அத்தியாயம் – 7
திருணாவர்தாசுரன் வதம்
பதங்கள் 10.7.1 – 10.7.2 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: பிரபுவே, சுகதேவ கோஸ்வாமியே, பரமபுருஷரது அவதாரங்களால் நிகழ்த்தப்படும் பல்வேறு செயல்கள் செவிக்கும். மனதிற்கும் இன்பமளிப்பவை என்பதில் சந்தேகமில்லை. இச்செயல்களைக் கேட்பதாலேயே ஒருவரது மனதிலுள்ள அழுக்குகள் உடனே மறைந்துவிடும். பொதுவாக பகவானின் செயல்களைப் பற்றி கேட்க நாம் தயங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரின் பிள்ளைப்பிராயத்து செயல்கள் மிகமிக கவர்ச்சியுடையவை என்பதால், தானாகவே அவை செவிக்கும், மனதிற்கும் இன்பமளிக்கின்றன. இவ்வாறாக, பௌதிக வாழ்விற்கு மூல காரணமாக உள்ள பெளதிக விஷயங்களைப் பற்றி கேட்பதிலுள்ள ஒருவனது பற்று அற்றுப்போகிறது. இதனால் அவன் படிப்படியாக பரமபுருஷரிடம் பக்தித் தொண்டையும் பற்றையும் வளர்த்துக் கொள்வதுடன், நமக்குக் கிருஷ்ண உணர்வெனும் தானத்தை அளிக்கும் பக்தர்களிடம் நட்பையும் வளர்த்துக் கொள்கிறான். நீங்கள் பொருத்தமென்று எண்ணினால், பகவானின் அச்செயல்களைப் பற்றிக் கூற வேண்டுகிறேன்.

பதம் 10.7.3 : ஒரு மனிதக் குழந்தையைப்போல் பாவனை செய்து இந்த மண்ணுலகில் தோன்றியவரும், பூதான வதம் போன்ற அற்புதச் செயல்களைச் செய்தவரும் பரமபுருஷருமான ஸ்ரீ கிருஷ்ணரின் மற்ற லீலைகளையும் விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 10.7.4 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தாய் யசோதையின் குழந்தை தன் உடலைச் சாய்த்துக் குப்புறத் திரும்ப முயன்றது. இம்முயற்சியானது ஒரு வேதச் சடங்குடன் அனுஷ்டிக்கப்பட்டது. குழந்தை முதல் முறையாக வீட்டை விட்டு வெளியில் செல்லத் தகுந்த பருவத்தை அடையும் பொழுது, உத்தான எனும் சடங்கு நடத்தப்படுகிறது. இச்சடங்கின் போது குழந்தைக்கு முறையாக ஸ்நானம் செய்விக்கப்படுகிறது. கிருஷ்ணருக்கு மூன்று மாதங்கள் நிரம்பியதும், தாய் யசோதை, சுற்றுப் புறங்களிலுள்ள மற்ற பெண்களுடன் இச்சடங்கைக் கொண்டாடினாள். அன்று சந்திரன் ரோகிணி எனும் நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்திருந்தது. இச்சடங்கில் பிராமணர்கள் வேத மந்திரங்கள் ஓத, பிரபல இசைவாணர்களும் பங்கேற்க, தாய் யசோதை இச்சடங்கை மிகவும் சிறப்பாக அனுஷ்டித்தாள்.

பதம் 10.7.5 : குழந்தையின் அபிஷேகச் சடங்கை முடித்தபின், தாய் யசோதை பிராமணர்களைத் தகுந்த மரியாதையுடன் வழிபட்டும், ஏராளமான உணவுத் தானியங்கள், மற்ற உணவு வகைகள், ஆடைகள், விரும்பத்தக்க பசுக்கள் மற்றும் மாலைகள் ஆகியவற்றை அளித்தும் அவர்களை வரவேற்றாள். மங்களச் சடங்குகளைக் கொண்டாடும் வகையில் பிராமணர்கள் வேத மந்திரங்களை ஓதி முடித்தனர். பிறகு குழந்தை உறக்கத்தால் சொக்குவதைக் கண்ட தாய் யசோதை, குழந்தை அமைதியாக உறங்கும் வரை அதனுடன் படுக்கையில் படுத்திருந்தாள்.

பதம் 10.7.6 : உத்தான சடங்கைக் கொண்டாடுவதில் ஆழ்ந்துவிட்ட தாராள மனமுடைய தாய் யசோதை, விருந்தினர்களை வரவேற்று, மரியாதையுடன் அவர்களை பூஜித்துப் போற்றுவதிலும், அவர்களுக்கு ஆடைகள், பசுக்கள், மாலைகள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை அளிப்பதிலும் சுறுசுறுப்பாக இருந்தாள். இதனால் தன் வரவுக்காக குழந்தை அழுவதை அவள் கேட்கவில்லை. அப்பொழுது தம் தாயின் முலைப்பாலைக் குடிக்க விரும்பிய குழந்தை கிருஷ்ணர், கோபத்துடன் தம் கால்களை மேலே உதைத்தார்

பதம் 10.7.7 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், முற்றத்தின் ஒரு மூலையிலிருந்து ஒரு தள்ளு வண்டிக்கடியில் படுத்திருந்தார். அவரது சிறிய கால்கள் இலைகளைப் போல் மென்மையாக இருந்த போதிலும், தமது கால்களால் வண்டியை அவர் உதைத்தபொழுது, அது பயங்கரமாகச் சுழன்று கீழே விழுந்தது. சக்கரங்கள் சுழலச்சிலிருந்து கழன்று விழுந்தன. சக்கரங்களின் குடங்களும், அரைக்கால் பழுக்களும் இருபுறமும் விழுந்தன. வண்டியின் கம்பம் உடைந்தது. வண்டியின் மேலிருந்த பல்வேறு உலோகங்களாலான பல சிறிய பாத்திரங்கள் இங்குமங்குமாகச் சிதறி விழுந்தன.

பதம் 10.7.8 : தாய் யசோதையும், உத்தான விழாவிற்காகக் கூடியிருந்த மற்ற பெண்களும், நந்த மகாராஜன் தலைமையிலான ஆட்களும், இந்த அற்புதக் காட்சியைக் கண்டு, தள்ளு வண்டி எப்படித் தானாகவே கவிழ்ந்தது என்று ஆச்சரியப்படத் துவங்கினர். இதன் காரணத்தை அறிய அவர்கள் இங்குமங்கும் பார்த்தனர். ஆனால் காரணத்தை அவர்களால் அறிய இயலவில்லை.

பதம் 10.7.9 : கூடியிருந்த இடையர்குல ஆண்களும், பெண்களும் இது எப்படி நிகழ்ந்தது என்று சிந்திக்கத் துவங்கினர். “இது யாரேனும் ஓர் அசுரனின் வேலையாகவோ அல்லது கிரக பீடையாகவோ இருக்கக் கூடுமோ?” என்று அவர்கள் கேட்டனர். அப்பொழுது, அங்கிருந்த சிறு குழந்தைகள், குழந்தை கிருஷ்ணரால் வண்டி உதைத்து நொறுக்கப்பட்டது என்று உறுதிப்படுத்தினர். அழுது கொண்டிருந்த குழந்தை வண்டியின் சக்கரத்தை உதைத்த உடனேயே, அது உடைந்து விழுந்தது. அதில் சந்தேகமில்லை.

பதம் 10.7.10 : கிருஷ்ணர் எப்பொழுதும் எல்லையற்றவர் என்பதை அறியாத, கூடியிருந்த கோப, கோபியர்களால், கிருஷ்ணரிடம் இத்தகைய நினைத்தற்கரிய சக்தி இருந்ததை நம்ப முடியவில்லை. குழந்தைகளின் கூற்றை அவர்களால் நம்ப முடியவில்லை என்பதால், அவற்றை வெறும் குழந்தைத்தனமான பேச்சென்றெண்ணி, அலட்சியப்படுத்தினர்.

பதம் 10.7.11 : கிருஷ்ணரைத் தாக்கியது கிரக பீடையாக இருக்குமோ என்றெண்ணிய தாய் யசோதை, அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கையிலெடுத்து, தன் முலைப்பாலைக் குடிக்கச் செய்தாள். பிறகு, வேத மந்திரங்களை ஓதி மங்களச் சடங்கைச் செய்வதற்கு, அனுபவமுள்ள பிராமணர்களை வரவழைத்தாள்.

பதம் 10.7.12 : பலமும், பருமனும் உள்ள இடையர்கள் பாத்திரங்களையும். பொருட்களையும் கைவண்டியின் மேல் முன்புபோல் அடுக்கி வைத்தபின், பிராமணர்கள் கிரக பீடையைச் சாந்தப்படுத்துவதற்காக வேள்வியுடன் கூடிய ஒரு வேதச் சடங்கைச் செய்தனர். அதன்பிறகு, அட்சதை, நாணல் புல், நீர் மற்றும் தயிர் ஆகியவற்றினால் அவர்கள் பரமபுருஷரை வழிபட்டனர்.

பதங்கள் 10.7.13 – 10.7.15 : பொறாமை, பொய், தேவையற்ற தற்பெருமை, மனஸ்தாபம், பிறருடைய செல்வத்தைக் கண்டு அமைதிக்குலைவு, மற்றும் பொய்க் கௌரவம் ஆகியவை இல்லாத பிராமணர்களின் ஆசீர்வாதங்கள் பயனற்றுப் போவதில்லை. இதைக் கருத்திற்கொண்ட நந்த மகாராஜன் அமைதியாக கிருஷ்ணரை மடியில் வைத்துக்கொண்டு, சத்தியசீலர்களான இத்தகைய பிராமணர்களை அழைத்து, சாம, ரிக், மற்றும் யஜுர் வேதங்களின் புனித மந்திரங்களுக்கேற்ப, ஒரு வேதச் சடங்கைச் செய்வித்தார். மந்திரங்கள் ஓதப்பட்டபொழுது, தூய மூலிகைகள் கலந்த நீரால் குழந்தையை நீராட்டிய அவர், ஒரு யாகத்தைச் செய்தபிறகு முதல்தரமான தானியங்களையும், மற்ற உணவுவகைகளையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அறுசுவை உணவுகளைக் கொண்டு பிராமணர்களுக்கு அவர் உணவளித்தார்.

பதம் 10.7.16 : தம் புத்திரராகிய கிருஷ்ணரின் வளத்திற்காக, நந்த மகாராஜன் ஆடைகள், மலர் மாலைகள் மற்றும் தங்க ஆரங்கள் ஆகியவற்றால் முழுமையாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களை பிராமணர்களுக்குக் கொடுத்தார். ஏராளமான பாலைக் கொடுக்கும் தகுதியைப் பெற்றிருந்த இப்பசுக்கள் பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டன. பிராமணர்களும் அவற்றை ஏற்றுக்கொண்டு, குடும்ப அங்கத்தினர்களை குறிப்பாக கிருஷ்ணரை ஆசீர்வதித்தனர்.

பதம் 10.7.17 : வேத மந்திரங்களை ஓதுவதில் நிபுணர்களான பிராமணர்கள் அனைவரும் யோக சக்திகளை வசப்படுத்திய யோகிகளாவர். அவர்களது எந்த ஆசீர்வாதமும் நிச்சயமாகப் பலனளிக்காமல் போவதில்லை.

பதம் 10.7.18 : கிருஷ்ணர் தோன்றி ஓராண்டு கடந்தபின், ஒருநாள் தாய் யசோதை தம் மகனை மடிமீது வைத்து மெதுவாக தட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் திடீரென்று குழந்தை ஒரு மலைச் சிகரத்தை விட பாரமாகிவிட்டது போல் உணர்ந்தாள். அவரது பளுவை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பதம் 10.7.19 : முழு பிரபஞ்சத்தின் பாரமும் குழந்தைக்கு வந்து விட்டது போல் உணர்ந்த தாய் யசோதை, வேறொரு பேய் அல்லது அசுரன் குழந்தையைத் தாக்குவதாக எண்ணிக் கவலைப்பட்டாள். இவ்வாறு திகைப்படைந்த அவள் குழந்தையைத் தரையில் வைத்துவிட்டு, நாராயணரை சிந்திக்கத் துவங்கினாள். தொல்லைகள் வரப்போவதைக் கண்ட அவள், இந்த பாரத்தைப் போக்க பிராமணர்களை அழைத்தாள். பிறகு மற்ற குடும்ப விவகாரங்களில் தன்னை அவள் ஈடுபடுத்திக் கொண்டாள். கிருஷ்ணரே அனைத்திற்கும் மூல பிறப்பிடம் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியாததால், நாராயணரின் தாமரைப் பாதங்களை நினைப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை.

பதம் 10.7.20 : குழந்தை தரையில் அமர்ந்திருக்கும் பொழுது கம்சனின் சேவகனான திருணாவர்தன் என்ற அசுரன், கம்சனின் தூண்டுதலால், சுழற்காற்றாக அங்கு வந்து, குழந்தையை மிகச் சுலபமாக ஆகாயத்தில் தூக்கிச் சென்றான்.

பதம் 10.7.21 : பெரும் சுழற்காற்றாக வந்த அந்த அசுரன், கோகுலத்தின் நிலப்பகுதி முழுவதையும், அனைவரது பார்வையையும் மறைத்து, திக்குத்திசைகளையெல்லாம் கொடிய ஓசையால் நிரப்பத் துவங்கினான்.

பதம் 10.7.22 : நொடி நேரத்திற்கு, புல்வெளி முழுவதும் சூறாவளிப் புழுதியின் காரணத்தால், அடர்ந்த இருளால் மூடப்பட்டது. தாய் யசோதையால் முன்பு தன் மகனை வைத்த இடத்தில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பதம் 10.7.23 : திருணாவர்தனால் வாரியடிக்கப்பட்ட மணலின் காரணத்தால், மக்களால் தங்களையோ, பிறரையோ காண முடியாமல் திகைப்பிற்கும் தொல்லைக்கும் உள்ளாயினர்.

பதம் 10.7.24 : வேகமான சுழற்காற்றினால் வாரியடிக்கப்பட்ட மணற்புயலின் காரணத்தால், தாய் யசோதையால் தன் மகன் இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏன் என்பதும் அவளுக்குப் புரியவில்லை. இவ்வாறு அவள் கன்றிழந்த பசுபோல் தரையில் விழுந்து மிகவும் பரிதாபமாக அழத் துவங்கினாள்.

பதம் 10.7.25 : மணற்புயலின் வேகமும், காற்றும் ஓய்ந்தபிறகு, யசோதையின் பரிதாபகரமான அழுகுரலைக் கேட்டு அவளது தோழிகளான மற்ற கோபியர்கள் அவளை அணுகினர். அங்கு கிருஷ்ணரைக் காணாததால், அவர்களும் பெருந் துன்பத்திற்குள்ளாகி, கண்களில் கண்ணீர் ததும்ப தாய் யசோதையுடன் சேர்ந்து அழுதனர்.

பதம் 10.7.26 : சக்திவாய்ந்த ஒரு சுழற்காற்றின் வடிவை ஏற்ற திருணாவர்தாசுரன் கிருஷ்ணரை ஆகாயத்தில் மிகவும் உயரமாகத் தூக்கிச் சென்றான். ஆனால் கிருஷ்ணர் அந்த அசுரனைவிட அதிகக் கனமாக மாறியதும், அவன் தன் வேகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று அவனால் தொடர்ந்து மேலே செல்ல முடியவில்லை.

பதம் 10.7.27 : கிருஷ்ணருடைய கனத்தின் காரணத்தால், திருணாவர்தன் அவரை ஒரு பெரிய மலையைப்போல் அல்லது இரும்புக் கட்டியைப்போல் கருதினான். ஆனால் கிருஷ்ணர் அந்த அசுரனின் கழுத்தைப் பற்றிக் கொண்டதால், அசுரனால் அவரை எறிந்துவிடவும் முடியவில்லை. சுமையைக் கைவிடவும் முடியவில்லை என்பதால், குழந்தையை அவன் அற்புதமானவர் என்றெண்ணினான்.

பதம் 10.7.28 : கிருஷ்ணர் அவனது கழுத்தைப் பற்றிக்கொண்டிருந்ததால், மூச்சுத்திணறிய திருணாவர்தனால் சிறு ஓசையைக்கூட எழுப்ப முடியவில்லை. கை, கால்களைக்கூட அவனால் அசைக்க முடியவில்லை விழிகள் பிதுங்கி, தன் உயிரை இழந்த அசுரன் சிறு குழந்தையுடன் விரஜபூமியில் விழுந்தான்.

பதம் 10.7.29 : கூடியிருந்த கோபியர்கள் கிருஷ்ணருக்காக அழுதுகொண்டிருந்த பொழுது அசுரன் ஒரு பெரிய பாறையின் மேல் ஆகாயத்திலிருந்து விழுந்தான். சிவபெருமானின் அம்பால் திரிபுராசுரன் துளைக்கப்பட்டது போல், அவனது அவயவங்கள் தாறு மாறாகச் சிதறின.

பதம் 10.7.30 : மங்களமற்ற நிலைகளிலிருந்து விடுபட்ட கிருஷ்ணரை, அசுரனின் மார்பிலிருந்து கையிலெடுத்த கோபியர்கள், அவரைத் தாய் யசோதையிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணர், அசுரனால் ஆகாயத்தில் எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் பாதிப்படையாமல், இப்பொழுது எல்லா ஆபத்துக்களிலிருந்தும், துரதிர்ஷ்டங்களிலிருந்தும் விடுபட்டதைக் கண்டு, கோபியர்களும், நந்த மகாராஜனை தலைமையாகக் கொண்ட இடையர்களும் பேரானந்தம் அடைந்தனர்.

பதம் 10.7.31 : குற்றமற்ற இக்குழந்தை அந்த இராட்சஸனால் தின்னப்படுவதற்குத் தூக்கிச் செல்லப்பட்ட போதிலும், கொல்லப்படாமல், காயம்கூட படாமல் திரும்பியது மிகவும் ஆச்சரியம்தான். இந்த அசுரன் பொறாமையுள்ளவனாகவும், கொடூரமானவனாகவும், பாவியாகவும் இருந்ததால் தன் சொந்த பாவச் செயல்களாலேயே இவன் கொல்லப்பட்டான். இது தான் இயற்கையின் சட்டம். குற்றமற்ற பக்தனொருவன் எப்பொழுதும் பரமபுருஷரால் பாதுகாக்கப்படுகிறான். பாவம் செய்பவனோ அவனது பாவ வாழ்வினாலேயே அழிக்கப்படுகிறான்.

பதம் 10.7.32 : நந்த மகாராஜனும் மற்றவர்களும் கூறினர்: முன்பு நாம் நீண்ட கால தவங்களைச் செய்து பரமபுருஷரை வழிபட்டிருக்க வேண்டும். பொதுச் சாலைகளை அமைத்தும், கிணறுகளைத் தோண்டியும், தான தருமங்கள் செய்தும் பொது ஜனங்களுக்குரிய புண்ணியச் செயல்களை நாம் செய்திருக்க வேண்டும், அதன் பலனாகவே இக்குழந்தை மரணத்தின் பிடியிலிருந்து தன் உறவினர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதற்காகத் திரும்பி வந்திருக்கிறான்

பதம் 10.7.33 : பிருந்தாவனத்தில் நிகழ்ந்த இச்சம்பவங்களை எல்லாம் கண்டு பலமடங்கு ஆச்சரியத்திற்குள்ளான நந்த மகாராஜன், மதுராவில் வசுதேவர் தம்மிடம் பேசிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்.

பதம் 10.7.34 : ஒரு நாள் தாய் யசோதை கிருஷ்ணரை எடுத்துத் தம் மடியில் வைத்துக்கொண்டு, தாய்ப் பாசத்துடன் அவருக்குத் தன் முலைப்பாலை ஊட்டிக்கொண்டிருந்தாள். அவளது முலையிலிருந்து பால் கசிந்தோடியது. குழந்தையும் அதைப் பருகிக் கொண்டிருந்தது.

பதங்கள் 10.7.35 – 10.7.36 : பரீட்சித்து மகாராஜனே! குழந்தை கிருஷ்ணர் தாய்ப்பாலைக் குடித்து முடிக்கும் தறுவாயில், தாய் யசோதை அவரது அழகிய, பிரகாசமான, புன்னகை பூத்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது குழந்தை கொட்டாவி விட்டது குழந்தையின் வாய்க்குள் முழு ஆகாயம், உயர் கிரக அமைப்பு மற்றும் பூமியும், எல்லாத் திசைகளிலும் நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், தீ, காற்று, கடல்கள், தீவுகள், மலைகள், நதிகள், வனங்கள் மற்றும் எல்லா வகையான அசையும், அசையாத ஜீவராசிகள் ஆகியவையும் இருப்பதை அவள் கண்டாள்.

பதம் 10.7.37 : தன் குழந்தையின் வாய்க்குள் முழு பிரபஞ்சமும் இருப்பதைக் கண்ட தாய் யசோதையின் இதயம் படபடவென அடித்துக் கொள்ளத் துவங்கியது. ஆச்சரியத்தால் அமைதியிழந்த தன் கண்களை அவள் மூடிக்கொள்ள விரும்பினாள்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare