறான்; மேஹன-ஆதீனி—மல, மூத்திரங்களைக் கழிக்கிறான்; வாஸ்தௌ—எங்கள் வீடுகளில்; ஸ்தேய-உபாயை:—மேலும் பாலையும், வெண்ணெயையும் திருடுவதற்கு வெவ்வேறு உபாயங்களைக் கண்டுபிடித்து; விரசித-க்ருதி:—மிகவும் நிபுணனாவான்; ஸுப்ரதீக:—நன்னடத்தையுள்ள, மிகவும் நல்ல குழந்தையைப் போல் இப்பொழுது உட்கார்ந்து கொண்டிருக்கிறான்; யதா ஆஸ்தே—இங்கு இருக்கும்பொழுது; இத்தம்—பேசிய இவ்விஷயங்கள் எல்லாம்; ஸ்த்ரீபி:—கோபியர்களால்; ஸ-பய-நயன—அச்சம் நிறைந்த கண்களுடன் இப்பொழுது அங்கு அமர்ந்திருக்கும்; ஸ்ரீ-முக—இத்தகைய ஓர் அழகிய முகத்தை; ஆலோ-கினீபி:—காணும் இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த கோபியர்களால்; வ்யாக்யாத-அர்தா—தாய் யசோதையின் முன் அவரைப் பற்றி புகார் செய்யும் பொழுது; ப்ரஹஸித-முகீ—அவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்; ந—இல்லை; ஹி—உண்மையில்; உபாலப்தும்—தண்டிக்கவும், பயமுறுத்தவும் (இன்னும் சரியாகக் கூறுமிடத்து, கிருஷ்ணர் ஒரு நல்ல பிள்ளையைப்போல் அங்கு அமர்ந்திருந்ததைக் கண்டு அவள் ரசித்தாள்); ஜச்சத்—அவள் விரும்பினாள்.

“கிருஷ்ணன் குறும்பு செய்யும் வேளையில் பிடிபடும்பொழுது வீட்டு எஜமானர் அவனிடம் ‘நீ ஒரு திருடன்’ என்று கூறி, கிருஷ்ணரிடம் பொய்க் கோபத்தை வெளிப்படுத்துவார். அதற்கு கிருஷ்ணனும், “நானல்ல திருடன். நீங்கள் திருடர்’ என்று பதிலளிப்பான். சில சமயங்களில் கிருஷ்ணன் கோபங்கொண்டு, எங்கள் வீடுகளிலுள்ள நல்ல தூய்மையான இடத்தில் மலம், மூத்திரங்களைக் கழிப்பான். ஆனால் அன்புத் தோழியே யசோதா, இப்பொழுது இந்தத் திருட்டு மன்னன் மிகவும் நல்ல பிள்ளைபோல் உன்முன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான்”. சிலசமயங்களில் கிருஷ்ணர் தம் தாயினால் தண்டிக்கப்படாமல் இருப்பதற்காக அச்சம் நிறைந்த கண்களுடன் அங்கு அமர்ந்திருப்பதை கோபியர்கள் அனைவரும் காண்பார்கள். கிருஷ்ணரின் அழகிய திருமுகத்தைக் கண்ட அவர்கள். அவரைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவரது திருமுகத்தைப் பார்த்தபடி உன்னத ஆனந்தத்தை அனுபவிப்பவர்கள். தாய் யசோதை இந்த வேடிக்கைகளைக் கண்டு, தன் தெய்வீகக் குழந்தையைத் தண்டிக்க விரும்பாமல், புன்னகை செய்வாள்.

பதம் 10.8.32
ஏகதா க்ரீடமானாஸ் தே ராமாத்யா கோப-தாரகா:
க்ருஷ்ணோ ம்ருதம் பக்ஷிதவான் இதி மாத்ரே ன்யவேதயன்

ஏகதா—ஒருசமயம்; க்ரீடமானா:—இப்பொழுது இன்னும் அதிகமாக வளர்ந்துவிட்ட கிருஷ்ணர், சம வயதுடைய மற்ற பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்; தே—அவர்கள்; ராம-ஆத்யா:—பலராமரும், மற்றவர்களும்; கோப-தாரகா:—இடையர்களின் அதே சுற்றுப் புறத்தில் பிறந்த மற்ற பையன்கள்; க்ருஷ்ண: ம்ருதம் பக்ஷிதவான்—அம்மா, கிருஷ்ணன் மண்ணைத் தின்றான் (என்று புகார் செய்யப்பட்டது); இதி—இவ்வாறு; மாத்ரே—தாய் யசோதையிடம்; ன்யவேதயன்—அவர்கள் கூறினார்.

ஒரு நாள், பலராமரும் மற்ற கோப புத்திரர்களும் உட்பட தமது சிறிய விளையாட்டு நண்பர்களுடன் கிருஷ்ணர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது எல்லா நண்பர்களும் தாய் யசோதையிடம் சென்று, “அம்மா, கிருஷ்ணன் மண்ணைத் தின்றான்” என்று புகார் செய்தனர்.

பதம் 10.8.33
ஸா க்ருஹீத்வா கரே க்ருஷ்ணம் உபாலப்ய ஹிதைஷிணீ
யசோதா பய-ஸம்ப்ராந்த-ப்ரேக்ஷணாக்ஷம் அபாஷத

ஸா—தாய் யசோதை; க்ருஹீத்வா—எடுத்து; கரே—(கிருஷ்ணர் எதைத் தின்றிருப்பார் என்ற கவலையில்) கைகளில்; க்ருஷ்ணம்—கிருஷ்ணரை; உபாலப்ய—அவரைத் தண்டிக்க விரும்பினார்; ஹித-ஏஷிணீ—கிருஷ்ணரின் நலனைப்பற்றி அவள் கவலைப்பட்டதால், கிருஷ்ணன் எப்படி மண்ணைத் தின்றான்?” என்றெண்ணி மிகவும் கலக்கமடைந்தாள்; யசோதா—தாய் யசோதை; பய-ஸம்ப்ராந்த-ப்ரேக்ஷண-அக்ஷம்—ஆபத்தான எதையேனும் கிருஷ்ணர் தின்றுவிட்டாரா என்பதைக் காண, அச்சத்துடனும், மிகவும் கவனமாகவும் கிருஷ்ணரின் வாய்க்குள் பார்க்கத் துவங்கினாள்; அபாஷத—கிருஷ்ணரிடம் பேசத் துவங்கினாள்.

எப்பொழுதும் கிருஷ்ணரின் நலனில் முழுமையான கவலை கொண்டிருந்த தாய் யசோதை, அவரது விளையாட்டு நண்பர்கள் கூறியதைக் கேட்டு, கிருஷ்ணரின் வாய்க்குள் பார்த்து, அவரைத் தண்டிப்பதற்காக, தன் கரங்களால் அவரைத் தூக்கி எடுத்தாள். அவள் பயத்தால் மருண்ட கண்களையுடைய அவரைப் பார்த்து பின்வருமாறு கூறினாள்.

பதம் 10.8.34
கஸ்மான் ம்ருதம் அதாந்தாத்மன் பவான் பக்ஷிதவான் ரஹ:
வதந்தி தாவகா ஹி ஏதே குமாராஸ் தே ‘க்ரஜோ ‘பி அயம்

கஸ்மாத்—ஏன்; ம்ருதம்—மண்ணை; அதாந்த-ஆத்மன்—அமைதியற்ற பிள்ளையே; பவான்—நீ; பக்ஷிதவான்—தின்றாய்; ரஹ:—தனிமையான ஓரிடத்தில்; வதந்தி—இந்த புகாரைச் செய்கின்றனர்; தாவகா:—உன் விளையாட்டுத் தோழர்கள்; ஹி—உண்மையில்; ஏதே—அவர்களனைவரும்; குமாரா:—பையன்களும்; தே—உன்; அக்ரஜ:—அண்ணனும்; அபி—கூட (உறுதி செய்கின்றான்); அயம்—இதை.

அன்புள்ள கிருஷ்ணா, தனிமையான ஓரிடத்தில் மண்ணைத் தின்னும் அளவிற்கு நீ ஏன் அவ்வளவு அடக்கமற்றவனாக இருக்கிறாய்? உன் அண்ணன் பலராமன் உட்பட, உன்னுடைய விளையாட்டு நண்பர்கள் அனைவரும் உனக்கெதிராக இப்புகாரைச் சொல்லுகிறார்களே!

பதம் 10.8.35
நாஹம் பக்ஷிதவான் அம்ப ஸர்வே மித்யாபிசம்ஸின:
யதி ஸத்ய-கிரஸ் தர்ஹி ஸமக்ஷம் பஸ்யே மே முகம்

ந—இல்லை; அஹம்—நான்; பக்ஷிதவான்—மண்ணைத் தின்றேன்; அம்ப—எனதன்புத் தாயே; ஸர்வே—அவர்கள் அனைவரும்; மித்ய-அபிசம்ஸின:—எல்லோரும் பொய்யர்கள். நீங்கள் என்னைத் தண்டிக்க வேண்டும் என்பதற்காக என்மீது பழி சுமத்துகிறார்கள்; யதி—நிஜமாகவே அது உண்மையென்றால்; ஸத்ய-கிர:—அவர்கள் உண்மையைத் தான் கூறியுள்ளார்கள்; தர்ஹி—என்றால்; ஸமக்ஷம்—நேரடியாக; பஸ்யே—பாருங்கள்; மே—என்; முகம்—வாயை.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளித்தார்: எனதன்புத் தாயே, நான் மண்ணைத் தின்னவேயில்லை. எனக்கெதிராகப் புகார் செய்யும் என் நண்பர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது தான் சரி என்று நீங்கள் எண்ணினால், நீங்களே நேரடியாக என் வாய்க்குள் பார்த்து, சோதித்துக் கொள்ளுங்கள்.

பதம் 10.8.36
யதி ஏவம் தர்ஹி வ்யாதேஹீ-தி உக்த: ஸ பகவான் ஹரி: வ்யாதத்தாவ்யாஹதைஸ்வர்ய: க்ரீடா-மனுஜ-பாலக:

யதி—என்றால்; ஏவம்—அது அப்படி; தர்ஹி—பின்; வ்யாதேஹி—உன் வாயை அகலமாகத் திற (நான் பார்க்க வேண்டும்); இதி உக்த:—இவ்வாறு தாய் யசோதையால் உத்தரவிடப்பட்ட; ஸ:—அவர்; பகவான்—பரமபுருஷரான; ஹரி:—பரமபுருஷர்; வ்யாதத்த—அவரது வாயைத் திறந்தார்; அவ்யாஹத-ஐஸ்வர்ய:—பூரண ஐசுவரியத்தின் எவ்வித ஆற்றலையும் குறைத்துக் கொள்ளமல் (ஐஸ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய); க்ரீடா—லீலைகள்; மனுஜ-பாலக:—ஒரு மனிதக் குழந்தையைப் போலவே.

தாய் யசோதை கிருஷ்ணரிடம், “நீ மண் தின்னவில்லையென்றால் உன் வாயை அகலத் திற பார்க்கலாம்” என்று ஆட்சேபித்தாள். நந்த, யசோதையின் மகனான கிருஷ்ணர், தம் தாயினால் இப்படி கேட்கப்பட்ட பொழுது, ஒரு மனிதக் குழந்தையைப் போன்ற தம் லீலைகளைக் காட்டுவதற்காக வாயைத் திறந்தார். பரம்புருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா ஐசுவரியங்களையும் பூரணமாக உடையவர் என்றாலும், தம் தாயின் தாய்ப்பாசத்தை அவர் குலைக்கவில்லை. கிருஷ்ணரின் ஐசுவரியம் எந்த நிலையிலும் மறைந்துவிடுவதேயில்லை. ஆனால் தக்க தருணத்தில் அது வெளியிடப்படுகிறது என்பதால், அவரது ஐசுவரியம் தானாகவே வெளிப்பட்டது.

பதங்கள் 10.8.37 – 10.8.39
ஸா தத்ர தத்ருசே விஸ்வம் ஜகத் ஸதாஸ்னு ச கம் திச:
ஸாத்ரி-த்வீபாப்தி-பூகோளம் ஸ-வாயு-அக்னீந்து-தாரகம்

ஜ்யோதிஸ்-சக்ரம் ஜலம் தேஜோ நபஸ்வான் வியத் ஏவ ச
வைகாரிகாணிந்ரியாணி மனோ மாத்ரா குணாஸ் த்ரய:

ஏதத் விசித்ரம் ஸஹ-ஜீவ-கால-
ஸ்வபாவ-கர்மாசய-லிங்க-பேதம்
ஸூனோஸ் தனௌ வீக்ஷய விதாரிதாஸ்யே
வ்ரஜம் ஸஹாத்மானம் அவாப சங்காம்

ஸா—தாய் யசோதை; தத்ர—அகலத் திறந்த கிருஷ்ணரின் வாய்க்குள்; தத்ருசே—கண்டாள்; விஸ்வம்—முழு பிரபஞ்சத்தையும்; ஜகத்—அசையும் ஜீவன்கள்; ஸ்தாஸ்னு—அசையாத ஜீவன்களின் பராமரிப்பு; ச—மேலும்; கம்—ஆகாயம்; திச:—திசைகள்; ஸ-அத்ரி—மலைகளுடன்; த்வீப—தீவுகள்; அப்தி—மற்றும் சமுத்திரங்கள்; பூ-கோளம்—பூமிப்பரப்பு; ஸ-வாயு—வீசும் காற்றுடன்; அக்னி—நெருப்பு; இந்து—சந்திரன்; தாரகம்—நட்சத்திரங்கள்; ஜ்யோதி:-சக்ரம்—கிரக அமைப்புகள்; ஜலம்—நீர்; தேஜ:—ஒளி; நபஸ்வான்—விண்வெளி; வியத்—ஆகாயம்; ஏவ—கூட; ச—மேலும்; வைகாரிகாணி—அகங்காரத்தின் மாற்றத்தால் உண்டாகும் படைப்பு; இந்ரியாணி—புலன்கள்; மன:—மனம்; மாத்ரா:—புலன் உணர்வு; குணா: த்ரய—மூன்று பௌதிக குணங்கள் (ஸத்வம், ரஜஸ், தமஸ்); ஏதத்—இவ்வெல்லா; விசித்ரம்—வகைகளும்; ஸஹ—அவற்றுடன்; ஜீவ-கால—ஜீவராசிகளின் ஆயுள்; ஸ்வபாவ—இயற்கைச் சுபாவம்; கர்ம-ஆசய—கர்ம பலன் மற்றும் புலன்நுகர்வு ஆசை; லிங்க-பேதம்—ஆசைக்கேற்ற பலவகைப்பட்ட உடல்கள்; ஸுனோ: தனௌ—அவளது மகனின் உடலில்; வீக்ஷ்ய—கண்டு; விதாரித-ஆஸ்யே—அகலத்திறந்த வாய்க்குள்; வ்ரஜம்—பிருந்தாவன-தாமம், நந்த மகாராஜனின் இடம்; ஸஹ-ஆத்மானம்—அவளுடன்; அவாப—பீடிக்கப்பட்டாள்; சங்காம்—எல்லா சந்தேகங்களாலும், ஆச்சரியத்தாலும்.

கிருஷ்ணர் தம் தாயின் உத்தரவுப்படி தமது வாயை அகலத் திறந்த பொழுது, அவரது வாய்க்குள், அசையும், அசையாத ஜீவராசிகள், விண்வெளி, அனைத்துத் திசைகள், அவற்றுடன் மலைகள், தீவுகள், சமுத்திரங்கள், நிலப்பரப்பு, வீசும் காற்று, தீ, சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தையும் யசோதை கண்டாள். மேலும் கிரக அமைப்புக்கள், நீர், ஒளி, காற்று, ஆகாயம் மற்றும் அகங்காரத்தின் மாற்றத்தால் உண்டாகும் படைப்பு ஆகியவற்றையும் அவள் கண்டாள். அத்துடன் புலன்கள், மனம், புலன் உணர்வு மற்றும் முக்குணங்களான சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றையும் கண்டாள். ஜீவராசிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஆயுட்காலம், இயற்கைச் சுபாவம், கர்ம பலன்கள், ஆசைகள், அசையும் அசையாத ஜீவராசிகளின் வெவ்வேறு வகையான உடல்கள் ஆகியவற்றையும் அவள் கண்டாள். பிரபஞ்சத் தோற்றத்தின் இவ்வெல்லா அம்சங்களையும், அவற்றுடன் தன்னையும், பிருந்தாவன தாமத்தையும் கண்ட அவள், தன் மகனின் இயற்கையைப் பற்றி சந்தேகத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளானாள்.

பதம் 10.8.40
கிம் ஸ்வப்ன ஏதத் உத தேவமாயா
கிம் வா மதீயோ பத புத்தி-மோஹ:
அதோ அமுஷ்யைவ மமார்பகஸ்ய
ய: கஸ்சனௌத்பத்திக ஆத்ம-யோக:

கிம்—என்ன; ஸ்வப்ன:—கனவு; ஏதத்—இதெல்லாம்; உத—அப்படி இல்லையென்றால்; தேவ-மாயா—புறச்சக்தியின் ஒரு மாயத் தோற்றம்; கிம் வா—அல்லது; மதீய:—என் சொந்த; பத—உண்மையில்; புத்தி-மோஹ:—புத்தியின் பொய்த்தோற்றம்; அதோ—இல்லையெனில்; அமுஷ்ய—இதனுடைய; ஏவ—உண்மையில்; மம அர்பகஸ்ய—என் குழந்தையின்; ய:—அது; கஸ்சன்—ஏதேனும் ஒரு; ஒளத்பத்திக:—இயற்கையான; ஆத்ம-யோக:—சுயமான யோக சக்தி.

(தாய் யசோதை, தனக்குள் விவாதிக்கத் துவங்கினாள்:) இது ஒரு கனவா, அல்லது புறச் சக்தியின் ஒரு மாயத் தோற்றமா? இது என் சுயபுத்தியால் தோற்றுவிக்கப்பட்டதா, அல்லது என் குழந்தையால் ஏற்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு யோக சக்தியா?

பதம் 10.8.41
அதோ யதாவன் ந விதர்க-கோசரம்
சேதோ-மன:-கர்ம-வசோபிர் அஞ்ஜஸா
யத்-ஆஸ்ரயம் யேன யத: ப்ரதீயதே
ஸுதுர்விபாவ்யம் ப்ரணதாஸ்மி தத்-பதம்

அதோ—எனவே அவள் பரமபுருஷரிடம் சரணடைய முடிவு செய்தாள்; யதா-வத்—ஒருவரால் காணக்கூடிய அளவிற்குப் பக்குவமாக; ந—இல்லை; விதர்க-கோசரம்—விவாதம், பகுத்தறிவு, புலன்றிவு ஆகிய அனைத்திற்கும் அப்பால்; சேத:—உணர்வால்; மன:—மனதால்; கர்ம—செயல்களால்; வசோபி:—அல்லது வார்த்தைகளால்; அஞ்ஜஸா—இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்பொழுது, இவைகளை நம்மால் புரிந்துகொள்ள முடியாது; யத்-ஆஸ்ரயம்—யாருடைய கட்டுப்பாட்டின் கீழ்; யேன—யாரால்; யத:—யாரிடமிருந்து; ப்ரதீயதே—அவரிடமிருந்து தான் அனைத்தும் வருகின்றன என்பதை மட்டுமே காண முடியும்; ஸு-துர்விபாவ்யம்—நமது புலனறிவுக்கு அல்லது உணர்வுக்கு அப்பாற்பட்ட; ப்ரணதா அஸ்மி—நான் சரணடைகிறேன்; தத்-பதம்—அவரது தாமரைப் பாதங்களில்.

எனவே மனித ஊகம், மனம், செயல்கள், சொற்கள் மற்றும் விவாதங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவரும், இப்பிரபஞ்சத் தோற்றத்தின் மூல காரணமும், முழு பிரபஞ்சத்தையும் பராமரிப்பவரும், பிரபஞ்சத்தின் இருப்பை நாம் காணும்படிச் செய்பவருமான அந்த பரமபுருஷரிடம் சரணடைந்து எனது வணக்கங்களை நான் அர்ப்பணம் செய்கிறேன். அவர் என் சிந்தனைக்கும், ஊக்கத்திற்கும், தியானத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதால், அவருக்கு எனது வணக்கங்கள். அவர் என்னுடைய பெளதிகச் செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராவார்.

பதம் 10.8.42
அஹம் மமாஸௌ பதிர் ஏஷ மே ஸுதோ
வ்ரஜேஸ்வரஸ்யாகில-வித்தபா ஸதீ
கோப்யஸ் ச கோபா: ஸஹ-கோதனாஸ் ச மே
யன்-மாயயேத்தம் குமதி: ஸ மே கதி:

அஹம்—என் இருப்பு (“நான் உயர்ந்த மதிப்புடையவள்”); மம—எனது; அஸெள—நந்த மகாராஜன்; பதி:—கணவர்; ஏஷ:—இவன் (கிருஷ்ணர்); மே ஸுத:—என் மகன்; வ்ரஜ-ஈஸ்வரஸ்ய—என் கணவரான நந்த மகாராஜனின்; அகில-வித்த-பா—நான் எல்லையற்ற ஐசுவரியத்தையும், செல்வத்தையும் உடையவள்; ஸதீ—நான் அவரது மனைவி என்பதால்; கோப்ய: ச—மேலும் இடையர்குலக் கன்னிப் பெண்கள் அனைவரும்; கோபா:—இடையர்கள் அனைவரும் (எனக்குக் கீழ்படிந்தவர்கள்); ஸஹ-கோதனா: ச—பசுக்களுடனும், கன்றுகளுடனும்; மே—எனது; யத்-மாயயா—எப்படிப் பார்த்தாலும், என்னால் குறிப்பிடப்பட்ட அனைத்தும் பரமபுருஷரால் அளிக்கப்பட்டவையே; இத்தம்—இவ்வாறு; குமதி:—அவற்றை என் உடைமைகள் என்று நான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்; ஸ: மே கதி:—எனவே அவர்தான் எனக்குப் புகலிடம் (நான் கருவி மாத்திரமே).

பரமபுருஷருடைய மாயையான ஆதிக்கத்தினாலேயே நந்த மகாராஜனை என் கணவரென்றும், கிருஷ்ணனை என் மகனென்றும், நான் நந்த மகாராஜனின் ராணி என்பதால், பசுக்கள் கன்றுகள் முதலான எல்லாச் செல்வங்களும் என் உடைமைகள் என்றும், இடையர்களும் அவர்களது மனைவியரும் என் பிரஜைகள் என்றும் நான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில், நானும் பரமபுருஷருக்கு நித்தியமாகக் கீழ்ப்படிந்தவளே. அவரே எனது முடிவான அடைக்கலம்.

பதம் 10.8.43
இத்தம் விதித-தத்வாயாம் கோபிகாயாம் ஸ ஈஸ்வர:
வைஷ்ணவீம் வ்யதனோத் மாயாம் புத்ர-ஸ்னேஹமயீம் விபு:

இத்தம்—இவ்விதமாக; விதித-தத்வாயாம்—அனைத்தையும் பற்றிய உண்மையைத் தத்துவார்த்தமாக அவள் புரிந்துகொண்ட பொழுது; கோபிகாயாம்—தாய் யசோதையிடம்; ஸ:—பரமபுருஷர்; ஈஸ்வர:—பரமேசுவரர்; வைஷ்ணவீம்—விஷ்ணுமாயை, அல்லது யோகமாயை; வ்யதனோத்—விரிவடைந்தது; மாயாம்—யோகமாயை; புத்ர-ஸ்னேஹ-மயீம்—அவளது மகனிடமுள்ள தாய்ப் பாசத்தின் காரணத்தால் மிகவும் பற்றுக் கொண்டாள்; விபு:—பரமபுருஷர்.

பகவானின் அருளால், நிஜமான உண்மையைத் தாய் யசோதையால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் மீண்டும் பரமேசுவரரான பகவான், யோகமாயை எனும் அந்தரங்க சக்தியின் வசியத்தினால், அவளைத் தீவிரமான புத்திர பாசத்தில் ஆழ்ந்து விடும்படி செய்தார்.

பதம் 10.8.44
ஸத்யோ நஷ்ட-ஸ்ம்ருதிர் கோபீ ஸாரோப்யாரோஹம் ஆத்மஜம்
ப்ரவ்ருத்த-ஸ்னேஹ-கலில-ஹ்ருதயாஸீத் யதா புரா

ஸத்ய:—தாய் யசோதை, இந்த தத்துவார்த்த ஊகத்திற்குப் பிறகு, பரமபுருஷரிடம் பூரண சரணாகதியடைந்தாள்; நஷ்ட-ஸ்ம்ருதி:—கிருஷ்ணரின் வாய்க்குள் பிரபஞ்ச ரூபத்தைக் கண்ட ஞாபகத்தை அகற்றிக் கொண்டதும்; கோபீ—தாய் யசோதை; ஸா—அவள்; ஆரோப்ய—அமர்த்தி; ஆரோஹம்—மடியில்; ஆத்மஜம்—தன் மகனை; ப்ரவ்ருத்த—அதிகரித்த; ஸ்னேஹ—பாசத்தால்; கலில—பாதிப்புற்று; ஹ்ருதயா—அவளது இதயம்; ஆஸீத்—அமையப் பெற்றது; யதா புரா—அவள் முன்பிருந்தது போல்.

கிருஷ்ணர் தம் வாய்க்குள் பிரபஞ்ச ரூபத்தைக் காட்டியதை, யோக மாயையின் வசியத்தினால் உடனே மறந்துபோன தாய் யசோதை பழையபடி தன் மகனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, தன்னுடைய தெய்வக் குழந்தைக்காக தன் இதயத்தில் பாசம் அதிகரிப்பதை உணர்ந்தாள்.

பதம் 10.8.45
த்ரய்யா சோபனிஷத்பிஸ் ச ஸாங்க்ய-யோகைஸ் ச ஸாத்வதை:
உபகீயமான-மாஹாத்மியம் ஹரிம் ஸாமன்யதாத்மஜம்

த்ரய்யா—மூன்று வேதங்களைக் (சாம, யஜுர் மற்றும் அதர்வ) கற்பதன் மூலமாக; ச—கூட; உபனிஷத்பி: ச—மற்றும் வேத ஞானமாகிய உபநிஷதங்களைக் கற்பதாலும்; ஸாங்க்ய-யோகை:—சாங்கிய யோக மெனும் இலக்கியத்தைப் படிப்பதால்; ச—மேலும்; ஸாத்வதை:—மாமுனிவர்களாலும், பக்தர்களாலும், அல்லது வைஷ்ணவ-தந்த்ரமான பஞ்சராத்திரங்களைப் படிப்பதால்; உபகீயமான-மாஹாத்மியம்—(இவ்வெல்லா இலக்கியங்களாலும்) அவரது மகிமைகள் வழிபடப்படுகின்றன; ஹரிம்—பரமபுருஷரை; ஸா—அவள்; அமன்யத—(சாதாரணமானவராக) கருதினாள்; ஆதமஜம்—தன் சொந்த மகனாக.

மூன்று வேதங்கள், உபநிஷதங்கள், சாங்கிய யோக இலக்கியம் மற்றும் பிற வைஷ்ணவ இலக்கியங்கள் ஆகியவற்றின் மூலமாக பரமபுருஷரின் மகிமைகள் அறியப்படுகின்றன. எனினும் தாய் யசோதை அப்பரமபுருஷரைத் தன் சாதாரண குழந்தையாகவே கருதினாள்.

பதம் 10.8.46
ஸ்ரீ-ராஜா உவாச
நந்த: கிம் அகரோத் ப்ரஹ்மன் ஸ்ரேய ஏவம் மஹோத்யம்
யசோதா ச மஹா-பாகா பபௌ யஸ்யா: ஸ்தனம் ஹரி:

ஸ்ரீ-ராஜா உவாச—(சுகதேவ கோஸ்வாமியிடம்) பரீட்சித்து மகாராஜன் தொடர்ந்து விசாரித்தார்; நந்த:—நந்த மகாராஜன்; கிம்—என்ன; அகரோத்—செய்தார்; ப்ரஹ்மன்—கற்றறிந்த பிராமணரே; ஸ்ரேய:—தவ விரதங்களைப் போன்ற மங்களச் செயல்களை; ஏவம்—அவரால் காட்டப்பட்டதுபோல்; மஹா-உத்யம்—எதிலிருந்து மிகவுயர்ந்த பூரணத்துவத்தை அவர்கள் அடைந்தார்களோ; யசோதா—தாய் யசோதை; ச—கூட; மஹா-பாகா—பேரதிர்ஷ்டசாலியான; பபௌ—பருகினார்; யஸ்யா:—யாருடைய; ஸ்தனம்—முலைப்பாலை; ஹரி:—பரமபுருஷர்.

தாய் யசோதையின் பேரதிர்ஷ்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: பிராமண பண்டிதரே, தாய் யசோதையின் முலைப்பால் பரமபுருஷரால் பருகப்பட்டது, பரவச அன்பில் இத்தகைய பூரணத்துவத்தை அடைய அவளும், நந்த மகாராஜனும் கடந்த காலத்தில் எத்தகைய மங்களச் செயல்களைச் செய்தனர்?

பதம் 10.8.47
பிதரௌ நான்வவிந்தேதாம் க்ருஷ்ணோதாரார்கேஹிதம்
காயந்தி அத்யாபி கவயோ யல் லோக-சமலாபஹம்

பிதரௌ—கிருஷ்ணரின் உண்மையான தாய், தந்தையர்; ந—இல்லை; அன்வவிந்தேதாம்—அனுபவித்தனர்; கிருஷ்ண—கிருஷ்ணரின்; உதார—மகத்துவம் வாய்ந்த; அர்பக-ஈஹிதம்—அவர் நிகழ்த்திய குழந்தைப் பருவத்து லீலைகளை; காயந்தி—போற்றுகின்றனர்; அத்யஅபி—இன்றும்; கவய:—மிகச்சிறந்த முனிவர்களும், சாதுக்களும்; யத்—அது; லோக-சமல-அபஹம்—எதைக் கேட்பதால், ஜட உலகக் களங்கம் முற்றிலும் அழிந்து போகிறதோ.

கிருஷ்ணர் வசுதேவரிடமும், தேவகியிடமும் மிகவும் திருப்தியடைந்து, அவர்களுடைய மகனாக அவதரித்த போதிலும், கிருஷ்ணரின் மகத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்து லீலைகளை அவர்களால் அனுபவிக்க இயலவில்லை. இந்த லீலைகள் சிறப்பு மிக்கவை என்பதால், இவற்றைப்பற்றி பேசுவதுகூட ஜட உலக களங்கத்தைப் போக்கிவிடக் கூடியதாக உள்ளது. ஆனால் நந்த மகாராஜனும், யசோதையும் இந்த லீலைகளை முழுமையாக அனுபவித்தனர். எனவே இவர்களது நிலை, வசுதேவர், தேவகியின் நிலையைவிட எப்பொழுதும் சிறந்ததாகும்.

பதம் 10.8.48
ஸ்ரீ-சுக உவாச
த்ரோணோ வஸூனாம் ப்ரவரோ தரயா பார்யயா ஸஹ
கரிஷ்யமாண ஆதேசான் ப்ரஹ்மணஸ் தம் உவாச ஹ

ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; த்ரோண:—துரோணா என்பவர்; வஸூனாம்—(தேவர்களின் ஒரு வகுப்பைச் சேர்ந்த) எட்டு வசுக்களில்; ப்ரவர:—மிகச் சிறந்தவரான; தரயா—தரையுடன்; பார்யயா—அவரது மனைவியான; ஸஹ—உடன்; கரிஷ்யமாண:—நிறைவேற்றுவதற்காக; ஆதேசான்—கட்டளைகளை; ப்ரஹ்மண:—பிரம்மதேவரின்; தம்—அவரிடம்; உவாச—கூறினார்; ஹ—கடந்த காலத்தில்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார். வசுக்களில் சிறந்தவரான துரோணரும், அவரது மனைவி தரையும், பிரம்மதேவரின் கட்டளைகளைப் பின்பற்றும் பொருட்டு, பிரம்ம தேவரிடம் இவ்வாறு பேசினார்.

பதம் 10.8.49
ஜாதயோர் நெள மஹாதேவே புவி விஸ்வேஸ்வரே ஹரௌ
பக்தி: ஸ்யாத் பரமா லோகே யயாஞ்ஜோ துர்கதிம் தரேத்

ஜாதயோ:—நாங்களிருவரும் பிறவியெடுத்த பின்; நௌ—கணவன் மனைவியான துரோணர் மற்றும் தரை ஆகிய இருவரும்; மஹாதேவே—முழுமுதற்கடவுளான பரமபுருஷரில்; புவி—பூமியில்; விஸ்வ-ஈஸ்வரே—எல்லாக் கிரக அமைப்புகளுக்கும் எஜமானரில்; ஹரெள—பரமபுருஷரில்; பக்தி:—பக்தித்தொண்டு; ஸ்யாத்—பரப்பப்படும்; பரமா—வாழ்வின் இறுதி இலட்சியம்; லோகே—உலகில்; யயா—எதனால்; அஞ்ஜ:—மிகச் சுலபமாக; துர்கதிம்—துன்பகரமான வாழ்வை; தரேத்—தவிர்த்து ஒருவரால் விடுபட முடியும்.

துரோணரும், தரையும் கூறினர்: தயவுகூர்ந்து இந்த மண்ணுலகில் பிறக்க எங்களை அனுமதியுங்கள் எங்கள் தோற்றத்திற்குப்பின், முழுமுதற் கடவுளும், சகல லோகங்களுக்கும் பரம ஈசுவரரும், அதிபதியுமான பரமபுருஷர் மண்ணுலகில் தோன்றி, வாழ்வின் இறுதி இலட்சியமான பக்தித்தொண்டைப் பரப்பப் போகிறார். இதனால் இந்த ஜட உலகில் பிறந்துள்ளவர்களால், இந்த பக்தித்தொண்டை ஏற்று பெளதிக வாழ்வின் சூழ்நிலையிலிருந்து மிகவும் சுலபமாக விடுபட முடியும்.

பதம் 10.8.50
அஸ்த்வ் இதி உக்த: ஸ பகவான் வீரஜே த்ரோணோ மஹா-யசா:
ஜக்ஞே நந்த இதி க்யாதோ யசோதா ஸா தராபவத்

அஸ்து—”சரி, அப்படியே ஆகட்டும்” என்று பிரம்மா ஒப்புக்கொண்டதும்; இதி உக்த:—இவ்வாறு அவரால் கட்டளையிடப்பட்டு; ஸ:—அவர் (துரோணர்); பகவான்—நித்தியமாக கிருஷ்ணரின் தந்தையாக இருப்பவர் (பகவானின் தந்தையும் பகவானே); வீரஜே—விரஜபூமியில், பிருந்தாவனத்தில்; த்ரோண:—வசுக்களில் சக்தி மிக்கவரான துரோணர்; மஹா-யசா:—மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகியான; ஜக்ஞே—தோன்றினார்; நந்த:—நந்த மகாராஜனாக; இதி—இவ்வாறு; க்யாத:—புகழப்படுகிறார்; யசோதா—தாய் யசோதையாக; ஸா—அவள்; தரா—அதே தரைதான்; அபவத்—தோன்றினாள்.

“சரி அப்படியே ஆகட்டும்” என்று பிரம்மா கூறியதும், பகவானுக்குச் சமமானவரும், பேரதிர்ஷ்டசாலியுமான துரோணர் விரஜபுரம் எனப்படும் பிருந்தாவனத்தில் பெரும் புகழ்பெற்ற நந்த மகாராஜனாகத் தோன்றினார். அவரது மனைவி தரை தாய் யசோதையாகத் தோன்றினாள்.

பதம் 10.8.51
ததோ பக்திர் பகவதி புத்ரீ-பூதே ஜனார்தனே
தம்பத்யோர் நிதராம் ஆஸீத் கோப-கோபீஷு பாரத

தத:—அதன்பிறகு; பக்தி: பகவதி—பரமபுருஷரின் மீதான பக்தித் தொண்டு; புத்ரீ-பூதே—தாய் யசோதையின் மகனாகத் தோன்றிய பகவானில்; ஜனார்தனே—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரில்; தம்-பத்யோ:—கணவன், மனைவி ஆகிய தம்பதிகளின்; நிதராம்—இடையறாமல்; ஆஸீத்—இருந்தது; கோப-கோபீஷு—நந்த மகாராஜனுடனும், யசோதையுடனும் சகவாசம் கொண்டு, அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றும், பிருந்தாவன வாசிகளான கோப, கோபியர்கள் அனைவரும்; பாரத—பரீட்சித்து மகாராஜனே.

அதன்பிறகு, பாரதர்களில் சிறந்த பரீட்சித்து மகாராஜனே! நந்த மகாராஜனுக்கும், யசோதைக்கும் பரமபுருஷர் மகனாகத் தோன்றிய பொழுது, அவர்கள் பெற்றோர் பாசத்துடன், தங்கள் பக்திபூர்வமான அன்பை உறுதியாகவும், இடையறாமலும் பராமரித்து வந்தனர். மேலும் இவர்களது சகவாசத்தில், பிருந்தாவன வாசிகளான கோப, கோபியர்கள் அனைவரும் கிருஷ்ண பக்தியை வளர்த்துக் கொண்டனர்.

பதம் 10.8.52
க்ருஷ்ணோ ப்ரஹ்மண ஆதேசம் ஸத்யம் கர்தும் வ்ரஜே விபு:
ஸஹ-ராமோ வஸம்ஸ் சக்ரே தேஷாம் ப்ரீதிம் ஸ்வ-லீலயா

க்ருஷ்ண:—பரமபுருஷரான கிருஷ்ணர்; ப்ரஹ்மண:—பிரம்ம தேவரின்; ஆதேசம்—கட்டளையை; ஸத்யம்—உண்மையானதாக; கர்தும்—செய்யும் பொருட்டு; வ்ரஜே—விரஜபூமியில், பிருந்தாவனத்தில்; விபு:—பரம சக்திபடைத்த; ஸஹ-ராம:—பலராமருடன்; வஸன்—வாழ்ந்து; சக்ரே—அதிகரித்தார்; தேஷாம்—பிருந்தாவன வாசிகள் அனைவரின்; ப்ரீதம்—ஆனந்தத்தை; ஸ்வ-லீலயா—அவரது உன்னத லீலைகளால்.

இவ்வாறாக பிரம்மாவின் வரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே, பரமபுருஷராகிய கிருஷ்ணர் பலராமருடன் விரஜபூமியான பிருந்தாவனத்தில் வாழ்ந்தார். தமது குழந்தைப் பருவத்தில் பல்வேறு லீலைகளைக் காட்டியதன் மூலம், நந்தர் முதலான மற்ற பிருந்தாவன வாசிகளின் உன்னத ஆனந்தத்தை அவர் அதிகரித்தார்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் ” ஸ்ரீ கிருஷ்ணரின் வாய்க்குள் விஸ்வரூப தரிசனம்” எனும் தலைப்பை கொண்ட எட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare