அத்தியாயம் –8
ஸ்ரீ கிருஷ்ணரின் வாய்க்குள் விஸ்வரூப தரிசனம்
பதங்கள் 10.8.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே! யது வம்சத்தின் குருவான கர்கமுனி தவ, விரதங்களில் சிறந்து விளங்கினார். நந்த மகாராஜனை அவரது வீட்டில் சென்று காணும்படி வசுதேவரால் அவர் அனுப்பப்பட்டார்.

பதங்கள் 10.8.2 : கர்கமுனி தம் வீட்டிற்கு வந்திருப்பதைக் கண்ட நந்த மகாராஜன், எழுந்து நின்று மிகவும் மகிழ்ச்சியுடன் கரம் கூப்பி அவரை வரவேற்றார். கர்கமுனியைத் தம் கண்களால் அவர் கண்ட போதிலும், அவர் அதோக்ஷஜர், அதாவது பெளதிகப் புலன்களால் காணக்கூடிய சாதாரண ஒரு மனிதரல்ல என்ற அவரது மகிமையை நந்த மகாராஜன் உணர்ந்திருந்தார்.

பதம் 10.8.3 : கர்கமுனியை ஒரு விருந்தினராக நன்கு வரவேற்று வசதியாக அமரச் செய்ததும், நந்த மகாராஜன் பணிவும், மரியாதையும் நிறைந்த வார்த்தைகளுடன் பேசினார்: முனிவரே, நீங்கள் பக்தரென்பதால் அனைத்திலும் தன்னிறைவு உடையவராவீர். எனினும் உங்களுக்குத் தொண்டு செய்வதே என் கடமை, உங்களுக்காக நான் செய்ய வேண்டியது என்னவென்பதை தயவுகூர்ந்து எனக்குக் கட்டளையிடுங்கள்.

பதம் 10.8.4 : பிரபுவே, மிகச்சிறந்த பக்தரே, உம்மைப் போன்றவர்கள் எளிய மனம் படைத்த குடும்பஸ்தர்களின் நன்மைக்காகவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கிறார்கள், சுய நலனுக்காக அல்ல. இல்லையெனில் இடம் விட்டு இடம் செல்லும் விருப்பம் அவர்களுக்கில்லை.

பதம் 10.8.5 : மாமுனிவரே, ஜோதிட அறிவை நீங்கள் தொகுத்து அளித்திருக்கிறீர்கள். இதனால் காண முடியாத கடந்த கால மற்றும் நிகழ்கால விஷயங்களை ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். இந்த அறிவின் வலிமையால், எந்த மனிதனாலும், கடந்த வாழ்வில் தான் செய்தது என்ன, அது எப்படி தற்போதைய வாழ்வைப் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

பதம் 10.8.6 : பிரபு குறிப்பாக நீண்ட ஜோதிட சாஸ்திரத்தை நன்கு அறிந்திருப்பதால் நீங்கள் பிராமணர்களிலேயே மிகச் சிறந்தவராவீர். எனவே இயல்பாகவே அனைவருக்கும் நீங்கள் ஆன்மீக குருவாவீர். இதனால் அருள்கூர்ந்து என் வீட்டிற்கு வருகை அளித்துள்ள தாங்கள், என் இருபுதல்வர்களின் வேதச் சடங்கை (சம்ஸ்காரத்தை நிறைவேற்ற வேண்டுகிறேன்.

பதம் 10.8.7 : கர்க முனி கூறினார்: அன்பிற்குரிய நந்த மகாராஜனே, நான் யது வம்சத்தின் புரோகிதன் என்பதை உலகறியும். எனவே உமது புத்திரர்களுக்குரிய வைதிகச் சடங்கை நான் செய்து வைத்தால், கம்சன் அவர்களை தேவகி புத்திரர்களாகக் கருதுவான்.

10.8.8 – 10.8.9 : கம்சன் ஒரு பெரிய ராஜதந்திரியும், மகாபாவியுமாவான். எனவே, தன்னைக் கொல்லப்போகும் குழந்தை வேறொரு இடத்தில் பிறந்துவிட்டது என்பதை யோகமாயையிடமிருந்து கேட்டிருப்பதுடன், தேவகியின் எட்டாவது கர்ப்பம் ஒரு பெண் குழந்தையாக இருக்க முடியாது என்பதையும் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். மேலும் வசுதேவரிடம் உமக்குள்ள நட்பையும் அவன் அறிந்திருப்பதால், யதுவம்சப் புரோகிதரான என்னால் சீர்திருத்தச் சடங்கு நிறைவேற்றப்பட்டதை அவன் கேள்விப்பட்டதும், இவ்விஷயங்களையெல்லாம் கருத்திற்கொண்டு, கிருஷ்ணர், தேவகி வசுதேவரின் புதல்வர்தான் என்று சந்தேகித்து, கிருஷ்ணரைக் கொல்லும் திட்டங்களை அவன் மேற்கொள்ளக்கூடும். அது பேராபத்தை விளைவிக்கும்.

பதம் 10.8.10 : நந்த மகாராஜன் கூறினார்: அன்பிற்குரிய மாமுனிவரே, இந்த தூய்மைப்படுத்தும் சடங்கை நீங்கள் செய்வது கம்சனை சந்தேகிக்கச் செய்யும் என்று நீங்கள் நினைத்தால் என் உறவினர்களுக்குக்கூட இது தெரிய வேண்டாம். இங்கு என் வீட்டிலுள்ள மாட்டுத் தொழுவத்தில், இரகசியமாக வேத மந்திரங்களை ஓதி, இரண்டாவது பிறப்பிற்குரிய (துவிஜர்களுக்குரிய) தூய்மைச் சடங்கைச் செய்தருளுங்கள். ஏனெனில் இந்த தூய்மைப்படுத்தும் சடங்கு மிகவும் முக்கியமானதாகும்.

பதம் 10.8.11 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: குறிப்பாக நந்த மகாராஜனால் இவ்வாறு வேண்டிக்கொள்ளப்பட்டதால், எதைச் செய்ய கர்கமுனி முன்பே தீர்மானித்திருந்தாரோ, அந்த கிருஷ்ண, பலராமரின் பெயர் சூட்டும் சடங்கை அவர் தனிமையான ஓரிடத்தில் செய்து முடித்தார்.

பதம் 10.8.12 : கர்கமுனி கூறினார்: ரோகிணியின் மகனான இக்குழந்தை, தன் உன்னத குணங்களினால், தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எல்லா மகிழ்ச்சியையும் அளிப்பார். எனவே இவர் ராமர் என்று அறியப்படுவார். மேலும் அசாதாரண தேக பலத்தை இவர் வெளிப்படுத்துவார் என்பதால், பாலா என்றும் அறியப்படுவார். அத்துடன், வசுதேவர் மற்றும் நந்த மகாராஜன் ஆகிய இருவரின் குடும்பங்களையும் இணைப்பவர் என்பதால், இவர் சங்கர்ஷணர் என்றும் அறியப்படுவார்.

பதம் 10.8.13 : உமது புத்திரரான கிருஷ்ணர் ஒவ்வொரு யுகத்திலும் ஓர் அவதாரமாகத் தோன்றுகிறார், கடந்த காலத்தில் அவர் வெள்ளை, சிவப்பு, மற்றும் மஞ்சள் என்ற மூவேறு வர்ணங்களை ஏற்றார். இப்பொழுது கருமை நிறத்தில் தோன்றியுள்ளார். வேறொரு துவாபர யுகத்தில் அவர் (பகவான் ராமச்சந்திரராக) ஒரு கிளியின் வர்ணத்தில் தோன்றினார். இத்தகைய அவதாரங்கள் அனைவரும் இப்பொழுது கிருஷ்ணரில் ஒன்று கூடியுள்ளனர்.

பதம் 10.8.14 : உம்முடைய இந்த அழகான மகன், பல காரணங்களுக்காக முன்பு வசுதேவரின் மகனாகத் தோன்றினார். எனவே, கற்றோர், சிலசமயங்களில் இக்குழந்தையை வாசுதேவன் என்றும் அழைப்பதுண்டு.

பதம் 10.8.15 : உம்முடைய இந்த மகனின் உன்னதமான குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப பல நாமங்களும் ரூபங்களும், அவருக்கு உள்ளன இவற்றை நானறிவேன், ஆனால் பொது மக்கள் இவற்றை அறிவதில்லை.

பதம் 10.8.16 : கோகுலத்தைச் சேர்ந்த இடையர்களில் உன்னத ஆனந்தத்தை அதிகரிப்பதற்காக. இக்குழந்தை எப்பொழுதும் உமக்கு மங்களம் அருளும் வகையில் செயற்படுவார். இவரது அருளால்தான் நீர் எல்லாக் கஷ்டங்களையும் எளிதில் கடக்கப்போகிறீர்.

பதம் 10.8.17 : நந்த மகாராஜனே! சரித்திரத்தில் குறித்து வைக்கப்பட்டுள்ளது போல், இந்திரன் அரசுரிமையிலிருந்து இறக்கப்பட்டு, ஒழுங்கற்ற, திறமையற்ற ஓர் அரசாங்கம் ஏற்பட்டபொழுதும், மக்கள் திருடர்களால் சதா தொந்தரவு செய்யப்பட்ட பொழுதும், மக்களைப் பாதுகாத்து அவர்களை செழிப்புறச் செய்வதற்காகவும், அயோக்கியர்களையும், திருடர்களையும் அடக்குவதற்காகவும் இக்குழந்தை தோன்றியுள்ளார்.

பதம் 10.8.18 : பகவான் விஷ்ணுவை எப்பொழுதும் தங்களுக்கு ஆதரவாகப் பெற்றுள்ள தேவர்களுக்கு அசுரர்களால் தீங்கிழைக்க முடியாது. அது போலவே, எந்த ஒரு நபர் அல்லது பிரிவு கிருஷ்ணரிடம் பற்றுக் கொண்டுள்ளாரோ, அவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாவார். இத்தகையவர்கள் கிருஷ்ணரிடம் மிகவும் பாசம் கொண்டிருப்பதால், இவர்களை கம்சனின் சகாக்களைப் போன்ற நண்பர்களால் (அல்லது உள்ளிருக்கும் பகைவர்களான புலன்களால்) வெற்றி கொள்ள முடியாது.

பதம் 10.8.19 : எனவே, நந்த மகாராஜனே! முடிவாக உம்முடைய இக்குழந்தை நாராயணருக்குச் சமமானவராவார். இவரது உன்னதமான குணங்கள், ஐசுவரியம், நாமம், புகழ் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றில் இவர் நாராயணரைப் போன்றவர். நீங்களனைவரும் இக்குழந்தையை மிகவும் கவனத்துடனும், முன்யோசனையுடனும் வளர்த்துவர வேண்டும்.

பதம் 10.8.20 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: நந்த மகாராஜனுக்கு கிருஷ்ணரைப்பற்றி உபதேசித்த கர்கமுனி, தமது சொந்த வீட்டிற்குச் சென்றபின், பேரானந்தத்தில் ஆழ்ந்த நந்த மகாராஜன், தம்மை எல்லா நல்லதிர்ஷ்டங்களும் நிரம்பப் பெற்றவராகக் கருதினார்.

பதம் 10.8.21 : சிறிது காலம் கடந்ததும், சகோதரர்களான ராமரும், கிருஷ்ணரும் தங்களது கரங்களையும், முழங்கால்களையும் ஊன்றி, விரஜ பூமியில் தவழத் துவங்கினார். இவ்விதமாக தங்களது பிள்ளைப் பிராயத்து விளையாட்டை அவர்கள் அனுபவித்தனர்.

பதம் 10.8.22 : தாவ்—கிருஷ்ணரும், பலராமரும்; அங்ரி-யுக்மம் அனுக்ருஷ்ய—அவர்களது கால்களை இழுத்துக்கொண்டு; ஸரீஸ்ருபந்தௌ—பாம்புகள் போல் ஊர்ந்து; கோஷ-ப்ரகோஷ-ருசிரம்—தங்களுடைய கால் சலங்கைகளால் மிகவும் இனிமையான ஓசையை எழுப்பிக் கொண்டு; வ்ரஜ-க்ரதமேஷு—விரஜபூமியில் கோமியத்தாலும், கோஜலத்தாலும் உண்டாக்கப்பட்ட சேற்றில்; தத்-நாத—அக்கொலுசுகளின் ஓசையால்; ஹ்ருஷ்ட-மனஸெள—மிகவும் மகிழ்ந்து; அனுஸ்ருத்ய—பின்தொடர்ந்து; லோகம்—மற்றவர்களை; முக்த—இவ்வாறு வசீகரிக்கப்பட்டு; ப்ரபீத-வத்—பிறகு மீண்டும் அவர்களைக் கண்டு அஞ்சி; உபேயது:—உடனே திரும்பி வந்தனர்; அந்தி மாத்ரோ:—அவர்களுடைய தாய்களை நோக்கி.

பதம் 10.8.23 : கோமியமும், கோஜலமும் கலந்த சேற்றினால் தோய்ந்திருந்த ஆடைகளுடனிருந்த குழந்தைகள் மிகவும் அழகாகக் காணப்பட்டனர். தங்கள் தாய்களான யசோதையிடமும், ரோகிணியிடமும் சென்ற அவர்களை மிகவும் பாசத்துடன் தூக்கி அனைத்துக்கொண்ட அவர்கள், தங்கள் முலைப்பாலை அவர்களுக்கு ஊட்டினர். முலைப் பாலைக் குடித்துக் கொண்டிருந்த குழந்தைகள் சிரித்தபொழுது அவர்களது சிறிய பற்கள் காணப்பட்டன. அவ்வழகிய பற்களைக் கண்ட தாய்கள் உன்னதமான பேரானந்தத்தை அனுபவித்தனர்.

பதம் 10.8.24 : நந்த மகாராஜனின் வீட்டிற்குள், இடையர்குலப் பெண்கள், குழந்தைகளான கிருஷ்ண, பலராமரின் லீலைகளைக் கண்டு களித்தனர். குழந்தைகள், கன்றுகளுடைய வால்களின் நுனிகளைப் பற்றிக்கொள்வார்கள். கன்றுகளும் அவர்களை இங்குமங்குமாக இழுத்துச் செல்லும் இந்த லீலைகளைக் கண்ட பெண்கள், உண்மையாகவே தங்கள் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு, இச்சம்பவங்களைக் கண்டு சிரித்து மகிழ்ந்தனர்.

பதம் 10.8.25 : கொம்புள்ள பசுக்கள், நெருப்பு, கூரிய பல் மற்றும் நகங்களுடன் கூடிய குரங்குகளையும், நாய்களையும், பூனைகளையும் போன்ற மிருகங்கள், தரையிலுள்ள முட்கள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்கள் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத பொழுது, தாய் யசோதையும், ரோகிணியும் இடையறாத கவலைக்குள்ளாயினர். அவர்களது வீட்டு வேலைகள் தடைப்பட்டன. அச்சமயத்தில், அவர்களது மனங்களில் தாய்ப்பாசம் மேலோங்கியதால், அதனால் உண்டான துன்பம் எனப்படும் உன்னத பரவச நிலையில் முழுமையாக அவர்கள் ஆழ்ந்தனர்.

பதம் 10.8.26 : பரீட்சித்து மகாராஜனே! ராமர், கிருஷ்ணர் ஆகிய இருவரும் மிகவும் குறுகிய காலத்திலேயே, தவழும் அவசியமின்றி, தங்களது சொந்த பலத்தைக் கொண்டு, தங்களது கால்களால் மிகச் சுலபமாக கோகுலத்தில் நடக்கத் துவங்கினர்.

பதம் 10.8.27 : அதன்பிறகு, மற்ற இடைச் சிறுவர்களுடன் விளையாடத் துவங்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இடையர்குலப் பெண்களின் உன்னத ஆனந்தத்தை பெருகச் செய்தார்.

பதம் 10.8.28 : கிருஷ்ணரின் மிகக் கவர்ச்சிவாய்ந்த, குழந்தைத்தனமான அமைதியின்மையைக் கண்ட சுற்றுப்புறத்திலுள்ள கோபியர்கள் அனைவரும், மீண்டும் மீண்டும் கிருஷ்ணரின் செயல்களைப்பற்றிக் கேட்கும் பொருட்டு, தாய் யசோதையை அணுகி, அவளிடம் பின்வருமாறு கூறினார்.

பதம் 10.8.29 : “எங்கள் அன்புத் தோழியே யசோதா, சிலசமயம் உன் மகன் பசுக்களைக் கறக்குமுன் எங்கள் வீடுகளுக்கு வந்து கன்றுகளை அவிழ்த்து விட்டுவிடுகிறான், வீட்டின் எஜமானர் கோபப்படும் பொழுது உன் மகன் சிரிக்கிறான். சிலசமயம் அவன் ஏதேனும் திட்டம் தீட்டி, சுவையான தயிர், வெண்நெய், பால் ஆகியவற்றைத் திருடி, அவற்றை உண்டு, அருந்தி மகிழ்கிறான். குரங்குகள் அங்கு கூடிவிடும் பொழுது, அவற்றிற்கும் அதைப் பங்கிட்டுக் கொடுக்கிறான். குரங்குகள் தங்கள் வயிறுகள் நிரம்பி சாப்பிட மறுக்கும் பொழுது, அவன் பாத்திரங்களை உடைத்து விடுகிறான். சிலசமயம் ஏதேனும் ஒரு வீட்டில் வெண்ணையோ, பாலோ திருடும் வாய்ப்புக் கிடைக்காத பொழுது, குடும்பஸ்தர்களிடம் கோபம் கொள்ளும் அவன், அதற்குப் பழிவாங்கும் வகையில் சிறு குழந்தைகளைக் கிள்ளி அவர்களைத் துன்புறுத்துகிறான். பிறகு குழந்தைகள் அழத்துவங்கும்பொழுது, கிருஷ்ணன் அங்கிருந்து சென்றுவிடுகிறான்”.

பதம் 10.8.30 : “பாலும், வெண்ணெயும் கூரையின் கீழ் உயரமான ஓர் உறியில் இருந்த பொழுது கிருஷ்ணராலும், பலராமராலும் அவற்றை எட்டிப்பிடிக்க முடியாததால், பலகைகளை அடுக்கியும், உரலைத் திருப்பிப் போட்டும் அவற்றை அடைய ஏற்பாடு செய்கின்றனர். பானையிலிருப்பதை நன்கறிந்துள்ள அவர்கள் அதில் துளையிடுகின்றனர். வயதான கோபியர்கள் தங்கள் குடும்ப விவகாரங்களைக் கவனித்துக்கொண்டு இருக்கும்பொழுது, கிருஷ்ணரும், பலராமரும் சிலசமயங்களில் ஓர் இருட்டறைக்குள் சென்று, தங்களின் உடலில் அணிந்துள்ள விளையுயர்ந்த இரத்தினங்கலாலும், ஆபரணங்களாலும் அந்த இடத்தை பிரகாசப்படுத்தி, இவ்வொளியை, திருடுவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.”

பதம் 10.8.31 : “கிருஷ்ணன் குறும்பு செய்யும் வேளையில் பிடிபடும்பொழுது வீட்டு எஜமானர் அவனிடம் ‘நீ ஒரு திருடன்’ என்று கூறி, கிருஷ்ணரிடம் பொய்க் கோபத்தை வெளிப்படுத்துவார். அதற்கு கிருஷ்ணனும், “நானல்ல திருடன். நீங்கள் திருடர்’ என்று பதிலளிப்பான். சில சமயங்களில் கிருஷ்ணன் கோபங்கொண்டு, எங்கள் வீடுகளிலுள்ள நல்ல தூய்மையான இடத்தில் மலம், மூத்திரங்களைக் கழிப்பான். ஆனால் அன்புத் தோழியே யசோதா, இப்பொழுது இந்தத் திருட்டு மன்னன் மிகவும் நல்ல பிள்ளைபோல் உன்முன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான்”. சிலசமயங்களில் கிருஷ்ணர் தம் தாயினால் தண்டிக்கப்படாமல் இருப்பதற்காக அச்சம் நிறைந்த கண்களுடன் அங்கு அமர்ந்திருப்பதை கோபியர்கள் அனைவரும் காண்பார்கள். கிருஷ்ணரின் அழகிய திருமுகத்தைக் கண்ட அவர்கள். அவரைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவரது திருமுகத்தைப் பார்த்தபடி உன்னத ஆனந்தத்தை அனுபவிப்பவர்கள். தாய் யசோதை இந்த வேடிக்கைகளைக் கண்டு, தன் தெய்வீகக் குழந்தையைத் தண்டிக்க விரும்பாமல், புன்னகை செய்வாள்.

பதம் 10.8.32 : ஒரு நாள், பலராமரும் மற்ற கோப புத்திரர்களும் உட்பட தமது சிறிய விளையாட்டு நண்பர்களுடன் கிருஷ்ணர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது எல்லா நண்பர்களும் தாய் யசோதையிடம் சென்று, “அம்மா, கிருஷ்ணன் மண்ணைத் தின்றான்” என்று புகார் செய்தனர்.

பதம் 10.8.33 : எப்பொழுதும் கிருஷ்ணரின் நலனில் முழுமையான கவலை கொண்டிருந்த தாய் யசோதை, அவரது விளையாட்டு நண்பர்கள் கூறியதைக் கேட்டு, கிருஷ்ணரின் வாய்க்குள் பார்த்து, அவரைத் தண்டிப்பதற்காக, தன் கரங்களால் அவரைத் தூக்கி எடுத்தாள். அவள் பயத்தால் மருண்ட கண்களையுடைய அவரைப் பார்த்து பின்வருமாறு கூறினாள்.

பதம் 10.8.34 : அன்புள்ள கிருஷ்ணா, தனிமையான ஓரிடத்தில் மண்ணைத் தின்னும் அளவிற்கு நீ ஏன் அவ்வளவு அடக்கமற்றவனாக இருக்கிறாய்? உன் அண்ணன் பலராமன் உட்பட, உன்னுடைய விளையாட்டு நண்பர்கள் அனைவரும் உனக்கெதிராக இப்புகாரைச் சொல்லுகிறார்களே!

பதம் 10.8.35 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளித்தார்: எனதன்புத் தாயே, நான் மண்ணைத் தின்னவேயில்லை. எனக்கெதிராகப் புகார் செய்யும் என் நண்பர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது தான் சரி என்று நீங்கள் எண்ணினால், நீங்களே நேரடியாக என் வாய்க்குள் பார்த்து, சோதித்துக் கொள்ளுங்கள்.

பதம் 10.8.36 : தாய் யசோதை கிருஷ்ணரிடம், “நீ மண் தின்னவில்லையென்றால் உன் வாயை அகலத் திற பார்க்கலாம்” என்று ஆட்சேபித்தாள். நந்த, யசோதையின் மகனான கிருஷ்ணர், தம் தாயினால் இப்படி கேட்கப்பட்ட பொழுது, ஒரு மனிதக் குழந்தையைப் போன்ற தம் லீலைகளைக் காட்டுவதற்காக வாயைத் திறந்தார். பரம்புருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா ஐசுவரியங்களையும் பூரணமாக உடையவர் என்றாலும், தம் தாயின் தாய்ப்பாசத்தை அவர் குலைக்கவில்லை. கிருஷ்ணரின் ஐசுவரியம் எந்த நிலையிலும் மறைந்துவிடுவதேயில்லை. ஆனால் தக்க தருணத்தில் அது வெளியிடப்படுகிறது என்பதால், அவரது ஐசுவரியம் தானாகவே வெளிப்பட்டது.

பதங்கள் 10.8.37 – 10.8.39 : கிருஷ்ணர் தம் தாயின் உத்தரவுப்படி தமது வாயை அகலத் திறந்த பொழுது, அவரது வாய்க்குள், அசையும், அசையாத ஜீவராசிகள், விண்வெளி, அனைத்துத் திசைகள், அவற்றுடன் மலைகள், தீவுகள், சமுத்திரங்கள், நிலப்பரப்பு, வீசும் காற்று, தீ, சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தையும் யசோதை கண்டாள். மேலும் கிரக அமைப்புக்கள், நீர், ஒளி, காற்று, ஆகாயம் மற்றும் அகங்காரத்தின் மாற்றத்தால் உண்டாகும் படைப்பு ஆகியவற்றையும் அவள் கண்டாள். அத்துடன் புலன்கள், மனம், புலன் உணர்வு மற்றும் முக்குணங்களான சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றையும் கண்டாள். ஜீவராசிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஆயுட்காலம், இயற்கைச் சுபாவம், கர்ம பலன்கள், ஆசைகள், அசையும் அசையாத ஜீவராசிகளின் வெவ்வேறு வகையான உடல்கள் ஆகியவற்றையும் அவள் கண்டாள். பிரபஞ்சத் தோற்றத்தின் இவ்வெல்லா அம்சங்களையும், அவற்றுடன் தன்னையும், பிருந்தாவன தாமத்தையும் கண்ட அவள், தன் மகனின் இயற்கையைப் பற்றி சந்தேகத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளானாள்.

பதம் 10.8.40 : (தாய் யசோதை, தனக்குள் விவாதிக்கத் துவங்கினாள்:) இது ஒரு கனவா, அல்லது புறச் சக்தியின் ஒரு மாயத் தோற்றமா? இது என் சுயபுத்தியால் தோற்றுவிக்கப்பட்டதா, அல்லது என் குழந்தையால் ஏற்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு யோக சக்தியா?

பதம் 10.8.41 : எனவே மனித ஊகம், மனம், செயல்கள், சொற்கள் மற்றும் விவாதங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவரும், இப்பிரபஞ்சத் தோற்றத்தின் மூல காரணமும், முழு பிரபஞ்சத்தையும் பராமரிப்பவரும், பிரபஞ்சத்தின் இருப்பை நாம் காணும்படிச் செய்பவருமான அந்த பரமபுருஷரிடம் சரணடைந்து எனது வணக்கங்களை நான் அர்ப்பணம் செய்கிறேன். அவர் என் சிந்தனைக்கும், ஊக்கத்திற்கும், தியானத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதால், அவருக்கு எனது வணக்கங்கள். அவர் என்னுடைய பெளதிகச் செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராவார்.

பதம் 10.8.42 : பரமபுருஷருடைய மாயையான ஆதிக்கத்தினாலேயே நந்த மகாராஜனை என் கணவரென்றும், கிருஷ்ணனை என் மகனென்றும், நான் நந்த மகாராஜனின் ராணி என்பதால், பசுக்கள் கன்றுகள் முதலான எல்லாச் செல்வங்களும் என் உடைமைகள் என்றும், இடையர்களும் அவர்களது மனைவியரும் என் பிரஜைகள் என்றும் நான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில், நானும் பரமபுருஷருக்கு நித்தியமாகக் கீழ்ப்படிந்தவளே. அவரே எனது முடிவான அடைக்கலம்.

பதம் 10.8.43 : பகவானின் அருளால், நிஜமான உண்மையைத் தாய் யசோதையால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் மீண்டும் பரமேசுவரரான பகவான், யோகமாயை எனும் அந்தரங்க சக்தியின் வசியத்தினால், அவளைத் தீவிரமான புத்திர பாசத்தில் ஆழ்ந்து விடும்படி செய்தார்.

பதம் 10.8.44 : கிருஷ்ணர் தம் வாய்க்குள் பிரபஞ்ச ரூபத்தைக் காட்டியதை, யோக மாயையின் வசியத்தினால் உடனே மறந்துபோன தாய் யசோதை பழையபடி தன் மகனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, தன்னுடைய தெய்வக் குழந்தைக்காக தன் இதயத்தில் பாசம் அதிகரிப்பதை உணர்ந்தாள்.

பதம் 10.8.45 : மூன்று வேதங்கள், உபநிஷதங்கள், சாங்கிய யோக இலக்கியம் மற்றும் பிற வைஷ்ணவ இலக்கியங்கள் ஆகியவற்றின் மூலமாக பரமபுருஷரின் மகிமைகள் அறியப்படுகின்றன. எனினும் தாய் யசோதை அப்பரமபுருஷரைத் தன் சாதாரண குழந்தையாகவே கருதினாள்.

பதம் 10.8.46 : தாய் யசோதையின் பேரதிர்ஷ்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: பிராமண பண்டிதரே, தாய் யசோதையின் முலைப்பால் பரமபுருஷரால் பருகப்பட்டது, பரவச அன்பில் இத்தகைய பூரணத்துவத்தை அடைய அவளும், நந்த மகாராஜனும் கடந்த காலத்தில் எத்தகைய மங்களச் செயல்களைச் செய்தனர்?

பதம் 10.8.47 : கிருஷ்ணர் வசுதேவரிடமும், தேவகியிடமும் மிகவும் திருப்தியடைந்து, அவர்களுடைய மகனாக அவதரித்த போதிலும், கிருஷ்ணரின் மகத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்து லீலைகளை அவர்களால் அனுபவிக்க இயலவில்லை. இந்த லீலைகள் சிறப்பு மிக்கவை என்பதால், இவற்றைப்பற்றி பேசுவதுகூட ஜட உலக களங்கத்தைப் போக்கிவிடக் கூடியதாக உள்ளது. ஆனால் நந்த மகாராஜனும், யசோதையும் இந்த லீலைகளை முழுமையாக அனுபவித்தனர். எனவே இவர்களது நிலை, வசுதேவர், தேவகியின் நிலையைவிட எப்பொழுதும் சிறந்ததாகும்.

பதம் 10.8.48 : சுகதேவ கோஸ்வாமி கூறினார். வசுக்களில் சிறந்தவரான துரோணரும், அவரது மனைவி தரையும், பிரம்மதேவரின் கட்டளைகளைப் பின்பற்றும் பொருட்டு, பிரம்ம தேவரிடம் இவ்வாறு பேசினார்.

பதம் 10.8.49 : துரோணரும், தரையும் கூறினர்: தயவுகூர்ந்து இந்த மண்ணுலகில் பிறக்க எங்களை அனுமதியுங்கள் எங்கள் தோற்றத்திற்குப்பின், முழுமுதற் கடவுளும், சகல லோகங்களுக்கும் பரம ஈசுவரரும், அதிபதியுமான பரமபுருஷர் மண்ணுலகில் தோன்றி, வாழ்வின் இறுதி இலட்சியமான பக்தித்தொண்டைப் பரப்பப் போகிறார். இதனால் இந்த ஜட உலகில் பிறந்துள்ளவர்களால், இந்த பக்தித்தொண்டை ஏற்று பெளதிக வாழ்வின் சூழ்நிலையிலிருந்து மிகவும் சுலபமாக விடுபட முடியும்.

பதம் 10.8.50 : “சரி அப்படியே ஆகட்டும்” என்று பிரம்மா கூறியதும், பகவானுக்குச் சமமானவரும், பேரதிர்ஷ்டசாலியுமான துரோணர் விரஜபுரம் எனப்படும் பிருந்தாவனத்தில் பெரும் புகழ்பெற்ற நந்த மகாராஜனாகத் தோன்றினார். அவரது மனைவி தரை தாய் யசோதையாகத் தோன்றினாள்.

பதம் 10.8.51 : அதன்பிறகு, பாரதர்களில் சிறந்த பரீட்சித்து மகாராஜனே! நந்த மகாராஜனுக்கும், யசோதைக்கும் பரமபுருஷர் மகனாகத் தோன்றிய பொழுது, அவர்கள் பெற்றோர் பாசத்துடன், தங்கள் பக்திபூர்வமான அன்பை உறுதியாகவும், இடையறாமலும் பராமரித்து வந்தனர். மேலும் இவர்களது சகவாசத்தில், பிருந்தாவன வாசிகளான கோப, கோபியர்கள் அனைவரும் கிருஷ்ண பக்தியை வளர்த்துக் கொண்டனர்.

பதம் 10.8.52 : இவ்வாறாக பிரம்மாவின் வரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே, பரமபுருஷராகிய கிருஷ்ணர் பலராமருடன் விரஜபூமியான பிருந்தாவனத்தில் வாழ்ந்தார். தமது குழந்தைப் பருவத்தில் பல்வேறு லீலைகளைக் காட்டியதன் மூலம், நந்தர் முதலான மற்ற பிருந்தாவன வாசிகளின் உன்னத ஆனந்தத்தை அவர் அதிகரித்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare