அத்தியாயம் – 7
திருணாவர்தாசுரன் வதம்

பதங்கள் 10.7.1 – 10.7.2
ஸ்ரீ-ராஜோவாச
யேன யேனாவதாரேன பகவான் ஹரிர் ஈஸ்வர:
கரோதி கர்ண-ரம்யாணி மனோ-க்ஞானி ச ந: ப்ரபோ

யச்-ச்ருண்வதோ ‘பைதி அரதிர் வித்ருஷ்ணா
ஸத்வம் ச சுத்யதி அசிரேண பும்ஸ:
பக்திர் ஹரௌ தத்-புருஷே ச ஸக்யம்
தத் ஏவ ஹாரம் வதமன்யஸே சேத்

ஸ்ரீ-ராஜா உவாச—(சுகதேவ கோஸ்வாமியிடம்) அரசர் வினவினார்; யேன யேன அவதாரேன—வெவ்வேறு வகையான அவதாரங்களால் நிகழ்த்தப்படும் லீலைகள்; பகவான்—பரமபுருஷர்; ஹரி:—பகவான் ஸ்ரீ ஹரி; ஈஸ்வர:—ஈசுவரா; கரோதி—வெளிப்படுத்துகிறார்; கர்ண-ரம்யாணி—இவையனைத்தும் செவிக்கு இன்பமளிக்கின்றன; மன:-க்ஞானி—மனத்திற்கு மிகக் கவர்ச்சியான; ச—மேலும்; ந:—நமது; ப்ரபோ—பிரபுவே, சுகதேவ கோஸ்வாமியே; யத்-ஸ்ருண்வத்:—இக்கதைகளைக் கேட்பவர் எவரும்; அபைதி—மறைந்துவிடுகிறது; அரதி:—கவர்ச்சியின்மை; வித்ருஷ்ணா—நம்மைக் கிருஷ்ண உணர்வில் ஆர்வ மற்றவர்களாகச் செய்யும் மனதிலுள்ள அழுக்குகள்; ஸத்வம் ச—இதய மத்தியில் இருக்கும் நிலை; சுத்யதி—தூய்மையடைகிறது; அசிரேண—மிக விரைவில்; பும்ஸ:—எந்த ஒரு நபரின்; பக்தி: ஹரௌ—பகவானிடமுள்ள பக்தித் தொண்டும், பற்றும்; தத்-புருஷே—வைஷ்ணவர்களுடன்; ச—மேலும்; ஸக்யம்—சகவாசத்திற்கு ஈர்க்கப்படுதல்; தத்-ஏவ—அது மட்டுமே; ஹாரம்—எவற்றை செவியால் கேட்டு, கழுத்தில் மாலையாக அணிந்து கொள்ள வேண்டுமோ, அந்த பகவானின் செயல்களைப்பற்றி; வத—தயவுகூர்ந்து கூறுங்கள்; மன்யஸே சேத்—நீங்கள் பொருத்தம் என்று எண்ணினால்.

பரீட்சித்து மகாராஜன் கூறினார்: பிரபுவே, சுகதேவ கோஸ்வாமியே, பரமபுருஷரது அவதாரங்களால் நிகழ்த்தப்படும் பல்வேறு செயல்கள் செவிக்கும். மனதிற்கும் இன்பமளிப்பவை என்பதில் சந்தேகமில்லை. இச்செயல்களைக் கேட்பதாலேயே ஒருவரது மனதிலுள்ள அழுக்குகள் உடனே மறைந்துவிடும். பொதுவாக பகவானின் செயல்களைப் பற்றி கேட்க நாம் தயங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரின் பிள்ளைப்பிராயத்து செயல்கள் மிகமிக கவர்ச்சியுடையவை என்பதால், தானாகவே அவை செவிக்கும், மனதிற்கும் இன்பமளிக்கின்றன. இவ்வாறாக, பௌதிக வாழ்விற்கு மூல காரணமாக உள்ள பெளதிக விஷயங்களைப் பற்றி கேட்பதிலுள்ள ஒருவனது பற்று அற்றுப்போகிறது. இதனால் அவன் படிப்படியாக பரமபுருஷரிடம் பக்தித் தொண்டையும் பற்றையும் வளர்த்துக் கொள்வதுடன், நமக்குக் கிருஷ்ண உணர்வெனும் தானத்தை அளிக்கும் பக்தர்களிடம் நட்பையும் வளர்த்துக் கொள்கிறான். நீங்கள் பொருத்தமென்று எண்ணினால், பகவானின் அச்செயல்களைப் பற்றிக் கூற வேண்டுகிறேன்.

பதம் 10.7.3
அதான்யத் அபி க்ருஷ்ணஸ்ய தோகாசரிதம் அத்புதம்
மானுஷம் லோகம் ஆஸாத்ய தஜ்-ஜாதிம் அனுருந்தத:

அத—கூட; அன்யத் அபி—மற்ற லீலைகளையும் கூட; க்ருஷ்ணஸ்ய— குழந்தை கிருஷ்ணரின்; தோக-அசரிதம் அத்புதம்—அவையும் அற்புதமான பிள்ளைப் பிராயத்து லீலைகள்தான்; மானுஷம்—ஒரு மனிதக் குழந்தையைப் போலவே; லோகம் ஆஸாத்ய—இந்த மண்ணுலகில் மனித சமூகத்தில் தோன்றி; தத்-ஜாதிம்—ஒரு மனிதக் குழந்தையைப் போலவே; அனுருந்தத:—நடித்த.

ஒரு மனிதக் குழந்தையைப்போல் பாவனை செய்து இந்த மண்ணுலகில் தோன்றியவரும், பூதான வதம் போன்ற அற்புதச் செயல்களைச் செய்தவரும் பரமபுருஷருமான ஸ்ரீ கிருஷ்ணரின் மற்ற லீலைகளையும் விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 10.7.4
ஸ்ரீ-சுக உவாச
கதாசித் ஒளத்தானிக-கௌதுகாப்லவே
ஜன்மர்க்ஷ-யோகே ஸமவேத-யோஷிதாம்
வாதித்ர-கீத-த்விஜ-மந்த்ர-வாசகைஸ்
சகார ஸூனோர் அபிஷேசனம் ஸதீ

ஸ்ரீ-சுக: உவாச—(பரீட்சித்து மகாராஜன் வேண்டிக் கொண்டதால்) ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து பேசினார்; கதாசித்—(கிருஷ்ணர் மூன்று மாதக் குழந்தையாக இருந்த) அச்சமயத்தில்; ஒளத்தானிக-கௌதுக-ஆப்லவே—மூன்று அல்லது நான்கு மாதக் குழந்தையாக இருந்த கிருஷ்ணரின் உடல் வளர்ந்து வரும்பொழுது, அவர் குப்புறத் திரும்ப முயன்றார். இனிமையான இத்தருணம், அபிஷேகச் சடங்குடனும், ஒரு விழாவுடனும் கொண்டாடப்பட்டது; ஜன்ம-ருக்ஷயோகே—அச்சமயத்தில், சந்திரன் மங்களகரமான ரோகிணி நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்திருந்தது; ஸமவேத-யோஷிதாம்—கூடியிருந்த பெண்களுக்கிடையில், தாய்மார்களுக்குரிய ஒரு சடங்காக (இது அனுஷ்டிக்கப்பட்டது); வாதித்ர-கீதா—வெவ்வேறு வகையான வாத்தியங்கள் மற்றும் பாடல்கள்; த்விஜ-மந்த்ர-வாசகை:—தகுதியுள்ள பிராமணர்கள் வேத மந்திரங்கள் ஓத; சகார—நிறைவேற்றினார்; ஸூனோ:—அவளது மகனின்; அபிஷேசனம்—அபிஷேகச் சடங்கை; ஸதீ—தாய் யசோதை.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தாய் யசோதையின் குழந்தை தன் உடலைச் சாய்த்துக் குப்புறத் திரும்ப முயன்றது. இம்முயற்சியானது ஒரு வேதச் சடங்குடன் அனுஷ்டிக்கப்பட்டது. குழந்தை முதல் முறையாக வீட்டை விட்டு வெளியில் செல்லத் தகுந்த பருவத்தை அடையும் பொழுது, உத்தான எனும் சடங்கு நடத்தப்படுகிறது. இச்சடங்கின் போது குழந்தைக்கு முறையாக ஸ்நானம் செய்விக்கப்படுகிறது. கிருஷ்ணருக்கு மூன்று மாதங்கள் நிரம்பியதும், தாய் யசோதை, சுற்றுப் புறங்களிலுள்ள மற்ற பெண்களுடன் இச்சடங்கைக் கொண்டாடினாள். அன்று சந்திரன் ரோகிணி எனும் நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்திருந்தது. இச்சடங்கில் பிராமணர்கள் வேத மந்திரங்கள் ஓத, பிரபல இசைவாணர்களும் பங்கேற்க, தாய் யசோதை இச்சடங்கை மிகவும் சிறப்பாக அனுஷ்டித்தாள்.

பதம் 10.7.5
நந்தஸ்ய பத்னீ க்ருத-மஜ்ஜனாதிகம்
விப்ரை: க்ருத-ஸ்வஸ்த்யயனம் ஸுபூஜிதை:
அன்னாத்ய-வாஸ:-ஸ்ரக்-அபீஷ்ட-தேனுபி:
ஸஞ்ஜாத-நித்ராக்ஷம் அசீசயச் சனை:

நந்தஸ்ய—நந்த மகாராஜனின்; பத்னீ—மனைவி (தாய் யசோதை); க்ருத-மஜ்ஜன-ஆதிகம்—அவளும், வீட்டிலுள்ள மற்ற அங்கத்தினர்களும் குளித்து. குழந்தைக்கும் ஸ்நானம் செய்விக்கப்பட்டபின்; விப்ரை:—பிராமணர்களால்; க்ருத-ஸ்வஸ்த்யயனம்—மங்களகரமான வேத மந்திரங்களை ஒதுவதில் அவர்களை ஈடுபடுத்தி; ஸு-பூஜிதை:—அவர்களனைவரும் தகுந்த மரியாதையுடன் வரவேற்று வழிபடப்பட்டனர்; அன்ன-ஆத்ய—அவர்களுக்குப் போதுமான தானியங்களையும், மற்ற உணவுவகைகளையும் அளிப்பதன்மூலம்; வாஸ:—உடைகள்; ஸ்ரக்-அபீஷ்ட-தேனுபி:—மலர் மாலைகளையும், விரும்பத்தக்க பசுக்களையும் அளிப்பதன்மூலம்; ஸஞ்ஜாத-நித்ரா—உறக்கத்தால் சொக்கிய; அக்ஷம்—யாருடைய கண்கள்; அசீசயத்—குழந்தையைப் படுக்கவைத்தாள்; சனை:—தற்போதைக்கு.

குழந்தையின் அபிஷேகச் சடங்கை முடித்தபின், தாய் யசோதை பிராமணர்களைத் தகுந்த மரியாதையுடன் வழிபட்டும், ஏராளமான உணவுத் தானியங்கள், மற்ற உணவு வகைகள், ஆடைகள், விரும்பத்தக்க பசுக்கள் மற்றும் மாலைகள் ஆகியவற்றை அளித்தும் அவர்களை வரவேற்றாள். மங்களச் சடங்குகளைக் கொண்டாடும் வகையில் பிராமணர்கள் வேத மந்திரங்களை ஓதி முடித்தனர். பிறகு குழந்தை உறக்கத்தால் சொக்குவதைக் கண்ட தாய் யசோதை, குழந்தை அமைதியாக உறங்கும் வரை அதனுடன் படுக்கையில் படுத்திருந்தாள்.

பதம் 10.7.6
ஒளத்தானிகௌத்ஸுக்ய-மனா மனஸ்வினீ
ஸமாகதான் பூஜயதீ வ்ரஜௌகஸ:
நைவஸ்ருணோத் வை ருதிதம் ஸுதஸ்ய ஸா
ருதன் ஸ்தனார்தீ சரணாவ் உதக்ஷிபத்

ஔத்தானிக-ஔத்ஸுக்ய-மனா:—தாய் யசோதை குழந்தையின் உத்தான சடங்கைக் கொண்டாடுவதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாள்; மனஸ்வினீ—தேவைக்கேற்ப உணவு, உடை, ஆபரணங்கள் மற்றும் பசுக்கள் ஆகியவற்றை மிகவும் தாராளமாக விநியோகித்தாள்; ஸமாகதான்—கூடியுள்ள விருந்தினர்களுக்கு; பூஜயதீ—அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே; வ்ரஜ-ஒகஸ:—விரஜவாசிகளுக்கு; ந—இல்லை; ஏவ—நிச்சயமாக; அஸ்ருணோத்—கேட்டாள்; வை—உண்மையாகவே; ருதிதம்—அழுகையை; ஸுதஸ்ய—அவளது குழந்தையின்; ஸா—தாய் யசோதை; ருதன்—அழுதுகொண்டு; ஸ்தன-அர்தீ—தாயின் முலைப்பாலைக் குடிக்க கிருஷ்ணர்; சரணௌ உதக்ஷிபத்—கோபத்துடன் தம் கால்களை இங்குமங்கும் உதைத்தார்.

உத்தான சடங்கைக் கொண்டாடுவதில் ஆழ்ந்துவிட்ட தாராள மனமுடைய தாய் யசோதை, விருந்தினர்களை வரவேற்று, மரியாதையுடன் அவர்களை பூஜித்துப் போற்றுவதிலும், அவர்களுக்கு ஆடைகள், பசுக்கள், மாலைகள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை அளிப்பதிலும் சுறுசுறுப்பாக இருந்தாள். இதனால் தன் வரவுக்காக குழந்தை அழுவதை அவள் கேட்கவில்லை. அப்பொழுது தம் தாயின் முலைப்பாலைக் குடிக்க விரும்பிய குழந்தை கிருஷ்ணர், கோபத்துடன் தம் கால்களை மேலே உதைத்தார்

பதம் 10.7.7
அத:-சயானஸ்ய சிசோர் அனோ ‘ல்பக-
ப்ரவால-ம்ருத்வ-அங்ரி-ஹதம் வ்யவர்த்த
வித்வஸ்த-நானா-ரஸ-குப்ய-பாஜனம்
வ்யத்யஸ்த-சக்ராக்ஷ-விபின்ன-கூபரம்

அத:-சயானஸ்ய—தள்ளுவண்டிக்கடியில் வைக்கப்பட்டிருந்த; சிசோ—குழந்தையின்; அன:—வண்டி; அல்பக—நன்கு வளர்ச்சியடையாத; ப்ரவால—ஒரு புது இலையைப் போன்ற; ம்ருது-அங்ரி-ஹதம்—அவரது அழகிய மென்மையான கால்களால் உதைக்கப்பட்டு; வ்யவர்த்த—சுழன்று கீழே விழுந்தது; வித்வஸ்த—சிதறின; நானா-ரஸ-குப்ய-பாஜனம்—பல்வேறு உலோகங்களாலான பாத்திரங்கள்; வ்யத்யஸ்த—கழன்று கொண்டன; சக்ர-அக்ஷ—இரு சக்கரங்களும், சுழலச்சும்; விபின்ன—உடைந்து; கூபரம்—தள்ளு வண்டியின் கம்பம்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், முற்றத்தின் ஒரு மூலையிலிருந்து ஒரு தள்ளு வண்டிக்கடியில் படுத்திருந்தார். அவரது சிறிய கால்கள் இலைகளைப் போல் மென்மையாக இருந்த போதிலும், தமது கால்களால் வண்டியை அவர் உதைத்தபொழுது, அது பயங்கரமாகச் சுழன்று கீழே விழுந்தது. சக்கரங்கள் சுழலச்சிலிருந்து கழன்று விழுந்தன. சக்கரங்களின் குடங்களும், அரைக்கால் பழுக்களும் இருபுறமும் விழுந்தன. வண்டியின் கம்பம் உடைந்தது. வண்டியின் மேலிருந்த பல்வேறு உலோகங்களாலான பல சிறிய பாத்திரங்கள் இங்குமங்குமாகச் சிதறி விழுந்தன.

பதம் 10.7.8
த்ருஷ்ட்வா யசோதா-ப்ரமுகா வ்ரஜ-ஸ்த்ரிய
ஒளத்தானிகே கர்மணி யா: ஸமாகதா:
நந்தாதயஸ் சாத்புத-தர்சனாகுலா:
கதம் ஸ்வயம் வை சகடம் விபர்யகாத்

த்ருஷ்ட்வா—கண்டபின்; யசோதா-ப்ரமுகா:—தாய் யசோதையின் தலைமையிலான; வ்ரஜ-ஸ்த்ரிய:—விரஜையின் எல்லாப் பெண்களும்; ஒளத்தானிகே: கர்மணி—உத்தான சடங்குக் கொண்டாட்டத்தில்; யா:—அவர்கள்; ஸமாகதா:—அங்கு கூடியிருந்த; நந்த-ஆதய: ச—மற்றும் நந்த மகாராஜனின் தலைமையிலான ஆட்களும்; அத்புத-தர்சன—(நிறைய பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி சிறு குழந்தையின் மேல் உடைந்து விழுந்த போதிலும், அடிபடாமல் குழந்தை அங்கேயே படுத்திருந்த) அற்புதக் காட்சியைக் கண்டதால்; ஆகுலா:—இதெப்படி நடந்தது என்று அறியாமல் அவர்கள் மிகவும் குழப்பமடைந்தனர்; கதம்—எப்படி; ஸ்வயம்—தானாக; வை—உண்மையில்; சகடம்—தள்ளு வண்டி; விபர்யகாத்—மிகவும் மோசமாகச் சேதமடைந்தது.

தாய் யசோதையும், உத்தான விழாவிற்காகக் கூடியிருந்த மற்ற பெண்களும், நந்த மகாராஜன் தலைமையிலான ஆட்களும், இந்த அற்புதக் காட்சியைக் கண்டு, தள்ளு வண்டி எப்படித் தானாகவே கவிழ்ந்தது என்று ஆச்சரியப்படத் துவங்கினர். இதன் காரணத்தை அறிய அவர்கள் இங்குமங்கும் பார்த்தனர். ஆனால் காரணத்தை அவர்களால் அறிய இயலவில்லை.

பதம் 10.7.9
ஊகச் அவ்யவஸித-மதீன் கோபான் கோபீஸ் ச பாலகா: ருததானேன பாதேன க்ஷிப்தம் ஏதன் ந ஸம்சய:

ஊக:—கூறினர்; அவ்யவஸித-மதீன்—தற்போதைய சூழ்நிலையில் அறிவை முற்றிலும் இழந்துவிட்ட; கோபான்—இடையர்களிடம்; கோபீ: ச—மற்றும் பெண்களிடம்; பாலகா:—குழந்தைகள்; ருத்தா அனேன—குழந்தை அழுத உடனேயே; பாதேன—ஒரு காலால்; க்ஷிப்தம் ஏதன்—பலமாக உதைக்கப்பட்ட இவ்வண்டி உடனே உடைந்து விழுந்தது; ந ஸம்சய:—இதில் சந்தேகமில்லை.

கூடியிருந்த இடையர்குல ஆண்களும், பெண்களும் இது எப்படி நிகழ்ந்தது என்று சிந்திக்கத் துவங்கினர். “இது யாரேனும் ஓர் அசுரனின் வேலையாகவோ அல்லது கிரக பீடையாகவோ இருக்கக் கூடுமோ?” என்று அவர்கள் கேட்டனர். அப்பொழுது, அங்கிருந்த சிறு குழந்தைகள், குழந்தை கிருஷ்ணரால் வண்டி உதைத்து நொறுக்கப்பட்டது என்று உறுதிப்படுத்தினர். அழுது கொண்டிருந்த குழந்தை வண்டியின் சக்கரத்தை உதைத்த உடனேயே, அது உடைந்து விழுந்தது. அதில் சந்தேகமில்லை.

பதம் 10.7.10
ந தே ஸ்ரத்ததிரே கோபா பால-பாஷிதம் இதி உத
அப்ரமேயம் பலம் தஸ்ய பாலகஸ்ய ந தே விது:

ந—இல்லை; தே—கோபர்களும், கோபியர்களும்; ஸ்ரத்ததிரே—(இத்தகைய கூற்றுகளில்) நம்பிக்கைக் கொண்டனர்; கோபா:—கோப, கோபியர்கள்; பால-பாஷிதம்—கூடியிருந்த குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தனமான பேச்சை; இதி உத—இவ்வாறு பேசப்பட்ட; அப்ரமேயம்—எல்லையற்ற, நினைத்தற்கரிய; பலம்—சக்தி; தஸ்ய பாலகஸ்ய—சிறு குழந்தையான கிருஷ்ணரின்; ந—இல்லை; தே—கோப, கோபியர்கள்; விது—அறிந்திருந்தனர்.

கிருஷ்ணர் எப்பொழுதும் எல்லையற்றவர் என்பதை அறியாத, கூடியிருந்த கோப, கோபியர்களால், கிருஷ்ணரிடம் இத்தகைய நினைத்தற்கரிய சக்தி இருந்ததை நம்ப முடியவில்லை. குழந்தைகளின் கூற்றை அவர்களால் நம்ப முடியவில்லை என்பதால், அவற்றை வெறும் குழந்தைத்தனமான பேச்சென்றெண்ணி, அலட்சியப்படுத்தினர்.

பதம் 10.7.11
ருதந்தம் ஸுதம் ஆதாய யசோதா க்ரஹ-சங்கிதா
க்ருத-ஸ்வஸ்தயயனம் விப்ரை: ஸூக்தை: ஸ்தனம் அபாயயத்

ருதந்தம்—அழுதுகொண்டிருந்த; ஸுதம்—மகனை; ஆதாய—எடுத்து; யசோதா—தாய் யசோதை; க்ரஹ-சங்கிதா—ஏதோ ஒரு துஷ்ட கிரகம் என்றஞ்சி; க்ருத-ஸ்வஸ்த்யயனம்—நல்லதிர்ஷ்டத்திற்காக உடனே ஒரு வேதச் சடங்கைச் செய்வித்தாள்; விப்ரை:—எல்லா பிராமணர்களையும் அழைப்பதன் மூலம்; ஸூக்தை:—வேத மந்திரங்களால்; ஸ்தனம் அபாயயத்—தன் முலைப்பாலைக் குழந்தை குடிக்கும்படிச் செய்தாள்.

கிருஷ்ணரைத் தாக்கியது கிரக பீடையாக இருக்குமோ என்றெண்ணிய தாய் யசோதை, அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கையிலெடுத்து, தன் முலைப்பாலைக் குடிக்கச் செய்தாள். பிறகு, வேத மந்திரங்களை ஓதி மங்களச் சடங்கைச் செய்வதற்கு, அனுபவமுள்ள பிராமணர்களை வரவழைத்தாள்.

பதம் 10.7.12
பூர்வவத் ஸ்தாபிதம் கோபைர் பலிபி: ஸ பரிச்சதம்
விப்ரா ஹுத்வார்சயாம் சக்ருர் ததி-அக்ஷத-குசாம்புபி:

பூர்வ-வத்—தள்ளு வண்டியை முன்பிருந்ததுபோல்; ஸ்தாபிதம்—மீண்டும் பாகங்களை இணைத்து, பாத்திரங்கள் முறையாக அடுக்கப்பட்டு; கோபை:—கோபர்களால்; பலிபி:—மிகவும் பலசாலிகளாகவும் பருத்தும் இருந்ததால், சிரமமின்றிப் பாகங்களை இணைக்கக் கூடியவர்களாக இருந்த அவர்களனைவரும்; ஸ-பரிச்சதம்—எல்லாப் பொருட்களையும் அதன்மேல் வைத்தனர்; விப்ரா:—பிராமணர்கள்; ஹுத்வா—ஒரு வேள்வியைச் செய்தபின்; அர்சயாம் சக்ரு:—வேதச் சடங்குகளைச் செய்தனர்; ததி—தயிருடன்; அக்ஷத—அட்சதை (மங்கள அரிசி); குச—மற்றும் நாணல் புல்; அம்புபி:—நீருடன்.

பலமும், பருமனும் உள்ள இடையர்கள் பாத்திரங்களையும். பொருட்களையும் கைவண்டியின் மேல் முன்புபோல் அடுக்கி வைத்தபின், பிராமணர்கள் கிரக பீடையைச் சாந்தப்படுத்துவதற்காக வேள்வியுடன் கூடிய ஒரு வேதச் சடங்கைச் செய்தனர். அதன்பிறகு, அட்சதை, நாணல் புல், நீர் மற்றும் தயிர் ஆகியவற்றினால் அவர்கள் பரமபுருஷரை வழிபட்டனர்.

பதங்கள் 10.7.13 – 10.7.15
யே ‘ஸூயான்ருத-தம்பேர்ஷா-ஹிம்ஸா-மான-விவர்ஜிதா:
ந தேஷாம் ஸத்ய-சீலானாம் ஆசிஷோ விஃபலா: க்ருதா:

இதி பாலகம் ஆதாய ஸாமர்க்-யஜுர்-உபாக்ருதை:
ஜலை: பவித்ரௌஷாதிபிர் அபிஷிச்ய த்விஜோத்தமை:

வாசயித்வா ஸ்வஸ்த்யயனம் நந்த-கோப: ஸமாஹித:
ஹுத்வா சாக்னிம் த்விஜாதிப்ய: ப்ரதாத் அன்னம் மஹா-குணம்

யே—அந்த பிராமணர்கள்; அஸூய—பொறாமை; அன்ருத—பொய்; தம்ப—பொய்யான தற்பெருமை; ஈர்ஷா—மனஸ்தாபம்; ஹிம்ஸா—பிறருடைய செல்வச் செழிப்பினால் ஏற்படும் அமைதி குலைவு; மான—பொய்க் கெளரவம்; விவர்ஜிதா—சிறிதும் இல்லாத; ந—இல்லை; தேஷாம்—அத்தகைய பிரமணர்களின்; ஸத்ய-சீலானாம்—(ஸத்ய, சம தம முதலான) பூரணமான பிராமணத் தகுதிகளை உடையவர்கள்; ஆசிஷ:—ஆசீர்வாதங்கள்; விஃபலா:—பயனற்றதாக; க்ருதா:—ஆகிவிட்டது; இதி—இவைகளை எல்லாம் கருத்திற்கொண்டு; பாலகம்—குழந்தையை; ஆதாய—கவனித்துப் பேணி; ஸாம—சாம வேதத்திற்கேற்ப; ரிக்—ரிக் வேதத்திற்கேற்ப; யஜு:—மற்றும் யஜுர் வேதத்திற்கேற்ப; உபாக்ருதை:—இத்தகைய வழிகளால் தூய்மையடைந்த; ஜலை:—நீருடன்; பவித்ர-ஒளஷதிபி:—தூய மூலிகைகளுடன் கலந்து; அபிஷிச்ய—(குழந்தையை) குளிப்பாட்டியபின்; த்விஜ-உத்தமை:—மேற்கூறிய தகுதி முறைகளைக் கொண்ட முதல்தர பிராமணர்களால் செய்யப்பட்ட சடங்குகளுடன்; வாசயித்வா—ஓதும்படி வேண்டினார்; ஸ்வஸ்தி-அயனம்—மயங்களகரமான மந்திரங்களை; நந்த-கோப:—இடையர்களின் தலைவரான நந்தகோபர்; ஸமாஹித:—தாராளமான, நல்ல; ஹுத்வா—யாக நிவேதனங்கள் செய்ய; ச—கூட; அக்னிம்—வேள்வித் தீயில்; த்விஜாதிப்ய:—அத்தகைய முதல்தர பிராமணர்களுக்கு; ப்ராதாத்—தானமாகக் கொடுத்தார்; அன்னம்—உணவுத் தானியங்களை; மஹா-குணம்—மிகச்சிறந்த.

பொறாமை, பொய், தேவையற்ற தற்பெருமை, மனஸ்தாபம், பிறருடைய செல்வத்தைக் கண்டு அமைதிக்குலைவு, மற்றும் பொய்க் கௌரவம் ஆகியவை இல்லாத பிராமணர்களின் ஆசீர்வாதங்கள் பயனற்றுப் போவதில்லை. இதைக் கருத்திற்கொண்ட நந்த மகாராஜன் அமைதியாக கிருஷ்ணரை மடியில் வைத்துக்கொண்டு, சத்தியசீலர்களான இத்தகைய பிராமணர்களை அழைத்து, சாம, ரிக், மற்றும் யஜுர் வேதங்களின் புனித மந்திரங்களுக்கேற்ப, ஒரு வேதச் சடங்கைச் செய்வித்தார். மந்திரங்கள் ஓதப்பட்டபொழுது, தூய மூலிகைகள் கலந்த நீரால் குழந்தையை நீராட்டிய அவர், ஒரு யாகத்தைச் செய்தபிறகு முதல்தரமான தானியங்களையும், மற்ற உணவுவகைகளையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அறுசுவை உணவுகளைக் கொண்டு பிராமணர்களுக்கு அவர் உணவளித்தார்.

பதம் 10.7.16
காவ: ஸர்வ-குணோபேதா வாஸ:ஸ்ரக்-ருக்ம-மாலினீ: ஆத்மஜாப்யுதயார்தாய ப்ராதாத் தே சான்வயுஞ்ஜத

காவ:—பசுக்களை; ஸர்வ-குண-உபேதா:—போதுமான பாலைக் கொடுக்கும் முழு தகுதியுடைய; வாஸ:—நன்கு உடுத்தப்பட்ட; ஸ்ரக்—மலர் மாலைகளுடன்; ருக்ம-மாலினீ:—மற்றும் தங்க மாலைகளுடனும்; ஆத்மஜ-அப்யுதய-அர்தாய—அவரது மகன் வளம்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக; ப்ராதாத்—தானம் கொடுத்தார்; தே—அந்த பிராமணர்களும்; ச—கூட; அன்வயுஞ்ஜத—அவற்றை ஏற்றுக் கொண்டனர்.

தம் புத்திரராகிய கிருஷ்ணரின் வளத்திற்காக, நந்த மகாராஜன் ஆடைகள், மலர் மாலைகள் மற்றும் தங்க ஆரங்கள் ஆகியவற்றால் முழுமையாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களை பிராமணர்களுக்குக் கொடுத்தார். ஏராளமான பாலைக் கொடுக்கும் தகுதியைப் பெற்றிருந்த இப்பசுக்கள் பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டன. பிராமணர்களும் அவற்றை ஏற்றுக்கொண்டு, குடும்ப அங்கத்தினர்களை குறிப்பாக கிருஷ்ணரை ஆசீர்வதித்தனர்.

பதம் 10.7.17
விப்ரா மந்த்ர-விதோ யுக்தாஸ் தைர் யா: ப்ரோக்தாஸ் ததாசிஷ:
தா நிஷ்ஃபலா பவிஷ்யந்தி ந கதாசித் அபி ஸ்ஃபுடம்

விப்ரா:—பிராமணர்கள்; மந்த்ர-வித:—வேத மந்திரங்களை ஓதுவதில் நிபுணர்களான; யுக்தா:—பக்குவமடைந்த யோகிகளானவர்; தை:—அவர்களால்; யா:—என்னவெல்லாம்; ப்ரோக்தா:—பேசப்பட்டனவோ; ததா—அப்படியே ஆகின்றன; ஆசிஷ:—எல்லா ஆசீர்வாதங்களும்; தா:—இத்தகைய வார்த்தைகள்; நிஷ்ஃபலா:—பலனற்றவை; பவிஷ்யந்தி ந—ஆவதேயில்லை; கதாசித்—எச்சமயத்திலும்; அபி—உண்மையில்; ஸ்ஃபுடம்—உள்ளபடி எப்பொழுதும் உண்மையாகவே உள்ளது.

வேத மந்திரங்களை ஓதுவதில் நிபுணர்களான பிராமணர்கள் அனைவரும் யோக சக்திகளை வசப்படுத்திய யோகிகளாவர். அவர்களது எந்த ஆசீர்வாதமும் நிச்சயமாகப் பலனளிக்காமல் போவதில்லை.

பதம் 10.7.18
ஏகதாரோஹம் ஆருடம் லாலயந்தீ ஸுதம் ஸதீ
கரிமாணம் சிசோர் வோடும் ந ஸேஹே கிரிகூடவத்

ஏகதா—ஒருசமயம் (கிருஷ்ணர் ஒரு வயதுடையவராக இருக்கும் பொழுது); ஆரோஹம்—அவரது தாயின் மடியில்; ஆரூடம்—அமர்ந்திருந்து; லாலயந்தீ—மெதுவாக தட்டிக் கொண்டிருந்தாள்; ஸுதம்—அவளது மகனை; ஸதீ—தாய் யசோதை; கரிமாணம்—பளுவில் ஓர் அதிகரிப்பு ஏற்பட்ட காரணத்தால்; சிசோ:—குழந்தையின்; வோடும்—அவரைச் சுமக்க; ந—இல்லை; ஸேஹே—முடிந்தது; கிரி கூட வத்—ஒரு மலைச் சிகரத்தின் பளுவைப் போல் காணப்பட்டது.

கிருஷ்ணர் தோன்றி ஓராண்டு கடந்தபின், ஒருநாள் தாய் யசோதை தம் மகனை மடிமீது வைத்து மெதுவாக தட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் திடீரென்று குழந்தை ஒரு மலைச் சிகரத்தை விட பாரமாகிவிட்டது போல் உணர்ந்தாள். அவரது பளுவை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பதம் 10.7.19
பூமௌ நிதாய தம் கோபீ விஸ்மிதா பார-பீடிதா
மஹா-புருஷம் ஆதத்யௌ ஜகதாம் ஆஸ கர்மஸு

பூமௌ—தரையில; நிதாய—வைத்து; தம்—குழந்தையை; கோபீ—தாய் யசோதை; விஸ்மிதா—ஆச்சரியமடைந்து; பார-பீடிதா—குழந்தையின் பாரத்தை எண்ணி வருத்தப்பட்டு; மஹா-புருஷம்—பகவான் விஷ்ணுவை, நாராயணரை; ஆதத்யௌ—புகலிடம் கொண்டாள்; ஜகதாம்—முழு உலகத்தின் பாரத்தைப் போல்; ஆஸ—தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்; கர்மஷு—மற்ற குடும்ப விவகாரங்களில்.

முழு பிரபஞ்சத்தின் பாரமும் குழந்தைக்கு வந்து விட்டது போல் உணர்ந்த தாய் யசோதை, வேறொரு பேய் அல்லது அசுரன் குழந்தையைத் தாக்குவதாக எண்ணிக் கவலைப்பட்டாள். இவ்வாறு திகைப்படைந்த அவள் குழந்தையைத் தரையில் வைத்துவிட்டு, நாராயணரை சிந்திக்கத் துவங்கினாள். தொல்லைகள் வரப்போவதைக் கண்ட அவள், இந்த பாரத்தைப் போக்க பிராமணர்களை அழைத்தாள். பிறகு மற்ற குடும்ப விவகாரங்களில் தன்னை அவள் ஈடுபடுத்திக் கொண்டாள். கிருஷ்ணரே அனைத்திற்கும் மூல பிறப்பிடம் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியாததால், நாராயணரின் தாமரைப் பாதங்களை நினைப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை.

பதம் 10.7.20
தைத்யோ நாம்னா த்ருணாவர்த: கம்ஸ-ப்ருத்ய: ப்ரணோதித:
சக்ரவாத-ஸ்வரூபேண ஜஹாராஸீனம் அர்பகம்

தைத்ய:—மற்றொரு அசுரன்; நாம்னா—என்ற பெயருடைய; த்ருணாவர்த:—திருணாவர்தாசுரன்; கம்ஸ-ப்ருத்ய:—கம்சனின் ஒரு சேவகனான; ப்ரணோதித:—கம்சனால் தூண்டப்பட்டு; சக்ரவாத-ஸ்வரூபணே—ஒரு சுழற்காற்றின் வடிவில்; ஜஹார—வாரிக்கொண்டு சென்றான்; ஆஸீனம்—அமர்ந்திருந்த; அர்பகம்—சூழந்தையை.

குழந்தை தரையில் அமர்ந்திருக்கும் பொழுது கம்சனின் சேவகனான திருணாவர்தன் என்ற அசுரன், கம்சனின் தூண்டுதலால், சுழற்காற்றாக அங்கு வந்து, குழந்தையை மிகச் சுலபமாக ஆகாயத்தில் தூக்கிச் சென்றான்.

பதம் 10.7.21
கோகுலம் ஸர்வம் ஆவ்ருண்வன் முஷ்ணம்ஸ் சக்ஷும்ஷி ரேணுபி:
ஈரயன் ஸுமஹா-கோர-சப்தேன ப்ரதிசோ திச:

கோகுலம்—கோகுலம் என்ற நிலப்பகுதி முழுவதும்; ஸர்வம்—அனைத்தும்; ஆவ்ருண்வன்—மூடி மறைத்து; முஷ்ணன்—எடுத்துச் சென்று; சக்ஷும்ஷி—பார்க்கும் சக்தியை; ரேணுபி:—புழுதியால்; ஈரயன்—வேகமாக அதிரச் செய்தான்; ஸு-மஹா-கோர—மிகவும் கொடூரமும், பாரமும் கொண்ட; சப்தேன—ஒரு ஓசையுடன்; ப்ரதிச்: திச:—எங்கும் எல்லாத் திசைகளிலும் புகுந்தான்.

பெரும் சுழற்காற்றாக வந்த அந்த அசுரன், கோகுலத்தின் நிலப்பகுதி முழுவதையும், அனைவரது பார்வையையும் மறைத்து, திக்குத்திசைகளையெல்லாம் கொடிய ஓசையால் நிரப்பத் துவங்கினான்.

பதம் 10.7.22
முஹூர்த்தம் அபவத் கோஷ்டம் ரஜஸா தமஸாவ்ருதம்
ஸுதம் யசோதா நாபஸ்யத் தஸ்மின் ன்யஸ்தவதீ யத:

முஹூர்தம்—நொடிப்பொழுது; அபவத்—இருந்தது; கோஷ்டம்— மேய்ப்பு நிலம் முழுவதும்; ரஜஸா—புழுதி மண்டலத்தால்; தமஸா ஆவ்ருதம்—இருள் சூழ்ந்ததாக; ஸுதம்—தன் மகனை; யசோதா—தாய் யசோதையால்; ந அபஸ்யத்—கண்டுபிடிக்க முடியவில்லை; தஸ்மின்—அதே இடத்தில்; ன்யஸ்தவதீ—அவரை அவள் வைத்தாளோ; யத:—எங்கு.

நொடி நேரத்திற்கு, புல்வெளி முழுவதும் சூறாவளிப் புழுதியின் காரணத்தால், அடர்ந்த இருளால் மூடப்பட்டது. தாய் யசோதையால் முன்பு தன் மகனை வைத்த இடத்தில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பதம் 10.7.23
நாபஸ்யத் கஸ்சனாத்மானம் பரம் சாபி விமோஹித: த்ருணாவர்த-நிஸ்ருஷ்டாபி: சர்கராபிர் உபத்ருத:

ந—இல்லை; அபஸ்யத்—கண்டனர்; கஸ்சன—யாரும்; ஆத்மானம்—தன்னையோ; பரம் ச அபி—அல்லது வேறொருவரையே; விமோஹித:—மாயைக்குட்பட்டு; த்ருணாவர்த-நிஸ்ருஷ்டாபி:—திருணாவர்தாசுரனால் வாரியடிக்கப்பட்ட; சர்கராபி:—மணல்களால்; உபத்ருத:—மேலும் இவ்வாறு தொல்லைக்குட்பட்டு.

திருணாவர்தனால் வாரியடிக்கப்பட்ட மணலின் காரணத்தால், மக்களால் தங்களையோ, பிறரையோ காண முடியாமல் திகைப்பிற்கும் தொல்லைக்கும் உள்ளாயினர்.

பதம் 10.7.24
இதி கர-பவன-சக்ர-பாம்சு-வர்ஷே
ஸுத-பதவீம் அபலாவிலக்ஷ்ய மாதா
அதிகருணம் அனுஸ்மரந்தி அசோசத்
புவி பதிதா ம்ருத-வத்ஸகா யதா கௌ:

இதி—இவ்வாறாக; கர—மிகவும் வேகமான; பவன-சக்ர—ஒரு சுழற்காற்றால்; பாம்சு-வர்ஷே—மணல் புயலும், புழுதி மண்டலமும் உண்டான பொழுது; ஸுத-பதவீம்—அவளது மகனிருந்த இடம்; அபலா—கபடமற்ற பெண்; அவிலக்ஷ்ய—காணாமல்; மாதா—அவரது தாய் என்ற காரணத்தால்; அதி-கருணம்—மிகவும் பரிதாபமாக; அனுஸ்மரந்தீ—தன் மகனைப் பற்றி அவள் சிந்தித்தாள்; அசோசத்—அசாதாரணமான முறையில் வருத்தப்பட்டாள்; புவி—தரையில்; பதிதா—விழுந்தாள்; ம்ருத-வத்ஸகா—தன் கன்றை இழந்து; யதா—போல்; கௌ:—ஒரு பசு.

வேகமான சுழற்காற்றினால் வாரியடிக்கப்பட்ட மணற்புயலின் காரணத்தால், தாய் யசோதையால் தன் மகன் இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏன் என்பதும் அவளுக்குப் புரியவில்லை. இவ்வாறு அவள் கன்றிழந்த பசுபோல் தரையில் விழுந்து மிகவும் பரிதாபமாக அழத் துவங்கினாள்.

பதம் 10.7.25
ருதிதம் அனுனிசம்ய தத்ர கோப்யோ
ப்ருசம் அனுதப்த-தியோ ‘ஸ்ரு-பூர்ண-முக்ய:
ருருதுர் அனுபலப்ய நந்த-ஸூனும்
பவன உபாரத-பாம்சு-வர்ஷ-வேகே

ருதிதம்—தாய் யசோதை பரிதாபமாக அழுவதை; அனுநிசம்ய—கேட்டதும்; தத்ர—அங்கு; கோப்ய:—மற்ற பெண்கள், கோபியர்கள்; ப்ருசம்—மிகவும்; அனுதப்த—தாய் யசோதையுடன் இரங்கத்தக்க வகையில் அழுதனர்; திய:—இத்தகைய உணர்வுகளுடன்; அஸ்ரு-பூர்ண-முக்ய:—மற்ற கோபியர்கள் தங்கள் முகங்கள் கண்ணீரால் நிறைந்திருக்க; ருருது:—அவர்கள் அழுதுகொண்டிருந்தனர்; அனுபலப்ய—காணாமல்; நந்த-ஸூனும்—நந்த புத்திரரான கிருஷ்ணரை; பவனே—சுழற்காற்று; உபாரத—ஓய்ந்ததும்; பாம்சு-வர்ஷ-வேகே—புழுதி மழை பொழியும் அதன் வேகம்.

மணற்புயலின் வேகமும், காற்றும் ஓய்ந்தபிறகு, யசோதையின் பரிதாபகரமான அழுகுரலைக் கேட்டு அவளது தோழிகளான மற்ற கோபியர்கள் அவளை அணுகினர். அங்கு கிருஷ்ணரைக் காணாததால், அவர்களும் பெருந் துன்பத்திற்குள்ளாகி, கண்களில் கண்ணீர் ததும்ப தாய் யசோதையுடன் சேர்ந்து அழுதனர்.

பதம் 10.7.26
த்ருணாவர்த: சாந்த-ரயோ வாத்யா-ரூப-தரோ ஹரன்
க்ருஷ்ணாம் நபோ-கதோ கந்தும் நாசக்னோத் பூரி-பார-ப்ருத்

த்ருணாவர்த—திருணாவர்தாசுரன்; சாந்த-ரய:—புயலின் வேகம் தணிந்து; வாத்யா-ரூப-தா:—சக்திவாய்ந்த சுழற்காற்றின் வடிவை ஏற்றிருந்த; ஹரன்—இவ்வாறு தூக்கிச் செல்லப்பட்டார்; க்ருஷ்ணம்—பரமபுருஷரான கிருஷ்ணர்; நப:-கத:—ஆகாயத்தின் உச்சிக்குச் சென்றான்; கந்தும்—தொடர்ந்து மேலே செல்ல; ந அசக்னோத்—முடியவில்லை; பூரி-பார-ப்ருத்—ஏனெனில் கிருஷ்ணர் அந்த அசுரனைவிட அதிக சக்தியுடையவராகவும், பாரமாகவும் மாறினார்.

சக்திவாய்ந்த ஒரு சுழற்காற்றின் வடிவை ஏற்ற திருணாவர்தாசுரன் கிருஷ்ணரை ஆகாயத்தில் மிகவும் உயரமாகத் தூக்கிச் சென்றான். ஆனால் கிருஷ்ணர் அந்த அசுரனைவிட அதிகக் கனமாக மாறியதும், அவன் தன் வேகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று அவனால் தொடர்ந்து மேலே செல்ல முடியவில்லை.

பதம் 10.7.27
தம் அஸ்மானம் மன்யமான ஆத்மனோ குரு-மத்தயா
கலே க்ருஹீத உத்ஸ்ரஷ்டும் நாசக்னோத் அத்புதார்பகம்

தம்—கிருஷ்ணரை; அஸ்மானம்—இரும்புக் கட்டியைப்போல் மிகவும் பாரமான கல்; மன்யமான:—என்றெண்ணி; ஆத்மன: குரு-மத்தயா—தன்னால் உணர முடிந்ததைவிட கனமாக இருந்த காரணத்தால்; கலே—அவனது கழுத்து; க்ருஹீதே—அவரது கரங்களால் தழுவிக்கொள்ளப்பட்டதால் அல்லது சுற்றி வளைத்துக் கொள்ளப்பட்டதால்; உத்ஸ்ரஷ்டும்—கைவிடவும்; ந அசக்னோத்—முடியவில்லை; அத்புத-அர்பகம்—சாதாரண குழந்தையிலிருந்து வேறுபட்டுள்ள இந்த அற்புதக் குழந்தையை.

கிருஷ்ணருடைய கனத்தின் காரணத்தால், திருணாவர்தன் அவரை ஒரு பெரிய மலையைப்போல் அல்லது இரும்புக் கட்டியைப்போல் கருதினான். ஆனால் கிருஷ்ணர் அந்த அசுரனின் கழுத்தைப் பற்றிக் கொண்டதால், அசுரனால் அவரை எறிந்துவிடவும் முடியவில்லை. சுமையைக் கைவிடவும் முடியவில்லை என்பதால், குழந்தையை அவன் அற்புதமானவர் என்றெண்ணினான்.

பதம் 10.7.28
கல-க்ரஹண-நிஸ்சேஷ்டோ தைத்யோ நிர்கத-லோசன:
அவ்யக்த-ராவோ ன்யபதத் ஸஹ-பாலோ வ்யஸுர் வ்ரஜே

கல-க்ரஹண-நிஸ்சேஷ்ட:—கிருஷ்ணர் திருணாவர்தாசுரனின் கழுத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்ததால், மூச்சுத் திணறிய அசுரனால் எதையும் செய்ய முடியவில்லை; தைத்ய:—அசுரன்; நிர்கத-லோசன:—அழுத்தத்தின் காரணத்தால் அவனது விழிகள் பிதுங்கின; அவ்யக்த-ராவ:—தொண்டை அடைத்துக் கொண்டதால் அவனால் ஓசைகூட எழுப்ப முடியவில்லை; ன்யபதத்—கீழே விழுந்தான்; ஸஹ-பால:—குழந்தையுடன்; வ்யஸு:-வ்ரஜே—விரஜ பூமியில் உயிரற்று.

கிருஷ்ணர் அவனது கழுத்தைப் பற்றிக்கொண்டிருந்ததால், மூச்சுத்திணறிய திருணாவர்தனால் சிறு ஓசையைக்கூட எழுப்ப முடியவில்லை. கை, கால்களைக்கூட அவனால் அசைக்க முடியவில்லை விழிகள் பிதுங்கி, தன் உயிரை இழந்த அசுரன் சிறு குழந்தையுடன் விரஜபூமியில் விழுந்தான்.

பதம் 10.7.29
தம் அந்தரிக்ஷாத் பதிதம் சிலாயாம்
விசீர்ண-ஸர்வாவயவம் கராலம்
புரம் யதா ருத்ர-சரேண வித்தம்
ஸ்த்ரியோ ருதத்யோ தத்ருக: ஸமேதா:

தம்—திருணவர்தாசுரனுக்கு; அந்தரிக்ஷாத்—விண்வெளியிலிருந்து; பதிதம்—விழுந்த; சிலாயாம்—ஒரு பாறையின்மேல்; விசீர்ண—சிதறின; ஸர்வ-அவயவம்—அவனது உடலுறுப்புகள் எல்லாம்; கராலாம்—மிகவும் கொடூரமான கை, கால்கள்; புரம்—திரிபுராசுரனின் இடம்; யதா—போல்; ருத்ர-சரேண—சிவபெருமானின் அம்பால்; வித்தம்—துளைக்கப்பட்ட; ஸ்த்ரிய:—எல்லாப் பெண்களும் (கோபியர்களும்); ருதத்ய:—கிருஷ்ணர் தங்களிடமிருந்து பிரிக்கப்பட்டதால் அழுது கொண்டிருந்த போதிலும்; தத்ருக:—தங்கள் முன் அவர்கள் கண்டனர்; ஸமேதா:—எல்லோரும் சேர்ந்து.

கூடியிருந்த கோபியர்கள் கிருஷ்ணருக்காக அழுதுகொண்டிருந்த பொழுது அசுரன் ஒரு பெரிய பாறையின் மேல் ஆகாயத்திலிருந்து விழுந்தான். சிவபெருமானின் அம்பால் திரிபுராசுரன் துளைக்கப்பட்டது போல், அவனது அவயவங்கள் தாறு மாறாகச் சிதறின.

பதம் 10.7.30
ப்ராதாய மாத்ரே ப்ரதிஹ்ருத்ய விஸ்மிதா:
க்ருஷ்ணம் ச தஸ்யோரஸி லம்பமானம்
தம் ஸ்வஸ்திமந்தம் புருஷாத-நீதம்
விஹாயஸா ம்ருத்யு-முகாத் ப்ரமுக்தம்
கோப்யஸ் ச கோபா: கில நந்த-முக்யா
லப்தவா புன: ப்ராபுர் அதீவ மோதம்

ப்ராதாய—கையிலெடுத்தபின்; மாத்ரே—அவரது தாயிடம் (யசோதையிடம்); ப்ரதிஹ்ருத்ய—ஒப்படைத்தனர்; விஸ்மிதா:—அனைவரும் ஆச்சரியப்பட்டனர்; க்ருஷ்ணம் ச—மேலும் கிருஷ்ணர்; தஸ்ய—அசுரனின்; உரஸி—மார்பின் மேல்; லம்பமானம்—இருந்த; தம்—கிருஷ்ணரை; ஸவஸ்திமந்தம்—சகல மங்களங்களுடன் கூடிய; புருஷ-அத-நீதம்—இராட்சஸனால் எடுத்துச் செல்லப்பட்ட; விஹாயஸா—ஆகாயத்தில்; ம்ருத்யு-முகாத்—மரணத்தின் வாயிலிருந்து; ப்ரமுக்தம்—இப்பொழுது விடுபட்ட; கோப்ய:—கோபியர்களும்; ச—மற்றும்; கோபா:—இடையர்களும்; கில—உண்மையில்; நந்த-முக்யா:—நந்த மகாராஜனை தலைமையாகக் கொண்ட; லப்த்வா—பெற்றபின்; புன:—மீண்டும் (தங்கள் மகனை); ப்ராபு:—இன்புற்றனர்; அதீவ—மிகவும்; மோதம்—ஆனந்தம்.

மங்களமற்ற நிலைகளிலிருந்து விடுபட்ட கிருஷ்ணரை, அசுரனின் மார்பிலிருந்து கையிலெடுத்த கோபியர்கள், அவரைத் தாய் யசோதையிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணர், அசுரனால் ஆகாயத்தில் எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் பாதிப்படையாமல், இப்பொழுது எல்லா ஆபத்துக்களிலிருந்தும், துரதிர்ஷ்டங்களிலிருந்தும் விடுபட்டதைக் கண்டு, கோபியர்களும், நந்த மகாராஜனை தலைமையாகக் கொண்ட இடையர்களும் பேரானந்தம் அடைந்தனர்.

பதம் 10.7.31
அஹோ பதாதி-அத்புதம் ஏஷா ரக்ஷஸா
பாலோ நிவ்ருத்திம் கமிதோ ‘ப்யகாத் புன:
ஹிம்ஸ்ர: ஸ்வ-பாபேன விஹிம்ஸித: கல:
ஸாது: ஸமத்வேன பயாத் விமுச்யதே

அஹோ-அந்தோ: பத—உண்மையில்; அதி—மிகவும்; அத்புதம்—இச்சம்பவம் மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாகும்; ஏஷ:—இந்த (குழந்தை); ரக்ஷஸா—இராட்சஸனால்; பால:—குற்றமற்ற குழந்தை கிருஷ்ணர்; நிவ்ருத்திம்—கொன்று தின்பதற்காகவே எடுத்துச் செல்லப்பட்டார்; கமித:—சென்றான்; அப்யகாத் புன:—ஆனால் அவர் தீங்கின்றி திரும்பி வந்துவிட்டார்; ஹிம்ஸ்ர:—பொறாமையுள்ளவன்; ஸ்வ-பாபேன—தன் சொந்த பாவச் செயல்களின் காரணத்தால்; விஹிம்ஸித:— இப்பொழுது (அந்த அசுரன்) கொல்லப்பட்டான்; கல:—அவன் பொறாமையும், தீமையும் உள்ளவனாக இருந்ததால்; ஸாது:—குற்றமற்ற பாவ வாழ்விலிருந்து விடுபட்ட ஒருவர்; ஸமத்வேன—அனைவரிடமும் சமமாக இருப்பதால்; பயாத்—எல்லா வகையான பயத்திலிருந்தும்; விமுச்யதே—விடுபடுகிறார்.

குற்றமற்ற இக்குழந்தை அந்த இராட்சஸனால் தின்னப்படுவதற்குத் தூக்கிச் செல்லப்பட்ட போதிலும், கொல்லப்படாமல், காயம்கூட படாமல் திரும்பியது மிகவும் ஆச்சரியம்தான். இந்த அசுரன் பொறாமையுள்ளவனாகவும், கொடூரமானவனாகவும், பாவியாகவும் இருந்ததால் தன் சொந்த பாவச் செயல்களாலேயே இவன் கொல்லப்பட்டான். இது தான் இயற்கையின் சட்டம். குற்றமற்ற பக்தனொருவன் எப்பொழுதும் பரமபுருஷரால் பாதுகாக்கப்படுகிறான். பாவம் செய்பவனோ அவனது பாவ வாழ்வினாலேயே அழிக்கப்படுகிறான்.

பதம் 10.7.32
கிம் நஸ் தபஸ் சீர்ணம் அதோக்ஷஜார்சனம்
பூர்தேஷ்ட-தத்தம் உத பூத-ஸெளஹ்ருதம்
யத் ஸம்பரேத: புனர் ஏவ பாலகோ
திஷ்ட்யா ஸ்வ-பந்தூன் ப்ரணயன் உபஸ்தித:

கிம்—எத்தகைய; ந:—நம்மால்; தப:—தவம்; சீர்ணம்—மிகவும் நீண்ட காலமாக செய்யப்பட்ட; அதோக்ஷஜ—பரமபுருஷரின்; அர்ச்சனம்—வழிபாடு; பூர்த—பொது சாலைகள் முதலியவைகளை அமைத்தல்; இஷ்ட—பொதுநல சேவை; தத்தம்—தானம் செய்தல்; உத—இல்லையெனில்; பூத-ஸௌஹ்ருதம்—பொதுஜனங்களிடம் உள்ள அன்பின் காரணத்தால்; யத்—எதன் பலனால்; ஸம்பரேத:—குழந்தை கிட்டத்தட்ட உயிரையே இழந்திருக்க வேண்டும் என்றாலும்; புன: ஏவ—புண்ணியச் செயல்வசமாக காரணத்தால் மீண்டும்; பாலகா—குழந்தை; திஷ்ட்யா—அதிர்ஷ்டத்தால்; ஸ்வ-பந்தூன்—தன் உறவினர்களையெல்லாம்; ப்ரணயன்—மகிழ்விப்பதற்காக; உபஸ்தித:—இங்கு இருக்கிறது.

நந்த மகாராஜனும் மற்றவர்களும் கூறினர்: முன்பு நாம் நீண்ட கால தவங்களைச் செய்து பரமபுருஷரை வழிபட்டிருக்க வேண்டும். பொதுச் சாலைகளை அமைத்தும், கிணறுகளைத் தோண்டியும், தான தருமங்கள் செய்தும் பொது ஜனங்களுக்குரிய புண்ணியச் செயல்களை நாம் செய்திருக்க வேண்டும், அதன் பலனாகவே இக்குழந்தை மரணத்தின் பிடியிலிருந்து தன் உறவினர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதற்காகத் திரும்பி வந்திருக்கிறான்

பதம் 10.7.33
திருஷ்ட்வாத்புதானி பஹுசோ நந்த-கோபோ ப்ருஹத்வனே
வஸுதேவ-வசோ பூயோ மானயாம் ஆஸ விஸ்மித:

திருஷ்ட்வா—கண்டபின்; அத்புதானி—மிகவும் அற்புதமான, ஆச்சரியப்படத்தக்க சம்பவங்களை; பஹுச:—பன் மடங்கு; நந்த-கோப:—இடையர்களின் தலைவரான நந்த மகாராஜன்; ப்ருஹத்வனே—பிருந்தாவனத்தில்; வஸுதேவ-வச:—நந்த மகாராஜன் மதுராவில் இருந்தபொழுது வசுதேவரால் பேசப்பட்ட வார்த்தைகள்; பூய:—திரும்பத்திரும்ப; மானயாம் ஆஸ—எவ்வளவு உண்மை என்பதை ஏற்றுக் கொண்டார்; விஸ்மித:—பெரும் ஆச்சரியத்துடன்.

பிருந்தாவனத்தில் நிகழ்ந்த இச்சம்பவங்களை எல்லாம் கண்டு பலமடங்கு ஆச்சரியத்திற்குள்ளான நந்த மகாராஜன், மதுராவில் வசுதேவர் தம்மிடம் பேசிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்.

பதம் 10.7.34
ஏகதார்பகம் ஆதாய ஸ்வாங்கம் ஆரோப்ய பாமினீ
ப்ரஸ்னுதம் பாயயாம் ஆஸ ஸ்தனம் ஸ்னேஹ-பரிப்லுதா

ஏகதா—ஒருசமயம்; அர்பகம்—குழந்தையை; ஆதாய—எடுத்து; ஸ்வ-அங்கம்—அவளது சொந்த மடியில்; ஆரோப்ய—வைத்துக் கொண்டு; பாமினீ—தாய் யசோதை; ப்ரஸ்னுதம்—முலைப்பால் கசிய; பாயயாம் ஆஸ—குழந்தைக்கு ஊட்டினாள்; ஸ்தனம்—அவளது முலைப்பாலை; ஸ்னேஹ-பரிப்லுதா—மிகவும் அன்புடனும் பாசத்துடனும்.

ஒரு நாள் தாய் யசோதை கிருஷ்ணரை எடுத்துத் தம் மடியில் வைத்துக்கொண்டு, தாய்ப் பாசத்துடன் அவருக்குத் தன் முலைப்பாலை ஊட்டிக்கொண்டிருந்தாள். அவளது முலையிலிருந்து பால் கசிந்தோடியது. குழந்தையும் அதைப் பருகிக் கொண்டிருந்தது.

பதங்கள் 10.7.35 – 10.7.36
பீத-ப்ராயஸ்ய ஜனனீ ஸுதஸ்ய ருசிர-ஸ்மிதம்
முகம் லாலயதீ ராஜஞ் ஜ்ரும்பதோ தத்ருசே இதம்

கம் ரோதஸீ ஜ்யோதிர்-அனீகம் ஆசா:
ஸூர்யேந்து-வஹ்னி-ஸ்வஸனாம்புதீம்ஸ் ச
த்வீபான் நகாம்ஸ் தத்-துஹித்ருர் வனானி
பூதானி யானி ஸ்திர-ஜங்கமானி

பீத-ப்ராயஸ்ய—முலைப்பால் ஊட்டப்பட்டு திருப்தியடைந்த குழந்தை கிருஷ்ணரின்; ஜனனீ—தாய் யசோதை; ஸுதஸ்ய—தன் மகனின்; ருசிர-ஸ்மிதம்—குழந்தை முழுதிருப்தியடைந்து, சிரிப்பதைக் கண்டு; முகம்—முகத்தை; லாலயதீ—தட்டிக்கொடுத்து, தன் கையால் இலேசாகத் தடவினாள்; ராஜன்—அரசே; ஜ்ரும்பத—குழந்தை அகலமாக வாயைத் திறந்து கொட்டாவி விடும்பொழுது; தத்ருசே—அவள் கண்டாள்; இதம்—பின்வருபவைகளை; கம்—ஆகாயம்; ரோதஸீ—உயர் கிரக அமைப்பு மற்றும் பூமி; ஜ்யோதி:-அனீகம்—நட்சத்திரங்கள்; ஆசா:—திசைகள்; ஸூர்ய—சூரியன்; இந்து—சந்திரன்; வஹ்னி—தீ; ஸ்வஸன—காற்று; அம்புதீன்—கடல்கள்; ச—மற்றும்; த்வீபான்—தீவுகள்; நகான்—மலைகள்; தத்-துஹித்ரூ:—மலைகளின் புதல்விகள் (நதிகள்); வனானி—வனங்கள்; பூதானி—எல்லா வகையான ஜீவராசிகள்; யானி—எவை; ஸ்திர-ஜங்கமானி—அசைவன, அசையாதன.

பரீட்சித்து மகாராஜனே! குழந்தை கிருஷ்ணர் தாய்ப்பாலைக் குடித்து முடிக்கும் தறுவாயில், தாய் யசோதை அவரது அழகிய, பிரகாசமான, புன்னகை பூத்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது குழந்தை கொட்டாவி விட்டது குழந்தையின் வாய்க்குள் முழு ஆகாயம், உயர் கிரக அமைப்பு மற்றும் பூமியும், எல்லாத் திசைகளிலும் நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், தீ, காற்று, கடல்கள், தீவுகள், மலைகள், நதிகள், வனங்கள் மற்றும் எல்லா வகையான அசையும், அசையாத ஜீவராசிகள் ஆகியவையும் இருப்பதை அவள் கண்டாள்.

பதம் 10.7.37
ஸா வீக்ஷ்ய விஸ்வம் ஸஹஸா ராஜன் ஸஞ்ஜாத-வேபது:
ஸம்மீல்ய ம்ருகசாவாக்ஷீ-நேத்ரே ஆஸீத் ஸுவிஸ்மிதா

ஸா—தாய் யசோதை; வீக்ஷ்ய—கண்டதால்; விஸ்வம்—முழு பிரபஞ்சத்தையும்; ஸஹஸா—திடீரென்று தன் மகனின் வாய்க்குள்; ராஜன்—அரசே (பரீட்சித்து மகாராஜனே); ஸஞ்ஜாத-வேபது:—அவளது இதயம் துடித்தது; ஸம்மீல்ய—திறந்து; ம்ருகசாவ-அக்ஷு—ஒரு மான் குட்டியின் கண்களைப்போல்; நேத்ரே—அவளது இரு கண்களையும்; ஆஸீத்—ஆனாள்; ஸு-விஸ்மிதா—ஆச்சரியமடைந்தவள்.

தன் குழந்தையின் வாய்க்குள் முழு பிரபஞ்சமும் இருப்பதைக் கண்ட தாய் யசோதையின் இதயம் படபடவென அடித்துக் கொள்ளத் துவங்கியது. ஆச்சரியத்தால் அமைதியிழந்த தன் கண்களை அவள் மூடிக்கொள்ள விரும்பினாள்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “திருணாவர்தாசுரன் வதம்” எனும் தலைப்பை கொண்ட ஏழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare