அத்தியாயம் – 6
பூதனை அரக்கி வதம்

பதம் 10.6.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்தார்: அரசே, நந்த மகாராஜன் வீடு திரும்பும்பொழுது வசுதேவர் கூறியது பொய்யாக இருக்க முடியாது என்று கருதினார். கோகுலத்தில் ஏதேனும் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்றெண்ணியதும் அழகுப் புதல்வரான கிருஷ்ணருக்கு ஆபத்து ஏற்படுமோ என்றஞ்சிய நந்த மகாராஜன் பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் சரணடைந்தார்.

பதம் 10.6.2 : நந்தமகாராஜன் கோகுலத்திற்குத் திரும்பும்பொழுது, குழந்தைகளைக் கொல்லும்படி கம்சனால் முன்பு ஏவப்பட்ட அதே கொடிய அரக்கியான பூதனை, பாவமான தன் கடமையைச் செய்யும்படி நகரங்களிலும் கிராமங்களிலும் இடைச் சேரிகளிலும் சஞ்சரித்து வந்தாள்.

பதம் 10.6.3 : அரசே, எங்கெல்லாம் மக்கள் பாடுவதாலும், கேட்பதாலும் (ஸ்வரணம், கீர்த்தனம் விஷ்ணோ:) தங்களது வர்ணாஸ்ரமக் கடமையான பக்தித்தொண்டைச் செய்கிறார்களோ, அங்கெல்லாம் தீய சக்திகளின் ஆபத்து இருக்க முடியாது. எனவே கோகுலத்தில் பரமபுருஷரே நேரடியாக எழுந்தருளியிருப்பதால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

பதம் 10.6.4 : ஒருசமயம், தன் விருப்பம்போல் சஞ்சரிக்கக்கூடிய பூதனை என்ற அரக்கி ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். இவ்வாறு தன் மாயாஜாலத்தினால் ஓர் அழகிய மங்கையாக தன்னை மாற்றிக் கொண்ட அவள், நந்த மகாராஜனின் வசிப்பிடமான கோகுலத்திற்குள் புகுந்தாள்.

பதங்கள் 10.6.5 – 10.6.6 : அவளது இடுப்பு முழுமையாக இருந்தது. பெரிதாகவும், உறுதியாகவும் இருந்த அவளது மார்பகங்கள், அவளது மெல்லிய இடைக்கு அதிகச் சுமைபோல் காணப்பட்டன. அவள் மிகவும் அழகாக உடையணிந்திருந்தாள். மல்லிகை மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த கூந்தல் அவளது அழகு முகத்தைச் சுற்றிச் சிதறிக்கிடந்தது. அவளது காதணிகள் பிரகாசித்தன. அவள் மிகவும் கவர்ச்சியாக புன்னகை செய்து அனைவர்மீதும் தன் பார்வையைச் செலுத்தினாள். அவளது அழகு விரஜவாசிகள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக ஆண்களின் கவனத்தை அது ஈர்த்தது. அவளைக் கண்ட கோபியர்கள், தன் கணவரான கிருஷ்ணரைக் காண கையில் தாமரை மலரை ஏந்தியபடி அழகிய லக்ஷ்மி தேவியே வந்துவிட்டாளோ என்று எண்ணினர்.

பதம் 10.6.7 : சிறு குழந்தைகளைக் கொல்வதையே தொழிலாகக் கொண்டிருந்த பூதனை அவர்களைத் தேடியலையும் வேளையில், பகவானின் உயர்ந்த சக்தியின் தூண்டுதலால், தடையின்றி நந்த மகாராஜனின் வீட்டினுள் புகுந்தாள். யாருடைய அனுமதியும் இல்லாமல் நந்த மகாராஜனின் அறைக்குள் புகுந்த அவள், சாம்பலுக்குள் மறைந்துள்ள நெருப்புபோல், தமது எல்லையற்ற சக்தியை மறைத்துக் கொண்டிருந்த குழந்தை படுக்கையில் உறங்குவதைக் கண்டாள். இது சாதாரணக் குழந்தையல்ல, எல்லா அசுரர்களையும் கொல்வதற்காகவே வந்துள்ளது என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

பதம் 10.6.8 : இளம் குழந்தைகளைக் கொல்வதில் மிகவும் திறமைபெற்ற சூனியக்காரியான பூதனை, தம்மைக் கொல்வதற்காகவே வந்திருக்கிறாள் என்பதைப் படுக்கையில் படுத்திருந்த, சர்வ வியாபகமுடைய பரமாத்வாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புரிந்து கொண்டார். எனவே அவளுக்கு அஞ்சியவர் போல் கிருஷ்ணர் தமது கண்களை மூடிக்கொண்டார். இவ்வாறாக உறங்கும் பாம்பை ஒரு கயிறென்றெண்ணி, அதைத் தன் மடியில் வைத்துக்கொள்ளும் ஒருவனைப் போலவே. பூதனை தன் சொந்த அழிவுக்குக் காரணமாக இருக்கப் போகும். பகவானைத் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

பதம் 10.6.9 : பூதனை அரக்கியின் இதயம் கொடூரமாகவும், இரக்கமற்றதாகவும் இருந்தது என்றாலும், பாசமுள்ள ஒரு தாய்போல் அவள் காணப்பட்டாள். இவ்வாறு மென்மையான உறையிலிருந்த ஒரு கூரிய வாளை அவள் ஒத்திருந்தாள். அவளை அறைக்குள் கண்ட யசோதையும் ரோகிணியும், அவளது அழகில் மயங்கிவிட்டனர். அவள் ஒரு தாயைப் போல் குழந்தையை கவனித்ததால், அவளைத் தடுக்காமல் இருவரும் மௌனமாக இருந்தனர்.

பதம் 10.6.10 : மிகக் கொடூரமான அந்த இராட்சஸி அந்த இடத்திலேயே கிருஷ்ணரை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவளது முலையை அவரது வாய்க்குள் தினித்தாள். அவளது முலைக்காம்பில், உடனே செயற்படக்கூடிய ஆபத்தான விஷம் தடவப்பட்டிருந்தது. ஆனால் கடும்கோபங் கொண்ட பரமபுருஷராகிய கிருஷ்ணர், அவளது முலையை இரு கைகளாலும் பற்றி மிகவும் கடுமையாகப் பிழிந்து, விஷத்துடன் அவளது உயிரையும் உறிஞ்சிக் குடித்து விட்டார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் பொருட்டு பூதனையிடம் கோபம் கொள்ளவில்லை. பிருந்தாவனத்திலுள்ள பல இளம் குழந்தைகளைக் கொன்றதற்காகவே அவளிடம் அவர் கோபம் கொண்டார். எனவே அவளது உயிரைப் பறித்து அவளுக்குத் தண்டைன அளிக்க முடிவு செய்தார்.

பதம் 10.6.11 : ஒவ்வொரு முக்கிய உயிர்நிலையும் பொறுக்க முடியாதபடி நசுக்கப்பட்டதால், இராட்சஸியான பூதனை, “தயவு செய்து என்னை விட்டு விடு, என்னை விட்டு விடு! இனியும் என் முலைப்பாலைக் குடிக்க வேண்டாம்” என்று கதறத் தொடங்கினாள். அவளது உடல் வியர்த்துக் கொட்ட, கண்கள் அகல விரிந்தபடி, கை கால்களை உதறிக் கொண்டு. மீண்டும் மீண்டும் உரக்கக் கதறினாள்.

பதம் 10.6.12 : பூதனை பெரும் சக்தியுடன் உரக்கக் கதறிய பொழுது, மலைகளுடன் கூடிய பூமியும், கிரகங்களுடன் கூடிய விண்வெளியும் அதிர்ந்தன. அத்துடன் கீழுலகங்களும், அனைத்துக் திசைகளும்கூட அதிர்ந்தன. தங்கள் மீது இடி விழுகிறதோ என்றஞ்சி மக்கள் கீழே விழுந்தனர்.

பதம் 10.6.13 : இவ்வாறு கிருஷ்ணரால் தன் மார்பகம் தாக்கப்பட்டுக் கடும் வேதனைக்குள்ளான பூதனை அரக்கி தன் உயிரை இழந்தாள். பரீட்சித்து மகாராஜனே, இந்திரனின் வஜ்ராயுதத்தால் கொல்லப்பட்டு கீழேவிழுந்த விருத்ராசுரனைப்போல், அவள் தனது சுயமான இராட்சஸ ரூபத்துடன் வாயை அகலத் திறந்தபடி, கை கால்களை பரப்பிக் கொண்டு தலைவிரி கோலமாக புல்வெளியில் விழுந்தாள்.

பதம் 10.6.14 : பரீட்சித்து மகாராஜனே. பூதனையின் பிரம்மாண்டமான உடல் தரையில் விழுந்தபொழுது, அது பன்னிரண்டு மைல்களுக்குட்பட்ட எல்லா மரங்களையும் நொறுங்கித் தள்ளியது. பிரம்மாண்டமான உடலில் தோன்றிய அவள் அசாதாரணமானவள் என்பதில் சந்தேகமில்லை.

பதங்கள் 10.6.15 – 10.6.17 : இராட்சஸியின் வாய் பற்களால் நிறைந்திருந்தது. அப்பற்கள் ஒவ்வொன்றும் ஒரு கலப்பையின் முன்புறத்தை ஒத்திருந்தது. அவளது நாசித் துவாரங்கள் ஆமுமான மலைக் குகைகள் போலிருந்தன. அவளது மார்பகங்கள் மலையிலிருந்து சரிந்து விழுந்த பாறைகளை ஒத்திருந்தன. சிதறிக்கிடந்த அவளது கேசம் செம்பு நிறமாக இருந்தது. அவளது நேத்திறக் குழிகள் பாழடைந்த கிணறுகளைப் போலிருந்தன. அவளது கைகளும், கால்களும், பாதங்களும் பெரும் பாலங்களைப் போல் காணப்பட்டன. அவளது வயிற்றுப்பகுதி உலர்ந்த ஏரிபோல் காணப்பட்டது. இடையர்குல ஆண் பெண்களின் இதயங்களும், காதுகளும், தலைகளும் இராட்சஸியின் அலறலால் முன்பே அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தன. மேலும் அற்புதமான அவளது கோர ரூபத்தை கண்டதும் அவர்கள் இன்னும் அதிக அச்சத்திற்குள்ளாயினர்.

பதம் 10.6.18 : குழந்தை கிருஷ்ணர் இராட்சஸியான பூதனையின் மார்பின்மேல் அச்சமின்றி விளையாடிக் கொண்டிருந்தார். குழந்தையின் அற்புதச் செயல்களைக் கண்ட கோபியர்கள், பெருமகிழ்ச்சியுடன் முன்வந்து அவரை உடனே கையிலெடுத்தனர்.

பதம் 10.6.19 : அதன் பிறகு, குழந்தையான ஸ்ரீ கிருஷ்ணருக்கு முழு பாதுகாப்பை அளிக்க, தாய் யசோதையும், ரோகிணியும் மற்ற வயதான கோபியர்களுடன் ஒரு பசுவின் வாலைச் சுழற்றி சைகை செய்தனர்.

பதம் 10.6.20 : குழந்தை கோ ஜலத்தால் நன்கு கழுவப்பட்டபிறகு, பசுக்களின் நடமாட்டத்தால் எழுந்த புழுதி குழந்தையின்மேல் பூசப்பட்டது. பிறகு பகவானின் வெவ்வேறு நாமங்களை உச்சரித்து, அவரது உடலின் பன்னிரண்டு பகுதிகளில் பசுவின் சாணம் தடவப்பட்டது. திலகமிடுவதில் செய்யப்படுவதுபோலவே இதுவும் நெற்றியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இவ்விதமாக குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

பதம் 10.6.21 : கோபியர்கள் முதலில் வலது கையிலிருந்து சிறிது நீரைக் குடித்து ஆச்சமன முறையை நிறைவேற்றினர். ன்யாஸு-மந்திரத்தால் தங்களது உடல்களையும், கரங்களையும் அவர்கள் தூய்மைப்படுத்தினர். பிறகு அதே மந்திரத்தைக் குழந்தையின் உடல்மீது பொறித்தனர்.

பதங்கள் 10.6.22 – 10.6.23 : (தங்களது குழந்தையான கிருஷ்ணரின் பாதுகாப்பிற்குச் சரியான வழிமுறையைப் பின்பற்றிய கோபியர்கள், பின்வரும் மந்திரத்தைச் சொல்லி அவரைப் பாதுகாத்தனர் என்று சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து மகாராஜனிடம் கூறினார்:) அஜர் உனது கால்களைப் பாதுகாக்கட்டும், மணிமான் உனது முழங்கால்களையும், யக்ஞர் உனது தொடைகளையும், அச்யுதர் உனது இடையின் மேற் பகுதியையும், ஹயகிரீவர் உனது வயிற்றுப் பகுதியையும் பாதுகாக்கட்டும். கேசவர் உனது இதயத்தையும், ஈசர் உனது மார்பையும், சூரிய தேவன் உனது கழுத்தையும். விஷ்ணு உனது கரங்களையும், உருக்ரமர் உன் முகத்தையும், ஈஸ்வரர் உன் தலையையும் பாதுகாக்கட்டும். சக்ரீ உன்னை முன் புறத்திலிருந்து பாதுகாக்கட்டும்; கதையை வைத்திருப்பதால் கதாதரீ எனப்படும் ஸ்ரீ ஹரி உன்னைப் பின்னாலிருந்து பாதுகாக்கட்டும்; வில்லை வைத்திருப்பவரும், வாளை ஏந்திய பகவான் அஜனரும் உனது இரு புறங்களைப் பாதுகாக்கட்டும். சங்கை ஏந்திய பகவான் உருகாயர் எல்லா மூலைகளிலிருந்தும் உன்னைப் பாதுகாக்கட்டும்; உபேந்திரா உன்னை மேலிருந்து பாதுகாக்கட்டும்; கருடன் உன்னைத் தரையில் பாதுகாக்கட்டும்; மேலும் பரமபுருஷராகிய பகவான் ஹலதரர் உன்னை எல்லாப் புறங்களிலிருந்தும் பாதுகாக்கட்டும்.

பதம் 10.6.24 : ரிஷிகேசர் உன் புலன்களையும், நாராயணர் உன் உயிர்க் காற்றையும் பாதுகாக்கட்டும். ஸ்வேதத்வீபத்தின் நாதர் உன் இதய மத்தியையும், பகவான் யோகேஸ்வரர் உன் மனதையும் பாதுகாக்கட்டும்.

பதங்கள் 10.6.25 – 10.6.26 : பகவான் பிரிஸ்னிகர்பர் உன் புத்தியையும், பரமபுருஷர் உன் ஆத்மாவையும் பாதுகாக்கட்டும். நீ விளையாடும் பொழுது கோவிந்தனும், உறங்கும் பொழுது மாதவனும் உன்னைப் பாதுகாக்கட்டும். நீ நடக்கும் பொழுது பகவான் வைகுண்டரும், அமரும்பொழுது ஸ்ரீ தேவியின் கணவரான பகவான் நாராயணரும் உன்னைப் பாதுகாக்கட்டும். அவ்வாறே, நீ வாழ்வை அனுபவிக்கும் பொழுது, துஷ்ட கிரகங்களில் பயங்கர எதிரியான பகவான் யக்ஞபுக் எப்பொழுதும் உன்னைப் பாதுகாக்கட்டும்.

பதங்கள் 10.6.27 – 10.6.29 : சூனியக்காரிகளான தாகினிகள், யாதுதானிகள், மற்றும் குஷ்மாண்டங்கள் ஆகியவை குழந்தைகளின் பெரும் எதிரிகளாகும். பூதங்கள், பிரேதங்கள், பிசாசுகள், யக்ஷர்கள், இராட்சஸர்கள் மற்றும் வினாயகங்கள் போன்ற துர்தேவதைகளும், கொடரா, ரேவதி, ஜ்யேஷ்டா, பூதனை மற்றும் மாத்ருகா போன்ற மாயக்காரிகளும், நினைவை இழக்கச் செய்தும், பித்துப் பிடிக்கச் செய்தும், கெட்ட கனவுகளை ஏற்படுத்தியும், எப்பொழுதும் உடலுக்கும், உயிர்க் காற்றுக்கும், புலன்களுக்கும் தொல்லை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. மிகவும் அனுபவமுள்ள துர் நட்சத்திரங்களைப் போல், அவை குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பெருந்துன்பங்களை விளைவிக்கின்றன. ஆனால் பகவான் விஷ்ணுவின் நாமம் ஒலிக்கும் பொழுது அவை அச்சமடைந்து ஓடிமறைவதால், பகவானின் நாமத்தைக் கொண்டே அவற்றை அழித்துவிட முடியும்.

பதம் 10.6.30 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார். தாய் யசோதையின் தலைமையிலான எல்லாக் கோபியர்களும், தாய்ப்பாசத்தால் கட்டப்பட்டிருந்தனர். இவ்வாறு குழந்தையின் பாதுகாப்பிற்குரிய மந்திரங்களை ஓதியபின், தாய் யசோதை குழந்தைக்குத் தம் முலைக் காம்பால் பாலூட்டி, அவரை அவரது படுக்கையில் படுக்கவைத்தாள்.

பதம் 10.6.31 : இதற்கிடையில், நந்த மகாராஜன் முதலான எல்லா கோபியர்களும் (இடையர்களும்) மதுராவிலிருந்து திரும்பிவந்தனர். வழியில், பூதனையின் பிரம்மாண்டமான உயிரற்ற உடல் கிடப்பதைக் கண்டு, பெரும் ஆச்சரியமடைந்தனர்.

பதம் 10.6.32 : நந்த மகாராஜனும் மற்ற கோபியர்களும் கூறினார்: அன்புள்ள நண்பர்களே, ஆனகதுந்துபி (வசுதேவர்) ஒரு சிறந்த முனிவராக அல்லது சிறந்த யோகியாக மாறியிருக்கிறார் என்பதை நீங்கள் அறிய வேண்டும். இல்லையெனில் வரப்போகும் இத்துன்பத்தைப் பற்றி அவரால் எப்படி முன்னதாகவே நமக்குக் கூற முடிந்தது?

பதம் 10.6.33 : பிருந்தாவன வாசிகள் கோடரிகளின் உதவியால் பூதனையின் பிரம்மாண்டமான உடலைத் துண்டு துண்டாக வெட்டினர். பிறகு அவற்றைத் தூரத்தில் எறிந்து, விறகுகளால் மூடி எரித்துச் சாம்பலாக்கினர்.

பதம் 10.6.34 : கிருஷ்ணர் பூதனை அரக்கியின் முலைப்பாலைக் குடித்து அவளைக் கொன்றதால், அவள் எல்லா பௌதிக களங்கங்களிலிருந்தும் விடுபட்டதுடன், அவளது பாவ விளைவுகளும் உடனே அழிந்தன. எனவே அவனது பிரம்மாண்டமான உடல் எரிக்கப்பட்ட பொழுது, அவளது உடலிலிருந்து எழுந்த புகை அகுரு தூபம் போல் நறுமணம் வீசியது.

பதங்கள் 10.6.35 – 10.6.36 : பூதனை எப்பொழுதும் மனிதக் குழந்தைகளின் இரத்தத்தைக் குடிக்க விரும்பினாள். இதே விருப்பத்துடனேயே அவள் கிருஷ்ணரையும் கொல்ல வந்தாள்; ஆனால் பகவானுக்குத் தன் முலைப்பாலைக் கொடுத்ததால், மிகவுயர்ந்த கதியை அவள் அடைந்தாள். அப்படியானால். இயற்கையான பக்தியும் பாசமும் கொண்டிருந்தவர்களுக்கு அவருக்குத் தங்களது முலைப்பாலை ஊட்டியவர்களும், குழந்தைகளுக்கு ஒரு தாய் எதையேனும் கொடுப்பதுபோல், மிகப்பிரியமான ஒன்றைக் கொடுத்தவர்களுமான அவரது தாய்களின் நிலையைப் பற்றி என்ன வென்று சொல்வது ?

பதங்கள் 10.6.37 – 10.6.38 : பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் எப்பொழுதும் அவரது தூய பக்தர்களின் இதயத்தில் அமர்ந்திருக்கிறார். பிரம்மதேவர் மற்றும் சிவபெருமான் போன்ற வழிபாட்டுக்குரிய மூர்த்திகளால் அவர் எப்பொழுதும் துதிக்கப்படுகிறார். பூதனை ஒரு பெரிய அரக்கி என்றாலும், கிருஷ்ணர் அவளது உடலைத் தழுவி ஆனந்தத்துடன் அவளது முலைப்பாலைக் குடித்ததால், அவள் உன்னத உலகில் ஒரு தாயின் அந்தஸ்தை அடைந்து, மிக உயர்ந்த பூர்ணத்துவத்தை அடைந்தாள், அப்படியானால் ஒரு தாயைப் போலவே பாசத்துடனும், பெருமகிழ்ச்சியுடனும் கிருஷ்ணருக்குப் பாலூட்டிய பசுக்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

பதங்கள் 10.6.39 – 10.6.40 : பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷணர், பிரம்மஜோதியில் இரண்டரக்கலந்து விடுதல் எனும் முக்தி (கைவல்யம்) உட்பட எல்லா வரங்களையும் அளிப்பவராவார். அப்பரமபுருஷரிடம் கோபியர்கள் எப்பொழுதும் தங்களின் தாய்ப் பாசத்தைக் காட்டினார். கிருஷ்ணரும் அவர்களது முலைப்பாலை முழு திருப்தியுடன் பருகினார். எனவே கோபியர்கள் பல்வேறு குடும்பச் செயல்களில் ஈடுபட்டிருந்த போதிலும், பகவானிடம் அவர்களுக்குத் தாய் மகன் என்ற உறவு முறை இருந்தது. இதனால் தங்களது உடல்களை விட்டபின் இந்த ஜட உலகிற்கு அவர்கள் திரும்பி வந்தனர் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது.

பதம் 10.6.41 : எரிந்து கொண்டிருந்த பூதனையின் உடலிலிருந்து வெளிப்பட்ட புகையின் நறுமணத்தை, தூரத்து இடங்களிலிருந்து பல விரஜபூமி வாசிகள் முகர்ந்து ஆச்சரியமடைந்தனர். “இந்த நறுமணம் எங்கிருந்து வருகிறது?” என்று வினவினர். இவ்விதமாக பூதனையின் உடல் எரிக்கப்பட்ட இடத்திற்கு அவர்கள் சென்றனர்.

பதம் 10.6.42 : பூதனை அங்கு வந்ததையும், கிருஷ்ணரால் கொல்லப்பட்டதையும் தூரத்து இடங்களிலிருந்து வந்திருந்த விரஜ வாசிகள் கேள்விப்பட்டு பெரும் ஆச்சரியமடைந்தனர். பூதனையைக் கொன்ற அற்புதச் செயலுக்காக குழந்தையை அவர்கள் ஆசிர்வதித்தனர். இச்சம்பவத்தை முன்னறிந்து கூறிய வசுதேவருக்கு நந்த மகாராஜன் நன்றிக்கடன்பட்டவரானார். வசுதேவர் எவ்வளவு அற்புதமானவர் என்றெண்ணி அவருக்கு நன்றி கூறினார்.

பதம் 10.6.43 : குருக்களில் சிறந்த பரீட்சித்து மகாராஜனே, நந்த மகாராஜன் மிகவும் எளிமையானவராகவும், உதார குணமுள்ளவராகவும் இருந்தார். தன் மகனான கிருஷ்ணர் மரணத்திலிருந்து திரும்பியதுபோல், உடனே அவரை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டு உச்சி முகர்ந்த நந்த மகாராஜன், உன்னத ஆனந்தத்தை அனுபவித்தார் என்பதில் ஐய்யமில்லை.

பதம் 10.6.44 : யாரொருவர், பரமபுருஷரான கிருஷ்ணர் எப்படி பூதனையைக் கொன்றார் என்பதைப்பற்றி நம்பிக்கையுடனும், பக்தியுடனும் கேட்டு, கிருஷ்ணரின் பிள்ளைப் பிராயத்து லீலைகளைக் கேட்பதில் தன் கவனத்தைச் செலுத்துகிறாரோ, அவர் மூல முழுமுதற் கடவுளான கோவிந்தனிடம் பற்றுக் கொள்வது நிச்சயம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare